புதன், நவம்பர் 19, 2014

நல்லோர் ஒருவர் உளரேல்...

ஏமாந்து
அடிபட்டு
மிதிபட்டு
அவமானப் பட்டு
இதற்கு மேலும்
நல்லவனாயிருப்பது நல்லதற்கல்ல என்று
தன்பரிதாபத்தில்
தடம் தப்பப் போகையிலெல்லாம்

உன்னைப் போல்
ஒருத்தனோ ஒருத்தியோ
வந்து விடுகிறீர்கள்

இந்த உலகத்தில்
இன்னும் நல்லோர் பலர் உளர் என்றும்

சிறுமைகளின் போதெல்லாம்
நான் நினைத்து நினைத்துப்
பெருமைப் பட்டுக் கொள்ளுமளவுக்கு
நானொன்றும்
உங்களைக் காட்டிலும்
நல்லவனில்லை என்றும்

உங்களுக்காகவாவது
இப்படியேவாவது
நான் இருந்து தொலைந்து விட வேண்டுமென்றும்
நினைவுபடுத்திக் கெடுத்து விடுகிறீர்கள்!

வெள்ளி, ஜூன் 27, 2014

ஏற்றத்தாழ்வுகள்தாம் எத்தனை வகை?!

இடம்: இலண்டனில் ஓர் ஓட்டல்

இன்று காலை உணவுக்குச் செல்லும் போது என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் ஒரு மிக அழகான ஐரோப்பிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளோடு வந்து ஓர் அழகான இளைஞன் இணைந்தான். நம் பிராமண முகத்துக்கும் மத்தியக் கிழக்கு முகத்துக்கும் ஐரோப்பிய முகத்துக்கும் இடைப்பட்ட ஒரு முகம் கொண்டிருந்தான். பேரழகன் என்று சொல்ல முடியாது (பெரும்பாலான ஆண்களுக்குத்தான் இன்னோர் ஆண் மகனை அழகனென்று ஏற்றுக் கொள்ள முடியாதே!). ஆனால் பெண்களைக் கவர்வதற்கே உரிய செயற்கையான இயற்கைச் சிரிப்பு, சினுங்கல் என்று எல்லாம் கொண்டிருந்தான். மத்தியக் கிழக்கு என்று நினைக்கக் காரணம், அவன் வைத்திருந்த குறுந்தாடி. ஐரோப்பியனாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது, இதற்கு முன்பு அலுவலகத்தில் நான் சந்தித்த கிரீஸ் நாட்டு சகா போன்ற ஒரு சாயல் கொண்டிருந்தான் என்பதால். கண்டிப்பாக ஆங்கிலேயன் அல்ல. அந்தப் பெண்ணும் ஆங்கிலேயையாக இருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணையாக இருக்கலாம் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.

நான் பொறாமைப் பட்டேன் என்று சொல்லும் தைரியமோ நேர்மையோ வயதோ என்னிடம் இல்லை என்பதால், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன். நம்ம ஊரில் போல் உற்றுப் பார்த்தல், ஊடுருவிப் பார்த்தல் எல்லாம் இல்லை என்றாலும், அந்த இடத்தைக் கடந்து செல்லும் எல்லோரும் கவன ஈர்ப்புக்கு உள்ளாகி மீண்டதை நன்றாக உணர முடிந்தது. இந்தக் கதை இத்தோடு முடிந்தது.

நான் தங்கியிருந்த இடத்தில், மாலை நேரம் இது போன்று ஏக்கம் கொண்டவர்கள் எல்லோரும் சந்திப்பதற்காக ஓர் அழகான ஏற்பாடு செய்திருந்தார்கள். 'மேலாளர் சந்திப்பு' (MANAGERS MEETING) என்று பெயர். நிறுவனங்களில் மேலாளராக இருப்போர் சந்தித்து அலுவல் சார்ந்த உறவுகளை நிறுவிக் கொள்ளவும் வலுப்படுத்திக் கொள்ளவும் வசதியாக ஓசியில் குளிர்பானங்களும் சிற்றுணவுகளும் வழங்கி ஊக்குவிக்கும் வசதி. பெயருக்குத்தான் அது மேலாளர் சந்திப்பு என்றாலும், அங்கே வருகிற பெரும்பாலானோர்  பெண்களைக் கவர வரும் ஆண்களும் ஆண்களைக் கவர வரும் பெண்களுமே. நானும் மாலையில் வந்து உட்கார்ந்தேன். அருகில் இருந்த இருக்கையில் இன்னோர் அழகான ஐரோப்பியப் பெண் அமர்ந்திருந்தாள். கடை ஏழு மணிக்கு ஆரம்பம் என்றால், அவள் ஆறரைக்கே முதல் ஆளாக வந்து அமர்ந்திருந்தாள். நான் முதல் ஆளாகப் போய் மூஞ்சியைக் காட்டினால் கேவலமாகப் பார்த்து விடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு போனால், அவள் அமர்ந்திருந்தது கொஞ்சம் நிம்மதி அளித்தது.

ஏழு மணியானது. காலையில் பார்த்த அதே இளைஞன் இப்போது தனியாக வந்தான். காலையில் அவனோடு பார்த்த அந்தப் பெண் காலி செய்து போய் விட்டாளா அல்லது அலுவலகத்தில் மாட்டிக் கொண்டு விட்டாளா என்று தேவையில்லாத கவலை நமக்கு. அவன் வருகிற நேரம் இந்த அழகி அவளுக்கு வேண்டிய குளிர்பானம் எடுத்து வரப் போயிருந்தாள். அதற்கடுத்த இருக்கையில் தன் இரு மகன்களோடு இருந்த மத்திய வயது கொண்ட மத்தியக் கிழக்கு முகத்தவரோடு முன்பே அறிமுகம் ஆனவன் போல ஏதோ பேசினான். அந்த நிமிடத்தில் இவன் அந்தப் பகுதிக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு ஞானோதயம் வந்தது.

இவன் பேச்சை முடித்துக் கொண்டு குளிர்பானம் நோக்கித் திரும்பும் நேரத்தில் அழகி தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தாள் (நம்ம கவிஞர்களை விட்டிருந்தால் "தேர் நிலைக்கு வந்தது!" என்று அவிழ்த்து விட்டிருப்பார்கள் அவர்களின் கவித்தேரை!). புன்னகை மாறாமல் அவளையும் அவள் வந்து அமர்ந்த இடத்தையும் அழகாகத் திரும்பிப் பார்த்து விட்டு, இவன் போய் அவனுக்குப் பிடித்த குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு வந்து, அழகிக்கு அடுத்த மேசையில் அவளுடைய இருக்கைக்கு அருகில் வருகிற மாதிரியான இருக்கையில் மிக அழகாக - இயல்பாக வந்து அமர்ந்தான்... இல்லையில்லை அமர வந்தான் என்று சொல்லிக் கொள்ளலாம்... அமர்வது போல வந்து நிறுத்தி, அவளிடம் ஏதோ பேச்சைப் போட்டான். அவர்களுக்குள் பற்றிய பொறியில் கூடத்தில் இருந்த மொத்தக் கூட்டத்துக்கும் வயிறு பற்றி எரிய ஆரம்பித்திருக்க வேண்டும். விடாமல் தொடர்ந்தான். வெள்ளைக்காரர்கள் முதற்கொண்டு சுற்றி அமர்ந்திருந்த எல்லோருமே அவ்வப்போது அவன் பக்கம் பார்வையை வீசினார்கள். சராசரி மனிதப் பொறாமைதான். மனிதனின் ஆதி உணர்வுகள் அனைத்தும் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரித்தான் இருக்குமோ?!

