தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 2/6

தொடர்ச்சி...

கவிதை எழுதுவதுதான் உலகிலேயே உன்னதமான தொழில் என்றும் கவிஞர்களிடம்தான் நாட்டைக் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணித் திரிந்து கொண்டிருந்த இளமைக் காலத்தில், இலக்கியத்தில் இப்படியும் ஒரு வடிவம் இருக்கிறது என்று சிறுகதைகளை அறிமுகம் செய்து வைத்து, அதிலும் ஏதாவது கிறுக்கிப் பார் என்று எனக்கு நினைவு படுத்திய பெருமை கோணங்கியையே சாரும். இதே சொற்களில் இப்படியே சொன்னார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் சொல்லாமலே அவரிடம் இருந்து எடுத்துக் கொண்ட விஷயங்கள் பல. அப்படியான ஒன்றுதான் இதுவும். "என்னடா, எங்கயோ வந்து எதையோ பத்திப் பேசுற?" என்று நீங்கள் படும் கோபம் புரிகிறது. பொறுங்கள், அதையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்று சொல்லி விடுகிறேன்.

இந்த நூலில் இருக்கும் கதைகளில் ஒன்றில் வரும் பட்டாளத்து மாமா பாத்திரம், பட்டாளத்தில் இருந்த ஒரே காரணத்துக்காகத் தன்னை இம்மானுவேல் சேகரனோடு ஒப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்வது போல, ஒவ்வொரு கதையையும் முடிக்கிற போது நானும் என்னால் முடிந்த ஓர் ஒப்பீட்டைச் செய்து கொண்டே இருந்தேன் தமிழ்ச்செல்வனோடு. அது முற்றிலும் கண்டிக்கத் தக்கது - காவாலித்தனமானது எனினும், இது போன்ற சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடுகளின் மூலம்தானே கொஞ்சமாவது நம் தன்னம்பிக்கையையும் கூட்டிக் கொள்ள முடியும். அப்படித்தானே எல்லோருமே ஆரம்பிப்பது. எட்ட முடியாத உயரத்தைக் கூட எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பதன் மூலம் எட்டுவதற்கான வாய்ப்பு உருவாகி வரும் என்ற நம்பிக்கை. அவ்வளவுதான்.

கல்லூரிக் காலங்களில் என் சக்திக்கு முடிந்த அளவு நானும் கொஞ்சம் சிறுகதைகள் முயன்றேன். அதிக பட்சம் அப்படி ஒரு பத்துக் கதைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். ஓரிரு கதைகள் கல்லூரி இதழில் வெளி வந்தன. வெளியில் எந்தப் பத்திரிகைக்கும் ஒன்று கூட அனுப்பி முயன்று பார்த்ததில்லை (ஏனோ அதில் இன்றுவரை ஆர்வம் வரவே மாட்டேன் என்கிறது!). ஆனால், சீனியர் செல்வராஜ் அண்ணன் கல்லூரி இதழில் வந்த கதையை அப்படியே தூக்கிப் பெயரை மட்டும் மாற்றி அவர் பெயரைப் போட்டு ஒரு வார இதழில் வர வைத்து விட்டார். அதிலிருந்து ஒரு நம்பிக்கை... நாம் ஆசைப்படுகிற காலத்தில் நம் கதைகளை ஏதாவதொரு உருப்படாத பத்திரிகையிலாவது வரவைத்துக் கொள்ள முடியும் என்று.

அதாவது, சொல்ல வரும் விசயம் என்னவென்றால், இந்த நூலைப் படித்த பின்பு, அப்படி நான் எழுதிய பத்துக் கதைகளுமே ஏற்கனவே எழுதப் பட்டு விட்ட கதைகளோ என்றொரு கேள்வி வந்திருக்கிறது. இதில் நன்மை என்னவென்றால், கதைக்கருவாக நான் தேர்ந்தெடுத்த பல விசயங்கள் தமிழ்ச்செல்வன் போன்ற ஒருவரின் சிந்தனைக்குப் பக்கத்தில் இருப்பது நம்ப முடியாத அளவுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதற்கு எங்கள் பின்னணியில் இருக்கும் ஒற்றுமை காரணமா அல்லது அவருடைய கதைகளையெல்லாம் படித்து எழுத ஆரம்பித்ததால் ஏற்பட்ட சிக்கலா என்று தெரியவில்லை. அதில் இருக்கும் தீமை என்னவென்றால், 'இதையெல்லாம் ஏற்கனவே சொல்லி விட்டார்கள் தம்பி. அதுவும் நீ சொல்வதை விடப் பல மடங்கு அழகாகவும் தரமாகவும் சொல்லி விட்டார்கள். அதனால் நீ உன் வேலையை மட்டும் பார்த்தால் போதும். எழுதுகிற பக்கமெல்லாம் வர வேண்டாம்!' என்றொரு உள்ளொலி கேட்கிறது. கோணங்கி மனதில் நிற்கிற மாதிரிச் சொல்லிச் சென்றுள்ள பல கருத்துக்களில் ஒன்று, "எல்லாமே சொல்லப் பட்ட கதைகள்தான்டா தம்பி!" என்பது. அது கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது. "அவர்கள் சொன்னதையே நீயும் சொன்னாலும் தப்பில்லை தம்பி. உனக்கேற்ற மாதிரி - உன் ஆட்களுக்கேற்ற மாதிரிச் சொல்லிக் கொள்!" என்றொரு தெளிவும் பிறக்கிறது.

