ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 4/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...


சிங்கப்பூர் என்றால் எல்லோருக்கும் பிடிப்பதற்கு முக்கியமான காரணம் - இங்கே மனிதர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. வேறெங்கும் இந்த அளவுக்குப் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை நான். அதற்குக் காரணம் இங்கிருக்கும் சட்டம்-ஒழுங்கு. அதற்குக் காரணம் - கடுமையான தண்டனைகள். மற்றவற்றில் எல்லாம் மேற்கு நாடுகளைப் போல இருந்தாலும் இந்த ஒன்றில் மத்தியக் கிழக்கு போலவும் கிழக்கு போலவும் தான் இருக்கிறது சிங்கப்பூர். ஒரு வருடத்தில் மொத்தக் கொலைகளின் எண்ணிக்கை பத்தோ என்னவோதான் என்கிறார்கள். திருடிச் சிக்கினால் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் போலீசில் ஒப்படைத்து விடுகிறார்கள். பெரும் தவறுகள் செய்வோருக்குப் பெரும்பாலும் கசையடி தண்டனை கிடைக்கிறது. அதை விடப் பெரும் தவறுகள் செய்பவனாக இருந்தால் தூக்கில் தொங்க விட்டு விடுகிறார்கள்.

கசையடி வழங்கப் படும் அளவுக்குக் குற்றங்கள் செய்வோரை சோதித்துப் பார்த்து விட்டுத்தான் அதற்கேற்ற மாதிரித் தண்டனைகள் கொடுப்பார்கள் என்று கேள்விப் பட்டேன். எடுத்துக்காட்டாக, பத்து அடிகள் தண்டனை வழங்கப் பட்ட ஒருவர் இரண்டாவது அடியில் சாய்ந்து விட்டால் அவரைத் தேற்றி - சரிப்படுத்தி - ஆறு மாதம் கழித்து அடுத்த சுற்று அடிப்பார்களாம். இதெல்லாம் கேட்கவே கிறுகிறுக்கிறது. பெரும்பாலும் ஒருமுறை அனுபவித்து விட்டால் அவன் வாழ்க்கைக்கும் அது போல நடந்து கொள்ள மாட்டான் என்றே சொல்கிறார்கள். அப்படியான சட்ட ஒழுங்கின் பயனை அனுபவிக்கிற போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிலாததாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவிப்பயல்கள் படும் அடிகளை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் மேற்கு நாடுகளில் கிடையாது என்றே நினைக்கிறேன்.

கண்ணுக்குக் கண் என்பது பரவாயில்லை. சிராய்ப்புக்குக் கண் என்றால் எப்படி? இதில் பெரும் கொடுமை என்னவென்றால், குடியேற்றம் (IMMIGRATION) சம்பந்தப் பட்ட குற்றங்களுக்கும் கசையடிதானாம்.  அதாவது, அனுமதிக்கப் பட்ட கால அளவையும் தாண்டி 90 நாட்களுக்கு மேல் ஊர் திரும்பாமல் இங்கேயே இருந்து விடுபவர்களுக்கு. சிக்கினால் அடி விழும் என்று தெரிந்தே நம்மவர்கள் நிறைய இடத்தைக் காலி செய்யாமல் இருந்து சிக்கிப் படாத பாடு பட்டிருக்கிறார்களாம். இதுதான் தண்டனை என்று தெரிந்தும் அந்தக் குற்றத்தைச் செய்பவனுக்கு அந்தத் தண்டனை கொடுப்பதில் என்ன தவறு என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். அது தர்க்க ரீதியாகச் சரியாகத்தான் படுகிறது. ஆனாலும் அதை ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில் மன நிம்மதி பாதிக்கப் படத்தான் செய்கிறது. இதே பிரச்சனை அமெரிக்காவிலும் இருக்கிறது ஐரோப்பாவிலும் இருக்கிறது. அங்கு எங்குமே இது போன்ற கடுமையான தண்டனைகள் இல்லை. நான் இலண்டனில் இருந்த போது கூட இது போன்ற ஒரு பெரும் பிரச்சனை ஓடிக் கொண்டிருந்தது. அதிக பட்சம் அங்கே சிறையில் அடைத்துச் சாப்பாடு போடுகிறார்கள். அவ்வளவுதான். அதனால்தான் அங்கே எண்ணிக்கையும் இது போன்ற குற்றங்களின் அதிகமாக இருக்கிறது.

பிறப்பால் இந்தியனாக இருப்பதால் கடுமையான தண்டனைகளைப் பற்றிக் கேள்விப் படும் போது மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நமக்குத் தவறு செய்வது சாதாரணம். நம்ம பசங்களும் நிறைய இங்கிருக்கும் கெடுபிடிகள் பற்றித் தெரியாமல் ஏதாவது செய்து சிக்கிச் சின்னாபின்னப் பட்டு விடுகிறார்கள். சமீபத்தில் கூட, வந்திறங்கிய சில நாட்களுக்குள்ளேயே லிட்டில் இந்தியாப் பகுதியில் வழிப்பறி செய்து சிக்கிய இந்தியப் பையன் பற்றிக் கேள்விப் பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். வழிப்பறி செய்தவன் சிக்கிக் கொண்டதற்காக அல்ல; நம்மூரில் போல இருக்குமென்றெண்ணி வரப்போகும் தண்டனையின் கொடூரம் தெரியாமல் தவறு செய்து விடுகிறார்களே என்றுதான். சமீபத்தில் முஸ்தபாவில் உள்ளூர்ப் பெரியவர் ஒருவர் திருட்டில் சிக்கி அவரைப் போலீஸ் அழைத்துச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு இன்று வரை அந்தக் காட்சி மனதில் வந்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.

திருட்டு என்று மட்டும் இல்லை. எந்தப் பிரச்சனை என்றாலும் அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் குவிந்து விடுகிறார்கள். பெரிய அளவில் இது போல நிறையக் கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். ஏதும் பார்க்க வில்லை இன்னும். ஏதாவது சிறிய புகார் என்றாலும் எட்டுத் திசைகளிலும் ஒவ்வொரு வண்டியில் பெரும் பரபரப்போடு வந்து இறங்கி விடுவார்களாம். இது எப்படி சாத்தியம் என்றால், அது சிறிய நாடாக இருப்பதால் இருக்கும் நிர்வாக வசதி. நான் பார்த்தவரை போலீசாக இருப்பவர்கள் எல்லோருமே கல்லூரி மாணவர்கள் போல இருக்கிறார்கள். இன்றுவரை தொந்திக் கணபதிகளைப் பார்க்கவே இல்லை. இயல்பாகவே சீனர்கள் அளவான-ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள்; பார்க்க இளமையாகத் தெரிபவர்கள் என்றாலும் மற்றவர்களுமே (மலாய் மற்றும் தமிழ்ப் போலீஸ்க்காரர்கள்) கூட இளமையாகத்தான் இருக்கிறார்கள். நாம் அவர்களுடைய போலீசைப் பார்த்து அடையும் ஆச்சரியத்தை விட அவர்கள் நம்ம ஊர்ப் போலீசைப் பார்த்தால் ஆடிப் போய் விடுவார்கள் என நினைக்கிறேன். :)

குடியேற்றப் பிரச்சனைகள் பற்றிப் பேசியதால் அவை சார்ந்த மற்ற பிரச்சனைகள் பற்றியும் பேசி விடுவோம். இங்கே 70 விழுக்காட்டுக்கு மேல் சீனர்களும் 20க்குள் மலேயர்களும் 10க்குள் நம்மவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய  மக்கட்தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கூடி வருவதால் அல்லது மக்கட்தொகையின் சராசரி வயது அதிகரித்து வருவதால் நாட்டில் மக்கட்தொகையை நல்ல படி வைத்துக் கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்களை நிறைய உள்ளே விட ஆரம்பித்திருக்கிறார்கள். இடையில் கொஞ்சம் அந்த வேகம் குறைந்திருந்தாலும் எதிர் காலத்திலும் அது வேகமெடுக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. முன்பு போலல்லாமல் இந்தியாவின் எல்லாப் பகுதியினரும் இப்போது வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். எப்படியிருப்பினும் இந்திய மக்களின் பங்கு 10 விழுக்காட்டுக்கு மேல் போய் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். 

ஐந்து-பத்து வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தவர்கள் எல்லோரும் நிரந்தர வசிப்புரிமையோ குடியுரிமையோ மிக எளிதில் பெற்று செட்டில் ஆகி விட்டார்கள். அந்த வகையில், ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாக ஒரு கூட்டம் வந்து குடியேறிக் கொண்டிருக்கிறது. எல்லோருமே ஏழு தலைமுறைக்கு முன் வந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது. எல்லோருமே இப்போதுதான் வந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது.

ஆரம்ப காலத்தில் தமிழர்கள் வந்து குவிந்தது போல், இப்போது இங்கே வங்கதேசத்தவர் குவிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் தனி ஆளாகத்தான் வந்திருக்கிறார்கள். இரண்டோ மூன்றோ வருடங்களில் வேலை முடிந்ததும் வீடு திரும்பி விடுவார்கள். அதனால் அவர்களும் சிங்கப்பூரர்களாக மாறி விடுவதற்கோ சிங்கப்பூரின் மக்கட்தொகையில் அவர்களின் எண்ணிக்கையும் கூடி விடுவதற்கோ வாய்ப்பில்லை. ஞாயிற்றுக் கிழமை லிட்டில் இந்தியாப் பக்கம் போனால் ஒருபுறம் நம்மவர்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்றால் இன்னொரு புறம் இவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். சொல்லப் போனால் நம்மை விட அவர்களுக்குத்தான் சிங்கப்பூர் பக்கம். நமக்குக் கடல் வழி. அவர்களுக்குத் தரை வழியிலேயே முடிய வேண்டும். முடிய வேண்டும் என்றாலும் இடையில் இருக்கும் எல்லைகள் அதை இன்னும் சாத்தியப் படுத்தவில்லை. இந்தியாவில் இருந்து மியான்மர், மலேசியா வழியாக இருப்புப் பாதைத் திட்டம் ஒன்று தயாராகி வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். வந்தால் நன்றாக இருக்கும்.

வந்த புதிதில் இந்திய முகம் கொண்ட எல்லோருமே தமிழர்கள் என்கிற மாதிரிப் பேச்சைப் போடுவேன். இப்போது கொஞ்சம் புரிய ஆரம்பித்து விட்டது. வங்க முகமும் எங்க முகமும் கொஞ்சம் வேறுபட்டிருப்பதை எளிதில் கண்டு பிடிக்க முடிகிறது. அது போலவே மொத்தமாக ஆசிய முகம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு சீனர்கள், மலேயர்கள், பிலிப்பினோக்கள் என்று எல்லோருமே ஒரே மாதிரியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அவர்களுக்குள்ளும் இருக்கும் உருவ வேற்றுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்து விட்டது.

தமிழ் செத்து விட்டதோ இல்லையோ நன்றி என்கிற சொல் கிட்டத்தட்டச் செத்து விட்டது நம்ம ஊரில். இங்கே அது கொஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. லிட்டில் இந்தியாப் பக்கம் சாதாரணமாக அடிக்கடிக் கேட்க முடிகிறது. அது மட்டுமில்லை, உள்ளூர் டாக்சி ஓட்டுனர்களும் அடிக்கடி 'நன்றி' சொல்கிறார்கள். தமிழில் அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் ஒரே சொல் அதுவாகத்தான் இருக்கிறது. டாக்சி ஓட்டுனர்கள் என்றதும்தான் தோன்றுகிறது - முன்பே சொன்ன படி அவர்கள் மிகவும் நல்லபடிப் பேசுகிறார்கள். உபசரிக்கிறார்கள். அதிலும் கொஞ்சநஞ்சம் திமிர் பண்ணுவது கூட நம்ம ஆட்கள்தான். குண்டக்க மண்டக்க முடியை வெட்டிக் கொண்டும் விட்டுக் கொண்டும் இருக்கும் நம் கூட்டம் ஒன்று இருக்கிறது இங்கே. அவர்களுக்கு என்னவோ நம்மை மாதிரி ஒழுங்காக முடி வெட்டி சவரம் செய்து இருக்கும் இந்திய முகங்களைப் பார்த்தாலே மூஞ்சி இஞ்சி தின்று விடுகிறது. அது பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். ஏன் என்று கொஞ்சம் புரிபட்டதும் விரிவாகப் பேசி விடுவோம்.

மற்றபடி, சீன-மலேய டாக்சி ஓட்டுனர்கள் நிறையப் பேர் நன்றாகப் பேசுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயம் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைக்கும். ஒருவர் கிரேக்கப் பொருளியற் பிரச்சனை பற்றிப் பேசுவார். இன்னொருவர் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் அமெரிக்கா எப்படிக் காரணமாக இருக்கிறது என்பது பற்றிப் பேசுவார். ஒருவர் இந்தியாவில் உள்ள பிரச்சனைகள் பற்றி நம்மை விடத் தெளிவாகப் பேசுவார். இன்னொருவர் ஆரிய-திராவிடப் பிரச்சனை பற்றிப் பேசுவார்; கூடவே இந்தியாவில் இருக்கும் ஐந்தாறு மாநிலங்கள் பற்றியும் அங்கே பேசப்படும் மொழிகள் பற்றியும் அவற்றின் தலைநகரங்கள் பற்றியும் பேசுவார். ஒருவர் திமிர் பிடித்த இந்தியர்களிடம் சிக்கிக் கொண்டு  பட்ட திண்டாட்டங்கள் பற்றிப் பேசுவார் (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நிறையப் பேர் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள்!). ஒருவர் சிங்கப்பூர் எப்படிப் பல கிராமங்களாக இருந்தது ஒரு காலத்தில் என்பது பற்றிப் பேசுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஆச்சரியத்துக்கு உரியதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கிறது.

இந்தக் கதைகளிலேயே மிகவும் மனதைப் பாதித்தது - இந்தியப் பெண்மணி ஒருவருடன் உண்டான பிரச்சனை பற்றி ஓர் ஓட்டுனர் சொன்னதுதான். "நேராப் போ, நான் சொல்லும் போது வளை!" என்று சொல்லி விட்டு கைபேசியில் மூழ்கி விட்ட பெண்மணி திடீரெனக் கத்தியிருக்கிறார். நம்ம ஊரில் பண்ணுவது போல. என்னவென்று கேட்டால், வளைய வேண்டிய சந்து கடந்து விட்டதாம். "நீங்கள் சொல்லவில்லையே மேடம்!" என்றதும் இன்னும் கோபமாகி விட்டதாம். குண்டக்க மண்டக்கப் பிடித்துக் கத்தியிருக்கிறார். இந்தியாவில் தன் குடும்ப உறுப்பினர் யாரோ கமிஷனராக இருப்பதாகவும் இவர்களைக் கண்டால் டெல்லியே நடங்கும் என்றும் அதெப்படி 'ஆப்டர் ஆள்' ஒரு டாக்சிக்காரன் தன்னிடம் இப்படிப் பேச முடியும் என்றும் கத்தியிருக்கிறார். "எல்லாம் சரி மேடம், என் மேல் எந்தத் தப்பும் இல்லையே?!" என்று பூனைக் குட்டி போலச் சொல்லியிருக்கிறார் இவர். 'விட்டேனா பார் உன்னை...' என்று போலீசை அழைத்து "இவன் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறான்!" என்று புகார் கொடுத்து விட்டாராம். அவர் தவறு செய்யவில்லை என்று பின்னர் நிரூபணம் ஆகி விட்டாலும் அந்தச் சிக்கலுக்குள் இருந்து மீளும் முன் அவர் விழி பிதுங்கி விட்டதாம் பாவம்.

ஊர் ஊராகப் போய் இந்த மாதிரிச் சோலிகள் எல்லாம் செய்தால் எல்லா இடத்திலும் அடித்து மண்டையை உடைத்துத்தான் அனுப்புவார்கள் இன்னும் கொஞ்ச காலத்தில். அதனால் உலகத்துக்கே எல்லாம் பிடுங்கச் சொல்லிக் கொடுத்த இந்திய இனம் போகிற இடங்களில் ஒழுங்காக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளாவிட்டால் நாம் நினைப்பது போல் நாளை நமதாக இராது. கவனமாக இருந்து கொளல் நல்லது. பின்னர் உலகமே நமக்கு நிறையச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடும். ஏற்கனவே அதற்கான தேவையை நிறைய இடங்களில் நிறையப் பேர் வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

வியப்புகள் தொடரும்...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 1/6

வார இதழ்களில் வரும் ஓரிரு கதைகள் தவிர்த்து முழுமையாகச் சிறுகதைகள் அடங்கிய நூல் என்று படிக்க ஆரம்பித்தது தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோருடையவற்றையே. பள்ளிக்கூடத்தில் படித்த நூல்களைப் போலவே அவற்றில் எவ்வளவைப் புரிந்து படித்தேன் - எவ்வளவைச் சம்பிரதாயமாகப் படித்தேன் - எவ்வளவை அவர்களுடனான உறவின் காரணமாகப் படித்தேன் என்பதெல்லாம் வேறு கதை. அவர்கள் என் உறவுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதுவதே கூட ஒருவிதமான அசௌகரியமாகவே இருக்கிறது. கூட்டம் சேர்ப்பதற்காகவோ நானும் அவர்களுடைய ஆள் என்று காட்டிப் பெருமைப் பட்டுக் கொள்ளவோ விருப்பம் அதிகமில்லை (எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்வது எப்போதும் உண்டு!). நானும் பேனாப் பிடித்து எழுதுகிறவன் என்று ஆன பின்பு முகவரியை வைத்து அரசியல் செய்யும் ஆளாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர்களுடைய எழுத்துக்கள் என்னை நிறையப் பாதித்திருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களின் எழுத்துக்களை விட எழுத்தாளர் என்கிற அவர்களின் அடையாளம் என் இளமைக்காலத்தை நிறையச் செதுக்கியது என்பதை என்றும் மறுக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஊருக்கு வந்து செல்லும் போது வீட்டில் விட்டுச் செல்லும் நூல்களை அதிகம் படித்தது நானாகத்தான் இருக்கும். படிப்பதற்குப் புதிதாக எதுவும் இல்லை என்றாகிற போதெல்லாம் அவர்களுடைய நூல்களில் ஒன்றை எடுத்து வாசித்துச் செல்வது வழக்கமாகி இருந்தது.

