திங்கள், பிப்ரவரி 28, 2011

கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!

இவ்வளவு சூப்பரான ஒரு ஆட்டத்தைப் பார்த்து விட்டு (டை ஆன இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம்), அதைப் பற்றியே கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருப்பது என்பது இயல்பானதே. குறைந்த பட்சம் அடுத்த ஆட்டம் பார்க்கும் வரையாவது இது நீடிக்கும். கிரிக்கெட் என்பதே அதுதானே?! ஒரு நாள் முழுக்கப் பார்ப்பதில் வீணாக்குவது; அதன் பின்னர் பல நாட்களை அதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவதில் வீணாக்குவது. 

ஒரே ஆட்டத்தில் ஒரே நாளில் 676 ஓட்டங்கள் அடிப்பதைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்த போதும், தொலை நோக்கில் அதுதான் இந்த விளையாட்டைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆட்களை ஈர்க்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்த விளையாட்டையும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் T20 வந்த பிறகு இன்னும் கூடுதலாகி விட்டது. எல்லா நாடுகளிலுமே பந்து வீச்சாளர்கள் ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் என்னும் படிவம் உண்மையான கிரிக்கெட்டை - அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொன்று கொண்டிருக்கிறது என்பதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தேன். இன்று, புதிதாக ஒரு படிவம் வந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு படிவங்களையுமே கொன்று கொண்டிருக்கிறது. இது விளையாட்டுக்கு நல்லதா? இல்லை, நல்லதில்லை - டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் பார்ப்போரின் எண்ணிக்கைக் குறைவை வைத்துப் பார்த்தால் விளையாட்டுக்கு அது நல்லதில்லை. நமக்கு நல்லதா? ஆம். நல்லதே - டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதில் வீணாக்கிய நம் நேரம் மிச்சமாவதை வைத்துப் பார்த்தால் நமக்கு அது நல்லதே.

சரி, இன்றைய ஆட்டத்துக்கு வருவோம். இன்று நான் கண்ட மிகப் பெரும் பிரச்சனை பிட்ச். அது எப்போதுமே இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பிரச்சனையாகத்தான் இருந்திருக்கிறது. நல்ல வேளையாக, இந்த ஆட்டம் டை ஆனதால் அது பற்றிப் பேசலாம். இல்லாவிட்டால், சாக்குச் சொல்வதாக என்னைத் திட்டித் தீர்ப்பார்கள் (நாம் தோற்றிருந்தால்) அல்லது வென்ற அணியின் திறமையைக் கொச்சைப் படுத்துவதாகத் திட்டியிருப்பார்கள் (நாம் வென்றிருந்தால்).

பிட்ச் நிலவரம் அல்லது டாஸ் தோற்பது காரணமாகப் பல நேரங்களில் நல்ல அணிகள் அவர்களை விட ஒப்பேறாத அணிகளிடம் தோற்பதைக் கண்டிருக்கிறேன், முக்கியமாகத் துணைக் கண்ட மைதானங்களில். சில நேரங்களில், துணைக் கண்ட மைதானங்களில் பகல்-இரவு ஆட்டங்களையே தடை செய்ய வேண்டுமோ என நினைப்பேன். மற்ற பகுதிகளை விட, இங்குதான் பிட்சும் டாசும் ஆடுபவர்களை விட முக்கியப் பங்காற்றுகின்றன. ஆட்டத்தின் முடிவை பிட்சா டாசோ முடிவு செய்வதாக இருந்தால் திறமைக்கு அங்கே என்ன மரியாதை?

பிட்ச்களுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க தரம் என்று ஒன்று வரையறுக்கப் பட வேண்டும். கொஞ்ச காலம் முன், நம் காலத்தின் முக்கியமான புத்திசாலிக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி, செயற்கை விரிப்புகள் பிட்ச்களாக உபயோகப் படுத்தப் பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் மற்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால் அது ஒரு நல்ல சிந்தனையாகப் படுகிறது. இரு அணிகளுமே ஒரே பிட்சில் விளையாடுமே. அதன் பின்பும் ஈரப்பதம் போன்ற அம்சங்கள் அவற்றின் வேலையைச் செய்யத்தான் செய்யும்.

கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதற்கு இருக்கிற நாடுகளிலேயே விளங்காத நாடு இலங்கைதான். நல்ல தெம்பு இருக்கிற - சராசரிக்கும் கீழான ஆட்டத் திறமை கொண்ட ஒருவர் நல்ல பவுலிங் அணிகளுக்கு எதிராக மிக எளிதாக இரட்டை சதங்களும் முச்சதங்களும் அடிப்பார். இந்தப் பிரச்சனை T20-இல் இல்லாத ஒன்று. T20 பிரபலம் அடைய வேண்டியதற்கு இன்னொரு காரணம்!

சிறந்த அணி என்றால் அது எந்தச் சூழ்நிலையிலும் வெல்ல வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அந்த வரையறைப் படி பார்த்தால், சிறந்த அணி என்று ஒன்று இரவே இராது. ஆஸ்திரேலிய அணி வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது கூட இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. அதன் பொருள், நாம் அவர்களை விட சிறந்த அணி என்றாகி விடுமா? சுத்தப் பேத்தல்! நடத்துபவர்கள் எல்லா அணிகளுக்குமே சமமான வாய்ப்புகளையும் சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 'சிறந்த அணி' என்றால் என்ன என்கிற வரையறைகள் செய்ய வேண்டியது அரைவேக்காட்டுப் பார்வையாளர்களின் வேலை.

சொந்த மண்ணில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று விட்டு வெளியூரில் போய் இன்னிங்க்ஸ் + நூற்றுக் கணக்கான ஓட்டங்களில் தோல்வி அடையும்போது எனக்கு மண்டை காயும். அதற்குக் காரணம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற மாதிரி நாம் காலம் காலமாகத் தயாரித்துக் கொண்டிருக்கும் சொத்தைப் பிட்ச்களே. வேகப் பந்து வீச்சுக்கேற்ற பிட்ச்களுக்கு நாம் பழக்கப் படும் வரை அத்தகைய பிட்ச்களில் சர்வதேசப் போட்டிகள் ஆடுவது தப்பில்லை. ஏனென்றால், அதுதான் நம் பலம். ஆனால், ஆரம்பத்தில், உள்ளூர்ப் போட்டிகளுக்காவது புற்கள் நிறைந்த வேகப் பந்துவீச்சுக்கேற்ற பிட்ச்களைத் தயாரிக்க வேண்டும். வெளியில் செல்லும்போது சந்திக்கும் கடினமான சவால்களை எளிதாகச் சமாளிக்க அது உதவும்.

இத்தோடு சேர்த்து, எனக்கு எப்போதுமே சௌகர்யம் இல்லாத ஆட்டத்தின் மற்ற பல அம்சங்கள் பற்றியும் நினைவுக்கு வருகிறது. அதில் ஒன்று கேப்டனுக்குத் தரப் படும் முக்கியத்துவம். ஒரு முக்கியமான தொடரையோ இரண்டு-மூன்று தொடர்களை வரிசையாகவோ நாம் சொதப்பி விட்டால், உடனடியாகக் கேப்டனை வீட்டுக்கனுப்பி விட்டு, அதற்கு் கொஞ்சமும் தகுதியில்லாத வேறொருவரைக் கூப்பிட்டு அந்தப் பதவியைக் கொடுத்து விடுவோம். அதில் அர்த்தமேதும் இருக்கிறதா உண்மையிலேயே?

அணியை வழி நடத்தச் சிறந்த ஆள் இவர்தான் என்று ஒருவரை அடையாளம் கண்டு விட்டால், அதைவிடச் சிறந்த ஒருவரை அடையாளம் காணும் வரை அவரை மாற்றக் கூடாது. இல்லையேல், நாம் சரியான ஆளை அடையாளம் காணவில்லை அல்லது அதை எப்படிச் செய்வதென்று தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் நாம் கேப்டனை மாற்றிக் கொண்டே இருந்தோம் என நினைக்கிறேன். அந்த வகையில், நாம் பாகிஸ்தானை விடப் பரவாயில்லை. மகிழ்ச்சிப் படுகிற மாதிரி ஒரு விஷயம்!

உலகக் கோப்பையை வென்று கொடுத்தார் என்றபோதும், கவாஸ்கர் இருந்த அணியில் கபில்தேவ் கேப்டனாக இருந்ததை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதுபோலவே, கபில்தேவ் இருந்தபோது அசாருதீன் கேப்டனாக இருந்ததும் அசாருதீன் காலத்தில் டெண்டுல்கர் இருந்ததும் அப்படிப் பட்ட மற்றும் பல நியமிப்புகளும் எனக்கு உடன்பாடில்லாதவை. நான் எப்போதுமே நினைத்தது என்னவென்றால், அந்த வரிசை இப்படி இருந்திருக்க வேண்டும் - கவாஸ்கர் > கபில்தேவ் > சாஸ்திரி > அசாருதீன் > கும்ப்ளே > டெண்டுல்கர்.

கவாஸ்கர் நிறைய ஆட்டங்கள் வென்றதில்லை என்பதற்காக அவருடைய தலைமைப் பண்புகளையோ விளையாட்டில் அவருக்கிருக்கும் ஞானம் பற்றியோ கேள்வி எழுப்ப முடியாது. ஒரு அணி அந்த அணியின் அளவுக்கு பலமாக இருக்குமே ஒழிய கேப்டனின் அளவுக்கு அல்ல. அதனால்தான் அது ஒரு அணி விளையாட்டாக இருக்கிறது. கேப்டனின் திறமைக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால், நாம் நம்ப வைக்கப் பட்ட அளவுக்கு அல்ல.

ரிக்கி பாண்டிங்கை ஒரு கேப்டனாகப் பார்ப்பதைக் காணவே கடுப்படிக்கும். அவருக்கு இருக்கும் தலைமைப் பண்பின் அளவு சைபர் (அல்லது அதற்கும் கீழ்). விளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உணர்வு என்பது சற்றும் இல்லாத பீத்தக் கேஸ். அதை உணர்வதற்கு உலகுக்குப் பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகியிருக்கிறது. ஷேன் வார்ன் தான் ஸ்டீவ் வாவுக்குப் பிறகு சரியான ஆள் என்பது என் எண்ணம். ஆனால், அவருக்கே அவருக்கென்று பல சர்ச்சைகள் இருந்தன சமாளிக்க. இருப்பதிலேயே பலவீனமான அணியை ஐ.பி.எல்-1 இல் கோப்பை வெல்ல வைத்து கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் அவருடைய திறமையை உலகுக்குக் காட்டி விட்டார்.