இப்போது நூலுக்குள் செல்வோம். நூலின் முதற் கதையான "பாவனைகள்", கிராமத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சென்னையிலும் பெங்களூரிலும் இருக்கும் என் நண்பர்கள் பலருக்கு இதையெல்லாம் நம்பவே முடியாது. சிலர் மிகைப் படுத்தப் பட்டவை என்று கூடக் குற்றம் சாட்டலாம். அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், அதற்கு மிக அருகில் வாழ்ந்த அனுபவம் உள்ளவன் என்ற முறையில் அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. தந்தையிடம் கேட்ட அல்வாக் கிடைக்கவில்லை என்று அழுது அடம் பிடிக்கிற சிறுவன், கடைசியில் "புண்ணாக்கு எடுத்து வந்து கொடுக்கிறேன்" என்று அவனுடைய அண்ணன் சொன்னதும், "அல்வாவை நம்புவதை விட புண்ணாக்கை நம்பலாம்!" என்று சமாதானம் ஆகி விடுகிறான்.

புண்ணாக்கு என்றொரு சரக்கு இருப்பதே நிறையப் பேருக்குத் தெரியாது என நினைக்கிறேன். அப்படித் தெரிந்த பலருக்கும் அதை மனிதர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று தெரிந்திராது. அது மாடு சாப்பிடும் உணவு என்பது மட்டும்தான் தெரிந்திருக்கும். அதுதான் உண்மை எனினும், மனிதர்களும் அதை விரும்பிச் சுவைப்பதுண்டு என்பதை நினைவு படுத்துகிறது இந்தக் கதை. அப்படிப் புண்ணாக்குச் சாப்பிட்டுப் பழக்கப் பட்டவர்களே கூட அதை மறந்து விட்டாலும் இந்தக் கதையைப் படித்தால், "நீயும் இதைச் சாப்பிட்டிருக்கிறாய். மறந்து விட்டாயா?!" என்று நினைவு படுத்தப் படுவார்கள். சின்ன வயதில் அந்தப் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது. புண்ணாக்கு என்றால் ஏதோ அசுத்தமான ஒன்று என்று யாரும் முகம் சுளிக்காதீர்கள். எண்ணெய்ச் செக்கில் மிஞ்சும் சக்கைதான் புண்ணாக்கு. அதை முக்கிய உணவாக யாரும் உண்பதில்லை. நேரடியாக செக்கில் இருந்து எடுத்துச் சுவைத்தால் சிறிது சுவையாக இருக்கும். அப்படிப் பொழுதுகளில் மட்டும் சுவைத்துக் கொள்வர். அவ்வளவுதான்.

அந்தக் கதையில் மற்றொரு முக்கிய விசயம் - அழுது அடம் பிடிக்கும் தன் பிள்ளையை தாய் 'முதுகில் ஒன்று வைத்தாள்' என்று வரும் வரி. குழந்தையைக் கொடுமைப் படுத்துவது, மனைவியைக் கொடுமைப் படுத்துவது, பெற்றோரைக் கொடுமைப் படுத்துவது ஆகிய அனைத்தும் நகரங்களிலும் நாகரிக சமூகத்திலும் கூட இன்றும் உள்ளது எனினும், அவை கிராமங்களிலும் கீழ்த்தட்டு மக்களிடமும்தான் அதிகமாக இருக்கிறது. குழந்தையின் கண்ணில் தூசி பட்டால் கூடக் கதறி விடுகிறோம் பெரும்பான்மை நகரவாசிகள். பெற்றோரில் ஒருவர் குழந்தையைத் திட்டியதற்காகவோ கடுமையாகப் பேசியதற்காகவோ கொடூரமாகச் சண்டை போட்டுக் கொள்ளும் கணவன்-மனைவியர் கூட நிறைய உண்டு நம்மில். புண்ணாக்கு தின்னுவது போலவே இதுவும் நமக்குப் பெரும் ஆச்சரியமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலானவர்கள், இது நடக்கிறது - ஆனால், நம்மைச் சுற்றி நடப்பதில்லை என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பெற்று விட்டால் அந்தக் குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் - அதற்கான உரிமை தமக்கு உள்ளது என்று நிறையப் பேர் எண்ணுகிறார்கள்.

