சனி, டிசம்பர் 08, 2012

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 6/6

தொடர்ச்சி...

"பதிமூனில் ஒண்ணு" கதையில் பள்ளியில் இடம் வேண்டிக் காத்திருக்கும் மாணவர்கள் பற்றியும், நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று மாணவர்களைச் சல்லடை போட்டு வடிகட்டிக் கொடுமை செய்யும் பள்ளிகள் பற்றியும் பேசப்படுகிறது. எப்படியும் இடம் பெற்று விட வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, காத்துக் கிடந்து, கடைசியில் சாதித்து விடும் ஒரு மாணவனின் கதை. அப்படி வந்து காத்திருக்கும் பதிமூனு மாணவர்களில் பனிரெண்டு பேர், வாழ்க்கையை வெறுத்து, நம்பிக்கை இழந்து, மறுநாள் வராததால், நம்ம நாயகனுக்கு இடம் கிடைத்து விடும். ஆனால், அந்த ஒருநாட் கூத்தை மட்டும் பேசுவதில்லை கதை. கிட்டத்தட்ட அவனுடைய பள்ளி வாழ்க்கையே அலசி ஆராயப்படுகிறது. அது அவனுடைய கதை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் உள்ள முக்கால்வாசிப் பள்ளிப் பையன்களின் கதை. ரிசல்ட் பைத்தியம் பிடித்த பள்ளிகளின் - அவற்றின் நிர்வாகத்தின் - தலைமையாசிரியர்களின் - ஆசிரியர்களின் - பெற்றோர்களின் கதை!

மற்ற எல்லாப் பாடங்களிலும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பி விடுபவன், சுட்டுப் போட்டாலும் கணக்கும் ஆங்கிலமும் வராது தவிப்பான் பாவம். இந்தக் காம்பினேசன் நிறையப் பேருக்குப் பிரச்சனை. அதற்குக் காரணம், தமிழில் வாசித்து மனப்பாடம் செய்ய முடியாதவை இவை இரண்டும். 'நம்ம சாமிகளைக் கும்பிட்டால் இங்கிலீஷ் எப்படி வரும்?' என்ற ஒரு விபரமான கேள்வியோடு சர்ச்சுக்குப் போய் இயேசுவைக் கும்பிட ஆரம்பித்து விடுவான். அங்கே வந்து ஓர் ஆள், "இயேசுவுக்கே இங்கிலீஷ் அல்ல தாய்மொழி!" என்று போட்டுக் குழப்பி விட்டுப் போவது சுவாரசியம். இங்கிலீஷ் நன்றாக வர வேண்டும் என்பதற்காக இயேசுவைப் பார்க்கப் போனால், அங்கும் ஆடு மேய்க்கும் கதைகள் சொல்லும் போது அவன் படும் பாடு அதனினும் சுவாரசியம். இதில், எப்படியோ நமக்கு ஒருத்தன் சிக்கிட்டான் என்று அவனை அரவணைக்கும் சர்ச் பற்றியும் மறைமுகக் குத்தல் இருக்கிறது.

ஒரு கம்யூனிஸ்ட்டு இந்து மதமல்லாத இன்னொரு மதத்தை மட்டும் கிண்டல் பண்ணி விட்டு விட்டால் பிரச்சனை என்றோ என்னவோ, கூடவே சுடலை மாடசாமியையும் கிண்டல் செய்திருக்கிறார். இரண்டுமே நியாயமான கிண்டல்கள்தான். "மதிப்பெண் அதிகம் வாங்குவதற்கு, சுடலைமாடசாமியிடம் வேண்டுவது எந்த வகையில் நியாயம்? சுடலைமாடசாமிக்கும் கல்வித் துறைக்கும் என்ன சம்பந்தம்?" என்று குழம்புவான் நம்ம ஆள். அத்தோடு டியூசன் வைக்கும் கணக்கு வாத்தியார் பற்றியும் ஒரு குத்தல் வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் பெரும் பெரும் அநியாயங்களில் இதுவும் ஒன்று. தமிழ்ச்செல்வன், தன் அறிவொளி இயக்க காலத்தில் இது பற்றியெல்லாம் நிறையக் கேள்விப் பட்டும் சிந்தித்தும் இருக்க வேண்டும். அதுதான் இதில் வெளிப்பட்டிருக்கிறது. தான் நடத்தும் டியூசனுக்கு வராமல் வேறொரு தனியார் டியூசனுக்குப் போனதால் அந்த மாணவனைச் சந்தேகம் கேட்ட போது போட்டு வெளுத்தெடுத்த ஒரு ஆசிரியரின் வகுப்பில் நானும் படித்திருக்கிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை முழுக்க முழுக்க ஊழல் பீடித்திருக்கும் சமூகம் நம்முடையது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

