புதன், டிசம்பர் 28, 2011

தமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்

இன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற முக்கால்வாசிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் தலை சிறந்த படைப்பாளி தான்தான் என்றும் மற்றவர்கள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் என்றும் தலை சிறந்த படைப்புகள் என்றால் தன்னுடையவை அனைத்துக்கும் பிறகுதான் பிறருடையவை எல்லாம் என்றுமே சொல்கிறார்கள். சில நேரம் இவர்கள் எல்லோருமே ஏதோ விதமான மனநோய்க்கு உள்ளானவர்களோ என்று கூடத் தோன்றுகிறது. இது தமிழில் மட்டும் இருக்கும் பிரச்சனையா அல்லது கணிப்பொறி பார்த்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகள் போல பேனா பிடித்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகளில் ஒன்றா? மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள்!).

வைரக் கவிஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு காமராசன் என்றொரு கவிஞர் திரிந்தார். இப்போது அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்து விட்டு எனக்கு மண்டையெல்லாம் கிர்ரென்று சுற்றி விட்டது. "வள்ளுவனையும் கம்பனையும் தவிர்த்து தமிழில் உருவான எவனுமே கவிஞனே அல்ல. கம்பனைத் தூக்கிச் சாப்பிடும் படியான படைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதன் பின்பு நான் காலி பண்ண வேண்டிய ஒரே ஆள் வள்ளுவன் மட்டுமாகத்தான் இருக்கும்!" என்று விளாசியிருந்தார். அதன் பின்பு அவர் யார் யாரைத் தூக்கிச் சாப்பிட்டார் என்பது பற்றியெல்லாம் கேள்விப் படவே இல்லை. நீங்கள் யாராவது கேள்விப் பட்டிருந்தாலும் கீழே கருத்துரையில் அது பற்றித் தெரிவித்து இவ்வையகமும் அவ்வின்பம் பெற்றிட உதவிடுவீர், ப்ளீஸ்!

அதே காலத்தில் சாகாவரம் வாங்கி வந்திருக்கும் நம் செத்தமிழ் அறிஞர் அவர்களின் பேட்டி ஒன்றும் படித்து விட்டு சில காலம் அது போலக் கிறுக்குப் பிடித்து அலைந்தேன். "என்னை மாதிரி ஒருவன் பிறக்கவில்லை என்றால் தமிழே தேங்கிப் போயிருக்கும். என்னை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்ததால் தமிழுக்கும் தமிழர்க்கும்தான் இழப்பு!" என்றிருந்தார். உண்மை என்னவென்றால், அரசியல்வாதியாக இருந்த ஒரே காரணத்தால்தான் தமிழின் தலைசிறந்த படைப்பாளி தான்தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரலாற்றிலும் ஊழல் செய்ய முடிந்தது. அதனால்தான் வெளி வரும் தன் ஒவ்வொரு நூலுக்கும் திரைப்படத்துக்கும் கட்சியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் விற்பனைப் பிரதிநிதி (SALES REPRESENTATIVE) போல இலக்கு (TARGET) நிர்ணயித்துப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ள முடிந்தது. அவர்கள் எல்லாம் அதை விற்றுப் பிரபலம் ஆக்கவில்லை. இலவசமாய்க் கொடுத்துத்தான் பிரபலம் ஆக்கினார்கள். அதில் இழந்த பணத்தை அவர்கள் எப்படிச் சரிக் கட்டிக் கொண்டார்கள் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த கதை.

திராவிட இயக்கங்கள் நமக்குச் செய்த நல்லதுகள் ஒருபுறம் என்றால், அவை செய்த தீமைகளில் ஒன்று மற்ற படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அழித்து வீசியது. சிவாஜி கணேசனுக்கு ஏன் விருது கொடுக்க வில்லை என்று எல்லோருமே வியந்திருக்கிறோம். அதன் பின்னால் இருந்த அரசியல் பற்றி விசாரித்துப் பாருங்கள். மூப்பனாரை முன்னுக்கு வரவிடாமல் செய்த அதே காவிரித் தண்ணீர்தான் அவரையும் அழிக்க முயன்றது என்கிறார்கள். திராவிட இலக்கியங்களுக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் மற்ற இலக்கியங்களுக்கும் கொடுக்கப் பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவற்றைச் சிறுமைப் படுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் சில ஞான பீடங்கள் கிடைத்திருக்கலாம் என்று சமீபத்தில் ஒருவர் எழுதியிருந்ததைப் படித்த போது பாவி மக்கள் இவ்வளவா பண்ணினார்கள் என்று வியப்பாக இருந்தது. அவர்கள் தன் மற்றும் தன் பிள்ளைகுட்டிகள் பிழைப்புக்காக எவ்வளவும் பண்ணுபவர்கள் என்பதைப் பார்த்து விட்ட தலைமுறை நாம் என்பதால் எளிதில் நம்பவும் முடிந்தது.

இது பழைய கதை என்றால், இப்போதைய கதை அதுக்கும் மேல் இருக்கிறது. நம் போன்ற இளைய தலைமுறையினரின் பசிக்கெல்லாம் இணையத்தில் திகட்டத் திகட்டத் தீனி போட்டுக் கொண்டு இருக்கும் இரு பெரும் எழுத்தாளர்களின் சில எழுத்துக்களைப் படித்தபோதும் இதே அக்கப்போர்தான். இருவரில் யார் பெரிய இது என்கிற சண்டை ஒருபுறம் தரம் தாழ்ந்த நிலையில் நடக்கிறது. இன்னொரு புறம் இதுவரை இந்த மண்ணில் தோன்றிய எழுத்து மகான்களிலேயே தான்தான் பெரிய இது என்கிற நினைவூட்டல்கள் வேறு அடிக்கடிச் செய்து கொள்கிறார்கள். அதைக் காலம் முடிவு செய்ய வேண்டும் என்பது ஒன்று. மற்றவர்களுக்கு மண்டையில் சரக்கில்லை என்றெண்ணி உண்மையிலேயே அப்படித் தோன்றினாலும் (அறிவாளுகளுக்கேல்லாம் அப்படித்தானே தோன்றும்!) அதை மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமாவது வேண்டும். கருமம் பிடித்தவர்கள் பேனா மீதே வெறுப்பு வர வைத்து விடுவார்கள் போலத் தெரிகிறது.

அடுத்து வருபவர் முதல் பத்தியில் பார்த்த திரைக் கவிஞர். இவர் பண்ணுகிற அட்டகாசமோ அதைவிட அதிகம். தன்னை வெல்லத் தன் மகன் மட்டுமே வர வேண்டும் என்கிறார். "இதுவரை என்னை விடச் சிறப்பாக யாரும் வந்து விட வில்லை; அப்படி வருகிற நாளில் குன்றின் மீதேறி நின்று கூவுவேன்!" என்கிறார். ஒன்று இந்தக் கோழி கூவாமலே போய்ச் சேரும் அல்லது தன் மகனுடைய பெயரையே கூவி விட்டுச் செல்லும் என்பது என் கணிப்பு. மானங்கெட்டவர்கள்! உங்களை எல்லாம் எவ்வளவு மதித்து விட்டேன் என்று கவலையாக இருக்கிறது. இதற்கு சும்மாவாவது தன்னடக்கம் காட்டிக் கொண்டே இருக்கும் கண்ணதாசன்களும் வாலிகளும் பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்று வேலையாக இருந்தாலும் அது பார்வைக்காவது நாகரீகமாக இருக்கிறது.

சனி, டிசம்பர் 24, 2011

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (4/6)

விடுதி நாள் விழா & கல்லூரி நாள் விழா
விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண்டிறுதியில் விடுதி நாள் விழா நடைபெறும். விடுதி நாள் விழா என்பது ஒரு நாள் விழா அல்ல. அந்த வாரம் முழுவதும் நடக்கும் பெருவிழா. வாரம் முழுக்க வித விதமாக நிறையப் போட்டிகள் நடக்கும். அவை எல்லாவற்றிலும் முக்கியமானது கிரிக்கெட் தொடர். உலகக் கோப்பை ரேஞ்சுக்கு பல அணிகள் மோதி அரையிறுதி, இறுதிப் போட்டிகள் எல்லாம் தாண்டி வெல்ல வேண்டும். கபடி, கைப்பந்து, அந்தப் பந்து, இந்தப் பந்து என்று மற்ற பல விளையாட்டுப் போட்டிகளும் நடக்கும். அதற்கெல்லாம் முடிவாக விழா நடக்கும். விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கலும் நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த ஆண்டு வெளியேறிச் செல்லும் சிலர் பிரிவுபச்சார உரையாற்றுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் அதில் ஒருத்தர் கலக்கி எடுப்பார். நான் மூன்றாம் ஆண்டு வரும்போது அந்த ஒருவர் நாமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவோ திட்டங்கள் போட்டிருந்தேன். கடைசியில் விழாவே நடக்க இல்லை. அது ஏன் என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். அதையும் பேசி விடுவோம்.

ஆனால், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மூன்றாமாண்டு மாணவர்கள் மட்டும் அவர்களுக்குள்ளாகவே ஏற்பாடு செய்து ஒரு பிரிவுபச்சார விழா எடுத்துக் கொள்வார்கள். எல்லோரையும் போல், கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவர்கள் மட்டுமாக நாங்களும் ஒரு சிறிய விழா எடுத்துக் கொண்டோம். கல்லூரி முதல்வர் கலந்து கொண்டார். பயங்கர உணர்ச்சிப் பெருக்கெடுத்து நானும் அதில் ஓர் உரையாற்றி மனதைத் தேற்றிக் கொண்டேன். எங்கள் துறைத் தலைவர் பேராசிரியர் சேதுராமலிங்கம் அவர்கள் பேசும்போது "உங்கள் நண்பர்களுடன் காலம் முழுவதும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார். அந்த அறிவுரை அன்றைக்கு மிகவும் பிடித்தது. அதன் பிறகு அதை எவ்வளவுக் கடைப் பிடித்தோம் என்பது வேறு கதை. மற்ற துறை நண்பர்களை விட நாங்கள் பரவாயில்லை. கணிப்பொறியின் துணையோடு கதையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் எனக்கும் ஓர் அறிவுரை சொன்னார். "இந்தப் பேச்சு, எழுத்து இதையெல்லாம் அப்படியே விட்டு விடாதே. இந்தத் திறமைகள் வேலைக்குப் போகும் போதும் பயன்படும்!" என்றார். அதனால், எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆனால், அந்த அனுபவம் பல இடங்களில் கை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுபோலவே, கல்லூரி நாள் விழா ஒரு முக்கியமான நிகழ்ச்சி. பொதுவாக மார்ச் மாதம் வரும். பிரிவுக்குச் சற்று முன்பு நடப்பதால் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அது ஒரு மிக முக்கிய நாள். பிரியப் போகிற ஓர் உறவோடு சேர்ந்து சுவைக்கும் ஒவ்வொரு நல்ல நிகழ்வும் முக்கியமானதுதானே. மிகப் பிரம்மாண்டமாகவும் நடைபெறும். கண்டிப்பாக சின்னையா (உயர்திரு. சிவந்தி ஆதித்தன் அவர்களை அந்தப் பகுதியில் எல்லோருமே இப்படித்தான் அழைப்போம்!) இருப்பார். அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறப்பு விருந்தினராக யாரேனும் ஒரு பெரும்புள்ளியை அழைத்து வருவார்கள். அதையெல்லாம் பார்க்கிறபோது நாம் சாதாரணக் கல்லூரியில் படிக்கவில்லை என்ற ஓர் உணர்வு வரும். அன்று மதியம், இருவருக்கும் (சின்னையாவுக்கும் சிறப்பு விருந்தினருக்கும்) தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படும். அதற்கான பயிற்சியே ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும். டெல்லி செங்கோட்டையில் நடக்கும் அணிவகுப்பு மரியாதையிலேயே கலந்து கொண்டு விட்ட மாதிரி ஓர் உணர்வு கிடைக்கும். அணிவகுப்பின் போது இசைக்கப் படும் பின்னணி இசை, பின்னணியில் கடல் மற்றும் பல வண்ணங்களில் கொடிகள் பறக்கும் சூழல் என்று எல்லாம் புல்லரிக்க வைக்கும். அப்பப்பா, இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறதப்பா. முதல் இரண்டாண்டுகள் நானும் அதில் பங்கெடுத்தேன். மூன்றாம் ஆண்டு விருப்பம் இல்லாமல் என்.சி.சி.யில் தொடர வில்லை. சுதந்திரம் பறிபோவதாகச் சொல்லி சுதாரித்துக் கொண்ட ஆட்களில் நானும் ஒருவன். இரவு நடைபெறும் கலை நிகழ்சிகள் பட்டையைக் கிளப்பும். அனைத்து நிகழ்ச்சிகளுமே மிகத் தரமாக இருக்கும். ஒரு மாதத்துக்கும் மேலான பயிற்சி என்றால் சும்மாவா? நான் கல்லூரி நாள் விழா மேடையில் ஏறியதாக நினைவேதும் இல்லை. அதுதான் நிகழ்ச்சிகள் அனைத்தும் தரமாக இருக்கும் என்று சொல்லி விட்டேனே. அதிலேயே சொன்ன மாதிரித் தானே.

உலகின் எந்தெந்த மூலைகளுக்குச் சென்றாலும் வருடத்தில் அந்த ஒரு வாரம் மட்டும் தன் சொந்த மண்ணுக்காக என்று ஒதுக்கி வைத்திருக்கிறார் சின்னையா. கல்லூரி நாள், அடுத்து திருச்செந்தூர்க் கோயிலில் தேரோட்டம் (அவர்தான் வடம் பிடித்து இழுத்து ஆரம்பித்து வைப்பார்!), அடுத்து சொந்த ஊரான காயாமொழியில் கோயில்க் கொடை, அடுத்து சேரன்மாதேவியில் இருக்கும் சன் பேப்பர் மில்லில் விழா என்று அந்த வாரம் முழுக்க சொந்த ஊரைச் சுற்றியே இருப்பார். அந்த நேரத்தில் நடு இரவில் உள்ளூர் உறவினர்களோடு சேர்ந்து வேட்டைக்கெல்லாம் போவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆகா! என்ன ஒரு வாழ்க்கை! இப்படியொரு வாழ்க்கைக்குத்தானே எல்லோருமே ஏங்குகிறோம்? அவர் மட்டுமில்லை. தென் தமிழகத்து நாடார்கள் எல்லோருமே இப்படியொரு சூப்பரான வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். வருடத்தில் ஒரு வாரம் ஊருக்கு ஒதுக்கி, பங்குனிப் பொங்கல் அல்லது கோயில்க் கொடைக்கு குடும்பத்தோடு வந்திருந்து மகிழ்ச்சியாக இருந்து விட்டுப் போவார்கள். சென்னை வாழ், மும்பை வாழ், பெங்களூர் வாழ் தென்னகத்தார் பலர் வீடுகளில் உள்ள குழந்தைகளிடம் கேட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் அதிகம் மகிழ்ந்த நாட்களில் ஒவ்வோர் ஆண்டும் வரும் இந்த ஒரு வாரம் கண்டிப்பாக இருக்கும். கேட்டுப் பாருங்கள். இது போல நம்ம ஊரிலெல்லாம் இல்லையே என்று பொறாமையாக இருக்கும்.

சனி-ஞாயிறு, கிரிக்கெட், கடற்கரை
இப்போது  விடுதி நாள் விழாக் கிரிக்கெட் தொடருக்கு வருவோம். அதற்கு வேண்டிய பயிற்சியை நாங்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே ஆரம்பித்து விடுவோம். நான்கு மணிக்குக் கல்லூரி முடிந்ததும் ஓடி வந்து சரியாக 4:15 க்கு ஆரம்பித்து விடுவோம். இருட்டும் வரை ஆட்டம் நடைபெறும். சதுரமான விடுதியில் நடுப்பகுதி மரங்கள் நிறைந்த மைதானம். சற்று சிறிய மைதானம். அதுதான் வசதியே. நிறையப் பேர் சிக்சர் அடித்துப் பழகுவதே அங்கு வந்த பின்புதான். அது கொடுக்கிற நம்பிக்கையில் பின்னர் பெரிய பெரிய மைதானங்களிலும் விலாச ஆரம்பித்து விடுவோம். கடற்கரை ஓரம் என்பதால் மைதானம் முழுக்க மணலாக இருக்கும். எனவே, விழுந்து விழுந்து பிடிக்கவும் பிடிக்கிற மாதிரி நடிக்கவும் வசதியாக இருக்கும். மரங்கள் வேறு இருப்பதால் கேட்ச் என்பது திறமை மட்டுமின்றி ஓரளவு விதியும் சார்ந்தது. சிக்சர் போக வேண்டிய பந்து கூட மரத்தில் பட்டால் கேட்ச் ஆகி விடும். கேட்ச் ஆக வேண்டிய ஷாட்டுகள் கூட சில நேரம் மரத்தால் காப்பாற்றப் பட்டு விடும். மரத்தில் பட்டு, ஒவ்வொரு கிளையிலும் தட்டி அது கீழே விழும் முன், நம் பீல்டர் இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளாடி அதைப் பிடிக்கும் அல்லது விடும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். பந்தை விட்டு மரத்தில் இருந்து விழும் பழத்தைப் பிடித்த காட்சிகளும் உண்டு. சிலர் பேட்டிங் அதிகம் விரும்புவார்கள். சிலர் பவுலிங் அதிகம் விரும்புவார்கள். சிலர் ஆல்-ரவுண்டர். நான் ஆல்-ரவுண்டர். இரண்டும் நன்றாகச் செய்வோருக்கும் இரண்டிலும் சொதப்புவோருக்கும் ஒரே பெயர்தானே.

