சனி, ஜனவரி 14, 2012

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)

விடுதி-வெளி மாணவர்கள்
பொதுவாகவே எல்லா வகுப்புகளிலும் விடுதி மாணவர்கள் ஒரு குழுவாகவும் வீட்டிலிருந்து தினமும் வந்து செல்லும் வெளி மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பர். இந்தக் குழுவுணர்வுதானே மனித இனத்தையே துண்டாடிப் போட்டுக் கொன்று குவித்துக் கொண்டு இருப்பது. சிலர் மட்டுமே இந்த எல்லைகளைக் கடந்து பழகுவது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் எங்கள் வகுப்பில் இது சிறிது பரவாயில்லை. சொந்த ஊர் அருகிலேயே இருக்கும் சிலர் சில காலம் இதுவாகவும் சில காலம் அதுவாகவும் இருப்பார்கள் (அதாவது விடுதி மாணவனாகவும் வெளி மாணவனாகவும்). சில விடுதி மாணவர்கள் எப்போதுமே வெளி மாணவர்களோடு சுற்றுவார்கள். அவர்களுடைய வீடுகளிலேயே கிடப்பார்கள். திருச்செந்தூரைச் சொந்த ஊராக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த உள்ளூர்ப் பெண்கள் எல்லோரையுமே இவர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வெளி மாணவர்கள் நிறையப் பேர் எங்களுடனே கிடப்பார்கள். உள்ளே இருக்க முடிந்த நேரம் முழுக்க எங்களுடனே இருப்பார்கள். வார்டன்கள் அழைத்து சிலரைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்னு மண்ணாய் இருப்பார்கள்.

அப்படி எங்களுடனேயே வந்து கிடக்கும் ஆட்களில் ஒருவன் - திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆலந்தலை என்ற ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் என்ற நண்பன். இதில் ஓர் உணர்வுபூர்வமான விஷயம் இருக்கிறது. நாங்கள் மூன்றாமாண்டில் இருந்தபோது, ரோஷனுடைய அப்பா விபத்தில் கடுமையான அடி பட்டு (அது விபத்தா வேறு மாதிரியானதா என்றே எங்களுக்கு அப்போதைக்குத் தெளிவாகத் தெரியாது!) தூத்துக்குடியில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார். அப்படி ஒரு மாசமோ என்னவோ அவர் அங்கு வைக்கப் பட்டிருந்தபோது தினமும் இருவர் மாற்றி இருவர் எங்கள் விடுதியில் இருந்து போய் அவர்கள் குடும்பத்துக்குத் துணையாக இருப்பார்கள். தினமும் இருவர் போய் இரத்தம் கொடுத்து விட்டு வருவார்கள். இப்போது நினைத்தாலும் எனக்குப் புல்லரிக்கும் ஓர் அனுபவம் அது. அதே ஆட்கள் இன்று அப்படியோர் உதவியைச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அந்தக் காலம் அப்படி (அதாவது, கல்லூரிக் காலம் பற்றிச் சொல்கிறேன். 'அந்தக் காலம்' என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் பழம் ஆக வில்லை!). அந்தக் காலம்தான் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தனக்கென்று அதிகமாக யோசிக்காமல் இருக்கும் காலம். இறுதியில் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தபோதும் அந்த இறுதி ஊர்வலத்தில் அவர்கள் உறவினர்கள் அளவுக்கு நாங்களும் இருந்தோம். எங்கள் உடனிருத்தல் கண்டிப்பாக அவனுக்கு அந்தத் துயரத் தருணத்தில் பெரிதும் பயன் பட்டிருக்கும் - அதிலிருந்து வெளிவர மிகவும் உதவியிருக்கும் என்று எண்ணுகிறேன். சூப்பர் இல்லையா இது? இதுதானே கல்லூரி நட்பின் உன்னதம்!

எங்கள் வகுப்பில் இருந்த மணிகண்டனும் அப்படியோர் ஆள். அடிக்கடி விடுதிக்கு வருவான். வெளியில் தங்கியிருந்த கடைசி ஒரு மாத வாழ்க்கையின் போதும் அடிக்கடி வந்து எங்களைப் பார்த்து விட்டுச் செல்வான். சில நேரங்களில் எங்களோடே தங்கியும் இருந்து சென்றிருக்கிறான். மொட்டை மாடியில் படுத்து சொந்தக் கதை - சோகக்கதை எல்லாம் மனம் விட்டுப் பேசிய அப்படியான ஓர் இரவு மறக்க முடியாதது.

சாதிக் கலவரம்
கல்லூரி வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு நிகழ்வு - கடைசி மாதம் வந்த சாதிக் கலவரம். கல்லூரி தொடங்கிய காலம் முதலே எங்கும் நற்பெயர். இந்தக் கல்லூரி என்றால், பொதுவாக எங்கும் ஒரு மரியாதை உண்டு. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் அடிக்கடி மூடப்படும் - அடிக்கடி சாலை மறியல் செய்வார்கள் - வாகனங்களை நொறுக்குவார்கள் என்பதால் அதே பகுதியில் இருக்கும் இன்னொரு கல்லூரி ஒழுங்காக நடைபெறுவதால் அந்த மரியாதை இயல்பாகவே வந்தது. அதற்கொரு முக்கியமான காரணம் - எங்கள் நிர்வாகம். ஆதித்தனார் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு அவருடைய மகன் சிவந்தி ஆதித்தன் அவர்களால் நடத்தப் பட்டு வருவது. அந்தப் பகுதி முழுக்க அவருடைய பெயரைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். சின்னய்யா என்றுதான் சொல்வார்கள். அந்தப் பகுதியில் மிகப்பெரிய இடத்துக்குப் போன குடும்பங்களில் ஒன்று அவருடையது. எனவே, அம்மக்கள் அவரைக் கடவுள் போல மதிப்பார்கள். அவரும் கல்லூரியின் பெயர் கெடாமல் நடத்தப் பட எதுவும் செய்வார். இப்படி ஆரம்ப காலத்தில் காப்பாற்றப் பட்ட பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக வந்து சேர்ந்ததே இந்த சாதிக் கலவரம்.

எங்கள் முதல் இரண்டாண்டுகளில் இதற்கான அறிகுறியே இருக்க வில்லை. ஆரம்ப காலம் முதல் கல்லூரி எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. இந்த மொத்தப் பிரச்சனையும் கல்லூரியின் பிரச்சனை அல்ல. ஒரேயொரு விடுதியின் பிரச்சனை. இன்னொரு விடுதியான காந்தி விடுதியில் கூட இந்தப் பிரச்சனை இருக்க வில்லை. அதுவும் ஒரு சில தனி மனிதர்களால் உருவாக்கப் பட்டது. ஆனால் அதன் வீச்சு எத்தகையது என்பதை அதை ஆரம்பித்து வைத்தவர்கள் உணர வாய்ப்பில்லை. கல்லூரி இருக்கும் வரை இந்தப் பிரச்சனைகள் இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பித்து வைக்கும் வரைதான் ஒன்றும் இல்லாமல் இருக்கும். பிள்ளையார் சுழி போட்டு விட்டால் அதற்கு முடிவே கிடையாது. ஏனென்றால், ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் மொத்தக் கூட்டமும் காலியாகிப் போய், புதுக் கூட்டம் வருவதில்லை. மூன்றில் ஒரு பங்கு போகும். அதற்குப் பதில் புதிதாக இன்னொரு பங்கு வந்து சேரும். மிச்சமிருக்கும் இரண்டு வருடத்து ஆட்கள் இந்தத் தீ அணைந்து விடாமல் பார்க்கும் வேலையைச் செவ்வனே செய்வார்கள். அப்படியானால் இதற்கு முடிவு? அப்படி ஒன்றே கிடையாது.

