ஞாயிறு, ஜூலை 29, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 9/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

அடுத்து என்ன என்று பார்த்தால் உடனடியாக நினைவுக்கு வந்தது - இலண்டன் ப்ரிட்ஜ். நியூ யார்க் என்றால் சுதந்திர தேவி சிலையையும் பாரிஸ் என்றாலே ஈபிள் டவரையும் சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் வாயிலிருந்து அடிக்கும் தண்ணீரையும் டெல்லி என்றாலே இந்தியா கேட்டையும் சென்னை என்றாலே சென்ட்ரல் ஸ்டேசனையும் காட்டுவது போல இலண்டன் என்றாலே காட்டப்படும் முதல் படம் இதுதான். இலண்டன் சென்ற எல்லோருமே புகைப்படம் பிடித்து முகநூலில் (FACEBOOK) போட்டுப் படம் காட்டுவதும் இதை வைத்துத்தான். சுதந்திர தேவி சிலை மற்றும் ஈபிள் டவரைப் போலவே பிரம்மாண்டமாகத் தெரிவது. சுதந்திர தேவி சிலை படங்களில் வருவதை விட நேரில் கூடுதல் பிரம்மாண்டமாக இருப்பதாகச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தியா கேட் படத்தில் பார்க்கும் போது ஒரு மாதிரியாக இருக்கும். அதற்கு உள்ளாக சாலை செல்வது போலத் தெரியும். ஆனால் நேரில் போய்ப் பார்த்தால் அப்படி இராது. கேட்டைச் சுற்றி வளையமாகச் செடி கொடிகளும் அதற்குள் மக்களோ வாகனங்களோ செல்ல முடியாத படியும் அமைக்கப் பட்டிருக்கும். அதைச் சுற்றி வட்டமடித்துத்தான் சாலை நீளும். இது போல படங்களில் பார்த்து நாம் கற்பனை செய்து வைக்கும் பல விஷயங்கள் நேரில் பார்க்கும் போது சற்றோ முற்றிலுமோ மாறுபட்டிருக்கும். இலண்டன் ப்ரிட்ஜிலும் அது போன்ற அனுபவங்கள் இருந்தன.

இலண்டன் கிளம்புவதற்கு முன்பே கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டும் என்று தீர்க்கமான திட்டத்தோடு வந்த ஒரே இடம் இதுதான். அதற்கு முக்கியமான காரணம் - மகள். "எங்கு சென்றாலும் ஏற்றுக் கொள்வேன்; ஆனால், இலண்டன் மட்டும் வரவே மாட்டேன்!" என்று என் நாலரை வயது மகள் அடம் பிடித்தது பற்றி முதல் பாகத்தில் எழுதியிருந்தேனே. அது ஏன் என்பதைப் பார்த்து விடுவோம். நம்ம காலத்தில் "நிலா நிலா ஓடி வா!" மாதிரி இந்தக் காலத்தில் RHYMES என்ற பெயரில் அவர்களுடைய பள்ளிகளில் பல பாடல்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதில் ஒன்று, "LONDON BRIDGE IS FALLING DOWN... LONDON BRIDGE IS FALLING DOWN..." என்ற ஒரு பாடாவதிப் பாடல். அதாவது, "இலண்டன் பாலம் உடைந்து விழுகிறது... இலண்டன் பாலம் உடைந்து விழுகிறது..." என்று பொருள் படும் பாடல். மாக்கு மண்டையர்கள் இது போல குழந்தைகளைப் பயமுறுத்துகிற மாதிரியேதான் நிறையப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்ட நாள் முதல் இலண்டன் உலகத்தின் பிடிக்காத இடங்களில் ஒன்றாகப் போய்விட்டது அவளுக்கு. அதனாலேயே அவளுக்கு அதைக் காட்டி விட வேண்டும் என்பது தீராத ஆசையாகி விட்டது எனக்கு.

மற்ற எல்லா இடங்களையும் விட இலண்டன் ப்ரிட்ஜ் அவளுக்குத் தெரிந்த இடம் என்கிற காரணம் ஒன்று. ஊர் திரும்பிய பின் பேசிப் பெருமைப் பட்டுக் கொள்ள வசதியாக, அவளுடைய நண்பர்களுக்கும் தெரிந்த இடமாக இருக்கும் என்கிற இன்னொரு காரணமும் இருந்தது. ஊர் திரும்பிக் கதை விடுவதிலும் பிறருக்கு ஏக்கம் வருகிற மாதிரிப் பீற்றித் திரிவதிலும் நமக்குப் பெரிதும் ஆர்வமில்லை. இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு சராசரித் தகப்பனாக யோசிப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இன்னொன்று - 'அப்படியெல்லாம் இலண்டன் ப்ரிட்ஜ் சடசடவென்று விழாது. அந்தப் பாடல் பாடிய போதெல்லாம் அப்படி விழுந்திருந்தால் எத்தனை முறை விழுந்திருக்க வேண்டும்!' என்று அவளுக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்கிற ஆசை.

இதில் இன்னொரு கொடுமை வேறு. அது இலண்டன் போய் இறங்கிய பின்தான் தெரிந்தது. நம்ம ஊரில் இலண்டன் ப்ரிட்ஜ் இலண்டன் ப்ரிட்ஜ் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அது இலண்டன் ப்ரிட்ஜே அல்ல. அதன் பெயர் டவர் ப்ரிட்ஜ். அதற்குக் கொஞ்ச தூரம் தள்ளி இன்னொரு சிறிய கறுப்புப் பாலம் இருக்கிறது. அதுதான் இலண்டன் ப்ரிட்ஜாம். இதுவும் ஒரு வகையில் மகளைச் சரிக் கட்ட உதவியது. "விழுந்தாலும் இலண்டன் ப்ரிட்ஜ்தான் விழும். டவர் ப்ரிட்ஜ் விழாது. நாம்தான் இலண்டன் ப்ரிட்ஜ் பார்க்கப் போக வில்லையே. டவர் ப்ரிட்ஜ்தானே பார்க்கப் போகிறோம்!" என்று ஒரு கதையைக் கட்டிக் கிளப்பி அழைத்துச் சென்றோம்.

மகளும் நானும்!
கிராய்டனில் இருந்து இலண்டன் ப்ரிட்ஜுக்கே இரயில் இருக்கிறது. விக்டோரியா போல, வெளியூரில்-புறநகரில் இருந்து வருவோருக்கு இலண்டன் ப்ரிட்ஜும் ஒரு முக்கியமான இரயில்வே சந்திப்பு. திட்டமிட்ட படியே இலண்டன் ப்ரிட்ஜ் இரயில் நிலையத்தில் போய் இறங்கினோம். இரயிலில் இருந்து இறங்கும் முன்பே பாலம் தெரிந்தது. "எங்கப்பா? எங்கப்பா?" என்று கண்ணில் பட்டு விடக் கூடாது என்கிற பீதியோடே மகள் திரும்பத் திரும்பக் கேட்டாள். "பொறு பொறு; வந்து விடும்!" என்று ஆசுவாசப் படுத்தி அழைத்துச் சென்றோம். இலண்டன் ப்ரிட்ஜுக்கு அருகிலேயே சில பிரம்மாண்டமான கட்டடங்கள் இருக்கின்றன. அனைத்தும் அலுவலகக் கட்டடங்கள். அவற்றின் ஊடாக நடந்து சென்றோம். குளிர் கொன்று தின்றது. முந்தைய நாளே நண்பர்கள் சொன்னார்கள் - "குளிர் கூடிக் கொண்டிருக்கிற நேரம். அதுவும் ஆற்றோரம் அதிகமாக இருக்கும். அடுத்த வாரம் அல்லது அதற்கடுத்த வாரம் திட்டமிடு!" என்று. நாம்தான் வாழ்க்கையின் நிலைப்புத் தன்மையில் நம்பிக்கை அற்றவர்கள் ஆயிற்றே. ஒருவேளை ஏதோ காரணத்தால் உடனடியாக ஊர் திரும்ப நேர்ந்து விட்டால்... அப்புறம் இலண்டன் வந்ததற்கு அத்தாட்சியே இல்லாமல் போய் விட்டால்... சாகிற வரை பாவி பட்டம் சுமக்க வேண்டியதாகி விடுமே!

