செவ்வாய், ஜூலை 26, 2011

பொம்மை பிரதமர்?

சரவணக்குமார் எழுதச் சொன்ன இன்னொரு விஷயம் - நம் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கின் பல தோல்விகள் பற்றி. சரி. அதையும் எழுதி விடுவோம். 2004-இல் காங்கிரஸ் வெல்லட்டும் ஆனால் சோனியா பிரதமராகக் கூடாது என்று ஆசைப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். கட்சி என்ற முறையில் எனக்கு பா.ஜ.க. மீது எனக்குப் பெரிதும் ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆனால், வாஜ்பாயை விட சோனியாதான் பிரதமராக அதிகத் தகுதிகள் கொண்டவர் என்று யாராவது சொன்னால் எனக்கு மண்டை கிர்ரென்று சுற்றும். அத்வானியோடு கூட அவரை ஒப்பிடப் பிடிக்காது. சரியான ஆளை மயக்கியதைத் தவிர இந்திய அரசியலில் அவருக்கு வேறு எந்தத் தகுதியும் கிடையாது. தான் பிரதமர் பதவி ஏற்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தபோது எல்லோரையும் போல நானும் அவரைப் பெரும் தியாகியாக ஏற்றுக் கொண்டேன்.

அது அவர் விரும்பி எடுத்த முடிவல்ல; சுப்பிரமணியசுவாமி என்கிற நம்ம ஆள் ஒருவர் போட்ட குண்டினால் அப்படி ஒரு முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார் என்று பின்னர் கேள்விப் பட்டபோது அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வெளிநாட்டுக் காரர் என்பதற்காக அவர் இந்த நாட்டை ஆளக் கூடாது என்று கூட எண்ணவில்லை. அதற்கான தகுதியே இல்லை என்றாகி விட்ட பிறகு எதற்கு மற்ற விஷயங்கள் பற்றிப் பேச வேண்டும்? சரி. அவர் ஏற்க மறுத்தார். மகிழ்ந்தோம். அடுத்து யார்? யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் சனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற பெயர் கிடைத்து விடும் என்றே எண்ணினேன். முந்தைய ஆட்சியில் மன்மோகன் சிங் கொஞ்சம் செயல்பட்டுக் கொண்டு இருந்ததால், அவர் வர வாய்ப்புள்ளது என்று எண்ணினேன்; அவரே வர வேண்டும் என்றும் ஆசைப் பட்டேன்.

அது போலவே நடந்தபோது, 'என்ன இது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நான் நினைப்பதெல்லாம் இந்த நாட்டின் தலை சிறந்த அரசியல் பதவிக்கு எடுக்கும் முடிவுகளில் நடந்து கொண்டு இருக்கிறது?' என்று ஆச்சர்யத்தோடு கலந்த மகிழ்வான மகிழ்வடைந்தேன். ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த ஒருவர் இந்த நாட்டுக்கு நிதி அமைச்சர் ஆனதும் அவரே பின்னர் பிரதமரானதும் நாமெல்லாம் செய்த புண்ணியத்தின் விளைவு என்றெண்ணினேன். அந்த நாள் முதல் இந்திய அரசியல் அதன் அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டதாகப் பெருமிதம் அடைந்தேன். அன்று முதல் சுமார் ஒரு வருடம் முன்பு வரை இந்தியாவிலேயே நான் அதிகம் மதித்த அரசியல்த் தலைவர் மன்மோகன் சிங்தான். இதுவரை இந்த நாட்டின் பிரதமரான எல்லோரையும் விட (நேருவையும் விட!) இவரே சூப்பர் என்று கூட எண்ணினேன்.

இதுவரை இந்த நாடு கண்ட பிரதமர்களிலேயே சிறந்த பிரதமர் யார் என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, வந்ததிலேயே விளங்காத ஆள் யார் என்றால் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்து வந்த இருவரின் பெயரையே நிறையப் பேர் சொல்கிறார்கள். இதுவரை நாம் கண்ட பிரதமர்களிலேயே அதிகம் வெறுக்கப் பட்ட - அதிகம் கேலிக்கு உள்ளாக்கப் பட்ட - ஆனால் மறந்தும் கூட ஒருமுறை கூடச் சிரித்திராத பிரதமர் நரசிம்ம ராவ். சனநாயக முறைப்படி காங்கிரஸ் தேர்ந்தெடுத்த மிகச் சில தலைவர்களில் அவரும் ஒருவர். அவரும் வீணாய்ப் போனது சனநாயகத்துக் கிடைத்த அடி. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவர் செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று - அப்போது ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த மன்மோகன் சிங்கைப் போய் அழைத்து வந்து நிதி அமைச்சர் ஆக்கியது.

பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருந்த வேளையில் இப்படி ஏதோவொன்று செய்ய வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயம். அதன் பிறகு நடந்ததெல்லாம் நல்லதே. அவருடைய புதிய பொருளாதாரக் கொள்கையை இடதுசாரிகள் போன்ற பொறுப்புள்ள அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கும் போதும், நடைமுறை சாத்தியங்களை வைத்துப் பார்த்தால் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் சாதாரணப்பட்டவை அல்ல. அங்கே தொடங்கியதுதான் இன்று வல்லரசாகும் ஆசை வரை வர வைத்திருக்கிறது. அதனால் அவர் மீது எனக்கு எப்போதுமே அதீத மரியாதை இருந்து வந்தது.

அவர் போன்ற நடுத்தரக் குடும்பத்துப் படித்தவர்கள் - அறிவாளிகள் அரசியலுக்கு நிறைய வர வேண்டும். அதுவே அவர்களுடைய செயல்பாட்டைப் பார்த்து மக்கள் கூமுட்டைகளை எளிதில் அடையாளம் காணவும் ஒதுக்கித் தள்ளவும் உதவும் என்றும் எண்ணினேன். கொடுமை என்னவென்றால், அவரும் தேர்தலில் நின்று வெல்லும் அளவுக்கு நம் சனநாயகம் முதிர்ச்சி அடைந்து விட வில்லை; கூமுட்டைகளும் குறைந்து விட வில்லை.

சென்ற ஆண்டின் துவக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மொத்த தேசமுமே அவரை வெறுக்க ஆரம்பித்திருந்த வேளையில் கூட, "அதற்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர் நல்லவர்தான். அவருடைய சூழ்நிலை அப்படி!" என்று பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து அப்படிப் பேச முடியவில்லை. இப்போதும் அவர் மீது வெறுப்பு வரவில்லை. ஆனால், அவர் சார்ந்த கட்சி மீது உருவான வெறுப்பு, இந்த யோக்கியர் ஏன் இன்னும் அந்த முடியைப் (நாகரிகமாகப் பேச வேண்டும் அல்லவா?) பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஏதோ ஒருவித எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

சூழ்நிலையின் கைதி என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வளவும் நடந்த பிறகும் கைதியாகவே தொடர்வதற்கான காரணம் என்ன? அதுதான் புரியவில்லை. அப்படி ஒன்றும் விடுதலையே ஆகிச் செல்ல முடியாத சிக்கல் எதிலும் அவர் மாட்டிக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. அல்லது, பதவி சுகத்துக்கு மயங்கி அதை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் என்றும் சொல்ல முடியாது. அவர் அப்படிப் பட்ட ஓர் ஆள் இல்லை என்பது அவருடைய எதிரிகளுக்கும் தெரியும். பின் ஏன் இப்படித் தொங்கிக் கொண்டிருக்கிறார்?

பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தைத் தரம் தாழ வைத்தவர் என்று இவர் மீது அத்வானி குற்றம் சாட்டியபோது கூட அத்வானி மீதுதான் கோபம் வந்தது. இவர் மீது வரவில்லை. பிரதமர் ஆசையில் என்னவெல்லாம் பிதற்றுகிறார் பாருங்கள் அத்வானி என்றே எண்ணினேன். இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களிலேயே பலவீனமான பிரதமர் இவர்தான் என்று குற்றம் சாட்டியபோதும், "அது சரிதான். ஆனாலும், அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!" என்று சப்பைக் கட்டுதான் கட்டிக் கொண்டிருந்தேன்.

எதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. எவ்வளவு காலம்தான் நாமும் பொறுத்துப் பொறுத்துப் போக முடியும்? இவ்வளவு திருட்டுத் தனங்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவரும் திருடனாக இருந்தால் என்ன யோக்கியராக இருந்தால் என்ன? திருட்டுக்குத் துணை போகும் அனைவரும் திருடன் என்பதுதானே நம்ம ஊர் நியாயம்?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யார் பிரதமராக ஆகி இருந்தாலும் இந்தப் பிரச்சனைகள் இப்படியேதான் இருந்திருக்கும் என்று பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றைக் கூட விட்டு விடலாம். இந்த இடத்தில் யார் இருந்தாலும் இவ்வளவு கேவலமாக இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் படி பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் சில பற்றிப் பேசுவோம். இறுதியாக அப்பிரச்சனைகளில் இவர் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுவோம். பொருளாதாரக் கொள்கை, அணுக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாடு போன்றவை காங்கிரஸ் கட்சியின் யார் வந்தாலும் மாறப் போவதில்லை என்கிற பிரிவு. அவர் மிகப் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ள பகுதி - ஊழலுக்கெதிரான செயல்பாடு (ஊழல்க் கொள்கை என்று ஒன்று வந்தாலும் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை!).

ஊழல் விஷயத்தில் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் ஆட்டம் போட்டது கூட்டணிக் கட்சிகள். குறிப்பாக, தி.மு.க. அலைக்கற்றை ஊழல் விவகாரம் தலை தூக்கியவுடன் இவர் ஏதாவது செய்திருக்க வேண்டும். ஏதாவது என்றால்? இராசாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு காங்கிரசில் இருந்தே ஒருவரை அந்தப் பொறுப்பில் அமர்த்தி இருக்க வேண்டும். அப்படியானால், கறைபடியாக் கைக்குச் சொந்தக்காரத் திராவிடர்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மிரட்டுவார்களே... பா.ஜ.க.வோடு போய் மதச் சார்பற்ற கூட்டணி அமைப்பார்களே... அதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது? காங்கிரஸ் கட்சியின் கோணத்தில் பார்த்தால், 'பிடிவாதமாக இருந்து நம்மை விட மோசமான ஒரு கூட்டத்திடம் ஆட்சிப் பொறுப்பை இழப்பதை விட கொஞ்சம் நெகிழ்வோடு நடந்து கொண்டு நாமே ஆட்சியில் தொடர்வது தப்பில்லையே?!' என்கிற பதில் சரியாகத் தான் படுகிறது.

ஆனால், எப்படிப் பட்ட விஷயங்களில் நெகிழ்வு காட்ட வேண்டும் - சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் எல்லை இருக்க வேண்டும். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போகிற சமரசம் எந்த வகையிலும் நியாயப் படுத்தக் கூடியது அல்ல. தனக்குக் கீழே இருப்பவர்கள் தன் பேச்சைக் கேட்பவர்களாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அழைத்துக் கண்டிக்க வேண்டும். அதற்கும் மசியாவிட்டால் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் அல்லது பதவியைத் தூக்கி எறிய வேண்டும். எறிந்து விட்டால் திரும்பக் கிடைக்காது என்று பயப்படுகிறார்களே ஒழிய, அப்படி எறிவதன் மூலமும் மக்கள் மனதில் நல்லிடம் பிடிக்கலாம்; அதைப் பயன்படுத்தி மீண்டும் வரலாம் என்கிற நம்பிக்கை நிறையப் பேருக்கு வருவதில்லை. இத்தனைக்கும் சின்ன வயதில் இருந்தே பதவி சுகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல மன்மோகன் சிங்.

நரசிம்ம ராவ் போய் இவரை நிதி அமைச்சர் ஆகும்படிக் கேட்டுக் கொண்ட போது, இவர் போட்ட கண்டிசன்கள் இரண்டே இரண்டு. ஒன்று - "எதற்கும் என் மீது பழி போட்டுப் பலிகடா ஆக்கக் கூடாது!". இன்னொன்று - "என் முடிவுகளில் தலையிடக் கூடாது!". "இவ்விரண்டில் எதை மீறினாலும் நான் என் பதவியைத் தூக்கி வீசி விட்டுப் போய்க் கொண்டே இருப்பேன்!" என்றாராம். அதன்படி ஒரு முறை தூக்கி வீசவும் செய்தாராம். பெட்ரோல் விலையை ஏற்றியபோது நரசு வந்து குறைக்கச் சொன்னாராம். அப்போது, "பேச்சை மீறுகிறாயே சகோதரா?!" என்று கோபத்தில் பொறுமினாராம். அப்போது நரசுதான் இவரை சமாதானப் படுத்தி இருக்க வைத்தாராம். அவ்வளவு கறாரானவர் அதை ஏன் சோனியாவிடம் சொல்லவில்லை அல்லது செய்ய முடியவில்லை? அதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. 

தூக்கி வீசி விட்டு வந்து ஒரு சுயசரிதை எழுதியிருந்தால் கடைசிவரை மனச்சாட்சியோடு வாழ்ந்து மறைந்த நிம்மதியாவது கிடைத்திருக்கும். இப்போது என்ன கிடைத்தது? இந்த நாடு கண்ட மிகப் பலவீனமான பிரதமர் என்ற பெயரும் இந்த உலகம் கண்ட மிகப் பெரிய ஊழல் ஆட்சியின் சொந்தக் காரர் என்ற பெயரும்தானே. "எல்லாம் பிரதமருக்குத் தெரிந்தே நடந்தது!" என்பதை ஓட்டை ரிக்கார்ட் போல இராசா திரும்பத் திரும்பச் சொல்ல இடம் கொடுத்ததுதான் மிச்சம். அதற்குப் பதிலாக இவர் வேறு, "எனக்கு ஒன்றுமே தெரியாது!" என்று திரும்பத் திரும்ப இன்னொரு ஓட்டை ரிக்கார்டை ஓட்டுகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த மனச்சாட்சி இன்னும் அப்படியே இருந்தால், 'எதற்கு இந்தப் பிழைப்பு?' என்று அவருக்கே ஓர் உட்கேள்வி வந்திருக்கும் பலமுறை. பல இரவுகள் பாதியில் தூக்கம் கலைந்திருக்கும். இதெல்லாம் நடந்ததா சார்? இல்லை, நீங்களும் மாறி விட்டீர்களா?

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விட வில்லை. நாளை காலை எழுந்து அலுவலகம் செல்லும்போது, 'இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன் இன்று!' என்ற முடிவோடு கிளம்பினால் போதும். கீழ்வரும் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். அடுத்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வர வாய்ப்பும் கூடும். 'இடைவெளியில் தடம் மாறிய இற்ற கேஸ்களில் நானும் ஒருவன்!' என்கிற உறுத்தலும் இல்லாமல் இறுதிக் காலத்தை ஓட்டலாம். நாம் நினைக்கிற மாதிரி இதெல்லாம் முடியாத ஆள் இல்லை அவர். ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த ஒருவர் அந்த அளவுக்கு அம்மாஞ்சியாக இருக்க முடியாது. அப்படி எதுவுமே முடியாது என்றால் உயிரைப் பணயம் வைத்து எல்லாத்தையும் தூக்கி வீசி விட்டு வந்து எது அவரை இவ்வளவு நாட்களாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தது என்று சுயசரிதை எழுதலாம்.