பொதுவாக, ஒரு சமூகம் அளவுக்கு அதிகமாகப் பெரும்பான்மை கொண்டிருக்கும் பகுதிகளில் இந்த மாதிரிப் பிரச்சனைகள் வருவதில்லை. ஓரளவுக்காவது சமமாக இருக்கும் இரண்டு சமூகங்களாவது இருந்தால்தான் இதெல்லாம் உண்டாகும். எங்கள் கல்லூரியிலோ விடுதியிலோ அவ்வளவு நாட்களாக இது நடக்காமல் இருந்ததற்கும் அதுதான் காரணம். நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது முதலாமாண்டில் வந்து சேர்ந்த கூட்டம் இதற்கு முக்கால்வாசிக் காரணம். அதில் இரண்டு குழுக்கள் உருவாயின. அவர்களுக்குள் பிரச்சனை வந்தது. அதில் மற்ற இரண்டாண்டு மாணவர்களும் அணி சேர்ந்தனர். அப்படியே அது விடுதியின் பிரச்சனையானது. எனக்கு நினைவிருக்கும் வரை இந்த முழுப் பிரச்சனைக்கும் காரணம் ஓரிரு தனி மனிதர்கள்தான்.

இந்த சாதிக் கலவரத்தில் நிகழ்ந்த விசித்திரங்கள் பல. அதில் ஒன்று - எதிரிகள் நண்பர்களானார்கள்; நண்பர்கள் எதிரிகளானார்கள். யாரும் பழக விரும்பாத மாதிரியான ஒரு சிலர் நாயகர் ஆனார்கள். இரண்டாண்டுகளாக எவருக்கும் பிடிக்காத சிலர் பாதிக்கும் மேலான ஆட்களின் பாசத்துக்கு உரியவர் ஆயினர். காரணம் - அவர்கள் சாதி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தனர். ஒருவருக்கொருவர் கண்டாலே கடுப்பாகும் ஆட்களே உறவு கொண்டாடத் தொடங்கினர். இதை நான் பல இடங்களில் பார்த்து விட்டேன். எல்லோராலும் புறக்கணிக்கப் படும் ஒருவன் எதைக் கையில் எடுத்தால் அங்கீகாரம் கிடைக்கும் என்று இரவெல்லாம் யோசித்து அதைக் கையில் எடுப்பான். அவன் எதிர் பார்த்த மாதிரியே அவன் பின்னால் ஒரு பெருங்கூட்டம் - அவனை மகாக் கேவலமாக நினைத்த ஒரு கூட்டம் - வெறுத்த ஒரு கூட்டம் - போய் இணையும். அதுதான் அங்கும் நடந்தது சிலருக்கு.

இன்னொருபுறம், எவ்வளவோ நட்புறவோடு பழகிய பலர் எதிரெதிர் அணிகளுக்குப் போனார்கள். உருப்படியான காரணம் இல்லாமல் உண்டாகும் பகை எவ்வளவு கேவலமானது! அதை நேரில் காணும் கொடும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. அரையாண்டு காலமாகப் புகைந்து கொண்டே இருந்தது இந்தப் பிரச்சனை. எல்லோரும் தன்னால் முடிந்த அளவு அமைதியான முறையில் பகைமை வளர்த்தனர். கூட்டம் சேர்த்தனர்; கூடிப் பேசினர்; எதிரணியில் உள்ளோருக்கு எதிராக என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டங்கள் தீட்டினர். சிலர் இங்குமங்கும் போட்டுக் கொடுக்கும் வேலைகள் செய்தனர். என்ன நடக்குமோ என்றொரு பயம் ஒருபுறம் இருந்தது என்றாலும், எதுவுமே நடக்காது முடிந்து விடும் என்றொரு நம்பிக்கையும் இன்னொரு புறம் இருந்தது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்காமல் போக வில்லை.

இது போன்ற உணர்வு பூர்வமான பிரச்சனைகளைக் கையில் எடுப்பதன் மூலம் எவ்வளவு எளிதாக நம் ஆட்களைத் துண்டாட முடிகிறது என்று அடிக்கடித் தோன்றும். இதில் ஏற்பட்ட இன்னொரு பாதிப்பு - அந்தக் காலத்திலேயே தொழில் நிமித்தமாக இந்தப் பகுதியில் இருந்து வெளியேறி சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் குடியேறிவிட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் இந்தக் கேவலங்கள் எல்லாம் பற்றி சிறிதும் அறியாமல் வளர்க்கப் பட்டிருப்பார்கள். முழுமையான நகரத்து வளர்ப்பை அவர்களிடம் காண முடியும். காலமெல்லாம் தம் உடனேயே வைத்திருந்து விட்டு, கல்லூரிப் படிப்புக்கு மட்டும் தம் பிள்ளையைச் சொந்த மண்ணில் சேர்க்க ஆசைப் பட்டு வந்து விட்டு விட்டுப் போவார்கள். இங்கு வந்து சேரும் அந்த நல்ல பையன்கள் எல்லாம் இங்கே இருக்கும் வாழ்க்கை மீது ஒருவித ஈர்ப்பு கொண்டு, 'இதுதான் நம் பெற்றோர் வாழ்ந்த மண்; இதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை; இவ்வளவு நாட்களாக நான் பார்த்ததெல்லாம் வேற்றுக் கலாச்சாரம்!' என்பது போல உணர்ந்து இங்கே இருக்கிற பையன்களோடு சேர்ந்து கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவார்கள். வரும்போது அவ்வளவு நாகரிகமாக வருகிற ஆட்கள் - அதிர்ந்து கூடப் பேசாதவர்கள், போகும்போது, "வெட்டணும், குத்தணும், அடிக்கணும்..." என்று பேசுகிற ஆட்களாக மாறிப் போவார்கள். ஒரு தந்தை அல்லது தாயின் நிலையில் இருந்து இது எவ்வளவு கொடுமையான மாற்றம் என்று யோசித்துப் பாருங்கள். மனசு வலிக்கும்.