ஏதேதோ பேசினான். மிக அருமையாகக் கோர்த்து உரையாடலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழகாக நகர்த்தினான். எப்போது வந்தாய், எவ்வளவு நாட்கள் இருப்பாய் என்று ஆரம்பித்து, அவள் இவனிடம் "உன்னுடைய வயது என்ன?" என்று கேட்கிற நிலைக்குக் வந்தது. "29" என்று சொல்லி விட்டு, "நானும் கேட்கலாமா?" என்றான். "25" என்றாள். எங்கே வேலை பார்க்கிறாய், என்ன பிடிக்கும், ஏது பிடிக்கும், இலண்டனில் எங்கெங்கே போயிருக்கிறாய் என்று நீண்டது பேச்சு. இதையெல்லாம் ஒட்டுக் கேட்பது இங்கே மிகப் பெரிய அநாகரிகமாக இருக்கக் கூடும். அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் அவர்களே பேசும்போது நான் ஏன் இவ்வளவு பட வேண்டும்? என்னை விட ஆர்வமாக எனக்கு அருகில் இருந்த வெள்ளைக்காரன் ஒருவனே இதையெல்லாம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதால் அதைப் பற்றியெல்லாம் நானும் பெரிதாகக் கவலைப் படவில்லை.

இதற்கிடையில் அவன் முதலில் நட்புறவோடு பேசிய - தன் இரு மகன்களோடு அமர்ந்திருந்த மத்திய வயதுக்கார மத்தியக்கிழக்கு முகத்துக்காரர் எழுந்து கிளம்பினார். போகும்போது அவனிடம் "பார்க்கலாம்" என்று (ஆங்கிலத்தில்தான்) சொல்லிக் கிளம்பினார். நன்றாகக் கவனியுங்கள். இதற்கு முன்பு அவன் இவரோடு பேசுகையில் அந்தப் பெண் அந்த இடத்தில் இல்லை. இப்போது அவளோடு பேசுவதில் குறியாக இருப்பதால், அவர் "பார்க்கலாம்" என்று சொன்னதைக் கண்டு கொள்ளாமல் இருந்தான். அது மட்டுமில்லாமல், அவர் அவனைக் கடந்ததும் 'யாருடா இவன்? என்னைப் பார்த்துப் பார்க்கலாம் என்கிறான்?' என்கிற மாதிரிப் பார்த்தான். இந்த நிமிடம் உறுதியாகி விட்டது - இவன் கண்டிப்பாக ஐரோப்பியன் இல்லை. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் ஓடிய இந்தப் பேச்சின் முடிவாக, சிரித்த முகத்தோடு ஏதோ சொல்லி விட்டு அவன் எழுந்து சென்றான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அலுவல் உடையில் இருந்து அன்றாட உடைக்கு மாறி வந்து நின்றான். அவளும் மேசையைக் காலி செய்து தயாராக இருந்தாள். என் கண்ணால் முன்னால் அறிமுகம் ஆன இருவர், அவர்களுடைய உறவின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றார்கள். நான் எழுந்து அறை வந்து சேர்ந்தேன். அதே நிமிடத்தில் இந்த உலகில் அது போன்று  எத்தனை புதிய உறவுகள் பிறந்தனவோ, அன்றைய நாளிலேயே உருவான இது போன்ற எத்தனை உறவுகள் பிரிந்தனவோ. ஆனால், இந்த அனுபவம் இதற்கு முன்பு பலமுறை வந்து சென்ற பல கேள்விகளை மீண்டும் கொண்டு வந்து நிறுத்தியது.

இந்த உலகம் குற்றமற்ற ஒன்றாக மாற வேண்டும் என்றால், அதற்கு என்னவெல்லாம் வேண்டும்? எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் என்றால்? ஏழை, கோழை, முட்டாள், அசிங்கன் (அல்லது குறைந்த பட்சம் அழகாகப் பேசத் தெரியாதவன்!)... எல்லோரும்! எல்லாம் என்றால்? பணம், தைரியம், அறிவு, அழகு (அல்லது வசியப்படுத்தும் வகையில் பேசும் ஆற்றல்)... எல்லாம்! கார்ல் மார்க்ஸ் கண்ட பொதுவுடைமை, பொருளை மட்டுந்தான் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கச் சொல்கிறது. கோழையாகவோ முட்டாளாகவோ அசிங்கனாகவோ பிறந்தவர்கள் எல்லோர்க்கும் அவர்கள் ஆசைப்படுவதெல்லாம் எளிதில் கிடைக்க விரிவாக விவாதிக்கிற சித்தாந்தம் ஏதாவது இருக்கிறதா?

எல்லார்க்கும் எல்லாம் கிடைத்து விட்டால், குற்றங்கள் குறைந்து விடுமா? விடும். நின்று விடுமா? விடாது. பேராசைக்காரர்கள் தம் வேலையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். குறைப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா? தெரியவில்லை. சேர்ந்து யோசிப்போம்.

இதற்கு முன்பு கற்பழிப்புச் செய்திகள் பற்றிக் கேள்விப் படுகிற போதெல்லாம், இது மனதில் வந்து செல்லும். உலகில் கற்பழிப்பு என்பதே இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? கடுமையான சட்டங்கள் வேண்டும், தண்டனைகள் வேண்டும் என்பதெல்லாம் இருந்தாலும், அது பிரச்சனையின் மூலவேரைப் பிய்த்தெரியுமா என்றால் இல்லை. பேராசைக்காரர்கள் கற்பழிப்புகளில் ஈடுபடும் கதைகள் உலகமெங்கும் இருந்தாலும், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இல்லாத சமூகங்களில் கொள்ளை குறைவாக இருப்பது போல, இருபாலர் உறவிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அல்லது குறைவான சமூகங்களில் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் குறைவாக இருக்குமா?

அவசரத்தில் சிந்தனை முழுமையையும் முறையாக நெறிப்படுத்தி வெளிக்கொணர முடியவில்லை. ஆனால் மேலும் சிந்திக்கவும் ஆராயவும் இதற்குள் நிறைய இருப்பது போற் தெரிவது மட்டும் உறுதி. பார்க்கலாம்.

