ஞாயிறு, நவம்பர் 20, 2011

பழையன கழிதலும் & யாதும் ஊரே!

என் நண்பன் ஒருவன் அடிக்கடி BURN THE BRIDGES என்று சொல்வான். அதன் நேரடிப் பொருள் "பாலங்களைக் கொளுத்து" என்ற போதிலும் அது சொல்லப் படும் இடம் பொதுவாக, "பழைய உறவுகளை மற்றும் நினைவுகளைக் கொளுத்து!" என்று அறிவுரைப்பவையாக இருக்கும். நம்முடைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'பழையன கழித்தல்' ஓரளவு அதற்கு அருகில் வரும். ஆனாலும் அதில் அவ்வளவு மூர்க்கம் தெரியவில்லை. அது போகிப் பண்டிகைக்கே உரித்தான ஒரு சொல்லாடலாக நம் மனதில் பதிந்து விட்டது ஒரு காரணமா என்று தெரியவில்லை. 'பழையன கழித்தல்' என்பதே பாய்-தலையணை முதலான பழைய தட்டு முட்டுச் சாமான்களைக் கொளுத்துதல் என்றே மனதில் தோன்றுகிறது. அதே வேளையில் அவர்களின் பாலத்தைக் கொளுத்தும் வேலையென்பது உறவு, நினைவு மற்றும் அவற்றுக்கும் மேலான பலவற்றையும் குறிக்கக் கூடிய கனம் கூடிய சொல்லாடல். மேலோட்டமாக இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை என்ற போதிலும் அந்தச் சொல்லாடல் மிகவும் பிடித்திருந்தது. எல்லோருக்கும் என்றில்லாவிட்டாலும் சிலருக்கு இது ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது. அதில் நீங்கள் எப்படி என்று தெரியவில்லை. :)

நாம் படிக்கும் இலக்கியங்களும் பார்க்கும் படங்களும் பழசை மறக்கக் கூடாது; பிறந்த ஊர் புனித பூமி; பழங்காலத்து உறவுகள் முக்கியமானவர்கள் என்பது போல் சொல்லிச் சொல்லி இயல்பிலேயே இவற்றைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இவற்றின் மீது ஒரு வித 'இனம் புரியா' ஈர்ப்பை உண்டு பண்ணி விட்டன. இது நம் மண்ணுக்குரிய பண்பாகவே இருக்கிறது. நம்மை விடப் பல மடங்கு வசதியாகி விட்டவர்களைக் கூட "பழசை மறந்த பரதேசிப் பயல்!" என்று திட்டித்தான் நம் பொறாமையை வெளிப் படுத்துகிறோம். கொள்ளையடித்துச் சம்பாதித்தான் என்பது போல ஒரு பெருங் குற்றச்சாட்டாக அதை வைக்கிறோம். இயல்பிலேயே நாம் உணர்ச்சி சார்ந்த ஆட்கள் என்பதால் அந்த மாதிரியான ஓர் உணர்வு நமக்கு இருப்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் படுவதற்கில்லை.

இப்படியான ஒரு சொல்லாடல் கண்டு பிடித்ததில் இருந்தே வெள்ளைக்காரர்கள் இதை அதிகம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. அல்லது, அதைச் செய்ய வேண்டியதற்கான தேவை அதிகம் இருந்தவர்கள் என்றும் அதற்கான காரணத்தைச் சொல்லலாம். பொதுவாகவே மேற்குலக மாந்தர்களுக்கு அது ஓர் எளிதான வேலைதானே. ஒரே வாழ்க்கையில் பல மணப் பாலங்களைக் கொளுத்தி விட்டு புதிய பாலங்கள் கட்டிக் கொள்பவர்கள் அவர்கள். மணப் பாலங்கள் அவர்களுக்கு மண் பாலங்கள். அந்த அளவுக்கு நம்மால் இருக்க முடியாது என்ற போதிலும் ஓரளவுக்கு அதைப் பழகிக் கொள்வதும் நல்லதென்றே படுகிறது.

சிறு வயதில் நாம் வாழ்ந்த மண் மற்றும் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் மீது வாழ்க்கை முழுவதும் அந்த இனம் புரியாத ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அவ்விடங்களையும் ஆட்களையும் விட்டு வெகு தொலைவு வந்து முற்றிலும் மாறு பட்ட வாழ்க்கை முறைகளுக்கு அடிமையான பின்பும் அந்த நினைவுகள் நம் மனதில் கருப்பு வெள்ளைக் காட்சிகளாக வந்து சென்று கொண்டே இருக்கின்றன. பிற்காலத்தில் அதே மண்ணில் அதே மக்களோடு அதே மாதிரியான ஒரு வாழ்க்கையை, சற்று நம்முடைய வெளி வாழ்க்கை முறைகளையும் கலந்து, வாழ வேண்டும் என்ற எண்ணம் அப்படி வெளியேறி வந்த எல்லோருக்குமே இருப்பது போலத்தான் தெரிகிறது. எதார்த்தம் என்னவென்றால் இது நினைவாகவே இருந்து விடுவதுதான் அதிக சுகம். தப்பித் தவறி அதை நனவாக்கக் கிளம்பிப் போனவர்கள் யாரும் நினைவில் இருந்த அளவு சுகம் நிசத்தில் இருந்ததாக அனுபவித்துச் சொன்னதில்லை. 'அப்படியே பெருநகர இறைச்சலிலேயே ஓட்டியிருந்தால் இதமான நினைவுகளாவது சாகும் வரை அவ்வப்போது மனதை வருடி மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்குமே' என்று பெட்டி-படுக்கைகளைச் சுருட்டிக் கொண்டு திரும்ப ஓடி வந்தவர்கள்தாம் நிறைய.

காரணம் என்ன? நம் எளிய மொழியில் சொல்வதென்றால், நம் புதிய வாழ்க்கை முறை அங்கேயே இருந்து விடுகிற மக்களுடையதை விட ஆடம்பரம் அதிகமானதாக - அவர்களால் அடைய முடியாததாக - பொறாமைப் படத் தக்கதாக - பம்மாத்துப் பண்ணக் கூடியதாக இருக்கிறது. நாம் வெளியேறி வந்து புதிது புதிதான வாழ்க்கை முறைகளைப் பழகி விட்டபின்பு, அவர்களைப் போலவே - அவர்களில் ஒருவராக வாழ இயலாதவர்களாகி விடுகிறோம். இது கிட்டத்தட்ட கறுவாடானபின் கடலுக்குள் தூக்கிப் போட்டு நீந்தச் சொல்வது போல். முடியுமா அது?

பழையன கழித்தல் மேற்கர்களுக்கு ஓரளவு எளிதாக இருக்கிறது. நம்மில் சிலருக்கும் இது நிறைய எளிதாகவே இருக்கிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அப்படிப் பட்டவர்களுக்குத்தான் புறவாழ்க்கை வெற்றி எளிதில் கிடைக்கிறது. அதாவது, பொருளியல் வெற்றி! "எது வெற்றி என்பதே என்னைப் பொருத்தமட்டில் வேறு!" என்று சொல்பவர்கள் இங்கே காதைப் பொத்திக் கொள்ளவும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இதுதான் கசப்பான உண்மை. இதைப் புரிந்து கொளல் மிக எளிதான ஒன்றுதான். தாய்ப்பாசம் அதிகமுள்ள குழந்தை அம்மா காலைச் சுற்றிக் கொண்டே வருமே ஒழிய திரைகடலோடித் திரவியம் கொண்டு வராது. இந்தப் பிணைப்புகளுக்கெல்லாம் ஆட்பாடாத ஆட்கள்தாம் அத்தகைய வெற்றிகளை எளிதில் அடைய முடிகிறது. அதனால்தான் நம் ஊர்களில், "இந்த ஊரை விட்டுப் போனால்தான் முன்னுக்கு வரமுடியும்!" என்று நிறையப் பேர் அடிக்கடிச் சொல்கிறார்கள்.

இந்த மண்ணன்பு  ஒருபுறம் நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் புனிதமானதாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் சித்தரிக்கப் படுகிறது. இன்னொருபுறம் நம் எதார்த்த வாழ்வில் இது ஒரு சுத்த இத்த பண்பாகப் பேசப் படுகிறது. புனிதத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏகப்பட்ட காரணங்கள் சொல்ல ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். அது ஏன் ஒரு சுத்த இத்த பண்பாகப் பார்க்கப் படுகிறது என்பதை மட்டும் நாம் இன்று பார்ப்போம். மண்ணையும் மக்களையும் மதிக்கக் கூடாது என்று சொல்ல விழைவதல்ல நம் நோக்கம். அந்த போதைக்கு அடிமையாக வேண்டியதில்லை என்பதே நான் சொல்ல முனைவது. இப்போது பாலத்தைக் கொளுத்தி விட்டுச் செல்வதன் மூலம் பின்னர் இப்போதிருப்பதை விட வளமாக ஊர் திரும்பி அதை விட அழகான பாலங்கள் கட்ட முடியும் என்றால், அதில் என்ன தப்பு? உணர்ச்சி வசப் படாமல் நான் சொல்ல முனைவதை சரியாகப் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.

கொஞ்ச காலம் முன்பு கண்டோன்மென்ட் இரயில்வே நிலையத்தில் பெரியவர் ஒருவரைச் சந்தித்தேன். 'நீங்க எந்த ஊர்?', 'நான் எந்த ஊர்?' போன்ற விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நம்ம பகுதிக் காரர் என்று அறிந்து இன்னும் ஆர்வமாகப் பேசினேன். என் கல்லூரி ஆசிரியர்கள் சிலர் பற்றியெல்லாம் பெயர் சொல்லி விசாரித்தார். பெரும்பாலான காலத்தை டெல்லியில் வாழ்ந்து கழித்து இப்போது ஓய்வுக் காலத்தை பெங்களூரில் கழித்துக் கொண்டிருக்கிறார். சென்னையோடு கொஞ்சம் தொடர்பு இருக்கிறது ஆனால் சொந்த ஊரோடு அவ்வளவாக இல்லை. அன்று சொந்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். ஓய்வெடுக்கும் காலத்தில் ஊரில் செட்டிலாக வேண்டும் என்று தோன்றவில்லையா என்றேன். "அதெல்லாம் மாயை. போகிய இடங்களில் நல்ல ஆட்களைப் பழக்கிக் கொண்டால் எல்லாமே சொந்த ஊர்தான். இப்போதும் சொந்த ஊரோடு தொடர்பு வைத்திருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறையோ என்னவோ போய் வருகிறேன். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!" என்றார். அந்த உரையாடலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்று தெரியவில்லை.

பூர்வீகம் என்பதே மனித குலத்தின் குணாதிசயத்துக்கு எதிரானது. நிறையப் பேர் சொல்வது போலச் சொன்னால், இயற்கைக்கு எதிரானது. மாற்றம்தான் இயற்கை. இன்னும் சொல்லப் போனால் செயற்கைதான் இயற்கை. "என்னடா திடீர்னு மெண்டல் போலப் பேச ஆரம்பிச்சுட்ட?" என்று குழம்புகிறீர்களா? மனிதனுக்குக் கால்கள் இருப்பது இடம் விட்டு இடம் பெயரவும், கைகளும் மூளையும் இருப்பது அதையே எளிதாக்கிக் கொள்ளவும் அதற்கான புதுப் புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்யவுமே. நீண்ட நெடிய மனித குலத்தின் வாழ்வில் எல்லா மண்ணுமே ஒவ்வொரு காலத்தில் வாழ்க்கைக்கு வசதியில்லாததாக ஆகத்தான் செய்கிறது. தட்பவெப்பமோ, பஞ்சமோ, வெள்ளமோ, வளத்தின் காரணமாக ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான ஆட்கள் குவிதலோ, மாற்றம் நாடும் மனித மனமோ என்று ஏதோவொரு காரணமாக அந்த இடம் முன்பு போல வாழ வசதியில்லாததாக ஆகி விடுகிறது. அந்தச் சூழ்நிலையில் இடப்பெயர்ச்சி நடந்தே தீரும். அது மனித வரலாற்றில் பற்பல முறைகள் நடக்கவே செய்திருக்கிறது. சில இடப்பெயர்ச்சிகள் மிகச் சிறியவை - குறைவான தொலைவுக்குள் நிகழ்பவை. சில இடப்பெயர்ச்சிகள் மிகப் பெரியவை - கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் அளவுக்குத் தொலைவானவை.

நாம் எல்லோருமே இன்று நம் சொந்த ஊர் என்று சொல்லிக் கொண்டிருப்பது எதுவுமே நம் சொந்த ஊர் அல்ல. ஓரளவுக்கு இருப்பதிலேயே பழைய சொந்த ஊர் எதுவென்று கண்டு பிடிக்க வழி - நம் குலதெய்வ வழிபாடு. குலதெய்வம் என்று ஒன்று கொண்டுள்ள எல்லோருக்குமே அந்த ஊர்தான் சொந்த ஊர். பஞ்ச காலத்தில் நீண்ட தொலைவுக்கு இடம் பெயர்ந்த - அதாவது, பஞ்சம் பிழைக்கக் கிளம்பிய குடிகள் எல்லோரும் செய்த இன்னொரு வேலை என்னவென்றால், அவர்களுடைய அப்போதைய தாய் மண்ணை விட்டுக் கிளம்பும் வேளையில் அங்கிருந்த குலதெய்வ ஆலயத்து மண்ணை எடுத்துக் கொண்டு சென்று சேர்ந்த இடத்தில் ஓரிடத்தில் அதே கோவிலை மீண்டும் கட்டி எழுப்பிக் கொண்டார்கள். அல்லது, பின்னர் போன இடத்தில் இருந்து ஒருவரோ ஒரு குழுவோ கிளம்பித் தாய் மண்ணுக்கு வந்து மண் எடுத்துச் சென்றார்கள் என்று எம் குல வரலாறுகள் சொல்கின்றன. அதனால் அத்தகையவர்களுக்கு (மண்ணெடுத்துச் சென்று மறு நிர்மாணம் செய்தவர்களுக்கு!) குலதெய்வக் கோவிலை வைத்தும் அதுதான் சொந்த ஊர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், குலதெய்வமும் அவர்களோடு இடம் பெயர்ந்து, அந்த வரலாறும் பிற்கால சந்ததிக்குத் தெரியாமல் போயிற்று.