வேறு எந்தக் கல்லூரியாக இருந்தாலும் இதை ஒரு முழுமையான சாதிப் பிரச்சனையாக ஆக்கியிருப்பார்கள். ஆனால், எங்கள் கல்லூரியில் கடைசிவரை அப்படி நடக்க வில்லை. கடைசிவரை ஒரு கூட்டம் அப்படி ஒரு கொடுமை நடக்க விடாமல் பார்த்துக் கொண்டது. இன்னும் கொஞ்ச நாள் கல்லூரி நடந்திருந்தால் அல்லது பிரச்சனை கொஞ்சம் முன்பே வந்திருந்தால், ஒருவேளை அது நடந்திருக்கலாம். யார் செய்த புண்ணியமோ, அதையெல்லாம் காண வேண்டிய கட்டாயம் வராமல் முடிந்து விட்டது. தீ போல மூண்டிருக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனை சில நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப் பட்டது. அந்த நடவடிக்கைகளில் விமர்சனத்துக்கு எத்தனையோ விசயங்கள் இருந்தன என்றபோதும் எதிர் பார்த்ததை விட சுமூகமாக முடிந்தது பெரும் நிம்மதியே.

வெளியில் தங்கிய கடைசி மாதம்
கல்லூரி வாழ்வில் அந்த ஒரு மாதமும் ஒரு மறக்க முடியாத காலம். சாதிக் கலவரத்தால் எடுக்கப் பட்ட முக்கியமான நடவடிக்கை, இறுதியாண்டு மாணவர்கள் எல்லோரையும் கடைசி மாதம் உங்களுக்கெல்லாம் விடுதியில் இடமில்லை என்று காலி செய்ய வைத்தது. இதனால் நாங்கள் எல்லோரும் வெளியில் வீடு அல்லது அறை பிடித்துத் தங்க நேர்ந்தது. சிலர் வாடகை வீடு பிடித்தோம். சிலர் தேர்வு நேரங்களில் மட்டும் தங்கிக் கொள்ளும் படி லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கொண்டனர். செந்திலாண்டவன் புண்ணியத்தில் குறைந்த கட்டணத்தில் நல்ல அறைகளும் அருகிலேயே சிறப்பான உணவு வசதிகளும் கிடைத்தன. அந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட திருசெந்தூரில் இருந்த எல்லா ஓட்டல்களிலும் சுவை பார்த்திருப்போம். விடுதியில் இருந்த காலத்திலும் தேர்வுக்கான படிப்பு விடுமுறையின் போது தங்கிக் கொள்ள மட்டும் அனுமதிப்பார்கள்; உணவகம் இராது. அந்த நாட்களிலும் சாப்பாட்டுக்கு வெளியில்தான் வந்து செல்வோம். அப்போது வந்து சுவை பார்த்து வைத்திருந்தது இந்தக் கடைசி மாதத்தில் மிகவும் வசதியாக இருந்தது.

எங்கள் பேராசிரியர் திரு. வேலாயுதம் மற்றும் எங்கள் ஊர்க்காரப் பேராசிரியர் திரு. பால் பாண்டியன் ஆகியோர் உதவியோடு, நாதன், ராஜா, ரமேஷ் என்கிற மூவரோடு நானும் சேர்ந்து ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துத் தங்கினோம். நால்வருக்குப் பிடித்த வீட்டில் எங்கள் நண்பர்கள் பலரும் வந்து அவ்வப்போது தங்கிக் கொண்டார்கள். நாங்கள் பிடித்திருந்த வீடு கோயிலுக்கு மிக அருகில் ஓர் அழகான தெருவில் இருந்தது. அருகிலேயே ஒரு வீட்டில் சுவையான உணவும் கிடைத்தது. அவ்வப்போது வேலாயுதம் சார் வீட்டிலும் போய் ஓசிச் சாப்பாடு சாப்பிடுவோம். வேலாயுதம் சார் பட்டுக்கோட்டைப் பக்கம் இருந்து வந்து திருசெந்தூரில் பணி புரிபவர். ஒவ்வோர் ஆண்டும் அவர் பங்குக்கு அந்தப் பக்கம் இருந்து ஓரிருவரை அழைத்து வந்து சேர்த்து விட்டு விடுவார். அதிக பட்சமாக எங்கள் செட்டில் மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள்தான் நாதன், ராஜா மற்றும் ரமேஷ். ராஜாவும் ரமேஷும் சொந்தக் காரர்கள். நாதன் ஊர்க்காரன். நானாவது அந்த ஒரு மாதம்தான் அவர் வீட்டில் தொல்லை கொடுத்தேன். இந்த மூவரும் வாராவாரம் அவர் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போய் விடுவார்கள். அப்போதுதான் திருமணம் வேறு ஆகியிருந்தது அவருக்கு. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் படையெடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் அவருடைய வீட்டுக்கு அருகில் தங்கி இருந்தபோது அவருக்கு முதல்க் குழந்தை பிறந்திருந்தது. பொழுதுபோக்குக்கு அவனையும் தூக்கிக் கொண்டு அலைவோம். இப்போது பெரிய பையனாக ஆகியிருப்பான். வெளியில் எங்காவது பார்த்தால் எங்களுக்கு அவனையோ அவனுக்கு எங்களையோ அடையாளம் கூடத் தெரியாது.

ஊரின் வட எல்லையில் பேருந்து நிலையம். அங்கிருந்து தெற்கே ஊருக்குள் ஓரிரு கிலோ மீட்டர்கள் தொலைவில் நாங்கள் இருந்த வீடு இருந்தது. வடக்கே ஒரு கிலோ மீட்டர் நடந்தால் கல்லூரி வரும். இந்த இரண்டு-மூன்று கிலோ மீட்டர்களும் நடந்தே கடப்போம். ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு கிலோ மீட்டர் நடப்பதற்கு அழகாக இருக்கும். கடலுக்கு இணையாகவே சாலை.  நடந்து வரும் பாதையில் கடலோடு கலக்கும் ஓர் ஓடை போன்ற குட்டை ஒன்று உண்டு. சில நாட்களில் அது கடலோடு ஒட்டி உறவாடும். சில நாட்களில் இருவருக்கும் இடையில் ஆட்கள் நடந்து போகிற மாதிரி இடைவெளி இருக்கும். காணவே கண் கொள்ளாக் காட்சி அது. பேருந்து நிலையத்துக்கு எதிரில் இரயிலே வராத இரயில் நிலையம் ஒன்று இருந்தது. திருநெல்வேலி செல்ல மட்டும் ஒரே ஒரு இரயில் வரும் என நினைக்கிறேன். மீட்டர் கேஜ் பாதை. அதுவும் கடலுக்கும் சாலைக்கும் இணையாக வரும். இரயில் நிலையம் போய் உட்கார்ந்து பேசுவதற்குப் பொருத்தமான இடம் (படிக்க வசதியான என்ற இடம் என்று சொல்லிக் கொள்வது!). வருகையில் போகையில் சில நேரங்களில் ஒரு டீயைப் போட்டு விட்டு அங்கும் போய் உட்கார்ந்து கதை பேசுவோம்.