அடுத்து, இந்தியக் கிரிக்கெட்டில் எனக்குப் பிடிக்காத இன்னொன்று - நம் உள்நாட்டுப் போட்டிகளின் படிவம். நாம் அதிகம் வெல்ல ஆரம்பித்து விட்டதால் யாரும் அது பற்றி அதிகம் பேசுவதில்லை இப்போது. திரும்பவும் நாம் தோற்க ஆரம்பிக்கும்போது மீண்டும் விவாதத்துக்கு வரும். வென்றாலும் தோற்றாலும் - நம் பிரச்சனைகள் நம் பிரச்சனைகளே, பலங்கள் பலங்களே, தலைவர்கள் தலைவர்களே. நல்லது கேட்டது பற்றி அலசி ஆயும்போது என்ன சாதித்தோம் என்பது கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். ஆனால், காலமெலாம் உலகை ஆள விரும்பினால், முடிவுகளை மட்டுமல்லாது மற்ற அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ரஞ்சிக் கோப்பை நம் திறமைகளைச் சீரழித்து விட்டது என்று உறுதியாக நம்புகிறேன். கோவாவுக்கும் பாண்டிச்சேரிக்கும் எதிராக முச்சதங்கள் அடிப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஆஸ்திரேலியாவில் போல ஐந்து அல்லது ஆறு அணிகள் தான் இருக்க வேண்டும். அதுதான் முதல்தரக் கிரிக்கெட்டில் ஆடப் படும் ஆட்டங்களின் தரத்தை மேம்படுத்தும். அதுவே தேசிய அணிக்கும் மேம்பட்ட வழிகளில் நிறையப் பங்களிக்கும்.

அடுத்து, எல்.பி.டபுள்யூ. ஏகப் பட்ட சிக்கல்களை உண்டு பண்ணும் - கிரிக்கெட்டில் உள்ள மிகப் பெரிய குழப்பம். ஒருவர் உண்மையிலேயே அவுட்டா இல்லையா என்பதைத் துல்லியமாகச் சொல்ல துளியும் பிசிறில்லாத ஒரு முறை இல்லை இப்போதைக்கு. இது தவறான முடிவுகளுக்கு அளவிலாத இடம் அளிப்பது மட்டுமல்லாமல் நடுவர்களை மித மிஞ்சிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறியுள்ள காலத்தில் அதை முடிந்த அளவு சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நிறையப் பேர் நிறையச் சப்தம் எழுப்புகிறார்கள். எனக்கு அது புரியே மாட்டேன் என்கிறது. மனித அம்சத்தை விளையாட்டை விட்டு நீக்க விரும்பவில்லையாம். சரி. ஒத்துக் கொள்கிறோம். ஆனால், மேம்பட்ட முடிவுகள் எடுக்கவும் தவறுகளைத் தவிர்க்கவும் அது பயன்படுமானால் அதில் என்ன தப்பிருக்கிறது?

இந்த உலக கோப்பையில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் நடுவர் முடிவை மறுபரிசீலிக்கும் முறை (UDRS) நன்றாக உள்ளது. ஆனால், அதுவே மிகச் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. அது நடுவர்களை மட்டம் தட்டி விடுகிறது என்கிறார்கள். அதுவும் சரிதான். அப்படியானால், பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன? முன்பு, கொஞ்ச காலம், எல்.பி.டபுல்யூவுக்கும் நடுவர்கள் மூன்றாவது நடுவரை நாடலாம் என்றிருந்தது. அதில் என்ன கோளாறு கண்டார்கள் என்று தெரியவில்லை. ஏதோவொரு காரணத்துக்காக அதுவும் நீக்கப் பட்டு விட்டது.

அடுத்து, அணிகளைக் குழுக்களாகப் பிரித்து ஏகப்பட்ட சோப்ளாங்கி நாடுகளைக் கொண்டு வந்து போட்டு (விளையாட்டைப் பிரபலம் ஆக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு) உலகக் கோப்பையின் படிவமே அர்த்தமற்றதாக இருக்கிறது பெரும்பாலும். கபில்தேவின் 175-ம் விவியன் ரிச்சர்ட்சின் 189-ம், இன்று உலகக் கோப்பைக்கு வந்து கிரிக்கெட் பழகும் அணிகளுக்கு எதிராக செத்த பிட்ச்களில் அடிக்கப் படும் பெரும் எண்ணிக்கைகளோடு ஒப்பிடவே முடியாதவை. அடுத்த உலகக் கோப்பையில் இருந்தாவது கொஞ்சம் புத்திசாலித்தனம் தலையெடுத்தால் நல்லது.

92-இல் ஆடிய படிவம்தான் சிறந்தது என்பேன். எல்லா அணிகளும் (ஒன்பது மட்டுமே, அதுவும் ஜிம்பாப்வே தவிர்த்து எட்டாக இருந்திருக்க வேண்டும்) எல்லா அணிகளுக்கும் எதிராக முதல் சுற்றில் ஆடி, பின்னர் நான்கு சிறந்த அணிகள் நாக்-அவுட்டில் சந்திப்பது. அதிர்ஷ்டம் மிகச் சிறிய பங்கே ஆற்றியது (அது வேறொரு விதத்தில் தென் ஆப்பிரிக்காவை வெளியில் அனுப்பி வேலையைக் காண்பித்தது, கோப்பையை வெல்லும் என்று எதிர் பார்த்த ஆஸ்திரேலியா அரையிறுதியிலேயே வெளியேறியது, எப்போது எப்படி ஆடுவார்கள் என்று எதிர் பார்க்கவே முடியாத - ஆனாலும் திறமைப் படி பார்த்தால் எந்த நேரத்திலும் தலை சிறந்த அணிகளில் ஒன்றாக வரும் பாகிஸ்தான் கோப்பையை வென்றது என்ற போதும்).

நான்கு குழுக்களும் காலிருதியும் கொண்டு இருந்த 2007 தான் ஆகப் படு மோசம். இந்தியாவின் இடத்தில் வங்க தேசம் இருந்தது கேலிக்கூத்து. வங்க தேசம் அளவுக்கு இந்தியா அன்றைய ஆட்டத்தில் நன்றாக ஆடவில்லை, அதனால் வங்க தேசம் உள்ளே சென்றது என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். மோதிய இருபத்தி இரண்டு முறைகளில் இருபது முறை தோற்ற அணி தகுதி பெறுவதும் வென்ற அணி வெளியில் அனுப்பப் படுவதும் படிவத்தில் உள்ள கோளாறு என்றே சொல்வேன்.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு மோசமான நாள் இருக்கும். அத்தகைய மோசமான நாட்கள் உலகக் கோப்பை போன்ற ஒரு மிகப் பெரிய நிகழ்வில் அணிகளின் மொத்த விதியையும் தீர்மானிக்கக் கூடாது. 83-இலும் கூட மேற்கிந்தியத் தீவுகளின் அது போன்ற ஒரு மோசமான நாள்தான் நாம் கோப்பை வெல்ல உதவியது. அது முடிந்தவுடன் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா வந்த தொடரில் அது நிரூபிக்கப் பட்டது. வந்து நம்மை நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து விட்டார்கள்! மூன்று ஆட்டங்கள் கொண்ட இறுதிப் போட்டிகள் இதற்குத் தீர்வாகலாம். ஆனால், அது விளையாட்டில் இருக்கும் பரபரப்பையும் வேடிக்கைத் தன்மையையும் குறைத்து விடலாம்.

அது போன்ற வியப்புகளும் அதிர்ச்சிகளும் தான் இந்த விளையாட்டை மென்மேலும் சுவாரசியமானதாக ஆக்குகின்றன என்பதை நானும் உணர்கிறேன். ஆனால், கொல்லப்படுவது திறமையும் திறமைசாலிகளின் தன்னம்பிக்கையும். உங்கள் அபிப்ராயம் நீங்கள் இந்த விளையாட்டில் இருந்து என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து மாறலாம் - வேடிக்கையா விதிமுறைகளா என்பதைப் பொருத்து. விதி முறைகள் விளையாட்டிலும் முக்கியம் என நினைக்கிறேன். ஏனென்றால், அதில் அளவிலாத பணமும் மக்களின் நேரமும் இருக்கிறது. அது மட்டுமில்லை, விளையாட்டுகள் வேறு பட்ட நாட்டினருக்கும் பண்பாட்டவருக்கும் மத்தியில் நாம் நினைப்பதை விடப் பெரும் பங்காற்ற வேண்டியவை. அதிலிருந்தே தெரிய வேண்டும் - நடத்துபவர்கள் இவ்வாட்டங்களை எவ்வளவு முறையாக நடத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்பது.

வியாழன், பிப்ரவரி 24, 2011

கீதாவுபதேசம்

கீதையைப்
படிக்க மட்டுமே செய்கிற பலர் நினைக்கிறார்கள்
கடமையைச் செய்து
பலனை எதிர் பாராமல் போவது
பைத்தியக்காரத்தனம் என்று

அதெல்லாம் படிக்காமலேயே
அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர்
அவர்கள்தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அதனால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்களால்தான் சோம்பேறிகளும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நிரம்ப விவரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்

கடமையை என்னவென்று கூடப் புரிய முயலாமல்
பலனை அடைவதற்கான மற்ற எல்லா ஏற்பாடுகளையும்
சிறப்பாகச் செய்து கொண்டு
முன்னேறிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
ஏமாந்து கொண்டிருப்பவர்கள்
தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்

ஏற்பாடுகள் மட்டுமே வாழ்வித்து விடா
என்பதை உணரும் போது
கீதை புரியும்
ஆனால் வாழ்க்கை முடிந்திருக்கும்

பலனை எதிர்பாராத பைத்தியக்காரருக்கு
எதிரே பார்த்திராத பலன் வந்து சேரும்போது
கீதை புரியும்
அத்தோடு வாழ்க்கை நிறைவடையும்!

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

கிரிக்கெட் - ஒரு காதற் தோல்வி!

அடுத்த சில நிமிடங்களில், பத்தாவது உலகக் கோப்பையின் முதல்ப் பந்து வீசப்படப் போகிறது. ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக நீண்ட காலத்துக்குப் பின் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்திருக்கிறேன். நான் இதற்கு முன் கடைசியாகப் பார்த்தது ஐ.பி.எல்-1. ஆரம்பம் முதல் கடைசி வரை! வீட்டில் என்னைத் தனியாக விட்டு விட்டு, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என் மனைவி ஊருக்குப் போயிராவிட்டால் அதுவும் நடந்திராது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, எனக்கும் இந்த விளையாட்டுக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஒன்று விழும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். இன்று அது எதார்த்தமாகி இருக்கிறது. சும்மா - அப்படியே என்ன நடக்கிறதென்று பார்க்கலாமென்று ஈ.எஸ்.பி.என். பக்கம் வந்தேன். என் பால்ய காலத்தில் உயிருக்கும் மேலாக நேசித்த இந்த விளையாட்டுடனான என் உறவைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறேனா?