பத்து ரூபாய் காணவில்லை என்று குழந்தையைத் தீ வைத்துக் கொளுத்திக் கொன்ற கொடுமை நம் தமிழ் மண்ணில்தான் (கும்பகோணம் அருகில்) நடந்தது (பின்னர் அந்தப் பத்து ரூபாய் கிடைத்து விட்டது என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்!). அமெரிக்காவில் குழந்தையைத் தொட்டால் அத்தோடு அந்தப் பெற்றோரின் சோலி முடிந்தது. போலீஸ் வந்து விடும். நம் கிராமங்களின் பெருமைகளைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் அதே வேளையில், நாகரிகத்தில் நாம் எவ்வளவு தொலைவு இன்னும் பயணப் பட வேண்டியுள்ளது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. அதை இந்த வரி போகிற போக்கில் சொல்லிச் சென்று விடுகிறது என்றாலும், அடுத்து சில நிமிடங்களுக்கு அடிபட்ட குழந்தையை விட்டு நம்மால் நகர முடிவதில்லை. தீவிர சிந்தனைச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. மனித உரிமை என்பது கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் தண்டனைகளில் இருந்து காப்பது மட்டுமல்ல. இது போன்று வதைப் படும் குழந்தைகளையும் காக்க வேண்டும். அழுவதை நிறுத்துவதற்காக அடி வாங்கும் குழந்தைதான் அடுத்து எந்தக் காரியத்தையும் சாதிக்க வன்முறையைக் கையில் எடுக்கும். இது மனிதாபிமானம் மட்டுமே சம்பந்தப் பட்ட பிரச்சனை அல்ல. அறியாமையும் ஒரு பெரும் காரணம். இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கிறது. அது மாறாதவரை எதையுமே குறை சொல்ல முடியாது என்பதும் உண்மைதான்.

அடுத்த கதை, அசோகவனங்கள். வெயிலோடு போய் கதையில் வரும் அதே மாரியம்மாதான் இதிலும் நாயகி. சிறுகதையில் இது ஒரு புதிய உத்தி. சுஜாதாவின் கதைகளில் கணேஷ் மற்றும் வசந்த் என்று இரு பாத்திரங்கள் வந்தே தீரும் என்பார்கள். அது பெயரை மட்டும் மீண்டும் மீண்டும் பயன் படுத்திக் கொள்ளும் உத்தி. அது போல நிறையப் பேர் தத்தமக்கென்று பெயர்களும் பாத்திரங்களும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அப்படியல்ல. அதே ஆட்களின் இரு கதைகள் போல இருக்கிறது. இதிலும் மாரியம்மாவின் மச்சான் தங்கராசுதான். கதை என்னவென்றால், மாரியம்மா தங்கராசுவின் நினைப்பிலேயே திரிபவள். தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் அதை ஒரு சினிமாவாக ரசிப்பவள். இந்த வரியும் எனக்கு மிகவும் பிடித்தது. எங்கள் கிராமங்களில் (உங்கள் நகரங்களிலும்தான்!) இது போன்ற  எக்கச் சக்கப் பெண்களைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே சினிமாவை வைத்துத்தான் சிந்திப்பார்கள். கமல் மாதிரியே கணவன் வேண்டும்; தீபாவளித் திரைப்படத்தில் பார்த்தது போலவே பொங்கலுக்குப் புடவை வேண்டும்; ஒரே பாட்டில் பத்து நாடும் பதினைந்து உடைகளும் மாற்றிக் கொள்ளும் வாழ்க்கை வேண்டும்; இப்படி இயலாத எல்லாமே வேண்டும்.