பள்ளியில் இடம் பிடிப்பதற்காக வரிசையில் காத்திருந்து தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களைப் பார்த்து அங்கிருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தம் மீதும் ஓவர் கெடுபிடி காட்டும் தம் தலைமையாசிரியர் மீதான வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.  "இதைச் சாதிப் பிரச்சனை ஆக்கிரு" என்று வந்து ஒரு பையனுக்கு ஐடியா கொடுக்கிறார்கள். இது கொஞ்சம் இடிக்கிறது. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அப்படியான ஆட்களும் இருக்கிறார்கள் எனினும், சிலருக்கு அது தீண்டாமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் பற்றி நினைவூட்டுவதாகவும் சிலருக்கு அது வேறு மாதிரியாகவும் படக்கூடும். வேறு மாதிரி என்றால்? வேறு மாதிரி என்றால்... அப்படித் தவறாகப் பயன்படுத்துவதற்கும் மற்றவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பது போல! அப்படியான கதைகளும் எனக்குத் தெரியும். சட்டத்தின் போக்கில் போய் மடக்க முடியாத எத்தர்களைக் கடைசியாகச் சிக்க வைக்க வைத்திருக்கும் பொறியாகத்தான் காவற் துறை இதையும் சிலருக்குக் கற்றுக் கொடுக்கிறது.

அடிஸ்கேல் உடைகிற அளவுக்கு அடிக்கிற வெறி பிடித்த விலங்குகளிடம் நானும் படித்திருக்கிறேன். அடிஸ்கேல் என்ற பெயரே அடிப்பதற்குப் பயன்படுத்துவதால் வந்தது என்றுதான் நாங்கள் எல்லோருமே எண்ணிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் உண்மை புரிந்தது - அது பல பொருட்கள் கொண்ட ஓர் "ஒருசொல் பன்மொழி" என்பது. அதுவும் "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்!" என்கிற பழமொழி ஒன்று வேறு சொல்லிக் கொண்டே அடிப்பார்கள்.

"அவரவர் தரப்பு" என்ற கடைசிக் கதையில் கணவன்-மனைவி பிரச்சனைகள் ஆழமாகப் பேசப்பட்டிருக்கின்றன. தன் துணைவனோ துணைவியோ முழுக்க முழுக்கத் தன் ஆளுமைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று எண்ணுகிற உளவியல் பற்றி அழகாகச் சொல்லி இருக்கிறார். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் தன் துணை தனக்குப் பிடித்த எதைச் செய்தாலும் வருகிற கோபம் இருக்கிறது. தன் கணவன் சிகரெட் பிடிப்பதைக் கூடப் பல பெண்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். அவனுடைய உடலுக்குக் கேடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். 'ஒவ்வொரு முறையும் என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டு போய்ச் செய்தால் அது போதும் எனக்கு!' என்கிற மாதிரியான பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அது போலவே ஆண்களும் பல விசயங்களில் தம் பெண்களைக் கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.