விளம்பர இடைவேளையின் போது கூட யாராவது சேனலை மாற்றினால் கிறுக்குப் பிடிப்பது போல் உணர்ந்த காலமொன்று உண்டு. பல சோலி பார்த்தலிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. இப்போது உணர்ந்திருப்பது என்னவென்றால், இது போன்றவைகளை எழுதுவதற்குப் பொருத்தமான நேரம் கிரிக்கெட் போட்டி நடக்கும் நேரம்தான். நேரமும் வீணாவதில்லை; மிகப் பிடித்த ஒரு விளையாட்டைப் பிரிந்திருக்கும் சமரச உணர்வும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு செய்தது போல், ஓர் ஒருநாள் போட்டியில் போடப்படும் எல்லா 600+ பந்துகளையும் பார்க்க வேண்டிய கட்டாயமும் இல்லை. விளையாட்டையும் மிஸ் பண்ணாமல் அந்த நேரத்தில் வேறொரு முக்கியமான வேலையையும் செய்ய முடியும். நல்லாருக்குல்ல?!

1987 என்று நினைக்கிறேன். நான் பள்ளி செல்லும் சிறுவனாக இருக்கும் போது, கிரிக்கெட் என்ற விளையாட்டு எங்கள் கிராமத்துக்குள் / நகரத்துக்குள் (இப்பவும் அதை என்னவென்று சொல்வதென்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை!) நுழைந்தது. ஒரு கோயிலுக்குள் இரண்டு மூன்று கூடைப் பந்தாட்ட மைதான அளவில் இருக்கும் இடத்தில் என்னைவிடப் பெரியவர்களான இளைஞர்கள் பலர் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். பின்னாளில் எங்களைத் தேர்வுகளில் தோல்வியுறவும் விலை மதிப்பற்ற எங்கள் வேலை நேரத்தை அளவிலாமல் வீணடிக்கவும் போகிறது இந்த விளையாட்டு என்பதை உணராமல் என் வயது சேக்காளிகள் எல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு அந்தப் புதிய விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.

ஏன் 87? 83 ஆக இல்லாமல்… 83 தான் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியான மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பையைக் கைப்பற்றிய வருடம் - அதுவும் நாம் கொஞ்சம் கூட எதிர் பார்த்திராத காலத்தில். அதுதான் அந்த விளையாட்டை நாடெங்கும் பரப்பியது. பம்பாய் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து எங்கள் சிறு நகரங்களுக்கு வந்து சேர நான்கு வருடங்கள் ஆயிற்று. எங்கள் ஊரில் இருந்து பெரு நகரங்களுக்குப் படிக்கச் சென்ற பெரிய பையன்கள் வார இறுதியில் ஊருக்கு வரும்போது கொண்டு வந்த விளையாட்டு.

அவர்கள் ஆரம்பித்த போது, ரப்பர் பந்தோடும் உள்ளூர் ஆசாரிகள் செய்த மரக்கட்டை மட்டையோடும் ஆரம்பித்தார்கள். டென்னிஸ் பந்துகள் கூடப் பார்த்ததில்லை நாங்கள் அப்போது. மற்ற எந்தத் துறையிலும் கண்டிராத மாதிரியான வேகமான வளர்ச்சியும் மாற்றமும் இந்த விளையாட்டில் காண முடிந்தது. ரப்பர் பந்தில் ஆரம்பித்து, அடுத்து ரப்பர் கார்க் (அதற்குப் பின் அதை நான் எங்குமே பார்த்ததில்லை) என்றொரு விதத்துக்கு மாறி, பின்பு கார்க் பந்துகளுக்கு மாறி, கடைசியில் சிவப்பு நிற லெதர் பந்துகளுக்கு மாறி விட்டார்கள். இது எல்லாமே மிகக் குறுகிய கால இடைவெளியில் நடந்து முடிந்தது. இன்னும் வெள்ளை லெதர் பந்துகள் அங்கு வந்து விட்டனவா என்று தெரியவில்லை. வந்திருக்க வேண்டும்!

எதிரே பாராத நேரத்தில் உலகக் கோப்பையை வாங்கிய இந்தியா, அடுத்த உலகக் கோப்பையின் போது வெற்றி பெற வாய்ப்புள்ள நாடாக எதிர் பார்க்கப் பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் அப்படி எதிர் பார்க்கப் பட்ட நாடுகள் என நினைக்கிறேன். அதுவும் இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்ததால் கூடுதல் எதிர் பார்ப்பு. அப்போதுதான் முதல் முறையாக இந்த மாபெரும் திருவிழா அந்த விளையாட்டின் பிறப்பிடமான - இப்போது செத்துக் கொண்டிருக்கிற - இங்கிலாந்துக்கு வெளியில் வந்திருந்தது. இறுதியில் எதிர் பார்ப்புகள் விண்ணை முட்டிக் கொண்டிருந்த போது, அரை இறுதியில் தோற்று வெளியேறினோம்.

எதிர் பார்த்திருந்த போது அரையிறுதியில் தோற்றதற்கு நாம் அதிகம் வருந்தியிருக்க வேண்டியதில்லை; ஏனென்றால் எதிரே பாராத போது (இருக்கிற சோப்ளாங்கி அணிகளில் நாமும் ஒன்று அப்போது) வென்றவர்கள் அல்லவா நாம்?! கண்டிப்பாக இருந்த அணிகளிலேயே சிறந்த அணி அல்ல நம்முடையது; ஆனாலும் வென்றோம். அதன் பிறகு என்ன நடந்தது? அந்த விளையாட்டை ஆடிய மிகப் பெரிய நாட்டில் பட்டி தொட்டிகள் எல்லாம் அது சனநாயகப் படுத்தப் பட்டது. போகிற போக்கில், அது நம்முடைய மற்ற எல்லா விளையாட்டுக்களையும் அழித்தும் ஒழித்தது. இன்று, அது ஒரு பெரும் கிறுக்காகவும் வியாபார வாய்ப்பாகவும் மாறியிருக்கிறது இங்கு. அது எங்கள் மதம் (மனிதர்க்குப் பிடிக்கும் மதமா, யானைக்குப் பிடிக்கும் மதமா, எந்த மதம் என்று தெரியவில்லை) என்கிறார்கள் சிலர். மதங்களோடு விளையாடும் நமக்கு ஒரு விளையாட்டு மதமாகத் தெரிவதில் எந்த வியப்பும் இல்லை. மதத்தை விட ஒரு விளையாட்டு நமக்கு பெரிதாகப் படுவது நம் தலைவர்களுக்குத்தான் புரிபடவில்லை என நினைக்கிறேன்.

சரி. எங்கள் ஊர்க் கோயிலுக்குப் போவோம் திரும்பி. எல்லோருமே இடது புறம் தான் நன்றாக ஆடுவர். வலது புறம் ஒரு சில ஓட்டங்கள் கிடைத்தாலே ஆச்சர்யம். சுற்றுச் சுவர்தான் எல்லைக் கோடு. ஆனால், சுவருக்கு வெளியே அடித்தால் அடித்தவர் ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். பௌல்ட், கேட்ச், ரன்-அவுட், ஹிட்-அவுட் போல இது இன்னொரு விதமான அவுட். அதை ஈடு கட்ட, ரப்பர் பந்தில் ஆடிய ஆட்டங்களில் எல்.பி.டபுள்யூ கிடையாது. பின்னாளில் கார்க் பந்துகள் வந்தபோது தான் அதுவும் நுழைந்தது.

மைதானத்தில் எத்தனையோ இடைஞ்சல்கள் இருந்தன - மரங்கள், செடிகள், தூண்கள், மற்ற பல அமைப்புகள் மற்றும் கோயிலே கூட ஒரு பெரும் இடைஞ்சல்தான். அதில் பெரிய சுவாரசியம் மிட்-ஆபில் இருந்த கிணறு. மட்டைகள், பந்துகள், குச்சிகளோடு (பெயில்ஸ் கிடையாது அப்போது) சேர்த்து அவர்கள் கையில் எப்போதுமே ஒரு வாளியும் (நீளமான கயறு கட்டிய வாளி) இருக்கும். பந்து கிணற்றுக்குள் விழும் போதெல்லாம் எடுக்க. கிட்டத் தட்ட அடிக்கப் பட்ட நான்குகளின் அளவுக்கு கிணற்றில் விழுதல்களும் இருந்தன. நீர் இல்லாத காலங்களில் என்னைப் போன்ற சிறுவர்களும் (தைரியமும் சாகச உணர்வும் உள்ள சிறுவர்கள் மட்டுமே, நான் அல்ல) வாளியில் வைத்து அனுப்பப் படுவார்கள், பந்தை எடுப்பதற்கு. குறைவான சாகச உணர்வு கொண்ட என் போன்றோர் சுற்றுச் சுவருக்கு வெளியில் செல்லும் பந்தை மட்டுமே எடுக்கப் பயன் படுத்தப் பட்டார்கள். அந்தக் கோயில் ஒரு புறம் ஊராலும் மற்ற மூன்று புறமும் காடுகளாலும் மரம் செடி கொடிகளாலும் சூழப் பட்ட ஒரு தீப கற்பம்.

பின்பு, அதைப் பார்த்து அப்படியே நாங்களும் விளையாட ஆரம்பித்தோம். வெகு காலமாக நாங்களே செய்து கொண்ட மட்டைகளையும் ரப்பர் பந்துகளையும் கடந்து நாங்கள் போகவேயில்லை. கையில் கிடைக்கும் ஏதோவொரு மரக்கட்டையை வைத்து நாங்களே மட்டை செய்து கொள்வோம். அந்த நேரத்தில் அதுதான் கையில் காசில்லாமல் விளையாட்டைத் தொடர ஒரே வழியாக இருந்தது. சில நேரங்களில், உள்ளூர் ஆசாரிகளின் உதவியோடும் மட்டைகள் செய்து கொண்டோம். ஆசாரிகளின் பையன்களே (எங்கள் அணியில் அவர்களும் சிலர் இருந்தார்கள்) செய்து கொண்டு வரும்போது மட்டைகளின் தரம் மிகவும் நன்றாக இருக்கும். அவர்களுக்குத் தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருந்தன - கிரிக்கெட் மட்டைகளுக்கு எந்த மரம் ஒத்து வரும் என்கிற நுணுக்கங்கள்!

