"புரியும்படி எழுதுங்கடா புண்ணாக்குகளா" என்போருக்கு...

மொழி பெயர்ப்பு பற்றிய பதிவைப் படித்து விட்டு, “புரிகிற மாதிரி மொழி பெயர்ப்பு செய்யப் போகிறேன் என்று புரியாத மாதிரி ஒரு பதிவு எழுதி விட்டாயே?!” என்று நிறைய ஆதங்கங்கள். என் எழுத்து மீது சுமத்தப் படுகிற ஒரு குற்றச்சாட்டு, என்ன சொல்ல வருகிறாய் என்றே புரியவில்லையப்பா என்பது. அது உண்மையா? இருக்கலாம். அப்படி இருந்தால் ஓரளவு மகிழ்ச்சியே. ‘இதில் மகிழ்வதற்கு என்னப்பா இருக்கிறது, மானங்கேட்டுப்போய்?’ என்கிறீர்களா? இருக்கிறது நிறைய.

எந்தத் துறைக்கு வருகிற எவரும் நான் இன்னார் இன்னாருடைய மகன், மருமகன், பேரன், ஒன்னு விட்ட அண்ணன் மகன், ரெண்டு விட்ட தம்பி மகன் என்று சொல்லிக் கொண்டு வருவது முடிந்த அளவு தவிர்க்கப் பட்டால் நல்லது. அது அவர்களுடைய பெயரை வைத்துக் கூட்டம் சேர்க்கிற முயற்சி ஆகிவிடும். தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகி விடும். அது மட்டுமல்ல. அது சமூகத்துக்கு ஒரு தவறான கருத்தையும் கொண்டு செல்லும். இப்படிப் பின்னணி கொண்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்கிற தவறான கருத்து. அதே வேளையில், எல்லாக் குணாதிசயங்களையும் போலவே, எழுத்தின் மீதான ஆர்வமும் உயிரணுவில் பார்சலாகி வருவதுவும் அல்லது படுக்கையில் உச்சாப் போகிற வயதில் இருந்து அது பற்றி அடிக்கடிக் கேள்விப் படுவதில் கிடைக்கிற பரிச்சயமும் பின்னணியால் கிடைக்கிற பலன்கள். எனவே, நான் எப்படி இப்படி ஆனேன் என்பதற்கு என்னுடைய பின்னணியைச் சிறிது சொல்லியே ஆக வேண்டும். இந்தப் பிதற்றல் பெரும்பாலும் நல்ல சுவையாக இராது என்பதை அறிந்தே பிதற்றுகிறேன். ஒரு முறை பொறுத்துக் கொள்ளுங்கள்.

முன்பு சொன்னது போல், ஓரளவு அரசியல் பின்னணியும் எழுத்துப் பின்னணியும் கிடைக்கப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவன் நான். தாத்தா விடுதலைப் போராட்ட வீரர். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் வி. வி. கிரி மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோரின் நெருங்கிய நண்பர். இருவருடனும் விடுதலைப் போராட்ட காலத்தில் சிறையில் ஒரே அறையில் தங்கியவர். அப்போது, வெங்கட்ராமன் அவர்களால் பொதுவுடைமைக் கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டவர் (ஆனால், அவரோ காங்கிரசிலேயே இருந்து குடியரசுத் தலைவராகி விட்டுப் போய் விட்டார்!). பொதுவுடைமை இயக்கத்தில் மாநில அளவில் பல பொறுப்புக்களில் இருந்தவர். அவர் இலக்கியம் எதுவும் படைக்க வில்லை. ஆனால், நிறைய வாசித்திருக்கிறார். புத்தகம் போடும் அளவுக்கு நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். இரண்டுமே இடது சாரிகளுக்கே உரிய அடிப்படைக் குணங்கள்.

அடுத்து வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ரத்த உறவு ஒன்று நிறையக் கவிதைகளும் நூல்களும் படைத்திருக்கிறது. சினிமாவிலும் ஓரளவு (மிகக் குறைந்த அளவு) பாடல்கள் எழுதியிருக்கிறது. ஏன் வெளியில் சொல்ல முடியாதென்றால் கொஞ்சம் உட்கட்சிப் பூசல். இதைப் படிக்க நேர்ந்தால், ‘என் பெயரைச் சொல்லி எப்படி நீ பெருமை தேடலாம்’ எனக் கடிதம் எழுதி விளக்கம் கேட்கும். ஆகவே, இதற்கு மேல் அந்த உறவு பற்றிப் பேச வேண்டாம். பின்பு உரையாடலுக்குத் தேவைப்படுகிற ஒன்றை மட்டும் சொல்லி விட்டு ஓடி விடுவோம். அந்தக் கவிதைகளும் பாடல்களும் அவற்றின் எளிமைக்குப் பெயர் பெற்றவை. பாமரனும் புரியத்தக்கவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைத் தன் மானசீகக் குருவாகக் கொண்டது.