'வாளின் தனிமை'யை இத்தோடு மூன்று முறை படித்து விட்டேன். கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறை கூடப் படித்த நினைவில்லை. எல்லாம் அதற்கு முன்பு படித்ததுதான். "கிரேன்களில் உயரும் சிலைகள்" என்று முன்னுரையில் இருந்த வரி ஒன்று முதல் முறை படித்ததில் இருந்து இன்றுவரை நினைவில் அடிக்கடி வந்து சென்று கொண்டே இருக்கிறது.  அரைக்காற் சட்டை போட்டு அலைந்து கொண்டிருந்த அன்று முதல் வேறு விதமான அரைக்காற் சட்டை போட்டுக் கொண்டு அலையும் இன்று வரை அதன் உள்ளிருக்கும் பொருள் முழுமையாகப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துப் பார்த்துக் கொள்கிறேன். ஓசியிலேயே படித்துப் பழகியவை என்பதால் இவர்களுடைய நூல்களை ஒருபோதும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க எண்ணம் வருவதில்லை. இம்முறை சிங்கப்பூரில் நூலகத்தில் அவருடைய பெயரோடும் அவருடைய கதைகளில் வரும் எம் கிராமியத்தை அப்படியே காட்டும் விதமான படத்தோடும் இந்த நூலைப் பார்த்தவுடன் அப்படியே அலேக்காகத் தூக்கி வந்து விட்டேன். சொந்த மண்ணை விட்டு இவ்வளவு தொலைவு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஓரிடத்தில் நம்முடைய ஆள் ஒருவருடைய நூல் இருப்பதைப் பார்த்ததும் அவர்களை நேரில் பார்த்திருந்தால் கூட வந்திராத மாதிரியான ஓர் இழுப்பை உணர்ந்து உடனடியாகக் கையில் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ்ச்செல்வன் என்றால் அவருடைய ஆளுமை இதுதான் - அவர் இப்படித்தான் என்றொரு பிம்பம் இருக்கிறதல்லவா! அது எது - எத்தகையது? அவர் ஓர் எழுத்தாளர். அப்டின்னா? கதை எழுதுவார்; கட்டுரை எழுதுவார்; அரசியல் பேசுவார்; அது மட்டுமா? எழுதுவதை விட அதிகம் செயல்படுபவர்; சமூகப் போராளி... இப்படியான ஒரு பிம்பம். அது அப்படியே இருக்கட்டும். அது வெளியுலகம் அவரைப் பற்றி வைத்திருக்கும் பிம்பம். அவரைப் பற்றி உறவுக்காரர்கள் எங்களிடம் ஒரு பிம்பம் இருக்கிறது. சொந்தபந்தம் - கலியாணம் - காதுகுத்து... இதெல்லாம் முக்கியமில்லை; அவருக்கு அவர் எழுத்து; அவர் அரசியல்; அவர் இயக்கம் இவைதான் வாழ்க்கை... இப்படியான ஒரு பிம்பம். அதுவும் கூட அப்படியே இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட எது முக்கியம் என்றால், அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் - தன் வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக் கட்டமைக்கிறார் என்பதை சுருக்கமாகப் பேசி விடுவது இத்தருணத்தில் மிக முக்கியமாக இருக்கிறது. அது அடியோடு தவறாகிப் போகவும் வாய்ப்பிருக்கிறது எனினும் இன்று அது பற்றிப் பேசிவிட வேண்டும் என்று உறுதியாக உணர்கிறேன்.

தான் ஓர் எழுத்தாளனா அல்லது செயலாளனா என்கிற குழப்பம் அவருடைய வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் வந்து சென்றிருக்க வேண்டும் அல்லது இன்று வரை வந்து வந்து சென்று கொண்டிருக்க வேண்டும். அவரே கூட அது பற்றிச் சில இடங்களில் பேசியிருப்பதாக நினைவு. சுந்தர ராமசாமி தன்னைப் பார்க்கும் போதெல்லாம் 'தலைவரே' என்று கிண்டல் செய்வார் என்றும் அரசியல்ப் பணிகளையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு பேசாமல் உட்கார்ந்து எழுதும் வேலையைப் பாரும் என்று அறிவுரை சொல்வார் என்றும் சுந்தர ராமசாமியின் நினைவுரையில் அவர் பேசியதாக நினைவு. அப்படியானால் இவருக்கு எது ஒத்துவரும் என்று மற்றவர்களாவது அவரைக் குழப்பியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம் குறைந்த பட்சம். எழுத்தார்வமும் சமூக அக்கறையும் ஒருங்கே கொண்ட எல்லோருக்குமே இந்தக் குழப்பம் வந்தே தீரும் என்றே எண்ணுகிறேன் (இது இருப்பவருக்கு அதுவும் இருக்க வேண்டும் என்பதோ அது இருப்பவருக்கு இதுவும் இருக்க வேண்டும் என்பதோ கட்டாயமில்லை என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றெண்ணுகிறேன்!).

தனிப்பட்ட முறையில் இதை நானும் முடிந்த அளவு உற்று நோக்கிப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். "இதைப் புரிந்து கொண்டு நீ என்ன இரும்படிக்கப் போகிறாய்?" என்கிறீர்களா? நமக்கும் கொள்கைகள்-கோட்பாடுகள்-ஆசைகள் இருக்கத்தானே செய்கின்றன. இன்றைக்கில்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாமலா போய் விடப் போகிறது? 'முடியும்!' என்பதைக் காட்டுவதைத்தானே தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் வாழ்க்கை நமக்குச் செய்து கொண்டிருக்கிறது. அவர் மட்டுமல்ல; எழுதக் கூடிய-பேசக் கூடிய எல்லோரையுமே அவர்கள் பேனாவையும் வாயையும்  மூடிய பின்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று உற்றுக் கவனிக்கத் தூண்டும் கெட்ட புத்தி ஒன்று உங்களில் பலரைப் போலவே எனக்கும் ஒட்டிக் கொண்டுள்ளது. அதன் விளைவுதான் இதெல்லாம். அதன் படி பார்த்தால் அவருடைய எழுத்துக்களை விட அவருடைய வாழ்க்கையும் செயல்பாடுகளும் அதிகம் பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

"34 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 32 கதைகள் எழுதியிருக்கிறேன்!" என்று வேறோர் இடத்தில் அவர் சொல்லிப் படித்ததாகவும் நினைவு. தான் எவ்வளவு பெரிய எழுத்தாளன் என்பதை எழுதிய நூல்களின் எண்ணிக்கையில் காட்ட வேண்டும் என்கிற கணக்குகளுக்குள் மாட்டாமல் தப்பி இயங்கிக் கொண்டிருப்பது நம்மைப் போன்ற அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகும் வரலாறு. உண்மையான சமூக ஆர்வலனுக்கு 'சும்மா மூலையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருப்பது எப்படிப் பெரிய சாதனையாகும்? அத்தோடு சேர்த்து ஏதாவது களப்பணியும் செய்தால் நன்றாக இருக்குமே!' என்று தோன்ற வேண்டும் என்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். ஆனால், "எழுத்து மட்டும்தான் எனக்கு வரும்; அதை உருப்படியாகச் செய்தாலே போதும்!" என்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் சரியாகத்தான் படுகிறது. தெருக்களில் திரியும் நேரத்தில் கூட ரெண்டு நூல்களை எழுதி முடித்தால் களப்பணியை விட அதிகம் சாதிக்கும் வாய்ப்பும் ஆற்றலும் அதற்கிருக்கிறது என்று கொடுக்கப் படும் விளக்கங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கனவாகவே உள்ளன. தன்னை விடத் தன் எழுத்துக்கள் ஆற்றல் மிக்கவை என்று எண்ணுபவர்கள் அப்படியே இருந்து விடுவதே நல்லது. அந்த வகையில் தமிழ்ச்செல்வன் போன்று களப் பணியில் இறங்குபவர்கள், ஒன்றை இழந்து மற்றொன்றைத் தேர்ந்தெடுத்து இருப்பவர்கள். அல்லது, தன் பெரிய பலம் எது என்று அறிந்து அதற்கேற்ற படி வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்டவர்கள்.

அவர் இப்படி இயக்க வேலைகளில் அதிகம் ஈடுபட்டதால் நாம் இழந்த சிறுகதைகளின் எண்ணிக்கை என்னவென்று தெரியவில்லை. எழுதியிருப்பவை அனைத்தும் ஒரே நூலுக்குள் அடங்கி உள்ளன. அந்த நூலுக்குள் இருக்கும் அவருடைய கதைகளில் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்தால், கரிசல் மண்ணின் கிராமம் நிறைய இருக்கிறது (அவருடைய இளமைக் காலத்து மேட்டுப்பட்டி நிறைய இருக்கிறது!); அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயமும் தீப்பெட்டிக் கம்பெனிகளும் பட்டாசுத் தொழிற்சாலைகளும் நிறைய இருக்கிறது; ஆண்-பெண் உறவின் நுட்பங்கள் இருக்கின்றன; நூலின் அட்டையில் சொல்லப் பட்டிருப்பது போல, பெண்களின் உலகமும் குழந்தைகளின் உலகமும் அவருடைய உலகில் சரியான இடம் பிடித்து சம்மணம் போட்டு அமர்ந்திருக்கின்றன; சாதியத்துக்கு எதிரான இடதுசாரிச் சிந்தனை இருக்கிறது; அவருடைய பட்டாளத்து வாழ்க்கையனுபவம் இருக்கிறது; அவருடைய தபால் நிலைய வாழ்க்கையனுபவம் இருக்கிறது; அவருடைய அறிவொளி இயக்க அனுபவம் இருக்கிறது; இது போக இதர சில 'இன்ன பிற'க்களும் இருக்கின்றன.

தமிழ்ச்செல்வன் என்ற எழுத்தாளர் வெளியில் நன்றாக அறியப்பட்டது எப்போதிருந்து? எனக்கு விபரம் தெரிந்த வகையில், பூ படம் வெளி வந்த பின்புதான் சாமானியர்களிடமும் அவரைப் பற்றி எளிதில் அடையாளம் சொல்லிப் பேச முடிந்தது. அதற்குச் சற்று முன்பே 'வெயில்' வந்திருந்ததால் 'வெயிலோடு போய்' என்ற பெயரை விட்டு விட்டு 'பூ' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள். இப்படிப் பெயரை மாற்றுவதில் (எழுத்தாளர்கள் பெயரை மாற்றிக் கொள்வதும் இதில் அடங்கும்!) எனக்கு எப்போதுமே ஓர் ஒவ்வாமை உண்டு. ஆனால், வெயில் கதை உருவாவதற்குப் பல ஆண்டுகள் முன்னால் உருவான இந்தக் கதையை எளிதில் யாரும் 'அதைப் பார்த்து எடுத்திருக்கிறார்கள்!' என்று சொல்லிவிடக் கூடாது என்ற சாக்கிரதை உணர்வோடு செய்திருக்கிறார்கள். ஆனால், 'வெயிலோடு போய்' என்ற பெயரையே வைத்திருந்தால்தான் அந்தக் கதைக்கான மற்றும் அதன் படைப்பாளிக்கான முழு அங்கீகாரம் அல்லது கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்பது என் எண்ணம். அந்தப் படம் எடுக்கத் தொடங்கும் முன்பே, அந்தக் கதையைப் படமாக்கும் நாள்தான் தான் சினிமாவுக்கு வந்ததற்கான - இயக்குனரானதற்கான காரணமே நிறைவடைந்ததாகத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று இயக்குனர் சசி சொன்ன நாள் முதல் அந்தக் கதையைத் தனியாக மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன அளவுக்கு அந்தக் கதை இருக்கிறது என்றாலும், தனிப்பட்ட முறையில் காதல் உணர்வுகளால் கசக்கப் பட்ட அனுபவம் எல்லாம் ஏதும் இல்லாத ஒரு வீணாப்போன டிக்கெட் நான் என்பதால், அதை விடப் பல கதைகள் ஓங்கி அறைந்தது போல உணர்கிறேன்.

திரைப்படங்கள் ஆனாலும் சரி, கதைகளானாலும் சரி, அவற்றைப் பார்த்து / படித்து முடித்த மறுநாள் கேட்டாலே கதை மறந்து போய்விடும். நினைவு வைத்திருந்து பேசும் அளவுக்கு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் என் வாழ்வில் இன்னும் வரவில்லை. வராமலே போகவும் செய்யலாம். "நம் எவரின் எழுத்துக்களையும்விட வாழ்க்கை நுட்பமானதாகவும் புதிர்கள், எதிர்பாராத்திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது" என்கிற அவரின் முன்னுரை வரியே அதற்குப் பதிலாக இருக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் மறக்கக் கூடாத பல விசயங்களையே வாரங்களிலோ வருடங்களிலோ மறந்து விடுகிறோம். இதில் கதைகளைப் படிப்பதும் அவற்றைப் பற்றிப் பேசுவதற்காக நினைவு வைத்துக் கொண்டு திரிவதும் பெரிய ஆடம்பரமாகத் தெரிகிறதப்பா எனக்கு.  இதுவரை படித்திருக்கும் சொற்பச் சிறுகதைகளில் எந்தக் கதையின் கருவும் இன்றுவரை நினைவில் இல்லை. ஆகவே இந்த நூலில் படித்த கதைகளும் அடுத்த வாரம் இதே நாள் கேட்டால் கூட முழுக்க மறந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. சில கதைகளில் சில வரிகள் நினைவிருப்பதுண்டு. 'கிரேன்களில் உயரும் சிலைகள்' போல "சுப்பையாவின் வாள் 'கிர் கிர்' என்றது" என்கிற வரி அடிக்கடி நினைவுக்கு வரும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், மொத்தப் புத்தகத்திலும் 'வார்த்தை' என்கிற சிறுகதைதான் மனதை மிகப் பெரும் அளவில் வாட்டி எடுத்ததாக இருந்தது. அந்தக் கதை எனக்குக் குறிப்பாகப் பிடித்ததன் காரணம், நான் இதுவரை ஏற்றுக் கொண்ட மற்ற எல்லாப் பாத்திரங்களையும் விடத் தந்தை என்ற பாத்திரத்தில்தான் எல்லா வகையிலும் உயர்ந்த - முற்றிலும் பொறுப்பான ஓர் ஆளாக இருக்கிறேன் என்பதாகக் கூட இருக்கலாம். அப்படி ஆனதற்குப் பின்னணியில் இருக்கும் என் வாழ்க்கையனுபவங்கள் கூட ஒரு காரணமாயிருக்கலாம். எந்தப் படைப்பிலும் பிடிப்பது-பிடிக்காதது எல்லாமே தீர்மானிக்கப் படுவது நம் சொந்தக் கதையையும் அவற்றின் பின்னணிகளையும் வைத்துத்தானே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிது சொந்தக் கதையும் பேசி விடுகிறேன்.

தொடரும்...

சனி, செப்டம்பர் 29, 2012

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 1/4

தமிழின் தலைசிறந்த சிறுகதை-புதின எழுத்தாளர் என்றால் அது ஜெயகாந்தன் அவர்கள்தான் என்பது பெரும்பான்மை இலக்கியவாதிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட ஒன்று. வாசகராகவோ எழுத்தாளராகவோ தமிழ் இலக்கிய உலகுக்குள் நுழைய விரும்பும் எவரும் முதலில் படிக்க வேண்டியது அவருடைய எழுத்துக்களைத்தான். அப்படித்தான் நானும் அவரைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் அவருடைய கதைகள் அனைத்தையும் முடித்து விட்டு பின்னர் மற்றவர்களைப் படிக்கலாம் என்று திட்டம். ஞான பீட விருதுக்குப் பிந்தைய அவருடைய வாழ்க்கையில் சில வேண்டாத சர்ச்சைகளும் வந்து சென்று விட்டன. ஆனால் அவர் சர்ச்சைகளுக்குப் பழக்கப் படாதவர் அல்லர். அவர் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு உள்ளானவர். சர்ச்சைக்குரிய சமாச்சாரங்களை பயமின்றிப் பேசியதால்தான் கொடி கட்டிப் பறந்தார் என்றும் சொல்வார்கள். அப்படியான ஒரு கதைதான் இதுவும்.

கல்லூரிக் காலத்திலேயே அவருடனான பரிச்சயம் ஆரம்பித்து விட்டது. எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதலாண்டு இளங்கலை தமிழ்ப் பாடத்திட்டத்தில் "ஜெயகாந்தன் முன்னுரைகள்" என்ற நூல் இடம் பெற்றிருந்தது. அப்போதே அவர் பற்றியும் அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள் பற்றியும் நிறையப் படித்துப் பேசி ஆராய்ந்து விட்டோம். அப்போதே அவருடைய முன்னுரைகளில் இருந்த பல பத்திகளை என் நாட்குறிப்பிலும் மனதிலும் ஏற்றி வைத்திருந்தேன். இந்த நூலின் முன்னுரையில் உள்ள கீழ்வரும் பத்தி அப்படிப் பதிந்து வைத்த ஒன்று.

"வாழ்க்கையின் முழு அர்த்தத்தோடு வாழ்கிற யாரும் 'எனக்கு இதுதான் லட்சியம்; இது ஒன்றுதான் லட்சியம்' என்று பிரகடனப் படுத்திக் கொள்ள முடியாது. அவரவர்க்கும் சில கொள்கைகள். சில விருப்பு வெறுப்புகள், சில 'கூடும்-கூடாது'கள் என்று இருக்கின்றன. அதற்கு ஒப்ப வாழ முயல்வதே அவரவர் வாழ்க்கையாய் இருக்கிறது. அதனால் இந்த வாழ்க்கையை லட்சியமற்ற வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இன்ன லட்சியத்துக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று எழுதி நெற்றியில் ஒட்டிக் கொண்டவர்களைத் தவிர எஞ்சிய மக்களெல்லாம் இந்த விதமாய்த்தான் வாழ்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே - இன்ன இலட்சியத்துக்காக நான் வாழ்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்குத் தாலி கட்டிக் கொண்டவர்களும் - அதற்கு மாறான லட்சியத்தில் தங்களைப் பிணித்துக் கொண்டவர்களை எதிர்ப்பதையும் ஆக்கிரமிப்பதையும் தங்களுடைய நடைமுறையாய்க் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரியாக - சமுதாய, அரசியல், மத நம்பிக்கை போன்ற லட்சியங்கள் ஏதுமில்லாத மற்ற மக்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தங்கள் வாழ்க்கைத் துணைகளிடமும் குழந்தைகளிடமும் தங்களுக்கு அடக்கமானவர்களிடமும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் 'கூடும் கூடாது'களையும் ஏன், சாதாரண ரசனைகளையும் கூட அழித்து ஒழிக்கிற ஆக்கிரமிப்பாளர்களாக இருப்பதை வாழ்க்கை நெடுகிலும் எல்லாரிடமும் நாம் காணலாம். கடைசியில், லட்சியவாதிகள் என்று தங்களைப் பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் சரி, சாதாரண மனிதர்களும் சரி, இந்தப் பிறர் விஷயத்தில் தலையிடுவதையே தங்களது நடைமுறை வாழ்க்கையாகக் கொண்டிருப்பதன் மூலம் தங்களது லட்சியமே இதுதான் என்றாகிவிட்டதை உணராதவர்களாகி விடுகிறார்கள்." என்கிற வரிகளை இப்போதும் நான் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு - இந்தச் சோலியில் ஈடுபடுகையிலும் அதனால் பாதிக்கப் படுகையிலும்.

"பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்" என்கிற வரியும் அப்படிப் பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு வரி. இதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது?! இதில் ஏதோ ஒன்று ஒரு பக்கம் குறைகிற போதுதான் சகல பிரச்சனைகளும் வருகின்றன. "என் தயவு உனக்குத் தேவையில்லையா அப்படியானால்?" என்றும், "நேற்றுவரை என் பின்னால் வாலை ஆட்டிக் கொண்டு சுற்றி வந்தவன் இன்று எப்படி மாறிவிட்டாய்?" என்றும் கோபம் கொப்பளித்துக் குடும்பம் துண்டாகிறது. போகிற போக்கில் யாரும் யார் தயவிலும் இல்லை என்கிற காலம் வந்துவிடும். ஆனால், நாயாய்க் குழைந்து வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் இனம் மட்டும் அப்படியே தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.

கதை என்னவென்றால், நாடக நடிகையான கல்யாணிக்கும் பத்திரிகையாளனான ரங்காவுக்கும் காதல் ஏற்படுகிறது. முப்பத்தி மூன்று வயதாகியும் திருமணமாகாத நடிகை கல்யாணி. மனைவியை இழந்து குழந்தையை மாமியார் வீட்டில் வளர விட்டிருக்கும் முன்னனுபவசாலி ரங்கா. அதுதான் இந்தக் கதையின் கிக். ஓர் சராசரி இளைஞனும் இளைஞியும் காதலில் விழுந்தால் அது அவ்வளவு பெரிய பேசுபொருள் ஆகாது. இப்படி ஏதாவதொரு வகையில் ஏதோவொரு கோக்குமாக்கு இருந்தால்தானே காதல் சுவாரசியமாகும். ஏற்கனவே முறைப்படி நிச்சயிக்கப்பட்டு ஊருக்காகச் செய்து கொண்ட திருமணத்தில் கிடைக்காத அனுபவங்கள் இந்தக் காதலிலும் அதனைத் தொடர்ந்த மணவாழ்விலும் கிடைக்கிறது ரங்காவுக்கு. எவ்வளவோ கிளர்ச்சியடைந்து செய்து கொண்ட இரண்டாம் திருமணமும் நாட்கள் முப்பதும் அறுபதும் முடிந்த பின்பு சலிப்புத் தட்ட ஆரம்பிக்கிறது. 'இவள் என்னை உண்மையிலேயே விரும்புகிறாளா?', 'இவள் எனக்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருக்கிறாள்?' என்று லூசு மாதிரியான கேள்விகளால் ஆட்கொள்ளப் பட்டு அவளை விட்டு மெதுமெதுவாக விலகிப் போகிறான். அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்; அவன் இழுப்புக்கெல்லாம் உடன் போவேன் என்று நாயகி அளவிலாமல் விட்டுக் கொடுக்கிறாள். கடைசியில் நோய்வாய்ப் பட்டு நடக்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறாள். அப்போது வந்து அவளோடு மீண்டும் சேர்ந்து விடுகிறான் ரங்கா. இதுதான் கதை. கதைச் சுருக்கங்கள் எப்போதும் ஒரு கதையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் சொல்லி விட முடியாது அல்லவா! ஆகவே, அவற்றை ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் பேசுவோம்.

ரங்கா பத்திரிகையாளன் என்பதை ஏற்கனவே சொன்னோம். எப்படிப் பட்ட பத்திரிகைக்காரன் என்றால், மிகவும் கறாரான பத்திரிகையாளன். சிறுகதை எழுத்தாளனாக வாழ்க்கையை ஆரம்பித்து, அதில் ஆர்வமிழந்து பின்னர் அரசியல் நிருபராக இருந்து, அதிலும் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்து வம்படியாகக் கலைத்துறையை விமர்சிக்கும் வேலைக்குள் பிடித்துத் தள்ளப் பட்டிருக்கும் பத்திரிகையாளன். நாடகங்களைத் தாறுமாறாக விளாசித் தள்ளுபவன் (அது தமிழகத்தில் சினிமாவை விட நாடகங்கள் அதிகம் இருந்த காலகட்டம் போல் தெரிகிறது!). யார் கண்ணுக்குமே தெரியாத மாதிரியான நுணுக்கமான விசயங்களை எல்லாம் நோண்டி நொங்கெடுத்து விமர்சிப்பவன். அதனால் நாடகத் துறையினருக்கு அவனைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும். ஆனால் நேரில் பார்த்தால் அப்படித் தெரிய மாட்டான். மிகவும் மென்மையாக - இனிமையாகப் பேசுபவனாக இருப்பான். ஜெயகாந்தனே அப்படிப் பட்டவர் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். சாதாரணமாக அவரிடம் பழகுபவர்களிடம் அவருக்குள் இருக்கும் ஆக்ரோசமான முகம் தெரிவதில்லை என்பார்கள். அதைத்தான் ரங்கா மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் போலும். இதில் இதழியற் துறைக்குரிய பல விசயங்கள் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக, நாயகியின் துறை... நாடகத் துறை. நாடகத் துறையின் நுட்பங்களும் நிறைய விரிவாகப் பேசப் பட்டிருக்கிறது. அவர்கள் ஒப்பனை செய்து கொள்வது முதல் அவ்வப்போது கூட்டத்தை ஓர் ஓட்டை வழியாக எட்டிப் பார்த்துக் கொள்வது வரை அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து சுவாரசியங்களும் பேசப்பட்டிருக்கின்றன. ரங்கா அவன் துறையில் பெரிய இது என்றால் கல்யாணி இவளுடைய துறையில் பெரிய இது. சராசரி நடிகைகளைப் போலல்லாமல் வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவள். வயதை மறைக்க முயலாத, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாத, நிறைந்த மனமுதிர்ச்சி உடைய நடிகை. அவளே அந்த நாடகப் குழுவின் உரிமையாளர். அவளோடு உதவிக்காக அண்ணாசாமி என்கிற பெரியவர் இருக்கிறார். மிகவும் நாகரிகமானவர். ஆனால் அவரும் கல்யாணி மீது ஒருவிதமான ஆசை கொண்டிருப்பதைத் திடீரென்று ஒருநாள் வெளிப்படுத்தி விடுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கும். அதையும் கல்யாணி தவறாக எடுத்துக் கொள்ளாமல் சரியாகப் (!) புரிந்து கொள்வது அதைவிட அதிர்ச்சியாக இருக்கும். ஜெயகாந்தனின் இது போன்ற புரட்சிக் கருத்துகள்தான் அவருக்கு அப்படியொரு பெயரைக் கொடுத்திருக்க வேண்டும். அன்றைய சூழ்நிலையில் கல்யாணி போல் ஒரு பெண் நிதர்சனத்தில் சாத்தியமா என்பது தெரியவில்லை. இது போன்ற கதைகளைப் படித்து விட்டு, இப்படி இருந்தால்தானே ஆண்களுக்குப் பிடிக்கிறது என்று அதன் பின்பு வேண்டுமானால் நிறையப் பேர் அப்படி உருவாகி இருக்கலாம்.

ரங்கா தினமும் சைக்கிளில் அலுவலகம் சென்று வருவதும் பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு மாறுவதும் இந்தக் கதை எந்தக் காலகட்டத்தில் எழுதப் பட்டது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் அவன் பீடி குடித்து சிகரெட்டுக்கு மாறுவது போல் காட்டவில்லை. அதனால் மோட்டார் சைக்கிளுக்கு முன்பே சென்னைக்கு சிகரெட் வந்து விட்டது தெரிகிறது. மனிதன் எந்த நேரமும் சிகரெட் அடித்துக் கொண்டே இருக்கிறான். வீட்டில் இருந்த படிக்கே அடிக்கிறான். கல்யாணி முன்பும் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் அடிக்கிறான். இது அப்போதே சென்னை எவ்வளவு முன்னுக்கு (!) வந்திருந்தது என்பதைக் காட்டுகிறது. இதற்குப் போட்டியாக கல்யாணி எந்த நேரமும் வெற்றிலை போடுபவளாகக் காட்டப் பட்டிருக்கிறாள். அதற்கு உறுதுணையாக அண்ணாசாமியும் ஒரு வெற்றிலைப் பேர்வழியாக இருக்கிறார். இப்போதைய சிகரெட் பெட்டிகள் போல அப்போதைய வெற்றிலைப் பெட்டிகள். அதே காலத்தைச் சேர்ந்த என் பாட்டிமார் இருவர் அது போல எந்த நேரமும் வெற்றிலைப் பெட்டியோடு இருந்திருக்கிறார்கள் (அப்படியெல்லாம் இன்னும் பெண்கள் சிகரெட் பெட்டிகள் வைத்துக் கொள்வதில்லையே என்று வம்புக்கு இழுக்காதீர்கள்!).

கல்யாணியிடம் காதலைச் சொல்லும் காட்சி தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் அண்ணாசாமி மிகவும் பெருமைப் படும் படிதான் நடந்து கொள்கிறார். அந்தக் காட்சியும் கூட தவறாக எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல என்றுதான் ஆசிரியர் சொல்ல முயன்றிருக்கிறார். "பெரிய மனுசன் என்றால் அதெல்லாம் இருக்கக் கூடாது என்று யார் சொன்னது?" என்று கேட்பதாக இருக்கிறது அந்தக் காட்சி (சொல்லப் போனால் பெரிய மனுசங்களுக்குத்தான் அதெல்லாம் அதிகம் என்று ஒருத்தர் முணுமுணுக்கிறார் சைடில்!). அவள் ரங்கா மீது கண் வைத்திருக்கிறாள் என்று அறிந்த நிமிடமே அந்தக் காதலுக்குத் தான் எப்படி உதவ முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிற கனவானாக இருக்கிறார். நம் எல்லோருக்குமே அவர் போன்ற நலம்விரும்பி ஒருவர் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இருக்கவும் செய்வார்கள். அவருடைய கோபம் பற்றிச் சொல்லியிருக்கும் விதம் சூப்பர். சான்றோர் கோபம் வந்த வேகத்தில் சென்று விடும் என்பது உண்மைதான். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டால் அதற்கான வேலை முடிந்ததாகி விடும்.

கதை சென்னையை மையமாக வைத்து நடைபெறுவதால் அன்றைய சென்னை பற்றியும் நிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது. மவுண்ட் ரோடு வழியே அடிக்கடி போக நேர்கிறது. சூளை என்று சொல்லப் படுவது சூளைமேடாக இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன். அங்கிருக்கும் ஆதிகேசவலு நாயக்கர் தெருவைப் பார்க்க வேண்டும் என்றோர் ஆசை வருகிறது. எத்தனையோ வேறுபாடுகள் கொண்டிருப்பினும் அங்கே இருக்கும் எல்லோரும் ஒரே சாதி என்கிற ஒற்றை ஒற்றுமையில் ஒன்று பட்டு விடுகிறார்கள் என்கிற வரி, நம் மண்ணில் சாதி கொண்டிருக்கும் சக்தியை அப்பட்டமாகவும் அழுத்தந்திருத்தமாகவும் சொல்கிறது. இதைச் சென்னையின் சேரிகளிலும் பார்க்க முடியும். எங்கள் கிராமங்களிலும் பார்க்க முடியும். ஒரே சாதியினர் இருக்கும் கிராமங்களுக்கென்றே ஒரு தனித் தன்மை இன்றும் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை சென்னைப் பெரும் பட்டிணத்தில் மாறாத ஒரே காட்சி - அதிகாலை, உச்சிவெயில், நடு இரவு என்று எல்லா நேரங்கெட்ட நேரங்களிலும் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு நிற்கிற அவலக் காட்சியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

நாடகம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது... :)

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 3/3


தொடர்ச்சி...

ஒரு பெண்ணுக்குப் பின்னால் கிறுக்காகி ஓட ஆரம்பித்தால் ஒருவனுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சாணக்கியரே விலாவாரியாகச் சொல்லி விட்டார். இதனால் சாம்ராஜ்யங்களே சரிந்த கதையெல்லாம் அதற்கு முன்பே நிறைய வந்து விட்டன. அதையே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு எழுத்தாளரும் தத்தம் காலத்துக்கு ஏற்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை அய்யாவும் அவருடைய காலத்துக்கு ஏற்பச் சொல்லி விட்டார். தொழிலில் முற்றிலும் ஆர்வம் இழந்து கடைப் பக்கமே வருவதை மறந்து விடுகிறான் ராஜு. இதைப் பயன் படுத்திக் கொண்டு அவன் வேலைக்கு வைத்திருந்த ஆள், கடையையே முழுசாக முழுங்கி விடுகிறான். இந்த வேலை அந்த வேலை என்றில்லை; எல்லா வேலையிலும் இது நடக்கத்தான் செய்கிறது. ஏதோவொரு விசயத்தில் கிறுக்காகி விட்டால் அதற்குக் குறுக்கே எது வந்தாலும் அதை இழக்கவும் அழிக்கவும் தயங்காததுதான் மனிதப் புத்தி. அது இந்த விசயத்தில் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்யும். எத்தனை பேருடைய வாழ்க்கை நமக்கு இந்தப் பாடத்தை நினைவு படுத்தினாலும் விழுபவர் விழுந்து கொண்டேதான் இருக்கிறார்கள். முந்தைய நாள் வரை விபரமாகப் பேசுபவர்கள் கூட மறுநாள் காலையில் இந்த விசயத்தில் எளிதில் விழுந்து விடுகிறார்கள். இது அப்படியான ஒரு விசயம். உலகம் இருக்கிறவரை இதுவும் நடந்து கொண்டேதான் இருக்கும் என்றே படுகிறது.

ரோசியின் மீதான கவர்ச்சியால் ராஜு இழக்கும் பலவற்றில் அவனுடைய அருமையான தாயும் ஒன்று. தாய்-மகன் உறவு என்பதே மிக பலமானது. அதுவும் தந்தையை இழந்து விட்ட ஒற்றை மகன் தாயோடு இருக்கும் காலங்களில் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத் தாய்களுமே தன மகனை மணம் முடித்துக் கொடுக்கும் நாளோடு மறந்து விட வேண்டும்தான் (!) என்றாலும், இப்படி இன்னொருத்தனின் மனைவியைக் கவர்ந்து வந்த மகனை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க முடியாது. தாய் மீது பெரிதாக வெறுப்பு வரவில்லை. ஆனால் இப்படிப் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்ற கோபம் வருகிறது. அவள் பிரிந்து போகக் கூடாது என்று மனமார ஆசைப் படுகிறான். ஆனால் அதற்காக ரோசியை விட்டு விட முடியாது என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறான். தாயா தாரமா (ராஜுவின் கதையில் அப்படிக் கூடச் கொள்ள முடியாது!). என்று வருகையில் தள்ளிக் கொண்டு வந்த தாரம்தான் என்று முடிவெடுக்கிறான்.

தஞ்சாவூர்ப் பக்கமிருந்து தன் தங்கையின் மகன் செய்து கொண்டிருக்கும் அட்டூழியங்களைக் கேள்விப் பட்டுத் தட்டிக் கேட்க வருகிற தன் தாய்மாமனை என்றுமில்லாத மாதிரியாக எதிர்த்துப் பேசுகிறான்; மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறான்; இதற்கு எல்லாத்துக்கும் காரணம் இவள்தானே என்று ரோசி மீது கோபம் கொள்கின்றனர் அவர்கள். உண்மை அதுவல்ல. ரோசி மீதான அவனுடைய பித்துதான் காரணமே ஒழிய அவள் எப்படிக் காரணமாக முடியும்? அவளுக்கு வேண்டியது நாட்டியம் ஆட வசதியான சூழல் மட்டுமே. ஆட மட்டும் அனுமதி கிடைக்கும் என்றால் அது நரகமாக இருந்தால் கூட ஓகே என்றுதான் அவள் வருகிறாள். இதில் மனதை மிக ஆழமாகத் தொடுகிற ஒரு விசயம் - அவனுடைய தாய்மாமன் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசம். அத்தனை வயதான பின்பும் தன் தங்கையைத் தன் இடத்துக்கு அழைத்துச் சென்று ராணி மாதிரி வைத்துக் காக்க முடியும் என்று அவர் பேசும் வசனங்கள் நம் மண்ணின் மணத்தை நுட்பமாகப் பதிவு செய்திருக்கின்றன. இப்போதெல்லாம் இப்படி அண்ணன்மார் யாராவது இருக்கிறார்களாப்பா!?

ரோசிக்கு எந்த வகையிலும் மார்க்கோவின் நினைவு வந்து விடக் கூடாது என்பதில் படுகவனமாக நடந்து கொள்ளும் ராஜு, மார்க்கோவிடம் இருந்து வரும் ஒரு கடிதத்தில் ரோசியின் கையெழுத்தைப் போட்டு ஒரு பித்தலாட்டம் செய்து வகையாக மாட்டிக் கொள்வான். அப்போது மார்க்கோ அவனைக் கம்பி என்ன வைத்து விடுவான். அத்தோடு ரோசிக்கும் ராஜுவுக்குமான உறவு பாடையேறி விடும். சிறைக்குச் செல்லும் ராஜு அங்கும் அவன் திருவிளையாடல்களை நிகழ்த்தி அங்கிருக்கும் சக சிறைவாசிகளின் மத்தியிலும் சிறை அலுவலர்கள் மத்தியிலும் ஒரு நாயகனாக உருவெடுத்து விடுவான். யாராக இருந்தாலும் தன்னைச் சுற்றி இருப்போருக்கு மனம் மகிழ்கிற மாதிரி நடந்து கொள்ளத் தெரிந்து விட்டால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம். அதைத்தான் ராஜு அருமையாகச் செய்வான். இந்த இடைவெளியில் எவர் இல்லாமலும் என் வண்டியை ஓட்ட முடியும் என்று நிரூபிக்கும் விதமாக ரோசி அடித்துப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பாள்.

இரண்டாண்டு காலச் சிறைத் தண்டனையை முடித்துக் கொண்டு வெளிவரும் ராஜு மால்குடிக்கு வராமல் வேறோர் ஊருக்குப் போய் இறங்குவான் (இந்தக் காட்சியில் இருந்துதான் கதை தொடங்கும். இதுவரை பேசியதெல்லாம் அவன் வேலன் என்ற கிராமவாசியிடம் சொல்வது போலவும் நினைத்துப் பார்ப்பது போலவும் வரும் காட்சிகள்!). அவனுடைய சாந்தம் நிறைந்த முகமும் அவன் மால்குடி நிலையத்தில் கடை வைத்திருந்த காலத்தில் எங்கே கிடந்த பழைய நூல்களைப் படித்து வளர்த்துக் கொண்ட அறிவும் அப்போது அவனுக்குக் கை கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல், சிறை வாழ்க்கை யாரைச் சும்மா விட்டது?! அவனை ஒரு ஞானியாகவே ஆக்கி வழியனுப்பி வைக்கும்.

