ஞாயிறு, ஜனவரி 05, 2020

தின் தியானி காதலி (Eat Pray Love)

மணவாழ்க்கை முறிவுக்குப் பின் அதன் கொடிய நினைவுகளிலிருந்து விடுபடுவதற்காக உலகம் சுற்றப் புறப்பட்ட ஒரு பெண்ணின் சொந்தக் கதைதான் 'Eat Pray Love'. நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பெயரைத் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டவை என்று சொல்கிறார் இதன் ஆசிரியர் எலிசபெத் கில்பெர்ட். எனவே இது புனைவல்ல. அபுனைவு வகையிலேயே சேரும். ஆனாலும் ஒரு புனைவுக்கு உரிய சுவாரசியம் இருக்கிறது. எனவே அது எங்கு போய் முடியுமோ அங்கு முடியவும் செய்தது. ஆம், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. எலிசபெத் கில்பெர்ட் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே எழுத்தாளர்தான். ஆனால் இந்த நூல்தான் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

இத்தாலி, இந்தியா, இந்தோனேசியா என்று 'இ'யில் தொடங்கும் பெயர் கொண்ட மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் செல்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் என்ன செய்தார் என்பதே இந்த மூன்று சொற்களைத் தலைப்பாகக் கொண்ட நூலின் உள்ளடக்கம். இத்தாலியில் தின்று தின்று தூங்குகிறார். இந்தியாவில் வந்து ஓர் ஆசிரமத்தில் தன்னைத் தேடுகிறார். அடுத்து இந்தோனேசியா போய் ஒரு வயது மூத்த பெரியவரோடு வெறிகொண்டு காதல் செய்கிறார். சிற்றின்பம்-பேரின்பம்-சிற்றின்பம்... அவ்வளவுதான்.

இத்தாலி பற்றிச் சொல்லும் போது, "ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சொல் இருக்கும், அந்த ஊரில் வாழ்கிற எல்லோருக்கும் எந்த நேரமும் அந்தச் சொல்தான் அவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும், ரோம் நகரத்தின் அப்படியான சொல் 'செக்ஸ்'" என்று அந்த ஊர்க்காரர் ஒருவரே சொல்வதாகச் சொல்கிறார். "வாடிகனின் சொல் 'கடவுளோ' 'மதமோ' அல்ல, 'அதிகாரம்'" என்றும் அவர் சொன்னதாகச் சொல்கிறார். அதைக் கேட்டவுடன் நம் ஊரின் சொல் எது என்ற கேள்விதான் நமக்கு வரும். பெங்களூருக்கு என்ன சொல்? சென்னைக்கு என்ன சொல்? பெங்களூருக்கு 'சாஃப்ட்வேர்' என்று தோன்றியது. சென்னைக்கு என்ன சொல்? மதுரைக்கு என்ன சொல்? ரோமின் சொல் 'செக்ஸ்' என்றாலும் இவர் என்னவோ அங்கு இருக்கும் காலம் முழுக்கவும் தின்று தின்று உடல் எடையைத்தான் கூட்டிக்கொள்கிறார். அந்த 'ஊருக்குரிய வேலை'களில் அதிகம் ஈடுபட்டது போல் தெரியவில்லை. ஒருவேளை அதை அளவோடு செய்துவிட்டு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லாததால் சொல்லாமல் விட்டிருக்கலாம்.

இத்தாலிய மொழியின் மீதான அவரின் பிரமிப்பு பற்றி அவர் சொல்வது நமக்கும் அம்மொழியின் மீது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. உலக மொழிகளிலேயே இனிமையான மொழி அதுதான் என்கிறார். அப்படி அவரைச் சுற்றி நிறையப் பேர் எண்ணியதாகவும் வியந்து பேசிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அதற்கொரு காரணமும் இருக்கிறது என்கிறார். மற்ற மொழிகளைப் போல் மக்கள் பேசிப் பேசி உருப்பெற்ற மொழியல்ல அது, மாறாக மொழியியல் வல்லுநர்கள் ஒன்று கூடி உட்கார்ந்து, லத்தீன் உட்படப் பல மொழிகளிலும் இருந்து ஒவ்வொரு சொல்லுக்கும் எந்த மொழியின் சொல் அழகாக இருக்கும் என்று விவாதித்து உள்ளடக்கிச் செதுக்கி எடுத்த மொழி என்கிறார். கேட்கவே சுவாரசியமான கதையாக இருந்தது. இதற்கு முன்பு எங்கும் கேள்விப்பட்டிராத கதை இது. கூடுதல் ஆய்வுக்கும் உரியது.

அடுத்து வந்திறங்கும் இந்தியாவில் ஒரே ஆன்மீகத் தேடல் நடக்கிறது. மும்பைக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஆசிரமத்தில் சில மாதங்கள் தங்கியிருந்து அந்த வேலையைச் செய்கிறார். வெளியார்களின் பார்வையில் நம் நாடும் பண்பாடும் எப்படிப் பார்க்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வது சுவாரசியமாக இருப்பது இயல்பானதுதானே!

இந்தியாவிலிருந்து புறப்பட்டு இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் செல்கிறார். பாலி இந்தோனேசியாவில் இருந்தாலும் அது ஓர் இந்திய நகரம் போலவே இருக்கும் என்பது நாம் கேள்விப்பட்டதுதான். அதற்குக் காரணம், இந்தோனேசியா முஸ்லீம் பெரும்பான்மை நாடு. பாலியோ முழுக்க முழுக்க இந்துக்கள் நிறைந்த ஊர். அங்குள்ள மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பண்பாடுகள் பற்றிய கதைகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கின்றன. பேரின்பம் தேடிப்போன இந்தியாவைவிட சிற்றன்பம் சிக்கிய பாலி வாழ்க்கைதான் படிக்கச் சுவையாக இருக்கிறது. அவருக்குமே அதுதான் மனநிறைவாக இருந்திருக்கும் போல் படுகிறது.

நூலில் மூன்றில் ஒரு பகுதி இந்தியா பற்றியும் இன்னொரு பகுதி இந்தியா போலவே இருக்கும் பாலி பற்றியும் இருப்பதால் நமக்கு எளிதில் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவருடைய மணமுறிவுகள் பற்றிய கதைகளை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆணோ பெண்ணோ மணமுறிவு என்பது எப்போதுமே ஒரு கொடுமைக்காரருக்கும் இன்னோர் அப்பாவிக்கும் இடையில் ஏற்படும் முடிவாக இருக்க வேண்டியதில்லைதானே! உலகத்திலேயே மிக நல்லவனான ஓர் ஆணையும் உலகத்திலேயே மிக நல்லவளான ஒரு பெண்ணையும் சேர்த்து வாழவைத்தால் கூட அது அவர்களுக்கு ஒத்துவராமல் போகவும் மணமுறிவில் முடியவும் வாய்ப்புள்ளதுதானே! உலகத்துக்கே நல்லவர்களாக இருக்க முடிகிற அவர்கள் இருவரும் அவர்கள் இருவருக்குள் மட்டும் ஒருவருக்கொருவர் தன் படு கேவலமான முகத்தைக் காட்டியிருக்கலாம், அல்லவா? அப்படிக் கூட இவர்களுக்குள் நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்தக் கதையும் அதில் தொடர்புடைய ஒருவர் மட்டும் சொல்வதை வைத்து முழுதாக நம்ப முடிவதா என்ன?

அவர் இந்தியாவில் ஆசிரமத்தில் இருக்கும் போது, அங்கே ஓர் அமெரிக்க ஆணும் இருக்கிறார். அவர் ஒரு முறை இவரிடம் சொல்கிறார் - "உனக்கொரு பிரச்சனை இருக்கிறது. எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற பிரச்சனை. அதை மட்டும் விட்டுவிடு. உன் வாழ்க்கை அழகாகிவிடும்" என்கிறார். இதைக் கேட்ட போது தனக்கு எப்படி மண்டை முட்டிக்கொண்டு வந்தது என்றும் அப்படிக் கோபம் வந்ததற்கு அது உண்மை என்று தான் உணர்ந்திருந்ததுதான் காரணமோ என்றும் நேர்மையாகப் பேசுகிறார். அந்த நேர்மை அவருடைய மணமுறிவுக்கு அவரே எவ்வளவு தூரம் காரணமாக இருந்திருப்பார் என்ற கேள்வியையும் நம்மிடம் விட்டுச்செல்கிறது.

மேற்கத்தியர்களால் இந்திய மரபின் பேரின்பத்தை அவ்வளவு எளிதாக எட்டி விட முடியுமா என்பதற்கு விடையாகவும் இந்த நூல் இருக்கிறது. அவர்களுக்கு இயல்பாகவே எளிதாக வருவது சிற்றின்பம்தான். சிற்றின்பங்களைப் பேரின்பம் போல் கொண்டாடுவதும் உலகையே அந்த வாழ்க்கை முறைக்குள் இழுத்துச் சென்றதுமே அவர்களின் சாதனை. எனவே பேரின்பத்தையும் ஒரு சிற்றின்பம் போலத் தற்காலிகமாக அனுபவித்து மறப்பதுதான் அவர்களின் இயல்பாக இருக்க முடியும். அதிக பட்சம், நானும் இந்தியாவில் போய் ஞானப் பழம் தின்று துறவறத்தின் உச்சத்தைப் பார்த்துவிட்ட ஆள்தான் என்று சாகும் வரை தன்னைச் சுற்றியிருப்போரிடம் கதை விட்டுக்கொள்ளலாம். அத்தனைக்கும் ஆசைப்பட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து மடிந்துவிட வேண்டும் என்கிற மேற்கத்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தமட்டில் இதுவும் ஓர் அனுபவம். அவ்வளவுதான். அவர்களிடம் போய் இதெல்லாம் கற்றுக் கொடுக்கிறேன் என்று நம் ஆட்கள் செய்து கொண்டிருப்பது வெறும் வியாபாரம். இங்கே தயாரித்த பண்டம் இங்கைவிட அங்கே நன்றாக விற்கிறது என்றால் அதை அங்கே சென்று விற்பதுதானே நல்ல வியாபாரியின் உத்தியாக இருக்க முடியும்.

ஆன்மீகத் தேடல் முடிந்தபின் அப்படியே புறப்பட்டு பாலி போய் இறங்குகிறார். பாலி போய் இறங்கும் வரைக்கும் அங்கே எங்கு போய் தங்கப் போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்கிற எந்தத் தெளிவும் இல்லாமலே போய் இறங்குகிறார். முன்பொரு காலத்தில் ஒரு வைத்தியரைச் சந்தித்திருக்கிறார். அந்த ஊரில் இவருக்குத் தெரிந்த ஒரே ஆள் அந்தப் பெரியவர் மட்டுமே. மற்றபடி அவர் வீடு எங்கிருக்கிறது, இன்னும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூடத் தெரியாமல்தான் போய் இறங்குகிறார். பாலி போன்ற ஒரு சிறிய தீவில் அப்படியான ஒருவரைத் தேடிப் பிடிப்பது ஒன்றும் பெரும் சிரமமாக இராது என்ற நம்பிக்கையோடு போய் இறங்குகிறார். நம்பியபடியே போய் இறங்கியதுமே வெற்றிகரமாகக் கண்டுபிடித்தும் விடுகிறார். நம்மூரில் பார்ப்பது போல நிறைய விசித்திரங்கள் காணக் கிடைக்கிறது அவருக்கு. நமக்கு அவை வியப்பூட்டுவனவாக இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு அவை எவ்வளவு வியப்பூட்டுபவையாக இருக்க முடியும் என்பதைக் கண்டு வியக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, பெரியவருக்குத் தன் வயது என்னவென்று தெரியவில்லை. அவர் சொல்கிற கதைகளை வைத்துப் பார்த்தால் அவர் 60-க்கும் 100-க்கும் எந்த வயதுடையவராகவும் இருக்கலாம் என்கிறார்.

பின்னர் பிரேசிலில் இருந்து வந்து பாலியில் குடியேறிவிட்ட பெரியவர் ஒருவரைச் சந்திக்கிறார். அவரோடு வெறிகொண்டு காதல் செய்கிறார். சிறுநீர்ப் பாதையில் தொற்று வரும் அளவுக்கு ஒரு நாளைக்குப் பல முறை என வெறிகொண்டு காதல் செய்கிறார். அவரும் மனைவியைப் பிரிந்து பெண் துணைக்கு ஏங்கிப் போய்க் கிடப்பவர். இவரும் கணவனை இழந்து, இந்தியாவில் போய் முக்தி அடைந்து, ஆண் துணைக்கு ஏங்கிக் கிடப்பதை அடக்கி வைத்துக்கொண்டிருப்பவர். எப்படி இருக்க முடியும்? இதை அவர் ரசித்து ரசித்து எழுதியிருப்பதுதான் திரைப்படமாக விற்பதற்குப் பெரிதும் பயன்பட்டிருக்கும். இதைப் படித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து எத்தனை இளம்பெண்கள் ஆன்மீகத் தேடலில் இறங்கினார்களோ தெரியவில்லை.

இதற்கிடையில் அங்குள்ள மருத்துவச்சி (பாரம்பரிய மருத்துவம் செய்யும் பெண் என்பதால் இப்படிச் சொல்வதே சரியாகப் படுகிறது; மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை) ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஏகப்பட்ட பணத்தையும் பறித்து பல நாட்கள் கதறவிட்டிருக்க வேண்டிய சிறுநீர்ப் பாதை ஒற்றுப் பிரச்சனையை ஏதோவொரு கசாயத்தைக் கொடுத்து இந்தப் பெண் சில மணி நேரங்களில் சரி செய்துவிடுகிறார். இந்தக் கதை சொல்லப்படும் போது, சித்தா முதலான நம் மண்ணின் மருத்துவ முறைகள் பற்றிய சிந்தனை சில நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கிறது. இந்த இடத்தில், அவை சிலர் சொல்வது போல முழுக்கவும் தெய்வீகத்தன்மை கொண்டவையும் அல்ல, நவீன மருத்துவத்தின் ஆதரவாளர்கள் செய்வது போல முற்றிலும் புறந்தள்ளப்படும் அளவுக்கு அர்த்தமற்றவையும் அல்ல என்கிற நம் நம்பிக்கையை ஒரு வெள்ளைக்காரி மூலம் உறுதி செய்துகொள்கிறோம். ஒரு வாரத்து வலியையும் வேதனையையும் ஒரு மணி நேரத்தில் சரி செய்ய முடிகிறதா என்று வியப்பதைவிட ஒரு மணி நேரத்தில் சரி செய்ய முடிவதை ஒரு வாரத்துக்கு இழுத்தடிக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியது எது என்று நின்று நிதானமாகப் பேசிவிட்டு நகர்வது நல்லதுதான். இது நவீன அறிவியலின் தோல்வியா? அதைக் கையில் வைத்திருக்கும் உலகப் பெரும் வியாபாரிகளின் பேராசையா? பாரம்பரிய மருத்துவம் தொடர் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டுபிடிப்புகளின் மூலமும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள இயலாமையின் தோல்வியா? அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியவர்கள் யார்? அரசாங்கமா? மக்களா? இவர்களுக்கும் சில பெரும் வியாபாரிகள் புரவலர்களாகக் கிடைத்தால் நிலைமை மாறுமா? பேசித் தெளிய எவ்வளவோ இருக்கிறது.

