திங்கள், நவம்பர் 12, 2012

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6


தொடர்ச்சி...

"அப்பாவின் பிள்ளை" என்கிற கதையும் நம்மில் பலருக்கு எளிதில் சட்டென உரைக்கும் விதமானது. தினமும் வேலைக்குச் சென்று வரும் அப்பா எப்போதும் சிடுமூஞ்சியாகவே இருப்பார். வேலை முடிந்து வீடு திரும்புகையில், இரவில் எப்போதுமே கதவை ஓங்கி ஓங்கித்தான் தட்டுவார். அதனால் அவருடைய மகனான நம் கதைத் தலைவனுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. இப்படியிருக்கையில், இவனும் ஒரு நாள் வேலைக்குப் போக ஆரம்பிப்பான். அப்படி வேலைக்குப் போன முதல் நாளே அவனை நாயாய்ப் படுத்தி, சக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடுவார்கள். அத்தனை அலைக்கழிப்புகளையும் தாங்கிக் கொண்டு வீடு திரும்பி, அன்றிரவு இவனும் கதவைத் தட்டும் சூழ்நிலை வரும். இவனும் தனக்குப் பிடிக்காத தந்தை போலவே ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டுவான். அப்போதுதான் உணர்வான் - "நம்மளும் அப்பா மாதிரியா அப்ப?" என்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். அதற்கான நியாயங்களை அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் ஒழிய நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்கிற தத்துவத்தைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. இன்னொன்று, வேலைக்குச் சென்ற இடத்தில் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் வீட்டிலும் வீட்டில் இருக்கும் கதவிலும்தானே காட்ட முடியும் என்றும் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இதுவும் கீழ்நடுத்தர வர்க்கத்தின் இயலாமைகளைச் சொல்கிற கதையென்றே எடுத்துக் கொள்ளலாம்.

"சுப்புத்தாய்" என்ற கதையில் சுப்புத்தாய் தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்க்கும் குழந்தைத் தொழிலாளி. அவளுடைய தாய்க்குக் கைப்பிள்ளை வேறு ஒன்றிருக்கும். அந்தப் பிள்ளைக்கு உடம்புச் சரியில்லாத போது டவுனுக்குப் போய் வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில், மகள் வேலைக்குச் செல்லும் தீப்பெட்டி ஆபீஸ் வண்டியிலேயே அவளுடனேயே தொத்திக் கொண்டு போய் இறங்கி விடுவாள். ஆஸ்பத்திரிக்குப் போனால் கொடுக்கக் காசு வேண்டுமே. அதற்காக மகள் வேலை பார்க்கும் ஆபீசிலேயே ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு போகலாம் என்று உட்கார்ந்திருப்பாள். ஐந்து ரூபாய்க் காசுக்காக மணிக் கணக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது இல்லாத கணவனைப் பற்றிக் கவலைப் படுவாள். அவளுடைய வலிகளை நினைத்து நாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போதே அடுத்து ஒரு பிரச்சனை. அங்கே இருக்கும் கணக்கன் அவளிடம் தவறாக நடக்க முயற்சிப்பான். இதில் எல்லாம் இருந்து விடுபட்டு, ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தால், அங்கிருக்கும் நர்சம்மா அவள் பங்குக்குப் பிடித்துக் கடித்துக் குதறுவாள். ஒவ்வொன்றும் அததுக்கு ஏற்ற மாதிரி ஆளாளுக்கு சில அடிமைகளை அடையாளம் கண்டு கொண்டு வைத்துக் கொள்ளுதுகள். அவர்களிடம் ஏறி மேய்வதன் மூலம் தன் ஈகோப் பசிக்குத் தீனி போட்டுக் கொள்வதுதான் இதுகளின் முக்கிய நோக்கம். இதற்கு இரையாவது பெரும்பாலும் அடித்தட்டுச் சாமானிய மக்களே. அந்த வலியை இந்தக் கதை முழுக்கத் திரும்பத் திரும்ப உணர முடியும்.

"குரல்கள்" என்ற கதையில் வெடிக் கம்பெனி விபத்தில் சிக்கி இறந்து போகும் பலர் போக, உயிர் பிழைத்த மூன்று சிறுவர்களையும் அதில் முக்கியமான ஒருவனான மாரி என்ற சிறுவனையும் பற்றிப் பேசப் படுகிறது. மாரி கிறுக்குப் பிடித்தது போல் ஆகி இரவெல்லாம் கத்துவான். முதற் சில நாட்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து ஆறுதலாக உடனிருப்பார்கள். நாளாக ஆக கூட்டம் குறைந்து அது ஒரு சாதாரண விசயமாகி விடும். தினமும் இரவில் திடீரென எழுந்து கத்துவதும் திரும்பப் படுத்துத் தூங்குவதும் என்று வாழ்க்கை நகர ஆரம்பித்து விடும். பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்பது சிவகாசி என்ற ஊர் உருவான நாளில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட இன்னும் ஒருவன் பிறந்து வரவில்லை. ஒவ்வொரு விபத்துக்குப் பின் பெட்டிகள் பரிமாறுவதும், நூறு பேர் செத்தால் இருபது-முப்பது என்று எண்ணிக்கையை மாற்றிச் சொல்லி ஏமாற்றிக் கதையை முடிப்பதும், பின்னர் கொஞ்ச காலத்தில் அது அப்படியே அமுங்கிப் போவதும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. பிழைத்தவர்கள் மூவரையும் போட்டோ எடுக்க வந்து கொண்டே இருக்கும் பத்திரிகைகள் கூட இந்த விசயத்தில் இன்னும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் ஊருக்குள் வருகிற ஆட்களிடம் காசு ஏதாவது கிடைக்குமா என்று ஏங்கிக் குவியும் மக்களின் வாழ்க்கை அவலம் எப்போது மாறுமோ தெரியவில்லை.