அந்தக் காலத்தில் பிழைப்புக்காக பல கிராமங்களில் இருந்து சென்னை போன சில குடிகள் இன்று சென்னையில் உள்ள ஏதோவொரு பகுதியையே அவர்களுடைய பூர்வீகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பிள்ளைகள் ஏதோவொரு மேற்கு நாட்டில் இருந்து கொண்டு இந்தியா அல்லது சென்னை தன் சொந்த மண் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் சொல்லிக் கொண்டாலும் இங்கிருக்கும் வசதி வாய்ப்புகளை விட சென்ற இடத்தில் சிறப்பாக வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் அவர்களின் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து, அவர்களுடைய சந்ததிகளும் அப்படியே - அந்த மண்ணின் மைந்தர்களாகவே அங்கேயே அமர்ந்து விடுவார்கள். இங்கே விட்டுச் சென்ற அவர்களின் உடன் பிறப்புகளின் சந்ததிகள் வேறொரு குலமாக - இனமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவேளை, ஏதோவொரு கட்டத்தில் - ஏதோவொரு கட்டாயத்தில், இரு சாராரும் வெவ்வேறு இனக்குழுக்கள் என்று மூர்க்கத்தனமாக மோதிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் மனித குலம் பார்க்காத கதைகளா என்ன?

இப்படித்தான் மனித குலம் இன்று வரை வாழ்ந்து வருகிறது என்பது என் புரிதல். இப்போது சொல்லுங்கள் - பூங்குன்றனார் சும்மாவா சொன்னார்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று! எல்லாம் ஓர் அர்த்தத்தோடுதான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று எல்லோரையும் போல் நானும் ஒருமுறை சொல்லி விடுகிறேனே! எனவே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாம் கருத வேண்டும் என்று மட்டுமே அவர் சொன்னதாக எனக்குப் படவில்லை; அதுதான் உண்மை என்றே அவர் சொல்லியிருக்கக் கூடும் என்பது என் ஊகம். அதனால்தான் ஐ.நா.சபை அதைத் தம் வாசகமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது, முந்தைய சொல்லாடலுக்கு வருவோம். அதாவது, பழையன கழித்துப் பாலங்களைக் கொளுத்துதல்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற நிலைக்குப் போய் விட்டாலே சொந்த ஊர்ப் பாசம் - சொந்தக்காரர் பாசம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி விடும். ஏதோவொன்று இங்கில்லை என்கிற மனநிலைதானே அங்கே நம்மை அழைத்துச் செல்வது. அது எங்கும் உண்டு என்கிற மனநிலை வந்து விட்டால் எதற்குக் கறுவாடு கடலுக்குள் குதிக்க வேண்டும்? என்ன சொல்றீங்க? உண்மைதானே?! ஆனால், எல்லோரும் அப்படி நினைக்க வேண்டுமே! எங்கும் எவர்க்கும் எந்தக் காரணத்துக்காகவும் இரண்டாம் தர மரியாதை கொடுக்கப் படக் கூடாதே! மனித சமூகம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று எல்லா நாட்டிலும் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் நாள் வரும்போது பாலங்களைக் கொளுத்துதல் எளிதாகவே ஆகி விடும் என்றே தோன்றுகிறது.

இவையனைத்துக்கும் மேல், பால்யப் பருவ நினைவு என்பது இருந்து கொண்டே இருக்கட்டும். ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வத்தை வழிபட்டு விட்டு, மண்ணையும் மக்களையும் கண்டு களித்து விட்டு, அவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து கறிச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, மீண்டும் அவ்வப்போதைய இருப்பிடத்துக்கு மீண்டு வந்து, அந்த அனுபவங்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஆக வேண்டிய வேலையைப் பார்ப்பதுதானே அதை விட சுகம்?! முடிந்தால் அவர்களையும் வாழ்வுக்கான வசதிகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு அழைத்து வந்து வெவ்வேறு உலகங்களைக் காட்டிக் களித்தல் அதையும் விட சுகம். அதை விடுத்து, அங்கேயே போய் அவர்கள் கண் முன்னாலேயே - அவர்களுக்குப் பிரயோசனமாகவும் இல்லாமல் - அவர்களின் கண் உறுத்தும்படி வாழ்வதுதான் சுகம் என்று சொல்வது சொல்லத்தான் சுகம் என்றே படுகிறது.

புதன், நவம்பர் 16, 2011

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (3/3)


முதல் பாகத்தில் நீண்ட முன்னுரையும் தமிழகத்தின் இப்போதைய முதல் இரண்டு கட்சிகளான அதிமுக மற்றும் திமுக பற்றியும் பார்த்தோம். இரண்டாவது பாகத்தில் ஓரளவுக்குப் பெருங்கனவுகள் காணத் தகுதியுடைய மற்றும் அதற்கான வாய்ப்பிருந்தும் கெடுத்துக் கொண்ட அடுத்த நான்கு கட்சிகள் (தேமுதிக, காங்கிரஸ், பாமக மற்றும் மதிமுக) பற்றிப் பார்த்தோம். இந்தப் பாகத்தில் இன்னும் அழிந்து விட்டன என்று சொல்ல முடியாத - முயன்றால் இன்னும் ஓரளவுக்குப் பெரிதாக - தவிர்க்க முடியாத சக்தியாக மாறத் தக்க கட்சிகள் பற்றிப் பார்ப்போம்.


பாஜக: இந்தத் தேர்தலில் மற்ற எல்லோரையும் விட அதிகமாக மகிழ்ச்சி அடைய வேண்டிய கட்சி என்றால் அது பாஜகதான். இரண்டு நகராட்சிகள் என்றால் சும்மா இல்லை. நாகர்கோவில் - வென்று விடுவார்கள் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தேன். மேட்டுப் பாளையம் எதிர் பார்க்கவே இல்லை. இரண்டுமே மத ரீதியாகப் பிரச்சனைக்குரிய பகுதிகள். ஒன்று கிறித்தவர்களுடனான் மோதல் நிறைந்த பகுதி. இன்னொன்று முகமதியர்களுடனான மோதல் நிறைந்த பகுதி. ஆக, அவர்களின் வளர்ச்சி என்பதே மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் இருக்க முடியும். கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னால் (மற்ற மதத்தினருக்குப் பிடிக்காத மாதிரிச் சொன்னால்), இந்துக்கள் மத ரீதியாகத் தமக்குப் பிரச்சனை என்று உணர ஆரம்பித்து விட்டால், அவர்கள் பாஜகவிடம் தான் போவார்கள். ஆக, பாஜகவை வளர்ப்பதும் அழிப்பதும் யார் கையில் இருக்கிறது? உணர்ச்சி வயப் படாமல் கையாள வேண்டிய கேள்வி இது.

மதவாத அரசியல் நமக்குப் பிடிக்காது என்ற போதிலும் தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற பல கட்சிகளை விட இவர்கள் அரசியல் நேர்மை உடையவர்கள் என்பது ஒரு வகையில் நல்ல விசயம்தானே. இடதுசாரிகளுக்கு அடுத்து இவர்கள்தாம் பொது வாழ்க்கையில் கைச் சுத்தம் உள்ளவர்கள் என்று சொல்லலாம். அதனால் அவர்கள் ஓரளவு வளர்ந்து விட்டுப் போவதில் தப்பில்லை. தமிழ்நாட்டில் இடதுசாரிகளை விடப் பெரிய இயக்கமாக வளர்ந்திருப்பது அவர்களைப் பொருத்த மட்டில் மிகப் பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயம். அடுத்தடுத்து அத்வானிகள் தமிழ் நாடு வரும் போது கூடுதல் நம்பிக்கையோடு வருவார்கள் இனி. அவர்களுக்கென்று ஒரு முக்கியமான இடம் நம் அரசியலில் கொடுக்கப் பட்டு விட்டது. இதை மறுப்பதற்கில்லை. அது குறைய வேண்டுமென்றால், மக்களின் மனதில் இருந்து மதம் நீங்க வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் அது நடக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று எதார்த்தமாக யோசித்தால் கிடைக்கும் ஒரு பதில் - மீண்டும் மீண்டும் மீண்டும் இவர்கள் தனியாகவே மக்களைச் சந்திக்க நேர்ந்ததும் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். அவர்கள் அதை விரும்பிச் செய்ய வில்லை. அந்நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். ஆனால், அது அடி மட்டத்தில் கட்சிக் கட்டமைப்பை வலுப் படுத்த உதவியிருக்கிறது. இதனால் விரும்பியே மற்றவர்களும் இதைச் செய்யலாம் என்பதே கிடைத்திருக்கும் பாடம்.

நல்ல கூட்டணி அமைந்தால் கோவை போன்ற மாநகராட்சிகளில் கூட ஒரு கை பார்க்கலாம். சென்னையிலும் இவர்களுக்கென்று போகப் போக ஒரு வாக்கு வங்கி உருவாகும் மெதுவாக. இதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு முந்தைய நிலவரப் படி வரும் பாராளுமன்றத் தேர்தலில் - தேர்தலுக்கு முன்பு யாருமே இவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே நிலைமை இருந்தது. இதைப் பார்த்த பின்பு, இரண்டு முதல் நான்கு தொகுதிகளைக் கொடுத்து யாராவது சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது போல் தெரிகிறது. அப்படியும் இல்லாவிட்டால், இவர்களே உதிரிகள் கொண்ட ஒரு மூன்றாவது அல்லது நான்காவது அணிக்கு ஏற்பாடு செய்யலாம். எப்படியிருந்தாலும் இந்துத்வாவின் நாயகி தேர்தலுக்குப் பின் இவர்களோடு சேர்ந்திடுவார்.

பாவம், திருநாவுக்கரசர்... கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். பதவியில் இல்லாத வளரும் கட்சியா? பதவியில் இருக்கும் அழியும் கட்சியா? என்று பார்த்தால், இரண்டுமே அவருக்கு ஒத்து வராத கட்சிகள் என்பதுதான் உண்மை. திராவிடப் பாரம்பரியத்தில் வளர்ந்த ஒருத்தர் இவ்விருவரிடமுமே செல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நல்லவர்தான். ஆனால், பிழைப்புவாதியாக இருக்கிறாரே. பெயர் மாற்றியதில் இருந்து கட்சி மாற்றுவது வரை எதுவுமே அவருக்கு எடுபட வில்லை.

இடதுசாரிகள்: இரண்டு சிவப்புகளையும் ஒன்றாகவே சேர்த்து எழுதத்தான் விருப்பம். சேர்கையில்தான் பலமாகத் தெரிகிறார்கள். ஆனால், அவர்களே அதற்காக அதிகம் முயல்வதில்லை என்பதுதான் பெரும் வருத்தம். சேர்த்துப் பார்த்தால், இவர்கள் பாஜகவை விடப் பெரிய சக்தி என்று சொல்லலாம். தமிழ் நாட்டில் நீண்ட நெடுங்காலமாக இவர்களுடைய கட்சி அமைப்புகள் இருக்கின்றன. விடுதலை பெற்ற கொஞ்ச காலம் கழித்து நடந்த தேர்தலில் அப்போதைய சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குக் கலக்கியவர்கள். இருக்கிற நாலு பெரும் இரண்டிரண்டாகப் பிரிந்து இன்று ஒன்றும் இல்லாத நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

அதில் பெரியார் என்ற பெரும் சக்தி வந்ததுதான் இளைஞர்கள் மத்தியில் இவர்களுக்கு உரிய இடத்தை முழுமையாகக் காலி செய்தது. ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் இங்கே வருவதற்குப் பதிலாக வண்ணமயமாய் இருந்த அந்தப் பக்கம் போய் விட்டார்கள். அதனால்தான் இடதுசாரிகளோடு வருத்தம் வரும் போதெல்லாம் கானா, "பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்திரா விட்டால் நானும் இடதுசாரியாகத்தான் ஆகியிருப்பேன்!" என்று சொல்லிச் சரிக் கட்டப் பார்ப்பார். நல்ல வேளை, பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்தார். இடதுசாரிகளாவது இன்னும் ஓரளவு நல்லவர்களாக இருக்கிறார்கள்.

ஏதோவொரு மக்கள் பணி செய்து கொண்டு ஊருக்கு நாலு சிவப்புத் துண்டுக் காரர்கள் இன்னும் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லோருமே திருடர்கள் என்றாலும், மற்ற எல்லோரையும் விடப் பல மடங்கு இவர்கள் நல்லவர்கள். எளிமையான வாழ்க்கை முறை வாழ்பவர்கள். மக்கள் பிரச்சனை என்று எதுவென்றாலும் களத்தில் நிற்கக் கூடிய முதல் கூட்டம் இவர்களுடைய கூட்டம். மகன் திருமணத்தன்று மறியல் போராட்டம் நடந்தால் மணமேடையில் இல்லாமல் சிறைச் சாலையில் இருப்பவர்கள். தியாக உள்ளம் கொண்ட நேர்மையாளர்கள்.

இவர்களின் மிகப் பெரிய பிரச்சனை - எளிய மக்களுக்காகப் போராடினாலும் அவர்களுக்குப் புரிகிற மாதிரிப் பேச மாட்டார்கள். கொள்கைப் பற்று என்ற பெயரில் அளவற்ற பிடிவாதம் காட்டுபவர்கள். சிவப்பு நாடுகள் செய்தால் எதுவும் சரி என்பார்கள் (சமீபத்திய எடுத்துக்காட்டு - கூடங்குளம் பிரச்சனை!). இவர்களுக்கு ஏன் இந்தியாவை விட அந்த நாடுகள் அவ்வளவு புனிதமாகத் தெரிகின்றன என்று எல்லோருமே கடுப்பாகும் அளவுக்கு புனிதத் தல வழிபாடு செய்பவர்கள்.

முதலில், இருவரில் பெருவரான இடது சிவப்பு பற்றிப் பார்ப்போம். எந்தச் சந்தேகமும் இல்லை - இவர்களுடைய அமைப்பு வலதை விடப் பெரியது என்பது மட்டுமில்லை; வலதை விட வேகமாக வளர்ந்து வருவதும் கூட. இவர்களுக்கென்று வலுவான வாக்கு வங்கிகள் நிறைய இடங்களில் உள்ளன. கோவை, மதுரை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் - ஓரளவு பரவாயில்லாத கூட்டணி இருந்தால், வெற்றி பெரும் அளவுக்கு வாக்குகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நல்ல பலம் இருக்கிறது. இது போக ஏகப் பட்ட நகரங்களில் நல்ல கட்டமைப்பு இருக்கிறது.

ஓரளவு அறிவு பூர்வமாக யோசிக்கும் இளைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நிறைய இருக்கும் கட்சி. அறிவு பூர்வமான வாதங்கள் வைப்பதில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் வென்ற பல இடங்களில் தேமுதிக கூட்டணியால் வென்றதாக நிறையப் பேர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் இவர்களுடைய வாக்கு வங்கி தேமுதிகவுக்குப் பல இடங்களில் உதவியிருக்கிறது. இவர்கள் வென்ற சில நகராட்சிகள் இவர்களுக்கென்று பலமான அடித்தளம் இருக்கும் கட்சிகள். வலதை விட விபரமான ஆட்களும் நிறைய இருப்பதால், கண்டிப்பாக அவர்களைப் போல் சொதப்ப மாட்டார்கள். ஓரளவு நல்ல எதிர் காலம் இருக்கிறது.

