வியாழன், ஏப்ரல் 28, 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் - என் தனிப்பட்ட நிலைப்பாடுகள்

எனக்கு விபரம் தெரிந்து அரசியல் கவனிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் இவர்கள் வென்றால் நல்லது அல்லது இவர்கள் தோற்றால் நல்லது என்று கணக்குகள் போட்டு வருகிறேன். எந்தக் காலத்திலும் இந்தக் கட்சிதான் எங்கள் கட்சி, அதனால் அவர்கள்தாம் வெல்ல வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததாக எனக்குத் தெரியவில்லை. மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை. நிலைப்பாடு எடுப்பதில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட பாணி இருக்கிறது; சில அடிப்படைக் காரணங்கள் – உள் நோக்கங்கள் இருக்கின்றன. அப்படி நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது ஊழலின்மைக்கு. அதற்கடுத்தபடியாக மக்களுக்கான செயல்பாடு. அதன்பின்தான் கொள்கை, கோட்பாடு, சாதி-மத-இன-மொழிச் சார்புகள் போன்ற மற்ற காரணிகள் எல்லாம். யாருக்கு எப்படியோ எனக்கு என்ன தோன்றியது என்பதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை. எனவே மொத்தக் கட்டுரையும் உங்களுக்கு உடன்பாடாக இருக்கப் போவதில்லை. கண்டிப்பாகப் பல முரண்பாடுகள் வரும். கவனம்!

ஊழல் செய்யாமல் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அது நல்லாட்சி ஆகி விடுமா? ஊழல் அரசியலில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று என்றெல்லாம் பேசுபவர்களின் நியாயம் எனக்குப் பெரும்பாலும் புரிபடுவதில்லை. அதற்குக் காரணம் இடதுசாரிப் பின்னணியில் பிறந்து வளர்ந்தது கூட இருக்கலாம். மற்ற விசயங்களில் எப்படியோ ஊழல் விசயத்தில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் இடதுசாரிகள்தாம் இன்றும் மேலானவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் எதிரிகளே ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் (இந்த இடத்தில் தா.பா. போல விதிவிலக்கான பெட்டிவாங்கிகளைக் கொண்டு வந்து நிறுத்தி உரையாடலைத் திசை திருப்பும் வேலைகள் செய்வோர் ஆட்டையில் இருந்து விலகிக் கொள்ளலாம்). காவலாளி வேலைக்கு வருபவர் களவாணியாக இருக்கக் கூடாது என்பது எவ்வளவு அடிப்படையோ அவ்வளவு அடிப்படையான ஒன்று, பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது. நான் இங்கே நேர்மை என்று சொல்வது, கொள்கை ரீதியாக என் கருத்துக்கு உடன்படாதவர்கள் – என் கருத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், அரசியல் நேர்மை அற்றவர்கள் என்பது போன்ற பொருளில் அல்ல. அதைவிட அடிப்படையான ஒன்று, மக்கள் பணத்தைத் திருடித் தின்கிற ஈனப் புத்தி – பிச்சைக்காரத்தனம் இல்லாமல் இருக்க வேண்டும். பிழைப்பு நடத்துவதற்காக அரசியலுக்கு வரக்கூடாது. அவ்வளவுதான். எல்லோரும் அப்படித்தானே இருக்கிறார்கள் எனும் போதுதான், இருப்பதில் பரவாயில்லாத திருடனின் பக்கம் நிற்க வேண்டியதாகி விடுகிறது.

அரசியல் என்பது முழுக்க முழுக்கச் சமரசங்களும் சந்தர்ப்பவாதங்களும் நிறைந்தது என்கிற அடிப்படையைப் புரிந்து வைத்துக் கொண்டுதான் மற்ற கோளாறுகளைப் பற்றிப் பேச வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு எல்லாம் செய்த ஆகப்பெரிய மொள்ளமாறியைப் பற்றிப் பேசும் போது, கீழே கிடந்த ஒத்த ரூபாயை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்ட இன்னொருத்தரைக் காட்டி, “இவன் மட்டும் யோக்கியமா?” என்று பேசுவது முறையான வாதமாகாது. “எல்லோரும் திருடர்கள், அதனால் நான் இருப்பதிலேயே பெரிய திருடனுக்குத்தான் போடுவேன்” என்று பேசுவதை விட, “இருக்கிற திருடர்களில் இவன் பரவாயில்லாத திருடனாக இருக்கிறான். அதனால் வேறு வழியில்லாமல் இம்முறை இவனுக்குப் போடுகிறேன். இப்படியே போனால் அடுத்தடுத்த முறைகளில் இவனை விட உருப்படியானவர்கள் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. அப்போது இவனைத் தூக்கித் தூர வீசிவிட்டு அவர்களில் ஒருவரை ஆதரிப்பேன்” என்பதே நேர்மையான வாதமாக இருக்க முடியும். அதன் அடிப்படையில் அமைந்தவையே என் விருப்பு-வெறுப்புகள் அனைத்தும். அப்படி ஒவ்வொரு தேர்தலிலும் என் விருப்பு-வெறுப்புகள் எப்படி இருந்தன – எதன் அடிப்படையில் அப்படி இருந்தன என்று பார்வையிடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எளிய மக்களின் மத்தியில் வளர்ந்ததால், என்னைச் சுற்றி இருந்த எல்லாச் சிறுவர்களுக்கும் எம்.ஜி.ஆர். என்றால் உயிர். சுவர்களில் கரிக்கட்டை வைத்துத் தன் பெயரை எழுதியவர்களை விட “எம்.ஜி.ஆர். வாழ்க!” என்று எழுதிய நண்பர்களே என் சுற்றத்தில் நிறைய இருந்தார்கள். இலவசச் சத்துணவு கொடுப்பவர் என்று கடவுளுக்கு நிகராகப் போற்றுவர். கிட்டத்தட்ட எல்லா வீட்டிலுமே எம்.ஜி.ஆர். படம் இருக்கும். கருணாநிதி என்றால் பெயரைக் கேட்டாலே நஞ்சாக இருக்கும் அவர்களுக்கு. “மக்காச்சோளம் போட்டவன்!” என்று சிறியவர்களும் பெரியோரும் கடுமையாகத் திட்டுவார்கள். வீட்டில் நிறைய இடதுசாரிகள். எம். கல்யாணசுந்தரம் முதலான இடதுசாரிகள்தாம் கருணாநிதிக்கு ஆப்படிப்பதற்காக எம்.ஜி.ஆரைத் தூண்டிவிட்டு, உடன் இருந்து கட்சி ஆரம்பிக்க வைத்து, கொடி முதற்கொண்டு டிசைன் போட்டுக் கொடுத்தவர்கள் என்று வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் அரசியல் நோக்க ஆரம்பித்த காலத்தில் வீட்டில் யாருக்கும் எம்.ஜி.ஆர். மீது பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. ‘அரசியற் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மாதிரியான எந்தக் கொள்கையும் இல்லாமல், தன் சினிமாக் கவர்ச்சியை மட்டும் வைத்துப் படிக்காத பாட்டாளி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வியாபாரி’ என்கிற மாதிரித்தான் சொல்லிக்கொடுத்தோ – சொல்லிக் கொடுக்காமலேயோ என் மனதில் பதிந்து விட்டது அந்தச் சிறிய வயதில். அந்தக் கருத்தில் இன்றுவரை பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. அதே வேளையில், தந்திரத்தால் வீழ்த்தப்பட்ட சம்பத்தையும் நெடுஞ்செழியனையும் மேலும் பலரையும் பார்த்துப் பரிதாபப்பட்டவர்கள் தம் கையில் எடுத்த கருவிதான் எம்.ஜி.ஆர். கொள்கை என்று சொல்லிக் கொண்டு ஒரு பெரும் அறிஞன் திருட்டு அரசியல் செய்வதை விட, கொள்கையே இல்லாமல் வெறும் கவர்ச்சியை வைத்துக் கொண்டு குறைவாகத் திருடுபவன் பரவாயில்லை, அந்த வகையில் எம்.ஜி.ஆர். பரவாயில்லை என்பதும் புரிந்துவிட்டது. இது பின்னர் வந்த புரிதல். ஆனால் அந்தச் சின்ன வயதில், எம்.ஜி.ஆர். முட்டாள்களின் தலைவர்; கருணாநிதிதான் அறிவாளிகளின் தலைவர்; முட்டாள்களே நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் எம்.ஜி.ஆர். வெல்வது இயல்பானதே என்று எண்ணிக் கொள்வேன். அரசியலின் மிகச் சில அடிப்படையான சில விசயங்களைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத அந்த வயதிலும் (வாக்களிக்கும் உரிமை இருந்தும் அஞ்சு வயசுப் பையன் நமக்கிருக்கிற அறிவு கூட இல்லாமல் இத்தனை பெரியவர்கள் இருக்கிறார்களே என்றும் திமிர் பட்டுக்கொள்வேன்), எம்.ஜி.ஆர். இருக்கும் வரை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகுதான் தமிழர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றுதான் எண்ணினேன். எம்.ஜி.ஆர். மறைவும் அதைத் தொடர்ந்து அரங்கேறிய நாடகங்களும் சிறுவனான என் அரசியல் அறிவை இன்னும் சிறிது (சிறிதுதான்) கூர்மைப் படுத்தின எனலாம்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜா அணி, ஜெ அணி என்று. ஜானகி அணி, ஜெயலலிதா அணி. தமிழகமெங்கும் மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆரின் மனைவி என்பதால் ஜானகி அம்மையாருக்கே ஆதரவு அதிகம் இருப்பதாகச் சொன்னார்கள். கட்சிக்காரர்களும் நிறையப் பேர் அவர் பக்கம் இருந்தார்கள். ஆனால் பின்னர் தேர்தலில் நடந்ததோ வேறு.

அப்போதுதான் அரசியற் கட்சியும் ஓர் உடையும் திண்மப் பொருள் என்கிற விவகாரம் முதன்முறையாகப் புரிய வருகிறது. இப்போதும் நினைவிருக்கிறது. இரவு ஏழரை-எட்டு மணி இருக்கும். வீட்டுக்கருகில் சிறுவர்கள் அசிங்கம் பண்ணும் ஓரிடத்தில் நண்பன் பாதுசா டவுசரை அவிழ்த்து அமரும் போது கேட்கிறான் - “கட்சி ஒடையிறதுன்னா என்னப்பா?”. அப்போதிருந்த எல்லா நண்பர்களின் தந்தையையும் போலவே அவனுடைய தந்தையாரும் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர். அவர்களுடைய வீட்டில் எல்லோருமே எம்.ஜி.ஆர். கட்சிதான் (பேசும்போது கூட, இப்படித்தான் கேட்டுக் கொள்வோம் – “நீ எம்.ஜி.ஆர். கட்சியா? கருணாநிதி கட்சியா??”; திமுக-அதிமுகவெல்லாம் கிடையாது; எம்மக்களை திமுக-அதிமுக போன்ற சொற்களைப் பயன்படுத்தி விபரமாகப் பேச வைக்க எவ்வளவு பாடு பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்; கடைசிவரை முடியாமல்தான் போயிற்று!). எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா அணியில் சேர்ந்தார்கள். ‘அப்பிடி வா வழிக்கு’ என்று அவனிடம் நம் அரசியல் ஞானத்தையெல்லாம் கொட்டிப் பரப்பினேன்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிந்தைய முதல் தேர்தல் 1989-இல் நடந்தது. மார்க்சியப் பொதுவுடைமை இயக்கம் திமுகவோடு நின்றது. எங்கள் வீட்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி. அக்கட்சி ஜெயலலிதா அணியோடு நின்றது. வீட்டில் ஜெயலலிதா அணிக்கே வேலை செய்தார்கள். நானும் ஆளோடு ஆளாகப் போய் என் வயதுக்கு ஏற்ற மாதிரியான எடுபிடி வேலைகள் பார்த்தேன். ஆனால் மனதுக்குள் அறிவாளிகளின் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் தனிமனிதக் கவர்ச்சியை வைத்துக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். மீதான வெறுப்பு, அதைவிடப் பல மடங்கு கூடுதலாகவே ஜெயலலிதா மேல் இருந்தது. எம்.ஜி.ஆருக்கு இருந்த அனுபவமும் கூட இவருக்கு அரசியலில் இல்லை என்கிற காரணம் வேறு. திருடர்கள் அதிகம் இராத (அப்போது) காங்கிரசும் நிறைய வென்றால் நல்லது என்று ஆசைப்பட்டேன். இரண்டுமே நடந்தது. "நாஞ் செத்தாத்தாண்டா ஒனக்கு இனி நாற்காலி" என்ற எம்.ஜி.ஆர். மறைந்து, அவருடைய கட்சி இரண்டாக உடைந்து தனித்தனியாகப் போட்டியிட்டதால், திமுக எளிதாக வென்றது. அப்போது நமக்குத் தலீவர் எம்மாம் பெரிய அப்பாட்டக்கர் என்று தெரியாததால் அவர் மீது ஒரு கரிசனம். அது எவ்ளோ பெரிய தவறுன்னு புரியவே நீண்ட காலம் ஆச்சு. மூப்பனார் காலத்துக் காங்கிரஸ் கட்சியிலும் நாகரீகமான தலைவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்களையும் நிறையப் பேரைப் பிடிக்கும். ஆசைப்பட்ட படியே காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் தனியாக வென்று காட்டியது அவர்கள் பலத்தை. அத்தோடு முடிந்தது அவர்களின் வாழ்வு. எல்லோரும் பெரிதாக எதிர்பார்த்த ஜானகி அணி, சேரன்மாதேவியில் பி.எச்.பாண்டியன் நீங்கலாக, ஜானகியம்மாள் உட்பட எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆரின் தொகுதியான ஆண்டிபட்டியில் அவரே மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். பெரிதாக எதிர்பாராத ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்று அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். பின்னர் அலசியதில் புரிப்பட்ட அதற்கான முக்கியக் காரணம், அவரிடம் வந்தவர்களில் நிறையப் பேர் களப்பணி நன்றாகச் செய்தார்கள் – பணம் செலவழித்தார்கள் என்பது. அப்போதெல்லாம் தேர்தல் முடிவுகள் வானொலியில் கேட்போம். வாக்கு எண்ணிக்கை ஓரிரு நாட்கள் ஓடும். வீடும் கடைகளும் திருவிழா போல இருக்கும். ஆசைப்பட்டபடியே திமுக ஆட்சி அமைந்தது மட்டுமில்லை. செயல்பாடும் ஓரளவு நன்றாகவே இருந்தது. அமைச்சர்கள் நிறையப்பேர் விபரமானவர்கள் போல இருந்தார்கள். ஓரளவு நன்றாகவே நடைபெற்ற ஆட்சியைப் பின்னணியில் பல வேலைகள் செய்து விடுதலைப் புலிகள் ஆதரவு ஆட்சி என்று சொல்லிக் கலைத்துப் போட்டார்கள்.