முன்பே சொன்ன மாதிரி, "வாளின் தனிமை" அடிக்கடிப் படித்த கதை. எந்த நேரமும் வாளைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் சுப்பையா அதன் பெருமையை எண்ணி எண்ணிப் பூரிப்பவன் என்பது மட்டும் புரிந்தது. அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை. அதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்னவென்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாற்றல் இன்னும் வளரவில்லை என்பதால் அது பற்றிப் பேசாமல் போய் விடுவதே உத்தமம் என்று எண்ணுகிறேன்.

"குதிரை வண்டியில் வந்தவன்" என்ற கதை மனித குலத்தின் மாபெரும் பிரச்சனையான மண வாழ்க்கைப் பிரச்சனை பற்றிப் பேசுகிறது. பிடிக்காத ஒருவனைக் கட்ட நேர்கிற கஷ்டம் சாதாரணமானதில்லை. ஏதோ சினிமாக்காரர்களின் புண்ணியத்தில் ஓரளவுக்கு நிலைமை இப்போது மாறியிருக்கிறது என்றாலும், பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இன்னமும் தன் தந்தை காட்டியவனைக் கண்ணை மூடிக் கொண்டு கட்டிக் கொள்ளும் கட்டாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதற் பிரச்சனை ரஜினிகளையும் கமல்களையும் கனவு கண்டு காத்திருக்கும் பெண், சராசரி மனிதன் ஒருவனைக் கைப்பிடிக்கையில் உடைந்து போகிறாள். இன்னொன்று, பிறந்தது முதல் தன் கண் முன்னால் இருக்கும் ஆடவன் ஒருவனைக் கணக்குப் போட்டு வளர்கிறவள், வருகிறவன் எவனாக இருந்தாலும் அவனை முந்தையவனோடு ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அவனுமே கூட ஒரு டுபுக்காக இருந்திருக்கக் கூடும். ஆனால், அவனோடு வாழ்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிட்டாமலே போய் விடுவதால் அவன் ஹீரோவாகவே நிலைத்து விடுவான். உடன் வாழ வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டதால், இவன் ஜீரோவாகவே தெரிவான்.

பெண்களின் மன ஆசைகள் அனைத்தையும் நுட்பமாகப் பேசியிருக்கிறார். அக்கா-தங்கையோடு பிறக்காத பலர், வீடு திரும்பும் போது பூ வாங்கி வரக் கூடத் துப்பில்லாத கேவலப் பிறவிகளாக நாறிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கதையில் குதிரை வண்டியில் வந்தவன், அதெல்லாம் கூட தினமும் மிகச் சிறப்பாகச் செய்தும் கூட நல்ல பெயர் வாங்க முடியாமல் சிரமப் படுகிறான் பாவம். அது மட்டுமா, தனிக்குடித்தனமெல்லாம் அழைத்து வந்து தன் ராணியை மகாராணி போலப் பார்த்துக் கொள்வான். அப்படியிருந்தும் அவளுடைய மனதில் இடம் பிடிக்க முடியாமல் தவிப்பான். பெண்களுக்கு எதெல்லாம் பிடிக்கும் என்று சூப்பர் சூப்பராக யோசித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பான். அவளோ அவளுக்கென்று சில எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் வைத்துக் கொண்டு வருந்திக் கொண்டிருப்பாள். தன்னை வசு என்று செல்லமாக அழைக்க வேண்டும் அவன் என்று ஆசைப் படுவாள். அவனோ பள்ளிக் கூடத்தில் போல முழுப்பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டிருப்பான். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு ஆசைகள். சித்தப்பாக்களும் அண்ணன்களும் சொல்லிக் கொடுத்தது போல பொதுவான எதிர்பார்ப்புகள் என்று எதுவும் இல்லை என்பது போலச் சொல்ல முயன்றிருக்கிறார். ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