அடுத்து, வலது சிவப்பு. இவர்கள் அழிந்தே போனார்கள் என்றுதான் நினைத்தோம். இல்லை என்றுதான் இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது. செருப்பைக் கழற்றும் போதே கோபப் பட்டு வெளியேறிய இடது சிவப்புகளுடன் இவர்களும் வெளியேறி இருந்தால் மரியாதை மிஞ்சியிருக்கும். வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவேன் என்று காத்திருந்து கேவலப் பட்டு வந்தார்கள். அதன் பிறகாவது அவர்களுடன் சேர்ந்து ஒழுங்காகக் கேப்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். அதுவும் செய்யாமல் சொதப்பினார்கள்.

எனக்கு இந்த வட்டாரங்களில் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு (அதனால்தான் இவர்களை இவ்வளவு புகழ்கிறேனோ என்று எண்ணுகிறீர்களா? பொறுத்திருங்கள், அதனால் புரிந்து கொண்ட கேவலங்களையும் சொல்கிறேன்!). நான் கேள்விப் பட்ட வரை, இங்கே இருக்கும் ஒரு சிவப்புத் துண்டுக் காரர்தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். தோட்டத்திலும் சகோதரி வீட்டிலும் போய் அடிக்கடிப் பெட்டி வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். இடதுசாரிகளில் இப்படி ஓர் ஆள் உருவானது மிகப் பெரும் வேதனைதான். ஆனாலும் அது நம்பும் படிதான் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும்போது கூட அதிமுகவை அதிகமாக விமர்சிக்க மாட்டார். கட்சியை மிகப் பெரிய அளவில் வளர்க்கிற விதமாக - ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்து முதன் முதலில் தமிழ் நாட்டை உலுக்கியவரும் இவர்தான். கட்சியை இருக்கிற இடம் தெரியாமல் காலி செய்து விடுவாரோ என்றும் இவரால்தான் பயமாக இருக்கிறது. அந்தப் பீடை விடும் வரை இந்தக் கட்சி தேறாது என்றே தோன்றுகிறது.

இவர்களுக்கென்று தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சிகளில் அமைப்பு நன்றாக இருக்கிறது. அதிமுகவும் கழற்றி விட்டு தேமுதிகவும் கழற்றி விட்ட பின் மொத்தத் தமிழ் நாட்டிலும் இவர்கள் பத்து வாக்குகள் கூட வாங்க மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பொது கிட்டத் தட்ட நூறு பல்வேறு பதவிகளைப் பெற்றிருப்பதைப் பார்த்தால் இன்னும் இவர்கள் அழிந்து விட வில்லை என்பது உறுதியாகிறது. வரும் காலங்களில் பெட்டி வாங்குவதைக் குறைத்துக் கொண்டு, இடது சிவப்புகளுடன் இணைந்து செயல் பட்டால் இன்னும் கொஞ்சம் உருப்படலாம். பார்க்கலாம், என்ன பண்ணக் காத்திருக்கிறார்களோ!

விடுதலைச் சிறுத்தைகள்: நான் ஓரளவு மதிக்கும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் திருமாவும் ஒருவர். ஓரளவு நியாயமாக நடப்பவர். வைகோ போல் கொஞ்சம் ஏமாளி. அரசியல்க் கட்டாயங்களால் சில நேரங்களில் பெரும் பெரும் சமரசங்கள் செய்ய நேர்ந்தவர். அளவுக்கு அதிகமாக மஞ்சள் துண்டின் பெருமைகள் பேசியது ஒன்றுதான் இவர் சமீப காலத்தில் செய்த மிகப் பெரும் தவறு. அதற்கான தண்டனை இந்தத் தேர்தலில் கிடைத்து விட்டது. சரியாக நேரத்தில் கழற்றி விட்டு நடு வீதியில் நாய் கடிக்க விட்டு வேடிக்கை பார்த்து விட்டார்கள். இனிமேலாவது இந்தப் பாடங்களை மனதில் வைத்து செயல்படுவாரா என்று தெரியவில்லை. செயல்பட முடியுமா என்பதே சரியான கேள்வி.

இவர் இவ்வளவு நியாயமானவராக இருந்தாலும் கட்சியில் அடிமட்ட ஆட்கள் பண்ணும் அநியாயம் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஒடுக்கப் பட்ட மக்கள் ஒன்று சேர வாய்ப்புக் கிடைக்கையில் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றாலும், அரசியல்க் கட்சி என்று வந்து விட்டால், மக்களின் நன் மதிப்பைப் பெரும் வகையில் நடிக்கவாவது செய்ய வேண்டும். அதெல்லாம் பழகுவதற்கு அவர்களுக்குக் கொஞ்சம் காலம் ஆகலாம். அதுவும் ஒடுக்கப் பட்ட மக்களின் கட்சி அல்லது தலைவன் என்றால் இயல்பாகவே எல்லோரும் வெறுத்து விட்டுத்தான் அவர் பற்றி அறிந்து கொள்ளவே முயல்வார்கள் - அதுவும் இன்னும் வெறுப்பதற்கு வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கத்தோடு. அதனால், வரும் காலங்களில் மிக மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒத்த சிந்தனையுடையவர்களோடு அணி சேர வேண்டும். அது தமிழ் அய்யாவோ மருத்துவர் அய்யாவோ அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே நம்ப வைத்துக் கழுத்தறுக்கப் படித்து விட்டு முறையே தமிழும் மருத்துவமும் படித்த பிறவிகள்.

இந்தத் தேர்தல் என்று பார்த்தால், இவருக்கும் ஒரு வாக்கு வங்கி இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் மருத்துவர் அய்யாவோடு சேர்ந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வெற்றிகள் கண்டிருக்கலாம். ஏனோ அது நடைபெற வில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். பாம்போடு படுத்திருப்பதற்கு இரவெல்லாம் முட்டிங்கால் போட்டுக் கொண்டு இருந்து விடலாம், இல்லையா? சென்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் இருந்த திமுக கோட்டையை அதிமுக உடைத்ததற்கு அங்கே வலுவாக இருந்த இவருடைய கட்சியும் ஒரு காரணம் என்பதை இப்போது நாம் எளிதாக மறுத்து விடலாம். ஆனால், அப்போது அது உண்மை.

கொஞ்சம் குறைவான திருட்டுகள் செய்து கொண்டு மனிதனை மனிதனாகக் கூட மதிக்கத் தெரியாத ஒரு தலைவியிடம் மண்டியிடுவதற்கு சகல அயோக்கியத்தனங்களும் செய்யும் - எல்லோரையும் மதிக்கும் ஒரு தலைவரை மதித்துச் சொரிந்து விடுவது மேல் என்று எண்ணினார். ஏமாந்து போனார். அடுத்து, இருவரும் அல்லாத அணி அமைப்பதில் இவர் முன்னின்று பணியாற்றுவதே முறை. செய்வாரா? ஒத்துழைப்பார்களா?

புதிய தமிழகம்: ஒரு மருத்துவரால் நடத்தப் படும் மற்றொரு சாதிக் கட்சி என்பர். ஆனால், என்னைப் பொருத்த மட்டில், ஒடுக்கப் பட்ட மக்கள் சாதி சார்பாகக் கட்சி நடத்தினால் அதை அப்படிச் சொல்லித் தட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கென்று அதற்கான தேவை இருக்கிறது. அதனால் அவர்களை ஒடுக்குபவர்களின் அரசியல்க் காட்சிகளில் இருந்து வேறு படுத்தியே பார்க்க வேண்டும். இந்த மருத்துவரும் முதலில் புரட்சிகரமான பொதுவுடமையராக இருந்து, பின்னர் திமுகவில் இருந்து, அதன்பின்னரே தனியாக வந்தவர். அரசியலே தெரியாமல் வந்து ஆட்டிக் கொண்டிருப்பவர் அல்ல.

தமிழகத்தில் கணக்கில் சேர்க்கத் தக்க மாதிரியான கட்சிகள் என்றால் அதில் கடைசியில் வருவது புதிய தமிழகம். இதற்குப் பின் வருவோர் யாரையும் நான் கட்சியாக மதிக்க வில்லை என்றே வைத்துக் கொள்ளலாம். பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று தம் முதல் எதிரி என்று தெரிந்தும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவோடு கூட்டணி அமைத்துக் களம் கண்டார். இருவருக்கும் நல்லதாகவே அது முடிந்தது. இவருக்கென்று பெரிதாக வாக்கு வங்கிகள் இல்லை. அதிக பட்சம் ஓரிரு சட்டமன்றத் தொகுதிகளும் ஓரிரு பாராளுமன்றத் தொகுதிகளும் சொல்லலாம். எனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்கள் பெற்றிருக்கும் சில பதவிகள் அவர்களைப் பொருத்த மட்டில் போதுமானவையே.

திருமாவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. ஆனாலும் இவர் வழி நடத்தும் மக்களும் அவர்களுடைய எதிரிகளும் திருமாவின் மக்களை விட அவர்களின் எதிரிகளை விட மாறுபட்டவர்கள். அதனால், அவர் போலவே இவரும் நடந்து கொள்ள முடியுமா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவரோடு இணைந்து நிறையச் செயல் பட வேண்டும். ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைதான் நோக்கம் என்றால் அதைச் செய்வதுதானே முறை. வரும் தேர்தல்களில் மூன்றாம் அணி அமைப்பதில் இவரும் முன்னின்று செயல்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் அரசியலே இருக்கக் கூடாது என்பதே சரியான வாதம் என்ற போதிலும், அந்தச் சூழல் வரும்வரை, எல்லாக் கட்சிகளும் இது போலவே வரும் காலங்களில் உள்ளாட்சித் தேர்தலைத் தனித்து நின்றே சந்தித்தால் நன்றாக இருக்கும். வென்ற கட்சி மட்டுமே இருக்கிறது என்றும் அதுவும் ஆளுங்கட்சி என்பதால்தான் இருக்கிறது என்றும் பேசுவோர் பேசிக் கொண்டிருந்தாலும் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளவும் தொலை நோக்கில் மென்மேலும் பலப் படுத்திக் கொள்ளவும் இதுவே நன்மை பயக்கும்.

திங்கள், நவம்பர் 14, 2011

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (2/3)

முந்தைய பாகத்தில் நீண்ட முன்னுரையும் தமிழகத்தின் இப்போதைய முதல் இரண்டு பெரிய கட்சிகள் பற்றியும் பார்த்தோம். எந்தச் சந்தேகமும் இல்லை. அவைதான் இப்போதைக்குத் தமிழகத்தின் இரு மிகப் பெரிய கட்சிகள். நமக்குப் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும். இந்தப் பாகத்தில் அடுத்த நான்கு இடங்களில் உள்ள கட்சிகள் (தேமுதிக, காங்கிரஸ், பாமக, மற்றும் மதிமுக) பற்றிப் பார்ப்போம். அடுத்த பாகத்தில் மிச்சமிருக்கும் உதிரிகள் அனைவர் பற்றியும் பார்ப்போம். அவர்களும் எளிதில் தவிர்க்கத் தக்க சக்திகள் அல்லர். அவர்களுக்கென்று விரலுக்குத் தக்க வீக்கமாய் சில கணக்குகள் இருக்கின்றன. அவற்றையும் பார்த்து விடுவோம்.

தேமுதிக: ஆரம்பத்திலேயே நிறையப் பேர் சொன்னார்கள் - இந்த ஆள் எதற்கும் பிரயோசனமில்லாத ஆள் என்று. நம்ப முடியாமல்தான் இருந்தது அப்போது. இப்போது நிரூபித்து விட்டார். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அடக்கி வாசித்தது சரிதான். அதற்காக செயல் படாமலே இருப்பது எப்படிச் சரியாகும்? எதிர்க் கட்சித் தலைவராக இருப்பதுதான் பேசுவதற்கு ஏதுவான பொறுப்பு. முதல்வராக இருப்பதை விட எளிதான பொறுப்பு. இதில் ஒன்றும் பிடுங்கா விட்டால் உறுதியாகச் சொல்லலாம். முதலமைச்சர் ஆனால் கண்டிப்பாக எதுவும் பிடுங்க மாட்டார் என்று. ஒரு பொறுப்பும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது. இதனால்தான் கட்சிக்குள் எல்லோரும் இப்போதே அண்ணன் போய் அண்ணி வருவது பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள். இவர் இந்த அளவுக்காவது தெளிவாக இருப்பதற்கு அவரே காரணம் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதனால் அவரே வந்து விட்டால் நல்லது என்றே நமக்கும் தோன்றுகிறது.

இரண்டாவது மூன்றாவது பெரிய கட்சிகளுக்கு உரிய எந்தத் தகுதியும் இல்லாத ஆள் என்றாலும், மக்கள் இவர்கள் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றே காட்டியிருக்கிறது இத்தேர்தல். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருக்கிறார்கள் என்பதற்காக இவர்களைத் திமுகவை விடப் பெரிய கட்சி என்று சொன்னது நம் தப்பு. அது அவர் தப்பல்ல. இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லி விட்டு, இப்போது பல இடங்களில் டெபாசிட் இழந்து விட்டதால் அவர் செல்லாக் காசு என்பது முட்டாள்த்தனம். அவருடைய வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏதும் ஏற்பட வில்லை. இடம் மூன்றாவது என்றாலும் அது பெரிய வெற்றியே. காங்கிரஸ், பாமக, மதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கியிருப்பது அவருக்கான இடத்தை உறுதி செய்கிறது. 

நாம் முன்பு சொன்னது போல, இப்போது தனித்து நின்று வென்று விட்டதால், அதிமுக இவர்களை இழிவாகப் பார்க்கக் கூடாது. அது கடைசிக் காலத்தில் வேண்டாத படிப்பினையையே கொடுக்கும் தலைவிக்கு. பத்து விழுக்காடு வாக்குகள் என்பது பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது மட்டுமின்றி, மக்களின் மனப்போக்கையும் மாற்ற வல்ல சக்தி என்பதை சர்க்காரியாத் தலைவரிடம் போய்க் கேட்டால் ஒத்துக் கொள்வார். இந்தம்மாவுக்கு அதெல்லாம் புரியாது. சொரிந்து விடும் தினமலர்களுக்குப் புரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போதைக்கு மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தால் அது இவர் தலைமையில்தான் அமைய முடியும். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தால் இவர் கைலாசம் போக வேண்டி வரும் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது. ஆனால், அப்படி ஒன்று நடந்தால், அப்போது இவர்தான் முதல்வர் வேட்பாளர். அதற்கான நம்பர் இவரிடம் இருக்கிறது. அதில் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை. 