பின்குறிப்பு: கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்த ஓட்டலில் இருந்த காலத்தில் இந்த இளைஞன் பல்வேறு இளம்பெண்களுடன் புதிது புதிதாகப் பழகி வெளியில் சுற்றக் கிளம்பியதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறது இச்சபை. :)

சனி, மே 10, 2014

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 9/9

Image result for londonகலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

குதிரைகள்
Image result for london horseஇங்கிலாந்தில் இன்னும் குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் நிறைய இருப்பது போற் தெரிகிறது. நகரத்துக்குள்ளேயே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கிராமங்களில் ஒருவேளை இதை விட அதிகமாக இருக்கக் கூடும். ஓட்டுனர் உரிமத்துக்காக வண்டி ஓட்டிப் பழகும் போது கூட குதிரை வண்டிகள் வரும் போதும் குதிரை வரும் போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விலாவாரியாகப் பாடம் எடுக்கிறார்கள். நம்ம ஊரில் மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகள் போல இருக்கலாம் என்று நினைக்கிறேன். தினமும் ராணியின் அரண்மனையில் காவலர் மாற்ற நிகழ்ச்சி நடைபெறும்போது ஏகப்பட்ட குதிரைகளையும் அவற்றின் மேல் காவலர்கள் வருவதையும் காணமுடியும்.

Image result for united kingdom economicsபொருளாதாரம் மற்றும் அரசியல்
இங்கிலாந்து இன்றும் உலக வல்லரசுகளில் ஒரு நாடாகத்தான் இருக்கிறது. உலகின் பணக்கார நாடுகளில் முன்னணியில் ஒரு நாடாகத்தான் இருக்கிறது. இப்போதும் உலகப் பொருளியலைக் கட்டுப்படுத்தும் ஊராகத்தான் இலண்டனைச் சொல்கிறார்கள். உலகமே பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் போதும் அங்கே சிக்கல் இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருப்பதாகச் செல்கிறார்கள். மொத்த ஐரோப்பாவும் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருக்கும் போதும் கூட இங்கிலாந்துக்கு ஏதும் நடந்து விடாது போல் நடந்து கொள்கிறார்கள்.

பாரதியார் கட்டுரைகள் படித்த போது, தீவாகத் தனித்து இருப்பதாலோ என்னவோ ஐரோப்பாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட பிரிட்டன் வேறுபட்டு இருக்கிறது என்று ஒரு வரி படித்த நினைவு. இலண்டனில் இருக்கும் காலங்களில் அதை நன்றாக உணர முடிந்தது. இன்னும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு ஈடுபாட்டோடு பங்கெடுக்கும் ஒரு நாடாக இல்லை. அதை நிறையப் பேர் விரும்புவது போலவும் இல்லை. யூரோவை மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செங்கன் என்கிற வட்டத்துக்குள் இவர்கள் செல்லவில்லை. சென்றால் மற்றவர்களின் பாரத்தையும் நாம்தாம் சுமக்க வேண்டும் என்று சொல்லி வேண்டாம் என்கிறார்கள். ஒருவகையில் இதர ஐரோப்பிய நாட்டினரைவிட நம் போன்ற காமன்வெல்த் நாட்டினர் அவர்களுக்கு நெருக்கமாகப் படலாம். அவர்களை விட நாம் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறோம். ஆனால் காமன்வெல்த் நாட்டினரைப் போலவே இலண்டனில் மற்ற ஐரோப்பிய நாட்டவர்களும் நிறைந்திருக்கிறார்கள். முக்கியமாக ஏழை - கீழை ஐரோப்பிய நாட்டினர் நிறைய அங்கு பிழைக்க வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஜெர்மனியும் பிரான்சும் இங்கிலாந்தை அவர்களைவிடப் பெரிய சக்தியாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் மற்ற எல்லோருக்கும் இங்கிலாந்து ஒரு முக்கிய சக்திதான். தொழிற் புரட்சி நடந்த காலத்தில், ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்தும் கூட மக்கள் வந்து குடியேறி ஆங்கிலேயராகவே மாறியிருப்பர் போல் தெரிகிறது. அப்படிப் பட்டவர்கள் அரசியலிலும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். நம்ம ஊரில் போல, அவன் வந்தேறி இவன் வந்தேறி என்ற கூச்சல்கள் ஏதும் இல்லை. அவர்களே உலகம் எங்கும் போய் மேய்ந்தவர்கள் என்பதால் அந்தப் பெருந்தன்மை வந்து விட்டிருக்கக் கூடும்.

வேலையே பார்க்காமல் கூட கண்ணியமான வாழ்க்கை வாழும் வசதிகள் அதிகம் இருப்பதால் வெளியில் இருந்து வருவோருக்கு சொர்க்கம் போல் இருக்கிறது பிரிட்டன். ஆனால் அப்படியான சோம்பேறிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பது, வாரி வாரி வரிக் கட்டும் மக்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் பிரிட்டனின் நிதி நிலை அறிக்கையில் அப்படியான வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் சோம்பேறிகளுக்கு வாழ்க்கை கடினமாகலாம். எல்லோரும் பங்களிக்காத ஒரு பொருளாதாரம் எப்படித் தொடர்ந்து வளர முடியும் - பிழைத்திருக்க முடியும் என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனின் ஆதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும் போல் தெரிகிறது.

ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) - பிரிட்டன் - இங்கிலாந்து
நிறையப் பேருக்குப் புரிபடவே புரிபடாத குழப்பம் இது. சிலர் இப்படிச் சொல்கிறார்கள். சிலர் அப்படிச் சொல்கிறார்கள். சிலர் இப்படியுமின்றி அப்படியுமின்றிச் சொல்கிறார்கள். இப்படி மூன்று வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றனவே. மூன்றும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறா? இந்தக் குழப்பங்கள் எனக்கும் இந்தியாவில் இருக்கிற காலங்களில் இருந்தது. அப்போது அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அங்கே போனதும் ஓரளவு அதைப் புரிந்து கொள்ள முயன்றேன். புரிந்தும் விட்டது. விளக்க முயல்கிறேன். புரிகிறதா பாருங்கள்.

பிரிட்டன் என்பது ஒரு தீவு. பிரிட்டனுக்குள் மூன்று நாடுகள் (COUNTRIES) இருக்கின்றன. இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து. அருகில் அயர்லாந்து என்றொரு தீவு இருக்கிறது. அதில் ஒரு பகுதியை (வட பகுதியை) மட்டும் வளைத்துப் போட்டு வட அயர்லாந்து ஒரு தனி நாடு. இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) என்கிற தேசம் (NATION). மிஞ்சியிருக்கும் அயர்லாந்து ஒரு தனி தேசம். சரியாகக் கவனியுங்கள் நாடு மற்றும் தேசம் என்கிற இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு தேசத்துக்குள் நான்கு நாடுகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது மற்ற நாட்டவர்களுக்கு எத்தனை தடவை குட்டிச் சொல்லிக் கொடுத்தாலும் புரிய மறுக்கிற ஒன்று. அதே வேளையில் மாநிலம் என்கிற ஒன்று அங்கில்லை. நான்கையும் மாநிலங்கள் என்றே சொல்லலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் தனித்தனி நாடு போலத் தனித்தனி நாடாளுமன்றங்கள் கொண்டிருக்கின்றன (இங்கிலாந்துக்கு மட்டும் தனியாகக் கிடையாது; இலண்டனில் இருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றமே இங்கிலாந்துக்கும்; மற்ற மூவருக்கும் அவரவர்க்கென்று ஒன்று - எல்லோருக்குமாக இலண்டலில் ஒன்று என்று உள்ளன). அதனால் நாடுகளே. அது மட்டுமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மொழி இருக்கிறது. அதனால் ஐரோப்பியர்களின் வழக்கப்படி ஒரு மொழிக்கு ஒரு நாடு என்பதே முறை. ஆனாலும் மற்ற மூன்று மொழிகளையும் ஆங்கிலம் கொன்று தின்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.

