புதன், ஆகஸ்ட் 01, 2018

இந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து முறை இழுத்து மூடப்பட்ட பின்னும் தொடரும் ஸ்டெர்லைட் காப்பரின் உய்வு, இந்தியாவின் நெளிவுசுளிவான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளது. இப்போதைக்கு. எதிர்பார்த்தபடியே, ஒரு மாசுபடுத்தும் தொழிலுக்கு எதிரான 23 ஆண்டு காலப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர், அது ஒரு மாபெரும் மனித விலை கொடுத்துப் பெறப்பட்டது என்றாலும் கூட. ஆனால் தமிழகத்தின் இந்தக் கடற்கரை நகரத்தில் ஓர் அமைதியான கலக்கம் இருக்கிறது. இத்தோடு போராட்டத்தை நிறுத்திவிட வேண்டுமோ என்று ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 13 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட மே 22 காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அம்மக்களிடம் பேசிப் பார்க்கும் போது அந்த உணர்வு நன்றாகப் புலப்படுகிறது.

அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா லிமிடெடுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமான இந்த ஆலையை மூடக்கோரி, சுமார் 15,000 மக்கள் தெருக்களுக்கு வந்திருந்தனர். தாமிர உருக்கு என்பது மிகப்பெரும் மாசுபடுத்தும் செய்முறை. பிப்ரவரி மாதத்தில் ஸ்டெர்லைட் காப்பர் தன் உற்பத்தியை 0.4 மில்லியன் டன்களிலிருந்து 0.8 மில்லியன் டன்களுக்கு இரட்டிப்பாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து போராட்டங்கள் தொடங்கின.

மக்களின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, மே 24 அன்று இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து, மே 27 அன்று அதை ரூ. 20 இலட்சத்திற்கு உயர்த்தியது அரசு. ஆனால் அது சற்றும் உதவவில்லை. "அவர்கள் குடும்பத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு, அவர்களுக்குப் பணம் கொடுத்தால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேட்கிறார் தூத்துக்குடியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குமாரெட்டியாபுரம்தான் தாமிர ஆலைக்கு மிக அருகில் இருக்கும் கிராமம். அங்கிருந்துதான் பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. அம்மக்கள் வைக்கும் கோரிக்கை மிக எளிமையானது - அது, ஸ்டெர்லைட்டின் நிரந்தர மூடல்.

மே 23 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் மனுக்களை விசாரித்தபின் ஆலையை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தடை விதித்தது. அடுத்த நாள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (த.நா.மா.க.வா. - TNPCB) ஆலைக்குச் செல்லும் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டித்தது. மே 28 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாநில அரசின் ஆணைப்படி, ஆலைக்கு சீல் வைத்து, ஸ்டெர்லைட் காப்பர் நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவித்தார். 1974-ஆம் ஆண்டின் நீர்ப்பாசனச் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி நிலத்தடி நீரை மாசு படுத்தியதாக ஸ்டெர்லைட் மீது குற்றம் சாட்டிய த.நா.மா.க.வா.வின் ஏப்ரல் 9-ஆம் நாளைய ஆணைதான் மூடல் முடிவின் அடிப்படை. ஆனாலும் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்றே தூத்துக்குடி மக்கள் அஞ்சுகின்றனர். 2018-க்கு முன்பு, 1995-இல் ஆலை செயல்படத் தொடங்கியதில் இருந்து நான்கு முறை மூடப்பட்டது. ஆனால் எப்போதும் மீண்டும் திறந்துவிடுகிறது.

தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (தே.சு.பொ.ஆ.நி. - NEERI - ‘நீரி’) மற்றும் த.நா.மா.க.வா. போன்ற நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால், ஸ்டெர்லைட்டால் எப்படியும் இயங்கிக்கொண்டே இருக்க முடிகிறது என்கிறார்கள் இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் ஆர்வலர்கள். தற்போதைய மூடல் ஆணையை நீதிமன்றத்தில் எதிர்த்து மீண்டும் ஸ்டெர்லைட் திறந்துவிடும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 2002-இலிருந்து இந்தப் பிரச்சனையைக் கவனித்து வரும் எழுத்தாளரும் ஆர்வலருமான நித்யானந்த் ஜெயராமன், த.நா.மா.க.வா.வின் ஏப்ரல் 9 ஆணை என்பது தோல்வியடைவதற்காகவே வடிவமைக்கப்பட்டது என்றும் சட்டத்தின் சோதனையை அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஸ்டெர்லைட்டின் தவறுகளைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க முடியாவிட்டால், நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கும். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் இந்த ஆணையை தற்போதைய நிலைமையை நீர்த்துப்போக வைப்பதற்கான “கண்துடைப்பு” என்றே அழைத்துள்ளனர். மறுபுறம், அரசோ, அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்ப்புக்களைத் தூண்டிவிடுவதாக எதிர்க்கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்த எதிர்ப்புகளில் மிகவும் கலங்கிப்போய்த்தான், ஸ்டெர்லைட் எந்தத் தவறும் இல்லையென்று மறுக்கிறது. ஸ்டெர்லைட், மே 28 அன்று, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகவும் வெளிப்படைத்தன்மையோடும் தொடர்ந்து இயங்குகிற வகையிலுமே 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையை இயக்கியிருக்கிறோம்," என்று கூறியிருக்கிறது. அதிகாரிகள் மாசுபாடு குறித்து எந்தச் சான்றும் மேற்கோள் காட்டவில்லை என்பதால் தற்போதைய மூடலை அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் எதிர்க்கும் என்றே ஸ்டெர்லைட்டின் பக்கம் இருந்து ஊடகங்களுக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. இப்போதைக்குப் பொதுமக்களின் கோபம் குறையட்டும் என்று காத்திருக்கிறது. அவ்வளவுதான்.

3,500 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதோடு தன் வணிகப் பரிமாற்றங்களின் மூலம் 35,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் ஸ்டெர்லைட் கூறுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் தாமிரத்தில் 36 சதவிகிதம் இந்த ஆலைதான் உற்பத்தி செய்கிறது. இந்த மூடல், தாமிரத் தொழிலில் மட்டுமல்லாமல், வாகன உற்பத்தி போன்ற மேலும் பல உற்பத்தித் தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதன் தொழில் முக்கியத்துவமும் அந்தப் பகுதியின் பொருளாதாரமும் எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடும் சுகாதாரப் பாதிப்பும் உண்மை.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, 2008-இல், "தூத்துக்குடி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெடைச் சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள சுகாதார நிலை மற்றும் தொற்றாய்வு" [“Health Status and Epidemiological Study Around 5 km Radius of Sterlite Industries (India) Limited, Thoothukudi”] என்ற தலைப்பில் வெளியிட்ட ஓர் அறிக்கை, இந்தப் பகுதியில் உள்ள 50 விழுக்காடு மக்கள் நோய்கள் மற்றும் நீடித்த பிணிகளால் இறப்பதாகவும், 50 விழுக்காடு பெண்களுக்கு இரத்த சோகை இருப்பதாகவும் கூறுகிறது. 49 விழுக்காடு பள்ளிக்குழந்தைகள் எடை குறைவாகவும், 41 விழுக்காடு வளர்ச்சி தடைபட்டவர்களாகவும் இருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. "ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெண்கள், அவர்களில் பலர் 35 வயதுக்குட்பட்டவர்கள், நோய்த்தொற்றுகளுக்குப் பயந்து தங்கள் கருப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக்கொண்டுள்ளனர். குழந்தை கருப்பையில் உயிர்த்திருக்க முடியாமல் போனதால் பலர் கருக்கலைப்புக்கு உள்ளாகியுள்ளனர்," என்கிறார் குமாரெட்டியாபுரத்தைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மூச்சுத் திணறல்கள், தோல் மற்றும் கண் நோய்கள், கருச்சிதைவுகள், புற்றுநோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் பற்றிப் பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர் இம்மக்கள்.

தாமிர உருக்கு என்பது, காற்று, நீர் மற்றும் நில மாசுபாட்டை ஏற்படுத்துவது. இந்தச் செய்முறை, சுவாச நோய்களை உண்டாக்கும் கொடிய மாசுபடுத்தியான கந்தக ஈருயிரிகை (கந்தக டையாக்ஸைடு) வாயுவை வெளியேற்றுகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அறிக்கையில், 13 விழுக்காடு மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது சுற்றியிருக்கும் மற்ற பகுதிகளைவிட மிகவும் அதிகம். இந்த உருக்குச் செய்முறை, கதிரம் (ரேடான்), இரும்பு, செவ்விரும்பு (மாங்கனீஸ்), ஈயம், உள்ளியம், நைட்ரேட்டுகள், ஃபுளோரைடு ஆகியவற்றையும் வெளியேற்றுகிறது. இவை தொழிற்சாலைக் கழிவுகளின் வழியாக, நீர் ஆதாரங்கள் மற்றும் மண்ணை அடைகின்றன. உருக்குச் செய்முறையில் உள்ள வழக்கமான தூய்மைக்கேடு தவிர்த்து, 1997-க்கும் 2013-க்கும் இடையில் இந்தத் தொழிற்சாலை 27 தொழில்சார் விபத்துக்களையும் வாயுக் கசிவுகளையும் பார்த்துள்ளது, என்கிறார் ஜெயராமன்.

அந்தர்பல்டி

‘நீரி’ அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் ஸ்டெர்லைட் அதன் பொறுப்பிலிருந்து தப்ப உதவியுள்ளன
"அத்தனை கோளாறுகளுக்கும் பின்பும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் ஸ்டெர்லைட் தொடர்ந்து இயங்க முடிகிறது," என்கிறார் 1995-இலிருந்து இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சூழியலாளர்
ஃபாத்திமா பாபு. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி ஐந்து ஆய்வுகளை (1998,1999, 2003, 2005 மற்றும் 2011) நடத்தி வெவ்வேறு முடிவுகளை வெளியிட்டிருக்கும் ‘நீரி’.

இவற்றில் முதல் ஆய்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு 1998 நவம்பரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1996-இல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் செய்துள்ள மாசுபாட்டுக்கு எதிராக, இப்போது செயல்பாட்டிலில்லாத ‘சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை’ (National Trust for Clean Environment) என்கிற தொண்டு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை நீதிமன்றம் விசாரித்தது. இந்த அறிக்கை, ஆலைக் கட்டுமானத்தின் போதே ஸ்டெர்லைட்டால் மீறப்பட்ட சுற்றுச்சூழல் விதிகளைத் தெளிவாகக் கூறியது.

முதலாவதாக, ‘நீரி’ சொல்வதன்படியே, தாமிர உருக்கு போன்ற அபாயகரமான ஒரு தொழிற்சாலை ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திலிருந்து (Eco Sensitive Zone) 25 கி.மீ. தொலைவுக்கு மேல் இருந்திருக்க வேண்டும் எனும் போது, இந்த ஆலை ‘மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா’வில் (Gulf of Mannar Marine National Park) இருந்து 14 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டது. முறைப்படி அபாயகரமான மாசுபடுத்தும் தன்மையுள்ள ஆலைகளைச் இருக்க வேண்டிய பசுமை வளையத்தை 250 மீட்டரிலிருந்து வெறும் 25 மீட்டராகக் குறைக்க ஸ்டெர்லைட் ஏதோ ஒரு வகையில் த.நா.மா.க.வா.வை சரிக்கட்டியிருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை கண்டறிந்தது.

ஆனால், தொழிற்சாலைக்குள்ளும் அதைச் சுற்றிலும் ஈயம், நீலீயம் (காட்மியம்), மதிமம் (செலினியம்), உள்ளியம் (ஆர்செனிக்),வெளிமம் (மக்னீஷியம்), தாமிரம் ஆகிய நிலத்தடி நீர் மாசுபடுத்திகளை அனுமதிக்கத்தக்க அளவுகளுக்கும் அதிகமாகவே கண்டுபிடித்திருந்த போதும், முதல் அறிக்கைக்குப் பின் சில மாதங்களிலேயே, 1999 பிப்ரவரியில், ‘நீரி’, அதன் இரண்டாம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (Environment Impact Assessement - EIA) அறிக்கையில், ஸ்டெர்லைட்டுக்கு ‘சுத்தச் சான்றிதழ்’ (Clean Chit) கொடுத்தது. எடுத்துக்காட்டாக, ஆழ்துளைக் கிணறுகளிலும் தோண்டுகிணறுகளிலும் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளில் உள்ளியம் அனுமதிக்கத்தக்க அளவைவிடக் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக இருந்தது. "இதிலிருந்துதான் ‘நீரி’ காட்டில் மழை கொட்டத் தொடங்கியது. 1999-க்கும் 2007-க்கும் இடையில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கைகள் தயாரிக்கவே இந்த நிறுவனத்துக்கு ஸ்டெர்லைட் ரூ. 1.27 கோடி அளித்திருப்பதாக ‘நீரி’யில் பதிவு செய்த ஒரு தகவல் உரிமைக் (RTI) கேள்விக்கான பதிலில் தெரிகிறது,” என்கிறார் ஜெயராமன். இந்தக் காலத்தில் - 1999, 2003, 2005 ஆகிய மூன்று ஆண்டுகளில் - மூன்று சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. "இவற்றில் எதுவுமே சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி நடத்தப்பட்ட 1998 அறிக்கை போல இந்த நிறுவனத்தின் மீது கடுமையாக இருக்கவில்லை. ஏனென்றால், அந்த அறிக்கை ஒன்றுக்குத்தான் ஸ்டெர்லைட்டிடம் இருந்து ‘நீரி’ பணமே வாங்கவில்லை,” என்றும் கூறுகிறார் ஜெயராமன்.

1996-இல் தொடுத்த வழக்குக்கான தீர்ப்பு, செப்டம்பர் 2010-இல் வந்தது, அதில் சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட ஆணையிட்டது. அந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மூன்றே நாட்களுக்குள் அதற்குத் தடை வாங்கியது ஸ்டெர்லைட். உச்ச நீதிமன்றம், இன்னொரு மதிப்பீடு செய்யுமாறு ‘நீரி’யை மீண்டும் கட்டளையிட்டது, அதன்படியே மதிப்பீடு செய்து ஜூன் 2011-இல் அறிக்கை சமர்ப்பித்தது ‘நீரி’. இம்முறை வியப்பூட்டும் வகையில், அறிக்கையின் "கவனிப்புகள்" (Observations) பிரிவில், அவர்கள் ஆய்வு செய்த நிலத்தடி நீர் மாதிரிகளில் உள்ளியம், துத்தநாகம், ஃப்ளோரைடு ஆகிய எந்தக் குறிப்பிடத்தக்க மாசுபடுத்தியும் இல்லை என்று கூறினர். ஆனால் அதே ஆய்வில் வழங்கப்பட்ட தரவுகள், பீசோமெட்ரிக் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட 12 மாதிரிகளில் ஆறில் ஃப்ளோரைடின் அளவு அனுமதிக்கத்தக்க அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறின. ஒரு மாதிரியில், ஃப்ளோரைடு அனுமதிக்கத்தக்க அளவைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இருந்தது.

2011 அறிக்கையில், ‘நீரி’, ஆலைக்கு அருகிலேயே 5-23 பெக்கரல்/மீ3 (பெக்கரல் என்பது கதிரியக்கத்தின் ஓர் அலகு) அளவு கதிரியக்க வாயுவான கதிரம் (ரேடான்) இருப்பதைக் கண்டறிந்திருந்தாலும், அனுமதிக்கத்தக்க அளவுகளுடன் ஒப்பிடுவதற்கு எந்தத் தேசியத் தரமோ சர்வதேசத் தரமோ இல்லை என்றது. இது தவறு. ஐக்கிய அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (United States Environment Protection Agency) வெளிப்புறக் கதிர வாயுக்கான வரையறை நிலை 14.8 பெக்கரல் / மீ3. விண்மத்தின் (யூரேனியம்) இயல் கதிரியக்கச் சிதைவிலிருந்து கதிர வாயு வெளியேற்றப்படுகிறது, இதில் ஸ்டெர்லைட்டால் பயன்படுத்தப்படும் தாமிரத் தாதுக்களும் விண்மத்தால் அசுத்தப்படுத்தப்படலாம்.

2011 அறிக்கை, ஆலையைச் சுற்றிலும் மிகப்பெரும் அளவில் இரும்பு, வெளிமம் (மெக்னீசியம்), சுண்ணம் (கால்சியம்), கந்தக உப்பு (சல்பேட்டுகள்) ஆகியவை இருப்பதையும் கண்டுபிடித்தது. ஆனால், ‘நீரி’யோ, உச்சநீதிமன்றம் ஒரு கடுமையான தண்டனையை வழங்குவதற்கு உதவும் வகையில் குற்றச்சாட்டுகளை வைக்காமல், இந்த நிலைமையை மேம்படுத்திக்கொள்ளுமாறு ஸ்டெர்லைட் நிறுவனத்தை அறிவுறுத்தியது. குறிப்பிட்ட சில சான்றுகளில் அதிக அளவு மாசுபடுத்திகள் இருப்பதற்கு ஸ்டெர்லைட்டை நேரடியாகக் காரணம் சொல்ல முடியாது என்று கூடக் குறிப்பிட்டது. அதிகப்படியான இரும்புச் செறிவுக்கு, கரும்பொன்ம உயிரகை (டைட்டேனியம் ஆக்சைடு) தயாரிக்கும் கில்பர்ன் கெமிக்கல்ஸ் லிமிடெட் போன்ற அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளைக் குறை கூறியது. அதன் விளைவாக, உச்சநீதிமன்றம் அதன் 2013 தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளும் சுற்றுப்புறத்திலும் மாசுபாட்டை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டுவிட்டு, ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூடல் ஆணையை ஆதரிக்காமல் விட்டது. மாறாக, ஸ்டெர்லைட்டை ரூ. 100 கோடி அபராதம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டது. உச்ச நீதிமன்றத்தில், ‘நீரி’யும் த.நா.மா.க.வா.வும் ஸ்டெர்லைட் ஒரு மாதிரி ஆலையாக மாறுவதற்கான ஆலோசனைகளை அளித்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பின்பற்றுவதாகவும் ஸ்டெர்லைட் கூறியது. ஆனால் ஸ்டெர்லைட் மாசுபாட்டைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் இப்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் ஜெயராமன்.
ஸ்டெர்லைட் அவமதித்த இன்னொரு நெறிமுறை உள்ளது. 2011 ‘நீரி’ அறிக்கையில், ஸ்டெர்லைட் அதன் செயல்பாட்டுப் பகுதி 102.5 ஹெக்டேர் என்றும் கழிவுப்பொருள் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலும் 65 ஹெக்டேர் கூட்டிக்கொள்ள விரும்புவதாகவும் கூறியது. 2012-இல், த.நா.மா.க.வா. மற்றும் ‘நீரி’ ஆகியவற்றின் கூட்டு ஆய்வு அறிக்கையோ, ஆலையின் செயல்பாட்டுப் பகுதி 172.13 ஹெக்டேர் எனவும், ஆனால் கழிவு மேலாண்மை எதுவும் செய்யப்படவில்லை எனவும் கூறியது. "அதைவிடக் கொடுமை என்னவென்றால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேண்டுகோளுக்கிணங்கச் செய்யப்பட வேண்டிய நிகழ்நேரக் கண்காணிப்பை (Real-time Monitoring) த.நா.மா.க.வா. 2013-இலேயே நிறுத்திவிட்டது,” என்கிறார் சென்னையில் உள்ள எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவருமான ஜீவ கரிகாலன். இதுதான் ஆர்வலர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. த.நா.மா.க.வா. ஏற்கனவே கண்காணிப்பதை நிறுத்திவிட்டதால், அதன் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இனி உச்ச நீதிமன்றத்தில் நிற்காது. இதைத்தான் ஸ்டெர்லைட் பெரிதும் நம்பியிருக்கிறது போலும்.

