செவ்வாய், மார்ச் 29, 2011

மடமும் அடமும்

பொன்னும் மணியும் ஒரு நல்ல நாகரீகமான - தப்பு செய்யப் பயப்படும் குடும்பத்தில் பல தன்மையான சகோதரர்களோடு பிறந்த சகோதரிகள். பொன் மூத்தவள். எனவே மணி இளையவள். பொன் மிகவும் நல்லவள். பயந்த சுபாவமுடையவள். யார் என்ன திட்டினாலும் வாங்கிக்கொண்டு பதிலுக்கு வம்பு பண்ணாதவள். எனவே, அவள் வைக்கிற குழம்புகளில் உப்பும் உரைப்பும் அதிகம் இருந்த போதிலும் மனதில் கொஞ்சம் சூடும் சொரணையும் குறைவு என்று பெயர் வாங்கியவள். சூடு சொரணையோடு வாழ்ந்தவர்களெல்லாம் என்னத்தை வாரிக் கொட்டி விட்டார்கள் என்று மனதில் தோன்றினாலும் அதை வாதிடக்கூட விரும்பாதவள். சொல்ல வேண்டியதே இல்லை - எந்த வீட்டில் என்ன நல்ல காரியம் ஆனாலும் கெட்ட காரியம் ஆனாலும் முதல் ஆளாக நின்று பரிமாறுவது முதல் இலை எடுப்பது வரை எல்லா வேலைகளையும் முன்னின்று பார்ப்பாள். எனவே, சொல்ல வேண்டியதே இல்லை - அவளை எல்லோருக்குமே பிடிக்கும். ஆனாலும் அவ்வப்போது சின்னச் சின்னக் கழுதைகள் கூட (சொந்தக்காரக் கழுதைகள்தாம்) அவளை மரியாதையில்லாமல் நடத்தி விடும். இறங்கி வருபவரை ஏற்றிக் காட்டும் பழக்கம்தான் நம் இனத்துக்கே கிடையாதே. யார் வீட்டில் என்ன துக்கமாக இருந்தாலும் அதைத் தன் சொந்தத் துக்கம் போல எண்ணிக் கதறி அழுவாள். அதை எல்லார் வீட்டிலும் செய்வதால் மிகவும் நெருக்கமானவர்களுக்கு அது நெருடலாக இருக்கும். எல்லாரிடமும் போலத்தானே நம்மிடமும் இருக்கிறாள் என்று கடுப்படிக்கும். சிலருக்குக் காமெடியாகக் கூட இருக்கும். இல்லை, அழுவதும் வேலை செய்வதும் இவளுக்கு மிகவும் பிடித்த வேலைகள் போல என்று எண்ணி விடுவோரும் உண்டு. வாக்கப்பட்டுப் போன வீட்டில் எல்லோரையும் தன் வீட்டார் போலவே மதிப்பாள். போன இடமும் நல்ல இடமாக இருந்ததால் அதற்கான மரியாதையும் கிடைத்தது. வாழ்க்கை முழுக்க நினைத்து சந்தோசப்படும் படியான ஒரு நல்ல விஷயம். பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகள் வந்து வாட்டியபோதெல்லாம் அண்ணன்மாரிடம் ஓடி வந்து உதவி பெறும் நிலையில் அவர்களும் இருந்ததால் வண்டி இழுப்பதற்கு மிகவும் சிரமப் படவில்லை.

மணியும் நல்லவள்தான். ஆனால் யாரும் எளிதில் இளிச்சவாய் ஆக்க முடியாத அளவுக்கு விவரமானவளும்கூட. விவரமாக இருந்து விட்டால் நல்ல பிள்ளையென்று எப்படிப் பெயரெடுக்க முடியும்? அதிகம் பய உணர்வுகள் இல்லாதவள். யாரும் பொழுது போகாவிட்டால் வந்து வம்பளந்து விட்டுப் போகிற அளவுக்கு ஈனா வானா இல்லை. அதற்கான வாய்ப்பே கொடுப்பதில்லை என்றாகிவிட்ட பிறகு அந்தக் குணாதிசயம் பற்றிப் பேசவே தேவையில்லை. நம்மை ஏதாவது வாட்டாமல் விட்டால் போதும் என்று விலகிப் போகத்தான் விரும்புவார்கள் வெட்டிக் கூட்டத்தார். சூடு சொரணையெல்லாம் கொஞ்சம் தேவைக்கும் கூடுதல். கறுவாட்டு உப்புப் போல. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவள். அக்கா போல நல்ல பெயர் வாங்க முடியவில்லையே என்று என்றும் வருந்தியதில்லை. அக்கா இப்படி ஏமாளித்தனமாக இருக்கிறாளே என்றுதான் வருத்தப் பட்டிருக்கிறாள். அக்காவும்கூட தன்னால் ஏன் தன் தங்கச்சி போல விறைப்பாக இருக்க முடியவில்லை என்றுதான் வருந்தியிருக்கிறாள். வாரிக்கொட்டாவிட்டாலும் கொஞ்சம் தன்மானத்தோடு வாழலாமே என்று அது குறைவதை உணர முடிந்த நேரங்களில் மட்டும் தோன்றும். விறைப்பாக இருப்பவர்களுக்குக் கிடைக்கும் மரியாதைகள் யாவும் குறைவிலாமல் கிடைக்கும் மணிக்கு. பொன் விறைப்பின்மைக்காகக் கொடுத்த விலை மரியாதை என்றால், மணி விறைப்புக்காகப் பெற்ற பரிசுகள் பல சிரமங்களும் கஷ்டங்களும் அசௌகரியங்களும். போன வீட்டில் வாழ்க்கை குதூகலமாக இல்லை. முதன்மைப் பிரச்சனையாகப் பொருளாதாரச் சிக்கல்கள். பற்றாக்குறைக்கு மாமியார், நார்த்தனார் பிரச்சனைகள்.

"உங்க அக்கா மட்டும் அண்ணன்மார் வீட்டில் போய் அவ்வளவு அரிக்கிறாளே உனக்கு என்ன கஷ்டம்?" என்று மாமியாரின் அரிப்பு நாளுக்கு நாள் வலுத்தது. "இங்கேயே கிடந்து செத்தாலும் சாவேனே ஒழிய எந்தச் சூழ்நிலையிலும் போய் எங்க அண்ணன்மாரிடம் ஒரு பைசாக் காசு கேட்டு நிற்க மாட்டேன்" என்று பிடிவாதமாய் நின்றாள். கல்யாணம்னு பண்ணி வந்த பின்னாடி அப்பன் வீட்டில் போய் நிற்பது தன் கணவனுடைய ஆண்மைக்கே கேவலம் என்பது அவள் கருத்து. மூத்தவள் எதற்கெடுத்தாலும் போய் நிற்கிறாள். இளையவளோ எதற்குமே போக மாட்டேனென்று அடம் பிடிக்கிறாள். அவ்வப்போது கடன் என்ற பெயரில் வீட்டுக்காரரின் வியாபாரத்துக்குப் பணம் (அதைப் பயன் படுத்தி ஒருபோதும் வியாபாரத்தை வளர்த்தபாடில்லை; கடன் தான் வளர்ந்தது!)... எந்தப் பெயரும் இல்லாமல் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்குப் பணம்... மொத்தக் குடும்பத்துக்கும் ஒவ்வொரு திருநாளுக்கும் துணிமணிகள்... இப்படி எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் அக்காக்காரி. நம்பவே முடியாத மாதிரி, என்ன செய்தாலும் ஏன் எதற்கு என்று கேள்வியே கேட்காத தங்கமான மதினிமார் வேறு. யாராக இருந்தாலும் கேட்டால்தானே செய்வார்கள்? நம்ம பாட்டுக்கு நெஞ்சை விடைச்சுக்குட்டு அலைஞ்சா யார் வந்து வழிய உதவுவார்கள்? இந்தப் பிரச்சனை மாமியார் சாகும் வரை நடந்து கொண்டுதான் இருந்தது. மாமியார் செத்தது எப்போது? மணி பேரன் பேத்தி எடுத்தபின்பு! அப்போதும் அணத்திக்கொண்டுதான் இருந்தது. தன் பேத்தியாளின் திருமணச் செலவுக்கு "உங்க அண்ணமார் நல்லாப் பிழைக்கிறாங்கல்ல... போய்க் கேளு..." என்று பிரச்சனை பண்ணும் அளவுக்கு விடாமுயற்சியும் நம்பிக்கையும் கொண்ட மாமியார்.

வாழ்க்கை முழுக்க இந்தப் பிரச்சனை துரத்தியபோதும் பிடிவாதமாக மணி தன் நிலைப்பாட்டில் ஊன்றி நின்று விட்ட போதிலும் இடையில் சில மிக இக்கட்டான தருணங்களில் தன் மாமியார் தவிர்த்து மற்ற பல பேருடைய பேச்சுக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிட்டது பெரும் வருத்தம்தான். அவற்றுள் முதன்மையானது அவள் உடல் நிலை பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தபோது நிகழ்ந்தது. ஆப்பரேஷன் பண்ண ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்கிறார் டாக்டர். கையில் அந்த அளவுக்குப் பணம் இல்லை. அண்ணன்மார் எல்லோரும் வந்து பார்த்தார்கள். "செலவுக்குப் பணம் இருக்கிறதா?" என்றும் கேட்டார்கள். ஆனால் இவள் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாள். "இருக்கிற காசில் என்ன முடியுதோ அதைப் பார்த்துக் கொள்வோம்" என்று உடும்பாய்த் தொங்குகிறாள். மாமியார் பொருமியது. "என் மகன் தேவைக்குக் கேட்க மாட்டேன்ன... சரி. உன் பிள்ளைக படிப்புக்குக் கேட்க மாட்டேன்ன... சரி. இப்ப நீ சாகக் கிடக்கிறியே... இப்பவுமா கேட்க மாட்ட?" என்று இதற்கு முன்பு தான் கேட்டதெல்லாம் தவறு என்று உணர்ந்து விட்டது போலப் பேசியது. "இப்படியுமா ஒரு பொம்பள இருப்பா உலகத்துல? தன் அண்ணன்மார் நல்லா இருக்கணும்... புருசன் நாசமாப் போகணும்னு நினைச்சுக்கிட்டு...?!" என்று வருவோர் போவோரிடமெல்லாம் முறையிட்டுப் புலம்பியது. இந்த ஓட்டை ரிக்கார்டைக் கேட்பதிலேயே உடம்பு இன்னும் மோசமாகி விடும் போல இருந்தது அவளுக்கு. சண்டை போடவும் தெம்பில்லை. கேட்டுக் கொண்டே இருக்கவும் பொறுமையில்லை. "உனக்கு வைத்தியம் பாக்கிறதிலேயே எல்லாத்தையும் இழந்துட்டு என் மகன் நடுத் தெருவுக்கு வந்துருவான் போல. கொஞ்சமாவது நல்லெண்ணம் இருக்கணும்" என்று அடி மேல அடி கொடுத்துக் கொண்டு இருந்தது. வந்த நாள் முதல் வாழ்க்கை இப்படித்தான் போகிறதென்றாலும் இதுதான் உச்ச கட்ட சோதனைக் காலம் போல்ப் பட்டது. "மணி போல வருமா?" என்று அவளுடைய வாழ்க்கை முறையைப் பார்த்துப் பெருமைப்பட்டவர்கள்கூட "இவள் ஏன் இப்படி வீண் வீராப்பு காட்டிக்கொண்டிருக்கிறாள்?" என்று கடிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். "இப்படியே போனால், போய்ச் சேர்ந்து விடுவாள். அதன் பிறகு இந்த வீராப்பை வைத்துக் கொண்டு விறகு கூட வாங்க முடியாது" என்று மணியடிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் அவள் இறங்கி வருகிற மாதிரித் தெரியவில்லை. உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் உண்டாகவில்லையென்ற போதிலும் ஆளுக்கு ஒன்றும் ஆகவில்லை. நல்ல வேளை.

ஒரு புறம் பொன் எந்தக் கூச்சமுமில்லாமல் வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஓரளவு நிம்மதியாகப் பிழைப்பை நகர்த்தினாள்.கொஞ்ச நாட்களில் அவளுடைய பிள்ளைகள் பெரிய ஆட்கள் ஆனார்கள். சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். குடும்ப நிலவரமும் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியது. அவளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுக்கு வர உதவிய தன் அண்ணன்/மாமா மார் மீது அளவிலாத நன்றியுணர்வு. அண்ணன்/மாமா மாருக்கும் தாங்கள் உதவியது வீண் போகவில்லை என்ற திருப்தி. முடிந்த அளவு திருப்பிக் கொடுக்க முடிந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தார்கள். காலத்தால் செய்த உதவி அளவு சரியாகத் திருப்பிக் கொடுப்பதன் மூலமோ வட்டியோடு திருப்பிக் கொடுத்தலின் மூலமோ ஒருபோதும் திருப்பிக் கொடுத்ததாகாது. கடன் அடைக்கப் பட்ட பின்னும் நன்றி என்ற பெயரில் அது காலம் முழுக்க வராக்கடனாகவே வைக்கப்பட்டிருக்கும். அதற்குப் பல மடங்கு பெரிய கைம்மாறுகள் செய்தாலும் எந்த நேரத்திலும் எவருடைய கேள்விக்கும் ஆளாகலாம் என்ற அரைகுறை நிம்மதியுடனேயேதான் நீண்டு கொண்டிருக்கும். இதற்குப் பயந்து கொண்டுதான் மணி தலையை உலுக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது சிற்சிலருக்கு ஓரளவுக்குப் புரிந்தாலும் எவருக்கும் முழுமையாகப் புரிந்திருக்குமா என்று புரியவில்லை. இவ்வளவும் யோசித்துத்தான் அவள் அப்படிப் பிடிவாதம் செய்கிறாளா அல்லது இது இயற்கையாகவே சிலருக்கு மட்டும் அமைந்து விடுகிற தனி மனிதக் குணாதிசயமா என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஓர் உயிரையோ வாழ்க்கையையோ விலையாகக் கொடுக்கும் அளவுக்கு அது ஓர் உயரிய நற்குணமா இது என்பதுதான் இப்போதைய கேள்வி. அவரவர்க்கு முடிகிற காலங்களில் முடியாதவர்க்கு உதவுவதும் பின்னர் பதிலுதவி பெற்றுக் கொள்வதும்தானே இந்த உலகத்தின் நியதி. அதுகூட இல்லையென்றால் இந்த உலகத்தில் இத்தனை கோடிப் பேர் கூடி வாழ்வதில் என்ன பயன்? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வேற்றுக்கிரகத்தில் வாழ்வது போலல்லவா ஆகிவிடும்?

அடுத்த சிக்கல் வந்தது மணியின் மகன் படிப்புச் செலவுக்குச் சிக்கல் வந்த போது வந்தது. மூத்தவள் பிள்ளைகளெல்லாம் மாமமார் புண்ணியத்தில் முன்னுக்கு வந்து விட்டார்கள். தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்கத் தயங்காதவர்களுக்குத்தான் வெற்றி எளிதில் கிட்டுகிறது என்பதற்கு வாழும் சாட்சிகளாக அக்கா பிள்ளைகள் இருந்தபோதும் அந்த வெற்றி தன் பிள்ளைகளுக்கு வேண்டாமென்று உறுதியாய் நின்றாள். இவளும் அப்படியே இறங்கிப் போனால் - "இந்த உதவி தேவைப்படுகிறது" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். அள்ளிக்கொடுக்க ஆள் இருக்கிறது. ஆனால் அவளுக்கு அது வேண்டாம். "அவள் கேட்கட்டும்; நான் செய்கிறேன்" என்று செய்வோரும் விட்டுப் பிடித்தார்கள். இந்த முறை மாமியாரின் பாட்டில் ஒரு சிறிய மாற்றம் - "என் மகன் தேவைக்குக் கேட்க மாட்டேன்ன... சரி. உன் உயிரைக் காப்பாத்தக் கேட்க மாட்டேன்ன... சரி. இப்ப உன் பிள்ளை வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு... இப்பவுமா கேட்க மாட்ட? ஒரு பையனின் வாழ்க்கையைக் கெடுத்த பாவம் உன்னைச் சும்மா விடாது". "ஒரு விவரமும் இல்லாத பெரியம்மா கையில் ஒரு பைசாக் காசில்லாமல் தன் பிள்ளைகளைப் படித்துப் பெரியாட்களாக்கி விட்டது. நீ ஏம்மா இவ்வளவு விவரமான ஆளா இருந்தும் எங்க வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்ட?" என்று நாளைக்கு நம்ம பிள்ளைகளே கேட்டு விடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் வரத்தொடங்கி விட்டது.

'வங்கியில் கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார்களே, அது போல இதுவும் ஓர் உதவித்தொகை, அவ்வளவுதானே. ஒரு குறிப்பிட்ட காரணத்தோடும் கண்டிப்பாகத் திருப்பிக் கொடுத்து விடும் எண்ணத்தோடும்தானே வாங்கப்போகிறோம். அதனால் தப்பில்லை என்றொரு முடிவுக்கு வந்தாள். சொந்த அண்ணனிடம் வாங்குவது வங்கியில் வாங்குவதை விட எந்த வகையிலும் தப்பானதில்லை என்று எல்லோரும் போல சராசரித் தத்துவத் தளத்துக்கு வந்தாள். தான் தன் மானம் என்று இத்தனை நாளும் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டதெல்லாம் எல்லாரும் சொல்வது போல பிடிவாதம் - மண்டைக்கணம் - திமிர் போன்ற வார்த்தைகளுக்கு நானே கொடுத்துக் கொண்ட புனை பெயரோ? இதுவும் கூட சரி தப்புகளுக்கு அப்பாற்பட்டு சுய பெருமைக்கு அடிமைப்பட்டுப் பிறரையும் அதற்காகக் காவு கொடுக்கிற ஈனப்புத்தியோ? என்னுடைய கர்வத்தால் என் பிள்ளைகளல்லவா நாசமாகப் போகிறார்கள்! அது மட்டுமா, அவர்களுடைய பிள்ளைகளும் அதன் பின் அவர்களுடைய பிள்ளைகளும்கூட பாதிக்கப்பட வாய்ப்பு வளர்க்கும் குணமல்லவா இது? இன்னும் பதினைந்து நாட்களுக்குள் தயார் பண்ண வேண்டும். இல்லையேல் பையன் இஞ்சினியர் ஆவது பழைய கனவாகி விடும். எல்லோரையும் போல ஆசைக்குச் சொல்லிப் பார்த்துக் கொண்ட இன்னுமொரு இயலாத அம்மாவாகி விடுவேன். சாகும் வரை தன்மானத்தோடு இருந்து தங்களையும் பட்டினி போட்டுக் கொன்ற அம்மாவாகப் பார்க்கப் படாமல் தான் தலை கவிழ்ந்தாவது தன் பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வந்த தியாகத் தாயாகப் பார்க்கப் பட வேண்டும். என்ன ஆனாலும் பரவாயில்லை. எப்படி ஆரம்பிப்பது - பேசுவது - கேட்பது - வாங்கி வருவது என்ற எது பற்றியும் கவலைப் படக் கூடாது. இன்று இரவு கிளம்பிப் போக வேண்டியது - அண்ணன் வீட்டில் நன்றாகத் தூங்கி விட்டு, நாளை காலை எழுந்து அண்ணன் நல்ல மன நிலையில் இருக்கும் போது பேச்சைத் தொடங்கினால் - தொடங்கினாலே போதும், கேட்கும் முன்பே புரிந்து கொண்டு அண்ணன் கை நிறையப் பணத்தை அள்ளிக் கொடுத்து அனுப்பி விடும். இப்போதைக்கு நிறைய யோசிக்க வேண்டாம்' என்றொரு முடிவுக்கு வந்தாள். இதில் இன்னொரு போனஸ் - இந்த மாமியாரம்மா வாயை அடைத்து விடலாம் இத்தோடு. அதுவும் வேறு ஏதாவது புதிய பிரச்சனை ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டி இருக்கும். காவிரிப் பிரச்சனை போல வந்த நாள் முதல் எவ்வளவு நாட்களுக்குத்தான் ஒரே பிரச்சனையை மையமாக வைத்து அரசியல் பண்ணிச் சலித்துப் போயிருக்கும் மனுசி.