காலத்தின் கோலம், இப்படி வாழ்ந்து கிழித்த இவர்கள், கொஞ்ச காலம் போன பின்பு, எதிர் வீட்டில் புதிதாகக் குடி வந்த புதுமணத் தம்பதிக்கு ஐடியாக் கொடுக்கும் அளவுக்குக் காட்சிகள் மாறி விடும். அவர்கள் குடும்ப வாழ்க்கையும் நாறிக் கொண்டிருக்கும். யார் குடும்ப வாழ்க்கைதான் மணத்தது! இவன் ஏதோ பெரிய வித்துவான் போல அவனை அழைத்து வந்து ஐடியாக் கொடுக்க உட்கார்ந்தால், அந்த நேரம்அவனுடைய மனைவி இவனுடைய மனைவியோடு பேசுவதற்காக உள்ளே நுழைவாள். வந்தவள் சும்மாயிருக்காமல், "இன்னைக்கு சமையல் உன்னோட வேலையப்பு!" என்று நினைவு படுத்திக் கொண்டு உள்ளே வருவாள். அத்தோடு கதை முடியும். அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது நம் கற்பனையைப் பொருத்தது. இவன் அவனைக் கெடுத்தானா அல்லது அவன் மனைவி இவன் மனைவியைக் கெடுத்தாளா அல்லது இரண்டு குடும்பங்களிலும் அமைதியும் சமாதானமும் குடி கொண்டனவா அல்லது இரண்டு  குடும்பங்களும் இன்னும் நாற ஆரம்பித்தனவா என்பது நம் வாழ்க்கையனுபவங்களைப் பொருத்து மாறும்.

"சிவராணி" என்ற கதையில் இரண்டு சிவாக்கள். ஓர் ஆம்பளை சிவா. ஒரு பொம்பளை சிவா. பொம்பளை சிவாதான் சிவராணி. இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சிவராணிதான் வகுப்பில் எப்போதும் முதலில் வருவாள். அவள் மீது ஏற்படும் ஓர் ஈர்ப்பு கலந்த போட்டி காரணமாக மக்கு சிவா பெரும் படிப்பாளி ஆகி விடுவான். அதன் பின்பு அவளை வீழ்த்துவதே குறியாகக் கொண்டு படிப்பில் கிறுக்காகி விடுவான். இருவரும் வெவ்வேறு ஊர்களுக்குப் பிரிந்து சென்ற பின்னும் இவள் பற்றிய நினைவோடே படிப்பில் கலக்கிக் கொண்டிருப்பான். கல்லூரியில் கூட இவளுடைய ஊர்க்காரன் ஒருவனைப் பார்க்கும் போது இவளுடைய மதிப்பெண்கள் பற்றி விசாரிப்பான். அப்போதும் அவளே இவனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பாள் என்று அறிவான். கடைசிவரை இவளை வெல்லவே முடியவில்லையே என்று ஏங்கி அடங்குவான். அதன் பின்பு காலம் உருண்டோடியபின் ஒரு நாளில் மதுரை பேருந்து நிலையம் அருகில் அவளைச் சந்திப்பான். எப்போதும் முதலில் வந்தவள், குழந்தையின்மையால் மண வாழ்க்கையில் கிட்டத்தட்டத் தோல்வியுற்று, தன் கணவனைத் தன் தங்கையிடமே இழக்கப் போகும் நிலைக்கு அருகில் வந்து நிற்பதைச் சொல்வாள். "படிப்பில் எப்போதும் முதலில் வந்தவள், வாழ்க்கையில் இரண்டாவது ஆவது எதனால்?", "பெண் என்பதால் மட்டும்தானே!" என்கிற கேள்வி பதிலோடு முடியும் கதை.

முதன்முறை தங்களுக்குள் ஏற்படும் தொடர்பை அவன் அப்படியே நினைவில் வைத்திருப்பது, அந்த நாளில் அவள் போட்டிருந்த உடையின் நிறமும் விதமும் கூட நினைவில் வைத்திருப்பது போன்ற நுணுக்கமான விசயங்கள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. கள்ளன் போலீஸ், ரைட்ட தப்பா போன்ற விளையாட்டுகளை ஆடிய-பார்த்த கடைசித் தலைமுறை ஆள் என்ற முறையில் அவற்றைப் பற்றிய நினைவுகளையும் அசை போடும் வாய்ப்பைப் பெற்றேன் இந்தக் கதை மூலம்.

"ஏவாளின் குற்றச்சாட்டுகள்" கதையில் மீண்டும் குடும்ப வாழ்க்கைப் பிரச்சனைகள் வந்து சிரிசிரியெனச் சிரிக்க வைத்தன. கடைசிவரை இவள் சந்தேகப் படுகிறாளா அல்லது அவன்தான் பொறுக்கியா என்று புரிபடவே இல்லை. இத்தகைய ட்யூப் லைட்டுகள் இருக்கும்வரை எமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்களோ!