ஒழுங்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஓர் ஆட்சியைக் கலைத்து விட்டார்களே என்ற கரிசனத்தால், 1991-இல் கலைக்கப்பட்ட திமுக ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவும் ஜானகியும் சந்தித்து, ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று ஒத்துக்கொண்டு கட்சியை ஒன்றாக இணைத்தார்கள். இதில் அதிமுக மீண்டும் பலம் பெற்றது. ஜெ அணியும் ஜா அணியும் பெற்ற வாக்குகளைச் சேர்த்தாலே வெல்லும் பலம் கிட்டிய புதிய அதிமுக, காங்கிரஸ் கட்சியோடும் கூட்டணி போட்டது. இது திமுகவின் சோலியை முடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராஜீவ் காந்தி வேறு தமிழகத்திலேயே கொல்லப்பட்டார். அதை அடுத்து உருவான அனுதாப அலையில், விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பு திமுக மேல் வர, கருணாநிதிதான் அத்தனைக்கும் காரணம் என்பது போலப் பேசி, திமுகவுக்கு எம்.ஜி.ஆர். காலத்திலேயே கிட்டியிராத மாதிரியான வரலாறு காணாத தோல்வியைக் கொடுத்தார்கள். சரியான நேரத்தில் காங்கிரஸ் கட்சியைத் தொற்றிக் கொண்டதால் அதிமுக வரலாறு காணாத வெற்றி கண்டது. எது நடந்தால், தமிழர்கள் ஐந்தறிவு படைத்த மிருகங்களினும் கீழானவர்கள் ஆகிவிடுவார்கள் என்று எண்ணினேனோ அதுவே நடந்தது. தமிழக அரசியலின் அதலபாதாள வீழ்ச்சி என்று அதைத்தான் எண்ணினேன். எத்தனையோ பெரும் பெரும் தலைவர்கள் இருந்த மண்ணில், எந்தத் தகுதியும் இல்லாமல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அதன்பின் அரசியல் மீதே ஒரு மிக மிக இழிவான பார்வை வந்து விட்டது. வென்று சிறிது காலத்திலேயே காங்கிரஸ் கட்சிதான் தன்னால் பயனடைந்தது என்கிற மாதிரிப் பேசி அவமானப் படுத்தி விரட்டிவிட்டார். அதன் பின்பு ஐந்தாண்டு காலம் இந்திய வரலாற்றிலேயே கண்டிராத மாதிரியான காட்டாட்சி (இதை விட மோசமான சொல் ஒன்று சிக்கும் வரை இதையே வைத்துக் கொள்வோம்) நடைபெற்றது. சோ இராமசாமிக்கே கோபம் வருகிற அளவுக்குன்னாப்  பாத்துக்குங்களேன்! அந்த ஆட்சியைப் பார்க்காததால் இன்றைய இளைய தலைமுறைக்கு ஜெயலலிதாவின் முழுரூபமும் தெரியவில்லை. அதைப் பார்த்த – அதனால் பாதிக்கப்பட்ட பெருசுகளே எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு அறிவில்லாமல் பேசுதுகளே, சின்னப் பசங்கள என்னத்தச் சொல்ல!

மொத்தத் தமிழகமும் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பி வெறி கொண்டிருந்தது. அதிமுக கட்சிக்காரர்களே நிறையப் பேர் தன்னை அப்படி அடையாளப் படுத்திக் கொள்ள வெட்கப்பட்டார்கள். தமிழகக் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் வெடித்தது. மூப்பனார் உட்படக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவர்கள் அதிமுகவோடு மீண்டும் கூட்டணி வைக்கக் கூடாது என்றார்கள். 1996-இல் “எங்களுக்குக் குழி போயஸ் தோட்டத்துலதான் வெட்டியிருக்கு”-ன்னு டெல்லிக் காங்கிரஸ் பிடிவாதமான முடிவெடுத்தது. தமிழிசையின் தந்தை குமரி அனந்தனும் அவர் மாதிரி ஒன்றுக்கும் ஆகாத நாலஞ்சு பேரும் தவிர்த்து, மொத்தக் காங்கிரஸ் கட்சியும் மூப்பனார் பின்னால் வந்தது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி பிறந்தது. சிதம்பரமும் மூப்பனார் பின்னால் வந்தார். ஜெயலலிதாவைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சிதம்பரமும் ஒருவர். அதற்காகவே அவரைப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. இன்றுவரை அவர் அதில் உறுதியாக இருக்கிறார். “உலக அரசியலிலேயே இதைவிட உத்தமமான தலைவியை நான் பார்த்ததில்லை” என்று இன்று ஜெயலலிதாவைப் பார்த்துச் சொல்லும் சோ இராமசாமிதான் திமுகவையும் தமாகாவையும் இணைத்து, ரஜினிகாந்தை அழைத்து வந்து ஆதரவு கொடுக்க வைத்து, மாபெரும் அரசியல் மாற்றத்துக்கான வித்தைப் போட்டார். ரஜினிகாந்த்தும் ஜெயலலிதா கட்சியின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர். அதற்குச் சில ஆண்டுகள் முன்பே திமுக உடைந்து, மதிமுக மலர்ந்திருந்தது. திமுக பொதுக்குழுவிலும் பாதிக்கு மேல் கலந்து கொண்டார்கள். வைகோவின் ‘போட்டி திமுக’ பொதுக்குழுவிலும் பாதிக்கு மேல் கலந்து கொண்டார்கள். இறுதியில் திறமையான ஆட்டக்காரர் வென்றார். மதில்மேல் பூனையாக இருந்தவர்கள் எல்லாம் பொத்துப் பொத்தென்று போய் திமுக பக்கமே மீண்டும் விழுந்தார்கள். அதிமுகவுக்கு எதிரான வெறுப்பை இரண்டாகப் பிரித்து விடக் கூடாது என்று வாக்களித்த மக்கள் மதிமுகவை மண்ணோடு மண்ணாக மட்க வைத்து விட்டார்கள். இப்போதும் கருணாநிதி மீது வெறுப்பு வந்திருக்கவில்லை; வைகோ மீதும் பெரிதாகப் பிடிப்பு ஏற்பட்டிருக்கவில்லை (பிற்காலத்தில் கருணாநிதியை விட வைகோ எவ்வளவோ பரவாயில்லை என்று மனம் மாறிவிட்டது வேறு கதை). அதனால் திமுக-தமாகா அணி வென்று காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எல்லோரையும் போலவே நானும் ஆசைப்பட்டேன். அதுவே நடக்கவும் செய்தது. சென்ற முறை வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா இம்முறை வரலாறு காணாத தோல்வியைக் கண்டார். அவர் உட்பட அத்தனை பேரும் படுதோல்வி கண்டார்கள். தமிழகம் முழுக்க மொத்த அதிமுகவும் தோற்றாலும் பர்கூரில் அவர் தோற்க மாட்டார் என்று எல்லோரும் சொன்னார்கள். தமிழகம் முழுக்க ஆட்டம் போட்டாலும், அந்த அளவுக்குத் தன் சொந்தத் தொகுதிக்குச் செய்திருக்கிறார் என்றார்கள். பர்கூர் மக்களோ தமிழகத்தின் பக்கம் நின்று அவரையும் தோற்கடித்தார்கள். மொத்தத் தமிழகமும் திரும்பவும் மூச்சு விட ஆரம்பித்தது. அத்தோடு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எல்லோரும் மங்களம் பாடினார்கள். காலம் அதையும் கேலி செய்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று அடுத்துப் பார்ப்போம்.

இம்முறையும் திமுகவின் ஆட்சி ஓரளவு நன்றாகவே இருந்தது. தென்தமிழகத்தில் ஒரு பெரும் குறையாக மக்கள் பேசிக்கொண்டது – “எப்போதும் கருணாநிதி ஆட்சி வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விடும்; இப்போதும் அப்படியே; எங்கு பார்த்தாலும் சாதிக் கலவரங்கள்; ஆனால் இந்த ஆள் எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கிறார்” என்பது. சொல்கிற மாதிரியே காவற்துறை செயலிழந்து கிடந்தது. என் பகுதியில் குறிப்பாக, தேவமாருக்குக் கருணாநிதி எதிரானவர்; ஜெயலலிதாதான் அவர்கள் என்ன செய்தாலும் உடன் நிற்பவர் என்கிற கருத்து உருவாகியிருந்தது. பின்னணியில் பல வேலைகள் செய்து, கள்ளர்-மறவர்-அகமுடையோர் என்று பிரிந்திருந்த முக்குலத்தோர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அந்தக் குடையை சசிகலா வழியாக ஜெயலலிதா கையில் கொடுத்தார் சசிகலாவின் கணவர் நடராஜன். இதனால் ஒரு கூட்டம் மனதுக்குள் சாதியை வைத்துக் கொண்டு மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சிக்காக உழைக்க ஆரம்பித்தது. இது போலவே, கவுண்டர்-வன்னியர் பகுதிகளிலும் ஜெயலலிதா ஆதரவு மீண்டும் சிறிது சிறிதாக வலுத்தது. தனிப்பட்ட முறையில் மீண்டும் திமுகதான் வெல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த போதும், கொஞ்சம் சர்க்காரியா கமிஷன் முதலான பழைய வரலாறெல்லாம் படித்து, தலீவர் எம்மாம்பெரிய அப்பாட்டக்கர் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டேன். அதிலும் டெல்லியில் அவர் ஆடிய பல சித்து விளையாட்டுகளைப் பார்த்த போது கொஞ்சம் அருவருப்பே வந்து விட்டது (முக்கியமாக மூப்பனார் பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோது கூட இருந்தே கழுத்தறுத்த சம்பவம்). அதனால் பழைய அளவுக்கு அவர் மீது ஈடுபாடு இல்லை இப்போது. ஆனால் இருப்பதில் அவர்தான் சரியான ஆள் என்கிற மாதிரி எண்ணம். தமாகாவும் எதிர்க்கட்சியாகி அமர்ந்து, பெரும்பாலும் நட்புணர்வோடு நடந்து கொண்டது. சிற்சில தீவிர காங்கிரஸ்காரர்கள் மட்டும் முறையான எதிர்க்கட்சியாகச் செயல்பட விரும்பி, அவ்வப்போது சங்கடத்தைக் கொடுத்தனர். ஆனாலும் எனக்கு விபரம் தெரிந்து அரசியல் நோக்க ஆரம்பித்த பின்பு தமிழக அரசியலின் பொற்காலம் என்றால் அது 1996-98 காலந்தான். தமிழகத்திலும் ஓரளவு நல்லாட்சி. நாகரீகமான எதிர்க்கட்சி. மத்தியிலும் நல்ல செல்வாக்கு என்று இருந்தது. அது அப்படியே தொடர்ந்திருந்தால் இன்று தமிழகம் அரசியல் முதிர்ச்சியில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கும். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். என்னுடைய திண்ணமான எண்ணம் – அந்த ஒருநாள் கருணாநிதி கருணாநிதியாக இராமல் பெருந்தன்மையோடு மூப்பனாரைப் பிரதமர் ஆக விட்டிருந்தால் எல்லாம் நல்லபடி ஆகியிருக்கும். எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்க்கும் அந்தப் பிறவிப் புத்தி தமாகாவை அன்றோடு அழித்தது தமிழகத்தில். ஒரு நல்ல பங்காளியை நாசம் பண்ணியதால், அத்தோடு பலமான கூட்டணியையும் அதன் முக்கிய பயனாளியான திமுகவையும் அது பலவீனப்படுத்தியது.

2001 தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி உடைந்து பலவீனமடைந்து கிடந்த நேரத்தில், சிறந்த ஆலோசகர்களின் உதவியோடு ஜெயலலிதா மெகா கூட்டணி ஒன்றை உருவாக்கினார். அதிமுக எளிதாக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி மீது இருந்த மரியாதை எல்லாம் மண்ணாய்ப் போய்விட்ட போதும், முந்தைய திமுக ஆட்சி அதற்கு முந்தைய அதிமுகவின் ஆட்சியை விடப் பலமடங்கு நல்லாட்சி என்பதால் மீண்டும் திமுகவே வரவேண்டும் என்று எண்ணினேன். அது மட்டுமில்லை, அவ்வளவு குற்றங்களையும் கொடூரங்களையும் செய்து தண்டிக்கப்பட்ட அதிமுகவை அப்படியே அழித்து ஒழித்து விடுவதுதான் தமிழகத்துக்கு நல்லது என்றும் நம்பினேன். அவ்வளவு பெரிய அநியாயம் செய்த ஒருவரை ஐந்தே ஆண்டுகளுக்குள் மறந்து மன்னித்து விடுவது எவ்வளவு பெரிய குற்றம்? அதையும் செய்தார்கள் நம் மக்கள். மீண்டும் சொல்லொனாத் துன்பமுற்றேன். இப்போது கல்லூரிப் படிப்பு முடித்து பணி நிமித்தமாக பெங்களூர் வந்து விட்டேன். இங்கே இருப்பவர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே மிகவும் கேவலமாக இருந்தது. பிகாரி நண்பன் ஒருவன், “தமிழ்நாடு பிகாரைப் போல ஆகிவிட்டதே!” என்றான். ‘இனிமேல் தமிழ் நாட்டுப் பக்கமே போகக் கூடாது. என்ன மாதிரியான ஆட்டுமந்தைக் கூட்டங்கள்!’ என்று வெறுப்பாயிற்று. ஆனால் வியப்படையும் விதத்தில் அதிமுகவின் இந்த ஆட்சி ஊழல் இல்லாமல் நல்ல முறையில் இருந்தது. இரண்டாம் முறை கிடைத்திருக்கும் வாய்ப்பையும் நாசம் செய்து கொள்ளும் அளவுக்கா விபரம் இல்லாதவராக இருக்க முடியும்! ஆனால் ஆணவம், அடிமைத்தனம், குண்டக்க மண்டக்க ஏதாவது செய்தல், நாலு நாளைக்கு ஒருமுறை அமைச்சர்களை மாற்றுதல் போன்ற அடிப்படையான பல பண்புகளில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்த ஐந்தாண்டுகளில் தலீவர் மீதான அருவருப்பு கூடிக்கொண்டே வந்தது. அவர் டெல்லியில் செய்த பேரங்களும் முக்கியமான மக்கள் பிரச்சனைகள் பற்றி அவர் பேட்டியளிக்கிற விதமும் அவருடைய அடிவருடிகளுக்குச் சாணக்கியரை நினைவூட்டின. நமக்கோ மனிதருக்குள் இருக்கும் சின்னத்தனங்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டின. அதே வேளையில் சட்டம்-ஒழுங்குக்கு ஜெயலலிதா கொடுக்கும் முக்கியத்துவம், சசிகலா குடும்பம் தவிர்த்து கட்சிக்காரர்கள் எவரையும் ஆட்டம் போடவிடாமல் பார்த்துக் கொண்டது, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடிக்க விரும்பாத பண்புகள் போன்றவை மக்களிடம் அவரை மேலும் பிரபலப்படுத்தின. இந்த ஐந்தாண்டுகளில்தாம் அவர் எம்.ஜி.ஆரைப் பிடிக்காத பலருக்கும் கூடப் பிடித்த ஒருவரானார். நிர்வாகமே தெரியாதவர் என்கிற நிலை மாறி, உடன் இருப்பவை அனைத்தும் குப்பைகளாக இருந்தாலும் தனியொருவராக அவற்றை எல்லாம் ஈடுகட்டும் விதமாக ஆட்சி செய்து நல்ல நிர்வாகி என்றும் பெயர் எடுத்தார். அது மட்டுமில்லை. உடன் இருப்பவை அனைத்தும் மக்குகள் என்பதால் அதிகாரிகள் திறம்படச் செயல்பட முடிந்தது. அதுவே ஒரு பலமானது. எவ்வளவுதான் இருந்தாலும், அவர் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவரல்ல; தனக்காகத்தான் அரசியல், மக்கள், நாடு எல்லாம் என்கிற மனப்பாங்கு உடையவராகவே இருந்தார். ஆனாலும் இம்முறை அவர் ஆட்சி புரிந்த விதம் பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருந்தது. அதனால் எனக்கும் ஓரளவு அதிமுக மீது பழைய வெறுப்போடு கலந்த புதிய நல்லெண்ணமும் வந்து விட்டது.