தேர்வு நாட்களின் போது நாங்கள் பிடித்திருந்த வீட்டில் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. கூடுதலாக ஏகப்பட்ட நண்பர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். வீட்டுக்காரர் ஏதும் சொல்லி விடுவார் என்ற பயத்திலும் கூட்டத்தில் படித்துக் கரையேறுவது கஷ்டம் என்ற பயத்திலும் கோயிலுக்குப் பின்னால் இருக்கிற வேலவன் விடுதியில் கூடுதலாக அறையெடுத்துத் தப்பிக் கொண்டோம் சிலர். வேலை கிடைத்து விட வேண்டுமே என்கிற பயம் ஒருபுறம். அதற்குப் படிப்பை முடிக்க வேண்டுமே என்கிற பயம் அதைவிடப் பெரிதாகக் குடைந்தது. படித்தேனோ இல்லையோ பயத்தில் தூங்கவேயில்லை. இரண்டு தேர்வுகளுக்குத் துளி கூடத் தூங்காமல் போய் உட்கார்ந்தேன். அனைத்தும் முடிந்த போது இரண்டு நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்தால் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்கிற அறிவியற் பாடம் ஒன்று படித்துக் கொண்டேன்.

கடைசி மாதத்துக்குப் பின் வேறென்ன? கடைசி நாள்தான்!
சொல்லவே வேண்டியதில்லை. முதல் நாளை விடப் பல வகைகளிலும் முக்கியமான நாள். மறுநாள் முதல் சொந்தக் காலில் நிற்க வேண்டிய காலத்தின் ஆரம்பம். எதிர் காலத்தைப் பற்றிய பயம் ஒருபுறம். இவ்வளவு சீக்கிரமாக இந்த நல்ல காலம் முடிந்து விட்டதே என்ற கவலை ஒருபுறம். பிரிவின் துயரம் ஒருபுறம். பிரியும் முன்னே வந்த பிரிவினையால் ஏற்பட்ட வாட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும் தாண்டி, பிரிந்துதான் ஆக வேண்டும். சிலர் அன்றும் ஒருநாள் தங்கி துயரத்தைத் தள்ளிப் போட்டார்கள். சிலர் கடைசி ஒருமணி நேரத்தில் உணர்வு பூர்வமாகப் பேசிப் பிரிந்தார்கள். சிலர் அப்போதும் உணர்வு பூர்வமாக உணர மட்டும் செய்து கொண்டு பேசாமலேயே பிரிந்தார்கள். சிலருக்குக் கண்ணீர் கூட வந்தது. முதல் நாள் வந்த கண்ணீர் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இதில் அப்படி எதுவும் இல்லை. சிலர் புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆற்றி விட்டுப் பிரிந்தார்கள். சிலர் மது ஊற்றி ஆற்றிப் பிரிந்தார்கள். கணிப்பொறியியல் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் நான்கைந்து பேர், அருகில் இருக்கும் பரமன் குறிச்சி என்ற கிராமத்தில், எங்கள் வகுப்புத் தோழன் ஜனார்த்தனன் என்பவனின் தென்னந்தோப்பில் போய், இளநீர் குடித்து விட்டுப் பிரிந்தோம். மற்றவர்களுக்கில்லாத ஒரு நம்பிக்கை கணிப்பொறியியல் படித்த எங்களுக்கு இருந்தது. அது, சென்னையிலோ பெங்களூரிலோ வேலை நிமித்தம் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை. அது சிலருக்கு நடந்தது. சிலருக்கு நடக்க வில்லை. அவை பற்றி இன்னொரு தொடரில் பார்ப்போம். இப்போதைக்குக் கல்லூரி வாழ்க்கை முடிகிறது... நன்றி. BYE... BYE...

சனி, ஜனவரி 07, 2012

நகரியம்

சேவல்களின்
கூவலில் விடிந்த
காலைப் பொழுதுகள்
இப்போது
கடிகார மணியோசையில்...

கல் தடுக்கி விழுந்தாலும்
கதறி ஓடிவரும்
பாமர மனிதர்களோடே
வாழ்ந்து பழகி விட்டதால்
காரிலடிபட்டுக் கிடந்தாலும்
அனுதாபமாயோர்
அன்னியப் பார்வை வீசிவிட்டுப்
பறக்குமிந்தப்
படித்த ஞானிகளோடு
ஒத்துப் போவது வெகு சிரமம்!

நச்சுப் புகைக் காற்றும்
இரைச்சலுமான சூழலில்
மனிதமும் மாசு பட்டு விட்டது!

கிராமியம் கேவலமாய்
நகரியம் நாகரிகமாய்
சித்தரிக்கப் படும் பொழுதுகளில்
சினம் கொண்டு சீரும் மனம்
சில நேரங்களில்
எதிர்மறையாயும்
எண்ணத்தான் செய்கிறது....

என்ன சாதியென்று
விசாரணை செய்யும்
இழிநிலை இங்கில்லையே!

எனவே
வாழ்க நகரியம்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

ஞாயிறு, ஜனவரி 01, 2012

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (5/6)


மொழிப் பிரச்சனை
தமிழகத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்தால் அதில் தெற்குதான் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும். வடக்கு தெற்கை விட மோசம் என்றாலும் சென்னை என்கிற ஒரு மாநகரம் இருக்கும் வசதி அதை வடக்கே சரிக்கட்டி விடுகிறது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலம் எப்போதுமே வளம் நிறைந்த பகுதி. தொழில் வாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கும் பகுதி. கிழக்குப் பகுதி என்று ஒன்று இல்லை. அதற்குப் பதில் காவிரி டெல்டாப் பகுதியான திருச்சி-தஞ்சாவூர்ப் பகுதியை எடுத்துக் கொண்டால், அவர்களும் வளமான வாழ்க்கை முறையும் நிறையக் கல்வி வாய்ப்புகளும் கலையார்வமும் கொண்டவர்கள். மதுரையும் அதற்குக் கீழே இருக்கும் தென் பகுதியும் சிறப்பான கல்வி வாய்ப்புகள் அற்ற பெரும்பாலும் கிராமப் புறங்களைக் கொண்ட வறண்ட பகுதி. இந்தியாவிலேயே பெரிய கிராமமான மதுரைதான் அவற்றின் தலைநகரம். மதுரையை என்றுமே மாநகரம் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. தென் தமிழகத்து மக்கள் அவர்களுக்கென்று பிடிவாதமான ஒரு வாழ்க்கை முறை கொண்டவர்கள். புதுமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வரவே வராது. சில இயல்பான திறமைசாலிகள் தவிர்த்து ஆங்கில வழி படிக்கும் மாணவர்களுமே கூட ஆங்கிலத்தில் திணறுவோர்தான்.