"...மற்றும் மைனாக்கள்" கதையில், "டவுனில் நிலா கிடையாது, திண்ணையும் கிடையாது, திண்ணையில் அப்பத்தாளும் கிடையாது" என்று ஏங்கும் குழந்தை மனம் நம்மையும் எதற்காகவோ ஏங்க வைக்கிறது. குழந்தைகளின் உளவியல் சிறப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சித்தப்பா வீட்டில் பிரச்சனையில்லாமல் இருக்கிற சிறுவனை இழுத்து வந்து தன் தங்கை வீட்டில் போய் விடுவாள் அவனுடைய பொறுக்க மாட்டாத அம்மாக்காரி. விருப்பமே இல்லாமல் துடிக்கும் குழந்தையை ஏமாற்றி அனுப்பி வைப்பாள். 'பாதகத்தி இப்படி நம்மைப் பிரிக்கிறாளே!' என்று மனசுக்குள் துடிக்கும் அப்பாவும் சித்தப்பாவும், "நீ மனசிலே வச்சிக்கிறாதே" என்று பேசிக் கொள்கிற காட்சியில் நமக்கும் மனம் வலிக்கிறது; வேலைக்குப் போகும் தாய் தந்தை பெரும்பாலும் இப்படித்தான் தம் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கிறார்கள். பெண்ணுரிமையை மீட்டெடுக்கத் துவங்கியிருக்கும் இந்த நெடிய போரில் அடுத்த தலைமுறைக் குழந்தைகள்தாம் ஏக்கம் நிறைந்தவையாகவும் கவனிக்க ஆளில்லாமல் கைவிடப் பட்டவையாகவும் உருவாகப் போகின்றன. இதன் பாதிப்புகளைப் புரிந்து கொள்ள நாம் ஒரு தலைமுறை பொறுத்திருந்து ஆக வேண்டும்.

"வெளிறிய முத்தம்" என்ற கதையிலும் ஏகப்பட்ட கணவன்-மனைவிப் பிரச்சனைகள். என்னத்தைச் சொல்ல?! "முதலில் தூங்குபவர் பிரியம் குறைந்தவர்!" என்பது போன்ற வறட்டுச் சூத்திரங்கள் அப்பவே இருந்தனவா?! பாவம்தான் போங்கள். "இப்படி வெட்டிக் கணக்குகளில் வாழ்க்கையின் பொன்னான பொழுதுகளை வீணடிக்கும் இளஞ்சோடிகள் எப்போது இதையெல்லாம் விட்டு வெளியே வந்து நல்வழியில் போவார்களோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்!" என்று கேப்டன் பாணியில் வசனம் பேசத் துடிக்கிறது மீசை. "கணவனும் மனைவியும் நிம்மதியாக வாழ்வதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் முக்கியம்!" என்கிற மாவு ஏற்கனவே நிறைய அரைத்துப் புளித்தது. அதற்கடுத்த கட்டமாக, "கட்டிக் கொடுத்தல், விட்டுக் கொடுத்தல், தட்டிக் கொடுத்தல்... அதெல்லாம் இருக்கட்டும் உடு நைனா. ஒன்னையிட்டு எனக்கு இன்னா பிரயோசனம்? அதச் சொல்லு முதல்ல!" என்று கேட்கும் காலம் வந்து விட்டது. அதற்கு ஒரே பதில், "தினமும் நான் பார்க்கும் வேலையில் எவ்வளவை நீ பகிர்ந்து கொள்ள முடியும்?" என்பதற்கான பதில் மட்டுமே. அதுவும் சிறிது இந்தக் கதையில் கிளறப் பட்டிருக்கிறது.

தொடரும்...

ஞாயிறு, நவம்பர் 11, 2012

பாரதியார் கட்டுரைகள் - 3/N

தொடர்ச்சி...

"கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு" என்கிறார் ஓரிடத்தில். அப்படியானால், அவருக்கே தெரிந்திருந்திருக்கிறது, அவர் முழுமையாகப் பச்சைத் தமிழில் சொல்லவில்லை எல்லாத்தையும் என்பது! பெண் தெய்வம் என்பதே நம்மைச் சுற்றியுள்ள பெண்களை மதிப்பதற்காக அமைத்துக் கொடுக்கப் பட்டது என்கிற விளக்கம் நன்றாக இருக்கிறது. அதையெல்லாம் எவ்வளவு கடைப் பிடிக்கிறோம் என்பது வேறு கதை. அப்படியாவது சாமிப் பெயரைச் சொல்லிப் பயமுறுத்தினால்தான் நம்ம பயல்கள் வழிக்கு வருவார்கள் என்றும் யோசித்துச் சொன்னாரா என்றும் தெரியவில்லை. எது எப்படியிருப்பினும் பெண்ணுரிமைக்கு உண்மையான தொண்டாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது மட்டும் திண்ணம்.

"சிவன் நீ; சக்தி உன் மனைவி.
விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி.

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம். இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்" என்கிற வரிகள், "நான் கடவுள், நீ கடவுள்!" என்று 'அன்பே சிவம்' திரைப்படத்தில் கமல் சொன்னது போலக் குழப்பிக் குருமா வைப்பது போல இருக்கலாம் நிறையப் பேருக்கு. ஆனால், அதற்குள்ளும் பலான தத்துவங்கள் எல்லாம் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் சிவனாக-பெருமாளாக-பிரம்மனாக நம்மைக் கற்பனை செய்து கொள்ளும் போது அளப்பரிய சாதனைகளும் சேவைகளும் செய்யும் அளவுக்கான சக்தி பிறக்கிறது. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உண்டாகிறது. தன்னை ரஜினியாகவும் கமலாகவும் கற்பனை செய்து கொள்வோரே பெரும் பெரும் நற்பணிகள் செய்ய முடியும் என்றால், கடவுளாகக் கற்பனை செய்து கொள்வோருக்கு எல்லையா இருக்கிறது?!