வண்டி சேரன்மாதேவி பேருந்து நிலையத்தில் நிற்கும் போது அவளை உட்கார வைத்து விட்டுத் தம் அடிக்கப் போகும் அவனைச் சட்டையைப் பிடித்து இழுத்துப் பொளேர் பொளேர் என வைக்கலாம் போல இருக்கும் நமக்கு. மனைவி-குழந்தை குட்டிகளைத் தவிக்க விட்டு விட்டு இது போலச் செய்கிற பல பரதேசிப் பயபிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் என்ன கருமம் பிடித்த குணங்களோ இந்த ஆம்பளைப் பிறவிகளிடம். இருப்புக் கொள்ளாத அளவுக்கு அப்படியென்ன கொழுப்பு?! மனைவி-பிள்ளைகளிடம் என்று மட்டுமில்லை. இடம் போட்டுவிட்டு வேறொருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் விட்டுப் போவதும் அப்படித்தான். இவர் வெண்ணெய் மாதிரிப் போய் விடுவார். "இதென்ன அவுக அப்பன் வீட்டு இடமா?" என்று வேறொருவன் வந்து நம்மிடம் வம்பு வளர்ப்பான். ஐந்து நிமிடம் நிற்கப் போகிற வண்டியை விட்டு இறங்கிப் போகாமல் இருந்து விட்டால் இந்தப் பிரச்சனைகள் எதுவும் இராதே. ஒரு பேச்சுக்கு இது போலவே பொம்பளைகளும் இருப்புக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் ஒத்துக் கொள்வோமா?!

பொழுதெல்லாம் தன்னுடனேயே இருக்கும் மனைவி, மசக்கையானவுடன் எல்லோருக்கும் பொதுவாகி விடுவது பற்றிப் பேசியிருப்பது சுவாரசியமானது. அதன் பிறகு தனித்திருக்கும் நேரமே கிட்டாமல் போய்விடும் கணவன்-மனைவிக்கு. எல்லோருக்குமே அதில் இருந்துதான் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் கூடும். அதன் பிறகு குழந்தையும் பிறந்து விட்டால், குழந்தையைப் பார்க்கவே நேரம் இல்லாமல் போய்விடும் மனைவியர்க்கு. அப்புறம் எங்கிட்டுக் கணவனைக் கண்டு கொள்ள முடியும்?! குழந்தை தூங்கும் நேரத்தில்தான் குளித்தல், தூங்குதல், சமைத்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெண்களின் சிரமத்தைப் புரிந்து கொள்கிற ஆண்கள் மிகக் குறைவு. அதில் தமிழ்ச்செல்வனும் ஒருவர்.

'பெற்ற தாய் மீது பாசம் கொண்டிருத்தல் பெரிதில்லை; உன்னையே முழுமையாக நம்பி வந்திருக்கும் ஒரு பெண் மீது பாசமாக இருக்க வேண்டும்!' என்று மனைவிமார் வைக்கிற கோரிக்கை போலவே, ஆண்களிடமும் சில கணக்குகள் உண்டு. அதில் ஒன்று, 'நான் என்ன சொன்னாலும் என்னைத் தன் மகனில்லை என்று சொல்லி விலக்க மாட்டாள் என் தாய். அது போலவே - அம்மா போலவே, என்னை நானாகவே-அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணாக ஏன் மனைவி இருப்பதில்லை?!' என்பது. அது பற்றியும் பேசியிருக்கிறார்.

"வளைவுகளும் திருப்பங்களும் குண்டும் குழியுமான சாலையில் பஸ் போய்க் கொண்டே இருந்தது" என்று முடியும் கதை, அவர்களுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, எல்லாக் கணவன்-மனைவியரின் வாழ்க்கையிலும் வளைவுகளும் திருப்பங்களும் குண்டும் குழியும் இன்னும் நீண்ட காலத்துக்கு இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்லாமல் சொல்லி முடிகிறது. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் கூடப் போதும். பஸ் போய்க் கொண்டேயிருக்கும். அதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமை இல்லாமல் போகும் போதுதான் வண்டி படுத்துக் கொள்கிறது அல்லது குடை சாய்ந்து விடுகிறது.