சாதாரணமான ஒரு சந்திப்பில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி வேலன் என்பவனிடம் ஏதோவொன்றைத் தத்துவார்த்தமாகச் சொல்லப் போய், அதில் அவனுக்குச் சில எதிர் பாராத நன்மைகள் கிடைத்து, அதிலிருந்து ராஜுவை ஒரு மகானாகப் பார்க்க ஆரம்பித்து விடுவான். ஊரையே அழைத்து வந்து மகானை அறிமுகப் படுத்தி வைப்பான். ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட இப்படி ஒரு வழி இருக்கிறதா என்று அந்த மரியாதையில் ஏமாந்து தன்னை ஓர் உண்மையான சாமியாராகவே உருமாற்றிக் கொள்வான் ராஜு. இது அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தம் சகல பிரச்சனைகளுக்கும் சாமியாரிடம் தீர்வு இருக்கிறது என்று நம்பி வரும் கிராமத்து மக்களின் நம்பிக்கையைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வசமாக மாட்டிக் கொள்ளும் ராஜு, தப்ப நினைத்தாலும் முடியாத அளவுக்கு எந்நேரமும் மக்கள் சூழ்ந்த ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வான்.

பிரச்சனைகளுக்கெல்லாம் உச்ச கட்டமாக மழை பொய்த்துப் போகையில், மக்கள் அவனிடம் தீர்வு கேட்டு வருவார்கள். "பரிசுத்தமான மகான் ஒருவன் உண்ணாமல் தின்னாமல் இறைவனிடம் வேண்டி மந்திரம் ஓதினால் சாமானிய மக்களின் எந்தப் பிரச்சனையும் தீர்ந்து விடும்!" என்று முன்பொரு முறை அவனே சொன்ன வசனம் ஒன்று அவனுக்கே ஆப்பாக வந்து முடியும். "சாமி, நீங்கள் அதைச் செய்து எங்களுக்கு இந்தப் பஞ்சத்தில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுங்கள்!" என்று வந்து நிற்பார்கள். "சும்மா ஒரு பிட்டைப் போட்டேன்!" என்று சொல்லவா முடியும்?! சாமியும் செஞ்சோற்றுக் கடனுக்காக வேறு வழியில்லாமல் உண்ணாமல் தின்னாமல் விரதம் இருந்து கால் கடுக்க ஆற்று மணலில் நின்று வானத்தைப் பார்த்து வசனங்கள் சொல்லிப் பார்ப்பார். மழை மட்டும் வரவே வராது. இத்தனை நாட்களுக்குள் வந்து விடும் வந்து விடும் என்று எதிர் பார்த்து மக்கள் ஏமாறப் போகும் நிலையில், "இதோ வந்து விட்டது!" என்று சொல்லிச் சரிந்து விடுவார். அத்தோடு கதை முடியும். உண்மையிலேயே மழை வந்ததா-இல்லையா-அவர் பிழைத்தாரா-செத்தாரா என்பது தெளிவாகச் சொல்லப் படவில்லை. நாம்தான் புரிந்து கொள்ள வேண்டுமாம். நமக்கேது அந்த அளவுக்கு இருக்கிறது?!

இதில் ஒரு சாமியார் எப்படி உருவாகிறார் அல்லது உருவாக்கப் படுகிறார் என்பது மிக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கும். அவர் ஒருவழியாக எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்ட சாமியார் என்று ஆன பின்பு, அவர் இப்படியொரு விரதத்தில் இருக்கிறார் என்று தெரியும் போது சுற்றி உள்ள கிராமத்து மக்களெல்லாம் வண்டி வண்டியாகப் பார்க்க வருவார்கள். அப்படியே மெதுவாக பத்திரிகையாளர்கள் எல்லாம் வந்து குவிய ஆரம்பிப்பார்கள். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்து சந்தித்துச் செல்வார். இப்படியாகப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குள் அவர் புகழின் உச்சத்தையே அடைவார். இது அவருக்கு இரண்டாவது முறை. முன்பொரு முறை ரோசியை வைத்து அடைந்தவரை, இம்முறை ஓர் ஊரே சேர்ந்து அடைய வைத்து விடும். அரசாங்கமே அவருடைய உயிர் நாட்டுக்கு முக்கியம் என்று அறிக்கை விட ஆரம்பித்து விடும் அளவுக்குப் பெரிய அப்பாட்டக்கர் ஆகி விடுவார்.

பாத்திரங்களின் பெயர்கள் யோசித்து வைக்கப் பட்டிருக்கின்றன. மால்குடி போன்ற சிறுநகரத்தில் பிறந்து வளர்ந்தவன் ராஜு என்றும், கிராமத்துப் பாத்திரத்துக்கு வேலன் என்றும், நாட்டியக்காரிக்கு ரோசி என்றும் பெயரிட்டிருப்பதும், ரோசி நாட்டியத்தில் பெரிய ஆளாக உருவெடுக்க வேண்டும் என்றால் அந்தப் பெயர் ஒத்துவராது என்று முடிவு செய்து நளினி என்று மாற்றிக் கொள்வதும் கதையில் வரும் நுணுக்கமான சுவாரசியங்கள். இது ஒரு சிறு துளியே. இது போன்ற நுணுக்கங்கள் கதை முழுக்க நிறைய இருக்கின்றன.

ஏற்கனவே மால்குடி தினங்கள் (MALGUDI DAYS) படித்த போதே உறுதி செய்து கொண்டதுதான் எனினும், திரும்பவும் ஒருமுறை சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் முதன் முதலில் கதைகள் படிக்க ஆரம்பிப்போர் இவருடைய கதைகளில் ஆரம்பிப்பது நல்ல திட்டம். இந்தியச் சூழலில் சொல்லப்பட்டிருப்பது மட்டுமல்ல; இந்தியர்களுக்கு ஏற்ற மாதிரியான எளிமையான நடையும் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் வாசியுங்கள்.

வழி முடிகிறது!

வியாழன், செப்டம்பர் 27, 2012

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 3/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

நான் இருக்கும் பகுதி பெடாக். தமிழில் பிடோக் என்பதை ஆங்கிலத்தில் பெடாக் என்று உச்சரிக்கிறார்கள். ஆனால், அங்கேயே காலம் காலமாக வசிக்கும் தமிழர்கள் "பிடோ" என்று 'க்' விட்டு விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பெயருமே ஆங்கிலத்தில் ஒரு விதமாகவும் தமிழில் ஒரு விதமாகவும் அதையே எழுத்தில் ஒரு விதமாகவும் பேச்சில் ஒரு விதமாகவும் என்று வெவ்வேறு விதமாக உச்சரிக்கப் படுகின்றது. ஒருவர் பெடாக் போன்ற ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்கிறார் என்பதை வைத்தே அவர் எவ்வளவு காலம் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று சொல்லி விடலாம். அதாவது, பழைய ஆளா புது ஆளா என்பதைச் சொல்லி விடலாம். தமிழிலும் எல்லா இடங்களிலும் எழுதிப் போட்டிருப்பதால் உச்சரிப்பு பெரிய அளவில் தப்பாமல் சமாளித்துக் கொள்ள முடிகிறது. பிடோ மட்டுமில்லை. நீண்ட காலமாக இங்கே வாழும் தமிழர்களுக்கென்றே பல தனிப்பட்ட உச்சரிப்புகளும் பெயர்முறைகளும் இருக்கின்றன. லிட்டில் இந்தியாவைத் தேக்கா என்பார்கள். சிங்கப்பூர்ப் பணத்தை வெள்ளி என்பார்கள். புதிதாக வந்திருக்கும் நம் போன்றோர் டாலர் என்றே சொல்கிறோம். இதில் டாலருக்கு வெள்ளி என்று தமிழ்ப் படுத்தியிருக்கும் புத்திசாலித்தனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது போலவே அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கும் தமிழர்களும் வெள்ளி என்று சொன்னால் எவ்வளவு அழகாக இருக்கும்? சொல்வார்களா? சொல்ல முடியுமா? அதுதான் சிங்கப்பூர் நமக்குக் கூடுதல் உரிமையுடைய ஓர் ஊர் என்பதற்குச் சான்று. இது போலப் பல இடங்களில் அவர்களின் தனித்தன்மையைக் காண முடியும். இதில் 'பழைய பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்', 'புதிய பஞ்சம் பிழைக்க வந்தவர்'களை மதிப்பதில்லை என்று வேறு ஒரு புகார் கேள்விப் பட்டேன். ஒருவேளை அவர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே உலகமயமாகி விட்டதால் இன்னும் மாறாமல் இருக்கும் நம்மைக் கண்டால்அருவருப்பாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை அந்தப் புகாரே உண்மையில்லாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

தமிழர்கள் இங்கே ஏழு தலைமுறைகளுக்கு முன்பே குடியேறி விட்டதாகக் கேள்வி. சிங்கப்பூர் என்ற தனி நாடு உருவாகும் முன்பே - அது மலேசியாவிலேயே ஓர் ஊராக இருக்கும் போதே இங்கு வந்து விட்டார்கள். மலேசியாவிலும் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களால் வேலைக்குக் கொண்டு வரப்பட்டோர் என்போர் ஒருபுறம். அப்போதே திரைகடலோடித் திரவியம் தேடி வந்தோர் இன்னொரு புறம். செட்டிநாட்டு ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழர்களில் இங்கே அதிகம் என்று பார்த்தால் - அப்படியெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனினும் - செட்டியார், முகமதியர் மற்றும் இதர பாட்டாளி மக்கள் என்று மூன்று குழுக்களாகப் பிரித்து விடலாம்.

செட்டியார்கள் பெரும்பாலும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். அவர்களும் எல்லோரையும் போல் ஒரு குழுவாக - எங்கும் இருப்பது போல் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் தொழில் செய்கிறவர்களாக - பெருந்தொழில் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வசூல் ராஜாக்களாகி, இதை விடப் பத்து மடங்காகக் கூரையைக் கொட்டிக் கொண்டு கடவுள் திரும்பக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில், ஆங்காங்கே கோயில்களைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். நமக்கென்று இருக்கும் பண்பாட்டை கடல் கடந்த பூமியில் கட்டிக் காப்பதில் இவர்களின் பங்கு பெருமைப் பட்டுக் கொள்ளப் பட வேண்டியது.

முகமதியர் அனைவரும் பச்சைத் தமிழ் முகமதியர். உருது பேசும் வட தமிழ்நாட்டவர் அல்லர். அவர்களும் ஒரு பெருங்குழுவாக இருக்கிறார்கள். இந்திய முஸ்லிம் (INDIAN MUSLIM) என்று ஓர் அங்கீகரிக்கப் பட்ட தனி இனக் குழு அடையாளத்தோடு வாழ்கிறார்கள். அதை எல்லா இடத்திலும் "நான் இந்திய முஸ்லிம்!" என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் ஒருத்தருக்கர் சொந்தக்காரராக - சம்பந்தப் பட்டவராக - ஒரே ஊர்க்காரராக, ஒரே பகுதியிலேயே வாழ்கிறார்கள். மலேசியர்களும் முகமதியர் என்பதால் அவர்களோடு எளிதில் நெருங்கி விடுகிறார்கள். மலேசியர்களும் அறிமுகத்தின் போதே இந்தியர் என்றதும், "இந்திய முஸ்லிமா?" என்று  கேட்கிறார்கள். மொத்தத்தில், மதங்களுக்கு அப்பாற்பட்டும் இந்தியரும் மலேசியரும் எளிதில் நெருங்கி விடுகிறார்கள். இரு சாராருக்குமே ஒரு பரஸ்பர மரியாதை இருப்பது தெரிகிறது. சீனர்கள் அவ்வளவு எளிதில் நம்மோடு கலப்பதில்லை. அந்த பயம் இருக்கட்டும் ராஸ்கலா!!! :)

பாட்டாளி மக்கள் இனங்கள் இங்கே எப்படி வந்தார்கள் என்பதற்கு ஒரு சில கதைகளும் சொல்லப் படுகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஒரு கப்பலைக் கொண்டு வந்து நிறுத்தி, "சாப்பாடு இலவசம், தங்குமிடம் இலவசம், வசதியான வாழ்க்கை முறை... வாருங்கள்... வாருங்கள்..." என்று கூவி அழைத்ததாகவும் பஞ்சத்தில் நலிந்து கிடந்தோர் அனைவரும் பாய்ந்து ஏறிக் கிளம்பி வந்து விட்டதாகவும்  நண்பன் ஒருவன் சொன்னான். எப்படியிருப்பினும் அது ஒரு நல்ல முடிவு என்பதில் மட்டும் மாற்றமில்லை. அங்கேயே இருந்திருந்தால், அவர்களுடைய வாழ்க்கை இன்றுவரை மாறியிராது. அவ்வளவு எளிதாக மாற விட்டிருப்பார்களா (விட்டிருப்போமா!?) என்ன!தமிழ் இனத்தின் இருப்பு உலக வரைபடத்தில் இவ்வளவு விரிவடைந்திருக்கவும் செய்யாது.

இது மட்டுமின்றி, அரசுக்கு எதிரான குற்றம் புரிந்தோர் என்று வெள்ளைக்காரர்களால் நாடு கடத்தப் பட்ட ஒரு பெரும் குழுவும் உண்டு. சிவகங்கை மன்னர் குடும்ப வாரிசுகளும் படையினரும் கூட அப்படிக் கடத்தப் பட்டவர்கள் என்று நம் வரலாற்றில்தான் இருக்கிறதே. அவர்களும் தம் பெண்களோடும் குழந்தைகளோடும் விலங்குகள் மட்டும் வாழும் தீவுகளில் வந்திறங்கி, கிட்டத்தட்ட ஒரு வேற்றுக் கிரகத்தில் இறக்கி விடப் பட்டது போலப் புத்தம் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கி, பலவற்றை இழந்து, விலங்குகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கொண்டு, தமக்கென்று ஒரு வாழ்க்கையை நிறுவி, பின்னர் அருகில் வாழும் மக்களோடு இரண்டறக் கலந்து, இன்று மண்ணின் மைந்தர்கள் ஆகி இருக்கிறார்கள். இங்கே ஈழத் தமிழர்களை விட தமிழகத் தமிழர்களே அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், மலேசியாவில் ஈழத் தமிழர்கள் அதிகம் இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

சிங்கப்பூர் ஒரு கலவையான பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கிறது. இந்திய-சீன-மலேசிய மக்களின் இருப்பை விடுங்கள். மேற்கத்தியத் தாக்கம் நிறைய இருக்கும் ஊராக இருக்கிறது. மேற்கத்தியத் தாக்கம் என்றால், அமெரிக்காவினுடையதா இங்கிலாந்தினுடையதா என்று குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறது. சில விசயங்கள் இவர்களைப் போலும் சில விசயங்கள் அவர்களைப் போலும் இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் ஊர் என்பதால் சில பகுதிகளின் பெயர்கள் பிரிட்டிஷ் தாக்கம் உள்ளவையாக இருக்கின்றன. அதிகாரபூர்வமான இடங்களில் பயன்படுத்தப் படும் ஆங்கிலம் நம்ம ஊரில் போலவே பிரிட்டிஷ் ஆங்கிலமாகவே இருக்கிறது. சாலையில் இடது புறமே வண்டி ஓட்டுகிறார்கள். வலது புறமே ஓட்டுனர் இருக்காய் உள்ளது. ஆனால், அவர்களின் பணம் டாலர்-சென்ட் என்று அமெரிக்க முறையைப் போல் உள்ளது. தரையில் இருப்பது தரைத் தளம் (GROUND FLOOR) எனப் படாமல் முதற் தளம் (FIRST FLOOR) எனப் படுகிறது.

அடிக்கடி இன்னொரு காட்சியையும் இங்கே காண முடிகிறது. வெள்ளைக்காரக் கிழவர் ஒருவரோடு அவருடைய மகள்-பேத்தி வயதுடைய ஆசிய முகம் கொண்ட இளம் பெண் ஒருவர் கொஞ்சிக் குலாவிக் கொண்டு திரிவார். இவர்கள் இருவருக்கும் என்ன உறவிருக்க முடியும் என்று குழம்பிக் கொண்டிருந்த போது இந்த மாதிரி விசயங்களில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் அது பற்றி விளக்கிச் சொன்னார். அதற்குப் பெயர் எஸ்கார்ட் சர்வீஸ் (வழித்துணை வசதி) என்று சொல்வார்களாம். விடுமுறையை அனுபவிக்க வரும் வெள்ளைக்காரர்களுக்கு இப்படி ஓர் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்களாம். அந்தக் கிழவர்களுக்கு வேண்டிய எல்லாமும் செய்து கொடுக்க வேண்டியதுதான் இந்தப் பெண்களின் முக்கியப் பணியாம். இதைக் கேள்விப் பட்ட பிறகு வெள்ளைக்காரப் பாட்டிகளோடு வரும் தாத்தாக்களைக் கண்டாலே ஒரு மரியாதை. ஒருவேளை, ஒருமுறை இப்படி; ஒருமுறை அப்படி என்று வந்து செல்பவர்களும் அதில் இருக்கலாம். :)

மேற்குலகின் தாக்கம் இருக்கிற அளவு அங்கே இல்லாத ஆனால் நம் போன்ற ஆசிய நாடுகளில் மட்டும் இருக்கும் பழக்கங்களும் நிறைய இருக்கின்றன. சார், மேடம், அங்க்கிள், ஆண்ட்டி என்பவை ஆங்கிலச் சொற்களே என்ற போதும் அவர்கள் பிறரை அதிகம் அப்படி அழைப்பதில்லை. நம்ம ஊரில் இவை மிகச் சாதாரணம். அது சிங்கப்பூரிலும் இருக்கிறது. இங்குள்ள குழந்தைகள் பெரியோரை அங்க்கிள்-ஆண்ட்டி என்றே அழைக்கிறார்கள். கடைகளில் வாடிக்கையாளர்களை சார்-மேடம் என்று அழைக்கிறார்கள். இன்னும் கொடுமையாக தாத்தா பாட்டி வயதுப் பெரியோர் கூட மாமா-மாமி வயதுப் பெரியோரை அங்க்கிள்-ஆண்ட்டி போட்டு அழைக்கிறார்கள். அது ஓர் அடிப்படைப் பண்பாடாகவே இருக்கிறது.