“இந்தியாவில் மாசுக் கட்டுப்பாடு நிறுவனங்கள் அவற்றின் திறமையின்மைக்காகப் பழிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல” என்கிறார் தழைம (நைட்ரஜன்) மாசுபாடு சார்ந்த ஆய்வுகளில் பணிபுரியும் அறிவியலாளர்களின் அமைப்பான தில்லியைச் சேர்ந்த இந்தியத் தழைமக் குழுமத்தின் (Indian Nitrogen Group) தலைவரான என். ரகுராம். எடுத்துக்காட்டுக்கு, ‘நீரி’ அமைப்பே, சந்தேகத்திற்கிடமான சுற்றுச்சூழல் அறிக்கைகள் தயாரித்ததற்காகப் பல முறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 1993-இல், தாஜ் மகால் மீதான மாசுபாட்டின் விளைவுகள் பற்றிய இரண்டு அறிக்கைகள் தயாரித்து, அதற்கு அங்குள்ள உள்ளூர்த் தொழிற்சாலைகளைக் குறை கூறியது, ஆனால் அந்தப் பகுதியில் உள்ள பெரிய மாசுபடுத்தும் ஆலையான மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அவ்வறிக்கைகளில் இருந்த மாசுபாடு பற்றிய தரவுகளில் பல முரண்பாடுகள் இருந்தன. 2014-இல் கர்நாடக மாநிலத்தில் உள்ள அகநாஷினி கழிமுகத்தில் அமைந்துள்ள தடாதி துறைமுகக் கட்டமைப்பு பற்றிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கையில் இது போலத்தான் குளறுபடி செய்தது ‘நீரி’. கழிமுகத்தின் தொன்மையையும் அழகையும் மறைப்பதற்காக, அந்தப் பகுதியில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களைப் பற்றிக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டி கழிமுகத்தின் பரப்பளவை மிகைப்படுத்திக் காட்டியது மதிப்பீட்டுக் குழு.

"ஸ்டெர்லைட் காப்பர் ஒரு மக்கள் இயக்கத்தின் காரணமாகவே மூடப்பட்டிருக்கிறது, த.நா.மா.க.வா.வோ ‘நீரி’யோ அதற்குக் காரணமல்ல. “இந்தியா சுற்றுச்சூழலில் உலகுக்கே முன்னோடி என்று படம் காட்ட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஓர் எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்," என்கிறார் ரகுராம். "நம் கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாட்டில் உள்ள இரகசியத்தன்மை அவற்றை பல்லில்லாதவையாக்கி விட்டிருக்கின்றன. அறிவியல் முன்னேற வேண்டுமானால் அதற்குப் பொதுமக்களின் கண்காணிப்பு முக்கியம்," என்றும் சொல்கிறார் அவர்.

மாசுபடுத்துபவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்
கட்டுப்பாட்டு முறைமைகள் முழுமையாகப் பழுதுநீக்கப்பட்டு தற்சார்பாக்கப்பட வேண்டும்
நாட்டின் சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட். நம் கட்டுப்பாட்டு அமைப்புகள் எளிதில் வளைத்துப்போடத் தக்கவையாக இருக்கின்றன. அவை மக்களின் பக்கம் நிற்காமல் தொழிற்துறையின் பக்கமே நிற்கின்றன. இந்த ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, மாவட்டத்தை, குறிப்பாக அதன் நீர் வளங்களை, சுத்தம் செய்தலே தூத்துக்குடியின் தேவை. இதில் ஆலையை மூடியாயிற்று.

"அதற்கான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்ற போதும் நிலத்தடி நீர் மறுசீரமைப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று," என்கிறார் ‘நீரி’ நீர்த் தொழில்நுட்பத்தின் முன்னாள் அறிவியலாளர் மனிஷ் ரகாதே. இதில் நிலத்தடி நீரை வெளியில் எடுத்தல், சிகிச்சை செய்தல், மீண்டும் உள்ளே செலுத்துதல் என்று மூன்று வேலைகள் உள்ளன. நீண்ட காலமாகத் தொடர்ந்து வகைதொகையில்லாமல் மாசுபடுத்தப்பட்ட நீர் ஆதாரங்களை அசுத்தம் நீக்கிக் கொண்டுவருவது என்பது தொழில்நுட்பரீதியாகக் கடினமான வேலை என்பதால் இது மிகவும் விலையுயர்ந்ததாகவும் நீண்ட காலம் எடுப்பதாகவும் இருக்கலாம். சில மாசுபடுத்திகளுக்கு நீரில் நீண்ட பிடிப்பு நேரம் உள்ளது. அது சில நேரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீளும். நீரின் ஆதாரம் (நிலத்தடி நீரா மேற்பரப்பு நீரா என்பது), நீரின் அளவு, நீர் ஆழம், நீரில் உள்ள வேதிப்பொருளின் வகை மற்றும் அளவு உட்படப் பல்வேறு காரணிகளைச் சார்ந்து சிகிச்சை மாறுபடும். "தூத்துக்குடியில் நடந்துள்ளது போன்ற நிலத்தடி நீர் மாசுபாடு, இந்தச் சமுதாயத்திற்கு ஒரு சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல் இழப்பு," என்கிறார் ரகாதே.

ஸ்டெர்லைட், அதன் மாசுபாட்டைக் குறைத்துக்கொள்வதற்கும் கழிவுகளை இதைவிட நன்றாக நிர்வகிக்கவும் தயங்குவதற்கு, அவர்களின் தாமிர உற்பத்திக்கான பொருளாதாரக் காரணங்கள் (உற்பத்திச் செலவு, ஆதாயம் போன்றவை) முக்கிய காரணியாக இருக்கலாம். ஒரு நிறுவனம் சந்தையில் போட்டியிடக்கூடிய நிலையில் இருப்பதற்கு, அதன் உற்பத்தி செலவினங்களை இயன்ற அளவு குறைவாக வைத்திருக்க வேண்டும், எனவே, கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க வேறு பல வழிமுறைகளைப் பயன்படுத்தப்பட வேண்டும். "நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய நிர்பந்திக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான தண்டனைகள் இங்கே தேவையான அளவு வலுவாக இல்லை. மாசுபடுத்துவதும் நீதிமன்றத்தில் போராடுவதும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதும் ஸ்டெர்லைட்டுக்கு மலிவாக இருந்ததால், 20 ஆண்டுகளாக நம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,” என்கிறார் தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொண்டு மையத்தின் (Centre for Science and Environment) துணைப் பொது இயக்குனர் சந்திர பூஷன். கொள்திறன் மேம்பாடு, கூடுதலான தற்சார்பு ஏற்படுத்தல் ஆகிய இரண்டு கூறுகளிலும் நம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் பெரும் நிறுவனச் சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன.

"அரசு மற்றும் த.நா.மா.க.வா., அவர்கள் பிறப்பித்த ஆணையை அவர்களே ஆதரித்து நிற்கும் மனத்திட்பத்தோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே ஸ்டெர்லைட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். தற்போதைய ஆதாரங்களை அவர்கள் தற்காத்து வாதாடினால், ஆலை மூடப்பட்டே இருக்கும். அவர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், ஸ்டெர்லைட் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்," என்கிறார் ரகுராம். "இந்தக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் 1974-இல் வடிவமைக்கப்பட்டவை, எனவே பெருமளவில் இவற்றை முழுப்பழுதுபார்ப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. 21-ஆம் நூற்றாண்டின் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன," என்கிறார் பூஷண்.

[இந்தக் கட்டுரை முதன்முதலில் ‘டவுன் டு எர்த்’ (Down To Earth) ஜூன் 16-30 இதழில் ‘தொடர் குற்றவாளி’ (‘Repeat offender’) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது].

விதிமீறல்களுக்குப் பின்னும் உய்வித்திருத்தல்
புத்தகத்தில் உள்ள அனைத்து விதிகளையும் மீறியுள்ளது ஸ்டெர்லைட், ஆனாலும் அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு எழும்பி நிற்கிறது

 • 1992: ஸ்டெர்லைட் முதன்முதலில் மகாராஷ்டிரத்தில் ஒரு தாமிர உருக்கு ஆலைத் திட்டத்தை முன்வைத்தது. அதற்கு ரத்னகிரி மாவட்டத்தில் 202 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 • 1993: மகாராஷ்டிரா மாநில அரசாங்கக் குழு இந்த ஆலை மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அபாயத்தை அளிக்கிறது என்று கண்டுபிடித்தது. மாவட்ட ஆட்சியர் கட்டுமானத்தை நிறுத்திவைத்தார்.
 • 1994: அதைத் தமிழ்நாடு அனுமதிக்கிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (த.நா.மா.க.வா.) சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமான மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்கு வெளியேதான் ஆலை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ‘மறுப்பின்மைச் சான்றிதழ்’ (NOC) அளித்தது. அத்தோடு ஸ்டெர்லைட்டை ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்துமாறும் கேட்டுக்கொண்டது.
 • ஜனவரி 1995: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (MoEF) ஸ்டெர்லைட்டுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது. ஸ்டெர்லைட் அதுவரையிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கவேயில்லை.
 • மே 1995: ஸ்டெர்லைட் கட்டுமானத்தைத் தொடங்க அனுமதித்து த.நா.மா.க.வா. ‘நிறுவல் ஒப்புதல்’ (Consent to Establish) கொடுக்கிறது. ஸ்டெர்லைட்டை ஒரு துரிதச் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்துமாறும் கேட்டுக்கொண்டது. மன்னார் வளைகுடாவில் இருந்து 14 கி.மீ. தொலைவில் ஆலை கட்டப்படுகிறது.
 • 1996: ஸ்டெர்லைட் ஆலை நிலத்தடி நீரையும் காற்றையும் மாசுபடுத்தக் கூடாது என்றும் ஆலையைச் சுற்றிலும் 25 மீட்டர் தொலைவில் பச்சை வளையம் அமைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளோடு ஆலை செயல்படுவதற்கான உரிமத்தை த.நா.மா.க.வா. வழங்குகிறது.
 • நவம்பர் 1998: சென்னை உயர் நீதிமன்றம், ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்யுமாறு தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்துக்குக் (‘நீரி’) கட்டளையிடுகிறது. ஸ்டெர்லைட் தொடர்ச்சியாகப் பல சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை மீறியுள்ளது என்பதை ‘நீரி’ கண்டறிகிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட ஆணையிடுகிறது.
 • டிசம்பர் 1998: சென்னை உயர்நீதிமன்றம் அதன் முந்தைய ஆணையை மாற்றிக்கொண்டு, ‘நீரி’யை இன்னோர் ஆய்வு நடத்துமாறு கட்டளையிடுகிறது.
 • பிப்ரவரி 1999: ‘நீரி’, தொழிற்சாலை அதன் முழுக் கொள்திறனோடு இயங்குவதற்கும் விரிவான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.
 • மார்ச் 1999: த.நா.மா.க.வா., வாயுக் கசிவுகள் காரணமாக ஏற்பட்ட சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பாக உள்ளூர் மக்கள் கொடுத்த புகார்கள் மீது ஸ்டெர்லைட்டுக்கு ‘சுத்தச் சான்றிதழ்’ வழங்கி, கொள்திறனை 40,000 டன்களில் இருந்து 70,000 டன்களுக்கு உயர்த்த அனுமதிக்கிறது.
 • ஜூலை 2003: ஒன்பது ஆண்டு காலத் தாமதத்துக்குப் பின் ஸ்டெர்லைட் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கிறது.
 • செப்டம்பர் 2004: உச்ச நீதிமன்றக் கண்காணிப்புக் குழு (Supreme Court Monitoring Committee - SCMC) ஸ்டெர்லைட்டைப் பரிசோதித்துவிட்டு, ஆலை உற்பத்தி விரிவாக்கத்துக்கான அனுமதி வழங்கப்படக்கூடாது என்று பரிந்துரைக்கிறது.
 • செப்டம்பர் 2004: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஸ்டெர்லைட்டின் கொள்திறனை விரிவாக்க அனுமதியளிக்கிறது.
 • நவம்பர் 2004: ஸ்டெர்லைட் சட்டவிரோதமாக உரிமம் அளிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்குக்கும் மேலான தாமிரம் தயாரிப்பதாக த.நா.மா.க.வா. சொல்கிறது.
 • 2005: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் உச்ச நீதிமன்றத் கண்காணிப்புக் குழுவும், விதிமீறல்கள் இருப்பினும் ஸ்டெர்லைட்டைச் செயல்பட அனுமதிக்குமாறு த.நா.மா.க.வா.வைக் கேட்டுக்கொள்கின்றன.
 • செப்டம்பர் 2010: சென்னை உயர் நீதிமன்றம், 1996 வழக்கில் ஸ்டெர்லைட்டை மூட ஆணையிடுகிறது.
 • அக்டோபர் 2010: சென்னை உயர் நீதிமன்ற ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்கிறது.
 • மார்ச் 2013: மூச்சுத் திணறல், இருமல், கண் பிரச்சனைகள் ஆகியவற்றுக்குக் காரணமான வாயுக் கசிவு பற்றி மக்கள் புகாரளித்ததால், த.நா.மா.க.வா. இன்னொரு முறை ஸ்டெர்லைட்டை மூட ஆணையிடுகிறது. மற்ற தொழிற்சாலைகள்தான் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்று அந்த ஆணையை ஸ்டெர்லைட் எதிர்க்கிறது. மூடல் திரும்பப்பெறப்படுகிறது.
 • ஏப்ரல் 2013: ஸ்டெர்லைட் தூத்துக்குடியை மாசுபடுத்தியது என்று ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்குகிறது,. ஆனால், பொருளாதாரம் மற்றும் வேலைகள் மீதான அதன் விளைவு காரணமாக உச்ச நீதிமன்றம் ஆலையை மூடாமல், ஸ்டெர்லைட்டுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்கிறது.
 • ஏப்ரல் 2018: ஸ்டெர்லைட்டின் சுற்றுச்சூழல் நெறிமுறைகள் மீறல் அடிப்படையில் ஆலையின் ‘செயல்படுவதற்கான ஒப்புதலை’ த.நா.மா.க.வா. புதுப்பிக்க மறுக்கிறது.
 • மே 23, 2018: த.நா.மா.க.வா., ஸ்டெர்லைட்டுக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஆலையின் விரிவாக்கத்தைத் தடை செய்கிறது.
 • மே 28, 2018: தமிழ்நாடு அரசு, ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிடுகிறது.

www.downtoearth.org.in/news/sterlite-typifies-all-that-s-wrong-with-environmental-governance-in-india-60877
Translation of an article written in 'Down to Earth' magazine by Akshit Sangomla...
* 2018 ஆகஸ்ட் கணையாழி இதழில் வெளியானது 

வெள்ளி, ஜூலை 27, 2018

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கடந்த ஜூன் மாத இதழைக் கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வந்த இதழ் ஒன்றுக்கு அவரைப் பற்றிய நல்லவைகளைப் பற்றி மட்டுமே எழுதுமாறு ஒரு கோரிக்கை வந்தது. அது நமக்கு அவ்வளவு எளிதில்லை. மூச்சுப் பிடித்து முக்கித் தக்கி எழுதி அனுப்பியதையும், "இதுதான் ஒங்க ஊர்ல நல்லபடியா எழுதுறதா?" என்று கேட்டு ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இயல்பிலேயே திராவிட அரசியல் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றபோதும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களை நிராகரிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருக்கும் தன் பக்க நியாயத்தை எடுத்துவைக்க சட்டம் இடம் கொடுப்பது போல், அரசியலிலுமே கூட அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் இன்று போன்ற ஒரு நாளில்.

*
கருணாநிதி என்றால் இப்படித்தான் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும்பாலும் மிகவும் எதிர்மறையானதாகவே இருக்கிறது. அவர்கள் பார்த்ததை வைத்து அவர்கள் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. ஈழப் போரின் போது அவரின் செயல்பாடுகள், ஒவ்வொருவராகக் குடும்ப உறுப்பினர்களை உள்ளே கொண்டுவந்து கட்சியை முழுக்க முழுக்கத் தன் குடும்பத்தின் சொத்தாக்க முயன்றது, மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் போட்ட நாடகங்கள், ஏதோவொரு குழுவை வைத்து மாதம் ஒரு பாராட்டுவிழா நடத்த வைத்து அதில் திளைத்தது, பத்திரிகையாளர்கள் கேட்கும் மிக முக்கியமான கேள்விகளுக்குக் கூட வார்த்தை வித்தை காட்டுவது என்று எல்லாமே அவராலும் அவரின் ஆட்சியாலும் நேரடிப் பயன்பெற்றவர்களைத் தவிர இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மற்ற இளைஞர்களுக்குப் பார்க்கவே அருவருப்பாக இருக்கும் அனுபவங்களே. அதற்கு முந்தைய இரு தலைமுறைகளும் கூட அவரை வில்லனாக வைத்து நடைபெற்ற அரசியலையே பார்த்தவை. ஆனாலும் இந்தத் தலைமுறையைவிட அவரை நாயகனாகவும் பார்க்கக் கூடுதல் வாய்ப்புப் பெற்றவர்கள் முந்தைய இரண்டு தலைமுறையினர். அவர் தன் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் இந்த வேளையில், மற்றவர்களைவிடத் திட்டமிட்டே குறிவைத்து வில்லனாக்கப்பட்ட அவர் வாழ்விலிருந்து அவர் நாயகனாகப் பிரகாசித்த சில தருணங்களை நினைவுகூர்ந்து உரையாடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்றும் “திராவிடத்தால் வாழ்ந்தோம்” அல்லது “எழுந்தோம்” என்றும் இரு வேறு விதமான முற்றிலும் எதிரெதிர்க் கருத்தும் நோக்கமும்  கொண்ட முழக்கங்கள் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்தக் காலத்தில், அரசியல் இயக்கங்கள் - கட்சிகளின் எழுச்சிக்கும் பிழைப்புக்கும் இது போன்று ஒரு கருத்தியலை முழுமையாகத் தூக்கிப்பிடிக்கும் அல்லது மறுதலிக்கும் முழக்கங்கள் மிகவும் முக்கியம் என்ற போதும், பொது மக்கள் நமக்கு இரு சாராரின் அரசியலையும் விருப்பு-வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா இயக்கங்களின் வரலாற்றிலும் சில தனிமனிதர்களின் சாகசங்களே பெரும்பாலான பக்கங்களை நிரப்புகின்றன என்ற வழக்கத்தில் இருந்து திராவிட இயக்க வரலாறும் தப்ப முடியாது. இன்னும் சொல்லப் போனால், மனிதர்களுக்கான இயக்கம் - மனிதர்களால் நிரம்பியிருக்கிற இயக்கம் ஒன்றில் மனிதர்களின் உளவியலைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி சில தனிமனிதர்களைப் பிரதானமாக முன்னிறுத்தியும் அவர்களின் தனிமனிதக் கவர்ச்சியைப் பயன்படுத்தியும் மேலெழுந்த இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் தலைசிறந்த மூன்று தலைவர்கள் பெரியார் - அண்ணா - கருணாநிதி. நம் வசதிக்கேற்றபடி சில அளவுகோல்களை வளைத்துக் கொண்டால், திராவிட அரசியலில் இவர்கள் மூவரையும்விடப் பெரிதளவில் வெற்றி பெற்றவர்கள், எம்ஜியாரும் ஜெயலலிதாவும் என்றும் சொல்லலாம். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு திராவிட அரசியலின் வரலாற்றை எழுத முடியாது என்ற போதும், பெரியார் - அண்ணா - கருணாநிதி ஆகிய மூவரையும் ஏற்றுக்கொள்ளாத அல்லது வெறுக்கும் பலருடைய மனதையே வென்றவர்கள் இவர்கள் இருவரும் என்ற போதும், அதைத் திராவிட இயக்கத்தின் வெற்றியாகக் கொண்டாட முடியாது. திராவிட இயக்கத்தை வெளியிலிருந்து போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற நிலையில் உள்ளிருந்தே நீர்த்துப் போக வைக்கப் பயன்பட்டவர்கள்தாம் இவர்கள் இருவரும் என்கிற உண்மை புரிபடுகிற கட்டத்தில், அவர்களையும் சேர்த்து எழுதப்படும் திராவிட இயக்கத்தின் வரலாறு வேறுவிதமானதாகிவிடும் என்பது நமக்கு எளிதில் புரிந்துவிடும்.