92-இல் அடுத்த உலகக் கோப்பை ஆரம்பித்தபோது, நான் அந்த விளையாட்டின் மீது பைத்தியம் போன்று காதலில் விழுந்திருந்தேன். அதற்கு சற்று முன்தான் ஆஸ்திரேலியா நம்மை அடித்துக் கொன்றிருந்ததால் (பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் உலகக் கோப்பைக்கு முந்தைய பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் மும்முனைத் தொடர்) நாம் இம்முறை வெல்லப் போவதில்லை என்பது தெரியும். ஆனால், அந்த உலகக் கோப்பை எங்களோடு விளையாடவும் விளையாட்டைப் பார்க்கவும் இன்னும் நிறையப் பேரைக் கொண்டு வந்தது. அப்போது, நாங்களே ஒரு தனி அணி அமைத்து அதில் நானும் இடையிடையில் சில முறை கேப்டன் ஆகி விட்டேன்.

அணியை மிகக் கட்டுக் கோப்பாக நிர்வகிக்கத் தொடங்கி விட்டோம். அணிக்கு ஒரு தனி நோட்டுப் போட்டு ஒவ்வொரு போட்டிக்குப் பின்பும் புள்ளி விபரங்களை எழுதி வைக்கத் தொடங்கினேன். தொலைக் காட்சித் திரைகளில் காணும் அத்தனை விதமான தகவல்களும் எங்களிடமும் இருந்தன. வரைபடங்கள் தவிர்த்து! இப்போது போல், அப்போது ஒரு லேப்டாப்பும் எக்செலும் இருந்திருந்தால் அதுவும் செய்திருப்பேன். அதிகமான பேட்டிங் சராசரி கொண்டிருப்பவர் சீக்கிரம் பேட்டிங் செய்யலாம்; குறைவான பவுலிங் சராசரி கொண்டிருப்பவர் சீக்கிரம் பவுலிங் செய்யலாம். ஆனால், நல்ல மட்டையாளர்கள் எல்லோருமே நல்ல பந்து வீச்சாளர்களாகவும் ஒன்றில் சரியில்லாதவர் இரண்டிலுமே சரியில்லாதவராகவும் தான் பெரும்பாலும் இருந்தோம். இதுவா அதுவா என்று தேர்ந்தெடுப்பது எல்லாம் சிறிது காலம் போன பின்பு நிகழும் வளர்ச்சிகள் என நினைக்கிறேன்.

எனக்குக் கிடைத்த மரியாதையெல்லாம் விளையாட்டைப் பற்றி எனக்கிருந்த அறிவுக்காகவும் சராசரிகள் கணக்கிடுவதற்கான சூத்திரங்கள் தெரிந்திருந்தமைக்காகவுமே ஒழிய என் விளையாட்டுத் திறனுக்காக அல்ல. நீண்ட நேரம் களத்தில் நின்றிருக்கிறேன். ஆனால் எப்போதுமே பெரிதாக எதுவும் அடித்ததில்லை. கிட்டத் தட்ட எல்லைக் கோட்டுக்கருகில் இருந்து ஓடி வருவேன். ஆனால் ஒரு போதும் நான் வேகப் பந்து வீசியதில்லை. ஒருவர் வேகப் பந்து வீச்சாளரா சுழற்ப்பந்து வீச்சாளரா என்பது பந்தின் வேகத்தைக் கொண்டு அல்லது அது எவ்வளவு சுழல்கிறது என்பதைக் கொண்டு அளவிடப் படுவதில்லை. அதற்கான ஒரே அளவுகோல் எவ்வளவு தூரம் ஓடி வந்து போடுகிறோம் என்பது மட்டுமே. அதன் படி பார்த்தால், நான் போட்டதுதான் அதி வேகப் பந்து வீச்சு. சில எட்டுகள் மட்டும் வைத்து வீசினால், சுழற்பந்து வீச்சாளர். என்னை விட வேகமாக வீசியபோதும் - அவர்கள் பந்து ஒருபோதும் சுழன்றதில்லை என்றபோதும் - எங்கள் அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததாகவே கணக்கு. களத்தில் ஜாண்டி ரோட்ஸ் போல விழுவேன். ஆனால் ஒருபோதும் பந்தைப் பிடித்ததில்லை. இத்தனைக்கும் பின், நான் துவக்க ஆட்டக்காரராகவும் துவக்கப் பந்து வீச்சாளராகவும் அணியின் சிறந்த கீப்பராகவும் (பந்து வீச்சாளர்கள் கீப்பராக இருக்க எந்தத் தடையும் இல்லை!) இருந்து சாதித்து விட்டேன்.

எங்கள் அணியில் சில மிகச் சிறந்த ஆட்டக்காரர்களும் இருந்தனர். ஒருவன் கபில்தேவ் மாதிரியே ஆடுவான். அவன் என்னோடு பந்து வீச்சைத் துவங்குவான் (அவன் பந்து வீசும் விதம் கபில்தேவுடையதைப் போலவே இருக்கும்); அடியும் விட்டு விளாசுவான். அவன் மட்டையோடு உள்ளே வந்தால், நீண்ட நேரம் இருக்க மாட்டான். அப்படி இருந்தால், அன்று நாங்கள் கண்டிப்பாக வெல்வோம். அவன் எப்போதும் துவக்க ஆட்டக்காரனாக வருவதை விரும்பியதில்லை. ஒன்று, என்னைப் போன்ற மற்ற பையன்களை மகிழ்ச்சிப் படுத்திப் பார்க்கிற முதிர்ச்சி பெற்றிருந்தான் அல்லது அப்போது கபில்தேவ் செய்தது போலவே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளே வருவதை விரும்பினான். எப்படியோ, அந்த அரைகுறைத் திறமையை வைத்துக் கொண்டு என் ஆசைப்படி துவக்க ஆட்டக்காரனாகக் களமிறங்க உதவியது அது எனக்கு.

இம்ரான் கான் போல ஆட விரும்பிய இன்னொருவனும் இருந்தான் எங்கள் அணியில். அவனும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே கில்லாடி. இவர்கள் இருவரைத் தவிர வேறு நல்ல ஆட்டக்காரர்கள் யாரும் எங்களிடம் இருக்க வில்லை. ஒரு கபில்தேவும் ஒரு இம்ரான் கானும் இருந்தும் கூட, எங்கள் ஊரில் எங்கள் அணியை ஜிம்பாப்வே அணி என்றுதான் அழைப்பார்கள். ஏனென்றால், நாங்கள் இந்த இருவரை மட்டுமே சார்ந்திருந்தோம். ஒன்றில் வென்று பத்தில் தோற்போம். பல நேரங்களில், பதினொரு பேர் ஏற்பாடு செய்வதே பெரிய சவாலாக இருக்கும். எங்கள் மூவரைத் தவிர எங்கள் தெருவில் வேறு யாருக்கும் கிரிக்கெட்டில் அவ்வளவு கிறுக்கு கிடையாது. அப்போதெல்லாம் ஊக்கப்படுத்துதல் - வீக்கப்படுத்துதல் போன்ற நுட்பங்கள் தெரியாது எங்களுக்கு. தெரிந்திருந்தாலும் அவ்வளவு எளிதாக நாங்கள் விரும்பியதைச் சாதித்திருக்க முடியுமா தெரியவில்லை.

என் நண்பர்களெல்லாம் செய்தித் தாட்களில் வரும் சினிமாப் பட விளம்பரங்களை வெட்டி மின் கம்பங்களில் ஒட்டுவார்கள். அந்த நேரத்தில், நான் அப்படி வரும் கிரிக்கெட் செய்திகளையும் படங்களையும் வெட்டி அறிவிப்புப் பலகை போன்ற ஒன்று ஏற்பாடு செய்திருந்தேன். கிட்டத்தட்ட வாராவாரம், அப்போதைய ஆட்டக்காரர்கள் மற்றும் எல்லாக் காலத்தையும் சேர்ந்த ஆட்டக்காரர்கள் அனைவரிலிருந்தும் ஒரு கனவு அணியையும் இன்னொரு துணைக் கனவு அணியையும் பட்டியலிட்டு ஓட்டுவேன். உலக அணியும் உண்டு; இந்திய அணியும் உண்டு! எல்லாக் காலத்துக்குமான பட்டியல் அவ்வளவு அதிகமாக மாறாது.

அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகள், செய்தித் தாளைக் கையில் எடுத்தால் நேராகக் கடைசிப் பக்கத்துக்குத்தான் செல்வேன். கிரிக்கெட் செய்தி வாசிக்க. நாள் முழுக்க கிரிக்கெட் பார்ப்பதிலேயே கழியும். இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளுமோ வேறு ஏதோ இரு அணிகளுமோ மோதினாலும் கூடப் பார்ப்பேன். ஐ.சி.சி.யின் அதிகார பூர்வப் புள்ளி விபரங்களுக்குப் போட்டியாக நான் ஒரு புள்ளிவிபரம் வைத்திருப்பேன். எது பற்றிக் கேட்டாலும் விரல் நுனியில் தகவல் இருக்கும். ஒரு காலத்தில், என் வாழ்க்கையின் ஒரே நோக்கம் கிரிக்கெட் பார்த்தல், கிரிக்கெட் சாப்பிடுதல், கிரிக்கெட் தூங்குதல் என்றிருந்தது. உண்மையிலேயே உயிரினும் மேலானது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய செய்திகள் சூடு பிடித்தபோது, மொத்த தேசமும்  "இது எனக்குத் தெரியும்; நான் சந்தேகித்தேன்; இது ஒருநாள் வெளிவரும் என்று எதிர் பார்த்தேன்" என்றெல்லாம் சொல்லி அத்தோடு கிரிக்கெட் பார்ப்பதை - பேசுவதை நிறுத்தியது. ஆட்டத்தின் ஓர் உண்மையான ஆதரவாளனாக, அத்தனை கெட்ட பெயருக்குப் பின்பும் நான் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து பார்த்தேன் - பேசினேன். பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை ஆட்டத்தில் (சயீத் அன்வர் 196 அடித்த ஆட்டம்) அஜய் ஜடேஜா வெளியேறிய விதம் எனக்குச் சந்தேகம் அளித்தது. ஸ்கொயர் லெக்கில் நின்ற பீல்டரிடம் ஏற்கனவே ஒரு பந்து அதே போலத் தூக்கிக் கொடுத்து, அதை அவன் விட்டு, மீண்டும் அதே மாதிரி அலேக்காகத் தூக்கிக் கொடுத்தபோது ஆட்டத்தை லயித்துப் பார்க்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் அந்தச் சந்தேகம் வந்திருக்கும். 