அதனால் அடுத்து வந்த 2006 தேர்தலில் மீண்டும் எப்படியாவது அதிமுகவே வந்து விட்டால் நல்லது என்று எண்ணினேன். ஒரு காலத்தில் தமிழக அரசியலின் தரத்தையே தரைமட்டத்துக்கும் கீழே கொண்டு சென்று விட்டாரே என்று எண்ணிய ஜெயலலிதாவை இன்று பிடிக்க ஆரம்பித்ததின் பின்னணியில் அவருடைய நற்பண்புகளை விட அவருக்கு எதிராக இருக்கும் தலீவரின் இழிபண்புகளே முக்கியக் காரணம் என்பதை உணர்வீர்களாக! எல்லாத்திலும் ஆதாயக் கணக்குப் பார்க்கும் கருணாநிதி மீது மிதமிஞ்சிய வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்தத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின் போது கூடவே இருந்த வைகோவைக் கழுத்தறுத்தார்கள். அந்தக் கோபத்தில் அவர் போய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ள மரியாதையையும் இழந்தார். ஆனால் அவருக்கும் வேறு வழியில்லை. கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் இப்படி எதாவது செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை. கருணாநிதியைக் கடவுளாகப் பார்க்கும் அரசு ஊழியர்கள், ஜெயலலிதாவைத் தமக்கு எமனாகப் பார்த்தார்கள். காரணம், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டங்களை முரட்டுத் தனமாக நசுக்கினார் ஜெயலலிதா. சிறுபான்மையினருக்கு எதிராகச் சட்டங்களை இயற்றி அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. பாஜகவுடன் கூட்டணி எல்லாம் வைத்துக் கொண்டவர் என்றாலும் தமக்கு இந்த அளவு தீங்கு விளைவிக்க மாட்டார் கருணாநிதி என்று சிறுபான்மையினர் நம்பினர். தாழ்த்தப்பட்ட மக்கள் ஜெயலலிதா எந்தக் காலத்திலும் தமக்கு முற்றிலும் எதிரானவர் என்பதைப் புரிந்து கொண்டனர். இந்த அரசு ஊழியர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் கூட்டணி, இந்தத் தேர்தலில் அதிமுகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக உழைத்தது. இவை எல்லாவற்றையும் விட, ‘எல்லோருக்கும் வண்ணத் தொலைகாட்சி’ என்ற ஓர் ஒற்றை அறிவிப்பில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக நான் உணர்ந்தேன். எனக்குச் சற்றும் விருப்பமில்லாத திமுகவின் வெற்றி தவிர்க்க முடியாததாக நடந்து தீர்ந்தது. மீண்டும் ஒரு பெரும் மனமுடைவு!

அதன் பின்பு திமுக செய்த ஆட்சி, 1991-96 காலத்தில் அதிமுக ஆட்சியை விடவும் கொடூரமானதோ என்று என்னும் அளவுக்குப் பயங்கரமானதாக இருந்தது. கருணாநிதியின் மொத்தக் குடும்பமும் கட்சிக்குள் வந்து கோலோச்சியது. இன்று பயந்தாங்கொள்ளி போல ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் அழகிரியை, அவருடைய அல்லக்கைகள் அஞ்சாநெஞ்சர் என்று சொல்லிக் கொண்டாடினார்கள். எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத அவரை மத்திய அமைச்சர் ஆக்கினார் கருணாநிதி. திருச்சி சிவாவின் வாய்ப்பைப் பறித்து மகள் கனிமொழியை மேலவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பினார். ஒவ்வொரு அமைச்சரும் ஆட்டமான ஆட்டம் போட்டார்கள். டெல்லியில் அலைக்கற்றை ஊழல் முதல் மாநிலத்தில் எண்ணிலடங்கா ஊழல்கள். ஈழப் பிரச்சனையின் போது மிக இழிவான நாடகங்கள் நடத்தினார். ஒரு காலத்தில் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைத்த அவர்தான் இப்போது விடாப்பிடியாக அதே காங்கிரசைத் தொற்றிக் கொண்டு விட மறுத்தார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்தும் மிரட்டியும் வாக்குகளை வாங்கினார்கள். இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட முடியாதா என்று கொதித்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். இம்முறை திமுகக்காரர்கள் தம்மை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளக் கூச்சப் பட்டார்கள். அந்த அளவுக்கு ஆட்டம். அதிகாரப் பயன்பாட்டில் முறைகேடுகள். அப்போதும் சிலர் தலீவருக்கு வயதாகி விட்டதால்தான் கட்டுப்படுத்த முடியவில்லை; இல்லையேல் அவர் நேர்மையின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் திரிந்தார்கள். அவர்கள்தாம் இந்தத் தேர்தலில் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க உழைக்கப் போகிறவர்கள்.

அதனால் வேறு வழியில்லாமல், மீண்டும் ஜெயலலிதா வென்று வந்து விட்டால் நல்லது என்று எண்ணத் தொடங்கினோம். ஐந்தாண்டு காலம் பதவி இல்லாமல் சீரழிந்து கிடந்தும் கூட, அதற்கான வாய்ப்புக் கூடி வரும் வேளையில் அதைக் கெடுத்துக் கொள்ளும் விதமாக ஏதேதோ செய்து சொதப்பினார் ஜெயலலிதா. என்ன காரணம் என்றே யாராலும் புரிந்து கொள்ள முடியாத மாதிரி அதுவரை உடனேயே கிடந்து கத்திக் கொண்டிருந்த வைகோவைக் கழுத்தறுத்து வெளியனுப்பினார். அந்த நிமிடம் வைகோ கோபித்துக் கொண்டு திமுக போயிருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. மூன்றாம் அணி அமைக்கும் வாய்ப்பு அருமையாகக் கூடி வந்தது. விஜயகாந்தே வைகோவின் பேச்சைக் கேட்கத் தயாராக இருந்தார். ஆனால் வைகோவோ தேர்தலையே புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்து விட்டதாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். நமக்கோ மண்டை காய்ந்தது. அவமானப் படுத்துவோரைக் கூட வீழ்த்த விரும்பாத ஒரு மனிதன் வாழவே தகுதியில்லாதவன் அல்லவா என்றெல்லாம் பேசினோம். ஆனால், மூன்றாம் அணி அமைத்திருந்தால் ஜெயலலிதாவுக்கு அத்தோடு முடிவு கட்டியிருக்கலாம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அவர்களோ தமிழ்நாட்டுக்கே அத்தோடு முடிவு கட்டியிருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும் அதற்கு வாய்ப்புக் கொடுத்து விடக் கூடாது என்று எண்ணி அவர் எடுத்த முடிவு சரிதான் என்று அதற்குப் பின்னால் புரிந்தது. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துப் பெரும் வெற்றி கண்டார்கள். திமுக நாம் ஆசைப்பட்டபடி மீண்டுமொரு வரலாறு காணாத தோல்வி கண்டது. எதிர்க்கட்சி வாய்ப்பைக் கூட நேற்றுப் பிறந்த விஜயகாந்த் கட்சியிடம் இழந்தது. அதிமுக இன்னும் கொஞ்சம் தோற்று, விஜயகாந்தை நம்பிக் கூட்டணி ஆட்சி அமைக்கிற மாதிரி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய ஆணவத்துக்குக் கடிவாளம் போட ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால் இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்றே பட்டது. திமுகவுக்கும் அத்தகைய அடி தேவைப்பட்டது.


அதன் பின்பு நடந்ததை நாம் அறிவோம். விஜயகாந்தோடும் மோதல். கொஞ்ச காலத்திலேயே கூட்டணி உடைந்தது. பெங்களூரில் இழுத்தடிக்கப்பட்ட பழைய வழக்கு, முடிவுக்கு வந்து தண்டனையில் முடிந்தது. வழக்கிலேயே கவனம் முழுக்க இருந்ததால் ஆட்சியில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. இடையில் தலைமைக் கூன்பாண்டியர் பன்னீர் செல்வம் மீண்டும் முதலமைச்சர் ஆனார். சென்ற அதிமுக ஆட்சியில் இருந்த அளவுக்குக் கூட செயல்பாடுகள் இல்லை. சென்ற முறை போல ஊழல் குறைவான ஆட்சியும் அல்ல இது. சென்ற திமுக ஆட்சியிடம் இருந்து பல தவறான பாடங்களைப் படித்துக் கொண்டு (நிரந்தர விசுவாசிகளைச் சம்பாதிக்கவும் அடுத்து வரும் தேர்தலில் தாராளமாகச் செலவழிக்கவும், அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் கொள்ளை அடிக்க அனுமதிக்க வேண்டும் போன்றவை), செயல்பாடுகளே இல்லாத – ஊழல் மலிந்த ஆட்சி ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. அதற்குத் தண்டனையாக அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இம்முறை. ஆனால் அதற்காக அவ்விடத்தில் மீண்டும் திமுகவை அமர விடலாமா என்கிற கேள்வி பதில் சொல்ல முடியாததாக பயமுறுத்தி நிற்கிறது. நல்ல வேளையாக, இம்முறை மூன்றாம்-நான்காம்-ஐந்தாம்-ஆறாம் ஆப்சன்கள் எல்லாம் நமக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கான வெற்றி வாய்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தத் தேர்தலில் எனக்கிருக்கும் ஒரு பேராசை இதுதான் – இவ்விரு கட்சிகளில் ஒன்று வென்றாலும் பரவாயில்லை; மற்றொன்று மூன்றாம் இடத்துக்குப் போக வேண்டும்; அத்தோடு அழிய வேண்டும். அதுவும் நடக்கப் போவதில்லை போலத்தான் தெரிகிறது. அடுத்ததாக, குறைந்த பட்சம், எவர் வென்றாலும் அவர்களுக்குக் கடிவாளம் போட, உடன் இருந்தே தினம் தினம் சித்திரவதை செய்து கொல்ல, கூட்டணி ஆட்சி அமைகிற விதத்தில் தொங்கு மன்றம் வர வேண்டும். சித்திரவதை செய்து கொல்வதில் மதிமுக, தமிழக இடதுசாரிகள், விசி, தமாகா, பாஜக போன்றவர்கள் வல்லவர்கள் போல் இல்லை. அது விஜயகாந்த் மற்றும் ராமதாசுக்கு எளிதில் கைவரக்கூடியது. யார் மூலமோ அது நடந்தால் நல்லது. பார்க்கலாம், என்னதான் நடக்கிறதென்று!

விசாரணை

சமீபத்தில் வந்த திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்டது ‘விசாரணை’. படத்தின் முதற் சில விளம்பரங்களைப் பார்த்த போதே அது ஒரு செமப் படமாக இருக்கும் என்று தோன்றியது. அதுவும் வெற்றிமாறனின் படம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. இதுவரை அவர் எடுத்த படங்கள் அனைத்துமே அவருடைய பெயருக்கென்று சில எதிர்பார்ப்புகளை உருவாகியிருக்கின்றன. இந்தப் படமும் அதை உறுதிப் படுத்தியிருக்கிறது. கச்சிதமான நடிகர் தேர்வும், அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வெளிக் கொணரும் இயல்பான காட்சியமைப்புகளுமே வெற்றிமாறனின் வெற்றிச் சூத்திரங்கள்.

அவருடைய முதற்படமான ‘பொல்லாதவன்’ பார்க்கவில்லை. அடுத்து வந்த ‘ஆடுகளம்’ பார்த்தேன். மிகவும் பிடித்தது. தேசிய விருது பெற்றதற்காக மட்டமல்ல. கோழிச்சண்டை என் சிறு வயதில் நான் கண்ட அனுபவம். அதுவும் தென் தமிழகத்துப் பின்னணியிலேயே காட்டியிருந்தது நம்மை மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றதால் மிகவும் சொக்க வைத்து விட்டது. அதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறனுக்குச் சற்றும் தொடர்பில்லாத களம் அது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த பாரதிராஜாவும் இளையராஜாவும் தம் இயல்பான படைப்புகள் மூலம் கிராமத்து மக்களின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுவதோ – இசையாக வடித்துக் கொடுப்பதோ பெரிதில்லை. பிறப்பில் இருந்து பெருநகரங்களில் வாழ்ந்த வெற்றிமாறனும் ரகுமானும் அப்பணிகளைச் செய்வதை பெரும் சிறப்பு. சில நேரங்களில் அவர்களை விடவும் நேர்த்தியாகச் செய்து விடுதல் நம்மை அசத்தித்தான் விடுகிறது.

பொல்லாதவனுக்கும் ஆடுகளத்துக்கும் எப்படி எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்ததோ அது போலவே அவருடைய அடுத்த படம் முற்றிலும் மாறுபட்ட பின்னணியில் வரும் என்று எதிர்பார்த்தபடியே ‘விசாரணை’ வந்திருக்கிறது. பாலா, சங்கர் போன்றவர்கள் தலைசிறந்த இயக்குனர்களாகக் கொண்டாடப்படும் போதும் அவர்களுக்கென்று எளிதில் கணிக்க முடிகிற பாணிகள் உருவாகியிருப்பது அவர்களின் உயரத்தைச் சற்று குறைத்து விடுவது போல ஆகி விடாமல், வெற்றி மாறன் என்றால் அவருடைய களம் இதுவாகத்தான் இருக்கும் யாரும் கணிக்க முடியாத மாதிரி வளர்ந்து வருகிறார்.

முந்தைய இரண்டு படங்களிலும் தனுஷை நடிக்க வைத்தவர், இந்தப் படத்தில் அவரைத் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார். இடையில் இருவரும் கூட்டுச் சேர்ந்து ‘காக்கா முட்டை’ என்றொரு தலைசிறந்த படத்தைத் தயாரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக அவருடைய திரைப்பட வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க தனுஷின் துணையோடுதான் அமைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ‘ஆடுகளம்’ தனுஷுக்கு ஒரு பெரும் திருப்புமுனை. சகோதரர் செல்வராகவனைப் போல இன்னொரு சகோதரராக வெற்றிமாறன் கிடைத்தது அவருக்கும் பெரும் பலந்தான். இந்தப் படத்தில் ஏன் தனுஷ் நடிக்கவில்லை என்கிற கேள்வி யாருக்கும் வரவில்லை என்றே நினைக்கிறேன். வந்திருந்தாலும் அது நியாயமானதே. அவருக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார் என்பது ஒருபுறம். அவ்வளவு ‘பெரிய்ய’ நாயகன் இந்தக் கதைக்கு வேண்டியதில்லை என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். இப்போதைய போக்கைக் கவனித்தால் இந்தக் கூட்டணி தமிழ்த் திரையுலகுக்கு இன்னும் நிறையக் கொடுக்கப் போகிறது என்பதும் தெரிகிறது.

திரைப்படம் அதிகம் பார்ப்பதில்லை என்பதால் பார்க்கிற படங்கள் நல்ல படங்களாக இருக்க வேண்டும் என்று மிகவும் கவனமாகவே இருப்பேன். அதற்கு இப்போது ஓர் எளிய வழி இருக்கிறது. IMDB-இல் போய், திரைப்படங்களின் மதிப்பெண்களைப் பார்த்து பட்டியலின் மேல் உள்ள படங்களைத் ‘தெரிந்து’ – ‘தெரிந்து’ கொள்ளலாம். ஒரேயொரு சிக்கல் – அது உண்மையிலேயே முறையான மதிப்பெண்களா என்பது சந்தேகந்தான். புதிய படங்களுக்குச் சற்று கூடுதலாகவே மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டிருப்பது போற் தெரிகிறது. சில விதிவிலக்குகள் தவிர்த்துப் பழைய படங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது போலவும் தெரிகிறது. ஆங்கிலத்திலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றாலும் தமிழில் இது மிகவும் அதிகம்.

ஆங்கிலத்தில் காலங்காலமாக முதலில் இருந்த ‘GODFATHER’ படத்தைத் திடீரென்று காளான் போல முளைத்த ‘SHAWSHANK REDEMPTION’ முந்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கொதித்துப் போனார்கள் அவர்கள். அதற்குப் பின் ஒரு கதை இருப்பதாகவும் சொல்கிறார்கள். அறிவை வளர்த்துக் கொள்வதை விட மதிப்பெண்கள் வாங்குவதில் கவனம் செலுத்தும் குழந்தைகள் போல, மக்களுக்கு நல்லது செய்து பெயர் வாங்குவதை விட நேரடியாகக் குறுக்கு வழிகளில் பெயரை மட்டும் வாங்குகிற வழிகள் அறிந்து அதற்கேற்றபடி விளம்பர உத்திகளைக் கையாளும் அரசியல்வாதிகளைப் போல, திரைத்துறையிலும் அந்தப் பழக்கம் வந்து விட்டது. காலம் அப்படி! யாரையும் சொல்ல முடியாது.

வெள்ளைக்காரர்கள் திரைப்படங்களையும் அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். திரைப்படங்கள் மீது அவர்களைவிடப் பல மடங்கு வெறி கொண்டு அலைகிற போதும் அவற்றை அவர்களைப் போல சீரியசாக எடுத்துக் கொள்ளும் போக்கு நம்முடைய பெரும்பாலான திரைப்பட ரசிகர்களிடம் இல்லை. அதனால் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது வெளிவரும் படங்களைப் பார்த்து விட்டு அவை பிடித்திருந்தால் ஒன்பது அல்லது பத்து மதிப்பெண்கள் அள்ளிக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். அது போலவே பிடிக்காவிட்டால் ஒன்று அல்லது இரண்டு போன்று குறைவான மதிப்பெண்கள் கொடுக்கவும் தயங்குவதில்லை என்று நினைக்கிறேன்.

