கவிதையா? உரைநடையா?

திடீரெனச் சில நாட்களாகக் கவிதைகளின் பால் ஓர் அதீத - புதீத ஈடுபாடு. ஏன் என்று புரியவில்லை. கூடி வரும் சோம்பலின் அறிகுறியோ என்றும் சந்தேகமாக இருக்கிறது. உரைநடை என்றால் நிறைய எழுத வேண்டுமே என்ற உள்ளுணர்வு ஒரு புறம் அவற்றின் பக்கம் திரும்ப விடாமல் உதைக்கிறது. உரைநடையை விடக் கவிதைகளைப் பிரசவிப்பது வலி குறைந்த வேலை என்று எளிதாகச் சொல்லி விடவும் முடியாது. அளவிற் சிறிய படைப்பு போல இருந்தாலும் எடையில் கூடுதலாக இருப்பதுண்டு பல நேரங்களில். அது பற்றி நிறையச் சிந்திக்க வேண்டும் போல் இருந்தது இன்று. கொஞ்சம் குடைந்தேன் மண்டையை. இதுதான் இன்று முழுக்க என் மனதில் தோன்றியவை...

வாசிக்கிற அல்லது எழுதுகிற எல்லோருக்குமே அல்லது பெரும்பாலானவர்களுக்கு கவிதையின் மீதுதான் முதல்க் காதல் வருகிறது. அதுதான் பின்னர் உரைநடைப் பக்கம் வருகிறது. கதை அல்லது கட்டுரை அல்லது இரண்டும் என்று ஒரு தடம் பிடித்துப் பயணிக்கிறது. கூடுதல்த் தேடல்தான் அல்லது கொடுக்க வேண்டிய கட்டாயம்தான் உரைநடை உருக்குள் நிறையப் பேரை இழுத்து வருகிறது. அது போல கவிதையிலேயே தம் தேடலை விரிவு படுத்திக் கொள்வோரும் ஆழப் படுத்திக் கொள்வோரும் மென்மேலும் அள்ளிக் கொடுக்க முடிந்தோரும் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னைப் பொருத்த மட்டில் பேசுபொருளைப் பொருத்து உருவை முடிவு செய்கிறேன். சிலவற்றைக் கவிதையில் பேசுவது நன்றாகவும் சிலவற்றைக் கதைகளில் சொல்வது எடுப்பாகவும் சிலவற்றைக் கட்டுரையில் செப்புவது சிறப்பாகவும் இருப்பதாக உணர்கிறேன். சிலவற்றைக் குறிப்பிட்ட ஓர் உருவில் கொடுக்கும் போது வேலையும் எளிதாக இருக்கிறது. அது உண்டாக்கும் பாதிப்பும் நன்றாக இருக்கிறது. சில பொருட்கள் ஒன்றுக்கு மேலான உருக்களில் படைக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் ஓர் உருவில் சொல்வது கடினமாக இருந்தாலும் நாம் மனதில் வைத்திருந்த மாதிரியான - நமக்கு வேண்டிய மாதிரியான விளைவைக் கொடுக்கிறது.

கவிதைகளின் மீதான இந்த ஈர்ப்பு முற்றிலும் புதிதென்று சொல்லி விட முடியாது. முதன் முதலாக மைப் பேனா பிடித்து எழுத முயன்ற போது வந்தது கவிதை மைதான். அதன் பின்பு பள்ளிக் காலம் முழுக்க எழுத்தோடு இணைத்து வைத்திருந்தது கவிதைதான். கல்லூரியிலும் இலக்கிய வேடம் அணிந்து கொள்ள ஏதுவாக இருந்தது கவிதைதான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் (அது ஒன்றும் நீண்ட காலம் ஆகி விட வில்லை!) கவிதை எழுதும் மாணவர்கள் நிறைய இருந்தார்கள். இப்போதெல்லாம் அது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில் கல்லூரி மாணவர்களிடம் கண்டு நான் அப்படி ஆச்சரியப் பட்ட ஒன்று - அவர்களின் ஆங்கிலச் சினிமா ஆர்வம். நாங்கள் எல்லாம் அந்தப் பக்கமே போனதில்லை. இப்போது இளைஞர்கள் எல்லோருமே அவற்றை மிகச் சாதாரணமாக - தமிழ்ப் படம் பார்ப்பது போலப் பார்த்து ரசிக்கிறார்கள்.