சனி-ஞாயிறுகளில் வெறித்தனமாக விளையாடுவோம். கூடுதலான ஆட்கள் வந்து சேர்வார்கள். பேருந்து நிலையம், கடற்கரை, கோவில்ப் பக்கம் போவோரும் வெயிலில் வெளியில் சுற்ற முடியாது என்பதால் பகலில் உள்ளேயே இருப்பார்கள். அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா! சனிக்கிழமை காலையில் பொங்கலைத் தின்று விட்டு ஆரம்பித்தால் மதியச் சாப்பாட்டுக்குள் எதற்கும் கரையாத அந்தக் கல்லுப் பொங்கல் கரைந்து பசி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விடும். இந்தப் பொங்கல் எங்கள் வாழக்கையில் மிக முக்கியமான ஒன்று. முதல் நாள் அதைச் சாப்பிடும் எல்லோருமே 'ஏன்டா இந்த விடுதியில் வந்து மாட்டினோம்?' என்று நொந்து நூலாகி விடுவார்கள். அன்றிரவு வீட்டுக்குப் போன் பேசும்போது கண்டிப்பாக அந்தப் பொங்கல் பற்றிப் பேசியிருப்பார்கள். சொல்லி வைத்த மாதிரி அடுத்த ஓரிரு மாதங்களில் எல்லோருமே அந்தப் பொங்கல் மீது மீள முடியாக் காதலில் விழுந்து விடுவார்கள். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கும் உலக அதிசயம். 'அதெப்படி அவ்வளவு வெறுக்கப் பட்ட ஒன்று அவ்வளவு விரும்பும் படி மாறுகிறது!' என்று வியக்க வைக்கும் சக்திகளில் பொங்கலும் ஒன்றா என்று வியப்பாக இருக்கிறதா?

சனி ஞாயிறுகளில் வேறு சில வேலைகளும் நடக்கும். அதில் ஒன்று கடலுக்குக் குளிக்கச் செல்தல். அது போக, குளிக்காமல் வேடிக்கை பார்க்க, பவுர்ணமி இரவுகளில் கடற்கரைக்குச் செல்வோம் (அமாவாசை இரவுகளிலும் செல்வோர் உண்டு. அவர்கள் வேறு விதமான கூட்டம்!). செல்வோம் என்றால் ஏதோ நான்கைந்து பேர் இல்லை. முக்கால்வாசி விடுதியே வரும். இரவுக்குப் பயந்த என் போன்ற வேறு சிலர் மட்டுமே விடுதியிலேயே இருந்து விடுவார்கள். ஆளே இல்லாத விடுதியில் இருக்கப் பயந்து கூட்டத்தோடு சேர்ந்து கடற்கரைக்கே போவது மேல் என்றெண்ணி அணி சேர்ந்து கொண்டதும் உண்டு. அலை அதிகமாக அடிக்கும். பயங்கர சப்தம் எழுப்பும். அலையின் மூர்க்கத்தனம் கண்டு மனம் அரளும். முதன் முதலில் கடல் பார்த்தபோது அடுத்த நிமிடம் கடலில் மூழ்கி உலகம் அழியப் போவது போல ஒரு பயம் வந்தது என்பதைச் சொல்லி இருந்தேன். அதன் பின்பு தினமும் அதைப் பார்த்துப் பார்த்து அந்த பயம் குறைந்து விட்டது. அந்த பயம் ஓரளவு நினைவு படுத்தப் படுவது பவுர்ணமி நாளில் தான்.

அப்படிக் கடல் பார்க்கப் போகும் இரவுகளில் இன்னொரு வேலையும் நடக்கும். வரும்போது ஏகப்பட்ட நண்டுகள் பிடித்து வருவோம். எனக்கு அந்தக் கலை கடைசி வரை கைவரவே இல்லை. ஆனால், சில நண்பர்கள் சூப்பராகப் பிடிப்பார்கள். பிடித்து வந்து மசால் தேய்த்து சூப்பராகச் சமைத்தும் கொடுப்பார்கள். நண்டின் சுவையும் என்னை இன்று வரை ஈர்க்க வில்லை. சும்மா உடன் இருப்பேன். அவ்வளவுதான். ஒருநாள் அதிகாலை நான்கு மணி வரை இந்த விளையாட்டு தொடர்ந்தது. எனக்கு எப்போதுமே சுலபமாகத் தின்ன முடிந்த பொருட்கள் மட்டுமே பிடிக்கும். கொட்டைகளைப் பிரித்துத் தின்றல், தோலை உரித்துத் தின்றல், எலும்பைப் பிரித்துத் தின்றல் ஆகிய நுணுக்கங்கள் கற்க ஆர்வமே வரவில்லை. எவ்வளவு சுவையாக இருப்பினும் அதற்காகக் கூடுதல் உழைப்பைப் போட வேண்டும் என்றால் அப்பொருட்களை எனக்குப் பிடிக்காமல் போய் விடும். வாழைப்பழச் சோம்பேறி என்பார்களே. அதன் அர்த்தம் தெரியாதவர்கள் இப்போது புரிந்து கொள்ளுங்கள். நான்தான் அது.

திருட்டுத் திரைப்படங்கள்
பள்ளிக்காலம் முதல் இன்றுவரை எனக்கு மிக மிகச் சிரமமான வேலைகளில் ஒன்று - லீவ் போடுவது. எப்போதுமே யாரையுமே நிற்க வைத்துக் கேள்வி கேட்க அனுமதிப்பதில் சுத்தமாக ஆர்வம் இருப்பதில்லை. இன்னொருவர் அனுமதித்துச் செய்யும் ஒரு வேலையை செய்யவே வேண்டாம் என்று கூடத் தோன்றும். அதனால், எவ்வளவோ பிரச்சனைகள் வந்ததுண்டு. கல்லூரி என்றாலே வகுப்புக்கு மட்டம் போடுவது (கட் அடித்தல்) ஒரு முக்கியமான அனுபவம் அல்லவா? முதலாமாண்டு படித்த போதும் சரி, இரண்டாமாண்டு படித்த போதும் சரி, நண்பர்கள் எல்லோருமே சாதாரணமாகக் கட் அடிப்பார்கள். அந்த நேரத்தைப் பல பயனுள்ள வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்வார்கள். அதில் படத்துக்குப் போவது முதல் ஊர் சுற்றுவது வரை எத்தனையோ வேலைகள் அடக்கம். மூன்றாமாண்டு படிக்கும்போதுதான் நானும் அதை ஓரளவு செய்ய ஆரம்பித்தேன். படம் பார்ப்பதற்காகக் கட் அடித்தது என்பது மிகக் குறைவு. ஆனால், கட் அடித்து விட்டுப் படுத்துத் தூங்குவது நிறையச் செய்திருக்கிறேன்.

சின்ன வயதில் இருந்தே திரைப்படங்களில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. திரைப்படம் என்பது சராசரி மக்களின் பொழுதுபோக்கு; நான் சராசரி அல்ல என்றோர் ஆணவச் சிந்தனையில் ஆரம்பித்து, அதன்பின் எந்தக் காரணத்துக்காகவும் அவற்றின் மீது ஈர்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. விடுதி மாணவர்கள் என்றாலே அவர்களுடைய முக்கியமான நினைவுகளில் ஒன்றாக இருப்பது - திருட்டுத் தனமாக சினிமாப் பார்ப்பது. கல்லூரிகளில் அதன் சாகசத் தன்மை கொஞ்சம் குறைவு. ஏனென்றால், வார இறுதியில் சனிக்கிழமை இரவு படம் பார்ப்பதற்காகவே அவிழ்த்து விட்டு விடுவார்கள். அப்புறம் ஏன் திருட்டுத் தனமாக அதையே செய்ய வேண்டும்? "அவர்கள் என்ன விடுவது? நாமாகவே போக வேண்டும்!" என்று மற்ற நாட்களில் படம் பார்க்கப் போகும் சாகச வேலைகளை வழக்கமாகச் செய்யும் ஒரு கூட்டம் எல்லா வருடமுமே இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் செட்டிலும் இருந்தார்கள். 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' போல் ஒரு சங்கம் வைத்திருந்தார்கள் எங்கள் செட்டில் சில நண்பர்கள். இரண்டாம் ஆண்டு - மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கிட்டத்தட்ட தினமும் இரண்டாம் காட்சிக்குப் போய் விடுவார்கள். அதே படத்தைக் கூடத் திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள். ஆனால், ரூமில் படுத்துத் தூங்க மாட்டார்கள்.

திருச்செந்தூரில் ஐந்து தியேட்டர்கள் இருந்தன. விட்டால், ஆறுமுகநேரியில் கொஞ்சம் தியேட்டர்கள் இருந்தன. ஆத்தூரில் ஒரு தியேட்டர் இருந்தது. எங்கள் நண்பன் மாதவனுடைய தியேட்டர். அவன் இருந்தால் அன்று படம் இலவசம். ஆறுமுகநேரிக்கும் ஆத்தூருக்கும் முன்பே இருந்த காயல்பட்டினத்தில் தியேட்டர் கிடையாது. ஆறுமுகநேரியும் காயல்பட்டினமும் மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்துள்ள இரு நகரங்கள். சில நண்பர்கள் தூத்துக்குடி வரை கூடச் சென்று வருவார்கள். பஸ்ஸில் போக வரவே இரண்டரை மணி நேரம் வேண்டும் என்பதால் அது வார இறுதி விடுமுறை நாட்களில் மட்டுமே முடியும்.

மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நானும் அந்தச் சங்கத்தில் பகுதி நேர உறுப்பினரானேன். அதாவது, எப்போதாவது சில படங்களுக்கு மட்டும் போவேன். போவது எளிது. அங்கே போகிறேன் இங்கே போகிறேன் என்று சொன்னால் விட்டு விடுவார்கள் காவலாளிகள். பள்ளி விடுதி போல சிறை விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இரவு திரும்பும்போதுதான் பிரச்சனை. இதற்குப் பல வழிகள் உண்டு. கேட்டில் ஏறிக் குதிப்பது எளிதான வழி. காவல்காரர் விழித்து விட்டால் சோலி முடிந்தது. மறுநாள் அத்தனை பேருடைய அப்பாவும் எங்கள் வார்டனையும் திருச்செந்தூர் முருகனையும் பார்க்க வர வேண்டியதாகி விடும். அதனால், முழு நேர சங்க உறுப்பினர்கள் காவல்காரர்களை அவ்வப்போது கவனித்து வைப்பார்கள். அதற்குப் பதிலுதவியாக அவர்கள் அந்த நேரத்தில் மட்டும் கேட்டைத் திறந்து வைப்பார்கள் அல்லது ஏறிக் குதிப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இந்தக் 'கவனிக்கும் வேலை' விடுதி விதிமுறைகளின்படி குற்றம். வார்டனுக்குத் தெரிந்தால் நடவடிக்கை பாயும். ஆனால், கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் எப்போதுமே இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பொழுதுபோக்குப் பிரியர்கள் காவல்காரர்களைக் கவனிப்பது போல், தீனிப் பிரியர்கள் சமையல்காரர்களைக் கவனிப்பார்கள். அவர்கள் மட்டும் எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின் போவார்கள். எல்லாமே அளவுக்கு அதிகமாகக் கிடைக்கும். அசைவம் போடும் நாட்களில் கொடுத்த காசை எடுத்து விடுவார்கள் தின்னிச் சாமிகள். தேடிச் சென்று கொடுப்பவர்கள் ஒருபுறம் என்றால், கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும் சில சமையல்க்காரர்கள் வழிய வந்து, பாவமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு காசு கேட்பார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. பாவப்பட்டு, கவனிப்பெல்லாம் எதிர் பார்க்காமல் காசு மட்டும் கொடுப்போரும் உண்டு. ஊழல் எங்கே ஆரம்பிக்கிறது பாருங்கள். இதற்கெல்லாம் அன்னா ஹசாரே என்ன செய்ய முடியும்?

சைக்கிள் மற்றும் பைக் பார்ட்டிகள்
நடு நிசிச் செய்திகளைக் கொண்டு வரும் பணி திருட்டுத் திரைப்படங்கள் பார்க்கச் செல்வோர் வசம் இருந்தது. அது போல, அதி காலையிலேயே வெளியில் நடக்கும் நடப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள சில குழுக்கள் இருந்தன. அதில் ஒன்று அதிகாலையிலேயே எழுந்து திருச்செந்தூர் நகருக்குள் தட்டச்சு (TYPE WRITING) படிக்கச் சென்றோர். தட்டச்சின் கடைசித் தலைமுறை நாங்களாகத்தான் இருக்கும். அதன் பின்பு கணிப்பொறி வந்துதான் முழுமையாகத் தட்டச்சு இயந்திரங்களை விழுங்கி விட்டனவே. சிலர் கணிப்பொறி வகுப்புகளுக்குப் போனார்கள். நானும் சில மாதங்கள் மாலை நேரக் கணிப்பொறி வகுப்புக்குப் போனேன். இதற்காகவே பிரத்தியேகமாக வசதியான வீட்டுப் பையன்கள் வீட்டில் இருந்து சைக்கிள் எடுத்து வந்திருந்தார்கள். சைக்கிள் ஓரளவு நிறைந்திருந்தது. அதிலும் சிலர் சைக்கிளை ஏதோ காதலி போல (பெண்டாட்டி போல என்றெல்லாம் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை!) வைத்துக் கொள்வார்கள். ஒருநாள் இரவலாக சைக்கிள் வேண்டும் என்று கேட்டு உறவை இழந்த கதைகள் எல்லாம் உண்டு. கல்லூரியில் சேர்ந்ததே ஏதோ சைக்கிளைப் பராமரிக்க என்பது போல அதையே துடைப்பதும் கழுவுவதும் தடவிக் கொடுப்பதுமாக இருப்பார்கள்.

ஒரே ஒருவன் (என் மூன்றாமாண்டு அறைத் தோழன் சசிதரன்) மட்டும் பைக் வைத்திருந்தான். அவன் எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்திருப்பான் என்று எண்ணிக் கொள்ளுங்கள். அவனிடம் யாரும் பைக்கைக் கேட்டு உறவைக் கெடுத்துக் கொண்டதாக நினைவில்லை. ஆனால், பைக் பற்றிப் பேசக் கொஞ்சப் பேர் இருந்தார்கள். வீட்டில் இருக்கும் தன் தந்தையின் அல்லது ஒன்னு விட்ட மாமாவின் பைக் பற்றிப் பல நுட்பமான விஷயங்களை அள்ளி வீசுவார்கள். எந்தெந்த பைக் எதற்கு லாயக்கு, எதற்கு லாயக்கில்லை, எது அதிகம் விற்பது, எது அதிகம் விற்காதது என்றெல்லாம் புள்ளி விபரங்கள் பேசுவார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டு இவர்கள் என்னதான் சாதிக்கப் போகிறார்களோ என்று புலம்புவேன். ஆனால், அவர்கள்தான் அந்தக் காலத்திலேயே காலத்தை விட முன்பாகச் சென்ற முன்னோடிகள் என்று பின்னர் நானும் ஒரு பைக் வாங்கி அந்தப் புள்ளி விபரங்களையும் நுட்பங்களையும் பேசத் தொடங்கிய நாட்களில் புரிந்து கொண்டேன். ஆனந்த் ராம், ராம் குமார், அருண் - நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆட்கள் என்பதைக் கொஞ்ச நாள் கழித்துத்தான் புரிந்து கொண்டேன் மக்கா. மன்னியுங்கள். :)

இப்படி பைக் பற்றிய புள்ளி விபரங்களை அள்ளி விடுவோர் பெரும்பாலானோர் வேறு பல ஒற்றுமைகளும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் அடுத்து என்ன படிப்பது - என்ன செய்வது என்று எதிர் காலத்தைப் பற்றிய தெளிவு இருந்தது. அவர்கள்தான் பெரும்பாலும் பிற்காலத்தில் பெருநகரங்களில் எளிதில் செட்டில் ஆனார்கள். நல்ல உடையுணர்வு இருந்தது. அவர்கள் மட்டுமே அப்போது ஜீன்ஸ் அணிபவர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் ஆங்கில வழியில் அல்லது பெருநகரங்களில் படித்து வந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலப் படங்கள் பற்றிய ஞானம் நிறைய இருந்தது. அவர்களுக்கு இந்திப் படங்கள் மற்றும் பாடல்கள் பற்றியும் நிறையத் தெரிந்திருந்தது. புழுதிக் காட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அவர்களைப் பார்த்தால் 'பந்தாப் பார்ட்டிகள்' போலத் தெரிந்தது. அவர்கள் சிறுபான்மையாக இருந்ததால் அவர்களுடைய ஆசைகளுக்கெதிராக எப்போதுமே ஓரணி இருக்கும். நானும் அந்த அணியில் பல நேரங்களில் இருந்திருக்கிறேன். அந்த அணி இந்திப் பாடல்கள் போட்டாலே பொறும ஆரம்பிக்கும். பின்னர் ரஹ்மான் வந்து அதே இசையை இரண்டு மொழிகளிலும் வழங்கிய போது இரு சாராருக்குமே வேலையில்லாமல் போய் விட்டது.