இதுவரை பார்த்த எல்லா பிரம்மாண்டங்களையும் போலவே இலண்டன் ப்ரிட்ஜும் படங்களில் பார்த்த அளவுக்கு பிரம்மாண்டமாக நேரில் தெரியவில்லை. அதே கதைதான் - கிராமத்தில் இருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் போகும் முன் போயிருந்தால் இதெல்லாம் பெரிதாகத் தெரிந்திருக்கலாம். வீட்டைச் சுற்றியே பிரம்மாண்டங்கள் வரத் தொடங்கி விட்ட காலமாதலால் வெளிநாடுகள் செல்லும் போது நம் எதிர்பார்ப்புகளும் மிகப் பெரிதாக இருக்கின்றன. அதுதான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

சிறு வயதில் இருந்தே உலக நதிகளில் அதிகம் கேள்விப் பட்ட நதிகளுள் ஒன்று தேம்ஸ் நதி. நைல் நதி போன்று நதியின் தன்மைக்காகப் பெயர் பெற்ற நதிகள் ஒருபுறம் என்றால், நதியின் கரைகளில் வளர்ந்த நாகரிகங்களின் அடிப்படையில்... அதாவது அந்நதிக் கரைகளில் உருவான நகரங்களை வைத்துப் புகழ் பெற்ற நதிகள் ஒருபுறம். வைகை, தாமிரபரணி போன்றவை எல்லாம் அம்மாதிரியானவை. அது போன்றதே தேம்ஸ். ஒருவன் ஓவராக ஆங்கிலத்தில் சீன் போட்டாலே "இவர் பெரிய இவர். தேம்ஸ் நதியில் *இது* கழுவி வளர்ந்தவர் போலவே பேசுவார்!" என்றுதான் கிண்டல் பண்ணுவோம். வெள்ளைக்காரர்கள் இங்கு இருந்ததாலோ என்னவோ அந்நதி பற்றிய பேச்சுகளும் எழுத்துகளும் நம்மிடையில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்திருக்கிறது. இலண்டன் ப்ரிட்ஜுக்கருகில் நடந்ததாக யார் எழுதினாலும் அதைப் படித்த போதெல்லாம் அந்த இடம் காவிரிக்குக் குறுக்கே திருச்சியில் இருக்கும் பாலம் போல, வைகைக்குக் குறுக்கே மதுரையில் இருக்கும் பாலம் போல ஏகப் பட்ட ஆள் நடமாட்டத்தோடு இருக்கும் என்றே கற்பனை செய்து கொண்டிருந்தேன். அங்கே போன போது அப்படியான அனுபவம் இருக்க வில்லை. பாலத்தின் ஒருபுறத்தில் (அதுதானே அழகழகாகப் புகைப் படங்கள் எடுக்க வசதியாக இருக்கும்!) நின்றுதான் நிறையப் பேர் பார்க்கிறார்கள். பாலத்தின் மேலேயே நடந்து தேம்ஸ் நதியின் அழகை ரசிப்பவர்களை அதிகம் பார்க்க முடியவில்லை. அதை மேலே ஏறிப் போயிருந்தால்தான் பார்த்திருக்க முடியும்.

நம்ம கவிஞர்கள் கூட இலண்டன் போய் வந்தால் தேம்ஸ் நதி பற்றி ஒரு வரியாவது எழுதாமல் விட மாட்டார்கள். காதல்க் கவிதை என்ற அகத்தியனின் திரைப்படத்தில் கூட இலண்டன் பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கும். அப்படத்தில் இலண்டனில் தமிழ்க் கவிதை பற்றியெல்லாம் பேசப் படுவது பார்த்துப் புல்லரித்திருக்கிறேன். அதுவும் தேம்ஸ் நதி பற்றிய ஆர்வத்தை அதிகப் படுத்திய ஒன்று. மற்றபடி, நதி அப்படியொன்றும் அகலமானதாக இல்லை. கரை என்று ஒன்றைக் காணவே முடியவில்லை. முழுக்க முழுக்கச் சுவர்கள் கட்டி நதியைச் செயற்கைப் படுத்தி விட்டார்கள். அழகழகாக ஓடங்கள் விட்டிருக்கிறார்கள். ஆழமும் அதிகம் இருக்கும் போலத் தெரிகிறது. ஆண்டின் பன்னிரு மாதங்களும் நீர் வரத்தும் இருந்து கொண்டே இருக்கும் போலத் தெரிகிறது. இலண்டன் பிரிட்ஜ் மட்டுமல்ல, தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப் பட்டிருக்கும் இலண்டனின் அனைத்துப் பாலங்களுமே மிக அழகாக இருக்கின்றன. சிறிய சிறிய பாலங்களும் கூட சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன. இரவில் கிட்டத்தட்ட எல்லாப் பாலங்களுமே விளக்குகளில் மிளிர்கின்றன. நம்ம ஊர்ப் பாலங்களை விட இலண்டன் ப்ரிட்ஜ் கண்டிப்பாகப் பிரம்மாண்டம்தான். ஆனால் நாம் எதிர் பார்க்கிற பிரம்மாண்டம் - படங்களில் பார்க்கிற பிரம்மாண்டம் அங்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இலண்டன் ப்ரிட்ஜ் போனதற்கு அதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எவ்வளவு இருந்ததோ அவ்வளவு ஆர்வம் அதன் முன் நின்று புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் இருந்தது. அதைத்தானே முகநூலில் போட்டுப் பந்தா காட்ட வேண்டும். அதுதானே இலண்டன் வந்ததற்கான அடையாளம். பேருக்கு ஓரிரு படங்களை எடுத்துக் கொண்டு விடலாம் என்று பார்த்தால் வீட்டுக்காரி விட மாட்டேன் என்று முறைக்கிறாள். அதில் இன்னொரு பிரச்சனை. எங்கு சென்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றாக நின்று ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு அவளுக்கு. அது கூட முடியாது என்றால், அப்புறம் எதற்குக் குடும்பம்?! சரியான கேள்விதானே?! ஆனால், எனக்கென்ன பயம் என்றால், 'எங்கள் குடும்பத்தைப் படமெடுத்துக் கொடுப்பீர்களா?' என்று கேட்கப் போய் அது எங்கே ஆங்கிலேய கவுரவத்தை அசிங்கப் படுத்தி விடுமோ? அவர்களுடைய கலாச்சாரத்தில் அதெல்லாம் ஏற்றுக் கொள்ளப் படுமோ? பெரும் குற்றமாகி விடுமோ என்கிற பயம். ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டாலும் அந்தத் தாங்க முடியாத குளிரிலும் ஏகப்பட்ட படங்களை எடுத்துக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கிக் கிளம்பினோம்.

போக விட்டானா அவன்?! இல்லையே. யாரவன்?

வியப்புகள் தொடரும்...

வெள்ளி, ஜூலை 20, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 8/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

சிங்கப்பூர் போலவே ட்யூப் (பாதாள இரயில்) வழித் தடங்கலுக்கு வித விதமான பெயர்களும் நிறங்களும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரை விட இரண்டு மடங்கு அதிகமான தடங்களும் பல மடங்கு அதிகமான ட்யூப்களும் இருக்கும் என நினைக்கிறேன். விலாவாரியாகப் புரிந்து கொள்ள கொசக்கொசவெனக் கோடுகள் நிறைந்த ட்யூப் மேப் இருக்கிறது (படம் கீழே). அதற்கொரு வலைத்தளமே வைத்துப் பராமரிக்கிறார்கள். அது GOOGLE  MAPS-ஐ விட நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. கிளம்பும் இடத்தையும் சேர வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு, கிளம்பும் நேரத்தைச் சொன்னால் தோராயமாகச் சென்று சேரும் நேரத்தைச் சொல்லி விடுகிறார்கள். அது பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது.

அந்த வலைத்தளம் உட்படப் பல இடங்களில் இன்னோர் ஆச்சரியத்தையும் கண்டேன். ஆங்கிலத்தின் நதி மூலமான இலண்டன் நகரிலேயே அதைக் கண்டபோதுதான் ஆச்சரியம் பீறிக் கொண்டு வந்தது. ஆங்கிலம் மட்டுமின்றிப் பத்துக்கும் மேலான பல்வேறு மொழிகளிலும் அவற்றைப் படைத்திருக்கிறார்கள். அதில் இந்திய மொழிகள் ஐந்து. உருது, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி மற்றும் தமிழ். ஐந்தையும் இந்திய மொழிகள் என்பது கூடச் சரியல்ல என நினைக்கிறேன். உருது அங்கே நிறைந்திருக்கும் பாகிஸ்தானியர்களுக்காக. வங்காளம் வங்காளதேசத்தவருக்காக. தமிழ் ஈழத் தமிழருக்காக. பஞ்சாபியும் குஜராத்தியும்தான் இந்தியருக்காக. ஐந்து இந்திய மொழிகள் இருக்கும் பட்டியலில் இந்தி இல்லாதது பெரும் ஆச்சரியம். "தேசிய மொழி தெரியாதா?" என்று இங்கே ஆவேசப் படுபவர்கள் சிங்கப்பூரையும் இலண்டனையும் பார்த்தால் நெஞ்சுவலிக்கு உள்ளாகி விடுவார்கள்.

