ஞாயிறு, ஜூன் 10, 2012

உலகம் சமநிலை பெற வேண்டும்?!

"உலகம் சமநிலை பெற வேண்டும்; அதில் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்!" என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது சாத்தியமா என்றொரு கேள்வி உடனடியாக வந்து எதிர்மறைச் சிந்தனை கொடுக்கும். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உலகில் உள்ள எல்லா மனிதரும் சமமாக வேண்டும் என்பது ஒன்று. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் சமமாக வேண்டும் என்பது இன்னொன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே என்றாலும் இரண்டுமே சிரமம்தான். ஆனால், அதற்கு எல்லா வகையிலும் எல்லோரும் சமமாக வேண்டும் என்பதல்ல பொருள். வேற்றுமைகளைத் தாண்டி சமநிலையை நோக்கி நடை போட வேண்டும் என்பதே அதன் பொருள். சில நாடுகளில் ஏழை-பணக்கார இடைவெளி பெரிதாக இருக்கிறது. சில நாடுகளில் சிறிதாக இருக்கிறது. சில கண்டங்களில் நாடுகளுக்கு இடையே ஏழை-பணக்கார இடைவெளி குறைவாக இருக்கிறது. சில கண்டங்களில் அதிகமாக இருக்கிறது. இடைவெளி இல்லாமல் செய்வது இயலாதது என்றாலும் இடைவெளியைக் குறைப்பதுதான் எல்லோருக்கும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே சமதர்மம் பேசும் எல்லோருடைய நோக்கம்.

சமம் என்ற சொல்லைக் கேட்டாலே நம்ம நாட்டில் நிறையப் பேருக்குக் கோபம் வந்து விடுகிறது. அது இயற்கைக்கு எதிரானது என்று கடுப்பாகிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். மனிதன் மாளிகைகளில் வாழ்வதும்தான் இயற்கைக்கு எதிரானது. அதற்காக அதைச் செய்யாமலா இருக்கிறோம். இன்னும் குகைகளுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் விலங்குகள் போலவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையை வென்று அதை விடச் சிறப்பாக வாழ ஆரம்பித்த எல்லாமும் சேர்ந்ததுதான் பரிணாம வளர்ச்சி என்பது. அதனால் எல்லாமே இயற்கையின் படியே இருக்க வேண்டும் என்று வாதிட வேண்டியதில்லை. அடித்துத் தின்பதுதான் புலியின் குணம்; அடிபட்டுச் சாவதுதான் மானின் விதி என்பது உண்மைதான். ஒருநாள் மான்கள் அனைத்தும் காலியான பின்பு புலிகள் தம்மைத் தாமே அடித்துக் கொள்ள வேண்டிய நிலை வரும். விலங்குகளுக்கு இந்த நிலை வர நாளாகும் என்றாலும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்கனவே வர ஆரம்பித்து விட்டது.

தனி மனிதர்களுக்கு இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நாடுகளுக்கும் இருக்கின்றன. சில நாடுகள் பல தலைமுறைகளாகக் கடுமையாக உழைத்தாலும் முன்னேற்றம் மெதுவாகக் கிடைக்கிறது. சில நாடுகள் சோம்பேறியாக இருந்தாலும் வளம் கொழிக்க வாழ்கின்றன. உடலுழைப்பு-மூளையுழைப்பு மாதிரி அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் அடிப்படையான ஓர் உண்மை என்னவென்றால், மூளையுழைப்பு என்பது அடுத்தவன் உடலுழைப்பைச் சுரண்டித் தின்பது என்பதாகத்தான் இருக்கிறது. கறி வலிக்காமல் காசு பார்க்கப் பழகிக் கொண்டு விட்டால் அவன் மூளைக்காரன். அந்தத் தத்துவத்தைப் பின் பற்றும் மனிதர்கள்தான் எந்தக் காலத்திலும் மனித குலத்தின் பொருளியற் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது போல அந்தத் தத்துவத்தைப் பின் பற்றும் சில நாடுகள்தான் உலகப் பொருளியற் பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பவை என்பது கடந்த சில நாட்களாகவே அடிக்கடிக் கேள்விப் படுவதாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே அலுவலகத்தில் சகா ஒருவர் அடிக்கடி உலகப் பொருளியற் பிரச்சனைகள் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார். அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது புரிபட்ட விஷயம்தான் மேலே சொன்னது. நேற்றுக் காலையில் வெளியில் செல்ல டாக்சி பிடித்த போது அதன் ஓட்டுனர் மெதுவாகப் பேச்சைப் போட்டார். ஏதோ ப்ரோக்ராம் பண்ணி நடப்பது போல அவரும் உலகப் பொருளியல் பற்றிப் பேசும் ஒருவராக இருந்ததுதான் இந்த இடுகையின் பின்னணி. "நீங்கள் எல்லாம் இங்கே வந்து மாடாக உழைத்து, சாப்பாடு கூட ஒழுங்காகச் சாப்பிடாமல் பணம் சேர்த்துக் கொண்டு ஊருக்குப் போவீர்கள். இதெல்லாம் யாருக்காக உழைக்கிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? உங்கள் உழைப்பை யார் அனுபவிக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?" என்று ஆரம்பித்தவர், பொறிந்து தள்ளி விட்டார். "அமெரிக்காக்காரன் ஒரு பயல் கூட ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை. ஏதோ உழைத்துக் களைத்தது போல், வருடத்துக்கு ரெண்டு தடவை விடுமுறை என்று வாரக் கணக்கில் கிளம்பி விடுவார்கள். இங்கு வந்து முழுக்க முழுக்கக் கடன் அட்டையிலேயே பிழைப்பை ஓட்டி விட்டு நாடு திரும்பி அதையும் கட்டுவதில்லை. அவர்களுடைய அரசாங்கத்துக்கு அவர்களுடைய ஓட்டுக் கிடைத்தால் போதும். அவர்கள் கடனைக் கட்டுபவர்களாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் இந்தியர்கள் - வங்கியில் சேமிப்புக் கணக்கை மிகவும் நம்புபவர்கள். இந்தப் பரதேசிப் பயகள், கடன் அட்டையை மட்டும் நம்புபவர்கள்!" என்று கால் மணி நேரத்தில் எத்தனையோ விஷயங்கள் பற்றிப் பேசினார். கிட்டத்தட்ட இதே கருத்துக்களைத்தான் அமெரிக்காவில் நீண்ட காலம் வாழ்ந்து - அங்கேயே போய் செட்டில் ஆகத் திட்டம் போட்டிருக்கும் சகாவும் வேறு ஒரு தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதில் எதெல்லாம் உண்மை? நம்ம ஊரில் செலுத்தும் அதே உழைப்பை அமெரிக்காவில் செலுத்தினால் இங்கே வீடில்லாமல் இருப்பவர்கள் கூட அங்கே மாளிகை வாங்கலாம். உழைக்கிற நாம் குறைவாகப் பணம் ஈட்டுவதும் ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிற அவர்கள் பணக்காரர்களாக இருப்பதும் நீண்ட காலம் தொடர முடியாது. நாமும் சும்மா உட்கார்ந்து சம்பாதிக்கும் நுணுக்கத்தைக் கற்றுக் கொண்டு விட்டால் அந்த வேலைக்கும் அவர்கள் தேவைப் படாதவர்கள் ஆகி விடுவார்கள். அப்புறம் பிற நாட்டு வளங்களைக் கொள்ளை கொண்டுதான் அவர்கள் வயிற்றை நிரப்ப முடியும். அதுதான் இயற்கைக்கு எதிரானது அல்லவே. பலசாலி மிருகம் பலவீனமான மிருகங்களை அடித்துத் தின்பது தானே இயற்கை. இயற்கைதானே நியாயம்.

கண்மூடித்தனமாக அமெரிக்காவை வெறுப்பது என்பது எனக்கு ஒருவித எரிச்சலையே உண்டு பண்ணும். ஒரு நேரத்தில் அமெரிக்காவைத் திட்டுவதே தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் ஓர் உத்தி போலத் தோன்றும். அவற்றுக்குப் பின்னணியில் பல நியாயங்கள் இருக்கின்றன என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடுகிறது. அமெரிக்கா என்று ஒரேயொரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் குறி வைத்துப் பேச வேண்டியதில்லை. உலத்தின் இன்றைய பொருளியற் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்த மொத்த மேற்குலகமும் பொறுப்பேற்றாக வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் டொமினோ தத்துவம் என்று ஒன்றைச் சொல்லிக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தது அமெரிக்கா. டொமினோ தத்துவம் என்பது டொமினோ விளைவு என்ற அறிவியற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. சீட்டுக் கட்டு சரிவது போல என்று சொல்வோம் அல்லவா? அதுதான் டொமினோ விளைவு. ஒன்று விழுந்தால் அடுத்தடுத்து எல்லாம் சரிந்து விழுவது. இந்தியர்களுக்குப் புரிய மாதிரிச் சொல்ல வேண்டுமானால், அதை டெண்டுல்கர் விளைவு எனலாம். ஒரு காலத்தில் டெண்டுல்கர் அவுட் ஆனால் வரிசையாக மற்ற எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து வெளியேறுவார்கள். அதுதான். 

அதை எதற்கு அமெரிக்கா சொன்னது என்கிறீர்களா? அவர்களுக்கு சோவியத் யூனியனில் பொதுவுடைமைக் கொள்கை வெற்றியடைவது கண்டு ஒருவித பயம். சீனா  பொதுவுடைமை நாடாக இருந்தது. அப்படியே கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும் பொதுவுடைமை நாடுகளாகின. அது அப்படியே தொடர்ந்தால், ஆசிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பொதுவுடைமை நாடுகள் ஆகி விடும் என்று பயந்தார்கள். அவர்கள் பயப்படும் விதமாக, ஐரோப்பிய நாடுகளிலும் கூட சமதர்மம் பேசும் ஆர்வம் கூடிக் கொண்டிருந்தது. அப்படியே விட்டால், உலகம் முழுக்கவுமே பொதுவுடைமை நாடுகளாகி விடும் என்கிற அச்சம் அவர்களுக்கு. அதைத் தடுக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் அதற்காகவே உலகம் முழுக்கவும் தான் ஏதாவது பிரச்சனை பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் நியாயம் சொன்னது. அதனால்தான் சோவியத் யூனியனோடு பனிப்போர் புரிந்தார்கள். இப்போது சீனாவோடு புரிந்து கொண்டிருக்கிறார்கள். வியட்நாமில் போர் புரிந்தார்கள். கொரியாவில் ஏதோ கோளாறு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், அது பழைய டொமினோ தத்துவம். இப்போது அதுவே வெவ்வேறு மற்ற பல விஷயங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அரபு நாடுகளில் சர்வாதிகாரம் ஒவ்வொரு நாட்டிலும் விழுந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவர்கள் ஆசைப் பட்டதுதான். அவர்கள் விரும்பியிராத இன்னொரு டொமினோ விளைவு விரைவில் நடக்கப் போகிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக 'மஞ்ச நோட்டிஸ்' கொடுக்கப் போகிறார்கள். அதாவது, "சாப்பாட்டுக்குக் கூட எங்கள் கையில் காசில்லை. அதனால் நாங்கள் வாங்கிய கடன் எதையும் திருப்பிக் கொடுக்க முடியாது. யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்!" என்பதே அது. முதலில் கிரீஸ் கொடுக்கும். அடுத்து ஸ்பெயின் கொடுக்கும். அதற்கடுத்து ஒவ்வொருவராக சீட்டுக் கட்டு போலச் சரியப் போகிறார்கள். அதுதான் அடுத்த பல ஆண்டுகளுக்கு உலகத்தை உலுக்கப் போகும் மிகப் பெரிய டொமினோ விளைவு. அதற்கு நம்மை ஓரளவு தயார் பண்ணி வைத்துக் கொள்வது நல்லது.

இதற்கெல்லாம் மூலக் காரணம் என்ன என்று பார்த்தால், உழைக்காமல் உட்கார்ந்து திங்க வேண்டும் என்கிற பேராசைதான். நிலைமை சரியில்லை என்று ஆன பின்னும் அதை உணர மறுத்து, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, அடுத்தவன் காசில் கடன் வாங்கி ஆட்டம் போடுவது தனி மனிதர்க்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் நல்லதில்லை. இதை உணர்த்தத்தான் இந்தப் பொருளியல் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. இது நம்மை ஓரளவு பாதிக்கும். ஆனால், மேற்குலகத்தைப் பேரளவில் பாதிக்கும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக உலகம் சமநிலையை நோக்கி நடை போடும். அதற்கிடையில் எல்லோருமே தாங்கொணாத் துன்பம் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும். AC இல்லாமல் தூங்க முடியாதோர் காற்றாடியிலும் கதவைத் திறந்து வைத்தும் தூங்கப் பழகிக் கொள்ள வேண்டும். திருட்டுகளையும் கொள்ளைகளையும் தற்கொலைகளையும் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இடைப்பட்ட காலத்தில் கறி வலிக்க உழைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கடன் அட்டையில் இருக்கும் பாக்கியை அடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இதெற்கெல்லாம் முடிவாக, உலகம் முழுக்க இல்லா விட்டாலும் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கொஞ்சம் குறையும். அது 'சுபம்' தானே!

சனி, ஜூன் 09, 2012

நண்பன் - திரைப்பட விமர்சனம்


வாரம் முழுக்க மூச்சு விடக் கூட முடியாத மாதிரி வேலை கொன்றெடுக்கிறது. சனி-ஞாயிறு மட்டும்தான் நமக்கு வேண்டிய வேலைகளைச் செய்து கொள்ள முடியும். சில சனி-ஞாயிறுகளில் அதுவும் முடியாத மாதிரிப் பார்த்துக் கொள்ளப் படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமையும் அப்படித்தான் அன்று முடிக்க வேண்டிய வேலைகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்துக் கொண்டு அன்றைய நாளைத் தொடங்கினேன். வழக்கமாகவே தொலைக்காட்சியிடம் எளிதாகச் சிக்கிக் கொள்வதில்லை. சில நேரங்களில் சிறப்பான நிகழ்ச்சி ஏதாவது கட்டிப் போட்டு விடும். அப்படி அந்த வாரத்தைத் தொடங்கி வைத்தது - "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..." என்று ஆரம்பித்து "திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... நண்பன்" என்று முடிந்த விளம்பரம். விளம்பரம் போட்டு சில நிமிடங்களிலேயே படத்தையும் போட்டு விட்டார்கள். தமிழ்நாட்டு விளம்பரங்களை இங்கு போடுவதால் பிரயோசனம் இல்லையென்பதால் இடையிடையில் விளம்பரங்களும் கடுப்படிப்பதில்லை. எப்போதாவது ஒன்றோ இரண்டோதான் விளம்பரம் வருகிறது. அதனால் தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது அவ்வளவு எரிச்சல் பிடித்த வேலையாக இல்லை.

