பா.மோகன் அவர்களின் "நாட்டின் நலம் நாடும் நற்றமிழ் பாக்கள்"

எங்களுக்கும் இங்கிலிப்பீசு தெரியும்ல என்று ஆங்கிலத்திலும் கிறுக்கித் தள்ளுவதில் சில நல்லதுகளும் நடந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, சில தரமான - கண்ணியமான பதிவர்களின் உறவு கிட்டியது. அப்படிப் பட்டவர்களில் ஒருவர், ZEPHYR அவர்கள் (இன்றுவரை அவரை அம்மா என்பதா, ஆண்ட்டி என்பதா, மாமி என்பதா என்ற குழப்பம் தீர வில்லை என்பதால், பெயர் சொல்லித்தான் அழைத்துக் கொண்டிருக்கிறேன்!). நல்ல தமிழ்ப் பெயர் ஒன்றை இயற்பெயராகக் கொண்ட அவர், ZEPHYR என்ற ஆங்கிலப் பெயரில், http://cybernag.in/ என்கிற தளத்தில் தொடர்ந்து தீவிரமாக எழுதி வருகிறார். பெரும்பாலும் வெளி மாநிலங்களில் தன் இளமைக் காலத்தைக் கழித்தவர் எனினும், தமிழும் நன்றாக வாசிக்க முடிந்தவர். அதனால் என்னுடைய தமிழ்ப் பதிவையும் அவ்வப்போது வாசித்து வருபவர். அவ்வப்போது நான் எழுதும் நூல் விமர்சனங்களைப் படித்து விட்டோ என்னவோ அவரும் ஒரு நூலை அனுப்பி அதனைப் பற்றி என் பதிவில் விமர்சனம் எழுதுமாறு வேண்டினார். பல்வேறு காரணங்களால் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் இன்று இதை முடித்தே விட வேண்டும் என்ற வெறியில் உட்கார்ந்து நூல் மொத்தத்தையும் படித்து முடித்து விமர்சனத்தையும் முடித்து விட்டேன். ஆரம்ப காலத்தில் "நீங்கள் எந்த ஊர்?", "நீங்கள் எந்த ஊர்?" என்று அறிமுக உரையாடல்கள் செய்து கொண்ட போது, நான் தெக்கத்தி ஆள் என்ற போது, அவருடைய சகோதரியார் நம் பகுதியில் நடத்தி வரும் சமூக நல சேவை மையம் பற்றிச் சொன்னார். பின்னர் அதை அப்படியே விட்டு விட்டோம். கொஞ்ச காலம் கழித்து, அந்தஅமைப்பைச் சேர்ந்த பா.மோகன் அவர்களின்  இந்த நூலை விமர்சனத்துக்காக அனுப்பினார்.

முதலில் அந்தஅமைப்பு பற்றிப் பார்ப்போம். ஆரோக்ய ஆஷ்ரயம் எனப்படும் இந்த அமைப்பு, கண் பார்வை குன்றிய இளம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் பொருட்டு, 1994-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அருகில் ஒரு குடும்ப அறக்கட்டளையால் தொடங்கப் பட்டு, இன்றுவரை அவர்களின் இசை மற்றும் இலக்கியத் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் மனநிறைவையும்  ஊட்டும் அரும் பணியைச் செய்து வருகிறது. அப்படி ஆரோக்ய ஆஷ்ரயத்தின் உதவியோடு தன் எழுத்துத் திறத்தை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ள ஒருவர்தான் இந்த நூலின் ஆசிரியர் மோகன் அவர்களும். திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் என்ற ஊரைச் சேர்ந்த இவர், இளம் வயதில் இருந்தே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். சிறு சிறு வசதிக் குறைவுகளையே நொண்டிச் சாக்காக்கிக் கொண்டு தப்பிக்க முயலும் நம் போன்றோர் மத்தியில், குன்றிய கண் பார்வையை ஒரு பிரச்சனையே இல்லை என்றாக்கி, இளங்கலை-முதுகலைப் பட்டங்கள் பெற்று, முனைவோர் பட்டம் நோக்கி இலக்கிய ஆராய்ச்சிப் பணிகளில் ஈடு பட்டிருக்கும் இவர் போன்றோர் பெரும் சாதனையாளர்களே.