-தொடரும்...

திங்கள், டிசம்பர் 19, 2011

பொங்கல்த் திருநாள்


சான்றோரே! சபையோரே!
சகோதர நண்பர்களே!
அனைவர்க்கும் எந்தன்
அன்பான வணக்கங்கள்!

மா பலா வாழைப்
பழங்களும் பாலும்
பச்சரிசி வெள்ளமும்
செங்கரும்பும் தேங்காயும்
இலையும் பாக்கும்
இஞ்சியும் மஞ்சளும்
எல்லாமும் வைத்து
பிரசாதம் படைக்கவும்
பலகாரம் சமைக்கவும்
ஆசைதான் தமிழனுக்கு...
ஆசைதான் தமிழனுக்கு...

ஆனால்
கஞ்சிக்கே வழியில்லாதவன்
தோசைக்குப் போடுவது கஷ்டம்தானே

நிமிர்ந்து வளர வேண்டிய நெல்மணிகள்
நிலைகுலைந்து கிடக்கின்றன
நம் நாட்டு மாணவர்களைப் போல!

தோகை விரித்தாட வேண்டிய கரும்புகள்
கவிழ்ந்து கிடக்கின்றன
நம்நாட்டுக் கலைஞர்களைப் போல!

வளர்ந்திருக்க வேண்டிய வாழைகள்
வாடிக் கிடக்கின்றன
நம் நாட்டு அறிஞர்களைப் போல!

காவிரியைக் காணாமல் தஞ்சையில் நஞ்சைகள்
தண்ணீர் தாகத்தில் தவிக்கும் வேளையில்...

சகதிக் காடாய் இருக்க வேண்டிய
கரிசல் பூமிகள் விரிசல் விழுந்த
புழுதிக் காடாய்க் காயும் வேளையில்...

நமக்காக வேண்டாம்
நன்றிக்காகக் கொண்டாடுவோம்!

போகியில் பொசுக்க
பழைய உடமைகள் இல்லைதான்
பாழடைந்த குணங்கள் உண்டே!

பொங்கலுக்கு உடுத்த
புதிய உடைகள் இல்லைதான்
புதுமை உணர்வுகள் உண்டே!

பழையன கழித்து புதியன புகுத்துவோம்!
புத்துயிர் பெறுவோம்! நன்றி! வணக்கம்!

* ஆதித்தனார் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த போது, 21.01.1996 அன்று விடுதியில் நடை பெற்ற பொங்கல் விழாவில் நடத்தப் பட்ட கவிதைப் போட்டியில் வாசித்து முதல்ப் பரிசு பெற்ற கவிதை. 

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (3/6)

ரூபஸ் அண்ணன் 
ரூபஸ் அண்ணன் ஆங்கில மாணவர். கொள்கையால் ஈர்க்கப் பட்டு ஏற்பட்ட கூட்டணி. முதல் நாளே நமக்கு ஏற்ற ஆள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுவோமே அப்படித் தேடித் பிடித்துக் கொண்ட ஆள். அவரால் என்னுடைய பல அடிப்படைக் குணாதிசயங்களே மாறியது. எளிதில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆளாக இருந்தவன் நான். அவரைப் பார்த்த பின்புதான் எல்லோருடனும் நல்ல பிள்ளையாக இருப்பது ஒன்றே நாம் சாதிக்க விரும்பும் சாதனைகளை எளிதாக அடைவதற்கான உருப்படியான வழி என்பதைக் கற்றுக் கொண்டேன். அது அவருக்கு இயல்பாகவே வந்தது. அதைப் பார்த்து முயன்று மாற்றிக் கொண்டேன் நான். அவரிடம் நிறைய அரசியல் ஆர்வம் இருந்தது. எனக்கும் அது இருந்தது. ஆனால், நம்ம அரசியல் வெறும் பேச்சுக்கு மட்டும்தான். அவர் அப்போதே நிறையக் களப் பணிகள் செய்வார். அதனால் அவரைக் கூடுதலாகப் பிடிக்கும்.

பொதுவாகவே கல்லூரி வயதில் தண்ணி-தம் போன்ற பழக்கங்கள் இருப்பவர்கள்தான் சக மாணவர்களிடம் எளிதில் பெரிய ஆளாக முடியும். அப்படி எல்லாம் இல்லாமல் இவர் எப்படி அவர்களுடைய செட்டில் இப்படி மதிக்கப் படுகிறார் என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். எல்லோருமே அவரை "தலைவரே!" என்றுதான் சொல்வார்கள். சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். நாமும் தலைவன் ஆகா வேண்டும் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள். ஆனால், அதற்கான சரக்கு இல்லை. அவரிடம் அது இருந்ததால்தான் அத்தனை பேருக்குத் தலைவன் ஆகி விட்டார். அதுவும் ஆட்டோமேட்டிக்காகவே ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன் என்றால் சும்மாவா? அவரும் தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் மீது அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைத்திருப்பவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அந்தக் கட்சியில் இருந்தவர்களை எல்லாம் மிகவும் நல்லவர்களாக நம்பியவர். எனக்கு அதில் (மக்களை நம்புவதில்) நிறையவே எதிர்மறைக் கருத்துகள் இருந்தன. அவர் போன்றவர்கள் அப்படி இருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது. மக்களை நம்பாதவன் மக்கள் பணியில் இறங்கி என்ன சாதிக்க முடியும்? இன்றைக்கு பெரும்பாலானோர் மக்களின் மூடத்தனத்தை நம்பி பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர் மக்களின் நல்ல பகுதியை மட்டும் பார்ப்பவர் - அதில் முழு நம்பிக்கை கொண்டவர். அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால்தானே அவரையும் அவர்கள் நம்புகிறார்கள். விமர்சனம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் நமக்கு மட்டும்தான் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டிய கட்டாயம். குறைகளைப் பபற்றிச் சொல்லிச் சொல்லிக் குறை பட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம். களத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையை மட்டுமே நம்பி இறங்கியவர்கள். அவர் களத்தில் இருப்பவர். அதனால் தப்பில்லை.

நிறைய இலக்கிய ஆர்வமும் உள்ளவர். இதிலும் நமக்குப் பேச்சு மட்டும்தான். அவர் உண்மையாகவே உள்ளே போய்ப் பார்த்தார். நாம் வாரப் பத்திரிகைகளைப் படித்து இலக்கியம் பேசுபவர்கள். அவர் அப்போதே நிறைய ஜெயகாந்தனைப் படித்ததாக நினைவு. ஆன்மிகம் பற்றியும் நிறையப் பேசுவோம். 'என் மதத்தை என் கண்ணில் மாட்டியவர்களிடம் எல்லாம் எப்படியேனும் திணிப்பது ஒன்றே என் பிறப்பின் நோக்கம் - அது ஒன்றே எனக்கு நன்மையளிக்கும்!' என்றெண்ணும் பின்னணியில் பிறந்து, அதில் பெருமளவு நம்பிக்கையோடும் இருபத்தைந்து ஆண்டுகளைக் கழித்து, பின்னர் அதிலெல்லாம் ஆர்வமிழந்து, 'என் வாழ்க்கை முழுமையையும் பிறருக்குப் பயன்படும் பணிகளில் கழிப்பதே என் பிறவிப் பெரும்பயன்!' என்று வாழ ஆரம்பித்திருப்பவர். கல்லூரிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் படு தீவிரமாகச் செயல்பட்டு இப்போது காங்கிரஸ் கட்சியை அழித்தே தீருவேன் என்று அலையும் முக்கியமான ஆட்களில் ஒருவராக இருக்கிறார். உள்ளே போய்ப் பார்த்தால்தானே எல்லோருடைய இலட்சணமுமே சரியாகப் புரிபடும். டெல்லியில் உச்ச நீதி மன்றத்தில் கொஞ்ச காலம் கழித்து விட்டு, மண்ணோடும் மக்களோடும் வாழ வேண்டியதன் கட்டாயம் உணர்ந்து, இப்போது மதுரை உயர் நீதி மன்றத்துக்கு வந்து விட்டார்.

இப்போது மேலும் மூர்க்கமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். பெயருக்கு வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டு, முழுக்க முழுக்க சமூகப் பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார். டெல்லியின் புண்ணியத்தில் தீவிரத் தமிழ் தேசியவாதியாக மாறியிருக்கிறார். அவர்கள்தானே நம்மை மறந்தாலும் நினைவு படுத்தி நினைவு படுத்தி அப்படி ஆக்குபவர்கள். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கனவு கண்ட வாழ்க்கையை அவர் அவருக்கு அமைத்துக் கொண்டிருக்கிறார். நான் புறவாழ்க்கை வெற்றிகளைத் தேடி ஓடி வந்ததால், அதைப் பார்த்துப் பொறாமை மட்டும் பட்டுக் கொண்டிருக்கிறேன். போயிருந்தாலும் அவரளவுக்குத் தீவிரமாகச் செயல் பட்டிருப்பேனா என்று தெரியவில்லை. அதற்கான தைரியமெல்லாம் நமக்கு இல்லையே. இப்போதும் எப்போதாவது அழைத்து மணிக்கணக்காகப் பேசுவதுண்டு. முன்பு போல நிறைய ஒத்துப் போகவும் முடியவில்லை. தீவிர வாசிப்பும் செயல்பாடும் சிந்தனையில் அவரைப் பல மைல் தொலைவு முன்னால் கொண்டு சென்றிருப்பதால், நாம் இங்கே பிழைப்புவாதியாய் ஓட்டிக் கொண்டிருப்பதால், இடைவெளி கூடி இருக்கிறது. இது ஓர் ஆயுட்கால உறவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இன்னும் வேகமாக வெகு தொலைவு செல்லாமல் இருந்தால் அல்லது நான் இன்னும் வேகமாக அவருடைய திசையில் முன்னேறினால் மீண்டும் இணைந்து செயல்படுவது பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லையென்றுதான் எண்ணுகிறேன். ஆனால், கண்டிப்பாக வாழ்க்கையில் கொஞ்ச காலமாவது அவரோடு செயல்பட்டால்தான் அவரைச் சந்தித்ததன் பயனை அடைந்து விட்டதாகக் கொள்ள முடியும். பார்க்கலாம்.

மாணவர் சங்கம்
ரூபஸ் அண்ணன் என்றாலே அடுத்து உடனடியாக நினைவுக்கு வருவது மாணவர் சங்கம். நாங்கள் முதலாண்டு படித்த போது மாணவர் சங்கம் இருந்தது. அடுத்த ஆண்டில் மாணவர் சங்கத் தலைவர் ஆகி விட வேண்டும் என்று அண்ணன் திட்டமிட்டுருந்தார். அவர் போன்றவர்கள் - கொஞ்சம் நீதி நியாயமெல்லாம் பேசுபவர்கள், இது போன்ற பதவிகளில் சிக்கினால், சீரழிந்து சின்னாபின்னமாகி விடுவார்கள் என்று நான் எண்ணினேன். அவரிடமே அடிக்கடி இந்த எதிர்விதையை விதைத்துக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் எளிதில் சமாளித்து விடலாம் என்று நிறையத் திட்டங்கள் இருப்பதாகச் சொல்வார். மாணவர் சங்கத் தலைவர் என்றாலே காரணமே இல்லாமல் பிரச்சனை கிளப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் கூட்டம் மாணவர் கூட்டம். அவர்களிடம் போய், "காரணம் இல்லாமல் - விடுமுறைக்காகப் போராட்டங்கள் பண்ணக் கூடாது; மறியல் செய்வது தவறு; பேருந்தில் கல் வீசக் கூடாது!" என்றெல்லாம் பேசினால் எடுபடாது என்று எண்ணினேன் நான். எண்ணிக் கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது; அதை மாற்ற நான் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கக் கூடிய ஆள் அவர். அப்போது அது வீண் முயற்சியாகப் பட்டது. இப்போது எண்ணிப் பார்க்கையில் ஒருவேளை அவர் அதையெல்லாம் சாதித்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. தற்காலிகமாகவாவது முடிந்திருக்கும். அடுத்த வருடம் மீண்டும் அவர்களுக்கேற்ற மாதிரித் தலைவனிடம் ஓடியிருப்பார்கள்.

இன்று நாம் அரசியலில் காணும் எல்லாத்தையுமே அன்றைய மாணவர் சங்கத் தேர்தலில் காண முடிந்தது. நாக்கு வழிக்கக் கூடப் பயன் படாத வகுப்புப் பிரதிநிதி பதவிக்கு ஓட்டுக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்றெல்லாம் ஒருவன் சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தேர்தல் அன்று உடன் இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி வாங்கி ஊற்ற வேண்டும். வென்ற பிரதிநிதிகள் கடைசி நிமிடத்தில் அணி மாறி விடுவார்கள் என்று பத்து - இருபது பேர் வளையமாகச் சுற்றி வென்றவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். பணம், தைரியம் - இரண்டும் மிக முக்கியமான தேவைகள். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் பற்றி நிறையப் பெருமையாகப் பேசுவார்கள். அங்கெல்லாம் அத்தனை பேருந்துகள் உடைபடும்; இதெல்லாம் தடைபடும் என்று வேதனைக்குரிய விஷயங்களை எல்லாம் பெருமையாகப் பேசுவார்கள். இதெல்லாம் எங்கள் கல்லூரியில் நடைபெறாது. ஆரம்ப காலத்தில் இருந்தே கல்லூரிக்கென்று ஒரு பண்பாட்டை மிக உறுதியாக உருவாக்கி விட்டார்கள். யாருடைய கல்லூரி? சில நேரங்களில் அது எல்லை மீறும்போது அதையும் எந்த விதத்தில் கொண்டு வர முடியுமோ அந்த விதத்தில் வழிக்குக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஆண்டு கொஞ்சம் அதிகமாகவே எல்லை மீறி விட்டது. அதனால், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மறு வருடம் முதல் மாணவர் சங்கம் இல்லாமல் செய்து விட்டார்கள்.

ஏற்கனவே தொழிலாளர் சங்கங்களை ஒருபுறம் மரியாதையோடு பார்த்தாலும் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மீது வெறுப்புணர்வு உருவாகிக் கொண்டு வந்தது. இங்கே வந்து மாணவர் சங்கம் என்ற பெயரில் செய்யப்படும் அட்டூழியங்களைப் பார்த்த பின்பு சங்கங்கள் மீதே கடுமையான வெறுப்புணர்வு வர ஆரம்பித்தது. உரிமைக்கான போராட்டம் என்றாலே அதை அருவருப்பாகப் பார்க்கத் தோன்றியது. இளைய சமுதாயம் புழுத்துப் போய் விட்டதோ என்றோர் எண்ணம் வந்தது. இந்த நிலையில் மாணவர் சங்கம் கலைக்கப் பட வேண்டும் என்று கொதித்துக் கொண்டிருந்த உள்ளங்களில் ஒன்று என்னுடையது. கலைக்கப் பட்ட செய்தி அறிந்து அளவிலாத மகிழ்ச்சியும் அடைந்தேன். போராட்டங்கள் செய்வதன் ஒரே நோக்கம் - அதில் கிடைக்கும் விடுமுறை. ஒரு நாள் என்றால் மகிழ்ச்சி. கூடக் கொஞ்சம் நாட்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி. "அந்தக் கல்லூரிகளில் எல்லாம் மாதக் கணக்கில் விடுமுறை கிடைக்கும் படிக்கு உடைக்கிறார்கள்; இங்கேதான் இப்படி!" என்று அலுத்துக் கொள்வோரைக் கண்டால் துடிப்பேன். போராட்டம் செய்யும் நாட்களில் பொதுச் சொத்துகளுக்கு அதிகளவில் சேதம் செய்யக் கூடியவர்கள்தாம் மாணவர்களின் நாயகர்கள். இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் தலைவர்களாகி அவர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறார் அண்ணன் என்று எண்ணியிருக்கிறேன். ஒருவேளை அதற்கான வாய்ப்பை அளித்திருந்தால் அப்படியொரு பண்பாட்டு மாற்றத்தையே செய்து காட்டியிருப்பாரோ என்று இப்போது நினைக்கிறேன்.