சீனர்கள் எல்லோருமே சீனப் பெயர் ஒன்றும் ஆங்கிலப் பெயர் ஒன்றும் கொண்டிருக்கிறார்கள். சீனப் பெயர் வாயில் நுழையாதவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று வைத்துக் கொள்கிறார்கள் போலும். சிங்கப்பூருக்கும் மேற்குலகுக்கும் காலம் காலமாகவே நெருங்கிய தொடர்பு இருந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் பழக்கம் இன்று-நேற்றல்ல, பல தலைமுறைகளாகத் தொடர்கிறது என்றும்  சொல்கிறார்கள்.

இங்கே சிறுவர்கள் எல்லோருமே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ஒவ்வொரு குழந்தையும் கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு எந்த நேரமும் ஏதாவது நோண்டிக் கொண்டே இருக்கின்றது. பின் என்ன ஆகும்? இங்கே இருக்கும் எல்லோருமே ஐ-ஃபோன் (I-PHONE) வைத்திருக்கிறார்கள். அல்லது அதை விட விலை கூடுதலான சாம்சங் ஃபோன் வைத்திருக்கிறார்கள். அதனால் பள்ளி-கல்லூரி-அலுவலகம் சென்று திரும்பும் நேரத்திலேயே பல படங்கள் பார்த்து முடித்து விடுகிறார்கள். படம், பாடல், விளையாட்டு, குறுந்தகவல் பரிமாற்றம் என்று ஏதாவதொன்று விறுவிறுப்பாக ஓடிக் கொண்டே இருக்கும். இதைப் பார்த்து நாமும் ஏதாவது செய்தாலென்ன என்று தினமும் பயணத்தின் போது பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டேன். அதன் விளைவுதான் "இசை - எனக்குத் தெரிந்த கற்பூர வாசனை" என்ற இந்த இடுகை. ஆனால் இப்படி மூழ்கிப் போவதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. வேடிக்கைத் தொழில் முழுக்க முழுக்க நட்டப் பட்டுப் போகிறது. கையகலப் பெட்டிக்குள் சுருங்கிக் கொண்டால் வெளி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். மற்ற எல்லாத்தையும் விட அதுதானே முக்கியம் நமக்கு. அதனால் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர்த் தமிழர்கள் நடத்தும் வசந்தம் தொலைக்காட்சி தமிழ் நாட்டில் நடத்தப் படும் பல தொலைக்காட்சிச் சேவைகளை விட பல மடங்கு சிறப்பாக உள்ளது. இங்கே இருக்கும் தமிழ் அமைச்சர்கள் அனைவரும் அருமையாகத் தமிழ் பேசுகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஊரிலேயே பிறந்து வளர்ந்த நடிகைகளை விட நன்றாகப் பேசுகிறார்கள். இது ஏன் பெரிய ஆச்சரியம் என்றால் இங்கே அவர்கள் தமிழ் பேசி வாக்குச் சேகரிப்பவர்கள் அல்லர். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பவர்கள். விக்ரம் நாயர் என்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவரும் கூட அருமையாகத் தமிழ் பேசுகிறார். அதுவும் செந்தமிழில் பேசுகிறார். அவர் பேசுவதில் அப்படி என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அவர் பெயரை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். புரியும். அடிக்கடி அவரைத் தமிழ் நிகழ்ச்சிகளில் காண முடிகிறது. கூடிய விரைவில் சிங்கப்பூர் அரசியலில் அவர் ஒரு பெரிய ஆளாக வருவார் என்றே படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

வியப்புகள் தொடரும்...

ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 2/3


தொடர்ச்சி...

பிரச்சனை எங்கே தொடங்குகிறது? அல்லது, அதன் பின்னணி என்ன? கையில் நிறையக் காசையும் மண்டையில் நிறைய சரக்கையும் வைத்திருக்கும் ஆராய்ச்சியாளனான மார்க்கோ, அவனுக்கேற்ற மாதிரியான ஒரு பெண்ணைத் தேடாமல் அழகைத் தேடித் போய் ரோசியை மணக்கிறான். பணமும் படிப்பும் வைத்திருக்கும் ஆண்கள் அழகு மட்டும் இருந்தால் போதும் என்று தனக்கு எவ்விதத்திலும் ஒத்து வராத பெண்ணிடம் போய் விழுவதும், அழகை வைத்திருக்கும் பெண்கள் அல்லது பெண் வீட்டுக்காரர்கள் பணம் மட்டும் இருந்தால் போதும் என்று தமக்கு எந்த வகையிலும் ஒத்து வராத ஆணிடமும் போய் விழுவதும், அப்படிப்பட்ட உறவுகள் பெரும்பாலான நேரங்களில் வேறு வழியில்லாமல் வாழ்ந்து மடிவதும், சில நேரங்களில் மணவாழ்க்கை சிதைந்து சின்னாபின்னப் படுவதும் நீண்ட காலமாகவே நடந்து வரும் இயல்பான ஒன்றுதான். இது நாராயண் காலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இந்த நூலைப் படித்த பின்பு புரிகிறது. மார்க்கோ மூளையை மட்டும் மூலதனமாகக் கொண்டு வாழ்பவன். அவன் பெண் எடுத்த இடம் - தேவதாசிக் குடும்பம். உடலையும் அழகையும் கலையையும் மூலதனமாகக் கொண்டு வாழ்பவர்கள். தன் ஒரு கை செய்கிற வேலை இன்னொரு கைக்குத் தெரியாத மாதிரியான கமுக்கமான வேலை அவனுடைய வேலை. பொது இடங்களில் தினம் ஒரு கூட்டம் என்று புதிது புதிதான  சம்பந்தமில்லாத மனிதர்களின் கண் குளிருமளவுக்குக்  கலையை அரங்கேற்றி அதில் வாங்கும் கைத்தட்டல்களிலும் பாராட்டுகளிலும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் வேலை அவளுடையது. இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்து வாரிக் கட்ட முடியும்?

நடனத்தையே உயிராகக் கொண்ட ரோசி, மார்க்கோவை மணந்து கொண்ட பின்பு அதை அப்படியே மறக்க வேண்டும். அதுதான் திருமணத்துக்கு முன்பு போட்ட உடன்படிக்கை. இப்படியொரு மாப்பிள்ளை நம் வீட்டில் வந்து பெண் எடுப்பது கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியாத அதிசயம்; அதற்காக எதையும் இழக்கலாம் என்று சுற்றத்தார் எல்லோரும் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அதன்படி வாழ முடியவில்லை அவளால். கலையின் மீதான காதல் அவ்வளவு எளிதில் அழித்து விட முடிந்ததல்லவே. அது மட்டுமல்ல, இப்படி உடன்படிக்கையோடு நடந்த எந்தத் திருமணத்திலும் அந்த உடன்படிக்கை கடைசிவரை கடைபிடிக்கப் படுவதும் இல்லை. அதெல்லாம் ஒரு மன திருப்திக்குப் பேசிக் கொள்ளலாம். அதன் படியே வாழ வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்ப்பது பைத்தியக்காரத்தனம். திருமணத்துக்கு முன்பு ஓர் ஆண் பெண்ணுக்கு மகானாகத் தெரிவதும் ஒரு பெண் ஆணுக்கு தேவதையாகத் தெரிவதும் இயல்பான ஒன்று. அந்த மரியாதை கண்ணை மூடி முழிப்பதற்குள் பஞ்சாய்ப் பறந்து விடும். பெருந்தலைவன்-மாமேதை-உலகமகா ஞானி என எவரைக் கட்டிய பெண்ணுக்கும் அது நேரும். அது போலவே பேரழகி-உலகையே உறங்க விடாமல் செய்த கனவுக்கன்னி-கலையரசி என்று எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நாயாய்ச் சுற்றிச் சுற்றி வந்து அத்தனையையும் இழந்து கட்டிக் கொண்டு வருகிற ஆணுக்கும் அது நேரும்.

தான் உண்டு தன் ஆராய்ச்சி உண்டு என்று வாழும் மார்க்கோவைப் போன்ற ஒருவனுடன் வாழ வேண்டும் என்றால், ஒன்று அவளும் அப்படிப்பட்ட ஆர்வங்கள் கொண்டவளாக இருக்க வேண்டும். அல்லது, கண்கண்ட தெய்வத்தையும் கண் காணாத தெய்வத்தையும் மட்டும் நாளைக்கு நான்கு முறை வணங்கி விட்டு மூன்று முறை சோறு பொங்கிப் போட்டு இதர எடுபிடி வேலைகள் அனைத்தையும் இரவுக்குள் செய்து முடித்துப் பின் தூங்கி முன்னெழும் கற்காலப் பெண்ணாக இருக்க வேண்டும். ரோசி அந்த இரண்டு வகையுமல்ல. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை கற்பனை பண்ணி வைத்திருந்தவள். அது மார்க்கோவுடன் இணைந்தால் கிடைக்காது என்று திருமணத்துக்கு முன்பே சரியாக உணரவில்லை. சரி ஆனது ஆகி விட்டது; ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று அப்படியே மிச்ச வாழ்க்கையையும் அரைமனதோடு ஓட்டி விட்டாலும் எந்தத் தொல்லையும் இல்லாமல் பிழைப்பு ஓடி விடும். ராஜு மாதிரி ஒருத்தன் வந்து உள்ளே நுழைகிற போதுதான் சிக்கல் அதிகமாகும். ஒரு பெண் விரும்பும் வாழ்க்கையை அவள் கணவனிடம் பெற முடியாத போது அதைக் கொடுக்கிற மாதிரி வருகிறவர்கள்தான் ராஜுக்கள். ஆணோ பெண்ணோ யாருமே தான் விரும்பிய படியெல்லாம் கனவு வாழ்க்கை வாழ முடியாது. அந்த நிதர்சனம் புரியாத பேதைகளை இப்படி எங்கிருந்தோ வருகிறவர்கள் ஏமாற்றிக் கவர்வது மிக எளிதான ஒன்று. அவர்கள் தனக்கு அளிக்கப் போவதாகச் சொல்லி ஏமாற்றியது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். பெண்களைக் கவர்வதற்காகவே ஆண்கள் பழகி வைத்துக் கொள்ளும் கலைகள் இவை என்பது இந்த உலகம் இருக்கும் வரை எந்தப் பெண்ணுக்கும் புரிபடவே புரிபடாது போலும் (ஆண்களிலும் இந்த வகை இருக்கிறார்கள் - "நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி!" என்று பேச்சு மட்டும் வாய் கிழியப் பேசிவிட்டு மிகச் சரியாக ஏமாறக் கூடாத நேரத்தில் ஏமாந்து தொலைபவர்கள்!). பக்கத்து வீட்டில் நடக்கிற போது பார்த்துச் சிறப்பாக வியாக்கியானம் பேசுகிறவர்கள் கூட, தனக்கு நடக்கும் போது பெரும்பாலும் விழுந்து விடுவார்கள். யாராக இருந்தாலும் அவர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு பாய்ந்து நிவர்த்தி செய்து விட்டால், அதன் பின்பு ஆக வேண்டிய காரியம் தானாக ஆகிவிடும்தானே.

அப்படித்தான் ராஜு நுழைகிறான். வலது மூளை-இடது மூளை என்று சொல்வார்களே. அதுதான். மார்க்கோ ஆராய்ச்சியும் வரலாறும் தன் ஆர்வம் என்று முடிவு செய்து கொண்டு வெள்ளைத் தாள்களில் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருப்பான். ரோசியோ கலை-நடனம்-பாம்பாட்டம் என்று கிறுக்காய்த் திரிவாள். இயல்பாகவே இவை இரண்டும் வெவ்வேறு துருவங்கள். ஒன்றை விரும்புபவர் இன்னொன்றை விரும்புவது மிக அபூர்வம். ஒருபுறம் மார்க்கோ அவளுடைய நடனத்தைக் குரங்குச் சேட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கையில், "தேவதை போல் உன்னை வைத்துக் காப்பாற்றுவேன். இந்தக் குரங்கிடம் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கிறாயே!" என்று வந்து ஆரம்பிப்பான் ராஜு. உண்மையாகவே கூட அப்படி உணரத்தான் செய்வான். அதெல்லாம் அவள் மீது ஏற்படுகிற ஆரம்பக் கவர்ச்சியில் தோன்றுவது. அதே ராஜு தனக்கு வேண்டியது ஆனபின் எப்படி மார்க்கோவை விடக் கேவலமான ஒரு வாழ்க்கையை அவளுக்குக் கொடுக்கிறான் என்பதுதான் கதையில் ஒளிந்திருக்கும் முக்கியமான கருத்து. "MEN USE LOVE FOR SEX AND WOMEN USE SEX FOR LOVE" என்கிற வாசகம் எனக்கு எப்போதும் மறக்காத இளமைக் காலத்து வாசகம். அதைத்தான் ராஜுவும் ரோசியும் செய்து கொள்வார்கள்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு காட்சி அந்தப் படத்தையே முழுமையாக மறந்து விட்ட பின்பும் மனசில் நிற்கும். அது கதைகளுக்கும் உண்டு. இந்தக் கதையில் அப்படியான ஒரு காட்சி என்றால், முதல் முறை அவள் தங்கி இருக்கும் அறைக்குள் புகுந்து அவன் தாழ்ப்பாளைப் போட்டு விடும் காட்சி. அதை மிக எளிமையாக, சொற்களில் கண்ணியம் தவறாமல், ஆனால் மனதை விட்டு நீங்காத மாதிரி சிறப்பாக எழுதியிருப்பார். அத்தோடு முடிந்து விடும். அதுவே பயங்கர 'கிக்'காக இருக்கும். அதுவே வேறு சிலராக இருந்தால் (யார் என்று கேட்காதீர்கள்!) ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு நீலப் படம் போல நீளமாக விளக்கித் தள்ளியிருப்பார்கள். அங்குதான் இருக்கிறது தரமான எழுத்தாளர்களுக்கும் தறுதலை எழுத்தாளர்களுக்குமான வேறுபாடு. எல்லாத்தையும் சொல்லித்தான் விளக்க வேண்டும் என்பதில்லை அல்லவா!

ஒரு பெண்ணின் உளவியலை மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கும் ஆசிரியரை எப்படி விட்டு வைத்தார்கள் எம் பெண்ணியவாதிகள் என்று எண்ணிக் கொண்டே வாசித்து வந்தேன். ஆனால், அத்தனையையும் சொல்லிவிட்டு, இறுதியில் மார்க்கோவும் இல்லாமல் ராஜுவும் இல்லாமல் தன் சொந்தக் காலில் நின்றே எல்லாத்தையும் தாங்க ஆரம்பித்து விடுகிற மாதிரி ரோசியைக் காட்டுவதன் மூலம் பெண்ணியவாதிகளைப் பின்வாங்க வைத்து விடுகிறார். பெண்களை பலமானவர்களாகக் காட்டுவது எப்போதுமே பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தரும் ஒரு உத்திதான். அதை உத்தியாகச் செய்தாரா (அப்படியும் ஒரு கூட்டம் இருக்கிறது!) அல்லது அதுதான் உண்மை என்று சொல்கிறாரா என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை உண்மையிலும் உடன் ஓர் ஆண்மகன் இருக்கும் வரைதான் அவர்கள் ஏதோ சார்ந்து வாழ்வது போலவே காட்டிக் கொள்வார்கள். தானேதான் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று வந்து விட்டால் அவர்கள் வேகத்துக்கு யாரும் குறுக்கே வரமுடியாது. பெண்ணின் உளவியல் மட்டுமல்ல, ஆண்-பெண் உறவில் ஆணின் உளவியலும் மிகச் சிறப்பாக அலசப் பட்டிருக்கும்.

தன் மனைவியைத் தட்டிச் சென்று தன் மானத்தையே வாங்கியவன் என்றும் பாராமல் தன் நூல் வெளிவரும்போது, தன் ஆராய்ச்சிகளுக்கு உதவியாக குகைகள் அனைத்துக்கும் அழைத்துச் சென்றவன் என்ற ஒரே காரணத்துக்காக ராஜுவுக்கு அந்த நூலில் நன்றியும் சொல்லி அதில் ஒரு பிரதியை அவனுக்கு அனுப்பியும் வைக்கும் மார்க்கோவின் நேர்மை மிகவும் பிடித்திருந்தது. பொதுவாகவே மாற்றான் மனைவியைக் கவர்ந்து விட்டவனை வில்லனாகப் பார்ப்போர் ஒருபுறம் என்றால் அப்படிப் பட்டோரை நாயகனாகப் பார்ப்போரும் ஒருபுறம் உள்ளனர். இதில் மனைவியைப் பறிகொடுத்து விட்டு விழிக்கும் மார்க்கோ போன்ற கனவான்கள் கோமாளிகளாகத்தான் பார்க்கப் படுவார்கள் - சித்தரிக்கப் படுவார்கள். அவன் எதனால் தன் மனைவியை இழக்க நேரிடுகிறது என்று சொல்லும் அதே வேளையில் அவன் சாதாரணப் பட்ட ஆளில்லை என்பதையும் சொல்லத் தவறவில்லை ஆசிரியர்.

ரோசியும் மிக அற்புதமாக விளக்கப் பட்டிருப்பாள். அவளுடைய குழப்பங்கள் அனைத்தையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் ஆசிரியர். தான் உயிரென நினைக்கும் ஒன்றை மதிக்காத தன் கணவனை விட தான் எதை விரும்பினாலும் அதற்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்து உடனிருப்பதாகச் சொல்லிக் கொண்டு பின்னால் சுற்றுபவன் எவ்வளவோ மேல் என்று முடிவுக்கு வருகையிலும் சரி, அவன் வலையில் விழுந்து எல்லாம் முடிந்து விட்ட பின்பும் தன் பழைய கணவனைப் பற்றிய ஆசைகளும் நினைவுகளும் வருகையிலும் சரி, இன்னொருவனோடு தகாத உறவை வளர்த்துக் கொண்டு அவன் முன்பே கணவனுக்குப் பாய்ந்து பாய்ந்து பணிவிடை செய்கையிலும் சரி, தன் கணவன் ஒரு வெற்றியாளனாக வெளிப்படுகையில் அவனோடு இருக்க முடியவில்லையே என்று ஏங்குகையிலும் சரி, திரும்பவும் அவனிடமே போய்க் காலில் விழுந்தாவது இணைந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகையிலும் சரி, ராஜுவின் திருட்டுத்தனங்கள் அனைத்தும் தெரிந்த பின்னும்-அவனோடு வாழ முடியாது என்று முடிவான பின்னும் அவனுக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடனாக அவனைச் சட்டச் சிக்கல்களில் இருந்து விடுவிக்காமல் போக மாட்டேன் என்று சொல்கையிலும் சரி, ரோசியை மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

கலைத்துறையில் இருக்கும் பெண்களுக்கே உரித்தான சாபக்கேடு அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது போய்விடுவதுதான். காலையில் கட்டிலை விட்டு எழுவது முதல் இரவு வந்து சாயும் வரை செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் தீர்மானிப்பது வேறு யாராகவோ இருக்கும். தன் கலைப் பசிக்குத் தீனி போடலாம் என்று களத்துள் குதிக்கும் ரோசிக்கு அது தவிர எல்லாமே நடக்கும். ராஜுவின் வேறு பல பசிகளுக்குத்தான் இதில் அளவிலாத தீனி கிடைக்கும். அவளைக் கூண்டுக்கிளி போல அடைத்து வைத்துப் பணமும் புகழும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். அவளுடைய வேலை, அவன் சொல்லுகிற இடத்தில் சலங்கையைக் கட்டி ஆட்டம் போடுவது மட்டும்தான் என்று ஆகி விடும். அதில் வரும் அத்தனையையும் பயன்படுத்தி அரசியல்வாதிகள், காவற் துறையினர், வக்கீல்கள், ஊரில் இருக்கும் பெரிய மனுசன்கள் என்று எல்லோரையும் தன் வட்டத்துக்குள் கொண்டு வர ஆரம்பிப்பான் ராஜு. அவர்களும் அந்தக் காலத்திலேயே பசை இருக்கிற இடத்தில் ஒட்டிக் கொள்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். கடைசியில் இவன் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் போது அவனுடைய காவற் துறை நண்பர்கள் நைசாக விலகிச் செல்வதும் பழைய பழக்கம் என்பது வியப்பாக இருக்கிறது. அப்படியானால், அவர்களுக்கு வாங்கி ஊற்றும் சரக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கும் இதர பொழுதுபோக்குகளும் வேஸ்ட்தானா? எல்லாமே ஒரு அளவுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சனையில்லை. மிஞ்சினால் நஞ்சுதான். இதில் போகிற போக்கில் அரசியல்வாதிகள் அந்தக் காலத்திலேயே ஒரு மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதும் சொல்லப் படுகிறது.