சின்னச் சின்ன விஷயங்கள் என்று பார்த்தால், தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் பெரும்பாலும் வள வளவென்று நீளாமல் சிறுகதைகளாகவே இருக்கின்றன. அதுவே பெரும் சிறப்பு. இடையில் ஓரிரு கதைகள் மீட்டும் கொஞ்சம் நீளம் அதிகமிருந்தன. அதுவும் 'ஓரிரு' என்பதால், விட்டு விடலாம். சுப்பையா, சுப்புத்தாய், செண்பகவல்லி, வேலுசாமி, நடராஜன், ஆதி லட்சுமி, குருசாமி என்று கதாபாத்திரங்களின் பெயர்கள் பெரும்பாலும் அவருடைய வீட்டுக்குள்ளும் உறவினர் வீடுகளில் இருந்துமே வந்திருக்கின்றன போலத் தெரிகிறது. கலை-இலக்கியங்களில் மதுரை மாவட்டமும் நெல்லை மாவட்டமும் பேசப்படும் அளவுக்கு அதற்கிடைப்பட்ட கரிசல் பூமியின் வாழ்க்கை அதிகம் பேசப்படவில்லை என்பது போலவே அடிக்கடித் தோன்றும். அந்தக் குறையை நிவர்த்தி செய்து வைக்கும் ஒருவராக-அவர்களுள் முன்னோடியாக தமிழ்ச்செல்வன் இருக்கிறார். இந்த வழியில் இன்னும் நிறையப் பேர் வரலாம். அந்தப் பெருங்கூட்டத்தில் ஒருவனாக இருந்து விட வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட ஆசையும். பார்க்கலாம். காலம் அதன் கல்லாப் பெட்டியில் என்ன வைத்திருக்கிறதென்று...

முற்றும்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 5/6


தொடர்ச்சி...

"உபரி" என்ற கதையில் கணக்குத் தெரியாமல் கொஞ்சம் மிஞ்சி விடுகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பலவற்றை நினைத்துக் குழம்புகிறார் நம் கீழ் நடுத்தர வர்க்கத்துக் கதை நாயகர். தான் நீண்ட காலமாக ஆசைப் பட்டுச் செய்ய முடியாமல் போன பல செலவுகள் பற்றி யோசிக்கிறார். ஒவ்வொன்றாக மனதில் வந்து செல்கின்றன. உடல்நலம் குன்றிய மனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார். தம் பிள்ளைகள் அதிகம் ஆசைப்படும் தின்பண்டம் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று விரும்புகிறார். அவருடைய மனதில் வந்து செல்லும் ஒவ்வொரு ஆசையும் மிக நியாயமானவை-உணர்வு பூர்வமானவை. நாமெல்லாம் நினைப்பதற்கு முன்பே செலவு செய்து விடக் கூடியவை. அவ்வளவு குழப்பத்தில் குரங்கு போல ஒன்றில் இருந்து ஒன்றாகப் பல ஆசைகளுக்குத் தாவி, இப்படிச் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரப் போகும் நேரத்தில், நீண்ட காலமாக மாற்றப் படாமல் பிய்ந்து கிடக்கும் பாத்ரூம் வாளியைப் பார்க்கிறார். அதைப் பார்த்துப் பரிதாபப் பட்டு இறுதியில் வாளியையே மாற்றி விடலாம் என்று முடிவு செய்வார்.

இதுவும், இதற்கு முன்பு வந்த பல கதைகள் போலவே, நிறம் மங்கி விட்டாலே வாளியை மாற்றியாக வேண்டும் என்று அடம் பிடிக்கும் நமக்கு, 'இப்படியும் பலருக்கு வாழ்க்கை இருக்கிறது மக்கா!' என்று எளிய மக்களின் வாழ்க்கையை நினைவு படுத்தும் ஓர் இடதுசாரிக் கதைதான்.

வீடெல்லாம் காசைக் குவித்து வைத்துக் கொண்டு அனுபவிக்காமல் இருக்கிறவர்களைப் பற்றி எவ்வளவோ விமர்சிக்கிறோம். அது வேறு கதை. அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவுக்குப் பொருளியற் சிக்கலில் இருக்கும் குடும்பங்களைப் பற்றி எத்தனை முறை நினைத்துப் பார்த்திருக்கிறோம். அப்படியே சுற்றி நோட்டம் விடுங்கள் - வாங்கி ஓரிரு முறைகள் மட்டும் உபயோகித்து விட்டு மறக்கப் பட்ட பொருட்கள் மட்டும் உங்கள் வீட்டுக்குள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். எண்ணிப் பார்த்தபின் எண்ணிப் பாருங்கள். இப்படி ஒரு கூட்டமும் அப்படி ஒரு கூட்டமும் ஒரே நாட்டில் அடுத்தடுத்து வாழ்வது பெரிய பாவமில்லையா?! அதுவே நம் சந்ததிகளின் எதிர் காலத்துக்குப் பெரிய அச்சுறுத்தல் அல்லவா?! இது போன்ற கதைகளைப் படித்து விட்டு, வாளிகள் வாங்கும் போதாவது நாமெல்லாம் கொஞ்சம் கணக்குப் போட்டுச் செலவழித்தால் நல்லதுதானே.