மாலை நேரம் வந்ததும் மண்டை குடைச்சலெடுக்க ஆரம்பித்தது. இருட்ட இருட்ட கண்ணெல்லாம் இருண்டது. எப்படித்தான் போய் ஆரம்பிப்பதோ என்ற வயிற்றுலைச்சல். 'மகனை உடன் அழைத்துச் செல்வதா வேண்டாமா? அழைத்துச் சென்றால் வந்த காரியம் என்ன என்பது வரவேற்பவர்களுக்குப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். வந்திருப்பதின் நியாயமும் கட்டாயமும் அழுத்தமாகச் சொல்லப்படும். உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாகவும் இருக்கும். அவனுக்கும் நிலைமை நன்றாகப் புரியும். ஆனால் நான் மட்டும் போய் விட்டு வந்தால் நான் மட்டுமே கடனாளியாக இருந்து விட்டுப் போய்விடலாம். அவனையும் அழைத்துச் சென்றால் காலம் முழுக்க அவனும் கடனாளிப் பாரத்தோடே அலைய வேண்டும். அதற்கு இப்படி ஓர் உதவியே செய்திருக்க வேண்டாம் அம்மா என்று எண்ணி விடவும் கூடும். அண்ணன் பிள்ளைகளைப் பார்க்கும் போது 'உங்கப்பா பணக்காரர் எங்கப்பா ஓட்டாண்டி' என்றொரு சிந்தனை வந்து விடவும் கூடாது. அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கு நம்ம பிள்ளையைப் பார்த்து அப்படி ஏதும் தோன்றி விடக் கூடாது. இதெல்லாம் ஆயிரங்காலத்துக் களை. தியாகம் செய்கிறேன் என்றெண்ணிக் கொண்டு அதற்கான விதையை நானே தூவி விட்டுப் போய் விடக் கூடாது. 'ஒவ்வொரு முறையும் தோல்ப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு பிள்ளைகளைப் பற்றிக் கொண்டு காசு வாங்க வரும் போதும் இவ்வளவையும் அக்கா யோசிப்பாளா?' என்றொரு சிந்தனை வேறு வந்து சென்றது இடையில். 'அப்படியெல்லாம் யோசித்திருந்தால் பிள்ளைகளை எப்படி இஞ்சினியிர்களாக்கியிருக்க முடியும்?'

எல்லாக் குழப்பங்களுக்கும் பின்னால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். 'எல்லோரும் சொல்வது போல இப்படி எல்லாத்தையும் தேவைக்கு அதிகமாகக் கலங்கலாக்கி மண்ணாப் போவதுதான் என் பிரச்சனை போல. இந்தந்தப் பிரச்சனைக்கு இவ்வளவுதான் யோசிக்க வேண்டும் என்று வரையரையில்லாமல் யோசித்தால் ஆம்பளையா இருந்தாலும் பொம்பளையா இருந்தாலும் மண்டையில இருக்கிற மயிர் மட்டும்தான் உதிரும். பிழைப்பு செழிப்பாக இராது. ஒன்னுமே பண்ண முடியாதவங்க வேலைதான் இந்த அளவுக்கதிகமான பேச்சு - யோசனை எல்லாமோ! பேசாமல் அவனையும் கூட்டிட்டுப் போயிர வேண்டியதுதான். என்ன இருந்தாலும் கூட ஓர் ஆளைத் துணைக்கு அழைத்துச் செல்வது என்பது தனியாகப் போவதைவிடப் பல மடங்கு பலம் கொடுக்கிற அதிசயமான விஷயம். அது நேற்றுப் பிறந்த குழந்தையாகக் கூட இருப்பினும். அதுவும் முதல் முறை தப்பு செய்பவர்களுக்குக் கண்டிப்பாக ஆள்த்துணை அவசியம்.

விளக்குப் போட்டதும் இருட்டு வேலையைக் காட்ட ஆரம்பித்தது. தயக்கம் மாலைக்குள் ஒளிந்து மயக்கமானது. "தம்பி, நாளைக்குக் காலையில நம்ம ரெண்டு பேருமாக் கிளம்பி மாமா வீட்டுக்குப் போய்ட்டு வந்துருவம்டா" என்று அருவமில்லாமல் அவள் காதுக்கே கேட்காத படிக்குத் தம்பியின் துணையோடு தள்ளிப் போட்டாள் பிரயாணத்தை. பாதைப் பழக்கத்தில் சரியாக வீடு திரும்புகிற மாடு மாதிரி அனிச்சையாகவே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாள். அன்றைய பொழுது கழிந்தது. வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு முடிவெடுத்த நாள். அவளைப் பொருத்த மட்டில் அண்ணா தனி நாடு கொள்கையைக் கை விட்ட நாள் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திருப்பத்தை விடப் பெரிய திருப்பத்தைத் தன் வாழ்க்கைக்குக் கொண்டு வரப் போகும் நாள். முடிவெடுக்கிற நாட்கள் வேகமாக ஓடி விடும். செயல்படுத்துகிற நாட்கள்தாம் வரவே செய்யாமல் வம்பு பண்ணித் தொலைக்கும். இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்ததில் அழுக்குப் போர்வைக்குத்தான் அலுத்தது. அவள் சளைக்காமல் யோசித்தாள். இந்தச் சிக்கலிலிருந்து எப்படித் தப்புவது???

திருமணத்துக்குப் பின்பு இப்போதுதான் இப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறாள். எப்படியொரு சிக்கல்? சில நிமிடங்களில் முடிந்து விடப் போகிற ஒரு விஷயம் பற்றி இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்திக்கிற சிந்தனைச் சிக்கல். ஆனால் ஒரு சின்ன வேறுபாடு. அப்போதையது முடிவிலா இன்பங்களின் துவக்கமென்றெண்ணிக் களித்த இன்பச் சிக்கல். முடிந்தபின்தான் தெரிந்தது அது அப்படியல்ல என்பது. இப்போதையது முடிவிலாத் துன்பங்களின் முடிவு வரப் போகிறது என்பதை எண்ணிக் களிக்க முடியாமல் அதை எப்படிக் கடக்கப் போகிறோம் என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிற துன்பச் சிக்கல். அதற்காகவாவது நாளை எல்லாம் நல்லபடி நடந்து முடியும் என்றொரு நம்பிக்கை. களிப்பவன் நரகத்துக்குப் போவதும் கஷ்டப்படுபவன் சொர்க்கத்துக்குப் போவதும் தானே நம்ம கதைகளின்படி நியாயம். அதுவும் நம்ம தாய்மார்கள் சொர்க்கத்துக்குப் போயே ஆக வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு கஷ்டப்படுவதையே இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டவர்கள்.

சூரியன் உதிக்கும் முன் திடீரென்று ஒரு திட்டம் உதித்தது. விடிந்தால் செவ்வாய்க் கிழமை. விடியாமலே கூடக் கொஞ்ச நேரம் நீடித்தால் நன்றாகத்தானிருக்கும். நல்ல வேளை புதன் கிழமை இல்லை. இருந்திருந்தால் "நல்ல நாள்... பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்லிக் கொண்டு அண்ணன் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதாகியிருக்கும். ஆக, விடிந்தால் செவ்வாய்க் கிழமையாக இருப்பதால், செவ்வாய்க் கிழமை வேலை நாளாக இருப்பதால், ஞாயிற்றுக் கிழமை போகலாம்ம்ம். மகன் சேரப் போகிற கல்லூரியில் செவ்வாய்க் கிழமை வேலை நாளாக இருக்கலாம் என்பதைத் தவிர இப்போதைக்குச் செவ்வாய்க் கிழமை என்பது பற்றி அவள் கவலைப்படுவது அர்த்தமேயில்லாதது. அவள் வேலைக்குப் போகிற வேலை இல்லாத வீட்டு மனைவி. வேலைக்குப் போகிற வீட்டுக்காரரோ (வாடகை வீட்டில் தான் இருக்கிறார்கள்) அண்ணன் வீட்டுக்கு வந்து சம்மணம் போட்டுச் சாப்பிட்டு விட்டுக் கை நீட்டிக் காசு வாங்கப் போவதில்லை. அண்ணனும் ஆஃபீஸ் போகிறவரில்லை. அல்லது ஞாயிற்றுக் கிழமை ஆனால் வீட்டை விட்டே வெளியில் போகாமல் ஓய்வு எடுப்பவருமில்லை. அப்துல் காதரின் அமாவாசை ஆர்வத்துக்குக் கூட அர்த்தமிருக்கிறது. ஆகவே இந்த அம்மாவின் செவ்வாய்க் கிழமைக்கும் ஏதாவதொரு காரணமிருக்கக் கூடும். மீண்டுமொரு தள்ளிவைப்பு!!! அவளையே அவள் மனசு ஏமாற்றிக் கொண்டிருப்பது அவளுக்குப் புரியவில்லை.

வராமலேயா போய்விடப் போகிறது ஞாயிற்றுக் கிழமை? அதுவும் வந்தது. திரும்பவும் தலை சுற்றுகிறது - சுடுகிறது - வலிக்கிறது. எப்படித் தப்புவது??? உலகியல் நியாயங்கள் எல்லாம் ஒப்புக் கொண்டாகி விட்டது. ஆனாலும் ஏதோ இடிக்கிறது - தடுக்கிறது. பிள்ளை படிப்பும் முக்கியம். கோட்டைச் சுவரைத் தாண்டவும் முடியவில்லை. "வங்கிக் கடனை விட அண்ணங்கிட்ட வாங்குற கடன் தப்பா?" என்ற கேள்வி புரண்டு படுத்தது. 'அண்ணங்கிட்டப் போய் நிக்கிறதுக்கு முன்னாடி வங்கியில் கேட்டுப் பார்த்துரலாமே?!' ஞாயிற்றுக் கிழமை வழக்கத்தை விட மெதுவாகவும் இந்த வாரம் எதிர் பார்த்திருந்ததை விட வேகமாகவும் ஓடியது.

மறுநாள் காலை வங்கிக்குப் போனார்கள். தாயும் மகனும். ஒரு வார அலைச்சலுக்குப் பிறகு மகனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைத்தது. கிடைத்திருக்கக் கூடாத எதுவும் கிடைக்க வில்லை. அலைச்சல் உளைச்சலைக் கொடுக்க வில்லை.

அடுத்த காட்சி - பத்துப் பதினைந்து ஆண்டுகட்குப் பிந்தையது. மடம் பிடித்த பொன்னின் மணிகளெல்லாம் அன்னியப் பெண்களைக் கட்டிக் கொண்டு மாமமார் வீட்டுப் பக்கமே தலை காட்ட முடியாமல் தூற்றப்பட்ட புழுதியில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அடம் பிடித்த மணியின் பொற்களெல்லாம் அன்னியப் பெண்களைத்தான்... கட்டிக் கொண்டு மாமமார் வீட்டு விருந்துக்கு வந்து போய்க்கொண்டு இருந்தார்கள்.

திங்கள், மார்ச் 28, 2011

சாலைப் போராட்டங்கள்!

வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது. சக பயணிகள் நாம் எதிர் பார்க்கிற மாதிரி நடந்து கொள்ளாத பொழுதுகளில் அது ஒன்றே நம்மை அப்படி ஆகச் செய்து விடுகிறது. அதுவே நம் பயணங்களுக்கும் பொருந்தும். அதாவது, சாதாரண பயணங்கள் பற்றிச் சொல்கிறேன் - சாலைப் பயணங்கள் பற்றி! இந்த உலகில் வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சாலைகள் எனக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன - எந்த மாதிரியான சக மனிதர்களோடு பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும். முதலில், அவர்கள் எல்லோருமே மனிதர்கள் என்று அழைக்கப் பட முடியுமா என்று தெரியவில்லை. பிறப்புச் சான்றிதழ் மற்றும் பல மருத்துவச் சான்றிதழ்கள் போல, நம் மனிதத் தன்மையை அளக்க ஒரு குறியீட்டு எண் மற்றும் அதை அளக்க ஒரு சரியான முறை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறைவான மனிதக் குறியீட்டு எண் கொண்டோர் காடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

என் நண்பன் ஒருவன் சொல்வான் - கழிப்பறையில் இருக்கும் போதுதான் அவனுக்குள் இருக்கும் தத்துவ ஞானி முழுமையாக வெளிவருவான் என்று. அது போல, சில நேரங்களில், சாலையில் போகும் போது, நானும் நிரம்பத் தத்துவ வயப்பட்டு விடுகிறேன். மித மிஞ்சிய மனிதத் தன்மை கொண்ட என் சக பிராணிகளுக்கு மத்தியில் இன்று வண்டி ஓட்டிச் சென்றபோதுதான் இந்த மனிதக் குறியீட்டு எண் பற்றிய சிந்தனை வந்தது. எது என்னை இந்த உலகத்தில், மன்னிக்க, சாலைகளில் அவ்வளவு தத்துவ வயப் பட வைக்கின்றது? நான் சொல்வதைத் தவறென்று நிரூபிக்கவோ அல்லது நான் பிதற்றும் இந்தக் கருமாந்திரம் (மனிதக் குறியீட்டு எண்) எல்லாம் தத்துவமல்ல என்று சொல்லவோ தயவு செய்து தங்கள் நேரத்தை வீணாக்கித் தகவல் சேகரித்துக் கொண்டு வரவேண்டாம். :)

எல்லா விதமான ஆட்களையும் சாலைகளில் பார்க்கிறேன். 'சுயநலம்' தான் சாலைகளில் அதிகம் வெளிப்படும் குணாதிசயம் - நீண்ட காலமாகவே நம்மிடம் தங்கி விட்ட விலங்குகளின் வலுவான பண்புகளில் ஒன்று. யாருக்குமே சக மனிதர்களின் வாழ்க்கையை - உயிரைப் பற்றிய கவலை இல்லை (கேட்டால், "அது அவர்கள் கவலைப் பட வேண்டியது" என்று சொல்கிறார்கள் விபரமானவர்கள்!). வண்டியை வெளியில் எடுத்துக் கிளம்பும் போதெல்லாம் சிலரைக் கொன்று போட்டு வருகிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் அப்படியெல்லாம் செய்வதில்லை, ஏனென்றால் அவர்களால் அப்படிச் செய்ய முடியாது. நல்ல வேளையாக, அத்தகைய சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன இப்போது. ஒருவேளை, அப்படியொரு விதிமுறைகள் அற்ற நாகரிகத்தில் வாழ வேண்டியிருந்திருந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு சில உயிர்களைக் கொன்று போட்டு விட்டுத்தான் வீட்டுக்கு வருவோம் என நினைக்கிறேன் - மிருகங்களைப் போல. போகிற போக்கில் இதையும் சொல்லி விடுகிறேன் - 'விதிமுறைகள் அற்ற நாகரிகம்' என்பது முரண்தொடை (OXYMORON) அல்ல. அது எதார்த்தம். எந்த நாகரிகமும் முழுமையாக நாகரிகம் அடையவில்லை இன்னும். இன்னொரு 'போகிற போக்கில்', ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணிதான் அதில் கீழானது என்று நீங்கள் சொன்னால், கண்டிப்பாக உங்களோடு வாதிட மாட்டேன். உரையாடலில் ஒரு நேர்கொண்ட போக்கு இருக்கட்டும் என்பதற்காக அதை இப்போதைக்கு ஒதுக்கி வைத்து விடுவோம். :)

என் சாலைப் போராட்டங்களுக்கு வருவோம்... மற்ற உயிரினங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் மதம் பிடித்தது போல வண்டி ஓட்டுபவர்களே நம்முடைய சில 'சிறந்த' ஓட்டுனர்கள் இப்போது. அவர்கள் ஓட்டும் விதம் அவர்களுக்குப் பாதுகாப்பானதே, மற்றவர்களுக்கில்லை. இவர்கள்தாம் சுயநலக் கோட்பாட்டை நிரூபிப்போர். ஒரு தடத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாறும்போது பின்னால் வரும் வாகனங்கள் (தம்முடையதை விடச் சிறிய வாகனங்களிடம் தான் இது அதிகம் காட்டப்படும்) பற்றித் துளியும் கவலைப் படுவதில்லை இவர்கள். என்னிடம் புள்ளிவிபரங்கள் இல்லை, ஆனால் இதுதான் (கண்மூடித் தனமாக தடம் மாறுவது) விபத்துகளுக்கான தலையாய காரணம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய ஓட்டுனர்கள் நிறையப் பேருக்கு அது என்னவென்றே புரிவதில்லை.

சாலையில் ஒரு சிறிய கல் பெயர்ந்திருந்தால் கூட அவர்களால் பொறுக்க முடியாது. நினைத்த மாத்திரம் வெடுக்கென ஒரு வெட்டு வெட்டுவார்கள். எதைப் பற்றியும் கவலையில்லாமல். பின்னால் என்ன வருகிறது - இடித்தால் அவர்கள் நிலைமை என்ன ஆகும் என்ற கவலை சற்றும் இராது. அவர்கள் கவலையெல்லாம் டயருக்கு எதுவும் ஆகி விடக் கூடாதாம். அடப் பரதேசிப் பயகளா! உயிரை விடவா டயர் முக்கியம்? இந்தப் பழக்கம் நம் பெரும்பாலான ஓட்டுனர்களிடம் உள்ளது (இதில் சக்கரம் எத்தனை என்பதைப் பொருத்து வேறுபாடு எதுவும் இல்லை). சாலை முழுக்கக் கற்கள் பெயர்ந்திருந்தால், இப்படியும் அப்படியுமாக பைத்தியம் பிடித்த பாம்பு போல, சாலையில் போகும் / வரும் எல்லோரையும் தொல்லை செய்வது போல ஓட்டுவார்கள். அவர்களுடைய நீண்ட பயணத்தில் கொஞ்சம் கூடக் குலுங்காமல் அலுங்காமல் போய்ச் சேர வேண்டுமாம். அது ஒன்றே அவர்களின் காரணம். மற்றவர்களைச் சித்திரவதை செய்தாயினும் தான் சுகமாகப் பயணிக்க வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள்.

இவர்கள்தாம் கண் கூசுகிற மாதிரி மேல் விளக்கைப் போட்டுக் கொண்டு ஓட்டுவோர். எத்தனை முறை அதை அணைத்துக் கீழ் விளக்கு போடும்படி சைகை காட்டினாலும் குருடர்கள் போல் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். இவர்கள்தாம் காது கிழிகிற மாதிரி ஹார்ன் கொண்டு காட்டுச் சத்தம் எழுப்புபவர்கள். ஸ்டியரிங்கை விட ஹார்ன் மீது அதிக நேரம் கை வைத்திருப்போர் நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன். ஆக்செலரேட்டருக்கு அடுத்து வண்டியில் அவர்களுக்கு முக்கியமான தேவை ஹார்ன் தான். தெருவில் பிறந்தவர்கள் போல அவர்களுக்கு சத்தம் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

இவர்களெல்லாம் தம் சக பிராணிகளை விட்டு விட்டு கொஞ்சம் சீக்கிரமே காட்டில் இருந்து நம் வாழ்விடங்களுக்கு வந்து விட்டவர்கள். உலகமெங்கும் மனிதர்கள் மட்டுமே வண்டி ஓட்ட முடியும் என்று ஆகும் வரை இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வே இல்லை. மேற்கு நாடுகளுக்குச் சென்று வந்த நண்பர்கள் எல்லோருமே சொல்கிறார்கள் - அந்நாடுகளில் உள்ள விதிமுறைகள், சாலைகளில் மனிதப் பண்புகளை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன என்று. நம் புனித பூமியிலும் அது போன்ற மாற்றம் வரும் என்று வேண்டிக் கொண்டே இருப்போம். எத்தனையோ மதங்கள் பிறந்த இந்த மண்ணில் சாலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யாருமே சொல்லிக் கொடுக்க வில்லையே. நம் புனித நூல்களில் சாலை நற்பண்புகள் பற்றியும் சில பிரிவுகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் இல்லையா?!