எல்லாப் பிரச்சனைகளுக்கும் பின்பும் அதுதான் எனக்கு மிகவும் பிடித்த ஆட்டமாக இருந்தது. பெங்களூர் வந்தபோதும் நான் அந்த விளையாட்டுக்கு இன்னும் அருகில் வந்து விட்டது போல் உணர்ந்தேன். சின்னசாமி அரங்கத்தில் நேரில் போய்ப் பார்க்கலாம் என்றொரு நினைப்பு. பார்த்த வேலையின் மீது நான் காதலில் விழுந்தபோது அது எல்லாமே அமுங்கிப் போயிற்று. ஒரு நேரத்தில் வேலை எல்லாவற்றுக்கும் மேலானதாக மாறியது. எதன் மீது (அல்லது 'எவர் மீது') காதலில் விழுந்தாலும் மற்ற எல்லாமே மனசை விட்டு அழிந்து விடுவதுதானே இயற்கை?!

வேலைக்குச் செல்வோரும் சரி, மாணவர்களும் சரி, இந்த விளையாட்டின் மீதான கிறுக்கு காரணமாக அளவிலாத இழப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்தேன். சம்பந்தப் பட்ட தனி மனிதருக்கும் சரி, அவர்கள் கொடுக்கும் நேரத்துக்குப் பதிலாக அவர்களுக்கு அள்ளி அள்ளிச் சம்பளம் கொடுக்கும் (நாம் செய்கிற வேலைக்கு நமக்குக் கிடைக்கும் சம்பளம் நிரம்ப அதிகம் என்று நான் இன்னமும் நினைக்கிறேன்!) நிறுவனங்களுக்கும் சரி, அவர்களுடைய நல்லதுக்கு இது கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டியது. ஒரு காலத்தில் இது என் வாழ்க்கையில் நடக்கவே முடியாத மாற்றம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மனதை மாற்ற நான் எடுத்துக் கொண்ட நேரம் சில நிமிடங்களே.

இப்போது சந்திக்கும் பெரும்பாலான பள்ளி நண்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கத் தவறுவதில்லை - "ஏய், இன்னமும் தனியா நோட்டுப் போட்டு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்கள் எழுதி வைக்கும் வேலையைச் செய்துக்கிட்டு இருக்கியா?". அது ஒரு பழைய காதல்த் தோல்வியைப் பற்றிப் பேசுவது போல இருக்கும். அப்படியே சிரித்து விட்டுப் போய் விடுவேன். பழசை மறப்பது அவ்வளவு கடினமா? பழைய உறவுகளைத் துண்டித்துக் கொள்வது அவ்வளவு பெரிய சிரமமா? எனக்கு அப்படித் தோன்றவில்லை! உங்களுக்கு?

சனி, பிப்ரவரி 19, 2011

நாகலாபுரம் - என் மால்குடி!

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. சொந்த ஊர் என்றால் என் பூர்வீகக் கிராமம் அல்ல. என் இளமைக் காலத்தின் பெரும்பான்மையான பகுதியைச் செலவிட்ட என் அம்மாவின் ஊர். உண்மையான சொந்த ஊரில் வளராத பெரும்பாலான மனிதர்களுக்குச் சொந்த ஊர் என்றாலே அப்படிப் பட்ட ஓர் ஊர்தான் நினைவுக்கு வருகிறது. தந்தை – தாத்தன் காலத்துப் பரம்பரை மண் எது என்று யோசித்தெல்லாம் அவர்கள் யாரும் சொல்வதில்லை. அப்படிப் பட்ட அனைவருமே, தந்தையுடனோ தாத்தாவுடனோ உடன் பிறந்த ஒரு பிடிவாதப் பேர்வழி நினைவு படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய, தன் இளமைக் காலத்தின் அதிகப் பகுதியைச் செலவிடும் ஊரைத்தான் சொந்த ஊர் என்று சொல்கிறோம் அல்லது சொல்ல விரும்புகிறோம்.

அப்படிப் பெரும்பாலானவர்களுக்கு அமைகிற ஊர் அம்மாவின் ஊர் அல்லது அம்மாவின் அம்மாவுடைய ஊர். நமக்கு நேர்ந்ததே அம்மாவுக்கும் நேர்ந்திருக்குமல்லவா?! சிலருக்கு குடும்பத்தோடு பஞ்சம் பிழைக்கப் போன ஊராக இருக்கும் அது. இதில் அரசுப் பணி காரணமாக அடிக்கடி ஊரை மாற்றும் பெற்றோருடைய பிள்ளைகளின் சொந்த ஊர்களும் அடக்கம். அப்படித்தான் நிறையப் பேர் சம்பந்தமே இல்லாமல் சென்னை – பெங்களூர் போன்ற ஊர்களைக் கூடத் தன் சொந்த ஊர் என்று கூச்சமில்லாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா கை ஓங்கிய வீட்டில் மட்டும்தான் பிள்ளைகள் அம்மா ஊர் மீது காதல் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. அம்மாவின் வீடு அப்பா வீட்டை விட வசதியானவர்களாகவோ அம்மாவின் ஊர் அப்பாவின் ஊரை விடப் பெரியதாகவோ இருந்தால் கூட இதெல்லாம் நேரலாம்.

அம்மாவின் கையும் ஓங்கியதில்லை; அவர்களுடைய வீட்டின் கையும் ஓங்கியதில்லை; ஆனால் எனக்கு அம்மாவின் ஊர்தான் அதிகப் படியான சொந்த ஊர் ஆகிப் போனது. காரணம், அம்மாவின் ஊர் அப்பாவினுடையதை விடப் பெரிது. அதனாலும் வேறு சில காரணங்களாலும் அங்கு போய்ப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. வாழ்வை மாற்றிய சில முடிவுகள் என்று ஒவ்வொருவர் வாழ்விலும் சில இருக்கும். எனக்கு அப்படி ஒரு முடிவு அது. நீண்ட நாட்களாகத் தாத்தாவின் தம்பி (சின்னத்தாத்தா) எதிர்த்ததை மீறி எடுத்த முடிவு. முடிவு என்கிற சொல் கொஞ்சம் இந்த இடத்தில் இடி இடியென இடிக்கிறது. புதிய தொடக்கத்தை அல்லவா கொடுத்தது அந்த முடிவு?! வேறு நல்ல சொல் இல்லையா என் இனிய மொழியில்? சரி, தீர்மானம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த ஊர் நாகலாபுரம். அம்மா ஊரும் அப்பா ஊரும் அருகருகில் கிடைக்கப் பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன். அப்பா ஊருக்குப் பெயர் பூதலப்புரம். முதல் ஏழு வருடங்கள் பூதலப்புரத்திலும் அடுத்த எட்டு வருடங்கள் நாகலாபுரத்திலும் வாழ்ந்தேன். உண்மையாகவே வாழ்ந்தேன். அருகருகில் அமையப் பெற்ற பாவத்துக்காக முதல் ஏழு வருடங்கள் அடிக்கடி நாகலாபுரத்துக்கும் அடுத்த சில வருடங்கள் அடிக்கடி பூதலப்புரத்துக்கும் போய் வந்து போய் வந்து போய் வந்து கொண்டிருந்தேன். எனவே இரண்டு ஊர்கள் மீதுமே ஒரு பற்று உண்டு. பிறந்ததும் நாகலாபுரம்தான். அளவிலும் சரி, தரத்திலும் சரி, அதிகமாக வாழ்ந்ததும் நாகலாபுரத்தில்தான். முதல் ஏழு வருடங்களில் இருந்ததைவிட அடுத்த எட்டு வருடங்களில் கூடுதல் முதிர்ச்சி இருந்ததால் கூடுதலான நினைவுகளும் உண்டு.

எல்லா ஊர்களையும் போலவே எங்கள் ஊருக்கும் சில சிறப்புகள் உண்டு. அது பற்றியெல்லாம் கண்டிப்பாகப் பேச வேண்டும். ஒழுங்காகச் சொல்லப்படும் காதல் கதைகளுக்கு (அல்லது காதல்ப் படங்களுக்கு) அடுத்த படியாக மக்களைக் கடுமையாக ஈர்ப்பவை ஒழுங்காகச் சொல்லப்படும் ஊர்க்கதைகள் (அல்லது ஊர்ப் படங்கள்). அதன் காரணம் நம்மைப் போன்று அளவிலாத ஊர் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அரை வேக்காட்டுப் பெருநகர வாசிகள். தன் இளமைக் காலத்தை நினைவு படுத்துகிற எல்லாமே மனிதர்களுக்கு ஒருவிதக் கிளுகிளுப்பை உண்டு பண்ணுகின்றன. காதலும் ஊரும் அப்படித்தான். அந்த ஊரில் ஒரு காதல் அனுபவம் இருந்திருந்தால் ஊர் மீது இன்னும் கொஞ்சம் கூடுதல்க் காதல். பெரும்பாலும் இருந்திருக்கும். ஊரை வெறுத்து ஓடுவோருக்கும் ஓட்டப்பட்டோருக்கும் கூட அது போன்ற கிளுகிளுப்புக்குரிய நினைவுகளும் பற்றுதலும் சட்டையில் உள்ள காலர் அழுக்கு போல ஓரத்தில் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் என நினைக்கிறேன்.

சொந்தக் கதையை எழுதுவது படிக்கிற எல்லோருக்கும் இனிக்காது. அப்படி எழுதும் போதெல்லாம், ‘இவன் என்னடா பெரிய வெண்ணெய் போல அடிக்கடி இப்படி ஏதாவது ஆரம்பித்து விடுகிறானே!’ என்று யாராவது கடியாகி விடுவார்களோ என்ற பயத்திலேயேதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆனால் அப்படி விசயங்களைப் பேசும்போது நிறையப் பேருக்கு அவர்தம் இளமைக் காலத்தையும் நினைவு படுத்திக் குதூகலப் படச் செய்யும் அரும்பணி (‘அடப்பாவிகளா, இதைக்கூட அரும்பணி என்று நினைத்துக் கொள்வீர்களா?!’ என்கிறீர்களா? கோடி கோடியாய்க் கொள்ளை அடிப்பவனே கூச்சமில்லாமல் அப்படியெல்லாம் பேசும்போது நான் எதற்குக் கூச்சப்பட வேண்டும்?!) செய்வது போல உணர்கிறேன்.

அது மட்டுமில்லை, என் எழுதுபொருட்களில் நான் தலையாயனவையாக இன்றும் வைத்துக் கொண்டிருப்பவற்றில் நாகலாபுரமும் ஒன்று. நாளை நான் ஒரு நல்ல எழுத்தாளனாக ஆனால் நாகலாபுரம் கண்டிப்பாக என் முக்கியக் கதைக்களமாக இருக்கும். ஆர். கே. நாராயணின் மால்குடி படிக்கும் போதெல்லாம் நாகலாபுரம் பற்றிய நினைவுகள் என்னைப் பாடாய்ப்படுத்தும். நானும் ஒருநாள் அது போன்ற நினைவுகளையெல்லாம் கதைகளாக்க வேண்டும் என்றோர் அவசரத் துடிப்பு வரும். பார்க்கலாம்.