அந்த மருத்துவச்சி பற்றிய மற்ற சில குறிப்புகளும் சுவாரசியமானவை. குழந்தை இல்லாத பெண்களுக்குக் குழந்தை பிறக்க வைப்பதிலும் இவர் கெட்டிக்காரராம். கோளாறு ஆணிடம் என்றால் மிக எளிதாகச் சரி செய்துவிடுவாராம். பெண்ணை சிகிச்சைக்கு அழைத்து அவளை வேறோர் ஆணோடு உறவுகொள்ள வைத்துக் குழந்தை பெற்றுக் கொடுத்துவிடுவாராம். எந்த ஆணோடு? அதற்கென்று ஓட்டுநர் வேலை பார்க்கும் பையன்கள் நிறையப் பேர் இருக்கிறார்களாம். அவர்களும் இந்தச் சேவையை மகிழ்ச்சியோடு செய்துகொடுத்து விடுவார்களாம். அவர்களுடைய சமூக அமைப்பில் குழந்தை இல்லாமல் இருப்பதில் இருக்கிற பிரச்சனையின் வலியைவிட இது ஒன்றும் பெரிதில்லை என்பதால் பெண்கள் இதைப் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை என்கிறார். இது அந்தப் பெண்களின் கணவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே இவருடைய பாரம்பரியக் கடமை. இது எப்படி இவ்வளவு காலமாக அங்கே சிக்கல் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ பாலியாக இருப்பதால் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவே நம்மூராக இருந்தால் நானும் ஓட்டுநராகப் போகிறேன் என்று மொத்த நாடும் அங்கே போய்க் குவிந்து இதை எப்போதோ ஒழித்துக்கட்டியிருப்பார்கள்.

இப்பேர்ப்பட்ட மருத்துவச்சி வறுமையில் வாடுகிறார். அதைப் பார்த்துச் சகிக்க முடியாமல் அவருக்கு உதவும் விதத்தில் இவர் தன் அமெரிக்க நண்பர்கள் மத்தியில் பணம் திரட்டத் தொடங்குகிறார். அங்கிருந்து கொண்டேதான். கண்ணை மூடி முழிப்பதற்குள் இவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பணம் குவிந்துவிடுகிறது. மருத்துவச்சிக்குச் சொந்தமாக இருக்க ஒரு வீடும் சிறிது இடமும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பது இவரது எண்ணம். பணம் கொட்டியதைப் பார்த்தபின் மருத்துவச்சி வேலையைக் காட்டத் தொடங்கிவிடுகிறார். இவரைப் பயன்படுத்தித் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, இன்னும் இன்னும் இன்னும் என்று தன் ஆசையைப் பெரிதாக்கி, மேலும் பணம் பிடுங்கப் பார்க்கிறார். பணத்தை வங்கிக் கணக்கில் வைத்துக்கொண்டு நிலம் வாங்குவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறார். பிற்காலத்தில் ஓட்டல் கட்டிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய இடமாக வேண்டும் என்கிறார். ஒரு மாதம் முன்பு தனக்கென்று காணி நிலம் கிடைத்தால் அதுவே பிறவிப் பெரும்பயன் என்று துள்ளிக் குதித்திருக்கக் கூடியவர் இன்று ஊரான் காசில் ஓட்டல் கட்டி வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு மாறியதற்கு என்ன காரணம் என்று இவர் தன் பிரேசிலியக் காதலரோடு உரையாடும் பகுதி நன்றாக இருக்கிறது. சில ஆண்டுகள் அங்கேயே தங்கி பாலியை ஓரளவு புரிந்துகொண்டு விட்டவர் என்ற முறையில் ஒரு மேற்கத்தியரின் பார்வையில் அவர் பாலி பற்றியும் பாலியர்கள் பற்றியும் சொல்வது அழகாக இருக்கிறது. பணம் பற்றிய அவர்களின் பார்வை பற்றியும், அவர்களின் சமூக அமைப்பு பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அழகாகச் சொல்கிறார். கேமராவை அப்படியே திருப்பி, இதற்கு மருத்துவச்சி என்னவெல்லாம் சொல்கிறார் என்று பார்த்தால், அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் நமக்கு அன்றாடம் பழக்கப்பட்டவை. வெள்ளைக்காரிக்குத்தான் புரிந்துகொள்ளச் சிரமமாக இருந்திருக்கும். நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல இடம், கெட்ட இடம், சாமிக் குத்தம், ஆவி நடமாட்டம் என்று அம்புட்டும் நம்மூர்த் தில்லாலங்கடி வேலைகள். "ஆடி போய் ஆவணி வந்தா..." கதைகள். இந்த நூலைப் படித்த பின்பு நான் எடுத்திருக்கும் முடிவு, நம்ம ஜியிடம் சொல்லி எப்படியாவது இந்த பாலியை இந்தியாவோடு இணைத்துவிட வேண்டும்! அவர்கள் நம்மவர்கள்!

நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நேரம் நெருங்க நெருங்க இந்தப் பணப் பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டிய அழுத்தமும் கூடுகிறது. நம்பிப் பணம் கொடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே. மிரட்டி உருட்டி அதைச் சாதித்தும் விடுகிறார். முதலில் திட்டமிட்ட இடங்களில் ஒன்றை வாங்கி வீடு கட்டும் வேலையையும் தொடங்கிவைத்து விடுகிறார்.

இப்போது இத்தனையும் நூலாக வந்திருக்கிறது. மொத்தப் பாலியிலும் ஒருத்தர் கூட ஆங்கில நூல்கள் படிப்பவராக இருக்க மாட்டாரா என்று தெரியவில்லை. அப்படிப் படிப்பவர்கள் நிறைய இருந்தால் இந்த நூல் அவர்கள் மத்தியில் என்ன மாதிரியான உரையாடலை உசுப்பிவிட்டிருக்கும் என்று தெரியவில்லை.

பொதுவாக இந்த நூலைப் பற்றிச் சொல்லப்படும் கருத்துக்களில் ஒன்று, பெண்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகும் என்பது. இணையத்தில் இந்த நூல் பற்றிய மதிப்புரைகளைத் தேடிப் படிக்கும் போது, இதைப் பல பெண் வாசகர்களே தூக்கிப் போட்டு மிதித்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது.

ஒருவர் இப்படிச் சொல்லியிருந்தார்: "இந்த நூல் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி என் தோழி ஒருத்தி வாங்கிக் கொடுத்தாள். என் மகிழ்ச்சி என் ஆணைச் சார்ந்தது என்று நம்பும் பெண்களுக்கு வேண்டுமானால் இது பிடித்துப் போகலாம். என் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு என்பதை உணராத பெண்களே, இதைப் புரிந்து கொள்ளுங்கள் - பெண்ணியம் எங்கோ போய்விட்டது. இன்னும் உங்கள் கோளாறுகளுக்கு உங்கள் ஆண்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால், அதுதான் பெண்ணியம் என்று நம்பிக்கொண்டிருந்தால், நீங்கள் உருப்படவே போவதில்லை. என் வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் நானே பொறுப்பு என்று நிமிர்ந்து உட்காருங்கள். அதுதான் உண்மையான பெண்ணியம்."

கொடுமை என்னவென்றால், நூலைவிட இந்த மதிப்புரை எனக்குப் பிடித்துப் போய்விட்டது!

ஏ, கொழுப்பெடுத்த ஆணினமே! தெரியாதா உன்னைப் பற்றி!

வியாழன், அக்டோபர் 31, 2019

டான் ப்ளூம் நேர்காணல்: "க்ளை-ஃபை" படைப்பாளி

டான் ப்ளூம் நேர்காணல்: "க்ளை-ஃபை" படைப்பாளி
வில்லியம் ஏ. லிகெட் - டிசம்பர் 11, 2018
#க்ளை-ஃபை (#clifi) என்ற கொத்துக்குறியுடன் (hashtag) என் பருவநிலைப் புனைவுப் புதினமான ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ (Watermelon Snow) பற்றி என் நண்பர் ஒருவர் டிவீட் அனுப்பிய போதுதான் முதலில் டானைச் சந்தித்தேன். பருவநிலைப் புதினம் - கிளைமேட் ஃபிக்ஷன் (cli-fi) என்ற புதிய வகைமைக்கும் டானின் வலைத்தளம் cli-fi.net-க்கும் என் கண்களைத் திறக்கும் வகையில், டானே அந்த டிவீட்டுக்குப் பதிலளித்திருந்தார். அப்போதிருந்தே புனைவு எழுதுதல், கல்வி, மற்றும் பிரபல நூல்கள் பற்றிய கட்டுரைகளில் cli-fi-க்கான மேற்கோள்களைக் காணத் தொடங்கினேன். புதியவர்கள், முதுவர்கள் என இரு சாராரையும் இந்த வகைமையில் எழுத டான் சுறுசுறுப்பாக ஆதரித்து வருகிறார். 2017-இல் ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ வெளியாகும் நேரத்தில் என்னைப் பற்றியும் அந்த நூலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினார்.

“க்ளை-ஃபை” எப்படி உருவானது என்றும் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றியும் உரையாட பெருந்தன்மையோடு ஒரு நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டார்.

பருவநிலைப் புனைவில் உங்களின் இந்த ஆர்வத்துக்கு இட்டுச் சென்றது எது?

2006-இல் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உள்ள செய்தித்தாட்களில் வெளியான ஐபிசிசி (IPCC) அறிக்கை பற்றிய செய்திகளை அப்போதிருந்தே இணையத்தில் பின்தொடர்ந்துகொண்டிருந்தேன். நியூ யார்க் டைம்ஸிலும் பிரிட்டன் கார்டியனிலும் கருத்தாளர்களும் எதிர்த்தலையங்க (op-ed) எழுத்தாளர்களும் அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்து, மனித இனம் மிக மிகப் பெரும் இடர்பாட்டில் இருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டவனானேன்.

அடுத்த பத்தாண்டுகளில் அது போலப் பல அறிக்கைகள் வந்தன என்றாலும், அந்த வரிசையில் முதல் அறிக்கையான ஐபிசிசி அறிக்கை பற்றிப் படித்ததையும் செரித்ததையும் வைத்து, 2007 ஜனவரியில், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மனம் வெதும்பித் திரியும் அளவுக்கு மிகுந்த மனச்சோர்வுக்கும், உளவியல் ரீதியான மனச்சோர்வுக்கும், துக்கத்துக்கும் ஆளானேன். வாழ்க்கையிலேயே ஆர்வம் இழந்தேன். அதற்கு முன்பு ஒரு போதும் பருவநிலை மாற்றத்துக்காக அப்படியான ஓர் ஆழ்ந்த மன அழுத்தத்தை நான் அனுபவித்ததில்லை

ஆனால் ஒரு நாள், மிக நீண்ட காலத்துக்கு அப்படியே மனமுடைந்து கிடப்பது நல்லதில்லை என்று முடிவு செய்தேன், எனவே என் கணிப்பொறியில் அமர்ந்து, என் வலைப்பதிவில், “People Get What They Deserve” (“மக்கள் எதற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்களோ அதையே பெறுகிறார்கள்”) என்ற தலைப்பில் 800 சொற்களில் ஓர் எதிர்த்தலையங்கம் எழுதினேன். P-G-W-T-D என்று தலைப்பில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தையும் எடுத்து “PIGSWANTED” (“பன்றிகள் வேண்டும்”) என்று துணைத்தலைப்பிட்டேன். அடுத்து உள்ளே குதித்து, 2006 ஐபிசிசி அறிக்கையை வைத்துப் பார்த்தால், மனித இனத்தின் பேரழிவு உறுதியாகிவிட்டது, இது நம் மிதமிஞ்சிய பேராசையாலும் பூமியைப் பற்றிய அக்கறையின்மையாலும் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டது - அடுத்த 100 ஆண்டுகளிலோ என்னவோ நம்மைத் தாக்கப் போகும் இந்தப் பேரழிவுக்கு உண்மையில் நாம் தகுதியானவர்கள்தாம் என்று ஒரு மிக வலிமையான கட்டுரையை எழுதினேன்.

நான் எழுதியதை வாசித்தபின், என் ஆழ்ந்த மனச்சோர்வை ஒரு சொந்தக் கட்டுரையாக உருமாற்றிய அந்த படைப்புச் செய்முறை என் மனநிலையைத் தூக்கிவிட உதவியதையும் உடனடியாக என் மனநிலை பிரகாசமடைந்ததையும் உணர்ந்தேன். மீண்டும் மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் என் வழக்கமான தன்னிலையையும் உணர்ந்தேன். என் துக்க உணர்வுக்குள் நான் செய்த அந்தப் படைப்புத்திறன்மிக்க அகழ்வாய்வு, சொற்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், மேலும் பல கட்டுரைகளோடும் எதிர்த்தலையங்கங்களோடும் வலைப்பதிவுகளோடும் மக்கள் தொடர்புக் கருத்துக்களோடும் பாய்ந்து வரும் புவி சூடாதலின் அபாயங்கள் பற்றி எச்சரிக்கை மணி அடிக்க என் எழுத்தாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தின.

“க்ளை-ஃபை” என்ற சொற்கூற்றை உருவாக்குவதற்கு உங்களுக்கு உளத்தூண்டலாக இருந்தது எது?

இந்த எச்சரிக்கை மணியைப் பரந்துபட்ட அளவில் பொதுமக்களுக்குக் கேட்க வைப்பதில் புதின எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் புதினங்களையும் திரைப்படங்களையும் பயன்படுத்துவதன் சாத்தியம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அப்போது இது போன்ற நூல்களுக்கும் படங்களுக்கும் ஒரு பெயர் தேவைப்பட்டது. 1991-இலிருந்து தைவானில் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் சாலையோரக் காப்பிக் கடைக்கு வெளியே அமர்ந்துகொண்டு, ஒரு பீரும் ஒரு தட்டு நூடுல்சும் கொண்டுவரச் சொல்லிவிட்டு, இந்தப் புதினங்களையும் படங்களையும் என்னவென்று அழைக்கலாம் என்பது பற்றி சில குறிப்புகள் எடுக்கத் தொடங்கினேன்.

20 சாத்தியமுள்ள பெயர்களை எழுதினேன், அதில் எனக்கு மிகவும் பிடித்தது “climate fiction” (“பருவநிலைப் புனைவு”), அது கண்டிப்பாக அதற்கு முன்பிருந்த “science fiction” (“அறிவியல் புனைவு”) என்ற இலக்கியச் சொற்கூற்றின் அடிப்படையிலானதுதான், பின்னர் science fiction-க்கு “sci-fi” என்று செல்லப்பெயர் வைத்தது போல, அதே போலவே எதுகையோடு ஒலிக்கிற விதத்தில் climate fiction என்பதற்கு “cli-fi” என்று செல்லப்பெயர் இட்டேன்.