அடுத்த - அதிகமாகப் பார்க்கப் படும் பண்பு 'கவனமின்மை'. கவனமின்மை என்பது வெறும் பயமின்மை அல்லது புத்தியின்மை என்று கூடச் சொல்வேன். அவர்கள் வண்டி ஓட்டும் முறை பற்றி அவர்கள் யோசித்ததில்லை; அவ்வளவுதான். அவர்களின் உயிருடைய மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை; அவ்வளவுதான். இன்னொரு வாய்ப்பு அளித்தால் இவர்கள் திருந்தி விடுவார்கள்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலானோருக்கு அது கிடைப்பதில்லை. அவர்கள் அப்படியிருப்பதன் காரணம் - சென்று சேர வேண்டிய இடத்தைத் தவிர வேறு எது பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி போக வேண்டும் என்பதை விட எங்கே போக வேண்டும் என்பதே அவர்களுக்கு முக்கியம். இதுவும் சுயநலம் போன்றே தோன்றும். ஏனென்றால், பெரும்பாலானோரிடம் (எல்லோரிடமும் என்று சொல்ல முடியாது) சுயநலத்தில்தான் அது ஆரம்பிக்கிறது. 

எதிர்த் தடங்களில் ஓட்டுகிற மற்றும் சைகை விளக்குகளை மதிக்காமல் பாய்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் அப்படியெல்லாம் செய்வதன் பின்னணியில் இருப்பது அவர்களின் கவனமின்மையே. மிச்சப் பெரும்பாலானவர்கள் அறியாமையின் காரணமாகச் செய்வோர் என நினைக்கிறேன். எதிர்த் தடங்களில் ஓட்டுவதாலும் சைகை விளக்குகளை மதியாமல் பாய்வதாலும் ஏற்படும் விபத்துகள் பற்றிய கதைகளை அவர்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஓட்டுவதற்காக சில கூடுதல் அதிகாரம் பெற்ற நம் சக குடிமக்களிடம் (திமிர் பிடித்தவர்கள் என்பதைத்தான் இப்படி நாகரிகமாகச் சொல்கிறேன்!) கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கி இருக்க மாட்டார்கள் . காவல்த் துறையினரிடம் அபராதமோ அல்லது வசதி வரியோ (லஞ்சம் என்ற பிச்சையைத்தான் இப்படிச் சொல்கிறேன்!) கட்டியிருக்க மாட்டார்கள். ஒருமுறை பாடம் கற்பிக்கப் பட்டு விட்டால் அத்தோடு திருந்தி விடுவார்கள்.

ம்ம்ம்... திமிர் (நம் தேசிய குணங்களில் ஒன்று) இங்கு விடுபடக் கூடாது. சிலருக்கு, எது எப்படியோ, ஒவ்வொரு நாளும் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டால், அன்றைய தினத்துக்குக் குறைந்த பட்சம் இத்தனை பேரையாவது திட்ட வேண்டும். வீட்டில் உள்ள வெறுப்புகளை இங்கே காட்டலாம். ஆனால், அவர்களுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால், இப்படித் தினமும் திட்டு வாங்குவோரில் ஒருவர், வீட்டில் இருப்போரும் அலுவலகத்தில் இருக்கும் மேலாளரும் கொடுக்க முடிந்ததை விடக் கொடுமையான தண்டனைகள் கொடுத்து விடக் கூடும். மொத்த உலகமும் இவர்களுடையது - ஆசைப் படும் போதெல்லாம் யாரை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளத் தனக்கு உரிமை இருக்கிறது என்று எண்ணுபவர்கள். சாலையில் போகும் வல்லவனுக்கு வல்லவன் ஒருவரால் ஓரிரு அறைகள் வாங்கி விட்டால் இவர்கள் திருந்தி விடுவார்கள்.

இதை நான் நீளமான வரிசைகள் இருக்கும் சுங்கச் சாவடிகள், இரயில்வே கேட்கள், பெட்ரோல் பங்க்கள், ஒரு தடச் சாலைகளில் பார்த்திருக்கிறேன். சட்டத்துக்கு பயந்த எல்லோரும் ஒரே ஒற்றை வரிசையில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கும்போது, சில அமாவாசையில் பிறந்தோர் மட்டும் வேகமாக எல்லோரையும் கடந்து வெகு முன்னால் வந்து இடையில் கிடைக்கிற இடத்தில் நுழைவார்கள். அவர்கள்தாம் புத்திசாலிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது போலவும் அவர்களுக்கு நினைப்பு. அவர்கள் வாழ்வதே இன்றுவரை அவர்களை யாரும் அறைய முன் வராததால்தான். அது திமிர் மட்டும் இல்லை. மனிதத் தன்மை அற்ற ஒரு செயலும் கூட. மிருகத்தனமானது. அவர்கள் காட்டில் இருப்பதே நல்லது.

கவனமின்மையிலேயே மேலும் அபாயகரமான படிவம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை அல்லது உயிரின் முக்கியத்துவம் தெரிவதில்லை; அவ்வளவே. இந்தப் பேர்வழிகள் என்ன செய்வார்கள் என்றால், எங்கு போனாலும் யாரோ ஒருவரைப் போட்டி போடப் பிடித்து விடுவர். கடுப்பேற்றும் விதமாக ஓட்டி ஓட்டி யாராவது ஒருவரை எப்படியாவது ஒரு வழியாகப் போட்டிக்கு அழைத்து வந்து விடுவார்கள். இப்படி யாராவது ஒருவரைப் பிடித்து இழுக்கா விட்டால் அவர்களால் ஒரு மணி நேரம் கூட ஓட்ட முடியாது. இது போன்ற வேடிக்கைகள் இல்லாமல் தன்னால் நெடுந்தொலைவுப் பயணங்களில் எல்லாம் ஓட்டவே முடியாது என்கிறார் என் நண்பன் ஒருவர். அவர் ஊருக்குப் போகும் ஒவ்வொரு முறையும் இது போன்ற போட்டிகளில் இறங்கி விடுவாராம். அது அவருக்கு மிகவும் பிடிக்கிறது. அது போன்ற விஷயங்கள் அவருக்கு மிகவும் கிளர்ச்சி ஊட்டுகின்றன. அது போன்ற  நெடுந்தொலைவுப் பயணங்களில் இவர்களோடு போட்டிக்கு வருவதற்காகவே இவர் போன்ற ஆட்கள் நிறையப் பேர் இருக்கிறார்களாம் ஊருக்குள். மடத்தனம்... பைத்தியக்காரத்தனம்... புத்திக் கலக்கம்... இல்லையா? இது போல ஆரம்பித்து வாழ்க்கையையே முடித்து வைக்கிற மாதிரி முடிந்த பல கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்களும் அது போன்ற கதைகளைக் கேட்டால் நல்லது.

எதற்காகத் திட்டு வாங்குகிறோம் என்றே தெரியாமல் திட்டு வாங்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர்களால் பதிலுக்கும் கத்த முடியாது (நல்ல தாய் தகப்பனுக்குப் பிறந்தோர்!). அவர்களுடைய தவறு என்னவென்றும் புரிந்து கொள்ள முடியாது. சில நேரங்களில், அவர்களுடைய தவறு - அவர்களுடைய நாகரிகமான தோற்றமாக இருக்கலாம். அவர்களுடைய பாலினமாக இருக்கலாம். வேறொரு மாநிலத்தில் பதியப் பட்ட வண்டியை ஓட்டுவதாக இருக்கலாம் (அவர்களிடம் சொந்த மாநிலத்தில் இருந்து ஒப்புதல்ச் சான்றிதழ் பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை - வந்த மாநிலத்தில் சாலை வரி கட்டியிருக்கிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை - வண்டியை விதிமுறைகளின் படி சரியாக ஓட்டுகிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை - சில நேரங்களில், அவர் வெளி மாநிலத்தவரா வண்டி மட்டும்தான் வெளி மாநிலமா என்பது கூடப் பிரச்சனையில்லை!). இவர்கள் நம் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை நினைவு படுத்துகிறார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒன்றும் செய்ய முடியாது விழிக்க வேண்டும் அல்லது சிரிக்க வேண்டும். என்ன ஒரு கொடுமையான கிரகத்தில் வாழ்கிறோம்.

சாலையில் என்னை மிகவும் பாதிக்கும் விஷயம் என்னவென்றால், தமக்கு என்றுமே சாலைகளில் எதுவுமே நடக்க முடியாது என்கிற அளவுக்கு அவ்வளவு கவனமாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டும் சிலர் பிரச்சனைக்குள்ளாவது. தொடர் புகையாளர்களுக்கு முன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர் புற்று நோய் வந்து சாவது போல இது. அவர்கள் சாலையை மதிப்போர். விதிகளைப் பின்பற்றுவோர். உணவுக்கும் சுகங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பள்ளிக் கட்டணத்துக்கும் மன பலத்துக்கும் அதுபோன்ற பல வாழ்க்கைக்குத் தேவையான சமாச்சாரங்களுக்கும் தன்னைச் சார்ந்து இருக்கும் உயிர்களைப் பற்றி (வீட்டில் இருக்கும் பெரியோர், பெண்டிர் மற்றும் பிள்ளைகள்) மீண்டும் மீண்டும் தனக்குள் நினைவு படுத்திக் கொள்வோர். இத்தனைக்கும் பின்பும், அவர்களில் சிலர் அடி படுகிறார்கள் - திட்டப் படுகிறார்கள் - உயிரை இழக்கிறார்கள் - உறுப்புகளை இழக்கிறார்கள் - சென்று சேர வேண்டிய இடம் போய்ச் சேர்வதில்லை. எந்தத் தவறும் செய்யா விட்டாலும், வேறொருவர் செய்யும் தவறால் அவர்களின் வாழ்க்கை ரணப் படுகிறது. அந்த 'வேறொருவர்' அவருடைய தவறுக்காகத் தண்டனை கூட அனுபவிப்பதில்லை பெரும்பாலான நேரங்களில்.

ஏன்? இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. அதற்கான பதில் ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் விதியின் மேல் பழி போட முடியும். அவ்வளவுதான். அதுதான் இயலாமையால் செய்ய முடிந்தது. விதியை மனிதர்களான நம்மால் இதை விடப் பரவாயில்லாமல் நிர்வகிக்க முடியுமா? முடியும் என்றுதான் நினைக்கிறேன். நம்பிக்கையுள்ளது. எல்லோரும் சாலை நற்பண்புகளைப் பின் பற்றுவதன் மூலம் எவ்வளவோ உயிர்களைக் காக்க முடியும். ஆனால், அதற்கு, நல்ல மனிதக் குறியீட்டு எண் கொண்ட மக்கள் வேண்டும் - திறந்த மனதோடு அவற்றைப் படிக்கவும் தொடர்ந்து கடை பிடிக்கவும். :)

திங்கள், மார்ச் 21, 2011

வேயன்னா

நமக்கெல்லாம் நாள்தோறும் நாடு பற்றிய நினைவு என்பது இருந்து கொண்டே இருப்பதில்லை. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடுக்கப்படுகிற மிட்டாய்கள்தான் அதை ஓரளவு ஒரு சிலருக்கு நினைவு படுத்துபவையாக இருந்தன. கூடுதலாக இப்போது தனியார்த் தொலைக்காட்சிகளின் புரட்சி நிகழ்ந்த பின்பு ஏகப்பட்ட நாட்டுப் பற்றூட்டும் நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் காட்டப்படுவதால் அவ்விரு நாட்களில் மேலும் அதிகப் படியான நாட்டுப் பற்றை உணர முடிகிறது. இவை தவிர்த்து அதைவிட அதீத உணர்ச்சிகள் கொப்பளிப்பது கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களிலும் அவற்றை விடச் சாதாரணமாகச் சிலரால் பேசப்படும் பக்கத்து நாட்டுடனான போர் நடக்கும் நாட்களிலும்தான். இப்படியாக நாட்டுப் பற்று பல்வேறு புது வடிவங்கள் எடுத்திருக்கும் வேளையில் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினமும் குடியரசு தினமும் நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் எனக்கு எங்கள் தாத்தா பற்றியும் தவறாமல் நினைவு படுத்துகின்றன. நாட்டுக்கும் தாத்தாவுக்கும் என்ன உறவு என்கிறீர்களா? அது ஒரு பெரும் கதை. அந்தக் கதையைப் பற்றிப் பேச இதை விடவும் சிறப்பான தருணம் சிக்காது.

இந்த ஆண்டு தாத்தாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறோம். சில கொள்ளையர்களும் கோமாளிகளும் குற்றவாளிகளும் கூடத் தத்தம் தந்தையரை – தலைவனை தியாகி நிலைக்கு உயர்த்தி நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் நாம் அதைச் செய்யத் தவறினால் அது நம் வாழ்வின் ஒரு பெரும் குறையாகவே இருந்து முடியும் என்ற கவலை ஒருபுறம் எல்லோரையும் ஓரளவு வருத்தியது என்ற போதிலும் களத்தில் இறங்கி அதற்கான வேலை பார்ப்பதில் வேகமான – ஈடுபாடுடைய ஆள் யாரும் எம்மிடம் இல்லை. அவர் சார்ந்திருந்த இயக்கத்தோடும் வீட்டில் யாரும் அவரளவுக்குப் பிடிப்போடு இல்லை. இந்த நிலையில் எங்களில் ஒரு விதி விலக்காக எங்கள் சித்தப்பா ஒருவர் – தாத்தாவின் நேரடி சீடர், இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் தன் வாழ்க்கை அர்த்தமில்லாமலே முடிந்து விட்டதாகிவிடும் எனக் கருதிப் பிடிவாதத்தோடு களத்தில் இறங்கி அதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இடதுசாரி இயக்கத்தின் தமிழக வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த நூற்றாண்டு விழாவுக்கு நாங்கள் செய்ய நினைப்பது மிகச் சில விஷயங்களே. ஒன்று, அவருடைய நினைவிடத்தை ஓரளவு புதிப்பிக்க வேண்டும். மற்றொன்று, கண்டிப்பாகச் சொல்லாமல் போய் விடக்கூடாத அவரது வாழ்க்கையை ஒரு நூல் வடிவில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பணியை தோழர் பொன்னீலன் (ஆம். அவரேதான். ‘புதிய தரிசனங்கள்’ என்ற புதினம் எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற இடதுசாரி எழுத்தாளர்!) முன்னின்று செய்து கொண்டிருக்கிறார். அவர் தாத்தாவின் அருகிலிருந்து வாழும் வாய்ப்பைப் பெற்றவர் என்பதால் மற்ற எவரையும் விடச் சிறப்பான முறையில் இந்தப் பணியைச் செய்து முடிப்பார் என எண்ணுகிறோம். அவருடைய இந்தப் பணியில் அளவிலாத தகவல் தேடலும் சேகரிப்பும் முக்கியமான உட்பணிகள். இதைச் செய்வதற்கு தாத்தாவின் காலடி பட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று, அங்குள்ள மனிதர்களைச் சந்தித்தும் மற்ற வழிகளிலும் தகவல்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் அவர். இதில் தாத்தாவோடு பழகிய – வாழ்க்கையைப் பகிர்ந்த ஒவ்வொருவரும் தத்தம் நினைவில் இருக்கிற – தமக்குத் தெரிந்த நிகழ்வுகளை – கதைகளைச் சொல்லி வருகிறார்கள்.

என்னுடைய நான்காவது வயதிலேயே தாத்தா இறந்து விட்டார் என்ற போதிலும், ‘அவர் போல வருவான்’ என்று சின்ன வயதில் பெரியவர்கள் ஏற்றி விட்டதாலும் (அதில் துளி கூட வரவில்லை என்பது வேறு கதை) அவருடைய பேரன் என்பதன் பெருமையை ஓரளவு ஊர்ப்பக்கம் அனுபவித்து விட்டதாலும் அவர் பற்றிய கதைகள் மீது எனக்கு எப்போதுமே அளவிலாத ஈடுபாடும் ஆர்வமும் இருந்து வருகிறது. என் மனக் கிடங்கிலும் அவர் பற்றிய பல கதைகள் புதைந்து கிடக்கின்றன. வாழ்ந்து முடித்து விட்ட மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற பல பெரியோர் சொன்ன கதைகள்! என் பங்குக்கு அவற்றைத் தோண்டி எடுத்து ஒரு பொட்டலம் போட்டு தோழர் பொன்னீலன் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் எல்லோரும் சொல்ல மறந்த – விடு பட்ட சில வரிகள் அதில் சிக்கலாம் என்ற சிறு நம்பிக்கையில் இதை எழுத உட்கார்ந்தேன். அப்படியே நம் வலைப்பதிவிலும் அதையே போட்டு விடலாம் என்றெண்ணி அதையும் செய்கிறேன். இதைப் படித்து விட்டு உங்களில் பத்துப் பேராவது நூல் வெளி வரும்போது அதை வாங்கிப் படிக்க ஆர்வம் காட்டினால், தாத்தாவுக்குச் செய்ய வேண்டிய கடமையை நானும் ஓரளவுக்கு – என் அளவுக்குச் செய்து விட்ட மன திருப்தி அடைவேன். கதைக்குள் செல்வோம் இப்போது...

எங்கள் பூர்வீகக் கிராமம் பூதலப்புரம் எனப்படும் ஓர் ஊர். பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பழைய கோவில்பட்டி தாலுகாவில் இருந்த ஊர். இப்போதைய வரைபடங்களின் படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் வருகிறது. அதிகம் நடமாடிப் பழக்கமில்லாத கிழக்குத் திசையில் நடந்து சென்றால் வந்து விடுகிற தொலைவில் இராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது. தென் தமிழகத்துக் கிழக்குச் சீமைக்கும் மேற்குச் சீமைக்கும் எல்லை என்று சொல்லலாம். கீகாடு, மேகாடு என்றுதான் அவற்றை அழைப்பர் மேகாட்டிலும் கீகாட்டிலும் உள்ளோர். ஆக மொத்தம் அவை அனைத்துமே காடுகள் என்பது மட்டும் உறுதி. வெள்ளைக்காரன் காலத்தில் பெரும்பாலும் கீகாட்டின் கலாச்சாரப் பாதிப்பே அதிகம் கொண்டிருந்தது என்றாலும், மாட்டு வண்டிகளின் காலம் முடிந்து பேருந்துகள் வர ஆரம்பித்த பின்பு, கீகாட்டுத் தொடர்பு குறைந்து, மேற்கே சிறிது தொலைவு வந்து, பின்பு அங்கிருந்து (நாகலாபுரம் – புதூர் போன்ற ஊர்களில் இருந்து) வடக்காகவோ தெற்காகவோ பயணிக்கும் பழக்கம் அதிகமானது. நான் சிறுவனாய் இருக்கும் காலம் வரை கிழக்கேதான் நிறைய சம்பந்தங்கள் செய்து கொண்டிருந்தார்கள். பின்னர்தான் வரைபடங்களும் வசதிகளும் எங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றின. திசையைத் திருப்பியதில் தாத்தாவின் பங்கும் நிறைய உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

கீகாடு எனப்படும் கிழக்குச் சீமை என்பது பெரும்பாலும் தண்ணீர் இல்லாத – கண்மாய்த் தண்ணீர் குடிக்கிற – கண்மாயிலும் மனத்திலும் ஈரமில்லாத – பஞ்ச காலத்தில் களவாங்கும் வேலை செய்கிற – மனிதத் தன்மையே இல்லாத – கறிச் சோறுக்குச் சண்டை போடுகிற – சாராயத்துக்குக் கொலை செய்கிற – கொடூரர்களின் பூமி. அல்லது அப்படித்தான் எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். ஆனால், மற்ற பண்பாடுகளில் கிழக்குச் சீமையின் பாதிப்பு அதிகம் என்ற போதிலும் அமைதி அதிகம் விரும்பும் மக்கள் வாழும் ஊர் எங்களூர். அதனால்தானோ என்னவோ பின்னாளில் எளிதாக திசையை மாற்றிக் கொண்டு விட்டார்கள். எங்கள் ஊர் மட்டுமில்லை. கிட்டத்தட்ட பழைய கோவில்பட்டி தாலுகா முழுக்கவே அப்படி ஓர் அமைதி விரும்பி மக்களின் பகுதி எனலாம். தெற்கும் கிழக்கும் வெளியுலகில் அறியப்படுவதே அவர்களின் மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைக்காகத்தான். அப்படியிருக்கையில் அவற்றுக்கு மத்தியில் எங்கள் பகுதி ஒரு கலாச்சாரத் தீவு என்று சொல்லலாம். ஜாதி என்கிற சமூக அவலம் அங்கே அதிகம் இல்லை. அதற்காக உயிரை மாய்க்கிற மிருகத்தனம் துளியும் கிடையாது. எல்லோரும் எல்லோர்க்கும் உறவினர். இன்றைக்கு நான் உறவினர் என்று சொல்லிக் கொள்கிற நிறையப் பேர் அப்படிப் பட்டவர்கள்தான்.

