இடுகைகள்

May, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதிக் கட்சி

சாதியின் பெயரிலும் நடத்தலாம் மதத்தின் பெயரிலும் நடத்தலாம் இனத்தின் - மொழியின் பெயரிலும் நடத்தலாம் சித்தாந்தங்களின் பெயரிலும் நடத்தலாம் ஒரு மண்ணும் இல்லாமல் வெளிப்படையாகவே வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடத்தலாம்!

மழைக் காதல்

மழைக்கும்
காதலுக்குமான
உறவுதான் என்ன? ஜில்லென்ற சூழலும்
அது தரும்
ஜில்லென்ற உணர்வும்
அது போன்றதேயான
ஜில்லென்ற நினைவுகளைக்
கிளர்வது தவிர்த்து
வேறேதும் இருக்கிறதா?! மழையில் நனைந்த
காதலர் மட்டுமா
மழை கண்டு
கிளர்ச்சியுறுகின்றனர்?! காதலில் நனைந்த
எல்லோருந்தானே
மழை காணும் போதெல்லாம்
மீண்டும் ஒருமுறை
நனைந்து கொண்டாடிக் கொள்கின்றனர்! மழை
மண் வாசத்தை மட்டுமா
கிளப்புகிறது? கூடவே
அது போலவே
நெடுங்காலமாய்
அடங்கிக் கிடக்கும்
மன வாசங்களையும் அல்லவா
கிளப்பி விடுகிறது! இந்தக் கிளப்பி விடுதலில்தான்
காதலரெல்லோரும்
மழை மீது
காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?! இங்கிருந்த நீர்தான்
இடையில் இல்லாமல் போயிருந்தது
அதை மட்டுமா இப்போது
மாரியாய் மாற்றி வந்து பொழிவிக்கிறது? அது போலவே
கூடவே இருந்து
பின்னர்
இல்லாமல் போனவற்றையுந்தானே
நினைவுகளாய் மாற்றி வந்து பொழிவிக்கிறது! இந்தப் பொழிவித்தலில்தான்
காதலரெல்லோரும்
மழை மீது
காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?! காய்ந்து கிடந்தவர்
நனைந்து களிக்கையில்
காய்ச்சல்தானே வரும்! சிலருக்கோ
நனைந்த களிப்பினும் பெருங்களிப்பு
அதையடுத்து வரும்
காய்ச்சல் தரும் களிப்பு! ஓய்வில்லாத உலகியல் ஓட்டம்
உயிர் வைத…

சதைப்பற்று

காமம் காய்ந்து மட்கும் சதை
காதல் எளிதில் மட்காத எலும்பு
சதையற்ற எலும்பு சாவுக்குப் பின்தான் சாத்தியம்
எலும்பற்ற சதை எதைப் பற்றி நிற்கும்?
எலும்புக்கு மேலாக இருந்துவிட்டுத்தான் போகட்டுமே
அதுவே அதனை ஒருபோதும் எலும்புக்கு மேலானதாக்கி விடாதே!

நெனப்புதான்...

ஒவ்வொரு டிரிங் டிரிங்கும்
உன் அழைப்பாகத்தான் இருக்கும் என்று  எண்ணி எண்ணி ஏமாந்தபின் எண்ணிக் கொள்கிறேன்...
என்னை ஏமாற்றிய இந்த அழைப்புகள் ஒவ்வொன்றின் போதும் நீயும் என்னை  அழைக்க எத்தனித்து எத்தனித்து மனதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று!

வெறுப்பு விளையாட்டு

இருந்ததே ஐவர்தாம் அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வந்தது?
நீங்கள் நால்வரும் நிம்மதியாக இருந்த என்னை ஒன்று கூடி வெறுத்திராவிட்டால் ஒதுக்கியிராவிட்டால்...
நான் ஏன் உங்களுக்குள் சண்டை மூட்டியிருக்கப் போகிறேன்!
முதன்முதலில் இருப்பதிலேயே பலவீனமான ஐந்தாமவரை அடித்துத் துரத்தத்தான் உணர்வாளர்கள் நாம் நால்வரும் ஒன்றிணைந்தோம் கூட்டு முயற்சியில் அதை வெற்றிகரமாகச் செய்தும் முடித்தோம்
அடுத்ததாக நால்வர்தாம் நாம் அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வந்தது?
அப்போது எளிதில் வீழ்த்த முடிந்த நான்காமவரைத்தான் நாம் எல்லோரும் இணைந்து அழித்தோம்!
ஆயிரம் இருந்தாலும் நாம் மூவரும் ஒருதாய் மக்கள் இல்லையா?
முடிவில் மூவர்தானே இருக்கிறோம்? அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வருகிறது?
வராமல் எப்படி இருக்கும்?