ஆனால் அறிவியல் கருத்துப்பரிமாற்றங்களிலும் இலக்கியக் கருத்துக்களிலும் என்று இரு வேறு பாத்திரங்கள் ஆற்றப் போகிறது இந்தச் செல்லப்பெயர் என்பதையும் உணர்ந்தேன்.
  1. இந்த க்ளை-ஃபை என்கிற சொற்கூறு, செய்தித்தாள் தலைப்புச் செய்திகளிலும் இணையத் தலைப்புச் செய்திகளிலும் சுருக்கமானதாகவும் கண்ணைக் கவரும் சொல்லாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். என் 20-களிலிருந்தே செய்தித்தாளனாக இருக்கும் முதுவன் என்ற முறையில், வாஷிங்டன் டிசி, அலாஸ்கா, டோக்கியோ, தைவான் ஆகிய இடங்களில் செய்தித்தாட்களில் பதிப்பாசிரியராகவும் பிரதி திருத்தராகவும் தலைப்புச் செய்தி எழுதுபவனாகவும் பக்க வடிவமைப்பு செய்பவனாகவும் செய்தியாளராகவும் பணி புரிந்ததில், வாசகர்களின் மீது தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துவதில் பொருத்தமான சொற்களுக்கு இருக்கும் சக்தி பற்றி எனக்கு ஓர் உணர்வு இருந்தது. க்ளை-ஃபை என்பது, கண்டிப்பாகச் சுருக்கமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டிய தலைப்புச் செய்திகளில், அதுவும் குறிப்பாக தலைப்புச் செய்திக்கான இடம் அளவாக இருக்கும் அச்சுச் செய்தித்தாட்களில் பயன்படுத்துவதற்கு மிகப் பொருத்தமான சொல் என்று உணர்ந்தேன்.
  2. க்ளை-ஃபை, இலக்கிய விமர்சகர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் நூல் மதிப்பீட்டாளர்களுக்கும் புதிய இலக்கியச் சொற்கூறாகவும் இருக்கும், புவி சூடாதலின் அபாயங்களையும் எச்சரிக்கைகளையும் பற்றி எச்சரிக்கை மணி எழுப்புவதற்கான மக்கள் தொடர்புக் கருவியாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்ந்தேன்.

உலகுக்கு எப்போது, எப்படி முதன்முதலில் “க்ளை-ஃபை”யை அறிமுகப்படுத்தினீர்கள்?

உலகுக்கு க்ளை-ஃபை சொற்கூற்றை அறிமுகப்படுத்தும் என் முதல் முயற்சிகள் கொடுமையான தோல்வியைச் சந்தித்தன. எவருமே அந்தச் சொற்கூற்றை எடுத்துக்கொள்ளவில்லை, எவருமே என் டிவீட்களை மறுடிவீட் செய்யவில்லை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, அந்த க்ளை-ஃபை சொற்கூறு எங்குமே சென்றடைந்தபாடில்லை.

எவரேனும் நான் செய்துகொண்டிருந்ததை விரும்பினார்களா என்று பார்ப்பதற்கு, அந்தச் சொல்லை என் வலைப்பதிவில் போட்டு, அதன் இணைப்பை டிவிட்டர் வழியாகவும் மின்னஞ்சல்கள் வழியாகவும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினேன். பெரும்பாலானவர்கள் என்னிடம் சொன்னார்கள்: “உன்னால் செய்ய முடியாது! அப்படியெல்லாம் புதியதொரு இலக்கிய வகைமையை நீ உருவாக்கிவிட முடியாது” முடியாதாளர்கள் (naysayers) என்னிடம் சொன்னதைக் கேட்டுக்கொண்டேன், அவர்களுடைய விமர்சனத்தை நான் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இதைத்தான் பதிலாகச் சொன்னேன்: “ஓ அப்படியா? பொறுத்திருந்து பாருங்கள்!” இப்போது 2019-இல், இதோ இங்கு நிற்கிறோம்!  Cli-fi.net-இல் உள்ள என் வலைத்தளம் The Cli-Fi Report (த க்ளை-ஃபை அறிக்கை) என் படைப்புச் சிந்தனையைத் தூக்கிச்சென்றுகொண்டிருக்கிறது.

அந்தச் சொற்கூறு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இதுவரை?

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஒரு சூடான கோடை நாளில் தைவானில் இருக்கும் அந்தச் சாலையோரக் காப்பிக் கடையில் துடைப்புத் தாளில் அந்தச் சொற்கூற்றை முதல்முறையாக நான் எழுதிய போது நான் கற்பனை செய்திருந்ததை விட மிக மிக நெடுந்தொலைவு போயிருக்கிறது. இலக்கிய விமர்சகர்களாலும் கல்வியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 20, 2013 அன்று என்.பி.ஆர். (NPR) வானொலி வலையமைப்பு 5-நிமிடக் கேட்பொலியாகவும் அதன் உரைவடிவத்தை NPR வலைத்தளத்திலும் வெளியிட்டது இணையத்தில் வைரலானது. அவர்கள் தொடங்கிவைத்த 2013-இலிருந்து பல இதழ்களிலும் செய்தித்தாட்களிலும் வலைத்தளங்களிலும் தலைப்புச் செய்தி எழுதுபவர்கள் இந்தச் சொற்கூற்றைக் கிட்டத்தட்ட நாள்தோறும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

என்.பி.ஆர். வெளியிட்ட “the rise of a new literary term dubbed cli-fi” (“க்ளை-ஃபை எனப்படும் இலக்கியச் சொற்கூற்றின் எழுச்சி”) என்கிற படைப்புக்குப் பின் அது நிற்கவே இல்லை.  நியூ யார்க் டைம்ஸ், பிரிட்டன் கார்டியன், அட்லாண்டிக் இதழ், சிலேட், சலோன், க்ரிஸ்ட, பிபிசி ஆகியவற்றில் க்ளை-ஃபை சொற்கூற்றைப் பயன்படுத்திய தலைப்புச் செய்திகளுடன் புதிய செய்திகள் வந்தன. ஆஸ்திரேலியாவிலும், ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், தைவான் ஆகிய நாடுகளிலும் செய்தித்தாட்களில் இந்தச் சொற்கூறு பயன்படுத்தப்பட்டது. சுருக்கமான ஐந்தெழுத்துச் சொற்கூற்றுக்கு இது மிகப்பெரிய தாக்கம். அது வேலை செய்தது.

க்ளை-ஃபை பொதுப் பயன்பாட்டுக்குள் நகர்ந்து வருவது போலத் தெரிகிறது. அதை எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்கிறீர்கள்?

என்.பி.ஆரும் நியூ யார்க் டைம்ஸும் இலண்டனில் கார்டியனும் க்ளை-ஃபை சொற்கூற்றைப் பயன்படுத்திக் கட்டுரைகளும் தலைப்புச் செய்திகளும் எழுதிய போது பொதுப்போக்கு ஊடகங்கள் கவனம் செலுத்தத் தொடங்கின. இப்போது அந்தச் சொற்கூற்றை கூகுள் செய்து பாருங்கள், ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் 5,000 இணைப்புகளுக்கும் மேல் இருப்பதைக் காணலாம். இது எல்லாமே சுத்தமான அதிர்ஷ்டத்தாலும், உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இலக்கிய விமர்சகர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருந்த என் மின்னஞ்சல் மற்றும் டிவிட்டர் செய்திகளில் இருந்து ஒரு நாள் கூட இடைவிடாமல் 24/7 முறையில் இந்தச் சொற்கூற்றை விளம்பரப்படுத்த நான் செய்த கடும் உழைப்பாலும், சிலர் சொல்வது போல “பேரண்டத்தின் கூடுகை”யாலும் (“cosmic convergence”) நடந்தது. அந்தச் சொற்கூறும் அதன் உணர்வும் அது எதற்காக நின்றதோ அந்த உணர்வும் காற்றில் பரவியது. க்ளை-ஃபைக்கு நான் பிறப்புக் கொடுக்கவில்லை, அதுவேதான் அதற்குப் பிறப்புக் கொடுத்துக் கொண்டது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதில் நான் பேறுகாலம் செய்த செவிலி மட்டுமே.

கட்டுரைகளில் க்ளை-ஃபை சொற்கூற்றுக்காக அடிக்கடி உங்களுக்கு நன்றியளிக்கப்படுகிறது. அந்தச் சொற்கூற்றோடு தொடர்ந்து இடைவிடாமல் உங்கள் பெயர் தொடர்புபடுத்தப்படுவதை எப்படிக் கணக்கிடுகிறீர்கள்?

ம்ம்ம், 2013-இலிருந்தே பருவநிலை மாற்றமும் புவி சூடாதலும் ஒவ்வொரு செய்தித்தாள் ஆசிரியரின் மனதிலும் இருந்தது என்பதை வைத்துப் பார்த்தால், அந்தச் சொற்கூற்றில் பொதுப்போக்கு ஊடகங்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கிய போது நான் இருந்தேன். எங்கெல்லாம் தோழமையான காது கிடைத்ததோ அங்கெல்லாம் என் கதைகளை நட்டுச் செல்கிற ஒரு மக்கள் தொடர்பாளன் மட்டுமே நான். முதலில் அது எளிதாக இல்லை. ஆனால் நான் அதைப் பிடித்துக்கொண்டேன், ஏனென்றால் ஏதோவொன்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தெரிந்தது. Sci-fi சொற்கூற்றைப் போலவே எதுகையாக ஒலித்த வெறும் 5 எழுத்துக்கள் ஒரு பெரிய அதிசயம் இல்லை. உண்மையிலேயே நான் எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. ஆனால் ஊடி ஆலன் ஒரு முறை சொன்னது போல, தினமும் புறப்பட்டு வேலைக்கு வந்து நிற்பதே வெற்றிதான். ஒரு நாள் கூட ஓய்ந்து விடாமல் விடுமுறை எடுக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் அதைத்தான் நான் செய்திருக்கிறேன். நான் பயணங்கள் செல்வதில்லை, கடலுலாக்கள் செல்வதில்லை, விமானப் பயணம் செல்வதில்லை, என்னிடம் கார் கிடையாது, விடுமுறைகளில் செல்வதை நிறுத்திவிட்டேன். எனக்கு, நீங்கள் விரும்புவதைச் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால் வாழ்க்கையே ஒரு நீண்ட விடுமுறைதான், அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு எப்போதுமே சலிப்பு வராது. ஒவ்வொரு காலையும் நான் முழுக்க முழுக்க நேர்மறை ஆற்றலோடும் நன்னம்பிக்கையோடும் எழுகிறேன். அது என் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது.

நீங்களே ஏதேனும் பருவநிலைப் புனைவு எழுதியிருக்கிறீர்களா?

இல்லை. நான் புதின எழுத்தாளரோ திரைக்கதை எழுத்தாளரோ அல்ல. நான் சிறிய மின்னஞ்சல்களும் 800-சொல் எதிர்த்தலையங்கங்களும் எழுதுவதிலும் பரந்து விரிந்த டிவீட்கள் போடுவதிலும் மட்டுமே வல்லவன்.

புவி சூடாதல் பற்றிய மனப்பாங்கை மாற்றுவதில் க்ளை-ஃபைக்கு என்ன பாத்திரம் இருக்கலாம்?

நெவில் ஷுட்டின் ‘On the Beach’ (‘ஆன் த பீச்’) என்று தலைப்பிடப்பட்ட 1957 புதினம் (மற்றும் நூலைத் தொடர்ந்து அதே பெயரில் 1959-இல் வெளியான திரைப்படம்), அணு ஆயுதப் போர் மற்றும் “அணு ஆயுதக் குளிர் காலம்” (“nuclear winter”) ஆகியவற்றின் ஆபத்துகளையும் அபாயங்களையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவியது போல், க்ளை-ஃபை புதினங்களும் திரைப்படங்களும் புவி சூடாதல் பற்றிய மனப்பாங்கையும் விழிப்புணர்வையும் மாற்றும் என நம்புகிறேன். க்ளை-ஃபை என்பது ஓர் உலகளாவிய எச்சரிக்கை, ஓர் எழுப்பு மணி, ஓர் எச்சரிக்கைக் கிளரொளி, ஒரு பெருங்கூக்குரல். இதை உண்மையாகவே நம்புகிறேன்.

க்ளை-ஃபை என்பது, ஒன்று நம்பிக்கைமிக்கதாய் இருக்கிறது, அல்லது இருளும் அவநம்பிக்கையும் உடையதாய்த் தெரிகிறது. இதில் எந்த அணுகுமுறை பருவநிலை மாற்றம் பற்றிய மனப்பாங்குகளை மாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

நான் ஓர் இலக்கியக் கொள்கையாளனோ இலக்கிய விமர்சகனோ அல்ல, எனவே க்ளை-ஃபை என்றால் என்ன என்றோ அது எப்படி இருக்க வேண்டும் என்றோ நான் சொல்ல முடியாது. க்ளை-ஃபை என்கிற வகைமை எல்லாக் கருத்துக்களுக்கும் இடமளிப்பதாக இருக்கிறது என்பதே என் கருத்து. அவர்களின் கதைகளை எப்படி அமைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்கிற முடிவை உலகெங்கும் இருக்கும் நம் புதின எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களின் கடின உழைப்புக்கும் மிகைச் சுமைக்கும் விட்டுவிடவே விரும்புகிறேன். எனக்கு இருளும் அவநம்பிக்கையும் நிறைந்த க்ளை-ஃபை பிடிக்கிறது. எனக்கு நிறைவுலக, நன்னம்பிக்கை க்ளை-ஃபை பிடிக்கிறது. எனக்கு எந்தப் பாரபட்சமும் இல்லை. நான் க்ளை-ஃபை கூடாரத்துக்குள் எல்லோரையும் வரவேற்கிறேன்.

மனித இனம் புவி சூடாதலைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என்று எவ்வளவு நன்னம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்?

எனக்கு எந்த நன்னம்பிக்கையும் இல்லை. பேரழிவு நாளுக்கு, மனித இனத்தின் முடிவுக்கு, நம் உயிரினத்தின் முடிவுக்குத் தயாராக மனிதகுலத்துக்கு இன்னும் 30 தலைமுறைகள் மட்டுமே இருக்கின்றன என்று எண்ணுகிறேன். இந்த நேரத்தை, நம் எதிர்காலத் தலைமுறைகள் அவர்களின் விதியை ஏற்றுக்கொள்ளவும், இன்றிலிருந்து 500 ஆண்டுகளில் நயத்தோடும் கண்ணியத்தோடும், ஆன்மீக நயத்தோடும் ஆன்மீகக் கண்ணியத்தோடும், ஏற்றுச் சாகத் தயார்படுத்தப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். 2500-ஆம் ஆண்டு வாக்கில் அது வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.

இங்கிருந்து க்ளை-ஃபை எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று பார்க்கிறீர்கள்?

21-ஆம் நூற்றாண்டின் மிச்சத்துக்கும், 22-ஆம் நூற்றாண்டுக்குள்ளும், அடுத்த 500 ஆண்டுகளுக்கும் கூட அது தொடர்ந்து வளர்வதையும் விரிவடைவதையும் பார்க்கிறேன்.

வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

கிரகம் ஏ-க்கு நல்வரவு. இதற்கடுத்து கிரகம் பி என்று ஒன்றில்லை.