தாத்தாவின் கதையைச் சொல்கிற போது அவர் எவ்வளவு முற்போக்குவாதி என்பதை மட்டுமல்ல, அவர் வாழ்ந்த மண்ணும் அவர் சார்ந்த மக்களும் எவ்வளவு முற்போக்குத் தன்மை கொண்டோராக இருந்தார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும். அதுதான் கதையை முழுமைப் படுத்தும். அது மட்டுமின்றி நாளைய சமூகம் மாற்றம் வேண்டிச் செய்யும் போராட்டங்களில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து செயல்பட ஓரளவு உதவும் என நம்புகிறேன். என்னவெல்லாம் இருக்க வேண்டும்? நாகரிகமான தலைவன் வேண்டும். அதற்கும் மேலாக அவன் பேச்சைக் கேட்கும் திறந்த மனம் கொண்ட சுற்றம் வேண்டும். அது அவருக்கு இருந்தது. அதனால்தான் பல வேலைகள் பின்னாளில் அவருக்கு எளிதாய் இருந்தன. தலைவன் மண்ணை மாற்றியதாகச் சொல்லப்படும் நிறையக் கதைகள் புருடா (கண்டிப்பாக இதிலும் விதி விலக்குகள் உண்டு). மண்தான் தலைவனை உருவாக்குகிறது. அது வீட்டு மண்ணா – வெளி மண்ணா – தெரு மண்ணா – களி மண்ணா என்பது வேறு கதை. ஆனால் வாழும் மண்ணும் உடன் வாழும் மக்களும் பெரும்பாலானோருடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றனர் என்பதையும் எல்லா வாழ்க்கை வரலாறுகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது நம் கருத்து. அதன்பின் தலைவன் மண்ணை மாற்றிய கதைகள் வரலாம்.


அவருடைய அப்பா இராமசாமி (பின்பெயரோ பட்டமோ வேண்டாம் என்று மெனக்கெட்டுத் தவிர்த்திருக்கிறேன்; அது கண்டிப்பாக என் அடையாளத்தை மறைக்க உதவும் என்பதாலும் சாபக்கேடு என்று சொல்லிவிட்டு நானே அதைப் பெருமையாகப் போட்டால் நல்ல சுவையில் இராது என்பதற்காகவும்; அதே வேளையில் இப்படிப் பெயரை மட்டும் சொல்வது வேறு யார் பற்றியோ சொல்வது போல ஓர் உணர்வு வருவதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை!), குதிரைக்காரர் என்று அழைக்கப்படுவாராம். அது அப்போதைய ஸ்டைல். எப்போதும் குதிரை, தலையில் ஒரு கொண்டை, முகத்தில் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் சகிதம் வலம் வருபவர். என் இளமைக் காலத்து அளவிலாத் தேடல்களின் போது துருப்பிடித்த வாள் ஒன்று மச்சு வீட்டில் கண்டெடுத்தேன். அதுவும் அவருடையதுதான் என்பார்கள். அவருடைய மூதாதையர் ஏதோவொரு மன்னனுக்கு அடியாளாகவோ - படைத் தளபதியாகவோ – இன்னும் கொஞ்சம் மிகைப் படுத்திச் சொல்ல வேண்டுமானால் குறுநில மன்னராகவோ இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அழகுக்காகக் கூட நாகலாபுரம் சந்தையில் வாங்கி வந்து வீட்டுச் சுவற்றில் மாட்டியிருந்தும் இருக்கலாம். ஊரிலேயே வசதியான குடும்பம். நிறைய நில புலங்கள். ஊரில் பெரும் பகுதி எங்கள் வீடுதான். கீழவீடு என்பார்கள். கீழவீட்டில் கீழ்த்திசை தவிர்த்து மற்ற அனைத்துத் திசைகளிலும் ஒவ்வொரு வாசல் இருந்தது. இப்போது ஒவ்வொரு வாசலும் பல வீடுகளாகி விட்டன. பாகப்பிரிவினையில் நிகழ்ந்த சோகம்! அதிலும் நிறைய வீடுகள் சிதிலமாகி விட்டன.

இன்னமும் பக்கத்து வீட்டிலிருக்கிற மாமா மகளைத் தவிர தூரந்தொலைவில்  போய் யாரையாவது கட்டிக்கொண்டு மாட்டிக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிற மண்ணில் அந்தக் காலத்திலேயே நூறு மைல் தொலைவு போய் சம்பந்தம் செய்திருக்கிறார்கள். இராமசாமி என்பாருடைய தங்கையைக் கட்டிக் கொடுத்தது திருபுவனம் (திருபுவனம் இருப்பது இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில்) அருகே இருக்கும் பழையனூர். அதுதான் அவருக்குப் பின்னாளில் மாமியார் ஊர் ஆகிறது. தொடர்ந்து பல தலைமுறைகளாகப் பல சம்பந்தங்கள் செய்திருக்கிறார்கள். அதற்கடுத்த தலைமுறையில் அது மாறி விட்டது. வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகை அனுப்புவது போக இப்போதெல்லாம் எங்களுக்குப் பழையனூரோடு எந்த உறவும் இல்லாமல் போய் விட்டது. ஆனால் தாத்தாவுக்கு அது முக்கியமான இடம். அங்கிருந்துதான் மதுரையில் போய் படித்திருக்கிறார் (மதுரையில் போய் படித்தது ஏன் முக்கியம் – எவ்வளவு முக்கியம் என்பதை அப்புறம் கண்டிப்பாகச் சொல்கிறேன்). அதற்குக் காரணம் அவருடைய அத்தை வீட்டு வசதியும் – தன் தாய் மண்ணின் (தந்தையின் ஊர்தானே தாய் மண்?!) வசதியின்மையும்.

அப்போதும் பூதலப்புரம் வரைபடத்தில் நல்லதோர் இடத்தில் இருக்கவில்லை. இப்போதும் அது மாறிய பாடில்லை. ஒருவேளை பிற்காலத்தில் நம்மால் ஏதாவது முடிகிறதா என்று பார்க்கலாம். ஆனால், பழையனூர் ஓரளவு பெரிய ஊர். அங்கே கல்வீட்டுக் காரர்கள் என்று கேட்டால் பக்கத்து ஊரில் இருப்போருக்கும் பாதை தெரியும் (இப்போது அங்கே கல்தான் கிடக்கும் என நினைக்கிறேன்; வீடு இருக்கிறதா என்று தெரியவில்லை!). அவ்வளவு பெரிய குடும்பம். மன்னர் பரம்பரை என்று சொல்வார்கள். ஏதாவதொரு குறுநில மன்னர்(!) பரம்பரையாக இருந்திருக்க வேண்டும் என்பது என் ஊகம். இன்றைக்கும் இருக்கும் அந்த ஊர்க் கண்மாய் இருக்குமிடம் கல்வீட்டுக் காரர்கள் ஊருக்கு எழுதிக் கொடுத்தது. அவ்வளவு பெரிய குடும்பம். விளைச்சல் பூமி என்பதால் எதற்கும் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலை. மன்னர் பரம்பரையின் அடுத்தடுத்த தலைமுறைகள் இப்போது மதுரை வீதிகளில் தங்கள் அனைத்து அடையாளங்களையும் இழந்து விட்டு – சீரழிந்து – உருக்குலைந்து அலைந்து கொண்டிருக்கின்றன. அடுத்த தலைமுறைக்குள் தடயமே இல்லாமல் அழிந்தும் போகலாம் அவர்களின் வரலாறு.

ஆனால் பூதலப்புரத்து மரபணுக்கள் அதை விட ஓரளவு வீரியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதற்கொரு காரணம் தாத்தா. அவருடன் பிறந்தோர் இன்னும் இருவர். ஒரு தம்பி. ஒரு தங்கை. தாத்தா பெயர் வேலுச்சாமி (மீண்டும் பின்பெயர் தவிர்க்கிறேன்; ஊரில் சிலர் மரியாதை நிமித்தமாக ‘வேயன்னா’ என்றும் சொல்வார்கள்; அதையே நாமும் பயன்படுத்தி விடுவோம்!). இளையவர் கந்தசாமி (கானா!). அடுத்து லட்சுமி (லானா என்று சொல்வதில்லை அவரை!). லட்சுமிப் பாட்டி மட்டும் மறந்து போன கதைகளைச் சொல்ல தன் தொன்னூறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேயன்னாவின் பேரர் சிலரும் கானாவின் பேரர் சிலரும் ஏதோ ஓரளவு படித்து – ஓரளவு முன்னுக்கு வந்து – வெளியூர்களிலும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் அடிப்படையாக வேயன்னா எடுத்த சில முடிவுகளும் அப்படி ஒரு மனிதர் அப்போது வாழ்ந்ததுமே என்பதை இப்போது நாங்கள் மறந்து விட்டாலும் எப்போதும் மறுக்க முடியாது எங்களால். அவருடைய சில முடிவுகள்தான் எங்களையெல்லாம் சில தலைமுறைகள் பின்னுக்கு எடுத்துச் சென்றன என்பதைப் பற்றியும் பின்னர் பேசுவோம்.

வேயன்னா மீது அவருடைய அத்தையும் மாமாவும் வைத்திருந்த அதீத அன்பு காரணமாக அவரைத் தம்முடனேயே வைத்திருந்து மதுரையில் படிக்க வைத்தார்கள். மதுரையில் ஐக்கிய கிறித்தவப் பள்ளியில் படித்திருக்கிறார். அப்போதுதான் விடுதலைப் போரில் ஈடுபட்ட பல மாணவ நண்பர்களின் பழக்கம் கிடைத்திருக்கிறது. முத்துராமலிங்கத்தேவரும் அவர்களில் ஒருவர். மாப்பிள்ளை-மச்சான் என்று பேசிக் கொள்வார்களாம். அதற்குப் பின்பு அந்த உறவு பெரிதளவில் தொடரவில்லை என்றே நினைக்கிறேன். இருவரும் வெவ்வேறு இயக்கங்களில் – வேறுபட்ட கொள்கைத் தளங்களில் இயங்கினார்கள். பிற்காலத்தில் அவ்வப்போது சில சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் (எதிர்பாராத மற்றும் ஏற்படுத்திக் கொண்ட) கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஊரில் அவருடைய சேக்காளிகள் வண்டி-மாடு பூட்டக் கற்றுக் கொண்டிருந்த வயதில் அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கூட்டம் கூட்டத் தொடங்கி இருந்தார். நேதாஜி மதுரை வந்து முன்னின்று நடத்திய ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்புதான் அதில் தீவிர ஈடுபாடு கொண்டு களம் இறங்கினார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தன் பதினெட்டாம் வயதிலேயே முதன்முறையாக சிறை சென்று விட்டார். அப்போது எடுத்த புகைப் படம் ஒன்று எங்கள் வீட்டில் இப்போதும் இருக்கிறது. பள்ளிக் காலத்தில் ஜேம்ஸ் என்றொரு பெயரும் கொண்டிருந்திருக்கிறார். கிறித்தவப் பள்ளியில் படிக்கிற போது கொடுக்கப் பட்ட பெயர் என்று பாட்டி சொன்னதாக நினைவு. இன்றைய கால் சென்டர்கள் போல இரு பெயர்ப் பழக்கம் அப்போதே வெள்ளைக்காரர்களால் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. எங்கள் வீட்டிலிருக்கிற அவருடைய திருமணப் பத்திரிகையில் கூட J R வேலுச்சாமி என்று போட்டிருக்கும். J என்றால் ஜேம்ஸ். அது அவருடைய தாத்தா பெயரில்லை. கிறித்தவப் பள்ளியில் கொடுக்கப்பட்ட பெயர்.

வெள்ளையருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்களிப்புகள் செய்து கொண்டிருந்த வேளையில் கல்வீட்டுக் காரரின் மூத்த மகள் பொன்னம்மாளைக் கட்டி வைத்து விட்டார்கள் அவருக்கு. இதுதான் அத்தை-மாமாவின் பாசத்திற்கான காரணமா என்று கேட்டுவிடாதீர்கள். நாங்கள் கேட்டவரை அப்படியெல்லாம் லாபக் கணக்குகள் அவர்கள் போடவில்லை என்றுதான் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் தவறில்லை. போகட்டும். திருமணத்துக்குப் பின்பும் அவர் வீடு தங்கிய பாடில்லை. நாடாறு மாதம் காடாறு மாதம் என்பது போல், பெரும்பாலான வாழ்க்கை சிறையிலேயே கழிந்திருக்கிறது. மிச்சப் பெரும்பான்மையான வாழ்க்கை தலைமறைவாகக் காடுகளில் வாழ்ந்ததில் கழிந்திருக்கிறது. இதில் இப்போதும் நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு மருமகனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்கும் போது, தன் மகளை வீதியில் விட்டு விடுவானே என்று பெரியோரும் கலங்க வில்லை. மகளும் கவலைப் படவில்லையாம். திருமணம் ஆன பின்பும் இப்படித் திரிந்தவரை யாரும் கரை போட்டுத் தடுக்க முயற்சிக்க வில்லை. மாறாக, அவருடைய விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் அவருடைய மைத்துனர்களும் பங்கெடுத்து அவரவர் சக்திக்கியன்ற அளவு பணிகள் செய்திருக்கிறார்கள். வீட்டு மாடியில் மூவர்ணக் கொடி கட்டுவது, அவர் ஓடி ஒளியும் காலங்களில் உணவு – தங்குமிட வசதிகள் செய்து கொடுப்பது, போராட்டங்களுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது, தப்பிச் செல்ல வாகன வசதிகள் செய்து கொடுப்பது போன்ற பணிகள். எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரியை உடன் வைத்துப் பார்ப்பதும் அவருடைய பிள்ளைகளையும் உடன் வைத்தே வளர்ப்பதும் அவர்களுடைய முக்கிய பணியாக இருந்திருக்கிறது. அன்றைய காலம் இன்று போல் இருந்திருந்தால் – அன்றைய மனிதர்கள் இன்றுள்ளோர் போல் இருந்திருந்தால் – இதெல்லாம் முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. அது பெண்கள் பெரிதாக ஏதும் பேசமுடியாத காலம் என்றபோதிலும், அவருடைய மைத்துனர்களின் மனைவிமாருக்கு நாங்கள் பல தலைமுறைகளுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இருக்கிற பல வீடுகளில் இப்போதெல்லாம் அது போல ஒரு வாரம் கூடச் சகோதரியையும் அவருடைய பிள்ளைகளையும் வைத்துச் சோறு போட முடியுமா என்று தெரியவில்லை.

இதில் ஒரு பெருங்கொடுமை எதுவென்றால் என் தந்தையாருக்கு அவருடைய தந்தையை முதல் முறையாக விபரம் தெரிந்து பார்த்தபோது ஏழு வயதாம். அதுவரையிலும் தாய் வீட்டிலும் ஊரில் சித்தப்பா பிள்ளைகளோடுமே வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார். தன் தந்தை என்பவர் தலைமறைவு வாழ்க்கையையே முழு நேரத் தொழிலாகக் கொண்டு விட்டதால் அவர் பற்றிய சிந்தனையோ – தந்தையின் கை கோத்து நடை பழகிய அனுபவங்களோ இல்லாமலே வளர்ந்திருக்கிறார். தாத்தாவும் அதுவரையும் அதற்குப் பின்பும் தன் வாழ்க்கையைத் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் (இப்போது போல் தன் மக்களுக்காக அல்ல) மட்டுமே அர்ப்பணித்திருக்கிறார். எந்தவிதமான உலகியல் சார்ந்த விஷயங்களும் அவரை ஈர்க்க வில்லை. பாசம் தடுக்க வில்லை. உறவுகள் தொல்லையாக இருக்க வில்லை. தன் வீட்டாரும் தன் மனைவி வீட்டாரும் தான் செய்வதையெல்லாம் பின் நின்று ஆதரிக்கும் போது வேறென்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு?! தம்பி கானா அண்ணன் தலைமறைவாகி இருந்த காலம் முழுக்க குடும்பப் பணிகளைக் குறையிலாது செய்து நிறைவேற்றி இருக்கிறார். அது போதாதா?

கல்வீட்டில் மொத்தம் ஏழு பெண் பிள்ளைகள். அத்தனை பேரும் செக்கச் செவேரென்று ஐயமார் பிள்ளைகள் போல் இருப்பார்களாம். நாங்களெல்லாம் இப்போது நிறம் குறைந்து விட்டதால் அவர்களை உழைக்காத சோம்பேறிகளின் நிறம் கொண்டோர் என்று சொல்வோம். இரண்டாவது மகள் கந்தம்மாள். ஏதோ நோய்வாய்ப் பட்டிருந்ததால் வெளியில் கொடுக்கப் பயந்து போய் அவரையும் வேயன்னாவுக்கே கட்டி வைத்து விட்டார்கள். ஆக, வேயன்னாவுக்கு இரண்டு மனைவியர். முதலில் கொடுத்த ஒரு மனைவியோடு வாழவே நேரமில்லாமல் இருந்தவருக்கு இன்னொரு பிள்ளையையும் கொடுத்தால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. அதுவும் என்றாவது ஒருநாள் தன் மகராசன் வில்லு வண்டியில் வீடு வந்து சேர்வார் என்று தினம் தினம் வீட்டு வாசப்படியில் ஏமாந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். வேயன்னாவும் அப்படித்தான் என்றாவது ஒருநாள் சுதந்திரம் வந்து விடும் என்று சிறையிலும் புதர்களிலும் மாறி மாறி நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்.