பள்ளியிலேயே ஆங்கில வழி கற்று கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மிக மிகக் குறைவு. அந்த வசதி சில நகரங்களில் மட்டுமே இருந்தது. எந்த வகுப்பிலும் தமிழ் வழி கற்ற மாணவர்கள்தாம் பெரும்பான்மையாக இருப்பர். எங்கள் வகுப்பில் அதிக பட்சமாக இருபத்தி நால்வரில் ஆறு பேர் ஆங்கில வழி படித்து வந்தவர்கள் இருந்தனர். மற்றவர்கள் அனைவருக்கும் முழுமையாக ஆங்கிலத்தில் பேசினால் ஒரு வாக்கியம் கூட ஒழுங்காகப் புரியாது. பள்ளியில் இருந்து கல்லூரி செல்லும்போது சந்திக்க நேரிடும் மிகப் பெரிய பிரச்சனை இதுதான் என்று பள்ளிக் காலத்திலேயே கேள்விப் பட்டிருந்தாலும் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வில்லை. நான் படித்த பள்ளி ஓரளவு பெரிய - தரமான பள்ளி என்பதால் அப்போதே ஓரளவுக்கு ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ள முயல ஆரம்பித்திருந்தேன். கிரிக்கெட் கிறுக்கு வேறு இருந்ததால் ஆங்கில இதழ்களில் கிரிக்கெட் செய்திகள் படிப்பதிலேயே ஓரளவு (ஓரளவுதான்!) அது வளர்ந்தது. முதல் நாள் படித்த போது ஸ்கோர் போர்ட் தவிர எதுவுமே புரியாதது இன்னும் நினைவிருக்கிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளும் வாக்கியங்களும் புரிய ஆரம்பித்தது. பின்னர் கல்லூரி வந்தபோது அது ஓரளவு உதவவும் செய்தது.

எங்கள் கல்லூரியில் இருந்த நூலகம் இதுவரை நான் பார்த்த மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று எனலாம். கல்லூரிக்கு வந்ததும் முழுமையாக ஆங்கிலத்திலேயே இருக்கும் பெரும் பெரும் புத்தகங்களைப் பார்த்து மிரண்டு போனோம். அதுவரை புத்தகம் என்றாலே தமிழில் மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் நாம். நல்ல வேளையாக (!) வகுப்பாவது தமிழில் நடத்தினார்கள். இல்லாவிட்டால், ஊமைப் படம் பார்ப்பது போல ஆகியிருக்கும். படித்து முடித்து வேலை தேடி வந்தபோது வேறு விதமாக நினைத்தோம். முதலில் சில காலம் புரியாவிட்டாலும் பரவாயில்லை என்று பிடிவாதமாக அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசியிருந்தால் மூன்று வருடம் படித்து முடிக்கும் முன் ஓரளவு தயாராகி இருக்கலாமே என்று தோன்றியது. முதல் நாள் ஒரு நாள் மட்டும் எங்கள் ஆசிரியர் ஒருவர் முழுக்க ஆங்கிலத்தில் பத்து நிமிடங்கள் நடத்தினார். எல்லோரும் பேந்தப் பேந்த விழித்ததைப் பார்த்து விட்டு, "என்னடே!" என்று சிரித்தார். "சார், இதெல்லாம் எங்களுக்கு ஒண்ணுமே புரியாது சார்!" என்று எல்லோரும் பொங்கி வழிந்தார்கள். அத்தோடு அவரும் தமிழராகி விட்டார். அவரும் இதை அசராமல் ஒவ்வொரு வருடமும் செய்து பார்ப்பார் என நினைக்கிறேன். இதெல்லாம் இப்போது மாறியிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இப்போதெல்லாம் இளைய தலைமுறை மாணவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் கூட ஆங்கில வழிக் கல்வி அதிகமாகி விட்டது. நிறைய ஆங்கிலப் படங்கள் பார்க்கிறார்கள். அமைதி... அமைதி... "ஆங்கிலம் மட்டும்தான் தன்னம்பிக்கை கொடுக்குமா?" என்ற கூச்சல் கேட்கிறது. இப்போதைக்கு அது சம்பந்தப் பட்ட தன்னம்பிக்கை பற்றி மட்டுமே பேச்சு. ஆகவே மற்ற பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.

பெரும்பாலும் தமிழ் வழி கற்று வந்த மாணவர்கள் முதலாமாண்டு முழுக்க பெரும்பாலும் பின் தங்கியே இருப்பார்கள். இரண்டாம் - மூன்றாம் ஆண்டுகளில்தான் ஒரு வழிக்கு வருவார்கள். எங்கள் பல்கலைக் கழகத்தில், கல்லூரியில் சேர்ந்ததும் முதல் மாதத்தில் ஒரு வாரம் முழுக்க, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குத் தாவ வசதியாக இருக்கும் படி இணைப்புப் படிப்பு (BRIDGE COURSE) என்றொன்று நடந்தது. அந்த ஒரு வாரம் நல்ல அனுபவம் என்ற போதும் யானைப் பசிக்கு சோளப் பொறி என்கிற மாதிரி பத்துப் பதினைந்து வருடப் பழக்கமின்மையை ஒரு வாரத்தில் எப்படிச் சரிசெய்ய முடியும்? எங்களோடு ஆங்கில இலக்கிய மாணவர்களும் இருந்தார்கள். அவர்கள்தாம் ஆங்கில இலக்கியம் படிப்பவர்களே என்று அவர்களிடம் ஏதாவது உதவிக்குப் போனால், "மக்கா, இந்தக் கிண்டல்தானே வேணாங்கிறது. நானே நல்ல கோர்ஸ் எதுவும் கிடைக்காமல் இதுக்கு வந்திருக்கிறேன். இதிலும் நீங்கள் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் நான் எங்கே போவேன்?" என்பார்கள் (ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் யாரும் பொசுக்கென்று இதற்காகக் கோபப் பட்டு விடாதீர்கள். நான் படித்த காலத்தில் நடந்த உண்மையைச் சொல்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி, உயர்வு-தாழ்வு பற்றியெல்லாம் பேசி இல்லாத பிரச்சனை எதையும் உண்டாக்கி விடாதீர்கள்!).

பழைய மாணவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஒவ்வொரு வகுப்புக்கும் அழைத்துச் சென்று பேச விடுவார்கள். முக்கியமாக, மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் அவர்களுடைய அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளச் செய்வார்கள். நான் படித்த காலத்தில் அது போல மூன்று - நான்கு பேர் வந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருமே சொன்ன ஒரு முக்கியமான அறிவுரை இதுதான் - "படித்து முடித்ததும் இங்கே இராதீர்கள். ஊரில் இருக்கும் வரை உருப்படவே முடியாது. அப்படி உருப்பட்டவர்கள் யாருமே கிடையாது. முன்னுக்கு வர விரும்பினால், உடனடியாகக் கிளம்பி பெங்களூரோ சென்னையோ போய் விடுங்கள். நம்ம ஆட்கள் சென்றவுடன் மாட்டுவது ஆங்கிலம் பேசுவதில்தான். அதில் இருந்து வெளிவந்து மற்றவர்களுடன் சரி சமமாகப் போட்டி போடும் நிலைக்கு வரவே பல வருடங்கள் ஆகும். பாடத்தை ஒழுங்காகப் படிக்கா விட்டால் கூடப் பரவாயில்லை. ஆங்கிலம் நன்றாகப் பேசப் பழக ஆரம்பியுங்கள். திறமையான கிராமப் புற மாணவனை விட சராசரி நகர்ப்புற மாணவன் எளிதில் முன்னுக்கு வந்து விடுவான். அதைத் தவிர்க்க ஒரே வழி - நன்றாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதுதான்!". இந்த அறிவுரை ஆணி வைத்து அடித்தது போல மனதில் பதிந்து விட்டது. இன்றும் ஊரில் இருந்து, "வேலை வாங்கிக் கொடுங்கள்!" (அதென்ன கத்தரிக்காயா?) என்று அழைப்பவர்களிடம் எல்லாம் நான் சொல்கிற அறிவுரை அதுதான். "முதல் வேலை, ஊரைக் காலி பண்ணு. அப்புறமா எனக்குக் கால் பண்ணு!".