* நவம்பர் 2019 கணையாழி இதழில் வெளியானது.
https://williamliggett.com/2018/12/11/dan-bloom-interview-creator-of-cli-fi/

ஞாயிறு, அக்டோபர் 06, 2019

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

ஆஸ்கர் விருது பெற்ற இந்த நடிகரின் சூழலியல் செயல்பாடுகள் அவருடைய முதல் ஆஸ்கர் பரிந்துரைப் படமான “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” (‘What’s Eating Gilbert Grape’) காலத்திலிருந்தே தொடங்கியதில்லைதான். ஆனாலும் அவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்து வருகிறார்.
லியனர்டோ டிகாப்ரியோ, ‘ரெவெணண்ட்’ (Revenant) படத்தில் தன் ஆஸ்கர் வென்ற பாத்திரத்திற்காக விலங்குச் சடலத்துக்குள் தன்னைச் சுற்றிக்கொண்டு, காட்டெருமையின் பச்சை ஈரலை வாந்தியெடுத்து, உடல்வெப்பக்குறைவு அபாயத்துக்கு உள்ளாவதற்குப் பல காலம் முன்பே காலநிலைப் போராளியானவர்.

டிகாப்ரியோ, தன் சிறந்த நடிகருக்கான ஏற்புரையை, உலகெங்கும் உள்ள பார்வையாளர்களை “பேராசை அரசியலை” நிராகரிக்கவும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரும் தலைவர்களை ஆதரிக்கவும் வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தினார்.

“காலநிலை மாற்றம் மெய்யானது, அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதுதான் நம் மனித இனம் முழுமையையும் எதிர்கொண்டிருக்கும் மிக அவசரமான அச்சுறுத்தல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாகச் செயல்பட வேண்டியுள்ளது, காலம் கடத்தலை நிறுத்தியாக வேண்டும்,” என்றார்.

ஆஸ்கர்ஸ்தான் தன் செயல்பாடுகளைப் பற்றிப் பேச டிகாப்ரியோவுக்கு இதுவரை கிடைத்த மேடைகளிலேயே மிகப் பெரும் மேடை. ஆனால் பல ஆண்டுகளாகவே அவர் இந்தப் பிரச்சனைக்குள் மூழ்கிப் போயுள்ளார் என்றும் இதற்காகச் செயலாற்ற வேண்டியதன் தேவையைப் பற்றிய வெறி கொண்டு இருக்கிறார் என்றும் கூறுகின்றனர் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளவர்கள்.

கடந்த சில ஆண்டுகளில், ஐக்கிய நாடுகளின் காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண உதவவும், பவழப் பாறைகளையும் புலிகளையும் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தின் அபாயம் பற்றிய பொது விழிப்புணர்வைப் பரப்பவும் தன் புகழையும், அவருடைய அறக்கட்டளையின் கூற்றுப்படி, குறைந்த பட்சம் $30 மில்லியன் நிதியையும் நன்கொடையளித்துள்ளார்.

2014 முதலே உலகளாவிய பிரச்சனைகளைப் பேசும் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே நிரந்தர இடம் பெறுபவராக மாறிவிட்டார். 2016 ஜனவரியில் டாவோஸ் பொருளியல் மன்றத்தில் ஒரு விருது பெற வந்தார். அதற்கு முந்தைய டிசம்பரில் பாரிஸ் காலநிலைப் பேச்சுவார்த்தைகளின் பக்கவாட்டில் நின்றுகொண்டு, ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி-மூன் உடன் தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டிருந்தார்.

2014-இல், 400,000 பேருடன் மன்ஹாட்டன் வீதிகளின் வழியே நடைப்பயணம் சென்று, காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் பற்றி ஐக்கிய நாடுகளில் உரையாற்றினார். உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களிடமிருந்து காலநிலை அறிவியல் பற்றித் தனிப்பட்ட முறையில் பயிற்சி வகுப்புகள் பெற்றிருக்கிறார்.

மற்ற நடிகர்களும் - குறிப்பாக, சிறந்த துணை நடிகர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட மார்க் ருஃபாலோ - ஊரறிந்த காலநிலைப் போராளிகள்தான். மற்ற பல செல்வந்தர்களும் சூழலியல் காரணங்களுக்காகக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் டிகாப்ரியோ வேறொரு புகழ்த் தளத்தில் பணிபுரிகிறார்.

“கடல்களில் ஆர்வமுள்ள பல அறநிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளும் இருக்கின்றன, பலரும் அருமையான பணிகள் செய்கிறார்கள். ஆனால் இந்தக் கிரகத்தில் வேறு எவரிடமும் இல்லாத ஒலிபெருக்கி அவரிடம் உள்ளது. பொதுமக்களில் தொடங்கி நாடுகளின் தலைவர்கள் வரை உலகம் முழுமைக்கும் எவ்வளவோ மதிக்கப்படுகிறார், போற்றப்படுகிறார், செல்வாக்குடையவராக இருக்கிறார்,” என்கிறார் டிகாப்ரியோவுடன் பணிபுரிந்துள்ள, நேஷனல் ஜியாக்ரஃபிக்கின் உறைவிடத் தேடலாய்வர் (Explorer-in-Residence) என்றிக் சாலா.

டெஸ்லா காரில் செல்லும், ஸ்கூபா டைவ் அடிக்கும் இந்த நடிகரின் இந்த முயற்சிகள், அடுத்தடுத்து எப்போதும் தன்னைச் சுற்றி மாடல்களை வைத்துக்கொண்டு திரியும் விளையாட்டுப் பிள்ளையாக இவரைப் பற்றி இருந்த பொதுமக்களின் பழைய பார்வைகளைப் பெயர்த்து வீசிவிட்டன - அது இந்த உயரிய நோக்கத்துக்கு உதவி புரிவதாக உள்ளது.

“லியனர்டோ டிகாப்ரியோ போன்றவர்களுக்கு மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் ஆற்றல் உள்ளது. அது பிரமிக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி அவர் அவ்வளவு ஆணித்தரமாகவும் தெளிவாகவும் பேசுவதை மக்கள் பார்க்கும் போது, அதற்குக் காது கொடுத்துக் கேட்கிறார்கள்,” என்றார் பான் கி-மூனுக்கு காலநிலை மாற்ற ஆலோசகராக இருந்த ஜெனோஸ் பாசிஸ்ட்டர். “அவர் அதைச் செய்ததற்காக மிகவும் மகிழ்கிறேன்.”

டிகாப்ரியோவின் சூழலியல் செயல்பாடுகள், 1993-இல் வெளியான, ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவருடைய ஆறு படங்களில் முதல் படமான, “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” காலத்திலிருந்தே தொடங்கியவை அல்லதான். ஆனாலும் இவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்துக்கொண்டே வருகிறார், என்கின்றனர் செயல்பாட்டாளர்கள்.

அவரே சொல்வது என்னவென்றால், உயிரினப் பன்மை (biodiversity) பற்றியும் உயிரினங்களின் அழிவு பற்றியும் அவர் குழந்தையாக இருக்கும் போதிருந்தே கவலைப்படத் தொடங்கிவிட்டாராம். அவருடைய லாஸ் ஏஞ்சலஸ் வீட்டில், அவரின் தொட்டிலுக்கு மேலே, பாஷ் வரைந்த ‘உலகியல் இன்பங்களின் தோட்டம்’ (Bosch’s Garden of Earthly Delights) ஓவியத்தை அவருடைய பெற்றோர் தொங்கவிட்டிருந்தனர் என்றும் ஏதேனின் இழப்பு பற்றிய சித்தரிப்பு அவரை மனச் சஞ்சலத்துக்கு உள்ளாக்கியது என்றும் அவர் நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.

1998-இல் அப்போதைய துணை அதிபர் அல் கோர் அவர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்தது, காலநிலைப் போராளியாக டிகாப்ரியோவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான தருணம். அந்தச் சந்திப்பைத் தன் சூழலியல் செயல்பாட்டின் தொடக்கமாகக் குறிப்பிட்ட டிகாப்ரியோ, அந்த ஆண்டிலேயே தன் அறக்கட்டளையை நிறுவினார்.

வாசிப்பு, காலநிலை அறிவியல் மற்றும் கோட்பாடு பற்றி அவருக்கு விளக்கக்கூடிய பணியாளர்களைக் கையிலேயே வைத்துக்கொள்ளுதல், காலநிலை மாற்றத்தின் முன்வரிசையில் இருக்கும் இடங்களுக்குப் பயணித்தல் என்று தன்னை முழுக்கவும் அதிலேயே மூழ்கடித்துக்கொள்கிறார் என்கின்றனர் அவருடன் பணிபுரிந்துள்ள செயல்பாட்டாளர்கள்.

வெள்ளை மாளிகையில் அல் கோர் உடனான சந்திப்புக்குப் பத்தாண்டுகள் கழித்து ஒரு நாள், எதிர்பாராத விதமாக இருவரும் ஐரோப்பா போகும் வழியில் ஒரு விமானத்தில் முதல் வகுப்பில் சந்தித்துக்கொண்டனர். “பயணம் முழுக்கவும் லியோ அல் உடன் பேசிக்கொண்டே இருந்தார். முழு இரவும் அல்லின் மண்டைக்குள் இருப்பதையெல்லாம் எடுத்துத் தனக்குள் ஏற்றிக்கொண்டார். கண்கள் சிவந்துவிட்டன,” என்றார் அல் கோரின் தகவலர் கலீ க்ரெய்டர். “இருவரும் முழு இரவும் பேசினார்கள். அது மிகவும் வழக்கத்துக்கு மாறானது.”

பென் மாநிலப் பல்கலைக்கழகத்தில் காலநிலை விஞ்ஞானியாக இருக்கும் மைக்கேல் மன் போன்ற முக்கியமான ஆய்வாளர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்து வருகிறார். “அவருடனும் அவருடைய ஆட்களுடனும் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருக்கிறேன்,” என்று மன் ஒரு மின்னஞ்சலில் கூறினார். சென்ற அக்டோபரில், நியூ யார்க்கில் இருக்கும் வெஸ்ட் வில்லேஜில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் இவர்கள் இருவரும் முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டார்கள்.

“சந்திப்பு சில மணி நேரம் நீடித்தது, காலநிலை மாற்றத்தின் அனைத்துக் கூறுகளையும் அதன் தாக்கங்களையும் தீர்வுகளையும் தொட்டது. லியோ உண்மையாகவே என்னைக் கவர்ந்துவிட்டார். இந்தப் பிரச்சனை பற்றி நெருக்கமாகப் பின்தொடர்கிறார், அது பற்றி நிறைய வாசிக்கிறார் (உறுதியாகச் சொல்வேன், த கார்டியனில் வரும் படைப்புகள் உட்பட), சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உள்ள நுட்பங்களைப் புரிந்துகொள்கிறார். என்னிடம் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் சிந்தனைத் திறமும் மதிநுட்பமும் உடையவை. அதில் நிறைய ஆழம் இருக்கிறது, லியோ உண்மையாகவே இந்தப் பிரச்சனையை அவருடைய இதயத்தையும் தலையையும் சேர்த்து வைத்து அணுகுகிறார் என்று எண்ணுகிறேன்,” என்றார் மன்.

“ஒரு விடயம் நான் கவனித்தது என்னவென்றால், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் மனத்திட்பத்தை தக்க நேரத்துக்கு ஒன்றுகூட்ட முடியுமா என்ற அவநம்பிக்கை. அது நிறையப் பேரிடம் பார்ப்பதுதான். விஞ்ஞானி என்ற முறையில், நான் ஏன் இன்னும் தக்க நேரத்தில் தேவைக்கேற்ற ஆற்றலைப் பெற்றுவிடுவோம் என்று எச்சரிக்கையோடு கூடிய நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முயன்றேன்.”

டிகாப்ரியோவின் காலநிலைச் செயல்பாட்டு முறை, முதலில் 2007-இல், காலநிலை மாற்றத் திரைப்படமான ‘the 11-th hour’-ஐ விவரிப்பது போன்ற கலை வடிவில் தொடங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவருடைய செல்வத்தையும் அறக்கட்டளையையும் சூழலியல் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் மென்மேலும் பயன்படுத்தியுள்ளார்.

டிகாப்ரியோவின் அறக்கட்டளை, 2014-இல் மிகை மீன்பிடித்தலைத் தடுப்பதற்காக $3 மில்லியனும், நேபாளத்தில் புலிகளைக் காக்க $3 மில்லியனையும், பசிபிக்கில் கடல் வளங்களை உருவாக்குவதற்கான சாலாவின் முன்னெடுப்புக்கு நிதியுதவி செய்யவும் நன்கொடையளித்தது. 

இப்போது காலநிலை மாற்ற ஆவணப் படம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காகக் கடந்த கோடையில் ஆர்க்டிக்கில் உள்ள பாஃபின் தீவுக்குச் சென்று வந்தார். டிகாப்ரியோவின் கூற்றுப்படி, நிச்சயமாக அவரின் சூழலியல் செயல்பாடுகள் அத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.

சென்ற ஜனவரியில் ரோலிங் ஸ்டோன் உரையாடலில், “முழுதும் இதில் மூழ்கிக் கிடக்கிறேன்” என்றார். “நான் இது பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் நேரம் என்று ஒரு நாளில் ஓரிரு மணி நேரம் கூட இல்லை. மெதுவான வேதல் இது. ‘அடுத்த வாரமே வேற்றுக் கிரகர்கள் படையெடுத்து வருகிறார்கள், நம் நாட்டைக் காப்பதற்கு இப்போதே எழுந்து நின்று போராட வேண்டும்’ என்பது போலில்லை, ஆனால் இது தவிர்க்கவே முடியாதது, அது மட்டுமில்லை, பீதியூட்டுவதாகவும் இருக்கிறது.”

மூலம்: https://amp.theguardian.com/environment/2016/feb/29/how-leonardo-dicaprio-oscar-climate-change-campaigner

*2019 அக்டோபர் மாதக் கணையாழியில் வெளியானது.

செவ்வாய், ஜூலை 16, 2019

'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்

'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward).

பாப் வூட்வர்ட் யார்?

இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்டை போட்ட, இதுவரை ஒன்பது அதிபர்களின் தூக்கத்தைக் கெடுத்த, முதிய-முதிர்ந்த பத்திரிகையாளர். ஏற்கனவே அமெரிக்காவின் பல பெரும் பெரும் பிரச்சனைகளைப் பற்றி விலாவாரியாக எழுதிக் கொட்டியவர். இதுவரை அவர் எழுதியுள்ள 18 நூல்களில் 12 அந்தந்தக் காலத்தில் விற்பனையில் முன்னணியில் இருந்தவை. கிட்டத்தட்ட அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளையும் பெற்றவர். இதழியல் துறையில் உள்ளே நுழைகிற ஒவ்வோர் அமெரிக்கரும், "யார் போல வர விரும்புகிறாய்?" என்று கேட்டால் இவர் பெயரைத்தான் சொல்வார்களாம். அப்படிப் பட்டவர்.