சிறிது காலம் முன்பு பார்த்த போது, ‘தனி ஒருவன்’ பட்டியலின் உச்சியில் இருந்தது. அது ஒரு நல்ல படம் என்றுதான் கேள்விப் பட்டேன். ஆனால் அதுவே இதுவரை வந்த தமிழ்ப் படங்களிலேயே சிறந்த படம் என்று சான்றிதழ் கொடுப்பது சரியென்று படவில்லை. அதனால் அந்தப் பட்டியலை முழுதும் நம்ப முடியவில்லை. நண்பர் ஒருவர், ‘இரத்தக் கண்ணீர்’ உலகத் திரைப்படங்களிலேயே சிறந்த படமாகப் போற்றப்பட்ட ஒன்று என்றார். ஆனால் அந்தப் படத்தை இந்தப் பட்டியலில் எங்குமே காண முடியவில்லை. இப்போது திடீரென்று ‘தனி ஒருவன்’ இரண்டு இடங்கள் கீழே போய்விட்டது. ‘அன்பே சிவம்’ முதலிடத்திலும் ‘விசாரணை’ இரண்டாமிடத்திலும் உள்ளன. ‘அன்பே சிவம்’ நல்ல படந்தான் என்றாலும் அதுதான் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே சிறந்ததா என்றும் நம்ப முடியவில்லை. இப்படி சோடாப்புட்டி போல் பொங்குவதும் அடங்குவதுமான ஒரு பட்டியலை எவ்வளவு நம்புவது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதோவொன்று இருப்பது பரவாயில்லைதானே! இதுவே இன்னும் சில ஆண்டுகளில் சீரியஸ் ரசிகர்கள் மென்மேலும் பயன்படுத்தக் தொடங்கும் போது இன்னும் சிறப்படையலாம்.

சரி, வெட்டிக்கதை நிறையப் பேசியாயிற்று. ‘விசாரணை’-க்கு வருவோம். பட்டியலின் உச்சியில் இருக்கிற ‘அன்பே சிவம்’ பார்த்தாயிற்று என்பதால் அடுத்துப் பார்க்க வேண்டியிருந்தது ‘விசாரணை’-யே. அதையும் பார்த்து விடுவோம் இப்போது.

“நம் காலத்தில் உள்ள பொதுவான சூழலை வைத்தே எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் குறிப்பிட்ட எவரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல’ என்பது போன்ற முன்மொழியோடு தொடங்குகிறது படம். ஆந்திராவில் – குண்டூரில் தமிழர் ஒருவரின் மளிகைக் கடை. அங்கே பணிபுரிகிற நம் தெக்கத்திப் பையன் ஒருவன்தான் நாயகன். இது நாயகன் சார்ந்த படமல்ல என்பதால் அவனைப் பற்றி நிறையப் பேச வேண்டியதில்லை. அவனைப் போல மேலும் பல தமிழ்ப் பையன்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் ஒரே தவறு வசதியின்மை காரணமாக, கிடைக்கும் கொஞ்சநஞ்சப் பணத்திலும் சிறிது சேமிக்க வேண்டும் என்று எண்ணி, வீடெல்லாம் பிடிக்காமல் பூங்கா பொது இடங்களிலேயே தூங்கி எழுந்து வாழ்கிறார்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் திருட்டு வழக்கு ஒன்றை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஆந்திரக் காவற்துறை இவர்களைப் பிடித்து பலிகடா ஆக்கப் பார்க்கிறது.

முதற்பாதி முழுவதும் செய்யாத குற்றத்தை ஒத்துக் கொள்ள வைக்க எப்படியெல்லாம் காவற்துறை நடந்து கொள்ளும் என்பதை மெதுவாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடிகிற வேகத்தில் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் நம் மனதைப் பிழிந்தெடுக்கிறது. ‘பரவாயில்லை, தமிழ்நாட்டுக் காவற்துறையைப் பகைத்துக் கொள்ளாமல், ஆந்திரக் காவற்துறையைக் குறிவைத்து எடுத்திருக்கிறாரே, விபரந்தான் வெற்றிமாறன்!’ என்று எண்ணும் போது தமிழகக் காவற்துறை காட்சிக்குள் வருகிறது. அதற்குப் பின்பு தமிழகக் காவற்துறை செய்யும் அட்டூழியங்கள் அதைவிடக் கொடூரமானவை. படத்தின் தொடக்கக் காட்சியில் வந்த சமுத்திரக்கனி மீண்டும் வருகிறார். ‘என்னடா இது! இந்தப் படத்துக்காக சமுத்திரக்கனி தேசிய விருதெல்லாம் வாங்குனார்னு சொன்னாய்ங்க! ஆள் ஒரு காட்சில வந்துட்டுப் போய்ட்டாப்ல, அதுக்குப் பெறகு ஆளவே காணோம்!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் நமக்கு அவருடைய மறுவருகை படத்தின் மீது ஆர்வத்தை எகிற வைக்கிறது. இடைவேளையின் போதுதான் மீண்டும் வருகிறார். அதற்குப் பின்புதான் உண்மையில் ஆட்டமே தொடங்குகிறது. இது இருவேறு கதைகளின் ஒட்டுவேலை என்று சொல்லலாம்.

சமுத்திரக்கனி முதற்காட்சியில் - அதிகாலையில் நாயகன் வேலை பார்க்கும் மளிகைக் கடையில் ‘தம்’ வாங்க வருகிறார். காவற்துறை ஆள் என்பது புரிபடுகிறது. தமிழகக் காவற்துறைத் துணை ஆணையர் ஒருவரின் ஆணைக்கிணங்க, முக்கியப் புள்ளிகளோடு தொடர்புடைய ஒருத்தனை ஆந்திராவில் இருந்து ‘திருட்டுத்தனமாகக்’ கடத்தி வருவதற்காக வருகிறார். அதற்கிடையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் நால்வரும் படும் பாடுகள் காட்டப்படுகின்றன. விதவிதமாக அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள். பல நேரங்களின் காணச் சகியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளத்தான் செய்ய வேண்டியுள்ளது. புதிதாகத் தென்னை மட்டைகளைக் கொண்டு வந்து இவர்களை அடிப்பதற்காகவே அவற்றைச் சீவி, கைப்பிடி வைத்துத் தயார் செய்யும் காட்சி, வன்முறைக்குப் பழக்கப்படாத எவரையும் உலுக்கத்தான் செய்யும்.

யாரோ பெத்துப் போடும் பிள்ளைகள், கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் தமக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பொருட்டு மொழி தெரியாத ஊர்களுக்குப் பிழைக்கப் போகும்போது, இப்படியெல்லாம் மாட்டிக் கொண்டு செய்யாத தவறுக்காகத் துன்பங்களுக்கு உள்ளாவது எவ்வளவு கொடுமையான அனுபவம்! இது எல்லார் பெத்துப் போடும் பிள்ளைகளுக்கும் கிடைக்கும் அனுபவம் இல்லை. அப்படி யாரோ பெற்ற பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்தும் உரிமையை காவற்துறைக்குக் கொடுத்திருக்கும் சட்டம் எவ்வளவு கொடுமையானது! அப்படியான நாடு எவ்வளவு கொடூரமானது! மனிதன் மனிதனுக்குரிய கண்ணியத்தோடு வாழக்கூட முடியாத இது போன்ற அடிப்படைப் பிரச்சனைகளைக் கூடக் களையாமல் வல்லரசுப் பேச்சுகள் எல்லாம் பேசிக் கொண்டிருகிறோமே! அதெல்லாம் யாருக்காக? இந்தச் சிந்தனைகளை நம்மிடம் கிளறி விடுவதுதான் படத்தின் நோக்கம். எத்தனை பேருக்குக் கிளறியது என்று தெரியவில்லை.
                              
அத்தனையையும் அனுபவித்து விட்டுக் கடைசியில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது, உண்மையைச் சொன்னால் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது என்று நாயகன் துணிந்து உண்மை சொல்வதும், எங்கே திரும்பவும் இவர்களிடம் மாட்டிக் கொண்டால் நொங்கு எடுத்து விடுவார்களோ என்று பயந்து மற்றவர்கள் மிரள்வதும், பின்னர் அவர்களும் துணிந்து உண்மையைச் சொல்லி விடுவதும், நிலவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு நீதிபதி நீதியின் பக்கம் நிற்பதும், காவற்துறை ஆய்வாளராக வரும் மோசக்காரனின் பழைய வரலாறு தெரிந்து, நீதிபதி அவனைச் சரியாகக் கண்டித்து ஓரங்கட்டுவதும் நல்ல காட்சிகள். இது நீதித்துறையில் நிலைத்திருக்கும் கொஞ்சநஞ்ச நியாய உணர்வையும் காவற்துறையைவிட நீதித்துறை பரவாயில்லை என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது (புரியுது! சல்மான் கானின் நீதிபதியையும் குமாரசாமி போன்றவர்களையும் நினைவுக்கு வருவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!).

மாட்டிக்கொண்டு முழிக்கும் இளைஞர்கள் பேசும் மொழி புரியாமல், “மொழி பெயர்க்க யாரும் இருக்கிறார்களா?” என்று நீதிபதி கேட்கும் போது, காவற்துறை ஆளே ஒருவர் தான் மொழிபெயர்த்து உதவ முடியும் என்று முன்வரும் போது, நமக்கு மனம் பதைக்கிறது. அதைப் புரிந்து கொண்டு நீதிபதி அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வேறு யாராவது வேண்டும் என்று கேட்பார். அப்போதுதான் வேறு ஒரு வழக்குக்காக அடுத்த அறையில் இருக்கும் சமுத்திரக்கனி அழைத்து வரப்படுவார். அப்போது அங்கே வருகிற சமுத்திரக்கனி, மொழிபெயர்ப்பு மட்டும் செய்யாமல், அடுத்த படிக்குப் போய், தனக்கு அவர்களைத் தெரியும் என்று முதற்காட்சியில் மளிகைக் கடையில் நாயகனைப் பார்த்ததை நினைவு கூர்ந்து சான்றிதழ் கொடுத்துக் காப்பாற்றுவார். இந்த உதவியால் பயன் பெற்று விடுதலை அடைந்து வெளியே வருபவர்கள், அவருக்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்களைச் சரியாகத் தன்னுடைய கடத்தல் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வார் இவர். நாமும் நல்லவராக இருக்கிறார்; அப்படியானால் அவர் செய்யும் கடத்தல் நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொள்கிறோம்.

கடத்தலையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து, அதே வண்டியில் அப்படியே சென்னைவரை அழைத்து வந்து, அதில் ஒருத்தன் மட்டும் இடையில் இறங்கிக் கொள்ள, மீதி மூவரும் அவருடனேயே காவல் நிலையம் வரை வருவார்கள். இந்த வழியில் இறங்கிப் போனவர்தான் இந்தக் கதையைப் பின்னர் ‘லாக்கப்’ என்ற பெயரில் ஒரு புதினமாக உலகுக்குச் சொன்ன எழுத்தாளர் சந்திரகுமார். கதையின் முடிவில் அது சொல்லப் பட்டிருக்கிறது. அவரை வெனிஸ் திரைப்பட விழாவுக்கு அழைத்துச் சென்று பேச வைத்து மரியாதையும் செய்திருக்கிறார்கள். இது போன்ற முதிர்ந்த போக்கு இன்னும் நிறைய வரவேண்டும். அதற்கு வெற்றிமாறன் போன்றவர்கள் வழிகாட்டிகள். சந்திரகுமார் ஓர் ஆட்டோ ஓட்டுனராக -இடதுசாரியாக, கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். அவரோடு சேர்த்துத் தா.பாண்டியனையும் வேறு காட்டுகிறார்கள். அதை அவருக்குச் செய்த அவமானமாக எடுத்துக் கொள்பவர்கள், இந்தச் சிறிய தவறுக்காக வெற்றிமாறனை மன்னிப்பார்களாக!

மீதமிருக்கும் மூவர் காவல் நிலையத்தில் அன்றைய எடுபிடி வேலைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுவர். வேலையை முடித்துவிட்டு அவர்கள் இடத்தைக் காலி செய்திருந்தால் பிரச்சனையில்லை. சமுத்திரக்கனிக்காக அவர்கள் கடத்திக் கொண்டு வந்தவன் அடுத்து என்ன துன்பத்துக்கு உள்ளாகப் போகிறான் என்று இவர்களுக்குத் தெரிய வருகிறது. தம்மால்தாமே அவர் இந்த நிலைமைக்கு ஆளாகிறார் என்ற குற்ற உணர்ச்சியால் அவருக்கு உதவ முயன்று சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரின் தணிக்கையாளர் (ஆடிட்டர்) என்பதால் இவனை வைத்து அவரின் கதையை முடிக்க முதலமைச்சரே கட்டளையிட்டிருப்பார். தணிக்கையாளராக நடித்திருக்கும் கிஷோர் அருமையாகச் செய்திருக்கிறார். பெரிய இடத்துத் தொடர்புடையவர்களின் பேச்சும்-தெனாவெட்டும், அதே நேரத்தில் பயமும், பின்னர் அவர் சற்றும் எதிர்பாராத முறையில் சமுத்திரக்கனியாலும் காவலர்களாலும் அடிக்கப்படும் போது காட்டும் உணர்ச்சிகளும் மிக அழகாகச் செய்திருக்கிறார்.

முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரின் தொடர்புடைய வழக்கு என்பதால் மிதமிஞ்சிய இரகசியம் காக்கப்பட வேண்டிய வழக்கு எடுபிடி வேலைக்கு வந்த இவர்களுக்கெல்லாம் தெரிய வந்து விடுவதில் பயம் கொள்கிற காவற்துறை, இவர்களின் கதையை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறது. தன்னால்தானே இவர்கள் இப்படி மாட்டிக் கொண்டார்கள் என்று கவலைப்படும் சமுத்திரக்கனி அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். அவர்களுக்காகப் பேசுகிறார். அது அவருக்கே சிக்கலாக முடிகிறது. இப்படியே போனால் அவரே தமக்குப் பெரும் பிரச்சனையாக முடியலாம் என்று பயந்த காவற்துறை, அவரையும் சேர்த்தே போட்டு விடுகிறது. இதை எப்படிப் பின்னர் வெளியில் செய்தியாக்க வேண்டும் என்பது முதற்கொண்டு காவற்துறை பேசுவதெல்லாம் அப்படியே நம் சமகாலச் சூழலின் உண்மை நிலவரம்.

மனச்சாட்சியைத் தலைதூக்க விட்டாலே மனிதற்குச் சிக்கல்தான் என்று நினைவு படுத்தும் வகையில் பல காட்சிகள். அப்படியான மனச்சாட்சியும், அதே வேளையில் உயர் அதிகாரிகள் எதிர்பார்ப்பிற்கிணங்க கொடுக்கப்படும் வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடும் உள்ள அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பு அருமை. கைதிகளாக வரும் அப்பாவி இளைஞர்கள் நால்வர் உட்பட எல்லோருமே நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடல் கூட இல்லாமல், ஓரிரு காதற் காட்சிகளை மட்டும் வைத்து, சற்றும் மசாலா இல்லாமல், இப்படியொரு வெற்றிப்படம் கொடுக்க முடிகிற இயக்குனர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தமிழில்?!

இத்தனைக்கும் நடுவில் ஆந்திராவில் கடைக்கு வேலைக்குப் போன பையன் அங்கே இருக்கும் அழகான தெலுங்குப் பெண் ஒருத்தியைக் காதலிப்பதும், இருவருமே ஒருத்தருக்கொருத்தரின் மொழி கூடத் தெரியாத போதும் அவரவர் மொழியிலேயே பேசிக் காதலிக்க முடிவதும், அதை வழவழவென்று இழுக்காமல், ஆம்பூர் பிரியாணி போல அளவான மசாலாவோடு அழகாக ஒரு சில நிமிடங்களிலேயே முடித்து விடுவதும் நன்றாகவே இருக்கிறது.