அதை விடுங்கள். நம்ம கதைக்கு வருவோம். காதல் போதைக்கு எங்களவர்கள் எல்லோருமே கவிதையை ஒரு முக்கியமான ஊறுகாயாகப் பயன்படுத்தினார்கள். காதல் போதை என்பது காதலிப்பவர்களுக்கு மட்டும் இருப்பதில்லை; காதலிக்க ஆசைப் படுவோர் எல்லோருக்குமே இருப்பது என்பது நீங்கள் எந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சொல்லாமலே புரியும் இரகசியம் என்று நம்புகிறேன். கல்லூரி சென்றாலும் செல்லா விட்டாலும் - நல்ல பிள்ளையாக இருந்தாலும் கெட்ட பிள்ளையாக இருந்தாலும் - காதலிக்கும் ஆசை என்பது பதின்மத்தின் மீசை அரும்பும் போது எல்லோருக்குமே அரும்பியே தீரும் என்பதும் அப்படியே அறியப் பட்ட இன்னொரு இரகசியம் என்பதையும் அறிவேன். இதில் கமல்-மோகன்களுக்கும் வாலி-வைரமுத்துகளுக்கும் மிகப் பெரும் பங்கு இருக்கிறது.

இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்க்கையில் இப்போதைய ஆட்களிடம் மட்டுமல்ல அப்போதைய ஆட்களிடமும் கவிதை ஆர்வம் குறைந்து விட்டது போல ஓர் உணர்வு. அது முற்றிலும் தவறான ஒரு புரிதலாகவும் இருக்கலாம். நான் அப்படி உணர்வதற்கான ஒரு காரணம் - வலைப்பதிவில் இடப்படும் கவிதைகளை விட உரைநடை இடுகைகள்தாம் அதிகம் வாசிக்கப் படுகின்றன. இது என்னுடைய பதிவை மட்டும் பார்த்து எடுத்த முடிவு. அதற்குக் காரணம் - என்னுடைய கவிதைகளை விட உரைநடை பரவாயில்லை என்றோ ("நீ எழுதும் எதுவுமே விளங்கவில்லை" என்று சொல்ல முனைவோர் இங்கே மன்னித்து விடுக!) அல்லது நான் எழுதும் உரைநடைகள் தமிழ்ப் பதிவுலகின் ஆர்வத்துக்கு ஓரளவு ஒத்துப் போகின்றன என்றோ கூட இருக்கலாம். என்னுடைய உரைநடைகளே சில சீந்த ஆளில்லாமல் போனதும் உண்டு.

அது என் சொந்தக் கதை. ஒட்டு மொத்தப் பதிவுலகையே பார்த்தாலும் கூட கவிதைகள் அதிகம் தட்டுப் படுவது போலத் தெரியவும் இல்லை. இத்தனைக்கும் கவிதைகள்தாம் விரைவுணவு போல் உண்டு களித்துத் துடைத்துப் போட்டுச் செல்ல வசதியானவை. இன்னொன்று - பதிவுலகம் என்று நான் பார்த்தது ஓர் உரைநடைகளின் பகுதியாக இருக்கலாம். ஒருவேளை வேறொரு பகுதியில் கவிதைகள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கலாம். இந்தப் பத்தி வரை இதை யாராவது பொறுமையாகப் படித்து வந்திருந்தால் உங்களிடம் ஒரு விண்ணப்பம் - இதில் என் புரிதல் சரியா என்பதையும் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் கவிதைகள் எந்த இடத்தில் இருக்கின்றன என்றும் உங்களால் தெளிவு படுத்த முடியுமா?