நமக்கு, இதைப் படிக்கும் போது, அப்படி இந்தியாவில்-தமிழ் நாட்டில் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்வி வருவதும் மிக இயல்பானதுதானே! வெளிநாடுகளுக்கு வரும் இந்தியர்கள்-தமிழர்கள் இங்குள்ள வசதிகளைப் பார்த்துவிட்டு, 'இது போல நம் நாட்டிலும் வந்தால் நன்றாக இருக்குமே!', 'அப்படி வரவிடாமல் தடுப்பது எது?' என்று தம்மைத் தாமே கேட்டுக்கொள்வதும் கூட அவர்கள் நாடு திரும்பியதும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படத்தான் செய்யும். அப்படி வெளிநாடுகளில் வந்து படித்துவிட்டுத் திரும்பும் ஒரு சிறு கூட்டம், அரசியலைத் தன் துறையாக-தொழிலாகத் தேர்ந்தெடுத்துத் தன் செல்வாக்கைச் செலுத்துவதாகவும் இருக்கிறது. அப்படியானவர்கள் அறிமுகம் செய்த எத்தனையோ மாற்றங்கள் நமக்கும் நம் மக்களுக்கும் எவ்வளவோ பயன்பட்டிருக்கத்தானே செய்கின்றன! அது வசதிகளில் மட்டும் என்றில்லாமல், பழக்கவழக்கங்களில்-பண்பாட்டில்-தொழில் செய்யும் முறையில் என்று எல்லாவற்றிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தி இருக்கத்தான் செய்கிறது. இதழியல் துறையில் உள்ள ஒருவர் இதைப் படிக்கும் போது, 'இப்படி நாம் இருக்கிறோமா?' என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வைக்கும். நம்மைப் போன்றவர்கள் படிக்கும் போது, 'இந்தத் துறையில் இருக்கும் நம்மவர்கள் இப்படி இருக்கிறார்களா?' என்றுதானே கேட்கத் தூண்டும்! அதற்கெல்லாம் மேல், அடுத்த வீட்டு அம்மாவை-அப்பாவை-பிள்ளைகளைப் பற்றி யாரேனும் பெருமையாகப் பேசும் போது நம் வீட்டிலும் இப்படிப் பெருமையாகப் பேசிக்கொள்ளும் விதத்தில் யாரேனும் இருக்கிறோமா அல்லது இருப்பவர்களை அந்தந்த விஷயத்தில் அவர்களுக்கு அருகில் வைத்தாவது பார்க்க முடியுமா என்றுதானே எண்ணிப் பார்ப்போம்! அப்படியான சிந்தனைதான் இதுவும்.

கூடிய விரைவில் வல்லரசாகப் போகும் நாட்டில் இது கூடவா இல்லாமல் இருப்போம்! கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். அப்படியானால் அது யார்? குல்தீப் நாயரா? என். ராமா? பிரணாய் ராயா?

வெற்றிகரமாகத் தன் மூன்றாம் நூற்றாண்டில் உயிரோடும் உயிர்ப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க மக்களாட்சி வரலாற்றிலேயே தன் பதவியைத் துறக்க நேர்ந்த ஒரே அதிபர் நிக்சன். அவரை அந்த நிலைக்குத் தள்ளியது, எழுபதுகளில் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர்கேட் ஊழல். அந்த ஊழல் பற்றி இவர் எழுதிய நூல்தான் நிக்சனை வீட்டுக்கனுப்பி இவருக்குப் புலிட்சர் விருது பெற்றுக் கொடுத்தது. அதன் பின்பு இன்னொரு முறையும் அதே விருதைப் பெற்றவர் இவர். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, துறையில் நுழைந்த தொடக்க காலத்திலேயே, இப்படி உலகின் கவனத்தைத் திருப்பிய ஒருவர் தன் எழுபதுகளில் எப்படிப் பட்டவராக இருப்பார் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். "மோசம் போவதற்கு வயதென்ன இருக்கிறது!" என்கிறீர்களா? நாம் பார்க்கும் உலகில் நடப்பவற்றை வைத்துப் பார்த்தால் அதுவும் சரிதான் என்றே படுகிறது. இவரும் அப்படிப்பட்டவரா என்பதை நீங்களே தேடித் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த நூல் பற்றிய பல சுவாரசியமான தகவல்களில் ஒன்று, நூல் வெளியாவதற்குச் சில நாட்கள் முன்பு, டிரம்ப் வூட்வர்டைத் தொலைபேசியில் அழைக்கிறார். "நம் உரையாடலைப் பதிவு செய்துகொள்ளலாமா?" என்று அவரிடமே அனுமதி பெற்றுக்கொண்டு அதையும் பதிவு செய்து வெளியிட்டுவிடுகிறார் ஆசிரியர். 

அந்த உரையாடல் இப்படிப் போகிறது...

"என்னைப் பற்றி ஏதோ நூல் வெளியிடப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இது எனக்குத் தெரியவே வரவில்லை. உண்மையிலேயே இது மிகவும் மோசம். யாருமே என்னிடம் இது பற்றிச் சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும், உங்களிடம் நான் வெளிப்படையாகத்தான் நடந்துகொள்வேன். நீங்களும் எப்போதுமே நியாயமாகத்தான் நடந்துகொண்டுள்ளீர்கள்."

"இந்த நூலுக்காக உங்களுடன் உரையாட வேண்டும் என்று எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவில்லை."

"அப்படியா? எனக்குச் சொல்லவே இல்லை இவர்கள். யாரிடம் கேட்டீர்கள்?"

"இரண்டரை மாதங்களுக்கு முன்பு கெல்லியன் கான்வேயிடம் பேசினேன். மதிய உணவுக்குச் சந்தித்து உரையாடினோம்." 

இவர் வெள்ளை மாளிகை ஆலோசகர். இந்தப் பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இதோ சில நிமிடங்களில் அதிபரின் அறைக்குள் வரப்போகிறார். அல்லது ஏற்கனவே அறைக்குள்தான் நின்று கொண்டிருக்கிறாரோ என்னவோ!

"வெள்ளை மாளிகை உதவி ஊடகச் செயலாளர் ராஜ் ஷாவிடமும் அனுமதி கேட்டிருந்தேன். அவரும் ஒன்றும் சொல்லவே இல்லை."

"நிறையப் பேருக்கு என்னிடம் வந்து பேசவே பயம், அல்லது பணியில் மும்முரமாக இருந்திருப்பார்கள்." 

தன்னுடன் இருப்பவர்கள் தன்னைக் கண்டு பேசக்கூட அஞ்சுபவர்கள் என்று சொல்வது அமெரிக்கா போன்ற நாட்டில் அதிபராக இருக்கிற ஒருவர் தன்னைத் தானே காலி செய்துகொள்கிற உளறல். இந்த நூலே அச்சம் பற்றியதுதானே. "எங்கள் ஊரில் இதற்கெல்லாம் விசில் பறக்கும்" என்கிறீர்களா? "தலைவன் டா... தலைவி டா... சிங்கம் டா..." என்று மீம் போடும் ஒரு கூட்டம் அமெரிக்காவிலும் துணிந்து வெளியே தலைகாட்டத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பது பல மூன்றாம் உலக நாட்டுத் தலைவர்களுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் பெரும் நற்செய்திதான்.

"செனட்டர் யாரிடம் பேசினீர்கள் என்றீர்கள்?" (மீண்டும் தூண்டிலை நோக்கியே வருகிறது மீன்!)

"செனட்டர் கிரஹாமிடம் பேசினேன். உங்களிடம் இது பற்றிப் பேசியதாகச் சொன்னாரே!" (அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்)

"ஆமாமா, ஒரு முறை ஒரு சந்திப்பின் போது சுருக்கமாகச் சொன்னார். உண்மைதான். உண்மைதான்."

...

"இந்த நூல், இந்த உலகத்தின் மீதும் உங்கள் நிர்வாகத்தின் மீதும் உங்கள் மீதுமான கடுமையான பார்வையாக இருக்கும்."

"ஓ, அப்படியானால் அது ஓர் எதிர்மறை நூலாகத்தான் இருக்கப்போகிறது என்று நினைக்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெரியும், இதற்கெல்லாம் ஏற்கனவே கிட்டத்தட்ட 50% பழக்கப்பட்டுவிட்டேன்."

"இதோ கெல்லியன் அறைக்குள் வருகிறாள். அவளிடம் பேசுங்கள். அவளிடமே கேளுங்கள். என்னிடம் சொல்லவே இல்லை."

"நானும் அனுமதி கேட்டேன். ஆனால் பாருங்கள், அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். நானும் ஓரளவுக்குத்தானே போக முடியும். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களின் பார்வைக்கு வைத்தேன். ஆனால்..." - இது கெல்லியன்.

"யார் அவர்கள்?"

(கேள்விக்கு பதிலில்லை)

"இதோ அதிபரிடமே திரும்பக் கொடுக்கிறேன்."

"பாப், என்னையே நீங்கள் நேரடியாக என் அலுவலக எண்ணுக்கு அழைத்திருக்கலாம். என்னிடம் ஒரு செயலாளர் இருக்கிறார். இரண்டு-மூன்று பேர் இருக்கிறார்கள்."

"நானும் பல முறை முயன்றேன்."

...

"பிழை மிகுந்த நூல் ஒன்று வரப்போகிறது. அது மிகவும் தவறு."

"இல்லை, நூல் பிழையற்றதாக இருக்கும். சத்தியமாகச் சொல்கிறேன்."

"ஓ! சரி, பிழையற்றது என்றால் அது என்ன சொல்லவா? அமெரிக்க அதிபராக இதுவரை வேறு எவர் செய்ததைவிடவும் சிறப்பாக நான் என் வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அது மட்டும் என்னால் சொல்ல முடியும். அப்படித்தான் நிறையப்பேர் உணர்கிறார்கள், என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள், அடுத்த சில ஆண்டுகளில் பார்ப்பீர்கள். அப்படித்தான் நிறையப்பேர் உணர்கிறார்கள், பாப்."

இதுவும் நாம் தமிழ் நாட்டில் பார்த்திருக்கிறோம். "இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் எல்லோரைவிடவும் நான் சிறப்பாகச் செயல்படுகிறேன்" என்கிற கதையெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டவர்கள் என்ற வகையில், அமெரிக்காவே நம்மைவிட இருபது ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறதோ என்றும் தோன்றித் தொலைத்துவிடுகிறது. இது வரலாறு படிக்காததால் வரும் வினையா அல்லது தான் மட்டுமே உலகம் என்கிற சிந்தனைப்பாடுகளால் வரும் பிரச்சனையா?

"நம் நாட்டின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் நம் அதிபர் என்பதால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்."

"சரி, பாப். மிகவும் நன்றி. உண்மையிலேயே பாராட்டுகிறேன். பார்ப்போம்."

இப்படியாக முடிந்துவிடுகிறது உரையாடல். இந்த உரையாடலை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அண்ணல் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி என்பது இப்போதே புரிந்துவிடும். 

சரி, நூலுக்குள் போவோம்...

நூலின் பெயர், 'Fear' ('அச்சம்'). அவ்வளவுதான். 'Trump in the White House' ('வெள்ளை மாளிகையில் டிரம்ப்') என்பது சிறிய உருவில் அச்சிடப்பட்டிருக்கும் துணைத் தலைப்பு.

சரி, நூலுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது?

தேர்தலுக்குச் சற்று முன்பு நூலின் ஆசிரியர் டிரம்பிடம் செய்த நேர்காணல் ஒன்றில், "உண்மையான அதிகாரம் என்பது - அந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூட எனக்கு விருப்பம் இல்லை - அச்சம்" என்று அவர் உதிர்த்த தத்துவ முத்து ஒன்றிலிருந்துதான் இந்தப் பெயர் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய நடவடிக்கைகளுக்கும் ஆட்சி முறைக்கும் அச்சாணியாக இருக்கும் நம்பிக்கை இதுதானோ என்ற கேள்வியை அழுத்தமாகப் பதிய வைப்பதில் நூலின் பெயர் வெற்றி பெற்றிருக்கிறது.

தன்னுடைய கடந்த ஐந்து நூல்களைப் போலவே, இந்த நூலுக்காகவும், அத்தனை பணிகளையும் தனக்காக உடனிருந்து செய்த தன் உதவியாளர் ஈவ்லின் எம். டஃபியைப் பற்றிய பாராட்டுக் குறிப்போடு நூல் தொடங்குகிறது.

அடுத்த பக்கத்தில் வாசகர்களுக்கான குறிப்பில், எப்படி ஒவ்வொருவரையும் சந்தித்து உரையாடி, உரையாடல்களைப் பதிவு செய்து, ஆவணங்களைச் சேர்த்து, தகவல்களை உறுதி செய்து, அவற்றை இந்த நூலுக்குள் கொண்டுவந்தார்கள் என்று சொல்கிறார். அதன் முடிவில், இந்த நூலுக்காக டிரம்பை நேர்காணல் செய்ய முயன்றும் அவர் அதற்கு மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏழைகளுக்குப் பணக்காரர்களைப் பிடிக்காது, பணக்காரர்களுக்கு ஏழைகளைப் பிடிக்காது என்பது போல, அறிவாளிகளுக்கு முட்டாள்களைப் பிடிக்காது, முட்டாள்களுக்கு அறிவாளிகளைப் பிடிக்காது என்பதும் உலக வரலாற்றில் நேர்ந்த பல முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமான அடிப்படைகளில் ஒன்றுதானே! தம் அரசாங்கம் எப்போதும் அறிவாளிகளால் அல்லது அப்படிப் பாசாங்கு செய்துகொள்கிறவர்களால் நடத்தப்பட்டதுதான், அது எப்போதும் தம் போன்ற எளிய மக்களுக்கு எதிரானதாகவே இருப்பதற்குக் காரணம் என்று எண்ணிய எளிய மக்கள், தம் நாட்டின் அறிவாளி வர்க்கத்துக்குப் புகட்டிய பாடம்தான் சென்ற அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் என்பது எல்லாம் முடிந்த பிறகு செய்யப்படும் ஆய்வுகளின் முடிவாகச் சொல்லப்படும் பல்வேறு கதைகளில் ஒன்று. அதற்கு அப்படியே நேரெதிரான ஒரு பார்வை, எப்போதும் அறிவாளிகளே தலைமையேற்று நடத்திய - முன்னின்று பங்களித்த, சில நூற்றாண்டு காலப் பழமையும் பெருமையும் கொண்ட மக்களாட்சி அரசாங்கம் என்கிற ஓர் அமைப்பு, தன் கண் முன்னாலேயே ஒரு மூடனின் கையில் சிக்கிச் சீரழிவதைப் பார்த்துக் காணச் சகியாத அறிஞர்களில் ஒருவர் அதை அம்பலப்படுத்த முயன்றதன் விளைவுகளில் ஒன்றுதான் இந்த நூல் என்பது.