சரி. அவர் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பும் மாற்றங்கள்? இதோ...
1. தங்கபாலு வேண்டுமானால் தி.மு.க.வில் சேர்ந்து கொண்டு "உறவு பலமாக இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும் என்று விட்டு விட்டு, உடனடியாகத் தி.மு.க.வைக் கழற்றி விடுவது. ஊழல் சம்பந்தமான எல்லா வழக்குகளையும் முடுக்கி விடவும் இது உதவும். அடியாள் வைத்துக் கொலை செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத மிச்சம் இருக்கிற அஞ்சாநெஞ்சரையும் உடனடியாக ஊருக்கு வழியனுப்பி வைப்பது எல்லோருக்குமே நல்லதாக இருக்கும். இதனால் கண்டிப்பாக ஆட்சி கவிழாது. "இப்போதைக்கு எதுவுமே வேண்டாம். எங்களைக் கூட்டணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!" என்று காத்துக் கிடக்கிற கட்சிகள் நிறைய இருக்கின்றன. இதற்கு ஒரே தடங்கல் - தோல்வியை வெற்றியாய் மாற்றிக் கொடுத்த கூட்டணித் தலைவர் மீது பாசம் கொண்டிருக்கும் பதவிப் பசி பிடித்த ப.சி. மட்டுமே. "தம்பி, இப்ப உன் இருக்கையே ஆடிக் கொண்டிருக்கிறது!" என்று நினைவு படுத்தினால் அவரும் அமைதியாகி விடுவார்.

2. தன் பிரதமர் ஆசை மண்ணாய்ப் போய் விட்டதே என்ற ஆத்திரத்தில் தனிக் கட்சி ஆரம்பித்து இப்போது மீண்டும் காங்கிரஸ்காரர்களோடு ஐக்கியமாகி இருக்கும் சரத் பவாரை அழைத்து, "தம்பி, உனக்குக் கிரிக்கெட் பார்ப்பது மட்டும்தான் பிடிக்கும் என்றால், ஏன் அரசியலுக்கு வந்தாய்? வேண்டுமானால் விளையாட்டுத் துறையை எடுத்துக் கொள். வீணாய்ப் போய்க் கொண்டிருக்கும் உணவு தானியங்களை மக்களிடம் கொடுத்து விட்டு, வீணாய்ப் போய்க் கொண்டிருக்கும் அந்தத் துறையையும் திறமையான ஆள் யாரிடமாவது கொடுத்து விடு!" என்று அறிவுரை கூறலாம். அது சிரமம் என்றால், காங்கிரஸ் கட்சியின் வழக்கமான பாணியில் குற்றப் புலனாய்வுத் துறையையும் ஊடகங்களையும் ஏவி விட்டு, அவர் செய்த கோல்மால்களை வெளிக் கொண்டு வந்து, தானாகவே பதவி விலக வைக்கலாம். இந்த விஷயத்தில் உங்களுக்குத் தேவைப் படும் உதவிகள் செய்ய சோனியா வீட்டு முன்னால் தவம் கிடக்கும் சில ஆட்களைப் பிடித்தால் போதும். மற்றவை எளிதில் கைகூடும்.

3. எங்கள் ஊர்க்காரர் கிருஷ்ணாவை வேறு ஏதாவது வேலைக்கு அனுப்பி விட்டு, உருப்படியான யாராவது ஓர் ஆளைக் கொண்டு வந்து வெளியுறவுத் துறையில் போட்டால் நன்றாக இருக்கும். அவருடைய பேரப் பிள்ளைகளும் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகக் கேள்விப் பட்டேன். பாவம், கடைசிக் காலத்தில் அவரைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் மட்டுமல்ல. அது போல நிறையப் பேருக்கு நிறைய ஓய்வு தேவைப்படுகிறது. அவர்களையெல்லாம் ஓய்வெடுக்க விடுங்கள். தம் உடல் நலத்தை விட நாட்டின் நலத்தை அதிகம் மதிப்பதாக அவர்கள் சொல்வார்கள். நாட்டு மக்கள் நாங்களோ நாட்டின் நலத்தை விட அவர்களுடைய உடல் நலம் மிக முக்கியம் என நினைக்கிறோம். எனவே... ப்ளீஸ்... அவர்களை விட்டு விட்டு இரத்தம் உறைந்து விடாத இளைஞர்கள் நிறையப் பேரைக் கொண்டு வாருங்கள்.

4. இந்தக் கபில் சிபலைக் கூப்பிட்டு, "தம்பி, நீ இடையில் கொஞ்சம் நல்லா வேலை பார்த்த. இப்பத் திரும்பவும் நிரம்பப் பேச ஆரம்பிச்சுட்ட. தொடர்ந்து ஒழுங்கா வேலை பார்க்க ஏதாவது உதவி தேவைப் பட்டாச் சொல்லு. யாரையும் காப்பாத்த வேண்டிய வேலை நம்முடையதில்லை. உன் தொழில் வழக்கறிஞர் தொழில் என்பதை மறந்து விட்டுக் கொஞ்ச காலம் வேலை பார்!" என்று அறிவுரை சொல்லுங்கள். முடிந்தால், தொலைத் தொடர்புத் துறையை அது பற்றி நன்கறிந்த இளைஞர் யாருக்காவது கொடுங்கள். அதாவது, தயாநிதி மாதிரி ஆனால் நல்லவராகப் பார்த்துக் கொடுங்கள். கபில் சிபல் கல்விச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தட்டும். அவரும் நாடும் உருப்பட வழி வகுக்கும் அது. சவடால்தான் பிடிக்கிறது என்றால், "நேர்மையாகப் பேசு!" என்றொரு கண்டிசன் மட்டும் போட்டு சட்டத் துறையைக் கொடுத்து விடுங்கள். அங்கும் நிறைய வேலை இருக்கிறது அடுத்த சில ஆண்டுகளுக்கு.

5. உங்களுக்குப் பேசுவது பிடிக்காது என்றபோதும், ஒரு நாட்டின் உச்ச பட்சப் பதவியில் இருப்பதால், உங்களுடைய மக்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பதன் மூலம் சில சங்கடங்களைத் தவிர்க்க விரும்புவது புரிகிறது என்றபோதும், அதன் மூலம் உங்கள் தலைக்கே வேட்டு வைக்கும் அளவுக்குச் சில பிரச்சனைகளைப் பெரிதாக்க விட்டு விட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அதனால், சும்மா அவர்களைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கவாவது ஊடகங்களைத் தொடர்ந்து சந்தியுங்கள். என்னதான் உங்களைச் சுற்றி நடக்கிறது என்று ஓரளவு புரிபட வாய்ப்புள்ளது. உங்கள் அமைச்சர்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்யும் சேட்டைகள் அனைத்தும் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், உங்களை விட அதிகமாக உங்கள் அமைச்சர்கள் அவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் குட்டும் வெளிப்பட்டு விடும் என்று கவலைப் பட வேண்டியதில்லை. நீங்கள்தான் சேட்டைகள் செய்வதில்லையே! எல்லோரும் போல நீங்கள் எதுவுமே செய்வதில்லை என்று குற்றம் சாட்டக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது...

ஞாயிறு, ஜூலை 17, 2011

நானொரு சமத்துவவாதி!

எல்லோரும் சமம்
என்கிறது
என் சமுத்திரத் துளியளவு சமத்துவ ஞானம்

அதுதான் சமத்துவமா
என்று கூடச் 
சரியாகத் தெரியவில்லை...
ஆனாலும், 
நானொரு சமத்துவவாதி!

ஆனாலும்,
சமத்துவம் பற்றி
பேசக் கூடத் தெரியாதோரை விட
பெரியவன் இல்லையா நான்?

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

ஒழுக்கம்

உணவுக்கு உயிர்களைக் கொல்
மனித நேயம் பேசிக் கொள்
இது வேறு
அது வேறு
இயற்கை!

மனித வதை செய்
உயிர்ப் பலி எதிர்
இது வேறு
அது வேறு
மத நம்பிக்கை!

கொள்ளையடித்துக் கொள்
கொடி வணக்கம் செலுத்து
இது வேறு
அது வேறு
தேச பக்தி!

கொலைகளைக் கண்டு கொள்ளாதே
குற்றவாளிகளைக் காப்பாற்று
இது வேறு
அது வேறு
மனித உரிமை!


அவரவர்க்கு ஒரு நியாயம்
அதன்படியான வாழ்க்கை
சுதந்திரம்!

கடைசியில்,
குடிப்பவன்...
புகைப்பவன்...
காதலிப்பவன்...
இவர்கள் மட்டுமே 
இந்தச் சமூகத்தின்
அநியாயக்காரர்கள்!

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

மாற்ற முடியாதே!

நேற்று வரை
ஒருபோதும் செய்யாத தவறு
இன்று
ஒரே நாளில் இழந்து விட்டேன்
ஒழுக்க சீலப் பட்டத்தை...

முதல் முறை பிறழ்ந்த
இந்த முழு நாளும் பிடிக்க வில்லை...

சரி போகட்டும்.
யாம் பெற்ற பெயர்
பெற வைக்கிறேன் இவ்வையகம்...

இப்போது சிலரில் ஒருவன்
அப்போது பலரில் ஒருவன்
பெயரைக் காப்பாற்றி விடலாம்!

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

மூச்சுக்கும் எழுத்துக்கும்...

எத்தனை பெண்கள்?
எத்தனை கதைகள்?
ஒரு சொல் கூட
உள்வாங்க வில்லையே!

ஏன்
நீ பேசும்போது மட்டும்...
பேச்சுக்கிடையிலான
மூச்சில் கூட
பொருள் தேடுகிறேன்?

ஏன்
உன் கடிதங்களில் மட்டும்...
ஒவ்வொரு எழுத்துக்கும் கூட
பொருளிருக்கும் என்றெண்ணி
புலம்பித் தவிக்கிறேன்?

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

ஆமாம், நீ சொன்னது சரிதான்!

எத்தனை கேலி?
எத்தனை கிண்டல்?
எத்தனை விமர்சனம்?
எத்தனை கண்டனம்?
எத்தனை ஏளனம்?
மனம் ஆனது ரணம்!

கடைசியில் கிடைத்த
"ஆமாம், நீ அன்றே சொன்னாய்!"
ஒப்புதல்களில்
கவலை மறந்து
பெருமிதம் மேலிடுகிறது

ஆனாலும்,
தெளிவாகச் சிந்திந்து
நடைமுறைச் சிக்கல்கள் ஆராய்ந்து
கவனத்தோடு சொன்ன கருத்துக்கும்
வெளிப்படையாய்ப் பேச விரும்பிய நேர்மைக்கும்
ஏற்பட்ட இடைக்காலக் காயங்களை
எப்படி ஆற்றப் போகிறீர்கள் இப்போது?

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

எர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: சந்திரகாந்தன்) - 2/2


"துப்பாக்கி இல்லாமல் புரட்சி நடத்தவே முடியாது." என்று இளமைக் காலத்தில் சே சொன்னதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக ஆயுதங்கள் ஏந்தி ஆக வேண்டும். ஆயுதத்தை மட்டும் நம்பி இறங்க முடியாது. பல தந்திரங்களும் மூளை உழைப்பும் கூடச் செய்தாக வேண்டும். சனநாயகத்தில் துப்பாக்கி இல்லாமலும் புரட்சிகள் செய்ய முடியும் என நினைக்கிறேன். கத்தியின்றி இரத்தமின்றிச் செய்யப்படும் புரட்சிகள், புரட்சிகள் என அழைக்கப் படாமல் இருக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும். சனநாயகத்தில் இருக்கும் சர்வாதிகாரிகளை எப்படி வெல்வது? துப்பாக்கி எடுத்துத்தானே முடியும்?

"சிறு பிள்ளைப் பிராயம் தொட்டே நாடு சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் எர்னஸ்டோ. அவரைச் சுற்றியுள்ள யதார்த்தத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விழைந்தார். அந்த அறிவு புத்தகங்களின் மூலம் பெறப்பட்டதாக இல்லாமல், யதார்த்தத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தலைநகரில் மட்டுமின்றி, தூரத்து மாநிலங்களிலும் வாழும் மக்கள் எத்தகைய வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ள அவர் மிகவும் ஆர்வம் காட்டினார். அர்ஜண்டைன் விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், இந்தியர்கள் எங்ஙனம் வாழ்கிறார்கள் என்று அறிய விரும்பினார். மொத்தத்தில் தமது தாய் நாட்டைத் தரிசிக்கவும், அதன் பம்பாஸ் புல்வெளி, மழைத் தொடர்கள், பருத்தியும், பராகுவேயன் தேயிலையான மேட்டும் விளைகிற வடக்கு உஷ்ணப் பிரதேசம் ஆகிய பகுதிகளைக் கண்ணாரக் கண்டு களிக்கவும் அவர் விரும்பினார். ஆனால் ஒருமுறை பார்வையிட்ட பிறகு, இது பற்றாது, பிற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பார்வையிடுவது, அந்த நாடுகளது மக்களின் பயம், நம்பிக்கை, வாழ்க்கை ஆகியன பற்றி அறிந்து கொள்வதும் அவசியம் என்று அவர் கண்டு கொண்டார். அப்போதுதான் தன்னை இடை விடாமல் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு - இந்தக் கண்டத்தில் வாழும் மக்களது வாழ்க்கையை இன்னும் சிறப்புடையதாக்குவது எங்ஙனம்? ஏழ்மை, நோய் ஆகியவற்றின் பிடியிலிருந்து அவர்களை நில உடைமையாளர்கள், முதலாளிகள், வெளிநாட்டு ஏக போகங்களின் அடக்குமுறைத் தளையிலிருந்து விடுவிப்பது எங்ஙனம் என்ற கேள்விகளுக்கு - உண்மையான பதிலைக் கண்டறிய முடியும் என்று அவர் கருதினார்." என்றொரு நீண்ட பத்தி அவருடைய ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பற்றிச் சொல்கிறது.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்வோர் தவிர்த்து, தான் சார்ந்த சமூகத்தைத் தன் குடும்பமாக்கி வாழ விழைவோர் யாராக இருந்தாலும் இந்த ஊர் சுற்றல் வேலையைச் செய்தே ஆக வேண்டும். கலைஞர்கள், படைப்பாளிகள், சமூகப் பணியில் ஈடுபடுவோர், அரசியலாளர்கள் ஆகிய அனைவருமே மக்களோடு மக்களாகப் போய்ப் பார்த்தால் ஒழிய உண்மை நிலவரம் முழுமையாகப் புரிபடாது. எங்கள் பணியில் "GO SEE YOURSELF" என்றொரு நுட்பம் உண்டு. அதாவது, "நீயே சென்று பார்" என்று பொருள். எவ்வளவுதான் நூல்களைப் படித்தாலும் அறிக்கைகளை வாசித்தாலும் அது உண்மை நிலவரத்தை உணர்த்தாது என்பதாலேயே அப்படிச் சொல்லப் படுகிறது. அதனால்தான், முன்பெல்லாம் "உன்னோடு பஸ்ஸில் செல்பவனுக்கு ஓட்டுப் போடு. அவனுக்குத்தான் உன் வாழ்க்கை தெரியும்!" என்று நம்ம ஊரில் சொல்வார்கள். இப்போதெல்லாம் பஸ்ஸில் செல்லக் கூடியவராக இருந்தால் அந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் நம்ம மக்கள். "அவனுக்கே பஸ் காசு இல்லாதவன் நமக்கு எப்படித் தண்ணி வாங்கி ஊத்த முடியும்?!" என்று தப்பி ஓடி விடுவார்கள். இப்படிச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இறங்கி விட்டால், தனக்கென்று ஒரு தொழில் வைத்துக் கொள்ள முடியாது. சவுகரியங்கள் - சுகங்கள் பார்க்க முடியாது. எதுவும் வேளா வேளைக்கு நடக்காது. இதையெல்லாம் தாங்கித்தான் - தாண்டித்தான் புரட்சியாளர்கள் உருவாக முடியும். சுய வளர்ச்சிக்காக இதையெல்லாம் தாங்குவோர் இருக்கிறார்கள். தன் சமூக வளர்ச்சிக்காக? "ஏய்... போங்கப்பா... போய் ஆகுற வேலையைப் பாருங்க!" என்கிறீர்களா?!