மக்கள் பிரச்சனைகளைக் களைய வேண்டிய காவற்துறை எப்படி ஆட்சியில் இருக்கும் கட்சிக்குக் கைக்கூலியாகச் செயல்படும் என்பதும், அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரை எப்படியெல்லாம் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவார்கள் என்பதும், பெரிய இடத்து விவகாரங்களில் தலையிட்டு உதவும் அதிகாரிகள் எப்படிக் கோடிகள் பெறுவர் என்பதும், எவ்வளவுதான் சுகபோகமாக வாழ முடிந்தாலும் பெரிய இடத்துச் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு விட்டால் ஆடிட்டர் போன்ற பணிகளில் உள்ளவர்கள் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்பதும் நாமும் நம் காலத்தில் பார்ப்பவைதானே! கே.கே.வாக நடித்திருக்கும் கிஷோர், ஏனோ கலைஞர் தொலைகாட்சி சரத்குமாரையும் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவையும் சம்பந்தமே இல்லாமல் நினைவு படுத்தினார் என்பதையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.


ஆழ்ந்த படிப்பில்-வாசிப்பில் ஆர்வமில்லாது, அறிவீனத்தாலும் அடிமை உணர்வாலும் திரைப்பட மோகத்தாலும் அழிந்து நசுங்கும் மக்களுக்கு இது போன்ற திரைப்படங்கள் பெரும் அறிவூற்றாக இருந்து உதவும். அதற்கும் அவற்றை உட்கார்ந்து பார்க்கிற அளவுக்காவது பொறுமை இருக்க வேண்டும் நமக்கு. அப்படி எல்லோரையும் பார்க்க வைக்க வேண்டும் என்றால் அதற்கென்று நிறைய மசாலா சேர்க்க வேண்டும். மசாலா கூடிவிட்டால் கருத்து நீர்த்துவிடும். இத்தனை சிக்கல்களுக்கும் நடுவில் இப்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் வெற்றிமாறனுக்கு நம் நன்றியையும் பாராட்டையும் சொல்லித்தான் ஆகவேண்டும். இதன் மூலம் உங்கள் மீதான எங்கள் எதிர்பார்ப்பை இன்னும் ஒரு படி கூட்டியிருக்கிறீர்கள், வெற்றி! அடுத்த படத்தில் அது இன்னும் பல மடங்கு பாயும் என்று நம்புவோம்!!

வியாழன், ஏப்ரல் 21, 2016

த ஜங்கிள் புக் (THE JUNGLE BOOK)

சிறுவயது முதலே திரைப்படங்களே அதிகம் பார்ப்பதில்லை. அதிலும் ஆங்கிலப் படங்கள் பக்கம் மழைக்கும் ஒதுங்கியதில்லை. சமீபத்தில்தான் ஓரளவு ஆங்கிலப் படங்களும் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் வான்வழிப் பயணங்களின் போது பொழுது போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று பார்த்த சில படங்கள்தாம். இப்போது வந்திருக்கும் ஆங்கிலப் படங்களில் த ஜங்கிள் புக்(தமிழில் ‘காட்டு நூல்’ என்று வைத்துக் கொள்ளலாம்) நன்றாக இருக்கிறது என்று ஆங்காங்கே பேச்சு. அதுவும் குடும்பப் படம் என்று வேறு கேள்வி. ஆங்கிலப் படங்களில் குடும்பப் படம் என்றாலே அதில் முக்கால்வாசிக்கும் மேல் குழந்தைகளுக்கான படங்களாகத்தான் இருக்கும் போல. குடும்பம் என்றால் குழந்தைகளும் அடக்கம். அவர்களும் சேர்ந்து பார்க்கிற மாதிரியான படங்கள் என்றால் அவர்களுக்காகவே எடுக்கப்படும் படங்கள் மட்டுமே! எப்புடி ஐடியா?! பெரியவர்களுக்காக எடுக்கப் படும் பெரும்பாலான படங்கள் குழந்தைகளும் காண முடியாது என்பதால், குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்களையே எல்லோருக்குமானதாக ஆக்கிவிடுகிறார்கள். குழந்தைகளுக்குள் பெரிய ஆட்களுக்கான சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள், பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணர மட்டும் வாய்ப்புக் கொடுக்கிறார்கள் போல. நல்ல ஆளுகப்பா நீங்க! வேற வழி! குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு குடும்பத்தோடு பார்க்கவும் ஏதாவது இருக்க வேண்டுமே!

பதினேழாண்டு காலப் பெங்களூர் வாழ்வில் மொத்தத்துக்கும் பத்துத் திரையரங்கங்களில் கூடப் படம் பார்த்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அதிலும் சில அரங்கங்களில் மட்டுமே ஒன்றுக்கும் மேலான படங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அப்படியான ஓர் அரங்கம் – தாவரக்கரை லட்சுமி திரையரங்கம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்துக்கு முந்தைய வாழ்வில் அதன் அருகில் ஒரு சில ஆண்டுகள் நண்பர்களோடு குடியிருந்திருக்கிறேன். அப்போது ஓரிரு முறை அங்கே சென்று சில படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றுள் நன்றாக நினைவில் இருக்கும் படங்கள் இரண்டு. ஒன்று – ‘மின்னலே’. இன்னொன்று – ‘ஆட்டோகிராப்’. ஆட்டோகிராப்தான் மிக அழுத்தமாக மனதில் பதிந்திருப்பது. அப்படியான நினைவுகள் நிறைந்த தெருக்கள் வழியாக, அதே திரையரங்கத்துக்கு இம்முறை இரண்டு குழந்தைகளும் மனைவியும் உட்பட்ட குடும்பத்தோடு கிளம்பிச் சென்றேன். அதுவும் எப்போதும் இல்லாத மாதிரியாக ஓர் ஆங்கிலப் படம் பார்க்க. நினைவுகளைக் கடந்து போய், சீட்டுகளை வாங்கிக் கொண்டு, அதன்பின் அது முப்பரிமாணப் படம் (3D) என்பதால் அதற்குரிய கண்ணாடிகளையும் வாங்கிக் கொண்டு, உள்ளே போய் அமர்ந்தோம்.

‘த ஜங்கிள் புக்’ (‘THE JUNGLE BOOK’) ஏற்கனவே நூல் வடிவில் வந்து விட்ட கதைகளின் தொகுப்பு. நான் படித்ததில்லை. மகள் படித்து விட்டாள். அதனால் அவளுக்கு ஓரளவுக்கு அது பற்றிய பின்னணி தெரிந்திருந்தது. அந்த நூலையும் ஆசிரியரையும் பற்றிய பின்னணி கதையை விடக் கூடுதல் சுவையானவை. கதையின் ஆசிரியர் ஆங்கிலேயரான ருத்யார்ட் கிப்ளிங் ஆங்கிலேயர்களின் இந்தியாவில் பிறந்தவர். அதனால் கதை முழுக்க இந்தியக் காடுகளில் நிகழ்வதாகவும் இந்தியத் தாக்கம் நிறைந்ததாகவும்  காண முடிகிறது. பல பாத்திரங்களின் பெயர்கள் இந்தியப் பெயர்களைப் போல உள்ளன. பாலு, பகீரா, ரக்ஷா, ஷேர் கான் என்று. கடைசியில் வரும் காட்சியில் வரும் குரங்குகளின் மாளிகை இந்தியக் கோவில் வடிவத்தில் இருக்கிறது. குரங்குகளின் கூட்டம் ‘பந்தர் லோக்’ என்ற இந்திச் சொல்லால் அழைக்கப்படுகிறது. படத்தில் வரும் ஒரே மனிதப் பாத்திரமான மோக்ளி கூட இந்தியச் சிறுவன்தான். இந்தக் கதைகள் யாவும் கிப்ளிங், பின்னர் ஆறு வயதில் இறந்து விட்ட தன் மகளுக்காக எழுதியவையாம். இது ஏற்கனவே ஒருமுறை படமாக்கப் பட்டு விட்டதாம். இது இரண்டாம் முறையாக இன்னும் புதுமைப் படுத்தி எடுக்கப் பட்டிருப்பதாம். நல்லது!

விலங்குகள் மட்டும் வாழும் காட்டுக்குள், ஒநாய்களோடு சேர்ந்து ‘மனிதக் குட்டி’ (‘MAN CUB’) ஒன்றும் ஓநாயாகவே வளர்கிறது. ‘குழந்தை’ (‘CHILD’) அல்லது சிறுவன் (‘BOY’) என்று சொல்லாமல் ‘மனிதக் குட்டி’ என்று குழந்தைகளுக்காக விலங்குகளின் மொழியில் சொல்வதே நம்மை விலங்குகளின் உலகுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. ஓநாய்களைப் போலவே ஊளையிடுதலைக் காட்டுவதன் மூலம் அவன் எவ்வளவு ஓநாயாகவே வளர்ந்திருக்கிறான் என்று நமக்குத் தொடக்கத்திலேயே காட்டி விடுகிறார்கள். அவன் பிறந்த காலத்தில் பிறந்த ஓநாய்க் குட்டிகள் எல்லாம் ஓநாய்கள் ஆகிவிட்ட போதும் அவன் இன்னும் சிறுவனாகவே இருக்கிறான் என்ற அறிமுகம், ஒவ்வொரு விலங்கினத்துக்கும் இருக்கும் அவர்களுக்கே உரிய வாழ்-வட்டத்தை (LIFECYCLE) நினைவுபடுத்துகிறது. ஓநாய் இனத்தில் உள்ள ஒரு பெண் ஓநாய் அவனைத் தன் மகன் போலவே பாவித்து வளர்க்கிறது.

நாம் கேள்விப்பட்டபடி காட்டரசன் சிங்கம் அல்ல இந்தப்படத்தில். அந்தப் பொறுப்பு புலிக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஷேர் கான் எனப்படும் புலியார்தான் அவர். அவரே வில்லனும். கொடுங்கோபக்காரர்.

கோடை காலத்தில் நீர் வற்றும் போது மொத்தக் காட்டிலும் ஒரேயோர் இடத்தில் மட்டும் நீர் கிடைக்கும். அந்த நேரத்தில் ஒரு பாறை வெளியில் தெரிய ஆரம்பிக்கும். அந்தப் பாறை தெரிய ஆரம்பித்து விட்டால், விலங்குகளுக்குள் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் (‘WATER TRUCE’) ஏற்படுகிறது. எல்லோரும் ஒன்று கூடும் இடத்தில் யாரும் யாரையும் தாக்கக் கூடாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எல்லோரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்கிறார்கள். காட்டரசன் ஷேர் கானும் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறார். அம்முறை புதிதாக ஒரு வாசம் வருகிறதே என்று ஓநாய்களின் அருகில் போய் இருக்கும் மனிதக் குட்டியான மோக்ளியைப் பார்த்துக் கோபம் கொள்கிறார். அதற்குக் காரணம், அவர் மனிதர்கள் மீது வைத்திருக்கும் பழைய பகை.

அந்தப் பகைக்கான காரணம் என்னவென்றும் சொல்லப்படுகிறது. மோக்ளியின் தந்தை குழந்தையான மோக்ளியோடு காட்டுக்குள் பயணம் வரும்போது ஷேர் கான் பார்த்து விடுகிறார். அவர் தற்காத்துக் கொள்வதற்காக ஷேர் கானைத் தாக்க முயலும் போது, அதே காரணத்துக்காக ஷேர் கான் மோக்ளியின் தந்தையைக் கொன்று போட்டு விடுகிறார். அந்த இடத்தில் குழந்தை மோக்ளி இருந்ததைக் கவனிக்காமல் சென்று விடுவதால் அவன் பிழைத்து விடுகிறான். இதைப் பார்க்கிற பகீரா (கருஞ்சிறுத்தை) அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போய் ஓநாய் இனத்தில் சேர்த்து அவர்களில் ஒருவனாகவே வளர்க்கப் படுகிறான். காட்டுக்கு முதல் எதிரியே மனிதர்கள்தாம் (அதுவும் சரிதானே!) என்று எண்ணும் ஷேர் கான், அதனால்தான் பின்னர் மோக்ளியைக் காணும்போது, “காட்டுக்குள் மனிதனுக்கு என்ன வேலை?” என்று கடும் கோபம் கொள்கிறார். ஓநாயர்கள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அடங்க மறுக்கிறார். கோடை காலம் முடிந்து நீர் மட்டம் அதிகமாகி, ‘நீர் உடன்பாட்டுப் பாறை’ மறையும் போது, அவன் அவர்களின் இனத்தோடு சேர்த்து வைக்கப்படா விட்டால் தாமே கொன்று போட்டு விட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்து விடுகிறார்.

நேரம் வந்ததும் ‘மனிதக் குட்டியின்’ பாதுகாப்பு கருதி, பகீரா அவனை ‘மனிதக் கிராமத்தில்’ (‘MAN VILLAGE’) சேர்த்து விடலாம் என்று அழைத்துச் செல்கிறார். மோக்ளி இவ்வளவு காலம் தான் வாழ்ந்த மண்ணையும் தன் உடன் வாழ்ந்த ஓநாயர்களையும் பிரிந்து செல்லும் காட்சியில் நமக்கும் மனம் வலிக்கத்தான் செய்கிறது. போகிற வழியிலும் பல திருப்பங்கள் – சிக்கல்கள்.

ஆங்கிலப் படம் என்பதால் விலங்குகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே பேசுகின்றன. ஆனால் மனிதனுக்கு முந்தைய இனமான குரங்குகள் மட்டும் ஆங்கிலம் தெரியாதவையாக இருக்கின்றன.

மலைச்சரிவு மிக பயங்கரமாகவும் அழகாகவும் படம் பிடிக்கப் பட்டிருக்கிறது.

காட்டின் சட்டம் (‘LAW OF THE JUNGLE’) என்று ஓநாயர்கள் ஓதும் தத்துவம் அருமையாக இருக்கிறது. அது ஆங்கிலத்தில் இப்படிப் போகிறது:
Now this is the law of the jungle, as old and as true as the sky, And the wolf that shall keep it may prosper, but the wolf that shall break it must die. As the creeper that girdles the tree trunk, the law runneth forward and back, For the strength of the pack is the wolf, and the strength of the wolf is the pack.

அதன் பொருளைத் தமிழில் இப்படிக் கொள்ளலாம்:
“இதுதான் காட்டின் விதி. இது வானம் அளவுக்குப் பழமையானதும் உண்மையானதும் ஆகும். அதைக் காக்கும் ஓநாய் வளரும். அதை உடைக்கும் ஓநாய் செத்தழியும். அடிமரத்தைச் சுற்றி வளர்கிற கொடியைப் போலே, இந்தச் சட்டம் முன்னும் பின்னும் பின்னி ஓடுகிறது. ஏனென்றால் மொத்த ஓநாய்க் கூட்டத்தின் பலமே ஒவ்வொரு தனி ஓநாயின் பலம்; ஒவ்வொரு தனி ஓநாயின் பலமே மொத்த ஓநாய்க் கூட்டத்தின் பலம்.”

இதைக் கேட்கும் போதெல்லாம் ஒருவிதமாகப் புல்லரித்தது. இந்த ஒற்றுமை மனித இனங்களில் எத்தனை இனங்களில் இருக்கிறது என்று எண்ணி அந்த ஓநாய்களின் ஞானத்தின் மீது பொறாமை வந்தது.

மோக்ளியின் நாடு திரும்பலின் போது வருகிற கரடி பாத்திரத்தின் பெயர் பாலு. பாலு நல்லவர். ஆனால் பெரும் சோம்பேறி. மோக்ளி மூளையைப் பயன்படுத்திப் பல வேலைகளை எளிதாகச் செய்ய முடிவதைக் கண்டு அவனைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முயல்கிறார். நாட்டுக்குள் வந்தால் பெரிய முதலாளி ஆகிவிடுவார். ஏற்கனவே நிறைய பாலுக்கள் இங்கே இருக்கிறார்கள் ஐயா! நீங்கள் காட்டுக்குள்ளேயே இருங்கள்!! பாலு மோக்ளியை ஏதாவது பாடு எனும் போது பையன் பாவமாக, ‘காட்டின் சட்டத்தை’ ஓதத் தொடங்குவான். “அது பாட்டல்ல, பிரச்சாரம்!” (“THAT’S NOT A SONG, IT’S A PROPOGANDA”) என்று சொல்லும் போது அரங்கம் குலுங்கிச் சிரிக்கிறது. மூன்றரை வயது மகன் அந்தக் கடைசிச் சொல்லை மட்டும் உள்வாங்கி “ப்ரப்பகாண்டா” என்று கத்தியபோது அருகில் இருந்தவர்கள் திரும்பி வேடிக்கை பார்த்தார்கள்.