வேல்ஸ் முழுமையாக விழுங்கப் பட்டு விட்டது. ஸ்காட்லாந்து இப்போதும் தனியாகப் போக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு அதற்குப் பொது வாக்கெடுப்பு ஒன்று அறிவித்திருக்கிறார்கள். ஸ்காட்லாந்து மக்களே முடிவு செய்வார்கள். தனிக் குடித்தனம் போவதா அல்லது கூட இருந்தே கும்மி அடிப்பதா என்று. இரண்டுக்கும் ஆதரவு - எதிர்ப்புக் கருத்துகள் நிறைய இருக்கின்றன. "எங்கள் வளத்தையும் மொழியையும் பண்பாட்டையும் அழித்து விட்டார்கள்" என்று ஒரு சாராரும் "அவர்களோடு/எங்களோடு இருப்பதால்தான் நம்மால்/உங்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது" என்று இன்னொரு சாராரும் அடம் பிடிக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய உரிமை ஸ்காட்டியருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்ம ஊரில் போல் அவர்களைத் தவிர எல்லோரும் சேர்ந்து அவர்கள் எங்கிருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் வேலையெல்லாம் இல்லை. இப்படிக் கத்தியின்றி இரத்தமின்றிப் பேசி - வாக்கெடுத்து முடிவு செய்து கொள்வது எவ்வளவு நாகரீகமாக இருக்கிறது. ஏன் எல்லா நாடுகளும் இதையே செய்து கொள்வதில்லை?! ஸ்காட்லாந்து தப்பிச் சென்று விட்டால், அது போலவே வட அயர்லாந்தும் பிரிந்து செல்ல விரும்பக் கிளம்பி விடும் என்ற பயமும் இருக்கிறது. அப்படி ஒரு சூழல் வந்தால், அது வட அயர்லாந்து மக்களின் கைகளில் விடப்படும்.

வட அயர்லாந்திலும் அயர்லாந்திலும் ஒரே மொழி பேசுகிறார்கள்.ஒரே தீவுக்குள் இருக்கிறார்கள். முறைப்படி அவர்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அரசியலால் பிரிந்திருக்கிறார்கள். பிரிந்தே இருந்து பழகி விட்டதால் பண்பாடும் கூட வெவ்வேறாக விரிசல் விழுந்து கொண்டே வருவது போலத் தெரிகிறது.

ஆக, பிரிட்டன் என்பது மூன்று நாடுகளைக் கொண்ட ஒரு தீவு. அதில் இங்கிலாந்தும் ஒன்று. ஐக்கிய இராச்சியம் என்பது இம்மூன்று நாடுகளோடு நான்காவதாகப் பக்கத்துத் தீவைச் சேர்ந்த ஒரு நாட்டையும் சேர்த்து உருவாக்கிய செயற்கையான தேசம். புரிகிறதா? புரியவில்லை என்றால் விடுங்கள். நமக்கிருக்கிற குழப்பத்தில் இதை வேறு போட்டு எதற்குக் குழப்ப வேண்டும்?!

Image result for heathrowபிரிவுபச்சாரம்
மனைவியின் உடல்நிலை காரணமாக மேலும் வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடர முடியாத சூழ்நிலை. மார்ச்சில் குடும்பத்தை ஊரில் வந்து விட்டுவிட்டுச் சென்றேன். ஏப்ரல் முடிவோடு நானும் ஓராண்டு கால இங்கிலாந்து வாழ்க்கைக்கு வணக்கம் வைத்து விட்டுக் கிளம்பி வந்து விட்டேன். மிகக் கடினமான முடிவு. நாடோடிகளைப் போல், ஆண்டுக்கு ஒருமுறை (இந்த ஆண்டில் இரண்டு முறைகள்) பள்ளி மாற்றுவதைத் தாங்கிக் கொண்டு, எங்கள் இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்து வந்த - கடைசிச் சில மாதங்களில் ஓரளவுக்கு நன்றாக செட்டில் ஆகி வந்த - மகளை மீண்டும் ஒருமுறை, "இன்றுதான் இந்தப் பள்ளியில் கடைசி நாள்!" என்று சொல்லி ஒரே நாளில் ஊருக்குக் கிளப்பிக் கூட்டி வந்த நாளில் அழுகையே வந்து விட்டது. இனியும் இந்த வாழ்க்கையைத் தொடர முடியாது போலத் தெரிகிறது. இத்தோடு ஊர் சுற்றுகிற சோலியை நிறுத்திக் கொண்டு, ஒழுங்காக ஊரிலேயே (நம்ம ஊர் பெங்களூர்) செட்டில் ஆகி விட வேண்டியதுதான் என்ற முடிவோடு திரும்பி விட்டேன்.

ஒரே நாளில் அவளின் அனுமதி இல்லாமலே முடிவு செய்யப்பட்ட மகளின் வாழ்க்கையைப் போல அல்லாமல், எனக்கு ஒரு மாதம் நேரம் கொடுக்கப்பட்டது. எல்லோருக்கும் சொல்லி விடை பெற்று வர முடிந்தது. கடைசி நாளில் அலுவலகத்தில் எல்லோரும் நல்ல முறையில் கவனித்து வழியனுப்பி வைத்தார்கள். கடைசிச் சில நாட்களாக, கடைசி நாள் விருந்து சாப்பிடப் போவோம் என்று எல்லோரும் சொன்ன போது, அதற்கொரு பெரிய தொகை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, எல்லாத்துக்கும் தயாராகப் போனேன். போன இடத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி. என்னை யாரும் செலவழிக்கவே விடவில்லை. அதுதான் அவர்களுடைய பண்பாடாம் - கலாச்சாரமாம். ஒருவருடைய பிரிவுபச்சார நாளில் அவருக்கு எல்லோரும் சேர்ந்து கவனிப்பதுதான் முறையாம். பிரவுபச்சார நாள் மட்டுமல்ல; யாருக்கு என்னவென்றாலும் மற்றவர்கள் அவரைக் கவனிக்க வேண்டுமாம். அவரையே செலவழிக்கச் சொல்லி நொம்பலப் படுத்தக் கூடாதாம். நல்ல பண்பாடு - கலாச்சாரம். ஏற்கனவே கட்டப்பட்டு - நட்டப்பட்டுப் போகிறவனை இன்னமும் துன்பப் படுத்தாமல் அனுப்பி வைத்த அந்தப் பண்பாடு - கலாச்சாரம் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது! எல்லோரும் அடுத்து எப்போது வருவாய் என்று உண்மையாகவே அன்போடு கேட்டார்கள். அந்த அன்பை மீண்டும் பெறும் வாய்ப்பு இனி இல்லையென்றே எண்ணுகிறேன்... :(

பை பை லவ்லி லண்டன்!!!