திராவிட இயக்கத்தின் பலமான அடித்தளம் பெரியாரால் போடப்பட்டது. அதன் ஆழம் - அகலம் இரண்டுக்கும் அவரே காரணம். அவரே நினைத்துப் பார்த்திராத விதத்தில் அதை அப்படியே அலேக்காகப் பெயர்த்துக்கொண்டு போய், அதன் மேல் ஒரு வீட்டைக் கட்டியது அண்ணாவின் சாதனை. தேர்தல் அரசியலையே வெறுத்த பெரியாரின் பிள்ளைகள் ஏன் அவர் போட்ட அடித்தளத்தைப் பயன்படுத்தியே அதற்குள் நுழைந்தார்கள் என்ற கேள்விக்கான பதில், “அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றே நம் மக்களுக்கு வேண்டியதையெல்லாம் பெற்றுக் கொடுக்க எளிய வழி என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள்” என்று சொல்ல விரும்பினால் அப்படியே சொல்லிக்கொள்ளுங்கள், “அதெல்லாமில்லை, அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றே நமக்கு வேண்டியதையெல்லாம் பெற்றுக்கொள்ள ஒரே வழி என்று அவர்கள் உணர்ந்த போது சுதாரித்துக்கொண்டார்கள்” என்று சொல்ல விரும்பினால் அப்படியும் சொல்லிக்கொள்ளுங்கள். எப்படியிருப்பினும் அதன் விளைவாக இரண்டும் நிகழ்ந்திருப்பதை மறுக்கவே முடியாது. பெற்றுக்கொள்ளவும் செய்தார்கள், பெற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். எத்தனையோ பேர் தம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் தாம் அரசியல் செய்வதாகச் சொன்னார்களோ அவர்களில் ஒரு சாராருக்கேனும் அந்த முன்னேற்றத்தைப் பெற்றும் கொடுத்திருக்கிறார்கள். இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதால் அண்ணா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இயக்கத்துக்கும் என்று ஒரு பண்பாடு இருக்கும். அப்படி ஓர் அரசியல் இயக்கத்தைக் குடும்பம் போல நடத்தும் பண்பாட்டைத் திராவிட இயக்கத்துக்குள் கொண்டு வந்தவர் அண்ணா. அது மட்டுமில்லாமல், பெரியாரின் பாதையில் பயணிக்கமாட்டேன் என்று வெளியே வந்தவர், பெரியாரை விமர்சிப்பதில் தன் நேரத்தை வீணாக்காமல், என்றென்றைக்கும் அவர்தான் தன் தலைவர் என்று சொல்லிக்கொண்டே அவருக்குப் பிடிக்காத தேர்தல் அரசியலில் முழுவீச்சாக இறங்கியதும், வென்று ஆட்சியைப் பிடித்த பின்பும் கூட அதே நிலைப்பாட்டைப் பேணியதும் அண்ணா தமிழக அரசியலுக்குக் கற்றுக் கொடுத்த புதிய பாடங்கள். அண்ணாவின் ஆட்சி ஒன்றரை ஆண்டுகள்தாம் நடந்தது. தன் உழைப்பால் பெற்ற அதிகாரத்தின் முழுப் பலனையும் அனுபவிக்கும் முன்பே அவர் மறைந்துவிட்டார். அப்படிப் பெரிதாக அனுபவிக்க வேண்டும் என்று திட்டங்கள் ஏதும் அவருக்கு இருந்தனவா என்றும் தெரியவில்லை.

அண்ணாவின் மறைவுக்குப் பின், “அண்ணாவுக்குப் பின் யார் என்ற கேள்வி வரவேயில்லை, அது நெடுஞ்செழியன் என்றுதான் எல்லோருமே எண்ணிக்கொண்டிருந்தார்கள், அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கட்சியை முழுக்கவும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்தான் இந்தக் கருணாநிதி” என்பதுதான் நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கும் வரலாறு. அதை மறுப்பவர்களும் உண்டு. “நெடுஞ்செழியனுக்கு இருந்த தலைமைப்பண்பு பற்றாது. அதனால்தான் கட்சி அவர் பின்னால் போகவில்லை. அவர் பின்னால் போயிருந்தால் அவரால் கட்சியை இவ்வளவு காலம் காப்பாற்றியிருக்க முடியாது” என்று பலவிதமான கருத்துக்கள் சொல்லும் திராவிட இயக்கத்தவரும் உண்டு. அதை நெடுஞ்செழியனின் பிற்கால அரசியல் உறுதிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் 500 வாக்குகள் மட்டும் பெற்றுப் படுதோல்வி அடைந்த நெடுஞ்செழியனைவிட, தி.மு.க.-வின் முதல் தேர்தல் முதல் இன்றுவரை, தன்  வாழ்நாளில் எந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு முறை கூடத் தோல்வியடையாமல் தொடர்ந்து 13 முறை தமிழகத்தின் வெவ்வேறு தொகுதிகளில் நின்று வென்றிருக்கிற கருணாநிதி ஏதோவொரு வகையில் திறமையானவராகத்தானே இருக்க வேண்டும்!

“ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தேர்தல் வரும். அதில் நம் கட்சி வெல்லும். நாம் ஆட்சி அமைப்போம்” என்று தமக்குக் கிடைத்துக்கொண்டிருந்த வெற்றியை அதற்காகப் பெரிதும் எந்த உழைப்பையும் போடாமல் அனுபவித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பியது இந்த மெத்தனம்தான். “மக்கள் தொண்டு யார் செய்ய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும். நான்தான் அதற்குத் தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன். மக்களும் அப்படியே நினைக்கிறார்கள். அதனால் இயல்பாகவே அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பதற்றப்படுவதற்கு - வியூகம் வகுப்பதற்கு - வேலை செய்வதற்கு தேவை என்ன இருக்கிறது?” என்று சொல்லிக்கொண்டு களநிலவரம் புரியாமல் இருந்தார்கள். அந்த நேரத்தில், குடும்பம் போன்ற ஓர் அமைப்பைக் கட்டியெழுப்பி, அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றையே தம் ஒற்றைக் குறிக்கோளாக முன்வைத்து, அதை நோக்கி ஓர் அணியாக இணைந்து உழைத்து, ஆட்சியைப் பறித்துக் கொண்டு போனது தி.மு.க. அதே தி.மு.க.-வுக்குள் இருந்த நெடுஞ்செழியனும் காங்கிரஸ் கட்சி போலத்தான் இருந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு குடும்பம் போல இருந்த ஓர் அமைப்பு என்பதால் கூடுதல் மெத்தனம் இருந்திருக்க வேண்டும்.

“பெரிய அண்ணன் இறந்துவிட்டார், வரிசைப்படி அடுத்த இடத்தில் இருக்கும் அண்ணன் நான்தானே!” என்று அவர் அயர்ந்து இருந்த வேளையில், குடும்பத்தில் முக்கியமான இன்னொருவர் களத்துக்குள் வந்து, குடும்பத்தின் மற்ற முக்கிய உறுப்பினர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகச் சந்தித்து, “நம் பெரிய அண்ணன் இறந்துவிட்டார். நம் குடும்பம் ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறது இப்போது. அதற்கடுத்த இடத்தில் இருக்கும் அண்ணன் நல்ல மனிதன்தான். ஆனால் அவருக்கு சாமர்த்தியம் போதாது. உனக்கே தெரியும், நம் குடும்பம் வாழ்வாங்கு வாழ - மென்மேலும் தழைத்தோங்க அவரிடம் நல்ல திட்டங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதோ, என்னிடம் இன்னின்ன திட்டங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் செய்தால் மொத்தக் குடும்பமும் இப்போதைவிடப் பல மடங்கு நல்வாழ்வு வாழும். அதில் உனக்கு இந்த இடம், எனக்கு இந்த இடம், அவருக்கு அந்த இடம். இரவெல்லாம் தூங்காமல் யோசித்து எல்லாம் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும் என்பதல்ல என் நோக்கம், உங்களில் ஒருவன் நான். பெயருக்குத்தான் நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேனே ஒழிய, இந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த நீங்கள் ஒவ்வொருவரும் தலைவர் போல நடத்தப்படுவீர்கள். இவ்வளவு நாட்களும் நீயும் நானும் ஊண் - உறக்கமில்லாமல் கட்டி வளர்த்த இயக்கம் அழிந்து போய்விடாமல், உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்யவே இந்தப் பொறுப்பில் நான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே வாருங்கள், எல்லோரும் சேர்ந்து உழைக்கத் தொடங்குவோம், அது ஒன்றே நம் மறைந்த அண்ணனுக்கு நாம் செய்யும் மரியாதை” என்று வளைத்துப் போடுகிறார். எது தலைமைப்பண்பு என்று தினுசு தினுசாக விளக்கங்கள் வைத்திருக்கும் - எல்லாவிதமான தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும் பார்த்துவிட்ட நம் தலைமுறைக்கே களத்தில் இறங்கி வேலை செய்யும் இரண்டாமவரின் அணுகுமுறைதானே பிடித்திருக்கிறது! அதுவும் நம் நல்வாழ்வுக்கும் சேர்த்துத் திட்டங்கள் வைத்திருக்கிறவராக வேறு இருக்கிறார்! அப்படியிருக்கையில், தலைவன் என்றாலே தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தே பழகிப் போயிருந்த தலைமுறைக்கு அது முற்றிலும் புதிய அணுகுமுறையாக இருந்திருக்கும்தானே! அங்குதான் அவரின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. எல்லா நிறுவனங்களிலும் இயக்கங்களிலும் அமைப்புகளிலும் இருக்கிற எல்லோருமே மனிதர்கள்தாம். இவை எல்லாவற்றிலும் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே கேள்வி அல்லது முதல் கேள்வி, “இதில் எனக்கு என்ன இருக்கிறது?” என்பதே. அந்த உளவியலைப் புரிந்து கொண்டு அதைத் தனக்கும் தன் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது தலைவனின் சாமர்த்தியம். இதில் பெரும் வெற்றி பெறுகிறார் அண்ணாவின் தம்பி கருணாநிதி. இதுதான் இன்றுவரை “உனக்கும் வெற்றி - எனக்கும் வெற்றி” என்ற தி.மு.க.வின் வெற்றிச் சூத்திரமாக இருக்கிறது. அதனால்தான் என்ன செய்தாலும் அதைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய விசுவாசம் மிக்க ஒரு தொண்டர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் கட்சியாக தி.மு.க. இருக்கிறது. பெரியார் போட்டு வைத்திருந்த அடித்தளத்தில் அவருக்கே பிடிக்காத வீட்டைக் கட்டிப் போட்டுப் போனவர் அண்ணா என்றால், அதைப் பெரும் மாடமாளிகையாக மாற்றி, அதைச் சுற்றிப் பூங்காக்களையும் தோட்டங்களையும் நிறுவிவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர் கருணாநிதி. அண்ணா எப்படிப் பெரியாரைக் கடைசிவரை கைவிடவில்லையோ, அது போலவே கருணாநிதி கடைசிவரை அண்ணாவைக் கைவிடவே இல்லை. ஜெயலலிதா போல, எங்கும் என் பெயர் எதிலும் என் பெயர் என்று திராவிட இயக்கம் என்றாலே நான்தான் என்றொரு வரலாற்றை உருவாக்கியிருக்க முடியும். உயிரோடு இருக்கும் ஒருவருக்குச் சிலை என்றால் அது தமிழ் நாட்டில் முதன்முதலில் கருணாநிதிக்குத்தான் வைக்கப்பட்டது என்பார்கள் (அதையும் எம்ஜியார் இறந்த நாளில் உடைத்துப் போட்டுவிட்டார்கள்). அப்படிப்பட்டவர், ஊர் ஊருக்கு இருக்கும் பெரியார் சாலை, அண்ணா சாலை, பெரியார் நிலையம், அண்ணா நிலையம், பெரியார் நகர், அண்ணா நகர் என்று அனைத்தையும் தன் பெயருக்கு வைத்துக்கொள்ளாமல் தம் முன்னோரை முன்னிறுத்தியது முக்கியமானது. தாம் விரும்பிய தேர்தல் அரசியலையே விரும்பாத ஒருவரையும், ஒன்றரை ஆண்டுகள் மட்டும் ஆண்டுவிட்டுப் போன ஒருவரையும் எதற்கு வரலாறு மறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாமே!

“அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அரசியலுக்கும் திரைப்படத்துக்கும் என்ன தொடர்பு? ஏன் தமிழ் நாட்டில் மட்டும் எப்போதும் இந்த இரு துறையினரே மீண்டும் மீண்டும் அரசியலுக்குள் வருகிறார்கள்?” போன்ற கேள்விகள் இங்கே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டிருக்கின்றன. இது தமிழ் நாட்டின் தனித்தன்மை அல்லது கோளாறு என்று எளிதில் முடித்துவிடக் கூடிய விவாதம் அல்ல. ஒரு வகையில் நாம் இதில் முன்னோடி என்றும் கொள்ளலாம். நாளை இதையே மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம். அப்படித்தான் எத்தனையோ இங்கிருந்து போயிருக்கின்றன. அவை பற்றியெல்லாம் நாம் அதிகம் பேசுவதில்லை. திராவிடக் கட்சிகள் இதைச் செய்து கெடுத்தன - அதைச் செய்து கெடுத்தன - மக்களைச் சோம்பேறிகளாக்கின என்று பேசுபவர்கள்தாம் அதையே பல பத்தாண்டுகள் கழித்து அவர்களுக்குப் பிடித்த வெளியூர்க் கட்சிகளும் கட்சிக்காரர்களும் செய்யும் போது சாணக்கியம் - சாமர்த்தியம் என்று கூச்சநாச்சமில்லாமல் பேசிப் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறார்கள். அரசியல்வாதி மக்களுக்காகச் செயல்படுவது மட்டுமின்றி தொடர்ந்து மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறவனாகவும் இருக்க வேண்டியுள்ளது. எனவே அவனுக்குப் பேச்சாற்றல் தேவைப்படுகிறது. இங்கே இருப்பவர்கள் எல்லாம் வாயிலேயே வடை சுடும் மனிதர்களை அடையாளம் காணத் தெரியாத மக்கள் என்றோ மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் எல்லாம் பேச்சைப் பார்த்து ஏமாறாமல் செயலைப் பார்த்து முடிவு செய்பவர்கள் என்றோ முடிவு கட்ட வேண்டியதில்லை. எளிய மனிதர்களையும் உரையாடலில் உள்ளடக்கிச் செய்யப்படும் அரசியல் நடப்பதால் இங்கே பேச்சாற்றல் தேவைப்படுகிறது. அதைவிட முக்கியமாக உரையாடல் என்ற ஒன்றே இங்கேதான் தொடங்கியிருக்கிறது. ஓரளவு வாசிக்கும் பழக்கம் உள்ள மக்கள் இருப்பதால் எழுத்தாற்றல் தேவைப்படுகிறது. அதனால்தான் இங்கே இந்தத் திறமைகளைப் பயன்படுத்தும் - எப்போதும் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும் இரு பெரும் துறைகளான கலையும் இலக்கியமும் தொடர்ந்து அரசியலுக்கு ஆள் அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. மக்களாட்சிக்கே நாம் தகுதியற்றவர்கள் என்றாகிவிட்டால் அது வேறு. மக்களாட்சிதான் நம் முறைமை என்றால், எல்லா மக்களையும் அதற்குள் கொண்டுவருவதுதானே முறை. அதைத்தான் திராவிட இயக்கம் இங்கே சாதித்திருக்கிறது. அண்ணாவும் கருணாநிதியும் எளிய மக்களுக்காக எழுதிக் குவித்த இலக்கியங்களும் கதை-வசனங்களும் சாதித்திருக்கின்றன. திரைப்படத்துறையின் கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு இந்த மக்களுக்குத் தலைவனாகிவிட முடியும் என்பது ஒருபுறம் என்றால், அவர்களுக்குப் புரிகிற முகங்களைக் காட்டி அவர்களை அரசியலுக்குள் அழைத்து வந்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அந்த வகையில், தன் கதைகள் வழியாகவும் திரைப்பட வசனங்களின் வழியாகவும் தொடர்ந்து மக்களோடு உரையாடிக்கொண்டிருந்த கருணாநிதி, அந்தத் தொடர்பைத் தன் அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், தன் எழுத்துக்கள் வழியாக இது எதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் கிடக்கும் கடைக்கோடிக் குடிமகனையும் அரசியலுக்குள் இழுத்தும் வருகிறார். இது அவர் காலம் முழுக்கவும் தொடர்கிறது. கடைசிவரை முரசொலி மூலம் அவரது தோழர்களோடும் தம்பிகளோடும் உரையாடிக்கொண்டே இருக்கிறார். இப்படியான உரையாடல் மரபுதான் இந்தியத் துணைக்கண்டத்தில் வேறெங்கும் பேசப்படாத அளவு இங்கே சமூக நீதி பேசப்படுவதற்கான காரணம். “திராவிட இயக்க எழுச்சியின் பயனாக அவர்களுடைய கலையும் எழுத்தும் மட்டுமே தூக்கிப் பிடிக்கப்பட்டன, மற்றவர்களின் தரமான படைப்புகளும் இலக்கியமும் மட்டம் தட்டப்பட்டன” என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது அப்படியே இருந்தாலும், கலையும் இலக்கியமும் எளிய மக்களுக்குமாக எடுத்துச் செல்லப்பட்டது இவர்களின் காலத்தில்தான்.

கருணாநிதியின் இளமைக்கால அரசியல் வாழ்விலும் அதற்கு வெளியே செய்த இன்னபிற சாகசங்களிலும் பங்கெடுத்து உடன் பயணித்த கண்ணதாசன், தன் நூல்களில் தனிப்பட்ட முறையில் அவரைத் தாறுமாறாக விமர்சிக்கிறார். ஆனால் அவரின் திறமைகளை அங்கீகரிக்கவும் செய்கிறார். தன் ‘வனவாசம்’ நூலில் கல்லக்குடி தொடர்வண்டி மறியல் போராட்டம் பற்றி விவரிக்கையில், அவரின் ஒருங்கிணைக்கும் திறமைகள் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார். முதலில் நேருவுக்கு இடதுசாரிகள் பெரும் தலைவலியாக இருக்கிறார்கள். அது நாடு முழுக்க இருந்த பிரச்சனை. அதன் பின்பு டெல்லிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுப்பது தமிழகத்தின் திராவிட இயக்க எழுச்சிதான். ‘அரசாங்கம் அல்லது ஆளுங்கட்சி என்பது, அதன் கடமையை அல்லது அது தன் கடமை என்று நினைப்பதை அதன் போக்கில் செய்து கொண்டிருக்கும், பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எதிர்த்து உரையாற்றுவதோடு எதிர்க்கட்சிகளின் கடமை முடிந்துவிட்டது’ என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், இங்கிருந்துதான் எதிர்ப்பு அரசியல் என்றால் எந்த எல்லைவரை செல்லலாம் என்று மொத்த இந்தியாவுக்கும் பாடம் எடுக்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரின் போது எங்கள் தெருக்களில் பீரங்கிகள் வந்தாலும் பின்வாங்க மாட்டோம் என்று பேசிய தைரியசாலிக் கருணாநிதியை இந்தத் தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தனக்குச் சரியெனப் பட்ட எதையும் தடாலடியாகச் செய்த ஜெயலலிதாவுக்கு முன், அதனாலேயே என்னவோ, எல்லோரையும் சரிக்கட்டிப் போகிற -  எல்லாத்திலும் வாக்குக் கணக்குப் பார்த்து நிதானமாகச் செயல்படுகிற கருணாநிதி வில்லனாகவே பட்டார். இதில் ஜெயலலிதா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்துவது கூட அல்ல, அதற்கும் மேலாக ஓரடி போய், “அதுதான் சரியான அணுகுமுறை - அதுதான் தலைமைப்பண்பு - நிர்வாகத்திறன்” என்று வாதிடுகிற - பிரச்சாரம் செய்கிற ஒரு கூட்டம், அவருக்கு முக்கியமான இடங்களில் வாய்த்திருந்தது. அது கருணாநிதிக்குக் கட்சிக்குள் மட்டுமே இருந்தது.