அடுத்து வருகிற கூட்டம்தான் பெருங்கூட்டம். தீவிர இலக்கியத் தொடர்பு உள்ளவர்களாக இருந்தால் இப்பெயர்களை உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் (ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார் வாசகர்களாக இருந்தால் கண்டிப்பாகத் தெரியாது). ச. தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருக பூபதி என்று ஒரு குடும்பமே இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் என் சித்தப்பாமார்கள். அவர்கள் பற்றித் தெரியாதோருக்குப் புரிகிற மாதிரி சில விபரங்களை இந்தப் பதிவின் இறுதியில் தருகிறேன். அதன் பின்பு அவர்கள் பெருமை கண்டிப்பாக உங்களுக்குப் புரிபடும் என நம்புகிறேன். அவர்கள்தான் என் எழுத்தார்வத்துக்குப் பெருமளவில் தீனி போட்டவர்கள். அவர்களைப் பார்த்து அப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, இன்னும் அவர்கள் இலக்கியத்தில் பிடித்திருக்கிற இடங்களைப் பூதக் கண்ணாடி போட்டுப் பார்க்கும் தொலைவைக் கூட நெருங்க வில்லை. இப்போதே நான் எழுதுவது புரியவில்லை என்று கூறுகிறீர்கள். அவர்கள் போல் எழுத ஆரம்பித்து விட்டால் கண்டிப்பாக என் உறவைத் துண்டித்துக் கொள்வீர்கள். இவர்களுடைய அப்பா மே.சு. சண்முகம் அவர்களும் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் என் தாயின் தாய் மாமா. இப்படியாக ஒரு எழுத்துப் பட்டாளத்தின்உதவியோடு உருவெடுக்க முனைந்து கொண்டிருப்பதால் கண்டிப்பாக அவர்களைப் போன்று ஒரு புரியாத்தன்மை என்னிடமும் வரத்தான் செய்யும். இவர்களில் தந்தையும் மூத்த மகனும் ஓரளவு புரியும் அளவுக்கு எழுதுபவர்கள். கடைக்குட்டி முருக பூபதி நாடகக் கலைஞர். இவரும் முற்றும் புரியாத மாதிரி எழுதும் வல்லமை பெற்றவர். இவர்கள் அனைவரையும் விட நான் அதிகம் தொடர்பில் இருப்பவர், கோணங்கி. கோணங்கி எப்படிப் பட்டவர் என்பதை ஒரு தனிப் பத்தியில் எழுத வேண்டும்.

ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது, மறுநாள் சமூக அறிவியல் தேர்வுக்குப் படிக்கப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு அலைந்த போது, கோணங்கி ஒரு பேனா பரிசாகக் கொடுத்தார். மறு நிமிடமே, புத்தகத்தை மூடி வைத்து விட்டு, சிறு பிள்ளைத் தனமாக ஒரு கவிதை முயற்சி (நடிகைக்குக் கோயில் கட்டும் நாட்டு நடப்பு பற்றியது) செய்தேன். அதுதான் ஆரம்பம். அதிலிருந்து கிறுக்குப் பிடித்தது போல கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன், அவற்றின் தரம் பற்றிய கவலைகள் எதுவும் இன்றி. கோணங்கி மீதும் ஓர் இனம் புரியா ஈர்ப்பு. அவ்வப்போது அவர் இருக்கிற இடமே தெரியாமல் போய் விட்டாலும், இதுதான் அவர் போன பாதையாக இருக்கும் என்று விரட்டித் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எதிர் பாராத சில நேரங்களில் அவரே வீடு தேடி வந்து திட்டி விட்டுப் போவார், ‘வேகம் பத்தாது மகனே’ என்று. சில நேரங்களில் எழுப்பி விட்டும் போவார், ‘இப்படியே தூங்கிக் கொண்டிருந்தால் நீ உருப்படவே மாட்டே’ என்று.