கோயில்களுக்குப் போகும் போது இந்தச் சிந்தனைகள் தூண்டப்பட வேண்டும். அது நடக்கிறதா? சத்தியமாக இல்லை. வருமானம் கூட வேண்டும்-வீடு வாங்க வேண்டும்-நகைகளை வாங்கிப் பதுக்க வேண்டும்-முடிந்தால், சுற்றி இருப்போரில் நாலு பேர் நாசமாப் போக வேண்டும்... இது போன்ற சிந்தனைகள்தாம் நம்மை ஆக்கிரமிக்கின்றன. பாரதி சொல்வது போல, பூசாரிகள் எதையும் நம்மிடம் மறைப்பது போலெல்லாம் தெரியவில்லை எனக்கு. அவர்களுக்கே அந்த அளவுக்கு அறிவெல்லாம் இருக்கிறதா தெரியவில்லை. எல்லாமே பிழைப்புவாதிகள். அதற்குள் கொஞ்சம் ஏற்றத்தாழ்வையும் புகுத்த முடிந்தால் பிழைப்பு இன்னும் கொஞ்சம் நன்றாக ஓடும் என்பதற்கு அப்பாற்பட்டு ஆன்மீகமோ கோயிலோ வேறு எந்த நல்லதையும் நம் அடித்தட்டு மக்களுக்குச் செய்யவில்லை.

"கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வங் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ஜனங்கள் பூசாரிகளை அவமதிப்பாக நடத்தி, பழைய மாமூலை உத்தேசித்துக் கல்லை மாத்திரம் கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட கல் வரம் கொடுக்கவே கொடுக்காது. எப்படிச் சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தியுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான் நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லை விட்டுப் போய் விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும்" என்கிறார்.

இதன் மூலம் வைக்கப்படும் ஒரு மாபெரும் குற்றச்சாட்டு, ஆன்மீகத்தை அழிக்கிற வேலையைப் பூசாரிகள்தாம் முன்னின்று செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது. இத்தகைய ஒரு கருத்தை முதன் முதலில் இவ்வளவு உரக்கச் சொன்ன பார்ப்பனர் பாரதியாகத்தான் இருக்க வேண்டும். கல்லில் உறைந்திருந்த கடவுளே எழுந்து ஓடியது அவர்களால்தான் என்றும் சாடுகிறார். இதையெல்லாம் படித்த பின்பும் பாரதியை இந்துத்துவர் என்று அழைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விவேகானந்தர் போலவே இவரும் தன் மதத்தின் மீது அளவிலாத மரியாதையும் அதை அழிப்போரைப் பார்த்து ஆவேசமும் கொண்டவராக இருக்கிறார்.

"கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி: தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு - ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், 'ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி' என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன் மீது ஸகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் ஸந்தேஹமே கிடையாது" எனும் போது ஆன்மிகம் அல்லது மதம் பற்றிய அவருடைய பார்வை தெளிவாக வெளிப்படுகிறது. 

இதைத்தானே விவேகானந்தரும் சொன்னார். சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் ஒரு பிரச்சனையே அல்ல. மொள்ளமாரி வேலைகள் செய்யக் கூடாது. அதையும் கடவுளின் பெயரால் செய்யக் கூடாது. அதுதான் ஆன்மிகம் மற்றும் மதத்தின் அடிப்படை. நாத்திகரில் திருடர் உண்டென்பதை தமிழர் நாம் கண்ணாரக் கண்டு கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும். ஆனால், நாத்திகரில் தன்னலமில்லா வாழ்க்கை வாழ்ந்து மடிந்த நல்லோரும் இந்த நாட்டில் நிறைய உண்டு. சாமி-சாமி என்று நாடகமாடிக் கொண்டு, தினமும் நெற்றி நிறையப் பட்டை அடித்துக் கொண்டு, மனித வாழ்வில் சாத்தியமுள்ள அத்தனை மனிதத் தன்மை அற்ற செயல்களையும் செய்து கொண்டிருக்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களைப் பார்க்கும் போதுதான் இரத்தம் கொதியாய்க் கொதிக்கிறது. இதையெல்லாம் படிக்கும் போது பாரதி காலத்திலேயே அத்தகையவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள் - அவரைச் சுற்றியே நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

"பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை; உலகம் முழுதும் கலி இல்லை. உலகம் முழுதும் அநியாயத்தை விட்டுச் சமீப காலத்தில் நீங்கு மென்று நினைக்க ஏது இல்லை; ஆதலால் கிருதயுகம் வரப்போவதில்லை நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்ய வேண்டும்? என்று விபரீதமாக யோசித்து எவனும் தான் நடக்கும் அநியாய வழியிலே தொடர்ந்து செல்லக் கூடாது. எவன் அநியாயத்தை விடுகிறானோ, அவனுக்குக் கிருதயுகம் அந்த க்ஷணமே கைமேலே கிடைக்கும், இதில் ஸந்தேஹம் இல்லை" என்று புதுமையான விளக்கம் ஒன்று கொடுக்கிறார்.