வில்லன் பாத்திரம் அவருக்குப் புதிதல்ல. எம்ஜியார் நாயகன் என்பதால் அவர் இருக்கும்வரை அவரை எதிர்த்த இவர் வில்லனாகவேதான் இருந்தார். எம்ஜியார் அளவுக்கு இவர் மக்கள் மனத்தைக் கவரவில்லை. அதற்கு எம்ஜியாரின் திரைப்பட முகம் உதவியது என்பது ஒருபுறம் சரி என்றாலும், அவருடைய அரசியல் பாணியும் ஆட்சி முறையுமே மக்களைக் கவர்வதாகவே இருந்தது. எப்போதும் மக்களைக் கவர்ந்து கொண்டே இருப்பதே தன் வாழ்நாளின் ஆகப்பெரும் பணியாகச் செய்தவர் அவர். எம்ஜியாரின் ஆட்சியிலும் ஊழல்கள் இருந்தன என்றாலும் அவர் இவரைவிடப் பெரிய ஊழல்வாதியாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் எம்ஜியார் ஒருபோதும் கொள்கைசார் அரசியலோ வளர்ச்சிசார் அரசியலோ செய்யவில்லை. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதுவெல்லாம் செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் செய்தார். யாரையெல்லாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டுமோ அவர்களையெல்லாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார். டெல்லிக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடுகள் எடுத்ததில்லை. இவருக்கோ அப்படியல்ல. என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் கட்டிப் போட்டது போல மயங்கிக் கிடக்க இவர் ஒரு திரைப்பட நடிகர் அல்லர். அரசியல்ரீதியாக ஏதாவது செய்துகொண்டே இருந்தால்தான் மக்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமலேயே கட்சியைக் கட்டிக்காத்தது அப்படித்தான். தோற்கவே தோற்காத தலைவர் எம்ஜியார் என்பது நடந்த கதை. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தோற்றிருந்தால் என்ன ஆகியிருப்பார் என்ற கேள்வி ஒன்று இருக்கிறதே. அதற்கான பதில் என்ன? கருணாநிதியைப் போல களத்தில் நின்று கட்சியைக் காப்பாற்றியிருப்பாரா? ஜெயலலிதா போல அடுத்த தேர்தல் வரும்வரை கொடநாடு போன்று ஏதோவோர் இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போயிருப்பாரா?

அதிலும் முக்கியமாக கருணாநிதியின் கொள்கைசார் அரசியல் என்பது குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு எதிரான வெறுப்பு அரசியல். அதுவும் பெருமளவு அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த ஒரு குழுவுக்கு எதிரானது. அதுதான் அவரை மேலேற்றியது. அதனால் அது கொடுக்கும் சிக்கல்களையும் அவர்தானே சமாளித்தாக வேண்டும். மத்திய அரசிலும் சரி, மாநில அரசினுள்ளும் சரி, பத்திரிகை உலகிலும் சரி, இவருக்கு எதிரான சக்திகள் எப்போதும் இவரது தோல்விகளையும் குறைபாடுகளையும் ஊதிப் பெரிதாக்கிக்கொண்டேதான் இருந்தன. அவர் ஊழலற்ற ஆட்சி கொடுத்தாரா இல்லையா என்பதல்ல இப்போதைய வாதம். ஊழலற்ற ஆட்சி என்பதே பெரும் பித்தலாட்டம். சுதந்தர இந்தியாவில் இடதுசாரிகளைத் தவிர்த்து எந்தக் கட்சியுமே ஊழலற்ற ஆட்சி கொடுத்ததில்லை. “அவர்கள்தான் ஆட்சியே நடத்தவில்லை, ஆட்சி நடத்தினால்தானே ஊழல் செய்ய முடியும்!” என்று ஒரு கேள்வி வேறு  இருக்கிறது. அது போகட்டும், அப்படி இருக்கையில், ஒரு கட்சி அல்லது தலைவனின் வெற்றி-தோல்வியை ஊழல் என்ற ஒற்றைக் கூறு கொண்டு அளவிடுவது பெரும் தவறு. ஊழலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் தன் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பணம் சேர்ப்பது. இது பெரும்பாலான கட்சிகளும் தலைவர்களும் செய்கிற ஊழல்தான். ஆனாலும் இதிலும் சிலர் செய்வது மட்டும் பெரிதாகப் பேசப்படுவதும் சிலர் செய்வதைப் பேசாமலே விட்டுவிடுவதும்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அரசியல். இன்னொன்று, ஒருபுறம் தான் ஊழலுக்கு எதிரானவன் - ஊழலற்ற ஆட்சியாளன் என்றொரு பிம்பத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டு, மற்றொரு புறம் தன்னை அரசியலில் தக்கவைத்துக் கொள்வதற்கு வசதியாக தனியார் நிறுவனங்களோடும் அதிகார மையங்களோடும் திரைமறைவு உறவுகள் வைத்துக்கொள்வது - தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்கு நியாயமற்ற - சட்டத்துக்குப் புறம்பான உதவிகள் செய்வது. இதில் தலைவரின் வங்கிக் கணக்குக்கோ அவரது குடும்பத்துக்கோ பணம் போகாது. கட்சிக் கணக்குக்கோ அல்லது தேர்தல் நேரத்தில் வேறொரு வகையிலோ பணம் இறைக்கப்படும். இதுவும் ஊழல்தான். இது ஊழல் இல்லை அல்லது இதைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பது போல நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் கருணாநிதி கடுமையாக வழுக்குகிறார். சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையாகட்டும், சமீபத்திய அலைக்கற்றை ஊழல் ஆகட்டும், எப்போதுமே அவருடைய ஊழல் முதல் வகையைச் சேர்ந்தது என்று மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ப்பிக்கப்படுகிறது. அதற்கு எதிரான அவரின் விளக்கங்கள் ஒருபோதும் எடுபடவேயில்லை.

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற அண்ணாவின் வசனமே அர்த்தமிழந்து போய்க் கிடக்கிறது இன்று. “வடக்கு வாடுகிறது, தெற்கு தேறுகிறது” என்று வேண்டுமானால் சொல்லலாம். சமூக நீதி என்று மட்டும் இல்லை, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் எளிய மக்களுக்குச் சென்றுசேரவில்லை அங்கே. அவர்களின் அரசியல் கட்சிகள், அவர்கள் சிறிதும் சிந்தித்துவிடாதபடி, நாகரீக வாழ்வுக்குச் சற்றும் தொடர்பில்லாத பிரச்சனைகளை எழுப்பி அவர்களை மேலும் மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் புரிந்துகொள்ள மனித வளர்ச்சிக் குறியீட்டு ஆய்வுகளையும் புள்ளிவிவரங்களையும் புரட்ட வேண்டுமென்றில்லை. இந்தி பேசும் வடமாநிலம் ஒன்றுக்கு ஓரிரு நாட்கள் பயணம் செய்துவிட்டு வந்தால் போதும். அல்லது அங்கிருந்து இங்கே வேலை செய்ய வந்திருக்கும் நம் அலுவலகத் தோழர்களிடம் நாலு வார்த்தை பேசினால் போதும். இந்த வளர்ச்சிக்கு எது காரணம்? இயல்பாகவே நம் மக்களிடம் இருந்த அறிவாற்றலும் வளர்ச்சி தாகமும் தவிர்த்து, இடையில் இருபது ஆண்டுகள் ஏதோதோ நாடகங்கள் போட்டு மத்திய ஆட்சியில் வளமான துறைகளைப் பிடுங்கிய சாமர்த்தியமும் இதற்கு ஒரு காரணம்தான். அப்படிப் பெறப்பட்ட வளமான துறைகளின் மூலம், கட்சியும் வளமடைந்தது - அமைச்சர்களும் வளமடைந்தனர் - தமிழகமும் வளமடைந்தது. நம்மை வளமாக வைத்துக்கொள்ள ஒரே வழி, நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் வளத்தின் சுவையைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பண்பாடு தி.மு.க.-வின் பண்பாடு. கருணாநிதி தி.மு.க.-வினருக்குக் கற்றுக் கொடுத்த பண்பாடு. அதுதான் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு போன்று ஜெயலலிதாவின்  ஆட்சிக்கென்று எப்படிச் சில நற்கூறுகள் உள்ளனவோ, அது போலவே கருணாநிதியின் ஆட்சிக்கென்று சில சிறப்புக் கூறுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எப்போதும் ஏதோவொரு வளர்ச்சிப்பணி செய்துகொண்டிருப்பது. சாலைகள், பாலங்கள், பேருந்து நிலையங்கள், தொழிற்பூங்காக்கள், சமத்துவபுரம், உழவர் சந்தை, காப்பீட்டுத் திட்டம் என்று எத்தனை எத்தனையோ பணிகள் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. அதை எல்லாம் அப்படியே மறந்துவிட்டு, “திராவிடக் கட்சிகள் தமிழகத்தைப் பாழாக்கிவிட்டன” என்று குருட்டடியாக ஏதாவது சொல்வது, மற்ற மாநிலங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் பேசுவது.

இதற்கெல்லாம் மேலாக அவர் தமிழக அரசியலுக்குச் செய்த பெரும் பணி ஒன்றிருக்கிறது. எப்படி, உயிருள்ள போதே சென்னை மாநகரில் தன் சிலையையும் தன் பெயரில் ‘கலைஞர் கருணாநிதி நகரும்’ கண்டு மகிழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதாவைப் பார்த்தபின், ‘நான் இவர் போல் பெயர்ப்பித்து பிடித்தவன் இல்லை - மனிதர்களை மதியாதவன் இல்லை’ என்று நிரூபிப்பதற்காகவே தன்னை மென்மேலும் முதிர்ச்சியான ஒரு தலைவராகக் காட்டிக்கொண்டாரோ, அது போலவே, தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் டமால் டுமீல் என்று இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எவருமே செய்திராத - பார்த்திராத கொடுமைகளையெல்லாம் கூச்சமில்லாமல் செய்த ஜெயலலிதா, அதையும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து திரிந்த தன் ரசிகர் கூட்டத்தின் உற்சாகத்தையும் மீறி, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்த போது, தன்னை மேலும் முதிர்ச்சியுடைய ஒரு தலைவராகக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார். அதற்குக் காரணம் அவருக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்த கருணாநிதி தனக்கென்று தெளிவான சரக்கு வைத்துக்கொண்டிருந்தார். அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால் அதற்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது இவருக்கு. அதனால்தான், “நான் பாப்பாத்தி” என்று சட்டமன்றத்தில் சொன்னவரால், அதன் பின்பு 69% இட ஒதுக்கீடு மற்றும் சங்கராச்சாரியார் வழக்கு போன்ற பிரச்சனைகளில், “கருணாநிதி கூட இதைச் செய்திருக்கமாட்டார்” என்று சொல்லும் வகையில் நடந்துகொள்ள முடிந்தது. “பிரபாகரனைக் கொண்டுவந்து தூக்கிலிடுவேன்” என்று சொன்னவரை, “தனி ஈழம்தான் தீர்வு என்றால் அதையும் கோரத் தயங்கமாட்டோம்” என்று சொல்ல வைத்தது. அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் விரட்டி விரட்டி அடித்தவரை, “அம்மா உணவகம்” போன்று மக்கள்நலத் திட்டங்களின் பக்கம் இழுத்து வந்தது. காமராஜர் கொடுத்த நல்லாட்சியை மறக்கடிக்கும் அளவுக்கு கருணாநிதி நல்லாட்சி கொடுக்கவில்லை என்றாலும், அப்படியான தோற்றத்தை இவரால் மக்களுக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது. அந்த அளவுக்கு யாரும் காற்றில் வீடு கட்ட முடியாது. அப்படியானால் ஏதோ ஒன்று மக்களுக்குக் கிடைத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் அவர் சாதனை.

நிறைவாக, இப்போது ஏதோ இந்து மதம் பெரும் எழுச்சி பெற்றுக்கொண்டிருப்பதாக ஒருசாரார் நம்புகிறார்கள் அல்லது நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். ஒரேயோர் ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்திருக்கிற அரசியல் எழுச்சி என்பது அத்தனை ஆயிரம் ஆண்டு வயதுடைய ஒரு மதத்தின் எழுச்சியாக முடியுமா (அப்படிச் சொல்வதே சரியா என்று கூடத் தெரியவில்லை) அல்லது எல்லா ஆட்சியதிகாரம் சார்ந்த அரசியல் எழுச்சிகளைப் போலவே இதுவும்  ஐந்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கூட இல்லாமல் போகுமா என்பதற்கான விடை காலத்திடம்தான் இருக்கிறது. மன்மோகன் சிங் கொண்டுவந்த வளர்ச்சி எல்லோருக்குமானதா என்ற கேள்வி  போலவே, இந்து மதத்தின் இந்த எழுச்சி இந்து என்று சொல்லப்படுகிற எல்லோருக்குமானதா என்றொரு கேள்வியும் ஒருசாராரால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதத்துக்கு உள்ளே இருக்கும் கோளாறுகளைக் கேள்வி கேட்டுவிடாதபடிப் பார்த்துக்கொள்ளத்தான் வெளியே எதிரிகளை உருவாக்கி இந்த எழுச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை. உலக மதங்களிலேயே ஒப்பற்ற மதம் இந்து மதம்தான் என்று சொல்பவர்கள் ஒருபுறம் என்றால், அதே இந்து மதத்தில் பிறந்து தான் இந்து என்று நம்பவைக்கப்பட்டதே பித்தலாட்டம் என்று சத்தம் போட்டுச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா மதவாதிகளையும் போலவே குறைபாடே அற்ற மதம் எங்கள் மதம் என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் எல்லா விளக்கங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பலர் கூட ஏற்றுக்கொள்ளாத ஒரு கோளாறு இங்கே இருக்கிறது. அது, சாதி அடிப்படையிலான உயர்வு தாழ்வைக் கட்டிக் காக்க வேண்டியதன் நியாயம். கலவரம் செய்வதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் தேவைப்படும் கீழ்சாதிக்காரன், அடுத்து அதிகாரத்தில் பங்கு கேட்டே தீருவான். அதையும் ஓரளவுக்குக் கொடுத்து அவனைத் திருப்திப்படுத்திவிடலாம். அடுத்து, “நாம் எல்லோரும் சமம்தானே!” என்றொரு கேள்வியையும் கேட்டே தீருவான். முதலில் காரியம் ஆகும்வரை, “ஆமாம்” “ஆமாம்” என்று சொன்னாலும், என்றோ ஒரு நாள், “அப்படியெல்லாம் இல்லை, நீ வேறு, நான் வேறு, உனக்கும் எனக்கும் வெவ்வேறு பணிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துக்கொள். ஆனால் இந்தப் பணியை நான் மட்டும்தான் செய்ய வேண்டும்” என்று எல்லாக் குரல்களும் இல்லாவிட்டாலும், ஒருசில குரல்களாவது பொறுக்க முடியாமல் சொல்லத்தான் செய்யும். அன்று கலகம் வரத்தான் செய்யும். அதற்கான விதையைப் போட்டது பெரியார். அதற்கு அரசியல் வடிவம் கொடுத்து அதை அரசாணையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல் முதலமைச்சர் கருணாநிதி. சாதி தமிழகத்தின் பிரச்சனை மட்டும் அல்ல. மொத்த இந்தியாவின் பிரச்சனை. அதைப் பற்றிப் பெரிதளவில் பேசிய அம்பேத்கரின் மாநிலத்தில் கூட இவ்வளவு சாதிக்கப்படவில்லை. தமிழ்நாடு சாதித்திருக்கிறது. மனிதன் நாகரீகம் அடைய அடைய இது மீண்டும் மீண்டும் மேலே வரப்போகும் பிரச்சனை. இப்போதுதான் கேரளாவில் வந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதெல்லாம் நடக்க இன்னும் ஐம்பதாண்டுகள் கூட ஆகலாம். ஆனால் வந்தே தீரும். அப்படி வரும் போதெல்லாம் கருணாநிதி பேசப்படுவார்.

செவ்வாய், ஜூலை 03, 2018

அற்புதமது

எல்லோரும்
அதை
அருமை
அற்புதம்
என்றார்கள்

அதை
பார்த்திராதவர்கள்
அனுபவித்திராதவர்கள்
பாவம் செய்திருக்க வேண்டும்
சபிக்கப்பட்டவர்களாயிருக்கக் கூடும்
என்றார்கள்

அப்படித்தான் இருக்குமோ என்றஞ்சி
அதைப் பொய்ப்பிக்க விரும்பி
நானும் சென்று பார்த்தேன்
அனுபவித்தேன்

அப்படியொன்றும்
அருமையும்
அற்புதமும்
அதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு

ஆனாலும்
பார்க்காததற்கே
பாவம் செய்திருக்க வேண்டும்
சபிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றவர்கள்
பார்த்துவிட்டு
அருமை மறுத்தால்
என்னவெல்லாம் சொல்வார்களோ

அதற்குப் பின்னே
ஆமாம்
அருமைதான்
அற்புதந்தான்
என்று
மாற்றிச் சொல்வதற்குப் பதில்
இப்போதே சொல்லிவிடலாம்

ஆகா!
என்னே அருமை அது!
அற்புதமது!!

சனி, ஜூன் 30, 2018

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங்

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங்

நரேந்திர மோதி ஆதரவாளரும் கட்சியின் பிரச்சார ஆய்வாளருமான ஒருவர் விளக்குகிறார்
‘இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.’

அரசியல் உரையாடல் ஆகக் கீழான புள்ளியில் இருக்கிறது, குறைந்தபட்சம் என் வாழ்நாளில் இதுதான் ஆகக் கீழான புள்ளி. கண்மூடித்தனமான சார்புநிலைப்பாடு நம்ப முடியாத அளவில் இருக்கிறது. என்ன ஆதாரம் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாமல் தன் பக்கம் எதுவோ அதை ஆதரிக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் பொய்ச்செய்தி பரப்புகிறார்கள் என்பதை நிரூபித்தாலும் கூட எந்த மன உறுத்தலும் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு - கட்சிகள், வாக்காளர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையுமே பழிக்கலாம்.

பாரதீய ஜனதா கட்சி, ஆற்றல்மிக்கதொரு பிரச்சாரத்தின் துணை கொண்டு சில குறிப்பிட்ட செய்திகளைப் பரப்புவதில் நம்பமுடியாத அளவுக்கு அருமையானதொரு பணியைச் செய்திருக்கிறது. இந்தச் செய்திகள்தாம் நான் அந்தக் கட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்பதற்கான முதன்மையான காரணம். ஆனால் அதற்குள் எல்லாம் நுழைவதற்கு முன், எல்லோரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் - அதாவது, எந்தக் கட்சியும் முற்றிலும் தீயதுமல்ல; எந்தக் கட்சியும் முற்றிலும் நல்லதுமல்ல. எல்லா அரசுகளும் சில நல்லவையும் செய்திருக்கின்றன, சில கூறுகளில் சொதப்பியும் இருக்கின்றன. இந்த அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

நல்லவை
 1. சாலைகள் போடுவதில் முன்பைவிட வேகமாகச் செயல்பட்டது. சாலையின் நீளத்தை அளவிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, அதையும் கருத்தில் கொண்டு பார்த்தாலும் கூட, வேகம் கூடியிருப்பதாகத்தான் படுகிறது. 
 2. மின் இணைப்புகள் கூடியிருக்கின்றன. எல்லாக் கிராமங்களும் மின்னூட்டப்பட்டிருக்கின்றன. கூடுதலான நேரம் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. (காங்கிரஸ் ஐந்து இலட்சம் கிராமங்களுக்கும் மேல் மின்னூட்டியிருந்தது, மோதி அரசு கடைசி 18,000 கிராமங்களை இணைத்து வேலையை முடித்துவைத்தது - எனவே இந்தச் சாதனையை உங்களுக்கு வேண்டியபடி நீங்கள் எடைபோட்டுக்கொள்ளலாம். அது போலவே, விடுதலை அடைந்த காலம் முதலே மக்கள் மின்சாரம் பெறும் நேரத்தின் அளவு கூடிக்கொண்டேதான் வருகிறது, ஆனாலும் அதிகரிப்பின் அளவு பா.ஜ.க. காலத்தில் கூடுதலாக இருக்கலாம். 
 3. மேல்மட்ட ஊழல் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை அமைச்சர்கள் அளவில் பெரிய வழக்குகள் ஏதும் இல்லை (ஆனால் இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 1-க்கும் பொருந்தும்). கூடுதலான தொகைகளுடன் கீழ்மட்டத்தில் அப்படியேதான் இருப்பது போலத்தான் தெரிகிறது. அதிகாரிகள், கணக்கர்கள் போன்றவர்களை யாரும் கட்டுப்படுத்த முடிந்தது போலத் தெரியவில்லை. 
 4. தூய்மை இந்தியா இயக்கம் ஒரு நிச்சயமான வெற்றி. முன்பைவிடக் கூடுதலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை என்பது மக்களின் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. 
 5. உஜ்வாலா திட்டம் ஓர் அருமையான முன்னெடுப்பு. எவ்வளவு பேர் இரண்டாவது சிலிண்டர் வாங்குவார்கள் என்பதை நாம் இன்னும் பார்க்கவில்லை என்றபோதும். முதல் சிலிண்டரும் அடுப்பும் இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டன, இப்போது கூடுதலான சிலிண்டர்களுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த அரசு வந்தபின் சிலிண்டர்களின் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி இருக்கிறது. இப்போதைய விலை 800 ரூபாய்க்கும் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. 
 6. வடகிழக்கு மாநிலங்களுக்கான இணைப்பு நிச்சயமாகக் கூடியிருக்கிறது. கூடுதலான தொடர்வண்டிகள், சாலைகள், விமானங்கள், மற்றும், அவற்றுக்கெல்லாம் மேலாக, அந்தப் பகுதி இப்போதுதான் தேசிய செய்திச் சேனல்களில் பேசவே படுகிறது. 
 7. சட்டம்-ஒழுங்கு, பிராந்தியக் கட்சிகளின் ஆட்சியின் போது இருந்ததைவிட மேலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 
உங்களால் சிந்திக்க முடிகிற மற்ற சாதனைகளையும் தயங்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், தோல்விகள் அறுதியானவை, சாதனைகளுக்குத்தான் நிபந்தனைகள் அவசியமாக இருக்கின்றன.