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் இலக்கியம் என்றால் அது செய்யுள் வடிவம் மட்டும்தான். உரைநடை என்று ஒன்றே இருக்க வில்லை. அதிலும் நிறுத்தற்குறிகள் என்பதே நம் மொழியில் இருக்கவே இல்லை. இவை அனைத்தும் நம்மிடம் கடை விரிக்க வந்தோரும் மதம் பரப்ப வந்தோரும் கொண்டு வந்தவை என்பதுதான் உண்மை. அதற்காக வருந்த வேண்டியதில்லை. எளிதாக எல்லோரையும் எழுத்து மொழியைப் பயன் படுத்த வைத்தது இந்த இறக்குமதிகள்தாம். இந்தப் புதுமைகள் வந்திரா விட்டால் மொழியும் வலியோரிடம் மட்டுமே மாட்டிக் கொண்டு இந்த மண்ணில் ஏற்றத் தாழ்வை நியாயப் படுத்திக் கொண்டு இருந்திருக்கலாம் இன்று வரை. சென்ற நூற்றாண்டில்தான் - மாயூரம் வேதநாயகம் பிள்ளையோ முதலியாரோதான் முதன் முதலில் தமிழில் புதினம் படைத்த புண்ணியவான் என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கிறது என் மனதில். "பசுமரத்தாணி போல்..." - இதுவும் அங்கே படித்தது தானே! :)

கவிதை எழுதும்பொதெல்லாம் உணர்கிற இன்னொரு நல்ல விஷயம் - சொற்களுடனான என் உறவு அப்போதுதான் அதிகம் புதுப்பிக்கப் படுகிறது. கவிதையில்தானே சொற்களுடனான விளையாட்டு அதிகம் நடக்கிறது. அழகியல் அதிகம் இருக்கிறது. அந்த அளவு அழகியல் மற்ற உருக்களில் இல்லை. அது போலவே கட்டுரைகளில் உள்ளது போல ஆய்வு ரீதியான தகவல்களை கவிதைகளில் தருவது சிரமம். அதையும் முன்பு செய்யுள்களில் செய்த முன்னோர்களின் பிள்ளைகள்தாம் நாம் என்றபோதும். தொல்காப்பியம் என்ன அழகியல் மட்டுமே உள்ள கவித் தொகுப்பா என்ன? அது மட்டுமில்லை. பெரும் பெரும் கதைகளையும் செய்யுள் வடிவில் சொல்லத்தான் செய்தார்கள் நம்மவர்கள். கம்ப இராமாயணத்தை விட பெரிய கதை இருக்கிறதா என்ன? அதனால்தான் அவை சில பண்டிதர்களுக்கு மட்டுமே புரிந்த இலக்கியங்களாக இருந்தன.

கவிதை மட்டுமே எழுதவும் வாசிக்கவும் தெரிந்த சின்ன வயதில் சிறு பிள்ளைத் தனமாகக் கோணங்கியிடம் ஒரு கேள்வி கேட்டேன், "சித்தப்பா, நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை?". "கதையிலேயே கவிதைதானே எழுதுகிறோம்!" என்று எப்போதும் போல் புரிய முடியாத மாதிரி ஏதோ சொன்னார். எப்போதும் போலவே அதுவும் கொஞ்ச காலம் கழித்துச் சரியாகப் புரிந்தது. அதாவது, 'கவிதை நடையிலேயே கதை எழுத முடியுமென்றால் கவிதை ஏன் தனியாக எழுத வேண்டும்?!' என்று புரிந்தது. அதன் பின்பு எனக்கும் அப்படி எழுதுவதிலேயே ஆர்வம் அதிகமாக இருந்தது. கவிதை என்றால் அது எதுகை மோனையோடு - சந்தத்தோடு அந்தக் காலச் செய்யுள் போல் இருக்க வேண்டும் என்றில்லை. செய்யுள், பாடல், மரபுக் கவிதைகள் போல் அல்லாமல் கருத்துக்களில் சந்தம் காட்டுவதே புதுக் கவிதை. ஒரு கவிதைக்குரிய புறத் தோற்றம் எதுவும் இல்லாமல் கருத்துச் செறிவோடு சொல்லப்படுவதுதான் புதுக்கவிதை. அதைத்தான் கோணங்கியின் எழுத்துக்களில் ஒவ்வொரு வரியிலும் காண்கிறோம். அதனால்தான் பலர் எழுதும் புதுக் கவிதைகள் போலவே அவர் எழுதும் உரைநடைகளும் நம்மில் பலருக்குப் புரிவதில்லை.