"நான் அப்படி வாங்காமல் விட்டு விட்டால் மட்டும் அவர்களின் கஷ்டங்கள் தீர்ந்திடுமா?" என்றுதானே கேட்கத் தோன்றுகிறது?! தீரும்! "எப்படி மக்கா?" என்பதுதானே உங்கள் கேள்வி?! இப்படித்தான் - பணம் இருப்பவன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, அப்படிக் கூடச் சொல்ல முடியாது, வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, வாழ்ந்து பழகத் தொடங்கி விட்டால், அதுவே அந்தச் சமூகத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாக மாறும். "எப்படியும்" சம்பாதிக்க வேண்டும் என்கிற பணத்தாசை கொஞ்சம் குறையும். அப்படிக் குறையும் போது, மனமாற்றங்கள் நிகழும் போது, இயல்பாகவே அந்தச் சமூகம் சமநிலையை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் (சமநிலையை அடைந்தே விடும் என்று சொல்ல முடியாது எனினும்). அதனால்தான் நம் மண்ணில், குறிப்பாக நம் அறிவாளிகள் மத்தியில், எளிமை அவ்வளவு மதிக்கப் படுகிறது. காந்தியையும் காமராசரையும் நல்லகண்ணுவையும் அவ்வளவு போற்றுகிறார்கள். 'அப்படி அவர்கள் இருந்ததால் யாருக்கென்ன பயன்?' என்ற கேள்வியை இன்னும் உள்ளே சென்று யோசித்துப் பாருங்கள். சரியான விடை கிடைத்து விடும்.

"அவரவர் விருப்பம் போல வாழ்ந்து விட்டுப் போக வேண்டியதுதானே! இந்த எளிமையான வாழ்க்கையை 'எளிமை' என்ற பெயரில் ஏம்ப்பா இவ்வளவு கணக்குப் போட்டுச் சிக்கலாக்குகிறீர்கள்?" என்று சிலர் கேட்பதும் புரிகிறது. எந்தக் கணக்கும் போடாமல், "என் வாழ்க்கையை நான் எப்படி வாழ்ந்தால் உனக்கென்ன?" என்று நாம் சிக்கலற்று வாழும் வாழ்க்கையால் எத்தனை பேரின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகிறது என்று புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொருளியல் சொல்லிக் கொடுப்பதில்லை நம் பள்ளிகளும் கல்லூரிகளும். அதனால் வந்த வினை இதெல்லாம்.

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டென்கிற நியூட்டனின் விதியை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டே செயல்பட முடிவதில்லை. ஆனால், எல்லோருமே எதைச் செய்யும் போதும் அதை நினைத்து நினைத்துப் பார்த்துக் கொள்வது இந்தப் பூவுலகின் எதிர் காலத்துக்கு நல்லது. அதிலும் குறிப்பாகப் பல எதிர்வினைகள் நம் கண்ணுக்குப் புலப்படாமல் நிகழ்பவை - நம் சிற்றறிவுக்குச் சிக்காமல் நிகழ்பவை - நம்மை நேரடியாக அடியாமல் சுற்றி வளைத்து மரண அடி அடிப்பவை. இதை உணர்ந்து கொண்ட சமூகங்கள் அவர்களின் எளியோருக்கும் சேர்த்துச் சிந்திக்கிறார்கள். உணராத நம்மவர்கள், தமக்காகவும் தம் சந்ததிக்காகவும் மட்டும் அரைகுறையாகச் சிந்தித்து, அவர்களை மென்மேலும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வழிவகை செய்து விட்டுச் செல்கிறார்கள். வலிமைதான் வாழும் என்று எளிதாகச் சொல்லி விட்டுத் தப்பிச் செல்கிற அளவுக்கு எளிய பிரச்சனையில்லை இது. பொருளியல் வலிமை என்பது ஒரு பரிமாணம் மட்டுமே. வேறு பல வலிமைகளும் இருக்கின்றன. அவை பதிலுக்குப் பொருளை அடித்துப் பிடுங்க அல்லது திருடிப் பிடுங்க ஆரம்பித்தால் அது நம் எதிர் காலத்துக்கு நல்லதில்லை அல்லவா?!