கந்தம்மாளை நாங்கள் சின்னப் பாட்டி என்போம். மற்றவர்கள் ஐயர் வீட்டம்மா என்பார்கள். காரணம் – அந்தப் பாட்டியைச் சின்ன வயதில் ஓர் ஐயர் வீட்டில் வைத்துக் கொஞ்ச காலம் வளர்த்தார்களாம். சின்னப் பாட்டி மட்டுமில்லை; ஏழு பேரில் பல பாட்டிகள் கடைசிவரை சுத்த சைவம். அதற்குக் காரணம் பழையனூரில் இருந்த அந்த ஐயர் வீடு. அவர்கள் அறிமுகப் படுத்திய பழக்கவழக்கங்கள் பல. எங்கள் வீட்டில் இருக்கிற பாத்திரங்கள் அனைத்துமே சைவம் மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். அசைவச் சமையலுக்குத் தனியாக ஒரு மூலையில் மட்பாண்டங்கள் இருந்தன. எப்போதாவது அசைவம் எடுக்கும் போது, எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் அவற்றை இருந்த இடத்திலேயே வைத்து விட வேண்டும். அந்த நாட்களில் சைவ உறுப்பினர்களுக்குத் தனிச் சமையல் நடைபெறும். எம் போன்ற குழந்தைகள் இரு பக்கங்களிலும் உலப்பினால் வசவு ('திட்டு' என்பதற்கான தென் தமிழ் வார்த்தை) கிடைக்கும். வாசலில் எப்போதுமே ஒரு வாளி நிறையத் தண்ணீர் இருக்கும். வீட்டைவிட்டு வெளியேறி விட்டால் அடுத்த நிமிடம் உள் வருவதாக இருந்தாலும் காலைக் கழுவி விட்டுத்தான் வரவேண்டும். இவையெல்லாம் பின்னர் மெல்ல மெல்ல மறைந்து விட்டன. புதுப் புது மருமகள்கள் வரும்போது அதெல்லாம் மாறித்தானே ஆக வேண்டும்?!

வேயன்னாவுக்கும் கந்தம்மாளுக்கும் நடந்த திருமணம் ஒரு பெரிய வேடிக்கைத் திருமணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர்தான் கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஆளே இல்லையே. அப்புறம் எப்படித் திருமணம் வேறு செய்ய முடியும்? கவக்கம்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காவல்காரர்கள் மற்றும் வயதானவர்கள் கையில் வைத்திருப்பார்கள். திரைப்படங்களில் பார்த்திருந்தால் உண்டு. காவல் கம்புதான் கவக்கம்பு ஆகியிருக்கும் என்றெண்ணுகிறேன். அல்லது கவட்டைக் கம்பு என்பது கவக்கம்பு ஆகியிருக்கலாம். ஏனென்றால், அதன் கீழ் முனை கவட்டை கொண்டிருக்கும். கவட்டை என்றால் என்ன? V போலப் பிரியும் அமைப்பு கொண்ட மரக்கிளையின் பகுதி. மாப்பிள்ளை இடத்தில் அதை (கவக்கம்பை) உட்கார வைத்து இவர்களாகவே தாலியைக் கட்டிவிட்டு ஒருநாள் உண்மையான மாப்பிள்ளை திரும்பி வரும்போது “இது உன் பொண்டாட்டி” என்று உடன் அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? கேட்கிற நமக்கே அப்படி இருந்தால், சம்பந்தப் பட்டவருக்கு எப்படி இருந்திருக்கும்? சொத்தும் விட்டுப் போகக் கூடாது சொந்தமும் விட்டுப் போகக் கூடாது என்று சொல்லி அந்த வேலையைச் செய்தார்களாம். இப்படியாகச் சின்ன வயதிலேயே மனிதர் அளவுக்கதிகமான குடும்பப் பொறுப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எதுவும் அவரைக் கட்டிப் போடவே இல்லை. தொடர்ந்து காலம் தனக்கிட்ட பணியென அவர் எதை நினைத்தாரோ அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.


படிக்க வைத்தார்கள் – இரண்டு மகள்களைத் தலையில் கட்டி வைத்தார்கள் என்பது தவிர்த்து இடையில் வேறு சில அத்தியாயங்களும் உண்டு கதையில். படித்து முடித்ததும் சிவகங்கைச் சீமையிலேயே வருவாய் அதிகாரி வேலையும் வாங்கி விட்டார்கள் மருமகனுக்கு. அவரது வாழ்க்கை முழுக்கத் தியாகம் செறிந்ததாகவே இருந்தது என்றபோதிலும் நம்முடைய பார்வையில் இந்தத் தியாகம்தான் அதில் முதன்மையானது. ஏனென்றால் அதுதான் பொருள் சார்ந்து வாழப் பழகி விட்ட நமக்கு எளிதில் புரிய வைக்கிறது அவருடைய தியாகத்தின் அளவை. வருவாய் அதிகாரியாக இருக்கிறபோது ஊர் ஊராகச் சென்று வரி வசூல் செய்ய வேண்டியதுதான் அவரது முக்கியமான கடமை. அப்படிச் செல்கிற போது கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் வரி செலுத்த முடியாத போது அவர்களுடைய நில புலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆங்கில அரசு இவர்களுக்கு இட்டிருக்கும் கட்டளை. “அந்தப் பாவத்தை என்னால் செய்ய முடியாது” என்று சொல்லி, அதைச் செய்யச் சொல்லும் ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் விடுதலைப் போர் வேள்வியில் குதிக்கிறார். விடுமா அரசாங்கம்? மீண்டும் தலைமறைவு. மீண்டும் தேடல். மீண்டும் கைது. மீண்டும் சிறை. மீண்டும் மீண்டும் ஏதாவதொரு மீண்டும்.

ஒன்றை நாம் இங்கே சரியாகப் புரிய வேண்டும். தனக்குப் பிடிக்காத வேலையைத் தூக்கி எறிவது இன்றும் சிலரால் (மிகச் சிலரால்) செய்ய முடிந்த வேலைதான். ஆனால் நம்மில் பல சராசரிகள் வேலை பிடிக்காவிட்டாலும் கூட கிடைக்கிற பணம் – மரியாதையை மனதில் வைத்துக்கொண்டு அத்தகைய வேலைகளையும் விட்டு விடாமல் கடைசிவரை போராடுகிறோம். பிடிக்காததைத் தூக்கி எறிவதைக் கூடத் தோல்வி மனப்பான்மை எனலாம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதிலேயே தொங்கிக் கொண்டிருப்பதுதான் வெற்றியாளர்களின் குணாதிசயம் என்று கூட இப்போது வந்துள்ள சில புத்தகங்கள் நமக்கு சொல்லித் தந்திருக்கலாம். ஆனால் வருவாய் அதிகாரி வேலை என்பது அற்றை நாளில் அவ்வளவு சாதாரணப் பட்டதல்ல. அன்று அவர் தூக்கி எறிந்த வேலையின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை அவருடைய குடும்பம் என்ற முறையில் நாங்கள் இன்று வரை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால், என் தந்தையார் ஒரு வருவாய் அதிகாரி மகன் போல வளர்க்கப் பட வில்லை. தந்தை இல்லாத அனாதை போலத் தான் வளர்க்கப்பட்டிருக்கிறார். வருவாய் அதிகாரி மகன் போல வளர்க்கப் பட்டிருந்தால் அவர் தாசில்தாராகவோ அதற்கு மேலாகவோ அல்லவா போயிருக்க வேண்டும்? அது நடக்க வில்லை. அப்படியானால் நாங்கள் என்ன ஆகியிருக்க வேண்டும்? அதுவும் நடக்க வில்லை.

பல தலைமுறைகள் கண்ட வளர்ச்சியை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு போய் விட்டார் வேயன்னா. நாட்டுக்கு உழைத்த வேளையில் அவர் செய்ய மறந்தது வீட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை. இன்றைக்கு வெள்ளைக்காரனுக்கு எடுபிடி வேலை பார்த்தோரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எம்மை விடப் பெரிய பருப்புகள் போலக் காட்டிக் கொள்ளும்போது அவர் மீது பெருமையோடு சேர்த்து கொஞ்சம் வருத்தமும் படாமல் இருக்க முடியவில்லை. இருந்த வேலையைத்தான் பிடிக்காமல் விட்டு விட்டார் என வைத்துக் கொள்வோம். விடுதலைப் போராட்டத்தில் ஏன் குதித்தார்? பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவா? அன்று பொது வாழ்க்கை என்பதோ – அரசியலோ இன்று போல் பணம் காய்க்கும் மரமாக இருக்க வில்லை. பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், சுற்றத்தார் எல்லோருக்கும் நாட்டில் இருக்கிற நல்ல தொழில்கள் எல்லாத்தையும் ஒதுக்கீடு செய்து கொடுக்கும் அதிகாரம் எல்லாம் இருக்கவில்லை அப்போது. பின் ஏன் அப்படிப் போனார்? அப்படிப் போனால் தம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சுற்றமும் தற்காலத்தில் மட்டுமல்ல பிற்காலத்திலும் பின் தங்கிப் போவார்கள் என்று ஒரு நாளாவது – ஒரு கணமாவது சிறைக் கம்பிகளை எண்ணிய பொழுதுகளில் எண்ணியிருப்பாரா? வாய்ப்பே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எண்ணியிருந்தால் அப்படிப் பண்ணியிருக்க மாட்டாரே! அதெற்கெல்லாம் மேலாக அவர் ஏதோ சிந்தித்து இருக்கிறார்.

அரசியல்வாதிகள் இப்போது போலக் கம்பியை மட்டும் எண்ணிக் கொண்டு பகவத் கீதை படிக்கிற காலமல்ல அது. அடி பின்னி எடுப்பார்களாம். வீட்டில் இருக்கிற எல்லோரும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட தழும்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. எழுபத்தி மூன்று வயதில் இறந்தவர் அந்த அடிகள் எல்லாம் வாங்கியிரா விட்டால் கண்டிப்பாக எண்பத்தி ஆறு வயது வரை இருந்திருப்பார் (அடுத்தவரை அடி வாங்க வைக்கிற பிறவிகள்தான் இந்த வயது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன); வாழ்வின் பிற்பகுதியிலாவது எங்களுக்காகக் கொஞ்சம் நேரம் செலவிட்டு, எங்களையெல்லாம் சரியான படிப்புகள் படிக்க வைத்து, இருக்கிற சொத்தை முறையாகப் பயன்படுத்தி, சின்ன வயசிலேயே பெரும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் ஆக்கியிருப்பார் என்றொரு பேராசைக் கனவு! ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் அவர் வாங்கிய அந்த அடிகளும்தான் என் நினைவுக்கு வந்து செல்கின்றன. அப்படி எத்தனை பேர் சிந்திய ரத்தம் இன்று ஆட்டு ரத்தம் கோழி ரத்தம் போல் வீணாகிக் கொண்டிருக்கிறது. சில தப்பாய்ப் பிறந்தவர்களின் கையில் நாடு போயிருப்பதால் வந்த வினை இது. அதெல்லாம் பரவாயில்லை. தியாகம் என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கூட மாற்றி விட்டார்கள் பாவிகள்.

காமராஜர் போன்ற நல்லோரின் கையில் நாடு இருந்திருந்தால் தியாகத்தின் அர்த்தம் மாறியிருக்காது கடந்த நாற்பது ஆண்டுகளில். அப்படித் தன்னையே அழித்துக் கொண்டோருடைய – தன் சுற்றம் மறந்து எல்லாம் இழந்த ஆயிரமாயிரம் தியாகிகளுடைய – வரலாறுகள் வெளி வராமல் போனதால்தான் நாட்டை அழிக்கும் நரிகள் எல்லாம் தம்மைத் தியாகிகள் என்று சொல்லி மேடைகளில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதையும் பார்த்து “ஐயோ பாவம்” போடுகிறார்கள் அவர்களால் சில எலும்புத் துண்டுகள் பெற்ற இடைத் தரகர்களும் – சிற்சிறு ரொட்டித் துண்டுகள் பெற்ற பயனாளிகளும் – காசு வாங்கி ஓட்டுப் போடும் நம் “ஐயோ பாவம்” மக்களும். யார் ஐயோ பாவம்? முதலைக் கண்ணீர் வடிக்கும் நரிகளா? ஆட்டைப் பார்த்து வருந்துவதுபோல் நடிக்கும் ஓநாய்களா? முதலைக் கண்ணீருக்கும் ஓநாய் அழுகைக்கும் ஏமாந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டுக் கூட்டமா?

ஒரு நாள், அதிகாலை விடியும் முன், போலீஸ் வந்து சூழ்ந்து கொண்டது வீட்டை. பகலில் கைது செய்தால் ஊர் மக்கள் விட மாட்டார்கள் என்று (ஆக இந்தப் பழக்கம் வெள்ளைக்காரன் பழக்கி விட்டுப் போனது நமக்கு). வெள்ளை அதிகாரி தன் அல்லக்கையை வீட்டுக்குள் அனுப்பி அழைத்து வரச் சொல்கிறான் வேயன்னாவை. வேயன்னா உள்ளே இருந்து கொண்டு, “குளித்து விட்டு வருகிறேன்”, “சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று அடுத்தடுத்து வெவ்வேறு காரணங்களைச் சொல்லி தாமதம் செய்கிறார். அவருடைய திட்டம் – விடிந்த பின் கிளம்பலாம் என்பது. “ஊருக்குத் தெரியாமல் ஏன் திருட்டுப் பய போல் கைதாக வேண்டும்?” என்றெண்ணி அப்படிச் செய்கிறார்.

வெள்ளையன் கடுப்பாகிறான். குல்லா வைத்த அல்லக்கையை அனுப்பி மிரட்டல் விடுகிறான் – “வீட்டைச் சுற்றி அடிக்கு ஒரு போலீஸ் நிற்கிறது. தப்பிக்க மட்டும் நினைக்காதீர்கள். அது ஆகாத காரியம். சுட்டுப் போட்டு விடுவார்கள்!” என்று. வேயன்னா சொல்கிறார் - “வீட்டுக்கு வெளியே செல்லையா என்றொரு நாய் கட்டிக் கிடக்கிறது. அதற்குச் சமம் உங்கள் ஐயா என்று சொன்னேன் என்று போய்ச் சொல்லும் அவனிடம்”. வெள்ளையன் வெலவெலத்துப் போகிறான். கடைசியில், அவருடைய ஆசைப்படியே பொறுத்திருந்து விடிந்ததும் ஊர் சாட்சியாகக் கைது செய்து அழைத்துப் போகிறான். இப்போதுதான் விழுகிறது அவனுக்கு அதிர்ச்சி ஆப்பு. கோலம் போட வந்த வேயன்னாவின் தாயார் “ஜெயம் பெற்று வா மகனே” என்று சொல்லிக் கை அசைத்து வழி அனுப்பி வைக்கிறார். வார்த்தைகளை அப்படியே குறித்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்தத் தாய் சொன்னது. யார் சொல்லுவார் அப்படி? அதுவும் தந்தி வந்தாலே ஒப்பாரி வைக்கிற காலத்துக்கும் முந்தைய காலத்தில்...

ஆடிப் போன துரை தன் அறிக்கையில் எழுதுகிறான் – “இதுவரை நான் போன இடங்களில் எல்லாம் அழுதுதான் வழியனுப்பினார்கள் எல்லாத் தாய்மார்களும் மனைவிமார்களும். இங்கொரு தாய் வாழ்த்தி அனுப்புகிறாள். இவன் மட்டுமல்ல – இவன் குடும்பமே போராளிக் குடும்பம்” என்று. அதிலிருந்துதான் அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு அளிக்கப் படுகிறது. இன்னொரு காரணம் – அவர் மதுரையில் கற்ற ஆங்கிலம். அப்போது ஆங்கிலம் பேசுவோருக்கு அரசு அலுவலகங்களில் நல்ல மரியாதையாம். திருநெல்வேலியில் ஒருமுறை கலெக்டர் ஆபீஸ் போனபோது பலரை நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்த கலெக்டர் இவர் போய்க் கொஞ்சம் பேசியதும் நாற்காலி போடச் சொன்னாராம். காரணம் – இவர் பேசிய ஆங்கிலம். இதெல்லாம் ஆங்கிலம் தெரியாத – உடன் சென்று வந்த ஊர்க்காரர்கள் பார்த்துச் சொன்ன கதைகள். ஆனாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இதெல்லாம். இப்படித்தானே அவனுடைய மொழிக்கு முதலாளி நாற்காலியை ஏற்பாடு செய்து விட்டுப் போயிருக்கிறான் அப்போதே.

சிறையில் இருந்த காலங்களில் நிறைய மேலோருடைய பழக்கங்கள் கிடைத்திருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இருவரோடு ஒரே அறையில் தங்கி இருந்திருக்கிறார் - நேரடிப் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஒருவர் வி. வி. கிரி. அவருடனான உறவு எத்தகையது என்று தெளிவான தகவல்கள் இல்லை. இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் – ஆர். வெங்கட்ராமன். வெங்கட்ராமன் அவர்கள் வேயன்னாவின் அரசியல் வாழ்வில் சில மிக முக்கியமான மாற்றங்களைச் செய்தவர். சிறையில் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது பொதுவுடைமைக் கருத்துகள் நிரம்பிய பல புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து இவரை காங்கிரஸ் இயக்கத்திலிருந்து பொதுவுடைமைப் பாதைக்கு இட்டுச் சென்றதே அவர்தானாம். என்ன கொடுமை என்றால் அவர் இறுதிவரை காங்கிரஸ்காரராகவே இருந்து நாட்டின் பிரெசிடென்ட் (குடியரசுத் தலைவர்) ஆகி விட்டார். இவர் பொதுவுடைமைவாதியாகி ஊருக்கு மட்டும் பிரெசிடென்ட் (ஊராட்சித் தலைவர்) ஆக இருந்து விட்டார்.

எங்கள் வீட்டில் பழைய பெட்டியொன்றில் கரையான் அரித்துப் போய்க் கிடக்கும் தாத்தாவின் பழைய புத்தகங்களில் பல ஆர். வி. அவர்கள் பரிசளித்தது. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது நான் பள்ளி செல்லும் சிறுவன். அப்போது எங்கள் வீட்டு நூல்களில் இருந்த அவருடைய கையெழுத்தைக் காட்டி அளவிலாத பெருமை தேடிக் கொள்வேன். இவரும் ஆர். வி. அவரும் ஆர். வி. ஒருவேளை அகர வரிசைப்படி அறைகள் கொடுத்ததால் இருவரும் ஒரே அறையில் தங்கும் வாய்ப்புக் கிடைத்ததோ என்றும் தோன்றும். அவருடன் உடன் இருந்த ஒரே காரணத்துக்காக இவரும் மத்திய அமைச்சராகவோ முதல் அமைச்சராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதில்லை நம் வாதம். அவரைப் போல் காங்கிரசில் தொடர்ந்திருந்தால் சில வெளி வெற்றிகள் கிடைத்திருக்கக் கூடுமோ என்றொரு கற்பனைக் கணக்கிடல் மட்டுமே இது.

விடுதலைப் போராட்ட காலத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் – காடல்குடி காவல் நிலைய எரிப்பு. அப்போது எங்கள் ஊர் இருந்தது காடல்குடி காவல் நிலையத்தின் கீழ். காடல்குடி காவல் நிலையத்தில் அவரைக் கைது செய்து வைத்திருந்த போது அங்கிருந்து அவரை மீட்பதற்காக ஊரோடு திரண்டு போகிறார்கள் பூதலப்புரத்து ஆட்கள். மறுநாள் காலை காவல் நிலையம் தீக்கிரையான கதை மட்டும் வருகிறது. வேயன்னா என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மொத்த வட்டாரத்துக்கும் இந்தப் புதிர் புதிராகவே போய் விடுகிறது - அடுத்த முறை அவர் பிடி படும் வரை. அவரைக் காப்பாற்றி அனுப்பி வைத்து விட்டுத் தீயிடுகிறார்கள் எம்மக்கள். அப்படியோர் ஊர் மக்கள் கிடைக்கப் பெறுவது சாதாரண காரியமா? இல்லை, அப்படிப் பட்ட மக்களுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதுதான் சாதாரண காரியமா? இன்றைக்குக் கூட்டுக் களவாணிகள் கூட்டம் சேர்ப்பது மிக எளிது. ஏனென்றால், கொள்ளையில் பங்கு கிடைக்கும். அப்போது எப்படி வந்தார்கள் அவ்வளவு பேர்? எதற்காக வந்தார்கள்? விடுதலைப் போராட்ட இயக்கத்தின் மீதான ஈடுபாடா? அல்லது, தன் உடன் வாழும் சக மனிதனுக்காக எதையும் செய்யத் துணியும் மனிதத் தன்மையா? அன்றைக்கு அந்தக் காரியத்தைச் செய்தவர்களின் வாரிசுகள் எல்லா எல்லைகளையும் தாண்டி இன்றைக்கும் எங்கள் உறவினராக இருக்கிறார்கள். இன்றைக்கும் அது போல எமக்காக அவர்களும் அவர்களுக்காக நாங்களும் எதுவும் செய்வோம்.