அன்று பேருந்துகளில் கல்லெறிந்து கண்ணாடி உடைத்தவர்கள், அமைதியாகப் போய்க் கொண்டிருந்த பொது மக்களுக்கு ஊரு விளைவித்தவர்கள், பத்து-இருபது வருடங்கள் கழித்து அதே இடத்தில் குடும்பத்தோடு வரும்போது கல்லடி பட்டு மண்டை உடைந்து கதற வேண்டும் என்றெல்லாம் கடுமையாக வேண்டியிருக்கிறேன். காளிமுத்து, வைகோ போன்று கல்லூரிக் காலத்தில் மாணவர் சங்கங்களில் தலைவர்களாக இருந்தவர்கள்தாம் பின்னாளில் பெரும் அரசியல்வாதியாக ஆனார்கள் என்று கேள்விப் பட்டு, நாமும் அதில் பங்கெடுத்துப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், அதற்காகக் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். அப்படியொரு பயிற்சியும் அனுபவமும் தேவையே இல்லை என்றே தோன்றும். காமராஜர் என்ன கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தா அவ்வளவு பெரிய தலைவர் ஆனார்? அப்படிப் பார்த்தால், அந்த அளவுக்குப் பெரிய ஆளான யாருமே கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர்கள் இல்லை. பலர் கல்லூரிக்கே சென்றதில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருப்பவர்களுக்குத்தான் - அதுவும் மிகச் சிலருக்குத்தான் கல்லூரிப் படிப்பெல்லாம் தேவைப் படுகிறது.

பொதுவுடமைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் இப்போதும் நான் உறுதியாக நம்புவது - மாணவர்களுக்கெல்லாம் காக்கப் பட வேண்டிய உரிமை என்று எதுவுமே இல்லை. ஒழுங்காகப் படிக்கிற வேலையைப் பார்த்தால் போதும். அவர்களுடைய குடும்பங்கள் காக்கப் பட வேண்டியது அதையெல்லாம் விட முக்கியம். சில நேரங்களில் ஆசிரியர் சங்கங்களும் இவர்களைப் பயன் படுத்தி விடுகிறார்கள். ஊதிய உயர்வுக்கு மட்டும் போராடும் எந்தச் சங்கமும் சும்மா டுபுக்கு. இதில் இலங்கைப் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, காஷ்மீர்ப் பிரசினைக்காகவெல்லாம் வேறு போராடுவார்கள். வேண்டிய இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தவுடன் அந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப் பட்டு விட்டது போல அமைதியாகி விடுவார்கள். தொழிலாளர் சங்கங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. அவர்களும் பல நேரங்களில் அப்படித்தான் தோன்ற வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குச் சங்கங்கள் இல்லாவிட்டால் முழுமையாக ஏமாற்றப் பட்டு விடுவார்கள் - அழிக்கப் பட்டு விடுவார்கள் என்றும் உறுதியாகத் தோன்றுகிறது. எதுவுமே நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டால் மட்டும் போதாது. காலம் முழுக்க அந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் பட வேண்டும். அதில்தான் இருக்கிறது அவர்களின் நீண்ட கால வெற்றி - தோல்வி.

விழாக்கள்
நாங்கள் சேர்ந்த வருடத்துக்கு முன்பு வரை, கல்லூரியில் போலவே விடுதியிலும் ஏகப்பட்ட போராட்டங்கள் நடக்குமாம். அங்கே எப்படி என்றால், ஏதாவது பிரச்சனை என்றால் அன்றிரவு உண்ணாவிரதம் இருந்து விடுவது. அன்றைய இரவு செய்யப் படும் உணவு முழுக்க வீணாவது மட்டுமின்றி, அதற்கான செலவும் மாணவர்களின் தலையில்தான் விழும். சில நேரங்களில் ஏதோ காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது அர்த்தமில்லாமலும் வார்டன்களைச் சீண்டிப் பார்க்கவும் கடுப்பேற்றவுமே நடந்திருக்கிறது. பிறரைத் துடிக்க விட்டுப் பார்க்கும் பண்பு எல்லா வயதுக்குமே இருக்கும் என்றாலும் அந்த வயதுக்கு அதிகம். இதில் ஓர் ஆசாமி என்ன செய்திருக்கிறார் - தினமும் இரவு விடுதிக்குள் ஏதாவதொரு இடத்தில் வெடி வெடிக்குமாம். ஒருநாள் வார்டன் அறைக்கு முன், ஒருநாள் கழிப்பறையில், ஒருநாள் உணவகத்தில், ஒருநாள் தொலைக்காட்சி அறையில் என்று ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில் வெடிக்குமாம். கடைசிவரை அதை யார் செய்தார் என்று யாருக்குமே தெரியாமல் போய் விட்டதாம். புண்ணியவான் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை. மாணவர்களைப் பொருத்த மட்டில் இது ஒரு பெரிய வேடிக்கை. ஒவ்வொரு நாளும் வெடித்தவுடன் கூடிக் கும்மாளமிட்டுச் சிரித்துப் பிரிவார்களாம். ஆனால் அது கல்லூரி - விடுதி நிர்வாகத்துக்குப் பெரிய பிரச்சனை - சவால்.

மாணவர்கள் அப்படிச் செய்ததற்கு - அடிக்கடி உண்ணாவிரதங்கள் இருந்ததற்குச் சொன்ன காரணம், அப்போதைய நிர்வாகம் மிகவும் கெடுபிடியாக இருந்தது. இவர்களை இப்படி வைத்திருந்தால்தான் சரியாக இருக்கும் என்று எண்ணிச் செய்வது இப்படியும் திரும்பிக் கொண்டு எரிச்சலூட்டும். அளவுக்கு மீறி நெருக்கடிகள் கொடுத்தால், கொடுப்பவர்களைத் துடிக்க விட்டுப் பார்க்க வேண்டும் என்றே நெருக்கடிக்கு உள்ளாபவர்கள் நினைப்பார்கள் அல்லவா? அதுதான் நடந்திருக்கிறது. நாங்கள் சேர்ந்த ஆண்டில் நிர்வாகத்தில் மாற்றம் நடந்திருந்தது. மாணவர்களிடம் நட்புறவோடு பழகி, அவர்களையும் ஆளாக மதித்து, ஜாலியாக இருந்தால் அவர்களும் நல்ல பிள்ளையாகத்தான் இருப்பார்கள் என்று நிரூபிக்கப் பட்டது. இப்படியெல்லாம் அவர்களைச் சொறிந்து விட்டு அவர்களை அமைதிப் படுத்த வேண்டுமா என்றும் நினைக்கலாம். அதை அமைதிக்கான சூத்திரம் என்று பார்ப்பதை விட, அமைதி என்பது முறையான நடத்துதலுக்குக் கிடைக்கும் பதில் மரியாதை என்றும் கொள்ளலாம். இது கல்லூரி - விடுதி மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லாச் சமூகப் பிரச்சனைகளுக்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

புதிய வார்டன் மிகவும் நல்லவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடனே இருப்பார். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார். அவர் வந்த நாள் முதல் ஒரே கொண்டாட்டம்தான். ஒன்று மாற்றி ஒன்றாக ஏதாவதொரு விழா கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆரம்பித்து, வினாடி வினாப் போட்டி, கிறிஸ்துமஸ் விழா, பொங்கல் விழா, ரமலான் விழா, மரம் நடுவிழா, சர்வமதக் கலந்துரையாடல் என்று முதலாண்டு முழுக்க ஒரே விழா மயம். விநாயகர் சதுர்த்தியில் சிறிய உரை ஆற்றினேன். வினாடி வினாவில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. கிறிஸ்துமஸ் விழாவில் கவிதை வாசித்தேன். பொங்கல் விழாவில் கவிதைப் போட்டி நடந்தது. அதில் வாசித்த கவிதைக்கு முதல்ப் பரிசு கிடைத்தது. ரூபஸ் அண்ணன் கவிதை அதை விட நன்றாக இருந்தாலும் இரண்டாம் பரிசு பெற்றது. காரணம் – அப்போதே அவர் கொஞ்சம் புரியாத மாதிரி எல்லாம் எழுதுவார். இப்போது அதை வாசித்தாலும், “ஆகா, என்ன ஒரு கவிதை!” என்று தோன்றும். நாம் எழுதியது, “ஓ! இதுக்கு அந்த ஊரில் அப்போது கவிதைன்னு பேரா?!” என்று தோன்ற வைக்கும். அதையும் இந்த வலைப்பதிவில் போட்டிருக்கிறேன். இதோ இங்கு இருக்கிறது. பொறுமையிருந்தால் போய்ப் பாருங்கள். ரமலான் விழாவை வேடிக்கை மட்டும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் அப்துல் ரசாக் சார் அருமையான உரை ஒன்று ஆற்றினார். மரம் நடுவிழாவில் சில மரங்களை நட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அவையெல்லாம் இப்போது பெரும் மரங்களாக வளர்ந்திருக்க வேண்டும். சர்வமதக் கலந்துரையாடலில் அனைவரின் பேச்சையும் தொகுத்து வழங்கும் வேலை செய்தேன்.

அப்போதே ஒரே அறக்கட்டளையின் கீழ் ஐந்து கல்லூரிகள் இருந்தன. இப்போது எண்ணிக்கை கூடியிருக்கலாம். அப்போதே பல்கலைக் கழகம் ஆவது பற்றியெல்லாம் பேச்சு வந்தது. இன்னும் ஆகவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது. விடுதியில் நடக்கும் விழாக்களுக்கு பிற கல்லூரிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விருந்தினராக அழைத்து வரப் படுவார்கள். நான் சொன்னவை போக, ஏகப்பட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. பொங்கல் விழாவில் எங்கள் பகுதிக்காரர் சரவண கிருஷ்ணன் ஊரில் இருந்து அவருடைய மாமாவை வரவைத்து இருவரும் சிலம்பாட்டம் ஆடி சிலிர்க்க வைத்தார்கள்.

-தொடரும்...

திங்கள், டிசம்பர் 12, 2011

பிள்ளைப் பித்து

திருமணத்தன்று போட்ட வட்டம்
இன்னொரு பிறவி வந்திறங்கும் நாளில்
இன்னும் சுருங்குகிறது

திருமணம் என்பது
திணிக்கப் பட்ட சுயநலத்தின்
திடீர் ஆரம்பம்

பிள்ளைப் பேறோ
பிரக்ஞையற்ற சுயநலத்தின்
பிள்ளையார் சுழி

விரிந்த உலகத்தின்
வீதியே பற்றாது என்பவரையும்
வீட்டுக்குள் சுருக்கி அடைக்கும்
விந்தை மாற்றம்

அறுபது நாட்களில்
அழியாத ஆசை

மண்ணுலகையே வெறுத்து
மரணத்தின் மடிவரை போய்
மாளத் துணிந்தோரையும்
மீள வைத்து
வாழ நீட்டிக்கும் மந்திரம்

எரிகிற வீட்டை
எட்டிக் கூடக்
காண இயலாதவரையும்
இழுத்து வரவழைத்து
எப்பாடு பட்டேனும்
எடுத்துச் செல்ல வைக்கும்
எலும்புக் காந்தம்

'உயிரையும்' கொடுப்பேன்
'உயிரையே' கொடுப்பேன்
என்பதெல்லாம்
இளமைக் காலத்து ஏமாற்றுப் பேச்சு
பித்து நிலைப் பிதற்றல்

அது பிராயப் பித்து!

பிள்ளை ஒன்றைப்
பெற்று விட்டு வந்து பேசுங்கள்...
'உயிர்' கொடுப்பேன் என்றோ
'உயிரைக்' கொடுப்பேன் என்றோ
உம்... ஏ... என்கிற
உணர்ச்சி அழுத்தங்களையெல்லாம்
சொல்லில் காட்டாமல்
செயலில் காட்டத் துணிவீர்கள்...

இதுவும் ஒருவிதப் பித்து நிலைதான்...

இது பிள்ளைப் பித்து!

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

அறிஞத் தமிழ்

ஒவ்வொரு மொழியிலும் ஏகப்பட்ட கிளைமொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. தமிழிலும் அப்படிப் பல தமிழ்கள் இருக்கின்றன. சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ் போன்று பல தமிழ்கள். இவை தவிர்த்து, சில இனத்தவருக்கென்று ஒவ்வொரு தமிழ் இருக்கிறது. நெல்லை-குமரித் தமிழ்களுக்குள்ளேயே நாடார்களுக்கு என்று சில தனித்துவமான வட்டார வழக்குகள் இருக்கின்றன. கொங்குத் தமிழுக்குள்ளேயே கவுண்டர்களுக்கென்று ஒரு வட்டார வழக்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிராமணர்களுக்கென்று ஒரு கிளைமொழி இருக்கிறது. பாலக்காட்டு ஐயர்களுக்கென்று வேறொரு கிளைமொழி இருக்கிறது. தமிழக-கேரள எல்லைக்கோடு கிழிக்கப் பட்ட பின் பாலக்காட்டு ஐயர்கள் பேசும் தமிழ் மென்மேலும் மலையாளப் பட்டு விட்டது. அது போலவே மைசூர்-மண்டியம் பகுதிகளில் இருக்கும் ஐயங்கார்கள் ஒரு கன்னடம் கலந்த தமிழ் வைத்திருக்கிறார்கள். அவர்களும் முடிந்த அளவு வேகமாகத் தம்மைக் கன்னடப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எல்லைக்கு அந்தப் பக்கந்தான் எதிர்காலம் என்று உறுதியாகி விட்டபின் அதற்கேற்றபடி மாறிக்கொள்வதுதானே மனித இயல்பு. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தமிழ் அறிவாளிகளுக்கென்று ஒரு தமிழ் உருவாகி வருவது போலப் படுகிறது.

இதுவும் எல்லாக் காலத்திலும் எல்லா மொழிகளிலுமே இருக்கிற ஒரு அம்சமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை நீண்ட காலமாகவே கவனித்துக் கொண்டும், வியந்து கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், சில நேரங்களில் சகிக்க முடியாமல் துடித்துக் கொண்டும் இருந்து வருகிறேன். சில நேரங்களில் (குறிக்க-பல நேரங்களில் அல்ல, சில நேரங்களில்!) என் மீதும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. "ஏன்யா, நீ பேசுறதெல்லாம் ஒனக்கே புரிஞ்சுதான் பேசுறியா? இல்ல, இப்பிடிப் பேசணும்னு யாராவது ஒனக்குச் சொல்லிக் குடுத்தாங்களா?" என்று கேட்பவர்களின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இது பற்றி விரிவாகப் பேச வேண்டும் என்ற ஆசை ஒன்று இருந்து கொண்டே வந்தது. அது இன்று நிறைவேறுகிறது.