அல்லவை

அமைப்புகளையும் நாடுகளையும் கட்டுவதற்கு பல பத்தாண்டுகளும் நூற்றாண்டுகளும் தேவைப்படுகின்றன. பா.ஜ.க.வின் மிகப்பெரும் தோல்வியாக நான் பார்ப்பது இதுதான் - மிக அற்பத்தனமான காரணங்களுக்காக சில உயர்ந்த விஷயங்களை நாசம் செய்துவிட்டார்கள்.
 1. தேர்தல் பத்திரங்கள். அடிப்படையில் இவை ஊழலை சட்டபூர்வமானதாக்கி, பெருநிறுவனங்களும் வெளிநாட்டு சக்திகளும் நம் அரசியல் கட்சிகளை எளிதில் விலைக்கு வாங்க அனுமதிக்கின்றன. இந்தப் பத்திரங்கள் பெயரற்றவை, எனவே ஒரு குறிப்பிட்ட கொள்கையை - சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு பெருநிறுவனம் ரூ. 1,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரத்தைக் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அது சட்டப்படி குற்றமாகாது. ஒரு பெயரற்ற ஒப்பந்தப் பத்திரத்தை வைத்துக்கொண்டு சட்டரீதியான கைம்மாறு (quid pro quo) நிகழ்ந்ததை நிறுவவே முடியாது. இதுவே அமைச்சர்கள் மட்டத்தில் எப்படி ஊழல் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது - ஊழல் என்பது, ஒவ்வொரு கோப்புக்கும் ஒவ்வொரு ஆணைக்கும் என்பது போய், இப்போது அமெரிக்கா போல் ஆகிவிட்டது - கொள்கை அல்லது சட்ட அளவில் செய்யப்படுகிறது. 
 2. திட்ட ஆணைய அறிக்கைகள். முன்பு இவை தரவுகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தன. அரசுத் திட்டங்களை தணிக்கை செய்து அவை எவ்வாறு செயல்பட்டன என்று வெளியிட்டனர். இப்போது அவை இல்லாமல் போய்விட்டதால், அரசு எந்தத் தரவுகளைக் கொடுக்கிறதோ அவற்றை நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை (இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கைகள் நீண்ட காலத்திற்குப் பின் வெளிவருகின்றன). நிதி ஆயோகுக்கு (NITI Aayog) இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, எனவே அடிப்படையில் அது ஒரு சிந்தனைக் கலமாகவும் மக்கள் தொடர்பு முகமையகமாகவும் மட்டுமே இருக்கிறது. ‘திட்டம் / திட்டமற்றவை’ என்ற வேறுபாட்டை அகற்ற, திட்ட ஆணையத்தின் தணிக்கை அறிக்கைகளையே அகற்றியிருக்க வேண்டியதில்லை. திட்ட ஆணையத்தின் அறிக்கைகளை அகற்றாமலேயே அதைச் செய்திருக்க முடியும். 
 3. மத்தியப் புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தவறான பயன்பாடு. நான் பார்த்தவரை இவை அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அப்படி இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, நரேந்திர மோதி அல்லது அமித் ஷாவுக்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை நோக்கி இந்த நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிடப்படுமோ என்ற அச்சம் உண்மையானது. இதுவே மக்களாட்சியின் முக்கியக் கூறாக இருக்கும் கருத்து முரண்பாட்டைக் கொல்வதற்குப் போதுமானது. 
 4. விசாரணை நடத்துவதில் தோல்வி. கலிக்கோ புல்லின் தற்கொலைக் குறிப்பு, நீதிபதி லோயாவின் சாவு, சோராபுதீன் படுகொலை, கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கற்பழிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அந்தச் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரும் பாதுகாக்கப்படுவது, ஓராண்டுக்கும் மேலாகியும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது. 
 5. பண மதிப்பிழப்பு நடவடிக்கை. இது ஒரு தோல்வி, ஆனால் அதைவிட மோசமானது எதுவென்றால், இந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ள மறுக்கும் பா.ஜ.க.வின் இயலாமை. பயங்கரவாதிகளின் நிதிகளை முடக்குவது, ரொக்கத்தைக் குறைப்பது, ஊழலை ஒழிப்பது என்று அது பற்றிச் செய்த பிரச்சாரங்கள் அனைத்தும் அபத்தமானவை. அது மட்டுமில்லை, இது தொழில்களையும் கொன்றழித்தது. 
 6. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி செயல்படுத்திய முறை. இதுவும் அவசரத்தில் செயல்படுத்தப்பட்டு தொழில்களைச் சீரழித்தது. சிக்கலான கட்டமைப்பு, வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு விகிதங்கள், சிக்கலான தாக்கல்... காலப்போக்கில் இது நிலைப்பட்டுவிடும் என்று நம்புவோம், ஆனாலும் அது தீங்கு விளைவித்துத்தான் சென்றிருக்கிறது. பா.ஜ.க. அதை ஒப்புக்கொள்ளவே தவறுவது மிகவும் திமிர்த்தனமானது. 
 7. வெற்றாரவாரம் கொண்ட குளறுபடியான வெளியுறவுக் கொள்கை. சீனாவுக்கு இலங்கையில் ஒரு துறைமுகம் இருக்கிறது, வங்கதேசத்திலும் பாகிஸ்தானிலும் பெரும் அக்கறைகள் உள்ளன - நாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டோம். 2014-க்கு முன்னர் உலகில் இந்தியர்களுக்கு மரியாதையே இல்லாமல் இருந்தது - இப்போதுதான் மிகவும் மதிக்கப்படுகின்றனர் என்று மோதிஜி வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில், மாலத்தீவில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது (இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வீழ்ச்சியால் இந்தியத் தொழிலாளர்களுக்கு அங்கு செல்ல இப்போது விசா கிடைப்பதில்லை). (இது அபத்தம், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கான மரியாதை என்பது, நமது வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் நேரடி விளைவாகக் கிடைத்தது, அது ஓர் அவுன்ஸ் கூட மோதிஜியால் மேம்படுத்தப்பட்டதல்ல. மாட்டிறைச்சிக்காக நடத்தப்படும் அநீதிக்கொலைகள், பத்திரிகையாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் போன்ற பல காரணங்களால் இது மேலும் கெட்டுத்தான் போயிருக்கலாம்.) 
 8. திட்டங்களின் தோல்வி மற்றும் அவற்றை ஒப்புக்கொள்வதில் / சரிசெய்துகொள்வதில் தோல்வி. கிராமத் தத்தெடுப்புத் திட்டம் (சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா), இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா), திறன் மேம்பாடு, ஃபசல் பீமா (செலவு ஈடுகளைப் பாருங்கள் - காப்பீட்டு நிறுவனங்களின் பைகளில் கைவைக்கிறது அரசு). வேலையில்லாத் திண்டாட்டத்தையும் விவசாயிகளின் நெருக்கடியையும் ஒப்புக்கொள்ளத் தவறியது - ஒவ்வோர் உண்மையான பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளின் ஏமாற்றுவித்தை என்பது. 
 9. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம். மோதிஜியும் பா.ஜ.க.வின் அனைத்து அமைச்சர்களும் ஆதரவாளர்களும் இதற்காகத்தான் காங்கிரசைக் கடுமையாக விமர்சித்தனர்; கச்சாவின் விலை அப்போதைவிட இப்போது குறைவாக உள்ளது என்ற போதும், அவர்கள் அனைவரும் இப்போது விலையேற்றத்தை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இது சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. 
 10. மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளில் எதுவுமே செய்யாத தோல்வி. கல்வி மற்றும் சுகாதாரம். கல்வித் துறையில் எதுவுமே இல்லை, இதுதான் நாட்டின் மிகப்பெரிய தோல்வி. அரசுப் பள்ளிகளின் தரம் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் சீரழிந்து வருகிறது (ASER - வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கைகள்), ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. நான்கு ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு, பின்னர் ஆயுஷ்மன் பாரத் அறிவிக்கப்பட்டது - எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட இந்தத் திட்டம் கூடுதல் பயமூட்டுவதாக இருக்கிறது எனக்கு. காப்பீட்டுத் திட்டங்களுக்கென்று பயங்கரமான வரலாறு இருக்கிறது, இப்போது இது அமெரிகாவின் வழியில் செல்கிறது, இது சுகாதாரத்தை ஒரு பயங்கரமான இடத்தில் கொண்டு போய் விடப்போகிறது (மைக்கேல் மூரின் ‘Sicko’ காணொளி பாருங்கள்). 
பிரச்சனை பற்றிய உங்கள் தனிப்பட்ட புரிதலின் அடிப்படையில் நீங்கள் சிலவற்றைச் சேர்க்கலாம்; சிலவற்றைக் கழித்துக்கொள்ளலாம், ஆனால் இதுதான் என்னுடைய மதிப்பீடு. தேர்தல் பத்திரங்கள் எனப்படுவது மிகப்பெரிய ஒன்று. உச்சநீதிமன்றம் அதை உடைத்து வீசும் என்று நம்புவோம். ஒவ்வோர் அரசும் சில தோல்விகளையும் சில மோசமான முடிவுகளையும் கொண்டிருக்கத்தான் செய்யும். என்னுடைய பெரும் பிரச்சனை என்பது, வேறு எதையும் விட, பெருமளவில் அறநெறிகள் பற்றியது.

பொல்லவை

இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.

 1. ஊடகங்களை இழிவுபடுத்தியுள்ளது, எனவே இப்பொழுது ஒவ்வொரு விமர்சனமும் பா.ஜ.க. பணம் வழங்காததால் அல்லது காங்கிரசின் சம்பளப்பட்டியலில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் எழுதுவதாக உதறிவிடப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க முடியாத பல பத்திரிகையாளர்களை எனக்குத் தெரியும், ஆனால் மிக முக்கியமாக எவரும் குற்றச்சாட்டு அல்லது புகார் பற்றியே பேசுவதில்லை - பிரச்சினையை எழுப்புகின்ற நபரை மட்டும் தாக்கிவிட்டு, பிரச்சினையைப் புறக்கணித்துவிடுகிறார்கள். 
 2. 70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்றொரு கதையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இது அப்பட்டமான பொய், இந்த மனநிலை நாட்டிற்குத் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். இந்த அரசு வரி செலுத்துவோரின் பணம் ரூ. 4,000 கோடியை விளம்பரங்களில் செலவிட்டிருக்கிறது. இனி இதுவே வழக்கமாகிவிடும். பணிகள் சிறிதாகச் செய்துவிட்டு, பெயரெடுக்கப் பெரிதாக உழைக்கும் பண்பு வந்துவிடும். இவர்தான் முதன்முதலில் சாலைகள் போட்டவர் போல் பேசக்கூடாது - நான் பயணம் செய்துள்ள சில சிறந்த சாலைகள், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் செல்லத் திட்டங்கள். 1990-களில் இருந்து இந்தியா ஒரு தகவல் தொழில்நுட்ப அதிகார மையமாக மாறியது. இன்றைய சூழலை அடிப்படையாகக் கொண்டு கடந்தகாலச் செயல்பாட்டை அளவிடுவதும் கடந்த காலத் தலைவர்களைத் திட்டித் தீர்ப்பதும் எளிது - ஒரேயோர் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்ளுங்கள்: காங்கிரஸ் ஏன் 70 ஆண்டுகளில் கழிப்பறைகள் கட்டவில்லை? மிக அடிப்படையான ஒன்றைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. இந்த வாதம் சரியாகத்தான் படுகிறது, இந்தியாவின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கியவரை நானும் அதை நம்பினேன்தான். 1947-இல் நாம் விடுதலை பெற்றபோது மிகவும் ஏழ்மையான நாடாக இருந்தோம், அடிப்படை உட்கட்டமைப்புக்கான ஆதாரங்களும் இல்லை - மூலதனமும் இல்லை. இதை மட்டுப்படுத்த, அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு சோசலிஸ்ட் பாதையில் சென்று பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். எஃகு உருவாக்க நம்மிடம் எந்தவிதமான திறனும் இருக்கவில்லை. எனவே ரஷ்யர்களின் உதவியுடன், ராஞ்சியில் கனரகப் பொறியியல் கழகம் அமைக்கப்பட்டது. அதுதான் இந்தியாவில் எஃகு உருவாக்குவதற்கான இயந்திரங்களை உருவாக்கியது. அது இல்லாமல் போயிருந்தால் நமக்கு எஃகு கிடைத்திராது, அதன் விளைவாக எந்த உட்கட்டமைப்புகளும் இருந்திராது. அடிப்படைத் தொழிலகங்களும் உட்கட்டமைப்பும்தான் அப்போதைய செயற்திட்டமாக இருந்தது. ஒவ்வொரு இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையென அடிக்கடி வறட்சிக்கும் பஞ்சத்துக்கும் உள்ளாகி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியில் மடிந்தார்கள். மக்களுக்கு உணவு கொடுப்பதே அப்போதைய முன்னுரிமையாக இருந்தது, கழிப்பறைகள் என்பவை எவரும் கவலைப்படாத ஆடம்பரங்களாகவே இருந்தன. பசுமைப் புரட்சி நடந்து, 1990-களின் போது உணவுப் பற்றாக்குறை ஒழிந்துவிட்டது - இப்போது உபரியான உற்பத்திதான் பிரச்சனை. இப்போது கழிப்பறை பற்றிப் பேசுவது, இன்றிலிருந்து 25 ஆண்டுகள் கழித்து, மோதியால் ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளையும் குளிரூட்டப்பட்டவையாக ஆக்க முடியவில்லை என்று கேட்பதைப் போன்றது. இன்று அது ஆடம்பரமாகத் தோன்றுகிறது, ஒரு காலத்தில் கழிப்பறைகளும் ஒரு ஆடம்பரமாகவே இருந்தன. ஒருவேளை இதைவிடச் சிறிது முன்பே நடந்திருக்கலாம், ஒருவேளை 10-15 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கலாம், ஆனால் 70 ஆண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை என்பது அள்ளிவீசப்படும் ஒரு பயங்கரமான பொய்யாகும். 
 3. போலிச் செய்திகளின் பரவலும் அதன் மீதான நம்பிக்கையும். பா.ஜ.க.வுக்கு எதிரான சில போலிச் செய்திகளும் கூட உள்ளன, ஆனால் பா.ஜ.க.-சார்பு மற்றும் எதிர்க்கட்சி எதிர்ப்பு போலிச் செய்திகள் எண்ணிக்கையிலும் சென்றடைவதிலும் அவற்றைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கின்றன. அவற்றில் சில ஆதரவாளர்களால் உருவாக்கப்படுபவை, ஆனால் பெரும்பாலானவை கட்சியே உருவாக்கி அனுப்புபவை. இது பெரும்பாலும் வெறுப்பை உமிழ்வதாகவும் மக்களை முனைப்படுத்துவதாகவும் இருக்கிறது, அதனால் இவை இன்னும் மோசமானவையாகின்றன. இந்த அரசால் ஆதரிக்கப்படும் ஆன்லைன் செய்தித் தளங்கள், நமக்குத் தெரிந்ததைவிட அதிக அளவில் இந்தச் சமுதாயத்தைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 
 4. இந்து மதம் ஆபத்தில் உள்ளது. இந்து மதமும் இந்துக்களும் ஆபத்தில் உள்ளனர் என்றும், நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி மோதிதான் என்றும் மக்களின் மனதில் ஊன்றிப் பதியவைத்துவிட்டார்கள். உண்மையில், இந்துக்கள் இந்த அரசுக்கு முன்பே இதே வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், மக்கள் மனநிலையைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை. 2007-இல் இந்துக்கள் நாம் ஆபத்தில் இருந்தோமா? குறைந்தபட்சம் தினமும் அது பற்றி யாரேனும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கவில்லை அப்போது, இந்துக்களின் நிலைமையில் எந்த முன்னேற்றத்தையும் நான் பார்க்கவில்லை இப்போது, வெறுமனே அச்சமும் வெறுப்பும் விதைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். 
 5. அரசுக்கு எதிராகப் பேசினால், நீங்கள் தேசத்துரோகி, கூடுதலாக இப்போது, இந்து விரோதி வேறு. அரசின் மீதான முறையான விமர்சனங்கள் கூட இப்படிப் பெயர் கொடுக்கப்பட்டு வாயடைக்கப்படுகின்றன. உங்கள் நாட்டுப்பற்றை நிரூபியுங்கள், எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் பாடுங்கள் (பா.ஜ.க. தலைவர்கள், அவர்களுக்கே அதில் வரும் சொற்கள் தெரியாது என்றாலும் கூட, நீங்கள் அதைப் பாட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்). நான் ஒரு பெருமிதம் மிக்க தேசியவாதி, என் தேசியவாதம் வேறு எவரும் என்னிடம் வந்து அதை நான் வெளிப்படுத்த வேண்டும் என்று நிர்பந்திப்பதை அனுமதிக்காது. தேவை வரும் போது அல்லது எனக்குத் தோன்றும் போது, தேசிய கீதத்தையும் தேசியப் பாடலையும் நான் பெருமிதத்தோடு பாடிக்கொள்வேன், ஆனால் யாரோ வந்து அவர்களது ஆர்வக்கோளாறின் அடிப்படையில் என்னைப் பாட நிர்பந்திப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். 
 6. பா.ஜ.க. தலைவர்களுக்குச் சொந்தமான செய்தி ஊடகங்களின் இயக்கம். இவர்களின் ஒரே வேலை, இந்து-முஸ்லிம், தேசியவாதி-தேசத்துரோகி, இந்தியா-பாகிஸ்தான் ஆகியவற்றைப் பற்றியே பேசி, பிரச்சனைகளைப் பற்றிய தர்க்கரீதியான உரையாடல்களைத் திசைதிருப்பி, உணர்ச்சி கொப்பளிக்க வெறுப்பைத் தூண்டிவிடுவதே. மிகச் சரியாக அந்த ஊடங்கங்கள் எவை எவை என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும், இந்தப் படுபயங்கரமான வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்வதற்காக கைம்மாறு பெறும் விவாதிகள் யார் என்பதும் உங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். 
 7. முனைப்படுத்தல். வளர்ச்சி பற்றிய பேச்செல்லாம் காணாமல் போய்விட்டது. அடுத்த தேர்தலுக்கான பா.ஜ.க.வின் வியூகம், மக்களை வெறுப்பின் வழியாக முனைப்படுத்துவதும் போலி தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதுமே. மோதிஜி, அவரே அவருடைய உரைகளில் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் - ஜின்னா; நேரு; காங்கிரஸ் தலைவர்கள் எவரும் பகத் சிங்கைச் சிறையில் சந்திக்கவில்லை (இது பிரதமரிடமிருந்தே வரும் போலிச் செய்தி!); குஜராத்தில் மோதியைத் தோற்கடிக்க காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானில் தலைவர்களைச் சந்தித்தனர்; அக்பரை விட மகாராணா பிரதாப் எவ்வளவு பெரியவர் என்ற யோயோகிஜியின் பேச்சு; ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தேசத்துரோகிகள், அவர்கள் நாட்டைத் துண்டு துண்டாகச் சிதைத்துவிடுவார்கள் - இதெல்லாம் மக்களை முனைப்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட பிரச்சாரங்கள் - இவையெல்லாம் நான் என் தலைவர்களிடமிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் அல்ல, தன் அரசியல் லாபத்திற்காக மக்களிடம் கலகம் உருவாக்கி நாட்டைக் கொளுத்த முடிவு செய்துவிட்ட எவரையும் நான் பின்தொடர மறுக்கிறேன்.
இவை அனைத்தும் பா.ஜ.க. எப்படி தேசிய உரையாடலை ஓர் இருண்ட மூலைக்குள் தள்ளிக்கொண்டு போகிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளே. இதற்கெல்லாம் ஒப்புதல் அளித்து நான் இறங்கவில்லை, இவை யாவும் என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதனால்தான் நான் பா.ஜ.க.விலிருந்து விலகுகிறேன்.