நாமும் ஒருநாள் கல்லூரிக்குப் போய், நாம் உருவான அதே இடத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை மாணவர்கள் மத்தியில், நம் அனுபவங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு ஒரு பெரும் உரை நிகழ்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது நடந்த பாடில்லை. கண்டிப்பாக வாழ்நாளில் ஒருமுறை செய்து விட வேண்டும். தொழில்நுட்பம் வளர்கிற வேகத்தைப் பார்த்தால், கூடிய சீக்கிரம் அதையே வீடியோ கான்பரன்சில் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம்.

கணிப்பொறியியல்
மனித மொழிகளில் மட்டும் எங்களுக்குப் பிரச்சனை இருக்கவில்லை. கணிப்பொறிகளின் மொழிகளோடும் பிரச்சனைதான். இப்போதெல்லாம் மேற்கு நாடுகளில் வந்து விட்ட ஒரு கண்டுபிடிப்போ தொழில்நுட்பமோ பெரு நகரங்களில் வாழும் நமக்கு உடனடியாக வந்து விடுகிறது. குறைந்த பட்சம் வசதியான ஆட்கள் சிலருக்காவது அது உடனடியாகக் கிடைத்து விடுகிறது. அதே வேகத்தில் கூடிய சீக்கிரமே கிராமப் புறங்களில் இருப்போருக்கும் வசதியற்றோருக்கும் கூடக் கிடைத்து விடுகிறது. அப்போது அப்படியில்லை. பெங்களூர், சென்னை போன்ற ஊர்களில் கணிப்பொறி என்றாலே அது விண்டோசில்தான் (WINDOWS) ஓடியது. ஆனால் திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு அது வந்திருக்க வில்லை. எனவே எங்கள் கல்லூரியிலும் டாஸ் (DOS) என்ற பழைய பஞ்சாங்கம்தான் ஓடிக் கொண்டிருந்தது. படிப்பை முடித்து விட்டு, சென்னையும் பெங்களூரும் வந்து வேலை கேட்டால், "விண்டோசே தெரியாதா?! அப்புறம் கணிப்பொறியியலில் என்ன பிடுங்கினாய்?" என்று நம்பிக்கையே இல்லாமல் ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர்களுக்கெல்லாம் எங்கள் கதையைச் சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. சில விபரமான பையன்கள் வேலை தேட ஆரம்பிக்கும் முன்பு தேர்வுக்குப் பிந்தைய விடுமுறையில் பெரு நகரங்களுக்கு வந்து அவற்றைக் கற்றுக் கொண்டார்கள். அது கை கொடுத்தது. நல்ல வேளையாக அடுத்த ஆண்டோ அதற்கடுத்த ஆண்டோ எங்கள் கல்லூரியில் புத்தம் புதிய கணிப்பொறிகள் வந்து இறங்கி விட்டன என்று கேள்விப் பட்டோம். இல்லாவிட்டால், எங்கள் இளைய தலைமுறைகளின் பாடு ரெம்பவும் திண்டாட்டமாகி இருக்கும்.

அது அடிப்படைக் கணிப்பொறியியல் செயல்பாட்டிலேயே இருந்த சிக்கல் என்றால், அதை விடச் சிக்கலான சிக்கல்களும் இருந்தன. கணிப்பொறி மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் (LANGUAGES AND TECHNOLOGIES) என்று சில இருக்கின்றன. அதாவது, நாங்கள் சந்தைக்கு வந்தபோது சந்தையில் சூடாக ஓடிக் கொண்டிருந்தது - VISUAL BASIC, ORACLE என்று இரண்டு தொழில்நுட்பங்கள். இவற்றின் ஆனா ஆவன்னா கூடத் தெரியாமல்தான் எங்களில் பெரும்பாலானோர் வந்து சேர்ந்தோம். நாங்கள் அதற்குப் பத்து-இருபது வருடங்களுக்கு முந்தைய BASIC, FORTRAN,COBOL, PASCAL, மற்றும் C ஆகிய மொழிகளைப் படித்துக் கொண்டு வந்தோம். இதில் COBOL மற்றும் C-யாவது கொஞ்ச நஞ்சம் புழக்கத்தில் இருந்தது. மற்றவை எதற்கும் பயன்படாதவை. C++ என்று ஒன்று கூடுதலாகப் படித்தோம். அதிலும் என் போன்ற அரைகுறைகளுக்குப் பிரயோசனமில்லை. C மற்றும் C++ ஆகிய இரண்டுமே, வேதியியல் ஆய்வுக் கூடத்தில் பொடிகளையும் அமிலங்களையும் போட்டுச் செய்த ஆய்வுகளைப் போலவே மித மிஞ்சிய அறிவாளிகளுக்கு மட்டுமே பயன்படும் பாடங்கள். பிழைப்புக்கு ஒரு வேலை தேடிக் கண்டு பிடித்து நிம்மதியாக அமர்ந்து விட வேண்டும் என்று ஆசைப் படுபவர்களுக்கு அவற்றால் ஒரு பயனுமில்லை.

நாங்கள் BASIC படித்தபோது PASCAL, நாங்கள் PASCAL படித்தபோது C++, நாங்கள் C++ படித்தபோது எங்களுக்குப் புரியாத வேறு ஏதோ ஒன்று என்று எப்போதுமே எங்களை விடப் பல வருடங்கள் முன்னால் இருந்த மணிகண்டன் என்கிற உன்னதப் பிறவிதான் எங்கள் செட்டிலேயே எல்லாவற்றுக்கும் தயாராக வந்து இறங்கிய ஒரேயொரு கலக்கல் ஆசாமி. அவன்தான் எங்கள் எல்லோருக்குமே பெரிதளவு வழிகாட்டி. ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கும் அளவுக்குப் படிப்பாளி அல்ல அவன். ஆனால் முதல் வேலையிலேயே கம்பெனியின் முதலாளி வரை திரும்பிப் பார்க்க வைத்த திறமைசாலி. தேவைக்கும் அதிகமான பூரணத்துவவாதி (PERFECTIONIST). நம் கல்வி முறை திறமைசாலிகளைச் சரியாக அடையாளம் காணும் ஆற்றல் அற்றது என்பதற்கு என்னிடம் இருக்கும் ஆயுட்கால எடுத்துக்காட்டு அவன். இப்போதும் நாங்கள் யாருமே கற்பனை கூடச் செய்து பார்த்திட முடியாத அளவுக்கு ஓரிடத்தில் இருக்கிறான்.