தமிழில் மரபுக் கவிதை வடிவம் கிட்டத்தட்ட செத்தே விட்டது ("நல்ல வேளை தமிழ் இன்னும் சாகவில்லையே என்று சந்தோசப் பட்டுக்கொள்!" என்கிறீர்களா?). வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்றெல்லாம் நீட்டினால், "நீ சும்மா நிறுத்துப்பா!" என்று கூறி விடுகிறார்கள். மரபுக் கவிதை வடிவம் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று சண்டை போடும் அளவுக்கு அவற்றின் மீது எனக்கும் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் அத்தகைய கவிதைகளை எழுதுவோர் ஒரு குறைவான எண்ணிக்கையிலேனும் இருந்து கொண்டே இருப்பதன் மூலம் எம்மொழியில் இப்படியொரு வடிவம் இருந்தது என்பதையாவது நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். புதுக் கவிதையின் மூலம் கவிதை சனநாயகப் படுத்தப் பட்டு விட்டது நல்லதுதான். அதே வேளையில் மரபுக் கவிதை எழுதுவோரும் அவ்வப்போது கிளம்பி வருவதும் போற்றுதற்குரியதே. திரை நடனமும் குத்தாட்டமும் பிரபலமாகி விட்ட மண்ணில் பரதநாட்டியக் கலைஞர்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பது போல, திரைப் பாடல்களும் கானாப் பாடல்களும் பெருகி விட்ட மண்ணில் கர்நாடக சங்கீதமும் கலக்கிக் கொண்டிருப்பது போல, வித விதமான கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் நம் கூட்டங்களுக்கு மத்தியில் நம் இலக்கணத்துக்கே உரிய கெடுபிடிகளோடு கூடிய பாக்களை வடிக்கும் ஆற்றம் கொண்ட மோகன்களும் உருவாவது மொழிக்கு வளம் சேர்க்கவே செய்யும். பெரும்பான்மைக் கவிஞர்களிடம் இல்லாத ஒரு திறமையைக் கொண்டிருக்கும் அந்த வகையில் அவர் கூடுதற் சாதனையாளரே.

அவருடைய கவிதைகளில் அதிகம் மேலோங்கியிருக்கும் கருத்துக்கள் என்று பார்த்தால், அவை ஆன்மிகம், மொழிப் பற்று, நாட்டுப் பற்று மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை. தன் சொந்த ஊரான சமூகரங்கபுரத்தில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளில் ஆரம்பித்து, நாங்குநேரி ஸ்ரீநிவாசன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருக்குறுங்குடி திருமால், திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ஆண்டாள் அவளை ஏற்றுக் கொண்ட அரங்கன், திருவைகுண்டம் வைகுண்ட நாதன் என்று வைணவ வணக்கத்தோடு தொடங்கும் நூலில், அடுத்து கண்ணனின் லீலைகளைப் பாடி, இராமனைத் துதித்து, ஐயப்பனைப் போற்றி, மாசான சுடலையைப் புகழ்ந்து, கம்பன் கவி பற்றிப் பெருமித்து, தமிழின் மேன்மையைப் பாடி, தமிழர் திருநாள் பற்றிய கவிதைகளுடன் நிறைவடைகிறது முதற் பகுதி. இளமையில் இருந்தே இறையார்வம் பெரிதாய் இல்லாமல் வளர்ந்து விட்டதால், முதற் பகுதியின் முன் பாதியைப் பெரிதாகச் சுவைக்க முடியவில்லை. பின் பாதி நின்று-உள்வாங்கி-விவாதித்துச் செல்லும் வகையிலான  சில கருத்துக்களைக் கொண்டிருந்தது.