வெள்ளைக்காரர்கள் உலகெங்கும் சென்று தம் மொழியை விட்டு விட்டு வந்தது மட்டுமில்லை. அந்நாடுகளில் இருந்து ஆட்களையும் அவர்களின் மொழிகளையும் கூடக் கொண்டு வந்து அவர்களுடைய நாட்டில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது வணங்கப் பட வேண்டியதுதான். ஒரு மொழியை அதனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தவிர வேறு யாரும் அதிகம் பயன் படுத்துவதில்லை என்கிற மாதிரியான மொழிகளையெல்லாம் உலகையே ஆண்ட அவர்கள் அவ்வளவு மதிக்கும் போது, தன் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பெரும்பாலான உலக மாந்தர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட அவர்களுடைய மொழியை நம் மண்ணையே ஆள முடியாத நாம் கொஞ்சம் மதிப்பது தப்பில்லை என்றே தோன்றுகிறது (யாரும் அவசரப் பட்டுக் கோபப் பட வேண்டாம். கூலிக்காரன், வேலைக்காரன் என்றெல்லாம் கூச்சல் போட வேண்டாம். 'கொஞ்சம்' மதிக்கலாம் என்றுதான் சொன்னேன்!).

இலண்டன் ட்யூப் மேப்
காலையில் இரயிலேறப்  போகும் முன் எடுத்துக் கொண்டு ஏறிச் செல்லும் விதமாக எல்லா இரயில் நிலையங்களிலும் இலவச நாளிதழ்கள் குவித்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் METRO என்ற நாளிதழ்தான் அதிக அளவில் எல்லோராலும் வாசிக்கப் படுவது. நாம் நம்ம ஊரில் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் நாளிதழ்களை விட அதிகப் பக்கங்கள் கொண்டது. அதில் ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால், நம்ம ஊரில் வீணாப் போன செய்திகளால் நிரப்பப் படும் பாதிக்கும் மேலான பக்கங்கள், இலவச நாளிதழில் விளம்பரங்களால் நிரப்பப் பட்டிருக்கும். அவர்களின் வணிக அமைப்பு (BUSINESS MODEL) அப்படி. செய்திகளின் மூலம் பொருட்களை விற்கும் வணிக அமைப்பு. செய்திகளையே விற்கும் அமைப்பு நம்ம ஊரில். அல்லது செய்திகளையும் பொருட்களையும் தனித்தனியாக விற்கும் அமைப்பு எனலாம். நம்ம ஊரில்  தொலைக்காட்சிகளில் செய்யப் படும் அதே வேலைதான். நமக்குப் பொழுதுபோக்கு மட்டும் முக்கியம். அவர்களுக்குச்  செய்திகளும் அதே அளவு முக்கியம். அல்லது, அதுவும் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு எனக் கொள்ளலாம்.

அங்கும் செய்தியை விலை கொடுத்துத் தெரிந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் நாளிதழ்களில் செய்திகள் அதிகமாக இருக்கின்றன. இலவசமாக வாங்கிப் படிக்கும் நாளிதழ்களில் செய்திகளை விட அதிகமாக விளம்பரங்கள் இருக்கின்றன. அன்னப்பறவைகள் நமக்கென்ன நட்டம்? வேண்டியதைப் படித்து விட்டு வேண்டாததை ஒதுக்கி விட வேண்டியதுதான். THE TIMES மற்றும் TELEGRAPH போன்ற நாளிதழ்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப் படும் வகை. இலவச நாளிதழ்களில் இன்னும் சிலவும்  இருக்கின்றன. CITY AM என்றொன்றும் உண்டு. அது இரயில் நிலையங்களில் மட்டுமின்றி அலுவலகங்களிலும் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். ஆனால் METRO  அளவுக்குப் பக்கங்கள் அதிகம் இருப்பதில்லை. METRO போலவே மாலை வீடு திரும்பும் போது இரயில் நிலையங்களில் EVENING STANDARD என்ற இலவச நாளிதழ் கிடைக்கும். பெரும்பாலும் காலையில் எடுத்துச் சென்ற METRO-வையே படித்து முடித்திருக்க மாட்டேன். அதனால் மாலை நாளிதழ் அப்படியே புத்தம் புதிதாக வீடு வந்து சேர்ந்து விடும்.

இது போன்ற வணிக அமைப்பினால் கிடைக்கும் நன்மை என்ன? இலவசமாகக் கிடைக்கிறதே என்பதற்காக எல்லோருமே அதை எடுத்துப் புரட்டுவார்கள். எப்போதாவது தனக்குப் பிடித்த மாதிரி ஏதாவது கிடைத்தால் மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளோர் கூட அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறுவார்கள். அப்படியே கொஞ்சம் குறைவான ஆர்வம் கொண்ட விஷயங்களையும் கண்ணில் பட்டால் கொஞ்சம் குறைவாக வாசிப்பார்கள். செய்திகள் வாசிப்பதால் பயன் இல்லை என்று வைத்துக் கொண்டாலும் கூட வாசிக்கும் பயக்கமாவது உயிரோடிருக்கும். ஆனால், நொடிப் பொழுதில் சும்மா புரட்டி விட்டுத் தூக்கி வீசுபவர்களுக்கும் சேர்த்து அச்சடிக்கப் படும் நாளிதழ்களின் உற்பத்திச் செலவு எவ்வளவு பெரிய இழப்பு! அதெல்லாம் யாருடைய பணம்? எல்லோருடைய பணமும் இருக்கிறது அதில். எழுத்து-படம்-இடைவெளி என்று எதுவும் விடாமல் படிப்பவரின் பணமும் இருக்கிறது. இரண்டு நிமிடங்களில் தூக்கி வீசுபவரின் பணமும் இருக்கிறது. அதில் வரும் விளம்பரப் பொருட்களை வாங்குவோர் எல்லோருடைய பணமும் இருக்கிறது.

இது போன்ற வணிக அமைப்பு நம்ம ஊர்ச் செய்தித் தாள்  நிறுவனங்களிலும் வர வாய்ப்பிருக்கிறதா? வந்தால் நல்லதா? வாய்ப்பிருக்கிறது. முதலில் பெருநகரங்களில் ஆரம்பித்து, பின்னர் சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றடையலாம். அல்லது, பெருநகரங்களிலேயே நின்றும் போகலாம். இந்தியாவில் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்வோருடைய எண்ணிக்கையும் வாழ்க்கைத் தரமும் மென்மேலும் குறையவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. வந்தால் நல்லதுதான். ஓசியில் கிடைத்தால் ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்வேன் எனும் கூட்டமும் ஓசியில் கொடுக்கும் எதையும் மதிக்க மாட்டேன் எனும் கூட்டமும் ஒன்னு கூடி வாழும் சமூகமல்லவா! வாசிக்கவும் படம் பார்க்கவும் கடையில் பொட்டலம் போடவும் அள்ளிச் செல்வோரின் புண்ணியத்தில் எவ்வளவு அடித்தாலும் பற்றாது என்றும் ஆகலாம்.