ஷங்கர் படம் என்றால் நமக்குத்தான் தெரியுமே. வேறு யாராவது தயாரித்தால் அவரை ஆண்டி ஆக்காமல் விட மாட்டார். அவரே தயாரித்து இயக்கினால் அல்லது அவருடைய தயாரிப்பில் வேறு யாராவது இயக்கினால் காசுக்கு மோசம் இராது. இந்தப் படம் அவர் தயாரிப்பு இல்லை என்ற போதும் அவரே தயாரித்து இயக்கியது போலவே அடக்கி வாசித்திருக்கிறார். கண்ணில் நீர் வர வைக்கிற அளவுக்குக் காசைக் கொட்டாமல் எடுத்திருக்கும் அவருடைய மிகச் சில படங்களில் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அவருடைய படைப்பாற்றலில் எனக்கு மிகப் பெரும் மரியாதை உண்டு என்ற போதும் அவர் காலி பண்ணும் பணத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அது கொஞ்சம் குறையத்தான் செய்யும். உலகத் திரைப்படங்களுக்கு இணையாக எடுக்கும் ஒரே இயக்குனர் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் ஒரு திரைப்படத்துக்கு இம்புட்டுத் துட்டைக் கொட்டுகிற அளவுக்கு நாம் இன்னும் பணக்காரர்கள் ஆகவில்லை என்பதால் அது எனக்கு நெருடத்தான் செய்கிறது.

அடுத்தது நம்ம இளைய தளபதி. அவரை அடக்கி வாசிக்க வைப்பது அதை விடப் பெரிய பிரச்சனை. கொடுமைக்கார வில்லனைப் பார்த்து தொடையைத் தட்டிக் கத்துகிற காட்சி ஒன்று இல்லையென்றால் அந்தப் படத்துக்கு அவர் ஒத்துக் கொள்ளவே மாட்டார் போல என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஷங்கர் ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார். அங்குதான் ஷங்கரின் திறமை நிரூபணம் ஆகிறது. நாயகன் அசாதாரணத் திறமை கொண்டவனாக இருப்பதில் நமக்கொன்றும் வருத்தமில்லை. அது இந்தப் படத்தில் வருவது போன்ற திறமையாக இருந்தால் எல்லோருக்குமே நல்லது. அதை விடுத்து ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிகாமணிகள் நாம் நிறையப் பார்த்து விட்டதால் அதையே திரும்பத் திரும்பப் பார்க்கப் போரடிக்கிறது. அவ்வளவுதான்.

IIT வாழ்க்கை பற்றிய FIVE POINT SOMEONE என்கிற சேத்தன் பகத்தின் நாவலை 3 IDIOTS என்று இந்தியில் எடுத்துச் சக்கைப் போடு போட்டது. அண்ணன் அமீர் கான் கலக்கு கலக்கென்று கலக்கி இருந்ததாக தினமும் அலுவலகத்தில் கேள்விப் பட்ட நினைவு இருக்கிறது. அதைத் தமிழில் எடுக்கப் போவதாகக் கேள்விப் பட்டபோது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மூல நூலை நான் படித்ததில்லை - இந்தியில் வந்த படத்தைப் பார்த்ததில்லை என்பதால், பல காட்சிகள் நூலில் எப்படி எழுதப் பட்டிருக்கும் - இந்தியில் எப்படி எடுக்கப் பட்டிருக்கும் என்று பின்னணியில் கணக்கு ஓடிக் கொண்டே இருந்தது. எடுத்துக்காட்டாக, விருமாண்டி சந்தானம் என்ற வைரஸ் என்ற கல்லூரி முதல்வரின் பெயர், இந்தியில் எப்படி இருந்திருக்கும்? வீரேந்திர சேவாக் மாதிரி ஏதாவது ஒரு பெயராக இருந்திருக்கும் என நினைக்கிறேன்! கொசக்சி பசப்புகழ் இந்தியில் என்னவாக இருந்தாரோ தெரியவில்லை.

விஜய் நடிப்பதாக இருந்து சூர்யா நடிப்பதாக மாறி மீண்டும் விஜய்யே நடிப்பதாக ஆன கதையெல்லாம் அவ்வப்போது கேள்விப் பட்டுக் கொண்டேதான் இருந்தேன். சூர்யா நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றாலும் விஜய்யும் தன் பணியை நன்றாகவே செய்திருக்கிறார். விடுவாரா ஷங்கர்? ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் என எல்லோருமே வாங்கிய காசுக்கு நன்றாக உழைத்திருக்கிறார்கள்.

வழக்கம் போலவே கதாபாத்திரங்களின் பெயர்கள் கலக்கல். பஞ்சவன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில், விருமாண்டி சந்தானம் போன்ற பெயர்கள் ஷங்கரின் ட்ரேட் மார்க். கொசக்சி பசப்புகழ் கூட தமிழும் ஐரோப்பியமும் கலந்த ஓர் அருமையான பெயர்.

பெயர்கள் மட்டுமல்ல. கதாபாத்திரங்களை அமைத்திருக்கும் விதமும் சூப்பர். இது சேத்தன் பகத்துக்குச் சேர வேண்டிய பெருமையாக இருக்கும் என நினைக்கிறேன். முதலில், சத்யராஜின் கதாபாத்திரம் - விருமாண்டி சந்தானம். கல்லூரி முதல்வரான இவர், படிப்பும் அதன் மூலம் அடையும் உலகியல் வெற்றியும் மட்டுமே வாழ்க்கையில் எல்லாம் என்று எண்ணுபவர். கல்வித் துறையில் இருக்கிற எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். கல்வித் துறையில் மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. வாங்கும் சம்பளத்துக்குப் பாதி கூட உழைக்காத ஒரு கூட்டம் ஒரு புறம். எதற்குள் நுழைந்தாலும் அதே முழு நேரக் கிறுக்காக மாறி விடும் கூட்டம் ஒரு புறம். இது ஒரு மிகப் பெரும் சமூகப் பிரச்சனை. தான் செய்யும் பணியில் ஆர்வம் இருப்பது நல்ல பண்பு. அதிலேயே மூழ்கிப் போவதும் அதை விட நல்ல பண்பு. ஆனால் உலகத்தையே அந்த ஒற்றைக் கண்ணாடியில்தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பதுதான் கொடுமை. எழுதுபவர்கள் எழுதுவது மட்டுமே வாழ்க்கை என்பது போலப் பேசுவதும், வாத்தியார்கள் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை என்பது போலப் பேசுவதும், சாமி கும்பிடுபவர்கள் எந்த நேரமும் இறைவனின் பாதத்தில் விழுந்து கிடப்பதே என் பணி என்பதும், சமூகப் பணி ஆற்றுபவர்கள் உலகத்தில் உள்ள எல்லோருமே தன்னைப் போலவே குடும்பத்தை நடு வீதியில் விட்டு விட்டு வர வேண்டும் என்று சொல்வதும் போல ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கிறுக்காகி விடுவது நல்லதில்லை. அதற்கு அப்பால் தொண்ணூற்றி ஒன்பது விஷயங்கள் இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்வதே சக மனிதர்களை சரியாக நடத்தவும் மதிக்கவும் உதவும். கல்வித் துறையில் இருப்போர் மட்டுமல்ல எல்லா வீடுகளிலுமே இப்போது இது போன்ற ஓரிரு சமூக விரோதிகள் ("இவர்களையும் கூட அப்படிச் சொல்லலாமா?" என்று விழிக்கிறீர்களா? சொல்லலாம்! தான் சரியென நினைக்கும் ஒன்றுக்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் எல்லோருமே சமூக விரோதிகள்தானே!) உருவாகி விட்டார்கள்.

வெங்கட் இராமகிருஷ்ணனின் தந்தை இராமகிருஷ்ணனும் அப்படியொரு சமூக விரோதிதான். புகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் மிகுந்த தன் மகனை எல்லோரையும் போல் பொறியாளர் ஆக்க ஆசைப்படுகிறார். தன் காலத்துக்குப் பின்பும் தன் பிள்ளை சாப்பாட்டுக்குப் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் என்று ஆசைப் படுவதும் அதற்கான சரியான துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் சொல்வதும் தந்தை என்ற முறையில் அவருடைய கடமை - நல்லெண்ணம். பிள்ளையைப் பெற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போகிற ஆட்களும் இருக்கிற நாட்டில் இப்படியான ஒரு சமூக மாற்றம் நல்ல மாற்றம்தான். அது அளவுக்கு மிஞ்சிப் போகையில்தான் பிரச்சனையாகிறது. உலகத்துக்கு இலட்சக் கணக்கான புகைப்படக் கலைஞர்கள் தேவைப் படவில்லை. ஆனால், பொறியாளர்கள் தேவைப் படுகிறது. எல்லோரும் தனக்கு விருப்பமுள்ள துறையைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்றால் முக்கால்வாசிப் பேர் யாருக்கும் பயனில்லாத ஏதோவொரு வேலையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு, படிக்கிற காலத்தில் என்னை என் நோக்கம் போல விட்டிருந்தால், நாள் முழுக்க ஒருத்தருக்கும் ஒரு பயனும் இல்லாமல் புத்தகங்களைப் படிப்பவனாகவும், தமிழ் நாட்டில் வெளியாகும் இதழ்கள் அனைத்திலும் கதையும் கட்டுரையும் எழுதுபவனாகவும், ஊர் ஊராகப் போய் மேடையில் கவிதை வாசித்துக் கைத்தட்டு வாங்குபவனாகவுமே இருக்க விரும்பியிருப்பேன். அது கூட ஒரு வழியில் சோம்பேறித்தனம் தானே.

"காசுக்கு மாரடிக்கிறோம்!" என்று இன்று செய்து கொண்டிருக்கும் வேலையைச் சுருக்கமாகச் சிறுமைப் படுத்தி விடலாம். அதை அப்படி மட்டும் பார்க்க முடியாது. அதுதான் இந்தச் சமூகம் என்னிடம் இருந்து எதிர் பார்க்கும் வேலை. அதனால்தான் அவ்வளவு சம்பளம் கொடுக்கிறது (சம்பளம் கொடுப்பதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் என்பது வேறொரு விஷயம்!). 'நான் ஒருத்தருக்கும் பயனில்லாத வாசித்தலும் எழுதுதலும் செய்து கொண்டிருப்பேன். அதற்கு இதே மாதிரிச் சம்பளம் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால், சமூகத்தைக் கோளாறு சொல்லிப் புலம்புவேன்!' என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்க முடியாது. எழுதிக் கொண்டிருக்கிற எல்லோரும் ஜெயகாந்தன் ஆக முடியாது. அதை அந்த வயதில் சொன்னால் புரிந்திருக்காது. நுழைந்த போது கணிப்பொறிகளைக் கண்டால் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தேன். அந்த வேலை நம் வாழ்க்கை முறையை இவ்வளவு மாற்றியிருக்கிறது - நம்மை விடப் பல மடங்கு தரமான ஒரு வாழ்க்கையை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க உதவுகிறது என்கிற போது இன்று அந்த ஆர்வம் வந்து விட்டது. ஆனால் இதெல்லாம் நம்மைப் போன்ற சாமானியக் குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கான கதை. சேத்தன் பகத் சொல்லியிருப்பது விரும்பியதைத் தேர்ந்தெடுத்தாலும் கஞ்சிக்குக் கஷ்டம் வராத மேல்நடுத்தர வர்க்கத்துக் கதை. நாம் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து கொள்ளும் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி ஓடும் வேளையில் அதெல்லாம் அமையப் பெற்றவர்கள் விருப்பம் இருக்கிற துறையில் பெரிய ஆளாக முயல்கிற அதற்கடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி ஓட வேண்டும் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து என்று நினைக்கிறேன்.

நான் என்ன படிக்க வேண்டும் என்கிற முடிவை எடுக்கும் உரிமை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு இல்லை என்பது போலவே, பிள்ளை படித்து முடித்து வந்தால் வயதான காலத்தில் நிம்மதியாக மூன்று வேளைக் கஞ்சி குடிக்க முடியும் என்று எண்ணிப் படிக்க வைக்கும் பெரியவர்களைப் பட்டினி போடும் உரிமையும் எனக்குக் கிடையாதே. தான் ஆக முடியாததைத் தன் பிள்ளையை ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது நியாயமான ஆசைதான். அதில் பிள்ளையின் கனவுகளைக் காவு கொடுப்பதில் எந்த அளவுக்குப் போகலாம் என்பதே எல்லோரும் கவனமாக இருக்க வேண்டியது. எல்லாப் பிள்ளைகளுக்குமே தம் எதிர்காலம் பற்றிய தெளிவு இருப்பதில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெற்றோரின் வழி காட்டுதல் தேவைப் படத்தான் செய்கிறது. ஆனால், எல்லாப் பெற்றோருமே, "என் பிள்ளை உன் பிள்ளையை விடப் பெரிய ஆள்!" என்று எல்லோரிடமுமே நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அதற்காகக் குருவி தலையில் பனங்காயை வைக்கிறார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அந்த வகையில் சேத்தன் பகத்தின் கோபம் நியாயமானதே.

பொறியியல் படித்து அதன் பின் எம்.பி.ஏ. படித்து அமெரிக்காவில் போய் வங்கியில் வேலை பார்க்கும் கொடுமை பற்றித் தன் நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அந்த வகையில் நாம் எல்லோருமே பல் குத்தக் கூட உதவாத பல பாடங்களைப் படித்து ஏகப் பட்ட இளமைக் காலத்தை வீணாக்கி விட்டோம் என்பது உண்மைதான். வங்கியில் வேலை பார்க்கப் போகிறவன் ஆரம்பித்திலேயே வணிகவியலும் கணக்குப் பதிவியலும் படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! வேதியியல் ஆய்வுக் கூடத்தில் வீணான அமிலங்களையும் விலங்கியல் ஆய்வுக் கூடத்தில் வீணான தவளைகளின் உயிர்களையும் மட்டுமல்ல, அவற்றில் வீணான வாழ்க்கையின் மிக முக்கியமான நேரத்தையும் மிச்சப் படுத்தியிருக்கலாமே. அதற்குக் காரணம் விருமாண்டி சந்தானங்களும் இராமகிருஷ்ணன்களுமே என்பதுதான் உண்மை.

ஸ்ரீவத்சன் போன்று வாழ்க்கை முழுக்கவும் வெற்றியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வோர் ஆண்டும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. அவர்களும் அவர்களுடைய பெற்றோரும்தான் இந்த உலகத்தை ஓட்டப் பந்தயக் களமாக்கி, அருமையான இளமைக் காலத்தையும் அதன் பின் இல்லற வாழ்க்கையையும் சராசரி மனிதர்கள் அளவுக்கு அனுபவிக்க முடியாமல், வெளியில் காட்டிக் கொள்வதற்கு மட்டும் பெருமையாக இருக்கிற வாழ்வற்ற வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து மடிகிறார்கள். அந்த போதைக்குள் ஓரளவு மாட்டிக் கொண்டவன் என்ற முறையில், கண்ணை மூடிக் கொண்டு வெறி பிடித்து ஓடிக் கொண்டிருக்கிற நம்மையெல்லாம் ஒரு நிமிடம் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து யோசிக்க வைத்ததன் மூலம், இந்தப் படம் அதன் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.