புரிகிற மாதிரி எழுத ஆரம்பித்து, புரி படாத் தன்மையின் உச்சத்தை அடைந்து விட்டவர். புரியாத மாதிரி எழுதுவதற்கு இவர்களெல்லாம் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பார்களா என்றால், இல்லை. அதுவல்ல அவர்களுடைய நோக்கம். யோசனை என்பது வெவ்வேறு தளங்களில் நடப்பது. உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. ஆனால், வெவ்வேறு பட்ட விதங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கருத்து பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான புரிதல் இருக்கும். அந்தப் புரிதலை வரவைக்க எந்த வித முயற்சியும் எடுக்காமல், வாசிப்பவரும் அதே விதமான புரிதலுக்குள் போய் வந்திருப்பார் என்ற முன் முடிவோடு, தனக்கே வரும் பாணியில் சொல்லி விட்டுப் போவது. இதில் மிகப் பெரும் பிரச்சனை அதைப் புரியாதவர்கள் அது எழுத்தே அல்ல என்று ஆணித்தரமாக வாதிடுவார்கள். நல்லது என்னவென்றால், அதே மாதிரியான புரிதலுக்குள் போய் வந்தவர்கள் அவருடைய எழுத்துக்களை அளவிலாது புகழ்வார்கள். குறிப்பாக, கோணங்கியின் வாசகர்கள் அவருடைய எழுத்துக்கள் கிறுக்குப் பிடிக்க வைப்பது போல ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணுவதாகச் சிலாகிக்கிறார்கள். ஒரு வித போதை நிலைக்குக் கொண்டு செல்வதாக அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவரை நேரில் சந்தித்தாலும் அதை உணர முடியும். குழந்தையும் குடிகாரனும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு மனநிலையில் வலம் வருபவர். அவருடைய படைப்புகள் போலவே அவரும் பொறாமைப் படத்தக்க ஒரு படைப்பு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவருடைய எழுத்துக்கள் இன்னும் எனக்குப் புரிய ஆரம்பிக்க வில்லை. அது போல் மற்ற பல நண்பர்களின் எழுத்துக்களும் புரிபடுவதில்லை. ஆனால், உடன் இருக்கிற நிறையப் பேர் புரியவில்லை என்று சொல்கிற வேறு சில எழுத்துக்கள் எனக்கு அதே போன்ற அளவிலாத கிளர்ச்சியை உண்டு பண்ணுவதை உணர்ந்திருக்கிறேன். அதுவே, அது போன்று எழுதுவதன் மீதான ஆசையை மிகுதிப் படுத்தியது.

இதற்கு நடுவில் சென்ற முறை கோணங்கியைச் சந்தித்த போது “இதுவரை கண்டிராத ஒரு புது வித நடை உன் எழுத்தில் காண்கிறேன்; விட்டு விடாதே” என்று உசுப்பேற்றி விட்டுப் போய் விட்டார். பிடிக்க முடியுமா நம்மை?! என்னால் அவருக்கு இலக்கிய வாரிசாக முடியும் என்றால் அது இருவருக்குமே அளவிலாத மகிழ்ச்சி கொடுக்கும் நிகழ்வாக இருக்கும். அதுதான் அவரும் நெடு நாட்களாக என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பது. ஆனால், இந்த நிமிடம், அவர் கண்ணுக்கெட்டும் தொலைவில் கூட நான் இல்லை. நிறையப் பணியாற்ற வேண்டியிருக்கிறது. பார்க்கலாம். எவ்வளவு முடிகிறதென்று.