விளம்பரத்துக்கே இவ்வளவு செலவிடுதல் என்பது சமூகம் முன்னோக்கிப் போய்க் கொண்டிருப்பதன் குறியீடா அல்லது முதிர்ச்சியின்மையின் குறியீடா என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. விளம்பரச் செலவு என்பது உண்ணாமல் தின்னாமல் எல்லோரும் சேர்ந்து அண்ணாமலைக்குக் கொடுக்கும் கெட்ட பழக்கம் என்பது என் கருத்து.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேற்கு நாடுகளில் கற்பனையே செய்து பார்க்க முடியாதவை என்று ஒரு பட்டியல் வைத்திருந்தேன். அவற்றில் சில உண்மையாயின. சில பொய்த்துப் போனன. எதிர் பார்த்தது போலவே தெருக்களில் நாய்கள் இல்லவே இல்லை. ஆனால், மனிதர்கள் நிறையப் பேர் கையில் நாயைப் பிடித்துக் கொண்டு அலையத்தான் செய்கிறார்கள். எதிர் பார்த்ததைப் போலவே சாலையோரங்களில் மனிதர்கள் அசிங்கம் செய்வதைப் பார்க்கவில்லை. ஆனால், இரண்டு முறை நாய் அசிங்கம் செய்து வைத்திருந்ததைப் பார்த்தேன். இரயில் பயணம் செய்யும் நேரங்களில், நம்ம ஊரில் போலவே தண்டவாளங்களின் இரு புறமும் இருக்கும் சுவர்களில் ஏதோதோ எழுதிப் போட்டிருந்ததை நிறையக் காண முடிந்தது. ஆனாலும் கெட்ட வார்த்தைகளில் எதுவும் இருந்த மாதிரித் தெரியவில்லை. அல்லது எனக்குப் புரிகிற மாதிரி வார்த்தைகளில் இல்லையோ என்னவோ.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சீனியர் ஒருவர், அமெரிக்காவிலேயே பத்தாயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரத்தைப் போட்டுத் தாக்கினார். பேச்சுவாக்கில் வரும் புள்ளிவிபரங்கள் எல்லாமே புருடா என்று தீர்க்கமாக நம்புபவர்களில் நானும் ஒருவன் என்றாலும் அவற்றில் சில மறக்க முடியாத கருத்தெச்சங்களை விட்டுச் செல்லப் பட்டு விடுவதையும் மறுக்க முடியாது. எல்லா நாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பொதுப்புத்தி அறிந்து வைத்திருந்தது எனினும் ஈஸ்ட் க்ராய்டன் இரயில் நிலையம் முன்பு தினமும் பார்த்த வெள்ளைக்காரப் பிச்சைக்காரர் ஏதோவொரு வித வியப்பைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அது போலவே பொது இடங்களில் மனநலம் குன்றிய மனிதர்களையும் அவ்வப்போது பார்க்க முடிந்தது.

இலண்டனில் இருக்கும் பல டன்களில் விம்பிள்டனும் ஒன்று என்று தெரிய வந்ததும், அதுவும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழிகளில் ஒன்றிலேயே அது அமைந்திருப்பதையும் அறிந்ததும், முதல் நாளே ட்யூபில் விம்பிள்டன் வந்து அங்கிருந்து ட்ராமில் க்ராய்டன் வந்து பார்த்தேன். நேரம் கொஞ்சம் அதிகம் பிடித்ததால் அதன் பின்பு அந்தப் பாதையைக் கைவிட்டு விட்டேன். விம்பிள்டன் என்றால் டென்னிஸ் ஆடுகளத்துக்கெல்லாம் செல்லவில்லை. அந்த இடம் வழியாகப் பயணம் மட்டும் செய்து இன்பப் பட்டுக் கொண்டேன். கபடியும் கிரிக்கெட்டும் தவிர வேறு எந்த விளையாட்டும் தெரியாத வயதிலேயே ஸ்டெபி கிராப்  புண்ணியத்தில் தெரிந்து வைத்துக் கொண்ட இடம் விம்பிள்டன். ஏதோவொரு வெளிநாட்டில் இருக்கிறது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அது இலண்டனின் புறநகர்ப் பகுதியில் இருந்தது தெரியாது. சென்றது இலண்டன் என்றாலும் இங்கிலாந்தில் கிராமப் புறம் என்பது எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதை ஓரளவு விம்பிள்டன் பகுதியில் பார்க்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும். விம்பிள்டன் கிராமப்புறம் இல்லை; ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத புறநகர்ப் பகுதி. அதுவும் ஓர் அழகாகத்தான் இருக்கிறது.

அலுவலகத்துக்குச் சென்று வரும் நேரங்களில் தண்டவாளத்துக்கு இருபுறமும் வேடிக்கை பார்த்த வீடுகளையும் கட்டடங்களையும் தவிர வேறு ஏதும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வில்லை. குடும்பத்தோடு சென்று விட்டோம். நீண்ட காலம் இருக்க நேர்ந்தால் பிரச்சனையில்லை. ஒரு மாதத்தில் அடித்து விரட்டி விட்டால் என்ன செய்வது? ஒன்றுமே பார்க்காமல் ஊர் திரும்பிய வரலாற்றுக் குற்றத்தைப் புரிந்து விடக் கூடாது என்பதற்காக ஏதாவது ஓரிரு இடங்களாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம். இலண்டனுக்குப் போனவர்கள் பார்க்காமல் திரும்பியதே இல்லை என்கிற மாதிரியான இடங்கள் எவை என்று அலசிப் பார்த்தோம். அவற்றில் ஒன்று, இலண்டன் கண் (LONDON  EYE). விசாரித்துப் பார்த்ததில் அது வேஸ்ட் என்று கேள்விப் பட்டோம். சிங்கப்பூரிலும் அது போல ஒன்று இருக்கிறது. அதையும் நான் முதல் முறை சென்றிருந்த போது பார்க்கவில்லை. அதனால் இதையும் பார்க்கா விட்டால் தப்பில்லை என்று முடிவு செய்து கொண்டேன். "நீ விமானத்தில் இருந்து இறங்கும் போது பார்த்த காட்சியை விடப் பெரிய உலக அதிசயம் ஒன்றும் இதில் கிடைக்காது. வேண்டுமானால் அலுவலக மாடியில் இருந்து எட்டிப் பார்; அதை விட அழகான காட்சிகள் கிடைக்கும்!" என்று நண்பன் ஒருவன் அழுத்திச் சொன்னதால் இலண்டன் கண்ணை எங்கள் கண்ணுக்குக் காட்ட வேண்டியதில்லை என்று முடிவு செய்தோம்.

வியப்புகள் தொடரும்...

சனி, ஜூலை 14, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 7/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

குறுகிய காலம் வெளிநாடு செல்லும் நம்ம ஆட்கள் பெரும்பாலும் கிளம்புவதற்கு முதல் நாள் இங்கேயே முடி வெட்டிக் கொண்டுதான் கிளம்புவார்கள். திரும்ப வந்திறங்கிய முதல் நாளே போய் தன் உள்ளூர்க் கடையில் வெட்டிக் கொண்டு வருவார்கள். காரணம், அங்கே முடி வெட்டக் காசு அதிகம் ஆகும் என்று சொல்வார்கள். முடி வெட்ட ஐநூறு-ஆயிரம் என்று அதிர்ச்சி அளிக்கும் நம்பர் ஒன்றைச் சொல்வார்கள். அதனால் நானும் கிளம்பும் முன் முடி வெட்டிக் கொண்டு சென்று விட வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்கெல்லாம் எங்கே நேரம் கொடுத்தார்கள். அது மட்டுமில்லை, நாம்தான் வருடக் கணக்காக இருக்க நேர்ந்தாலும் நேரலாம் என்ற நப்பாசையில் வேறு இருந்தோமே. அதனால் அதற்கேற்றாற் போலவே யோசிக்கவும் செய்தேன் பல விசயங்களில். 'ஒவ்வொரு முறையும் ஊருக்கா வந்து செல்ல முடியும் அதற்காக? கூடுதலாக ஒருமுறை அங்கே வெட்ட வேண்டியதிருக்கும். அவ்வளவுதானே!' என்று கிளம்பி விட்டேன். போய் இறங்கிய சில நாட்களில் இருந்தே முடி வெட்டும் கடைகளைப் பார்த்தால் உள்ளே நுழைய வேண்டும் என்று ஓர் ஆசை வரும். பெரும்பாலான கடைகளில் பத்து பவுண்டு என்று எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளே அமர்ந்திருந்தவர்களும் வேறு ஆட்கள். ஒரேயொரு கடையில் இந்தியர்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும். கடையும் இந்தியருடையது. விலையும் கூடக் குறைவாக இருந்தது. ஐந்து பவுண்டு. விடுவோமா? பொறுக்கவே முடியாமல் ஒருநாள் நுழைந்தே விட்டேன்.