மீண்டும் மீண்டும் இந்த நூல் சொல்வது, இதுவரை அமெரிக்காவை ஆண்ட எந்த அதிபரைவிடவும் பன்மடங்கு மூடர்-கோமாளி இப்போது அந்தப் பேரிடத்தில் அமர்ந்திருப்பவர் என்பதே. அதை நேரடியாக ஆசிரியரின் கருத்தாகச் சொல்லாமல் பல சான்றுகளோடு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பவரின் அருகில் இருப்பவர்களின் வாயிலிருந்தே வரவைத்திருப்பதுதான் இந்த நூலின் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவது. வெள்ளை மாளிகை போன்ற ஓர் அதிகார அரங்கத்தில் இருப்பவர்கள் இவ்வளவு மிக முக்கியமான தகவல்களை வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பதே ஒரு பெரும் வியப்புக்குரிய கதையாக இருக்கிறது. இவர்களையெல்லாம் தேச விரோதிகள் என்று சொல்லி உள்ளே தள்ளும் வசதிகள் இல்லாத நாடா அமெரிக்கா? நூலுக்காக அவர்கள் எல்லோரோடும் உரையாடி உரையாடிப் பல மணி நேர உரையாடல்களைப் பதிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். மேலும் டிரம்பின் ஆட்களிடமிருந்தே கைப்பற்றிய பல ஆவணங்களும் கோப்புகளும் நாட்குறிப்புகளும் குறிப்பாணைகளும் டிரம்பே தன் கைப்பட எழுதிய குறிப்பும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் எல்லோருமே நம் குடும்ப-பணியிட வட்டத்தில் இப்படியான ஒருவரை அல்லது இந்த ஒருவரையே பல தனித்தனி மனிதர்களிடம் பார்த்திருப்போம். "காசு மட்டும் இல்லை என்றால், இவனையெல்லாம் நாய் கூட மதிக்காது. எப்படியோ பணம் சம்பாதிக்கிற நுணுக்கங்களை மட்டும் நன்றாகப் படித்து வைத்துக்கொண்டிருக்கிறான். மற்ற எதிலுமே துளி கூட அறிவு கிடையாது" என்போம். காலையில் பேசுவதை அப்படியே மதியம் மாற்றிப் பேசுவார். மதியம் பேசியதை மாலை மாற்றிவிடுவார். கெட்டவார்த்தைகள் நிறையப் பேசுவார். அவை நாகரிகம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பவராக இருப்பார். ஆனால் அந்தந்த நிமிடம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள - பிறரின் நல்லெண்ணத்தைப் பெற, என்ன பேச வேண்டுமோ - செய்ய வேண்டுமோ அதைச் சரியாகப் பேசுவார்-செய்வார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ணும் வேளையில், மண்டையில் நங்கென்று ஒரு குட்டு விழும்; எங்கே காதோடு அறைந்துவிடுவாரோ என்று பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஓடிவந்து கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுப்பார். இப்படி எவராலும் கணிக்க முடியாத மனிதராக இருப்பதாலேயே, எப்போதும் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அதில் அவரால் பாதிக்கப்பட்டோரே கூட இருப்பர். தன்னைச் சுற்றியுள்ள எல்லோருமே எப்போதும் தமக்குள் அடித்துக்கொண்டு சாகிற மாதிரி ஏதாவது இங்குமங்கும் இழுத்துவிடுகிற வேலை செய்பவராக இருப்பார். "என்னப்பா, இவன் இப்படிச் சொல்கிறான். நீ அப்படிச் சொல்கிறாய்!" என்று இழுத்துவிட்டுவிட்டு, சண்டை முற்றி அடிதடியாகும் போது, "சரி, சரி, அதோ அந்தப் பக்கமாகப் போய் அடித்துக்கொண்டு சாகுங்கள்!" என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.

முடிவு எடுப்பதிலும் அப்படியே. 'உலகத்தில் நாம் பார்த்த எல்லா மூளைகளும் எப்படி இயங்குகின்றன, எந்த வினைக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்று புரிந்துகொள்ள முடிகிறதே! ஆனால் இந்த மூளை மட்டும் எப்படி இயங்குகிறது, என்ன செய்தால் எப்படி எதிர்வினை ஆற்றும் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லையே!' என்று எல்லோரையும் வியப்பிலேயே வைத்திருப்பார். இப்படிப் போட்டதை அப்படிப் போட்டு, அப்படிப் போட்டதை இப்படிப் போட்டு, இதை எடுத்து அங்கே போட்டு, அதை எடுத்து வேறெங்கோ போட்டு என்று தினுசு தினுசாக அந்தந்த நிமிடத்துக்கென்று எந்த அடிப்படையிலும் இல்லாமல் அவர்களுக்கு மட்டும் தெரிந்த ஏதோவொரு கணக்குப்படி ஏதேனும் செய்வார். ஆனாலும் அவருக்கு எல்லாம் சரியாக நடந்துகொண்டுதானிருக்கும் அல்லது அவரின் சொதப்பல்களையெல்லாம் மாங்கு மாங்கென்று உழைத்து வேறொரு பெருங்கூட்டமே சரி செய்துகொண்டே பின்னால் ஓடிவரும். அப்படியான ஒரு நபர்தான் இந்த நூலின் நாயகர்.

"உலகத்தின் மிகத் தொன்மையான மக்களாட்சி என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற நாட்டின் தலைமைப் பொறுப்பில் எப்படியான ஒருவரைக் கொண்டுவந்து அமர்த்தியிருக்கிறோம் என்று பாருங்கள், மக்களே!" என்று வூட்வர்ட் கொண்டுவந்து இறக்கியிருக்கும் அதிர்ச்சியும் அது ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறை எண்ணங்களும் ஒருபுறம் என்றால், 'இதை இவ்வளவு பச்சையாக எழுத முடிகிற அளவுக்கு அந்த மக்களாட்சியில் இடம் இருக்கிறதே, அப்படியானால் அதன் நிறுவனங்கள் இன்னும் வலுவாகத்தானே இருக்கின்றன!' என்கிற நம்பிக்கையையும் வைக்கிறது இந்த நூல்.

வட கொரியாவில் இருந்து ஓர் ஏவுகணையை ஏவினால் அது 38 நிமிடங்களில் அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதியில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸைத் தாக்கிவிடும். அப்படி ஒரு வேளை ஏதேனும் ஏவப்பட்டால், தென் கொரியாவுடனான தன் நெருக்கத்தாலும் வெளியுறவுக் கொள்கையாலும் தென் கொரிய மண்ணிலேயே அமெரிக்கா நிறுவியுள்ள தன் வசதிகளைக் கொண்டு, ஏவப்பட்ட ஏழாவது வினாடியிலேயே அதனைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கோரஸ் (KORUS) என்கிற புகழ்பெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலான - தென் கொரியாவுடனான இந்த உறவை முறித்துக்கொண்டால், இன்று தென் கொரியாவிலிருக்கும் வசதிகளை அப்படியே காலி செய்துகொண்டு, தன்னுடைய எல்லைக்குள்ளேயே இருக்கும் அலாஸ்காவில் இருக்கும் வசதிகளையே சார்ந்து இருக்க வேண்டியதிருக்கும். அப்படிச் செய்யும் போது, கண்டுபிடிக்கும் நேரம் 15 நிமிடங்களாகிவிடும். ஏழு வினாடி எங்கே? 15 நிமிடங்கள் எங்கே? இது, அந்த ஏவுகணையை வீழ்த்துவதற்கு அமெரிக்க இராணுவத்துக்குப் போதுமான நேரம் கொடுக்குமா?

இது எது பற்றியும் கவலைப்படாமல், "சித்தப்பன் குடும்பத்துக்கு நாம் எதுக்கு இம்புட்டுச் செலவழிக்கணும்?" என்று தென் கொரியாவுடனான உறவை முறித்துக்கொள்ளும் முடிவு ஒன்றைத் தானே எடுத்துவிடுகிறார். அதைத் தென் கொரிய அதிபருக்குக் கடிதமாக எழுதி, கையெழுத்துப் போட அண்ணாரின் மேசையில் வைக்கப்பட்டிருந்த தாள் ஒன்றை (ஒற்றைத் தாள்தான்), அவரின் உடன் இருக்கும் பொருளியல் ஆலோசகரே எடுத்து ஒளித்து வைக்கும் கதையோடு தொடங்குகிறது நூலின் முன்னுரை. கையெழுத்திடப்படாத இந்தக் கடிதத்தின் நகலும் நூலில் உள்ளது என்றால் நம்புவீர்களா? இது போலப் பல அதிர்ச்சிகள் நிறைந்ததுதான் இந்த நூல்.

உலகத்தின் தலைவிதியைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அதிகார பீடமான வெள்ளை மாளிகை, அதன் வரலாற்றிலேயே, இதற்கு முன்பு இப்படியான எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யப்படும் கொள்கை முடிவுகளையும் பார்த்ததில்லை, அவற்றையும் எடுத்து ஒளித்துவைத்து விளையாடும் வேடிக்கைகளையும் பார்த்ததில்லை. இது ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறும் வெள்ளை மாளிகை விளையாட்டாகிவிட்டது என்கிறது நூல்.

வெளியுறவு, தேசப் பாதுகாப்பு சார்ந்த எல்லாக் கொள்கைகளிலும் இதே போடுதான். "அவர்களுக்கு எதற்கு நம் பணத்தைக் கொண்டு போய்க் கொட்ட வேண்டும்?" என்ற 'நியாயமான' கேள்வியைக் கேட்டு அதைத் துண்டிப்பது ஒன்றே கொள்கையாகக் கொண்டவர். பெரும்பாலும் இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் அதிபராவதைப் பார்த்த நாடு, முதன்முறையாக ஒரு வியாபாரியை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறது. அதற்கான 'விலை'யைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்! இராணுவத்தில் மட்டுமே இருந்து பழகியவர்களிடம் வணிகம், பொருளியல், மக்கள் நலன் பற்றியெல்லாம் பேசிப் புரிய வைக்க முடியாது என்கிற தெளிவையும் ஓரிடத்தில் கொடுக்கும் நூல், வியாபாரம் மட்டுமே செய்துகொண்டிருந்த ஒருவரைக் கொண்டுவந்து இத்தகைய உயரிய பணியில் வைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் விரிவாகச் சொல்கிறது. 

"இது என் காசு... அது உன் காசு... என்ன கதை வேண்டுமானாலும் சொல், முடிந்தால் உன்னிடம் இருப்பதைப் பறிக்கப் பார்ப்பேனே ஒழிய, என் காசு பத்துப் பைசா கூட உனக்குக் கொடுக்க மாட்டேன்" - இதுதான் அவருடனான எல்லா உரையாடல்களிலும் மீண்டும் மீண்டும் வரும் முடிவு. இந்த அடிப்படையிலேயே இதுவரை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ள எல்லா ஒப்பந்தங்களிலிருந்தும் வெளியேற முயல்கிறார். இதில் பெரிதும் மண்டை காய்ந்து போபவர் அவருடைய பொருளியல் ஆலோசகரே. பொருளியலின் அடிப்படைகளைப் பல முறை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போலச் சொல்லிக் கொடுக்க முயன்றும் முடியாமல் வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் அவரே வெளியேறிவிடுகிறார். "பொருளியல் பற்றிய உங்கள் பார்வைகள் எல்லாமே ஒரு மாதிரியாகவே இருக்கின்றனவே. இவற்றைவிட்டு ஏன் வெளியே வர மறுக்கிறீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கூத்தாடும் போதும், மனிதன் இறங்கிவரவேயில்லை. "வர மாட்டேன். ஏனென்றால், இப்படித்தான் நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். அப்படியான என் நம்பிக்கைகளை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்" என்பதுதான் அவர் அடம் பிடித்துக்கொண்டு வைக்கும் ஆணித்தரமான வாதம். 

இந்த வாதம் தனிமனித நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் என்றால் அதில் எவருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், இது ஒரு நாட்டின் அல்லது உலகின் அல்லது இன்னும் சொல்லப் போனால் மனித குலத்தின் இருப்பு பற்றிய பிரச்சனை. அதில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ வித்தகர்களின்-வல்லுனர்களின் அறிவும் ஆற்றலும் படிப்பினைகளும் உட்சென்றிருக்கின்றன. இது பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாத ஒருவன் திடீரென்று உள்ளே நுழைந்து, "இவை எல்லாம் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் முழுதையும் மக்கள் என்னிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நான் இங்கில்லை" என்று சொல்லும் போது, அதை அருகிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கும், அவர்கள் மூலம் வெளியில் இருந்து தெரிந்துகொள்கிற நம் போன்றவர்களுக்கும், மக்களாட்சியின் எல்லைகள் பற்றிய கேள்விகள் வரத்தானே செய்யும்!

தலைவனுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை - எதையும் எவரும் விரிவாக அல்லது அறிவுபூர்வமாக விளக்கிப் பேசத் தொடங்கினாலே இவருக்குப் பொறுமை தொலையத் தொடங்கிவிடும். அது, பொருளியலோ உலக அரசியலோ தேசப் பாதுகாப்போ, எந்த மண்ணாங்கட்டியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். "வந்தியா... சுருக்கமாச் சொல்லிட்டுப் போயினே இரு... வழவழன்னு பேசுன... மருவாதி கெடையாது..." என்கிற கொள்கை கொண்டவர். இப்படியொரு காட்சி நூலில் விவரிக்கப்படுகிறது. அப்படியே கற்பனை செய்து பாருங்கள். ஒரு நாள், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் ஏதோ ஓர் ஆலோசனைக்காக இவருடைய அலுவலகத்துக்கு வருகிறார். அவரைக் கண்டதும், "என்னது, திரும்பவும் நீயா?" என்று பார்த்திபனைக் கண்டு வடிவேலு அலறுவது போல அலறுகிறார் இவர். அந்த அளவுக்கு!

2010-ஆம் ஆண்டில் ஒரு நாள், டிரம்புக்கு நெருக்கமான இருவர் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள். "ஏய், நம்ம டிரம்ப் அதிபர் தேர்தல்ல போட்டி போடப் போறாம்ப்பா!" என்கிறார் ஒருவர். "எந்த நாட்டுல?" என்கிறார் இன்னொருவர்.

இப்படியாகத் தொடங்குகிறது உலகத்தைப் புரட்டிப் போட்ட அந்தப் பயணமும் இந்த நூலின் முதல் அத்தியாயமும்.

முதலாமவர், ஆறு ஆண்டுகள் கழித்து அதே டிரம்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குத் துணை மேலாளராக இருந்த டேவிட் போசி. "போயா, யோவ். ஏதாவது நடக்கிற கதையைப் பேசுவியா?" என்பது போலத் தட்டி உதறிய இரண்டாமவர் யார் என்றால், தேர்தல் பணிகள்  மொத்தத்தையும் முதன்மை நிர்வாக அதிகாரியாக (Chief Executive Officer) இருந்து வெற்றி ஈட்டிக் கொடுத்த ஸ்டீவ் பேணன். இவர் வெற்றிக்குப் பின் ஏழு மாதங்கள் டிரம்பின் முக்கிய ஆலோசகராகவும் பணி புரிந்தார். பின்னர் தாக்குப் பிடிக்க முடியாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடியும் போனார்.