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் இவரை இனி யாரும் நம்ப மாட்டார்கள் என்று திமுக அனுதாபிகள் பேசிக் கொண்டார்கள். அங்கே கூட்டணி வைத்ததால்தான் இன்று எதிர்க் கட்சி மரியாதை கிடைத்திருக்கிறது. ஆசைப்பட்ட ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. கூடுதல் உற்சாகத்தோடு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் தைரியமும் பசையும் கிடைத்திருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், முடிவுப் படி திமுக இரண்டாவது பெரிய கட்சி என்றாலும், தலைவர் சுத்த இத்த கேஸ் என்றாலும், இந்தத் தேர்தலில் உழைப்புப் படி இவர்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி.எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். திமுகவே ஆள் நிறுத்த முடியாமல் போன பல பகுதிகளில் இவர்களின் ஆட்கள் பட்டையைக் கிளப்பினார்கள். டெபாசிட்டே இழந்தாலும் இதில் ஒரு நன்மை இருக்கிறது. அடி மட்டத்தில் கட்சிக்கென்று விசுவாசிகள் உருவாக்கி விட்டார்கள். கட்சி அமைப்பு பலப் பட்டு விட்டது. இந்த விபரம் தெரியாமல்தான் காங்கிரஸ் கட்சி தன்னை அழித்துக் கொண்டது. கழற்றி விட்ட அடுத்த நாளே கலங்காமல் தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்தாரே, அதுதான் இவருடைய பலம். தைரிய லட்சுமணன். சரக்கு உள்ளே போனால் யாருக்கு வராது தைரியம்?

சிபிஎம் இவர்களிடம் வந்தது இருவருக்கும் நல்லதாய் முடிந்தது. இதில் அதிகம் ஆதாயம் அடைந்தது தேமுதிகதான் என்று சொல்ல வேண்டும். மதுரை மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் இடதுசாரிகளுக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அது இவர்களுக்கு மிகப் பெரும் நன்மை பயத்திருக்கும் என்றெண்ணுகிறேன். அது மட்டுமில்லை ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி என்பது தொலை நோக்கில் அவருக்கு இன்னும் பல நன்மைகளைப் பயக்கும்.

இவருடைய வளர்ச்சியால் பெரிதும் பாதிப்படையப் போவது வைகோ. அவ்வளவு கால அரசியல் அனுபவமும் நன்மதிப்பும் இருந்தும் சினிமா மோகத்தின் முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் போவதை அவரால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடிகிறதோ? :(

எது எப்படியிருப்பினும், இவர்தான் இன்றைய நம்பர் மூணு. அவரால்தான் நம்பர் டூவை நெருங்க முடியும்.

காங்கிரஸ்: இந்தத் தேர்தலில் மிகப்பெரும் இழப்பு இவர்களுடையதே என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதிர் பார்த்ததுதானே என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள். நம் கருத்து என்ன? இரண்டும் ஓரளவு சரியே. ஓரளவே சரி. ஏன்? ஏனென்றால், தமிழகத்தைப் பொருத்த மட்டில் சவாரி செய்தே அழிந்த கட்சி காங்கிரஸ். மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவைப் படும் எண்ணிக்கை எப்படிக் கிடைத்தாலும் சரி, கட்சியின் வளர்ச்சி பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிழைப்பை நடத்தினார்கள் டெல்லி வியாபாரிகள். அவர்களும் ஆசைப் பட்ட படியே கட்சிக்குள்ளும் கூட்டணி என்ற பெயரிலும் பேராசை பிடித்த சில பிறவிகள் அவர்களுக்கு வாய்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களின் அதிகார பலத்தால் நன்மை. அவர்களுக்கு இவர்களின் எண்ணிக்கை பலத்தால் நன்மை.

இப்படியே ஓடிய பிழைப்பில் வாத்தியாரின் மரணம் ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்து கொடுத்தது. 1989-இல் தனியாக நின்று என்னதான் நம் பலம் என்று பார்த்து விடலாம் என்று தைரியமான முடிவு எடுத்தார்கள் அண்ணல் ராஜீவும் அவருடைய அடிவருடிகளும். அந்த தைரியத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அது - நடந்தது சட்டமன்றத் தேர்தல்தானே என்பது. எப்படியானாலும் இரண்டு வருடங்களுக்குப் பின் வரப் போகிற பாராளுமன்றத் தேர்தலுக்குள் ஏதாவதொரு மீன் சிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்திருக்கும். அவர்கள் எதிர் பார்த்தது போலவே 91-இல் புதிய அதிமுக என்ற மீன் சிக்கத்தான் செய்தது. அதற்கு முன் 89 கதையைப் பேசி விடுவோம். தனியாக நிற்கலாம் என்று முடிவு எடுத்தார்களா? ஆம். எடுத்தார்கள். எந்த தைரியத்தில் அப்படி எடுத்தார்கள் என்று கேட்கிறீர்களா? காரணம் இருந்தது.

அதிமுக இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தது. பத்து வருடங்களுக்கு மேலாக அப்போது வரை திமுக சிறப்பாக இருக்க வில்லை. அதனால், நமக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. திராவிடர்கள் எல்லோரும் அடித்துக் கொண்டு சாகையில் பிரிகிற வாக்குகள் நமக்கும் கொஞ்சம் சாதகமாக அமையும் என்று நம்பி இறங்கினார்கள். அதுவும் சரியென்றே முடிவுகள் உணர்த்தின. நூற்றுக்கும் மேலான இடங்களில் திமுக வென்றபோது 27 இடங்களில் ஜெ அணி வென்றது; மூன்றாவதாக 26 இடங்களில் காங்கிரஸ் வென்றது. நன்றாகக் கவனியுங்கள் - இது தனியாக நின்று பெற்ற வெற்றி. இதன் மூலம் புரிவது என்ன? அன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி. வாத்தியாரின் மனைவி ஜா. வின் கட்சியைவிட - கிட்டத்தட்ட அவருடைய தோழி ஜெ. வின் கட்சி அளவுக்குப் பெரிய கட்சி.

அவர்களுக்கென்று ஒரு வலுவான வாக்கு வங்கி இருந்தது. நேருவும் இந்திரா காந்தியும் விட்டுச் சென்ற வாக்கு வங்கி. காமராஜர் விட்டுச் சென்ற வாக்கு வங்கி ஒன்றும் இருக்கிறது. அவருக்காக ஒரு கூட்டம் இருக்கிறது. அது மட்டுமில்லை, இன்றைக்கும் தென் தமிழகத்தில் நாடார் பகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி ஓர் அழிக்க முடியாத சக்தியாகத்தான் இருக்கிறது. ஐயாவும் அம்மாவும் ஓரளவு அதை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. அந்தக் காலத்தில், "கீழே இரட்டை இல்லை; மேலே கை!" என்றுதான் எங்கள் ஊர்ப் பக்கம் உள்ள பெரிசுகள் சொல்வார்கள். வாத்தியோரோடு கூட்டணி வைத்து வைத்து - பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப் படியான இடங்களில் நின்று நின்று மக்களுக்கு அந்தச் சின்னம் நன்கு பழக்கப் பட்டிருந்தது. அவருடைய காலத்துக்குப் பின்பு இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்று இவர்கள் நீண்ட காலமாகவே ஒரு பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உண்மைதான். அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்று சொல்வதற்கில்லை. மூப்பனார் என்ற மனிதர் இருக்கும் வரை இது தொடரத்தான் செய்தது. அவர் பிரதமர் ஆகியிருந்தால் இன்னும் வளர்ந்திருப்பார்கள். அதை அறிந்துதான், தன் பிள்ளைகளின் வாழ்க்கையல்லவா பாழாகி விடும் என்று பயந்துதான் அதைக் கெடுத்தார் நம்ம தமிழைய்யா. அவர் காலத்திலேயே ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்துத்தான் மூப்பனார் இந்த மண்ணை விட்டுப் போனார். அதன் பிறகு 'சொய்ங்' என்று கீழே கீழே போய்க் கொண்டே இருக்கிறார்கள் இன்று வரை.

அம்மையார் சொதப்பிய சொதப்பில், இவர்கள் திமுக கூட்டணியோடு வந்த போது ஒரு 40 / 40 வேறு கொடுத்தோமா இடையில்... அதில் திரும்பவும் கொஞ்சம் ஏறிக் கொண்டிருந்தார்கள். இலங்கைப் பிரச்சனை வந்தது. அதிலும் காசை வாங்கிக் கொண்டு கொலைகாரக் கைக்குத்தான் போட்டோம் நம் ஓட்டுகளை. அதற்கடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில்தான் அடின்னா அடி அப்படி ஓர் அடி கொடுத்தோம். ஊழல்க் கோபமும் இருந்தது; ஈழக் கோபமும் இருந்தது. கருவறுப்போம் என்ற சீமான் போன்றோரின் பேச்சும் எடுபட்டது. ஒட்டு மொத்தத் தமிழகத்தை விடச் சற்றே வேறுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே இவர்களுக்குக் கை கொடுத்தது. மற்றபடி அது ஒரு மரண அடி என்றே சொல்ல வேண்டும்.

எங்கெல்லாம் கட்சிக்கு உயிர் கொடுக்கப் போகிறேன் என்று ராகுல் கிளம்பினாரோ அங்கெல்லாம் உயிர் குடிக்கத்தான் பட்டது. அதில் தமிழ் நாடும் ஒன்று. இதுதான் இவர்களை வைத்திருக்க வேண்டிய இடம் என்று தமிழகம் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தது. இதை நன்றாகப் புரிந்து கொண்டே துண்டுக்காரர் இவர்களைக் கழற்றி விட்டார். அவர் கழற்றி விட்ட போது நாம் எதிர் பார்த்ததோ இதை விடக் கேவலமான ஒரு தோல்வி. நாம் ஆசைப் பட்ட படியான தோல்வி இவர்கள் அடைந்து விட வில்லை. இன்னும் ஐந்தாம் - ஆறாம் இடங்களுக்குப் போய் விட வில்லை. நான்கில்தான் இருக்கிறார்கள். அப்படியானால், என்ன அர்த்தம்? அவர்களும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சிதான் அடைய வேண்டும். பெரிதாக யாரும் வந்து பிரச்சாரம் செய்ய வில்லை. அவர்களுக்கே எந்த நம்பிக்கையும் இருக்க வில்லை. நகரங்களில் உள்ள மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டார்கள். அதையெல்லாம் கடந்து இவ்வளவு வாக்குகளும் வெற்றிகளும் பெற்றிருப்பது என்னைப் பொருத்த மட்டில் வெற்றியே. அது நமக்கு நல்லதில்லை என்றாலும் அதுதான் உண்மை.

பாமக: இந்தத் தேர்தலின் மிகப் பெரிய இழப்பாளி பாமக என்றுதான் சொல்ல வேண்டும். சாதிக்காக ஆரம்பிக்கப் பட்ட ஓர் இயக்கம், பின்பு ஏதோ சாதிக்க உருவானவர்கள் போல் நடிப்பெல்லாம் போட்டு, ஒரு குறிப்பிட்ட சாதியினரிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி அதே அளவு மற்றவர்களின் வெறுப்புக்குள்ளாகி, யாராலும் மூச்சுக் காற்று கூடத் தீண்ட முடியாத சூப்பர் நடிகராக இருந்தவரை கொஞ்ச காலம் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அடங்க வைத்து, தேசிய அரசியலிலும் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து, ஒவ்வொரு தேர்தலிலும் இந்தாண்டையும் அந்தாண்டையும் தாவித் தாவி மனிதன் எதில் இருந்து வந்தான் என்பதை எல்லோருக்கும் நினைவு படுத்திக் கொண்டே இருந்தவர்கள். இன்று இவர்கள் பட்டிருக்கும் அடியைப் பார்த்து மொத்தத் தமிழகமும் மகிழ்கிறது. அந்த அளவுக்கு அவர்களுடைய ஆட்டங்களைச் சகித்துக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருந்திருக்கிறார்கள் இவ்வளவு நாட்களாக.

மதிமுக போல மாநகராட்சிகளில் மூன்றாம் இடம் வர வில்லை. நகராட்சி எதிலும் வெல்ல வில்லை. ஆனாலும் அவர்களை விடக் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள் என்பதே ஆறுதலுக்கு உரிய விசயம்தான். வரும் தேர்தல்களில் இந்த வாக்கு விகிதத்தைக் காட்டி சீட்டுக் கேட்டு அடம் பிடிக்கலாம். பல ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வந்திருப்பது இன்னும் அடி மட்டத்தில் உடைந்து நொறுங்க வில்லை என்றே காட்டுகிறது. இவர்களுடைய அழிவுக்கு கேப்டனுக்கு நிறையவே நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடைய வாக்கு வங்கியை மொத்த மொத்தமாகக் கொள்ளை அடித்ததே அவர்தான். எந்த இனமும் முன்னுக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை அளவிடுவதே அவர்கள் சங்கம் வைத்துக் கட்சி நடத்தி அரசியல் செய்கிறார்களா என்பதைப் பொருத்துத்தான் தீர்மானிப்பேன். ஒருவர் பின்னால் போய் அவருடைய குடும்பமும் சுற்றமும் வளம் கொழித்துத் திரிய வாய்ப்புக் கொடுக்காமல் இவர்கள் சிதறுவது சொந்தமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

கட்சிக்குள்ளும் கொஞ்சம் கரைச்சல் கேட்கிறது. அடுத்தடுத்து ஆட்கள் வெளியேறிக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். வேறொருவர் பேசினால்தான் இனத்தைச் சொல்லி ஆட்கள் சேர்த்து எதிர்க்க முடியும். உள்ளுக்குள் இருக்கும் நம்மில் ஒருவரே எதிர்த்தால் எப்படிச் சமாளிப்பது? இப்படித்தான் மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டும். அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்ட ஏ. கே. மூர்த்தியை அழிக்க முயன்ற போதே சுதாரித்திருக்க வேண்டியவர்கள் கொஞ்சம் மெதுவாகச் சுதாரித்திருக்கிறார்கள். வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப் பட வேண்டும் என்கிற கதையை மகனுக்குச் சொல்ல வேண்டியதுதானே? நல்லது எப்போது நடந்தாலும் நல்லதுதானே. இப்போதுதான் நடக்க ஆரம்பித்து இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளுடனாவது சேர்ந்து செயல் பட்டிருக்கலாம். அதையும் செய்ய வில்லை. மருத்துவரின் ஆளே என் நண்பர் ஒருவர் சொல்வார் - "பாவம் அண்ணன் திருமா. அய்யா அய்யா என்று தொங்கிக் கொண்டிருக்கிறார். அய்யா புத்தி அவருக்குச் சரியாகத் தெரிய வில்லை. சரியான நேரத்தில் ஆப்பு அடிக்கப் போகிறார். அத்தோடு மனிதன் தலை தெறிக்க ஓடப் போகிறார்!" என்று. நல்ல வேளை அப்படியெல்லாம் ஏதும் நடக்க வில்லை என்று நிம்மதிப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

மதிமுக: இன்று இணையத்தில் செய்தி வாசிக்கிற அளவு இருக்கும் இளைஞர்களின் ஓரளவு மரியாதை பெற்றிருப்பவர் வைகோ. அவர் ஒருவரை வைத்துதான் இயக்கம் என்றாலும் அவரிடம் இன்னமும் இருப்பவர்கள் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் அவருக்காகவும் அவருடைய அரசியலுக்காகவும் மட்டுமே இருப்பவர்கள். கோடிகளுக்கெல்லாம் ஏமாறாதவர்கள். சரியோ தவறோ கொள்கையை முன் வைத்து அரசியல் செய்பவர்கள். ஜெயலலிதாவுடன் இருந்தால் மட்டும் இவரைப் புகழும் தினமலரே இவருடைய அரசியல் நேர்மையைப் பாராட்டி இருக்கிறது. எந்தப் பக்கம் இருந்தாலும் அந்தப் பக்கத்துக்கு ஓவராகவே விசுவாசம் காட்டி வீணாய்ப் போனவர்.