நம்ம ஆட்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்று இறங்கியதும் நமக்குத் தெரியப் படுத்தும் முதல் மாற்றம், அவர்களுடைய தலைமுடியிலாக இருக்கும். முகநூலிலோ (FACEBOOK) அல்லது வேறு ஏதோவொரு தளத்திலோ முற்றிலும் மாறுபட்ட தன்  முகத்தை வெளியிடுவார்கள். அது அவர்கள் விரும்பிச் செய்து கொள்வதா, இப்படி மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்வதா, முடி வெட்டும் கடைக்காரர்கள் உங்கள் முகத்துக்கு இதுதான் நன்றாக இருக்கும் என்று சிறப்பு ஆலோசனை வழங்கி வந்து சேர்வதா, அல்லது அவ்வூர்களில் முடி வெட்டினாலே அப்படித்தான் முடியுமா என்று ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இம்முறை அதற்கான விடை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தேன். அத்தோடு முகநூலில்  போட  புதியதொரு முகமும் கிடைத்தால் போனஸ் என்று காத்துக் கொண்டிருந்தேன்.

முடி வெட்டும் கடையில் மட்டும் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் காத்திருந்துதான் காரியம் ஆகும் போல. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய தொழில் நுட்பம் எப்படி இருக்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். முக்கால்வாசிக்கும் மேல் இயந்திரத்திலேயே வெட்டி விடுகிறார்கள். இறுதியில் சிறிது மட்டும் கத்தரிக்கோலால் வெட்டுகிறார்கள். வேலையும் வேகமாக முடிந்து விடுகிறது. அது ஒன்றும் பெரிய உலக வித்தை இல்லை. எளிதில் இங்கேயும் கொண்டு வந்து விடத்தக்க எளிமையான இயந்திரம்தான். அதைவிடச் சிக்கலான வித்தைகள் எல்லாம் இங்கே வந்து விட்டன. இதுவும் சீக்கிரம் வந்து விட்டால் நல்லது. இயந்திரம் மற்றும் அதன் தொழில்நுட்பம் வருவதை விடச் சிரமம் அதை இயக்கும் நுட்பத்தைக் கொண்டு வந்து இறக்குவது. கண்டிப்பாக நாட்கள் ஆகும்.

ஷார்ட்டா மீடியமா என்ற கேள்வியோடுதான் அங்கும் ஆரம்பித்தது. முடி வெட்டிக் கொள்தல் ஒரு சுகமான அனுபவம். அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக நேரம் ஆகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சிப் பட்டுக் கொள்வேன். இயந்திரத்தின் புண்ணியத்தில் கண்ணை மூடி முழிக்கும் முன் வேலை முடிந்து விட்டது. ஏதோவொரு கூடுதல் நேர்த்தி தெரிந்தது. அது இலண்டனுக்கே உரியதா அல்லது அந்தக் கடைக்கு மட்டும் உரியதா அல்லது வெறும் மனப் பிராந்தியா என்பது மேலும் சில முறை வெட்டியிருந்தால் மட்டுமே உறுதியாகச் சொல்ல முடிந்தது. நம்ம ஊரில் எப்போதாவது சில நேரங்களில் அந்தத் திருப்தி கிடைக்கும். இலண்டனில் முயன்ற ஒரே முறையும் அது கிடைத்து விட்டது பெரும் மகிழ்ச்சிதான்.

எந்த ஊராக இருந்தாலும் கண்டிப்பாகப் பேசப் பட வேண்டியவை, அந்த ஊரின் போக்குவரத்து வசதிகள். அதுவும் இலண்டன் என்றால், சொல்லவே வேண்டியதில்லை. அது ஒரு மிக முக்கியமான அம்சம் அங்கே. உலகின் சிறப்பான போக்குவரத்து வசதிகள் கொண்ட ஊர்களில் கண்டிப்பாக இலண்டனும் ஒன்று. சிங்கப்பூரிலும் அது நன்றாகவே இருந்தது. இலண்டன் சிங்கப்பூரை விடப் பெரிய ஊர். ஆயினும் அதைப் போலவே அல்லது அதை விடச் சிறப்பான போக்குவரத்து வலைப்பின்னல் கொண்டிருக்கிறது. நான் அங்கிருந்த காலத்திலேயே அங்குள்ள பத்திரிகை ஒன்றில் அது பற்றிய கட்டுரையும் வந்திருந்தது. ஒரேயொரு பிரச்சனை - மிக மிக அதிகமான கட்டணம். சிங்கப்பூரை விட ஐந்து முதல் பத்து மடங்கு கூடுதலான கட்டணம். டாக்சிகளும் அப்படியே. சிங்கப்பூரில் வாழ்பவர்களுக்கு வீடு மட்டும்தான் பெரும் செலவு. இலண்டனில் எல்லாமே அதிகம்தான். அதில் போக்குவரத்து ஒரு பெரும் பங்கைத் தின்று விடும். மாதம் சாதாரணமாக இருநூறு பவுண்டு போக்குவரத்துக்கே போய் விடுகிறது. அதுவும் ஒருவருக்கு. குடும்பம் பெரிதாக இருந்தால்? சம்பளத்தில் பாதி அதிலேயே போய் விடும். தப்பித் தவறி டாக்சியில் ஏறினால் சோலி முடிந்தது. குல நாசம்தான். ஒரு முறை ஏறி விட்டுப் பட்ட பாடு, அப்பப்பா... இரத்தக் கொதிப்பே வந்து விட்டது. எல்லா ஊரிலும் மீட்டர் ஓடத்தான் செய்யும். அதற்காக அந்த ஓட்டமா?

இலண்டனின் போக்குவரத்து வலைப்பின்னல் என்பது இரயில், ட்யூப், ட்ராம் மற்றும் பேருந்து என்று நான்கு விதமான வாகனங்களை உள்ளடக்கியது. இரயில் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதென்ன ட்யூப்? என்று கேளுங்கள். அதாகப் பட்டது, தரைக்கடியில் ஓடும் இரயிலை ட்யூப் என்கிறார்கள். சுத்தத் தமிழில் சொல்ல வேண்டும் என்றால், குழாய். தரைக்கடியில் குழாய் போல ஓடுவதால் அந்தப் பெயர். இரயில் போலத்தான் இருக்கும். ஆனால், உள்ளே கொஞ்சம் வேறுபட்ட அமைப்பு. இரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மும்மூன்று இருக்கைகள் ஒருபுறமும் இரண்டிரண்டாக ஒருபுறமும் இருக்கும். நடுவில் ஆட்கள் நடமாடலாம். நம்ம ஊரில் சில இரயில்களும் பேருந்தும் கொண்டிருக்கும் அமைப்பு. ட்யூபில் இரண்டு ஓரங்களில் மட்டும் நீளமாக இருக்கைகள். நடுவில் நிறையப் பேர் நின்று கொண்டு வருகிற மாதிரியாக வசதியாக இருக்கும். இரயிலை விட ட்யூப் அகலம் சற்றுக் குறைவாக இருக்கும். இரயில் புறநகரப் பகுதிகளுக்கும் தொலைதூர இடங்களுக்கு மட்டும் செல்கிறது. ட்யூப் இலண்டன் மாநகருக்குள் மட்டும் ஓடுகிறது. நான் இருந்த க்ராய்டன் புறநகர் என்பதால் பாதி தூரம் இரயிலில் போய் விட்டு மீதிக்கு ட்யூபில் பயணிப்பேன். இரயில் பெட்டி பெட்டியாக இருக்கும். ட்யூப் ஒரே பெட்டி போல இருக்கும் (அதுவும் பல பெட்டிகளின் கோர்வைதான் எனினும்). இரயில் மிக வேகமாகச் செல்கிறது. ட்யூபும் அப்படித்தான். தரைக்கடியில் செல்வதாலோ அடிக்கடி நிறுத்தங்கள் இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் வேகம் குறைவு போலத் தோன்றியது. இரயிலில் கழிப்பறைகள் இருக்கும். ட்யூபில் இருப்பதில்லை. தரைக்கடியில் அதெல்லாம் இருந்தால் என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா?