பின் குறிப்பு: அவருடைய வளர்ச்சி பற்றிய செய்திகளை நம்பினேன், அதனால் நரேந்திர மோதிஜி இந்தியாவின் நம்பிக்கைக் கீற்றாகத் தோன்றினார், அதனால் 2013 முதல் பா.ஜ.க.வை ஆதரித்தேன். ஆனால் அந்தப் பேச்சு, நம்பிக்கை - இரண்டுமே இப்போது போய்விட்டன. இப்போது எனக்கு இந்த நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா அரசின் எதிர்மங்கள் நேர்மங்களைவிட அதிகமாக இருக்கின்றன, ஆனால் இது ஒவ்வொரு வாக்காளரும் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டிய முடிவு. வரலாறும் உண்மையும் சிக்கலானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எளிமைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களை அப்படியே ஏற்று வாங்கிக்கொள்வதும், எவர் மீதும் வழிபாட்டுத் தன்மையோடு கேள்வியற்ற நம்பிக்கை வைப்பதும், நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான தவறுகள் - இது மக்களாட்சிக்கும் இந்த நாட்டின் நலன்களுக்கும் எதிரானது.

* 2018 ஜூலை கணையாழி இதழில் 'பாரதீ' என்ற பெயரில் வெளியானது

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி]

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி]

 • கிறிஸ் பீச்சம், மார்கஸ் ஜேம்ஸ் டிக்சன் 

 • திரைப்படம் 

 • டிசம்பர் 26, 2017 11:00மு.ப. 

கில்லியர்மோ தெல் தோரோ இதுவரை அவரது வாழ்க்கையில் ஒரேயோர் அகாடமி விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமே பெற்றுள்ளார் - "பான்’ஸ் லேபரிந்த்"-க்கான சிறந்த மூலத் திரைக்கதை (2006) - ஆனால் விரைவில் இதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். அவரது சமீபத்திய திரைப்படமான “த ஷேப் ஆஃப் வாட்டர்”-இன் தயாரிப்பு, இயக்கம், மற்றும் எழுத்துக்காக சமீபத்தில் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உண்மையில், ஒளிபரப்புத் திரைப்பட விமர்சகர்களின் (Broadcast Film Critics) 14 பரிந்துரைகள் மற்றும் ஹாலிவுட் வெளிநாட்டுப் பத்திரிகைக் கழகத்தின் (Hollywood Foreign Press) 7 பரிந்துரைகளுடன் இந்தத் திரைப்படம்தான் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த விருதுகளுக்கான பரிந்துரைகளில் முன்னணி வகிக்கிறது.

அவருடனான நம் சமீபத்திய உரையாடலில், இதை "துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை" என்று குறிப்பிடுகிறார். மேலே உள்ள காணொளியைக் காணவும் அல்லது முழு நேர்காணல் எழுத்துப்படியைக் கீழே படிக்கவும். இந்தப் படத்தில், நடிகை சாலி ஹாக்கின்ஸ், பனிப்போர் காலத்தில், ரகசிய அரசாங்க இடம் ஒன்றில், நிலத்திலும் நீரிலும் வாழும் ஓர் அரிய வகை மனிதன் மீது காதலில் விழும் ஓர் ஊமைத் தூய்மைப் பணியாளராக நடித்துள்ளார். டக் ஜோன்ஸ், ரிச்சர்ட் ஜென்கின்ஸ், ஆக்டேவியா ஸ்பென்சர், மைக்கேல் ஷானன் மற்றும் மைக்கேல் ஸ்டுல்பர்க் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கோல்டு டெர்பி (மார்கஸ் டிக்சன்): சரி, கில்லியர்மோ தெல் தோரோ. அப்படியானால், உங்கள் புதிய படம், "த ஷேப் ஆஃப் வாட்டர்", டிசம்பர் மாதத்தில் வெளிவருகிறது, எனவே உங்கள் ரசிகர்கள் நிறையப்பேர் இன்னும் அதைப் பார்க்கவில்லை. இந்தப் படத்தின் கதை என்ன என்று சொல்வீர்கள்? ஏனென்றால், இது மிகவும் சிக்கலானது, மிகவும் படைப்பாற்றலுடையது மற்றும் அசலானது. உண்மையிலேயே இது போன்ற எதுவும் இதற்கு முன்பு நாம் பார்த்ததில்லை.
கில்லியர்மோ தெல் தோரோ: "த ஷேப் ஆப் வாட்டர்"-இன் கதை ஓர் எளிமையான கதை எனலாம். ஓர் அரிய வகை உயிரினமான நீரிலும் நிலத்திலும் வாழும் மனிதன் ஒருத்தன் மீது காதலில் விழும் பெண் ஒருத்தி பற்றிய கதை - துன்ப காலங்களுக்கான மாயக் கதை. 1962, பனிப்போர்க் காலத்தில் ஒரு இரகசிய அரசாங்க இடத்தில் தூய்மைப் பணியாளராக இருக்கிறாள் அவள். கதை எளிமையானது, எனவே பாத்திரங்களைச் சிக்கலானவையாக அமைத்து, அவர்களுக்கு இடையிலான உறவாடல்களைக் கருவின் எடையாக்கி, அதை வைத்து நாம் கூத்தடிக்கலாம் என்று அப்படிச் செய்தேன். இது பரபரப்பு, இசை, நாடகம், உணர்ச்சி, உயிரினம் என்று அனைத்தும் கலந்த ஒரு படம். இது காதல் மீது காதலும், திரைப்படம் மீது காதலும் கொண்ட ஓர் அழகான படம்.

கோ.டெ. (மார்கஸ்): பல ஆண்டுகளாக நிறையத் திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் நீங்கள், ஆனால் இது உங்கள் மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும், இல்லையா?
கி.தெ.தோ.: "த ஷேப் ஆஃப் வாட்டர்", நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதற்கடுத்து, "டெவில்'ஸ் பேக்போன்," "பான்'ஸ் லேபரிந்த்," "கிரிம்சன் பீக்," "பசிஃபிக் ரிம்", "ஹெல்பாய் II" ஆகியவை வரும்.

கோ.டெ. (மார்கஸ்): ஓ, ஏற்கனவே பட்டியல் தயாராக வைத்திருக்கிறீர்கள் போலயே!
கி.தெ.தோ.: ஓ ஆமாம், ஆனால் அது என் வேதனை அனுபவத்தின் வரிசை. பார்க்கத் துன்பமூட்டுபவை, ஆனால் அவைதான் வேண்டும் என்று மனம் விரும்பும், அவைதான் நாம் விரும்புபவை. இன்னொரு வகை, பார்க்கத் துன்பமூட்டுபவையாகவோ அல்லது அப்படி இல்லாமலோ இருக்கலாம், ஆனால் அவை நாம் அவ்வளவு வேண்டுமென்று ஆசைப்படுபவையாக இரா, அவற்றை நாம் குறைவாகவே விரும்புவோம், ஆனால் இதெல்லாம் கதைசொல்லிக்குத்தான். பார்வையாளனுக்கு எதுவும் பிடிக்கலாம். எனக்கு அதில் பிரச்சனையில்லை.

கோ.டெ. (மார்கஸ்): நீங்கள் கதையெழுதும் முறை பற்றியும் கூற முடியுமா? வனேசா டெய்லருடன் இணைந்து எழுதுகிறீர்கள். இந்தக் கதையையும் யோசனையையும் கொண்டு வர எவ்வளவு காலம் ஆனது?
கி.தெ.தோ.: யோசனை பல பத்தாண்டுகளாக என்னிடம் இருந்தது, ஆனால் 2011, டிசம்பரில்தான் அது எனக்குத் தெரிந்தது. அதற்கான சாவி தானே வந்து விழுந்தது. "ட்ரோல்ஹண்டர்ஸ்" தொடரில் என்னுடன் இணை எழுத்தாளராக இருந்த டேனியல் க்ராஸ், ஒரு படு இரகசிய அரசாங்க இடத்தில் பணிபுரியும் ஒரு தூய்மைப் பணியாளர் பற்றிய இந்தக் கருத்தை வைத்திருந்தார், இரகசிய அரசாங்க இடத்துக்குள் சென்று (இதை நான் ஏற்கனவே ‘ஹெல்பாய்’ மற்றும் ‘ஹெல்பாய் II’ படங்களில் செய்திருக்கிறேன்), இந்த அரிய உயிரினத்தைக் கண்டறியும் (ஆனால் ஓர் உளவாளி அல்லது விஞ்ஞானியின் கண்கள் வழியாக அல்ல) இந்தத் திட்டம் எனக்குப் பிடித்திருந்தது. கட்டடத்தின் முன் கதவு வழியாக அன்றி, கட்டடத்தின் பின் கதவு வழியாக, கழிவறைகளைச் சுத்தம் செய்கிற, குப்பைத் தொட்டிகளைக் காலி செய்கிறவர்களோடு சென்று செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதுதான் இதில் முக்கிய அம்சம். பின்னர் 2012-இல் எழுதத் தொடங்கினேன், கிட்டத்தட்ட 2014-இல், ரஷ்ய உளவாளிகள் வரும் உட்கதை தவிர, நீங்கள் இப்போது காண்கிற காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களுடன் முழுக் கதையும் இருந்தது. மூலப் படிவத்தில் அது மிக மிகச் சிறியதாக இருந்தது. அதை நான் [ஃபாக்ஸ்] ‘சர்ச்லைட்’டிடம் எடுத்துச் சென்றேன், பின்னர் நாங்கள் வனேசா டெய்லரிடம் சென்றோம், நான் எழுதியிருந்த எல்லாப் பக்கங்களையும், காட்சித் தாளையும் (Beat Sheet), இன்ன பிறவற்றையும் அவரிடம் காட்டினோம்.

நாங்கள் சந்தித்தோம். "இந்தப் பனிப்போர் மற்றும் ரஷ்ய உளவாளி படலத்தில் மேலும் சேர்த்து அல்லது விரிவாக்கி, அதை ஒரு முக்கியப் பாத்திரமாக்கி, அந்தக் கெட்டவன் மேல் இன்னும் அழுத்தத்தைப் போட்டு, அப்படி இப்படி மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர். கருத்துக்கள் பரிமாறத் தொடங்கினோம். அடுத்து கோப்புகளும் பரிமாறிக்கொண்டோம். என் கோப்புகளை அவரிடம் தருவேன், பின்னர் அவர் ஈவிரக்கமின்றி அவற்றை மாற்றியெழுதுவார், பின்னர் நான் அவருடைய கோப்புகளைப் பறித்துக்கொண்டு, ஈவிரக்கமில்லாமல் மாற்றியெழுதுவேன், இப்படி மாற்றி மாற்றி முன்னும் பின்னும் அனுப்பிக்கொள்வோம். நாங்கள் எப்போதாவதுதான் சந்தித்துக்கொண்டோம். எங்கள் சந்திப்புகள் பெரும்பாலும் எப்போதும் கோப்புகள் வழியேதான் நிகழ்ந்தன. பின்னர் அவர் ஒன்றரை அல்லது இரண்டு வரைவுகள் வரும்வரை அதில் வேலை செய்தார். அதன் பின்பு, அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நானாகவே தனியாக அதில் வேலை செய்தேன்.

கோ.டெ. (மார்கஸ்): திரைக்கதை எழுதும் கதையைக் கேட்டால், நீண்ட காலம் எடுத்திருக்கும் போலவும் உங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரும் முதலீடு போலவும் தெரிகிறதே. இயக்குவதைவிட திரைக்கதை எழுதுவதை அதிகம் அனுபவிக்கிறீர்களா அல்லது இது முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதி என்று நினைக்கிறீர்களா?
கி.தெ.தோ.: ஒன்று சொல்லவா, திரைக்கதை எழுதுவது, உங்களோடு கூட்டாளி ஒருத்தர் இருக்கும் போது இன்பமாக இருக்கலாம், ஆனால் தனியாக இருந்தீர்கள் என்றால் அதுவே கொடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். திரைப்படம் எடுப்பதிலேயே மிகவும் மிரட்சியூட்டும் பகுதி அதுதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் ஒரு வகையில் அதுதான் மிகவும் முக்கியமானதும் கூட. ஏனென்றால், அதுதான் அடிப்படை. நீங்கள் இசை எழுதுகிறீர்கள், பின்னர் நீங்களே இசையை நிகழ்த்துகிறீர்கள், உங்களோடு இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள், இது இயக்குதல் - இசையமைத்தல் ஆகிறது. இது மிகவும் எளிது. ஆனால் எழுதுதல் அப்படியல்ல, வெற்றுப் பக்கம் என்பது உண்மையிலேயே மிகக் கொடுமையானது, ஆனால் இன்னொருவரோடு சேர்ந்து செய்தால் அதுவே மிக மிக மேலான அனுபவமாகி விடுகிறது.

கோ.டெ. (கிறிஸ் பீச்சம்): இந்தப் படத்தின் காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உங்களை எது வழிவகுத்துக் கொண்டுவந்தது, அதற்குள் வேறு என்ன படங்கள் கொணர விரும்பினீர்கள்?
கி.தெ.தோ.: ம்ம்ம், 1962-ஐ ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், அது அமெரிக்கா பல வகைகளில் தன் தொன்மத்தை வரையறுக்கத் தொடங்கிய ஒரு மிக முக்கியமான காலம். இரண்டாம் உலகப் போரில் இருந்து வெளியே வருகிறீர்கள், எல்லாமே அளவிலாமல் கொட்டிக் கிடக்கிறது, செல்வம் - புறநகரப் பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் செல்வம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார், தொலைக்காட்சி, தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் அடுப்புகள், அழகழகு உட்பாவாடைகள் மற்றும் சிகைத்தெளிப்புகள், விண்வெளிப் பந்தயம், வெள்ளை மாளிகையில் கென்னடிகள், ஓரளவிற்கு மேடிசன் அவென்யூவால் உருவாக்கப்பட்ட மேன்மை பற்றிய புனைவு, சராசரி அமெரிக்கனின் நடத்தைகளைத் திரைப்படங்கள் செய்ததைவிடப் பல மடங்கு தொலைக்காட்சிகள் செய்யத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் சரிய, தொலைக்காட்சி மேலெழுகிறது. ஓவியமாக வரையப்படும் விளம்பரங்கள் என்பதிலிருந்து புகைப்பட விளம்பரங்கள் என்பதை நோக்கி விளம்பரங்கள் மாறத் தொடங்குகின்றன. பின்னர், எனக்கு இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் கருத்தளவில் இதுதான் இந்த இலக்கியல் மாயக் கதைக் காலத்தின் கடைசி ஆண்டு, ஏனென்றால் அதன்பின்பு குறுகிய காலத்தில் கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார், வியட்நாம் பிரச்சனை பெரிதாகிறது, அப்படியே ஒவ்வொன்றாகச் சிதையத் தொடங்குகிறது, ஆனால் அது ஒரு மாயை. நீங்கள் ஒரு சிறுபான்மையினராக இருந்திருந்தால், ஒரு பெண்ணாக இருந்தால், தவறான பாலினத்தவராக, சமூக வர்க்கத்தவராக, பாலியல் விருப்பம் உடையவராக இருந்தால், 1962 மிகவும் கடினமாக இருக்கும். நான் இப்போதைப் பற்றிப் பேச விரும்பினேன், '62 பற்றி அல்ல. இது இப்போதைப் பற்றியதுதான், உருவகமாக அல்லது கதையாக, நீதிக்கதையாக, விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க ஒன்றாக, நாமல்லாத பிறர் பற்றிய நம் கருத்தை மறைமுகமாகக் குறிப்பிடுவதற்காக '62 ஐப் பயன்படுத்துகிறேன். இந்தப் படத்தின் அழகு என்னவென்றால், இது சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை பற்றி மட்டும் பேசவில்லை, உண்மையிலேயே குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்கிறது. முற்றிலும் அந்நியரான இந்த உயிரினத்தைக் காப்பாற்றும் பொருட்டு கட்புலனாகாத மக்கள் குழு ஒன்றைத் திரட்டுகிறது. இந்தக் கூட்டம் நாமல்லாத மற்றொன்றிற்குள் இருக்கும் அழகையும் தெய்வீகத்தையும் அன்புக்குரிய தன்மையையும் காண்கிறது. இப்போதைக்கு, என்னைப் பொருத்தமட்டில் இது ஒரு பெரும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கதை என்பேன்.

மிகவும் துன்பகரமான காலங்கள் இவை. உண்மையில், "தி ஷேப் ஆஃப் வாட்டர்: துன்ப காலங்களுக்கான மாயக் கதை" என்றுதான் திரைக்கதை அழைக்கப்பட்டது, ஏனென்றால் இப்போது எது பற்றியும் கோளாறு சொல்லி - சந்தேகம் எழுப்பித் தன்னை ஒரு பேரறிவாளனாகக் காட்டிக்கொள்ள முடியும். ஆனால், சமூக ஊடகங்களிலும் சரி, தனிமனிதர்களுடனான உறவாடல்களின் போதும் சரி, உணர்வுபூர்வமாக இருப்பது இப்போது ஆபத்தானதாக - உண்மையிலேயே பெரும் ஆபத்தான ஒன்றாக இருக்கிறது. மிகவும் எச்சரிக்கையோடு இருக்கிறோம். உணர்ச்சிகளைக் கண்டு மிகவும் பயப்படுகிறோம், எனவே உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை, நம் சமூகத்தைப் பீடித்திருப்பதாக நான் நம்பும் அவநம்பிக்கையையும் கொந்தளிப்பையும் நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில் இருக்கும் சந்தேகத்தையும் குணப்படுத்தும் மருந்தாக இருக்கும் திரைப்படம் ஒன்றை, உருவாக்க விரும்பினேன். இந்தப் பிரச்சனைகள் எவற்றையும் நேரடியாகக் கையாள விருப்பமில்லை நமக்கு. ஏனென்றால் அதுவே… சமூக ஊடகங்களில் ‘தாம்’, ‘தூம்’ என்று வெடித்துப் பெரும் வாதமாகி விடுகின்றன. ஒரு நடுப் புள்ளியைக் கண்டுபிடிக்க வழியே இல்லை. எனவே நான் ஒரு மாயக் கதை மூலம் இதைச் செய்ய விரும்பினேன். ஏனென்றால் "ஒரு ஊர்ல, 1962-ல, ஓர் ஊமைப் பெண் இருந்தாளாம்" என்று சொல்லும்போது, மக்கள் தங்கள் எச்சரிக்கை உணர்வைக் குறைத்துக்கொண்டு, கலந்துரையாடலை ஏற்றுக்கொள்வார்கள், அதற்குள் என்ன அரசியல் தூண்டல் இருந்தாலும்.