வியப்புகள் இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றன!

சனி, மார்ச் 29, 2014

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 8/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

ஓட்டுனர் உரிமம்
வந்த இடத்தில் நீண்ட காலம் இருக்கப் போகிற ஆசையில் ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட வேண்டும் என்று இறங்கியது பெரிய தப்பாகி விட்டது. சிங்கப்பூரில் இருக்கும் போதே சொந்தமாக ஒரு கார் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்கப் பொதுப் போக்குவரத்தையே சார்ந்திருப்பதும் டாக்சிகளில் போய் வருவதும் சிரமந்தான். அதுவும் இந்தியாவில் எங்கு போவதாக இருந்தாலும் காரிலேயே போய் வந்து பழகி விட்டவர்களுக்கு இது கடினமாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்கள். யாருமே வேலைக்குச் சொந்தக் காரில் வருவதில்லை. பணியிடங்களில் கார் நிறுத்த அதிக இடம் இருப்பதில்லை. மிகச் சிலரே அப்படிக் காரில் வருகிறார்கள். பொதுப் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பதால் எல்லோருமே அவற்றைத்தான் பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் செலவு என்று பார்த்தால் அது போக்குவரத்துக் கட்டணங்களை விடக் குறைவாகத்தான் வரும். ஆனால் நிறுத்த இடம் கிடைப்பது மிக மிகச் சிரமம். அதற்கான செலவும் குண்டக்க மண்டக்க வரும். அதற்கு மேல் மாநகரச் சாலைகளில் வண்டி ஓட்டுகிற தலைவலி வேறு இருக்கிறதே!

"பெரும்பாலானோர் சொந்த வாகனத்தில் தனித்தனியாகப் போகிற நாடு முன்னேறிய நாடா அல்லது எல்லோருமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திப் பணிக்கு வரும் நாடு முன்னேறிய நாடா?" என்றொரு கேள்வியை எங்கோ படித்த நினைவிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரும் இங்கிலாந்தும் முன்னேறிய நாடுகளே. சிங்கப்பூரில் திட்டமிட்டே தனியார் வாகனங்களைக் குறைப்பதற்காக வாகன வரி குண்டக்க மண்டக்கப் போடுவார்கள். அதற்குப் பயந்தே யாரும் சொந்த வாகனம் வாங்க மாட்டார்கள். இங்கேயும் ஓரளவுக்கு அப்படித்தான் என்றாலும் பழைய வாகனங்கள் குறைந்த விலையில் நிறையக் கிடைக்கின்றன. வேலைக்குப் போகும் போது பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டாலும், வாரக்கடைசியில் குடும்பத்தோடு சுற்றுவதற்கு மட்டும் சொந்தமாகக் கார் வைத்துக் கொள்கிறார்கள். அதனால் நாமும் ஒன்று வாங்கிக் கொள்ளலாமே என்றோர் ஆசை வந்தது.

இது நம் உடல் மற்றும் மனம் சார்ந்த ஒன்றும்கூட. வந்தது முதலே, இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, கூடவே நோயையும் வைத்துக் கொண்டு, நெடுந்தொலைவு நடத்தல் என்பதே வீட்டுக்காரிக்குப் பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. அதனால் டாக்சிக்கு நிறையக் கொடுக்க வேண்டியிருந்தது. சிங்கப்பூர் போல டாக்சி கட்டணம் குறைவும் இல்லை இங்கு. தினமும் ஒருவர் டாக்சியில் வேலைக்குப் போக விரும்பினால், அவருடைய சம்பளம் பற்றாது. அந்த அளவுக்குக் கொடுமை. அதையும் மீறி நடந்து கடந்திடலாம் என்று முயன்று பார்த்துத் திரும்பும் போதெல்லாம் உடல் பாடாய்ப் படுத்தி எடுத்து விடும். இதையெல்லாம் பார்த்து விட்டுக் கூடிய சீக்கிரம் ஓட்டுனர் உரிமம் வாங்கி, நமக்கென்று ஒரு வாகனம் வாங்கினாற்தான் இந்த ஊரில் ஓட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். அதனால் உடனடியாக வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஆசான் ஒருவரைப் பிடித்தேன். இணையத்தில் பார்த்த போது அவரைப் பற்றி நல்ல கருத்துகள் இருந்தன. அதனால் நல்ல ஆளைத்தான் பிடித்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் சேர்ந்தேன்.

நண்பர்களிடம் விசாரித்த போது, ஏற்கனவே இந்தியாவில் ஒட்டியிருக்கிற ஆள் என்பதால் ஒரு பத்து வகுப்புகள் எடுத்துக் கொண்டால் போதும்; வாங்கிவிடலாம் என்றார்கள். நானும் கூடிய சீக்கிரம் உரிமம் பெற வேண்டும் என்ற ஆசையில், "நான் இந்தியாவில் பல ஆண்டுகளாகக் கார் ஓட்டிக் கொண்டிருப்பவன். பத்து வகுப்புகளில் உரிமம் பெற்று விடலாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள்!" என்றேன். "சரி, வா பார்க்கலாம்!" என்று அழைத்துச் சென்று, வண்டி ஓட்டச் சொன்னார். நாம் ஓட்டுகிற அழகைப் பார்த்து விட்டு, "நீ இந்தியாவில் வண்டி ஒட்டியதாகச் சொன்னதே பொய். பேசாமல் வா. எதைப் பற்றியும் யோசிக்காமல் வகுப்புகளை ஆரம்பிப்போம். நீ உரிமத்துக்குத் தயார் ஆகும் போது நானே சொல்கிறேன்" என்று ஆரம்பித்தார். பல மாதங்கள் ஆகி விட்டன. இருபத்தி ஐந்து வகுப்புகளுக்கும் மேல் ஓடி விட்டன. இன்றுவரை உரிமம் பெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனைவியின் உடல்நிலை மேலும் மோசமாகி, சமாளிக்க முடியாத சூழ்நிலையில், இனியும் இங்கே பிழைப்பு ஓட்ட முடியாது என்று முடிவு செய்து, குடும்பத்தைக் கொண்டு போய் ஊரில் விட்டுவிட்டும் வந்து விட்டேன். நானும் இன்னும் ஒரு மாதந்தான் இங்கே இருக்க போகிறேன். இவ்வளவு பணம் செலவழித்து விட்டதால் அந்த உரிமத்தை மட்டும் வாங்கிக் கொண்டு விடலாம். பின்னால் வந்தால் பயன்படும். அது மட்டுமில்லை. பிரிட்டிஷ் உரிமம் என்றால் சாதாரணப்பட்டதில்லை. உலகில் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று முயன்று கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