ட்ராம்  பற்றி ஏற்கனவே பார்த்தோம். ஊருக்குள் செல்கிற போது  ட்ராம் மெதுவாகச் செல்வது போலவே இருக்கிறது. புறநகரங்களில் சரியான விரட்டு விரட்டுகிறார்கள். அடுத்தது, பேருந்து. அது பற்றித்தான் சொல்லவே வேண்டியதில்லையே. நம்ம ஊரில் அளவிலாமல் பார்த்து அலுத்தது. ஆனால் அங்கே முழுக்க முழுக்க வால்வோ வண்டிகள் மட்டுமே ஓடுகின்றன. பேருந்தில் கையைக் காலை மிதித்துக் கொண்டு கெட்ட வார்த்தையில் திட்டிச் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சியை அங்கேயும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கும் என் குடும்பத்துக்கும். இரயில்களில், ட்யூப்களில், ட்ராம்களில் பார்த்த அளவுக்குக் கூட்டம் பேருந்துகளில் பார்க்க முடியவில்லை.

எல்லா வாகனங்களிலும் சுத்தம் சோறு போட்டுச் சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. பெரும்பாலும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை குட்டிகளோடு இருப்பவர்களுக்குக் கூடுதல் மரியாதை கொடுக்கிறார்கள். சில நேரங்களில் அது கிடைப்பதில்லை. அங்கும் நாகரிகத்தின் வரையறை மாறிக் கொண்டு வருகிறதோ என்னவோ. அங்கிருக்கும் டாக்சிகள் ஒரு தினுசான உருவ அமைப்பு கொண்டிருக்கின்றன. நம்ம ஊரில் இருக்கும் அம்பாசடர் போல பழமையான ஒரு தோற்றம். இலண்டன் முழுக்கவுமே பழைமையை நிறையப் பார்க்க முடிந்தது என்று சொன்னேன் என நினைக்கிறேன். பயணங்களின் போது அப்படிப் பார்த்த இன்னொரு பழைமை - நம்ம ஊரில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே இருந்து மறைந்து போன தொலைகாட்சி ஆண்டெனாக்கள். எல்லா வீட்டின் தலையிலுமே ஒரு ஆண்டெனா இருந்தது. இவற்றுக்கென்ன வேலை இப்போதும் இங்கே என்றுதான் கேள்வி வந்தது.

பயணச்சீட்டு நான்கு விதமான வாகனங்களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. ஐம்பது-அறுபது பவுண்டு போட்டு வாங்கும் வாரச்சீட்டு எல்லா வண்டிகளிலும் மாறி மாறி ஏறிச் சென்று கொள்ள உதவுகிறது.எல்லாமே இயந்திரத்தின் உதவியுடனேயே செய்து கொள்ளலாம். பணத்தைப் போட்டு, எது வேண்டும் என்று சொன்னால், அதையும் கொடுத்து, மிச்சச் சில்லறையையும் ஏமாற்றாமல் கொடுத்து விடுகிறது. இந்த இயந்திரம் சிங்கப்பூரில் இரயில் நிலையங்களில் மட்டும் இருக்கும். இங்கே ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இரண்டு மூன்று இயந்திரங்கள் இருக்கின்றன. பேருந்துகளில் சீட்டைக் காட்டி விட்டு ஏறிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் தினச் சீட்டு, வாரச் சீட்டு என்று மொத்த மொத்தமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பயணத்துக்கும் எடுத்துக் கொள்வது என்பது பையைக் கிழித்து விடும்.

இலண்டனின் போக்குவரத்து வசதிகள் பல நேரங்களில் ஊரையே மிகச் சிறியதாக்கிக் காட்டின. சென்னை-பெங்களூரை விடப் பெரிய ஊர். ஆனால், பயணங்களின் போது அப்படியோர் உணர்வே வரவில்லை. அதே தொலைவை நம்ம ஊரிலோ அல்லது இலண்டனிலேயே சொந்த வாகனத்திலோ கடக்க வேண்டும் என்றால் பிட்டாணி பிதுங்கியிருக்கும். இரண்டு வாரங்கள் க்ராய்டனிலும் இரண்டு வாரங்கள் ஊருக்குள்ளும் வேலை என்று சொல்லியிருந்தேன். ஊருக்குள் வேலையிருந்த இரண்டு வாரங்களும் கிராய்டனில் இருந்து பாடிங்டனில் இருந்த எங்கள் அலுவலகம் வரை சென்று திரும்புவேன். அவ்வளவு தொலைவு பயணம் செய்த களைப்பை எப்போதுமே உணர்ந்ததில்லை. பெரும்பாலும் முக்கால் மணி நேரத்தில் கடந்து விடுவேன். கிராய்டனில் இருந்து இரயிலில் விக்டோரியா ஸ்டேஷன் சென்று அங்கிருந்து ட்யூபுக்கு மாறி பாடிங்க்டன் வரை செல்வேன். பாடிங்டனில் ஏதோ வேலைகள் வேறு நடந்து கொண்டிருந்தன. அடுத்த முறை செல்லும் போது (சென்றால்!) மாறுபட்ட பாடிங்டனைப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

விக்டோரியா ஸ்டேஷன் மறக்க முடியாதது. எந்த நேரமும் ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இடம். மனிதர்கள் இங்கும் அங்கும் பாய்ந்தும் பறந்தும் கொண்டிருக்கும் காட்சி கண்கொளாதது. முதல் முறை சென்று இறங்கிய போது, 'அப்படியானால், வெள்ளைக்காரர்கள் சோம்பேறிகள் இல்லையா?!' என்று ஒரு வியப்பை உண்டு பண்ணிய இடம் அது. அது மட்டுமில்லை, விக்டோரியாவில் சென்று இறங்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் நினைவு வந்து வந்து செல்லும். இரண்டுக்கும் ஏதோவோர் ஒற்றுமை. இரண்டுமே இரயில்கள் தம் பயணத்தை முடித்துக் கொண்டு நின்று விடும் இடம் என்பதால் கூட இருக்கலாம். விக்டோரியாவில் ஒருமுறை ஆண்டன்  பாலசிங்கம் போலவே ஒருவரைப் பார்த்தேன். போய்க் கேட்டு விடலாமா என்று ஒருவேளை அவருடைய சகோதரராகக் கூட இருக்கலாம். அவரும் (பாலசிங்கம்) அங்கே வாழ்ந்தவர்தானே.

அது மட்டுமில்லை. விக்டோரியா ஸ்டேஷனிலும் சரி, விக்டோரியாவுக்கும் க்ராய்டனுக்கும் இடையிலான பயணங்களின் போதும் சரி, அடிக்கடி ஈழத் தமிழர்கள் நிறையப் பேரைக் காண முடிந்தது. மாலை  வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒருமுறை தமிழ் முகம் கொண்ட ஒரு சோடி இனிமையாக ஏதோ பேசிக் கொண்டே வந்தார்கள். அவர்கள் பேசுவது மலையாளமா தமிழா என்பது மட்டும் சந்தேகமாகவே இருந்தது. ஒட்டுக் கேட்பது கெட்ட  புத்தி என்றாலும் காதைத் தீட்டு தீட்டென்று தீட்டி அவர்கள் பேசியது தமிழ்தான் (இனிமையான ஈழத்தமிழ்) என்று புரிந்து கொண்ட பின்தான் அடங்கினேன். பின்பொரு முறை நம்ம ஆள் ஒருத்தர், ஊரில் இருக்கும் உறவினருடன் காது கிழிகிற மாதிரித் தமிழில் கத்திப் பேசிக் கொண்டு வந்தார். பேசியது உறவினருடன் என்றாலும் கேட்டது சுற்றி இருந்த எல்லோருமேதான். காது கிழிந்ததும். இடையில் எம்.ஜி.ஆர். பாட்டெல்லாம் பாடினார். அந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொண்டு விட்டார்கள் அந்த மண்ணில்.

வியப்புகள் தொடரும்...

சனி, ஜூலை 07, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 6/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

போய் இறங்கிய நாள் முதலே அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் பனிமழை (SNOW) பெய்யும் என்கிற பேச்சுகள் நிறையக் கேட்க முடிந்தது. எல்லோருமே அது பற்றி ஓர் ஆர்வமாகப் பேசிக் கொண்டார்கள். இரண்டாம் நாளோ மூன்றாம் நாளோ சாலையில் உப்பு போல ஏதோ இருந்தது. முதலில் அதுதான் முந்தைய இரவு பெய்த பனிமழையோ என்றொரு சந்தேகம். பின்னர் அது பனிமழையைச் சமாளிக்கப் போட்ட உப்பு என்று அறிந்து கொண்டேன். அதை சாலை உப்பு (ROAD SALT) அல்லது பனியகற்றும் உப்பு (DEFROSTING SALT) என்றே சொல்கிறார்கள். அடுத்து மற்றொரு மாலைப் பொழுதில் வெள்ளை வெள்ளையாய்ச் சிறிது மிக நுண்ணிய ஏதோ பொழிந்தது. இம்முறை அதுதான் பனிமழை என்று எண்ணினேன். அதற்கும் வேறு பெயர் (FLURRY) என்று சொல்லி விட்டார்கள். 'என்னடா இது கொடுமையாக இருக்கிறது, இதில் இத்தனையா?!' என்று குழப்பமும் ஆவலும் கூடிக் கொண்டே போனது.