மற்றபடி, இலியானா, தனுஷ்கோடி, ஆள் மாறாட்டம், "ஆல் இஸ் வெல்" எல்லாம் திரைக்கதைக்கு வலுச் சேர்க்கும் சராசரித் தமிழ் பட உத்திகளே.

வெள்ளி, ஜூன் 08, 2012

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (2/3)

மலர்ச்சி...

தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்த நா.பா.வின் நடை அன்றைய தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தன் முதல் புதினத்திலேயே ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு செய்யுளோடு - கவிதையோடு தொடங்கிய அந்தப் புதுமை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கவிதைக்கும் பேச்சுக்கும் மரியாதை இருந்த காலமாதலால் அரவிந்தனும் பூரணியும் அன்றைய இளைஞர்களின் மனதை எளிதில் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பெரிதாக நினைத்த கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதன் ஆற்றலை ஓரளவு உணர முடிந்தது. இத்தோடு கவிதையும் பேச்சும் அழிந்து விடும் என்று சொல்வதற்கில்லை. கவிதை கண்டிப்பாக வாழும். கைபேசியில் குறுந்தகவலாக அனுப்ப முடியும் அளவுக்கு எழுதப் படும் காதல்க் கவிதைகள் மட்டும் வாழும். பிழைப்புக்கு உதவும் வகையில் இருக்கும் பேச்சாற்றல் மட்டும் வாழும். அதன் பின் குறிஞ்சி மலர் கூட அன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி ரீமேக் பண்ணப் பட்டால்தான் படித்துப் பார்க்கப் படும்.

"பாக்கியைக் கொடுய்யா!" என்று கேட்கப் போகும்  பூரணியிடம், புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் புன்னகை பூக்கக் கையெடுத்துக் கும்பிட்ட காட்சியை ஆசிரியர் விளக்கியிருந்த விதம் நன்றாக இருந்தது. அது போலக் கும்பிடுவோர் நிறையப் பேரைப் பார்த்திருக்கும் அனுபவம் இருப்பதால் அதை முழுமையாகப் புரிந்து ரசிக்க முடிந்தது. என் உறவினரே ஒருவர் இருக்கிறார். கொடுத்த காசைக் கேட்கப் போனால், வாயெல்லாம் பல்லாக வரவேற்பார், வித விதமாகச் சாப்பாடு வாங்கிப் போடுவார், எல்லாம் முடிந்ததும் ஒரு கும்பிடு போடுவார். அதன் பொருள், "இதுக்கு மேல் ஒன்றும் கேட்கக் கூடாது. மரியாதையாக இடத்தைக் காலி பண்ணு!" என்பது. புரிந்தவர்கள் பேசாமல் கிளம்பி விடுவார்கள். புரியாத மக்கு மண்டையர்கள் கேவலப் பட்டுத்தான் கிளம்புவார்கள். இதெல்லாம் ஒரு கலை. அது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் அந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் கையேந்தி "ஐயா... சாமி... தர்மம் போடுங்கய்யா..." என்று அலைவது மேல் என்கிறீர்களா? ஒத்துக் கொள்கிறேன்!

மதுரை நகரின் அழகு பற்றிப் பல இடங்களில் சுவைத்துச் சுவைத்து எழுதியிருக்கிறார் நா.பா. சங்க காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் மதுரை அப்படி இருந்திருக்கலாம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை என்ற போதிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அந்த அளவுக்கு அழகாக இருந்திருக்குமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அதன் பின்பு படையெடுப்பு எதுவும் நடக்க வில்லை. புதிதாக யாரும் வந்து புகுந்து விட வில்லை. அதே ஆட்கள்தான் அந்த ஊரில் ஆண்டு கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அதெப்படி ஐம்பதாண்டு காலத்தில் ஒரு நகரம் பண்பாட்டு ரீதியாக இப்படியோர் அதல பாதாள வீழ்ச்சியைச் சந்தித்திருக்க முடியும்?! நான் பார்த்த-பார்க்கும் மதுரையில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. இப்போதெல்லாம் மதுரை என்றாலே, பிக்பாக்கெட் அடிக்கிற - பித்தலாட்டம் செய்கிற - கூலிக்குக் கூப்பாடு போடுகிற கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது (மதுரைக்காரர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். மதுரை, உங்களைப் போன்ற நல்லவர்களே இல்லாத ஊர் என்று சிறுமைப் படுத்துவதல்ல என் நோக்கம். இந்தப் புதினத்தில் வரும் அளவுக்கு மதுரை இப்போது நல்ல ஊராக இல்லையே என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே முயல்கிறேன்!).

ஒருவேளை அப்போதைய மதுரை என்பது கோபுரங்களைச் சுற்றிய மையப் பகுதி மட்டுமாகவும் அங்கு மட்டும் அந்த அழகும் பொலிவும் இருந்திருக்கக் கூடும். இப்போதும் நிறையப் பேர் காலையில் எழுந்ததும் தலைக்கு இரண்டு செம்புத் தண்ணீரை ஊற்றி விட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக நெற்றி நிறையப் பட்டை அடித்துக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் எல்லோருமே குறிஞ்சி மலரில் வருவது போல எப்போதும் இறைவனடி போற்றும் அடியார்ப் பெருந்தகைகளா என்பதுதான் தெரியவில்லை.

தொலைக்காட்சித் தொடரில் பார்த்ததாகச் சென்ற இடுகையில் பேசிய பல காட்சிகள் (அரவிந்தனும் பூரணியும் திருப்பரங்குன்றம் மலையில் பெயர் பொறித்தல், பொற்றாமரைக் குளத்தின் முன் சந்தித்தல் போன்ற காட்சிகள்) இடுகையிட்ட அடுத்த நாளே நூலிலும் வந்து விட்டன. பரவாயில்லை. தொலைக்காட்சித் தொடருக்கும் மூல நூலுக்கும் ஓரளவு தொடர்பு இருக்கும் போலத் தெரிகிறது. :)

அடுத்ததாக நான் சொல்ல மறந்த இன்னொன்றும் வந்து விட்டது. அரவிந்தனுடைய நண்பனாக முருகானந்தம் என்றொரு கதாபாத்திரம். தொலைக்காட்சியில் தொடர் பார்த்த போதே எனக்கு அரவிந்தனை விட முருகானந்தத்தை மிகவும் பிடிக்கும். அரவிந்தன் நல்லவன் - நாயகன் என்றாலும் கொஞ்சம் நளினம் கிளினம் என்று ஒரு மாதிரியாகச் சித்தரிக்கப் பட்டிருப்பான். ஆனால் முருகானந்தம் தடாலடிப் பேர்வழி. தவறைத் தட்டிக் கேட்டால் மட்டும் போதாது; அதைச் செய்பவர்களை ரெண்டு தட்டுத் தட்டவும் வேண்டும் என்று சொல்கிற ஆள். அதெல்லாம் செய்ய முடியாத கையாலாகாதவர் அனைவருக்கும் அப்படிப் பட்டவர்களைத்தானே திரையில் காணும் போதும் கதைகளில் படிக்கும் போதும் அளவிலாமல் பிடிக்கிறது. அது மட்டுமில்லை, அவன் ஒரு தொழிற்சங்கவாதியும் கூட. அதனால் இயல்பாகவே அவனை நிறையப் பிடித்து விட்டது. முருகானந்தமாக நடித்தவரின் முகம் இன்னமும் அப்படியே நினைவிருக்கிறது. டி இராஜெந்தரின் தம்பி போல - ஆனால் இன்னும் கொஞ்சம் களையாக இருப்பார். அவர் பெயர் கூட நினைவிருக்கிறது. வெங்கடேஷ். அந்த நேரத்தில் சில திரைப்படங்களில் கூட துணைப் பாத்திரங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன்.

இதோ அடுத்த அத்தியாயமும் வந்து விட்டது. சினிமா மோகத்தில் வசந்தி தொலைந்து போவதும் அவளை அழைத்து வரச் செல்லும் குழுவில் முருகானந்தமும் இடம் பெறுவதும் வந்து விட்டது. நல்ல குடும்பத்துப் பெண்களிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற கிறுக்கு அப்போதே ஆரம்பித்திருக்கிறது. அதில் ஆரம்பித்ததுதான் குடும்பப் பெண்கள் குத்துப் பாட்டுக்கு ஆடும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. திருச்சியில் வைத்து முருகானந்தம் அவளைக் காத்தோடு அறைகிற காட்சி ஒன்று தொலைக்காட்சித் தொடரில் கண்ட நினைவு. அப்போது மிகவும் ரசித்துப் பார்த்த காட்சிகளில் ஒன்று. அப்போதைய வயதும் பின்னணியும் அப்படி. மிடுக்கான பெண்களை அட்டுப் பையன்கள் அடித்தால் பார்த்துப் பரவசப் படும் காலம் அது. அதுவே இப்போதாக இருந்தால் பார்த்துக் கொதித்துப் போயிருப்போம். இல்லையா?! ஆனால் புதினத்தில் அந்தக் காட்சியே இல்லை. ஆனால் அதன் பின்பு இருவருக்கும் காதல் உண்டாகிற கதை அப்படியேதான் இருக்கிறது. வசந்தியாக நடித்தவரின் முகம் கூட நினைவில் இருக்கிறது. பெயர் கூட இராஜஸ்ரீ அல்லது ஏதோவொரு ஸ்ரீ என்பதாக நினைவு. அதன் பின்பு அவரும் சில திரைப் படங்களில் தங்கையாக நடித்துக் கண்ட நினைவும் இருக்கிறது.

வசந்தியின் குடும்பம் பற்றிக் கொஞ்சம் பேசி விடுவோம். வசந்தியின் தந்தை இலங்கையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவருடைய காலத்தில் குடும்பத்தோடு அங்குதான் இருந்திருக்கிறார்கள். அவ்வப்போது தமிழகம் வந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். இலங்கைக்கும் தமிழகத்துக்குமான உறவு எப்படி இருந்தது என்பதைப் பிற்காலச் சந்ததிக்குச் சொல்லும் ஒரு சிறிய சாட்சியாக இந்த நூலும் இருக்கும். அவருடைய தந்தையாரின் மறைவுக்குப் பின் மதுரையில் அவருடைய தாய் தன் இரு பெண்மக்கள் சகிதம் செட்டில் ஆகி விடுகிறார். அவர்களுக்குக் கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் இருக்கிறது. அந்த அளவுக்கு வசதி. மூத்த மகள் வசந்தா தறுதலையாகத் தலையெடுக்கிறாள். அடுத்த பெண் செல்லம் அடக்கமும் பண்பும் நிறைந்த அழகுப் பிள்ளையாக வளர்கிறாள். ஒரே வீட்டில் பிறந்த இரு பெண்பிள்ளைகள் இப்படி எப்படி முற்றிலும் மாறுபட்டவர்களாக வருகிறார்கள் என்பது நாம் இப்போதும் பல வீடுகளில் பார்த்து ஆச்சரியப் படுவதுதானே. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எல்லாமே ஒரு மாதிரித்தான் வளரும் என்கிற வார்ப்புகள் (STEREOTYPES) எல்லாம் இல்லாமல் பார்த்துக் கொண்டது அன்றைய தேதிக்குப் பெரிய சாதனை.

அதே போலவே ஒழுக்க சீலர் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகன் - பூரணியின் தம்பி - திருநாவுக்கரசு என்று பெயர் கொண்டவன், தறுதலையாவதும் அந்தக் காலத்திலேயே எதார்த்தம் அறிந்து எழுதி இருப்பதைக் காட்டுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பே பதினைந்து வயதுப் பையன் சீட்டாடுவதும் பீடி குடிப்பதும் நடந்திருக்கிறது. ஒருவேளை, அது மதுரை போன்ற மாநகரங்களில் மட்டுமாக இருக்கலாம். இது போன்ற சேட்டைகள் சிறுநகரங்களையும் கிராமங்களையும் சென்று சேரக் கொஞ்சம் காலம் பிடித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். சினிமாக்காரர்கள்தான் அதற்குப் பிந்தைய காலத்திலும் பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், நல்லவர் பிள்ளை நல்லவர், கெட்டவன் பிள்ளை ரெம்பக் கெட்டவன் என்பது போன்ற பாடாவதியான கதைகளைச் சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்கள் போலும். இப்போது அதுவும் கூடப் பெருமளவில் குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

எதார்த்தத்துக்கு ஏற்பற்ற பல விஷயங்களும் இந்தக் கதையில் இருக்கின்றன. வசந்தியின் அம்மா மங்களேசுவரி அம்மாள் அவ்வளவு நல்லவராக எப்படி இருந்தார் என்பது புரிபடவில்லை. மதுரக் கோட்டையில் அப்படியெல்லாம் இருந்தால் மங்களேசுவரி அம்மாளை மங்குனி அம்மாள் என்று நினைத்து அஞ்சு வருடங்களில் ஆண்டியம்மாள் ஆக்கி இருப்பார்கள். நாயகனும் நாயகியும் வர்ணிக்கிற அளவுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் பாத்திரங்களைப் படைத்திருப்பதும் கூட அப்படியோர் அம்சமே. ஆண்களைக் கூட அசிங்கமாகக் காட்டுகிற முதிர்ச்சி இப்போதைய படைப்பாளிகளுக்கு வந்து விட்டது. பெண்களை அழகுக்கு அப்பாற்பட்டு நாயகியாகச் சித்தரிக்கும் காலம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அல்லது, அப்படியான கதைகளைப் படிக்க வில்லை - படங்களைப் பார்க்க வில்லை என்றும் இருக்கலாம். அதே வேளையில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அழகாய் இருப்பவர்களின் மற்ற திறமைகள், சர்க்கரை அதிகம் போட்ட காப்பி போல நம் சமூகத்தின் கண்களுக்குச் சற்றுத் தூக்கலாகத் தெரியும் என்பதும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய உண்மை. அந்த வகையில் நா.பா.வின் பாத்திர அமைப்பு எதார்த்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதென்றும் ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தக் கதையின் முதல் பாதியில் சேவை மனப்பான்மையும் நல்லெண்ணமும் மித மிஞ்சித் தென்படுகின்றன. ஒருவேளை அந்த நேரத்தில் நா.பா.வைச் சுற்றி அவ்வளவு நல்லவர்கள் வாழ்ந்தார்களோ என்னவோ. நல்லவர்கள் அதிகமிருக்கும் கதைகளில் மட்டுமல்ல; மெய் வாழ்க்கையிலேயே அடுத்தடுத்து நிறைய நல்லவர்களைக் கண்டால் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நாம் வாழும் சூழல் இருக்கிறது. அப்படியிருக்கையில், எம்.ஜி.ஆர். படங்களில் வருவது போல, கையில் கிடைப்பதையெல்லாம் பங்கு வைக்கும் அரவிந்தனும், முன் பின் தெரியாத பூரணிக்கு கணக்குப் பார்க்காமல் செய்யும் மங்களேசுவரி அம்மாளும் சில நேரங்களில் காமெடிக் கேரக்டர்கள் போல் இருக்கிறார்கள். அதற்குக் கால இடைவெளிதான் காரணமாக இருக்க வேண்டும்.