ஓட்டுனர் உரிமம் வாங்குவது எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இங்கே மிக மிகச் சிரமம். விதிமுறைகள் - சட்டதிட்டங்கள் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள்தானே. அவ்வளவு கண்டிப்பு. நமக்கு வெறுப்படிக்கிறது. இந்தியாவில் உரிமம் வாங்க ஒன்றுமே செய்யவில்லை. இருபது ஒரு மணிநேர வகுப்புகள் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய், ஒரு வீணாப் போனவன், தினம் தினம் முப்பத்தைந்து நிமிடங்கள் ஓட்ட விட்டான். காசே குறியாக இருப்பான். அடிப்படையான பாடங்கள் கூடச் சொல்லிக் கொடுக்கவில்லை (இந்த ஆள், "அவன் இது கூடச் சொல்லிக் கொடுக்கலையா?" என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது கேட்டு அவமானப் படுத்திக் கொண்டே இருக்கிறார்!). ஒன்றுமே படிக்கவில்லை. உரிமமும் வாங்கிக் கொடுத்து வணக்கம் போட்டு அனுப்பி வைத்து விட்டான். அதற்குப் பிறகு சொந்த வாகனம் வாங்கிப் பழகியதுதான் எல்லாமே. இங்கே வந்தால் வம்புக்கென்றே செய்வது போல், அது  லொட்டை இது லொட்டை என்று இல்லாத குறையெல்லாம் சொல்லி, இழு இழுவென்று இழுத்தடிக்கிறார்கள். வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுக்கும் ஆட்களுக்கு நல்ல வாழ்வுதான். இப்படி இருப்பதால்தான் இங்கே விபத்துகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்ற நியாயமும் புரிகிறது. அதற்கு இப்படியா படுத்துவது என்றும் வெறுப்பாகிறது.

கழிப்பறை வியப்புகள்
Image result for men womenஎது எதையோ பேசினோம். இதைப் பேசாவிட்டால் எப்படி? வரலாற்றுத் தவறாகி விடுமே! முதல் வியப்பு, நம்ம ஊரில் கழிப்பறைகளுக்கு முன்பிருக்கும் பலகைகள் பல மொழிகளிலும் படங்களோடும் இருக்கும். இங்கே அப்படியில்லை. பெரும்பாலும் குறியீடுகள் மட்டுமே இருக்கின்றன. அவையும் நம்ம ஊரில் போலத் தெளிவாக இருப்பதில்லை. வந்து கொஞ்ச காலம் பயந்து பயந்தே நுழைகிற மாதிரித்தான் இருந்தது. நம்ம ஊர்ப் படங்களில் பெண் என்றால் பொட்டு வைத்துத் தலையில் சடைப் பின்னி - பூச்சூடி, ஆணை விட முற்றிலும் வேறுபட்டவராக வரையப்பட்டிருப்பார். நம்ம ஊர்ப் பெண்களைப் போலவே பெண்களின் படங்களும் இருக்கும். இங்கோ, தொலைவில் - இருட்டில் வருகிறவர் ஆணா பெண்ணா என்பது அருகில் வரும்வரை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமந்தான். அது போலவேதான் கழிப்பறைகளுக்கு முன் இருக்கும் படங்களும். குழப்புகிற மாதிரியே இருக்கின்றன. வேறுபாடு இல்லாமல் இல்லை. நம் கண்களுக்கு எளிதில் தெரியாத மாதிரி இருக்கின்றன. பெண்கள் படம் கூட எளிதில் புரிகிறது. ஆண்கள் படந்தான் ஒருவேளை இது பெண்கள் கழிப்பறையோ என்று பயந்து கொண்டே நுழைகிற மாதிரி இருக்கின்றன. குறைந்த பட்சம் ஆண் என்றால் காலை விரித்துக் கொண்டு நிற்கிற மாதிரி இருக்கும். அதுவும் இல்லாமல் அடக்க ஒடுக்கமாக இருப்பதால் பெரும் சல்லையாக இருக்கிறது. கொஞ்ச காலம் போனபின்பு ஓரளவு பழகிவிட்டது. ஆனாலும் புது இடங்களில் பயமாகத்தான் இருக்கிறது.


அடுத்ததாக, இதைச் சிங்கப்பூரிலும் பார்த்திருக்கிறேன். நம்ம ஊரில் ஆண்கள் கழிப்பறைகளை ஆண்களும் பெண்கள் கழிப்பறைகளைப் பெண்களுமே சுத்தம் செய்வர். இங்கோ ஆண்கள் கழிப்பறைகளையும் பல இடங்களில் பெண்களே சுத்தம் செய்கின்றனர். ஏற்கனவே உள்ளே சென்ற எல்லோரும் வெளியேறியபின், புதிதாக வரும் ஆட்கள் நுழைந்து விடாதபடி முன்னேற்பாடுகள் செய்து விட்டே நுழைகிறார்கள். ஆனாலும் இது கொஞ்சம் நமக்குக் கடினமாகவே இருக்கிறது. அவர்களுக்குப் பழகி விட்டதோ என்னவோ!

ஒப்பனை
முறையாகத் தலையைச் சீவிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நிறையப்பேர் தலை முடியை ஏதாவது செய்து கொண்டுதான் அலைகிறார்கள். குண்டக்க மண்டக்க வெட்டிக் கொள்தல், நிறம் பூசிக் கொள்தல் போன்று ஏதாவது! அதுவும் உள்ளூர்க்காரர்களைவிட நம்மைப் போலக் குடிபுகுந்தவர்கள்தான் இது போன்ற சேட்டைகள் அதிகம் செய்வது போலத் தெரிகிறது. நம் கண்களுக்குத்தான் அப்படித் தெரிகிறதா அல்லது உண்மையும் அதுதானா என்று தெரியவில்லை. மூஞ்சியெல்லாம் எதையாவது குத்திக் கொண்டு திரிகிற பண்பாடும் நிறையவே இருக்கிறது. இவையெல்லாம் இங்கே பார்த்துக் கொண்டு வந்துதான் நம்ம ஊரில் ஆரம்பிக்கிறார்கள் போற் தெரிகிறது.

மோவெம்பர் (MOVEMBER)
இங்கேயுள்ளவர்கள் பெரும்பாலும் மீசையை மழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சென்ற நவம்பர் மாத வாக்கில் நிறையப்பேர் விதவிதமாக மீசைகள் வைத்துக் கொண்டு அலைந்தனர். முதலில் அது என்னவென்று புரியவில்லை. சில நாட்களிலேயே அது பற்றிய தகவல்கள் தெரிய ஆரம்பித்தன. நவம்பர் மாதத்தில், ஒரு குறிப்பிட்ட வகைப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக நிறையப்பேர் அப்படி விதவிதமாக மீசையும் தாடியும் வைக்கிறார்கள். வழக்கமாக மீசை-தாடி வைத்துக் கொள்ளாத தாம், மீசை-தாடியில் எவ்வளவு அழகாக அல்லது அசிங்கமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இப்படி வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், தம் சுற்றத்தார் அனைவரிடமும் இதற்காக நிதி திரட்டுகிறார்கள். கம்பெனிகளும் இவற்றை நிறைய ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு ஊழியரும் திரட்டும் நிதிக்குச் சமமாக அவருடைய கம்பெனியும் நிதியளிக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் ஆயிரம் பவுண்டு திரட்டினால், என் கம்பெனி ஆயிரம் பவுண்டு போட்டு, இரண்டாயிரம் பவுண்டாகக் கொடுத்து விடுகிறார்கள். நல்ல காரியத்துக்குச் செய்கிற எல்லாமே நல்லதுதானே!