அதாவது, பலர் தத்துவம் என்று தலைப்புப் போட்டுச் சொல்வதை விட அதிகமான தத்துவங்களைத் தம் அன்றாட உரையாடல்களில் சர்வ சாதாரணமாக உதிர்த்து விட்டுப் போவார்கள் சிலர். அது போலவே கவிதை என்று சொல்லி எதையோ தந்து மாட்டிக் கொள்வதற்கு அப்படிச் சொல்லாமலே உரைநடையில் உதிர்த்து விட்டுப் போய் விடலாம் அல்லவா?! அதில் ஒரு வசதி - அவை தத்துவமே இல்லை என்றோ கவிதையே இல்லை என்றோ யாரும் வந்து சண்டை போட்டு நேரத்தை வீணடிக்க முடியாது. ஆனால், அப்படிச் சொல்லிச் சொல்லிக் காட்டா விட்டால் நிறையப் பேருக்கு நம் பக்கம் கவனமே திரும்பாதே. வியாபார உலகத்தில் வெற்றிக்கு கவன ஈர்ப்பு கண்டிப்பாகத் தேவைப் படும் ஒரு காரணியாக இருக்கிறதே.

மற்ற உருக்களை விட கவிதைகள் அளவுக்கதிகமான வெவ்வேறு உள்ளுருக்கள் கொண்டுள்ளன. "இதுவல்லவோ கவிதை?!" என்று ஒருத்தர் சிலாகிப்பதை, "இதெல்லாம் கவிதையா கருமம்?" என்று இன்னொருத்தர் சொல்லும் அளவுக்கு வேறுபாடு இங்குதான் இருக்கிறது. இதில் என் போன்றோருக்கு ஒரு வசதியும் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டு "என்னைப் பொருத்த மட்டில் இது கவிதைதான்!" என்றோ "இதுதான் கவிதை!" என்றோ அடித்துப் பேசலாம். "உனக்குப் பிடிக்கா விட்டால் அது உன் கோளாறு... உன் கவிதைச் சுவையில் இருக்கும் குறைபாடு!" என்று பாதுகாப்பான ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொண்டு தப்பிக் கொள்ளலாம். எனவே, இப்போது நான் சொல்ல வருவதெல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு உங்களை எல்லாம் கவிதை என்ற பெயரில் நிறைய இம்சிக்கப் போகிறேன். ஒன்றாவது உண்மையிலேயே கவிதையாக இருக்கிறதா என்று எடை போடவாவது பொறுமையாக அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போங்கள். அதில் உங்கள் கவிதைச் சுவைக்கு விருந்து கிடைக்கிறதோ இல்லையோ எனக்கு மருந்து கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. 

கருத்துகள்

 1. அன்பரே!
  உங்கள் பதிவு முழுவதும் படித்தேன்
  இதுவரை என் வலையில் ஏறத்தாழ நுற்றுக்கும்
  மேற்பட்ட மரபுக் கவிதைகளே எழுதியுள்ளேன்
  ஒருமுறை வந்து பாருங்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாகச் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். தயவு செய்து காதல் கவிதைகள் மட்டும் வேண்டாம். தமிழில் வரும் கவிதைகளில் ஏறக்குறைய அனைத்துமே காதல் கவிதைகள்தான். பள்ளியில் படிக்கும்போது கவிதையை படிக்கும் / ரசிக்கும் / அனுபவிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால், எந்த கவிதையை எடுத்தாலும் காதல் கவிதைகள்தான். அதனாலோ என்னவோ, எனக்கு கவிதையை படிக்கும் ஆர்வமே ஒழிந்துவிட்டது. என் கவிதை படிக்கும் ஆர்வத்தை மறுபடியும் தூசி தட்டிப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா... ஐயோ... ஐயோ... பாருங்கள், தமிழ் கூறும் நல்லுலகில் எப்படியெல்லாம் தமிழ் ஆர்வலர்கள் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று. :)

  பொதுவாகவே எனக்கும் அந்தக் கருமாயம் வராது. வந்தாலும் குறைக்க முயற்சிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 5. இப்போதுதான் இது பற்றிப் பேசினேன். அதற்குள் ஜெயமோகன் எழுதிய கட்டுரை ஒன்று படிக்க நேர்ந்தது. பட்டையைக் கிளப்பி இருக்கிறார். கவிதை என்ற பெயரில் இனியும் ஏதாவது எழுதணுமா என்று தோன்ற ஆரம்பித்து விட்டது இப்போது. :)

  இங்கே படியுங்கள் - http://www.jeyamohan.in/?p=290

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்