வழி இன்னும் முடியவில்லை...

சனி, செப்டம்பர் 22, 2012

மக்களாட்சி

மகனும் மகளும்தானே மக்கள்?!
அவர்கள் ஆள்வதுதானே மக்களாட்சி?!
அப்புறம் ஏன் அலுத்துக் கொள்கிறீர் உடன்பிறப்புகளே?!
அதனால்தானே உம்மை
மக்களெனாமல் உடன்பிறப்பென்கிறேன்!
அலைகடலேனத் திரண்டு வாரீர் உடன்பிறப்புகளே!
தண்டவாளத்தில் தலைவைத்தாவது
மனுநீதிச் சோழனின் மண்ணில் மக்களாட்சி காப்போம்!

செவ்வாய், செப்டம்பர் 18, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலம்

வசந்தம் தொலைக்காட்சியில் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்றொரு படம் ஓடிக் கொண்டிருந்தது ஒருநாள். தொடர்ந்து பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்த சில காட்சிகள், அதன் பின் வந்த மனதை உலுக்கும் பல காட்சிகளையும் பார்க்க வைத்தன. பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் 'ஒரு நடிகையின் கதை' என்றொரு தொடர்கதை வந்தது. சினிமாக்காரர்கள் எல்லோரும் முதலமைச்சரிடம் மனுக் கொடுத்து அதைத் தடுத்து நிறுத்தினார்கள். வாராவாரம் கிளுகிளுப்போடு கொடுமைகளை எழுதிய எழுத்தாளர், கடைசி வாரத்தில் எழுதிய சில வரிகள் இப்போதும் நினைவுக்கு வருகின்றன. "இந்தத் தொடரை நிறுத்த முடிந்தவர்களால், ஒவ்வொரு நாளும் சினிமா மோகத்தோடு சென்ட்ரல் நிலையத்திலும் எழும்பூர் நிலையத்திலும் வந்திறங்கிக் கொண்டிருக்கும் - வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் - பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியுமா?" என்ற கேள்வியோடு முடித்தார்.

அவ்வளவு கோபக்காரச் சினிமாக்காரர்கள் இந்தப் படத்தை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சினிமாக்காரர்களைப் பற்றிய முழுமையான தெரிவு (இந்தச் சொல் இந்த இடத்தில் தவறு என்பவர்கள் 'அறிவு' என்று போட்டுக் கொள்ளுங்கள்!) எதுவும் இல்லாமல் இருந்த கிராமத்து ஆட்களான எங்களுக்கு அந்தத் தொடர் உண்மையிலேயே பல அதிர்ச்சியான தகவல்களை அளித்தது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் சுருங்கி விட்ட இவ்வுலகில் இப்போது எல்லோருக்குமே அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்து விட்டதால், போகட்டும் என்று விட்டு விட்டார்கள் போலும்.

சினிமா மோகம் கொண்ட ஒரு பெண்ணின் கதையல்ல இது; கலை மோகம் கொண்ட ஒரு குடும்பத்தின் கதை எனலாம். கலை வாழ்வில் சோபிக்க முடியாமல் போய் விடுகிற தந்தை தன் மகளைப் பெரிய நடிகையாக்க விரும்பி நாசம் செய்கிற வாழ்க்கை நாயகியுடையது. தன் கனவைத் தன் பிள்ளைகள் மீது திணித்துக் கெடுக்கும் இன்னொரு கதை. சென்னையில் வந்திறங்கி நினைத்தது நடக்காமல் ஒருவேளைப் பூவாவே சிரமம் என்றாகிற போது தவறான சகவாசத்தால் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார் தாய். பின்னர் மகளையும் அதே பாதையில் அனுப்பி வைக்கிறாள். முதல் நாள் தன் மகளை அனுப்பி விட்டுக் கதறி அழும் தாய் நம்மை உடைய வைக்கிறார். இந்தப் படத்தின் உச்ச கட்டக் காட்சி இதுதான் என்று சொல்லலாம். உடலை விற்று வாய்ப்புப் பெறுதல் என்பது இந்தத் துறையில் மிகச் சாதாரணமான ஒன்று என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறது இந்தப் படம். சோகம் தோய்ந்த முகத்தை இயல்பாகவே கொண்டிருக்கும் சோனியா அகர்வால் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் இந்த வேடத்தில்.

சில துறைகளில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் வாழ்க்கை முழுக்க உழைத்துச் சாக வேண்டும். செத்த பின்புதான் வெற்றியே ஏற்றுக் கொள்ளப் படும். சினிமாத்துறை அப்படியல்ல. ஒரே பாடல்க் காட்சியில் மாறி விடுகிற அவர்களுடைய கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் போலவே அவர்களுடையதும் ஒரே படத்திலோ பாடலிலோ கூட மாறி விடுகின்றது. அப்படியொரு வளர்ச்சியை நடிகை அஞ்சலி (சோனியாவின் படப்பெயர்) பெறுகிறாள். அப்படியொரு வளர்ச்சியைச் சந்தித்த நடிகைகள் நிறையப் பேர் சந்தித்த-சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் அவளும் சந்திக்கிறாள். அவளை ஒரு விற்பனைப் பொருளாகவே பயன்படுத்தும் குடும்பம் மற்றும் சுற்றம், அவளுடைய ஆசாபாசங்கள் எது பற்றியும் கவலைப் படாமல், அவளை இரவும் பகலும் ஓர் இயந்திரமாகவே பயன் படுத்துகிறது.

எல்லாத்துக்கும் உச்ச கட்டமாக உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகனிடம் தன் பெற்ற பிள்ளையைக் கூட்டி விடும் தாய், தாய்மையின் புனிதத்தைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் துறையில் அப்படித் தாய்களும் நிறைய இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து விட்டாள். இவர்கள்தான் இப்படி என்றால், அவளைக் காதலிக்கும் உதவி இயக்குனனும் தான் இயக்குனராக ஒரே வழி அவளை இன்னொருத்தனோடு அனுப்பி வைப்பதுதான் என்று முடிவெடுத்துச் செயல்படுவது மனதை அதைவிட அதிகம் வதைக்கிறது. இறுதியில் இதற்கெல்லாம் சரியான முடிவாக அஞ்சலி துறவியாகி விடுவது, இது முடிவல்ல-துவக்கம் என்கிற மாதிரி - இத்தோடு கதை முடியவில்லை; இரண்டாம் பாகம் ஒன்று வரும் என்று உணர்த்துவது போல இருக்கிறது. துறவறத்தில் தானே இல்லறத்தை விடக் கிக் அதிகம் இப்போதெல்லாம். பொறுத்திருந்து பார்ப்போம்... உலகத் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபட ஓடிய நடிகை, கடைசியில் சாமியாரிடம் மாட்டிக் கொண்டு துன்பப் பட்ட கதை வருகிறதா என்று!

வியாழன், செப்டம்பர் 13, 2012

ரியா - சிங்கப்பூர் சீரியல்

சென்ற முறை சிங்கப்பூர் வந்திருந்த போது ஓட்டலில் தங்கி இருந்த போது ஒரு சில தடவைகள் இங்கும் ஒரு தமிழ்த் தொலைக்காட்சி இருப்பதைக் கண்டேன். வசந்தம் தொலைகாட்சி என்று பெயர். ஆனால், நிகழ்ச்சிகள் எதுவும் முழுதாகப் பார்க்கவில்லை. இந்த முறை குடும்பத்தோடு வந்து குடித்தனம் ஆரம்பித்திருப்பதால் தினமும் வசந்தம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொலைக்காட்சிக்கும் நமக்குமான தொலைவு மிக அதிகம் என்றாலும், கடல் கடந்து வாழும் நம் தாய்த் தமிழகத்து மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் நம் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் அழகையும் பார்த்துக் களிப்பதற்காகவே ஆரம்பத்தில் கொஞ்ச காலம் அதனை அடிக்கடிப் பார்த்துக் கொள்வேன். முக்கியமாக வசந்தம் தொலைக்காட்சியின் செய்திகள் மிகவும் பிடித்திருந்தன. மொழியிலும் செய்தியிலும் தரம் நிறைய இருந்தது. பின்னர் மெதுவாக இந்தத் தொலைக்காட்சித் தொடரையும் அவ்வப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நம்ம ஊர் சீரியல்கள் போல சவ்வுத் தன்மை இல்லாமல் இருப்பது போல் இருந்தது. அதுவே அவ்வப்போதின் அளவைக் கூட்டியது. தொடர்ந்து அதைப் பார்க்கப் பார்க்கப் பல வியப்புகள்.

தலைப்பே ஒரு விதமாக இருந்தது. ரியா என்று தமிழில் எழுதி இந்தியில் மாதிரி ஒரு கோட்டைக் கிழித்திருப்பார்கள். மேலே உள்ள படத்தில் பாருங்கள். தெரியும். அதன் நோக்கம் சரியாகப் புரியவில்லை. இந்தியர்களின் வாழ்க்கையைப் பற்றியது என்று சொல்ல முனைந்திருக்கிறார்களா அல்லது எல்லா இந்தியர்களையும் இணைத்து அழைப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இங்கே இருக்கும் தமிழர்கள், முழுக்க முழுக்க இந்திய அடையாளத்தோடே வாழ்கிறார்கள். தமிழர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் மிகக் குறைவே. தமிழே பேசி வாழ்ந்தாலும் மொத்த இந்தியாவுக்கும் பிரதிநிதிகளாகத்தான் தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தவறில்லை. அது மட்டுமில்லை. வசந்தத்தில் கூட வாரம் ஒருமுறை மற்ற இந்திய மொழிப் படங்களும் போடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

தொடர் ஆரம்பித்த காலகட்டத்தில்தான் நாங்கள் வந்திறங்கினோம் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே பார்த்த மாதிரித்தான் உணர்கிறேன். ஆரம்பித்த போது ஒரேயொரு பழகிய முகம்தான் தெரிந்தது. அது நாயகி உதய சௌந்தரியினுடையது. பார்த்த மாத்திரமே மனதில் பதிந்து விட்டார் உதய சௌந்தரி. காரணம் - நாங்கள் முதற் சில நாட்கள் பார்த்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் அவரே. அழகான தமிழில் பேசினார். அழகான தமிழ் என்றால்? நம்ம ஊர்த் தொலைக்காட்சி அழகிகளை விட நல்ல தமிழ். தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழ் வழிக் கல்வி கற்று வளர்ந்து வந்தவர் போன்ற சரளம் பெரும் வியப்பாயிருந்தது. சென்னைக்கென்று - பெங்களூருக்கென்று ஒரு தமிழ் இருப்பது போல சிங்கப்பூருக்கேன்றும் ஒரு தமிழ் இருப்பது போலத்தான் முதலில் பட்டது. பின்னர் நன்றாகக் கவனித்துப் பார்த்ததில் இங்கே பேசும் தமிழ் அப்படியே சோழ நாட்டில் - செட்டி நாட்டில் பேசுவது போல இருக்கிறது என்பது புரிந்தது. உதய சௌந்தரி பெரும் அழகியில்லை. பார்த்ததும் இழுக்கும் தோற்ற வசீகரம் எதுவுமில்லை. பச்சைத் தமிழ் முகம். ஆனாலும் அவர் சிங்கப்பூர்த் தமிழர்கள் மத்தியில் ஒரு முக்கியமான நட்சத்திர முகம். அதற்கு ஒரே காரணம் - அவருடைய திறமை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் அவரை மனதில் இருத்தியது அவருடைய பெயர். தமிழ் நாட்டை விட்டு வந்து இத்தனை  தலைமுறைகள் ஆகியும், மினுக்கித் தனத்தையே முதலீடாகக் கொண்ட இப்படியொரு துறையைத் தேர்ந்தெடுத்த பின்னும், அப்படியோர் அழகான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு, "இப்படியெல்லாம் பெயர் வைத்துக் கொண்டால் என் தன்னம்பிக்கையை ஏதோ இடிக்கிறது!" என்றெல்லாம் கதை சொல்லாமல் இருப்பது.

இந்தத் தொடருக்கு ரியா என்று பெயர் வைத்ததன் காரணம் என்ன? இது சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற சகோதரிகள் பற்றிய கதை. ர்யா என்பதுதான் ரியா ஆகி விட்டது என நினைக்கிறேன். உதய சௌந்தரி, சௌந்தர்யா என்ற பெயரில் நடிப்பது நல்ல பொருத்தமாகவும் இருக்கிறது. ரியாக்கள் அழைக்கப் படுவது சௌ மற்றும் ஐஸ் என்ற பெயர்களில். முதற் சில நாட்கள் ரியாக்களாக நடித்திருப்பது உதய சௌந்தரியும் அவருடைய சகோதரியும் என்று எண்ணினோம். பின்னர் அவரே ஒரு பேட்டியில் பேசியதைப் பார்த்து விட்டு மனைவிதான் விளக்கித் தெளிவு படுத்தினாள் - இரண்டுமே உதயாதானாம். அதையும் இயக்குனர் சொல்லியே அழைத்து வந்திருந்தாராம் - தோற்றத்தில் மாற்றமே காட்ட மாட்டோம்; நடிப்பில் - பாவனையில் - செயல்பாடுகளில் காட்ட வேண்டும் என்று. சூப்பர் அல்லவா?

கதை என்ன? அது என்னவாக இருந்தால் என்ன! சீரியல் என்றால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் வித விதமாகக் குழப்பத் தெரிந்தால் போதும் என்பதே நம்முடைய எதிர் பார்ப்பு. நம் பிரச்சனைகளை மறந்து லோல் படும் விதத்தில் பல பிரச்சனைகளைப் போட்டுக்  கடைந்து அவியல் வைத்து குவியல் குவியலாக வைப்பதுதானே அவர்களின் பணி. ஆனால் இந்தத் தொடர் அப்படியில்லை. குறைவான குழப்பங்கள் கொண்டிருந்தது. ஓர் அப்பா. ஓர் அம்மா. ஏற்கனவே ஒருவரைக் காதலித்து அவரோடு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வரும் அம்மாவை, முழுமையாகத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு இரட்டைப் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அப்பா. இந்த இரட்டைதான் ரியா இரட்டை. அவர்களுடைய பெயரில் தொடர் இருப்பதால் இருவரும் நாயகிகள் - நல்லவர்கள் என்று எதிர் பார்க்கும் தமிழ்ப் பெரும் நம்பிக்கைக்கு ஆப்பு முக்கால்வாசித் தொடர் முடியப் போகும் நேரத்தில் விழுகிறது. ஒருத்தி நல்ல நாயகி, இன்னொருத்தி நொள்ள நாயகி என்று தெரிகிறது. ஐஸ் நல்லவள். சௌ நொள்ளவள். ஆனால் சௌதான் கலக்கல் பாத்திரம். ஐஸ் நிதானமானவள். சௌ பட்டாசு. பட்டாசு நல்லது என்று நினைத்தால், கடைசியில் அது மாறி மாறி ஏதாவது ஓர் ஆணைக் கவர்ந்து - கைவிட்டு இன்பம் கொள்கிற உளவியற் கோளாறு கொண்ட பேய்ப் பிறவி என்று தெரிய வருகிறது.

இந்தத் தொலைக்காட்சித் தொடரில் நமக்குத் தெரிந்த முகம் ஒன்றும் இருந்தது. அது நடிகை கோகிலா. "யாரடா அது?" என்கிறீர்களா? எனக்கும் அவ்வளவு சிறப்பாக நினைவில்லை. எந்தப் படத்தில் என்னவாக நடித்திருக்கிறார் - அவர் நடித்த படங்களிலேயே பிரபலமானது எது என்றெல்லாம் எதுவும் நினைவில் இல்லை. ஆனால், அவர் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. முகச்சாயல் அப்படியே இருக்கிறது. முதுமை தட்டி விட்டது நன்றாகத் தெரிகிறது. சென்ற தலைமுறைத் தமிழர்களுக்கு - அதுவும் திரைப்படங்களில் ஆர்வம் உள்ளோருக்கு (எந்தத் தலைமுறையில்தான் நம்மவர்கள் திரைப்படங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள் என்கிறீர்களா?) நன்றாகத் தெரிந்திருக்கும். அவர் ஓர் அருமையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் ரியாக்களின் தாய். அது மட்டுமல்ல சிறப்பு. அவருடைய பாத்திர அமைப்பே இடியாப்பச் சிக்கல்கள் கொண்டது.

ஏற்கனவே ஒருவரோடு வாழ்ந்து ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு விட்டு (அவன்தான் ரியாக்களின் அண்ணன்), பின்னர் சேகர் என்பவருடன் வந்து வாழ்ந்து இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார். அவர்கள்தாம் ரியாக்கள். இப்படி ஏற்கனவே ஒருத்தரோடு வாழ்ந்து பிள்ளை பெற்றுக் கொண்டதை, அதன் பின்பும் அவரைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கும் கணவர் மட்டுமே அறிவார். தம் பிள்ளைகள் மூவரிடமும் (!) அதை அப்படியே மறைத்து விடுவார்கள். ரியாக்கள் தம் அரை அண்ணனை முழு அண்ணன் என்று எண்ணி வளர்வார்கள். அண்ணனாகப் பட்டவன், அவர்களைத் தம் முழுத் தங்கைகள் என்றும் தன் தாயின் கணவனையே தன் தந்தை என்றும் எண்ணி வளர்வான்.