சராசரிகள் எல்லோருமே கணிப்பொறி இயக்கர் (புரிகிற மாதிரிச் சொன்னால், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்) வேலையோ அவ்வப்போது படித்துச் சொல்லிக் கொடுக்கும் கணிப்பொறி மையங்களின் ஆசான் (TUTOR) வேலையோ பார்த்துத்தான் பிழைப்பை ஆரம்பித்தோம். பின்னர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் - அதில் கிடைக்கும் பணம் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தித்தான் - VISUAL BASIC, ORACLE போன்ற படிப்புகள் எல்லாம் படித்துக் கொண்டு, புதிதாய் சாப்ட்வேரில் வேலைகள் தேடினோம். எங்கள் படிப்பையே நகர்ப்புறங்களில் படித்து விட்டு வந்தவர்களுக்கு இணையாக நாங்களும் வளர சிலருக்கு ஓரிரு வருடங்கள் தேவைப் பட்டன; சிலருக்குப் பல வருடங்கள் தேவைப் பட்டன; சிலர் இன்னும் நெருங்கியபாடில்லை. இந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சனை ஏற்றத்தாழ்வு என்றால், அதில் இது ஒரு முக்கியமான ஏற்றத்தாழ்வு. அடுத்த தலைமுறைக்கு சாதியை விட - பொருளியலை விட - மற்ற பல வேறுபாடுகளை விட, இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அதை எப்படி வெல்லப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டச்சுக் கலாச்சாரம்
வீட்டை விட்டு வெளியேறிப் போய், விடுதியில் தங்கிப் படித்தல் என்றாலே, அதற்கென்று பல அனுபவங்கள் உண்டு. அதில் ஒன்று, அப்படிப் போகும் எல்லோருமே வேறுபட்ட மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தம் ஆளுமையை வேகமாக வளர்த்துக் கொள்வார்கள். பழகுவது என்றால், பகலில் பழகி விட்டு, இரவில் வீட்டுக்குப் போய்ப் படுத்தல் போல அல்ல இது. மாறாக, இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்களுடனேயே இருத்தல். உடன் உறங்கி, உடன் உண்டு, உடன் விளையாடி (படிப்பைத் தவிர எல்லாத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் இங்கு!)... என அவர்களோடே முழுக்க முழுக்க வாழ்வது. அது சாதாரண வேலை இல்லை. ஒவ்வொருவரும் ஒருவிதம். எல்லோருடனும் ஒத்துப் போனால்தான் நிம்மதியாக இருக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் அதைப் பழகிக் கொள்வார்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு பிற்காலத்தில் தூரம் தொலைவில் வந்து தன் போன்ற நண்பர்களுடன் தங்கிப் பணி புரிய நேரும் கால கட்டத்தில் மிகவும் உதவியாக இருக்கும். எதையுமே சீக்கிரம் படித்துப் பழகிக் கொள்தல் நல்லதுதானே. இப்படிப் பழகிக் கொள்ளும் ஒரு முக்கியமான பண்பு - நிதி நிர்வாகம். அப்டீன்னா? அதாவது, தனக்கு வீட்டில் இருந்து கொடுத்தனுப்பும் பணத்தை முறையாகச் செலவிட்டு, சரியாகக் கணக்கிட்டு, நல்லபடி வைத்துக் காப்பாற்றிக் கொள்தல். இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை யாவை? இதோ...

ஒன்று, சில ஆட்கள் வீட்டில் இருந்து கொடுத்து விடும் பணத்தை அப்படியே சேமித்து விடுவார்கள். அதை வைத்து அதன் பின் என்ன செய்வார்கள் என்று தெரியாது. ஆனால் எப்போதுமே பஞ்சப் பாட்டு பாடிக் கொண்டே இருந்து, உடன் இருப்பவர்களையே முழுவதும் செலவழிக்க வைத்து எல்லாத்தையும் அனுபவித்து விடுவார்கள். இப்படிப் பட்டவர்களைச் சமாளிப்பது மிக மிகக் கடினம். மூஞ்சியில் அடித்த மாதிரிப் பேசத் தெரிந்த சிலரால் மட்டுமே அவர்களிடம் தப்ப முடியும். மற்றவர்கள் யார் மாட்டினாலும் அம்பேல்தான். எப்படியும் அவர்களுக்கென்று சில அடிமைகளைப் பிடித்து விடுவார்கள். அவற்றில் சில அறிந்தும் சில கடைசிவரை அறியாமலும் செலவழித்து அழித்து அழிந்து போம். இது சிக்கனம், கஞ்சம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. சக மனிதர்களைக் கேனப்பயல் ஆக்கும் புத்தி. அதைத் தவிர வேறென்றும் இல்லை. இது பணம் மட்டும் சம்பந்தப் பட்ட விசயமில்லை. தனி மனித நாணயம் சார்ந்தது.

இப்படிப் பட்ட பிசினாறிகளில் பல விதம். சிலர், எங்கு சென்றாலும் உடன் வருவார்கள். ஆனால் காசு கொடுக்கும் நேரத்தில் மட்டும் ஆளே கண்ணில் தட்டுப் பட மாட்டார்கள். இருந்தாலும் கண்டு கொள்ளாதது போல இருப்பார்கள். சிலர், எங்குமே வர மாட்டார்கள். அழைத்தால்தான் சிக்கலே. அழைத்தால் வந்து விடுவார்கள். ஆனால் எதற்கும் காசு கொடுக்க மாட்டார்கள். கேட்டால், அவர்களுக்கென்று ஒரு நியாயம் வைத்திருப்பார்கள் - "அவன்தானே அழைத்தான்; அப்டின்னா, அவன்தானே கொடுக்கணும்!". சிலர், வறுமையானவன் போலவே காட்டிக் கொண்டு அனுதாப ஓட்டு வாங்குபவர்கள். சிலர், மிகத் திறமையானவர்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், மிக விபரமாக - ரெம்போ தாராளமானவர்கள் போல, என்றாவது ஒருநாள் வம்படியாக நமக்கும் சேர்த்துக் கொடுத்து விடுவார்கள். அதன் பின்பு, 'இவனிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்று காசு கேட்டால் கேவலம்!' என்றெண்ணி காலம் பூராவும் நாமே கொடுத்துத் தொலைய வேண்டும்.

இது போன்றவர்களை எப்படிக் கையாள்வது என்பது விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்குக் கொஞ்சம் சீக்கிரமே கிடைக்கும் அனுபவம். சில நேரங்களில் இந்தப் பழக்கத்தில் விடுதி மாணவர்களுக்கும் வெளி மாணவர்களுக்கும் ஒத்துப் போகாமல் கூடப் போய்விடும். அவர்களுக்கு இதெல்லாம் மிகக் கேவலமான நடத்தையாகத் தெரியும். எங்களுக்கோ இது ஓர் அடிப்படை நாகரீகம்.