இத்தகைய எழுத்துக்கள் மூலம் சாதிக்க முடியாதவை பல:
1. பணம் நிறையச் சம்பாதிக்க முடியாது. எழுத்தை முழு நேரத் தொழிலாகக் கொள்வதாக இருந்தால் வேறு ஏதாவது வருமானத்துக்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.
2. உங்கள் எழுத்து நிறையப் பேரைச் சென்றடையாது. எழுத்தாளர் என்று பெயர் வாங்க முடியாது. பொது இடங்களில் பார்த்தால் யாரும் ஆட்டோக்ராஃப் கேட்க மாட்டார்கள். தப்பித் தவறிக் காலை மிதித்து விட்டால் எல்லோரையும் போல உங்களையும் நம் தமிழ்ப் பெருங்குடியின் உடன்பிறப்புகள் முறைத்து விட்டோ கெட்ட வார்த்தையில் திட்டி விட்டோ போவார்கள். வாங்கிக் கொள்ள வேண்டும்.
3. சினிமாவுக்கு எழுதும் வாய்ப்பு ஒரு போதும் கிடைக்காது. மாறாக, அவன் எழுதுவது எழுத்தே இல்லை என்று திட்டுக் கிடைக்கும் அடிக்கடி.
4. விருதுகள் எதுவும் கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, விருது பெறுபவர்கள் எழுதுவதெல்லாம் எழுத்தே இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம்.
5. நமக்குப் பிடித்தவர்களிடம் மட்டும் பேச்சு வைத்துக் கொள்வது போல், நம்மோடு ஒத்த கருத்தும் கருத்தாக்க விதமும் கொண்டவர்களிடம் மட்டும் இலக்கியத் தொடர்பு இருக்கும். மற்றவர்கள் மாற்றோர் ஆகி விடுவர். இதுவே அதில் வசதி என்றும் வாதிடலாம்.

இத்தனைக்கும் பின், அதன் மீது ஒரு தீராத ஆசை. அதில் இருக்கிற வசதிகள் பல. விரும்பிய படி எழுதலாம். பிறருக்குப் பிடித்தது போல் அல்லது பிடிப்பது போல் எழுத மெனக்கெட வேண்டியதில்லை. பிடிப்பது சிலராக இருந்தாலும் இறுக்கமாகப் பிடிப்பர். உற்பத்தி பண்ணிக் கொண்டே போகலாம். முறைப்படுத்தும் வேலைகளில் நேரம் செலவிட வேண்டியதில்லை. உற்பத்தியைப் போலவே முறைப்படுத்துதலும் முக்கியம் தான். இல்லையேல், பல நேரங்களில் உற்பத்தியே வீணாகி விடும். ஆனால், சிலருக்கு முறைப் படுத்தும் வேலைகளில் இறங்கி விட்டால் உற்பத்தியே பாதிக்கப்பட்டு விடும்.

அனைத்துக்கும் மேல், கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு சினிமாவில் பாடுவது போல், அப்படியும் எழுதப் பழகிக் கொண்டு முறையாகப் புரியும்படியும் எழுதலாம். அது போலவும் நிறையப் பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று ஆத்ம திருப்திக்கு. மற்றொன்று வாசிப்போர் வசதிக்கு. அது மட்டுமல்ல, பணத்துக்கு, பெயருக்கு, விருதுக்கு, ஆட்டோகிராஃபுக்கு, ஆட்களுக்கு!

எனவே, இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், சில பதிவுகள் புரியாத மாதிரித் தெரிந்தால் எப்படியும் நாசமாப் போவென்று விட்டு விடுங்கள். ஆனால், இவன் எழுதுவதையே படிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள். எல்லோருக்கும் புரிகிற மாதிரியும் நிறைய எழுதுவேன். எனக்கும் ஆட்கள் பிடிக்கும்; கூட்டம் பிடிக்கும்; ஆலமரத்தடிக் கதை பேசல்கள் பிடிக்கும். இடையிடையில் வரும் புரிபடாத சில பதிவுகள் மீதான உங்கள் பொறுமைக்கு என்றென்றும் என் நன்றிகள்.