தாய், தந்தையைப் பெயர் சொல்லி அழைப்பதைப் பார்க்கும் பாக்கியம் நம்ம ஊரில் அடுத்த தலைமுறைக்குத்தான் கிட்டியுள்ளது. இங்கோ அது போன தலைமுறையிலேயே நடந்தேறி விட்டது. இதுவும் இது போன்ற வேறு பல காட்சிகளும் சிங்கப்பூர்த் தமிழர்கள் என்னதான் நம் பண்பாட்டைப் பட்டாடை உடுத்திக் காப்பாற்றினாலும் வேறு பல மேட்டர்களில் நம்மில் இருந்து சீக்கிரமே விலகிப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. இது மட்டுமல்ல. டாஸ்மாக் புரட்சியிலும் தப்பி ஆம்பளைப் பயல்களே இன்னும் அந்தக் கடைகளின் பக்கம் ஒதுங்காமல் இருக்கும் அவலத்தைப் பார்த்த தமிழ் நாட்டவர் நமக்கு, சௌ குடிக்கும் மொடாக் குடி கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது. இதிலும் பண்பாட்டு விரிசல் கொஞ்சம் (கொஞ்சம்தான்!) தெரிகிறது.

இந்தத் தந்தை இருக்கிறாரே தந்தை! அவர் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறார். இப்படி நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்களா?! தன் மனைவியே பழசைக் கிளறி வருந்தினாலும் இவர் எதற்கும் அலுங்காமல் அரை மணி நேரம் கூடவே அமர்ந்து அவரைத் தேற்றுகிறார். அதை விடக் கொடுமை - அவருடைய மகனைத் தன் மகனாகவே பாவித்து அநியாயம் செய்கிறார். அவன் அவரை எப்படியெல்லாம் கடுப்படித்தாலும் கலங்காமல் நின்று கடமையைத் செய்கிறார். அது அவருடைய கடமையே அல்ல என்பதெல்லாம் தமிழ் நாட்டு நியாயமப்பா. நாகரிகமில்லாமல் பேசாதீர்கள்.

'சௌ'விடம் சிக்கிச் சின்னாபின்னப் படும் பாத்திரத்தில் விஷ்ணு என்கிற ஓர் இளைஞர் நடித்திருக்கிறார். உதய சௌந்தரிக்கு அடுத்த படியாக வசந்தம் தொலைக்காட்சியில் பிரபலமான ஆள் இவராகத்தான் இருக்க வேண்டும். நடிப்பு பட்டையைக் கிளப்பி இருக்கிறார். நல்லா இருக்கிற பையனை மனுசி கிறுக்காக்கி விடுவாள். சிங்கப்பூரில் பிறந்து இவர்கள் எல்லாம் இவ்வளவு அருமையாகத் தமிழ் பேசி நடிப்பது இன்னமும் மீள முடியாத வியப்பாக இருக்கிறது. அவருடைய தந்தையாக வரும் அலெக்ஸ் என்ற பாத்திரமும் அருமை. ஒரு மேட்டுக்குடித் தோற்றம். அதற்குள்ளும் ஒளிந்திருக்கும் முரட்டுத்தனம். அதற்குள் ஒளிந்திருக்கும் மகன் பாசம். எல்லாமே அருமையான அமைப்புகள். இவர்கள் எல்லோருமே தமிழ்ச் சினிமாவில் வாய்ப்புக் கொடுக்கப் பட வேண்டியவர்கள். ஆனால், கேள்விப் பட்டது என்னவென்றால், இவர்கள் எல்லோருமே இங்கு நடிப்பை முழு நேரத் தொழிலாகச் செய்வதில்லையாம். இன்ன பிற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இதிலும் பகுதி நேரப் பங்கெடுத்துக் கொள்கிறார்களாம். முழு நேரத் தொழிலாகச் செய்ய வேண்டும் என்றால் அதற்கென்று ஓர் ஏமாளிக் கூட்டம் வேண்டுமே! அது இங்கே அவ்வளவு எளிதில் கிடைக்காது போலும்!

ரியாவின் அண்ணனாக நடித்திருப்பவருக்கு அப்படியே தமிழ் முகம். கடைசியில் அவருடைய உண்மையான தந்தை அவர் கண் முன்னே செத்துவிட, அதைக் காண வரும் தாய் கதறி அழுவதைக் கண்டு இவர் பதறுவதும், அதன் பின் அதுதான் தன் தந்தை என்று தெரிந்த பின், "இவ்வளவு நாள் நான் யார் என்றே தெரியாமலா வாழ்ந்தேன்!" என்று கதறுவதும் நல்ல நடிப்பு. அவருக்கு மனைவியாக வருபவர், பார்க்க அழகாக, "இவனுக்கு இவளா?" - "இவள் நாயகிகளை விட நன்றாக இருக்கிறாளே!" என்றெல்லாம் சொல்ல வைக்கிறார். கடைசிவரை அவர் நல்லவரா கெட்டவரா என்று புரியாமலே போய்விட்டது. எல்லாப் பாத்திரங்களையும் இரண்டில் ஒரு வகை என்று பிரிக்க முடியாவிட்டால் அந்தத் தொடரே தோல்வி அடைந்து விட்டது என்றல்லவா சொல்ல வேண்டியதிருக்கும்! அவருக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். மாதவ் என்று பெயர். படுபாவிப் பயல். நம்ம ஊராக இருந்தால், அந்த வேடத்தில் நடித்தவரைப் பார்க்கிற இடங்களில் எல்லாம், "டேய், திருட்டு மாதவ்... ஃபிராடு மாதவ்..." என்று சொல்லிக் கடுப்பேத்தி இருப்பார்கள். அந்த அளவுக்கு மொள்ளமாறித்தனம். சிங்கப்பூர்த் தமிழரிலுமாப்பா?!!!

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், அதன் தரம் பாராட்டப் பட வேண்டியது. தொலைக்காட்சித் தொடர் என்றாலே ஏழு காத தூரம் ஓடும் நம்மைப் போன்றோருக்கு இது போன்ற தொடர்களைப் பார்த்தால் கொஞ்சம் பயம் குறையும். அதற்கொரு முக்கியக் காரணம் - தொலைக்காட்சித் தொடர்களுக்கே உரிய மாதிரி வளவளவென்று நீட்டாமல் சரியான நேரத்தில் முடித்துக் கொண்ட தரம்! இப்படியே எல்லாத் தொடர்களும் முடிந்து விட்டால்... நாட்டுக்கு-வீட்டுக்கு-குடும்பத்துக்கு எவ்வளவு நல்லது!!!

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 2/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

இங்கே கார்கள் மிகக் குறைவு. மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருக்கிறார்கள். காரணம் - கார் வைத்துப் பிழைக்க இங்கே ஏகப் பட்ட பணம் வேண்டும். அதன் பொருள் - கார்களின் விலை அதிகம் என்பதல்ல. காரின் விலையை விடப் பல மடங்கு வரியைப் போட்டுத் தாக்கியிருக்கிறது அரசாங்கம். என்ன காரணம்? இது ஒரு சிறிய ஊர். சிறிய தீவுதான் மொத்த ஊரும் நாடும் எல்லாமும். இருக்கிற மிகக் குறைவான இடத்துக்குள்தான் எல்லோரும் சிரமமில்லாமல் வாழ வேண்டும். வாழ்கிற முக்கால்வாசிப் பேர் காரில்தான் போவேன் என்று இறங்கி விட்டால் நகரத்தில் கார் நகர இடம் இராது. இதுதான் இன்று இந்தியாவில் பிரச்சனை. காரை வேடிக்கை மட்டுமே பார்த்த நிறையப் பேர் காரில் போக ஆரம்பித்து விட்டோம். ஆனால், கார் செல்வதற்கான சாலைகளும் தெருக்களும் அப்படியேதான் இருக்கின்றன (தங்க நாற்கரச் சாலை மட்டும் விதிவிலக்கு!). பல இடங்களில் நம் தெருக்கள் சுருங்கத்தான் செய்திருக்கின்றன. இதற்கு இரண்டு தீர்வுகள்தானே இருக்க முடியும்?! ஒன்று - சாலைகளைப் பெரிதாக்க வேண்டும். அது முடியாது என்றால், கார்களைப் பெருக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் சிங்கப்பூர் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. கார்களைப் பெருக விடாமல் தடுப்பது மட்டுமல்ல. அதற்கான மாற்றுப் போக்குவரத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்திருக்கிறது. இதைத்தான் எதிர் காலத்தைப் பற்றிய பார்வை (VISION) என்பார்கள். நாம்தான் பார்வைக் கோளாறு கொண்டோராயிற்றே! இப்படி ஓர் ஐடியாவை நம்மவர்களுக்குக் கொடுத்து விட்டால், வரியாகப் போக வேண்டியது கட்சி நிதியாகவும் கையூட்டாகவும் போக ஆரம்பித்து விடும். அதனால், இது பற்றியெல்லாம் பேசாமல் இருந்து விடுவதே எல்லோருக்கும் நல்லது.

சாலைகளில் நிறைய ஒழுங்கு இருக்கிறது. நிற்கும் போது கூட கார்களுக்கிடையில் நிறைய இடைவெளி விட்டு நிற்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அதிகம்தான். பெரும்பாலான பைக்குகளில் பின்னால் ஒரு பெட்டி மாட்டியிருக்கிறார்கள். நம்ம ஊர் பீட்சா வண்டிக்காரர்கள் வைத்திருப்பது போல் இருக்கிறது அது. பின்னால் அமர்பவர் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு வசதியாகவும் பெரிதாகவும் இருக்கிறது. சைக்கிள்கள் மிக மிக அதிகம். இலண்டனைப் போல சைக்கிள்களுக்குத் தனிப் பாதை கிடையாது இங்கே. நம்ம ஊரைப் போல சாலைக்குள்ளும் ஓட்டுவதில்லை. நடை பாதையிலேயே ஓட்டுகிறார்கள். ஆனால் நடப்பவர்களுக்குச் சிறிதும் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் கடக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு 'சாரி'யும் ஒரு 'தேங்க் யூ'வும் சொல்லியே கடக்கிறார்கள். ஏற்பட்ட இடைஞ்சலுக்கு 'சாரி'; விலகி வழி விட்டதுக்கு 'தேங்க் யூ'. திருட்டே அதிகம் இல்லாத இந்த ஊரில் அடிக்கடித் திருட்டுப் போவதும் அதிகம் திருட்டுப் போவதும் சைக்கிள்கள்தாம். சைக்கிள்களுக்குப் பதிவு எண்ணெல்லாம் கிடையாது என்பதால் எளிதாகத் தப்பியும் விடுகிறார்கள். சிக்கியவர்களை நொங்கெடுத்து விடுகிறார்கள் (அது பற்றி அடுத்த பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்!).

சென்ற முறை வந்து சென்ற பின்பு எழுதிய தொடரில் வீடுகளைப் பற்றி அதிகம் எழுத வில்லை. காரணம் - இருந்தது குறைவான நாட்கள் என்பது மட்டுமில்லை. வீடுகள் நிறைந்த பகுதிகளைப் பார்க்கவே இல்லை. அலுவலகத்துக்கும் ஓட்டலுக்கும் இடையில் மட்டுமே வண்டி பறந்தது. இம்முறை குடும்பத்தோடு வந்து குடியேறியிருப்பதால் அவை பற்றியும் நிறைய எழுதலாம். இங்கே வீடுகள் என்றாலே அடுக்குமாடிக் குடியிருப்புகள்தாம். இங்கே இந்தப் பண்பாடு சென்ற தலைமுறையிலேயே வந்து விட்டது. நம்ம ஊரில் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக நாங்கள் இருக்கும் வீடு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது. பார்த்தால் அப்படித் தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முந்தைய வீடுகள் கூட நம்ம ஊரில் கிழவியாகி விடுகின்றன. ஆனால் இங்கே அருமையாகப் பராமரிக்கிறார்கள். வாரத்துக்கு ஒருமுறை கழுவி விடுகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பெயிண்ட் அடித்து விடுகிறார்கள். ஐந்து வருடங்கள் என்பது நீண்ட இடைவெளி அல்லவா என்கிற உங்கள் நியாயமான கேள்வி புரிகிறது. ஆனால், இங்கேயிருக்கும் சுத்தத்துக்கு அது ஓகேதான்.

அவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையிலேயே தரமான கட்டுமானம். இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு தரமாக வீடு கட்டுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அதுவும் அரசாங்கமே எடுத்துச் செய்கிறது. அதில் எப்படித் தரம் காக்க முடியும் என்பது அதை விடப் பெரிய கேள்வி. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், நம்ம ஊரில் இருந்து வருபவர்கள்தான் இங்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதே ஆள் ஊர் திரும்பியதும் எப்படி புத்தியைக் காட்ட ஆரம்பித்து விடுகிறான் என்பதுதான் ஆராய்ச்சிக்குரிய இன்னொரு கேள்வி. இங்கே எல்லோருமே தவறு செய்யப் பயந்து நடுங்குகிறார்கள். அது ஏன் என்பதை அடுத்த பாகத்தில் மிக விரிவாகப் பார்ப்போம்.

வீடுகள் அனைத்துமே பூங்காக்களுக்கு மத்தியில் கட்டப்பட்டது போல் இருக்கின்றன. எட்டிப் பார்த்தால் புல்வெளிகள்தாம் - செடிகொடிகள்தாம் - மரங்கள்தாம். சில மரங்கள் பத்தாவது மாடி வரை கூட உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. அவற்றைப் பராமரிக்கவும் ஏகப்பட்ட ஆட்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களும் நம்ம ஆட்களே. அது மட்டுமில்லாமல் அடிக்கடிப் பேய் மழை வேறு பெய்வதால், அதற்கென்று தனியாகத் தண்ணீர் செலவிட வேண்டியதில்லை என்பது கூடுதல் வசதி. தண்ணீர் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. ஆனால் உண்மையில் பஞ்சமில்லை என்று சொல்ல முடியாது. பயன்படுத்தப் பட்ட நீரையே சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதாவும் மற்ற எல்லாப் பொருட்களையும் போல நீரும் கூட மலேசியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து வந்திறங்குவதாகவும் சொல்கிறார்கள். மின்சாரமும் மித மிஞ்சிப் பயன்படுத்தப் படுகிறது. அதற்காக ('அதற்காகவும்' என்றும் சொல்லலாம்!) ஆட்சியையே மாற்றி, அதன் பிறகு வந்தவர்களும் ஒன்றும் சாதிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மால் இது சீரணிக்கவே முடியாததாக இருக்கிறது.

பாதாளச் சாக்கடை வசதிகள் அவ்வருமை (அதாவது... மிக அருமை!). நடை மேடைகள் அனைத்தும் வாய்க்கால்களுக்கு மேலே அமைக்கப் பட்டிருக்கின்றன. பத்து மீட்டருக்கு ஒரு கிரில் திறப்பு வைத்திருக்கிறார்கள். நடந்து போகையில் வெளியேயிருந்து பார்த்தால் உள்ளே இருப்பது தெளிவாகத் தெரியும். சாக்கடையும் தெளிவாக இருக்கிறதப்பா இந்த ஊரில்! அடிக்கடி அவற்றில் ஆட்கள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. சில இடங்களில் ஆழம் பத்தடிக்கும் மேல் இருப்பது போல்த் தெரிகிறது. அதனால் அடைப்பு என்று ஒன்று ஏற்படவே வாய்ப்பில்லை. மக்கட் தொகையும் வீடுகளும் இன்னும் இரண்டு மடங்காகி விட்டாலும் கூட எந்தச் சிக்கலும் இராது. வீட்டுக்குள்ளேயே குப்பையைக் கொட்ட ஒரு பொந்து இருக்கிறது. அந்த வரிசையில் உள்ள அனைத்து வீடுகளின் குப்பையும் அதன் வழியாக கீழே இருக்கும் ஒரு பெரிய பெட்டியில் போய் விழுகின்றன. அதைத் தினமும் வந்து எடுத்துச் சென்று விடுகிறார்கள். அந்த வேலையிலும் நம்மவர்களே இருக்கிறார்கள். இந்த வசதி இந்தியாவில் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வந்திருக்க வேண்டும். இன்னும் வரவில்லை என்றால் கூடிய விரைவில் வர வேண்டும்.

துணி காயப் போட ஒரு வினோதமான அமைப்பு வைத்திருக்கிறார்கள். சன்னலுக்கு அருகில் ஐந்தாறு குழாய்களைப் பதித்து வைத்திருக்கிறார்கள். அக்குழாய்களுக்குள் செருகுவதற்கு நீண்ட குச்சிகள் ஐந்தாறு வாங்கிக் கொள்கிறார்கள். அந்தக் குச்சிகளில் துணிகளைத் தொங்க விட்டுக் கிளிப் மாட்டி, அக்குச்சிகளைக் குழாய்களுக்குள் செருகி விடுகிறார்கள். அருமையான இட நிர்வாக உத்தி (SPACE MANAGEMENT TECHNIQUE). இது நம் மாநகர வாசிகளுக்கு - முக்கியமாக மும்பைக்காரர்களுக்கு - நிறையப் பயன்படலாம். ஒரு சின்னப் பிரச்சனை. நம்ம ஊரில் மேல் வீட்டுக்காரன் துப்பும் எச்சில் வந்து விழுந்து விட்டால் வெள்ளைச் சட்டை பாழாய்ப் போகும். அதை இங்கே செய்தால் அடுத்த நாள் வீட்டுக்குப் போலீஸ் வரும்.

எல்லாப் பகுதிகளிலுமே எந்த நேரமும்  ஏதாவது கட்டுமானப் பணி நடந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான பணி - லிப்ட் அமைக்கும் பணி. பழைய கட்டடங்கள் அனைத்திலும் எல்லா மாடிக்காரர்களும் பயன் படுத்த முடியாத மாதிரி ஒரு பெரும் கோளாறோடு லிப்ட் அமைத்து விட்டார்கள். மூத்த குடிமக்கள் பெருகி விட்டதால் சென்ற தேர்தலில் அது ஒரு முக்கியப் பிரச்சனையாகப் பேசப்பட்டு, வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, அடுத்த தேர்தலுக்குள் முடித்து விட வேண்டும் என்று வேக வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பிரச்சனைகளும் வாக்குறுதிகளும் பொறுப்புணர்ச்சியும் நம் தேர்தல்களில் வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காக்க வேண்டுமோ?!