சட்ட மன்றத் தேர்தலில் கழற்றி விடப் பட்ட போது மூன்றாம் அணிக்கான ஓர் அரிய வாய்ப்பு உருவானது. அதை உருவாக விடாமல் செய்த பெருமை அல்லது பழி இவரையே சாரும். அதைச் செய்திருந்தால் ஒரு புரட்சி நிகழ்ந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வந்திருக்கும் என்பது வைகோ மற்றும் நம் மக்கள் பலருடைய கணிப்பு. தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஒரு முடிவெடுத்து அறிவித்த போது அது நல்ல முடிவென்றாலும் அவரை அழிக்கப் போகிறதோ என்றுதான் தோன்றியது. அப்படி ஆக வில்லை. முதல் முறையாக அவர் எடுத்த முடிவு ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப் பட்டது இம்முறைதான்.

ஜெயலலிதா இவரைக் கழற்றி விட்ட போது அதிமுகக் காரர்களே அவர்களுடைய அம்மாவைத் திட்டினார்கள். அந்த அளவு அவர்களிடம் நம்பிக்கை பெற்றிருந்தார். சன் டிவியின் கருத்துக் கணிப்பில் கூட அதிமுகவின் அடுத்த ஆள் யார் என்று கேட்ட கேள்வியில் வைகோவை ஒரு பதிலாகச் சேர்த்திருந்தார்கள் (இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கத்தான் என்றாலும்!). திமுகவோடு இருந்த போது அந்தக் கட்சிக் காரர்கள் இவரை அதிகமாக நேசித்தார்கள். வாஜ்பாயும் "என் மகன் போல!" என்பார். மன்மோகன் சிங்கும் "என் மரியாதைக்குரிய நண்பர்!" என்பார். அந்த அளவு எந்த அணியிலும் முழுமையாக ஒன்றி விடுபவர்.

உள்ளாட்சித் தேர்தலில் இதை விடச் சிறப்பான ஒரு தீர்ப்பை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் கிடைத்ததே பெரிது என்று எண்ணிக் கொண்டும் திருப்திப் படும்படிதான் இருக்கிறது. இரண்டு மாநகராட்சிகளில் மூன்றாம் இடம். முக்கியமான காரணம் - அவர் நிறுத்திய ஆட்களின் தராதரம். இதே சூத்திரத்தை வரும் காலங்களிலும் கைக்கொண்டால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகலாம். குளித்தலை நகராட்சியில் பெற்றிருக்கும் வெற்றி திருச்சி மாவட்டத்தை அவருக்கு ஒரு முக்கியமான இடமாக்கி இருக்கிறது (கருணாநிதி முதன் முதலில் சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதி குளித்தலைத் தொகுதி!).

பரவலான வாக்குகளையும் வெற்றிகளையும் வைத்துப் பார்த்தால் பாமகவை விடப் பெரிய கட்சி என்று காட்டி விட்டார் என்று சொல்லலாம். ஆனால் வாக்கு விகிதம் அவர்களுக்கே அதிகம் இருக்கிறது. வரும் காலங்களில் இரு பெரும் கழகங்களோடு சேராமல் இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நிதி நிலையும் மக்கள் ஆதரவும் இடம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இவர் முதலமைச்சர் ஆகா விட்டாலும் பரவாயில்லை. தமிழக அரசியலில் இவருக்கென்று ஓரிடம் இருந்தே ஆக வேண்டும். அதற்கு உத்திரவாதம் கொடுப்பதாக இந்தத் தேர்தல் இருக்கிறது.

எல்லோரும் துள்ளிக் குதித்தது போல இவர் முழுமையாக இன்னும் அழிக்கப் பட்டு விட வில்லை என்பதே நமக்கு நல்ல செய்திதான். இத்தனை பணப் பட்டுவாடாக்களுக்கும் மத்தியில் (சென்ற ஆட்சியில் இவருடைய கட்சிக் காரர்களை வளைத்தார்கள்; இந்தத் தேர்தலில் இவருக்கு வாக்களிக்கும் மக்களைக் காசு கொடுத்து வளைத்தார்கள்!), அதையெல்லாம் வென்று இப்படி ஓர் இடத்தைப் பிடித்திருப்பதே இவருக்கு மாபெரும் வெற்றி. இதில் இருந்து மென்மேலும் இயக்கத்தைக் கட்டி எழுப்பட்டும் என்று வாழ்த்துவோம்.

மரியாதைக்குரிய மற்ற உதிரிகள் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

ஞாயிறு, நவம்பர் 13, 2011

கவிதையா? உரைநடையா?

திடீரெனச் சில நாட்களாகக் கவிதைகளின் பால் ஓர் அதீத - புதீத ஈடுபாடு. ஏன் என்று புரியவில்லை. கூடி வரும் சோம்பலின் அறிகுறியோ என்றும் சந்தேகமாக இருக்கிறது. உரைநடை என்றால் நிறைய எழுத வேண்டுமே என்ற உள்ளுணர்வு ஒரு புறம் அவற்றின் பக்கம் திரும்ப விடாமல் உதைக்கிறது. உரைநடையை விடக் கவிதைகளைப் பிரசவிப்பது வலி குறைந்த வேலை என்று எளிதாகச் சொல்லி விடவும் முடியாது. அளவிற் சிறிய படைப்பு போல இருந்தாலும் எடையில் கூடுதலாக இருப்பதுண்டு பல நேரங்களில். அது பற்றி நிறையச் சிந்திக்க வேண்டும் போல் இருந்தது இன்று. கொஞ்சம் குடைந்தேன் மண்டையை. இதுதான் இன்று முழுக்க என் மனதில் தோன்றியவை...

வாசிக்கிற அல்லது எழுதுகிற எல்லோருக்குமே அல்லது பெரும்பாலானவர்களுக்கு கவிதையின் மீதுதான் முதல்க் காதல் வருகிறது. அதுதான் பின்னர் உரைநடைப் பக்கம் வருகிறது. கதை அல்லது கட்டுரை அல்லது இரண்டும் என்று ஒரு தடம் பிடித்துப் பயணிக்கிறது. கூடுதல்த் தேடல்தான் அல்லது கொடுக்க வேண்டிய கட்டாயம்தான் உரைநடை உருக்குள் நிறையப் பேரை இழுத்து வருகிறது. அது போல கவிதையிலேயே தம் தேடலை விரிவு படுத்திக் கொள்வோரும் ஆழப் படுத்திக் கொள்வோரும் மென்மேலும் அள்ளிக் கொடுக்க முடிந்தோரும் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னைப் பொருத்த மட்டில் பேசுபொருளைப் பொருத்து உருவை முடிவு செய்கிறேன். சிலவற்றைக் கவிதையில் பேசுவது நன்றாகவும் சிலவற்றைக் கதைகளில் சொல்வது எடுப்பாகவும் சிலவற்றைக் கட்டுரையில் செப்புவது சிறப்பாகவும் இருப்பதாக உணர்கிறேன். சிலவற்றைக் குறிப்பிட்ட ஓர் உருவில் கொடுக்கும் போது வேலையும் எளிதாக இருக்கிறது. அது உண்டாக்கும் பாதிப்பும் நன்றாக இருக்கிறது. சில பொருட்கள் ஒன்றுக்கு மேலான உருக்களில் படைக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் ஓர் உருவில் சொல்வது கடினமாக இருந்தாலும் நாம் மனதில் வைத்திருந்த மாதிரியான - நமக்கு வேண்டிய மாதிரியான விளைவைக் கொடுக்கிறது.

கவிதைகளின் மீதான இந்த ஈர்ப்பு முற்றிலும் புதிதென்று சொல்லி விட முடியாது. முதன் முதலாக மைப் பேனா பிடித்து எழுத முயன்ற போது வந்தது கவிதை மைதான். அதன் பின்பு பள்ளிக் காலம் முழுக்க எழுத்தோடு இணைத்து வைத்திருந்தது கவிதைதான். கல்லூரியிலும் இலக்கிய வேடம் அணிந்து கொள்ள ஏதுவாக இருந்தது கவிதைதான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் (அது ஒன்றும் நீண்ட காலம் ஆகி விட வில்லை!) கவிதை எழுதும் மாணவர்கள் நிறைய இருந்தார்கள். இப்போதெல்லாம் அது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில் கல்லூரி மாணவர்களிடம் கண்டு நான் அப்படி ஆச்சரியப் பட்ட ஒன்று - அவர்களின் ஆங்கிலச் சினிமா ஆர்வம். நாங்கள் எல்லாம் அந்தப் பக்கமே போனதில்லை. இப்போது இளைஞர்கள் எல்லோருமே அவற்றை மிகச் சாதாரணமாக - தமிழ்ப் படம் பார்ப்பது போலப் பார்த்து ரசிக்கிறார்கள்.

அதை விடுங்கள். நம்ம கதைக்கு வருவோம். காதல் போதைக்கு எங்களவர்கள் எல்லோருமே கவிதையை ஒரு முக்கியமான ஊறுகாயாகப் பயன்படுத்தினார்கள். காதல் போதை என்பது காதலிப்பவர்களுக்கு மட்டும் இருப்பதில்லை; காதலிக்க ஆசைப் படுவோர் எல்லோருக்குமே இருப்பது என்பது நீங்கள் எந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சொல்லாமலே புரியும் இரகசியம் என்று நம்புகிறேன். கல்லூரி சென்றாலும் செல்லா விட்டாலும் - நல்ல பிள்ளையாக இருந்தாலும் கெட்ட பிள்ளையாக இருந்தாலும் - காதலிக்கும் ஆசை என்பது பதின்மத்தின் மீசை அரும்பும் போது எல்லோருக்குமே அரும்பியே தீரும் என்பதும் அப்படியே அறியப் பட்ட இன்னொரு இரகசியம் என்பதையும் அறிவேன். இதில் கமல்-மோகன்களுக்கும் வாலி-வைரமுத்துகளுக்கும் மிகப் பெரும் பங்கு இருக்கிறது.

இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்க்கையில் இப்போதைய ஆட்களிடம் மட்டுமல்ல அப்போதைய ஆட்களிடமும் கவிதை ஆர்வம் குறைந்து விட்டது போல ஓர் உணர்வு. அது முற்றிலும் தவறான ஒரு புரிதலாகவும் இருக்கலாம். நான் அப்படி உணர்வதற்கான ஒரு காரணம் - வலைப்பதிவில் இடப்படும் கவிதைகளை விட உரைநடை இடுகைகள்தாம் அதிகம் வாசிக்கப் படுகின்றன. இது என்னுடைய பதிவை மட்டும் பார்த்து எடுத்த முடிவு. அதற்குக் காரணம் - என்னுடைய கவிதைகளை விட உரைநடை பரவாயில்லை என்றோ ("நீ எழுதும் எதுவுமே விளங்கவில்லை" என்று சொல்ல முனைவோர் இங்கே மன்னித்து விடுக!) அல்லது நான் எழுதும் உரைநடைகள் தமிழ்ப் பதிவுலகின் ஆர்வத்துக்கு ஓரளவு ஒத்துப் போகின்றன என்றோ கூட இருக்கலாம். என்னுடைய உரைநடைகளே சில சீந்த ஆளில்லாமல் போனதும் உண்டு.

அது என் சொந்தக் கதை. ஒட்டு மொத்தப் பதிவுலகையே பார்த்தாலும் கூட கவிதைகள் அதிகம் தட்டுப் படுவது போலத் தெரியவும் இல்லை. இத்தனைக்கும் கவிதைகள்தாம் விரைவுணவு போல் உண்டு களித்துத் துடைத்துப் போட்டுச் செல்ல வசதியானவை. இன்னொன்று - பதிவுலகம் என்று நான் பார்த்தது ஓர் உரைநடைகளின் பகுதியாக இருக்கலாம். ஒருவேளை வேறொரு பகுதியில் கவிதைகள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கலாம். இந்தப் பத்தி வரை இதை யாராவது பொறுமையாகப் படித்து வந்திருந்தால் உங்களிடம் ஒரு விண்ணப்பம் - இதில் என் புரிதல் சரியா என்பதையும் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் கவிதைகள் எந்த இடத்தில் இருக்கின்றன என்றும் உங்களால் தெளிவு படுத்த முடியுமா?

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் இலக்கியம் என்றால் அது செய்யுள் வடிவம் மட்டும்தான். உரைநடை என்று ஒன்றே இருக்க வில்லை. அதிலும் நிறுத்தற்குறிகள் என்பதே நம் மொழியில் இருக்கவே இல்லை. இவை அனைத்தும் நம்மிடம் கடை விரிக்க வந்தோரும் மதம் பரப்ப வந்தோரும் கொண்டு வந்தவை என்பதுதான் உண்மை. அதற்காக வருந்த வேண்டியதில்லை. எளிதாக எல்லோரையும் எழுத்து மொழியைப் பயன் படுத்த வைத்தது இந்த இறக்குமதிகள்தாம். இந்தப் புதுமைகள் வந்திரா விட்டால் மொழியும் வலியோரிடம் மட்டுமே மாட்டிக் கொண்டு இந்த மண்ணில் ஏற்றத் தாழ்வை நியாயப் படுத்திக் கொண்டு இருந்திருக்கலாம் இன்று வரை. சென்ற நூற்றாண்டில்தான் - மாயூரம் வேதநாயகம் பிள்ளையோ முதலியாரோதான் முதன் முதலில் தமிழில் புதினம் படைத்த புண்ணியவான் என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கிறது என் மனதில். "பசுமரத்தாணி போல்..." - இதுவும் அங்கே படித்தது தானே! :)

கவிதை எழுதும்பொதெல்லாம் உணர்கிற இன்னொரு நல்ல விஷயம் - சொற்களுடனான என் உறவு அப்போதுதான் அதிகம் புதுப்பிக்கப் படுகிறது. கவிதையில்தானே சொற்களுடனான விளையாட்டு அதிகம் நடக்கிறது. அழகியல் அதிகம் இருக்கிறது. அந்த அளவு அழகியல் மற்ற உருக்களில் இல்லை. அது போலவே கட்டுரைகளில் உள்ளது போல ஆய்வு ரீதியான தகவல்களை கவிதைகளில் தருவது சிரமம். அதையும் முன்பு செய்யுள்களில் செய்த முன்னோர்களின் பிள்ளைகள்தாம் நாம் என்றபோதும். தொல்காப்பியம் என்ன அழகியல் மட்டுமே உள்ள கவித் தொகுப்பா என்ன? அது மட்டுமில்லை. பெரும் பெரும் கதைகளையும் செய்யுள் வடிவில் சொல்லத்தான் செய்தார்கள் நம்மவர்கள். கம்ப இராமாயணத்தை விட பெரிய கதை இருக்கிறதா என்ன? அதனால்தான் அவை சில பண்டிதர்களுக்கு மட்டுமே புரிந்த இலக்கியங்களாக இருந்தன.