"வானுயர்ந்த மலைகள், ஆழம் காணப்படாத பெருங்கடல்கள் இவற்றோடு ஒப்பிடுகிறபோது துரும்பெனத் தோன்றுகிற நம்மைப் போன்ற மனிதர்களால்தான் இந்த நகரமும் பிரம்மாண்டமான படிக்கட்டும் நிர்மாணிக்கப் பட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் போது வித்தியாசமான உணர்ச்சிக்கும் புதிதாக ஒன்றைக் கண்டறிந்த ஆனந்தக் களிப்புக்கும் ஆளாக நேர்கிறது. வானுயர்ந்த மலைகளையும் ஆழம் காணப்படாத பெருங்கடல்களையும் எப்போதும் மனிதன் வென்று வந்திருக்கிறான். ஜெட் விமானத்தின் மீது ஏறி உயர்ந்த வானத்தில் பறக்கவும், பிரபஞ்ச வெளியில் கிரகங்களிடையே தோன்றவும், சந்திர மண்டலத்தில் கால் பதித்து நடை பழகவும், அணுவின் உட்கருவைச் சிதைக்கவும் வல்லமை பெற்றவர்களாய் விளங்குகிற இன்றைய மனிதர்களான என்னையும் உங்களையும்..." என்று சோவியத் எழுத்தாளர் எஸ். எஸ். ஸிபிர்னோவ் பெரு நாடு பற்றி எழுதியபோது எழுதியதாக ஒரு பத்தி வருகிறது. இது பற்றி நானும் பல முறை எண்ணி வியந்திருக்கிறேன். ஒரு மனிதன் இந்த அண்ட சராசரத்தில் எவ்வளவு சிறிய துகள்? இருப்பினும் என்னவெல்லாம் செய்ய முடிகிறது அவனால்? முடியாதது என்று எதுவுமே இல்லை என்கிற அளவு ஆகி விட்டது. அப்படி முடியாது என்று சொல்லப் படுகிறவையும் இப்போதைக்கு முடியாதவை என்றே சொல்ல வேண்டும்.

"மனிதனின் பலஹீனங்கள் என்று சொல்லப் படுகிற அனைத்திலும் அவர் புகையிலை, புத்தகங்கள், செஸ் என்ற மூன்று பலஹீனங்கள் மட்டுமே உடையவராய் இருந்தார்." என்று மியல் கூறுவதாக ஒரு குறிப்பு. இங்கே இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசியாக வேண்டும். என் நண்பன் நாதன் அடிக்கடிச் சொல்வான். "படிப்பதை மட்டும் ஒரு கெட்ட பழக்கம் போல் பழகிக் கொள்ள வேண்டும்!" என்று. அதாவது, அந்த அளவுக்கு அடிமையாகிக் கொள்ள வேண்டுமாம். நல்ல பழக்கங்களுக்குத்தான் அடிமையாக்கும் திறமை இல்லையே! அவன் சொன்னது கல்லூரியில் படிக்கும் காலத்தில். பாடப் புத்தகங்கள் படிப்பது பற்றி. அதையே பொதுவாகப் புத்தகங்களுக்கு என்று வைத்துக் கொள்வோம். தீவிர வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனின் மூளையை மிகப் பெரிய அளவில் விரிவு படுத்த முடியும். அதுவும் பொது வாழ்க்கையில் இறங்குவோருக்கு மிக முக்கியம். அடுத்தது செஸ் பற்றி. சிறு வயதில் அது விளையாண்டால் புத்தி வளரும் என்று கேள்விப் பட்டு மிகவும் முயன்று பார்த்தேன். என்னவோ அதில் மனம் ஈடுபடவே மறுக்கிறது. மூளையை அந்த அளவு கசக்கப் பிடிக்காதது ஒரு காரணம். அதுவும் ஒரு விளையாட்டுக்காக என்கிறபோது சுத்தமாகப் பிடிக்கவில்லை. விளையாட்டு என்பதே மகிழ்வாய்ப் பொழுது போக்க என்று போகையில் அதிலும் மூளையைக் களைப்படைய வைப்பதில் பிரியமில்லை. இன்னொன்று அதில் வீணாகும் நேரம். மணிக்கணக்காக விழுங்கி விடுகிறது. திரைப்படம் பார்க்கப் பிடிக்காமல் போன ஒரே காரணம் அதுதான். அந்த நேரத்தில் நன்றாகத் தூங்கினால் கூட உடலும் உள்ளமும் புத்தணர்ச்சியோடு எழ வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. ஆர்வம் வராததால் இவ்வளவு வீண் விளக்கங்கள் கொடுப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

"புரட்சிகர அரசியல்வாதிகள் துறவிகள் போல் வாழ வேண்டும் என்று சே அடிக்கடி கூறுவார். அதிகாரிகளில் பலர் - குறிப்பாக அதிகச் சம்பளம் வாங்குவோர் - சொத்து சேர்ப்பதிலும், அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து அபகரிப்புச் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், ஆடம்பரமான பங்களாக்களில் வாழ்ந்து குடித்துச் சீர்கெட்டுப் போவதிலும் தங்களது நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிற எங்களது நாட்டில் அவரது முக்கியத்துவம் வாய்ந்ததுதான்." என்று மியல் கூறுவதாக ஒரு கூற்று வருகிறது. அடப்பாவிகளா! அங்கேயுமா? இந்த வார்த்தைகள் அனைத்தும் அப்படியே எங்கள் அதிகாரிகளைச் சொல்வது போல் இருக்கின்றனவே. ஒருவேளை இப்போதுதான் அவர்கள் சில தலைமுறைகளுக்கு முன்பு இருந்த மாதிரி ஆகியிருக்கிறோம் போல்த் தெரிகிறது. அப்படியானால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி அவர்கள் போல நாமும் உருப்படலாம். சே சொன்னதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. புரட்சிக்காரர் என்போர் அனைவரும் மிகவும் மாடர்னான ஆசாமிகள் போலத் தோன்றலாம். முக்கியமாகக் கைகளில் மாடர்ன் துப்பாக்கிகள் வைத்திருப்பதால். ஆனால், அவர்களும் துறவிகள் போல் வாழ்வோரே. நம் நாட்டில் கூட பொதுவுடைமைவாதிகள் பற்றி வலதுசாரிச் சூழலில் வளர்ந்தோர் பலரிடம் சரியான கருத்து இல்லை. கொள்கையால் எதிரெதிர்த் துருவங்களாக இருப்பதால் வலதுசாரிகளால் அவர்கள் தவறாகவே சித்தரிக்கப் பட்டு விட்டார்கள். உண்மை என்னவென்றால் வாழ்க்கை முறையில் இடதுசாரிகள் வலதுசாரிகளுக்குப் பிடித்த துறவிகள் போல வாழ்வோர். அவர்களிலும் நிறையத் திருமணம் செய்து கொள்ளாமலே வாழும் தியாகிகள் இருக்கிறார்கள். சமூகப் பணிகளுக்காகக் குடும்பங்களைத் துறந்தவர்கள் இருக்கிறார்கள். காலமெலாம் கந்தல்த் துணிகளையே கட்டி அழிந்தோர் இருக்கிறார்கள். துறவிகளுக்கு சமாதி நிலை அடைவது போல இவர்களுக்கு சமூக மாற்றம் தவிர மனதில் எதுவுமே ஓடுவதில்லை.

"குவேராவைப் பொருத்தவரை, அவரிடம் சொல் ஒன்று செயல் ஒன்று என்பதே கிடையாது. எந்த நிலையிலும், தன்னால் இயலாத ஒரு காரியத்தை - அல்லது தான் செய்யத் தயாராகாத ஒரு காரியத்தை - யாரேனும் செய்யட்டும் என்று அவர் ஒருபோதும் கூறியதே இல்லை. கொள்கை ரீதியான விவாதங்களைப் போலவே நடைமுறை உதாரணமும் முக்கியத்துவம் உடையது என்று அவர் நம்பினார். எங்கள் நாடுகளில் தனிப்பட்ட முன்னுதாரணம் பிரம்மாண்டமான அளவுக்கு விளைவுகள் ஏற்படுத்தும். நாங்கள் ஏராளமான தத்துவ ஆசிரியர்களை - குறிப்பாக வாய்ச்சொல் வீரர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் சொன்னதைச் செய்து காட்டும் மனிதர்கள் சிலரைத்தான் சந்தித்திருக்கிறோம். சே, சொன்னதைச் செய்து காட்டுபவர். சியாரா மாய்ஸ்ட்ராவில் அவர் சண்டை மட்டும் போடவில்லை; காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்; பதுங்கு குழிகள் தோண்டினார்; பட்டறைகள் அமைத்தார்; முதுகில் சுமைகள் தூக்கினார். குழுத்தலைவரின் சுமையை மட்டுமல்லாது சாதாரண வீரனொருவனின் பூட்சைக்கூட அவர் சுமந்தார். தொழில்முறை அமைச்சராக இருந்தபோதும் அவர் அங்ஙனம்தான் நடந்து கொண்டார். கட்டுமானப் பணிகள் நடந்த இடங்களில் வேலை பார்த்தார்; கப்பலில் இருந்து சாமான்களை இறக்க உதவு புரிந்தார். ட்ராக்டர் ஓட்டினார்; கரும்பு வெட்டினார்." என்றும் சேயின் குணாதிசயங்கள் பற்றி மியல் கூறுகிறார்.

இதில் எனக்கு முக்கியமாகப் பட்டவை சில. ஒன்று - தன்னால் முடியாததை இன்னொருவரைச் செய்யச் சொல்லக் கூடாது. ஓர் அணியாக வேலை செய்யும்போது ஒருவரால் முடியாதது இன்னொருவருக்கு முடியும்; ஒருவரால் முடிந்தது இன்னொருவருக்கு முடியாது. அதுதான் அணியின் பலமே. தனித் தனியாகச் செய்ய முடியாததை எல்லோருமாக இணைந்து செய்தால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் எவராலும் முடியாத வேலைகளைத் தான் செய்யாமல் இன்னொருவரிடம் திணிப்பது நல்ல தலைமைப் பண்புக்கு அடையாளமே அல்ல. இன்று பணியிடங்களில் இந்த மாதிரி வேலைகளைச் செய்வோர்தான் எளிதில் அணியின் ஒத்துழைப்பை இழக்கிறார்கள். இன்னொன்று - களப்பணி ஆற்றும் தலைவர்களுக்கு எப்போதுமே அணியினரிடம் மரியாதை இருக்கிறது. அது தவறு என்றுகூட நிறையக் கருத்துகள் சொல்லப் படுகின்றன. அந்த நேரத்தை வியூகம் அமைப்பதில் செலவிட்டால் மேலும் பெரிதான வெற்றிகள் பெறலாம் என்று சொல்கிறார்கள். அது பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால், வியூகம் மட்டுமே அமைத்துக் கொண்டிருக்கும் தலைவர்களுக்குப் போலி மரியாதை கிடைக்கிறதே ஒழிய அணியினர் அவர்கள் மீது அபிமானம் கொள்வதில்லை. எவ்வளவுதான் சாதித்தாலும் தன்னோடு வந்தமர்ந்து தன் வேலையையும் செய்யும் தலைவர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். இதுவும் ஒருவித வியூகம்தான். அணியின் உற்சாகத்துக்காகச் செய்ய வேண்டிய நுட்பமான விஷயங்கள் இவை.

"தென் அமெரிக்காவில், பசிபிக் சமுத்திரக்கரை வழியே பயணம் செய்தபோது கண்ணுற்ற தாமிரச் சுரங்கங்களும், தொழுநோயாளிகள் காலனிகளும், இந்தியர்களது குடியிருப்புக்களும்தான் அவரை மாற்றின. இந்த மாபெரும் கண்டத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும், இந்தியர்களும் மீளவே முடியாத வறுமையிலும், தரித்திரத்திலும் ஒருபுறம் உழன்று கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கத்தில் இவர்களைச் சுரண்டி, கொள்ளையடித்து, ஏமாற்றி சேர்த்த செல்வத்தை இரக்கமில்லாத, பணவெறி பிடித்த சிலர் தண்ணீரைப் போல் செலவழித்துக் கொண்டிருந்தனர். ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்வியே அவரிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது." என்ற வரிகள் காந்தி மதுரைப் பக்கம் பயணிக்கும்போது நம் விவசாயிகளைக் கண்டு தன் நாகரிக உடைகளைத் தூக்கி வீச முடிவு செய்த கதை நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் அப்படியே நம்ம ஊரில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நடந்தால் அந்த மண்ணில் புரட்சி வரும் என்று கொள்ளலாமா? ஆனால், இங்கொரு சே தோன்ற வேண்டுமே. தோன்றி விட்டாரா அவர்? எங்கே இருக்கிறார்? இல்லை, அப்படியொரு புரட்சியாளனைப் பெரும் தகுதி நமக்கு இல்லையா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

"மெக்சிகோ நகரில் எனது மகள் பிறந்தபோது அவளைப் பெருவியன் என்றோ அர்ஜெண்டைன் என்றோ நாங்கள் பதிந்திருக்க வேண்டும். மெக்சிகோவில் தற்காலிகமாக வசித்த நாங்கள் அப்படிப் பதிவதுதான் பொருத்தமானது. நாங்கள் தோல்வியுற்று நாட்டிற்கு வெளியே வாழ்ந்த கசப்பான நேரத்தில் எங்களுக்கு இடமளித்து ஆதரவு காட்டிய மெக்சிகன் மக்களுக்கு மரியாதை செய்யும் முகமாகவும் அவர்களைப் போற்றும் பொருட்டும் நாங்கள் எங்கள் குழந்தையை மெக்சிகன் என்றே பதிவு செய்தோம்" என்று 1959-இல் சியம்பரி என்ற மெக்சிகோப் பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது சே கூறியதாக வருகிறது. இது அப்படியே ஒரு புரட்சியாளனுக்கே உரிய சிந்தனை. சாமானியர்கள் இப்படி யோசிப்பதே இல்லை. நம்ம ஊரில் வாழ வந்த மற்றவர்கள் இதைச் செய்யும்போது நமக்குப் பெருமையாகிறது. இதை நம்மவர்கள் வெளியூரில் போய்ச் செய்தால் கோபம் வருகிறது. அடையாளத்தை இழத்தல் என்பதற்கு அப்பாற்பட்டு, இது ஒருவித நன்றி செலுத்துதல். பயந்து போய்ச் செய்தல் வேறு இருக்கிறது. அது பற்றிச் சொல்லவில்லை.