மங்கையர் கழகத்தில் இருக்கும் பெண்கள் நிறையப்பேர் வம்பளப்பதே வேலையாய்க் கொண்டவர்கள் என்கிற வரி, இரண்டு முக்கியமான கருத்துக்களைச் சொல்லிச் செல்கிறது. ஒன்று, சங்கம் வைப்பதில், அது எந்தச் சங்கமானாலும் சரி, எந்தக் காலத்திலும் மதுரையை அடித்துக் கொள்ள முடியாது. அப்போதே அப்படி ஒரு சங்கம் தோன்றி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இரண்டு, மகளிர் சங்கங்கள் என்றாலே, வம்பளக்கும் பெண்களின் கூடாரம் என்கிற நிலைமையோ கருத்தோ (கவனமாகப் பேசணுமோல்லியோ!) அந்தக் காலத்திலேயே இருந்தும் இருக்கிறது. இன்னொன்று, பூரணியின் சொற்பொழிவுக்குப் படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டியதைப் பற்றிப் படித்த போது, சுவரொட்டி ஒட்டுவதிலும் மதுரை எப்போதும் முன்னோடிதான் என்பதும் உறுதியாகிறது. "வெற்றிகரமாக உச்சாப் போன அருமை அண்ணனுடைய அன்பு மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்!" என்கிற ஒன்றுதான் நான் மதுரையில் இன்னும் வாசித்திராத ஒரே சுவரொட்டி வாசகம். மற்றபடி எல்லாத்துக்கும் எல்லா விதமான வார்த்தைகளோடும் சுவரொட்டி ஒட்டி ஒட்டி மதுரைச் சுவர்கள் அனைத்தும் மரத்துப் போய் விட்டன என்பதை மதுரையையும் அதைச் சுற்றிலும் இருக்கிற ஊர்களையும் சேர்ந்த எம் போன்றவர்கள் நன்கறிவர்.

ஒரு கட்டத்தில், எவ்வளவோ திறமையோடும் பேரோடும் புகழோடும் இருந்த போதும் தனக்குத் திருமணமாகாத ஒரு காரணத்துக்காக சமுதாயத்தில் தன்னைப் பற்றிப் பிறர் இழித்துப் பேசுவதைக் கேட்டு உடைந்து போகிறாள் பூரணி. என்னதான் சாதித்தாலும், பேரோடும் புகழோடும் வாழ்ந்தாலும், சாதாரண மக்கள் வாழும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியா விட்டால் வாழ்க்கை நிறைவற்றதாகத்தானே இருக்கிறது என்று எண்ணி எண்ணி அழுகிறாள். இதுதான் இலட்சியவாதிகளுக்கு நேரும் மிகப் பெரிய நெருக்கடி. இதை வெல்ல முடியாமல் மாட்டிக் கொள்வோர்தான் முக்கால்வாசிப் பேர். அந்தச் சிந்தனை வரும்போதே முளையிலேயே கிள்ளி எறிய முடிகிறவர்கள் மிக மிகக் குறைவே. அப்படியே எறிந்து கொண்டே இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுக் கொல்கிறவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவாவது சமரசம் ஆகி விடுவார்கள் சிலர். அதுதான் மனிதர்களைத் தம் திறமையைப் பிறருக்காகவன்றிப் பிழைப்புக்காகப் பயன் படுத்திக் கொள்வோராக ஆக்குகிறது. அது கூடப் பரவாயில்லை. இன்ன பிற சிற்றின்பங்களுக்காகக் கூடப் பயன்படுத்தப் பணிக்கிறது.

மேலும் மலரும்...

வியாழன், ஜூன் 07, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 5/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடர்ச்சி...

அலுவலக வாயிலில் இருந்த காவலாளர் சிரிக்காமலே வரவேற்றார். 'மீண்டும் ஒரு முறைத்த முகமா?!' என்று எனக்கு ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆட்களைப் புன்முறுவலோடு வரவேற்க வேண்டும் என்று இங்கே நம் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி எல்லாம் கொடுக்கிறோம். அதையெல்லாம் பார்த்து ஒருவேளை அது மேற்குலகப் பழக்கமாக இருக்கும் போலும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்படியானால் அங்கே இருக்கிற காவலாளர்கள் ஏன் நம்மை மட்டும் சிரித்து வரவேற்பதில்லை?! அங்கே இருந்த காலம் முழுக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் புன்னகை விவகாரம் என்னை விடாமல் துளைத்துக் கொண்டே இருந்தது. போகட்டும், காவலாளர்கள் தேவையில்லாமல் சிரிக்கவெல்லாம் கூடாது என்று விதிமுறைகள் இருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

வரவேற்பறையில் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அவருக்கும் சிரித்த முகத்தோடு காலை வணக்கம் சொன்னேன். மீண்டும் ஏமாற்றம். அவரும் சிரிக்காமலே பதில் வணக்கம் சொன்னார். அதன் பின்பும் பத்து நாட்கள் நான் சிரித்துச் சிரித்து வணக்கம் சொல்லிப் பார்த்தேன். அவர் பதிலுக்குச் சிரிக்காமலே வணக்கம் சொன்னார். ஒருவேளை நம்மையெல்லாம் கண்டாலே அவர்களுக்குப் பிடிக்காதோ என்று கூடத் தோன்றியது. ஆனால் என்னுடன் வந்த மற்றொரு பெண் சகாவிடம் நன்றாகச் சிரித்துத்தான் பேசினார். பெண் என்பதாலா, அவர் என்னை விடச் சிவப்பாக இருந்ததாலா, அவர் என்னை விட நன்றாகப் பேசியதாலா, என்ன கருமத்தால் என்று என்னால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. நம் மொகரையில் ஏதோ கோளாறு இருக்கிறதோ என்னவோ என்று எண்ணிக் கொண்டேன். அல்லது, என் பேச்சில் அவர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு ப்ளீஸ், தேங்க்ஸ், சாரி எல்லாம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

அங்கே போகும் நம்மவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சனை. சின்ன வயதில் இருந்தே ரெம்பவும் குழைவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. பின்னர் ஒரு காலத்தில் அதை நடிப்புக்காகச் செய்வதுதான் தப்பு; உண்மையாகவே அப்படி நடந்து கொள்வது நாகரிகம் என்று அந்த நாகரிகத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆனாலும் சாரி சொல்லும் அளவுக்கு தேங்க்ஸ் அல்லது ப்ளீஸ் வருவதில்லை. அங்கு சென்றால் அது நிறையச் சொல்ல வேண்டும் என்று தயாராகவே சென்றேன். இருந்தாலும் மனிதர்கள் இவ்வளவு சொல்லக் கூடாதப்பா என்றுதான் தோன்றியது.

நம்மிடம் இருக்கும் நியாயம் என்னவென்றால், 'பெரும் பெரும் உதவிகளையெல்லாம் செய்து விட்டே நாங்கள் எல்லாம் பேசாமல் நன்றி எதிர் பார்க்காமல் போகிறவர்கள். நீங்கள் என்னப்பா விலகி நிற்பதற்கு... விக்கல் எடுப்பதற்கு... என்று எது எதுக்கோ எல்லாம் இப்படி நன்றியும் மன்னிப்பும் அள்ளிக் கொட்டுகிறீர்கள்?' என்பது. அதுவும் நியாயம்தான். ஆனால் அது நம்ம ஊர் நியாயம். அவுக ஊர் நியாயம் என்ன தெரியுமா? 'சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட இதெல்லாம் சொல்லிப் பாருங்கள். நல்லெண்ணம்-நாகரிகம் எல்லாம் கூடும்!' என்பது. அதுவும் சரிதான். அப்படியெல்லாம் சொல்லிப் பழகியிருந்தால் நங்குன்னு நம் மண்டையில் எதையாவது போட்டு விட்டு அதற்கும் நம்மையே திட்டி விட்டுப் போகும் பண்பாடெல்லாம் நம் மண்ணில் வந்திராது. என்ன சொல்கிறீர்கள்? கூடக் கொஞ்ச காலம் இருந்திருந்தால், கூடக் கொஞ்சம் நாகரிகங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கலாம். என்ன செய்ய? போக எட்டியது இருக்க எட்டவில்லை.

உள்ளே நுழைந்து வேலைகள் ஆரம்பித்தன. பின்னால் ஒருவர் வரும்போது கதவைத் திறந்து தான் மட்டும் போய் விட்டு கதவை அப்படியே விட்டு விடக் கூடாது; அவரும் கடந்த பின்தான் விட வேண்டும் என்கிற பண்பாடெல்லாம் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே வெளிநாடு போய் வந்தவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதால் அதெல்லாம் எளிதாகச் செய்ய முடிந்தது. நம்மைச் சுற்றியிருக்கும் எல்லோருமே அதைச் செய்கிறார்கள் என்பதுதான் ஓரளவு ஆச்சரியம். அதற்குப் பெயர்தானே பண்பாடு. எல்லோருமே செய்வது மட்டுமில்லை. அதனால் பயன் பெரும் எல்லோருமே வாய் நிறையச் சிரித்து நன்றி சொல்கிறார்கள். இத்தனை முறை சிரித்தால் - நன்றி சொன்னால், வாய் வலிக்காதா இவர்களுக்கு என்று கூட எண்ணத் தோன்றியது சில நேரங்களில். ஆனால் அப்படியெல்லாம் பதில் பெறுகையில்தான் இது போன்ற பழக்கங்கள் மென்மேலும் வலுப் பெறும். இல்லாவிட்டால், உதவி செய்பவனையும் முறைத்து முழுங்கி விட்டுப் போகும் பண்பாடுதானே வளரும். ஆக, அந்த ஊரிலும் இரண்டு விதமான ஆட்களும் இருக்கிறார்கள். சிரித்தால் பதிலுக்குச் சிரிக்காதவர்களும் இருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விரட்டி விரட்டிப் புன்னகைப்போரும் இருக்கிறார்கள். எங்கே யார் இருக்கிறார்கள் என்பதுதான் கொஞ்சம் சரியாகப் புரிபடவில்லை.

இலண்டன் போனால் இது பார்க்க வேண்டும் அது பார்க்க வேண்டும் என்கிற ஆசைகள் எல்லாம் போய், ஒரு நேரத்தில் நல்ல வெயில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகி விட்டது. முதல் நாள் முழுக்க அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. கும்மென்று இருந்தது. மேல் மாடியில் இருந்து பார்க்கும் போது ஊர் அழகோ அழகென்று இருந்தது. ஆனாலும் ஒன்றைப் பார்த்து விட்ட பின்பு இதில் என்ன இருக்கிறது என்று உடனடியாகவே ஓர் உணர்வு வந்து விடுகிறது. மறுநாள் ஏதோவொரு பகுதியில் மட்டும் ஓர் சிறிய ஒளிக்கற்றை தெரிந்தது. அதைப் பார்த்த போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

உச்சி மதியம் வெளியில் சாப்பிடலாம் என்று கிளம்பி வந்தோம். அப்போதும் குளிர் கொன்று எடுத்தது. நான் போன நேரம் அப்படி. உச்ச கட்டக் குளிர் நேரம். அருகிலேயே பஞ்சாபி கடை ஒன்று இருந்தது. போய் அமர்ந்தோம். பரிமாற வந்தவர் (சர்தார்ஜி இளைஞர்) பேச்சுக் கொடுத்துக் கொண்டே "எந்தக் கம்பெனி?" என்றார். சொன்னோம். ஆச்சரியமாகி "நீங்கள் எப்படி இங்கே? உங்கள் கம்பெனி, அங்கே அல்லவா இருக்கிறது?" என்று எங்கள் வரலாறு-புவியியல் எல்லாம் பேசினார். வேறென்ன? வியப்புதான்! முதல் நாளேவா? கண்ணக் கட்டுதுப்பா. "இதெல்லாம் எப்படியா உனக்கு...?" என்று இழுக்கும் முன், "MBA-க்கு உங்கள் கம்பெனியில்தான் தீசிஸ் பண்ணினேன்!" என்றார். "அடக் கருமம் புடிச்சவனே, MBA முடிச்சிட்டு இங்க என்னடா பண்ற பரதேசி?" என்று நம்ம ஊரில்தான் திட்டுவார்கள். அங்கே அப்படியில்லை. அதைத்தான் முன்பே கேள்விப் பட்டிருக்கிறோமே. பெரியாளான வெளிநாட்டுக்காரர் எவருடைய வரலாற்றைப் படித்தாலும் கல்லூரியில் படிக்கிற காலத்தில் கடை ஒன்றில் பரிமாறும் வேலை பார்த்தது பற்றிப் பெருமையாகப் பேசுவார்களே. அது நினைவு வந்தது. ஆனாலும் கேள்விப் படுவதை விட நேரில் பார்ப்பதில் வியப்பதிகம் என்பதில் வேறு கருத்து இருக்கிறதா என்ன உங்களுக்கு? அந்தப் பண்பாடு மிகவும் பிடித்திருந்தது. அது நம்ம ஊரிலும் வந்து விட்டால் ஒரு வகையில் நல்லது நடக்கும். இது கேவலம்; அது கேவலம் என்கிற அக்கப்போர்கள் இராது. ஒரு வகையில் அது சிக்கலும் கூட. படித்தவனும் வந்து இலையில் கையை வைத்தால், அப்புறம் படிக்காதவர்களுக்கு இந்த நாட்டில் வாழ வழியே இல்லை என்றாகி விடும். புலி-மான் கதை எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

மாலை வீடு திரும்பும் போது குளிர் அதை விடக் கொடுமையாக இருந்தது. ஐந்து மணிக்கு இருட்டி விடுகிறது. இரண்டு-மூன்று நாட்கள் ப்ளேசர் மட்டும் அணிந்து சமாளித்துப் பார்த்தேன். முடியவில்லை. கால் கூசுகிறது. உடம்பு நடுங்குகிறது. கை விறைக்கிறது. முகம் இறுகுகிறது. இரண்டு-மூன்று நாட்கள் ஆனால் எல்லாம் பழகி விடும் என்று எண்ணிக் கொண்டு இருந்து விட்டு, மூன்று நாட்கள் ஆன பின்பும் ஒன்றும் மாறாததால், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றையும் சரிப் படுத்தினேன். குளிருக்குக் கோட் வாங்கினேன். காதுக்கும் முகத்துக்கும் குல்லா வாங்கினேன். கைக்கு உறை வாங்கினேன். இவையெல்லாம் அணிந்த பின்புதான் ஓரளவு அங்கே வாழ்வது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை என்று புரிந்தது.