ஒரு மாலைப் பொழுதில் சாமான்கள் வாங்கி வரலாம் என்று வீட்டை விட்டுக் கடைக்குக் கிளம்பிப் போனேன். போகும் போது வண்டிகளில் மணல் மாதிரி எதையோ கொண்டு வந்து ஆங்காங்கே கொட்டிக் கொண்டிருந்தார்கள்.  திரும்ப வரும் போது மிக அழகாக - வெண்மையாக - மென்மையாக ஏதோ பொழிவதை உணர முடிந்தது. ஐந்து நிமிடங்களில் வீடு வந்து சேரும் முன் சாலையெல்லாம் அரைகுறையாக வெள்ளை அடித்த மாதிரி அழகாகப் பனிப் பொழிவு நிகழ்ந்திருந்தது. விடிந்தால் வேலைக்குப் போக வேண்டுமே என்று சாப்பாட்டை முடித்துக் கொண்டு தூங்கி விட்டோம். நடு இரவில் எழுந்த மனைவி வெள்ளையடிக்கும் வேலை முடித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் குதித்தாள். "ஏங்க..." "ஏங்க..." என்று எழுப்பிக் காட்டினாள். அழகை அரைகுறையாக ரசித்து விட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்து விட்டேன்.

காலையில் எழுந்த பின்னும் எல்லாத்தையும் விளக்கிக் கொட்டினாள். சாலை காலையில் இன்னும் அழகாக இருந்தது. சாலை மட்டுமல்ல, கட்டடங்களும், வாகனங்களும், பூங்காக்களும் என்று எல்லாமே வெள்ளை பூத்திருந்தன. நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாமே வெள்ளை என்றால் சும்மாவா? அதுவும் வெள்ளை மனமகிழ்வூட்டும் நிறம் வேறு. தூய்மையை யாருக்குத்தான் பிடிக்காது. கயவர்களுக்கும் பிடித்த கலர் அல்லவா அது?! கொஞ்சம் அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்து படங்கள் பிடித்துக் கொண்டோம். படம் பிடிக்கிற வேலை நமக்கு அவ்வளவு சிரமமாக இருக்கிறது. 'எல்லாமே வெள்ளை என்றான பின்பு இதை ஏன் இத்தனை வளைத்து எடுக்கிறாள்?' என்ற எண்ணம் வந்து, வீட்டுக்காரியிடம் முறைப்பு வாங்க வைத்ததுதான் மிச்சம். 'அதெல்லாம் ஓர் அழகுய்யா! மங்குனி மண்டையா!' என்பதெல்லாம் எங்களுக்குப் புரியத்தான் செய்கிறது. அதுக்காக... இப்பிடியா?!!!

பனிமழை பொழிந்த மறுநாள் ஊர் முழுக்கச் செய்திகளில் கூப்பாடு. பனிமழையால் இது பாதிக்கப் பட்டது, அது பாதிக்கப் பட்டது, விபத்துகள் ஏற்பட்டன என்று பல பிரச்சனைகள். பார்ப்பதற்கு இவ்வளவு அழகாக இருப்பது இவ்வளவு பிரச்சனைகளைக் கொடுக்க முடியுமா என்று அப்போதுதான் யோசித்தேன். அதைத்தான் அந்தக் காலத்திலேயே நம்ம ஆட்கள் சொல்லி விட்டார்களே - அழகு ஆபத்து என்று. "அடப்பாவி, இந்த அழகுமா அதில் அடங்கும்?!" என்கிறீர்களா? ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டு, எல்லாத்தையும் அடக்கித்தான் சொன்னோம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள்?! அது ஒன்றும் நமக்குப் புதிதில்லையே. சின்ன வயதில் ஊரில் காசு கொடுத்து வாங்கி சர்பத் போட்ட பனிக்கட்டிகள் இன்று ஊரெல்லாம் இலவசமாக இரைந்து கிடக்கிறதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்கென்ன செய்ய முடியும்? சின்ன வயதில் ஊரில் ஓசிக்குக் கிடைத்த எத்தனையோ பொருட்கள் இப்போது காசு கொடுத்தாலும் கிடைப்பதில்லை அங்கே. அதற்கு அவர்கள் உட்கார்ந்து கவலையா பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?!

மொத்தப் பனியும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து காணாமல் போக இரண்டு-மூன்று நாட்கள் ஆனன. இது பரவாயில்லை, மற்ற பல ஐரோப்பிய நாடுகளில் இதை விடக் கொடுமையாக இருக்கும் என்று தகவல்கள் வேறு. இன்னொரு புறம், இதுவே அமெரிக்காவில் பொழிந்து மூன்று மணி நேரத்தில் பழைய மாதிரி இயல்பு நிலை திரும்பி விடும் என்கிற மாதிரியான கருத்துகள் ஒருபுறம். தாங்கச் சக்தி இருப்பவனுக்குத்தான் தாங்க முடியாத பிரச்சனைகள் வருகின்றன. இதுவே நம்ம நாட்டிலெல்லாம் ஏற்பட்டால் அவர்கள் செய்வதில் ஐந்து விழுக்காடு கூடச் சரி செய்ய மாட்டார்கள். நம்ம தலைகள் அந்த நேரம் பார்த்துச் சரியாக வெளிநாடு பயணம் போய் விடுவார்கள். வால்கள் தன் வீட்டு முன்னாலும், சரக்கு வாங்கி ஏற்றிக் கொள்ளக் காசு கொடுக்கும் பணக்கார ஆட்களின் வீடுகளின் முன்னாலும் மட்டும் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். அங்கே, தலைகள் எல்லாம், "இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம்!", "அந்த ஏற்பாடு செய்திருக்கிறோம்!" என்று அடுத்தடுத்து பயத்தில் விளக்கம் கொடுக்கிறார்கள். வால்கள் எல்லாம், தாங்க முடியாத குளிரிலும் ஊரெல்லாம் உப்பைக் கொட்டி, மாங்கு மாங்கென்று என்னென்னவோ செய்து, நிலைமையச் சமாளிக்கப் போராடுகிறார்கள். ஆனால் அதற்கே அந்த ஊர்க்காரர்கள் கொதிக்கிறார்கள். "வரி மட்டும் பிடுங்குகிறீர்கள்! இப்போது என்ன பிடுங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்?" என்று வாங்கு வாங்கென்று வாங்குகிறார்கள். அதுதான் அவர்களுடைய சனநாயகம் எவ்வளவு முன்னே இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துவது.

மகளும் நானும்!
குறிஞ்சி பூத்த நேரம் கொடைக்கானல் போகிற மாதிரி, சித்திரைத் திருவிழா அன்று மதுரையில் இருப்பது மாதிரி, விநாயகர் சதுர்த்திக்கு முமையில் இருப்பது மாதிரி, காளி பூசை நடக்கிற நேரத்தில் கல்கத்தாவில் இருப்பது மாதிரி, இருந்த ஒரு மாதத்தில் இரண்டு-மூன்று முறை பனிமழை பார்க்கிற மாதிரி இலண்டன் போயிருந்தது, ஒரு வித யோகம் என்று சொல்ல வேண்டும். தனியாகப் போயிருந்தால் இதெல்லாம் ஒரு மேட்டராகவே இருந்திராது. நாலரை வயது மகளோடு போயிருந்ததால்தான் இதெல்லாம் இவ்வளவு நேரம் பேசுகிற அளவு பெரிதாக இருக்கிறது. மற்றபடி, அதைப் பார்த்து விட்டதால் அன்று முதல் நம்ம வாழ்க்கையில் ஒன்றும் எல்லாமே மாறி விடப் போவதில்லை. முதல் முறை இரயில் பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை விமானம் பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை கடல் பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை மலை பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை அருவி பார்த்த போது நடக்காத மாற்றம், இனி எது பார்த்தாலும் நடக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. அவ்வளவே!