"தமது தாய் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த ஏனைய அகதிகளிலிருந்து வேறுபாட்டு விளங்கிய இந்த அர்ஜெண்டைன் மருத்துவர் அர்ஜெண்டைனாவைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், முழு லத்தீன் அமெரிக்கா பற்றிச் சிந்தித்து, லத்தீன் அமெரிக்காவை அமெரிக்க ஐக்கிய நாடுகளது அடிமையாய் பிணைத்திருக்கும் சங்கிலியின் 'பலஹீனமான கண்ணியைக்' கண்டறிய முயன்றார்." என்றொரு பத்தி வருகிறது. அடப்பாவி நீங்கதானா அதுக்கெல்லாம் காரணம்? எவ்வளவு காலமாக இந்த உலகின் பிரச்சனைகளுக்குக் காரணமான நாடாக இருக்கப் போகிறார்களோ இவர்கள் தெரியவில்லை. இன்னொன்று - தன் வீடு, தன் வீதி என்ற சிந்தனைகளை எல்லாம் தாண்டி வருவது மட்டுமல்ல, தன் நாடு என்கிற சிந்தனையையும் தாண்ட வேண்டும் ஒரு நல்ல மனிதாபிமானி. அப்படி இருந்திருக்கிறார் சே.

"1956-இல் நாம் சுதந்திரம் பெறுவோம்; அல்லது தியாகிகள் ஆவோம்" என்று பாடிஸ்டாவை எதிர்த்து நியூயார்க்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது பிடல் கூறினாராம். என்ன சொல்ல? இப்படித்தான் சுதந்திரப் போர்கள் அனைத்துமே நடத்தப் பட வேண்டும் போல்த் தெரிகிறது.

"அவரது வழிநடப்போர் மாணவர்களாகவும், இளம் தொழிலாளர்களாகவும், அலுவலக ஊழியர்களாகவும், கைத்தொழிலாளர்களாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த மேல்வகுப்பு மாணவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது; தெளிவான திட்டம் கிடையாது. அவர்கள் 'தாய்நாட்டின் மீது நேசம், பாடிஸ்டாவின் மீது வெறுப்பு' என்ற மதிப்பு மிக்க குணாம்சத்தைப் பெற்றிருந்தார்கள்." என்றொரு பத்தி வருகிறது. உண்மை. இவர்களெல்லாம் சேர்ந்தால்தான் போராட்டம் நடத்த முடியும். உலகப் போராட்டங்கள் அனைத்திலுமே இவர்கள் எல்லோரும் இருப்பார்கள். அதுபோலவே அவர்கள் எல்லோருமே எல்லாக் கொள்கைகளையும் கரைத்துக் குடித்த பேரறிவாளர்களாக இருக்க முடிவதும் இல்லை. அவரவருக்கென்று வேலைகள் இருக்கும். அது போக மீதி நேரங்களில் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள். தன்னைச் சுற்றி இருக்கிற - தான் அறிவாளி என்று நினைக்கிற ஆட்களின் பக்கம் சேர்ந்து அவர்களால் முடிந்ததைச் செய்வர். எல்லோருமே அரசியல் அனுபவம் பெற்று விட்டுத்தான் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றால் அந்த இடத்தில் ஒருக்காலும் புரட்சி நடக்கவே நடக்காது.

"பிடல்தான் இந்த இளைஞர்களின் உண்மையான நாயகன். அவரது வழிநடப்போரைப் போலவே அவரும் இளைஞர். அவர் திறமையான பேச்சாளி, கம்பீரமான தோற்றமுடையவர்; மிகுந்த தைரியமுடையவர்; இரும்பொத்த இதயம் கொண்டவர். அவர் கியூபாவின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தார். சமகாலக் கியூபன் அரசியலின் குழப்பங்கள் ஊடே அவர் தனது பாதையைத் தவறின்றி வகுக்க வல்லவராய் இருந்தார், எந்த எந்தத் தீமைகள் களைந்தெறியப் பட வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். அவற்றைப் பற்றிய தனது உறுதியான கருத்துக்களை நீதிமன்றத்தில், 'வரலாறு எனக்குத் தீர்ப்பளிக்கும்' என்ற உரையில் எடுத்துக் கூறினார்." என்று பிடல் பற்றி ஒரு பத்தி வருகிறது. புரட்சிகளை வழி நடத்திய எல்லாத் தலைவர்களுமே பெரும்பாலும் பெரும் பெரும் பேச்சாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதில் எனக்குத் தெரிந்து ஒரு விதிவிலக்கு என்றால் பிரபாகரன். அப்படியானால் அவருடைய சிந்தனையும் செயல்பாடும் அதையும் மறக்கடிக்கும் அளவுக்கு பலமாக இருந்திருக்க வேண்டும்.

"எனக்கு முதன்முதலாகப் புரட்சிக்காரர்களின் தலைவரோடு பழக்கம் ஏற்பட்டபோது - சாகசம் புரிய வேண்டும் என்கிற உத்வேகத்தால் நான் அவர்பால் ஈர்க்கப் பட்டேன் - வெற்றி கிட்டுமா என்ற ஐயம் எனக்குள் இருக்கவே செய்தது. ஆனாலும் அந்த நேரத்தில் நான், உன்னதமான இலட்சியங்களின் பெயரால் இன்னொரு தேசத்தின் மண்ணில் இறந்து போவது ஒன்றும் தவறான காரியமில்லை என்று நினைத்துக் கொண்டேன்." என்று சே சொன்னதாக ஒரு பத்தி. சாகசங்களில் பெரிதாக ஆர்வம் இல்லாத ஆள் நான். அந்த அளவுக்கு தைரியம் இல்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் இது போன்ற ஆட்கள் நிறைய நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். பயத்தை மட்டும் தொலைத்து விட்டால் இந்த உலகம் இன்னும் எவ்வளவோ கிளர்சியூட்டுவதாக இருக்கும் என்பது நன்றாகவே புரிகிறது. அதுவும் இறப்பை இவ்வளவு சாதாரணமாக ஏற்றுக் கொள்வதென்பது என்னால் கற்பனையே பண்ணிப் பார்க்க முடியாதது. ஒருவேளை, அந்த அளவு உள்ளக் குமுறலும் அதற்கேற்ற சுற்றமும் அமைந்தால் அதெல்லாம் வந்து விடுமோ என்னவோ?

குவேராவின் அணியிலிருந்து போராடிய கேப்டன் மார்சியல் ஓரோஸ்கா எழுதுகிறார்: "அவரிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் இருந்தன. அவர் அதிகப் புத்தகங்கள் படித்தார். எந்த நிமிடத்தையும் வீணாக்க மாட்டார். படிப்பதற்காகவோ அல்லது டைரியில் குறிப்பு எழுதுவதற்காகவோ அவர் அடிக்கடி தூக்கத்தைத் தியாகம் செய்வார். அதிகாலையில் எழுந்து விடுவாரானால் உடனே படிக்கத் துவங்கி விடுவார். அந்த நாள் படிப்போடு துவங்கும். அடிக்கடி முகாம் விளக்கின் வெளிச்சத்தில் அவர் இரவுகளில் நெடுநேரம் படித்துக் கொண்டிருப்பார். அவருக்கு அற்புதமான கண்ணோட்டம் இருந்தது.". படிப்பது பற்றி ஏற்கனவே பேசி விட்டோம். எல்லாத் துறைகளிலுமே நிறையப் படிப்போருக்கென்று ஒரு பலம் உண்டு. புரட்சியாளர்களும் நிறையப் படித்துப் படித்துத்தான் தம்மை வலுவாக்கிக் கொள்கிறார்கள். எல்லாப் புரட்சியாளர்களும் அப்படி இருப்பதில்லை. ஆனால் புரட்சித் தலைவர்களாக ('புரட்சித் தலைவர்' என்ற சொற்களுக்குத் தமிழ் நாட்டில் வேறு பொருள் என்று தெரிந்தும் இப்படி எழுதத் துணிந்ததற்கு என்னை நீங்கள் பாராட்ட வேண்டும்!) இருப்பவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களையும் அவர்களின் மூளையையும் நம்பித்தானே அத்தனை பேர் உயிரைக் கூட மறந்து விட்டு வருகிறார்கள். அதற்கான பொறுப்புணர்ச்சி அவர்களுக்கு வேண்டுமல்லவா!

"இந்த அசாதாரணப் புரட்சிக்காரர் அவர்களிடமிருந்து வேறு பட்டவராக இருந்த போதும், வித்தியாசமான அர்ஜெண்டைன் மொழி பேசியபோதும், குவாஜிரோக்கள் அவரை மதித்தனர். உலகின் எந்தப் பாகத்திலும் போற்றப் படுகிற மானுடக் குணங்களான - எளிமை, துணிச்சல், நேர்மை ஆகிய குணங்களால் அவர் பல விவசாயிகளைக் கவர்ந்தார்." என்று சே பற்றி ஒரு சிறு பத்தி வருகிறது. எல்லாப் பண்பாட்டிலுமே அடுத்தவரை ஒரு மாதிரியாகப் பார்க்கிற பழக்கம் இருக்கத்தான் செய்யும் என நினைக்கிறேன். அதையும் மீறி அவரைத் தம்முள் ஒருவராகப் பார்க்க வைத்தது எதுவென்றால், அது அவருடைய மேற்சொல்லப் பட்ட குணங்களாகவே இருக்க வேண்டும். தமக்காகப் போராட வந்திருக்கும் ஒருவன் சாதாரணப் பட்ட ஆளாக இருந்தால் கூட மதியாமல் விட வாய்ப்புண்டு. அல்லது பண்பாளனாக மட்டும் இருந்தால் கூட அதற்கு வாய்ப்புண்டு. அறிவாளியும் பண்பாளனும் செயல்வீரனுமாக இருக்கிற ஒருவனை அவ்வளவு எளிதில் அப்படியெல்லாம் உதாசீனப் படுத்த முடியுமா என்ன? அது யாருடைய இழப்பு?

"சிலருக்கு குதிரை மாமிசம் உண்ணுவது தர்ம சங்கடமாக இருந்திருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு அது வயிற்றைப் புண்ணாக்கும் ஒரு காரியம். அவர்கள் தங்களை நரமாமிசம் உண்ணுபவர்களாகக் கருதினார்கள். மனிதனின் நீண்டகால நண்பனைத் தின்ன வேண்டியிருக்கிறதே என்று அவர்கள் வருந்தினார்கள்." என்று சே நினைவு கூர்வதாக ஒரு பத்தி. தன்னோடு உடன் வருகிற - தனக்குப் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுகிற ஒரு விலங்கை உணவுக்குப் பயன்படுத்துதல் பாவம் என்கிற மனோபாவம் தென் அமெரிக்க நாடுகளில் கூட இருந்திருக்கிறது. எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கிற விவசாயிகள் மாடு இறந்தால் அதைக் கறி வைத்துச் சாப்பிட மாட்டார்கள். அதை முறைப்படி அடக்கம் தான் செய்வார்கள். பொதுவாகவே மாட்டுக் கறியே சாப்பிடுவதில்லை. அதற்குக் காரணம் இந்த உணர்வாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

"'பார்புடோக்களை' (தாடிக்காரர்கள்) - பிளேடு கிடைக்காத காரணத்தால் முகத்தை மழித்துக் கொள்ளாத பிடலின் ஆட்களை இப்படித்தான் விவசாயிகள் அழைத்தனர்..." என்றொரு வரி வருகிறது. ஓ, இதுதான் காரணமா? நம்ம ஊரில் கூட திராவிட இயக்க காலங்களில் தாடி வைத்தால் புரட்சியாளன் என்கிற ஓர் உணர்வு இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவும் துறவிமார்களைப் போன்ற வாழ்க்கை என்று சொல்லத்தக்க ஒரு விஷயம்தானே.