அதாவது, 'எல்லோரும் திருட்டுப் பயலாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் நல்லவனாக இருந்து நாசமாப் போகணும்?! நல்லதோ கெட்டதோ, நேரும் போது உலகம் முழுமைக்கும் சேர்ந்துதானே நேரும். பின் நாம் மட்டும் ஏன் ஏமாளியாக இருக்க வேண்டும்?!' என்கிற எண்ணம் பற்றிச் சொல்கிறார். இதுதான் இன்று நிறையப் பேரை நாசம் பண்ணும் சிந்தனை. நல்லவராகப் பிறந்தவர்கள் கூட சூழலைப் பார்த்துக் கெட்டுப் போய் விடுகிறார்கள். இப்படி வாழ்ந்தால்தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தத்துவங்கள் எல்லாம் இப்படி விதைக்கப் பட்டவைதான். இதற்குப் பாரதி தரும் விளக்கம் என்னவென்றால், "கலியுகமும் கிருதயுகமும் மொத்த உலகத்துக்கும் சேர்ந்து வராது மகனே, அவனவன் செய்கிற புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் ஏற்றது போல ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனிக் கலியுகமும் கிருதயுகமும் கிடைக்கும்!" என்கிறார். அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. இதுவரை பார்த்த வாழ்க்கையில் அப்படி இருப்பது போலத் தெரியவில்லை. பிற்காலத்தில் மாறுகிறதா என்று பார்க்கலாம்.

"ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப் பேர் உடனே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹம் இல்லை" என்றும் நம்பிக்கை தெளிக்கிறார். சத்திய யுகம் பரவப் போகும் காலம் ஆரம்பமாகி விட்டதா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவன் நல்லவனாக இருக்கும் போது அவனைப் பார்த்து மதில் மேல் பூனையாக இருக்கும் நிறையப் பேர் நல்லவனாக மாறுவார்கள். அதுவே, ஒரு கேடிப்பயல் பெரியாள் ஆனால் அவனைச் சுற்றி இருக்கும் எல்லோரும் 'கேடித்தனம் கற்றல் எப்படி?' என்ற தலைப்பில் புத்தகம் கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்து விடுவார்கள். பாரதி காலத்தில் தெரிந்த நம்பிக்கைக் கீற்று, அமாவாசைக்கு முந்தைய நாள் பிறை போலும். நாங்கள் அப்படி எதையும் பார்க்க முடியவில்லை. ஒருவேளை, அடுத்த தலைமுறைக்கோ அதற்கடுத்த தலைமுறைக்கோ நல்ல காலம் பிறக்கலாம். இப்போதைக்கு அதற்கான நம்பிக்கை இல்லை.

"பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். "தெய்வபக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தியானம் அவசியம்" என்று பாரதி போலவே நம்பக் கூடிய ஆட்களில் நானும் ஒருவன். அதாவது, மதத்துக்கும் தியானத்துக்கும் தொடர்பில்லை என்று எண்ணுகிறேன். இன்னும் சொல்லப் போனால், ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று எண்ணுகிறேன். கோயில்களில் கேடு நடக்கலாம். மடங்களில் புரட்டு வேலைகள் செய்யலாம். தியானத்தில் திருட்டுத்தனம் செய்யவே முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி மனிதனின் ஆன்மா மட்டுமே சார்ந்தது. அதைக் கவனமாகக் கையாளச் சொல்லித்தான் ஆன்மிகம் அழுத்தி அழுத்திப் பேசுகிறது. அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற எவனும் (நித்தி போன்ற சில விதிவிலக்குகள் தவிர்த்து!) ஏனைய புரட்டு வேலைகளில் ஆர்வம் இழந்து விடுவான். ஆனால் நாமோ அதை மட்டும் விட்டு விட்டு மதத்தின் பெயரால் மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

ஆக, ஒரு நாட்டின் விடுதலைக்குக் குரல் கொடுத்த கவிஞன் என்பதையும் தாண்டி, பாரதி தன் நாட்டின் குடிமக்கள் யாவரும் நல்வாழ்வு வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவை என்று உணர்ந்து (இதில் அகத்தேவை, புறத்தேவை என்று எல்லாத் தேவைகளும் அடக்கம்), தன் நெருங்கிய நண்பனுக்கோ சகோதரனுக்கோ சொல்வது போல் எத்தனையோ கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதனால்தானே அவர் மகாகவி!

தொடரும்...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 3/6

தொடர்ச்சி...