கடவுள்களைப் பற்றிப் பாடிக் கொண்டிருக்கையில் கம்பர் ஏன் வருகிறார் என்றொரு நிமிடம் குழப்பம் மேலிட்டது. உடனடியாகப் பழைய நினைவொன்று வந்து அதற்குப் பதில் அளித்தது. தமிழில் நா. காமராசன் என்றொரு கவிஞர் இருக்கிறார். சின்ன வயதில் படித்த அவருடைய பேட்டி ஒன்று என்றும் மறக்க முடியாதது. "கம்பனும் வள்ளுவனும் தவிர வேறு எவனும் கவிஞனே அல்ல; இளங்கோவும் பாரதியும் சும்மா வேஸ்ட்; நான்தான் மூன்றாவது; கம்பனையும் தூக்கிச் சாப்பிடும் படியான நூல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்; அதன் பின்பு வள்ளுவன் ஒருவன்தான் தமிழில் என்னை விடப் பெரிய கவிஞனாக இருப்பான்" என்றெல்லாம் போட்டுத் தாக்கி இருந்தார். அவர் எம்மாம் பெரிய அப்பாட்டக்கர் என்பதையும் தமிழின் தலை சிறந்த கவிஞர்கள் யார் யார் என்பதையும் அறிந்து கொள்ள உதவிய அந்தப் பேட்டியைக் கொடுத்தமைக்காக அவருக்கு என்றைக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஆக, அம்மாம் பெரிய காமராசன் முதல் தமிழில் மரபுக் கவிதை எழுதும் எல்லோருமே ஏற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் கவிஞர் கம்பர். அதனால் அவர் புகழ் பாடி ஆரம்பிப்பதில் ஆச்சரியமேதுமில்லைதானே.

தமிழ் மொழியின் மேன்மை பாடும் பா பல முக்கியமான கருத்துக்களைப் பேசுகிறது. "இறைவர்க்குக் கற்பித்த தமிழே! ஒர்முறை இறையனார் பாட்டில் வடித்த தமிழே!" என்ற வரியைப் படித்த போது அதே தமிழைப் பேசி என்னவெல்லாம் திருட்டுத் தனம் செய்கிறார்கள் இப்போது என்ற கவலையும் வந்து சென்றது. "ஐந்திணை வகுத்த பைந்தமிழ் மொழியே போற்றி!", "முச்சங்கங்கள் கண்ட மூத்த மொழியே!", "மூவேந்தர் வளர்த்த முல்லைக் கொடியே!", "முப்பாலைச் செப்பிய செப்புச் சிலையே!", "மூவித நடையில் தவழும் தமிழே!", "குமரிக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் ஆப்பிரிக்கா வரை பரந்து விரிந்தது/ தேமதுரத் தமிழின் முதல், இடைச் சங்க நூல்கள் அமிழ்ந்தன ஆழிதன் அலையின் சீற்றத்தில்/ மாமதுரை நகர் கண்ட சங்க நூற்களாய் மாந்தர்க்குக் கிடைப்பன பாட்டும் தொகையுமே!", "ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், இமயம் வரை சென்ற இமய வரம்பன், போரில் கலிங்கத்தை வென்ற குலோத்துங்கன், சிங்கபுரம் வென்ற இராஜகேசரி, அருண்மொழி இவர்தம் சீரிய வெற்றிகள் யாவும் உந்தன் வீரத்தைப் புவியோர்க்கு விளக்கி நிற்கும்", "வையத்துள் வீழாமல் வாழும் மொழிகளுள் ஐந்தோ ஆறோ அவற்றுள் இன்னும் உய்யும் விதமாய் நிலை பெற்று நிற்பவை சீனமும் தமிழ் மொழியும் தவிர வேறில்லை!", "கையில் கிடைத்தத் தொல்காப்பியம் சொல்லும் மெய்ப்பொருளை வேறெங்கும் கண்டதில்லை!", "தையலே! தரணியின் தலைமகளே போற்றி!" போன்ற வரிகள் தமிழ், தமிழர் மற்றும்  அவர்தம் வாழ்வு பற்றிச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவை. தமிழ்நாடு: நல்லவை 10! என்கிற இடுகையில் நான் நீட்டி முழக்கி விளக்கியிருப்பதைத்தான் இவ்வளவு சுருக்கமாகச் சொல்லி விளக்கியிருக்கிறார் கவிதை வடிவில். அதுதானே கவிதையின் ஆற்றல்!

கீழ்வரும் இரண்டு பாக்களும் என்னைப் பெரிதும் ஈர்த்தன:
தமிழும் இசையும் ஒன்றே ஆயின
தமிழும் மறையும் ஒன்றாய்க் கலந்தன
மறையும் தமிழும் இசையை வளர்த்தன
மறையும் இசையும் தமிழால் வளர்ந்தன
இசையும் மறையும் தமிழும் சேர்ந்து
இலக்கியம் தோன்றுமுன் தோன்றியவாம்
இசையுடன் வளர்ந்திட விழைந்து இசைந்த
இசையே, மறையே, தமிழே போற்றி!