"இந்த நிகழ்ச்சியின்போது எங்களது வழிகாட்டியான இலிஜியா மென்டோசாவை நாங்கள் இழந்தோம். கையில் கைத்துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அவர் எதிரிகளை நோக்கி ஓடியபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்து போனார். அவர் மூட நம்பிக்கைகளை உடையவர். ஒரு தாயத்து அணிந்திருப்பார். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அவர் ஓடுகிறபோது நாங்கள் 'எச்சரிக்கை' என்று குரல் கொடுத்தோம். அதற்கு அவர் 'எனது குரு என்னைக் காப்பார்!' என்று பதில் சொன்னார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் எந்திரத் துப்பாக்கியின் குண்டுகளுக்குப் பலியாகி இரண்டு துண்டுகளாகக் கிடந்தார்." என்று 'கியூபா: புரட்சிகர யுத்தத்தின் கதை' என்ற நூலில் சே நினைவு கூர்வதாக ஒரு பத்தி வருகிறது. இறைவனை வணங்கி விட்டு வண்டியை எடுப்பவர்களும் விபத்தில் இறக்கத்தான் செய்கிறார்கள். இறைவனைக் காணப் போவோரே வழியில் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதையெல்லாம் கொண்டு இறைவன் இல்லையென்று சொல்வதற்கில்லை என்றாலும், இது போன்ற நம்பிக்கைகள் மனதுக்கு நல்லதே ஒழிய அவற்றில் பெரிதாக வேறு பலன்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

* பாதியில் விடப்பட்ட பல நூல்களில் இதுவும் ஒன்று. மொத்த நூலையும் முடித்திருந்தால் ஒரே இடுகையில் எல்லாத்தையும் எழுத முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. கண்டிப்பாக மீண்டுமொருமுறை ஆரம்பத்தில் இருந்து படித்து முடிக்க வேண்டும்.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

எர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: சந்திரகாந்தன்) - 1/2

இந்தப் புத்தகம் நான் தமிழ் வாசிக்கப் பழகிய நாள் முதலே கண்ணில் பட்டுக் கொண்டு இருந்தது. பொதுவுடைமைப் பின்னணியில் பிறந்து வளர்ந்ததால் புரட்சியாளர்கள் பற்றிய புத்தகங்களுக்குப் பஞ்சமிருக்க வில்லை. மற்ற பெயர்கள் கேள்விப் பட்டவை. இந்தப் பெயர் கேள்விப் படாதது. இப்போது சீமான் புண்ணியத்தில் தமிழ் நாட்டில் பனியன்களில் எல்லாம் எல்லோரும் அவருடைய படத்தைப் போட்டுப் புகழ் பரப்பிக் கொண்டிருப்பது புரட்சியின் ஆரம்பமோ என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அவர் யாரென்றே தெரியாமல் கூடத் தன் பனியனில் அவரை வைத்துக் கொண்டிருந்தார். சரி, அது கிடக்கட்டும். கதைக்கு வருவோம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 'புதிய தமிழகம்' கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி (புரட்சியாளனாக வாழ்வைத் துவங்கி, இடதுசாரியாக இருந்து, அரசியல்வாதியாகி, ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவனாகி, இன்று வெறும் ஜாதி அரசியல்வாதியாக மட்டும் பார்க்கப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்!) அவர்களின் பேட்டி ஒன்றில், அவருக்குப் பிடித்த புத்தகம் எது என்ற கேள்விக்கு "எர்னஸ்டோ சே குவேரா" என்றிருந்தார். அப்போதுதான் மணி அடித்தது. 'ஆகா! அவ்வளவு நல்ல புத்தகமா அது? அதையா இவ்வளவு நாட்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம்!' என்று மிகவும் வருந்தி அப்போதே அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அதுவும் கடைசி வரை செல்ல வில்லை. நடு வழியில் ஆர்வக் குறைவில் நிறுத்தி விட்டேன். பின்னர் பெங்களூர் வந்து ஓரளவு வாசிப்புக் கூடிய வேளையில் மீண்டும் அதைக் கையில் எடுத்துப் படித்தேன். அதுவும் முழுசாக முடிக்க வில்லை. அப்போது எடுத்த குறிப்புகளின் தொகுப்பே இவ்விடுகை. முந்தைய இடுகையான 'சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்' போலவே, இதுவும் குறிப்புகளின் தொகுப்பு மட்டுமே; நூல் விமர்சனம் அல்ல. இடையிடையில் என் கருத்துரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன. அவ்வளவே. சரி. மேட்டருக்குள் செல்வோம் ('மேட்டருக்குள் செல்வோம்' என்றடித்தால் 'மீட்டருக்குள் செல்வோம்' என்றாகிறது! கொடுமை தமிழ்த்தாயே!)...

"மிக அருகில், எங்கோ பீரங்கிகள் வெடிப்பது போல் இடி கர்ஜித்து முழங்கியது" என்றொரு வரி ஆரம்பித்தவுடனேயே வருகிறது. "இடி முழங்குவது போல் பீரங்கிகள் வெடித்தன" என இயற்கையை உவமைக்குப் பயன்படுத்துவதுதானே நம்ம ஸ்டைல். அதைத் திருப்பிப் போட்டிருப்பது மேற்கத்தியப் பாணியா (நமக்கு ஸ்டைல்; மேற்கத்தியருக்கு பாணி!) அல்லது புரட்சிக்காரர்களின் பாணியா அல்லது வாசகர்களுக்குக் கதையின் களம் பற்றிய சரியான அறிமுகத்தைக் கொடுக்க முயன்ற ஆசிரியரின் வார்த்தை விளையாட்டா எனத் தெரியவில்லை.

"இந்தச் 'சே' என்ற சொல்லை அர்ஜெண்டைனர்கள் குவேரனி இந்தியர்களிடமிருந்து பெற்றார்கள் என்றும், குவேரனி இந்தியர்கள் இதை 'எனது' என்ற பொருளில் பயன்படுத்தினர் என்றும் பண்டிதர்கள் கூறுவர். ஆனால் தென் அமெரிக்கப் பம்பாஸ் புல்வெளி வாழ்வோருக்கு, அந்தச் 'சே' எனும் சொல் - பயன்படுத்தப் படும் இடத்தாலும், உச்சரிக்கப் படும் முறையாலும் - ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அங்கீகாரம் அல்லது ஆட்சேபம் போன்ற மானுட உணர்சிகளின் ஒட்டு மொத்த பல வண்ணச் சித்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல்லாகும்." என்றொரு அறிமுகப் பத்தி வருகிறது. இதில் ஆச்சரியப் படும் ஒரு விஷயம் என்னவென்றால், சே என்கிற ஓரெழுத்துச் சொல்லை நாமும் கூடத் தமிழில் மேற்சொன்ன மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறோம். 'சே... என்ன கொடுமை சார் இது...' என்பது போல.

"என்னைப் பொருத்தவரை 'சே' எனது வாழ்க்கையில் மிக மதிப்பு வாய்ந்த அதி முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் குறிக்கிறது. அங்ஙனமின்றி, அது வேறு எப்படியும் இருக்க முடியாது. எனது முதற்பெயரும், குடும்பப் பெயரும் சிறியதான, தனிப்பட்டதான, முக்கியத்துவமற்ற சில விஷயங்களை மட்டுமே குறிக்கின்றன" என்று சே ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஆக, சே என்பது அவரே இணைத்துக் கொண்ட ஒரு பகுதி போல்த் தெரிகிறது.

"என்னால் எப்போதும் வெற்றியை எட்ட முடிந்ததே இல்லை. என்னைப் பயன்படுத்தி மற்றவர்கள் லாபம் அடைந்ததுபோல், மற்றவர்கள் உழைப்பில் என்னால் லாபம் காண முடியவில்லை. ஆனால், கேவலம் - பணமா முக்கியம்? தூய்மையான மனோபாவம்தான் முக்கியம் என்று கருதியதால் அது குறித்து நான் வருத்தமுற்றதில்லை. எனது நிதி நிலைமை செழிப்பானதாக இல்லாதபோதும் நான் எனது எல்லாக் குழந்தைகளையும் - அவர்கள் ஐவர் - உயர்கல்வி பெறச் செய்து வெற்றி பெறச் செய்தேன். ஆனால், அவர்களுள் உண்மையாகவே எர்னஸ்டோ குறித்தே நான் பெருமிதம் கொள்கிறேன். அவன் நேர்மையான மனிதன்; உண்மையான போராட்ட வீரன்." என்று செயின் தந்தை கூறுவதாக ஒரு பத்தி வருகிறது. இதில் இருந்து எனக்குப் புரிகிற சில விஷயங்களில் ஒன்று - அவர் நம்மில் பலரைப் போல ஓர் ஏமாளி மனிதனாக - தன் இயலாமையை நினைத்து நினைத்து வருந்தும் சுயபரிதாபியாக - அன்றாடப் பிழைப்புக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் - ஆனாலும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி மிகுந்த அக்கறை கொண்ட சராசரி மனிதராக இருந்திருக்கிறார். அந்தப் பின்னணிதான் சேயை ஒரு சுயநலமற்ற நல்லவராக உருவாக்கியிருக்க வேண்டும். இதே இடத்தில் எல்லோரையும் தூக்கி விழுங்கி முன்னுக்கு வந்த ஒரு வெற்றியாளரை வைத்துப் பாருங்கள். அவருடைய மகன் அப்படியொரு புரட்சியாளனாக வாய்ப்பு இருக்கிறதா? இருக்கலாம். ஆனால், குறைவு. இல்லையா? இன்னொன்று தன் எல்லாக் குழந்தைகளையும் விடச் சே பற்றியே அதிகம் பெருமிதமடைவதாகக் கூறி இருக்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது, உலகப் புகழ் பெற்று விட்ட ஒரு மாபெரும் புரட்சியாளனின் தந்தை இப்படித்தான் பேச வேண்டும் என்று முடிவு செய்தும் பேசியிருக்கலாம். இடைப்பட்ட காலத்தில் தன் மகன் பட்ட துயரங்கள் குறித்துக் கேள்விப் பட்ட வேலைகளில் ஒரு தந்தைக்கே உரிய அத்தனை துயரங்களையும் அவரும் அடைந்திருக்கத்தான் செய்வார். ஒருமுறையாவது, 'எல்லோரையும் போல இவனும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மருத்துவர் வேலையைப் பார்த்திருக்கலாமே!' என்று நிச்சயம் எண்ணியிருப்பார். பெத்த மனம் பித்து இல்லையா?

"அவன் தன்னை ஓர் அர்ஜெண்டைன் என்று கூறிக் கொண்டு கபடநாடகமாடுகிற ருஷியன் என்று கூடச் சிலர் வாதித்தனர். ஆனால், நாங்கள் அர்ஜெண்டைனர்கள். எமது நாட்டு மக்களில் பலர் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கே குடியேறிய காலத்தில் குடியேறாமல் பின்னர் வந்து குடியேறியவர்கள். சே, எனது வழியில் பனிரெண்டாம் தலைமுறை அர்ஜெண்டைன். அவனது அம்மா வழியில் எட்டாவது தலைமுறை." என்று சேயின் தந்தை கூறுவதாக இன்னொரு விளக்கம் வருகிறது. இந்தப் பழக்கம் எல்லா நாடுகளிலுமே இருக்கும் போல்த் தெரிகிறது. நமக்காகப் போராட வரும் யாரையுமே அவருடைய பின்னணி பற்றிக் கொச்சைப் படுத்திப் பேசி அமைதிப் படுத்துவது. உனக்காகப் போராட வந்திருப்பவன் எந்த ஊர்க்காரனாக இருந்தால் என்ன? போராட வந்திருக்கிறானா - உழைக்க வந்திருக்கிறானா அல்லது வேறு நோக்கத்தோடு வந்திருக்கிறானா என்பதைக் கண்டறிய முயல்வது தவறில்லை. நோக்கம் சரியாக இருக்குமாயின் நமக்காக உழைக்க வரும் எவரையும் அதிகம் பேசாமல் ஏற்றுக் கொள்வதே பண்பட்ட சமூகங்களின் பண்பாடு.

"ஸ்பானிய முறைப்படி எங்களுக்கு இரண்டு குடும்பப் பெயர்கள் உண்டு. நான், எனது தந்தை வழியில் குவேரா என்றும், தாய் வழியில் லின்ச் என்றும் அழைக்கப் படுகிறேன். எனது தந்தையின் ஸ்பானிய மூதாதையர்கள் காலனி ஆதிக்க காலத்தில் அர்ஜெண்டைனாவுக்கு வந்தவர்கள்." என்று சேயின் தந்தை டான் எர்னஸ்டோ குவேரா லின்ச் கூறுகிறார். இரண்டு குடும்பங்களின் பெயர்களையும் பின்னால் இணைத்துக் கொள்வதும் நல்ல பழக்கம்தான். சில நண்பர்கள் தந்தை, தாய் ஆகிய இருவருடைய முதல் எழுத்தையும் பெயருக்குப் பின் அல்லது முன் போட்டுக் கொள்கிறார்கள். அதுபோல, பெண்ணிய முற்போக்குச் சிந்தனை இது. எல்லாச் சமூகங்களிலும் எல்லோருமே இந்தப் பழக்கங்களைக் கடை பிடிக்க ஆரம்பிக்க வில்லை இன்னும். குறிப்பாக, நம் சமூகத்தில் இன்னும் கொஞ்ச காலம் ஆகும்.

சேயின் தாயார் பெயர் அன்னா லின்ச். அவருடைய (அதாவது சேயின் தாயாருடைய) தந்தை பெயர் பிரான்ஸிஸ்கோ லின்ச்; தாய் பெயர் எலோசியா ஒர்டிஸ்ஸின். சேவுக்குத் தாய் வழி வந்த குடும்பப் பெயர் (லின்ச்), அவருடைய தாயின் தந்தை வழி வந்தது. அப்படியானால் தாயின் தாய் வழிக் குடும்பப் பெயர்? அதுதான் ஓட்டையில் விழுந்து விடுவது. எப்படியிருந்தாலும் தந்தைதான் பிரதானம். எவ்வளவு என்பதில்தான் வேறுபாடு. தமிழகத்தின் பெயரிடுதல் பற்றிய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள் - 'தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்'.

"தனது பாரம்பரியம் குறித்து சே முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது பற்றி அவர் ஏதாவது குறிப்பிட்டிருந்தால் அது விளையாட்டுக்காகத்தான் இருக்கும். சேவின் பூர்விகம் குறித்து விவவிய காசாபிளாங்கா என்ற இடத்தைச் சேர்ந்த சீனோரா மரியா ரோசாரியோ குவாரா என்பவருக்கு 1964-ஆம் ஆண்டில் பதில் எழுதுகிறபோது சே எழுதினர்: "தோழரே; பட்டவர்த்தனமாகச் சொல்வதென்றால் ஸ்பெயினின் எப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்னமேயே அவர்கள் தங்கள் பூர்வ வீட்டை விட்டு, 'பிறந்த மேனி' உடையோடு வெளியேறி விட்டனர். மேலும், நான் வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அங்ஙனம் சுற்றக் கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் அல்லர் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிறபோதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்." என்றொரு பத்தி வருகிறது. மிக முக்கியமான பத்தி. கொட்டெழுத்தில் கொடுத்துள்ளதைத்தான் இன்று புரட்சியாளர்கள் எல்லோரும் உலகெங்கும் தம் மந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். சண்டை போட்டுக் கொண்ட இருவர் ஒரே சாதி என்றோ உறவினர் என்றோ தெரிந்தவுடன் சமாதானமாகி விடுவது கண்டு எனக்கு வேடிக்கையாக இருப்பதுண்டு. உறவினர் என்றால் ஏதோ சண்டையே போடக் கூடாது என்பது போல. அண்ணன்-தம்பிகளே வெட்டிக் கொள்கிறார்கள். அப்புறம் என்ன? இதில் உள்ள தர்க்கம் என்னவென்றால், அடுத்தவனைத் துன்புறுத்தலாம்; நம்மவர்கள் என்றால் விட்டு விடலாம். என்ன கொடுமையான தர்க்கம் பாருங்கள். எனக்குப் பொது இடங்களில் ஒவ்வொரு மனிதரையும் பார்க்கையில் அடிக்கடித் தோன்றும் - "ம்ம்ம்... இவனும் என் உறவினனாகத்தான் இருந்திருப்பான். எத்தனை தலைமுறைக்கு முன்பு என்றுதான் தெரியவில்லை!" என்று. அதுதான் வேறுபாடு. நம்மோடு இருப்போரும் சரி. நமக்கு எதிரணியில் இருப்போரும் சரி. எல்லோருமே நமக்கு உறவினர்தான். எத்தனை தலைமுறைகள் முன்பு என்பது மட்டும்தான் வெவ்வேறு. இந்தக் கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையே வேறு மாதிரித் தெரியத் தொடங்கும். இல்லையா? எல்லோரும் உறவினர் என்றால், எல்லா அநீதிகளையும் கண்ணை மூடிக் கொண்டு விட்டு விடலாமா? முடியாது. அப்போதுதான் சிறிது - பெரிது வேறுபாடு வருகிறது. சிறிய அநீதி செய்தோரை ஏற்றுக் கொள்ளலாம். பெரிதான ஒன்றைச் செய்தோரைத் தண்டித்தாக வேண்டும். முதலாமவர் இருக்கட்டும். இரண்டாமவர் எதிரிகளாவர். இந்தக் கணக்குப் படிதான் சே பேசுகிறார்.