என்னதான் ஊழலாலும் தனிமனித ஒழுக்கக் கேடுகளாலும் சரிந்து வீழ்ந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தமிழ் நாட்டு அரசியலில் நுழைகிற எவருக்கும் அடிப்படைத் தகுதியாக ஓரளவு அறிவு என்று ஒன்று இருக்க வேண்டியதிருந்தது. ஒரு கட்டத்தில், அதுவும் கேலிக்கூத்தாகி எந்தக் கோமாளியும் அமைச்சராகலாம் - முதலமைச்சராகலாம் என்ற நிலையும் வந்தது. இதுதான் நம் மக்களாட்சியின் உண்மையான வெற்றி என்போரும் நமக்கு மத்தியிலேயே இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தக் கூத்துகளையெல்லாம் பார்த்துவிட்டு, இன்று இந்தியாவிலேயே முதலமைச்சர் ஆகும் ஆசை கொண்ட அதிகபட்ச மூடர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் ஆகியிருப்பது போல, யார் வேண்டுமானாலும் அதிபராக முடிகிற நாடுதான் அமெரிக்கா என்று அமெரிக்க அரசியலில் காலடி எடுத்துவைக்கும் எந்தக் கடைக்கோடித் தொண்டனுக்கும் நம்பிக்கை கொடுக்கும் அரும் பணியை இந்த நூல் செய்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இந்தத் தேர்தலிலேயே அது பற்றிப் பேசுகிறார்கள் - "முன்பெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கென்று ஒரு தகுதி-தராதரம் இருக்கும். இந்த முறை பார்த்தால், யார் யாரோ வந்து நானும் போட்டியிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு நிற்கிறார்கள்."

அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடன் பணி புரிவோரே அவரை "முட்டாள்" என்றும் "பைத்தியம்" என்றும் "ஐந்தாம்-ஆறாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாதவர்" என்றும் "பெரும் பொய்யன்" என்றும் சொல்கிறார்கள். இந்த நூல் வெளிவந்த பின்பு, அப்படியெல்லாம் சொன்னவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லோருமே இவற்றை மறுத்திருக்கிறார்கள். அந்த மறுப்புகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பது உங்கள் விருப்பம். டிரம்பும் தன் பங்குக்குத் தன் சட்டத்துறைத் தலைவரை "மனநிலை பிறழ்ந்தவன்" என்கிறார். நூல் வெளிவந்த பின்பு, இவரும், நான் அப்படிச் சொல்லவே இல்லை, யாரையும் நான் அப்படிப் பேசுவதே இல்லை" என்று மறுக்கத்தான் செய்திருக்கிறார். "ஆமாடா, சொன்னேன். அதுக்கு என்னங்கிற இப்போ?" என்கிற காலமும் அமெரிக்க வரலாற்றில் வரலாமோ என்னவோ, யார் கண்டது!

இதெல்லாம் கிடக்கட்டும். நூல் முழுக்கவும், படிக்கும் போது, 'இந்த மனிதனுக்குக் கெட்டவார்த்தை போடாமல் பத்து நிமிடம் கூடப் பேச முடியாதா?' என்கிற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. அப்பப்பா, எப்பேர்ப்பட்ட மக்களாட்சியாக இருக்க வேண்டும் இது!

ஆனால் இன்னொரு புறம், அதுதான் அவரை மக்களிடம் மிகவும் நெருக்கமாக்கியது என்கிறார்கள். 'பெரிய வெண்ணெய் போலப் பேசுபவர்களையே பார்த்துப் பழகிவிட்டோம். நம்மைப் போல இயல்பாகப் பேசுபவர் ஒருவர் - நம்மில் ஒருவர் வந்திருக்கிறார். இம்முறை நம் வாய்ப்பை அவருக்குக் கொடுப்போமே!' என்று இறங்கி அடித்ததில்தான் இங்கு வந்து நிற்கிறது.

'இப்படிச் செய்து பார்த்தால் என்ன! அப்படிச் செய்து பார்த்தால் என்ன!' என்று சோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் பண்பு, வித விதமான உணவுகள் செய்து போடும் ஒரு சமையற் கலைஞருக்கு அல்லது புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானிக்குச் சரியாக இருக்கலாம். அதுவே ஓர் அணு உலை இயக்குபவருக்கோ  விமான ஓட்டிக்கோ சரியாக இருக்குமா? இந்தப் பணிகளில் நிறுவப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதுதானே பாதுகாப்பு! ஒரு நாட்டின் தலைவன், அதுவும் உலக நாடுகளையெல்லாம் தன் தலைமையின் கீழ் வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு நாட்டின் தலைவன், எப்படி இருக்க வேண்டும்? சமையற் கலைஞர்-விஞ்ஞானி போலா? அணு உலை இயக்குபவர்-விமான ஓட்டி போலா?

"சரி, போய்ப் பேசித்தான் பார்ப்போமே!" என்று பேணனும் போசியுடன் சேர்ந்து டிரம்பைச் சந்திக்கப் போகிறார். அப்போது, போசி பல அறிவுரைகள் வழங்குகிறார். எந்த அரசியல் அறிவும் இல்லாத ஒருவர் இம்மாம் பெரிய ஆசைப் பட்டுவிட்ட பின்பு உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகள் என்ன - சரி செய்துகொள்ள வேண்டிய கோளாறுகள் எவை என்று விளக்குகிறார். இதோ அந்த உரையாடலிலிருந்து சில முத்துக்கள்...

"அரசியல் விவகாரங்களில் உங்களுக்குச் சில பிரச்சனைகள் இருக்கின்றன."

"எந்த விவகாரத்திலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்?"

"முதலில், குடியரசுக் கட்சியில் ப்ரோ-லைஃபுக்கு எதிரான எவரும் (அதாவது, கருக் கலைப்பை ஆதரிக்கும் எவரும்) இதுவரை முதல்நிலைத் தேர்தலில் வென்றதே இல்லை. நீங்களோ ப்ரோ-சாய்ஸ் (அதாவது, கருக் கலைப்பை ஆதரிப்பவர்)!"

"அப்டின்னா என்ன அர்த்தம்?"

"அப்டின்னா... கருக் கலைப்பை ஆதரிப்பவர்களுக்கு, ப்ரோ-சாய்ஸ் வேட்பாளர்களுக்கு, நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளீர்கள். நீங்கள் ப்ரோ-லைஃபாக - கருக் கலைப்பை எதிர்ப்பவராக இருக்க வேண்டும்."

"நான் கருக் கலைப்பை எதிர்க்கிறேன். நான் ப்ரோ-லைஃப்."

"ம்ம்ம், பழைய சான்றுகள் வேறு மாதிரியாக இருக்கின்றனவே."

"அதெல்லாம் சரி பண்ணிக்கலாம். எப்படிச் சரி பண்ணனும்னு மட்டும் நீங்கள் சொல்லுங்கள். நான் - அதுக்கு என்ன பெயர் சொல்கிறீர்கள்? ப்ரோ-லைஃப். அதான் நான். ப்ரோ-லைஃப். நான்தான் சொல்றனே."

"அடுத்த பெரிய விஷயம், உங்கள் வாக்களிப்பு வரலாறு."

"என் வாக்களிப்பு வரலாறா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

"எவ்வளவு அடிக்கடி நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்பது பற்றி..."

"எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?"

"ம்ம்ம், குடியரசுக் கட்சியின் முதல்நிலைத் தேர்தல் பற்றி..."

மிகவும் நம்பிக்கையோடு, "ஒவ்வொரு முறையும் நான் வாக்களிப்பேன். 18-20 வயதிலிருந்து ஒவ்வொரு முறையும் வாக்களித்திருக்கிறேன்."

"அது சரியல்ல. நீங்கள் வாக்களித்திருக்கும் விவரங்கள் அடங்கிய வெளிப்படையான பதிவேடு உள்ளது." கத்தையாகக் கையில் பதிவேடுகளை வைத்துக்கொண்டிருந்தார் சட்டமன்றப் புலனாய்வாளர் போசி.

"நான் எப்படி வாக்களிப்பேன் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது."

"இல்லை, இல்லை, இல்லை, எப்படி வாக்களிப்பீர்கள் என்று சொல்லவில்லை. எவ்வளவு அடிக்கடி வாக்களிக்கிறீர்கள் என்பது பற்றிச் சொல்கிறேன்."

அரசியல் தொழிலின் அடிப்படைகள் கூடத் தெரியாத பேர்வழி என்பது பேணனுக்குப் புரிந்துவிடுகிறது.

"ஒவ்வொரு முறையும் வாக்களித்திருக்கிறேன்," அழுத்தமாகச் சொல்கிறார் டிரம்ப்.

"உங்கள் வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தவிர முதல்நிலைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்ததே இல்லை," பதிவேட்டைக் காட்டிச் சொல்கிறார் போசி.

"ங்கோ... அது பொய். சுத்தப் பொய். வாக்களிக்க நேர்ந்த ஒவ்வொரு முறையும் வாக்களித்திருக்கிறேன்."

"நீங்கள் ஒரே ஒரு முதல்நிலைத் தேர்தலில் மட்டுமே வாக்களித்திருக்கிறீர்கள். 1988-இலோ என்னவோ நடந்த குடியரசு முதல்நிலைத் தேர்தலில்..."

ஒரு துளி சலனம் கூட இல்லாமல், அப்படியே 180 டிகிரி திரும்பி, "நீங்கள் சொல்வது சரிதான். ரூடிக்காக வாக்களித்தேன். 1989-இல் நடந்த முதல்நிலைத் தேர்தலில் கியூலியாணி மேயருக்குப் போட்டியிட்டார். அதுவும் இதில் இருக்கிறதா?"

"ஆமாம்."

"அதெல்லாம் சமாளிச்சிருவேன்."

"இன்னொரு பெரிய பிரச்சனை இருக்கிறது."

"என்னது அது?"

"ம்ம்ம், நீங்கள் இதுவரை கொடுத்துள்ள நன்கொடையில் 80% மக்களாட்சிக் கட்சிக்குக் கொடுத்ததாக இருக்கிறது." போசியைப் பொருத்தமட்டில் இதுதான் டிரம்ப் சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை.

"அதெல்லாம் புல்ஷிட்."

"வெளியிடப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன."

"என்னது, இதற்கும் ஆவணங்கள் இருக்கின்றனவா!" - டிரம்ப் ஆடிப் போய்விடுகிறார்.

"நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கொடுத்துள்ள ஒவ்வொரு நன்கொடைக்கும்..." அரசியல் நன்கொடைகள் அனைத்தும் வெளியில் அறிவிக்கப்பட வேண்டியது நடைமுறையில் உள்ள நியமம்.

"நான் எப்போதுமே சரியாகப் பிரித்தே கொடுத்திருக்கிறேன்."

"ஓரளவுக்கு நன்றாகவே கொடுக்கிறீர்கள். ஆனால் 80% மக்களாட்சிக் கட்சி நன்கொடை. சிகாகோ, அட்லாண்டிக் சிட்டி..."

"அதெல்லாம் நான் பண்ணிதான் ஆக வேண்டும். எல்லா நகரங்களையும் இந்த மக்களாட்சிக் கட்சிப் பயலுகதான் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் நான் ஓட்டல் கட்ட வேண்டும். இவர்களைத் தடவிக் கொடுத்துத்தான் போக வேண்டும். இவர்களெல்லாம் என்னிடம் வந்தவர்கள்."

இது போன்று, முட்டாள்களே நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் கூட எளிதில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஓரங்கட்டப்பட வாய்ப்பிருக்கிற மாதிரியான எத்தனையோ பழைய சிக்கல்களைக் கொண்ட ஒரு மனிதன் எப்படி இறுதியில் வெற்றி வாகை சூடினான் என்று விரிகிறது நூலின் முதல் பகுதி.

நம்மூரில் போலல்லாமல், அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். இது யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் முடிவு செய்வதைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அரசியலையே சுவாசித்து வளர்ந்த ஹிலாரி கிளிண்டனோடு விவாதித்து வெற்றி பெரும் அளவுக்குத் தலைவனிடம் சரக்கு இல்லை என்பது மட்டுமில்லை பயம். இந்த விவாதத்தில் இவர் போய்ச் சொதப்புகிற சொதப்பலில் உள்ளதும் அத்துக்கொண்டு போய்விடுமோ என்று பயந்து நடுங்கித் தயார் செய்கிறார்கள் மனிதரை. ஆனால் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே முடிந்துவிடுகிறது. இந்த நேரத்தில்தான் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியது (தான் எப்படி எந்தப் பெண்ணிடமும் எதுவும் செய்துகொள்ள முடிகிற 'ஆண்மகன்' என்று உளறிக்கொட்டிய பேச்சு) வெளிவந்து இவரின் அணியினருக்குத் தூக்கத்தைக் கெடுக்கிறது. நன்கொடை கொடுத்தவர்கள் எல்லோரும் ஒவ்வொன்றாக விலகத் தொடங்குகிறார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை பார்த்திராத மாதிரியான தோல்வியை டிரம்ப் காட்டப் போகிறார் அல்லது அவர் தேர்தலைவிட்டே விலகுகிறார் என்கிற நிலையில் வந்து நிற்கிறது சிக்கல். டிரம்பைக் கழற்றிவிட்டுவிட்டு குடியரசுக் கட்சியின் அடுத்த இடத்தில் இருந்த வேட்பாளரை இறக்கிவிடலாமா என்று சிந்திக்கும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகிறது.

அதை அப்படியே மிக எளிதாக ஹிலாரிக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார்கள். "நான் பேசத்தான் செய்தேன். இவருடைய கணவரோ எத்தனையோ பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவே செய்தவர். அந்தப் பெண்களையெல்லாம் வாயடைக்க முயன்றவர் - மிரட்டிப் பணிய வைத்தவர் இவர். பெண்ணே பெண்ணுக்கு எதிராகச் செயல்பட்ட கொடுமையைக் கேளீரோ!" என்று அடித்தது பெண்களையே ஹிலாரிக்கு எதிராகத் திருப்பியது. பில் கிளிண்டனின் தவறுகளுக்கு ஹிலாரியை அடித்த அதே வேகத்தில், டிரம்பின் சேட்டைகளுக்கு மக்களிடம் மன்னிப்புப் பெற அவரின் மனைவியைப் பயன்படுத்துகிறார்கள். பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று நான்கு பேரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அப்படியே பெண்களின் வாக்குகள் ஹிலாரிக்கு எதிராகத் திரும்புகிறது. இது நாம் தமிழ் நாட்டில் பார்த்ததுதான். ஒருவர் பெண்களின் மனதை வென்றுவிட்டால் அதன்பின் அவரின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது. அப்படியான வேலையைச் சரியாகச் செய்ய முடிந்ததும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணிகள். இந்தத் தேர்தலில் இவருடைய ஆலோசகர்கள் அதை மிக அருமையாக முன்னகர்த்துகிறார்கள். "இந்தத் தேர்தல் உன்னைப் பற்றியதாகவே இருக்கக் கூடாது. ஹிலாரியைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். அவர் ஏன் இதற்குச் சரிப்பட்டு வர மாட்டார் என்று மட்டுமே பேச வேண்டும். நீ ஏன் இதற்குப் பொருத்தமான ஆள் என்று நம்மால் ஒரு போதும் நிரூபிக்கவே முடியாது" என்று திட்டமிட்டே இறங்கி அடிக்கிறார்கள்.

"தேர்தலுக்கு முன் கண்டதெல்லாம் காமெடியே இல்லை. இப்பப் பாரு வேடிக்கையை..." என்று கலங்கடிக்கின்றன அதன் பிறகு வரும் கதைகள்.