சீக்கிரமே இருட்டி விடுகிறது என்பதால் அலுவலகத்தில் இருந்தும் எல்லோரும் சீக்கிரமே கிளம்பி விடுகிறார்கள். அதற்கேற்ற மாதிரி காலையில் சீக்கிரமே வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். நம்ம ஊரில் போல நடு இரவு வரை யாரும் வேலை பார்ப்பதில்லை. ஓரளவுக்கு மேல் தாமதமானால் பாதுகாப்புப் பிரச்சனைகள் வேறு இருக்கின்றனவே. மாலை எப்படியும் சீக்கிரம் வீடு திரும்பி விடுவதால் சொந்த வாழ்க்கைக்குக் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கி வரலாம் என்று குடும்பத்தோடு கடைகளுக்குப் போய் வரவும் முடியும். கிட்டத்தட்ட வாரத்தில் மூன்று-நான்கு நாட்கள் அப்படி வெளியே போய் வந்தோம். இருட்டும் முன் திரும்பி விட்டால், பிரச்சனைக்கு உரிய பகுதி என்று எல்லோரும் சொன்ன மேற்குக் க்ராய்டன் பக்கம் போய் வருவோம். இருட்டிய பின்பாக இருந்தால் கிழக்குப் பக்கமே இருந்து கொள்வோம்.

பொதுவாகவே ஆள் நடமாட்டமில்லாத வீதிகளைக் கண்டால் கொஞ்சம் அச்சம்தான். அதுவும் இலண்டன் பற்றிக் கேள்விப் பட்ட கதைகள் எல்லாம் இன்னும் அச்சுறுத்துபவையாகத்தான் இருந்தன. குறிப்பாகக் க்ராய்டன் பற்றிக் கேள்விப் பட்ட கதைகள். அலுவலகத்தில் இருந்து திரும்பும் நேரங்களிலும் சுற்றும் முற்றும் பார்த்துப் பயந்து கொண்டேதான் வேக வேகமாக நடந்து வருவேன். க்ராய்டனுக்குப் பதிலாக வேறு ஏதாவதோர் இடத்தில் போய் இறங்கியிருந்தால் இப்படியெல்லாம் கிறுக்காகி இருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.

கிராய்டனில் இருந்த ஹை ஸ்ட்ரீட் நாங்கள் நடமாடிய நேரங்களில் எல்லாம் பரபரப்பாகவே இருக்கும். அங்கு செல்லும் போதெல்லாம் பெங்களூரில் இருக்கும் எம்.ஜி.ரோடு இன்னும் பல மடங்கு அழகாயிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் உணர்வு உண்டாகும். தரையெல்லாம் சிமெண்ட்-மொசைக் போட்டு சுத்தமாக இருக்கும். ஆங்காங்கே போவோர்-வருவோர் சிலாத்தலாக உட்கார்ந்து அனுபவிக்க வசதியாக சிமெண்ட் பெஞ்சுகள் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அதில் இளைஞர்கள்-இளைஞிகள் அமர்ந்து ஏதாவது குடித்துக் கொண்டு - குலாவிக் கொண்டு இருப்பார்கள். பீர்க் கேன்களும் சிகரெட் துண்டுகளும் நிறையச் சிதறிக் கிடக்கும். கண்டிப்பாக இலண்டனின் மற்ற பகுதிகளில் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. அது க்ராய்டனுக்கே உரிய சிறப்பம்சமாக இருக்க வேண்டும்.

இந்தியர்கள் போகும் நாடுகள் பெரும்பாலும் இந்தியாவை விட வளம் கூடிய நாடுகளே என்பது உண்மைதான் என்றாலும் இங்கிருந்து போகும் போதே நாம் எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போக வேண்டியதில்லை. தினசரித் தேவைக்குப் பயன் படும் பெரும்பாலான பொருட்கள் நாம் வாங்கும் அளவுக்குக் குறைந்த விலையில் கிடைக்கத்தான் செய்கின்றன. இந்தியப் பணத்துக்குக் கணக்குப் போட்டுப் பார்த்தால் சரிப்பட்டு வராது. ஆனால் அந்த ஊர்க் கணக்குப் படி பார்த்தால் அவை ஒன்றும் பெரும் செலவுகளாக இராது. அங்கும் எல்லா விதமான கடைகளும் இருக்கின்றன. கூடின விலைக் கடைகள், குறைந்த விலைக் கடைகள், அவர்களுக்கேற்ற மாதிரிக் கடைகள். நமக்கேற்ற மாதிரிக் கடைகள்... என்று எல்லா விதமான கடைகளும் இருக்கின்றன. எனவே நாம் பயப்படுகிற மாதிரி பெட்டிகள் பிதுங்கப் பிதுங்க அள்ளிப் போட்டுக் கொண்டு போக வேண்டியதில்லை. அங்கு கிடைக்காதவை மட்டும் வாங்கிக் கொண்டு போனால் போதும்.

இந்த விஷயத்தில் இன்னொன்றையும் உணர்ந்தேன். ஊரில் இருக்கும் போது நான் ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் போட்டுச் செலவளிக்கிற ஆள்தான். ஆனால், அங்கு போய் செலவழிக்கும் போது எல்லோரும் சொன்னது போல இந்திய நாணயத்தின் மதிப்பைக் கணக்குப் போட்டுக் கணக்குப் போட்டு நேரத்தை வீணாக்க வில்லை. அதற்கொரு காரணம் கணக்குப் போடக் கூடச் சோம்பேறித்தனப் படும் என் பிறவிக் கோளாறாக இருக்கலாம். இன்னொன்று என்னவென்றால், அவைகளுடைய ஒரு பவுண்டு நம் பணம் எண்பது ரூபாய்க்குச் சமம். எனவே நம்ம ஊரில் நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டி வாங்கும் சாமான்களை பத்துப் பவுண்டுகளுக்குள் வாங்க முடியும் போது ஏதோ குறைவான விலைக்குக் கிடைத்து விட்டது போல உணர்கிறோம்.

நான் சொல்ல வருவது சரியாகப் புரிகிறதா என்று புரியவில்லை. அதாவது, நம்முடைய நாணயம் பலவீனமானதாக இருப்பதால் பெரிய பெரிய எண்கள் கூட நமக்கு மிகச் சிறியதாகப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஆயிரம் என்பது மிகப் பெரிய எண். ஏனென்றால், ஆயிரம் பவுண்டுக்கு அவர்கள் ஒரு பழைய கார் கூட வாங்கி விட முடியும். நமக்கு ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத்தோடு வெளியில் போனால் ஆகிற சாப்பாட்டுச் செலவு. அதுதான் காரணம். எந்த சாமான் வாங்கினாலும் அதை வாங்கும் போது, 'கண்டிப்பாக இது வாங்கியே ஆக வேண்டுமா இப்போது?' என்று ஒரு கேள்வி எழும். அந்தக் கேள்வி எப்போதும் போல எழத்தான் செய்தது. ஆனால் அதற்காக இதை வாங்கினால் இந்திய நாணய மதிப்புப் படி எவ்வளவு வீணாகும் என்று போடும் கணக்குகள் அதிகம் போடவேயில்லை.

பெரும்பாலும் இந்திய சாமான்கள் கிடைத்தன. சில சாமான்கள் மட்டுமே கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படிப் பட்டவற்றை முன்பே கேள்விப் பட்டு எடுத்துச் சென்றிருந்தோம். முக்கியமாக மசால் பொடி, மல்லிப் பொடி போன்ற சாமான்கள். அவை கூட இந்திய-பாகிஸ்தானி கடைகளில் கிடைக்கத்தான் செய்தன. மிக்சி மட்டும் அங்கு கிடைக்காது என்று இந்தியாவில் இருந்தே நிறையப் பேர் எடுத்துச் சென்று விடுவார்கள். நாங்கள் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், நாங்கள் தங்கியிருந்த சர்வீஸ் அபார்ட்மென்ட் இந்தியர்களுடையது என்பதால் எங்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை.

குளிர் காரணமாகக் கடைகள் அனைத்தும் (குறிப்பாகச் சிறிய கடைகள்) கண்ணாடிக் கதவுகளால் முழுதும் அடைத்தே இருக்கின்றன. நம்ம ஊரில் போல வாடிக்கையாளரை வரவேற்ற வண்ணம் திறந்தே இருப்பதில்லை. அதனால் அங்குள்ள கடைகளைக் கண்டால் கடைகள் போலவே உணர முடிவதில்லை. அது போலவேதான் வீடுகளும். வெளியில் போகவும் திரும்பி வரவும் தவிர அபார்ட்மெண்டுகளில் ஆட்கள் நடமாடுவதைக் காணவே முடிவதில்லை. குளிர் தாங்க முடியாமல் கதவைப் பூட்டி வைத்துக் கொள்ளும் பண்பாடு கூட அங்கிருந்துதான் குளிரே இல்லாத இங்கும் வந்து விட்டது போலும்.

வியப்புகள் தொடரும்...

புதன், ஜூன் 06, 2012

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 1/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

சென்ற முறை சிங்கப்பூர் வந்து திரும்பிய போது பயணம் நிறைவடையாமலே திரும்பிய ஓர் உணர்வோடுதான் வண்டியேறினேன். அதனால்தான் சிங்கப்பூர் பற்றிய கடைசி இடுகையின் இறுதியில், "மீண்டும் வருவேன்; அப்படி வரும் போது இன்னும் அதிகமான நாட்கள் இருந்து விட்டுத்தான் செல்வேன்!" என்று தொடையில் தட்டிச் சூளுரைத்துச் சென்றேன். சினிமாப் படங்களில்தான் நாயகன் சூளுரைத்த படி சொன்னதை எல்லாம் சாதித்துக் காட்டுவார். நம்ம வாழ்க்கை என்ன கதை வசனம் எழுதி இயக்கப் படும் படமா? அப்படியே சாதித்துக் காட்ட? ஏதோ விதியின் புண்ணியத்தில் மீண்டும் சிங்கப்பூர் வரும் வாய்ப்புக் கிடைத்தது. சென்ற முறை இரண்டு வாரமா இரண்டு வருடமா என்கிற தெளிவில்லாமல் வந்திறங்கினேன். இரண்டே வாரங்கள் கூட இராமல் வந்த வழியே வண்டியேறினேன். ஒன்று மட்டும் இந்த முறையும் மாற வில்லை. அது அதே தெளிவின்மை. எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பது யார் கையில் இருக்கிறது என்று இன்றுவரை புரிபடவில்லை. ஆனால், குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் ஓட்டி விடலாம் என்கிற உத்திரவாதம் இருக்கிறது. அதனால் சென்ற முறை போலல்லாமல் இம்முறை முழு நிறைவோடு திரும்ப வேண்டும்.

முதல் முறை வந்த போது இந்தியாவை மட்டும் பார்த்திருந்ததால் சிங்கப்பூர் பற்றி எழுதியதில் எல்லாத்தையுமே இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பேன். இடையில் ஒரு மாதம் இலண்டன் சென்று வந்த பின் இலண்டன் பற்றிய இடுகைகள் அனைத்திலும் எல்லாத்தையுமே இந்தியாவோடும் சிங்கப்பூரோடும் ஒப்பிட்டுப் பேசியிருப்பேன். இந்த முறை என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொல்லவா வேண்டும்?! சிங்கப்பூரை இந்தியாவோடும் இலண்டனோடும் ஒப்பிட்டுப் பேசுவேன். பொறுத்தருள்க.

சென்ற முறை தனியாக வந்திருந்தேன். இந்த முறை குடும்பத்தோடு வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்தான் சாத்தியப் பட்டது. எப்போதும் போல் இம்முறையும் அடி தொடியாக அரக்கப் பறக்கக் கிளம்ப நேர்ந்தது. மகளுடைய மேற்படிப்பு (LKG) நிறைவடைய இன்னும் ஒரு மாத காலம் மிச்சமிருக்கிறது. கிளம்பும் நாளன்றே அவளுடைய பள்ளிக்குச் சென்று கணக்கை முடித்துக் கொண்டு, வீடும் வீடு சார்ந்த மற்ற பணிகளையும் அரை குறையாக முடித்துக் கொண்டு வண்டியேறினோம். வழக்கம் போல் கிளம்பும் போது சொல்கிற கெட்ட பெயரும் கிடைத்திருக்கும். ஊரில் இருக்கும் உறவுகளுக்கு வந்து வழியனுப்பி வைக்கக் கூட நேரம் கிடையாது. வழியனுப்பி வைக்கும் அளவுக்கு இந்தப் பயணம் அப்படியென்ன முக்கியத்துவம் மிக்கது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. நான் மட்டுமாக இருந்தால் யாரும் சீந்தப் போவதில்லை. உடன் மனைவியும் வருவதாலும் ஒன்றும் பெரிதாக மாறி விடப் போவதில்லை. எங்களோடு உடன் வரும் மகளும், மகளா மகனா என்று தெரியாத என் மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் இன்னொரு குழந்தையுமே அந்த முக்கியத்துவத்துக்குக் காரணம்.

பெரும்பாலும் வெளிநாடு போகிற யாரும் அந்நேரத்தில் குழந்தையைச் சுமக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு போவதில்லை. முன் பின் தெரியாத இடத்தில் ஆள் வசதி இல்லாமல் அவதிப் படுவதைத் தவிர்ப்பதற்காக மகப்பேற்றைச் சொந்த மண்ணிலேயே வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகக் கருதப் படுகிறது. அப்படியிருக்கையில், இன்னுமொரு மாதமானால் விமானப் பயணமே செய்ய முடியாது என்கிற மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், "அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று குடும்பத்தோடு கிளம்பி விட முடிவு செய்தோம். தொழில் நுட்ப ரீதியாக மகப்பேற்றுக்கான வசதிகள் இந்தியாவை விட நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும். அதுவல்ல பிரச்சனை. அந்த முக்கியமான நேரத்தில் உடனிருக்க உருப்படியான ஆள் யாரும் இருக்கப் போவதில்லை. அதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்கிற தெளிவேதும் இல்லை. ஆனால் சமாளித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை மட்டும் கொஞ்சம் இருந்தது. கொஞ்சம்தான்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பயமுறுத்தினார்கள். எதுவுமே பயமுறுத்துவதற்காகச் சொல்லப் பட்டதல்ல. பையன் சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறானோ என்கிற உண்மையான பயத்தில் - அக்கறையில் சொல்லப் பட்டதே என்பதையும் உணர முடிந்தது. "விமானத்தில் ஏற்ற மாட்டார்கள்!", "ஏற்றிக் கொள்வார்கள்; ஆனால் இறங்கும் போது பிடித்துக் கொண்டு, விட மாட்டார்கள்!", "கிளம்பும் முன்பே சிறப்பு அனுமதி பெற வேண்டும்!", "இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வது இந்தியாவில் இருக்கும் மற்றொரு நகரத்துக்குச் செல்வது போலத்தான். பாஸ்போர்ட்டில் வைக்கும் சீலைத் தவிர்த்து வேறு எந்த வேறுபாடும் இல்லை!" என்று வித விதமான கருத்துகள். அதிகார பூர்வமான வழியில் சென்று சரியான பதில் தேடினால், வரும் பதில் அனைத்துமே சுற்றி வளைத்துச் சொதப்புவதாகவே இருந்தது. கேட்கிற கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வது ஏன் அவ்வளவு பெரிய பிரச்சனை என்று தெரியவில்லை.