கவிதை மட்டுமே எழுதவும் வாசிக்கவும் தெரிந்த சின்ன வயதில் சிறு பிள்ளைத் தனமாகக் கோணங்கியிடம் ஒரு கேள்வி கேட்டேன், "சித்தப்பா, நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை?". "கதையிலேயே கவிதைதானே எழுதுகிறோம்!" என்று எப்போதும் போல் புரிய முடியாத மாதிரி ஏதோ சொன்னார். எப்போதும் போலவே அதுவும் கொஞ்ச காலம் கழித்துச் சரியாகப் புரிந்தது. அதாவது, 'கவிதை நடையிலேயே கதை எழுத முடியுமென்றால் கவிதை ஏன் தனியாக எழுத வேண்டும்?!' என்று புரிந்தது. அதன் பின்பு எனக்கும் அப்படி எழுதுவதிலேயே ஆர்வம் அதிகமாக இருந்தது. கவிதை என்றால் அது எதுகை மோனையோடு - சந்தத்தோடு அந்தக் காலச் செய்யுள் போல் இருக்க வேண்டும் என்றில்லை. செய்யுள், பாடல், மரபுக் கவிதைகள் போல் அல்லாமல் கருத்துக்களில் சந்தம் காட்டுவதே புதுக் கவிதை. ஒரு கவிதைக்குரிய புறத் தோற்றம் எதுவும் இல்லாமல் கருத்துச் செறிவோடு சொல்லப்படுவதுதான் புதுக்கவிதை. அதைத்தான் கோணங்கியின் எழுத்துக்களில் ஒவ்வொரு வரியிலும் காண்கிறோம். அதனால்தான் பலர் எழுதும் புதுக் கவிதைகள் போலவே அவர் எழுதும் உரைநடைகளும் நம்மில் பலருக்குப் புரிவதில்லை.

அதாவது, பலர் தத்துவம் என்று தலைப்புப் போட்டுச் சொல்வதை விட அதிகமான தத்துவங்களைத் தம் அன்றாட உரையாடல்களில் சர்வ சாதாரணமாக உதிர்த்து விட்டுப் போவார்கள் சிலர். அது போலவே கவிதை என்று சொல்லி எதையோ தந்து மாட்டிக் கொள்வதற்கு அப்படிச் சொல்லாமலே உரைநடையில் உதிர்த்து விட்டுப் போய் விடலாம் அல்லவா?! அதில் ஒரு வசதி - அவை தத்துவமே இல்லை என்றோ கவிதையே இல்லை என்றோ யாரும் வந்து சண்டை போட்டு நேரத்தை வீணடிக்க முடியாது. ஆனால், அப்படிச் சொல்லிச் சொல்லிக் காட்டா விட்டால் நிறையப் பேருக்கு நம் பக்கம் கவனமே திரும்பாதே. வியாபார உலகத்தில் வெற்றிக்கு கவன ஈர்ப்பு கண்டிப்பாகத் தேவைப் படும் ஒரு காரணியாக இருக்கிறதே.

மற்ற உருக்களை விட கவிதைகள் அளவுக்கதிகமான வெவ்வேறு உள்ளுருக்கள் கொண்டுள்ளன. "இதுவல்லவோ கவிதை?!" என்று ஒருத்தர் சிலாகிப்பதை, "இதெல்லாம் கவிதையா கருமம்?" என்று இன்னொருத்தர் சொல்லும் அளவுக்கு வேறுபாடு இங்குதான் இருக்கிறது. இதில் என் போன்றோருக்கு ஒரு வசதியும் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டு "என்னைப் பொருத்த மட்டில் இது கவிதைதான்!" என்றோ "இதுதான் கவிதை!" என்றோ அடித்துப் பேசலாம். "உனக்குப் பிடிக்கா விட்டால் அது உன் கோளாறு... உன் கவிதைச் சுவையில் இருக்கும் குறைபாடு!" என்று பாதுகாப்பான ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொண்டு தப்பிக் கொள்ளலாம். எனவே, இப்போது நான் சொல்ல வருவதெல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு உங்களை எல்லாம் கவிதை என்ற பெயரில் நிறைய இம்சிக்கப் போகிறேன். ஒன்றாவது உண்மையிலேயே கவிதையாக இருக்கிறதா என்று எடை போடவாவது பொறுமையாக அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போங்கள். அதில் உங்கள் கவிதைச் சுவைக்கு விருந்து கிடைக்கிறதோ இல்லையோ எனக்கு மருந்து கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. 

ஆயிரங் காலத்துப் பயிர்

முடிந்து விட்ட எல்லோரும் சொல்வார்
எண்ணியது போல் இனிப்பல்ல இப்பயிர்
கக்க வைக்கும் கசப்பு என்று
எதையும் 
முழுதாய் நம்பத் தேவையில்லை

அதே வேளையில்...
எவருக்கு எப்படியோ
'எனக்கு' இனிக்கத்தான் செய்யும் என்று
எதிர்த்துப் பேசி விட்டு
அதை அனுபவித்தே தீருவேன் என்று
அடம் பிடித்து ஓடி வருவோரையும்
எப்போதும் ஏமாற்றுவதில்லை
இந்தப் பயிர்

அன்போடு வரவேற்று
அமிர்தம் கொடுத்து
ஆற அமர
அமர வைத்து விட்டுத்தான்
அடுத்து வேலையைக் காட்டும்

முதலில்
மயக்கும் அதே அமிர்தம்
முப்பதும் அறுபதும் முடிந்த பின்னால்
மருந்தாய்க் கசந்திடும் மாயம் மட்டும்
மனிதக் கணக்குகளில் மாட்ட மறுக்கிறது

முதலில்
கிளர்ச்சியோடு ஆரம்பிப்பதுதான்
முப்பதும் அறுபதும் முடிந்த பின்னால்
வளர்ச்சிக்குத் தடையாக ஆகிறது

மணத்துக்கு முந்தைய மனம் சொல்கிறது
மண வாழ்க்கை காணாத மண் வாழ்க்கை
முழுமையடையாத முட வாழ்க்கை என்று

அதே மனம்தான் அப்புறம் சொல்கிறது
மண வாழ்க்கையென்ன
பிண வாழ்க்கை என்று

பெரும்பாலும் திசை திருப்புகிறது
சிலருக்கு வந்த திசையிலேயே திருப்பி அனுப்புகிறது
சிலருக்கு வேகத் தடை போடுகிறது
சிலருக்கு வேகம் கொடுக்கிறது
சிலருக்கு முற்களை விதைத்துக் கற்களை வீசுகிறது

அழாதவர்களை அழ வைக்கிறது
விழாதவர்களை விழ வைக்கிறது
தொழாதவர்களைத் தொழ வைக்கிறது

மாற்றத்தின் அளவு தெரியாமலே
மாட்டிக் கொண்டோர் நிறைய
ஏற்றம் என்றெதிர்பார்த்து
நாற்றப் பாதாளங்களில்
விழுந்து விழிப்போர் நிறைய

தகாத மணங்கள்
அகால மரணங்கள் போல்
சந்ததிகளையே அழிக்கும் சக்தி கொண்டவை
அதனாற்தான் அது ஆயிரங் காலத்துப் பயிர்

ஆயிரங் காலத்துக் களைகள்
பாதியில் அழிந்த பயிர்கள்
பூக்காது போனவை
காய்க்காது போனவை
அதிகம் நீர் பாய்ச்சி அழுக விட்டு அழிக்கப் பட்டவை
காயப் போட்டுக் கொல்லப் பட்டவை
பூச்சி மருந்தால் புழுத்துப் போனவை
வேலி போட்டதால் வெறுப்படைந்து ஒடிந்தவை
ஊடு பயிர் வந்து உலப்பி விட்டவை

விதைக்காமலே விட்டிருக்கலாமே என்று
விசனம் கொள்ள வைத்தவை

விதைக்காது விட்டுப் பின்னர்
அதற்காக அழ வைத்தவை

இது போல் இன்னும்
எத்தனை எத்தனை இனங்களோ
இந்தப் பயிர்களில்

ஆனாலும்... 
பருவத்தே பயிர் செய் என்று 
பழைய முறையிலேயே
விதைப்போர் விதைத்துக் கொண்டுதான் உளர்

காலம் மாறிவிட்டது
கலப்பை போய்விட்டது
வேளாண் விதங்கள் மாறிவிட்டன
விசைக்கலப்பைகள் வந்து விட்டன

புதியன புகுத்திப்
புத்துயிர் கொடுக்க வேண்டும்
இப்பயிர்த் தொழிலுக்கும்

எளிமைப் படுத்தி
ஏற்றம் கொடுக்க வேண்டும்
இப்பயிர்த் தொழிலுக்கும்

இல்லையேல்...
வாடிச் சாவான் சம்சாரி!
சார்ந்தோ சாராமலோ
வருந்திச் சாவாள் அவன் சம்சாரம்!

சனி, நவம்பர் 12, 2011

இந்தியா - பன்முகப் பண்பு நோய் (MULTIPLE PERSONALITY DISORDER)


இது ஒரு நாடல்ல கண்டம்
குறைந்த பட்சம் ஓர் உபகண்டம்

சில கண்டங்களைக் காட்டிலும்
அதிக இனங்கள் அடைந்துள்ளோம்
பல்வேறு பாசைகள் பேசுகிறோம்
கூடுதல் கூட்டம் கொண்டுள்ளோம்
மாறுபட்ட மட்பரப்புகளில் மாய்கிறோம்
வேறுபட்ட வெப்பதட்பம் வெந்து குளிர்கிறோம்

பிரித்தாளும் சூழ்ச்சி கொணர்ந்தவன்
பிரிந்திருந்த எம்மெல்லோரையும்
புதியதொரு பெயர் கொடுத்து
புனைத்து வைத்து விட்டுப் போனான்

அதன் படியே
எம்மோடே இணைந்திருக்க வேண்டிய
இன்னும் சிலரை
பிறிதொரு பெயர் கொடுத்து
பிரித்தும் வைத்து விட்டுப் போனான்

பிரிந்திருந்தோரைப் பிணைத்து வைத்ததாலும் பிரச்சனை
பிணைந்திருந்தோரைப் பிரித்து விட்டதாலும் பிரச்சனை
பிரச்சனை பிரச்சனை பிரச்சனை
இன்னமும் இதுவே எங்களின் மிகப் பெரும் பிரச்சனை

பிரிந்திருந்தோர் பிணைந்ததும்
பிணைந்திருந்தோர் பிரிந்ததுமா
பெரும் பிரச்சனை?

பிரிந்தாலும் பிணைந்தாலும்
பிரச்சனையின்றிப் பிழைக்கத் தெரியாத
பிறவிக் குணமல்லவா பிரச்சனை?

மதங்களைப் படைத்தோம்
மருத்துவங்கள் கண்டெடுத்தோம்
மதிப்பற்ற பூச்சியத்தை மதிக்க வைத்தோம்
யோகக்கலை தோற்றுவித்தோம்
காமக்கலை கற்றுக் கொடுத்தோம்
வானவியல் வாழ்வித்தோம்
அணு பிறக்கும் முன்பே அதற்குப் பெயர் பெற்றெடுத்தோம்

இத்தனையும் உண்மையெனில்
இங்கே மலிந்திருக்கும்
களவுகளுக்கும் கலகங்களுக்கும்
குற்றங்களுக்கும் கொடுமைகளுக்கும்
கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும்
ஒழுங்கின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும்
ஊழலுக்கும் உளமற்ற வாழ்க்கைக்கும்
ஊற்றுக்கண் எங்கே ஒளிந்திருக்கிறது?
உண்மைக் காரணம்தான் எங்கே புதைந்திருக்கிறது?

ஒருவேளை
வேற்றுமையில் ஒற்றுமை பழகுகையில்
பன்முகப் பண்பு நோய் பற்றிக் கொண்டிட்டதோ எம்மை?

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (1/3)

இது பற்றி ஏற்கனவே நிறையப் பேசவும் எழுதவும் பட்டு விட்டது. பத்தோடு பதினொன்றாக அத்தோடு சேர்த்து என்னுடைய பார்வைகளையும் பதிவு செய்து விட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி இந்த வாரம் அதையும் செய்து விட முடிவு. இதோ... ("அடப்பாவி, உனக்கின்னும் உள்ளாட்சித் தேர்தல் மயக்கமே தெளியலையா?!" என்கிறீர்களா?)

இந்த உள்ளாட்சித் தேர்தலின் மாபெரும் சிறப்பு - தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத நல்லது ஒன்று இம்முறை நடந்தது. அடுத்தவன் முதுகில் குதிரைச் சவாரி செய்வதே தொட்டில் பழக்கமாய்க் கொண்டிருந்த நம் கட்சிகள் எல்லாம் தனித்து நிற்கும் தைரியத்தைப் பெற்றன அல்லது அந்நிலைமைக்குக் கழுத்தைப் பிடித்துத் தள்ளப் பட்டன. எப்படியாயினும் அது நமக்கும் அவர்களுக்கும் நல்லதே. குதிரைச் சவாரி என்பது சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் மீது செய்வது என்பது மட்டுமில்லை. பெரிய கட்சிகள் சிறிய கட்சிகள் மீதும் அதையே செய்தன. அவர்கள் நீண்ட தூரம் செய்யும் அதே சவாரியை இவர்கள் கொஞ்ச தூரம் செய்தார்கள். அவ்வளவுதான். தூரம்தான் வெவ்வேறே ஒழிய செய்த செயல் ஒன்றுதான்.