இப்போதும் பொது இடங்களில் பணத்தைத் தொட்டுப் பார்க்கப் பிடிக்காத பலரைச் சந்திக்கத்தான் செய்கிறோம். விடுதிக் காலத்தில் பழகிய நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெல்ல முயல்கிறோம். சில நேரங்களில் சமாளித்து விடுகிறோம். சில நேரங்களில் அவர்களுடைய புது விதமான உத்திகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தோற்றும் விடுகிறோம். யார் புத்திசாலி - திருடனா காவலரா? அப்படியான ஒரு முக்கியமான உத்தி - இப்படிக் கணக்குப் பார்ப்பதை எளிதில் கொச்சைப் படுத்தி விட்டாலே போதும் (நம்மையே நமக்குக் கேவலமாகத் தெரிகிற மாதிரி மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் சிலர்!) . நிறையப் பேர் பயந்து வழிக்கு வந்து வாரி வழங்க ஆரம்பித்து விடுவோம்.

உண்மையிலேயே கணக்குப் பார்க்க விரும்பாத பரந்த மனப்பான்மை கொண்டோரைப் பார்த்து நாமும் அப்படி மாறப் பார்த்தால் அதை விடப் பல மடங்கு ஏமாற்றுக்காரர்கள் வந்து சூழ்ந்து விடுகிறார்கள். இதெல்லாம் புரியாதவரைதான் நிம்மதியாக இருக்க முடியும். நம் மீது சவாரி ஏற யாராவது வரிசையில் நிற்கிறார் என்று தெரிந்தால் அடுத்த நிமிடமே சுதாரித்து விடுவோமே. எனவே டச்சுக்காரர்களின் பழக்கம்தான் எப்போதும் சரியென்று படுகிறது. அதுதான் சரியான இடை-வழி (MID PATH). அந்த வழியைப் பிடித்தால், யாரையும் ஏமாற்றவும் வேண்டியதில்லை; ஏமாறவும் வேண்டியதில்லை. கேவலமாகத் தெரிந்தாலும் அதுதான் தொலைநோக்கில் நல்ல பழக்கம். எப்பவுமே இன்னொருத்தரை நமக்குச் செலவழிக்க வைப்பதை விட இது கேவலம் இல்லையே?! நம் செலவுக்கு நாம் காசு கொடுத்தல் என்று சுருக்கிப் பார்ப்பதை விட நம் செயலுக்கு நாம் பொறுப்பேற்றல் என்று கொள்ள வேண்டும் அதை. அதைக் கற்றுக் கொடுத்த விடுதிக்கு நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்.

திருட்டுகள்
எல்லா இடங்களிலும் எல்லா விதமான ஆட்களும் இருக்கிறார்கள். எனவே எல்லா இடங்களிலும் திருடர்களும் இருக்கிறார்கள். விடுதி வாழ்க்கை முழுமையுமே திருட்டுக் கொடுத்தல் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இது ஒரு மிகக் கவனமாகக் கையாள வேண்டிய பிரச்சனை. ஒருவன் திருடுவதில் எத்தனை பேர் ஆதாயம் அடைகிறார்கள்? எத்தனை பேர் இழக்கிறார்கள்? கணக்கு மட்டும் போட்டுப் பார்த்தால் வரும் பதில் தவறானது. பணத்தை எடுத்தவனும் இழந்தவனும் மட்டுமே சம்பந்தப் பட்ட விசயம் இல்லை இது. திருட்டு எனும் கேவலமான செயல் பற்றிக் கனவிலும் எண்ணியிராத பல நல்லவர்கள் சந்தேகப் படப் படுகிறார்கள். நேரடியாகக் கேட்கப் படா விட்டாலும் கூட, தான் சந்தேகப் படப் படுகிறோம் என்பதே எவ்வளவு வலி மிகுந்த அனுபவம். எவனோ ஒருவன் செய்கிற திருட்டால், அதற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் பாதிக்கப் பட்ட கதைகள் உண்டு. பல அருமையான உறவுகள் சேதாரம் அடைந்ததுண்டு.

திருட்டு பற்றி நான் படித்த அதை விட முக்கியமான பாடம் - திருடுபவன் எப்போதும் ஏழையாக இருக்க வேண்டியதில்லை; தவறான வளர்ப்பு கொண்டவனாக இருக்க வேண்டியதில்லை; எந்தக் குறிப்பிட்ட குழுவையும் சார்ந்தவனாக இருக்க வேண்டியதில்லை; திருட்டை இவற்றோடு முடிச்சுப் போட்டு பேசுபவர்கள் எல்லாம் வேறு ஏதோ கோளாறு கொண்டவர்கள் அல்லது அவர்களும் திருடர்கள். பள்ளியில் ஒன்று கல்லூரியில் ஒன்று என இரண்டு விடுதிகளில் இருந்திருக்கிறேன். இரண்டிலும் திருட்டுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் நாங்கள் கேள்விப்பட்ட - கண்டு பிடித்த திருடர்கள் அனைவருமே முதல் முறை எளிதில் சந்தேகப் பட முடியாதவர்கள் அல்லது திருடியவனே ஒத்துக் கொண்ட பின்னும் எங்களால் நம்ப முடியாதவர்கள். இன்று நினைத்தாலும் எனக்கு நம்ப முடியவில்லைதான். அப்படிப் பட்ட பெற்றோர், குடும்பம், பின்னணி கொண்டவர்கள். அப்படி என்னதான் அவர்களுக்குக் கட்டாயமோ - தேவையோ?

"கஞ்சிக்கு வழியில்லாதவனிடம் பெரும் பெரும் பொறுப்புகளைக் கொடுத்தால் அவன் திருடத்தான் செய்வான். பரம்பரைப் பணக்காரனிடம் எதைக் கொடுத்தாலும் ஆசைப் பட மாட்டான்!" என்று பொது வாழ்க்கையில் கூட இப்போதெல்லாம் ஒருவிதப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய மூடப் பேச்சு அல்லது ஏமாற்றுப் பேச்சு என்பதை நாங்கள் அப்போதே புரிந்து கொண்டு விட்டோம். அப்படிச் சொல்பவர்களுக்கெல்லாம் என்னுடைய ஒரே கேள்வி - "காமராஜரும் கக்கனும் என்ன முதலாளிமார் வீட்டுப் பிள்ளைகளா? பின் ஏன் அவர்கள் அவ்வளவு நேர்மையாக இருந்தார்கள்?". அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள் என்று மட்டும் எளிதான பதிலைக் கொடுத்துத் தப்பப் பார்க்காதீர்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். தேவைக்கு மட்டுமே திருடுவார்கள் என்றில்லை; ஆசை அதிகமானாலும் திருடலாம். அதற்கும் ஒருவரின் பொருளாதார நிலைக்கும் சம்பந்தமே இல்லை.

-தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...