இதை யார் யார் பேசுகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் எழுத்தாளர்களும் அதீத வாசிப்பனுபவம் உடையவர்களும் பேசுகிறார்கள். எதையும் புரியாத மாதிரிப் பேசுவது ஒரு திறமையாகப் பார்க்கப் படுகிறது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் வைக்கப்பட்டாலும், எளிய மொழியில் சொல்ல முடியாத அளவுக்கு 'விஷயங்கள்' இருக்கின்றன என்ற உண்மையும் புரியத்தான் செய்கிறது. குறிப்பாக, நவீன உலகத்தின் மாற்றங்களில் இந்தியர்கள் அல்லது தமிழர்களாகிய நாம் முன்னின்று எதையும் வழிநடத்தவில்லை. ஏற்கனவே மேற்குலகம் கண்டு-காய்ச்சி-உண்டு-உறுதிப் படுத்தியவற்றைத்தான் நாம் மறுபயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சமயம், வாழ்வியல் போன்றவை நாம் உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவை. அதனால் அவற்றை எளிமையாகப் பேச முடிகிற மொழி நம்மிடம் இருந்தது. மாறாக, இன்றைய பெரும்பாலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நம்முடையவை அல்ல. அதனால் அவர்களுடைய மொழியில் சொல்லப்படுபவற்றை நம் மொழிக்கேற்ற மாதிரி மாற்றிக் கொண்டு வந்து இறக்க வேண்டியுள்ளது. அப்படி இறக்குகையில் சிலர் அந்தந்த மொழியின் (பெரும்பாலும் ஆங்கிலம்) மூலச் சொற்களை அப்படியே பயன்படுத்தி விடுகிறோம்; வேறு சிலர் அதற்கான புதிய சொற்களைத் தமிழில் கண்டு பிடித்து அல்லது உருவாக்கி அல்லது உருமாற்றி அறிமுகப் படுத்துகிறார்கள். அதையே ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அமைப்பு செய்வதில்லை. அப்படியொன்று இருந்தால் நல்லது. பலர் தத்தமக்குப் பிடித்த மாதிரிச் செய்து கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, திராவிட இயக்கத்தினர், அவர்களுடைய தலைவர் கட்சி இதழ்களில் என்ன சொல்லைப் பயன்படுத்துகிறாரோ அதைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். முற்போக்குவாதிகள், அவர்கள் தொடர்ந்து வாசிக்கும் எழுத்தாளர்களின் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். சில சமயத்தவர்கள் அவர்களுக்கென்று ஒரு விதம் வைத்திருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு சாராரால் வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ப்படுத்தப் படும் வேளைகளில் ஏற்படுகிற தாக்கங்களால் உருவான மொழிதான் இந்த அறிஞத் தமிழ்.

பணக்காரன் ஆக விரும்புபவன், தன் கண் முன்னால் இருக்கும் பணக்காரன் எப்படியெல்லாம் பணத்தைப் பயன்படுத்துகிறான் என்று பார்த்துப் பழகிக் கொள்வதைப் போல, பெரும் பெரும் அறிஞர்களாக விரும்பும் எல்லோரும், தம் கண் முன்னால் இருக்கும் அறிஞர்கள் எப்படி அவர்களுடைய அறிவைப் பயன்படுத்துகிறார்கள், எப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று உற்று நோக்கி அது போலவே அறிவையும் சொற்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறோம். இது சிலருக்குத் தெரியாமல் நடக்கும் மாற்றம். சிலர் வலிந்தே முயன்று கொண்டு வருவது. எடுத்துக்காட்டாக, OBSERVATION என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான எளிய-ஒற்றைத் தமிழ்ச் சொல் நம்மிடம் இல்லை. சிலர் உற்று நோக்கல் என்றும், சிலர் கூர்ந்து நோக்கல் என்றும், சிலர் கவனித்தல் என்றும் ஆளுக்கொரு விதமாகச் சொல்லி வந்தோம். சமீப காலமாக அவதானிப்பு என்றொரு சொல்லை நிறையப் பேர் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது வடமொழியில் இருந்து கூட்டிக் கொண்டு ஓடி வந்தது போலத் தெரிகிறது.

தமிழர்கள் நம்மிடம் இருக்கும் ஒரு பெரும் வசதி - வடமொழி போன்ற ஒரு வளமான மொழியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது (அதைச் சகோதர மொழி என்கிறோமா, சக்களத்தி மொழி என்கிறோமா என்கிற சண்டைக்குள் இப்போது போக வேண்டியதில்லை!). ஆத்திர அவசரத்துக்கு, சரித்திரம், பூகோளம், இரசாயனம், பௌதீகம் என்று அள்ளிக் கொண்டு வந்து விடலாம். பின்னர், ஆற அமர உட்கார்ந்து அவற்றை ஒரு குழு அமைத்துத் தூய தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம். வரலாறு, புவியியல், வேதியியல், இயற்பியல் என்று. இன்னொரு குழுவினர், கோடிக் கணக்காகச் செலவழித்துக் குழு அமைத்து எல்லாத்தையும் தமிழ்ப் படுத்திய பின்னும், பழைய வடமொழிச் சொற்களையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் இரு சாரார். ஒன்று, 'பழக்கக் கோளாறு' காரணமாகத் தொடர்வோர் (அதையும் கூடப் 'பழக்க தோஷம்' என்றுதானே சொல்லி இருக்க வேண்டும் என்று வியப்பார்கள்!). அடுத்தது, இது போன்ற தமிழ்ப் படுத்தலை முழுமூச்சாகச் செய்த திராவிட இயக்கத்தவரை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், அவர்கள் ஈடுபட்ட-ஆதரித்த எல்லாத்தையும் வெறுக்கக் கிளம்பியவர்கள். அப்படித்தான் அவர்கள் விரும்பிய அல்லது விரும்பியது போலக் காட்டிக் கொண்ட தமிழையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். கருணாநிதியைப் பிடிக்காவிட்டால் அந்தக் கோபத்தைத் தமிழைத் திட்டிக் கழித்துக் கொள்வதும், சோவைப் பிடிக்காவிட்டால் அந்தக் கோபத்தை இந்து மதத்தையோ - பார்ப்பனர்களையோ திட்டிக் கழித்துக் கொள்வதும் தமிழ் நாட்டில் நீண்ட நெடுங்காலமாகவே நடந்து வருகிற கொடுமைதானே!

அது மட்டுமல்லாது, தமிழின் போக்கை நிர்ணயிக்கிற வேலையை, தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு அதற்குள் வாழும் தமிழர்களை விட ஈழத் தமிழர்கள் அதிகம் செய்கிறார்கள். அதற்குக் காரணம், மொழி சம்பந்தப் பட்ட விசயத்தில் நம்மை விட ஒருபடி மேலே அவர்கள் இருப்பதாக இருக்கலாம். அதனால், அவர்கள் நடையில் இருந்தும் பல சொற்கள் நமக்கு வந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்த நிறையப் பேர் இப்போது வழமை வழமை என்று சொல்ல ஆரம்பித்து விட்டது கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். இதில் வழக்கம் என்கிற சொல்லே தவறா? வழமைதான் சரியான சொல்லா? அல்லது வழக்கம் என்று சொன்னால் அவருக்கு அறிவாளித் தகுதி இல்லாமல் போய்விடுமா? ஒன்றும் புரியவில்லை. பழமைக்கும் பழக்கத்துக்கும் இருக்கிற வேறுபாடு வழமைக்கும் வழக்கத்துக்கும் இல்லையா?

அப்புறம், இந்த 'விஷயம்'கிற விஷயம். தமிழின் ஆகச் சிறந்த அறிவாளிகள் எல்லோருமே, "நீ நான்கு நாட்களுக்கு வாயையே திறக்கக் கூடாது!" என்றால் கூடச் சமாளித்துக் கொள்வார்கள் போல. ஆனால் 'விஷயம்' என்கிற சொல்லைச் சொல்லாமல் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னால் அவர்களால் முடியுமா என்று தெரியவில்லை. "இது ஒரு விஷயம்", "அது ஒரு விஷயம்", "அப்டின்னு ஒரு விஷயம்", "இப்டின்னு ஒரு விஷயம்"... அப்பப்பா... முடியலப்பா! நமக்கும் 'விஷயம்' இல்லாமல் ஒரு விஷயம் கூடப் பேச முடியவில்லை. இந்தச் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்க வாய்ப்பில்லை. அதை விடயம் என்று சொல்கிறார்கள். அதுவும் கூட வம்படியாகத் தமிழ்ப் படுத்திய சொல் போலத்தான் இருக்கிறதே ஒழிய, அத்தனை இயல்பாக இல்லை. இது வடமொழியிலோ பாரசீகத்திலோ இருந்து வந்திருக்கலாம் என்றாலும் இதன் பயன்பாடு நாம் ஆங்கிலம் அதிகம் பேசத் தொடங்கிய கடந்த இருபது-முப்பது ஆண்டுகளிற்தான் கூடியிருக்க வேண்டும் போற் தெரிகிறது. ஆங்கிலத்தில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் 'THING'-க்கான தமிழ்ச் சொல்தான் விஷயம். ஆங்கிலத்தைத் தழுவிய அறிவுப் புரட்சியாளர்களால் ஆரம்பித்து வைக்கப் பட்டு, அவர்களைப் பார்த்துத் தலையெடுக்கும் மொத்தச் சந்ததியும் இப்போது 'விஷய'த்துக்கு அடிமையாகிக் கிடக்கிறது என்பதே இப்போதைய விஷயம். இதுவரை இதைக் கவனித்திராவிட்டால், இன்று முதல் கவனிக்கத் தொடங்குங்கள். நான் சொல்ல வருவது புரியும்!

அது போலவே, அளவு என்பதை அளவீடு என்பதும், மதிப்பு என்பதை மதிப்பீடு என்பதும், காலம் என்று சொல்லத்தக்க இடங்களில் எல்லாம் காலகட்டம் காலகட்டம் என்றும் எளிமையான சொற்களைக் கூட முடிந்த அளவு கடுமையாக்கிக் கொடுமைப் படுத்துகிறார்கள் இந்த அறிஞர்கள்.

இவ்வறிஞர்களின் கொடுமைகளில் இன்னொரு முக்கியக் கொடுமையானது என்னவென்றால், எல்லாத்தையும் பன்மையிலேயே பேசுவது. அவர்கள் எப்போதும் தனியாகவே இருக்க மாட்டார்களோ என்னவோ. இந்த உலகத்தில் எதுவுமே தனிமையில் இல்லாதது போலப் பேசுவது. "பாவங்கள் செய்யக் கூடாது", "வாசிப்புகள் முக்கியம்", "கவலைகள் அதிகமாகி விட்டன", "கொண்டாட்டங்கள் கூடி விட்டன" என்று கள் அடித்து விட்டுப் பேசுவது போல எல்லாத்துக்கும் 'கள்' போட்டுப் பேசுகிறார்கள். தேவைப்படுகிற போது எவ்வளவு 'கள்' போட்டாலும் நமக்குப் பிரச்சனையில்லை. வெறும் போதைக்காகப் போடும்போதுதான் இடிக்கிறது.

அது போல, நல்ல தமிழில் மக்கள் என்று சொல்லாமல் ஜனங்கள் என்று சொல்வதைக் கேட்டாலே எனக்குக் காதே ஒரு மாதிரி வலிக்கும்.  ஜனங்கள் என்பது என்னவோ ஜந்துகள் என்று சொல்வது போல இருக்கிறது. நாடு என்ற சொல்லையே இல்லாமல் பண்ணுகிற மாதிரி தேசம், தேசம் என்று மோசம் செய்பவர்கள் ஒருபுறம். தமிழ் தேசியம் என்கிற சொல்லாடலே முழுமையாகத் தமிழா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டியம் என்றால் அதற்குப் பொருளே வேறு விதமாக வருகிறது. தமிழ் நாடியல் என்று சொல்லலாமோ?

இது போல ஏகப்பட்ட சொற்கள். சாதாரணமாக நினைப்பதைக் கூட அபிப்ராயம் என்பதும், தொலைக்காட்சிச் சேனல் ஒன்றில் ஒரு நாளைக்கு நான்கு தடவைகளாவது அமானுஷ்யம் அமானுஷ்யம் என்று போட்டுக் கொல்லுவதும், அப்பப்பா... முடியலப்பா! அதை மாயமான என்றோ புதிரான என்றோ முடியவே முடியாத பட்சத்தில் அமானுடம் என்றோ சொல்ல வேண்டியதுதானே!

நமக்குத்தான் ஒருவேளை இந்த 'ஷ்'களின் மீதான ஒவ்வாமை காரணமாக இப்படியொரு மனக்கோளாறோ என்றும் சந்தேகம் வருகிறது. எண்ணிலடங்கா ரமேஷ்களையும் சுரேஷ்களையும் கணேஷ்களையும் ராஜேஷ்களையும் கொண்டிருந்த தலைமுறையில் பிறந்து வளர்ந்ததாலும், 'ஷ்'-இல் முடிகிற பெயர்தான் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து 'ஷ்'-இல் ஆரம்பிக்கிற பெயர்தான் வேண்டும் என்று பரிணாம வளர்ச்சியடைந்த வேடிக்கைகளை எல்லாம் பார்த்து வளர்ந்ததாலும் ஏற்பட்ட ஒவ்வாமையாக இருக்கக் கூடும்!

கடைசியாகக் கடந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிற மிகப் பெரும் மாற்றம், அறிவார்ந்த உரையாடல் என்றாலே அதில் அப்போதைக்கப்போது ஓரிரு வரிகள் ஆங்கிலத்தில் எடுத்து விட்டால்தான் அவரை நாமெல்லாம் ஏற்றுக் கொள்வோம் என்கிற மாதிரியான ஒரு மனவோட்டம் பலரிடம் இருப்பது போற் தெரிகிறது. பல 'விஷய'ங்களைத் தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில் சொல்வதுதான் எளிதாக இருக்கிறது என்பதும் புரிகிறது. ஆங்கில நூல்களில் படித்து அல்லது தமிழர் அல்லாதோரிடமும் உரையாடிப் பெற்ற அறிவென்பதால் இயல்பாகவே அதுதான் வருகிறது என்பதும் புரிகிறது. ஆனால் எது நெருடுகிறது என்றால், இயல்பாகவே நல்ல தமிழில் பேசும் அறிஞர் பெருமக்கள் கூடப் பலர், வலிந்து முயன்று ஆங்கிலம் கலந்து பேச வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று தோன்றும்படியாகப் பேசுவதுதான்.

அறிஞர் ஒருவர், எளிமையான மொழி பேசுவோரையும் தன் பக்கம் - தன் சிந்தனையின் பக்கம் - தன் மொழியின் பக்கம் - இழுத்து வருகிற மாதிரிப் பேச முடிந்தால் பிரச்சனையில்லை. அது நல்லதே. ஆனால், அந்த மொழி ஒன்றே எளிய மனிதர்களைத் தன்னை விட்டுத் தூர விரட்டும் ஆற்றல் படைத்ததாய் இருந்தால், எளிய மனிதர்களோடு உரையாடும் வாய்ப்பைத் தன்னிடம் இருந்து பறிப்பதாய் இருந்தால், இழப்பது பிறர் அல்ல, தானே என்பதை மட்டும் உணர்ந்து ஒவ்வொரு அறிஞரும் தம் மொழியை ஊட்டி வளர்த்தால் அறிஞர்க்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் நலம்! சரிதானே?!

இளமையா? முதுமையா?

வாஜ்பாய், குஜ்ரால் - இது போன்று எத்தனையோ பெரும் தலைவர்கள் இளமைக் காலங்களில் கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு மனம் மாறியவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

"இளமைப் பருவம் உணர்ச்சி மிக்க பருவம். அந்த வயதில் அதிரடியான முடிவெடுப்பதும், தீவிரமான செயல் வெறியும் இயல்பே. ஆனால், முதியவர்கள்தாம் நிதானமாகச் சிந்தித்து, தெளிவான முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். வாழ்வின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்கள். மனம் பக்குவப் பட்டவர்கள்!" என்றொரு கூட்டம் கூறுகிறது. ஆனால், என்னைப் பொருத்த மட்டில், "மனம் பக்குவப் பட்டு விட்டது!" என்பதன் பொருள் , "மனம் மழுங்கி விட்டது!" என்பதே.

சாக்கடைச் சமூகத்தின் நாற்றத்தைப் போக்க நினைக்கும் இளைஞன் ஒருவன், சுயநலச் சிந்தனைகளிலும் அவநம்பிக்கையிலும் சிக்கித் தானும் சாக்கடையோடு ஐக்கியமாகி விடுகிற முதுமைத் தனம் பக்குவத்தாலா? மழுங்கலாலா?

"இருபது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவனும் ஐம்பது வயதில் கம்யூனிசத்தை வெறுப்பவனுமே விபரமானவன்!" என்கிற மாதிரி யாரோ சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். காரணம்? இருபது வயதில் தீமைகளைக் கண்டு கொதிப்படையும் மனம், ஐம்பது வயதில் சாந்தமாகி விடுகிறது. அது பக்குவத்தாலா? அது போன்ற பிரச்சனைகளை அளவில்லாமல் பார்த்துப் பார்த்து ஏற்படும் மழுங்கலா?

எனவே, சமூக மாற்றத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டியது - வீரியமற்ற பெரியவர்கள் அல்லர்; அவலங்களைக் கண்டு அழும் - மனிதம் வற்றி விடாத இளமைப் பருவத்துக் காளைகளே அதைச் செய்ய வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன.