மீடியம் என்ற கதை, கீழ்நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் பொருளியற் சிக்கல்களைச் சிறப்பாகச் சொல்கிறது. விபரம் தெரிந்த காலத்தில் இருந்து அண்டர்வேர் அணிந்து கொண்டிருந்த ஆள், குற்றாலம் போகையில் எல்லோரும் பார்த்துச் சிரிப்பதால், அவமானப் பட்டு தானும் நவ நாகரிக சமூகத்தின் ஒரு பங்காகி விட வேண்டும் என்று விரும்பி ஒரு ஜட்டி வாங்குகிறார். இன்னொரு ஜட்டி வாங்கக் காசு இல்லாமல் ஒரே ஜட்டியைத் தினமும் போடுகிறார். கொஞ்ச காலம் போனதும், அவருடைய வண்டவாளம் வெளியே தெரிய ஆரம்பித்து விடுகிறது. பிடுங்கி எடுக்கும் நாற்றத்தால் புதியதோர் அவமானத்துக்கு உள்ளாகிறார். அதிலிருந்து தப்பிப்பதற்காக, பிச்சை எடுக்காத குறையாக நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு மாற்று ஜட்டி வாங்கப் போகிறார். போகிற இடத்தில் அவர் வைத்திருக்கும் காசுக்கு ஜட்டி இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதை விடக் குறைந்த விலைக்கு ஏதாவது கிடைக்குமா என்பதை மிக நாகரிகமாக, "மீடியம் ரேட்டில் ஏதாவது இல்லையா?" என்பார். இருப்பதிலேயே குறைந்த விலை ஜட்டியை எடுத்துப் போட்ட கடைக்காரன் தன்னைப் பார்த்து ஏளனப் பார்வை பார்க்கிறானோ என்று அங்கும் ஓர் அவமானம். கடைசியில் ஒன்றும் வாங்காமல் படி தாண்டினால் இன்னும் அவமானமாகிப் போகுமே என்று கர்சீப் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

இது போன்ற கதைகளில்தான் தமிழ்ச்செல்வன், வாழ்க்கையை வெகு சிரமப் பட்டு வாழும் எளிய மக்களின் எழுத்தாளனாகி விடுகிறார். இது போன்ற வாழ்க்கை வாழும் மனிதர்கள் இல்லை என்றே நாமெல்லாம் எண்ணுகிறோம். இப்போது கூடப் பரவாயில்லை. இருபது-முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம் மிக மிகச் சாதாரணமாக நிறையப் பேர் அனுபவித்த ஒன்று. அவர்களுடைய வாழ்க்கையைச் சொல்லத்தான் ஆளில்லாமல் இருந்தது.

ஏற்கனவே ப்யூனிடம் கடன் வாங்கியிருப்பதால் அதே ஆளிடம் திரும்பவும் போய்க் கேட்க முடியாதே என்று தவிப்பார். ப்யூனிடம் கடன் வாங்குவதென்பது நாடு முழுக்கவுமே இருக்கும் நடைமுறை போல. எங்கள் ஊரிலும் எல்லா அரசு அலுவலகங்களிலும் இந்த நடைமுறை இருந்தது. நான் படித்த பள்ளிகளிலும் கல்லூரியிலும் கூட இந்த நடைமுறை இருந்தது. சிரமப் பட்டுப் படித்து முன்னுக்கு வந்தவர்கள் ஆசிரியராகவும் அலுவலராகவும் இருப்பார்கள். பத்தாம் வகுப்பில் தவறிய பணக்கார வீட்டுப் பிள்ளை பணம் கொடுத்துப் ப்யூன் வேலை வாங்கி வந்திருக்கும். ப்யூன் வேலை ஓரத் தொழிலாகவும் வட்டிக்கு விட்டு வாங்குதல் முக்கியத் தொழிலாகவும் இருக்கும். முக்கியமாக, வேலை பார்க்கும் இடத்தில் தன்னை விட மேலே இருக்கும் ஆட்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து மாட்ட வைத்திருப்பார்கள். அதனால் பியூன்கள் சில நேரங்களில் தோரணை காட்டுவதும் மேலே இருப்பவர்கள் சில அவமானங்களுக்கு ஆளாக நேரிடுவதும் அடிக்கடிக் கேள்விப் பட்டுள்ள கதை.

அண்டர்வேர்க்காரர் தன் அலுவலகத்தில் ஒரே ஒருத்தனிடம் மட்டும் கடன் வாங்காமல் மிச்சம் வைத்திருப்பார். கூச்சமான கூச்சப் பட்டு ஒரு வழியாக மனதைத் திடப் படுத்திக் கொண்டு அவனிடம் போய்க் கேட்டால், அவன் அஞ்சு ரூபாய் கொடுப்பான். இவரிடம் ரெண்டு ரூபாய் இருக்கும். ஏழு ரூபாயை வைத்துக் கொண்டு ஜட்டிக்கு ஆசைப்பட்டுத் துணிக்கடை வாசலில் கால் வைத்ததுதான் அத்தனை சிக்கலுக்கும் காரணம். கடைசியில் அவர் கடையை விட்டு வெளியேறும் போது நமக்கு அழுகையே வந்து விடும் போல் இருக்கிறது. கடனாளியாகவும் ஆகி, கிடைத்த பணத்தில் நினைத்ததை வாங்க முடியாமலும் போய், அதைப் போய் கர்சீப் வாங்குவதில் வீணடித்து, தன் பிரச்சனைகள் எதுவுமே தீராமல், கூடுதல் அவமானங்களை மட்டும் அனுபவித்துத் திரும்பும் அண்டர்வேர்க்காரரின் சோகம் நம்மை அடுத்த சில நாட்களுக்கு வறுத்தெடுக்கிறது.