"சரி, வெற்றி பெற்றுவிட்டீர்கள். நீங்கள்தான் அடுத்த அதிபர். உங்கள் அணியைத் தேர்வு செய்யுங்கள்" என்றால், ஒரு பட்டியல் வருகிறது. அதில் பாதுகாப்புத் துறை போன்ற ஒரு மிக முக்கியமான துறையின் பொறுப்பு யாருக்கு என்று பார்த்தால் எவருக்குமே தெரியாத எவரோ ஒருவருடைய பெயர். அவர் யார் என்று கேட்டால், அவர்தான் அண்ணாச்சிக்குத் தேர்தல் நன்கொடை அதிகம் கொடுத்தவராம். மண்டை காய்ந்துவிடுகிறார்கள்.

இதெற்கெல்லாம் நடுவில் அமெரிக்கத் தேர்தல் முறைமையின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டும் என்ற திட்டத்தோடு ரஷ்யா இந்தத் தேர்தலில் பல உள்ளடி வேலைகள் செய்தது என்கிற குற்றச்சாட்டு வேறு. அது பெரிதாக உருவெடுக்கிறது. ரஷ்யாவோடு இவர் வைத்திருக்கும் நல்லுறவும் மக்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. அது போலவே சீனாவையும் வில்லனாகவே பார்த்துவிட்ட அமெரிக்கர்களுக்கு இவர் அவர்களோடு நல்லுறவு பேணுவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. "எனக்குச் சீன அதிபரைப் பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கிறது" என்று சிறுபிள்ளை போலப் பேசுவதை, சீன அதிபர் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று அமெரிக்காவில் எண்ணுகிறார்கள்.

நம் போன்றவர்களுக்கு நினைத்துப் பார்க்கவும் மனம் கூசுகிற மாதிரியான இன்னொரு சம்பவம் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. ஒபாமா பெயரைக் கேட்டாலே மனிதனுக்கு மண்டை முட்டிக்கொண்டு வருமாம். அதனால் ஒபாமாவின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் குறிவைத்து முடக்குவதிலேயே ஏகப்பட்ட நேரத்தை விரயம் செய்திருக்கிறார். இதைத் தமிழ் நாட்டில் ஒருவர் செய்தார். வாக்குக்கு நூற்றி ஐம்பது ரூபாய் என்று கணக்குப் போட்டு வாங்கிக்கொண்டு வாக்களிக்கிற நமக்கு இது சாதாரணமான விஷயம்தான். அதைப் பெருமையாகப் பேசிக்கொள்கிற கூட்டம் கூட நம்மில் இருக்கிறது. ஆனால் அதை ஓர் அமெரிக்க அதிபர் செய்வது அவர்களைப் பொருத்தமட்டில் பேரவமானம். இதுவே பேரவமானம் என்றால், இப்போது நீங்கள் படிக்கப் போவதை என்னவென்று சொல்வது! இவர் அதிபர் ஆகும் முன்பே நடந்த சம்பவம் இது. ஏதோ ஓர் அழகிப் போட்டியைப் பார்ப்பதற்காக ரஷ்யா போகிறார் டிரம்ப். அப்போது, ரஷ்யாவில் ஒபாமா தன் அரசுமுறைப் பயணத்தின் போது அதற்கு முன்பு தங்கியிருந்த ஓட்டலில், அதே அறையை வாடகைக்கு எடுத்து, தன்னோடு இரண்டு விபச்சாரிகளையும் அழைத்துக்கொண்டு போய், ஒபாமா குடும்பத்தோடு தங்கியிருந்த அந்தப் படுக்கையில் அவ்விரு விபச்சாரிகளையும் சிறுநீர் கழிக்கவைத்து வேடிக்கை பார்த்து, மகிழ்ந்து குதூகலிக்கிறார். அந்த அளவுக்கு இவருக்கு ஒபாமாவைப் பிடிக்காதாம். இத்தோடு சேர்த்து டிரம்புக்கு ரஷ்யாவுடன் இருக்கும் உறவு பற்றியும் ஏகப்பட்ட கேள்விகள் வைக்கப்படுகின்றன. அதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்தக் கோமாளித்தனம் அனைத்தையும் ரஷ்யப் பாதுகாப்புத் துறை படம் பிடித்து வைத்திருக்கிறது. அவை ரஷ்ய அதிபர் புடினின் கைகளிலேயே இருக்கலாம், அதை வைத்துக்கொண்டு அவர் இந்த மாமனிதனை ஆட்டிப் படைக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

மற்ற எல்லா நாடுகளை விடவும் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலி வட கொரியாதான். ஊரில் ஒரு பலமான ரவுடி இருப்பான். அவனுக்குப் போட்டியாகச் சில பலமான ரவுடிகள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் பலமும் முதலாமவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனாலும் அவன் சுள்ளான் மாதிரி இருக்கும் வேறொரு புது ரவுடிக்கு அதிகம் பயப்படுவான். ஒரே காரணம், அவனிடம் என்னதான் இருக்கிறது என்று யாருக்குமே தெரியாமல் இருக்கும். அவனும் தன்னிடம் அது இருக்கிறது இது இருக்கிறது என்று பயமுறுத்துகிற மாதிரி ஏதேனும் தகவல்களைக் கசியவிட்டுக்கொண்டே இருப்பான். ஆனால் உண்மையிலேயே அவனிடம் அதெல்லாம் இருக்கிறதா இல்லையா என்று மட்டும் உறுதி செய்யவே முடியாது. அப்படியான சுள்ளானாக இருக்கிறது வட கொரியா. இந்த நூலைப் படிக்கும் போது, அமெரிக்கா ஏன் மற்ற நாடுகளும் மக்களாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது என்ற கேள்விக்கு நமக்குப் புதியதொரு ஞானோதயம் பிறக்கிறது. தன் போலவே மக்களாட்சி நடக்கிற ஒரு நாடு ஒரு காலத்திலும் தனக்கு அச்சுறுத்தல் இல்லை. ஏனென்றால், எவ்வளவுதான் ஒளித்துவைக்கப்பட்ட இரகசியங்கள் என்று இருந்தாலும் ஒரு மக்களாட்சியில் அதையெல்லாம் மீறி எவ்வளவோ முக்கியத் தகவல்கள் பொதுவெளிக்கு வந்துவிடுவதைத் தடுக்க முடிவதில்லை. இந்த நூலே அதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் ஒரு சர்வாதிகார ஆட்சியில் அது வெளியே தெரியாமலே பார்த்துக்கொள்கிறார்கள். அதனால் அப்படியான ஆட்சிகள் ஒரு போதும் எவராலும் நெருங்க முடியாதவையாகவே இருக்கின்றன. எனவே இந்த மக்களாட்சிக் காவலன் நாடகமே அச்சத்தின் அடிப்படையிலானதோ என்றும் தோன்றுகிறது.

போகிற போக்கில், அமெரிக்கா எப்படியெல்லாம் வட கொரிய அதிபரையும் சிரிய அதிபரையும் போட்டுத்தள்ளத் திட்டமிட்டது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் கிம் ஜோங் உன் படித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவர் எப்படி இங்கே உள்ளவர்களைப் போட்டுத்தள்ளத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார் என்பது இங்கே யாருக்குமே தெரியாது. அதுதான் நாம் மேலே சொன்னது.

கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் எங்கும் அதிகமாகிவிட்டது உண்மைதான். உலகெங்கும் உள்ள தலைவர்களும் அறிஞர்களும் கலைஞர்களும் அவற்றைப் பெரிதளவில் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில், இப்படியானவர்கள் எல்லோரும் உலகத்தைவிட்டு மிகவும் விலகி இருப்பவர்கள் என்ற கருத்து இருந்தது. எளிய மக்களோடு எந்தப் புழக்கமும் இல்லாமல் இவர்கள் எப்படி அவர்களுக்கு எது வேண்டும் என்று சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற நியாயமான கேள்விக்குச் சரியான பதில் இருக்கவில்லை. ஆனால் சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகப் பழக முடியாதவர்கள் கூட அவர்களோடு தொடர்ந்து நிகழ்த்தும் இணைய உரையாடல்கள் மூலமாகத் தங்களை மக்களுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்ள முடிகிறது. அப்படி சமூக ஊடகங்களைத் தன் வெற்றிக்கும் புகழுக்கும் பெரிதும் பயன்படுத்தியவர்களில் முக்கியமான ஆள் இவர். ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லை என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும். ஓர் அரசின் கொள்கை முடிவுகளையோ தேசப் பாதுகாப்பு பற்றிய உரையாடல்களையோ அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்பு பொதுவெளியில் போட்டு உடைப்பது எப்படிச் சரியாகும்? அதை இந்த மனிதர் திரும்பத் திரும்பச் செய்கிறார். இந்த விளையாட்டின் உச்சகட்டக் கூத்துதான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடன் அணுகுண்டுகள் பற்றிச் சண்டை போட்டு வேடிக்கை காட்டியது. அவர், "என் மேசையில்தான் அணுகுண்டுகளை ஏவும் பொத்தான் இருக்கிறது" என்பதும், இவர், "என் மேசையிலும் அந்தப் பொத்தான் இருக்கிறது. என் அணுகுண்டுகள் உன்னுடையவற்றைவிடப் பெரியவை - ஆற்றல் மிக்கவை" என்பதும், அவர், "பயந்து போன நாய் மாதிரிக் குரைக்காதே" என்பதுமாக உலக அரசியல் நாகரிகத்தின் அதலபாதாளத்தை உலகம் பார்த்தது. இதற்கு அமெரிக்க மக்களே உள்ளே வந்து, "யாருப்பா இந்தக் குழந்தை? அது கையில் இருக்கும் பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு அதைத் தூங்க வையுங்கள்" என்று பதில் அடித்ததும் சாதாரணப்பட்ட அவமானம் இல்லை.

இதே போல, ஒபாமா திருநங்கையர் இராணுவத்தில் பணிபுரியும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுப் போனார் என்பதால், அதைத் தூக்கிவீச வேண்டும் என்று யாரிடமும் சொல்லாமல் இவரே ட்விட்டரில் தன் புதிய கொள்கையை அறிவித்துவிடுகிறார். பாதுகாப்புத் துறை கொதித்துப் போய்விடுகிறது. கேட்டால், மீண்டும் அதே கதை. "அரசு செலவில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காகவே அவர்கள் இராணுவத்தில் வந்து சேர்கிறார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்கிறார். "எல்லாம் சரிண்ணே. அதைப் போய் ட்விட்டரில் போட்டா எப்படி?" என்று சொல்லிச் சரிக்கட்டி வழிக்குக் கொண்டுவருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் ஒரு நாயைப் போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு கண்ணில் தட்டுப்படுகிறவர்களையெல்லாம் குரைப்பதும் விரட்டுவதுமாக ஒரு பெருங்கூட்டம் உருவாகி வருகிறது. அப்படியானவர்களுக்கு உலகின் உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒருவர் தம்மைப் போலவே இருப்பது கண்டு பெருமையாகத்தான் இருக்கும். கண்டு மகிழ்ச்சி அடைந்து குதிக்கத்தான் செய்வார்கள். ஆனால் காலங்காலமாக அந்தப் பொறுப்பைப் பெருமரியாதையோடு கண்டு வணங்கியவர்கள் எப்படிப் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருப்பார்கள்!

"அச்சம்தான் உச்சபட்ச அதிகாரம்" என்று அவர் வாயாலேயே அருளியதை வைத்துத்தான் இந்த நூலின் தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பிறரையும் பிற நாடுகளையும் மிரட்டுவதும் உருட்டுவதும் அந்த அச்சத்திலேயே தன்னை முன்னகர்த்திக்கொள்வதுமாக இவருடைய அரசியல் ஓடுகிறது. இவருக்கு ஒரு பேரச்சம் இருக்கிறது. அது என்னவென்றால், பத்திரிகையாளர்களைச் சந்திப்பது. அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனிதர் காற்சட்டையில் உச்சாப் போகாதது மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை. தன்னை மறந்து கத்துவதும் உளறுவதும் பிதற்றுவதும் வாடிக்கையாகிப் போய்விட்டது. அவர்களும் இதைப் புரிந்துகொண்டு ஆட்டம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

எவர் பேசுவதும் புரிந்து தொலைக்க மறுக்கிறது. அதனால் அவர்கள் எல்லோரையும் முட்டாள், மூடன் என்று திட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது. சுய புத்தியும் இன்றி சொல் புத்தியும் இல்லாத ஒருவரிடம் மாட்டிக்கொண்டு காலத்தைத் தள்ள முடியாமல் தப்பி ஓடுகிறார்கள் துறை வல்லுநர்கள். அவ்விடங்களைத் தனக்கு வேண்டியது போல ஆடி அலங்கரிக்கும் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறான் தலைவன். தன் தகுதிக்கு மீறியவற்றைத் தனக்குத் தந்து அலங்கரிக்கும் தலைவனுக்கு விசுவாசத்தோடு இருக்கும் பொருட்டு, அவர்களும் அவனுடைய காமெடிகளுக்கெல்லாம் ஒத்து ஊதுகிறார்கள். இப்படியாக நகைச்சுவைப் படம் ஓட்டிக்கொண்டிருக்கிறது உலகின் அதி பயங்கர அதிகார மையம்.

இடையிடையில் தலைவனின் நிறைகளையும் கோடிட்டுக் காட்டும் படி சில நிகழ்வுகள் வருகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்ற வேண்டுமென்பதில் மீண்டும் மீண்டும் தீவிரம் காட்டுகிறார். நம் பிள்ளைகளை எதற்கு அங்கே பலி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அது நாட்டின் - உலகின் நலனுக்கு நல்லதில்லை என்று பாதுகாப்புத் துறையினர் கருதுகின்றனர். ஆனாலும் இந்த விஷயத்தில் இவரின் பிடிவாதம் பலருக்கு வியப்பைத் தருகிறது. அது அவரைப் பற்றிய பிம்பத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அதுதானே அவர்! ஆனால் அங்கிருந்து அவர்களின் வளங்களை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்கிற பேராசை ஒன்றையும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதுவும் அவர்தானே!

ஒரு தலைவன் எல்லாத் துறைகளிலும் வித்தகனாக இருக்க வேண்டும் என்பதில்லை எதிர்பார்ப்பு. ஒவ்வொரு துறைக்கும் எவரைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க முடிகிற - அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கேனும் அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். அது கூட இல்லாத ஒருவர்தான், "என் கையில்தான் எங்கள் நாட்டின் மொத்த அணுகுண்டுகளின் பொத்தான் இருக்கிறது. ஒரு நொடிதான். லைட்டா ஒரு அமுக்கு அமுக்குனேன், நீங்கள்லாம் அம்புட்டுத்தான். அம்பேல்!" என்று பள்ளிச் சிறுவன் போல உதார் விட்டுக்கொண்டு, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே இப்போதைய தலைவனாக இருக்கிறார் என்கிற இந்த நிலையை எவ்வளவு தீவிரமாக அல்லது எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

* 2019 ஆகஸ்ட் கணையாழி இதழில் வெளிவந்தது.

தின் தியானி காதலி (Eat Pray Love)

மணவாழ்க்கை முறிவுக்குப் பின் அதன் கொடிய நினைவுகளிலிருந்து விடுபடுவதற்காக உலகம் சுற்றப் புறப்பட்ட ஒரு பெண்ணின் சொந்தக் கதைதான் 'Eat Pray...