காட்டில் வாழும் காலம் முழுக்கவே மோக்ளி மூளையைப் பயன்படுத்தி தந்திரமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பான். அவற்றால் பலரும் பயன் பெறுவார்கள். ஆனாலும் பகீரா அவனை “இது போன்று மனிதத் தந்திரங்களை இங்கே பயன்படுத்தாதே!” என்று கண்டித்துக் கொண்டே இருப்பார். விலங்குகளில் இருந்து மனிதர்களைப் பெரிதாக வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான கூறு இதுதானே! அடுத்தது, மனிதர்களின் தீயைப் பயன்படுத்தும் ஆற்றல் விலங்குகளுக்கு மனிதர்களின் மீது மரியாதையும் அச்சத்தையும் கொடுக்கிறது. தீயை எப்போதும் எல்லோரும் ‘சிவப்புப் பூ’ (‘RED FLOWER’) என்றே சொல்கிறார்கள். “சிவப்புப் பூவை மட்டும் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து விட்டால், நீ உணவுச் சங்கிலியின் உச்சிக்குப் போய்விடுவாய்” என்று குரங்குகள் மோக்ளியிடம் சொல்லும் போது, அது நமக்குள் எவ்வளவோ சிந்தனைகளைக் கிளறுகிறது. தீ என்றால் தீ மட்டுமில்லை. துப்பாக்கி முதற்கொண்டு அதன் பின்பு மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்கள் அனைத்தும் அதில் அடங்கும்தானே! அவை கொண்டுதானே அத்தனை விலங்குகளையும் காடுகளையும் மனிதன் அழித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான்! அதை உணர்த்தும் பொருட்டே படத்தின் முடிவிலும் ஏகப்பட்ட தீ மூட்டப்பட்டு இருக்கிறது. அதை உணர்ந்துதான் ஷேர் கானும் கூட மனிதர்கள் மீது வெறுப்பு கொள்கிறார். வில்லனாக இருந்தாலும் அவருடைய நியாயம் நமக்குப் புரிகிறது. வில்லன்களின் நியாயம் புரிந்தே பழகிவிட்டவர்கள் அல்லவா நாம்!

அதை நிரூபிக்கும் விதமாக மோக்ளி ஷேர் கானுக்கு எதிராகத் தீயைக் கையில் எடுக்கும் போது, மிரண்டு போய் எல்லோரையும் பார்த்து ஷேர் கான் கத்துவார் – “சொன்னேனே, கேட்டீர்களா? இப்போது தீயைக் கையில் எடுத்து விட்டான் பாருங்கள்! காட்டை அழித்து விட்டுத்தான் போவான்!” என்று. உடனே அவன் காட்டின் மீதான தன் நன்றியை நிரூபிக்கத் தீயைத் தண்ணீருக்குள் வீசுவான். அப்போது வில்லனுக்கே உரிய பாணியில் ஷேர் கான், நிராயுதபாணி ஆகிவிட்ட மோக்ளியின் முட்டாத்தனத்தைக் கண்டு சிரிப்பார். அப்போது மொத்தக் காடும் மோக்ளிக்கு ஆதரவாகத் திரும்பும். மூண்ட பெருந்தீக்கு நடுவில் நடைபெறும் நீண்ட சண்டையில் ஷேர் கானை வீழ்த்தி மோக்ளி வெற்றி பெறுவான். அது மனித இனத்தின் வெற்றி என்று கொள்ளலாமா? தெரியவில்லை! மூட்டப்பட்ட தீயை யானைகள் எல்லாம் சேர்ந்து காட்டாற்று நீரைத் திசை மாற்றி விட்டு அணைக்கும். மனிதனைக் காக்கவும் விலங்குகள் தேவை என்று சொல்கிறார்களோ?!

இவ்வளவு கனமான கருத்துகள் நிறைந்த படத்தில், மொத்தப் படமும் சொல்ல முயன்ற எல்லாக் கருத்துக்களையும் நான் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. புரிந்தவை சில; புரியாதவை பல என்றே எண்ணுகிறேன். அப்படிப் புரிந்தவற்றிலும் எல்லாம் இங்கே சொல்லி விட்டேனா என்றும் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஒருமுறை பார்த்து விட்டு, புதிய புரிதல்களையும் சேர்த்து எழுதலாம். நீங்களும் பார்த்து விட்டு வந்து உங்கள் புரிதல்களையும் எழுதுங்கள்.

பின்குறிப்பு: ஆங்கிலப் படத்துக்குத் தமிழில் விமர்சனம் எழுதியிருக்கிறாயே என்று கேட்பவர்களுக்காகவும் தமிழ் தெரியாத நண்பர்களுக்காகவும் விரைவில் இதையே ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க முயல்வோம்! எட்டு வயது மகள் அவளுடைய பாணியில் அவளுடைய விமர்சனத்தை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறாள். மூன்றரை வயது மகனுக்கு அவனுக்குப் பிடித்த புலியாரை வில்லனாகக் காட்டியிருப்பதால் படம் பிடிக்காமல் போய்விட்டது. பிடித்திருந்தாலும் விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும் எழுதப் படிக்கத் தொடங்கவில்லையாதலால் இன்னும் கொஞ்ச காலம் கொடுத்தருள்வீராக!

புதன், ஏப்ரல் 20, 2016

இசை

சில இடங்களுக்கும் பொருட்களுக்கும்
அவற்றைக் கடக்கும் போதெல்லாம்
நினைவுகளைக் கிளறுவதில் 
ஏன்தான் இவ்வளவு இன்பமோ என்று 
எண்ணிக் கடந்து கொண்டிருக்கையில்
ஓடத் தொடங்கியது அப்பாடல்...

பல இடங்களையும் பொருட்களையும் 
பிணைத்தே நினைவுக்குள் கொண்டு வந்து...

எளிதில் கடந்து விட முடியாமல்...

இறுதிச் சுற்று

நீண்ட காலத்துக்குப் பின் மாதவன் நடித்து வெளிவந்திருக்கும் ‘இறுதிச் சுற்று’ பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது நேற்று. ‘அலை பாயுதே’ நடிக்கும் போதே அவர் கொஞ்சம் தாமதமாக வந்திருப்பது போல் பேசப்பட்டது. இப்போது அவருக்கும் வயது கிட்டத்தட்ட ஐம்பதைக் கடந்திருக்க வேண்டும். அதையும் கருத்தில் கொண்டே அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகி அவரை “கெழம்”, “கெழம்” என்று திட்டுவதன் மூலம் மாதவனை அவருடைய பழைய துறுதுறு இளைஞன் அடைப்புக்குள் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது. தோற்றத்திலும் இதுவரை அவரை நாம் பார்த்திராத மாதிரியாக – நீண்ட தலைமுடி தாடியோடு காட்டியிருக்கிறார்கள். மாதவனுக்கு இப்போதுதான் தமிழ்த் திரையில் ஆட்டம் தொடங்கப் போகிறது என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் பெரும் எதிர்பார்ப்புடனே பார்க்கத் தொடங்கினேன்.

நல்ல படந்தான். விளையாட்டு சார்ந்த படங்கள் அதிகம் தமிழில் வந்ததில்லை என்பதால் இது அத்தகைய படங்களிலேயே சிறந்த படமாக இருக்கும் என்கிறார்கள். இருக்கலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இது போன்ற படங்கள் நிறைய வெளிவந்தால் இதை விடச் சிறப்பான படங்கள் கூடிய விரைவிலேயே நிறைய வரலாம். இப்போதே விளையாட்டு சார்ந்த கதைகளைத் தூக்கிக் கொண்டு பல நாளைய இயக்குனர்கள் ஏகப்பட்ட படிகளை ஏறி-இறங்கிக் கொண்டிருப்பார்கள் சென்னையில். அதுவும் குத்துச்சண்டை என்பது நமக்குச் சற்றும் தொடர்பில்லாதது என்பதால் அந்த அளவுக்குத் தாக்கத்தை உண்டுபண்ணவில்லையோ என்றும் ஒருபுறம் தோன்றுகிறது. இதே போன்ற கதை கிரிக்கெட் சார்ந்து வந்திருந்தால் அதன் வீச்சு இதைவிடப் பலமடங்கு இருந்திருக்கலாம். அதே வேளையில் படத்தின் முக்கியமான கருத்துகளில் அதுவும் ஒன்று. அரசியலும் மற்ற லீலைகளும் இல்லாமல் இருந்திருந்தால் நம் குத்துச்சண்டை வீராங்கனைகளும் பல உலகளாவிய வெற்றிகளைக் குவித்திருப்பார்கள்; குத்துச்சண்டை மட்டுமல்ல, அது போன்று பல விளையாட்டுகள் நலிந்து கிடப்பதற்கு நம் இரத்தத்திலேயே ஊறிக் கிடக்கும் பல கோளாறுகள்தாம் காரணம் என்பதே அந்தக் கருத்து.

இந்தியாவில் பணம் கொழிக்கும் எல்லாத் துறைகளிலும் அரசியலும் வந்து விடும். திரைப்படம், விளையாட்டு ஆகிய இரண்டும் இதில் முதன்மையானவை. அதுவும் பெண்கள் சார்ந்த விளையாட்டு என்றால் திரைத்துறைக்கு இணையாக ‘மற்ற’ சிக்கல்களும் அளவிலாமல் கூடிவிடும். பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக வரும் மாதவன், விளையாட்டில் இருக்கும் அரசியலால் தனக்கு வந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் வாய்ப்பையும் அத்தோடு சேர்த்துத் தன் மனைவியையும் வேறொருவனிடம் இழந்து, அதன் பின்னர் கைக்காசையெல்லாம் இழந்து சாதிக்கத் துடிக்கும் அளவுக்குத் தொழிலில் ஈடுபாடு கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

இளம்பெண்களோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தாலே தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கூடிவிடுவதும் பொறுக்கிப் பட்டம் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் கூடிவிடுவதும் இயல்பானதுதானே. அதுவும் மனைவியை இழந்து வாழ்கிறவன் என்றால் அது மிகவும் எளிது. அப்படி ஒருமுறை பலிகடா ஆக்கப்பட்டு, அரியானாவில் இருந்து சென்னைக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். தன் தொழில் மீதான அளவு கடந்த பற்று மற்றும் வெறி காரணமாக அதற்கெல்லாம் மேலே சென்று தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டுகிறார். இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் நம்மைத் தரைமட்டமாக்க அவர்கள் எந்தக் கீழ்நிலைக்கும் தாழ்வார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்தியிருக்கும் படம். ஊழலாலும் அரசியலாலும் புழுத்துப் போன அதிகாரிகளை ஒவ்வொரு நாளும் நேரில் பார்த்து வாழ்கிற நமக்கு இது எதுவுமே மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் போல் இல்லை. நடப்பதைத்தானே சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இவை பற்றியெல்லாம் கேள்வியே படாத – தெரியவே வராத ஒரு சாராரும் இருக்கலாம். அவர்களுக்கு வேண்டுமானால் இவற்றைப் பாருக்கும் போது இது ஒரு படமாகப் படலாம்.

“கதாபாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே” என்று தொடங்கும் படம், “இத்திரைப்படம் பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு” என்று முடிகிறது. “குத்துச்சண்டை ஊருக்குள் வந்து ஐந்தாவது ஆண்டிலேயே நம் பெண் ஒருவர் உலக அளவில் வெற்றி பெற்று வந்தார்” என்றும் சொல்லி முடிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பியிருப்பது தெளிவான ஒரு கருத்துதான். இந்த நாட்டில் திறமைக்குப் பஞ்சமில்லை; அவற்றைத் தேடி அடையாளம் காண வேண்டும்; அதுவும் நம் தேடல் சென்றடையாத மூலைமுடுக்குகளில்தாம் அளவிலாத் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன; அப்படி அடையாளம் கண்டபின்பும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களைத் தம் பிழைப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் அழித்து விடாமல் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே அது.

குத்துச்சண்டை பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் செய்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியும். அதில் வரும் காட்சிகளும் வசனங்களும் அதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த உழைப்புதான் நல்ல படங்களை சராசரிப் படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது. அப்படியான உழைப்பைப் பலர் அறியாத ஒரு துறையில் போய்ப் போடுவது என்பது அதனினும் சிரமம் – பாராட்டுக்குரியது.

நாயகியை விட அவருடைய அக்கா அழகாக இருக்கிறார். அவருக்குப் பயிற்சி அளிக்க வரும் மாதவன்தான் அவளைத் தூக்கித் தூர வீசிவிட்டு நாயகிக்குள் ஒளிந்திருக்கும் திறமையை அடையாளம் காண்கிறார். எந்தத் துறையிலும் விற்பன்னனாக இருப்பவனின் முதற் திறமை, அந்தத் தொழில் சார்ந்த திறமையை-தரத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடிதலே. காலங்காலமாக விவசாயம் செய்கிற ஒருவரிடம் போய்க் கேட்டால், எந்த மண்ணுக்கு எந்தப் பயிர் சரியாக வரும் என்பதை மிக எளிதாகச் சொல்லி விடுவார். அது போல! அப்படித்தான் வாழ்க்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஆட்டம் போட்டுக் கொண்டு, வாய்க்கொழுப்பாகப் பேசிக்கொண்டு அலைகிற மீன்காரியான நாயகிக்குள் இருக்கும் திறமையை மாதவன் சரியாக அடையாளம் காண்கிறார். அவளுடைய அக்காவோ குத்துச்சண்டை விளையாட்டைத் தன் முழுநேரப் பொறுப்பாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். ஆனாலும் அவள் ஏன் வெல்ல முடியாமல் போகிறது என்பதற்குக் காரணமாகச் சொல்லப்படும் கருத்து சுவையானது. அவள் காவற்துறையில் வேலை வாங்குவதற்காகக் குத்துச்சண்டை ஆட வருகிறாள். அதனால்தான் அவளுக்குக் குத்துச்சண்டை மீது முழு ஆர்வம் வரவில்லை என்கிறார்கள். அதுவும் சரிதானே! நம்முடைய தொழில்களில் கூட குடும்ப சூழ்நிலையால் அல்லது சம்பாதிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட வேலைக்கு வருகிறவன் சாதிப்பதைவிட, இந்த வேலையிலேயே கிறுக்காக இருப்பவன் வந்து சாதிப்பதுதானே அதிகம்!

படத்தின் முதிர்ச்சி அதன் இயல்புத்தன்மையில் உள்ளது. திரைப்படம் என்றாலே இருக்கும் மசாலாத்தனம் இல்லாமல் இருக்கிறது. நாயகியின் அம்மா வடநாட்டுக்காரர் என்பதைக் காட்டுவதற்காக ஓரிரு இடங்களில் இடத்துக்குப் பொருத்தமில்லாமல் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்தி வசனங்கள் கொஞ்சம் பிசிறு போல் இருக்கின்றன. அது ஒன்றுதான் உறுத்துகிற மாதிரி இருந்த கோளாறு. படம் முடிவை நெருங்கும் போது நம்மையும் உணர்ச்சி தொற்றிக்கொள்கிறது.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் வயதான நிர்வாகி நாயகியிடம் தவறாக நடந்து கொள்ள முயல்வதும், அப்போது காறித் துப்பிவிட்டு வருகிற இளம்பெண்ணான நாயகி அதே போல வயதான மாதவன் மீது காதல் கொள்வதும் சரியாகப் பிரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. முதலில் பயிற்சியின்போது கூட, பயிற்சியாளர் என்ற முறையில் மாதவன் தன்னை நெருங்குவதைக்கூட அனுமதிக்க மறுக்கும் அதே பெண்தான் பின்னர் அப்படி மாறுகிறாள். “எனக்கு உங்க அப்பா வயசு!” என்று சொல்லும் போது கூட, “எனக்கு எங்கப்பன் வயசுல ஆயிரம் பேரத் தெரியும். அத்தனை பேர்ட்டயுமா ஐ லவ் யூ சொல்றேன்?!” என்று கேட்டுத் திணறடிக்கிறார். அது கடைசிவரை மாதவனும் ஏற்றுக் கொண்ட காதலாகவோ அப்படி இல்லை என்று மறுத்ததாகவோ சொல்லாமலே அழகாக முடிகிறது. மாதவனுக்கு அவளிடம் அவளுடைய திறமைதான் ஈர்க்கிறது. அவளுக்கோ முதலில் பிடிக்காமல் இருந்த மாதவன் மீதே ஈர்ப்பு வந்து விடுகிறது. மாதவன் அவளுடைய திறமைக்காக அவளுடைய மற்ற தொல்லைகளைத் தாங்கிக் கொள்வது போல (அதுவும் முழுமையாகத் தாங்கிக் கொள்கிறார் என்று சொல்ல முடியாது) அவளோ மாதவனுக்காக எல்லாத்தையும் தாங்கிக் கொள்கிறாள்.