இதே குளறுபடி இன்னொன்றிலும் ஏற்பட்டது. அதிக பட்சம் எவ்வளவு சுமை கொண்டு செல்லலாம் என்பதற்கு வெவ்வேறு விதமான பதில்கள். பயணச்சீட்டில் 20 கிலோ என்கிறார்கள். எவ்வளவோ சிரமப் பட்டு அதற்குள் அடக்கிக் கொண்டு போனோம். உள்ளே போய், எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டால், "அப்படித்தான் சொல்வோம்; ஆனால் 25 கிலோ வரை கண்டு கொள்ள மாட்டோம்!" என்றார்கள்.  எல்லா இடங்களிலும் நேரடியாகப் பதில் சொன்னால் தன் வேலை போய்விடும் என்கிற மாதிரியே எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்திய நேரம் இரவு பதினொரு மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பினோம். சிங்கப்பூர் நேரம் காலை ஆறு மணிக்கு சிங்கப்பூரில் வந்து இறங்கினோம். மூன்றரை மணி நேரப் பயணத்தில் என்ன தூங்க முடியும்! எரியும் கண்களோடு வந்திறங்கினோம். டாக்சி பிடித்து ஓட்டல் சென்று சேர்ந்தோம். சென்ற முறை தனியாக வந்திருந்தேன். விக்டோரியா ஸ்ட்ரீட்டில் ஓர் ஓட்டலில் தங்கினேன். அதனால் ஓரளவுக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தது. இம்முறை குடும்பத்தோடு வந்து இறங்கினேன். அதுவும் ஓட்டல் இருந்த இடம் லிட்டில் இந்தியா. ஒன்பது நாட்கள் வீடு பிடிக்கும் வரை லிட்டில் இந்தியாவில்தான் இருந்தோம். கொஞ்சம் கூட ஒரு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. முழுக்க முழுக்கத் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு நகரத்தில் இருக்கிற மாதிரியே உணர்வு. "இவ்வளவு சுத்தமாகத் தமிழ் நாட்டில் எந்த ஊர் இருக்கிறது தம்பி?" என்று நீங்கள் சொடக்குப் போட்டுக் கேட்பது நியாயம்தான். லிட்டில் இந்தியாவைப் பொருத்த மட்டில் அது ஒன்று தவிர்த்து மற்ற எல்லாமே இந்தியா மாதிரித்தான் இருக்கிறது. அதையும் கூட உள்ளூர்க் காரர்கள் சுத்தமற்ற இடம் என்றுதான் சொல்கிறார்கள். :)

முதல் நாள் வந்து இறங்கியதும் ஒரு காக்காக் குளியல் போட்டு விட்டு அப்படியே அலுவலகத்துக்கு ஓட வேண்டிய நிலை. கையில் செல்போன் கூட இல்லை. உடனடியாக வாங்கிக் கொடுத்து விட்டு ஓடலாம் என்றால் அதற்குக் கூட நேரம் இல்லை. லிட்டில் இந்தியாவில் வந்து இறங்கிய ஒரே நம்பிக்கையில் "சும்மா போய் சுற்றிப் பார். நம்ம ஊர் மாதிரித்தான் இருக்கும்!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டேன். கையில் இருந்த மிகக் குறைவான பணத்தைப் பங்கு போட்டுக் கொடுத்து விட்டுப் போனேன். ஓட்டல் நம்பருக்குக் கூட அழைத்துப் பேச வில்லை. 'என்ன ஆனதோ?! எப்படிச் சமாளித்தார்களோ?!' என்று பயந்து கொண்டே திரும்பி வந்து விசாரித்த போது, "தமிழ் நாட்டை விடத் தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் உணர்வே வரவில்லை!" என்றாள். "அப்பாடா!" என்று அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மகளும் "எல்லா இடத்திலும் தமிழ் நல்லாப் பேசுறாங்கப்பா; இந்த ஊர் ரெம்பக் க்ளீனா இருக்குப்பா; எனக்கு இந்த ஊர் ரெம்பப் பிடிச்சிருக்குப்பா; இங்கேயே இருந்துக்கலாம்ப்பா!" என்றாள். 'நம்ம கையில் என்னப்பா இருக்கிறது!' என்று எண்ணிக் கொண்டு, "சரிம்மா!" என்றேன்.

நாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்குப் பின்னால்தான் முஸ்தபா சென்டர். ஓட்டலைச் சுற்றிலும் ஏகப் பட்ட தமிழ்க் கடைகள். சரவண பவன், முருகன் இட்லிக் கடை, தலப்பாக்கட்டு பிரியாணிக் கடை, அஞ்சப்பர், பொன்னுசாமி, ஆனந்த பவன், கோமளாஸ் (விடுபட்ட கடைக்காரர்கள் மன்னிக்கவும்!) என்று ஏகப் பட்ட கடைகள். தினமும் வேளைக்கு ஓரிடத்தில் என்று ஒவ்வொரு நாளும் வித விதமாக வயிறு முட்டச் சாப்பிட்டோம். வேறு எந்த இடத்தில் தங்கியிருந்தாலும் இவ்வளவு எளிதாகச் சமாளித்திருக்க முடியாது. முதன்முறையாக இந்தியாவில் இருந்து வரும் எல்லோருமே ஆரம்பத்தில் கொஞ்ச நாள் லிட்டில் இந்தியாவில்தான் தங்க வேண்டும் என்று நுழைய அனுமதி கொடுக்கும் போதே ஆணையிட்டால் நன்றாக இருக்கும். அப்படித் தங்கி விட்டால் இந்த நாடே அவர்களுக்கு நிறையப் பிடித்து விடும். வேறு பல நாடுகளைப் பார்த்து விட்டு வருகிறவர்கள் அந்த ஒரு காரணத்துக்காகவே சிங்கப்பூரை மட்டமாக எண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை மாலை, லிட்டில் இந்தியாவில் மூச்சு முட்டும் அளவுக்குக் கூட்டம். "இந்தியாவில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் எல்லோரையுமே ஒரே இடத்தில் சந்திக்க விரும்பினால் ஞாயிற்றுக் கிழமை மாலை லிட்டில் இந்தியா வாருங்கள்!" என்று பின்னர் எங்கோ கேள்விப் பட்டேன்.

ஒன்பதாவது நாள் லிட்டில் இந்தியாவை விட்டுக் கிளம்பும் போது கிளம்பவே மனம் இல்லை. எல்லாமே எட்டிப் பிடிக்கிற தொலைவில் இருந்து பழகி விட்டு எங்கோ ஒரு மூலையில் போய் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறோமே என்று பெரும் கவலையுடன்தான் கிளம்பினோம். ஆனால் கவலைப் பட்ட அளவுக்கு இல்லை. ஒவ்வொரு பகுதியும் அனைத்து வசதிகளும் அருகிலேயே கொண்ட ஒரு தன்னிறைவான பகுதியாகவே இருக்கிறது. எனவே, இந்தப் பகுதியில் இருக்கிறோம் அந்தப் பகுதியில் இருக்கிறோம் என்று எந்தப் பகுதியில் இருப்போருமே வருத்தப் பட வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, நாங்கள் வீடு பிடித்துள்ள இடம் பிடோக் (BEDOK). பிடோக்கில் இருக்கும் ஒருவர் அவருக்கு வேண்டிய எல்லா சாமான்களையுமே பிடோக்கிலேயே வாங்கிக் கொள்ள முடியும். வீட்டைச் சுற்றி ஏகப் பட்ட கடைகள். உணவு, துணிமணிகள், இதர வீட்டு உபயோகப் பொருட்கள்... எல்லாமே வீட்டுக்கு அருகிலேயே நடந்து செல்லும் தொலைவில் கிடைக்கும். இது போன்ற ஓர் அமைப்பு மும்பையில் ஓரளவுக்கு இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றபடி இந்தியாவில் வேறெங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எல்லா ஊர்களிலுமே இது பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அடிக்கடி யாராவது ஓர் அரசியல்வாதி வந்து "நம்ம ஊரை சிங்கப்பூராக்கப் போகிறேன்!" என்று அல்வாக் கொடுக்கிறார்.

சுற்றிப் பார்த்தால் இங்கே இருக்கிற உணவகங்களின் எண்ணிக்கை வீடுகளின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருக்கும் போலத் தெரிகிறது. வீட்டில் சமைக்கும் பழக்கம் என்பது மிகக் குறைவு என்று கேள்விப் பட்டேன். அதனால் இங்கே வெளியில் உணவு சாப்பிடுவதும் பெரிய அளவில் பணப்பையை ஓட்டை போடுவதில்லை. அப்படி இருந்திருந்தால் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருப்பார்களே! தெருவுக்கு ஒரு கடை இருபத்தி நான்கு மணி நேரக் கடையாக இருக்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்? இரவெல்லாம் சாப்பிட வருகிறார்கள் என்றுதானே கொள்ள வேண்டும்? நாம் மதுரையைத் தூங்கா நகரம் என்கிறோம். தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருவோர் போவோருக்கு ஒரு நல்ல மையமாக இருப்பதால், அதுவும் அப்படி வருவோர் போவோருக்கு திசைக்கு ஒன்றென ஐந்தாறு பேருந்து நிலையங்களைக் கொண்டிருப்பதால் ஒரு நிலையத்துக்கு இருபது கடைகள் என்று வைத்துக் கொண்டாலும் மொத்தம் நூறுக்கு மேலான கடைகள் திறந்திருக்கின்றன. ஆனால், சிங்கப்பூர் அப்படியில்லை. முழுக்க முழுக்க உள்ளூர்க்காரர்கள் மட்டுமே உண்டு மகிழ்வதற்காக இருக்கும் கடைகள் இவை. 

இரவு வாழ்க்கையை இங்கே மிகவும் விரும்புகிறார்கள். எனக்கும் இரவு வாழ்க்கை மிகவும் பிடிக்கும். இரவில் ஊர் சுற்றுவது பிடிக்காது (இருட்டுவதற்குள் வீடு திரும்பி அடைந்து விடுவதுதான் பிடிக்கும்!). வீட்டுக்குள்ளேயே விழித்திருந்து விடியும் வரை வெட்டிக் கதைகள் பேசுதல் மிகவும் பிடிக்கும். அப்படி இரவெல்லாம் விழித்திருக்கும் போது ஒருவேளை வெளியேறிச் செல்ல நேர்ந்தாலும் வெளியுலகம் முழுக்க வெளிச்சமாக இருந்து வரவேற்றால் அது ஓர் அழகுதானே. அதற்கொரு காரணமாக நான் கணிப்பது - இந்த ஊரின் தட்ப வெப்ப நிலை. தூக்கம் வராத அளவுக்கு வியர்க்கும் ஊரில் இடையில் எழுந்து நடமாடுவது ஒன்றும் பெரிய அதிசயம் அல்லவே. இதுவே குத்திக் கிழிக்கும் குளிராக இருந்தால் இழுத்திப் போர்த்தி உறங்குவதுதானே எல்லோருக்கும் பிடித்த வேலையாக இருந்திருக்கும்.

வியப்புகள் தொடரும்...

திங்கள், ஜூன் 04, 2012

வேற வியப்புகள் - உள்ளுணர்வும் கனவுகளும்!

இன்று கலாச்சார வியப்புகள் பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தேன். அதற்குள் வேறொரு வியப்பு வந்து இன்றைய நாளையே ஆட்டி விட்டது. வியப்பு என்பதை விட அதிர்ச்சி என்றே சொல்லலாம். காலை படுக்கையில் இருந்து எழும் போதே பயத்துடனேயே எழுந்தேன். அதிகாலை அயர்ந்த தூக்கத்தில் ஒரு கனவு. தலைக்கு மேலே பறக்கும் விமானம் ஒன்று தலைக்கு மேலேயே விழுகிற மாதிரிக் கனவு. 'ஐயோ, சோலி முடிஞ்சதே!' என்று அலறுகையில் தரையில் முட்டிய விமானம் சிரிக்கும் பலூனாக (விமானம் அளவுக்கு இராட்சத பலூன்!) மாறி ஏதோ வாழ்த்துச் சொல்கிறது. கெட்ட கனவாக ஆரம்பித்து சுபமாக முடிந்ததால் பயப்பட வேண்டியதில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டு அலுவலகம் சென்றேன்.

அலுவலகம் விமான நிலையத்துக்கு அருகில் என்பதால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் மேலெழும்புவதைக் காண முடியும். அப்படிக் கண்ட முதல் விமானம் எங்கே கீழே விழுந்து விடுமோ என்கிற பயத்திலேயே நடந்து அலுவலகத்துக்குள் சென்றேன். பின்னர் செய்தித் தளங்களைத் திறந்ததும், நைஜீரியாவில் விமானம் ஒன்று விழுந்து விட்ட செய்தி. சிறிது நேரம் கழித்து, நான் பார்த்த காட்சியைப் போன்றே ஒரு காட்சியைப் பெண்மணி ஒருவர் விழி பிதுங்க விவரித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் ஆடிப் போய் விட்டேன். நான் கண்ட கனவுக்கும் நிகழ்ந்த நிகழ்வுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா?! ஒருவேளை, இவ்விரு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று எந்தத் தொடர்பும் அற்ற தற்செயல் நிகழ்வுகளாகவும் இருக்கக் கூடும். ஆனால், அதன் பின்பு நாள் முழுக்க இது போன்று வாழ்வில் இதுவரை நடந்த பல சம்பவங்கள் பற்றிய நினைவுகள் ஓடின. இன்று முழுக்க இந்த நினைவுகளே என்னை ஆட்கொண்டு விட்டன என்று சொல்லலாம். என்றாவது ஒருநாள் எப்படியும் எழுதப் பட வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்றே இதுவும். இதை விடச் சிறந்த தருணம் இருக்கவா முடியும்?!