கோ.டெ. (கிறிஸ்): இந்த எல்லா உணர்ச்சிகளையும் - எல்லாவற்றையும் பேசாமலேயே தெரிவிக்கிற ஒருவராக நடிக்க நீங்கள் சாலி ஹாக்கின்ஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். படத்தின் பெரும் பகுதி அதைத்தான் சார்ந்திருக்கிறது. அப்படி உங்களை அவரிடம் இட்டுச் சென்றது எது?
கி.தெ.தோ.: சாலிக்கு, மைக்கேல் ஷானனுக்கு, ஆக்டேவியா ஸ்பென்சருக்கு, டக் ஜோன்சுக்கு என்று இவர்களுக்காகவே நான் குறிப்பாக இந்தத் திரைப்படத்தை எழுதினேன். நான் பல படங்களில் அவரைப் பார்த்தேன், முதலில் “ஃபிங்கர்ஸ்மித்” (Fingersmith) என்று ஓர் அழகான விக்டோரியன் திரில்லர் படத்தில் அவரைப் பார்த்தேன். அந்தப் படத்தில், அவர் மற்றொரு பெண்ணின் மீது காதலில் விழுந்து, அவர்கள் ஓர் அழகான வாழ்க்கை வாழ்வார்கள், அதில் அவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்று நினைத்தேன். சிமிட்டல்கள் இல்லாத, கிச்சுக்கிச்சுகள் இல்லாத இயல்பான நடிப்பு. அது அவரது பாத்திரத்தின் ஒரு பகுதியாகவே செய்யப்பட்டது. அப்படிப்பட்ட கதையை அப்படித்தான் கையாண்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனென்றால், பாத்திரத்தோடு தோலும் சதையுமாக ஒன்றி இருக்க வேண்டும். அது ஒரு பொருள் அல்ல. எனக்கு மிகவும் பிடித்துப் போனது, அடுத்து அவர் "சப்மெரின்" என்ற ஒரு படத்தில் துணை வேடம் செய்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தேன், அதில் அவரின் தோற்றத்தைப் பார்த்தேன், “அப்படியே கச்சிதமாக இருக்கிறாரே” என்று நினைத்தேன், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் நடிகர்களை அருமையான வசனம் பேசுபவர்களாகவும் நடிப்பைக் கொட்டுபவர்களாகவும் பார்க்கிறார்கள், ஆனால் உண்மையில் எனக்கோ, ஒரு நடிகர் என்பவர் நன்கு கவனிப்பவர் - பார்ப்பவர். அவர்கள் இன்னொரு நடிகரைக் கவனிக்கும் போதும் பார்க்கும் போதும், அதுதான் ஒரு நடிகரின் பெருமதிப்புக்குரிய வளமாகிறது.

எனவே நான் அவருக்காகவே எழுதினேன், பேச்சில்லாமல், ஊமையாக, ஏனென்றால், என்னைப் பொருத்தமட்டில், காதல் என்பது நம்மைப் பேச்சுமூச்சில்லாமல் ஆக்குவது. அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக்கொண்டார்கள் என்பதைப் பற்றியதல்ல இது, ஒருவரையொருவர் எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதைப் பற்றியது. நீருக்கான பூதக்கடவுளான இந்த உயிரினம், அவளிடம் ஏதோவொரு சாரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது, அவள் அவனிடம் தன்னையே அடையாளம் கண்டுகொள்கிறாள், அப்படியே ஓர் அழகான மாயாஜாலத்துக்கான சாத்தியம் உருவாகிறது, பின்னர் சாலியிடம் பேசிய போது, ஹேரல்ட் லாய்ட், பஸ்டர் கீட்டன், [சார்லி] சாப்ளின் ஆகிய ‘பேசா நகைச்சுவை’ நடிகர்கள் கொண்ட ப்ளூ-ரே செட் ஒன்று கொடுத்து, மிக முக்கியமாக அவரிடம் ‘லாரல் அண்ட் ஹார்டி’-யில் ஸ்டான் லாரலைப் பார்க்கச் சொன்னேன், ஏனென்றால் அந்த மனுஷனால் வாய்திறவாமல் ஒரு படுநேர்த்தியான நிலையை நடிப்பில் கொண்டுவர முடியும். அவையனைத்தையும் அவர் பார்த்தார் - படித்தார். அவருடைய நடத்தை, படத்தில் வரும் மற்ற எந்தப் பாத்திரத்தை விடவும் மாறுபட்டிருக்கும். வேறு எந்த நடிகரும் அவரைப் போல் நடந்துகொள்வதில்லை. சிறிது அந்த இடத்திற்குப் பொருந்தாதவராகவும், மிகவும் தனிச்சிறப்போடும் இருப்பார், இது அத்தனையையும் வார்த்தைகள் இல்லாமல் சொல்வது மிகவும் முக்கியம் என்று கருதினேன்.

கோ.டெ. (கிறிஸ்): உங்கள் நண்பர்கள், அல்ஃபோன்சோ [கோரன்] மற்றும் அலெயாண்ட்ரோ [ஜி. இனாரிட்டு], இருவருமே சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்கார் விருது வென்றவர்கள். முதலில், அவர்கள் ஆஸ்கார்களைக் கையில் எடுத்த போது உங்கள் உணர்ச்சி என்னவாக இருந்தது?
கி.தெ.தோ.: உன்னதம். உண்மையான உன்னதம், ஏனென்றால், ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவருமே பரிந்துரைக்கப்பட்டு, “பான்’ஸ்” (Pan’s) மூன்று ஆஸ்கார்களை வென்றது, “சில்றன் ஆஃப் மென்” (Children of Men) மற்றும் “பேபல்” (Babel) ஆகிய படங்களும் இருந்தன, அப்போதுதான் நினைத்தோம், நாங்கள் மூவருமே நினைத்தோம், ஏசுவே, சிறந்த இயக்குனர், சிறந்த படம் அல்லது சிறந்த வெளிநாட்டுப் படம் என்று வென்றிருந்தால் மெக்சிகோவுக்கு என்னவொரு சிறப்புச் சேர்ந்திருக்கும் என்று. மற்ற விருதுகள் கிடைத்தன, ஆனால் இந்த விருதுகள் கிடைக்கவில்லை. பின்னர் அல்ஃபோன்சோவுக்குக் கிடைத்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். சரி, எல்லாம் முடிந்தது.

கோ.டெ. (கிறிஸ்): அலெயாண்ட்ரோவிடம்தான் அத்தனை உள்ளனவே, உங்களுக்கு ஒன்று கடனாகக் கொடுக்கலாமே.
கி.தெ.தோ.: அலெயாண்ட்ரோவிடம் ஒரு முழு வரிசையே உள்ளது, நட்பின் சிறப்பே என்னவென்றால் நண்பர்களுக்கு நடக்கும் நல்லவை எல்லாம் நமக்கு நடப்பது போலவே இருக்கும். அல்ஃபோன்சோ வென்றபோது என் தாய் மெக்சிகோவிலிருந்து என்னை அழைத்து, “உன் சகோதரன் வென்றுவிட்டான்" என்றார். அதுவும் அவ்வளவு மகிழ்ச்சியோடு.

கோ.டெ. (கிறிஸ்): நீங்களும் அவர்களின் குழுவில் இணைந்து உங்கள் முதல் விருதைப் பெறுவது உங்களுக்கு எப்படி இருக்கும்?
கி.தெ.தோ.: அருமையாக இருக்கும். பாருங்கள், எனக்கு எது அருமை என்றால், இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டியது மிகவும் முக்கியமும் கூட, இரண்டு முறை என் படங்கள் பேசப்பட்டதில், தனக்கே உரித்தான தனித்தன்மையோடுதான் பேசுபொருளாயின. பீத்தோவனின் வாழ்க்கையையோ அதி-எதார்த்தமான சமூக நாடகக் கதையையோ எடுத்து நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மற்ற பாணிகளைப் போலன்றி, கலைப் படங்களின் பாணியில், மதிப்புமிக்க கதைகளாகத் தன்னை முன்னிறுத்துபவையாகவும், அழகையும் ஆற்றலையும் திரைப்பண்போடு வெளிப்படுத்தும் மதிப்புமிக்க - கலைத்திறனுடைய வழிகளிலும் படங்கள் எடுக்க 25 ஆண்டுகளாக, அதாவது கால் நூற்றாண்டு காலம், போராடிக்கொண்டிருக்கிறேன். எனவே, “பான்’ஸ் லேபரிந்த்”-க்குப் பிறகு, “ஷேப் ஆஃப் வாட்டர்” போன்ற ஒரு படத்துடன் மீண்டும் இங்கே வந்து நிற்பது, இந்த உரையாடலுக்கு மத்தியில், இந்தக் ‘கலப்பில்’ (mix) வந்து நிற்பது, அதுதான் எனக்கு அர்த்தமுள்ளது. முற்சார்போடு அணுகப்படும் இந்தப் பாணிப் படங்களில்தான் இன்னும் என் உழைப்பைச் செலுத்துகிறேன். சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது, அதுவும் படம் பார்க்கும் முன்பே. அது எனக்குப் பிரச்சனையில்லை. எனவே அது கடவுள்களின் கைகளில் இருக்கிறது. இங்கு வந்து நிற்பதே எனக்கு சுகமாக இருக்கிறது.

கோ.டெ. (கிறிஸ்): உங்களுக்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதால், அதனினும் முக்கியமாக அவர்கள் நீங்கள் செய்யும் வேலையே செய்யும் துறையிலேயே இருக்கிறார்கள் என்பதால், நீங்கள் ஒரு வேலையில் இருக்கும் போது, ஒருவருக்கொருவர் உதவும் பொருட்டு ஒருவரையொருவர் தொடர்பு கொள்வீர்களா? “ஏய், இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றோ அல்லது எல்லாம் முடிந்து தயாராக உள்ள போது அவர்கள் எப்போது வந்து பார்ப்பார்கள் என்று துடிப்பதோ உண்டா?
கி.தெ.தோ.: ம்ம்ம், அல்ஃபோன்சோ, அலெயாண்ட்ரோ, ஜிம் கேமரோன், ஜெ.ஜெ. ஆப்ராம்ஸ் என்று எனக்கு ஐந்தாறு இயக்குனர் நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவருமே ஒருவரையொருவர் தொடர்பு கொள்வோம். “இதைப் படித்துப் பார்ப்பாயா?” அல்லது, “என் வெட்டைப் பார்த்துச் சொல்லேன்!” என்று எப்போது வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கேட்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம் என்னவென்றால், தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளின் போது, நீ என்னிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம். இரக்கமில்லாமல் விமர்சிக்கலாம். $150,000 மதிப்புள்ள ஒரு விஷுவல் எபெக்ட் காட்சியைக் காட்டி, “இது உண்மையிலேயே படுகேவலமாக இருக்கிறது” என்று சொல்லலாம். ஆனால், படம் முழுக்க எடுத்து முடித்தபின், “அருமையான பணி” என்றுதான் சொல்வோம். (சிரிக்கிறார்). அடுத்து அது பற்றிப் பேசமாட்டோம்.

கோ.டெ. (கிறிஸ்): பணி நடந்துகொண்டிருக்கும் போது, நீ என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
கி.தெ.தோ.: ஆம், கொடுக்கவும் செய்வோம். மிகவும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொள்ளவும் செய்வோம் (சிரிக்கிறார்). ஒருவருக்கொருவர் இரக்கமில்லாமல் நடந்துகொள்வோம். இது மிகவும் முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன். ஏனென்றால், நாங்கள் வாழும் துறையில், எல்லாமே ஆகா - அருமை என்று சொல்லும் குமிழி போன்ற கூட்டம் ஒன்றை மிக எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும், பின்னர் அப்படியே அழிந்தும் போக முடியும். இது, இப்போதும் பெவிலியன்ஸ் - ரால்ஃப்’ஸ் கடைகளுக்குப் போய், நானே எனக்கான மளிகை சாமான்களை வாங்கிக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அதுதான் எனக்கு மறை கழன்று விடாமல் பார்த்துக்கொள்வது. மறை கழன்று போதல் மிகவும் எளிதானது.

கோ.டெ. (கிறிஸ்): ம்ம்ம், வாழ்த்துக்கள், கையில் அருமையான படம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது அசலானதாகவும் படைப்புத்திறனோடும் இருக்கிறது. அது மட்டுமில்லை, வேறு எந்தப் படமும் இந்தப் படம் போல இல்லை.
கி.தெ.தோ.: நன்றி, மக்கள் இதைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்க ஒரு குட்டிக் கதையாகவும் அனுபவித்து, இப்போதைய முக்கியத் தேவையாக இருக்கிற மிக மிக விந்தையான அரசியல் உருவகமாகவும் சிந்திக்கத் தூண்டப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

கோ.டெ. (மார்கஸ்): சரி, கிளம்பும் முன், இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்ளவா? உங்கள் அடுத்த திட்டம் என்ன? மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
கி.தெ.தோ.: ம்ம்ம், என் வாழ்வில் முதன் முறையாக - இதற்கு முன்பு நான் இதை ஒருபோதும் செய்ததில்லை - இயக்குவதில் இருந்து ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக்கொண்டேன், ஏனென்றால் இந்தப் படம் இன்னமும் மிகவும் வலிமிக்கதாயும் மிகவும் மனதுக்கு நெருக்கமாகவும் மிகவும் அழகானதாகவும் இருக்கிறது. அது உலகத்துக்குள் தன் முதல் சில அடிகளை எடுத்து வைப்பதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எண்ணினேன், பின்னர் சிறிது காலம் எடுத்து, சில நூல்களைப் படித்து, ஒரு குழல் சுருட்டு பிடிக்க வேண்டும், நான் புகைப் பிடிப்பதில்லை, ஆனால் இப்போது ஒருவேளை ஆரம்பிக்கலாம், அது பற்றி யோசிக்க வேண்டும், ஏனென்றால் அவ்வளவு வேகமாகப் போகிறோம், சிறிது வாழவும் வேண்டுமே. எனவே, அங்கே இங்கே என்னைப் பார்த்தீர்கள் என்றால் நான் இன்னும் வாழ்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

* 2018 ஜூலை கணையாழி இதழில் வெளியானது

ஞாயிறு, ஏப்ரல் 01, 2018

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் 2006-இல் ஈவினிங் போஸ்ட்டுக்கு அளித்த நேர்காணல்: - பிரபஞ்சத்தில் கடவுளுக்கு எந்தப் பாத்திரமுமில்லை

ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு செய்திகள் வைத்திருக்கிறார், ஒன்று கெட்டது, இன்னொன்று நல்லது. நல்லது முதலில்: “பிரபஞ்சம் என்றென்றைக்கும் எஞ்சி நிற்கும்”. கெட்டது: “கடவுளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேகமாய்.”

மார்ச் 14, 2018, புதன்கிழமையன்று, ஸ்டீபன் ஹாக்கிங் தன் 76-ஆம் வயதில் மரணமடைந்தார். உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரின் “காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (நம் நம்பமுடியாப் பிரபஞ்சம்) ["A briefer history of time" (Our Incredible Universe)] என்ற நூல் வெளியீடு தொடர்பான ஈவினிங் போஸ்டின் அவரது பேட்டியை இங்கு படிக்கலாம். முதன்முறையாக இந்தப் பேட்டி 2006-இல் வெளியிடப்பட்டது.

உலகின் தலைசிறந்த அறிவியல் பிரபலத்தின் பார்வையாளர்களாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். கருந்துளைகளின் உட்புறத்தில் பேரார்வம் கொண்டவர்கள் போலப் படுகிற மாணவர்கள், லண்டனுக்கு வெளியே உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்கணிதத் துறைக்காகப் (Advanced Mathematics) புதிதாகக் கட்டப்பட்டுள்ள மையத்தின் வரவேற்பறைக்கு உள்ளேயும் வெளியேயுமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஒப்புதலைப் பெற ஆறு மாதங்கள் எடுத்துள்ளது. நூலாசிரியர்கள் ஒரு புதிய நூல் வெளியிடும்போது, ​​அவர்களைச் சந்திப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. ஆனால் இந்த எழுத்தாளர் மற்றவர்களைப் போல் அல்ல. அவரை "பேராசிரியர் ஹாக்கிங்" என்றுதான் அழைக்க வேண்டும் என்று பல முறை அறிவுறுத்தப்பட்டேன். வெறும் “திரு” போதாதாம்.

விசித்திரமான ரோபோ குரல் உடன் ‘உரைத் தொகுப்பி’ (Speech Synthesiser) வழியாகப் பேசுவது அவருக்கு அவ்வளவு எளிதல்ல. அனைத்துக் கேள்விகளும் முன்கூட்டியே எழுத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவற்றை மூன்று மாதங்கள் வைத்திருந்தார். இத்தகைய சிறப்பான ஒரு நேர்காணலுக்காக இவ்வளவு காலம் காத்துக் கிடந்தது அவ்வளவு சிறந்த அனுபவம் அல்ல.
உதறல். நான் பதற்றமாக உள்ளேன். இதற்கு முன்பு இப்படி என் உள்ளங்கையை வியர்க்கச் செய்த நேர்காணல் என்று ஒன்று நினைவே இல்லை. ஆனால் அது ஒரு பெரிய விஷயம் இல்லை. அவரால் என்னோடு கைகுலுக்க முடியாது என்பதைவிட.

‘அனைத்துக்குமான கோட்பாட்டு’க்கான தேடல்
இன்று, இயற்பியல் இரண்டு பொருந்தாத உலகங்களாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று, புவியீர்ப்பு மற்றும் சார்பியல் கோட்பாடுகள். இவை, வானியல் அளவு மற்றும் நம் அன்றாட வாழ்வில் உள்ள உறவுகளை விளக்குகின்றன. பெரு வெடிப்பு முதல் இன்று வரையான பெரும்பாலானவற்றை இவற்றால் விளக்க முடியும்.

ஆனால் அவை ஒரு மர்மத்தை விட்டுச் செல்கின்றன: பெரு வெடிப்புக்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது? புகழ்பெற்ற நம் இயற்கை விதிகள் யாவும் இதை விளக்க முடியாமல்தான் நொறுங்கி விழுகின்றன. விந்தைமிகு ‘குவிய இயற்பியல்’, பெரு வெடிப்பைச் சுற்றியுள்ள மர்மத்தை விலக்கும் வகையில் ஒரு புரிதல் ஒளி அடிக்கலாம். ஆனால் குவிய இயற்பியல் உலகம், புவியீர்ப்புக் கோட்பாடுகளோடு பொருந்திப் போகவில்லை.

இன்னொன்று குவிய இயற்பியல். இதில், இரண்டு துகள்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்தபோதிலும், ஒரு இரட்டை வாழ்வில் தற்செயலாக ஒன்றுபடலாம். குவிய இயற்பியலில், தொலைப்பெயர்ச்சி (teleportation) சாத்தியமாகிறது, காலப் பயணம் (time travel) இருக்க வாய்ப்புள்ளது, துகள்களுக்கு மட்டுமே என்றாலும் கூட. ‘இடது கைத் துகள்கள்’ (left handed particles) மற்றும் ‘நொறுங்கிய பரிமாணங்கள்’ (crumbled dimensions) போன்ற விசித்திரமான கருத்துகள் நிறைந்துள்ளன. ஆயினும், துகள்களைத் துல்லியமாகவும் முன்கணிக்கும் வகையிலும் அளத்தல் சாத்தியமில்லை.

இந்த இரண்டு உலகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதேயில்லை. அதுதான் நமக்குத் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் உலகின் முன்னணி கருத்தியற்பியலாளர்கள் பலர், இந்த இரண்டு உலகங்களையும் ஒரு மாபெரும் ‘குவிய ஈர்ப்புக் கோட்பாட்டிற்குள்’ (a great quantum gravitation theory) இணைக்க முயல்கின்றனர். இது எளிதானது அல்ல, ஆனால் ஹாக்கிங் மற்றவர்களைவிடக் கெட்டிக்காரர். தன் தோழர்களைப் போலன்றி, பெரும்பாலும், அவரால் அவரது கணக்கீடுகளை நிறைவேற்றிக் காட்ட முடியும், காட்ட வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் விளக்குதல்

கருத்தியற்பியல் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் சறுக்கும் ஒரு கருத்தாக்கம். புரிந்து கொள்ளக் கடினமானது. ஆகையால், மென்மேலும் பலவீனமாகிக் கொண்டிருக்கும் நம் பேராசிரியரால், ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ (1988) என்ற நூலைப் பத்து மில்லியன் பிரதிகள் விற்க முடிந்தது என்பது சாதாரணப்பட்ட சாதனையல்ல. இந்த நூலில், பிரபஞ்சத்தின் பெரும் தொடர்புகளை விளக்க முயற்சிக்கிறார். ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ உங்களுக்கும் எனக்குமாக எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாசகர்கள் நூல் முழுவதையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும்.