"பின்னணி இசை இன்றி..." என்ற கதையில் வேலைக்குப் போகும் சிறுவன் ஒருவனின் பிரச்சனைகள் பேசப்படுகின்றன. "தாமதம்" என்ற கதையில் குடிகாரப் பாண்டி என்பவனின் கதை பேசப்படுகிறது. "ஏழாம் திருநாள்" என்ற கதையில் தாய்ப்பாசம் அருமையாகப் பேசப்படுகிறது. தன் பிள்ளை உடல்நலம் சரியில்லாது படும் பாட்டைப் பார்த்து உயிரற்ற பிணமாக நடமாடும் நிம்மதியற்ற தாயின் வலி நன்றாகச் சொல்லப் பட்டுள்ளது. நல்ல வேளை, பிள்ளை பிழைத்து விடுகிறது கடைசியில். அதற்காக, தேவையில்லாமல் சோகம் புகுத்தாத தமிழ்ச்செல்வனின் பாணியை மீண்டுமொருமுறை மெச்சலாம்.

"அலையும் வாசம்" என்ற கதை ஏற்கனவே ஒருமுறை முன்பு படித்த நினைவு வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், கதையில் வரும் புளிய மரம். இளமைக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த அனைவருக்கும் புளியமரம் என்றதும் அதன் பின்னணியும் சேர்ந்து ஒரு புளியமரம் வந்து செல்லும் நினைவில். பெரும்பாலும் அந்தப் புளியமரத்துக்குப் பேய்த் தொடர்பு ஒன்றும் இருக்கும். முதல் முறையே இந்தக் கதையைப் படித்த போது அப்படியான நினைவொன்று வந்து சென்றதால் இந்த முறை மீண்டும் படிக்கும் போது பழகிய புளியமரம் பற்றிப் பேசுவது போல இருக்கிறது. பெரிய தெருக்கள் சந்தானது போல உணர்வது பற்றி நாகலாபுரம் பற்றிய என் இடுகையிலேயே எழுதியிருந்தேன். இந்த உணர்வைத் தமிழ்ச்செல்வனும் அவருடைய கதாபாத்திரமும் கூட அனுபவித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே. இலக்கியத்தின் உச்சகட்ட இன்பமே நம்மை அதற்குள் பார்க்க முடிகிற போது கிடைப்பதுதானே. சாத்தூரப்பனின் இளமைக் கால நட்பு என்னுடைய இளமைக்கால நட்புகளையும் நினைவு படுத்துவதாக இருந்தது. வாடா-போடா என்று சின்ன வயதில் பேசிய நண்பர்கள் இப்போது வாங்க-போங்க என்று பேசுவதைப் பார்த்து நெளிந்திருக்கும் அனுபவம் எனக்கும் உள்ளது. இந்தக் கதையில் சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் சிறுவர்களின் உலகம் பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். ஊருக்குள் கிரிக்கெட் வந்து விட்டது பற்றிப் பேசிக் கொண்டுள்ள வரிகளும் எங்கள் ஊருக்குள் கிரிக்கெட் வந்த காலத்தையும் அது பற்றி நாங்கள் பேசிக் கொண்டதையும் நினைவு படுத்தின.