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

செவ்வாய், டிசம்பர் 06, 2011

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (2/6)

இதர சோலிகள்
நான் முன்பு சொன்னது போல, எங்கள் கல்லூரி படிப்பில் மட்டுமல்லாது எல்லாத்திலும் பட்டையைக் கிளப்பும் கல்லூரி. விளையாட்டிலும் நிறைய வீரர்களை உருவாக்கிய கல்லூரி. பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கென்று ஒரு மன்றம் இருக்கிறது. இலக்கிய ஈடுபாடுகள் உள்ளோருக்கும் ஓரளவு தீனி போடும் சூழல் அங்கிருந்தது. எனக்கும் கொஞ்சம் கவிதை - கதை எழுதும் வேலைகளில் ஆர்வம் இருந்தது. இது போன்ற வேலைகளில் ஆர்வம் இருக்கும் எல்லோருமே எங்கு சென்றாலும் எடுத்தவுடனேயே தன் திறமையை எல்லோருக்கும் காட்டி விட வேண்டும் என்று வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். வந்தவுடன் கவ்விப் பிடித்துத் தான் யார் என்பதைக் காட்டி விடுவார்கள். அப்படி வாய்ப்பு வராவிட்டாலும் எல்லோரிடமும் தன் திறமை பற்றி ஊதி ஊதிப் பெரிதாக்கிப் பேசிக் கொண்டிருப்பார்கள். நானும் அதைச் செய்தேன்.

பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போது கவிதை என்ற பெயரில் நாலு வரியில் எதையோ எழுதிக் கொடுக்க அதைப் பள்ளியின் ஆண்டிதழில் வெளியிட்டு விட்டார்கள். நாலு வரி எழுதிய நாமே இந்த ஆட்டம் போட்டோமே, நாற்பது வரிகள் எல்லாம் எழுதியவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்; சினிமாவில் பாட்டெழுத வாய்ப்புக் கேட்டு நேராகச் சென்னைக்கே சென்றிருப்பார்களோ என்று தோன்றும். அந்தப் பள்ளி ஆண்டிதழை கையிலேயே வைத்துக் கொண்டு, இருந்த இரண்டு மாத விடுமுறையில் எல்லோரிடமும் அதைக் காட்டுவதே ஒரு முக்கியப் பணியாகச் செய்து கொண்டிருந்தேன். கல்லூரியில் சேர வரும்போதும் அதைக் கையிலேயே எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். முதல் நாள் முதல் அது பற்றி அறிமுகம் செய்து கொண்ட எல்லோரிடமும் சொல்லிக் கொண்டும் இருந்தேன். சிலர், "ஓ! நீ அந்தக் க்ரூப்பா?" என்பது போல நோக்கி விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் "ஏய், இவன் திறமைசாலியாம்ப்பா..." என்று அங்கங்கே அறிமுகம் செய்து வைப்பார்கள். அவர்களை நம்பித்தானே நாம் கடை விரித்ததே. அதில் ஒரு முக்கியமான ஆள் என் வகுப்புத் தோழன் மதுசூதனன்.

அந்த அறிமுகம்தான் அடுத்து முதல் வாய்ப்பை வாசல்ப் படிக்குக் கொண்டு வரும். அப்படி வந்த முதல் வாய்ப்பு - கல்லூரியில் வந்தது. தற்காலிகமாகப் பணியாற்ற வந்திருந்த ராஜேஷ் எனும் ஆசிரியர் ஒருவர் தன் பணிக்காலம் முடிந்து விடை பெற்றார். கணிப்பொறியியல்த் துறை சார்பாக அவருக்குப் பிரிவுபச்சார விழா ஏற்பாடு செய்தார்கள். அதில் மாணவர்கள் சார்பாக நாலு பேர் பேச வேண்டும் என்று சொல்லி முதலாமாண்டு மாணவன் ஒருவனும் வர வேண்டும் என்றார்கள். மதுசூதனன் பட படவென வேலையை ஆரம்பித்தான். "ஏய், இவன் கவிதையெல்லாம் எழுதுவாம்ப்பா... மேடையில் எல்லாம் பேசுவானாம்..." என்று சுற்றியிருந்த நாலு பேரிடம் சொன்னான். அப்ப, இவன்தான் முதலாமாண்டு சார்பாகப் பேசப் போவது என்று முடிவு செய்தார்கள். "வேண்டாம்... வேண்டாம்..." என்று வெளியில் சொல்லிக் கொண்டு, "வேண்டும்... வேண்டும்..." என்று உள்ளே சொல்லிக் கொண்டு, பேச ஒத்துக் கொண்டேன். பேசி முடித்ததும் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. "கணிப்பொறித் துறையில் பொதுவாகப் படிப்பாளிகள் தான் வருவார்கள். இந்த மாதிரி ஆட்கள் கிடைப்பது அரிது!" என்று எல்லோருமே பெருமைப் பட்டுக் கொண்டார்கள். எல்லோரும் பட்டார்களோ இல்லையோ, நான் பட்டேன். என்னை விடப் பெருமை மதுசூதனுக்குத்தான். அவனும் ஓரிரு மாதங்களிலேயே பொறியியல் சீட் கிடைத்துப் போய் விட்டான். திருவில்லிப்புத்தூர்க்காரன். இப்போது எங்கிருக்கிறானோ தெரியவில்லை. இதெல்லாம் அவனுக்கு நினைவிருக்குமா என்றும் தெரியவில்லை. அது போல நிறையப் பேர் பாதியிலும் போனார்கள். அப்படிப் போனவர்கள் கிட்டத்தட்ட பத்துப் பேர் இருக்கும். இந்த அறிமுகத்தோடு அடுத்து கல்லூரிக்குள் நடந்த எல்லா இலக்கிய விழாக்களிலும் முதல் ஆளாகப் போய் நின்றேன். எங்கும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

திருவள்ளுவர் மன்றம், காந்தியச் சிந்தனை மன்றம், எழுத்தாளர் மன்றம் (தமிழுக்குத் தனி; ஆங்கிலத்துக்குத் தனி!), இரத்ததானக் கழகம், மதிப்பீட்டுக் கல்விக்கென்று ஒரு சங்கம் (VALUE EDUCATION CLUB) என்று பல கழகங்கள் - சங்கங்கள். எல்லாத்திலும் எழுதிப் போட்டு உறுப்பினர் ஆகி விட்டேன். இரண்டாம் ஆண்டில் துணைச் செயலராகவும் மூன்றாம் ஆண்டில் செயலராகவும் ஆக வேண்டுமே. அதன்படியே சில கழகங்களில் நடக்கவும் செய்தது. காந்தியச் சிந்தனை மன்றத்தில் பல கருத்தரங்கங்களும் பேச்சுப் போட்டிகளும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப் படும். எங்கள் முன்னாள் முதல்வர் முனைவர். கனகசபாபதி அவர்களும் எங்கள் காலத்தில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் மா. பா. குருசாமி அவர்களும் தீவிர காந்திய வாதிகள். காந்தி பற்றி பல நூல்கள் எழுதியவர் இரண்டாமவர். மொத்தம் நூறு நூல்களுக்கும் மேல் எழுதியவர். இருந்த இரண்டு விடுதிகளில் ஒன்றின் பெயர் காந்தி விடுதி. இன்னொன்று மெயின் விடுதி - நாங்கள் இருந்தது.

மதிப்பீட்டுக் கல்வி என்பது வாரம் இரண்டு நாட்கள் (புதன், வியாழன் என்று நினைக்கிறேன்) காலையில் கல்லூரி ஆரம்பிக்கும் முன் ஒரு மணி நேரம் பேச்சாற்றல் மிக்க பேராசிரியர் ஒருவரை அழைத்து வந்து உரையாற்ற வைப்பார்கள். சில நேரங்களில் வெளியில் இருந்தும் யாராவது அழைத்து வரப்படுவதுண்டு. ஆண்டில் ஓரிரு வாய்ப்புகள் மாணவர்களில் சிலருக்கும் வழங்கப் படுவதுண்டு. அந்த வாய்ப்பும் ஒரு முறை கிடைத்தது. இதில் வாழ்க்கைக்குத் தேவையான ஏதாவதொரு கருத்தை எடுத்துக் கொண்டு உரையாற்ற வேண்டும். எது பற்றிப் பேசினேன் என்று நினைவில்லை. எப்படியும் ஆண்டுக்குப் பத்துப் போட்டிகள் நடக்கும். எல்லாத்திலும் கலந்து கொண்டு இரண்டாவது வந்தால்தான் அடுத்த போட்டி வரை தூக்கம் வரும். நமக்கு முதலிடம் மட்டும் எப்போதுமே கிடைக்காது. இரண்டாமிடத்துக்கே பிறந்தோமோ என்று தோன்றும். முதலிடத்துக்கு மட்டும் வெவ்வேறு ஆட்கள் புதிது புதிதாக வருவார்கள். அவர்களே மூன்றாம் இடத்துக்கும் கூடப் போவார்கள். அந்த மூன்று ஆண்டுகளும் இரண்டாம் இடம் மட்டும் எனக்காகவே இருந்தது போல இருந்தது. நம்ம வாழ்க்கையும் நெடுஞ்செழியன்-அன்பழகன் மாதிரியே வீணாய்ப் போய் விடுமோ என்று கூடச் சில நேரங்களில் வருத்தப் பட்டிருக்கிறேன்.

கல்லூரியில் 'கேம்பஸ் நியூஸ்' என்ற அரையாண்டிதழ் ஒன்று வெளிவரும். அதன் ஆசிரியர் குழுவிலும் இடம் பிடித்து விட்டேன். "இதே வேலையாக அலைந்தான் என்பது அப்போதே தெரியும்; ஆனாலும் இவ்வளவு கிறுக்காகவா திரிந்தான் மனுஷன்!" என்று இப்போது இதைப் படிக்கும் என் நண்பர்கள் ஆச்சரியப் படுவார்கள் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. நமக்கு இந்தக் கிறுக்கு. பின்னர் ஒரு காலத்தில் அதை எல்லாம் அப்படியே மறந்து விட்டு ஒரு வாழ்க்கை வாழவும் நேர்ந்தது பத்து வருடங்களுக்கு. இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால், நமக்குக் காதல்க் கவிதையெல்லாம் வரவே வராது. அதற்கான தேவையும் இருக்கவே இல்லை. தீவிர சமூகச் சிந்தனையாளன் என்று பறை சாற்றிக் கொள்வதிலேயே பெரும் பெருமை. அன்றைய நிலையில், 'கவிஞர்கள்தாம் இந்த உலகத்திலேயே சிறந்த அறிவாளிகள்; நாட்டையும் உலகையும் நல்வழியில் நடத்திச் செல்லக் கூடிய ஒரே தகுதியாளர்கள் அவர்களே!' என்று தீவிரமாக நம்பினேன். இப்போதுதான் புரிகிறது - அவர்களிடம் பேனா - பேப்பர் தவிர வேறு எதையும் கொடுத்து விடக் கூடாது என்று. இது போன்ற சோலிகளில் தீவிரமாகத் திரிந்ததால் கணிப்பொறித் துறையில் இருந்த பேராசிரியர்களை விட தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் எல்லோருமே எனக்கு மிக நெருக்கம். என் மீது நிறையப் பாசமாக இருப்பார்கள். 

இப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருக்கும் கண்ணன் சார் ஒருநாள் வகுப்பிலேயே வைத்துச் சொன்னார் - "மூன்றாமாண்டு முடிந்ததும் உனக்கு எங்கு வேலை கிடைக்குதோ இல்லையோ நாங்கள் ஒரு கடிதம் கொடுத்தால் தினத்தந்தியில் உனக்கொரு வேலை உறுதி!" என்று. அப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பண்பாளர் அப்துல் ரசாக் சார் (அவர் இறந்து போய் விட்டதாகக் கேள்விப் பட்டேன்!) எங்கள் வகுப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர். ஆனால், என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பார். கல்லூரியில் நடந்த ஒரு பெரும் விழாவில் ஒரு நீண்ட கவிதையை வாசித்து, "ஒவ்வொருவருக்கும் ஒரு கவிதை பிடிக்கும். இதுவரை நான் படித்த கவிதைகளிலேயே எனக்குப் பிடித்த கவிதை இதுதான். இதை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினார். எல்லோரும் விழித்தார்கள். "அவர் இங்குதான் இருக்கிறார்... பாரதிராஜா! எழுந்திரியுங்கள்!" என்று என்னை உணர்ச்சிக் கடலில் தொபுக்கடீன்னு குதிக்க வைத்துத் திண்டாட வைத்தார் ஒருநாள். அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். மனிதர் மணிக்கணக்காகக் கட்டிப் போடும் மாதிரிப் பேசுவார். எல்லாவற்றுக்கும் மேல், ஒரு பரிசுத்தமான பிழைப்புவாதியாக இல்லாமல், இடையில் ஏற்பட்ட பத்து வருட இடைவெளியையும் தாண்டி, கொஞ்சம் கொஞ்சம் எழுத்திலும் பேச்சிலும் அரசியலிலும் பொதுச் சோலிகளிலும் இன்று இருக்கும் ஆர்வம் அங்கே பெருமளவில் நீரூற்றி வளர்க்கப் பட்டது. அதை ஆயுள் முழுக்கவும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

இரத்ததானக் கழகம்
இரத்ததானம் என்பது அவ்வளவாக எல்லோரும் முன்வந்து செய்கிற வேலையாக இல்லாத காலத்திலேயே அதற்கென்று ஒரு கழகம் அமைத்து, முதலாண்டில் பத்துப் பதினைந்து பேரில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, நான் மூன்றாம் ஆண்டு படித்த ஆண்டில் இருநூறு பேராக ஆகி இருந்தது. இப்போது ஆயிரத்தைத் தாண்டி இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்தப் பகுதியில் மூன்று மாவட்டங்களில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்) எங்கு யாருக்கு இரத்தம் தேவைப் பட்டாலும் அங்கே இருந்துதான் ஓரிரு மாணவர்கள் போவார்கள். சில நேரங்களில் அம்மாவட்டங்களுக்கு வெளியிலும் சென்று அளித்து வருவார்கள். கேரளாவுக்கும் பலர் சென்று வந்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை நாகர்கோவில் போய் வந்தேன். அந்தப் பகுதியிலேயே இரத்ததானம் என்கிற ஓர் அருமையான பணியை எளிதாக்கிக் காட்டிய பெருமை எங்கள் கல்லூரிக்கே சாரும் என்றெண்ணுகிறேன்.

இரண்டாம் ஆண்டில் இருக்கும்போது இந்தக் கழகத்துக்கு ரூபஸ் அண்ணன் (அவர் பற்றி பல பத்திகள் பின்னர் எழுத இருக்கிறேன்!) செயலராக இருந்தார். அவருடனேயே திரிந்து, மூன்றாம் ஆண்டில் அந்தப் பொறுப்பை அப்படியே கவ்விக் கொண்டேன். மற்ற எல்லாக் கழகங்களை விடவும் இதில் ஒரு கூடுதல்க் கண் இருந்தது. இப்படியொரு புனிதமான பணியில் இணைத்துக் கொள்வது எவ்வளவு புண்ணியம்? விடலாமா? வழக்கமாக விடுதியில் தங்கிப் படிக்கும் ஆங்கில இலக்கிய மாணவர்களே அந்தப் பொறுப்புக்கு வருவார்கள். அந்த ஆண்டு என் மிதமிஞ்சிய ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கிய வெளி மாணவன் ஒருவனும் நானும் அதைப் பகிர்ந்து கொண்டோம்.

இப்படி இரத்ததானம் செய்வதில் பல்வேறுபட்ட அனுபவங்களும் எங்களுக்குக் கிடைத்தது. ஒரு பெரியவர் வந்து தன் சாதிப் பையன் ஒருவனை அனுப்ப முடியுமா என்று கேட்டார். "யோவ், உனக்கு இரத்தம் கொடுக்க ஆள் கிடைப்பதே பெரிய விஷயம். இதில் இது வேறயா?" என்று எங்கள் பேராசிரியர் கிழித்த கிழியை வாங்கிக் கொண்டு அனுப்பிய பையனை அழைத்துக் கொண்டு போனார். அப்புறம் சில மாதங்கள் கழித்து வந்து, "என் தம்பியைப் பார்க்க வேண்டும்!" என்றாராம். அதையெல்லாம் கேள்விப் பட்டபோது 'அடப்பாவிகளா, இப்படியும் ஆட்கள் இன்னும் திரிகிறீர்களா?' என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அப்படி இரத்தம் கொடுக்க வரும் பையனுக்கு, பயணச் செலவு போக, ஒரு பைசா கூட கையில் கொடுக்கக் கூடாது என்பது நாங்கள் கறாராகச் சொல்வது. "நல்ல சாப்பாடு வாங்கிப் போடுங்கள், ஹார்லிக்ஸ் மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுங்கள், அவ்வளவுதான்!" என்று சொல்லியே அனுப்புவோம். மாணவர்களும் அதை அவ்வளவு ஆர்வமாகச் செய்வார்கள். அதனாலேயே வெளியில் எங்களவர்கள் அப்படி-இப்படி ஏதாவது சலம்பல் செய்தாலும் மக்கள் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அன்றைய காலகட்டத்தில் இரத்தம் கொடுத்தல் உயிர் கொடுத்தல் போல.