குறை மாதத்திலேயே பிறந்தோருக்கு ஒரு முக்கியக் குறிப்பு - சேயும் உங்களைப் போலவே கருவுற்ற ஒன்பதாவது மாதத்திலேயே பிறந்த ஒரு குறை மாதக் குழந்தை.

சேயின் சகோதர, சகோதரிகட்கு அவருடைய தாத்தா, பாட்டிகளின் பெயரை இட்டிருக்கிறார் அவரின் தந்தை. ஆக, இந்தக் கலாச்சாரம் அங்கேயும் இருந்திருக்கிறது.

"தனது நான்காவது வயதிலேயே படிக்கத் துவங்கினான் என்று நான் உறுதியாகக் கூற முடியும். அந்தக் காலத்திலிருந்து தனது வாழ்வின் இறுதிவரை அவன் படிப்பதில் பேரார்வம் மிக்கவனாக விளங்கினான். பொலிவியாவில் போராடுகிற போதும் எதிரிகளால் தேடப்பட்ட போதும் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட போதும் எதையேனும் அவன் படித்துக் கொண்டே இருந்தான் என்று என்னிடம் கூறினார்கள்." என்று சேயின் தந்தை கூறுவதாக ஒரு கூற்று வருகிறது. வாசிப்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் அல்லது அவனுடைய வளர்ச்சியில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி இங்கே பேசி விடுவோம். வளர்ச்சி என்பது பொருளியல் வளர்ச்சி என்று மட்டும் வைத்துப் பார்த்தால் படித்தவர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதற்கு மேல் ஏதோ தேவைப்படுகிறது. ஆனால், சராசரியாகப் பார்த்தால் படித்தவர்கள் படிக்காதவர்களை விட நன்றாக இருக்கிறார்கள். படித்தவர்கள் எனும்போது பள்ளியில் படித்தது மட்டுமின்றி கூடுதலாகப் பல விஷயங்களைப் படிப்போர் இன்னும் சிறப்பான வாழக்கையைப் பெறுகிறார்கள். இங்கும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது. மற்ற எந்த வெற்றியையும் விட, புரட்சியாளர்களும் இதுவரை நிறையப் பேர் செய்திராத சாதனைகளைச் செய்வோரும் பெறும் வெற்றிகளுக்கு அவர்களுடைய வாசிப்பில்தான் அளவிலாத எரிபொருள் கிடைக்கிறது.

"குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் கவிதைகளை நேசித்தான்" என்றும் "பாப்லோ நெருடாவின் கவிதைகளை அவன் நேசித்தான். அவன் பல கவிதைகளை மனனம் செய்து வைத்திருந்தான். மேலும் அவன் சொந்தமாகக் கவிதைகள் எழுத முயற்சி செய்தான். ஆனால் அவன் தன்னை ஒரு கவிஞன் என்று கருதியதில்லை என்பதை நான் இங்கு கூற வேண்டும். ஒரு சமயம் அவன் தன்னை 'ஒருபோதும் கவிஞனாக முடியாத புரட்சிக்காரன்' என்று அழைத்துக் கொண்டான்." என்றும் சேயின் தந்தை கூறுவதாக வருகிறது. கவிதைக்கும் புரட்சிக்கும் இருக்கும் நெருக்கம் நாம் அறியாததல்ல. புரட்சித்தீ அடங்க விடாமல் பார்த்துக் கொள்வதில் கவிஞர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. மொத்த இலக்கியத்துக்கும் பங்கு இருக்கிறது எனினும் எல்லோரையும் தட்டி எழுப்பும் சக்தி மற்ற எல்லா இலக்கிய உருக்களையும் விட கவிதைக்குத்தான் அதிகம். இந்திய விடுதலைப் போரில் தாகூரும் பாரதியும் போல ஒவ்வொரு விடுதலைப் போரிலும் ஒரு பெருங்கவிஞன் உருவாகியிருக்கிறான். விடுதலைத் தீயை கவிநெய் ஊற்றி வளர்த்திருக்கிறான். வெற்றிக்கே வித்திடும் கவிஞர்கள் வென்றவர்களின் பக்கம் சாயும் கேவலம் தமிழ் நாட்டின் அவலம். அது கவிதை எழுதுவோரைக் கவிதை மட்டுமே படைக்கப் பயன்படுத்தாமல் தலைவனாக்கிப் பார்த்த நம் வரலாற்றுப் பிழையின் நீட்சி.

"அவனுக்கு இசைத் துறையில் அவ்வளவு ஆழ்ந்த ஞானம் இருந்ததில்லை. இசையைப் பொறுத்தவரை அவன் காது கேளாதவன் போலவே நடந்து கொண்டான்." என்றும் சேயின் தந்தை குறிப்பிட்டுள்ளார். கவிதைக்கும் இசைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இசைக் கலைஞர்களும் விடுதலை வேள்வியில் பெருமளவில் பங்கு பெறுகிறார்கள். ஆனாலும் எனக்கு இசை என்பது பெரும்பாலும் அமைதிப் பூங்காக்களில் அதிகம் வாசிக்கப் படுகிற ஒன்று போலத் தோன்றுகிறது. என் புரிதல் தவறெனில் சரி செய்யுங்கள். குறிப்பாக, இசைக்கும் புரட்சியாளர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்றே தோன்றுகிறது. அதற்கொரு காரணம் எனக்குப் புரட்சி பிடித்த அளவு - கவிதை பிடித்த அளவு, இசை பிடித்ததில்லை என்பதாகக் கூட இருக்கலாம். ஆனால், புரட்சி பிடிக்கும் என்பதைத் தவிர எனக்கும் புரட்சிக்கும் எள்முனையளவும் தொடர்பில்லை. புரட்சிக்குச் சற்றும் ஒத்து வராத கோழை மனப்பான்மை கொண்ட கோடானு கோடிப் பேரில் நானும் ஒருவன். எனவே, அது ஒரு புத்திசாலித் தனமான கருத்தாகாது என நினைக்கிறேன்.

"தனது குறைகளை சுட்டிக்காட்ட அவன் ஒரு போதும் அஞ்சியதில்லை. மற்றவர்களை நையாண்டி செய்வதை விரும்பிய அவன் தன்னையே நையாண்டி செய்யவும் தயங்கியதில்லை. அவன் ஒரு உறுதியான சுய விமர்சகன்." என்றும் சே பற்றிச் சில வரிகள் வருகின்றன. நான் எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்படி இருப்போரை எனக்கு மிகவும் பிடிக்கும். நையாண்டி செய்வோர் - அதுவும் எல்லோரையும் சமமாக நையாண்டி செய்வோர் (நையாண்டியில் சமத்துவம்!) - அதில் தன்னையும் சேர்த்து நையாண்டி செய்து கொள்வோர்... இப்படிப் பட்டோரை நிறையப் பார்க்க முடிவதில்லை. தன்னடக்கத்தோடு பேசினால் கூடுதல் மரியாதை கிடைக்கும் என்ற சூட்சுமம் தெரிந்து பேசுவோரைப் பற்றிப் பேசவில்லை இங்கே. உண்மையாகவே தன்னையும் ஒரு கேலிப் பொருளாக்கிப் பேசும் தைரியம் படைத்தவர்களைப் பற்றிப் பேசுகிறேன்.

"குவேராவைப் போன்ற இளைஞர்கள், தம்மிடமிருந்து இயல்பாலும் மனோபாவத்தாலும் முற்றிலும் மாறுபட்டவளான காதலியொருத்தியை, தம்மைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தைக் கடந்து வர அனுமதிப்பார்கள் அல்லது தமது அந்தரங்க உலகத்தில் தலையிடாத, 'உனது ஆன்மிக ஆலோசகனாகவும் பாதுகாவலனாகவும் நானே விளங்குவேன்' என்று உரிமை கொண்டாடாத, நட்புக்குப் பதிலாகக் கண்மூடித்தனமான பணிவையும், நிபந்தனையற்ற அர்ப்பணிப்பையும் பலிகேட்கிற ஆதிக்கக் காரனாகவும் இல்லாத ஒரு நண்பனை - தமக்கும் அவனுக்கும் பாலாடைக் கட்டிக்கும் சுண்ணாம்புக் கட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு இருந்தபோதும் அந்தத் தடையைக் கடந்து வர அனுமதிப்பார்கள்." என்றொரு அருமையான தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. புரட்சியாளர்கள் இங்குதான் பெரும்பாலும் கோட்டை விட்டு விடுவார்கள். பெரும் பெரும் புரட்சிகள் இங்குதான் மண்ணைக் கவ்வி மறைந்து போய் விடுவன. பெண் என்று வந்து விட்டால் அவள் எப்படிப் பட்டவளாகவும் இருக்கலாம். ஒருவனின் வாழ்க்கையில் நுழைந்து புரட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தவனை பூ வாங்கி வர மறந்ததற்காக அழுது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் வைக்கலாம். அவனோடு அணி சேர்ந்து புரட்சியை அதை விடப் பெரும் பூகம்பமாக ஆக்குபவளாகவும் இருக்கலாம். இரண்டாவது விதம் நடந்தால் அது வரலாறாகும். வெளியில் வரும். முதலாவது விதம்தான் நம்பிக்கையோடு துளிர் விட்டு - பின் கருகி மட்கிப் போன ஏராளமேராளம் புரட்சிகளின் கதி. நண்பர்கள் விஷயத்தில் பெரும்பாலும் புரட்சியாளர்கள் கோட்டை விடுவதில்லை. புரட்சிக்கு ஒத்துவராத ஆட்கள் அருகிலேயே இல்லாதபடிப் பார்த்துக் கொள்வார்கள். அருகில் இருந்தவர்கள் துரோகியாவது வேண்டுமானால் நடக்கலாம். அதற்கென்று அவர்களிடமும் நியாயங்கள் இருக்கலாம். எல்லாப் புரட்சிக் கதைகளிலும் இது உண்டுதானே. 'துரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத்தம்' பற்றியும் ஓர் இடுகை இட்டிருக்கிறேன். அது பற்றிப் படிக்க மேலே அடிக்கோடிட்ட இணைப்பின் மீது சொடுக்குங்கள்.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

பெயர் இராசி


ஒன்று மட்டும்
உறுதியாகச் சொல்ல முடியும் என்னால்

உன் பெயர்தான்
என் மனைவியின் பெயராக இருக்கும்

அல்லது
என் மகளுடையதாக இருக்கும்...

* 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

எது பலம்?

மான்களைப் பார்த்துப்
பாவப்பட்டபோது நினைத்தேன்
அவற்றிடம்
புலிகளைப் போன்று
பலம் இல்லையே என்று...

புள்ளிவிபரங்கள் படிக்கையில்
புதியதொரு குழப்பம்...

எண்ணிக்கையில் குறைவது யார்?
அடித்துத் தின்னும் புலிகளா?
அடிபட்டுச் சாகும் மான்களா?

அப்படியானால்
யார் உண்மையான பலசாலி?
எது உண்மையான பலம்?

* 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

தொலைக்காட்சிப் பெட்டி

உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்தது...
வீட்டுக்குள் இருந்த வீட்டைக் காண வில்லை!

* 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

நான்?

கண்ணும் கண்ணும் உண்ணும் கதைகள்
சைகை மொழி மின்சாரப் பாய்ச்சல்கள்
உணர்ச்சிச் சிலிர்ப்புகள்
இளமைச் சிமிட்டல்கள்
எல்லாமே அர்த்தமிழந்து போகின்றன
செயற்கைக் கோள் பிடித்த
உலகப் படங்களைக் காணும்போதெல்லாம்

உருப்பெருக்கி உருப்பெருக்கி
என் நாட்டைக் கண்டுபிடித்து
என் நகரத்தைக் கண்டுபிடித்து
என் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து
அடையும் மகிழ்ச்சியில் உணர்கிறேன்
எத்தனை சிறியதொரு புள்ளி
இந்தப் பிரபஞ்சத்தில் நான்!

கோடானு கோடி உயிரினங்களில்
நாயும் மாடும் போல
நானும் ஒரு மிருகந்தானே?

இயக்கமும் சப்தமும்
இன்னும் பல கடமைகளும் கொண்ட
இன்னோர் இயந்திரந்தானே நானும்?

* 2002 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

இளமைக் குழப்பங்கள்

பால்ய காலத்திலிருந்தே
ஒவ்வொரு பருவத்திலும்
எந்தவொரு சராசரி இளைஞனின் வாழ்க்கையிலும் போலவே
என்னுடைய அன்றாடங்களிலும்
ஏதோவொரு பெண்
இதயத்திலும் மூளையிலும் இடம் பிடித்து
பின்னர் முழுமையாய் ஆக்கிரமித்து
ஏதோதோ வேதி வினைகள் புரிந்திருக்கிறாள்

“உன்னைப் போலொரு பெண்
இப்படி என்னை இம்சித்ததில்லை இதுவரை”
என்றுதான் சொல்லத் தோன்றியது எல்லோரிடமுமே!

தரையை மறந்து
வானில் பறந்து
வாழப் பழகிவிட்ட
இந்தத் திரைப்பட யுகத்தில்
எல்லோரையும் போலவே
என்னையும் ஒருத்தி காதலிக்கிறாள்
என்று பெருமையாகச் சொல்ல முடிகிற நாளில்தான்
என் இருப்புக்கும் பிறப்புக்கும்
அர்த்தம் பிறக்கப் போவதாக
அடிக்கடி நினைத்திருக்கிறேன்

அதேவேளையில்
இனம் புரியாத ஏதோவோர் ஈன சுகத்துக்காக
கண்ணில் பட்ட கன்னியரை எல்லாம்
விரட்டி விரட்டிக் கடலை போடும்
விடலைக்காலக் காளையர் கண்டு
ஏளனமாய் வியந்திருக்கிறேன்
இரங்கல் கூட்டங்கள் போட்டிருக்கிறேன்

எப்போதாவதொருமுறை
சாலையில் போகிற சோலை ஒன்று
கடித்துத் தின்கிற மாதிரிக் கண்டு செல்லும்போது
வழக்கத்துக்கு மாறான
பெருமிதம் ஒன்று வந்து
வானம் வரைத் தூக்கிச் செல்லும்

மடை உடைத்த மகிழ்ச்சி
வாழ்வாங்கு வாழும்
தாழ்வு மனப்பாங்கைச்
சிதறடிக்கச் செய்யும்

கண்ணே
மணியே
கவிதையே
நாடகமே
என்றெல்லாம்
கரைந்து போகும் அளவுக்குக்
கசிந்துருகத் தெரியாததால்
காதற்பழம் புளிக்குமென்றுதான்
சொல்லிக்கொண்டிருந்தேன் எனக்குள்

அதனால்தானோ என்னவோ
கன்னியர் பின்
ஓடி அலைந்து உருகுவதில்
பெரும்பாலும் பிடித்தம் இல்லாமல் போனது

ஈடுபாடு
எனக்கில்லாத போதிலும்
என் மனசுக்கிருக்கத்தான் செய்கிறது
மனசு கிறுக்காகத்தான் செய்கிறது
அவ்வப்போது

எனக்கே தெரியாமல்
எங்க ஊரு மாடுகள் போல
எங்கெங்கோ அலையத்தான் செய்கிறது
வேலி தாண்டி மேயத்தான் செய்கிறது

என்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை
அதற்கெதிராக...
அதற்காதரவாகவும்தான்...