மோர் ஊற்றும் முன் இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கட்டுமா என்று கேட்காததால் அத்தையின் பாசம் விட்டுப் போய் விட்டதோ என்று எண்ணும் மருமகனின் தவிப்பு மனதைத் தொட்டது. உணவின் மூலமும் உணவு பரிமாறும் விதத்தின் மூலமும் பாசத்தைக் காட்டுவதும் பாசத்தைப் புரிந்து கொள்ள முயல்வதும் நம் மண்ணின் பண்பாட்டுச் சுவாரசியங்கள். அது போலவே, நம் திருமண வீடுகளில் பெரும் பெரும் கோபங்களையும் கூட உப்புக் குறைவு - இனிப்புக் குறைவு என்ற புகார்களின் மூலம் கத்தி வெளிப்படுத்தும் நம் உறவினர்களையும் இந்த வரி நினைவு படுத்தியது.

"29 சொல்ல வருவது..." என்கிற கதை சமீப காலத்தில் எழுதிய கதை போலத் தெரிகிறது. திருநெல்வேலியில் ஒடுக்கப் பட்ட மக்கள் மீது காவற்துறை நடத்திய தாக்குதல் பற்றியும் தாமிரபரணியில் குதித்து உயிர் விட்ட அம்மக்களின் சோகங்கள் பற்றியும் பேசுகிற இக்கதை, கதையல்ல நிஜம். அப்படிக் கொல்லப்படுகிற ஓர் இளைஞன் மற்றும் அவனுடைய நாய் டைகர் (கிராமியத் தமிழ்நாட்டில் 'மணி'க்கு அடுத்த படியாக நாய்களுக்கு அதிகம் வைக்கப் பட்ட பெயர் டைகராகத்தான் இருக்க வேண்டும்!) ஆகிய இருவரையும் வைத்துச் சொல்லப் பட்டுள்ள  இக்கதை பயங்கரமான உணர்வுகளைக் கொடுக்கிறது. அவனை முடிந்த அளவு காத்து விட வேண்டும் என்று முயன்று போராடி, தானும் காவற்துறையிடம் சிக்கி அடி பட்டு உடை படுகிற டைகர் நாய், கடைசியில் அவனுடைய பிணத்துடனேயே 'கடைசி' வரை செல்கிறது. திருநெல்வேலிக்குச் சம்பந்தமில்லாத எங்கோ ஒரு கண்காணாத இடத்தில் அவன் புதைக்கப் பட அங்கேயே டைகரும் தங்கி விடுகிறது. திருநெல்வேலி சென்ற மகன் திரும்பவில்லையே என்று அவனைத் தேடி அலையும் அவனுடைய தாய், கடைசியில் நாயை வைத்து, அதனுடைய உதவியோடு, மகன் புதைக்கப் பட்ட இடத்தைக் கண்டு கொள்கிறாள். அவன் கொல்லப்பட்ட நேரமான பகல் 3 மணிக்கு தினமும் எழுந்து நின்று ஏதோவொரு திசையை நோக்கி கலேபரத்தோடு ஊளையிடும் நாய் ஒருவித அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது.

இந்த ஊர்வலங்கள், அடிதடிகள், தடியடிகள், கொலைகள்... இவையெல்லாம் எதற்கு நடக்கின்றன என்றே புரியாமல் கதறும் அவனுடைய தாய் நம்மை உலுக்கத்தான் செய்கிறாள். இந்த விடுதலைப் போராட்டங்கள் இன்னும் எவ்வளவு உயிர்களைத்தான் குடிக்கப் போகின்றனவோ நம் மண்ணில்?! குறைந்த பட்சம் இந்தத் தியாகங்கள், அவர்களின் தலைவர்களின் ஓரிரு பதவிகளுக்காகவும் வசதிகளுக்காகவும் அன்றி, அம்மக்களின் உண்மையான விடுதலைக்காகப் பயன்படுத்தப் படவாவது வேண்டும்.