இன்னொன்று, நிச்சயமாக, இப்போது உள்ளங்கை வியர்க்கப் பார்வையாளர்களாகக் காத்திருக்கும் பத்திரிகையாளர்கள் நாங்கள் அவரின் மற்ற வாசகர்களைவிட மூடர்களாகத்தான் இருப்போம் என நினைக்கிறேன். நல்ல தாமதம், எதிர்பார்த்தபடி, ஹாக்கிங்கின் உதவியாளர் எங்களை அழைத்துச் செல்ல வருகிறார். மனம் மயக்கும் அழகான மூலை அலுவலகத்தின் உள்ளே, பேராசிரியர் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது தலை ஒரு பக்கம் தொங்குகிறது. சதை என்று அவருக்கு எதுவும் இல்லை. நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதைப் பற்றிச் சிறிது பதற்றத்தோடு தொடங்குகிறேன். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவரால் பதில் ‘சொல்ல’ முடியாது. அது சக்கர நாற்காலியில் இணைக்கப்பட்டுள்ள கணினித் திரையில் இருந்து குழாய் வழியாகப் ‘போகத்’ துவங்குகிறது. புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எங்கு உட்கார விரும்புகிறார் என்று கேட்கிறோம். அமைதி. நீண்ட அமைதி.

 • ஸ்டீபன் மற்றும் ஜேன் ஹாக்கிங் திருமணம் செய்துகொண்டபோது, ​​அவர் வாழ இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாக நம்பினர் அவர்கள் இருவரும். மாறாக, அது ஒரு நீண்ட திருமணத்தின் துவக்கமாக மாறியது: ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ (The Theory of Everything) திரைப்படம் அவர்களின் கதையைக் கூறுகிறது.

ஒவ்வொரு வாக்கியத்திற்கும் மூன்று நிமிடங்கள் செலவழிக்கும் ஒரு நபருடன் ஓர் உரையாடல் நடத்துவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் புரியும் என நினைக்கிறேன். மூன்று நிமிடங்களுக்குப் பின்:

“நீங்களே சொல்லுங்கள். மேசைக்கு முன்னாலோ பின்னாலோ உட்கார்ந்து கொள்கிறேன்.”

குரல் தெளிவாக இருக்கிறது, ஆனால் பழைய அறிவியல் புனைகதைத் திரைப்படங்களில் ரோபோக்கள் பேசுவது போல உலோகக் குரலில் இருக்கிறது.

கேள்விகளை ஏன் நீண்ட காலம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை இப்போது புரிந்துகொள்ளத் தொடங்குகிறேன். நாம் எழுப்பியுள்ள பத்துக் கேள்விகளுக்கும் பதில்களைத் தயாரிக்க அவருக்குப் பல மணிநேரங்கள் ஆகியிருக்கும்.
அவர் எழுதுவதற்கும் பேசுவதைப் போல நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். அப்படியிருக்கையில் முழு நூலையும் எழுதுவது எவ்வளவு கடினமாக இருந்திருக்க வேண்டும்! அதைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கிறது நமக்கு. இந்த நிலையில், இவ்வளவு சிரமப்பட்டு, ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ எழுதும் வேலையை ஏன்தான் மேற்கொண்டாரோ? அதானே, ஏன்? எதற்காக?

“வரலாற்றுச் சுருக்கம்… நிறைய ஆர்வத்தை எழுப்பியது, ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்வது கடினம் என்று நினைத்தனர். எனவே, பின்பற்ற எளிதாக இருக்கும் வகையில் ஒரு புதிய பதிப்பு எழுத முடிவு செய்தேன். இயற்பியலில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய வளர்ச்சியில் இருந்து சில புதியவற்றைச் சேர்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினேன், மேலும் புரிந்துகொள்ளக் கடினமான சில தொழில்நுட்ப விஷயங்களையும் நீக்கிவிட்டேன். இதன் விளைவு, சற்றுச் சிறிய - ஆனால் அணுக வசதியான ஒரு நூல். ‘வரலாற்றுச் சுருக்கம்’ படிப்பதில் சிரமம் கண்ட மக்கள்… ‘இன்னும் சுருக்கமான ஒன்று’ (A Briefer) என்ற இந்த நூலைப் படிக்க முயற்சிப்பார்கள்; இன்ப வியப்படைவார்கள் என்று நம்புகிறேன்,” என்றது உலோகக் குரல்.

ஓ, அப்படியானால் மற்ற வாசகர்களும் அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையா? கேட்கவே இனிமையாக இருக்கிறது.

பரப்புதலில் மும்முரம்
தன் கன்னத்தைத் தூக்கியும் கண்சிமிட்டியும் ஒவ்வொரு கேள்விக்கும் முன்கூட்டியே தயார்செய்து வைத்திருந்த தன் பதில்களை அந்த இயந்திரத்துக்கு அனுப்புகிறார். ஒரு சிறிய அகச்சிவப்பு உணர்வி சைகைகளைப் பொறுக்குகிறது. இப்படியாக அவர் சொல்ல முயலும் சொல் ஒவ்வொன்றையும் எதுவென்று உணர்ந்து அதுவே முன்மொழியும் கணினி ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக, அவரால் ஆன்லைனில் படிக்க முடியும், மின்னஞ்சல், நூல்கள் மற்றும் விரிவுரைகளை எழுத முடியும். உரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், சிம்ப்சன்ஸ் தொலைகாட்சித் தொடரில் ஒரு தொகுதியில் பங்கு பெற்றார், ‘ஸ்டார் ட்ரெக்’ தொடரில் இருந்தார், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்துள்ளார். அவரும் ஸ்பீல்பெர்க்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் பேரக்குழந்தைகளின் படங்களுக்கு அருகில் நிற்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங், தன் தோழர்கள் எவரையும் விட அறிவியலைப் பரப்புவதில் பரந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ளார். என்ன, அதற்குத் தேவைப்படும் நேரந்தான் நீண்டதாக - மிக நீண்டதாக இருக்கிறது. ஆனால் அவர் ஏன் இப்படித் தன் அளவான நேரத்தை பெரும்பாலானவர்களுக்குப் பெரிதும் பயன்படாததான இந்தக் கருத்தியற்பியல் கற்பிப்பதில் செலவிடுகிறார்?

“இந்தப் பெரும் பிரபஞ்சத்தில் நம் இடம் எது என்பதை அறிவதில் நம் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. நாம் ஏன் இங்கே இருக்கிறோம், எங்கிருந்து வந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறோம். இந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான சிறந்த விளக்கத்தை இயற்பியல் வழங்குகிறது. இந்தப் பாடத்தில் தாம் கற்பிக்கப்படும் விதம் காரணமாக, இயற்பியல் தொடர்பான தம் தைரியத்தைப் பலர் பள்ளியிலேயே இழந்துவிட்டனர். கணிதம் இல்லாமலே மிக முக்கியமான கருத்துக்களை எளிமையான கருத்துக்களால் விளக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். நாம் எந்த முன்னேற்றத்திற்காக உழைக்கிறோமோ அதற்கான உற்சாகத்தை மக்கள் புரிந்து கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் முக்கியம். அதுவே நம் மற்ற கவலைகள் அனைத்தையும் சரியான இடத்தில் வைத்துவிடும்.”

அலுப்பூட்டும் ஆய்வுகள்
தன் ஆய்வுகள் கொடுத்த சலிப்பைத் தானே அனுபவித்தவர் என்பதாலேயே, இயற்பியல் எவ்வளவு சலிப்பானதாக இருக்க முடியும் என்பது பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்கிறார் ஹாக்கிங்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்புக்குச் சேர்வதற்கு முன்னர், ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்ற அனைத்து இயற்பியல் ஆய்வுகளிலும் ஒரு நாளில் பாதி கூட அவரால் அதற்காகச் செலவிட முடியவில்லை. 24 வயதில் படிப்பை முடித்தார். 20 ஆண்டுகட்கும் மேலாக, ஐசக் நியூட்டன் அவரது காலத்தில் வகித்த அதே மதிப்புமிக்க பேராசிரியர் பொறுப்பிலேயே இவரும் இருந்தார். இப்போது தன் அறிவியல் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பது பற்றி முழு நம்பிக்கையோடு இருக்கிறார்.

"உங்கள் வாழ்நாளில் ‘அனைத்துக்குமான இறுதி ஐக்கியக் கோட்பாட்டை’ அடையும் நம்பிக்கை இருப்பதாக இந்தப் புதிய நூலில் கூறுகிறீர்கள். இதற்கு முன்பும் நாம் இறுதி விடையை அடைந்துவிட்டோம் என்று தவறாக நம்பியிருக்கிறோம் எனும் போது, இது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்?

"கருந்துளைகளில் அல்லது மிக இளம் பிரபஞ்சத்தில் போன்ற தீவிர சூழல்கள் தவிர்த்து மற்ற எல்லாச் சூழல்களிலும் எதற்கு என்னென்ன விதிகள் பொருத்தமானவை என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம். மேலும் தொடர, மிகக் குறுகிய தொலைவுகளுக்கான விதிகளைக் கண்டறிய வேண்டும். அத்தகைய விதிக்கான ஒரே சாத்தியம்: எம்-கோட்பாடு. பிரச்சனை என்னவென்றால், எம்-கோட்பாட்டை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்கிறது இயந்திரம்.

அவர் உண்மையிலேயே பெரிய்ய பெரிய்ய கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்தப் புதிய நூலில் கடவுளையும் முடிவின்மையையும் மாபெரும் அற்புதங்களையும் பற்றிப் பேசுவதற்கு நிறைய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்.

நிறையப் பேர் இவற்றை அறிவியலாக அல்லாமல் தனிப்பட்ட நம்பிக்கையின் கீழ் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஹாக்கிங், இவை அறிவியல் கேள்விகள் என்று கருதுகிறார், இதில் கடவுளின் பாத்திரம் என்ன என்பது பற்றித் தெளிவான புரிதல் கொண்டுள்ளார்.

"அறிவியலின் அடிப்படைக் கருதுகோள் அறிவியல் நியதிவாதம். அதாவது, ஒரு குறிப்பிட்ட வேளையில் அதன் நிலையைப் பொருத்து, அறிவியலின் விதிகளே பிரபஞ்சத்தின் பரிணாமத்தைத் தீர்மானிக்கின்றன, இந்த விதிகள் கடவுளால் கொடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்த விதிகளை உடைத்துப் போட அவர் உடைத்துக்கொண்டு உள்ளே வர முடியாது. அப்படியானால், அவை விதிகளாக இருக்க முடியாது. இது, பிரபஞ்சத்தின் தொடக்க நிலையைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கடவுளுக்குக் கொடுக்கிறது. ஆனாலும் விதிகள் என்று விதிகள் இருக்கின்றன. எனவே கடவுளுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை.

 • ஸ்டீபன் ஹாக்கிங், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏ.எல்.எஸ். (ALS) எனப்படும் அரிய தசை நோயுடன் வாழ்ந்தார்: ஸ்டீபன் ஹாக்கிங் பேச உதவும் மென்பொருள் இப்போது இலவசமாகி உள்ளது 

பிரபஞ்சம் எப்போதும் இருந்திருக்கலாம் என்று நம்புங்கள்
சில ஆண்டுகள் முன்புவரை, பெரு வெடிப்போடு தொடர்புடைய அனைத்து இயற்கை விதிகளும் சரிந்து விழும் என்று ‘பெரு வெடிப்புக்’ கோட்பாடு கணித்ததாக நம்பினர். பெரு வெடிப்புக்கு முன்பு எல்லாமே முற்றிலும் கணிக்க முடியாதவையாக இருந்ததால், இந்தச் சரிவு கடவுளுக்கு ஒரு தெளிவான பாத்திரத்தை விட்டுச் சென்றது.

இவை எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டுக் கடவுள் விதிகளை வடிவமைத்திருக்க முடியும். பல இயற்பியலாளர்கள் மத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது ஒன்றும் பெரும் வியப்பில்லை. மின்னணுவியின் (electronica) திடச் செறிவு சிறிது வேறுபட்டிருந்தால், விண்மீன்கள் எரியாது, உயிர் இராது என்று கணக்கீடுகள் காட்டுகின்றன.

பெரு வெடிப்புக்கு கோட்பாடு முதலில் சொன்னது போல, மெதுவாக அல்ல, மென்மேலும் வேகமாகப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதைத் தொலைதூர விண்மீன் மண்டலங்களின் புதிய அளவீடுகள் குறிக்கின்றன. இதன் பொருள் பிரபஞ்சம் எப்போதும் இருந்திருக்கிறது என்பதே என்று ஹாக்கிங் நம்புகிறார் இப்போது.

பெரு வெடிப்புக்கு முன்பு என்ன வந்தது என்ற கேள்வி, வடதுருவத்துக்கு வடக்கே என்ன இருக்கிறது என்ற கேள்வியோடு ஒப்பிடத் தக்கது என்கிறார் அவர். இது எல்லாமே பல்வேறு விஷயங்களைச் சார்ந்தவை. மேலும், பிரபஞ்சத்தின் வயது என்பது பூமியின் மேற்பரப்பைப் போன்றது. இந்த பிரபஞ்சம் வெளிப்புறக் காரணி மூலமாக ஒருபோதும் மாற்றத்துக்கு உள்ளாகாமல் சுதந்திரமாக உள்ளது. இவை அனைத்தும் முன்பை விட இப்போது கடவுள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே ஆக்குகின்றன. எப்படியிருந்தாலும் பிரபஞ்சத்தில் அவருக்கு வேலையில்லை. கடவுள் படைப்பாளர் அல்ல என்று ஆகிவிட்டால், அதன்பின்பு அவரைக் கற்பனை செய்வது சாத்தியமா?

“தத்துவஞானிகள் பின்தொடரவில்லை”
சரியான தொலை நோக்குப் பார்வை உடையவர்களுக்கான ஒரு நல்ல செய்தி, எல்லாம் மறைகிற புதியதொரு பெரு வெடிப்புப் புள்ளியில் பிரபஞ்சம் மீண்டும் இணையாது. மாறாக, அது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அவ்வளவுதான். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என நினைக்கிறேன்.

மற்ற பல இயற்பியலாளர்களைப் போலல்லாமல், ஹாக்கிங் ஒரு தத்துவ நிலைக்குச் செல்ல விரும்புகிறார். ஆனால் இன்றைய தத்துவத்தால் அவர் கவனிக்கப்படவில்லை.

“தத்துவஞானிகள் இயற்பியல் மற்றும் உயிரியலில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியைப் பின்பற்றவில்லை. இதன் விளைவாக, அவர்களது விவாதங்கள் மென்மேலும் காலாவதியாகியும் தொடர்பிழந்தும் வருகின்றன. இது தொடர்ந்து அறிவியலை வெறும் தொழில்நுட்ப விவரங்கள் என்று எழுதி வருவதை நிறுத்தாது. டார்வின், மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) மற்றும் நவீன அண்டவியல் (Modern Cosmology) ஆகியவை நம்மைப் பற்றியும் நமது பிரபஞ்சத்தில் நம் இடத்தைப் பற்றியும் ஓர் அடிப்படை மாற்றத்திற்கு வழிவகுத்தன. தத்துவம் இதைப் பிரதிபலிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் அறிவியல் ஒரு அற்ப வார்த்தை விளையாட்டு என்கிற அளவுக்குக் குறைக்கப்பட்டுவிடும் .

இருப்பினும், பல இயற்பியலாளர்கள் மதநம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது ஒன்றும் பெரிய மர்மம் அல்ல. ஹீசென்பெர்கின் ‘தேராமைத் தத்துவம்’ (Heisenberg's Uncertainty Relationship) என்கிறார்களே, அது குவிய இயக்கவியலுக்கு (Quantum Mechanism) ஒரு முக்கியமான அடித்தளமாகும். இங்குதான் ஒருவேளை படைப்பாளர் விண்ணப்பிக்க போகிறாரோ?”

"முதல் பார்வையில், அறிவியல் கணிப்புத்தன்மை (Scientific Predictablity) என்ற முழுக் கருத்தையும் ஹீசென்பெர்கின் தேராமைத் தத்துவம் அடித்துப் போடப்படுகிறது. ஒரு துகளின் நிலை, திசைவேகம் ஆகிய இரண்டையும் துல்லியமாக அளவிட முடியாது என்பதையே இது காட்டுகிறது. பிரபஞ்சத்தின் நிலையைத் துல்லியமாக அளவிட முடியாவிட்டால், அதன் எதிர்கால வளர்ச்சியை எப்படி அறிவியலால் கணிக்க முடியும்? இந்த நிச்சயமின்மை பிரபஞ்சத்தில் கடவுளின் தலையீட்டை எடுத்துரைக்கிறதா? அப்படியான ஒரு வாதத்தைப் பின்பற்றுவது கடினம் என்று நினைக்கிறேன். காரணம், இந்த நிச்சயமின்மை இப்போது முற்றிலும் சீரற்றதாக உள்ளது. எனவே, நாம் அறிவியல் கணிப்புத்தன்மையை மீண்டும் நாடுகிறோம். இந்தப் புதிய வரையறை மூலம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரபஞ்சத்தின் நிலையைப் பொருத்து, பிரபஞ்சத்தின் வளர்ச்சி முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகிறது.

“மிகவும் பாக்கியவான்”
நேர்காணல் முடிவை நெருங்குகிறது. அவருடைய அலுவலகத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கும் மர்லின் மன்றோவின் படத்தை எடுத்தார். இந்த 64 வயதுப் பெரியவர் அவரின் பெரிய ரசிகர். தன்னுடைய நூலில் புவியீர்ப்புக் கோட்பாட்டை விளக்க அவரை ஓர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறார். இருவரையும் ஒரே உயரத்தில் இருந்து விடுவித்தால், தனது மாபெரும் சக்கர நாற்காலியில் இருக்கும் இவரும், மர்லின் விழும் அதே வேகத்திலேதான் கீழே விழுவார்.

பத்து கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு தோட்டாவில் பிரபஞ்சத்தின் அனைத்து விண்மீன்களுக்கும் இடம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால், நாம் வெறும் கண்களால் காணும் விண்மீன்கள் அனைத்தும் ஒரு தேக்கரண்டிக்குள் அடங்கிவிடும்.

இதை நினைத்தாலே கண்ணைக் கட்டுவது எனக்கு மட்டுமல்ல என்று நினைக்கிறேன்.

ஆனால் ஹாக்கிங் மிகக் கனிவானவராகப் படுகிறார். அவரும் அவரது இரண்டு பெண் உதவியாளர்களும் நேர்காணலுக்குப் பின் அருமையான ஆங்கிலத் தேநீர் வழங்குகிறார்கள். அவர் பெருமையுடன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ள படங்களையும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் சந்தித்ததையும் காட்டுகிறார். சிம்ப்சன் தொடரின் படைப்பாளரான மாட் க்ரோனிங், ஹாக்கிங்குக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட அவரைப் போலவே இருக்கும் பொம்மையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.

"நான் இந்த நோய்க்குள்ளான வகையில் மிகவும் துர்பாக்கியவான் என்றாலும், கிட்டத்தட்ட மற்ற எல்லாவற்றிலும் மிகவும் பாக்கியவானாக இருந்திருக்கிறேன். உடல் ஊனம் ஒரு பெரும் ஊனமாகக் கருதப்படாத கருத்தியற்பியல் துறையில் பணி புரியும் பாக்கியம் பெற்றேன். மேலும், என் புகழ்பெற்ற நூல்கள் வழியாகத் தங்கப் பறவைகள் சுட்டு வீழ்த்தினேன்,” என்கிறார் ஹாக்கிங்.

அவரின் கொடூரமான தசை நோய் ‘அமியோட்ரோபிக் பக்க இறுகல்’ (Amyotrophic Lateral Sclerosis - ALS) மேலும் சக்தி பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் பிடிவாதமாகப் பிடி கொடுக்க மறுக்கிறார். ஒருவேளை அது அவர் கொண்டிருக்கும் இலக்கின் முக்கியத்துவம் பற்றிய வைராக்கியம் காரணமாக இருக்கலாம்.

இந்த நூலில் அவர் கூறுவது: "ஓர் ஐக்கியக் குவிய ஈர்ப்புக் கோட்பாட்டைக் கண்டுவிட்டால், கடவுளின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். அதுவே மனிதச் சிந்தனைத் திறனின் இறுதி வெற்றியாக இருக்கும்."

* 2018 ஏப்ரல் கணையாழி இதழில் வெளியானது

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...