தேர்தல்

ஒவ்வொரு தேர்தலும் 
நம் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் 
அம்பலப்படுத்தியதைவிட
நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையுந்தான் 
அதிகமாக அம்பலப்படுத்தி விடுகிறது

நாட்டு நலனோ 
வீட்டு நலனோ
பாதிக் கடவுளாகிவிட்ட யாரோ ஒரு தலைவர் மீதான 
நம் தகுதிக்கு மிஞ்சிய விருப்பும் வெறுப்பும் 
நம் இழிவான பல நியாய உணர்ச்சிகளுக்கு
வெளிச்சம் பாய்ச்சி விடுகின்றன

அரசியல் பேசி 
அடைந்த உறவுகள் எத்தனை
இழந்த உறவுகள் எத்தனை 
கூட்டிக் கழித்துப் பார்த்தால் 
எல்லோருக்குமே 
இழப்புக் கணக்காகத்தான் இருக்கிறது

இழிவான மனிதர்களை 
இனம் கண்டு கொண்டு விட்டதாக
வெளியில்  
நன்றி கூறி நகர்ந்தாலும் கூட
அந்த ஒரேயோர் உரையாடலை மட்டும் தவிர்த்திருந்தால் 
அன்று தவிர்த்து
என்றுமே வெளிவந்திட வாய்ப்பிராத
அவர்களின் இழிவான முகத்துக்கு 
மேடை அமைத்துக் கொடுத்த
இழிவில் இருந்து தப்பியிருக்கலாமோ என்று
ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் வரும்
உணர்ச்சிகள் வடிந்த ஒரு பின்னிரவில்
தோன்றித்தானே தொலைக்கிறது!

கண்

உனக்கும் பிடித்தது எனக்கும் பிடித்தது
நீயும் ஆசைப்பட்டாய் நானும் ஆசைப்பட்டேன்
நீயும் ஏங்கினாய் நானும் ஏங்கினேன்
நீ அதைத் திருடினாய் அவன் அதை இழந்தான்
நான் திருடவில்லை பார்த்துப் பொறாமை மட்டுந்தான் பட்டேன் அத்தோடு அவன் அழிந்தான்

சக பயணி

தொடங்கிய இடத்திலேயே
உடன் தொடங்கி
முடிகிற இடத்திலேயே
உடன் முடிகிற
பயணத் திட்டத்தோடு வருகிற
சக பயணி என்று
எவருக்கும்
எவரும்
இருந்துவிட முடியாத பயணம் இது

உடன் தொடங்கி
பாதியில் பிரிந்து செல்கிறவர்களின்
பாதை மாற்றிக் கொள்ள வேண்டியவர்களின்
இடங்களை நிரப்ப
இடையில் இணைந்து
இறுதிவரை வரப்போகிறவர்கள் இருக்கிறார்கள்

தொடக்கத்திலும் இல்லாது
இறுதியிலும் இல்லாது
இடையிடையில் இணைந்து
இங்கொன்றும் அங்கொன்றுமாக உருவாகும்
இடைவெளிகளை நிரப்பி
உடனடியாகவும்
ஓரளவு உடன் பயணித்தும்
இடையிடையிலேயே பிரிகிறவர்கள்
எல்லோருமே
நிரப்ப முடியாத
நிரந்தர இடைவெளிகள்
உருவாக்கிச் செல்வதில்லை

அப்படிப் பிரிந்தும் பிரியாத
சக பயணியர் எல்லோருமே
கற்றுக் கொடுத்துவிட்டுப் போகும்
பாடம் ஒன்றுதான்

மற்றவர்களின் பயணத்தில்
குறைந்தபட்சம்
உற்றவர்களின் பயணத்தில்
அப்படியான ஒரு சக பயணியாக
இருந்து பிரிவது எப்படி!

கலாச்சார வியப்புகள் - மும்பை

கணக்கு

முழுதும்
மூழ்கி விட்ட பின்பும் கூட
வீணாகிடும் என்று
புரியவரும் வேளையில்
இழந்தவை இழந்தவையாக இருக்கட்டும்
இருப்பவற்றைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று
விரயத்தைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு
விபரத்தோடு
விரைந்து வெளியேறி விடுகிறார்கள்
வியாபாரிகளும்
அவர்களின் பிள்ளைகளும்

ஏற்கனவே பலமுறை
இழந்த அனுபவங்கள் இருந்தாலும் கூட
மீண்டும் அப்படியே வீணாகிடுமோ என்று
விளைச்சல் பற்றிய
வினாக் கூட எழுப்பாமல்
விதையை
வேறொரு நல்ல பருவத்துக்காகக்
காத்து வைத்துக் கொள்ளலாம் என்ற
கணக்குக் கூடப் போடாமல்
களத்தில் இறங்கி
விதைத்துத் தொலைத்து விடுகிறார்கள்
விவசாயிகளும்
அவர்களின் பிள்ளைகளும்

வியாபாரிகளான பின்பும் கூட...