பனிமழை என்பது ஒருபுறம் இருக்க, குளிர் தினமும் கொன்று தின்றது. அதுவும் முதல் சில நாட்கள் இருந்த அளவு பின்னர் தெரியவில்லை. எல்லாமே அங்கே குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கத்தோடே அமைக்கப் பட்டிருக்கின்றன என்பது பற்றி ஏற்கனவே பேசினோமே. அதில் இரண்டு முக்கியமான விஷயங்களை விட்டு விட்டேன். நம்ம ஊரில் நீரில் கழுவிக் கொள்வதை (எதை என்று கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்!!) அங்கே காகிதத்தில் துடைக்கிறார்கள். அதற்கான அடிப்படைக் காரணம் - நீர் அங்கே பனிக்கட்டியாகவே இருக்கும். நம்ம ஊரில் கண்மாயில் இறங்கிக் கழுவிக் கொண்டு திரும்புவது போல் அங்கே முடியாது. கண்மாயில் கூட பனிக்கட்டிதான் இருக்கும். அதனால் முடிந்த அளவு நீரை நம்பிப் பிழைப்பு நடத்துவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

அடுத்தது - குழாயில் வரும் நீர் கூடப் பனிக்கட்டியாகி விடும் என்பதால் நீரில் காரீயமோ வேறு ஏதோவொரு வேதிப் பொருளோ கலப்பதாகக் கேள்வி. அதனால், "வெந்நீராகவே வருவதைப் பிடித்துக் குடிக்காதீர்கள்; குடிநீர்க்குழாயில் வருவதை மட்டும் பிடித்துக் குடியுங்கள்!" என்று சொன்னார்கள். இது தெரியாமல் முதற் சில நாட்கள் நேரடியாக வெந்நீர்க் குழாயில் இருந்து வருவதைப் பிடித்தே குடித்து விட்டேன். காப்பி போடும் போது கூட வெந்நீர்க் குழாயில் வரும் நீரைப் பிடித்துப் போட்டால் நேரம் மிச்சம் என்று நம் இந்தியப் புத்திசாலித்தனத்தைப் பயன் படுத்தியது முட்டாள்தனம் என்று முடிவானது.

முதற் சில நாட்களுக்குப் பின் உடம்பெல்லாம் ஒருவித அரிப்பு. வெந்நீர் குடித்ததன் விளைவோ என்று விசாரித்தால், அதெல்லாம் முதன் முதலில் குளிர்ப் பிரதேசங்களுக்கு வரும் நம் போன்றோருக்கு ஜகஜம் என்றார்கள். என்னவென்று கேட்டால், சிலர் குளிர் காரணம் என்றார்கள்; சிலர் அந்தக் காரீயம் கலந்த தண்ணீரின் காரியம் என்றார்கள். கடைகளில் அதற்கென்றே ஒரு க்ரீம் கூடக் கிடைக்கும் என்று கேள்விப் பட்டேன்.

சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல் கம்பங்களின் கீழ்ப் பகுதியில் ஒரு பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினால் உடனடியாக நாம் சாலையைக் கடப்பதற்கு வசதியாக வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு விழுந்து, நடந்து செல்வோருக்குப் பச்சை விளக்கு எரிகிறது. இந்த மாற்றம் உடனடியாகவே நடக்கிறது. இந்த வசதியை சிங்கப்பூரிலும் பார்த்தேன். ஆனால், சிங்கப்பூரில் உடனடியாக சிக்னல் விழுவதில்லை. 'அழுத்தினால் விழும், இல்லாவிட்டால் விழாமலே போகலாம்' என்பதே சிங்கப்பூரின் கணக்கு. இலண்டன் கணக்கு - 'அழுத்தியவுடன் விழும்!'. இந்தியாவில் எங்கும் இது போன்ற வசதி பார்த்ததாக நினைவில்லை. கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இயல்பாகவே வாகனங்கள் நிறுத்தப் படும் இடைவெளியில் நடந்து செல்வோருக்கும் வாய்ப்பளிக்கப் படும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் அதில் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லையே என்பதே அவர்களின் கணக்கு. அதனாலேயே அப்படியொரு வசதி வைத்திருக்கிறார்கள். இந்தியாவில்தான் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்றே ஒன்று இல்லையே. அதனால் அது தேவையும் இல்லை.

அது போலவே இன்னொன்றும் பார்க்க முடிந்தது. நடப்போர் கடக்கும் வரிக்கோடுகள் (ZEBRA CROSSING) இருக்கும் இடங்கள் அனைத்திலும், அருகில் ஆள் நிற்பதைக் கண்டாலே வண்டியை நிறுத்தி விடுகிறார்கள். நடந்து கடப்பவர்கள், அவ்விடங்களில் நின்று கவனிக்கவே வேண்டியதில்லை. கண்ணை மூடிக் கொண்டு உள்ளே நுழையலாம். கோடுகளைக் கண்டு விட்டாலே மெதுவாகி நின்று செல்ல வேண்டியது வாகன ஓட்டிகளின் கடமை. அதுவும் நடந்து கடப்பவர்கள் எது பற்றியும் கவலைப் படாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அன்ன நடை போட்டு ஆற அமர மெதுவாகக் கடப்பதைக் கண்டால் சீரணிக்கவே முடிவதில்லை. அப்படி ஒரு காட்சியை நம்ம ஊரில் கற்பனை பண்ணிப் பாருங்கள். திட்டியே கொன்று விடுவார்கள். நாளைக்குச் சாகிற மாதிரி இருக்கும் பெரியவர்களைக் கூட, வயதுக்குக் கூட மரியாதை கொடாமல், அவர்களுடைய அம்மாவைப் பற்றியெல்லாம் திட்டி அவமானப் படுத்தி விடுவார்கள். இதையெல்லாம் பார்த்தால் அங்கே நடப்போர்தான் ராஜா போலத் தெரிகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அங்கு போய் நம்ம ஊரில் போல ஓட்டினால், பெரும்பாலும் முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே கம்பி எண்ணப் போக வேண்டியதாகி விடும். அது போன்ற அமைப்பிலேயே பழக்கப் பட்டு விடுபவர்கள், நம்ம ஊரில் வந்து வரிக் கோடுகள் இருக்கும் இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு கடந்தால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள். முக்கியமாக அங்கிருந்து வரும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இது பற்றியெல்லாம் நன்கு சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்பட வேண்டும். இல்லையேல், பெரும் ஆபத்துகளுக்கு உள்ளாக நேரலாம்.

இப்படி நடந்து செல்வோர் அவ்வளவு மதிக்கப் படுவதற்கு ஒரு காரணம் - அவர்களின் எண்ணிக்கைக் குறைவு. எப்போதாவது ஒருமுறைதான் அப்படி யாராவது குறுக்கே வருவார் என்றால், நடந்து கடப்போருக்காக நிறுத்தி வேடிக்கை பார்த்து வழியனுப்பி வைத்து விட்டுப் போவது பிரச்சனையில்லை. நம்ம ஊரில் அப்படி ஒவ்வொருவரையும் நிறுத்தி நிதானமாக மரியாதை செலுத்தி அனுப்பிக் கொண்டிருந்தால் வாகனங்களில் அலுவலகம் செல்பவர்கள் மாலை ஆறு மணிக்குத்தான் வேலைக்குப் போய்ச் சேர முடியும். இரயில்களில் எல்லாம் உச்ச நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நகரத்தின் மையப் பகுதியில் பல இடங்களில் நெருக்கடி அதிகமாக இருப்பது போலவே தெரிகிறது. அதைப் பற்றி அங்கிருப்பவரே ஒருவர் சொன்னார். "இங்கே சில இடங்களில் மட்டும்தான் கூட்டமாக இருக்கும். இந்தியாவில் போல வீதிகளில் எல்லாம் கூட்டம் கூட்டமாக இராது. எங்கள் வீதிகளில் பெரும்பாலும் ஈ காக்கா கூடக் காண முடியாது!" என்றார். சில நேரங்களில் கூட்டத்தையும் பல நேரங்களில் அமைதியையும் விரும்பும் எனக்குக் கூட அவர்களின் வீதிகளில் இருந்த அமைதி அச்சமூட்டுவதாகவே இருந்தது. இதுக்கு சலசலப்பே பல மடங்கு பரவாயில்லை என்றுஎண்ண வைத்து விட்டார்கள். :)

வியப்புகள் தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...