1947-இல் சுதந்திரம் கிடைத்தது. அத்தோடு முடிந்ததா கதை? முடியவில்லை. காங்கிரசிலேயே இருந்திருந்தால் முடிந்திருக்கும். இருந்தது பொதுவுடைமை இயக்கம் அல்லவா? நேருவின் காலத்தில் அவர்களையும் கொஞ்ச காலம் தடை செய்ய வேண்டியதாகி – அவர்களும் தம் கோரிக்கையை வலியுறுத்த வேண்டிப் பல போராட்டங்களில் இறங்க வேண்டியதாகி – மொத்தத்தில் தாத்தாவின் தலை மறைவு வாழ்க்கைக்கு மட்டும் முடிவு வரவேயில்லை. வெளி நாட்டு வெள்ளையனுக்குப் பயந்து ஒளிந்த காலங்களை விட நம்ம ஊர் வெள்ளையர்களுக்குப் பயந்து ஒளிந்த காலங்கள்தாம் மித மிஞ்சிய கொடூரங்கள் நிறைந்ததாக இருந்திருக்கின்றன. அப்போதுதான் ஜீவானந்தம், பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், பி. இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, சங்கரய்யா, நல்லகண்ணு, ப. மாணிக்கம், தா. பாண்டியன் போன்ற இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளான பலருடனான உறவு வலுத்திருக்கிறது.

கொஞ்ச கொஞ்ச காலம் ஒவ்வொருவர் ஊரிலும் போய் ஒளிந்திருப்பது அவர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. எங்கள் வீட்டிலும் – ஊரிலும் – ஊரைச் சுற்றிலும் அந்தக் காலங்களை நினைவு படுத்தும் பல இடங்கள் இருக்கின்றன. இங்குதான் இது நடந்தது – அங்கு அது நடந்தது என்று அப்போதைய ஆட்கள் நிறையக் கதைகள் சொல்வார்கள் என் சின்ன வயதில். அப்படிக் காடுகளுக்குள் ஒளிந்திருந்தவர்களுக்கு தினமும் நெஞ்சு வரை தண்ணீர் போகும் ஓடையைக் கடந்து போய் உணவு கொடுத்து விட்டு வந்த புல்லரிக்கும் கதைகளையெல்லாம் ‘அப்போதைய’ சிறுவர்களும் இளைஞர்களும் நிறையச் சொல்லி இருக்கிறார்கள் எங்களுக்கு.

அப்படி அவர்கள் போய் ஒளிந்த இடங்களில் முக்கியமானவை களக்காடு மற்றும் சிவகிரி காடுகள் (அதனால்தானோ என்னவோ சிவகிரி கட்சி அலுவலகத்தில் இன்னமும் அவர் படம் ஒன்று மாட்டியிருக்கிரார்கள்; அது நெல்லை மாவட்டத்தின் செயலாளராக நீண்ட காலம் இருந்த தோழர் சிவகிரி செல்லையா அவர்களின் வேலையாகவும் இருக்கலாம்; அங்குள்ள பெரியவர்களுக்கு இன்னமும் அவர் பற்றிய நினைவுகள் இருக்கின்றன). அதில் உடன் இருந்தவர்களில் தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒருவர். அவரே தாத்தா பற்றிப் பல கதைகள் சொல்லி இருக்கிறார். ஒரு நாள் இரவில் களக்காடு அருகே மலைக் காட்டுக்குள் குகை மாதிரியான ஒரு பகுதியில் எல்லோரும் தங்கி இருக்கிறார்கள். மறுநாள் காலை விடிந்து பார்த்த போது அவர்கள் படுத்திருந்த இடத்தைச் சுற்றிப் பாம்புச் சட்டைகளாம். ஒன்றல்ல இரண்டல்ல. பல. நல்ல வேளை பாம்புகள் இல்லை. ஒருவேளை தூங்கி எழுந்து இவர்கள் எழும் முன் இறை தேடப் போயிருக்கலாம். இதெல்லாம் யாருக்காக? கண்டிப்பாக எங்களுக்காக இல்லை. பின் எதற்காக? அது தடை செய்யப் பட்ட ஒரு மக்கள் இயக்கத்தில் இருந்ததற்காகவும் – அவ்வியக்கத்தின் குறிக்கோள்களை அடைய உழைத்ததற்காகவும் - ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை நிகழ்த்தியதற்காகவும்!

இயக்கம்? பொதுவுடைமை இயக்கம். அதாவது கம்யூனிஸ்ட் கட்சி. குறிக்கோள்? உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது போன்ற பல குறிக்கோள்கள். சம்பவம்? நெல்லை சதி வழக்கு. நீங்கள் தென் கோடித் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் – உங்கள் தந்தையோ மாமாவோ பெரியப்பாவோ ஆதி காலம் தொட்டு அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்தால், விசாரித்துப் பாருங்கள். இது பற்றி அவர்கள் அறியக் கூடும். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் திருநெல்வேலி வரும் ஒரு ரயில் வண்டியைக் கவிழ்த்ததுதான் அவர்கள் செய்த குற்றம் (‘எத்தனை உயிர்களைக் கொன்றார்களோ பாவிகள்?’ என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், பயப்படாதீர்கள் – அது சரக்கு ரயில்). விட்டு விடுமா அரசாங்கம்? விரட்டி விரட்டிப் பிடித்து – உள்ளே வைத்து உதைத்து – உடம்பெல்லாம் புண்ணாக்கி – ரத்தம் கக்க வைத்து - அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான பெரும் பகுதியை அழித்து – அதன் பின்தான் வீடு திரும்ப விட்டார்கள். அப்படி அளவிலாத வாழ்க்கையையும் இளமையையும் இழந்தவர்கள்தாம் வேயன்னாவும் அவர் போன்ற பலரும். அதில் தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒருவர். அத்தகைய தியாகங்களை – அதன் வலிகளை உடன் இருந்து பார்த்ததால் – பகிர்ந்து கொண்டதால்தான் அவர் எப்படியும் இந்தக் கதைகளை வெளிக் கொணர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பொதுவுடைமை இயக்கத்தின் விவசாய சங்க மாநிலச் செயலாளராக இருந்திருக்கிறார். கட்சியில் பெரும் பதவிகள் எதுவும் வகிக்க வில்லை. அதிக பட்சம் மாநிலக் குழுவில் இருந்திருக்கிறார். மிகக் குறுகிய காலம் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். அந்தப் பகுதியில் கட்சியை வளர்ப்பதில் – இளைஞர்களைத் திரட்டி ஊக்குவிப்பதில் – முன்னோடியாக இருந்து இன்றும் பல முன்னோடி இடதுசாரிகளின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். 1952-இல் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் நிற்கும் வாய்ப்பு வந்தபோது அதையும் விரும்பாமல் தன் நெருங்கிய சீடரான சண்முகம் பிள்ளையை (உள்ளூர்க்காரர்தான்) நிற்கச் சொல்லிவிட்டு விலகிக் கொண்டார். 1962-இல் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் நிற்கும் வாய்ப்பு வந்த போதும் மறுத்து விட்டார். இரண்டிலுமே வெல்ல முடியாது என்பதற்காக வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்பார்கள். சும்மா நின்றிருந்தாலே போதும். நாங்களெல்லாம் சொல்லிக் கொள்ளவாவது பயன் பட்டிருக்கும்.


பல முறை பூதலப்புரம் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறையல்ல அப்போது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யும் முறை. அவர்களைத் தான் கடைசிவரை முழுமையாக நம்ப முடியாதே. ஒரு முறை அவருடைய சீடர்களில் ஒருவரான ஆபிரகாம் ரெட்டியார் என்பவரே அவருக்கு எதிராக நின்று – அதனால் இவர் தோல்வி பயத்தில் மன நிம்மதி இழந்து – ஆப்ரஹாம் ரெட்டியாரின் உறவினர்களே இவருக்குப் பெரும் பெரும் உதவிகள் செய்து – ஒரு வழியாக வெற்றி பெற்று – அத்தோடு அந்த வேலையையும் விட்டு விட்டாராம். எந்தத் தோல்விக்குப் பயந்து சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் தவிர்த்தாரோ அந்தத் தோல்வி உள்ளூரிலேயே – தன் உடன் இருந்த உற்ற நண்பனாலேயே கிடைக்கும் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்? அதன் பின்பு - அதாவது, வேயன்னாவின் வெற்றிக்குப் பின்பு - மீண்டும் வேயன்னாவுடன் கை கோத்து, கடைசிவரை ஆபிரகாம் அண்ணாச்சி அவருடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் இங்கே சொல்ல வேண்டிய ஒன்று. வெள்ளைக்காரனின் அடிகளுக்கெல்லாம் பயப்படாதவர் தேர்தல் தோல்விக்கேன் அவ்வளவு பயந்தார் என்று புரியவில்லை.

அது போக, சுற்றி இருக்கிற நாற்பது ஊர்களில் என்ன விவகாரம் என்றாலும் இவர்தான் பஞ்சாயத்து பண்ணித் தீர்த்து வைக்க வேண்டும். வடக்கு வாசல்தான் பஞ்சாயத்து நடந்த இடம். அதுதான் அவர் இறந்தபோது சாத்தி வைத்திருந்த இடமும். இப்போதும் அந்தக் காலத்து ஆட்கள் யாராவது “எந்த ஊர்? யார் மகன்?” என்ற கேள்விகள் கேட்கும் போது பதில்களைச் சொன்னவுடன் பிரகாசமாகப் பேசுவார்கள் – “உங்க தாத்தாதான் எனக்கு அந்த புஞ்சைப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்”, “அவர்தான் என் குடும்பப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்” என்று. சமீபத்தில் பெங்களூரில் எங்களூர்ப் பாட்டி ஒன்றைப் பார்த்தபோது – பரஸ்பர அறிமுகத்துக்குப் பின் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னது – “அன்னைக்கு அய்யா இல்லன்னா எங்க வீட்டு ஆம்பளைக எல்லாம் சேர்ந்து என்னைய ஏமாத்தி இருப்பாக... அப்பெல்லாம் கோர்ட் ஏது? சட்டம் ஏது? பொம்பளைக கஷ்டத்தைப் புரிஞ்சு நீதி சொல்றதுக்கு ஆள் ஏது? அப்பவே பொம்பளப் பிள்ளைக வச்சிருக்கிற பொம்பளைன்னு எனக்குச் சேர வேண்டியதை அதிகப் படியா வாங்கிக் குடுத்தாரு” என்று. புல்லரித்தது எனக்கு. இப்படி எத்தனை பேருடைய வாழ்த்துக்கள் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன என்று.

அவ்வளவு எளிதான கணக்கில்லை அது. பஞ்சாயத்து என்பது பயனாளிகள் மட்டுமே கொண்டதில்லை. சாதிப்பவர்கள் மட்டுமே கொண்டதில்லை. பாதிக்கப் பட்டவர்களும் நிறைய இருப்பர். கிட்டத்தட்ட அதே அளவு இருப்பர். அவர்களுடைய சாபங்கள் எங்களைச் சும்மா விட்டு விடுமா? பாட்டி அடிக்கடிச் சொன்னதாக எங்கள் அம்மாவும் அடிக்கடிச் சொல்வார் – பஞ்சாயத்துப் பேசிய குடும்பங்கள் எல்லாம் இப்போது கட்டை மண்ணாய்ப் போய்விட்டன என்று. எல்லாம் சாபங்களால் உண்டான சங்கடங்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கை. வடக்கு வாசலில் கயற்றுக் கட்டில் மட்டும் போட்டுப் பேசியதில்லை இவர்களுடைய பஞ்சாயத்து. வடக்கு வாசலுக்குப் பக்கத்தில் பல பேர் உட்கார்ந்து பேச வசதியாக ஒரு பெரிய நீளமான கருங்கல் கிடந்தது இதற்காகவே. அதிலும் பல பஞ்சாயத்துக்கள் நடந்திருக்கின்றன. திரைப்படங்களில் வருவது போல – எங்கள் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலும் போல – எங்கள் ஊர்க் கண்மாய்க் கரையிலும் ஆலமரமும் அதனடியில் கல்த்திண்டுகளும் இருக்கின்றன. அங்கேயும் நடந்திருக்கின்றன பல பஞ்சாயத்துகள். இவையெல்லாம் போக வில்லு வண்டியில் மாடு பூட்டிப் போய் சுத்துப் பட்டிகளில் நடத்திய நடமாடும் பஞ்சாயத்துகள் பல. விடுதலைப் போராட்டத்தை விடவும் – பொதுவுடைமை இயக்கத் தியாகங்களை விடவும் – எங்கள் பகுதியில் உள்ள எளிய மக்களால் அவர் அதிகம் அறியப் பட்டது அவருடைய பஞ்சாயத்துகளால்தான்.

அடுத்ததாக, சுற்று வட்டாரத்தில் இருக்கிற எந்த கிராமத்துக்கும் கிடைத்திராத பல வசதிகளை அவருடைய காலத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அந்தக் காலத்திலேயே சாலை வசதிகள் வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய அருகில் இல்லாத இரு பெரும் ஊர்களில் இருந்து பஸ் வர ஏற்பாடுகள் செய்தது பெரும் சாதனை. கண்மாய்த் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஊர்களுக்கு மத்தியில் கிணறுகளைக் கொண்டு வந்தது. அவ்வப்போது சந்திக்கிற சில கீகாட்டுப் பெரிசுகள் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று – “அவர் காலத்துக்குப் பின்னாடிதானய்யா உங்க ஊர்கள்ல கிணற்றுத் தண்ணி குடிக்க ஆரம்பிச்சிக” என்பதுவும். கருவேல மரங்கள் தவிர்த்து, பருத்தியும் மிளகாயும் மட்டுமே ஒழுங்காக விளையும் பூமியில் நன்செய்க் கண்மாய் வரக் கடுமையாக முயற்சி செய்து அது வரும் முன்பே போய் விட்டார். ஆனால் அவருடைய அந்தக் கனவு நிறைவேறிய போது அவரை நினைவு கூரத் தவறவில்லை எங்கள் ஊர். அவர் இருக்கும் வரை ஊரில் ஒரே ஒரு கொடிதான் பறந்தது. அது செங்கொடி. இப்போது அதற்கருகிலேயே ஏதேதோ கொடிகள் வந்து விட்டன. ஊர் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒற்றுமை சிறிதும் இல்லை. மக்களாட்சி இப்போதுதான் முதிர்ந்து கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ அது தெளிவாகப் புரியவில்லை.

அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் சேதுராஜ். பெரியப்பா. அவர் போலவே கல்வீட்டில் வளர்ந்து – மதுரை சென்று படித்து – பின்னர் பம்பாய் சென்று படித்து – கலப்புத் திருமணம் செய்து (எல்லை கடந்த எங்கள் உறவுகள் என்று சொல்லும் ஒரு குடும்பத்தில் இருந்துதான்) - இரண்டு எம். ஏ. பட்டங்கள் பெற்று – கல்வித் துறையில் கால் பதித்து – மிகச் சிறிய வயதிலேயே பணியில் நற்பெயர் பெற்று – 42 வயதில் மரணமடைந்து விட்டார். அவருடைய மரணம் வேயன்னாவுக்கு அவர் வாங்கிய அடிகள் எல்லாவற்றையும் விடப் பெரிய அடியாக இருந்தது. அதிலிருந்தே அதி வேகமாக உடல்நலம் குன்றி, அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவரும் இறந்து விடுகிறார். அடுத்தடுத்த இரண்டு மரணங்களில் குடும்பம் உடைந்து – உருக்குலைந்து விட்டது. அதைத் திரும்பக் கொண்டு வந்து தடத்தில் சேர்க்கக் கண்டிப்பாகச் சில தலைமுறைகள் ஆகும் எங்களுக்கு. காரணம் – அவருடைய இரண்டாவது மகனான என் தந்தையார், வேயன்னாவின் குடும்ப கவனமின்மையால் முழுமையான பாதிப்புக்கு உள்ளானவர். பெரியப்பா அளவுக்குக் கல்வியும் வெளி வாழ்க்கை வெற்றியும் கிட்டவில்லை அவருக்கு. “ஏன் தாய்மாமாமார் இவரையும் சேர்த்துப் பார்க்க வில்லை?” என்கிற கேள்வி இந்த இடத்தில் மிக இயற்கையானதே. ஆனால், எல்லாப் பிள்ளைகளுக்குமே தந்தையின் இடத்தைத் தாய்மாமாமார் நிரப்பி விட முடியாது. சிலருக்குத் தந்தைதான் அதைச் செய்ய முடியும்.

பெரியப்பாவும் பெரிய அறிவாளியாக இருந்திருக்கிறார். தந்தையும் மகனுமாக சுற்று வட்டாரத்தில் எங்குமே செல்லாத பல ஆங்கிலப் பத்திரிகைகளையும் இதழ்களையும் எங்கள் குக்கிராமத்துக்கு வரவழைத்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பலரையும் அதைப் படிக்க வைத்து – வாதிட வைத்திருக்கிறார்கள். அதற்கொரு வாழும் சாட்சிதான் இப்போது களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சித்தப்பா – திரு. அய்யாசாமி அவர்கள். பெரியப்பாவின் கலப்புத் திருமணம் அவருடைய பிள்ளைகளுக்குப் பின்னாளில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணியது. தாத்தாவோ பெரியப்பாவோ இருவருமோ இருந்திருந்தால் அது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்திராது. அவர்கள் இல்லாத இடத்தில் அவர்கள் பற்றி அறியாதவர்கள் எல்லாம் வந்து அது பற்றிக் கேள்விகள் எழுப்பியபோது அவர்களுடையை புரட்சி தோற்று விட்டதோ என்று எம்மக்கள் புலம்ப ஆரம்பித்ததைத் தவிர்க்க முடியவில்லை. மொத்தப் பொதுவுடைமை சமூகமும் வந்து – புல்லரித்துப் புளகாங்கிதமடைந்து வாழ்த்தி விட்டுப் போன திருமணம் ஏன் பொய்த்தது? நல்ல பதில் இருந்தால் யாராவது சொல்லுங்கள்.

இறுதியாக, வேயன்னாவின் மிகப் பெரிய பலம் – ஏற்கனவே சொன்னது போல் அவருக்கிருந்த சுற்றம். அதில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது - அவருடைய தம்பி பிள்ளைகள். தம்பியும் பழையனூர் கல்வீட்டிலேயே பெண் எடுத்து விட்டதால், குழந்தைகள் எல்லாம் ஒரு தாய் மக்களாக – ஒற்றுமையாக இருந்து சாதித்தார்கள். எப்போதுமே அவருடனேயே நாலைந்து பேர் அவருடைய தம்பி மக்கள் இருந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்படி இருந்த ஒருவர்தான் அய்யாசாமிச் சித்தப்பா. அடுத்து ஒரு முக்கியமான ஆள் – இன்று எங்களை விட்டு விலகி இருந்தாலும் விடுபடக் கூடாத பெயர் – கவிஞர். ஜீவபாரதி. இவரும் தாத்தாவின் கூடவே இருந்த மற்றொரு தம்பி மகன். இன்றும் அவருடைய நினைவோடு இயங்கிக் கொண்டிருப்பார் என நம்புகிறேன். வரப்போகும் நூலுக்கு வேண்டிய அளவிலாத தகவல்களைத் தன் வசம் வைத்துக் கொண்டிருப்பவர்.