மன்னிக்கவும், இது விளம்பரப் பகுதி:
• மே. சு. சண்முகம், பூட்டுப் பாம்படம், நிலம் மருகும் நாடோடி மற்றும் பெரிய வயல் எனும் மூன்று புதினங்கள் எழுதியிருக்கிறார். செம்மலரில் நிறையச் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதுபவர்.
• மூத்த மகன் (ச. தமிழ்ச்செல்வன்) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர். கதைக்கு விருது பெற்ற பூ படத்தின் கதையை அதற்கு முன்பே ‘வெயிலோடு போய்’ என்ற பெயரில் கதையாய் வெளியிட்டு மிகுந்த வாசகர் அன்பைப் பெற்றவர். “இந்தக் கதையை நான் படமாக்கிய பின்புதான் என் இயக்குனர் கனவு நிறைவேறியதாகக் கொள்வேன்” என்று தவம் இருந்து இயக்கினார் அதன் இயக்குனர் சசி. பல்வேறு சிறுகதைகளும் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். களப் பணிகளில் தீவிரமாக உழைப்பவர். தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள் தொடங்கி, அடுத்தடுத்து பல போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார்.
• கோணங்கியும் ஏகப்பட்ட நூல்கள் வெளியிட்டிருக்கிறார். சாகித்ய அகடமியின் தேர்வுக் குழுவில் இருந்திருக்கிறார். அவுட்லுக் ஆங்கில வார இதழில் தலை சிறந்த 50 இந்தியர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கதை சொல்லி என்ற பெயரோடு. இது எல்லாவற்றையும் விட நம்மவர்களுக்கு நன்றாகப் புரிகிற ஒன்று, நடிகர் கமல் இவருடைய தீவிர வாசகர். கமல் இவரைப் பார்க்க வேண்டும் என்று ஆள் அனுப்பி வைத்த போது, “நான் சினிமா பார்ப்பதில்லை; நான் அவருடைய ரசிகனுமில்லை. எனவே, நான் அவரைப் போய்ப் பார்க்க முடியாது. அவர் வேண்டுமானால் என்னை வந்து பார்க்கட்டும்” என்று அனுப்பி வைத்து விட்டார். மேலோட்டமாக இதைக் கேள்விப் படும்போது அவர் ஒரு திமிர் பிடித்த ஆள் போலத் தோன்றலாம். ஆனால், அவரைச் சந்தித்தால் அதற்கான அறிகுறி சிறிதும் சிக்காது. ஒரு குழந்தையைப் போல பேசுவார். தமிழ் நாட்டின் தலை சிறந்த ஊர் சுற்றி யார் என்று எந்த எழுத்தாளரிடம் போய்க் கேட்டாலும் இவரைத்தான் சொல்லுவார். அடுத்த நிமிடம் எங்கே இருப்பார் என்று இவருக்கே தெரியாது. நம்மில் பல பேர் செய்ய வேண்டும் என நினைத்துச் செய்ய முடியாமல் போன பல காரியங்களை மிக எளிதாக அன்றாடம் செய்து கொண்டிருப்பவர். அதற்கொரு காரணம், கிட்டத்தட்ட 55 வயதாகியும், இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல், எழுதுவதற்காக மட்டுமே வாழ்பவர். ஊர் சுற்றுவது எழுதுவதற்கான மேட்டர் சேகரிக்கும் உப வேலை.
• முருக பூபதியும் திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்து விட்டு, பின்னர் திருமணம் செய்து கொண்டு, அதனால் எந்த பாதிப்பும் அடையாமல் தொடர்ந்து எழுதி வருபவர். அடிப்படையில் ஒரு நாடகக் கலைஞர் என்பதால், நாடகங்களும் எழுதி நடிக்கிறார்.

கருத்துகள்

  1. இதை நான் வாசிக்கும் போது மிகவும் களிப்பூட்டுகிறது!! இலக்கியத்தில் நீ போய் சேறும் இடம் இறுதியில் கோணங்கியின் வீட்டு முற்றம் தான் என்று என் எழுத்து முயற்சியை ஊக்கப் படுத்தும் பொருட்டு சொன்ன ஒரு கவிஞரின் வார்த்தைகள் மறுபடியும் ஒலிக்கின்றன. ஒரு முறை அவர் அருகில் அமர்ந்திருந்தும் அவருடன் பேசுவதற்கு ஒன்றுமற்று வெறுமனே இருந்தேன், மீண்டும் அவருடன் பேசும் வாய்ப்பிற்காக சில நண்பர்களை இப்பொழுது கேட்டு வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வாழ்த்தப் பட்டீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் பெரிய இடத்துக்குப் போகப் போவதாகக் கணித்திருக்கிறார் அந்தக் கவிஞர். அடிக்கடி நாகலாபுரம் வருவார். அவருடைய தாயின் ஊரும் நாகலாபுரம் என்பதால் - குறிப்பாகச் சொன்னால் பள்ளிவாசல் பட்டி என்பதால், அவருக்கு நாகலாபுரத்தின் மீது ஓர் அதீதக் காதல் உண்டு. அவருடன் பேச்சை ஆரம்பித்தால் போதும். மீதியை அவர் பார்த்துக் கொள்வார். கூடிய விரைவில் சந்திப்பீர்கள் என்று நம்புவோம்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்