ஒவ்வொரு முறையும் மாறி மாறிக் கூட்டணி அமைப்பதற்கும் சிறிய கட்சிகளை மட்டுமே குறை சொல்வதும் சரியாகப் பட வில்லை. அவர்கள் வழி இல்லாமல் உன்னிடம் வந்து தொங்கினால் தைரியசாலி - மானஸ்தன் நீ ஏன் அவர்களுக்கு உன் தோளைக் கொடுத்தாய்? சமூக சேவை செய்ய வேண்டும் என்றா? அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் தனக்கே விழ வேண்டும் என்பதற்காகவும் அவையே தப்பியும் எதிரிக்குக் கிடைத்து விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அதனால் மயிரிழையிலோ வேறு ஏதோ ஓர் இழையிலோ எதிரி பிடுங்கி விடக் கூடாது (வெற்றியைத்தான்!) என்பதற்காகவும் தானே. எனவே, "என்னுடன் கூட்டணி வைத்ததால்தான் உனக்கு அத்தனை சீட்டுகள் கிடைத்தது!" என்றெல்லாம் பேசுவது பேத்தல். அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் சொற்ப வாக்குகளில் தோற்றிருக்க வேண்டிய பல தொகுதிகளில் நீ வென்றாய் என்றும் அதைத் திருப்பிச் சொல்லலாம். இது வெறும் வாதத்துக்காகப் பேசுவது அல்ல. தர்க்க ரீதியாக யோசிக்கத் தெரிந்த யாரும் இதை மறுக்க மாட்டார்கள். எனவே, இந்தத் தேர்தல் சிறிய கட்சிகள் அவ்வளவு செல்லாக் காசுகள் அல்ல என்பதையும் நமக்குக் காட்டியுள்ளது என்று சொல்லலாம். அவர்களுக்கும் ஓர் ஆற்ற வேண்டிய அரசியல்க் கடமை இருப்பதை நினைவு படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்னொன்று - ஒரு கூட்டணி வைக்கும் போது சிறிய கட்சிகள் கொண்டு வருவது அவர்களுடைய வாக்கு வங்கி மட்டுமல்ல. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்று என்பது போல் ஒரு பலமான கூட்டணியைக் காட்டும் போது அதெற்கென்று ஓர் அலை உருவாகிறது. நடுநிலையாளர்கள் பலர் கூட்டணி பலத்தை வைத்து இந்த முறை யார் பக்கம் ஆதரவு அதிகம் உள்ளது - யாருடைய அரசியல் நிலைப்பாடு சரியாக உள்ளது என்றும் கணக்கிடுவார்கள். எனவே, பெரும் பெரும் அரசியல்ச் சாணக்கியர்கள் எல்லாம் ஏன் அப்படிச் சின்னக் கட்சிகளுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் என்று தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அதனால்தான் அவர்கள் சாணக்கியர்கள்; நாம் சாமானியர்கள்.

இதில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாதது எதுவேன்றால், அது ஒருவரின் தகுதிக்கு மீறிக் கொடுக்கப் படும் மரியாதை. எடுத்துக்காட்டாக காங்கிரஸ் அல்லது பாமக போன்ற கட்சிகளுக்கு இதுவரை கொடுக்கப் பட்ட மரியாதை அவர்களுடைய தகுதிக்கு மீறியது என்று சொல்கிறோம். உண்மையா? ஓரளவு உண்மை. ஓரளவு உண்மையல்ல என்றும் சொல்லலாம். காங்கிரஸ் எந்தச் சந்தேகமும் இல்லாமல் தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த காலம் என்று ஒன்று கண்டிப்பாக இருந்தது. அது போலவே பாமகவும் அமைப்பு ரீதியாக பலம் கூடிக் கொண்டே போன காலமொன்றும் இருந்தது. இப்போது அவையிரண்டும் ஃபியூஸ் பிடுங்கப் பட்டு விட்டன என்பது இப்போதைய கதை. அப்போது அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட மரியாதை கொஞ்சம் கூடுதல் என்றாலும் சுத்தமாக அர்த்தமற்றவை அல்ல. அதுவும் சென்ற முறை காங்கிரஸ் கட்சி கேட்டதெல்லாம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானதற்கு வேறொரு காரணம் இருந்தது. திமுக தன் கை ஓங்கியிருந்த காலத்தில் கையை வைத்துக் கொண்டு சும்மாயிருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அதை வைத்துக் கொண்டு கூட்டாளி கண்ணில் விரலை விட்டு ஆட்டினால், அவனுடைய நேரம் வரும்போது கூட்டாளி சும்மா இருப்பானா? அதையே வேறொரு விதத்தில் அவன் திருப்பிச் செய்து காட்டினான். அவ்வளவுதான். சரி, நம்ம மேட்டருக்கு வருவோம்.

உள்ளாட்சித் தேர்தல் பற்றிய என் முந்தைய இடுகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எல்லாக் கட்சிகளுக்குமே நல்ல முடிவாக எடுத்துக் கொள்ளும் படி உள்ளன என்று எழுதியிருந்தேன். அது எப்படி என்று பார்ப்பதே இந்த இடுகையின் முக்கிய நோக்கம். எப்படி? நான் கட்சி என்று மதிக்கும் எல்லாக் கட்சிகளுக்குமே அது எப்படி என்பதை, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கிப் பார்வையிடுவோம். சரியா?

அதிமுக: சொல்லவே வேண்டியதில்லை. தொப்பிக்காரர் விட்டுச் சென்ற இரட்டை இலை மோகம் இன்னும் எம்மக்களிடம் அப்படியே இருக்கிறது என்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டி விட்டன. இத்தனைக்கும் இரட்டை இலை என்பது அவ்வளவு எளிதாக மனதில் பதியத் தக்க எளிதான சின்னம் இல்லை. கை போன்று தாமரை போன்று நம் அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்தப் படும் சொல் அல்ல அது. இரட்டை இலை என்றோர் அரசியல்க் கட்சியின் சின்னம் இல்லை என்றால் அப்படி ஒரு சொல்லே தமிழர்கள் வாயில் பயன் படுத்தப் பட்டிருக்காது. ஒத்துக் கொள்கிறீர்களா? அது இந்த அளவு மக்களிடம் போய்ச் சேர்ந்ததற்கு அந்தத் தனி மனிதன் மீதிருந்த அளவிலாத மோகம்தான் காரணம். எத்தனைதான் தவறுகள் செய்தாலும் மக்கள் விரோதமாக நடந்து கொண்டாலும் ஒரு தேர்தலில் கோபத்தைக் காட்டி விட்டு மீண்டும் அதே சின்னத்திடம் திரும்பி வரும் ஏமாளித் தனத்தை எம்மிடம் விதைத்தது அந்த ஆள் ஏற்படுத்திய பாதிப்புதான். அவரைப் பிடிக்காத ஆட்கள் நிறையப் பேருக்கு இந்த அம்மாவைப் பிடிக்கிறது என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை. ஆதிக்க மனோபாவம் முதற்கொண்டு அவர் செய்யும் அடாவடிகள் மீதிருக்கும் ஆர்வம் வரை (அதுவும் திருடர்களிடம் சமரசம் பேசாமல் அடாவடி செய்வது எவ்வளவு பெரிய நற்பண்பு?!) அதற்குப் பல்வேறு காரணங்கள். அது போலவே, இந்த அம்மாவைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி விட்டு ஓட்டு மட்டும் இரட்டை இலைக்குப் போட்டு விட்டு வரும் ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அம்மாவின் தலைவர் மீதிருக்கும் தீராத வெறி. அவர் மீது அம்மா மீது இருப்பதை விட அதிக வெறி கொண்டிருக்கிறார்கள்; அம்மா அவர் மீது வைத்திருந்த வெறியை விட அதிக வெறி கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.

"அந்தக் காலத்தில் இருந்தே அப்படியே போட்டுப் பழக்கமாகி விட்டது. இப்போது போய்த் திடீரெண்டு மாற்று என்றால் முடியுமா?" என்று தத்துவம் சொல்கிறார்கள். பெண்டாட்டியையா மாற்றச் சொன்னோம்? அதையே சரியில்லாவிட்டால் மாற்றுகிறார்கள் இப்போதெல்லாம். ஆனால், எவ்வளவு கொடுமை செய்தாலும் ஓட்டை மட்டும் மாற்றிப் போட மாட்டேன் என்கிறார்கள் பலர். அது போன்ற ஆட்கள் இரண்டு பக்கமுமே இருக்கிறார்கள். குறித்துக் கொள்ளுங்கள் - குறிப்பிட்டு யாரையும் குறை சொல்ல வில்லை. குறைந்தது இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு - எப்போதிருந்தாலும், இந்தச் சின்னத்தை வைத்துக் கொண்டு யார் வந்தாலும் எது வந்தாலும், அவர்களுக்கு அல்லது அதுகளுக்கு நம் அரசியலில் முதலிடம் அல்லது இரண்டாவது இடம் உறுதி. இது சத்தியம்.

இந்த இடத்தில் இன்னொன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் பத்திரிகைகளும் இப்போது பதிவுலகமும் இந்தக் கட்சி அழிந்து விட்டது அந்தக் கட்சி அழிந்து விட்டது என்று ஏதோவொன்றைப் பரபரப்பாக எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அது சுத்தப் பினாத்தல். எந்தக் கட்சியும் அழிவதென்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியது அல்ல என்பதையே இந்தத் தேர்தல் காட்டியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் இரண்டு இடங்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்குமே கொடுக்கப் பட்டுள்ளன. சட்டமன்றத்தில் எண்ணிக்கை என்பது மட்டுமே ஒரு கட்சியின் பலமாகி விடாது. மக்கள் மன்றத்தில் என்ன எண்ணிக்கை என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது வாக்கு விகிதம் எப்படி என்பதைப் புரிந்து கொண்டு பேச வேண்டும். அதிமுக அழிந்து விட்டதாகச் சொன்ன 1996-இலும் சரி, திமுக அழிந்து வருவதாகச் சொல்லும் 2011-இலும் சரி... அவர்களுடைய வாக்கு விகிதம் மூன்றாவது இடத்துக்குச் செல்லவில்லை. பெரிதாக அவர்கள் எங்கும் டெபாசிட் இழக்க வில்லை. அப்படி ஒன்று நடந்தால்தான் ஒரு கட்சியின் அழிவு பற்றிப் பேச வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலிலும் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நிரூபிக்கப் பட்டிருக்கும் இன்னோர் உண்மை - திமுகவின் குறிப்பிட்ட வாக்கு வங்கி அப்படியே அதிமுகவுக்கும் அதிமுகவின் குறிப்பிட்ட வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கும் மாறி வருகிறது. வாத்தியார் காலத்தில் நகர்ப்புற - படித்தவர்களின் வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் கிராமப்புற - பாமர மக்களின் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கும் விழும். அது அப்படியே தலை கீழாக மாறி வருகிறது இப்போது. வாத்தியாராலேயே உடைக்க முடியாத சென்னைக் கோட்டையை அம்மா உடைத்து விட்டார். அதை அப்படிச் சொல்வதை விட வாத்தியாராலேயே உடைக்க முடியாத சென்னைக் கோட்டையை அதிமுகவுக்காக திமுகவின் முதல்க் குடும்பம் உடைத்துக் கொடுத்து இருக்கிறது என்று சொல்லலாம். இது எப்படி சாத்தியமானது? நாம் முன்பே சொன்னது போல, குடும்பத்தின் குத்தாட்டங்களைப் பார்த்துச் சகிக்கும் மனப்பான்மை மக்களுக்கு இல்லை. அதுவும் படித்த - நகர்ப்புற மக்களுக்கு! அவர்களால் ஏதோ வகையில் பயனடைந்த ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு மக்கள் இதில் விதிவிலக்கு.

இன்னொன்று - தினமும் செய்தி பார்க்கும்/படிக்கும் அளவுக்கு அறிவிருக்கிற யாரும் அவர்கள் ஊழலே செய்யாத உத்தமர்கள் என்று பேசுவதில்லை. ஏற்கனவே ஊர்க்காசைக் கொள்ளையடிப்பதில் பேர் போனவர்கள் அவர்களின் வண்டவாளத்தை மீண்டுமொருமுறை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கொடுத்தால் யார்தான் விடுவார்? பெண்களுக்குத் தொலைக் காட்சித் தொடர்கள் போல எங்களுக்கு இவை படிக்கப் படிக்க அவ்வளவு இன்பமாக இருந்தது. தெரியுமா?

இவை திமுகவின் இழப்புக்கான காரணங்கள். அதெப்படி வாத்தியார் காலத்துக் கிராமப் புற - பாமர மக்களின் வாக்கு வங்கியில் கை வைக்க முடிந்தது அவர்களால்? அது முன்னெப்போதும் இல்லாத மாதிரி சென்ற முறை அள்ளி அள்ளிக் கொடுக்கப் பட்ட இலவசங்கள் மூலம் சாதித்தது. வாத்தியார் பாணியிலேயே அவருடைய கட்சிக்கு ஆப்பு. அவர் இருந்திருந்தால் இதற்கெல்லாம் வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டார்.

இதில், திமுகவின் இழப்பு என்று நாம் பார்த்ததுதான் அதிமுகவின் ஆதாயம். திமுகவின் வளர்ச்சி என்று நாம் பார்த்தவை அதிமுக திரும்பவும் உடைத்தெடுக்க வேண்டிய - மீட்டுக் கொண்டு வர வேண்டிய பகுதிகள். அதற்கு நிறைய ஏமாற்று வேலைகள் செய்ய வேண்டும். உழைக்காமல் கிடைக்கும் எதற்காகவும் தன் நன்றிக் கடனை மறக்காமல் செய்யும் ஒரு பெருங்கூட்டம் இந்தத் தமிழ்த் திருநாட்டில் சங்க காலம் முதற் கொண்டே இருப்பதை நம் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் பறை சாற்றிக் கொண்டுதானே இருக்கின்றன.

அதிமுகவுக்குக் கிடைத்த இன்னோர் ஆதாயம் - முந்தைய பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் காசு கொடுக்கும் வேலையைத் திமுகக் காரர்கள் மட்டுமே செய்தார்கள். ஏனென்றால், அவர்களிடம் மட்டும்தான் மொங்காம் போட்ட காசு நிறைய இருந்தது. அதை இந்த முறை அதிமுகக் காரர்கள் நன்றாகச் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். அந்தக் கலாசாரத்தைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகப் படுத்தியது அதிமுகதான். அதனால் இழந்ததும் அவர்கள்தான். இப்போது மீண்டும் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி இருக்கிறார்கள். ஓரளவு ஆரம்ப வெற்றியும் கிட்டியிருக்கிறது. போகப் போக எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். எல்லோரிடமும் காசு வாங்கிக் கொண்டு குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சிக்கு வாக்களிக்கும் நூதன விசுவாச முறையும் இந்தத் தேர்தலில்தான் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வாழ்க சனநாயகம்! (வைகோ கேட்டால் கோபப் படுவார் - இதற்குப் பெயர் பணநாயகம் என்று!)