புகழ் பெற்ற வழக்கறிஞர் என். டி. வானமாமலை மற்றும் பேராசிரியர் நா. வானமாமலை போன்றோர் இவருடைய மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் தொடர்ந்து கடிதத் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக இவர்களிடமிருந்து வந்த கடிதங்கள் நிறைய எங்கள் வீட்டுக் கரையான் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு அவர் ஆங்கிலத்தில் எழுதிய டைரிகளும் எங்களுக்கெல்லாம் என்னவென்றே புரியாத மாதிரியான நுட்பமான பொதுவுடைமைக் கருத்துகள் கொண்ட ஆங்கிலப் புத்தகங்களும் அதே பெட்டிக்குள் தூங்கி கொண்டிருக்கின்றன. அவர் வாழ்க்கை பற்றி அறிய வந்த பலர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்றது போக ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காவது ஒருமுறை ஊருக்குப் போய் வர வேண்டும்.

கண்டிப்பாக அவருடைய மரணம் பற்றி ஒரு பத்தியில் எழுத வேண்டும். எனக்கு வயது நான்கு தான் என்றாலும் செய்தி வந்த அந்தக் காலைப் பொழுது எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. விளாத்திகுளத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் அதிகாலையில் இறந்து விட்டார்; காரில் வைத்துக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி அதற்கு முன்பாகவே வந்த பஸ்ஸில் வந்தது. அதைக் கேட்ட பெண்மணி ஒருவர் பஸ் நிற்கும் கண்மாய்க் கரையிலிருந்து தலையிலும் மார்பிலும் அடித்துக் கதறிக் கதறி அழுது கொண்டு ஓடி வந்து என் பாட்டியைப் பிடித்து - விடாமல் கதறுகிறார். அதைப் பார்த்த என் தாய் விழுந்து கதறுகிறார். என்னவென்றே புரியாமல் அதைப் பார்த்து நானும் கதறுகிறேன். சிறிது நேரத்தில் நடந்தது என்னவென்று புரிய வைக்கிறார்கள். அதற்குள் சினிமா பார்ப்பது போலப் பல காட்சிகள். ஊர்ப் பெண்களெல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த ஒப்பாரி கொஞ்சம் மாறுபட்டது. அவர் வாழும் காலத்திலேயே அவரைப் பற்றியே எங்கள் ஊர்ப் பெண்கள் நிறையப் பாடல்கள் இயற்றிப் பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் அனைத்தும் ஒரு சேர அன்று வெளியாயின. அந்தப் பாடல்களைப் பெருமளவு இயற்றியவர்களில் முதன்மையானவர் – குமராயி எனும் பெண்மணி. அவர் இப்போது இல்லை. ஆனால் அவர் இயற்றிய பாடல்களை ஏற்கனவே நிறையப் பேர் குறிப்பெடுத்துச் சென்றார்கள். ஆனால், அவை எங்கு உள்ளன என்று தெரியவில்லை. நூல் வரும்முன் அவை கிடைத்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம். அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தவருக்கு ஒரு புத்தகம் அதிகமில்லை என நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

அவர் மறைவுக்கு வந்திருந்த அளவிலாத கூட்டம் சொன்னது அவர் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு பெரிதென்று. இன்று காசு கொடுத்துக் கூட்டப்படும் மாநாட்டுக் கூட்டங்கள் பார்த்த பின்பு அதெல்லாம் சிறிதாகத் தெரிகிறது. ஆனாலும் அன்றைய சூழ்நிலையில் அந்த மாதிரியான ஒரு கிராமத்தில் அது மிக மிக அதிகம். பின்னர் பொதுவுடைமை இயக்கப் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக அவருடைய வாழ்க்கை பற்றியும் தியாகங்கள் பற்றியும் எழுதினார்கள். அதற்குப்பின்பும் பல நாட்களுக்குக் கூட்டம் கூட்டமாக விசாரிக்க வந்து சென்றார்கள் தோழர்கள். இறக்கும் எல்லா மனிதனுக்கும் போலவே அவருக்கும் ஏகப் பட்ட கதைகள். வருகிற ஒவ்வொருவரும் ஒரு கதையைக் கொண்டு வந்தார்கள். அவற்றையெல்லாம் புரியவும் எழுதி வைக்கவும் தெரியாமல் போனதால் புத்தகத்தில் நிறையப் பக்கங்கள் குறையப் போகிறதே என்று சிறிய வருத்தம்தான் எனக்கு. பார்க்கலாம்.

அவருடைய தியாகங்களுக்குப் பரிசாக அவருக்கும் அவர் இறந்தபின் அவருடைய மனைவிமார் இருவருக்கும் பென்ஷன் என்ற பெயரில் ஒரு சிறிய தொகை மாதாமாதம் விடாமல் வந்தது. இன்று அது சிறிய தொகையாகி விட்டாலும் ஒரு காலத்தில் அதுவும் ஒரு கணிசமான தொகையாக இருந்து குடும்பத்தை ஓட்ட உதவியதை மறக்க முடியாது. விடுதலைப் போராட்ட வீரர் என்பதற்கான அடையாளமாக இந்திரா காந்தியின் கையில் தாமிரப் பட்டயம் ஒன்று வாங்கியிருக்கிறார். இவை தவிர்த்து அவர் எங்களுக்கு விட்டுச் சென்றது என்ன என்று பார்த்தால்... இதுதான்...

• எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் செய்யக் கூடாத தவறுகள் என்றொரு லிஸ்ட். ஏன்? ஏனென்றால், ‘நாமெல்லாம் அவர் வழி வந்தவர்கள். அப்படி ஒரு வேலையைச் செய்தால் பெரும் கேவலமாகிவிடும்’ என்ற உணர்வு. என்னைப் பற்றிச் சுய தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லை. ஆனால், அவரோடு வாழ்ந்த எம்மக்கள் பலர் இந்தப் பெயரைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் அதைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

• உருப்படவே வாய்ப்பில்லை என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அந்த உருப்படாத அரசியல் மீது ஓர் ஆர்வம். அவர் எதிர் பார்த்த சுதந்திரம் போல் இதுவும் ஒரு நாள் உருப்படும் என்ற நம்பிக்கை. அரசியல் மட்டுமன்றி, பொது வாழ்க்கை சம்பந்தப் பட்ட எதன் மீதும் எங்கள் அனைவருக்குமே ஓர் அதீத ஆர்வம் இருக்கிறது.

• சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வருகிற கூடுதலான நாட்டுப் பற்றும் மற்றோரை விட எங்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தில் கூடுதல் பங்கு இருக்கிறது என்ற நினைப்பும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கூடுதல் முன்னுரிமை ஏதும் கேட்கவில்லை. கூடுதல் பெருமை மட்டும் பட விரும்புகிறோம். இன்றுவரை எங்களில் யாருமே விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான எந்த சலுகைகளையும் அனுபவிக்க வில்லை!

• சில மொள்ளமாரிகள் பண்ணுகிற அரசியல்த் தே***த் தனங்களைப் பார்க்கும் போது வரும் கோபமும் ‘இப்படி நீங்கள் மேயவா அவர் தன் அத்தனையையும் தொலைத்தார்?’ என்ற இயலாமையில் வரும் கொதிப்பும் உங்களில் கொஞ்சமாவது சுயநலமாக அவரும் இருந்திருந்தால் நாங்களும் இன்னும் கொஞ்சம் (உங்கள் பிள்ளைகள் போல் இல்லாவிட்டாலும்) நல்லா இருந்திருப்போமே என்ற ஏக்கமும் என்றும் இருக்கும் என நினைக்கிறேன்.

• எமக்கே இப்படியிருக்கும் போது இதை விடப் பெரும் பெரும் தியாகங்கள் செய்தோருடைய வாரிசுகள் – எம்மை விட மோசமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப் பட்ட வாரிசுகள் (சரியாகப் புரிந்து கொள்க - நாங்கள் மோசமாக இருக்கிறோம் என்று உதவி கேட்டுப் புலம்ப வில்லை) எப்படியெல்லாம் உணர்வார்களோ என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு.

சொல்லுங்கள் இப்போது – இது தப்பா? எனக்கு இந்த நாட்டின் சுக துக்கங்களில் கூடுதல் உரிமை இருக்கிறதா? இல்லையா?

சனி, மார்ச் 19, 2011

நாத்திகம் - இன்னொரு மதம்!


இந்தக் கேள்விக்கு நம் வாழ்நாளில் என்றும் ஓர் உறுதியான விடை கிடைக்காமல் போகலாம் அல்லது இந்தப் பூவுலகில் பிறக்கும் எவருக்குமே முற்றிலும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாதிரியான ஒரு பதில் கிடைக்காமலே போகலாம். கேள்வி? கடவுள் இருக்கிறாரா? தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் குழப்பமான பதிலே கிடைக்கிறது. இல்லை என்பதற்கான ஏற்கத் தக்க தர்க்க ரீதியான விளக்கம் கிடைக்காத போது என் பதில் நேர்மறையாக உள்ளது. இருக்கிறது என்பதற்கான ஏற்கத் தக்க ஆன்மீக விளக்கம் கிடைக்காத போது என் பதில் எதிர் மறையாக உள்ளது. உங்கள் விளக்கம் என்னவாக இருந்தாலும், நான் உறுதியாக நினைப்பது என்னவென்றால், இந்த உலகம் இவ்வளவு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வலிகளுக்கும் வன்முறைகளுக்கும் போர்களுக்கும் பசிக்கொடுமைக்கும் தகுதியானதில்லை. பிறந்த குழந்தை முதல் (இன்னும் சொல்லப் போனால் வயிற்றில் இருக்கும் கரு முதல்) பெண்கள் வரை - தள்ளாத முதியோர் வரை எல்லோருமே இவற்றை அனுபவிக்கிறார்கள் என்பது அதை விடக் கொடுமை.

சரியான தர்க்க விளக்கம் இல்லை எனும் போது, என் ஆத்திக நண்பர்கள் சொல்கிறார்கள் - அப்படியொரு விளக்கம் இல்லை என்பதற்காக கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. மற்றோர் எளிமையான பதில்க் கேள்வியும் கேட்கிறார்கள் - "நிரூபிக்கப் பட்ட விஷயங்களை மட்டும் தான் நீ நம்புவாயா?". அவ்வளவு எளிதாக இல்லாத இன்னொரு தொடர் கேள்வியும் கேட்கிறார்கள் - "உன் தந்தைதான் உண்மையில் உன் தந்தை என்று உனக்கு யார் நிரூபித்தார்கள்?". நம்பிக்கை என்பதன் பொருளே அதற்கு ஆதாரம் தேவையில்லை என்பதே (அல்லது அது இல்லை). அதுபோலவே, ஆன்மீக விளக்கம் இல்லை எனும்போது, என் நாத்திக நண்பர்கள் கேட்கிறார்கள் - எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் முட்டாளா நான் என்று. அவர்களும் மிக எளிமையான ஒரு கேள்வி கேட்கிறார்கள் - "நிரூபிக்கப் படாத எல்லாத்தையுமே நீ ஏற்றுக் கொள்வாயா?". என்ன சொல்வது? "ஆம்" என்றால் முட்டாள் என்பதை எளிதாக நிரூபிக்க வழி வகுத்து விடுவேன். "இல்லை" என்றால், அடுத்ததாக அவர்களிடமும் அவ்வளவாக எளிதாயில்லாத ஒரு தொடர் கேள்வி இருக்கிறது - "பின் கடவுளை மட்டும் ஏன் அப்படி நம்புகிறாய்?".

எந்தப் பக்கமும் நிபந்தனை அற்ற ஆதரவு கொடுக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் எனக்கில்லை. நான் ஒருவன் அப்படிச் செய்துவிட்டால், உலகமெலாம் இருக்கும் நாத்திகர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான பதில்கள் கிடைக்கப் போவதில்லை அல்லது ஆத்திகர்களுக்கு இதை விடச் சிறப்பான ஆதாரங்கள் கிடைக்கப் போவதில்லை. பதில் கிடைக்காத கேள்விகள் இருக்கும் வரை நான் அந்தரத்தில் தான் நிற்பேன். அதில் எந்தச் சிரமும் இல்லை எனக்கு. இருந்தாலும், அது பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் முன்னெப்போதையும் விடக் கூடுதலான ஆர்வத்தோடு கலந்து கொள்கிறேன். பல புதுப் புது விஷயங்களைக் கொண்டு வருவதால், நாத்திகர்களிடம் ஆத்திகமும் ஆத்திகர்களிடம் நாத்திகமும் பேசப் பிடிக்கிறது. 

சரி. கடவுள் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். யார் அவர்? அவருடைய பெயர் என்ன? இயேசுவா, அல்லாவா, சிவனா, பெருமாளா, அல்லது வேறு ஏதாவது பெயரா? மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவரை இதுதான் என் கடவுள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அப்படித்தான் என் பெற்றோர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்; அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். நான் நீங்களாக இருந்திருந்தால் அப்படிச் சொல்லியிருப்பேனா - உங்கள் ஊரில், உங்கள் பெற்றோருக்குப் பிறந்து, நீங்கள் வளர்ந்த சூழ்நிலையில் வளர்ந்திருந்தால்? இல்லை, நீங்கள் தான் என்னுடைய ஊரில், என்னுடைய பெற்றோருக்குப் பிறந்து, நான் வளர்ந்த சூழலில் வளர்ந்திருந்தால் அப்படியே சொல்லியிருப்பீர்களா? நீங்களோ நானோ உலகின் வேறு எங்கோ ஒரு மூலையில் பிறந்திருந்தால் இதையே சொல்லியிருப்போமா? சவுதி அரேபியாவிலோ ஐரோப்பாவிலோ ஆப்பிரிக்காவிலோ பிறந்திருந்தாலும் கூட இதையே சொல்லியிருப்போமா? 

அவருடைய உருவம் எப்படி இருக்கும்? பார்க்க மனிதர்கள் போல இருப்பாரா அல்லது வேறு எது போலாவது இருப்பாரா அல்லது உருவம் அற்றவரா? அவர் ஆணா பெண்ணா அல்லது வேறு ஏதாவதா?

இந்தக் கேள்வி கிட்டத்தட்ட சரியான பதிலுக்கு மிக அருகில் கொண்டு சென்று விட்டது போலத் தெரிகிறது - உலகத்தை யார் படைத்தது... இவ்வளவு விதமான உயிரினங்களோடும் இயற்கை வளங்களோடும் ஒருவரை ஒருவர் சார்ந்தும் அதிசயங்களோடும் கேள்விகளோடும் கூடிய இத்தனை மாபெரிய ஆனாலும் அனைத்துக்கும் இடையில் ஏதோவொரு கோர்வை இருப்பது போன்ற அமைப்பை யார் படைத்தது? ஆனால், அதே கேள்வி கொஞ்சம் சுளுக்கினால் நம்மை மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே அனுப்பி விடுகிறது - அப்படியானால் அதைப் படைத்தவரைப் படைத்தது யார்? அவர் தான்தோன்றியாக இருக்க முடியுமானால், உலகம் ஏன் அப்படி இருக்க முடியாது?! (இன்னொரு துணைக் கேள்வி - உலகமே ஏன் கடவுளாக இருக்க முடியாது?!) எவ்வளவு எளிதான ஆனாலும் சிக்கலான கேள்வி இது!

பெரும்பாலான புரட்சிக்காரர்கள் நாத்திகர்கள். அப்படியானால், அதிலிருந்து ஏதாவது முடிவு எடுத்துக் கொள்ள முடிகிறதா? என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தது இதுதான். நான் ஏதாவது சிக்கலில் இருக்கும்போது, கடவுளை நம்பினால், அவரிடம் சென்று முறையிட்டு அழுதுவிட்டு, அவர் அதைச் சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கையோடு பாரத்தை அவர் மேல் போட்டுவிட்டு, என் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன். அவருடைய இருப்பில் நம்பிக்கையில்லாத போது, பிரச்சனையைத் தீர்க்கும் வரை என்னால் தூங்க முடியாது. அது தீர்க்கப் படும் வரை எனக்குப் பிரச்சனையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்; ஏதாவதொரு தீர்வை நோக்கி உழைக்கச் சொல்லி என்னை நெருக்கடிக்குள்ளாக்கும். ஏனென்றால், எனக்குத் தெரியும் - எனக்காக யாரும் அதைத் தீர்த்து வைக்க மாட்டார்கள்; நான்தான் அதைச் செய்து கொள்ள வேண்டும் என்று.

எனவே, மன அமைதி வேண்டுமானால் எவரும் பார்த்திராத ஏதோவொரு சக்தியை நம்புங்கள். ஆனால், பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டுமானால், நீங்கள்தான் தீர்வுகளைத் தேடி ஓட வேண்டும். அதுதான் உங்களுக்கு நிரந்தரமான - நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வுகளைத் தர முடியும். அதுதான் உங்கள் உண்மையான பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்க முடியும். ஆனால், இரண்டுக்கும் இடையிலான நடுப்பாதையையும் நாம் ஒதுக்கித் தள்ளி விட வேண்டியதில்லை. நம் கடமையைச் செய்து கொண்டே அவரிடம் அதிகம் எதிர் பார்க்காமல் கடவுளையும் நம்பலாம். அது இன்னும் கொஞ்சம் புத்திசாலித் தனமான ஆத்திகமாக இருக்கிறது. நம்பிக்கை எந்த விதமான சுயநலக் காரணங்களும் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு உலகியல் ஆசைகள் காரணமாக இருக்கக் கூடாது. அப்படித்தானே நம்முடைய பெரும்பாலான ஆன்மீகவாதிகள் ஆன்மிகம் பற்றிச் சொல்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலான சாமானியர்கள் (உங்களையும் என்னையும் போன்றவர்கள்) கடவுளை வணங்குவதன் காரணம் - அவர்தான் நாம் போய் முறையிட்டு அழும் போதெல்லாம் நம்மை நம் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறார் என்று நம்புகிறோம். நம்மிடம் இருக்கும் எல்லாமே அவரால் கொடுக்கப் பட்டவை என்று நம்புகிறோம். அதே நமக்கு, பிரச்சனைகள் தீர்க்கப் படாதபோது - கேட்டது கிடைக்காத போது, அதற்கேற்றாற்போல் ஒரு பதில் வைத்திருக்கிறோம். "ஏதோவொரு காரணத்துக்காக இதையெல்லாம் நான் அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்; எனவே, அப்படியே நடக்கட்டும்" என்போம். அதன் பொருள் என்னவென்றால், கடவுளின் தலையாய கடமை, என்னைப் பிரச்சனைகளில் இருந்து விடுவித்துக் கொண்டே இருப்பதோ நான் கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருப்பதோ அல்ல. அவருடைய முடிவுகளை அவரே எடுக்கிறார். அப்படியானால், அதற்கென்று சில அடிப்படைகள் இருக்க வேண்டும். அந்த அடிப்படைகள், நான் கோயிலுக்கு - தேவாலயத்துக்கு - மசூதிக்கு வெளியே என்ன செய்கிறேன் என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப் படுவதாக இருந்தால், நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய் விடுமே.

நாத்திகர்கள் சொல்கிறார்கள், நம்பிக்கையற்றவர்கள் ஒருபோதும் எந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தோரைப் படுத்துவது காலம் காலமாக நடக்கிற அநியாயம். இந்தப் பூமிப் பந்தின் எதிர் காலம் எப்போதுமே நாத்திகர்களால் கேள்விக் குறியானது இல்லை. தம்முடைய மதம்தான் தலை சிறந்தது என்று நம்புபவர்களே அந்த அபாயத்துக்கு உரியவர்கள். மற்றொருடைய மதங்களை விடத் தன்னுடையதே உயர்ந்தது அல்லது சரியானது என்று நம்புபவர்களால் மட்டுமே அந்த நிலை உருவாகிறது!