சரி, விசயத்துக்கு வருவோம். நாகலாபுரத்தில் அப்படி என்னவெல்லாம் சிறப்பு என்று கேளுங்கள். கேட்டீர்களா? கேட்காவிட்டாலும் பரவாயில்லை. நான் இன்றைக்கு உங்களை விடுவதாயில்லை. பல சிறப்புகள். முதல் சிறப்பு – அது ஒரு கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பேரூர் அல்லது சிறுநகரம். அதில் இருக்கிற வசதி என்னவென்றால் கிராமம், நகரம் இரண்டிலும் கிடைக்கிற அனுபவங்கள் கிடைக்கும். இரண்டிலும் இருக்கிற பிரச்சனைகளும் இருக்கும் என்பது வேறு கதை. எல்லோருக்கும் எல்லோரையும் தெரியாது; அதேவேளை, யாருக்கும் யாரையும் தெரியாது என்றும் சொல்ல முடியாது. இதைவிட ஒரு சுகம் மனிதனுக்கு வேண்டுமா?

மாநகரங்களில் சில மாநகரங்களை மட்டும் நாம் பெருமையாகப் பேசுவதுண்டு. பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்று சேர்ந்து சண்டை போடாமல் சுமூகமாக வாழ்கிற ஊர்களுக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அவற்றைத்தான் பொதுவுணர் (அப்பா, நானும் தமிழுக்கு ஒரு சொல் கண்டு பிடித்துக் கொடுத்து விட்டேன்!) நகரங்கள் என்கிறோம். ஆங்கிலத்தில் காஸ்மோபாலிடன் என்பார்களே! அதுதான். பெங்களூர் போன்ற ஊர்கள். அப்படிப்பட்ட ஊர்கள் சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களிலும் உண்டு.

அத்தகைய ஊர்களுக்கான பொதுக் குணாதிசயங்கள் யாவை?

1. அவ்வூர்களில் மற்ற கிராமங்களைக் காட்டிலும் பல்வேறு பட்ட இன மக்கள் வாழ்வார்கள். கிராமங்கள் என்றாலே குறிப்பிட்ட சில இனத்தவரே பெருகிக் கிடப்பர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாதி அடையாளம் கொடுக்கலாம். அவற்றுக்கு மத்தியில் நாகலாபுரம் போன்ற ஊர்கள் அப்படி எந்த வட்டத்துக்குள்ளும் சிக்காமல் அருகில் இருக்கிற எல்லா ஊர்களிலும் காண முடியாத பல இனத்தவர்களையும் உள்ளடக்கி ஒருவிதப் பரந்த மனப்பான்மையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. சராசரிக் கிராமங்களில் காண முடியாத இனங்கள் பல உண்டு. பெரும்பாலும் வியாபாரம் மட்டும் செய்து வாழும் மக்களைக் கிராமங்களில் காண முடியாது. விவசாயம் மட்டும் செய்வோர் உண்டு. ஆனால் ஐயர், ஐயங்கார், முதலியார், செட்டியார், ஆசாரியார், முகமதியர், கிறித்தவர் என்று எல்லா விதமான சிறுபான்மை மக்களும் தத்தமக்கென்று ஒரு பெரிய தெருவோடு வாழ்கிற நாகலாபுரம் போன்ற ஊர்கள் நான் அதிகம் பார்த்ததில்லை.

அதைவிட என்ன சிறப்பென்றால், நகரங்களில் போல மற்றொருவர் என்ன இனத்தவர் என்றே தெரியாமல் பழகுதல் எங்கள் ஊரிலும் உண்டு. இவர் இதுவா அதுவா என்று கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியாமல் போன கதைகளும் உண்டு. இன்று கூட நான் எது என்று தெரியாதவர்கள் எங்கள் ஊரிலேயே நிறைய உண்டு. என் நெருங்கிய நண்பர்களே பலர், “நீ இதுவா?! நான் அதுவென்று நினைத்தேன் இவ்வளவு நாட்களாக...” என்று இதையும் அதையும் எதை எதையுமோ போட்டு, பெரும் பெரும் கேள்விக் குறிகளையும் ஆச்சரியக் குறிகளையும் சேர்த்துப் போட்டு விழித்திருக்கிறார்கள். பல ஊர்களில் இவர்களும் அவர்களும் தொட்டுக் கொள்ளவே மாட்டார்கள் என்று சொல்லப்படுபவர்களே எங்கள் ஊரில் முறை போட்டுப் பேசிக் கொள்வதைக் கூடக் காணலாம். இதுதானே காஸ்மோபாலிடன்?! என்ன சொல்கிறீர்கள்?!

2. அவ்வூர்களில் நாம் முன்பு பேசியது போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நிறைய இருப்பார்கள். பூர்வீக ஊர் என்பது அருகிலோ தொலைவிலோ இருக்கும் வேறோர் ஊராக இருக்கும். ஆனால் சில பல தலைமுறைகளாக இதுதான் எங்கள் சொந்த ஊர்; வேறெந்த ஊரும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லுமளவுக்கு அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்திருப்பார்கள். என்னைப் போல அம்மா ஊரைச் சொந்த ஊராக்கிக் கொள்ளும் ஆசையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டவர்கள் நிறைய இருப்பார்கள். நாகலாபுரத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பே என்னைப் போல ஒண்டிப் பிழைக்க வந்து ஒட்டிக் கொண்டு விட்டவர்கள் நிறைய உண்டு. அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களுடைய சொந்த ஊர்ப் பெயர்களை அவ்வப்போது வீட்டில் வாசிக்கப் படும் வரலாற்றுக் கதைகளில் மட்டும் கேட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வந்து குடியேறியவர்களை விடுங்கள். எந்த நிமிடத்திலும் வெளியூர்க்காரர்கள் ஒரு பெரிய எண்ணிக்கையில் எங்கள் ஊரில் இருப்பார்கள். சந்தைப் பேட்டையிலோ (இந்த சந்தைப் பேட்டை ஒரு முக்கியமான இடம்; இது பற்றிப் பின்பொரு நேரம் விரிவாகப் பேசுவோம்)... சரக்கு வாங்கிக் கொண்டோ... ஏதோவொரு கூலி வேலை செய்து கொண்டோ... சினிமாக் கொட்டகையிலோ... கடைசி பஸ்ஸை விட்டு விட்டு மறுநாள் காலை முதல் வண்டியில் சென்று விடலாமென்றோ...! அடுத்து அவற்றையெல்லாம் விட முக்கியமாக, எந்தக் காலத்திலும் ஒரு சிறிய எண்ணிக்கையில் வெளியூர்ப் பிச்சைக்காரர்களும் வெளியூர்ப் பைத்தியக்காரர்களும் எங்கள் ஊரில் முகாம் இட்டிருப்பர். இதையெல்லாம் எத்தனை கிராமங்களில் பார்க்க முடியும்?

3. அது வந்தேறிகளைப் பற்றி. இப்போது சென்றேறிகள் பற்றியும் பார்ப்போம். எங்கள் ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வாழ்வில் வென்றவர்கள் நிறைய உண்டு. கிராமங்களில் அந்தக் காலத்தில் பெரும்பாலும் ஓரிரு பட்டதாரிகளே இருப்பர். அதுவும் குறிப்பிட்ட சில குடும்பதினராக இருக்கும். எங்கள் ஊரிலோ அந்தக் காலத்திலேயே பெரும் பெரும் படிப்புகள் படித்து முன்னுக்கு வந்தோர் நிறைய உண்டு. சென்னையில் – பெங்களூரில் – பல வெளி மாநிலங்களில் – வெளி நாடுகளில் எல்லாம் எங்கள் ஊர்க்காரர்கள் நிறையப்பேர் உண்டு. எந்த ஊரைப் பற்றிப் பேசினாலும் அங்கே யாரோ ஒருத்தர் இருப்பார். இங்கிருந்து யார் சென்றாலும் அவருடைய முகவரி கொடுத்து அனுப்புவர். ஆரம்ப காலங்களில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். சில நேரங்களில் சென்ற இடத்தில் கவனிப்பு சரியில்லை என்று ஊரில் வந்து பெயரைக் கெடுக்கும் வேலைகளும் நடக்கும்.

சென்னையில் ஓர் ஊர் நண்பனின் திருமணத்துக்குப் போயிருந்த போதுதான் புரிந்தது – அங்கே நம்ம ஊர்க்காரர்கள் எல்லாம் மிக ஒற்றுமையாக அடிக்கடிச் சந்தித்துக் கொண்டு – அளவளாவிக் கொண்டு – பழம் கதைகள் பேசிக்கொண்டு – வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று. சின்ன வயதில் ஊரில் பார்த்த சில இளைஞர்கள் நரை முடியோடு வந்திருந்தார்கள்.

4. “எங்கள் குடும்பத்துக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது; அதனால் நான் பெரிய பருப்பு” என்று நினைக்கும் மனிதர்களைப் போல எங்கள் ஊருக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதனால் எங்கள் ஊர் ஓர் பருப்பு என்று நினைப்பவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். அங்கே ஒரு நானூறு ஆண்டு காலப் பழைய சிவன் கோயில் இருக்கிறது. அதற்கொரு கதை இருக்கிறது. கதைக்குத் தொடர்புடைய பெயர் கொண்டிருக்கிறது ஊர்.

சமீபத்திய வரலாறு என்றால், முகமதியர்களின் முக்கியமான தமிழ்ப் படைப்புகளில் ஒன்றான சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர் என்பார் (ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிக்காலம் முழுக்க அடிக்கடி மனப்பாடம் செய்ய வேண்டிய ஒரு பெயர்; ஆனாலும் நீங்கள் மறந்திருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்; மரிக்கத்தானே வாழ்க்கை! மறக்கத்தானே படிப்பு!!) பிறந்த ஊர். தமிழ்நாடு முழுக்கப் போகிற ஒரு புத்தகத்தில் நம்ம ஊர்ப் பெயர் வருகிறது என்று பெருமையான பெருமைப்பட்டு நாங்களெல்லாம் அதை அழுத்தி அழுத்தி அடிக்கோடிட்டு வைப்போம். ஆசிரியர்களும் அளவிலாத பெருமை கொள்ளும் பகுதி அது.