வரலாறு காணாத வெற்றி என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், என்னதான் இருந்தாலும் இது ஓர் ஆளுங்கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பதையும் மறந்து விடுவதற்கில்லை. இதே வெற்றி கண்டிப்பாகப் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைக்காது என்று வேண்டுமானால் உறுதியாகச் சொல்ல முடியும். வழிய வரும் நல்ல காலத்தை சோதிடம் பார்த்துக் கெடுத்துக் கொள்வதில்தான் கை தேர்ந்த ஆளாச்சே அம்மா. இதே போல பாராளுமன்றத் தேர்தலில் அல்லது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லோரையும் தூக்கி வீச முடியாது. இப்போது வென்று விட்ட ஒரே காரணத்தால் சட்டமன்றத் தேர்தலில் உடன் இருந்தவர்களின் பங்கு ஒன்றுமில்லை என்று சொன்னால் அது அரசியல்க் கத்துக் குட்டித் தனம். முன்பே சொன்னது போல, அவர்கள் கொண்டு வந்தது வெறும் வாக்கு வங்கிகள் அல்ல. ஓர் ஆட்சிக்கெதிரான சினத்தை ஒருமுகப் படுத்தியது முதற்கொண்டு, உழைப்பும் அதற்குத் தேவையான உற்சாகமும் கொண்டு வந்தார்கள், ஓர் அலையை உருவாக்கினார்கள், ஒன்றும் ஒன்றும் பதினொன்று ஆக்கினார்கள் என்று எத்தனையோ சொல்லலாம். அதையெல்லாம் அறியாமல் சோ என்னை ஏமாற்றி விட்டார் என்று கதறுவது அறிவீனம். சோவுக்கு இப்படி ஒன்று நேர்ந்ததற்காக நாம் மகிழலாமே ஒழிய அவர் போட்ட கணக்கு கிறுக்கு என்று நாமும் சேர்ந்து கொண்டு பிதற்ற முடியாது.

திமுக: திமுக அழிந்து விட்டது என்று சொன்னவர்களுக்கு - இனி தமிழக அரசியலில் திமுக மூன்றாவது கட்சிதான் என்று சொன்னவர்களுக்கு - பதில் சொல்லியிருக்கிறார்கள் இந்தத் தேர்தலில். யார்? திமுகவா? இல்லை, மக்கள்! இப்படியொரு திமுக இருப்பதற்கு அழிந்து விடலாம் என்று நினைக்கிற ஆள்தான் நானும். அதைத்தானே 96-இல் அதிமுகவுக்கு நினைத்தோம். ஆனால், அதற்காக உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. குறைந்த பட்சம் ஐயா இருக்கும் வரைக்குமாவது அவர்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி. அதில் எந்த மாற்றமுமில்லை.

கொடுமை என்னவென்றால், இந்தத் தேர்தலில் நிற்கவே அலறினார்கள் கட்சிக் காரர்கள். ஏதாவதொரு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளி விடுவார்களாம். திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் எதிரணிக்கு வேலை பார்க்கும் ஆட்களைத் தேடித் தேடி உள்ளே போட்டார்கள். அது அடி மட்டத்தில் உள்ள ஆட்களை மட்டும்தான். அதுவும் குற்றப் பின்னணி உள்ளவர்களை மட்டும்தான். அதிமுக ஆட்சியிலும் அது நடக்கிறது. ஆனால், அது முழுக்க முழுக்க இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைத்து நடக்கிறது. அவர்கள் எவ்வளவு யோக்கியர்கள் என்பது நமக்குத்தான் தெரியுமே. அடி மட்டத் திமுக தொண்டர்களுக்கு இன்னும் பிரச்சனை ஆரம்பிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர்களுக்கு ஒரு பயம். பிள்ளை குட்டிகளை நினைத்து ஒரு கவலை. அவர்களைக் கட்சி மிரட்டிய விதமும் அருமை. "ஆட்சியில் இருந்தபோது மட்டும் காசு அடித்தாய். இப்போது என்ன கொள்ளை போகிறது? நின்றுதான் ஆக வேண்டும். இல்லையேல், நீ எதில் சிக்கினாலும் கட்சி எப்போதும் உதவாது; முடிந்தால் இன்னும் நன்றாகச் சிக்க வைக்கும்!" என்று போட்ட போட்டில் கொஞ்சப் பேர் வழிக்கு வந்து விட்டார்கள். ஆனாலும் பல நகராட்சிகளில் பல வார்டுகளில் ஆட்கள் நிற்கவே இல்லை. ஒன்றியக் குழுக்களுக்கும் அப்படியே அவ்வளவு பயம். அம்மாம் பெரிய கட்சிக்கு இது பெரும் சறுக்கல்தான். அழிந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அழிவின் பாதைக்கு வந்து விட்டது என்றுதான் படுகிறது.

இதில் இருந்து மீட்டெடுக்கும் சக்தி யாருக்கு உள்ளது என்றுதான் தெரியவில்லை. ஸ்டாலின் ஸ்டாலின் என்று சொல்கிறார்கள் சிலர். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஸ்டாலினுக்கு வரும் கூட்டம் அவருடைய தந்தை சேர்த்த கூட்டம். அது தந்தை காலத்துக்குப் பின் நிற்குமா என்பது சந்தேகமே. பசை இருந்தால் ஒட்டும் ஆட்கள் இருக்கிறார்கள். அப்படியே ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இருந்திருப்பார்கள். இப்போதுதான் அது இல்லையே. "நல்ல நிர்வாகி - மேலாளர்!" என்றெல்லாம் சொல்கிற சொற்களுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் என்று தெரியவில்லை. அழகிரியை அஞ்சாநெஞ்சர் என்றது போல இதுவும் திட்டமிட்டு அர்த்தமில்லாமல் உருவாக்கப் பட்ட பிம்பம் என்பது என் பார்வை. பார்வை சரியா பழுதடைந்ததா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தந்தையிடம் உள்ள ஒரே ஒரு நற்குணம் - அதுவே இவருக்கும் வந்திருப்பது - எதுவென்றால், அது இவருடைய உழைப்பு. அதுதான் காப்பாற்ற வேண்டும் இவரையும் இவர் தலைமையிலேயே இருந்தால் இவருடைய கட்சியையும்! மற்றபடி, இழுக்கிற - கட்டிப் போடுகிற ஏதோவொன்று இருக்க வேண்டும். அது இருக்கிறதா அவரிடம்? வென்றிருந்தால் "ஆம்" என்றிருப்போம். இப்போது, தோற்றிருப்பதால் "இல்லை" என்போம். உண்மை என்னவென்றும் கூடிய விரைவில் பார்ப்போம்.

"கட்சியைக் காட்டிக் கொடுக்கிறார்கள்... காட்டிக் கொடுக்கிறார்கள்..." என்று கதறிக் கொண்டே இருக்கிறார் தலைவர். கட்சியைக் காட்டிக் கொடுத்தல் என்றால் என்ன அர்த்தம்? கட்சி ஏதோ திருட்டுத் தனம் செய்திருக்கிறது என்றுதானே அர்த்தம். அத்தனையையும் செய்த பின்னும் தேர்தலில் வேலை செய்யவே கட்சிக் காரர்கள் பயந்த போதும் அவர்களுக்கென்று வாக்களிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. அதை உடைப்பதற்கு அதிமுகவோ மற்ற கட்சிகளோ இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டும்.

இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆன பின்பு, அவர்களோடு இருப்பதால் நன்மையை விடத் தீமைதான் அதிகம் என்று தெரிந்த பின்பு, காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட்டது நல்ல முடிவு. அவர்களுக்கும் அவர்கள் உயரம் என்ன என்பது தெரிய வேண்டும் அல்லவா? அத்தோடு பச்சோந்தி பாமகவையும் கழற்றி விட்டது அதை விட நல்ல முடிவு. ஆனால், அந்தப் பக்கம் வைகோ மாதிரி இந்தப் பக்கம் ஓர் ஏமாளிப் பையன் இருந்தார். திருமா! என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு கட்சிக் காரர்களை விட அதிகமாகத் தலைவரைப் புகழ்ந்து கொண்டு திரிந்தார். அவரை ஏன் அப்படி நட்டாற்றில் விட்டார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் மேலிடம் கோபித்துக் கொள்ளும் என்ற பயமோ என்னவோ. அல்லது, இந்த மாதிரி அளவுக்கு மிஞ்சி நல்லவனாகத் திரிந்தால் யாராக இருந்தாலும் இந்த முடிவுதான் என்று இப்போதே ஒரு பாடம் புகட்டி விடுவோம் என்பதாலா என்றும் தெரியவில்லை.

அஞ்சா நெஞ்சர் அஞ்சா நெஞ்சர் என்று ஒருத்தர் மதுரைப் பக்கம் அநியாயத்துக்கு ஆடிக் கொண்டும் ஆட்டிக் கொண்டும் இருந்தார். இந்தத் தேர்தலின் போது அவருடைய பெயர் பற்றியே கேள்விப் பட முடியவில்லை. இது கூடத் திமுகவுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போது சொரிந்து விடுபவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி நாமே நம்மைப் பெரிதாக நினைத்து விடக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. அவர்கள் பிழைப்புக்கு மாரடிப்பவர்கள். நமக்குத் தெரியாதா நம்மைப் பற்றி?

"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்!" என்று பட்டுக்கோட்டை எழுதிய பாடலின் படி வாழும் தமிழினத் தலைவர், குடும்பத்துக்காகக் கட்சியை வளர்த்து இப்போது அதே குடும்பத்துக்காகக் கட்சியை அழித்து வருகிறாரோ என்று தோன்றுகிறது. குடும்பம் கட்சியை வளர்க்க வில்லை. ஆனால் அழிக்கிறதே?! கட்சியோடு வளர்ந்தவர்கள் கட்சியோடு அழியாமல் பார்த்துக் கொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளை எப்படியோ, இன்று - இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பெரும்பாலான இடங்களில் இவர்கள்தான் இரண்டாம் இடம். எனவே, எந்தவிதச் சந்தேகத்துக்கும் இடமில்லை. இவர்கள்தான் இப்போதைக்கு தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி. இன்றைய தினம் வரை, அம்மா சொதப்பினால் (கண்டிப்பாகச் சொதப்புவார் என்ற நன்னம்பிக்கை... யாருக்குண்டோ இல்லையோ எனக்குண்டு!) அடுத்து அதில் பயனடையப் போவது இவர்களே. அது மாற வேண்டும் (இன்னும் முற்போக்கான - நல்லவர்கள் வர வேண்டும் என்கிறேன். தண்ணி வண்டி ஓனரை மனதில் வைத்துச் சொல்ல வில்லை!). ஆனால் மாறுமா? காலம் கிடக்கிறது. கழுதை நடக்கிற போது நடக்கட்டும்.

மற்ற கட்சிகளின் கணக்குகள் பற்றி அடுத்த இரண்டு பாகங்களில் பார்ப்போம்.

சனி, நவம்பர் 05, 2011

அதே மொழிதான்

அதே மொழி
அதே சொற்கள்
அதே எழுத்துக்கள்...

அதெப்படி
நீரைக் கொள்ளும்
பாத்திரத்தின் வடிவம் போல்...
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதத்தில்
கையாள்கிறர்?

அதெப்படி
அதே பழைய சரக்கு கொண்டு
ஒரு சிலர் மட்டும்
புதிது புதிதாய்
ஏதோதோ உருவாக்குகிறர்?

சிலர்
நாட்டுக்குள் நடக்கும்
அக்கிரமங்களுக்கெதிராக
புரட்சித் தீ மூட்டுகிறர்!

சிலர்
வீட்டுக்குள் இருக்கும்
அமைதிக்கெதிராக
குழப்பத் தீ மூட்டுகிறர்!

சிலர்
விழித்திருப்போரையும்
விரைந்துறங்கச் செய்திடும்
வித்தை செய்கிறர்!

சிலர்
அவற்றையும்
காற்றைப் போல்
கடலைப் போல்
ஆற்றலற்றவை என்று
எதுவும் எடுக்க முயலாது
சிறிதும் கொடுக்க முயலாது
அப்படியே விட்டிடுகிறர்!

அவற்றின்
ஆற்றல் அறியாமலே
அதுவாகவே நடக்கும்
அளவற்ற எடுத்தல்கள் தவிர்த்து...

வியாழன், நவம்பர் 03, 2011

மேலும் கீழும்

பால்யத்தில்
பலமுறை
பேரூந்துகளினுள் இருந்து எட்டிப் பார்த்த
அதே தொடர்வண்டிப் பாலம்
அதன் மேல் செல்லும்
அதே தொடர்வண்டி 

அதன்பின்
பல முறை 
அதே இடத்தை
அதே பாலத்தின் மேல்
அதே தொடர்வண்டியின்
உள் அமர்ந்து கடக்கையில்
பாலத்தின் கீழ் நிற்கும்
அதே பேரூந்தைப் பார்க்கையில்
ஏதோ ஒரு புதிய உணர்வு!

பின்பொரு நாள்
மீண்டும் ஒருமுறை
அதே பேரூந்துக்குள் அமர்ந்து
அதே பாலத்தின் மேல் போகும்
அதே தொடர்வண்டியைப் பார்க்கையில்

காலமும் வாழ்க்கையும்
ஏதோ சொல்ல முயல்கின்றன
என்பது மட்டுமே புரிகிறது!

புதன், நவம்பர் 02, 2011

பயம்

குப்பனுக்கும் சுப்பனுக்கும்
அலுவலகங்கள் என்றாலே உள்நுழைய பயம்
வங்கிகள் என்றால் எட்டிப் பார்க்கவே பயம்
அங்கிருக்கும் ஆபீசர்களைக் கண்டால் அதைவிட பயம்

பயங்களை வென்று
தைரியம் வரவழைத்து
நுழைகிற சில பொழுதுகளிலும்
அவர்களைப் பயமுறுத்தி பீதியடைய வைக்கும்
நுட்பங்கள் அனைத்தும் ஆபீசர்களுக்கு அத்துப்படி

அம்புட்டுக் கெட்டிக்கார ஆபீசர்களும்
அவர்களின் பெண்டு பிள்ளைகளும்
குப்பனும் சுப்பனும் வாழும் பகுதிகளுக்குள்
நுழையவே அடையும் பயம்
நடமாடும் போது அடைகிற பீதி

இரண்டுக்கும் ஏதும் தொடர்பில்லைதானே?!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...