மற்றபடி, புதிய வீடுகளில் இந்தப் பிரச்சனை கிடையாது. நகரில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லும் பெரியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளை முழுக்க முழுக்கத் தள்ளுவண்டியிலேயே தள்ளிச் சென்று விடுகிற மாதிரியாக நடைமேடைகளும் லிப்ட்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஏறி இறங்க வேண்டிய எல்லா இடங்களிலும் - அதாவது படிக்கட்டுகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் - லிப்ட் இருக்கிறது. சிறிய ஏற்ற-இறக்கங்கள் என்றால், அதற்கேற்றபடி சறுக்குப் பாதைகள் இருக்கின்றன. நடைமேடையில் இருந்து இறங்குவதற்குக் கூட அதன் முடிவில் சறுக்குப் பாதை இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கண் தெரியாதோருக்கு நடக்க வசதியாக நடை பாதைகளில் வேறுபட்ட குமிழ்கள் கொண்ட ஓடுகள் பதித்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை எளிதாக்கும் பொருட்டு வளர்ந்த நாடுகள், மிகுந்த அக்கறையோடு இதை ஒரு முக்கியமான பணியாக எடுத்துச் செய்து வருகின்றன. நம் நாட்டில் கூட தனியார் நிறுவனங்களில் கழிப்பறை முதற்கொண்டு எல்லா இடங்களிலும் இந்த வசதிகள் சிரத்தையோடு செய்யப் படும் பண்பாடு ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து நம் நிறுவனங்களைப் பார்த்து எடை போட வரும் வெள்ளைக்காரர்கள், இந்த வசதிகளையும் பார்த்துத்தான் நம்மை எடை போடுவார்கள் என்பதால் சமீப காலங்களில் இவ்விஷயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப் படுகிறது. வருமானத்தைக் கணக்கில் கொண்டு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் நாகரிகம் என்றாலும், நல்லது எந்த வகையில் வந்தாலும் நமக்கு நல்லதுதானே! அது போலவே கொஞ்சம் கூடுதலாக நடக்கத் தயாராக இருந்தால் மழை நேரங்களில் குடை இல்லாமலே சமாளித்து விடுகிற மாதிரியும் எல்லாக் கட்டடங்களும் ஒன்றோடொன்றும் பேருந்து நிறுத்தங்களோடும் கூரை வேய்ந்த நடை பாதைகளால் இணைக்கப் பட்டிருக்கின்றன.

தனி வீடுகளே மிக மிகக் குறைவு. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அதெல்லாம் வாங்குவது பற்றிக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும் இங்கே. மற்றவர்கள் போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம். அல்லது, சில மாதங்களுக்கு மட்டும் வருமானத்தில் முக்கால்வாசியைக் கொட்டி ஒரேயோர் அறையை மட்டும் உள்வாடகை எடுத்து வாழ்ந்து அனுபவித்துக் கொள்ளலாம். அதுவும் சில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன. அந்தப் பகுதிகள் யாவும் அமைதி நிறைந்தும் ஆள் நடமாட்டம் இல்லாமலும் வேற்றுக் கிரகம் போல் இருக்கின்றன. ஆக, இந்தச் சிறிய நாட்டுக்குள்ளும் இரு வேறு உலகங்கள் இருக்கின்றன. அது உலகம் இருக்கும்வரை இருந்துதானே தீரும். ஆனால், அந்த இரண்டு உலகங்களுக்குமான இடைவெளி எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அது இந்த உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கும்... என்றும்! என்ன சொல்கிறீர்கள்?!

வியப்புகள் தொடரும்...

வியாழன், செப்டம்பர் 06, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 12/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

அதற்கடுத்த வாரமே ஊரைக் காலி செய்து கிளம்ப வேண்டியதாகி விட்டதால் அருங்காட்சியகத்துக்குப் பிறகு வேறெங்கும் செல்லத் திட்டமிடவில்லை. அலுவலகமும் வீடும் மட்டும்தான். அலுவலகத்திலும் சில விஷயங்களைக் கண்டு வியக்க முடிந்தது. சாப்ட்வேர் துறையில் இந்தியர்களே மிகுந்திருப்பதால் நிறைய வெள்ளைக்காரர்களுடன் பேசிப் பழகவெல்லாம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருக்கிற இந்தியர்களையாவது வேடிக்கை பார்க்கலாம் என்று கவனித்துப் பார்த்ததில் சில சிறு சிறு சுவாரசியங்களை உணர முடிந்தது. அப்படியான ஒன்று, நம்ம ஊர்ப் பெண்களில் ஒரு பெண் கூட தலையில் சடைப் போட்டுப் பார்க்க முடியவில்லை. வெளிநாடு போனாலே தன்னைப் போலவே தன் தலைமுடியையும் சுதந்திரமாகப் பறக்க விட்டு விட வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம் போலும். ஆனால், வேடிக்கை என்னவென்றால், சடைப் போட்ட வெள்ளைக்காரப் பெண்கள் பல பேரைப் பார்க்க முடிந்தது அங்கே. எங்கள் அலுவலக நுழைவிலேயே மிக அழகாக ஒரு வெள்ளைக்காரப் பெண் தினமும் - ஒரு நாள் இரு நாள் என்றில்லை - தினமும் - சடைப் போட்ட தலையோடு உட்கார்ந்து வரவேற்றுக் கொண்டிருப்பாள்.

அது மட்டுமில்லை, சென்ற முதல் வாரத்தில் கிராய்டனில் பார்த்த சுடிதார் அணிந்த ஓர் ஈழப் பெண் தவிர்த்து, இந்தியப் பெண்களில் ஒருத்தர் கூட சுடிதாரோ சேலையோ அணிந்து பார்க்க முடியவில்லை. வேட்டி கட்டிய தமிழரையும் பார்க்கவில்லை. இதில் வியப்பேதும் இல்லை என்பதை நான் அறிவேன். அப்படியும் ஒருவரையாவது பார்த்து விட வேண்டும் என்று நான் பேராசைப் பட்டதுதான் வியப்பு. ஒருவேளை அங்கேயே ஏதாவது பண்டிகைகள் கொண்டாடும் போது அல்லது கோவிலுக்குப் போகும் போது அதெல்லாம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

தமிழர்க்கு ஈஸ்ட் ஹாம் போல குஜராத்தியருக்கு பஞ்சாபியருக்கு என்றும் நிறைய இடங்கள் இருப்பதாகக் கேள்வி. ஈஸ்ட் ஹாமில் கூடப் பாகிஸ்தானியரும் வங்க தேசத்தவரும் அதிகம் என்று கேள்விப் பட்டேன். அதெல்லாம் பெரிதில்லை. சைனா டவுண் என்றோர் இடம் வேறு இருக்கிறது. அந்தப் பகுதிக்குள் நுழைந்தால் ஒரே சீன முகங்கள்தாம்.

சனிக்கிழமை பெட்டியைக் கட்டவும், ஊருக்கு வந்ததும் விநியோகம் செய்ய வேண்டிய அளவுக்கு சாக்லேட்டுகள் வாங்கவும் நேரம் சரியாயிருந்தது. இரவெல்லாம் விழித்துக் கூட பெட்டி கட்டும் வேலை செய்து தீர்த்தோம். ஞாயிற்றுக் கிழமை காலை நண்பன் ஒருவனால் ஏற்பாடு செய்யப் பட்ட டாக்சியில் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டோம். இந்திய முகமும் முஸ்லிம் தாடியும் பெயரும் கொண்ட ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. "எந்த ஊர்?" என்றதும், ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டு, "பாகிஸ்தான்!" என்று சொல்லி உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை, 'இந்தியா என்று சொல்வேனென்று எதிர் பார்த்து ஏமாந்து விட்டாயா?!' என்று கேட்கிற மாதிரி இருந்தது. அவர் சற்றும் எதிர் பாராத விதமாக, "வாவ்! பாகிஸ்தானில் எந்தப் பகுதி?" என்றேன். மகிழ்ச்சியாகி விட்டார். 'உங்கள் அனைவரையும் வெறுக்கும் எங்களவர்களும் எங்கள் அனைவரையும் வெறுக்கும் உங்களவர்களும் முட்டாள்கள் என்று நிரூபிப்பதற்காக இதெல்லாம் சிலர் செய்யத்தான் வேண்டியதிருக்கிறது' என்று எண்ணிக் கொண்டேன்.

அடுத்ததாக, "இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்களா?" என்றொரு கேள்வியைப் போட்டேன். இன்னும் பிரகாசமாகி, "எனக்கு இன்னும் இந்தியாவில் உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் மாமா வீட்டுக்கு வந்திருக்கிறேன்!" என்று நீண்ட கதைகள் சொன்னார். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியெல்லாம் இங்குமங்கும் உறவுகள் இருக்கிற - எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டிய - இரு பிரதேசங்கள் எப்படி இரு வேறு தேசங்கள் ஆயின என்ற கேள்வி கொஞ்சம் அறுத்தது. ஒரே காரணம் - ஒரு சிலரில் ஆரம்பித்து எல்லோரையும் பீடித்த பிரிவினை உணர்வு.

ஒரு வளைவில் வண்டியோடு சேர்ந்து எங்கள் உரையாடலும் திசை மாறியது. அடுத்த கேள்வி - "இங்கே பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை... என்று நிறையப் பேர் சொல்கிறார்களே! அது எந்த அளவு உண்மை? உண்மையிலேயே உண்மையா?". அதற்குப் பதில் (கொஞ்சம் கோபமாக!) - "இங்கிருப்பவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதே பெரிதாக இருக்கிறது. அதனால் அதைப் பெரிது படுத்துகிறார்கள். அது அவர்களுக்குத்தான் பெரிது. நமக்கெப்படிப் பெரிதாக முடியும்? இது எனக்குப் புரியவில்லை. நம்ம நாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் இது பற்றிப் பேசவே கூடாது. அங்கே வாழ்வதை விடவும் இங்கொன்றும் குறைந்து போய் விடவில்லை!". அந்த "நம்ம", "அதெப்படிய்யா உன் நாடும் என் நாடும் ஒன்றாகும்?" என்று தோன்ற வைக்கவில்லை. மாறாக, இப்படிப் பேச்சுகளிலாவது நம் ஒற்றுமை இருக்கிறதே என்று மகிழ்ச்சிதான் அடைந்தேன்.

'இந்தா... அடுத்த கேள்வி...' என்று இன்னொன்றைப் போட்டேன் - "இங்கே இனவெறி அதிகம் என்கிறார்களே! உண்மையா?". ஒரு வெறுப்புக் கலந்த புன்னகை முதலில் வந்தது. 'ஏன் என் வாயைக் கிளறுகிறாய்?' என்பது போல் இருந்தது அந்தப் புன்னகையின் பொருள். "ம்ம்ம்... கடினமான கேள்வி..." என்று ஆரம்பித்துப் பொரிந்து தள்ளினார். கடினமான கேள்வியில்லை... வில்லங்கமான கேள்வி என்பதால் அப்படிச் சொன்னார் என்றும் புரிந்தது. "ஐரோப்பாவிலேயே இங்குதான் அது அதிகம். சிலர் ஜெர்மனியில்தான் என்பார்கள். அதெல்லாம் இல்லை. இங்குதான் அங்கை விட அதிகம்!" என்று முடித்தார். அப்படியானால், உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று தலையை ஆட்டிக் கொண்டேன். கடைசியில், "இந்த ஊரில் கட்டுபடியாகவில்லை. கூடிய விரைவில் துபாய் போய் விடலாமென்றிருக்கிறேன்!" என்று வருத்தத்தோடு தன் வாழ்க்கைத் திட்டத்தையும் திறந்த மனதோடு பகிர்ந்து கொண்டார்.

தாங்க முடியாத குளிரில் இறங்கி விமான நிலையத்துக்குள் நுழைந்தோம். எத்தனை நாட்கள் என்று தெளிவாகத் தெரியாமல் வந்திறங்கிய பயணம் ஒரு மாதத்துக்குள் முடிந்தது. முதல் முறை சிங்கப்பூர் வந்து திரும்பிய போது, "மீண்டும் வருவேன். அப்போது இதை விடக் கூடுதல் காலம் இருந்து விட்டுத்தான் போவேன்!" என்று தொடையில் தட்டிச் சபதம் செய்து விட்டுப் போனேன். அது போலவே ஆகியும் விட்டது. ஆனால் இலண்டனில் அப்படித் தோன்றவில்லை. பிற்காலத்தில் பல முறைகள் வரலாம். ஆனால் நீண்ட காலம் தங்கியிருந்து வாழ்ந்து செல்லும் வாய்ப்பெல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் ஓகே. கிடைக்காவிட்டால் ஒன்றும் கவலைப் படுவதற்கில்லை. அம்புட்டுதேன்!

இலண்டனில் விமானம் ஏறும் போது, வாசலுக்கருகில் இருந்த இருக்கையில் இருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, "உன் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்!" ("YOU HAVE A BEAUTIFUL DAUGHTER!") என்றார். 'ஓ, அந்த அளவுக்கு அழகாக இருக்கிறாளா?!' என்று மகிழ்ச்சியோடு நன்றி சொல்லி விட்டு, இலண்டனுக்கும் டாட்டா சொன்னோம். ஒருவேளை, முன்பொரு முறை ஸ்பானிய நண்பன் சொன்னது போல, போகிற போக்கில் நம் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதற்காக மட்டுமே சொன்னதாகக் கூட இருக்கலாம் என்றாலும், காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் என்றொரு மகிழ்ச்சி. உண்மையிலும் காக்கைதான் காக்கை. குஞ்சு பொன்தான்!

இலண்டனில் இருந்து வருவதால் விமானத்தில் எல்லோரும் நாகரிகமாக இருப்பார்கள் என்று எண்ணாமலே எண்ணிக் கொண்ட எங்களுக்கு ஓர் ஆப்புக் கிடைத்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த வங்க தேச மண்டையன் ஒருவன் என் நாலரை வயது மகளை முறைத்துக் கொண்டும் ஏதோ சொல்லிக் கொண்டும் வந்தான். அவள் கால் இருக்கையின் பின் பகுதியில் படுவது அவனுக்குத் தொல்லையாக இருந்ததாம். மன்னிப்புக் கேட்டு மகளைக் கண்டித்துப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கையில், மீண்டும் திரும்பினான். எனக்குப் பயமாகி விட்டது. இந்த முறை அவளோடு நட்புறவோடு விசாரணைகள் போட்டான். சரி, கோளாறு நம்ம பக்கம் இல்லை என்று உறுதியானது. இவன் முறைப்பும் வேண்டாம் சிரிப்பும் வேண்டாம்; விட்டால் சரி என்று எண்ணித் தப்பிக்க முயன்றோம். சிறிது நேரத்தில் தப்பியும் விட்டோம். அதன் பிறகு சம்பந்தமில்லாமல் எழுந்து இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். இதில் மொடா மொடாவாகக் குடி வேறு இடையிடையில்!

துபாய் வந்து விமானம் தரையிறங்கியதும் பின்னால் இருந்து பலத்த சப்தம். மண்டையன்தான்! நமக்கு முன்னால் இருந்தவன் பின்னால் எப்போது போனான் என்று யோசித்து முடிப்பதற்குள் சத்தத்தை மென்மேலும் ஏற்றி எல்லோரையும் பதற வைத்தான். வெள்ளைக்காரப் பெரியவர் ஒருவரை, "வழி விடுய்யா...", "உன்னைக் கொல்லப் போகிறேன் பார்..." என்று மீண்டும் மீண்டும் கெட்ட வார்த்தைகள் போட்டுத் திட்டித் தீர்த்தான். துபாய் என்பதால் பெரியவரும் பயந்து போயிருக்க வேண்டும். தாங்க முடியாத அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டே சமாளித்துப் பார்த்தார். அவன் விடுவதாயில்லை. கையை ஓங்குவது போல் பாவனை செய்தார். அதற்காகவே காத்திருந்தது போல அடிக்கப் பாய்ந்து விட்டான். உடனடியாக விமானப் பணியாளர்கள் வந்து விலக்கி விட்டு மன்னிப்புக் கேட்டார்கள். "சார், அவன் ஓவராகக் குடித்து விட்டான். மன்னித்து விடுங்கள்!' என்று அவரிடம் பேசிச் சரிக்கட்டினார்கள். இத்தனையையும் பார்த்து, பயத்தில் தலையை இருக்கையில் கவிழ்த்து காதைப் பொத்திக் கொண்டு கத்தினாள் என் மகள். 'இவர்கள் எல்லோரும் வாழும் உலகத்தில்தான் நீ வாழப் போகிறாய் மகளே! இது ஆரம்பம்தான். எல்லாத்துக்கும் மனத்தைத் தயார் படுத்திக் கொள். நல்ல வேளை உன்னை அத்தோடு விட்டான் என்று மகிழ்ந்தும் கொள். உன்னை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தியமைக்காக மீண்டுமொரு முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!' என்று என் மனம் அல்லாடியது.

கண்டிப்பாக இன்று வரை அந்தப் பெரியவர் நிம்மதியாகத் தூங்க மாட்டார். ஒரு குட்டி நாய் இப்படி நம்மைக் குதறி விட்டதே என்ற வேதனை விடாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கும். அவனை ஏன் பிடித்துப் போலீசில் ஒப்படைக்காமல் விட்டார்கள் என்று புரியவில்லை. இறங்கிய பின்னும் ஊசி போடப் பட்ட குரங்கு போலக் குதித்துக் குதித்துக் கத்திக் கொண்டிருந்தான். அவர் அவனை இந்தியன் என்று நினைத்தாரோ என்ன நினைத்தாரோ! ஊர் திரும்பியதும் இந்தக் கோபத்தை எத்தனை இந்தியர்களிடம் எப்படியெல்லாம் காட்டப் போகிறாரோ! இந்த மண்டையன் ஏன் இப்படி நடந்து கொண்டானோ! இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சில அவமானங்களை மனதில் வைத்துக் கொண்டு, அந்த ஊரை விட்டு வெளியேறியதும் இப்படி நடந்து கொண்டானோ அல்லது இயற்கையாகவே கொஞ்சம் கோளாறு இருப்பதால்தான் இலண்டனில் இருந்து திருப்பி அனுப்பி விட்டார்களோ!

துபாயில் இருந்து மாறி, காலை பத்து மணிப் போல் பெங்களூர் வந்திறங்கினோம். இயல்பாகவே சூடு மண்டையைப் பிளந்தது. ஒரு மாத காலம் குளிரில் நடுங்கிப் பழகி விட்டதால் வெயிலின் கொடுமை கூடுதலாகவே பட்டது. இரண்டு மூன்று நாட்களில் அதுவும் பழகி விட்டது. இங்கிருந்து போனவர்கள்தானே! அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதானே போனோம்! :)

முற்றும்!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...