தமிழன்னை முடிதனில் சூடிய மகுடம்
சிந்தாமணியாம், செவியில் குழைத்துத்
தழைத்த தாடங்கம் குண்டலகேசியாம்,
சுந்தர மகளிர் கரங்களில் பூ அலங்கரிக்க
அணியாய் ஒளிர்வது வளையாபதியாம்,
மின்னலிடைக்கு அழகூட்டும் அணிகலன்
மின்னும் ஒட்டியாணம் மனிமேகலையாம்,
பாதச்சிலம்பாய் மிளிர்ந்தின்னிசை எழுப்பும்
நாடத் தமிழணி சிலப்பதிகாரமாம்!

இதில் இரண்டாவது பா சொல்லும் கருத்தைப் பள்ளிக் காலத்திலேயே கேட்டு வியந்திருக்கிறேன்.

'தமிழர் திருவிழா' என்ற பா, என் கல்லூரிக் காலத்துப் 'பொங்கல்த் திருநாள்' கவிதையை நினைவூட்டியது.

'வளர்ச்சியும் தளர்ச்சியும்' என்ற தலைப்புக் கொண்ட இரண்டாம் பகுதி, கொஞ்சம் சுற்றுச் சூழல், கொஞ்சம் ஏற்றத்தாழ்வு,  கொஞ்சம் அரசியல் என்று சமூகம் சார்ந்த எல்லாம் பேசுகிறது. 'கட்டமைப்புத் திட்டம்' என்கிற கவிதை, ஆறு, கழனி, குளம், குட்டைகளின் முக்கியத்துவம் பற்றிப் பாடுகிறது. 'மரம் மனிதனுக்கு வரம்' என்கிற கவிதை, மரத்தின் மாண்பு சொல்கிறது. 'தொழிலால் வேற்றுமை வேண்டா' என்ற கவிதை, ஏற்றத்தாழ்வை வேண்டாமென்கிறது. 'தேசியக் கடமை', வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 'பாரதத்தாய் திருப்பள்ளியெழுச்சி' என்ற கவிதை, "கண்கட்டு வித்தையாம் அலைக்கற்றை மாயம்/ எண்ணற்றக் கோடியை இழப்பதா நியாயம்?/ பண்பற்ற கேடிகள் கோடியில் புரள/ உண்பதற் கில்லார் எங்ஙனம் வாழ?" என்று 2G-வரை நீண்டு அரசியல் பேசுகிறது. "திண்ணிய அரசும் கூட்டணி தருமத்தால்/ கண்ணியம் இழப்பினும் காட்டித்தருமோ?" என்ற வரி, மரபுக் கவிதையில் மாடர்ன் பிரச்சனையைப் பேசுகிறது!

"சண்டாளர் ஆனதோ பெரும்பான்மைச் சமூகம்?", "வேத தர்மத்தைப் பின்பற்றும் மாந்தரை/ பூதலந் தன்னில் வெறுத்து ஒதுக்க/ சூதினால் இங்கே வரப்போகும் சட்டம்/ நீதியை எங்ஙனம் நிலை நாட்டும்?" போன்ற வரிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சீறுவதைப் போல் தெரிகிறது. அப்படியிருப்பின், அது தவிர்த்திருக்கப் பட வேண்டியது என்பது என் சொந்தக் கருத்து. அது சரி - தவறு - அதில் என் நிலைப்பாடு என்ன என்பதற்கு அப்பாற்பட்டு, இது வேண்டாத விவாதங்களுக்கு விதை போடும் என்பதால் தவிர்த்திருக்கப் படலாம் என்பதே என் கருத்து. அத்தகைய விவாதங்கள்தானே இப்போதைய தேவை என்பது புரிகிறது. ஆனால், அத்தகைய சர்ச்சைகளுக்குள் போவது 'இந்த' நூலுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால், இந்த ஒரு பா பிற்காலத்தில் முழு நூலையே முடக்கிப் போடவும் வாய்ப்புள்ளது என்பது என் பார்வை.