* 2001 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

அவள்?

என்னைப் போலவே
உண்ணுகிற
உறங்குகிற
மலம் கழிக்கிற
மனிதப் படைப்புதானே அவளும்
பின் ஏன்?!

* 2001 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

எய்ட்சில்லா வாழ்க்கை வேண்டுமா?

மனதைத் தாவ விடாமல் காக்கத் தெரிந்து கொள்
அல்லது தாவிச் செல்லும் லாவகம் கற்றுக் கொள்

* 1999 நாட்குறிப்பில் இருந்து...

ரிக்சா மனசு

கியர்களை மாற்றி
புகையுமிழ்ந்து
செவிப்பறைகளை அதிரவைத்து
இடைவெளிகளில்
செருகிச் சீறும்
இயந்திர ஊர்திகளின்
இயக்கங்களுக்கிடையில்...

மண்டையைப் பிளக்கும்
மத்தியான உச்சி வெயிலில்
கால்த்தசை நோக
நரம்புகள் தெறிக்க
ஏற்றங்களில் உன்னி மிதித்து
இறக்கங்கள் கண்டு
ஆனந்தம் கொண்டு
எல்லையை அடைந்ததும்
பேரம் பேசிப் பெறப்படும் கூலி...

கொண்டு வரப்பட்டவர்
கொண்டு வந்திருந்த
மினரல் வாட்டர் பாட்டிலின் விலை!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

அரசாங்க வேலை: கடமையும் உரிமையும்!

இன்றைய நிலையில் எல்லோருமே எப்படியாவது ஓர் அரசாங்க வேலையில் அமர்ந்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். அலைந்து திரிந்து, அரசியல் செல்வாக்குள்ள ஓர் ஆளைப் பிடித்து, காலைப் பிடித்து, கையூட்டுக் கொடுத்து, எப்பாடு பட்டேனும் ஒரு வேலையை மட்டும் வாங்கி விட்டால், பின்னர் வாழ்நாள் முழுவதும் கவலை இல்லை என்றுதான் எண்ணுகிறார்கள். காரணங்கள் பல. #1 உழைத்தாலும் உழைக்கா விட்டாலும் ஊதியம் உறுதி. #2 கடமையைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், கம்யூனிசம் பேசிக் கொண்டு, "உரிமைகளுக்காகப் போராடுகிறோம்!" என்ற போர்வையில் ஊரை ஏய்க்கலாம். #3 அரசாங்க வேலையில் இருந்தால் நல்ல வரதட்சணை பிடுங்கலாம்.

இங்கே உழைப்புக்கு மதிப்பில்லை. முதலாளிகள் சுரண்டிச் சுரண்டி நாட்டைச் சுடுகாடாக்கி விட்டார்கள். ஆனால், சுரண்டப் படும் உழைப்பாளிகளின் வர்க்கத்தை உய்விக்க வந்த மகான்கள் நிறையப் பேர், முதலாளிகளிடம் திருட்டுத் தனமாகப் பணம் வாங்கிக் கொண்டு, இரட்டை வேடத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கையோ சுகமோ சுகம்!

ஆசிரியர்கள் பலரின் அநியாயமோ அதை விடப் பெரிது. சக ஆசிரியர்களுக்கு வட்டிக்குக் கொடுத்தல், சீட்டு நடத்துதல், மற்றும் பல சீரிய தொழில்கள் செய்தல் ஆகியவை எல்லாம் முதன்மைப் பணி ஆகி விட்டதால், பாடம் நடத்துதல் பக்கத் தொழில் (சைடு பிசினஸ்) ஆகி விட்டது. இதற்காகவே தினசரி தவறாமல் வேலைக்குச் செல்கிற வாத்தியார்களும் நிறைய உண்டு.

வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மற்றும் பல மக்கட் தொடர்பு அலுவலகங்களிலும் பணி புரியும் பல ஊழியர்களின் அதட்டலும் மிரட்டலும்... அப்பப்பா முதலாளிமாரை விட மோசம். ஏதோ அவங்க அப்பன் வீட்டுத் துட்டைக் கேட்கப் போனது போல மூஞ்சியை மாற்றிக் கொண்டு பேசுகிறார்கள்.

காலம் செல்லச் செல்ல ஊதியம் உயரும். பணி நிரந்தரம். எவரும் கேள்வி கேட்க முடியாது. எனவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை. எல்லாத்துக்கும் இரண்டு மூன்று தொழில்கள் செய்யலாம். 

ஒரு காலத்தில் அரசுப் பேருந்துகளில் ஆட்கள் அதிகம் ஏறினால் நடத்துனர்கள் பலர் நாயாய்க் குரைப்பார்கள். ஓட்டுனர்களும் கூட்டத்தைப் பார்த்தாலே நிறுத்தாமல் விரட்டுவார்கள். இப்போது, ஏறும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து - அதாவது வருமானத்தைப் பொறுத்து - ஊக்கத் தொகை உண்டென்று சொல்லி விட்டதால், எல்லாமே தலை கீழாக மாறி விட்டது. இது போல ஏதாவது செய்து எல்லோரையுமே வழிக்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

இதில் வாத்தியார்களுக்கு ஊக்கத்தொகை கணக்கிடும் முறைதான் மிகச் சிக்கலானது. மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப அவர்களின் ஊதியம் என்றால் எப்படி இருக்கும்? அப்பப்பா... நினைத்தே பார்க்க முடியவில்லை. சின்னஞ் சிறுசுகளைக் கொன்று கருவாடாக்கி விடுவார்கள். அது மட்டுமில்லை, அதிலும் ஊழல் நுழைந்து விடும் அப்புறம். வேண்டுமானால், இப்படிச் செய்யலாம் - ஒரு வாத்தியாரிடம் படிக்கும் மாணவர்கள் அவர்தம் வாழ்வில் அடைகிற வெற்றியைப் பொறுத்து, அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்களுக்கு எல்லாம் அந்த மாணவர்களின் சம்பளத்தில் இருந்தே ஒரு தொகை கொடுக்கிற மாதிரியான ஒரு முறைமை இருந்தால் எப்படி இருக்கும்? சூப்பர் இல்லையா?! சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துச் சொல்லட்டும்...

* என்னடா இவன், எல்லோரையும் தரக் குறைவாகப் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். அதனால்தான் கவனமாக பலர்-சிலர் என்றெல்லாம் பல இடங்களில் போட்டிருக்கிறேன். இது போன்றெல்லாம் நடந்து கொள்ளாத நல்லவர்கள், 'இது எனக்கில்லை!' என்று பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மக்கள் எங்களின் மரியாதை என்றென்றும் உண்டு.

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

வெளிநாட்டு வேலை - தவறா?

இந்த நாட்டில் படித்து வளர்ந்த மாணவனொருவன், வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது தவறா?

தவறு என்பவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அவர்களுடைய கருத்து - இந்த மண்ணின் வளங்கள் அனைத்தையும் பயன் படுத்தித் தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஒருவன், இந்த மண்ணின் வளத்தை மேன்மைப் படுத்தவே உழைக்க வேண்டும்; எடுப்பது மட்டும் இங்கே இருந்து எடுப்பேன். கொடுப்பது வேறொருவருக்குக் கொடுப்பேன் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்தக் கோணத்தில் பார்த்தால், இது சரியென்றே படுகிறது. ஆனால், அதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் அது வேறு விதமாகவும் படுகிறது.

மக்கட்தொகை ஒரு பிரச்சனை என்றிருந்த காலம் போய், இன்று அதுவே நம் வளம் என்றாகி வருகிறது. அதாவது, மனிதவளம்! திறமைமிகு இளைஞர்கள் நிறையப் பேர் இன்னும் தெருத் தெருவாய் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில துறைகளில் நுழைந்தால் மட்டுமே அவர்கள் திறமைக்கான சரியான அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கிறது. பண பலமோ அரசியல் பலமோ இல்லாத ஏழை இளைஞர்கள், "ஏன்டா இந்த தேசத்தில் பிறந்தோம்?" என்று வேதனையோடும் விரக்தியோடும் காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களுடைய திறமைக்கு வேறோர் இடத்தில் உரிய அங்கீகாரமும் சன்மானமும் கிடைத்தால் அதுவும் நமக்கு நல்லதுதானே. நாடு என்பது நிலப்பரப்பு மட்டும் இல்லையே. அங்கிருக்கும் மக்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் நாட்டுக்கு நல்லதுதானே.

அந்தப் பக்கம் பார்த்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு, மனிதவளப் பஞ்சத்தில் இருக்கின்றன. ஏகப் பட்ட வேலைகள் இருக்கின்றன. செய்ய ஆள் இல்லை. இருக்கிற ஆட்களுக்கு ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லை. அதாவது, அவர்கள் வீணாப் போனவர்கள் என்றில்லை. அவர்களுக்கென்று சில துறைகள் இருக்கின்றன. அதில் அவர்கள் கில்லாடிகளாக இருக்கலாம். அவர்களால் நன்றாகச் செய்ய முடியாத - அதையே நம்மவர்களால் சூப்பராகச் செய்ய முடிந்த - ஒரு லிஸ்ட் இருக்கிறது. அந்த வேலைகளைச் செய்ய நம்மவர்களை அனுப்பி வைப்பதன் மூலம், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளியைக் குறைக்கும் ஓர் உலகளாவியச் சமநிலையை எய்தவும் இது உதவும். ஆக, இங்கிருப்போர் அங்கு போய் வேலை பார்ப்பதில் மனிதவளம் மற்றும் பணம் இரண்டுமே பரவலாக்கப் படுகிறது. அது நல்லதுதானே.

நாடு என்ற முறையில், உடனடிக் குறுகிய நோக்கில் பார்த்தால் இது நமக்கு இழப்பு போலத் தோன்றினாலும், மனித குலத்தின் எதிர் காலத்துக்கு தொலைநோக்கில் இதுதான் நல்லது. பெற்றெடுத்தவர் கஞ்சி ஊற்ற முடியாத நிலையில் இருக்கும்போது அடுத்த வீட்டுக்காரன் அதிகப் படியாகவே அள்ளிக் கொடுக்க அழைத்தால் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? அள்ளிக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு இங்கிருப்பவர்களுக்கும் அதிகமாகப் பகிர்ந்து கொள்கிற மாதிரிச் சட்டங்களை வேண்டுமானால் விரிவு படுத்தலாம்.

என்னதான் சொன்னாலும், இங்கிருந்து அங்கே போவோரால் நாட்டுக்கான இழப்பு இழப்புதானே என்கிற கேள்வி எனக்குக் கேட்கிறது. இதற்குள் இன்னொரு சிக்கலைக் கொண்டு வர விரும்புகிறேன். இங்கே இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் எல்லோரும் சொல்வது - "என் திறமைக்கேற்ற இடத்தைத் தர மறுக்கிறார்கள்; ஏதாவதொரு வெளிநாட்டுக்குப் போனால் அதை என்னால் ஈடு கட்டிக் கொள்ள முடியும்!" என்பது. அவர்களுக்கு ஒரு வடிகாலாக இந்த வெளிநாட்டு வாய்ப்புகள் இருக்க முடியும்.

ஆதரிக்கும் எல்லோரும் சொல்வது - "திறமைப்படி வருவோர் தான் திறமைசாலி என்றில்லை; எங்களிடமும் நிறையத் திறமை இருக்கிறது; வாய்ப்புதான் இல்லை!" என்பது. இப்படி ஒரு சாரார் வெளியே செல்வதால், அவர்களுக்கான வாய்ப்பும் பிரகாசமாகிறது. அதாவது, வாய்ப்புக் கிட்டாதோருக்கு எளிதில் வாய்ப்புக் கிட்டுகிறது. நம்மை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றோர் நாம் அடைந்த இடத்தை அடைய முடியாமல் போகிறபோது, வேறெங்காவது போய்ப் பிழைத்துக் கொண்டால் நல்லதுதானே. அதுவும் கூடாது என்று சொல்ல வேண்டியதில்லையே. 'நம்மிடம்தான் தேவைக்கும் மேல் திறமை குவிந்து கிடக்கிறதே; இவர்கள் போவதால் என்ன இழப்பு?' என்றும் பார்க்கலாமே.

இதில் ஒரேயொரு சிக்கல் என்னவென்றால், அப்படி வெளிநாடு செல்வோர் கண்டிப்பாக நம்மை விட மேலான ஒரு வாழ்க்கையே வாழ்வர். அது மேலும் உள்ளார்-இல்லார் இடைவெளியை அதிகப் படுத்தவே செய்யும். ஆனால், அதற்காக நம்மில் சிலர் இங்கிருப்பதை விட அதிகமான வாய்ப்பிருக்கிற ஒரு பூமியில் போய் நன்றாக இருப்பதை எதிர்க்க வேண்டியதில்லை. அவர்களும் வெளிநாடுகள் எல்லாம் சென்று திரும்பினால், மனிதரில் ஏற்றத் தாழ்வுகள் பார்ப்பது கேவலம் என்று புரிந்து கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அது நம் மண்ணின் கொள்கைக் கோளாறு. மேற்கு நாடுகளில் இந்தக் கோளாறு அதிகம் இல்லை. எனவே இதுவும் ஓர் எதிர்பாராத நல்லதாக முடிய வாய்ப்புள்ளது.

எனவே, இந்தியாவில் மீதமிருக்கும் எல்லோருக்கும் வேலை கிடைத்து, அதன் பின் ஆட்களுக்குப் பஞ்சம் வந்தால், அப்போதுதான் இங்கிருப்பவர்கள் வெளிநாட்டுக்குப் போவது தேசத் துரோகமாகும். எல்லோரும் இங்கிருந்து போராடுவதை விட எம்மில் சிலர் எங்காவது போய் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லதுதான். அதனால் நாங்களும் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் அதனினும் நல்லதே.