எல்லோருக்குமே எதிர் காலத்தைக் காணும் சக்தி ஒன்று இருக்கிறது. அது சிலருக்கு அதிகமாக வேலை செய்கிறது. சிலருக்குக் குறைவாக வேலை செய்கிறது. சிலருக்கு மரணப் படுக்கையில் சரியாக எத்தனை மணிக்குத் தன் உயிர் பிரியும் என்பதைச் சொல்லும் அளவுக்கு மட்டும் வேலை செய்கிறது. சிலருக்கு வேலை செய்தாலும் அதை அவர்கள் உணர்வதில்லை. அந்த வகையில் சின்ன வயதில் இருந்தே எனக்கு உள்ளுணர்வோடு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. "நான் பெரிய பருப்பு!" என்று நிரூபிக்க முயலும் இடுகையல்ல இது. ஒரு தனி மனிதனின் பார்வையில் உள்ளுணர்வு எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைப் பேச முயலும் சிறிய முயற்சி. அவ்வளவுதான்.

மிகச் சிறிய வயதில் தம்பியை விடுதியில் சேர்ந்து படிக்கக் கட்டாயப் படுத்திச் சேர்த்து விட்டு வந்தார் தந்தையார். காலையில் கண்ணீர் மல்கக் கிளம்பியவனை வழி அனுப்பி விட்டு வந்தோம். சிறிது நேரத்தில் விடப் போனவரும் விட்டு விட்டுத் திரும்பி விட்டார். அன்று மாலை ஒரு விளையாட்டுக்காக ஓடி வந்து அம்மாவிடம், "எம்மா, தம்பி அழுதுக்கிட்டு வர்றாம்மா. ஹாஸ்டலில் இருந்து தப்பிச்சு வந்துட்டான்!" என்று சொன்னேன். அடுத்த சில மணி நேரத்துக்குள் அதே போலத் தம்பி அழுது துடித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். "பாவிப்பய... இப்பத்தானே சொன்னான்... அதே மாதிரி ஆயிருச்சே!" என்று நம் படங்களில் வருவது போல ஒப்பாரி வைத்துக் கதறினார் எங்கள் தாயார். அன்றில் இருந்தே நான் என்ன சொன்னாலும், "அன்னைக்கே இவன் சொன்ன மாதிரியே அப்பிடி நடந்துச்சே. இதுவும் நடந்து தொலைச்சுட்டா என்ன செய்றது?" என்று பதறிப் பதறி மகனைப் பெரிய மகான் ஆக்கி விட்டார். வெளியுலகம் தெரியாத பெண்கள் எல்லோருமே செய்கிற வேலை தானே இது!

அன்றிலிருந்தே எனக்கும் எதிர் காலத்தைக் கணிக்கும் ஏதோ பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பது போல எண்ணிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன். அவ்வப்போது அதை உணரவும் ஆரம்பித்தேன். கூடிய விரைவில், நான் மட்டுமல்ல, எல்லோருமே அது போல அவ்வப்போது உணர்வார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

பின்பொரு முறை நாகலாபுரத்தில் இருந்து சிவகாசி செல்வதற்காக சாத்தூர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்து, முதல் நொடியில் இருந்தே ஒரு விதமான பட படப்பு. சிறிது நேரத்தில் பேருந்தின் பின் பகுதியில் வெடி குண்டு ஒன்று வெடிக்கப் போவது போல மீண்டும் மீண்டும் மனதில் ஒரு காட்சி வந்து செல்கிறது. தலை வலி வேறு வந்து கொல்கிறது. தீவிரவாதம் தலையெடுக்க ஆரம்பித்திருந்த காலம். ஆனாலும், மொத்த இந்தியாவில் அந்தக் கிராமத்து மக்களையா குறி வைத்து வெடி குண்டு வைத்து விடப் போகிறார்கள் பாதகர்கள் என்றொரு கேள்வி வந்து வந்து செல்கிறது. பாதி வழியில் நென்மேனிக்கருகில் டயர் வெடித்து வண்டி நின்றது. எனக்குத் தலையே சுற்றி விட்டது. ஏதோ ஒன்றை நினைத்து ஏதோ ஒன்று நடந்தது. ஆனாலும் இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கத்தானே செய்கிறது. ஏதோவொன்று வெடித்ததே!

இதன் பின்பு கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பும் நாட்களில் காலை நான்கு மணிக்கே வயிறு நிறையத் தண்ணீர் குடித்துக் காலைக் கடன்களை முடித்து விட்டு வண்டி ஏறுவேன். குடித்த இரண்டு லிட்டர்த் தண்ணீர் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும் போது வண்டி சரியாகப் பாதி வழியில் போய்க் கொண்டிருக்கும். நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் வண்டியை நிறுத்தச் சொல்லவும் முடியாது. வண்டி தூத்துக்குடி போய்ச் சேரும்வரை பொறுத்திருக்கவும் முடியாது. முதல் முறை இது நிகழ்ந்த போது மரண வேதனையில் துடித்தேன். என்ன செய்வதென்றே புரிபடவில்லை. 'ஏதாவது ஆகியாவது வண்டி நின்று விடக் கூடாதா!' என்று துடித்தேன். இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட முடியாது என்கிற மாதிரிச் சூழ்நிலையில் வண்டி டயர் வெடித்து நின்றது. இது எனக்காகவே நிகழ்ந்தது போல இருந்தது. இதுவும் ஏதோ ஓர் அதிசயம் போலவே இருந்தது. அடுத்த முறை இதே மாதிரி மாட்டிக் கொண்ட போது டயர் வெடிக்க வில்லை என்பது வேறு கதை.

கல்லூரிக் காலத்தில் உளவியல் பற்றியெல்லாம் நிறையப் பேச ஆரம்பித்திருந்தோம். சீனியர் ரூபஸ் அண்ணன் நிறையத் தத்துவங்கள் சொல்லுவார். பார்வையிலேயே ஒரு மனிதன் ஓடாத கடிகாரங்களை ஓட்ட வைத்த கதை, மேகங்களை எதிர்த் திசையில் நகர வைத்த கதை என்று நிறைய வெளிநாட்டுக் கதைகள் எல்லாம் சொன்னார். மனித மனத்தின் ஆற்றல் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்த காலம் அது. "பின்னால் இருந்து ஒருவர் பிடரியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவர் கண்டிப்பாகத் திரும்பிப் பார்ப்பார்; அதனால்தான் பெண்கள் சடை போடுகிறார்கள். ஒருவரின் நெற்றிப் பொட்டை உற்றுப் பார்த்தால் அவரை மயங்கக் கூட வைக்கலாம்; அதனால்தான் பெண்கள் பொட்டு வைக்கிறார்கள்!" என்றெல்லாம் நிறையச் சொல்வார். அதையெல்லாம் சோதனை செய்து பார்த்து ஓரளவு உறுதியும் செய்ய முடிந்தது.

பின்னர் "ஐயர் தி கிரேட்" என்றொரு மலையாளப் படம் பற்றிக் கேள்விப் பட்ட போது கண்டிப்பாக அந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கிட்டத் தட்ட அந்த ஆர்வம் தொலைந்து போன பின்பு ஒரு முறை தமிழிலேயே அந்தப் படம் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அப்படியே அடங்கி முடிவு வரை அமர்ந்து கண்டு முடித்தேன். கேள்விப் பட்ட அளவு பரபரப்பு படத்தைப் பார்த்த போது இருக்க வில்லை. அதற்குக் காரணம் - படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிய நாளில் இருந்து படத்தைப் பார்க்க ஏற்பட்ட கால இடைவெளி. ஆனால், படத்தின் கரு என்பது இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் - அதே போல நானும் பல முறை உணர்ந்திருக்கின்ற அனுபவம்தான்.

திருமணத்துக்கு முன்பு வருங்கால மனைவியோடு விடிய விடிய வெட்டிப் பேச்சு பேசும் காலத்தில் ஒருநாள், "என்ன இன்னைக்குக் கம கமவென மணக்கிறது?!" என்று எதற்கப்படிக் கேட்டேன் என்றே தெரியாமல் லூசு மாதிரி ஒரு கேள்வி கேட்டேன். ஆடிப் போய் விட்டாள் ஆத்துக்காரி. "எப்டிங்க?! இன்னைக்குத்தான் சாதி மல்லி வாங்கி வச்சிருக்கேன். இப்டி ஒரு கேள்வி கேட்டுக் கொன்னுப்பிட்டிங்க?!" என்று தலை கால் புரியாமல் தவித்து விட்டாள். அந்தக் கேள்வி கேட்ட போது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று எனக்குப் புரிபடவே இல்லை. ஆனால், அதன் பின்பு சாதி மல்லிக் கதையைக் கேட்டதும் எனக்கும் தலை சுற்றியது.

இது மட்டுமில்லை. கனவுகளும் கூட சின்ன வயதில் இருந்தே இது போல ஏதாவது ஒரு சேதியைச் சொல்லிச் சென்று கொண்டே இருக்கின்றன. கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அடிக்கடி பறக்கிற மாதிரிக் கனவுகள் வேறு வந்து கொண்டே இருக்கும். நண்பன் கோபாலிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, INTERPRETATION OF DREAMS நூலில் ஃபிராய்ட் இது பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னான். "ஐயர் தி கிரேட்" பார்க்க வேண்டும் என்கிற ஆசையைப் போலவே இந்தப் புத்தகத்தையும் படித்து விட வேண்டும் என்று அவாவெடுத்துத் திரிந்தேன். ஆசை ஆசையாகப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், முதல் பக்கத்திலேயே மூஞ்சியில் அடித்து விட்டது. ஒன்றும் புரிகிற மாதிரித் தெரியவில்லை. பின்பொரு காலத்தில் திரும்ப எடுத்துப் பார்த்தால் புரியும் என்ற நம்பிக்கையில் அப்படியே அலமாரியை அழகு படுத்த வைத்து விட்டேன்.

ஆனாலும் கனவுகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு உள்ளாகப் பல தகவல்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. வயிறு சரியில்லாத நாட்களில் எல்லாம் கனவில் அருவருப்பூட்டும் காட்சிகள் ஏதாவது வரும். இது பற்றி ஃபிராய்ட் சொல்லத்தான் செய்கிறார். ஒவ்வொரு கனவுக்கும் பின்னணியில் ஓர் உடல்நிலைக் காரணமோ மனநிலைக் காரணமோ இருக்கும் என்கிறார். உச்சாவை அடக்கிக் கொண்டு தூங்கும் இரவுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட விதமான கனவுகள் வருவதை கண்டிப்பாக உங்களில் நிறையப் பேர் உணர்ந்திருப்பீர்கள். இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு (உடற்காரணமும் இன்றி மனக்காரணமும் இன்றி) சம்பந்தமே இல்லாமல் சில கனவுகள் வருவதுண்டு. அவற்றில்தாம் இருக்கின்றன இந்தக் குறிப்புச் சேதிகள். அவற்றை உற்றுக் கவனித்தல் சில நேரங்களில் நம்மைப் பெரும் பிரச்சனைகளில் இருந்து காக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு சின்ன வயதில் உடன் படித்த நண்பன் ஒருவன் பற்றிய நினைவு வந்தது. சில நாட்கள் கழித்து சற்றும் எதிர் பாராத விதமாக எதிர் பாராத ஓரிடத்தில் அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த பத்து வருடங்களில் அவனை ஓரிரு முறை கூட நினைத்துப் பார்த்ததில்லை. அப்படியிருக்கையில் அவன் பற்றிய நினைப்பு வந்த ஓரிரு நாட்களிலேயே எதிர் பாராத ஓரிடத்தில் அவனைச் சந்திக்க முடிந்தது எப்படி? இந்தக் கேள்வி அதன் பின்பும் பல நாட்கள் என்னைத் துளைத்தெடுத்தது.

போன வாரம் கூட பள்ளித்தோழன் சுப்ரமணி பற்றித் திடீரெனச் சிந்தனை. 'நீண்ட நாட்களாகப் பேசவேயில்லையே!' என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வருடத்தில் ஓரிரு முறை பேசுபவனிடம் கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கும் மேலாகப் பேசவே இல்லை. ஆனால், அவன் பற்றிய சிந்தனை வந்து அடுத்த அரை மணி நேரத்தில் மின்னஞ்சலைத் திறந்தால், நான் அவனைப் பற்றிச் சிந்தித்த அதே நேரத்தில் அவனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் - "உன் செல்போனுக்கு அழைத்துப் பார்த்தேன். கிடைக்கவில்லை. என்ன ஆச்சு?" என்று. ஆடிப் போய் விட்டேன். உடனடியாக அழைத்துப் பேசினேன்.

எனக்கு மட்டுமில்லை. நிறையப் பேருக்கு இது போன்ற அனுபவங்கள் இருப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச காலத்தில் வந்த சம்பள உயர்வை நான் சொல்வதற்கு முன்பே என் அம்மா கனவில் கண்டதாகச் சொன்னது இப்போதும் எனக்கு அருள் வர வைக்கிறது.

அது போலவே என் பாட்டி (தாயின் தாய்) இறந்த அன்று செய்தி போவதற்கு முன்பே அவருடைய தங்கை மகள் ஒருவர், "இன்னைக்கு ஏதோ கெட்ட செய்தி வரப் போகிறது!" என்று சொல்லித் துடித்ததாகக் கேள்விப் பட்ட போது எங்களுக்கெல்லாம் உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறிந்தது.

இது எல்லாமே ஒரே மாதிரியான அனுபவங்கள் இல்லை. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பொதுவான அம்சம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். அது நடக்கப் போகும் ஒன்றை முன்பே உணர்தல் அல்லது நடந்த ஒன்றை அது பற்றிக் கேள்விப் படும் முன்பே தொலைவில் இருந்து உணர்தல். "அவன் வாயில் விழுந்தால் நடந்து விடும்!", "ஆக்கங்கெட்ட மாதிரிப் பேசாதே, அப்படியே நடந்து விடப் போகிறது!" என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அது வேறு மாதிரியாகப் படுகிறது. அத்தகைய நிகழ்வுகள் சொன்னதால் நடப்பதாகப் படவில்லை; நடப்பதைத்தான் முன் கூட்டிச் சொல்லி விடுகிறோம் என்றெண்ணுகிறேன்.

இந்த சக்தி அதிகம் இருப்பவர்கள்தாம் குறி சொல்பவர்களாக இருக்கிறார்கள். ஆக, குறி சொல்வதே அறிவியலுக்கு எதிரான ஒன்றல்ல. அது ஆன்மிகம். ஆன்மிகம் என்பது கடவுள் பற்றியது மட்டுமல்ல. அது உளவியல். உளவியல் ஒன்றும் உளறியல் அல்ல. அதுவும் அறிவியல்தான். ஒவ்வொருவருக்கும் குறிகள் வெவ்வேறு உருவங்களில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றைப் பயன் படுத்தத்தான் பழகிக் கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?! உங்களிடமும் இது போலக் கதைகள் நிறைய இருக்கும் என்று தெரியும் எனக்கு. அவை பற்றி இதற்குக் கீழே எழுதுங்கள். அல்லது, உங்கள் பதிவுகளில் எழுதி விட்டு இங்கே இணைப்புக் கொடுங்கள். மேலும் பேசுவோம்.

தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர்

போன வாரத்தில் ஒருநாள் தமிழ்மணம் வலைச்சரத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இந்த வாரத்தில் தமிழ்மணம் தளத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். மகிழ்ச்சியான செய்திதான். சற்றும் எதிர் பார்த்திராதது என்றும் சொல்ல வேண்டும். ஒரேயொரு சிரமம் - தினமும் ஓர் இடுகையாவது இட முயற்சிக்கவும் என்று சொல்லியிருக்கிறார்கள். வேலை பெண்டு நிமிர்ந்து கொண்டிருக்கிற காலகட்டமாக இருப்பதால் அது குதிரைக்குக் கொம்பு வளர்க்கும் வேலையாகி விடுமோ என்கிற அச்சம் ஒருபுறம் வாட்டினாலும் இப்படியானதொரு நல்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உள்ளுறுதியோடு உள்ளே குதிக்கிறேன். பார்க்கலாம். எப்படிப் போகிறது இந்த வாரம் என்று!

எழுதுவது சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்த ஒரு வேலை. எழுத்தை முழு நேர வேலையாகச் செய்வதில் பெரிதாக ஆர்வம் இல்லை. முழு நேர வாசிப்பிலும் முழு ஈடுபாடில்லை. ஆனால், வாழ்க்கையில் எழுத்து ஒரு முக்கியப் பங்காக இருக்கப் போகிறது - இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எப்போதுமே இருந்தது. மொழி பெயர்ப்பு நிறையச் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. எல்லோரையும் கவர்கிற மாதிரி எளிமையாக நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசையும் ஒரு வரி கூட யாருக்குமே புரியாத மாதிரி பேரறிவாளி போல நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசையும் மாறி மாறி வந்து மண்டையைக் குடைந்திருக்கின்றன. இப்போதும் கூட யாராவது, "நீ எழுதுவது புரியவில்லை!" என்று சொன்னால் கொஞ்சம் மகிழ்ச்சியாகி விடும். அதே அளவு மகிழ்ச்சி, "உன் எழுத்து எளிமையாக இருக்கிறது!" என்று யாரேனும் சொல்லக் கேட்கும் போதும் கிடைப்பதுண்டு. "அதெல்லாம் சரி, இப்போ என்னப்பா சொல்ல வர்ற?!" என்கிறீர்களா? :)

"எப்படி வேண்டுமானாலும் எழுது... ஆனால் எழுது!" என்றும் அவ்வப்போது அசரீரி ஒன்று வந்து சொல்லிச் செல்லும். சில நேரங்களில் சில நாட்கள் இடைவெளி... சில நேரங்களில் பல ஆண்டுகள் இடைவெளி... என்று இந்தச் சின்ன வயதிலேயே வித விதமான இடைவெளிகளைப் பார்த்தாயிற்று. வாசிப்பது கூட முழுமையாகச் சலிப்பூட்டிய காலம் உண்டு. எழுதுவது எப்போதுமே அப்படி இருந்ததில்லை. இயல்பாகவே எழுத முடியாமல் போகிற காலம் என்பது வேறு. அது பெரும்பாலும் பணி நிமித்தமாக உண்டாகிற இடைவெளி.

இதுதான் எழுத்துக்கும் எனக்குமான உறவு. வலைப்பதிவு என்கிற வசதி ஒன்று இருக்கிறது என்று அறிந்த நாளில் இருந்து பதிவு செய்யத் தொடங்கி விட்டேன். பதிவிட ஆரம்பித்த காலத்தில் தமிழில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் ஆங்கிலத்தில் மட்டும் அவ்வப்போது கிறுக்கிக் கொண்டிருந்தேன். கிறுக்கல் என்றால்... தன்னடக்கத்திலோ போலித் தன்னடக்கத்திலோ சொல்லவில்லை. எந்தக் களங்கமுமற்ற... பரிசுத்தமான... கிறுக்கல். பின்பு தமிழில் அது சாத்தியம் என்பது தெரியாமலே நீண்ட காலம் ஆங்கிலக் கிறுக்கல் தொடர்ந்தது. 'நாங்களும் அதெல்லாம் பண்ணுவம்ல' என்கிற காரணத்துக்காகவே அதைப் பிடிவாதமாகச் செய்து கொண்டிருந்தேன். அது இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திடீரென்று ஒருநாள் நிறையப் பேர் தமிழிலும் இந்தச் சோலியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிபட்டதும் நானும் அதைச் செய்யத் தொடங்கினேன். ஆனால், ஒருபோதும் அதிக பட்சம் பத்துப் பேருக்கு மேல் அதை வந்து படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆசையும் பெரிதாகப் படவில்லை. நேரம் கிடைக்கிற போது ஏதாவது ஒன்றைக் கிறுக்கிப் போட்டு விட்டுப் போய் விடுவேன். பதிவிட ஆரம்பித்த போது கூட இந்த வசதியை நாட்குறிப்பு எழுதுவது போலான ஒரு வசதியாகத்தான் பார்த்தேன். என்ன ஒரு வித்தியாசம் - இந்த நாட்குறிப்பை என்னைத் தவிர இன்னும் நாலு பேர் பார்த்தால் நல்லது என்று நானே ஆசைப்பட்டு எழுதினேன். அடுத்து அதை நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் தெரிவித்து வாசிக்கச் சொன்னேன். அவர்களும் ஓரிருவர் "பாவம்... பையன்!" என்று வந்து வாசித்து விட்டுச் செல்வார்கள்.

அடுத்து நடந்ததுதான் புரட்சி. இது போலப் பதிவிடுபவர்களுக்காகவே பல தளங்கள் (வலைச்சரங்கள்/ திரட்டிகள்) இருப்பது தெரிந்து அங்கு போய் இணைப்புக் கொடுக்க ஆரம்பித்தேன். இப்போதுதான் நமக்குத் தெரியாதவர்கள் கூட வந்து நம் பதிவை வாசித்துக் கருத்துச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்ற புதியதோர் உலக உண்மை புரிந்தது. அதிலிருந்து நம்மைப் போலவே மற்றும் நம்மை விடச் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் நிறையப் பேர் பற்றியும் தெரிய வந்தது. 'இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் பெருங்கூட்டம் ஒன்று இருக்கிறது; அவர்களோடெல்லாம் நாம் ஈடு கொடுத்து எழுத முடியாது; நம்ம பிழைப்பை நாம் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதே உத்தமம்; வாய்ப்புக் கிடைக்கிற போது மட்டும் வந்து எழுதினால் போதும்!' என்கிற ஞானோதயமும் இந்தத் தளங்களைக் காண்கையில்தான் வந்தது.

'அந்த மாபெரும் சமுத்திரத்தில் நான் ஒரு துளி!' என்கிற உண்மையை நன்றாகவே உணர்ந்திருந்ததால் இந்தத் தளங்களில் இணைப்புக் கொடுக்கிற வேலையை மட்டும் செய்து கொண்டு எழுதுவதை மட்டும் எப்போதும் போல் செய்து கொண்டு வந்தேன். 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல பதிவுலகில் நாமும் ஒரு பார்க்கத் தக்க ஆளாக வரவேண்டும் என்கிற ஆசைகள் எல்லாம் ஏதும் இல்லாமல் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வந்தேன்.

அதிகம் எழுதப் பிடிப்பது கவிதையும் அரசியலும். கவிதை எழுதுகிற ஆர்வம் கல்லூரியோடு முடிந்து விட்டது. கவிதை எழுதினால் கைத்தட்டல் நிறையக் கிடைக்கும் என்று ஆசைப் பட்டுப் பல ஆண்டுகளை ஓட்டி விட்டேன். உலகத்தில் இருக்கிற எல்லாத்தையுமே கவிஞர்களின் கையில் கொடுத்து விட்டால் மொத்த உலகமும் சுபிட்சம் அடைந்து விடும் என்று எண்ணி ஏமாந்த காலங்கள் உண்டு. சின்னத் திரையிலோ கிழிந்த காகிதத்திலோ கவிஞர் எவரையேனும் கண்டால் அடுத்த வேளைக் கஞ்சியையும் அதற்கடுத்துச் செய்ய வேண்டிய வேலையையும் கூட மறந்து - மெய் மறந்து - மூழ்கிச் செத்த காலங்கள் உண்டு. பின் இயல்பாகவே கவிதை மீதான காதல் மெதுவாகக் குறைந்து விட்டது. அதற்கொரு காரணம், கவிதை என்பதே காதலிப்பவர்களுக்கும் காதலிக்கத் துடிப்பவர்களுக்கும் என்பது போல் ஓர் இடைக்காலம் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். அல்லது, அப்படி நான் தவறாகப் புரிந்து கொண்டும் இருந்திருக்கலாம் (எதுக்கு வம்பு, எதிரிகளைச் சம்பாதிக்காத விதமாகப் பேசுவதுதானே புத்திசாலித் தனம்!).

அடுத்ததாக அரசியல்! அரசியல் எழுதுவதால் தேவையில்லாத தொல்லைகள் நிறைய. "எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசு; எங்க அப்பாம்மாவைப் பற்றி மட்டும் பேசாதே!" என்கிற மாதிரி நாளுக்கு நாலு பேர் சண்டைக்கு வருவார்கள். "கெட்ட வார்த்தையில் திட்டு விழும்; வீட்டுக்கு ஆட்டோ வரும்!" என்றெல்லாம் நிறையப் பேர் மிரட்டினார்கள். நல்ல வேளை, இன்னும் அந்தளவுக்குப் போகவில்லை. அதற்குள்ளே சலிப்பும் வந்து விட்டது. 'இங்கே அவரவர் மனதுக்குள் சில கணக்குகள் வைத்திருக்கிறார்கள்; என்னத்தை எழுதினாலும் அவர்களின் எண்ணத்தை அசைக்க இறைவனே வந்தாலும் முடியாது!' என்கிற ஞானோதயம் ஒன்றும் பிறந்திருக்கிறது. அது மட்டுமில்லை, எழுதுவதற்குப் பரபரப்பாக இப்போதைக்கு எதுவும் நடக்கவில்லை என்பது கூட இன்னொரு காரணமாக இருக்கக் கூடும்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் எதிர் பாராமல் புதியதோர் ஒத்தயடிப் பாதை கிடைத்திருக்கிறது. அந்தப் பாதை குளறுபடிகள் அற்ற நற்பாதையாகவும் இருக்கிறது. பயணக் கட்டுரைகள் படைக்கக் கிடைத்திருக்கும் பாதை. கலாச்சார வியப்புகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் தொடர் யாருக்கும் கோபம் வரவழைக்காததாக இருக்கிறது. இயல்பாகவே பணி நிமித்தமாக ஊர் சுற்றக் கிடைத்த வாய்ப்பை இப்போது நன்றாகப் பயன் படுத்தத் தொடங்கி விட்டேன். முதன் முதலில் வைகோ பற்றி எழுதிய இடுகைக்குக் கிடைத்த வரவேற்பு அரசியல் பற்றி எழுத நிறைய ஆர்வம் கொடுத்தது. ஒருவேளை நாமும் சில பத்திரிகைகள் போல, "இணையத் தமிழ் இளைஞர்களின் மனச்சாட்சி!" என்று ஏதாவது போட்டுக் கொள்ளலாம் போல என்று கூடத் தோன்றியது. 'என்னுடைய இடுகைகளில் எதுவுமே இந்த அளவு ஒருபோதும் வாசிக்கப் படாது!' என்றொரு முடிவுக்கு வந்து பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்த போது, சிங்கப்பூர் பற்றிய எழுதிய இடுகை அதை விடப் பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்தது. விகடன் வலைத்தளத்தில் சிறந்த பதிவுகளில் இடம் பெற்றதில் நிறைய உற்சாகம் ('குட் பிளாக்ஸ்' என்பதை மொழி பெயர்த்தால் இப்படித்தான் தற்பெருமையாக மாறி விடுகிறது. இதற்காகவாவது அதன் பெயரை 'நல்ல பதிவுகள்' என்றோ 'பரவாயில்லாத பதிவுகள்' என்றோ மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்!). இதுவரை நான் எழுதியவற்றில் பயணக் கட்டுரைகள்தாம் அதிகம் விரும்பி வாசிக்கப் பட்டவை என்பதுதான் இப்போதைய உண்மை நிலவரம். எனவே, அதை மேலும் தொடர்வதுதானே எல்லோருக்கும் நல்லது! :)

அதன் பின் இலண்டன் பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவே இன்னும் முடியவில்லை. அனுமார் வால் போல நீண்டு கொண்டு இருக்கிறது. அதற்குள் அங்கிருந்து துரத்தப் பட்டு மீண்டும் சிங்கப்பூர் வந்து இறங்கியிருக்கிறேன். சிங்கப்பூரைப் பற்றி எழுதிப் பெருமை கொண்டவன் (அவசரப் படாதீர்கள், எனக்கு நானே பெருமைப் பட்டுக் கொண்டேன் என்றுதான் சொன்னேன்!) என்ற முறையில், சிங்கப்பூர் பற்றி விட்ட குறை தொட்ட குறையெல்லாம் மீண்டும் எழுதத் தொடங்குவதுதான் நட்சத்திரப் பதிவர் என்ற முறையில் செய்யத்தக்க சரியான வேலையாகப் படுகிறது. 'மீண்டும் பராசக்தி' போல... இதோ வருகிறது - மீண்டும் சிங்கபுரம்! அந்த அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்ம அளவுக்கு முயற்சிப்போம்!

நாளை முதல்... கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம்! (கவலைப் படாதீர்கள், அதைப் பற்றி மட்டுமே பேசிக் கழுத்தறுக்க மாட்டேன். எல்லாம் பேசுவோம். முடிந்தவரை எல்லாம் பேசுவோம்!)

* நட்சத்திரப் பதிவராக இருக்க அழைத்த தமிழ்மணத்துக்கும் இன்னும் ஒரு வாரத்துக்கு என் பதிவை வந்து பார்வையிட்டுச் செல்லப் போகும் மற்றும் அது பற்றிப் பலருக்குச் சொல்லப் போகும் (ஆசை தோசை அப்பளம் வடை! ஓர் எதுகை மோனையில் அப்படி வந்து விட்டது. அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை. கண்டு கொள்ளாதீர்கள்!) அதன் உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த - மணமார்ந்த ('தமிழ்மண'மார்ந்த!) நன்றிகள்! :) *

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...