தீப்பெட்டி ஆபீசில் கணக்கப்பிள்ளையிடம் திட்டு வாங்கி விட்டு, வீடு திரும்பிய பின்னும் தோழி கோமதியின் "பொண்டாட்டியக் கூப்புடற மாதிரிக் கூப்புட்றான் எடுபட்ட பய" என்ற கமென்ட் அறுத்துக் கொண்டே இருக்கும். அன்றிரவு வீட்டில் போய் படுக்கையில் விழுந்து வழக்கம் போல் கனவு காண முயல்கையில், கனவில் தங்கராசு வராமல் திட்டிய கணக்கப்பிள்ளை வருவான். அவன் பின்னால் கழுத்தில் மாலையோடு சென்று கொண்டிருப்பாள். இதில் நம் கரிசற் பெண்களின் உளவியல் மென்மையாகச் சொல்லப் பட்டிருக்கும். ஒரே நிகழ்வில் - ஒரே சொல்லில் நம் பெண்களின் மனதை உடைத்து விடுகிற முடியும் அளவுக்கு ஆண்-பெண் உறவு கண்ணாடியாக வைக்கப் பட்டிருக்கிறது நம் மண்ணில்.

அடுத்த கதை, நம் சினிமாப் புகழ் "வெயிலோடு போய்". அந்தக் கதைதான் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே. அதே மாரியம்மாள். அவள் ஆசைப்பட்ட மச்சான் வேறொருத்தியைக் கட்டிக் கொண்டு போய் விடுகிறான். தான் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது இருப்பது யாரென்று பார்த்து ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வுதானே. பார்த்து வரலாம் என்று செல்கிறாள். போன இடத்தில் தன் மனசெல்லாம் நிறைந்த மச்சானைக் கொடுமைப் படுத்திக் கொண்டு இருப்பாள் வந்தவள். தான் மச்சானைக் கைப் பிடிக்க முடியாமல் போய் விட்டதை விட அவன் கொடுமைப் பட்டுக் கொண்டிருப்பது கண்டு கதறி கதறிக் அழுவாள். தன்னிடம் சிக்கியிருந்தால் கொஞ்சமாகக் கொடுமைப் படுவானே என்று எண்ணினாளோ என்னவோ! :)

இதில் பேசுவதற்குப் பல விசயங்கள் இருக்கின்றன. ஒன்று, பொழுதெல்லாம் பெண்ணுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன் போன்ற ஒருவர், கொடுமை ஆண்கள் மட்டும் செய்வதில்லை என்கிற தன் பாகுபாடற்ற மனத்தை அப்படியே வெளிக் காட்டியிருப்பது ஓர் உலக மகா அதிசயம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினால் மட்டுமே பிழைப்பு ஓடும் என்கிற மாதிரியான ஒரு சூழலில் இப்படியெல்லாம் யாராவது ஏதாவது சொல்லி விட்டால் நாம் அளவுக்கதிகமாகவே உணர்ச்சி வசப்பட வேண்டியுள்ளது. உலக எழுத்துக்களிலேயே உன்னதமானவை பிரசாரத்துக்காக எழுதப்பட்ட எழுத்துக்கள்தான் எனினும் அவை நடைமுறையை விட்டு மித மிஞ்சி விலகிப் போகையில் அவற்றின் நம்பகத் தன்மையையும் இழந்து விட வாய்ப்புண்டு என்பதைப் புரிந்துள்ள பிரச்சார எழுத்தாளர் இவர் என்பது பெருமையான ஒன்றுதான். இரண்டு, மாரியம்மாவே அவனைத் திருமணம் செய்திருந்தாலும் அப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருக்கலாம். திருமண உறவு என்பது அவ்வளவு சிக்கலானது. சில பெண்களை அவர்களுடைய கணவர்களுக்கும் சில ஆண்களை அவர்களுடைய மனைவிகளுக்கும் கொடுமைப் படுத்துவது அவ்வளவு அல்வாவாக இனிக்கும் (என் மனைவி இதை வாசிக்கிறாளா என்று தெரியவில்லை!). தன் கணவனை அல்லது மனைவியைக் கொடுமைப் படுத்தும் ஒரே காரணத்துக்காக ஒருத்தரைக் கொடுமைக்காரர் என்று சொல்ல முடியாது. இல்லையா?! :)

வீடு திரும்பிய மாரியம்மா தன் மச்சானை நினைத்து வீரிட்டு அழுவாள். அவளுடைய வீட்டுக்காரன் பாவம். தான்தான் தவறாக ஏதோ பேசிவிட்டோமோ என்று பயந்து நடுங்கி மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கூத்தாடி அவளைச் சரிக்கட்ட முயல்வான். அந்த வரியில்தான் சசி மனமுடைந்து அதைப் படமாக எடுக்க முடிவு செய்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல, காதற் கசக்கல்கள் எல்லாம் அனுபவித்திராததால் நம்மால் ஓரளவுக்கு மேல் அதற்காக மனம் உடைந்து போக முடியவில்லை.

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்