இந்த வரி அருகில் இருக்கும் கூடங்குளம் பிரச்சனையை மையமாகக் கொண்டுள்ளது போலத் தெரிகிறது:
உள் நாட்டு மக்களின் உயிருக்கு அஞ்சல்
ஊதாரித் தலைவர்களின் உல்லாசக் கொஞ்சல்
போதை மயக்கம் தெளியாத நிலையில்
அயல் நாட்டு ஒப்பந்தம் மாட்டுமே வலையில்
எள்ளளவும் பாதுகாப்பில்லா உலையில்
எரிபொருள் வேண்டுமாம் குறைந்த விலையில்
தெள்ளத் தெளிவாய் அழிவை நாடும்
பிள்ளையைக் காக்க விழித்தெழு தாயே!

'முயற்சியும் உயர்ச்சியும்' என்ற மூன்றாம் பகுதியில் சமச்சீர்க் கல்வி பற்றிய பா, சற்று விவாதத்துக்கு உரியதாக இருக்கிறது. சமச்சீர் என்பது இயற்கைக்கு எதிரானது என்ற கருத்தைச் சொல்லும் கவிதைதான் என்றாலும், "இருக்கிற தரத்தைக் கெடுத்துத் தொலைக்காமல், பன்னாட்டுத் தரத்தில் சமச்சீர்க்கல்வி கொடுங்கள்!" என்று கேட்டு முடித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. "வறட்சியைப் பொதுவுடைமை ஆக்காதீர்; வளர்ச்சியைப் பொதுவுடைமை ஆக்கிடுவீர்!" என்ற பழைய கோரிக்கைதான். ஆனால், வறட்சியைப் பொதுவுடைமை ஆக்குவதிலும் ஒரு வசதி இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிச் செய்கையில்தான் எல்லோரும் வளர வேண்டும் என்கிற சிந்தனை கொஞ்சமாவது வளர்ந்து விட்டவர்களுக்கு வரும்.

மிகச் சில இடங்களில் இருக்கும் எழுத்துப் பிழைகளும் பழந்தமிழுக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாத நிறுத்தற்குறிகளில் ஏற்பட்டிருக்கும் சிற்சிறு சமரசங்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாம். முகப்பில் இருக்கும் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். கையில் ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டிருக்கும் நம் போன்ற பெருநகரவாசிகள் போலன்றி, மிகக் குறைவான வசதிகளோடு இத்தகைய நூல் கொணர்ந்ததே பெரும் சாதனை. அதில் இது நொட்டை அது நொட்டை என்று சொல்வது முறையாகாது. ஆனால், இது போன்ற கருத்துக்கள் அடுத்த பதிப்பு வெளிவரும் போது சில முன்னேற்றங்களைச் செய்ய உதவுமானால் அது நல்லதுதானே. ஒருவேளை இந்த இடுகையை யாராவது நல்ல ஓவியர் ஒருவர் படிக்க நேர்ந்தால், இந்த நூலுக்கு அழகான முகப்போவியம் வரைந்து கொடுக்க அவர் முன் வந்தால் அல்லது அப்படி வரைந்து கொடுக்க முன்வரும் ஓர் ஓவியரோடு அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தால், அது இந்த இடுகைக்கு மிகப் பெரும் வெற்றியாக அமையும். நன்றி!

கருத்துகள்

 1. இவ்வளவு விரிவாகவும், சிறப்பாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல் விமரிசனத்திற்கு எனது உளமார்ந்த நன்றி. இந்நூலின் ஆசிரியர் எனக்கு பல வருடங்களாக அறிமுகம் உண்டு. அவர் கடும் உழைப்பை மட்டுமே உறுதுணையாகக்கொண்டு முன்னேறிக்கொண்டிருப்பவர். பிறர் உரைநடை மோகனுக்கு கவிதை!

  நண்பரே, எனக்கு தமிழ் படிக்க மட்டுமல்ல, நன்றாக எழுதவும் தெரியும்! இப்பொழுது online Tamil converter மூலம் 'பாரதியின் பதிவுச்சுடர்களில்' கருத்துரை இடவும் கற்றுவிட்டேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிறர் உரைநடை மோகனுக்குக் கவிதை///
   இதுவே பெரும் கவிதையாக இருக்கிறது!!! :)

   இது தமிழில் தாங்கள் இடும் இரண்டாவது கருத்துரை என நினைக்கிறேன். அப்படியே பதிவிடவும் ஆரம்பியுங்கள். உங்களைப் போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதால் இழப்பு எமக்குத்தான்.

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்!

சாம, தான, பேத, தண்டம்

தீவாளிச் சுடிதார்