முதலில் மீன்காரியாக இருக்கும் நாயகி மாதவனைப் பார்த்து, “இவனுக்குத் தல தனுஷுன்னு நெனைப்பு” என்று சொல்லும் போது, ‘இதைக் கேட்கும் நமக்கே இம்புட்டு இடிக்குதே, மாதவனுக்கு எம்புட்டு இடிச்சிருக்கும்’னு நிறையவே பீலிங் ஆகிவிட்டது. அதுதானே திரைத்துறை! ‘அதையே ஒரு மேற்தட்டுக் கல்லூரி மாணவி சொன்னால்தானே வருத்தப்பட வேண்டும்? மீன்காரிதானே சொன்னாள்?!’ என்றுகூட அவர் சிரித்துக் கடந்திருக்கலாம். மாதவன் மீது காதல் வந்ததும், பர்சுக்குள் இருக்கும் தனுஷ் படத்தை எடுத்து வீசிவிட்டு மாதவன் படத்தைச் செருகும் காட்சியை தனுஷ் பார்த்திருந்தால் கண்டிப்பாகக் கவலைப்பட்டிருக்க மாட்டார்; பெரும் மகிழ்ச்சிதான் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். ரஜினி மகளை மணம் முடித்தபோது - கமல் மகளோடு கட்டி உருண்டு நடித்தபோது - தேசிய விருதுகள் வாங்கியபோது அடைந்த அளவுக்கு இன்பம் இந்தக் காட்சியிலும் அடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன்! என்ன நாஞ் சொல்றது?! ;)

சகோதரப் பொறாமை என்பது நம் ஊரில் எந்த அளவுக்குப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ அதே அளவு புரிந்து கொள்ளப்படாமலும் இருக்கிறது. அக்கா-தங்கை நடுவில் வரும் அந்தப் பொறாமை பற்றியும் மிக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். வாயும் வயிறும் வெவ்வேறு என்று ஆகிவிட்ட பின்பு பொறாமைக்கு இடம், பொருள், ஏவல்தான் உண்டா என்ன? அதே அக்கா பின்னர் ஓரிடத்தில் தங்கையின் வெற்றிக்காகத் துடிக்கவும் தொடங்கி விடுகிறார். அது கொஞ்சம் நம் மரமண்டைக்குப் பிடிபட மறுக்கிறது. அப்படியொரு பொறாமைக்காரியால் அவ்வளவு எளிதாக மனம் மாற முடியுமா என்று தெரியவில்லை.

நமக்கு ஆங்கிலப் படங்கள் அதிகம் பார்த்துப் பழக்கம் இல்லை. பார்த்த மிகச் சில படங்களில் ‘கோச் கார்டர்’ என்பதும் ஒன்று. மிகச் சில இடங்களில் மாதவனின் செயல்பாடுகள் கோச் கார்டரை நினைவுபடுத்துவதாக இருந்தன. மிக மிகக் குறைவான இடங்களில்தாம். அதனால் அங்கிருந்து சுட்டார்கள் என்றெல்லாம் பழி போடுவதற்கில்லை.

நடிகர் சங்கத் தேர்தலில் முட்டிக் கொண்டு நின்ற நாசரும் ராதாரவியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எப்போதும் போல் நன்றாகவே செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது அவர்கள் இருவரும் எப்போதோ அதைவிட்டு வெளியே வந்து விட்டார்கள் போல்தான் தெரிகிறது. நமக்குத்தான் எல்லாமே அவர்களைவிட உணர்ச்சிமயம் ஆகிவிடுகின்றன.


படம் பார்த்த பின்பு தெரிந்து கொண்ட சில தகவல்கள் மேலும் சுவையூட்டுகின்றன. இதை இயக்கியிருப்பவர் ஒரு பெண் இயக்குனர். அதனால்தான் பெண்கள் குத்துச்சண்டையைத் தேர்ந்தெடுத்திருப்பது இயல்பாகவே நன்றாக அமைந்து விட்டதோ! கவிஞர் தாமரையின் பாடல்கள் போல, இவருடைய இயக்கமும் பெண்ணின் உணர்ச்சிகளை ஆண்களைவிட நன்றாகச் சொல்லியிருப்பது போல் இப்போது படுகிறது. அதுவும் அவர் மணிரத்னத்திடம் பயிற்சி பெற்று வந்தவர் என்பதால் சோடை போக வாய்ப்புக் குறைவுதானே! அடுத்த தகவல், நாயகி உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனையாம். அப்பிடிப் போடு! இதைவிட வேறென்ன வேண்டும்?! ஆனால் அவர் நடிப்பிலும் இவ்வளவு தெறிக்க விட முடியும் என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தது வேண்டுமானால், அவர் நடிக்கவில்லை - அப்படியே வாழ்ந்தார் என்று பீலா விட்டுக் கொள்ளலாம். அந்த மீன்காரியாக நடித்ததும் ‘நச்’சென்று இருந்ததே. அதற்கென்ன சொல்ல?! கடைசித் தகவல் – இது பல ஆண்டு கால உழைப்பில் உருவான படமாம். அதன் விளைவைப் படத்தில் நன்றாகவே காணமுடிகிறது. செமக் குத்து!!

ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

வழிபாடு

நிலைமை சரியில்லாத போது
அவரிடம் சென்றோம்

ஏதோ தவறு நடந்திருக்கிறது
வாரம் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் என்றார்

நிலைமை மோசமான போது
மீண்டும் அவரிடம் சென்றோம்

இதுதான் நடந்திருக்க வேண்டும்
தினமும் வழிபாட்டோடு இதையும் சேர்த்துச் செய்யுங்கள் என்றார்

நிலைமை கைமீறிப் போய்விட்டது
மீண்டும் அவரிடமே செல்வது பற்றியும்
வேறொருவரிடம் செல்வது பற்றியும்
விவாதித்துக் கொண்டிருக்கிறோம்

சனி, ஏப்ரல் 16, 2016

தாமிரம்

தாமிரம் சேர்ந்தால்தான்
தனக்கு மரியாதை
என்று எண்ணிக் கொண்டது...
தாமிரம்...

வியாழன், ஏப்ரல் 14, 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிர்ச்சித் தோல்விகள்

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் சார்ந்த சிந்தனைகளையும் ஆராய்ச்சிகளையும் தவிர்ப்பது மிகவும் சிரமமாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தலும் நமக்கு மீண்டும் உயிர்த்தெழுப்பிக் கொண்டுவருகிற அரசியல் ஆர்வம் போலவே, ஒவ்வொரு தேர்தலும் எவரும் எதிர் பார்க்காத பல வியப்புகளையும் அதிர்ச்சிகளையும் வாரி இறைத்து விட்டுத்தான் செல்கிறது. அப்படி இதுவரை நடந்த ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் காணப்பட்ட அதிர்ச்சித் தோல்விகள் பற்றி ஒரு பார்வை பார்த்து வரலாம் என்று கிளம்பியதன் விளைவே இப்பதிவு.

விடுதலை பெற்ற இந்தியாவில் 1952-இல் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சட்டமன்றத் தேர்தலில், பிற்காலத்தில் முதலமைச்சர் ஆகும் அளவுக்குப் பெரிய ஆளான பக்தவச்சலம் பொன்னேரி தொகுதியில் தோல்வியைத் தழுவி இருக்கிறார். நம் காலத்தில் காங்கிரசில் இருந்து பாஜக போன ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தந்தை மோகன் குமாரமங்கலம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சேலம் நகரத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றிருக்கிறார். மோகன் குமாரமங்கலத்தின் தாய் ராதாபாய் சுப்பராயன் திருச்செங்கோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். மங்களூர் மண்ணில் பிறந்து, சென்னையிலும் வெளிநாட்டிலும் படித்து, தமிழர் ப.சுப்பராயனை மணந்து (இவர் சென்னை மாகாண முதலமைச்சர் முதல் பல்வேறு மத்திய - மாநில அரசு உயர் பதவிகளில் இருந்தவர்), தமிழ் நாட்டில் அரசியல்வாதி ஆனவர் இவர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஏற்கனவே முதலமைச்சராக இருந்து திருவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி ராஜா தோல்வி பெற்றிருக்கிறார். இதே தேர்தலில் கோழிக்கோட்டில் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தோழர் நம்பூதிரிபாடும் தோல்வியைத் தழுவினார் என்பதும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியது.

அடுத்து வந்த 1957 தேர்தலில், பிற்காலத்தில் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட என்.வி.நடராஜன் பேசின் ப்ரிட்ஜ் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார். அன்பில் தர்மலிங்கம் லால்குடியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். நெடுஞ்செழியன் சேலம்-1 தொகுதியில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் தேனியில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவரின் அமைச்சரவையிலும் இருந்திருக்கிற க.ராஜாராம் திருமங்கலத்தில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். அதற்கு முன்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிற பி.டி.ராஜன் (பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் தந்தையார்) உத்தமபாளையத்தில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். இப்படி சுயேச்சையாகத் தம் திராவிட இயக்க வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தாம் அடுத்து நாட்டைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் என்.சங்கரையா மதுரை கிழக்கில் நின்று தோற்றிருக்கிறார். தோழர் ஜீவா நாகப்பட்டினத்தில் நின்று தோற்றிருக்கிறார்.

அடுத்து வந்த 1962 தேர்தலில், திமுக தனிக்கட்சியாகக் களம் இறங்கி விட்டது. திமுக சார்பில் அதே பேசின் ப்ரிட்ஜில் போட்டியிட்டு என்.வி.நடராஜன் தோல்வியுற்றார். அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் நடேச முதலியாரிடம் தோல்வியுற்றார். முந்தைய காமராஜர் அமைச்சரவையில் இருந்த லூர்தம்மை சைமன் கொளச்சல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி பெறுகிறார். என்.சங்கரையா மீண்டும் அதே மதுரை கிழக்கு தொகுதியில் தோல்வி பெறுகிறார். அண்ணாதுரையிடமும் கருணாநிதியிடமும் அமைச்சராக இருந்து பின்னர் அதிமுகவில் சேர்ந்த சத்தியவாணிமுத்து பெரம்பூரில் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய சி.பா.ஆதித்தனார் திருச்செந்தூரில் தோல்வி பெறுகிறார்.

அடுத்து வந்த 1967 தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலத்தையே புரட்டிப்போட்ட முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, விருதுநகரில் காமராஜரும், மேலூர் தெற்கில் கக்கனும், திருப்பெரும்புதூரில் பக்தவச்சலமும், இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஷ்வர சேதுபதியும் தோற்கிறார்கள். கடவூரில் திமுகவின் அன்பில் தர்மலிங்கம் தோல்வி அடைகிறார்.

அண்ணாவுக்குப் பின் திமுகவை கருணாநிதி முழுமையாகக் கைப்பற்றியபின் நடந்த தேர்தலான 1971-இல் நிறுவனக் காங்கிரஸ் சார்பில் நின்ற நெடுமாறன் மதுரை மத்தியத் தொகுதியிலும், என்.எஸ்.வி.சித்தன் திருமங்கலத்திலும் தோற்கிறார்கள். மற்றபடி காங்கிரஸ் நிறையத் தோற்கிறது. அது ஓர் அதிர்ச்சி இல்லை என்றே ஆகிவிட்ட தேர்தல் அது.

1977 தேர்தல் திமுக உடைந்து அதிமுக உருவாகி ஆட்சியைப் பிடித்த தேர்தல். இதில் இப்போது அதிமுக வந்து விட்ட சத்தியவாணிமுத்து உளுந்தூர் பேட்டையில் தோல்வி பெறுகிறார். பொங்கலூரில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தோற்கிறார். திருமங்கலத்தில் என்.எஸ்.வி.சித்தன் மீண்டும் தோற்கிறார். மதுரை மேற்கில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கம் தோற்கிறார். அம்பாசமுத்திரத்தில் தோழர் நல்லகண்ணு தோற்றிருக்கிறார். சாத்தான்குளத்தில் சி.பா.ஆதித்தனார் தோற்றிருக்கிறார்.

1980-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து பெரும் வெற்றி பெற்றது. அதனால் உடனடியாகச் சட்டமன்றத் தேர்தல் வந்தால் வென்று ஆட்சி அமைத்து விடலாம் என்ற நப்பாசையில் தன்னோடு நல்லுறவில் இருந்த இந்திராவிடம் பேசி எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்து உடனடித் தேர்தலுக்கு ஏற்பாடு செய்கிறார் கருணாநிதி. கிடைத்ததோ பெரும் ஆப்பு. பேராசை பேராப்பு! நம்ம வாத்தியாரின் ஆட்சியை அநியாயமாகக் கலைத்து விட்டார்களே கயவர்கள் என்ற அனுதாபமும் கூட வேலை செய்திருக்க வேண்டும். காமராஜருக்குப் பின் இரண்டு முறை தொடர்ந்து வென்ற ஒரே தலைவர் என்ற பெருமை கிட்டியது எம்.ஜி.ஆருக்கு. திமுகவில் விருதுநகரில் காமராசரைத் தோற்கடித்த சீனிவாசன் தோற்றுப் போகிறார்; மதுரை மத்தியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மீண்டும் தோற்கிறார்; மதுரை மேற்கில் பொன்.முத்துராமலிங்கம் தோற்கிறார். யாரிடம்? அதுதானே முக்கியம். எம்.ஜி.ஆரிடம்!  காங்கிரஸ்காரர்களில் பொங்கலூரில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தோற்கிறார்; சாத்தான்குளத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் தோற்கிறார். இந்த அலைக்கு நடுவிலும் அதிமுகவினரில் முனு ஆதி தாம்பரத்தில் தோற்கிறார். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலோ என்னவோ.