அது மட்டுமில்லாது, கட்டபொம்மனோடு தொடர்புடைய சில நிகழ்வுகளும் உள்ளன. எங்கள் ஊரில் வேலை பார்க்கும் வெளியூர்க்காரத் தமிழ் ஆசிரியர் ஒருவர் ஊரின் பெருமையை எல்லாம் ஒரு சிறிய புத்தகமாகப் போட்டு விட்டதால் அது பற்றி விரிவாகப் பேச வேண்டாமென்று நினைக்கிறேன். அப்புறம் அவர் கோபப் படுவார்.

5. அங்கிருக்கிற அல்லது அங்கிருந்த வசதி வாய்ப்புகள். ஒரு மெட்ரிக் பள்ளி (நான் படிக்கும்போது அது இல்லை; இருந்திருந்தாலும் அதில்தான் படித்திருப்பேனா என்பது வேறு கதை!), ஒரு மேனிலைப் பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி (அதில்தான் அடியேன் படித்தது), இரு நடுநிலைப் பள்ளிகள், சின்னச்சின்னதாய் நான் கணக்கில் சேர்க்காமல் விட்ட சில பள்ளிகள் என மித மிஞ்சிய கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன.

பெரும் சுற்றளவு மக்களுக்குப் பெரிய அளவில் சேவை செய்து கொண்டிருந்த ஆரம்ப சுகாதார மையம், அதாவது அரசு மருத்துவமனை ஒன்று இப்போதும் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் பெருத்து விட்டமையால் மரியாதை சிறிது குறைந்து! அந்தப் பகுதியில் பிறந்த பெரும்பாலான குழந்தைகள் (அதில் நானும் ஒருவன்) அங்கு பிறந்தவர்கள்தாம். எத்தனை டாக்டர்கள் பிறந்திருப்பார்களோ!

சாத்தூரில் இப்போதிருக்கிற கல்லூரி அந்தக் காலத்திலேயே எங்கள் ஊரில் ஆரம்பிக்கப் பட்டதுதான். ஏதோ காரணத்தால் தப்பி ஓடி விட்டது. அந்தக் கல்லூரி மட்டும் இருந்திருந்தால் ஊரின் கதையே மாறியிருக்கும். அடுத்தடுத்து எதுவுமே நிலைக்கவில்லை. வாழ்ந்து கெட்ட மனிதர் போல் வாழ்ந்து கெட்ட ஊராகி விட்டது.

இந்த முறை சென்றபோது கேள்விப் பட்ட ஒரு நற்செய்தி – இந்த ஆண்டு முதல் எங்கள் ஊரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கவிருக்கிறது என்பது. அருகில் இதை விடச் சில ஊர்கள் பெரிதாகி விட்ட போதிலும், இன்னமும் ஊர் மணம் குறைந்து விடாமல் இருக்கும் – காரியம் சாதிக்கும் வல்லமை படைத்த பெரியவர்கள் சிலருடைய முயற்சியால் எங்கள் ஊரில் வந்து இறங்கியிருக்கிறது கல்லூரி. இழந்த ஒன்றைப் பெறப் போகிற மகிழ்ச்சியில் திழைக்கிறது ஊர். சொந்த ஊரில் சைக்கிளில் போய்க் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு இருந்திருந்தால் அந்த ஊர் மீதான காதல் இன்னும் கடுமையாக இருந்திருக்கும் (ஒரு சில காதல் வாய்ப்புகளும் கிட்டியிருக்கலாமல்லவா?!). இருக்கட்டும்; பரவாயில்லை; அடுத்த தலைமுறைச் சிறார்களுக்காவது அது கிட்டியுள்ளதே என்று மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.

அப்புறம்... பல குளங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தைப்பேட்டை... அதைப்பற்றி ஒரு தனிப் பத்தியில் எழுதினால்தான் எனக்கு இன்று தூக்கம் வரும். எனவே...

6. ஊரின் மத்தியில் சந்தைப்பேட்டை ஒன்று இருக்கிறது. இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதிருப்பது பேட்டை மட்டும்தான். சந்தை பாவம் டரியல் ஆகிவிட்டது. ஒவ்வொரு போகிப் பண்டிகைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக எரிக்கப்பட்டு இன்று இல்லாமல் போயிருக்கும் பழைய பண்பாட்டு எச்சங்களில் எங்க ஊர்ச் சந்தையும் ஒன்று. நான் படிக்கிற காலத்தில் கூட வியாழக்கிழமை பள்ளிக்கூடம் விடப்போகிற நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற சந்தைச் சத்தம் கேட்கும்.

வாத்தியார் இல்லாத நேரத்தில் நாங்கள் கசகசவென்று பேசிக் கொண்டிருந்தால், வாத்தியார் வந்ததும் இப்படித்தான் கேட்பார் அப்போதெல்லாம் – “என்ன இது சந்தைக் கடை மாதிரி” என்று. மற்ற எந்த ஊரில் வேண்டுமானாலும் வாத்தியார் இந்த மாதிரிப் பேசலாம். ஆனால் எங்க ஊரில் இனி அப்படிப் பேசக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக... கொஞ்சம் கொஞ்சமாக... அப்படியே அடங்கி விட்டது சந்தையும் அத்தோடு சேர்ந்து ஊரும். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த சந்தைகளில் ஒன்றாக விளங்கியது என்பது செவி வழிச் செய்தி. எங்கள் காலத்தில் (அதாவது, நான் அங்கே இருந்த ஆரம்ப காலத்தில்!) எங்களுக்குத் தெரிந்த சந்தைகளில் தலை சிறந்ததாக விளங்கியது என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

வியாழன் தோறும் சந்தைக் கண்காணிப்புக்கென்று அருகில் இருக்கும் புதூரிலிருந்து போலீஸ்காரர்கள் வருவார்கள். கொடுமை என்னவென்றால் அவ்வளவு முக்கியமான ஊரில் காவல் நிலையம் கிடையாது. ஏதோ குழறுபடியில் தன் பல உரிமைகளை பக்கத்துக்கு ஊர்களிடம் இழந்திருக்கிறது எங்கள் ஊர். வியாழக்கிழமை இன்னும் முடியவில்லை. அது பற்றிப் பேசுவோம். பெரும்பாலும் எல்லா வீட்டிலும் வியாழக்கிழமை கடையிலிருந்து பலகாரங்கள் வரும் என நினைக்கிறேன். இன்னமும் எந்த ஊர் போனாலும் வியாழக்கிழமை பஜ்ஜி சுவையைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்த பாடில்லை. வார நாட்கள் ஐந்தில் எனக்குப் பிடித்தது வியாழக்கிழமையாகத்தான் இருந்தது நீண்ட காலமாக.

இத்தனை சிறப்புகள் ஒரு பக்கம் இருக்க, எனக்கும் அந்த ஊருக்குமான உறவு பற்றிச் சிறிது பேசித்தான் ஆக வேண்டும். முதல் இரண்டாண்டுப் படிப்பைச் சொந்த ஊரில் (உண்மையான சொந்த ஊரில்) படித்து விட்டு தாய்வழித் தாத்தா – பாட்டி – மாமாமார் புண்ணியத்தில் இங்கு வந்து சேர்ந்தேன் மூன்றாம் வகுப்பில். ஒரு வகுப்பில் ‘அ’, ‘ஆ’ என்று இரண்டு பிரிவுகள் இருக்கலாம் என்ற சமாச்சாரம் அப்போதுதான் புரிந்தது. அதை ஆங்கிலத்தில் A, B என்றும் அழைக்கலாம் என்றும் புரிந்தது. ஒரே வகுப்பில் இத்தனை மாணவர்கள் படிக்கலாம் என்பதும் புரிந்தது. சந்தைச் சத்தம் கேட்கிற தொலைவில் (13 கி.மீ.) அப்பா அம்மா இருந்ததால் பெரிதாகப் பிரச்சனை எதுவும் இல்லை. பெரும்பாலான சந்தை நாட்களிலும் இதர சில நாட்களிலும் அப்பா இங்குதான் இட வலமாக வலம் வந்து கொண்டிருப்பார். வாராவாரம் ஊருக்கும் போய் வரலாம். வாழ்க்கை நகர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குப் போய் வரும் ஆர்வம் குறைந்தது. நாகலாபுரம் சொந்த ஊர் ஆகிற அளவு புகுந்த வீட்டுப் பற்று கூடியது.

கணிப்பொறி பற்றிய கனவுகள் கூட வராத காலத்தில் அந்த ஊரில்தான் வாத்தியார் வேலையோ – கடை முதலாளி வேலையோ பார்க்க வேண்டி வரும் என்றும் எப்படியாவது உலக சரித்திரத்தில் முதன்முறையாக (உலக சரித்திரம் தெரியாதவன் இப்படித்தான் பேச வேண்டும்) அம்மாவுடைய அப்பா கட்டிய வீட்டில் காலமெலாம் வாழலாம் என்றும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன். பிற்காலங்களில் உலகையே வெல்லப் போகும் வல்லமை கொண்டவன் போலவெல்லாம் யோசித்திருக்கிறேன் என்றாலும் நாகலாபுரத்தில் இருந்து நாலடி தொலைவில் இருக்கிற பள்ளிவாசல் பட்டியில்கூட (நாகலாபுரத்தின் இரண்டு பகுதிகளில் ஒன்று பள்ளிவாசல் பட்டி! அப்படியானால், மற்றொன்று? அதற்குப் பெயர் நாகலாபுரம் தான்! எப்படி இந்தக் காமெடி?! நாகலாபுரத்தின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் பகுதி என்றும் சொல்லலாம்!) வாழ்வது பற்றி யோசித்திராத காலமும் உண்டு.