அது தவிர, இரத்தம் கொடுத்தால் ஆண்டிறுதியில் ஒரு சான்றிதழ் கொடுப்போம். அரை நாள் விடுப்பு கிடைக்கும். கல்லூரியில் வரும் பத்திரிகைகளில் பெயர் வரும். அதைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. இது எதுவுமே அப்படி இரத்தம் கொடுக்கப் போனவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்திராது. ஒரு மகிழ்ச்சி - திருப்தி - பெருமை. அவ்வளவே. அதிலும் சிலர் ஒவ்வொரு முறையும் சரியாக மூன்று மாதம் முடிந்ததும் தயாராக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். "அடுத்து எப்பப்பா? நம்ம ஊர்ப்பக்கம் ஏதாவது வந்தால் சொல்லு மக்கா!" என்பார்கள். மூன்று வருடத்தில் பத்துமுறை கொடுத்தவர்களும் உண்டு. அதில் ஒரு சுகம். கொடுத்தலும் சுகம்! நல்லவர்-கெட்டவர் எல்லோருமே இந்த விஷயத்தில் நல்லவர்களாக இருப்பார்கள். அந்தப் பழக்கத்தைக் கல்லூரியை விட்டு வெளியேறிய பின்பும் அவர்கள் சென்று சேரும் இடங்களில் பரப்பியிருப்பார்கள் - பரப்புவார்கள் என்றே நம்புகிறேன். அதென்ன சாதாரணப் பணியா என்ன?

அக்காக்களும் அண்ணன்களும்
எங்கள் கல்லூரி ஓர் ஆண்கள் கல்லூரி. முழுக்க முழுக்க ஆண்கள் கல்லூரி என்று சொல்ல முடியாது. கொஞ்சம் அக்காக்கள் இருந்தார்கள். அக்காக்கள்? முதுகலை பொருளியல் (M.A. ECONOMICS), முதுகலை ஆங்கிலம் (M.A. ENGLISH) மற்றும் முதுமறிவியல் கணிதம் (M.SC. MATHEMATICS) ஆகிய மூன்று முதியோருக்கான(!) வகுப்புகள் இருந்தன. அவ்வகுப்புகளில் மட்டும்  பெண்கள் உண்டு. பெண்கள் இல்லாத வாழ்க்கை கண்கள் இல்லாத வாழ்க்கை என்று நம்பும் எம்மவர்கள் மட்டும் அக்காக்களை எப்படியும் பேசிப் பழகி விடுவார்கள். 'யாருக்காவது (பெண்களுக்குத்தான்) தம்பியாக இராவிட்டால் என்னால் மூச்சே விடமுடியாது' என்பவர்கள் அவர்கள். ராக்கி காட்டப்படும் நாட்களில் இவர்கள் நாயகர்களாக வலம் வருவார்கள். 'இருந்திருந்தும் தம்பியாகவா இருப்பது? கருமம்!' என்று கோபப் படுபவர்களுக்கு இருக்கிறது திருச்செந்தூர் பேருந்து நிலையம், செந்திலாண்டவன் கோவில் மற்றும் கோவிலுக்கு முன்னால் இருக்கும் கடற்கரை. ஒரு சாரார் ஒருநாள் கூட விடாமல் தினமும் மாலை ஒருமுறை போய் இந்த மூன்று இடங்களிலும் இருக்கிற வெளியூர்ப் பிள்ளைகளுக்கு முகத்தைக் காட்டாமல் விட்டு விட்டால் அன்று இரவெல்லாம் தூங்க முடியாமல் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

எழுதுவது நானாக இருப்பதால் என்னை நல்ல பையனாகக் காட்டிக் கொள்ள இருக்கும் வாய்ப்பை விடக் கூடாதல்லவா? இருந்த மூன்று வருடத்தில் ஒரு நாள் கூட செந்திலாண்டவனைப் போய்ப் பார்த்ததில்லை. மொத்தம் பத்துத் தடவை கூடக் கோயில் முன்னால் இருக்கும் கடற்கரைக்குப் போனதில்லை. ஊருக்குப் போகும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் பேருந்து நிலையத்தை எட்டிக் கூடப் பார்த்ததில்லை. முக்கியமாக, எனக்கு அக்காக்களும் இருக்க வில்லை. அதில் ஒரு கூச்சம். அந்தக் கூச்சத்தை விரட்டிய பெருமை பெங்களூரையே சேரும். அண்ணன்கள் மட்டுமே. அண்ணன்கள்? ஆம். சீனியர்களை "அண்ணே!" என்றுதான் அழைக்க வேண்டும். பல நேரங்களில் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கும். முக்கியமாக இந்தச் சென்னைப் பக்கம் இருந்து வரும் பையன்கள் மறந்து மறந்து பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு மாட்டிக் கொள்வார்கள். 

இப்போது பெரியப்பா வயதுப் பெரியவர்களையே பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் பண்பாட்டுக்குள் நுழைந்து விட்டபின்பு அதெல்லாம் கொடுமையாகத் தெரிகிறது. ஆனால், இன்னமும் அந்தப் பண்பாடு பிடிக்கத்தான் செய்கிறது. அது அந்த மண்ணின் பண்பாடு. அங்கே இருக்கும்போது அப்படி இருப்பதுதான் சரியாகப் படுகிறது. இங்கே வந்து எங்கள் மேனேஜரை "அண்ணே!" என்றால் அது எவ்வளவு விகாரமாக இருக்குமோ அவ்வளவு விகாரமாக இருக்கும் அங்கே உள்ள சீனியரைப் பெயர் சொல்லி அழைப்பது. இதில் கொடுமை என்னவென்றால், பள்ளி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு காரணமாக ஓரிரு வருடங்கள் கூடுதலாக ஓட்டி விட்டவர்கள், வயதில் சிறியவர்களைக் கூட கல்லூரியில் சீனியர் என்ற ஒரே காரணத்துக்காக "அண்ணே!" என்றழைக்க வேண்டும். அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எல்லோருமே அந்தப் பண்பாட்டுக்குக் கட்டுப் படுவதுதான் அதிலிருந்த அழகு.

இதில் எனக்கு மனதில் நின்ற அண்ணன்மார் இருவர். இப்போதும் தொடர்பில் இருப்பவர்கள். இருவருமே நீதித் துறையோடு தொடர்பு கொண்டவர்கள். ஒருவர் அண்ணன் மாரியப்பா. இவர் ஒரு நீதிபதியின் கணவனாக இருக்கிறார். இன்னொருவர் ரூபஸ் அண்ணன். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இருவருமே மோகன் ராம் அண்ணனின் நெருங்கிய நண்பர்கள். அதில்தானே எல்லாம் ஆரம்பம். மாரியப்பா கணிப்பொறியியல் சீனியர். தென்காசிக் காரர். முதலாண்டு முதலே இரண்டு ஆண்டுகள் முழுக்க முழுக்க ஒன்றாகவே அலைந்து திரிந்தோம். காலையிலும் மாலையிலும் கடற்கரையோரம் வேலிக்காட்டுப் பக்கம் நடைப் பயணம் செல்வது முதல் சனி-ஞாயிறுகளில் வெளியில் சுற்றுவது வரை எல்லாமே இவரோடுதான். பேசாத பேச்சில்லை; கதைகள் இல்லை. 

இன்னொருவர்? அவரைப் பற்றி நிறையவே பேச வேண்டியுள்ளது. எனவே, அடுத்த பாகத்தில் விரிவாகப் பேசுவோம். :)

-தொடரும்...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (1/6)

கல்லூரி வாழ்க்கை எல்லோருக்குமே ஸ்பெஷல்தான். அதுவும் விடுதியில் இருந்து படிப்போருக்கு சூப்பர் ஸ்பெஷல். எனக்கு சூப்பர் ஸ்பெஷல். எங்கள் ஊரும் (நாகலாபுரம்) திருச்செந்தூரும் ஒரே மாவட்டத்தில்தான் இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம். ஆனாலும் நூறு கிலோ மீட்டர் தொலைவு. நாங்கள் வட எல்லை. திருச்செந்தூர் தென் எல்லை. பல பஸ்கள் மாறி வர வேண்டும். குறைந்தது இரண்டு; அதிக பட்சம் நான்கு பஸ்கள். நாகலாபுரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் அல்லது நாகலாபுரம்-விளாத்திகுளம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் அல்லது நாகலாபுரம்-விளாத்திகுளம்-எட்டையபுரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் ஆகிய வழிகளில் வரலாம். எப்படி வந்தாலும் நான்கு மணி நேரம் கண்டிப்பாக ஆகும். அதில் பெரிதளவில் மாற்றம் இராது. எந்தக் குறிப்பிட்ட வழியையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கிடைக்கிற பஸ்ஸில் ஏறி விடுவது உத்தமம். நாங்கள் உத்தமர்கள் என்பதால் அப்படியே செய்து விடுவோம். நாங்கள் என்றால்? நான், மாரிச்சாமி, கண்ணபிரான் ஆகிய மூவர். முதல் வருடம் நான் தனியாகத்தான் இருந்தேன். மாரிச்சாமியும் கண்ணபிரானும் என்னுடைய இரண்டாம் ஆண்டில் வந்து சேர்ந்த ஜூனியர்கள். இதில் கண்ணபிரான் விளாத்திகுளம் வரை வந்து வேலிடுபட்டி செல்பவன். மாரிச்சாமி கடைசிவரை என்னுடனேயே வருபவன். நாகலாபுரம் வந்து அங்கிருந்து நடந்தோ சைக்கிளிலோ கல்லூரணி செல்பவன்.

விளாத்திகுளம்-நாகலாபுரம்-புதூர் பகுதி என்பது தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளின் பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பகுதி. பெரிதாக நகரங்கள் ஏதும் இல்லாததால் பெரிதாக வாழ்க்கை முறையில் மாற்றம் ஏதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பகுதி. எல்லாக் கல்லூரியிலுமே பகுதிவாரியாகக் கூட்டம் சேர்வதைப் பார்த்து எங்கள் ஆட்களும் கூட்டம் சேர்க்க முயன்றால் அது நடக்காது. எந்தக் கல்லூரியிலும் இந்தப் பகுதிக்காரர்கள் அதிக பட்சம் ஐந்து பேருக்கு மேல் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படிப் பெரும்பாலும் பெரிய படிப்புகள் படிக்கப் போனவர்கள் எல்லோருமே ஊருக்கு வடக்கேயே போனார்கள். அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய ஊர்களுக்கே போனார்கள். ஓரிருவர் சாத்தூருக்குப் போயிருக்கலாம். படிப்புக்கு மட்டுமல்ல எல்லாத்துக்குமே வட தொடர்புதான் அதிகம். தென் தொடர்பு என்பது அந்தப் பகுதியில் அம்மா வீடு உள்ளவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அது போக என் போன்ற சிலர், என்ன காரணம் என்றே தெரியாமல் தெற்கே கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்குப் போயிருக்க வேண்டும்.

என்ன படிக்கலாம்?
நான் எப்படிப் போனேன் என்ற கதையைச் சொல்லி விடுவோம். நானும் எல்லோரையும் போலவே மேனிலைக்கு அருப்புக்கோட்டை போய்ப் படித்தேன். மேனிலை படிக்கும்போது மனதில் உறுதியாக முடிவு செய்தது - அடுத்துப் படிப்பது கணிப்பொறியியலாக இருக்க வேண்டும் என்பது. நல்ல மதிப்பெண் கிடைத்தால் பொறியியலில் கணிப்பொறியியல் (B.E. COMPUTER SCIENCE), கொஞ்சம் குறைந்தால் இளமறிவியலில் கணிப்பொறியியல் (B.SC. COMPUTER SCIENCE), அதனினும் குறைந்தால் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறியியல் (POLYTECHNIC COMPUTER SCIENCE) என்று முடிவு செய்திருந்தேன். காரணம் - இளமறிவியல் கணிப்பொறியியல் படித்திருந்த பிரகாஷ் மச்சானும் முதுமறிவியல் கணிப்பொறியியல் படித்திருந்த மேலக்கரந்தை மகேஷ் அண்ணனும். இருவருமே படித்து முடித்து ஆரம்ப காலப் போராட்டங்களில் இருந்து உடனடியாக வெளி வந்து நல்ல வேலைகளில் அமர்ந்திருந்தனர். அதே படிப்பை நானும் படித்தால் வேலை வாங்கிக் கொடுக்க ஆள் இருந்தார்கள் என்ற நம்பிக்கை வேறு. அந்த நேரத்தில் அது போன்ற அத்துவானக் காட்டுக்குள் வாழ்ந்த என் போன்றோருக்கு இத்தகைய வழிகாட்டுதல் கிடைப்பதே குதிரைக் கொம்பு. கண்டிப்பாக எனக்கு எங்கோ மச்சம் இருந்திருக்க வேண்டும்.

இப்படியான ஒரு முடிவோடு மேனிலைத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்தோம். எதிர்பார்த்தது போலவே குறைவாகவே மதிப்பெண் வந்தது. எதிர்பார்த்ததை விடவும் குறைவாக வந்தது. எதிர் பார்த்த அளவு வந்திருந்தால் கூடப் பொறியியல் கிடைத்திருக்கும். இலவச இடம் என்றால் மட்டுமே சேரும் உத்தேசம். சுயநிதிக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்திப் படிப்பதாக ஆர்வம் இல்லை. அதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது மட்டுமில்லை. பொறியியல் என்பது அப்போதெல்லாம் மிக மிக நன்றாகப் படிப்போர் மட்டுமே படிக்க முடிந்தது. நான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதால் அந்த ஆசையைக் கைவிட வேண்டிய கட்டாயம் வந்தது. எனக்கு அடுத்த வருடத்தில் இருந்தே மதிப்பெண்களும் தாராளமாக வழங்கப் பட்டன. பொறியியல்க் கல்லூரிகளும் தாராளமாகத் திறக்கப் பட்டன. இன்னோர் ஆறு மாதம் தாமதமாகப் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது.

சரி, நடந்ததைப் பற்றிப் பேசுவோம். நடக்காதது பற்றிப் பேசத்தான் நாட்களும் பற்றாது; தாட்களும் பற்றாதே. பெரும்பாலும் பொறியியல் கிடைக்காது என்று உறுதியாகி விட்டது. வேறு எதற்கும் எங்கும் முயற்சிக்க வில்லை. எங்கள் ஊர்க்காரர் - குடும்ப நண்பர் - திரு. பால்பாண்டியன் அவர்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். இப்போதும் தொடர்கிறார். அவரிடம் கருத்துக் கேட்கலாம் என்று கேட்டோம். "இந்த மதிப்பெண்ணுக்கு எங்கள் கல்லூரியில் முயலலாம். கணிப்பொறியியல் கிடைக்க வாய்ப்புள்ளது!" என்றார். முயன்றோம். இடமும் கிடைத்தது. சின்ன வயதில் இருந்து அவரிடம் எவ்வளவோ பேசியிருக்கிறோம். ரஷ்யாவில் போய் மருத்துவம் படிக்கப் போவது பற்றியெல்லாம் அவரிடமே அளந்திருக்கிறேன். கடைசியில் அவர் வழி காட்டுதலோடு அவர் பணி புரியும் கல்லூரியிலேயே போய் இறங்கியது ரஷ்யா செல்ல வேண்டிய விமானம்.