1984 தேர்தல் ஓரளவுக்கு எனக்கு விபரம் தெரிந்து விட்ட தேர்தல். வீட்டில் இடதுசாரிகள் அதிகம் என்பதால் திமுக கூட்டணியில் கருணாநிதியை மீண்டும் கொண்டு வந்து விட உழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் நோக்கத் தொடங்கிய முதல் தேர்தலில் எம்.ஜி.ஆரை வெறுக்கும் கருணாநிதியை ஆதரிக்கும் சிறுவனாகத்தான் தொடங்கினேன். மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து தமிழக அரசியல் வரலாற்றிலேயே மூன்றாம் முறையாக வென்ற ஒரே தலைவர் என்ற சாதனை படைத்துவிட்டார். திமுகவில் நிறையப் பெருந்தோல்விகள். ஆற்காட்டில் ஆற்காட்டு வீராசாமி தோல்வி; அருப்புக்கோட்டையில் தங்கப்பாண்டியன் தோல்வி; பவானியில் என்.கே.கே. பெரியசாமி தோல்வி; ஈரோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி; காட்பாடியில் துரைமுருகன் தோல்வி; ஒரத்தநாட்டில் எல்.கணேசன் தோல்வி; சேலம் இரண்டில் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி; ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் தோல்வி; திருச்செந்தூரில் கே.பி.கந்தசாமி தோல்வி; திருச்சி இரண்டில் அன்பில் தர்மலிங்கம் தோல்வி என்று பல தோல்விகள். பெரம்பூரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியவாணிமுத்து திமுகவின் இளைஞர் பரிதி இளம்வழுதியிடம் தோல்வி அடைகிறார். இங்கிருந்துதான் பரிதியின் அரசியல் வாழ்க்கை அமோகமாகத் தொடங்குகிறது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டானது. ஜெ அணி, ஜா அணி என்று. அதாவது, ஜெயலலிதா அணி - ஜானகி அணி. எம்.ஜி.ஆரின் மனைவி என்ற முறையில் ஜானகி பின்னால்தான் கட்சிக்காரர்களும் மக்களும் நிறையத் திரண்டிருப்பது போல் இருந்தது. ஆனால் நடந்ததோ தலைகீழ். அதிமுகவின் உடைவால் திமுக எளிதில் ஆட்சியைப் பிடித்தது. அதுதான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தன் பலத்தை நிரூபித்த கடைசித் தேர்தல். தனியாகப் போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்றார்கள். ஜெ அணி 27 தொகுதிகளில் வென்றது. எதிர்க்கட்சி ஆனது. ஆலங்குளத்தில் ஜெ அணி சார்பில் நின்ற கருப்பசாமிப் பாண்டியனும் ஜா அணி சார்பில் நின்ற ஆலடி அருணாவும் தோல்வி கண்டார்கள். இருவருமே பின்னர் திமுக வந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டியது. எம்.ஜி.ஆரின் தொகுதியான ஆண்டிபட்டியில் நின்ற ஜானகி மூன்றாம் இடத்துக்கு வந்து படுதோல்வி அடைந்தார். திமுகவின் சுகவனம் தோல்வியடைந்தார். பவானிசாகரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். மதுரை மத்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் (கா) சார்பில் போட்டியிட்டு ஐந்தாம் இடம் அடைந்தார் பழ. நெடுமாறன். பத்மநாபபுரம் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வேலாயுதம் என்பவர் நான்காம் இடம் வருகிறார். இவரே பின்னர் 1996-இல் இதே தொகுதி மூலம் தமிழகத்தின் முதல் பா.ஜ.க. உறுப்பினராக அவை செல்கிறார். பனமரத்துப்பட்டியில் ரங்கராஜன் குமாரமங்கலம் மூன்றாம் இடம் செல்கிறார். பெரியகுளத்தில் ஜா அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் மூன்றாம் இடம் செல்கிறார். சிவகங்கையில் சுதர்சன நாச்சியப்பன் இரண்டாம் இடம் வருகிறார். திருமங்கலத்தில் என்.எஸ்.வி.சித்தன் இரண்டாமிடம் பெறுகிறார். திருவரும்பூரில் ஜெ அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.சோமசுந்தரம் மூன்றாம் இடம் செல்கிறார். திருவையாறில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவாஜி கணேசன் தோல்வியுற்று இரண்டாம் இடம் பெறுகிறார். ஜெ அணியில் போட்டியிட்ட முனு ஆதி திருத்தணியில் இரண்டாமிடம் பெறுகிறார்.

ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின் நடைபெற்ற 1991 தேர்தலில் மொத்தத் தமிழகத்திலும் திமுக ஏழே ஏழு தொகுதிகளில்தான் வென்றது. திமுக கூட்டணியில் சிவாஜி கணேசன் தலைமையிலான ஜனதா தளமும் டி.ராஜேந்தர் தலைமையிலான தாயக மறுமலர்ச்சிக் கழகமும் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலோடே அழிந்தே போயின. இவர் அவர் என்று சொல்லவேண்டியதில்லை. திமுக கூட்டணியில் பெரும்பாலானோர் தோற்றுப் போயினர் என்று சொல்லிவிடலாந்தான். இருந்தாலும் சில முக்கியப் புள்ளிகளை மட்டும் பார்ப்போம். ஆத்தூரில் ஐ.பெரியசாமி, சேப்பாக்கத்தில் க.அன்பழகன், சிதம்பரத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காட்பாடியில் துரைமுருகன், குத்தாலத்தில் கோ.சி.மணி, லால்குடியில் கே.என்.நேரு, மதுரை மேற்கில் பொன்.முத்துராமலிங்கம், பூங்காநகரில் ரகுமான்கான், புரசைவாக்கத்தில் ஆற்காடு வீராசாமி, சேலம் இரண்டில் வீரபாண்டி ஆறுமுகம், ஆயிரம் விளக்கில் ஸ்டாலின், திருவல்லிக்கேணியில் நாஞ்சில் மனோகரன், வெள்ளக்கோயிலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அப்படியான முக்கியப் புள்ளிகள். திமுகவின் முக்கியத் தலைவர்கள் எப்போதும் சென்னையிலேயே நிற்பதுதான் அப்போதைய வழக்கம். அதுதான் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. அப்படியிருந்தும் இந்தத் தேர்தலில் பல பெருந்தோல்விகள். பர்கூரில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்று டி.ராஜேந்தர் தோல்வியுற்றார். அப்போதெல்லாம் அவர் பெரும் போராளி. இப்போது போல் ஜோக்கர் அல்ல. அதே கட்சியில் நின்று பாளையங்கோட்டையில் கருப்பசாமிப் பாண்டியன் தோற்றார். மறந்து போன சுவையான வரலாறுகள்! சென்ற தேர்தலில் மொத்தத் தமிழகத்திலும் ஜா அணி தோற்றபோதும் தனி மனிதராக வென்று வந்த பி.எச். பாண்டியன் அதே சேரன்மாதேவியில் இம்முறை தோல்வி கண்டார். மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜி.கே.மணி இரண்டாமிடம் பெற்றார்.

1996 முக்கியமான தேர்தல். கிடைத்த மாபெரும் வாய்ப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவறாகப் பயன்படுத்தி ஆட்டமான ஆட்டம் ஆடி தமிழ்நாட்டையே சுடுகாடாக்கிய ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்தது. குமரி அனந்தனும் அவர் போன்று சிலர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் மாட்டிக்கொண்டனர். சூடு சொரணை உள்ள மற்றவர்கள் எல்லாம் மூப்பனார் பின் அணி வகுத்து, திமுகவுடன் கூட்டணி அமைத்துக் களம் கண்டனர். இந்த மாபெரும் கூட்டணி காரணமாக, பெரும்பலத்தோடு திமுகவிலிருந்து வெளியேறிக் கட்சி ஆரம்பித்திருந்த வைகோவின் கனவுகள் அனைத்தும் சீட்டுக்கட்டாகச் சரிந்தன. "தமிழ்நாடு முழுக்க அதிமுக தோற்றாலும் பர்கூரில் ஜெயலலிதா தோற்க மாட்டார். காரணம் தமிழ்நாடு முழுக்க ஆட்டம் போட்டாலும் பர்கூருக்கு மட்டும் அந்த அளவுக்குச் செய்திருக்கிறார்" என்றார்கள். அதே பர்கூரில் யாருமே எதிர்பாராத விதத்தில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதியை எதிர்த்து நின்ற நெல்லை கண்ணன் தோற்றார். சேரன்மாதேவியில் மீண்டும் சுயேச்சையாக நின்ற பி.எச்.பாண்டியன் மீண்டும் தோற்றார். அதிமுகவின் பெருந்தலைகளான செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்திலும், ஜெயக்குமார் ராயபுரத்திலும், செம்மலை சேலம் இரண்டிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சாத்தூரிலும், சேடபட்டி முத்தையா சேடபட்டியிலும், எஸ்.டி.எஸ். தஞ்சாவூரிலும், நெடுஞ்செழியன் தேனியிலும், கருப்பசாமிப்பாண்டியன் திருநெல்வேலியிலும், கண்ணப்பன் திருப்பத்தூரிலும் தோற்றார்கள். எங்கள் தொகுதியான விளாத்திகுளத்தில் நின்ற வைகோ அறுநூத்திச் சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். யாரிடம்? திமுகவோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத - திடீரென்று வந்து நின்ற ஒரு சிறுவனிடம். சிறுவன் பின்னர் அதிமுக போனார். பின்னர் திருட்டு - பித்தலாட்டம் போன்ற பல வழக்குகளில் காவற் துறையால் தேடப்பட்டுக் கைது செய்யப் பட்டவர் ஆனார். அன்று வைகோ மட்டும் வென்றிருந்தால் கூட மதிமுகவின் வரலாறு ஓரளவு மாறியிருக்கலாம். ஒரு திருடனிடம் தோல்வியுற்றோமே என்ற அவருடைய பல இரவுத் தூக்கங்கள் காக்கப்பட்டிருக்கலாம். இதெல்லாந்தானே அரசியல்!

ஓரளவுக்கு நல்லாட்சி கொடுத்திருந்த போதும் 2001 தேர்தலில் திமுக தோல்வியே கண்டது. அதற்குப் பல காரணங்கள். தென் தமிழகத்தில் சாதிய மோதல்கள் அதிகமாயின. கருணாநிதி எப்போதுமே சட்டம் ஒழுங்கைச் சரியாகக் காப்பாற்ற முடியாதவர் என்கிற கருத்து வலுத்தது. மூப்பனார் பிரதமர் ஆவதைக் கெடுத்ததன் மூலமும் டெல்லியில் நடத்திய பல சித்து விளையாட்டுகள் மூலமும் இவர் கதாநாயகனை விட வில்லன்னுக்குத்தான் பொருத்தமானவர் என்பது போன்ற பிம்பத்தை மீண்டும் வம்படியாக உருவாக்கிக் கொண்டார். பேச்சுக்கும் செயலுக்கும் எப்போதும் தொடர்பே இராது என்கிற மாதிரி பாஜகவோடு கூட்டணி வைத்தார். என்றென்றும் இவர் பின்னால் வரும் சிறுபான்மையினரும் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஜெயலலிதாவோடு சென்றன. சிரமப்பட்டுக் கொஞ்சம் நல்லவராக இருந்திருந்தால் அல்லது நடித்திருந்தால் கூட முற்றிலும் தவிர்க்கப் பட்டிருக்க முடிந்த வெற்றியை மீண்டும் அதிமுகவுக்கு அளித்து மாபெரும் வரலாற்றுத் தவறைச் செய்தார் தலீவர். திமுகவில் பல பெருந்தோல்விகள். ஆலங்குளத்தில் ஆலடி அருணா, அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன், அருப்புக்கோட்டையில் தங்கம் தென்னரசு, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, பர்கூரில் சுகவனம், ஈரோட்டில் என்.கே.கே. பெரியசாமி, லால்குடியில் கே.என்.நேரு, மதுரை மேற்கில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், பூங்காநகரில் டி.ராஜேந்தர் (இப்போது கூட அவர் அவ்வளவு காமெடியன் ஆகவில்லை), ராமநாதபுரத்தில் ரகுமான்கான், தென்காசியில் கருப்பசாமிப்பாண்டியன், திருநெல்வேலியில் ஏ.எல்.சுப்பிரமணியன், தூத்துக்குடியில் என்.பெரியசாமி, வீரபாண்டியில் வீரபாண்டி ஆறுமுகம் என்று பல தோல்விகள். தி.நகரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாய் சுலோச்சனா சம்பத் தோற்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற கண்ணப்பன் இளையான்குடியில் தோற்றார். ஓட்டப்பிடாரத்திலும் வால்பாறையிலும் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இரண்டிலும் தோற்றார். பத்மநாபபுரத்தில் பாஜக உறுப்பினர் வேலாயுதம் தோற்றார். திருவொற்றியூரில் சுயேச்சையாகப் போட்டியிட்ட குமரி அனந்தன் தோற்றார்.

2006-இல் கூட்டணியின் முக்கியத்துவம் அறிந்து, காங்கிரஸ், பாமக, சிவப்புத் துண்டுத் தோழர்கள் என்று எல்லோரையும் இணைத்துக் கொண்டு மீண்டும் திமுக வந்தது. இம்முறை எம்முறையும் இல்லாத அளவுக்கு ஆட்டம் போட்டார்கள். வைகோவைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்து அதிமுக பக்கம் அனுப்பி, அவரையும் கட்சியையும் அழித்தார்கள். சன்.டி.வி.யின் வளர்ச்சி எல்லோருக்கும் கண்ணை உறுத்தும் அளவுக்குப் பெரிதாகி இருந்தது. இதில் அதிமுகவினர் பலர் பெருந்தோல்வி கண்டனர். கடலாடியில் சத்தியமூர்த்தி, கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், காவேரிப்பட்டிணத்தில் கே.பி.முனுசாமி, வேதாரண்யத்தில் ஓ.எஸ். மணியன் ஆகியோர். "இவர்களெல்லாம் யாரென்றே எனக்குத் தெரியாது; இவர்களைப் பற்றி எல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?" என்கிறீர்களா? அதுதான் அதிமுக பாணி. அதிர்ச்சியூட்டும் வகையில் பூங்காநகரில் போட்டியிட்ட திமுகவின் ரகுமான்கான் தோல்வியுற்றார். தொண்டாமுத்தூரில் மதிமுக அவைத்தலைவர் கண்ணப்பனிடம் காங்கிரஸ் கட்சியின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தோல்வி கண்டார்.

ஆட்டமான ஆட்டம் ஆடினால் விட்டுவைக்கிற அளவுக்கு நல்லவர்களா என்ன நம் மக்கள்! எதற்கும் அளவு இருக்கிறதல்லவா!! அலைக்கற்றை ஊழல் மற்றும் ஈழப்பிரச்சனை காரணமாகத் திமுகவை வீட்டுக்கனுப்பி அதிமுகவை மீண்டும் கொண்டு வந்த தேர்தல் இது - 2011. எதிர்க்கட்சியாக இருக்கும் வாய்ப்பைக் கூட நேற்றுப் பிறந்த தேமுதிகவிடம் இழந்தது பாரம்பரியம் பேசும் திமுக. திமுக பல பெரும் தோல்விகளைக் கண்டது. வில்லிவாக்கத்தில் க.அன்பழகன், எழும்பூரில் பரிதி இளம்வழுதி, பாப்பிரெட்டிபட்டியில் முல்லைவேந்தன், கீழ்பெண்ணாத்தூரில் கு.பிச்சாண்டி, விழுப்புரத்தில் பொன்முடி, கோயம்புத்தூர் தெற்கில் பொங்கலூர் பழனிச்சாமி, திருச்சி மேற்கில் கே.என்.நேரு, திருச்சி கிழக்கில் அன்பில் பெரியசாமி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, தூத்துக்குடியில் கீதா ஜீவன், தென்காசியில் கருப்பசாமிப்பாண்டியன் (இவர் தோற்றது ஜெயலலிதாவின் வாழ்நாள் அடிமையாகக் காட்டிக் கொள்ள விரும்பும் சரத்குமாரிடம்), ஆலங்குளத்தில் பூங்கோதை ஆலடி அருணா, அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன், கன்னியாகுமரியில் சுரேஷ் ராஜன் ஆகியோர். துணை முதல்வர் ஆகும் கனவில், மனைவியை நிறுத்துவது போல் நிறுத்தி, விண்ணப்பத்தில் கோளாறுகள் செய்து, பின்வாசல் வழியாக தகிடுதத்தம் பண்ணி வந்த தங்கபாலு மைலாப்பூரில் தோல்வியுற்றார். மேட்டூரில் பாமகவின் ஜி.கே.மணி தோற்றார். இருப்பது காங்கிரஸ் கட்சியில் என்றாலும் கருணாநிதியின் தலைசிறந்த அடிவருடிகளில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூரில் தோல்வியுற்றார். காங்கிரஸ் கட்சியின் பணம் காய்க்கும் மரங்களில் ஒருவரான வசந்த் குமார் (ஐயா குமரி அனந்தனின் தம்பியும் அக்கா தமிழிசையின் சித்தப்பாவுமானவர்) நாங்குநேரியில் தோற்றார்.

இந்தத் தேர்தல் இன்னும் எத்தனை அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் கொடுக்கப் போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்!

பின்குறிப்பு: இதில் சில பெயர்கள் எந்தத் தேர்தலில் எந்தக் கட்சியில் இருந்தார்கள், எத்தனை முறை இவர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் கட்சி மாறினார்கள் என்றெல்லாம் வரும் குழப்பங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க இயலாது! மன்னிக்கவும்!!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...