நம்பிக்கை தவிர்த்து, வேறு என்னவெல்லாம் நாத்திகரையும் ஆத்திகரையும் வேறுபடுத்துகிறது?

பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால், கடவுளை நம்புபவர்கள் கடவுள் பயத்தால் கட்டுப் படுத்தப் படுவார்கள்; ஆனால் நாத்திகர்களோ எதற்கும் அஞ்சுவதில்லை; எனவே, எந்தப் பாவத்தையும் துணிந்து செய்வர் என்பது. ஆனால், நான் கேட்பதும் பார்ப்பதும் அதை நிரூபிக்க வில்லை. எல்லாக் குற்றவாளிகளும் நாத்திகர் அல்லர். எல்லா அரசியல்வாதிகளும் நாத்திகர் அல்லர். வரி ஏய்ப்பு செய்வோர் எல்லோரும் நாத்திகர் அல்லர். பிழைப்புக்காக சக மனிதர்களை ஏமாற்றும் எல்லோரும் நாத்திகர் அல்லர். சமயச் சடங்குகளில் செலவிடப் படும் பணமெல்லாம் வெள்ளைப் பணம் அல்ல. சிறைகளில் வாழும் எல்லோரும் நாத்திகர் அல்லர்.

ஒருவர் கடவுளை நம்பிக் கொண்டே பாவங்கள் செய்ய முடியும். அவருடைய சிந்தனை ஓட்டம் மிக எளிமையானது - 'என்னை உருவாக்கியவர்; நான் கேட்பதெல்லாம் எனக்குக் கொடுப்பவர் என்பதற்காக நான் அவரை வணங்க வேண்டும். என் தாயோ தந்தையோ நான் பாவம் செய்தால் தண்டிப்பதில்லை (தாம் செய்வது பாவம் என்று உணரவாவது செய்வார்களா என்பது அடுத்த கேள்வி). நான் எவ்வளவு நல்லவன் அல்லது கெட்டவன் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு என்னை நானாக ஏற்றுக் கொள்வார்கள். கடவுளோடும் நான் அத்தகைய உறவுதான் வைத்திருக்கிறேன். கடவுள் எனக்கு நிபந்தனையற்ற காவலனாக இருக்க வேண்டும்; காவல்த்துறை போல் அல்ல. நான் கடவுளுக்குப் படைப்பதெல்லாம் என் பாவங்களை எல்லாம் மீறி அவர் எனக்குச் செய்யும் நல்லதுகளுக்கான பதில்.'.

நாத்திகர்கள் கடவுளுக்குப் பயப்படுவது இல்லையா? ஆம். பயப்படுவதில்லை. அவர்களுடைய பாவங்களுக்காக யாரும் கண்டிராத சக்தி ஒன்று அவர்களைத் தண்டிக்கும் என்றும் அவர்கள் நம்புவதில்லை. ஆனால், பாவங்கள் செய்யும்போது பாதிக்கப் பட்டவர்களிடம் மாட்டிக் கொண்டால் கொன்று விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கும் சமமான அளவு மனிதத் தன்மை உண்டு. அவர்களும் ஒரு விபத்தைப் பார்த்தால் அல்லது ஒருவர் அடி படுவதைப் பார்த்தால் கவலைப் படுவார்கள். கடவுளை நம்புகிறார்களா இல்லையா என்பதைத் தாண்டி அது ஓர் அடிப்படை மனிதக் குணம். அவ்வளவே.

இந்த நாட்டிலேயே அதிகமான கோயில்களையும் நாத்திகர்களையும் கொண்ட மண் நம்முடையது. சில தலைமுறைகளாக அவர்கள் இருவருமே இதே மண்ணில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வீடுகளில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நாத்திகம் என்கிற சிந்தனையால் ஈர்க்கப் பட்டு ஆனால் நம்பிக்கையின்மை மீதும் நம்பிக்கையில்லாத இன்னொரு சாராரும் இருக்கிறார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள். "அவர் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், ஆனால் அவரையும் அவர் இருப்பையும் பற்றிய தேடல்களில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. காலம் காலமாக நடந்து வருவது போல, என் பெற்றோர் அவர்கள் பெற்றோர் சொன்னதைக் கேட்டது போல், அவர்கள் பெற்றோர் அவர்கள் பெற்றோர் சொன்னதைக் கேட்டது போல, நான் என் பெற்றோர் சொன்னதைக் கேட்டு விட்டுப் போகிறேன்." என்பதே அவர்கள் நிலைப்பாடு. நல்ல நிலைப்பாடுதான் உண்மையில்!

இது எல்லாமே பெரியாரில்தான் தொடங்கியது. நம் மண்ணில் யாரும் செய்யத் துணியாததை அவர் செய்தார். கடவுள் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திச் சொன்னார். கடவுள் சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் (சமயம் மற்றும் சடங்குகள்) கடுமையாக எதிர்த்தார். நம்பிக்கையின்மை என்பது நமக்குப் புதிதில்லை என்றாலும் அவருடைய அணுகுமுறை புதிது.

சனநாயகம் போலவே நாத்திகமும் ஒரு மேற்கத்தியச் சிந்தனை. மேற்கு நாடுகளில் நம் நாட்டை விட ஒப்பிட முடியாத அளவு நாத்திகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் (உலகின் பல்வேறு பகுதிகளில் நாத்திகர்களின் அடர்த்தி பற்றி அறிய கீழே உள்ள படத்தைப் பாருங்கள்). மேற்குலகம் கடைப் பிடிப்பதற்கும் அதன் பெருமையை விளக்கக் கடைகள் போடுவதற்கும் முன்பாகவே அது நம் மண்ணில் இருந்ததாகவும் பலர் சொல்கிறார்கள். அப்படித்தான் முனைவர். அமர்த்யா சென்னும் அவருடைய நூல் விவாதக்கார இந்தியரில் (THE ARGUMENTATIVE INDIAN) சொல்கிறார்.


ஆனால், பெரியாரின் அணுகுமுறையில் புதுமை என்னவென்றால், ஆத்திகம் என்பதே இல்லாத ஒன்றிற்காக ஏகப் பட்ட நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவது என்று நாத்திகர்கள் அனைவரும் அப்படியிருக்கையில், கடவுளை மறுப்பதிலும் அதற்கான பிரசாரங்களிலும் அளவிலாத நேரத்தைச் செலவிட்டார் அவர். காலணிகளால் சிலைகளை அடித்து, "இதற்காகக் கடவுள் என்னைத் தண்டிப்பாரா?" என்று கேட்டார். ஆச்சர்யம் என்னவென்றால், கடவுள் தண்டிக்க வில்லை. இந்தப் புதுவிதமான நாத்திகம் அக்கால இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது - மாநிலம் முழுக்கப் பேரலைகளை உருவாக்கியது.

பெரியாரை வெறித்தனமாகப் பின் பற்றுவோரும் அதே அளவு வெறுப்போரும் என் நெருங்கிய வட்டாரத்திலேயே நிறைய இருக்கிறார்கள். அவர் சார்ந்த சமூகத்துக்கு அவர் கொண்டு வந்த மாற்றங்களுக்காக அவரே இதுவரை பிறந்த தமிழர்களிலேயே தலைசிறந்த தமிழர் என்கிறார்கள் சிலர் (கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த - அதற்கு முன்பு ஆந்திரத்தில் இருந்து கர்நாடகம் வந்த - ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தமிழரே அல்ல என்கின்றனர் வேறு சிலர்; எனவே அவர் தெலுங்கர் அல்லது கன்னடர்; தமிழர் அல்லர்!). தனிப்பட்ட பிரச்சனைகள் பல கொண்டிருந்த அவர், சிறுபான்மையாக இருந்த ஒரே காரணத்துக்காக பார்ப்பனர்களைக் கடுமையான சொற்களால் திட்டினார் என்று சொல்லி இன்னொரு சாரார் அவரை விமர்சிக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால், அவரளவுக்கு எவரும் கடவுளை வெறி கொண்டு எதிர்ப்பதிலும் நாத்திகத்தைப் பரப்புவதிலும் தன் விலைமதிப்பற்ற வாழ்க்கை முழுமையையும் அர்ப்பணித்ததில்லை என்பதால் இன்றைக்கும் இந்திய நாத்திகத்தின் அடையாளமாக இருப்பவர் அவரே. சமீப காலங்களில், பல வட இந்திய தலித் இயக்கங்களிலும் அவருடைய படம் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். அவருடைய பெரும்பாலான தொண்டர்கள் பின்னாளில் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து தம்மையும் பாழாக்கி அரசியலையும் பாழாக்கி விட்டார்கள். அவரோ பதவி பாழாக்கும் என்பதை அறிந்தே அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

அந்த நேரம் சமூக சூழ்நிலை எப்படியிருந்தது என்று தெரியவில்லை. ஆனால், பார்ப்பனத் தாக்குதலை மட்டும் தவிர்த்திருந்தால் சர்ச்சை குறைவானவராகவும் இன்னும் அதிகமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவராகவும் ஆகியிருப்பார் என நினைக்கிறேன். அவர் ஆரம்பித்த இயக்கத்தில் இருப்போர் இன்னும் நாத்திகர்களாகத்தான் இருக்கிறார்கள் (எண்ணிக்கையில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பொது வாழ்க்கையில் அவர்களின் மற்ற நிலைப்பாடுகள் எவ்வளவு அற்பமாக ஆகியிருந்தாலும்). ஆனால், அதிலிருந்து கிளை விட்டு வளர்ந்தவர்கள் - தேர்தல் அரசியலில் நுழைந்தவர்கள் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோராகவும் இடத்துக்கும் நேரத்துக்கும் (தேர்தல் நேரம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை) ஏற்றபடி மாற்றி மாற்றிப் பேசுபவர்களாகவும் மாறி விட்டார்கள்.
பெரியார் மட்டுமின்றி இந்தியா முழுக்க ஏகப் பட்ட நாத்திகர்கள் இருந்தனர். காந்தி அவ்வளவு ஆன்மீக - மத ஈடுபாடு கொண்டிருந்தபோது நேரு தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்துக் கொண்டார். பகத் சிங் ஒரு நாத்திகர். விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர்) ஒரு நாத்திகர். நோபல் பரிசு பெற்ற மற்றொரு இந்தியர் அமர்த்யா சென் ஒரு நாத்திகர். நடிகர் கமல் ஒரு நாத்திகர். இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஒரு நாத்திகர். ஆனால், அந்த வரிசையில் ஒரு நம்பவே முடியாத மாதிரியான ஆளும் வருகிறார் - இந்து மகாசபாவின் தலைவராக இருந்த விநாயக் சாவர்கர் ஒரு நாத்திகர். பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் (தொண்டர்கள் எல்லோரும் என்று சொல்ல முடியாது) எல்லோருமே நாத்திகர்கள். தன் பிராமணப் பின்பெயரைப் பெருமையோடு பயன்படுத்தும் மணி சங்கர் ஐயர் ஒரு நாத்திகர்.

உளவியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட் பிராய்ட் ஒரு நாத்திகர். நம் காலத்தின் தலைசிறந்த இரு பணக்காரர்களான பில் கேட்சும் வாரன் பபேயும் நாத்திகர்கள். வங்க தேச எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தஸ்லிமா நஸ்ரின் ஒரு நாத்திகர். இதைச் சொன்னால் உலகத்தில் எவரும் ஆச்சர்யப் பட மாட்டார்கள் - கார்ல் மார்க்ஸ் ஒரு நாத்திகர். பிரித்தானிய அரசியலின் எதிர்காலமாக இருக்கும் மிலிபான்ட் சகோதரர்கள் இருவரும் நாத்திகர்கள்.

இதிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. பெரியாரையும் சிலரையும் தவிர்த்து பெரும்பாலான நம் நாத்திகர்கள் பிராமணர்கள். நாத்திகம் மேற்கத்தியச் சிந்தனைதான் என்றால் அதுவும் மற்ற பல மேற்கத்தியச் சிந்தனைகளைப் போன்றே அவர்கள் மூலமே இங்கு வந்திருக்கக் கூடும். மதம் அவர்களின் கண்டுபிடிப்பு என்றால் நாத்திகமும் அப்படியே இருக்கக் கூடும். ஒரு வகையில், அதுவும் ஒரு மதமே. கருப்பும் வெள்ளையும் நிறம்தான் என்றால், நாத்திகம் ஏன் ஒரு மதமாக இருக்கக் கூடாது? கடவுளை நெருங்கிச் செல்வோர், சில பெரும் ஏமாற்றங்கள் அடையும்போது, மற்றவர்களை விட அதிகமாகக் கோபப்பட்டு, கடவுளின் இருப்பையே கேள்வி கேட்பது இயல்பானதே. எந்த உறவுக்கும் கொடுக்கும் அதே விளக்கம்தான். ஒருவரோடு நெருங்கிப் பழகும் போதுதான் அவரோடு பிரச்சனைகளோ கருத்து மாறுதல்களோ வரும். ஒருத்தரோடு எந்தச் சோலியும் இல்லையென்றால் அவரோடு நமக்கேன் பிரச்சனைகள் வர வேண்டும்? எனவே, நாத்திகம் ஒரு பார்ப்பன எதிர்ப்புச் சிந்தனை அல்ல. பெரியார் இரண்டையும் கலந்ததால் அல்லது உலப்பியதால் (ஆதரவாளர்கள் கலந்தார் என்பார்கள்; எதிர்ப்பாளர்கள் உலப்பினார் என்பார்கள்) தமிழ்நாட்டில் தான் அது அப்படி ஆகிவிட்டது. நமக்கு எதிரான ஒருவர் என்ன கருத்துச் சொன்னாலும் அது நமக்குப் பிடிக்காமல் போவது இயற்கைதானே.
கேட்ஸ் மற்றும் பபேயின் கதைகளில் இருந்து கிடைக்கும் அடுத்த விஷயம், சமூக சேவை செய்வதற்கு ஒருவர் மத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை இரண்டும் இரு வேறு விஷயங்கள். இங்கே எது முக்கியம் என்றால் கருணை. கஷ்டத்தில் இருக்கும் ஒருவரைப் பார்த்து இரக்கப் படுவதற்கு ஒருவர் எதையுமே பின் பற்றுபவராக இருக்க வேண்டியதில்லை. அந்த வலியை அவர் அனுபவித்திருக்க வேண்டும் அல்லது உணர முடிய வேண்டும். அவ்வளவுதான். நீ என்னுடைய மதத்துக்கு மாறுவதாக இருந்தால் நான் உனக்கு இதெல்லாம் செய்வேன் என்று அரும் பெரும் காரியங்கள் எல்லாம் செய்வோரை விட இவர்கள் மேலானவர்களே. தன் மதத்தைக் காக்க அப்பாவி மக்களைக் கொன்று குவிப்போருக்கும் (நாம் வரலாற்றில் படித்த கதைகளையும் நவீன காலத் தீவிரவாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இது பொருந்தும். மதவாதியாக இருப்பது எந்த வகையிலும் மனிதாபிமானியாக இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்காது.

சாவர்க்கர் ஒரு விதிவிலக்கு. ஒரே ஆள் மதவாதியாகவும் நாத்திகராகவும் இருக்க முடியுமா? முடியும். அதைத்தான் அவர் நிரூபித்து விட்டுப் போயிருக்கிறார். கடவுளின் இருப்பில் நம்பிக்கை இல்லாமலே இந்து மதத்தின் மீது தீராத வெறி கொண்டு இருக்க முடியும் என்று காட்டியிருக்கிறார். புத்த மதத்தைப் போலல்லாமல் இந்து மதத்தில் எல்லாமே கடவுளைச் சுற்றியே வருகிறது. புத்த மதம் கடவுளைப் பற்றிப் பேசுவதே இல்லை என்கிறார்கள். புத்தரை அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா அல்லது வேறு ஏதாவதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது நம்மை அடுத்த கேள்விக்கு அழைத்துச் செல்கிறது. ஒருவர் நாத்திகராக இருந்து கொண்டு ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா? முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆன்மிகம் என்பது கடவுளை வழிபடுவது அல்ல. தன்னுடைய ஆன்மாவோடு பணி புரிதல்தான் ஆன்மிகம். கடவுளின் துணையோடோ அது இல்லாமலோ. மற்றவர்களைப் போலவே நாத்திகர்களும் உடல் வேலைகள் செய்ய முடியும். ஏனென்றால் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே உடல் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே நாத்திகர்களும் சிந்தனை செய்ய முடியும். ஏனென்றால் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே உள்ளம் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே நாத்திகர்களும் ஆன்மீகவாதிகளாக இருக்க முடியும். ஏனென்றால் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே ஆன்மா இருக்கிறது. அவர்கள் அவர்களுடைய மதத்தையே பின் பற்றிக் கொள்ளலாம். அதாவது, நாத்திகம். புனித நூல்களால் அன்றி மனச் சாட்சியால் நிர்வகிக்கப் படுவது அவர்கள் மதம். பிரச்சனை எப்போது வருமென்றால், சுயநலமற்ற விதிமுறைகளைக் கொள்ளும் திறன் மனச்சாட்சிக்கு இல்லாமல் போகும்போது. அந்த வகையில், புனித நூல்கள் அவைகளின் பரிந்துரைகளில் தெளிவாக இருக்கின்றன. இதில் கவலைப் பட வைப்பது எதுவென்றால், சமீப காலங்களில் வந்து கொண்டிருக்கும் அவற்றுக்கான புதிய விளக்க உரைகள்.
அனுதினமும் சக மனிதர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிய நான் ஒரு சட்டம் படித்த வழக்கறிஞராக இருக்க வேண்டியதில்லை. இந்த நாட்டில் வாழ்வதற்கு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்து முடித்துக் கரைத்துக் குடிக்க வேண்டியதில்லை. என் வேலையைச் செய்து கொண்டு யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காமல் இருந்தாலே போதும். நான் ஒரு நல்ல - சட்டத்தை மதிக்கும் - குடிமகனாக இருக்க முடியும். அது போலவே, என் வேலையைச் செய்து கொண்டு யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காமல் இருந்தாலே போதும். இந்த பூமியில் நான் ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து விட்டதாகி விடும். எனக்குச் சட்ட நூலும் தேவையில்லை - புனித நூலும் தேவையில்லை; அரசாங்களும் தேவையில்லை - மதமும் தேவையில்லை!

ஆனால், அரசாங்கங்களும் மதங்களும் அர்த்தமற்றவை என்று அர்த்தமில்லை. வலுவான மனச்சாட்சி கொண்டிருக்க முடியாதோருக்கு அவை வேண்டும். மனச்சாட்சியால் மட்டுமே ஆளப் பட முடியாத உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்களுக்கு அவை வேண்டும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நம்மைப் போன்றோருக்கு அவை வேண்டும். பெற்றோரிடம் - நலம் விரும்பிகளிடம் - வழக்கறிஞர்களிடம் - நமக்குக் கருத்துச் சொல்லக் கூடிய அளவு திறமை உள்ளோரிடம் நாம் கருத்துக் கேட்டுப் போகத்தானே செய்கிறோம். அது போலவே, உங்களையும் என்னையும் போன்ற சராசரிகளுக்காக அரசாங்கங்களும் மதங்களும் அறிஞர்களால் நிர்வகிக்கப் பட வேண்டும். பேராசை கொள்ளாமல் தத்தம் எல்லைகளுக்குள் இருந்து விட்டால் அவை இரண்டுமே பிரச்சனைகள் அற்றவையாக இருப்ப. அது இயலாதென்றால், வேறு வழியில்லை, நாத்திகம் தான் தீர்வு!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...