"ஒரு பிரம்பு ஒரு மீசை" என்ற கதையும் சாதியத்துக்கு எதிரான பிரச்சாரம். தன் தொழில் நேர்மையாலும் கண்டிப்பாலும் ஊரெல்லாம் நல்ல பெயர் வாங்கிய ஆதிக்க சாதி வாத்தியார் மருது, ஏதோ ஒரு பிரச்சனையில் சாதிச் சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறார். அவர் அடிப்படையில் நல்லவர்தான். கண்டிப்பானவர் என்றாலும் சாதிக் கோடுகளைத் தாண்டி எல்லா மக்களிடமும் நல்ல பெயர் வாங்கியவர். படிக்கும் காலம் முழுக்கத் திட்டித் தீர்த்து விட்டு, படித்து முடித்துப் பெரியாள் ஆனதும் போற்றுவோமே, அப்படியான வாத்தியார் அவர். ஆனால், இந்தப் பிரச்சனையில் சிக்கியபின், சின்னாபின்னப் பட்டுப் போவார். எங்கும் எதிலும் தலை குனிந்திராதவர், போலீஸ், கோர்ட் என்று பல படிகள் ஏறியிறங்கி நாசப் படுவார். பயங்கரக் கெடுபிடியான மருது சாரையே மிரள வைக்கிற மாதிரியான ஆட்கள் எல்லாம் வந்து அவரை மிரள வைப்பார்கள். தாழ்த்தப் பட்ட மக்களின் பிரதிநிதியாக வரும் அறிவழகன் அல்லது அது போன்ற வேறு ஏதோ பெயர் கொண்ட ஒருவர் நம்மையும் கூட மிரள வைப்பார். இது போல இப்போது ஊருக்கு நாலு பேர் இருக்கிறார்கள். எல்லோருமே அதைப் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் எல்லோருக்குமே நல்லது. அப்படியானவர்களை நேரில் பார்த்துள்ளவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

ஒடுக்கப் பட்ட மக்கள் தமக்குள்ளேயே இன்னும் ஏற்றத்தாழ்வு பார்த்துக் கொண்டு, மூன்று பிரிவினர் மூன்று தனித் தனிக் குடியிருப்புகளாக வாழ்வது பற்றியும் போகிற போக்கில் அக்கறையோடு தொட்டுச் செல்கிறார். இது போன்ற வேறுபாடுகள்தாம் ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்துவோருக்கு எளிதாகக் கிடைத்து விடும் ஆயுதங்கள். ஊர் வாய்க்கு அப்படியான வாய்ப்பைக் கொடுக்காமல் வாழ்ந்து காட்ட வேண்டியது அம்மக்களின் முக்கியக் கடமையாக இருக்கிறது.

தான் பரந்த மனப்பான்மையானவராக இருந்த போதிலும் தன் சாதியாருக்குப் பயந்து பேருந்து நிறுத்தம் கட்டத் தன் இடத்தைக் கொடுக்க யோசிக்கிற மருது சார்களும் நிறைய நம் கிராமங்களில் இருக்கிறார்கள் (படித்தும் திருந்தாத முட்டாப் பயபிள்ளைகளும் இருக்கின்றன!). தன்னால் இவ்வளவு பெரிய பிரச்சனை உருவெடுப்பது கண்டு நொந்து நூலாகி, கடைசியில் அவர் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே நிற்பது, மனதை வலிக்க வைக்கிறது. கடைசியில் தன் மீசையை மழித்து விட்டு அவர் வெளி வரும் போது நமக்கு மேலும் வலிக்கிறது. இது கூட ஆதிக்கத்தின் அடையாளம் என்று யாரேனும் திட்டினால், நானும் மருது சார் போலக் கேட்டுக் கொள்ளத் தயார்தான். அவர் மீசையை மழித்துக் கொள்வதைக் குழப்பத்தை மழித்துக் கொள்வதாகச் சொல்வது சூப்பர். ஆனால், கடைசியில் இளைய தலைமுறையிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது என்பது போல அவர் எண்ணித் திருந்துவதாகக் காட்டியிருப்பது கொஞ்சம் இடிக்கிறது. உண்மையைவிடத் தொலைவில் போய், தமிழ்ச் சினிமாப் பாணியில் முடித்திருப்பது போலத் தெரிகிறது. அந்த அளவுக்கு யாரும் மனமாற்றம் அடையத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. அதிகபட்சம், 'தப்புப் பண்ணிட்டோமே!' என்று எண்ணித் திருந்தியதாகச் சொல்லலாம். அவ்வளவுதான்.

தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...