முதல் நாள்
கல்லூரியில் சேர்ந்து, விடுதியிலும் சேர்ந்து, முதல் நாள் மாலை கல்லூரி முடிந்து விடுதி திரும்பியதும் எல்லோரும் அறிமுகங்கள் செய்து கொண்டோம். இந்த அறையில் அந்த அறையில் என்று அழுது கொண்டிருக்கும் பல நண்பர்கள் பற்றிக் கேள்விப் பட்டோம். அழாத மற்றவர்களுக்கு எப்படி இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு அழுகை வர வைக்கும் ஓர் உணர்வு அழுத்தமாக இருந்தது. ஆனால், அழ வில்லை. வீட்டை விட்டுப் பிரிந்து வருதல் எனக்கு அது முதன் முறை அல்ல. எனவே, சமாளிப்பது ஓரளவு எளிதுதான் எனினும் தெரிந்தவர் யாரும் இல்லாத ஒரு புதிய இடத்தில் போய் இருக்கும் முதல் நாள் எப்போதுமே ஒரு மாதிரியானதுதானே. அதுவும் மாலைப் பொழுது என்றால் சொல்லவே வேண்டியதில்லை. மாலைப் பொழுதுக்கென்றே ஒரு மகத்துவம் இருக்கிறது. அதை வெல்வது கொஞ்சம் சிரமம்தான். அதை வெல்வதற்காகவே எல்லோருமாக ஒரு முடிவு செய்தோம். கடற்கரைக்குப் போய் வரலாம் என்று கிளம்பினோம். கடற்கரை என்றால் காத தூரம் இல்லை. விடுதிக்குப் பின்னால்தான் இருக்கிறது. மொட்டை மாடியில் நின்றால் அலைகளைப் பார்க்கலாம். சுனாமி வந்தால் கண்டிப்பாக அழிந்து போகும் என்று சொல்லுமளவுக்கு அருகில் இருக்கிறது. நல்ல வேளையாக சுனாமி திருச்செந்தூரை ஒன்றும் செய்ய வில்லை. அதற்கும் ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு கதை சொன்னனவே. தமிழ் நாட்டிலேயே கடற்கரையோரம் இரண்டே கல்லூரிகள்தாம் இருக்கின்றன. அதில் எங்களுடையதும் ஒன்று என்ற ஒரு தகவலும் முதல் நாளே எங்களுக்குச் சொல்லப் பட்டது. சரி பார்த்து வரலாம் என்று படையாகக் கிளம்பினோம்.

விடுதியில் இருக்கும் போதே அலைகளின் ஓசையை நன்றாகக் கேட்க முடியும். அதை அதனினும் அருகில் சென்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். மென்மேலும் அருகில் செல்லச் செல்ல ஓசையின் அளவு கூடியது. அந்தச் சத்தம் பயமுறுத்தியது. அருகில் நெருங்கவே பயமாக இருந்தது. சிறு வயதில் இதே திருசெந்தூரில் இதே கடலை இதை விடப் பயத்தோடு பார்த்த நினைவு வந்தது. அதன் பின்பு இராமேஸ்வரம் சென்றும் கடல் பார்த்திருக்கிறேன். அங்கே இருக்கும் கடல் அவ்வளவு சத்தம் கொடாது. இப்படிச் சத்தம் எழுப்புவதால் திருச்செந்தூரில் இருப்பது ஆண் கடல் என்றும் அமைதியாக இருப்பதால் இராமேஸ்வரத்தில் இருப்பது பெண் கடல் என்றும் எங்கள் ஊரில் சொல்வார்கள். விபரம் தெரியாதவர்கள் - மாற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது, இப்போது மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அருகில் போய் நின்ற போது, சுனாமி பற்றி அறியாத அந்த நாளிலேயே அப்படி ஏதோ ஒன்று வரப் போகிறதோ என்கிற மாதிரியான பயம். உடன் இருந்த நண்பர்களில் சிலர் பயந்தார்கள். சிலர், "இதெல்லாம் முதல் நாள் மட்டும்தான் இருக்கும்; இன்னும் ஒரு வாரத்தில் இது எவ்வளவு பழகி விடும் பாருங்கள்!" என்றார்கள். பள்ளியிலேயே முதல் நாள் மட்டும் வாங்க போங்க என்று பேசும் பழக்கம் இருந்தது. கல்லூரியில் அது மேலும் சில நாட்கள் இருக்கும். சிலரோடு கடைசிவரை தொடரவும் செய்யும்.

போன இடத்தில் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே விடுதி மாணவர்கள். பெரும்பாலும் புதியவர்கள். சில பழையவர்களும் கடலின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இது போன்ற தருணங்களில் உணர்ச்சி வசப் பட்டுப் பாடவே தமிழ்ச் சினிமாவில் ஏகப் பட்ட பாடல்கள் இருக்கின்றனவே. அப்படியே தன்னை மறந்து பாடிக் கொண்டு அலைந்தார்கள். அவர்களைப் பார்த்தால் காதல் தோல்வி அடைந்தவர்கள் போலத் தெரிய வில்லை. உண்மையிலேயே சோகமாகத் தெரிய வில்லை. காதலிக்க வேண்டும் - அதன் பின் தோல்வி அடைய வேண்டும் - அப்படியே சோகமாக அலைய வேண்டும் என்று விரும்புபவர்கள் போலத் தெரிந்தது. அல்லது, 'அவளைக் காதலிக்க விரும்புவதே கற்பனைக்கு அப்பாற்பட்டது' என்ற ஏமாற்றத்தின் சோகமாக இருக்கக் கூடும். ஏதோ ஒன்று. அடுத்து வந்திருக்கும் புதியவர்களுக்கும் அடுத்த மூன்றாண்டுகளை எப்படி சோக மயமாக்கிக் கொண்டு உணர்ச்சிக் கடலில் குளித்துத் திளைப்பது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்பு எங்கள் ஆட்களும் சிலர் அது போல ஆரம்பித்து விட்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லைதானே.

மறுநாள்
சேர்ந்த மறுநாளே விடுமுறை நாள். எல்லோரையும் பார்த்துப் பேச உதவியாக இருந்தது. துளி கூட ராகிங் கிடையாது. தென் தமிழகத்தில் இருக்கும் மிகச் சில உருப்படியான கல்லூரிகளில் ஆதித்தனார் கல்லூரியும் ஒன்று. படிப்பிலும் சரி; விளையாட்டிலும் சரி; இதர செயல்பாடுகளிலும் சரி... எங்கள் ஆட்கள் எங்கு போனாலும் கோப்பையைத் தட்டி வருவார்கள். ம்ம்ம்... இரண்டாம் நாள் அறிமுகங்களுக்கு வருவோம். பகுதிவாரியாக எல்லோரும் கூட்டணி சேர்ந்தார்கள். நிறையப் பேருக்கு அவர்கள் ஊர்க்காரர்களே - ஏற்கனவே தெரிந்தவர்களே நிறைய இருந்தார்கள். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. முழுக்க முழுக்க அலசியதில் விளாத்திகுளம் பகுதிக்காரர் ஒருத்தர் சிக்கினார். அதை விடச் சிறப்பான இன்னொருவர் சிக்கினார். அருப்புக்கோட்டையில் நான் படித்த அதே பள்ளியில் அதே விடுதியில் இருந்து படித்த மோகன்ராம் அண்ணன். அவர் இராமேஸ்வரம் பக்கமுள்ள தங்கச்சி மடத்துக்காரர். பள்ளியில் எனக்கு இரண்டு வருடங்கள் முன்பு படித்து வெளியேறி விட்டதால் முன்பே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. பொறியியல் முயன்று ஒரு வருட இடைவெளியோடு இங்கு வந்து சேர்ந்ததால் இங்கே எனக்கு ஒரு வருடம் மட்டுமே சீனியர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததால் அவருடைய மொத்தக் குழுவோடும் சேர்ந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுடைய செட்டில் அவர் கொஞ்சம் பிரபலமான ஆள். ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். பார்த்தால் பயப்படும் படி இருந்தாலும் பழக இனிமையானவர். நல்ல மனிதர். அன்றைய தினம் அவர் தலைமையிலான அணியோடு விடுதியில் இருந்து ஒரு பெருங்கூட்டம் கடலுக்குக் குளிக்கச் சென்றோம். கடல் மீதான பயம் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டி அடிக்கப் பட்ட நாள் அதுதான்.

முதல் நாள் முதலே அவருடைய குழுவுடனேயே அதிகம் சுற்றிக் கொண்டு இருந்ததால் என் செட் ஆட்களுக்கு என் மீது கொஞ்சம் கடுப்பு. எனக்குச் சின்ன வயது முதலே பெரியவர்களோடு சுற்றுவது பிடிக்கும். நாமும் பெரியவர் ஆகி விடுவது போல ஓர் உணர்வு. நம் வயது ஆட்கள் நம் அளவுக்கு முதிர்ச்சி பெற்றில்லை என்ற உணர்வே அதன் அடிப்படை. அது தவறு - திமிர் என்றெல்லாம் புரிந்தாலும் அந்த உணர்வை எளிதில் வெல்ல முடிந்ததில்லை. அதற்குக் கொடுத்த விலை கொஞ்சம் கூடுதல். என் செட் நண்பர்கள் அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதை ஒரு பிரச்சனையாகவே பேச ஆரம்பித்தார்கள். சீனியர்களோடு கொஞ்சம் குறைத்துக் கொண்டு இந்தப் பக்கம் கூட்டிக் கொள்ளலாம் என்று முயன்றாலும் ஓரளவுக்கு மேல் முடியாது. அது போலவே, விடுதியில் எங்களோடு இருந்து விடுதி மாணவர்களை மேய்க்கும் வேலையைச் செய்தவர் எங்கள் கணிப்பொறியியல் ஆசிரியர் திரு. வைரவராஜ் அவர்கள். எனவே, அவரோடும் நான் கொஞ்சம் சாதாரணமாகப் பேசுவேன். இதைக் கண்டு கொதித்துப் போனார்கள் என் சகாக்கள். என்னைப் போட்டுக் கொடுக்கும் ஆளாக இருப்பானோ என்று கூட சந்தேகப் பட்டார்கள். இந்த எல்லை தாண்டிப் பழகும் என் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. அலுவலகங்களிலும் மற்ற மொழி பேசுவோரிடம் தொடர்புகள் இல்லாமல் நம்மவர்கள் ஒரு புறம் சங்கம் வைத்துக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களிடம் கூடுதலாகவே நெருங்கிப் பழகுவேன். இது யாருக்கும் கண் உறுத்த வைப்பதற்காகச் செய்வதில்லை என்றாலும் அப்படியே அது பார்க்கப் படும். என்னைப் பொருத்த மட்டில் அது ஓர் எல்லைகள் இல்லாமல் வாழும் இயல்பான வாழ்க்கை.

கமிட்டிகள்
மற்ற கல்லூரிகளில் - விடுதிகளில் எப்படி என்று தெரியவில்லை. எங்கள் விடுதியில் 'கமிட்டிகள்' என்றொரு அமைப்பு இருந்தது. விடுதியின் அனைத்து நிர்வாக வேலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியதே அவர்களுடைய பொறுப்பு. அதாவது அமைச்சர்கள் போல. அமைச்சர் குழுக் கூட்டம் போல மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் போடப்படும். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் அமைச்சர் போல அங்கும் பல்வேறு துறைகளும் துறைவாரியாக கமிட்டி உறுப்பினர்களும் இருந்தனர். மெஸ் கமிட்டி, விளையாட்டுக் கமிட்டி, பத்திரிகைக் கமிட்டி, ஆடியோ கமிட்டி, சுகாதாரக் கமிட்டி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு கமிட்டியும் ஒவ்வொரு கமிட்டியிலும் இருவர் முதல் ஐவர் வரை உறுப்பினர்களும் இருப்பர். இருவர் என்றால், ஒருவர் இரண்டாம் ஆண்டு மாணவராகவும் இன்னொருவர் மூன்றாம் ஆண்டு மாணவராகவும் இருப்பர். இந்தக் கமிட்டிகளில் இருப்பவர்கள் அந்தந்த ஆண்டு மாணவர்களிடையே ஓரளவு பிரபலமானவர்களாக இருப்பர். மாணவப் பருவத்திலேயே அவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் தம் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இதே வாய்ப்பைப் பயன்படுத்தி ஊழல் செய்தோரும் உண்டு (சிலர்தான்!). படித்தவர்கள் வந்து குவிந்து விட்டால் மட்டும் நம் அரசியல் ஒன்றும் பெரிதாக மாறிவிடாது என்று அப்போதுதான் புரிந்தது. ஊழல் நம் இரத்தத்தில் இருப்பது. அதிலேயே சிறப்பாகச் செயல்பட்ட நண்பர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதையும் கண்டிருக்கிறேன்.

மெஸ் கமிட்டிதான் இருப்பதிலேயே சக்தி வாய்ந்தது. நிறைய பணம் நடமாடும் கமிட்டி. அது மட்டும் இல்லை. நல்ல சாப்பாடு கிடைக்கும். ஸ்பெஷல் சாப்பாடு. உணவகத்தில் பணி புரிவோர் பயந்து பயந்து கவனிப்பார்கள். வார்டன்களும் கொஞ்சம் கூடுதல் மரியாதை கொடுப்பார்கள். தேர்தல் நடைபெறாது என்றாலும் கிட்டத்தட்ட கல்லூரியில் இருக்கும் மாணவர் சங்கம் போன்று மரியாதை கொண்டது. முதல் ஆண்டு சேர்ந்த போதே இந்தக் கமிட்டிகளில் ஒரு முக்கியமான ஆளாகி விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். பின்னாளில் பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற கனவு வேறு இருந்ததால் அதற்கான பயிற்சிக்கும் அது பொருத்தமாக இருக்கும் என்று நம்பினேன். இரண்டாம் ஆண்டு வந்தபோதுதான் புரிந்தது - அரசியல்வாதி ஆவது போலவே அதுவும் அவ்வளவு எளிதாக எல்லோரும் நுழைந்து எதுவும் சாதித்து விட முடியாத கடினமான பகுதி என்று. என்னை விடப் பெரும் பெரும் வல்லவர்கள் எல்லாம் இருந்தார்கள். எனக்குக் கிடைத்தது - யோகா கமிட்டி. அதுவும் வைரவராஜ் சார் யோகா சொல்லிக் கொடுப்பார் என்பதால் அவருடன் நெருக்கமாக இருப்பவர்களே பெரும்பாலும் அந்தக் கமிட்டிக்கு வருவார்களாம். அந்தக் கணக்குப் படி அந்த ஆண்டு நான் வந்து விட்டேன். மூன்றாம் ஆண்டும் முயன்று பார்க்க விரும்பினேன்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மெஸ் கமிட்டி மீது கண். ஆனால் அந்த அளவுக்கு ஆதரவு இல்லை. "அதுக்கெல்லாம் ஓர் இது வேணும்ப்பா. அது உனக்கெல்லாம் இல்லை!" என்று சொல்லி விடுவார்கள். அதனால் யோகா கமிட்டியை விட இன்னும் கொஞ்சம் கூடுதலான அதிகாரம் உள்ள ஏதோவொரு கமிட்டி என்றால் நன்றாக இருக்கும் என்று பார்த்தால் இருந்தது - பத்திரிகைக் கமிட்டி.

பத்திரிகைக் கமிட்டி உறுப்பினர் என்றால் விடுதிக்குள் வரும் அனைத்துப் பத்திரிகைகளும் என் அறைக்கு முன்தான் கிடக்கும். அதுவல்ல பெரிது. ஒவ்வோர் அரையாண்டும் வெளிவரும் 'விடுதி ஒளி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கலாம். அதுதான் நமக்குப் பிடித்த வேலை ஆயிற்றே. அதனால் அதையே பிடித்துக் கொண்டேன். முதல் ஆண்டிலேயே கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு வாங்கி என் கவிதை ஆர்வம் கட்டவிழ்த்து விடப் பட்டது. முதல் ஆண்டிலேயே விடுதி ஒளி பத்திரிகையில் என் சிறுகதை ஒன்றும் வெளியானது. ஆக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு 'இந்த மாதிரிச் சோலிகளுக்கு இவன்தான்' என்று விடுதியில் ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டாயிற்று. இரண்டாம் ஆண்டில் கமிட்டியில் இல்லாமலேயே வைரவராஜ் சார் புண்ணியத்தில் ஆசிரியல் குழுவில் எனக்கு ஒரு சிறப்பிடம் கொடுத்தார்கள். அதனால் முன்னனுபவம் வேறு இருந்தது. அது மட்டுமில்லை. அந்தக் கமிட்டிக்கும் யோகாக் கமிட்டி போலவே போட்டி ஏதும் இராது. எனவே, மூன்றாம் ஆண்டில் முழு மனதாக அந்தக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டேன். இறுதியாண்டில் நானே முழு வேலையையும் செய்து, அதுவரை சாதாரண அச்சில் வந்ததை முதன் முறையாக ஆப்செட் முறையில் அச்சிட்டு வெளிக் கொண்டு வந்தேன். விடுதி ஒளி வேலை செய்த காலம் என் வாழ்வின் மிக முக்கியமான காலம். இரவு பகல் பாராது உழைப்பேன். அதில் அப்படியொரு கிறுக்கு. ஒரு விஷயத்தில் ஆர்வம் இருந்தால் சோம்பேறிகளே கூட எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்த அனுபவம் அதுதான். வெளிவந்தபோது எல்லோருமே பாராட்டினார்கள். இதை விடுத்து, மெஸ் கமிட்டிதான் என்று அடமெல்லாம் பிடித்திருந்தால், என்ன நடந்திருக்கும்? எதுவும் இல்லாமல் செய்து, அடித்து ஒரு மூலையில் உட்கார வைத்திருப்பார்கள்.

-தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...