அந்த ஊரின் சந்தை, மந்தை, சந்து, பொந்து என எல்லாப் பகுதிகளிலும் கிட்டி, கிரிக்கெட், தேன் தட்டு எடுத்தல், வெள்ளரிக்காய் பறித்தல், புளியங்காய் அடித்தல் என சகல விதமான – ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப் பட்ட மற்றும் படாத விளையாட்டுகளை அரைக்கால்ச்சட்டை அணிந்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தேன். அந்தப் பொழுதுகளில் எத்தனையோ பேரை – புதிய மனிதர்களை – அவர்களுடைய குடும்பங்களை எங்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது வேடிக்கை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் நினைத்துப் பார்த்திராதது – நானும் ஒருநாள் அதே மண்ணில் அது போல வேடிக்கை பார்க்கப் படுவேன் என்பது. ஊருக்குள் புதிதாக வரும் கார்களை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஒரு போதும் நானும் ஒருநாள் அப்படி ஒரு காரை ஓட்டிக் கொண்டு அந்த ஊருக்குள் நுழைவேன் என எண்ணியதில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த முறை சென்றபோது – அதுவும் முதன்முறையாகக் காரில் சென்றபோது, ஊரை நெருங்கும் போது ஒருவிதப் படபடப்பு. யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாத – இனம் புரியாத படபடப்பு. ‘ஏன்டா இந்த வேலை? இதெல்லாம் பக்கத்து ஊரோடு நிறுத்திக் கொண்டு பஸ்ஸில் வந்து இறங்கலாமில்லே!?’ என்றோர் உட்கேள்வி. ‘என்ன பைத்தியக்காரத்தனம்!?’ என்றுதானே தோன்றுகிறது? எனக்கே அப்படித்தானே தோன்றியது. ஆனால், காரில் சென்றபோது நான் அந்த ஊரை விட்டுப் பல மைல் தொலைவு அன்னியப்பட்டுத்தான் போனேன். அதற்கொரு முக்கியக் காரணம் – கால இடைவெளி. அடிக்கடி போய் வந்திருந்தால் எல்லோரிடமும் தொடர்பு இருந்திருக்கும்; ஊருக்கு வந்த புதியவர்களும் கொஞ்சம் அறிமுகமாகியிருப்பார்கள்; உருவ மாற்றங்கள் பெரிதாக அன்னியப்படுத்தியிரா; சொந்தக் காரில் போய் இறங்கும் முன் ஓரிரு ஓசிக் கார்கள் ஓட்டியிருப்பேன்; கூச்ச உணர்வும் இருந்திராது; வேடிக்கையும் கொஞ்சம் குறைந்திருக்கும். திடீரென ‘எல்லாமே’ மாறி ஒருத்தன் வந்து இறங்கினால் - இளவட்டமாய்ப் பார்த்த ஆள் குழந்தை குட்டியோடு போய் இறங்கினால் எப்படி அதைச் சாதாரணமாகப் பார்க்க முடியும்?

நாங்கள் விளையாண்ட புழுதிகள் எங்கே? ஊரெல்லாம் எல்லாத் தெருக்களிலும் சிமெண்ட் சாலைகள் போட்டு விட்டார்கள். ஊரின் அழகு கொஞ்சம் கூடித்தான் போயிருக்கிறது. ஆனால், தெருவில் எப்படிப்பா இப்பல்லாம் கபடி ஆடுகிறீர்கள்? ஆடுகிறீர்களா கபடி இப்போதெல்லாம்? அல்லது, அதுவும் போகியில் போய்விட்டதா? தெருக்கள் எல்லாம் மிக மிகச் சிறிதாகி விட்டது போல் தெரிந்தது. நீளத்தையும் சொல்கிறேன். கண்டிப்பாக உலகம் எங்க ஊரில் மட்டும் சுருங்கியிருக்க வாய்ப்பில்லை. ஒன்று, நான் பெரிய ஆளாக (உடல் வளர்ச்சியை மட்டுமே சொல்கிறேன்!) ஆன காரணமாக இருக்கலாம். அல்லது, பெரும் பெரும் சாலைகளைப் பெருநகரங்களில் கண்டு விட்டதன் விளைவாக இருக்கலாம். உடன் வந்த சகோதரனும் இதே உணர்வைப் பகிர்ந்து கொண்டதில் ஒரு நிம்மதி. நல்ல வேளை – எனக்கொன்றும் கோளாறு ஆகிவிடவில்லை என்று உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது.

ஒரு சாலை முனையில் போக்குவரத்து சிக்னலைப் பார்த்தபோது எங்களூர் பெங்களூர் ஆகிவிட்டது போல உணர்வு. ‘நம்ம ஊரிலெல்லாம் எப்பவாவது ஆட்டோ வருமா? பக்கத்து நகரத்தில் இருந்தாவது ஒரு நாள் ஆட்டோ வருமா’ என்று யோசித்த நாள் ஒன்று உண்டு. நன்றாக நினைவிருக்கிறது. இந்த முறை போனபோது அளவிலாத ஆட்டோக்கள். ‘எங்கயோ போயிருச்சப்பா எங்க ஊரு! நாந்தான் இந்த ஊர்க்காரனா அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமப் போயிருச்சு!’ என்று வருந்திக் கொண்டேன்.

புதுப்பித்துக் கொள்ளலாமா? லாம். ஆனால், எப்படி? எதற்கு? கொஞ்சம் கொஞ்சமாக ஊரை விட்டும் நிறையப் பேர் போய் விட்டார்கள். நான் வாழ்ந்த வீட்டை விட்டும் எல்லோரும் வெளியேறி வேறு ஊர் போய் விட்டார்கள். ஒரே ஒரு பாவம் செய்த மாமா மட்டும் அட்டைப் பூச்சியாய் ஒட்டிக் கொண்டு கிடக்கிறார் அந்த வீட்டில். நான் ஒட்டிக் கொள்ளலாம் என்று ஐடியா போட்ட வீட்டில். காரைக் கொண்டு போய் அந்த வீட்டின் முன் நிறுத்தினேன். வேடிக்கை கொஞ்சம் பார்த்தார்கள். ஆனால், என்னுடைய நாட்களில் இப்படி ஒரு கார் (நீங்கள் நினைக்கிற மாதிரி கார் எதுவும் இல்லை; தமிழ்நாடு முழுக்கத் தேடிக் கண்டுபிடித்த பழைய – ஆயுள் முடிந்த – பைக் விலைக்கு வாங்கிய ஓட்டைக்கார் என்னுடையது!) வந்திருந்தால் நாங்கள் கூட்டம் கூடிப் பார்ப்போம். அது இப்போது இல்லை. நல்ல முன்னேற்றம்.

சரி, காரை நிறுத்தினேன். எல்லோரும் எழுந்து வீட்டுக்குள் நுழைந்தோம். என் மூன்று வயது வாயாடி மகள் மட்டும் வர மறுத்துக் கதறிக் கதறி அழுதாள். எனக்கும் அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ‘இந்த வீட்டில் அல்லவா நீ வளர்ந்திருப்பாய்?! இப்போது அந்த வீட்டுக்குள் வருவதற்கே மறுக்கிறாயே!?’ என்று மனதுக்குள் கணக்குகள் போட்டுக் கொண்டு அவளிடம் போய்ப் பேசினேன். “உன்ன மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கும்போது அப்பா இந்த வீட்லதாம்மா வளர்ந்தேன்; இந்தத் தெருவுலதான் விளையாடுனேன்; இதோ விளையாடிக்கிட்டு இருக்காங்களே பசங்க... இது மாதிரித்தான் நானும் இருப்பேன்!” என்று விக்கிப் போய் அவளுக்குப் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியும் பேசினேன். முகத்தை ஒரு விதமாக யோசிப்பது போல் மாற்றி விசயத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு கொள்கையில் மாற்றமில்லை என்பது போல் காருக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி இருந்தாலும் அவள் வரத் தயாரில்லை. யாரும் கட்டாயப்படுத்தி அழைக்கவும் தயாரில்லை. வேறொரு வேலையாகப் போகும் வழியில் விலகிப் பார்த்தல் என்ற மரியாதை நிமித்தமான பார்வையிடல் மட்டுமே என்பதால். ‘அவள் வர வேண்டாம். வந்தால் கதை சாதாரணமாய் முடிந்து விடும். வர வேண்டாம். அப்போதுதான் இதை வைத்து ஏதேதோ யோசிக்க வேண்டியிருக்கும் – பேச வேண்டியிருக்கும் – எழுத வேண்டியிருக்கும்’ என்றெண்ணி விட்டு விட்டேன். என்ன கொடுமை? என் பெரும் பகுதி வாழ்க்கையைச் செலவிட்ட ஓர் இடம் என் மகளுக்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. நாளை இங்கே வாழ்ந்த வாழ்க்கை பற்றி நான் ஏதாவது பேசும்போது “கடுப்படிக்காதப்பா, நல்ல கதையா ஏதாவது சொல்லு” என்று காமெடி அல்லவா செய்வாள்? அதையும் தமிழில் சொல்வாளா என்று கூடத் தெரியவில்லை இப்போதைக்கு. என் மகளாக இருப்பதால் குறைந்த பட்சம் அந்த உத்திரவாதமாவது உண்டு என நினைக்கிறேன்.

வீட்டுக்குள் போய்ப் பார்த்தால் வேதனையைக் கூட்டுகிற மாதிரி ஒரு படம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். அச்சு அசலாய் இப்போது என் மகள் இருப்பது போலவே நான் இருக்கும் படம். ஏற்கனவே பல முறை பார்த்த படம்தான். ஆனால் இந்த முறை வேறுபட்ட உணர்வு. என் மனைவி மீண்டும் ஒரு முறை சொன்னாள், “அப்டியே இருக்கிங்களே!?” என்று ஆச்சரியமாக. ‘அதைப் பார்க்கக் கூட நீ பெற்ற பிள்ளை உள்ளே வர மாட்டேங்குதே’ என்று சபித்துக் கொண்டேன்.

‘இந்த வீட்டில் அத்தனை பேர் இருந்தோமா? அதெப்படி சாத்தியம்? நம்பவே முடியவில்லை அல்லவா? வாய்ப்பே இல்லை!’ என்று நடந்த ஒன்றைப் பற்றி நடக்காததைப் பற்றிப் பேசுவது போலவே எல்லோருமே கருத்து வேறுபாடு இல்லாமல் பேசிக்கொண்டோம்.

அடுத்து, நாங்கள் எதற்காக அங்கு சென்றோமோ அந்த வேலை காரணமாக வீட்டுக்குப்பின் சிறிது நடந்து சென்றால் வருகிற காட்டுப் பகுதிக்குப் போனோம். ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் நான் ஒருமுறையாவது நடமாடிய பகுதி. கிட்டி, கிரிக்கெட், கபடி, வேறு சில பெயர் மறந்த விளையாட்டுகள், வெறும் நடை, ஓட்டம் என எவ்வளவோ நினைவுகள்.

இதில் ஒரு துளியைக் கூட என் மகளால் உணர முடியாதா? பகிர்ந்து கொள்ள முடியாதா? எனக்குக் கிறுக்கே பிடித்து விடும் போல் இருந்தது. எழுபது - எம்பது வயதில் (நான் கொஞ்சம் பிறவியிலேயே பேராசைக்காரன்! மன்னித்தருளுங்கள்!) இப்போதிருப்பதைவிட இவையெல்லாம் பற்றி திரும்பத் திரும்ப நிறையப் பேசத் தோன்றும் போது யாரிடம் போய்ப் பேசுவேன்? இப்போதே அதற்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது! பார்க்கலாம்... இன்னும் என்ன என்ன மாற்றங்கள் எல்லாம் பார்க்க வேண்டி வருமோ?!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...