இது எல்லாவற்றுக்கும் மேல், இட நெருக்கடி குறையும். உலக மக்கட்தொகையில் பதினேழு விழுக்காட்டு மக்களுக்கு இரண்டு விழுக்காடு இடம் எப்படிச் சரியாகும்? ஆறில் ஒரு பங்கு மக்களுக்கு ஐம்பதில் ஒரு பங்கு நிலம் எப்படிச் சரியாகும்? ஓர் உலக மனிதனுக்கு இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் இடம் சொந்தமென்றால், ஏன் இந்திய மனிதன் மட்டும் இரண்டரை கிலோ மீட்டர் நிலத்தில் சிக்கிச் சிரமப் பட வேண்டும்? உலக மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 45 பேர். இந்தியாவில் அது 360 பேர். ஆஸ்திரேலியாவில் 3 பேர். கனடாவில் 4 பேர். ரஷ்யாவில் 8 பேர். இதற்கொரு காரணம் - நம் தட்ப வெப்பம். வாழ்வுக்கும் இனப்பெருக்கத்துக்கும் ஏதுவான தட்ப வெப்பம் வேறெங்கும் இவ்வளவு சூப்பராக இல்லை. காசுக்காகவும் மற்ற சுகங்களுக்காகவும் அதையும் தாங்கிக் கொள்கிறோம் என்று போவோரை ஏன் தடுக்க வேண்டும்? அதிலும் பல நன்மைகள் இருக்கின்றன என்கிற போது...

* 1998 நாட்குறிப்பில் இருந்து... எனவே, இன்றைய சூழ்நிலைக்கு ஏதாவது ஒத்து வராவிட்டால் கொஞ்சம் பொறுத்தருள்க.

பிரிவின் சோகம்

மூன்றாண்டு காலக்
கல்லூரி வாழ்வின்
கடைசி நாள்
பிரிவுபச்சார விழா!

அட்மிசன் நாள் முதல்
அந்த விழா தினம் வரை
நினைவுகள் நீண்டோடின!

கண்ணதாசனின்
'பாடித் திரிந்த பறவைகளே'யும்
வைரமுத்துவின்
'முஸ்தபா முஸ்தபா'வும்
காதுகளுள் புகுந்து
கண்களையும் இதயங்களையும்
நனைத்துக் கொண்டிருந்தன!

அர்த்தத்தோடு அழுத
வாழ்வின் மிகச் சில தருணங்களில்
அதுவுமொன்று!

"அடிக்கடிக் கடிதமெழுதுடா"
"மறந்துராதடா"
ஒருவரையொருவர்
கண்களுக்குள் பார்த்துக்
கண்ணீர் வடித்துப்
பிரிந்த சோகத்தின் நீட்சி
வாழ்வின் கடைசித் துளி வரை
வாட்டி வதைக்குமென்றுதான்
அந்தக் கணத்தில்
அனைவருமே கருதினோம்!

'ரஜினியா? கமலா?'வில்
ஆரம்பித்த வாக்குவாதம்
அடிபிடிச் சண்டையானது...

கோட்டை ஏறிக் குதித்து
சினிமாப் பார்க்கப் போனதற்கு
மறுநாள் காலை
வீட்டுக்கனுப்பப் பட்டது...

கடைசி மாதத்தில் வந்த
சாதிக் கலவரத்தால்
எதிரிகளைச் சிரித்து
நண்பர்களை முறைத்து
எல்லாம் தலை கீழானது...

பேரூந்து நிலையத்தில்
பேயாட்டம் போட்டதற்கு
ஊரே போட்டு வெளுத்தது...

நிகழ்ந்தபோது கசந்தவை கூட
நினைத்துப் பார்க்கையில்
இனிமையாய் இருக்கின்றன!

கிரிக்கெட் வெறி பிடித்த
'டக் அவுட்' முருகேசன்...
சிரித்துக் கொண்டே திரியும்
புன்னகை முருகன்...
சிடுமூஞ்சி கணேசன்...
கணேசனையும் சிரிக்க வைக்கும்
'கோமாளி' கண்ணன்...
'அல்வா' மோகன்...
'ப்ளேடு' முத்துராமன்...
'கஞ்சா' பிரபு...
கவிதை எழுதிக் கொண்டே அலையும்
'தாடி' சங்கரன்...
வம்பளப்பதே வாழ்வாகக் கொண்ட
வக்கீல் மாதவன்...
இவர்களைனைவரையும்
பிரிவதில் கவலைதான்...

வீட்டை விட்டு ஓடிப்போன
'கடானாதிபதி' அப்பா...
கண்ணீரிலேயே கரைந்து விட்ட
'கந்தல் சேலை' அம்மா...
முப்பது முடிந்து விட்ட
முதிர்கன்னி அக்கா...
பட்டாசுத் தொழிற்சாலையில்
கனவுகளைக் கருக்கிக் கொண்டிருக்கும்
பள்ளிப் பருவத் தம்பி...

இவர்களின் நினைவு வந்திட்டால்
பிரிவின் சோகம் பெரிதல்ல...

படித்து முடித்துத்
தெருத் தெருவாய்த்
தேடி அலைந்து
உருப்படியான
ஒரு வேலையில் அமர வேண்டுமே
எனும் கவலையை விட!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

தேசத்தின் தலைவிதி

ஒரு தேசத்தின் தலைவிதி
தீர்மானிக்கப் படுவது
பாராளுமன்றத்தில் மட்டுமல்ல...
பாடசாலைகளிலும்தான்!

பேரம் பேசி
விலை கொடுத்து
வேலை வாங்கியவர்
சம்பளத்தை வாங்கிக் கொண்டு
பாடங்களை வாசிக்கிறார்!

வாசித்ததை மனப்பாடம் செய்து
பேனாவால் ஒப்புவித்தலுக்கு
மதிப்பெண் அளிப்பதன் மூலம்
அறிவாளிகளைக் கண்டுபிடிக்கும்
இந்தக் கல்விமுறையில்
தேறுவது கடினமென்று அறிந்தவர்
காசு கொடுத்து வாங்கலாம் கல்வியை!

அதுவுமில்லாதவர்
'அம்போ'வென்று அலையலாம்!

வாசிக்கும் வாத்தியார்கள்...
மனனிக்கும் மாணவர்கள்...

இந்தியாவின் எதிர்காலம்
இவர்களால்தான்
இயற்றப் பட வேண்டுமாம்!

தேசத்தை விற்று விடாதீர்
புத்திமான்காள்!
இது கல்வி அல்ல...

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

இறை விபத்துகள்

தண்டவாளங்களிலும்
தார்ச்சாலைகளிலும்
சிதைந்து போன
மனிதர்கள்
குடும்பங்கள்
அர்த்தமிழந்து போன
அவர்களின் கனவுகள்
ஆசைகள்
ஆவியாய் அலையும்
ஆன்மாக்கள்

நிகழ்ந்ததை
நேரில் பார்த்து
நிலைகுலைந்த மனநிலையோடு
பைத்தியமாய் அலையும்
பாவப்பட்டவர்கள்

விபத்துக்களால்
வித்துக்களே
வீழ்ந்தழிந்த
வேதனைகள்தான் எத்தனை?!

நீ படைத்த
நீ நிர்வகிக்கும்
இவ்வுலகில்
அத்தனையையும்
அமைதியாக
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
எங்கள் இறைவா
இருப்பது உண்மையானால்
எமக்கொரு வரம் கொடு...

குறைந்த பட்சம்
உன்னைத் தரிசிக்க வரும்
பக்தர்களையாவது
பாதுகாப்பேனென்று
உறுதி கொடு!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

பொன்விழா தேசம்

பொன்விழாக் கொண்டாட்டங்கள் கோலாகலப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

சுதந்திரமும் தியாகமும் பொருள் மாறி விட்ட இரு சொற்களாகி விட்டன எம்மொழியில்.

வறுமையும் ஊழலும் இன்னும் விக்கெட் இழக்காமல் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

உச்சி வெயிலில் உழுது விதைத்து, விவசாயம் செய்து, வியர்த்துக் களைத்தவனின் வீடுகளில் இன்னும் வெளிச்சம் வரவில்லை.

'இந்த தேசத்தில் உடலுழைப்புக்கு மதிப்பில்லை' - உண்மையை உணர்ந்தவர்கள் தொழிலை மாற்றி விட்டதால் காவல் துறைக்கு இன்னும் ஆட்கள் தேவை.

வேலையில்லாதவர்கள் சாதிக் கலவரத்தை முன்னின்று நிர்வாகம் செய்கிறார்கள்.

உருப்படாத கல்விமுறையைப் பின்பற்றி, மாணவன் மிருகமாகி, 'ராகிங்' கொலைகள்.

அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்யப் படாத தேசத்தில், அணுகுண்டு வெடித்ததை ஆரவாரித்துப் போற்றும் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாதவனும் உடன் சேர்ந்து கூச்சல் போடும் அறியாமை.

கிரிமினலுக்கு அர்த்தம் அரசியல்வாதியாம்.

ஊழலை விசாரிக்கச் செய்த செலவுகளின் கூட்டுத் தொகை ஊழலால் இழந்ததை விட அதிகம். அது தேசத்தின் கடனை விட அதிகம் என்றொரு புள்ளிவிபரம் வராதவரை நல்லது.

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கலவர தாகம்

இதை எழுதியது - சுதந்திர தாகம் கொண்டு துடித்துக் கொண்டிருந்த பாரதியின் அதே மண், கலவர தாகம் கொண்டு கருகிக் கொண்டிருந்த 1998-இல். ஆகவே, பதிமூன்று வருடம் பின்னால் சென்று படித்துப் பாருங்கள்.

மூளை வளர்ப்புக்கு
முக்கியத்துவம் கொடுத்ததில்
மனித மனங்கள்
மங்கிப் போய்விட்டன!

சாதிச் சண்டைகளின்
வெட்டரிவாள் வீச்சிலும்
மதக் கலவரங்களின்
குண்டு வெடிப்புகளிலும்
சிதறுண்ட உள்ளங்கள்
இரத்தக் கறை படிந்து
சுடுகாட்டுப் பாதைகளில்
ஓலமிடுகின்றன!

சிலைகளை நொறுக்கி
மூட்டப்பட்ட சாதியத் தீயில்
அரசுப் பேரூந்துகள்
கருகிக் கொண்டிருக்கின்றன!

இந்திய தேசத்தின்
எதிர்காலத்தைக் கவலைக்கிடமாக்கும்
மக்கட்தொகைப் பெருக்கத்தைக்
கட்டுப் படுத்துவதில்
கலவர காலத்து
நாட்டு வெடிகுண்டுகள்
நல்ல பங்காற்றுகின்றன!

நாளைய சந்ததி
சாதிச் சொல்லுக்கு
அர்த்தம் தெரியாமல்
வளர்க்கப் படாவிட்டால்
வீதிகளெங்கும்
இரத்த நிறத்தில்
சாம்பல் பறக்கலாம்!

பேரூந்தில் இடம் பிடித்தலிலிருந்து
பாகப் பிரிவினை வரை
வாழ்க்கையின்
எந்தக் கட்டத்திலும்
அடிக்கவும்
தடுக்கவும்
தயாரான நிலையில்
காத்திருக்க வேண்டியது
கட்டாயமாகி விட்டது!

நாறிக் கிடக்கும்
சாக்கடைச் சமூகத்தின்
நரம்புகளோடு பிணைந்து விட்ட
சாதிகளைப் பிரித்தெடுப்பது
சாதாரணமாகச் சாத்தியமில்லை!

மனங்களை வெளுக்க வேண்டிய
கல்விக் கூடங்கள்
வர்த்தகமயமாகி வருவதால்...

ஆன்மாவைத் தெளிவிக்க வேண்டிய
ஆலயங்களுக்குள்
அக்கிரமங்கள் அரங்கேறி வருவதால்...

தேசத்தின் தலைவிதியைத்
தீர்மானிக்க வேண்டிய
பாராளுமன்றம்
குற்றவாளிகளின் கூடாரமாகி வருவதால்...

எதிர்காலத்தைப் பற்றிய
எண்ணங்கள் அனைத்தும்
எதிர்மறையாகி வருவது
இயல்புதான்!

அப்படியானால்,
என்று தணியும்
இந்தக் கலவர தாகம்?

அமைதி வேண்டுமாயின்
கலவரம் நடந்தாக வேண்டும்
என்கிறார் சிலர்

அரைகுறையாகப் புரிகிறது
ஆனால்
ஆயுதப் புரட்சி பற்றிப் பேசுவோருக்கு
அறிவுப் புரட்சி பற்றிய அறிவு பற்றாதோ
என்று படுகிறது...

என்ன சொல்கிறீர்கள்?

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

நேற்று இன்று நாளை

கசந்து கிடந்த
கடந்த காலமும்
களிப்பூட்டுகிறது
நினைத்துப் பார்க்கையில்...
களிக்கும் வகையில்
நினைத்துப் பார்ப்பதால்!

என்னவென்றே தெரியாத
எதிர் காலமும்
இனிக்கிறது
எண்ணிப் பார்க்கையில்...
இனிக்கிற மாதிரி
எண்ணிப் பார்ப்பதால்!

ஏன்
இன்று மட்டுமே
என்றுமே போராட்டமாய் இருக்கிறது?

போராடும்படி வாழ்வதாலா?
போராட்டமாய் உணர்வதாலா?

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

அரசியல்

குப்பையைக் கிளறித்
தீனி தேடும் கோழிகள்
மனிதப் பிறவி எடுத்தால்
விரும்பும் தொழில்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கலப்புப் பொருளியல்

வேலை செய்து
வயிற்றை நிரப்பென்றால்
ஏமாற்றப் பட்டோர்
எல்லோரும் ஏழ்மையில்...
முதலாளித்துவம்!

வயிற்றை நிரப்பிவிட்டு
வேலை செய்யென்றால்
ஏமாற்றுகிறார்
எல்லோரும் சோம்பலில்...
சமதர்மம்!

இரண்டும் கலந்து உருவான
எங்கள் கலப்புப் பொருளியலில்
வீடும் வேண்டி
விடுதலையும் வேண்டி
சோறும் வேண்டி
சுதந்திரமும் வேண்டி

இறுதியில்
எல்லாம் இழந்து
எங்கள் நாடு மட்டும் இருக்கிறது

பழைய ஈயம் பித்தாளைக்கு
பேரீச்சம்பழோய்...

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

மன நோயாளிகள்

மித மிஞ்சிய
துன்பங்களை அனுபவித்ததால்
உலகத் துன்பங்களில் இருந்து
விடுதலை பெற்றவர்கள்

மன உளைச்சலில் இருந்து மீண்டு
உடல் உளைச்சல்களுக்கு
உள்ளாகுபவர்கள்

தற்கொலை செய்யாத
தைரியசாலிகள்

ஞானிகள்
போராடிப் பிடித்த இடத்தை
இயற்கையாகவே
அடைந்து விட்டவர்கள்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

பிச்சை

இப்போதெல்லாம்
பிச்சைக் காரர்களுக்குக்
காசே போட முடிவதில்லை

போடலாம்தான்...
கண்டக்டர்கள்
உருப்படியாகச் சில்லறைகளைத்
திருப்பிக் கொடுத்தால்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...