வியப்புகள் முடிவை நெருங்கி விட்டன...

சனி, பிப்ரவரி 15, 2014

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 7/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

மொழி
இங்கிலாந்து வந்ததில் எனக்கு நேர்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று - மொழி சார்ந்த பார்வை. பார்வை மாறியது என்று சொல்ல முடியாது. தெளிவடைந்தது எனலாம். சிறு வயது  முதலே, நாம் பெரிதாக மதிக்கும் அறிஞர்கள் அனைவருமே தாய்மொழி வழிக் கல்வி பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். மற்ற எல்லா விசயங்களிலும் அவர்களோடு ஒத்துப்போகும். ஆனால் இந்த விசயத்தில் மட்டும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருக்கும். அது பிற்போக்குவாதமோ என்று கூடத் தோன்றும். மொழியை வைத்துப் பிழைப்பு நடத்துகிற அரசியல்வாதிகளையோ - மொழி என்றாலே உணர்ச்சி பொங்க உறுமுகிற ஆட்களையோ சொல்லவில்லை. அறிவுபூர்வமாகப் பேசுகிற நாகரீகமான பல அறிஞர்களே கூட அப்படித்தான் சொல்வார்கள். பின்னொரு காலத்தில், எல்லாமே சரியாகப் பேசுகிறவர்கள் இதில் மட்டும் தவறாகப் பேச வாய்ப்பிராது என்று எண்ணித் தேற்றிக் கொண்டு விட்டு விட்டேன். தேற்றிக் கொண்டுதான் விட்டேனே ஒழிய, அதற்கான சரியான - அழுத்தமான காரணங்களைச் சரியாக - அழுத்தமாக உணர முடிந்ததில்லை. அது இங்கிலாந்தில் வந்து வாழ நேர்ந்த இந்தக் காலத்தில் நன்றாகப் புரிபட்டுவிட்டது.உலகம் செம்மொழி என்று சொன்ன எதையும் ஏற்றுக் கொள்ளாமல், உலகத்திலேயே அதிகமானோர் பேசுகிற மொழி என்று எதையும் கற்றுக் கொள்ள முயலாமல், தன் தாய்மொழியை மட்டும் தெரிந்து கொண்டு, எல்லாத்தையும் தம் மொழிக்கு வரவழைத்து, உலகமே தம் அடிமை என்கிற அவர்களும் தம்மை வல்லரசென்கின்றனர். தம் தாய்மொழி மட்டும் தெரிந்தால் எழுத்தறிவு உடையவராகக் கூட ஏற்றுக் கொள்ளப் பட மாட்டோம் என்ற பயத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர்களுடைய சொற்களைச் செருகிப் பேசும் தன்மானச் சிங்கங்கள் நாமும் நம்மை வல்லரசென்கிறோம். இதில் எது உண்மை? நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்.

உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு யோசித்தாலும் கூட இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. தன்மானம் என்பது ஓர் உணர்ச்சிதான் என்றாலும் அறிவுபூர்வமாகப் பேசுவோர் கூட யாரும் தன்மானத்தை இழப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வெற்றி பெற்றவன் எழுதுவதுதான் வரலாறு என்பது போல, வென்றவனின் மொழிதான் உயர்ந்தது என்றும் ஆகிவிட்டது. ஆங்கிலம் பேசுவோர் வென்று விட்ட காலத்தில் வாழ்வதால் ஆங்கிலம் உயர்ந்தது என்று எண்ணிக் கொள்கிறோம். அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததால் அவர்களுடைய வளர்ச்சியில் நாமும் பங்கெடுத்துக் கொண்டு நம்மையும் வெற்றியாளர்களாகக் காட்டிக் கொள்கிறோம். அது மாறலாம். அப்படி மாறும் போது அவர்களோடு சேர்ந்து நாமும் மூழ்க முடியாது. ஒட்டு மொத்தமும் அடுத்த எந்த மொழி வெல்கிறதோ அதன் பின்னால் ஓட முடியாது. பல மொழிகளைப் படிப்பது என்பது மொழியியலாளர்களுக்கும் பிழைப்புவாதிகளுக்கும் எளிதாக வரலாம். எளிய மக்களுக்கு அது எளிதல்ல. அவரவர் மொழியில் பேச முடிதலும் படிக்க முடிதலும் தொழில் செய்ய முடிதலும் ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை. அதை மறுத்தல் அடிப்படை உரிமைக்கான தாக்குதல். இதை இங்கிலாந்து மக்களே நன்றாகப் புரிந்திருக்கிறார்கள்; ஏற்றுக் கொள்கிறார்கள். நாம்தாம் அவர்களிடமே போய் அவர்களை விடவும் அவர்கள் மொழியில் நமக்கிருக்கும் வித்தைகளையும் விசுவாசத்தையும் காட்ட முயல்கிறோம். இந்த ஞானோதயம் மான்செஸ்டரில் டாக்சியில் போய்க் கொண்டிருந்த போது அந்த டாக்சி ஓட்டுனருடன் உரையாடிய ஒரு மணித்துளியில் எனக்குக் கிடைத்தது. அவர் இராணுவத்தில் நல்ல பொறுப்பில் பணியாற்றியவர். உலகம் சுற்றிப் பார்த்தவர். தெளிவாகப் பேசினார்.

"எங்களைவிடவும் இந்தியர் நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள். இது எனக்குப் பெரும் வியப்பாகவே இருக்கிறது. எங்களவர் உங்கள் மண்ணை விட்டு வெளியேறி வந்து இவ்வளவு காலம் ஆனபின்பும் அது எப்படி உங்களால் முடிகிறது?" என்று ஒரு கொக்கியைப் போட்டார்.

"இப்போதும் நாங்கள் உங்கள் மொழியை ஒரு பாடமாகப் படிக்கிறோம். இப்போதும் எங்கள் நாட்டில் எங்கள் மொழியைப் பேசுவோரைவிட உங்கள் மொழியைப் பேச முடிந்தோருக்குத்தான் பொது இடங்களில் மரியாதை - பணியிடத்தில் முன்னேற்றம் - அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு - எல்லாம் இருக்கிறது" என்றேன்.

"வியப்பாக இருக்கிறது. ஏன் அப்படி? உங்கள் மொழிகளைக் காக்க வேண்டியது உங்கள் கடமைதானே! உங்கள் மொழிகளில் படிப்பதுதானே உங்களுக்கு எளிதாக இருக்க வேண்டும்?!" என்றார். "இந்தியாவுக்கும் பல முறை சென்றிருக்கிறேன். இந்தியர்கள் ஏன் இங்கிலாந்து வந்து குடியேறுவதை இன்னமும் பெரிதாக நினைக்கிறார்கள்?" என்றும் கேட்டார்.

நம் அறிவுக்கெட்டிய அளவுக்கு என்ன சொல்ல முடியுமோ அதைச் சொன்னேன். ஆனால் இந்த உரையாடல் இன்றுவரை மனதுக்குள் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பிழைப்புக்காக மட்டும் தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடுகிற மனிதர்களின் மீதான வெறுப்பை நாம் தமிழின் மீது காட்டப் பழகிவிட்டோம். அவர்களைப் பிடிக்காதவர்கள் அவர்களை வெறுக்கச் சொல்லிக் கொடுக்காமல் அவர்கள் தமக்குப் பிடித்தது போல் காட்டிக் கொள்கிற தமிழை வெறுக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தாய்மொழியை மட்டுமே படிப்பேன் என்பது குறுகிய மனப்பான்மை என்பது நியாயமாகத்தான் படுகிறது. ஆனால் அதைத்தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுமே சொல்கின்றன. இந்தியாவில் மட்டும் ஏன் அது குறுகிய மனப்பான்மையாகப் பார்க்கப் படுகிறது?! தாய்மொழியை மட்டுமே படித்தால் முன்னுக்கு வரமுடியாது என்பது சரியே. அது இந்தியாவில் மட்டுமே சரி. அதற்கான காரணங்கள் பல. ஏனென்றால் நாம் மட்டுமே நம் பொருளாதாரத்தை ஆங்கிலம் பேசுகிற நாடுகளை நம்பிக் கட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமே நம் மொழிகளைச் சாக அனுமதித்துக் கொண்டு இருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் வேற்று மொழிகளைக் கற்றல் முக்கியம் என்பது பரந்த சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது போலவே, அகன்ற சிந்தனை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஆழ்ந்த சிந்தனையும் முக்கியம், அதே அளவுக்குத் தொலை நோக்குச் சிந்தனையும் முக்கியம் என்பதையும் உணர வேண்டும். நாம் நமக்கான அடையாளம் எதுவோ அதைப் பற்றிக் கொண்டுதான் நம் திட்டங்களை வகுக்க வேண்டும். நம்மால் முடியாத காலத்தில், சார்ந்து வாழ்தல் - ஒட்டி வாழ்தல் எல்லாம் சரிதான். அது எல்லாக் காலத்திலும் சரிப்பட்டு வராது. அதைக் கணக்கில் கொண்டு நம் மொழிக் கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் யோசித்துத்தான் அறிஞர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிறார்கள். அது ஒட்டு மொத்தச் சமூகத்தையும் அதன் எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு சொல்வது. முழுக்க முழுக்கத் தற்சிந்தனை நிறைந்த பிழைப்புவாதிகள் நமக்குப் புரிபடச் சிரமந்தான்!

அடுத்த வியப்பு - இந்தியாவில் பல இடங்களில் ஆங்கிலம் தெரியாதவர்களைக் கேவலமாகப் பார்க்கும் நிலை உள்ளது. ஆனால் இங்கோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. பல சூழ்நிலைகளில் இதைப் பார்த்திருக்கிறேன். 'எனக்கென்ன அவர்களுடைய மொழி தெரிந்தா இருக்கிறது. அப்புறம் ஏன் அவர்களுக்கு என் மொழி தெரியாததற்கு மட்டும் நான் கோபப்பட வேண்டும்?!' என்பது போல நடந்து கொள்வார்கள். முக்கியமாக கிழக்கு இலண்டனில் ஆங்கிலமே பேசத் தெரியாத மத்தியக் கிழக்கர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் வந்து இறங்கியிருப்பார்கள் போலும். ஒருமுறை கடையில் வேலை செய்கிற பையன் ஒருத்தன் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறினான். வந்தவர்கள் அதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். 'என் ஊரில் என் பணத்தைப் பங்கு போட வந்திருக்கிறாய்! நீதானே என் மொழியைப் படிக்க வேண்டும்?!' என்கிற கோபம் துளியும் தெரியவில்லை. எல்லோருமே அப்படி நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. ஓரிருவர் கூட அப்படி நடந்து கொள்வது வியப்புதானே!

அது போல அவர்களுடைய மொழியை என்ன பாடு படுத்தினாலும் அதைச் சீரணித்துக் கொள்கிற பக்குவமும் அவர்களிடம் இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கிற எல்லோரும் பேசுவது என்றால் சும்மாவா? அதெல்லாம் இருக்கத்தானே செய்யும்?! உடன் பணிபுரிகிறவரில் ஆங்கிலேயர் ஒருத்தர், ஒருமுறை கணிப்பொறியில் மின்னஞ்சல் அனுப்பும் போது ஒரு சொல்லை வேறு விதமாகச் சுளுக்கி எழுதினார். அதில் தவறு இருப்பதாகச் சிவப்புக் கோடு போட்டுக் காட்டியது. உடனே, "என்ன பைத்தியக்காரத்தனம்! என் மொழி வாழும் மொழி!" என்று கூறி அந்தத் தவறையே தவறாக்கினார். இந்தியாவில் இருக்கும் போது நிறையப் பேர் இது போலச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அவர்களில் ஒருவரே சொல்லி, ஒரு சொல்லுக்கு இன்னொரு புதிய உருவம் கொடுத்ததை நேரில் பார்க்கும் போது அது ஒரு வேறுபட்ட அனுபவமாக இருந்தது. விதிமுறைகளைப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பதிலும் நல்லது இருக்கிறது; வளைந்து கொடுத்துப் போவதிலும் நல்லது இருக்கிறது. வளர்கின்ற மொழி எப்படி வளைந்தாலும் பிரச்சனையில்லை; அழிகின்ற மொழி அதிகம் வளைந்து கொடுத்தல் நல்லதில்லை என்று கொள்வதா அல்லது வளைந்து கொடுக்கும் மொழிதான் வளரும்; அடம் பிடிக்கும் மொழி அழியும் என்று கொள்வதா என்று புரியவில்லை.

தமிழ்நாட்டில் தஷ், புஷ் என்று வடமொழிப் பெயராக வைப்பதில் ஒரு மோகம் இருப்பது போல், இந்தியாவில் இருந்து வந்து இங்கேயே குடியேறிவிடுகிறவர்களிடம் தம் பெயரை ஆங்கிலப் படுத்திக் கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கிறது. தமிழ் நாட்டில் பிறக்கும் கிருஷ்ணமூர்த்தி வெளியில் வரும்போது கிருஷ்ணா ஆகிறார். அவரே இந்தியாவை விட்டு வெளியேறும்போது க்ரிஷ் ஆகி விடுகிறார். பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன் கூட க்ரிஷ்தான் ஆகிறார்கள். அது போல இந்தியப் பெயர்கள் ஆங்கிலமானால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்கிற மாதிரி நிறையப் பெயர்கள் இருக்கின்றன. பத்மநாபன் பாடி/பேடி ஆகவோ, மாதவன் மாடி/மேடி ஆகவோ, ஆனந்தக்குமார் ஆண்டி/ஏண்டி ஆகவோ, கார்த்திகாயினி காத்தி/கேத்தி ஆகவோ மாறிவிடுகிறார்கள்.

வியப்புகள் தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...