தமிழ்ச்செல்வனின் கதைகள் அனைத்திலுமே இப்படியான ஓர் உணர்ச்சி விளையாட்டு இருக்கிறது. பாலா படங்களில் போல கதற வைக்கும் சோகம் இருப்பதில்லை. ஆனால், நீண்ட நேரம் வலிக்கிற மாதிரியான மெல்லிய சோகம் ஒன்று இழையோடுகிறது.

"கருப்பசாமியின்  அய்யா" கதையும் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய பெண்ணுரிமைப் பெர்சனாலிட்டிக்கு ஒத்துவராத திசையில் நகர்கிறது. கருப்பசாமியின் அய்யா குழந்தைத்தனமான ஆசாமியாக இருப்பான். எல்லாத்திலும் விளையாட்டு புத்தி. அவனுடைய பொண்டாட்டியோ பெரும் கொடுமைக்காரியாக இருப்பாள். அவளுடைய கொடுமை தாங்காமல் வீட்டை விட்டெல்லாம் ஓடிப் போய்விட்டுத் திரும்பி இருப்பான். ஒரு பெண் தன் கணவனைக் கொடுமைப் படுத்துவதைச் சொல்லும் அளவுக்கு நம் பெண்ணுரிமைப் போராளிகள் திறந்த மனம் கொண்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டிருக்கும் போது, முடிவு வேறு மாதிரியாக இருக்கும். ஓட்டல்க் கடை வைத்துப் பிழைக்க ஆரம்பித்த பின்னும் வடையைத் தூக்கிப் போட்டு விளையாடும் இவனுடைய புத்திதான் கோளாறு கொண்டது என்று முடிக்க முயன்றிருப்பது போலத் தெரியும். அவன் பொறுப்பான ஆளாக இருந்திருந்தால் பொண்டாட்டி அப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்திருக்க மாட்டாள் என்றோ, பொறுப்பான கணவர்களுக்கு எப்போதுமே பொண்டாட்டி கொடுமை என்பதே இராது என்றோ, பொண்டாட்டி கொடுமைக்கு ஆளாவோர் எல்லோரும் பொறுப்பற்ற புத்தியால்தான் அப்படி ஆவது என்றோ சொல்கிற மாதிரி இருக்கும். நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், பொண்டாட்டி கொடுமை பற்றிக் குற்றம் சாட்டும் முன் அவளுடைய மணாளன் என்னவெல்லாம் கோளாறுகள் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்து விட்டுப் பேசுங்கள் என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

"பொன்ராசின் காதல்" என்ற கதையில், மாமா மகளை லபக்க முயல்கிற பொன்ராசு, வசதி படைத்த மாமாவை மயக்க முடியாமல் மறுதலிக்கப் படுவான். அந்த அவமானம் அவனைச் சும்மா விடாது. இன்னொரு மாமா மகளான சென்பகவல்லியைக் கட்டிக் கொண்டு செட்டிலான பின்னும், தான் யாரென்று நிரூபிக்க வேண்டிய  கட்டாயம் ஒன்று மிச்சம் இருப்பதை மீண்டும் மீண்டும் எண்ணித் துடிப்பான். கடுமையான உழைப்பைச் செலுத்தி வெற்றி ஈட்டப் போராட ஆரம்பித்து விடுவான். ஆசைப்பட்ட மாமா மகள் என்ஜினியருக்கு வாக்கப் பட்டிருப்பாள். இவன்  அதை விடப் பெரிய ஆளாக முயல்வான். இதில் ஒரு நுட்பமான ஆண்-உளவியல் உள்ளது. ஒரு பெண்ணை அடைவதற்காக வெறி கொண்டு உழைக்கும் கூட்டம் ஒன்று உள்ளது போலவே, தன்னை நிராகரித்த பெண்ணை அதற்காக வருந்த வைக்க வேண்டும் என்று உழைக்கும் கூட்டமும் ஒன்று உள்ளது. ஆணைப் பொருத்தமட்டில் வெற்றி ஒன்றுதான் அதைச் செய்ய முடியும். அதனால் அப்படி இறங்கி விடுவார்கள். அதை இந்தக் கதை நன்றாகச் சொல்கிறது.

முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தேன். "வார்த்தை" சிறுகதைதான் தமிழ்ச்செல்வன் கதைகளிலேயே என்னை மிகவும் வருத்திய கதை. தன் மகனுடைய சுற்றுலா ஆசையை நிறைவேற்றி வைக்க முடியாமற் போய் விடுகிற போது மனம் உடைந்து வீட்டுக்குக் கூடத் திரும்பாமல் மடத்திலேயே படுத்து விடுகிற தந்தையின் வலியை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது என்னால். தன்னைச் சுற்றியிருக்கிற பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் ஒரு வசதி தனக்குக் கிடைக்காமல் போகிற போதுதான் அது பெரும் வலியாக இருக்கிறது. அதுவும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிகழும் போது மேலும் கூடுதலாக வலிக்கிறது.

இது போன்ற கதைகள்தாம் நம் அரசியல்-பொருளியல் அமைப்புகளையே கேள்வி கேட்க வைப்பவையாக இருக்கின்றன. இதை ஒரு ஏழைக் குடும்பத்தின்  இயலாமையாக எண்ணி எளிதாக ஒதுக்கி வைத்து விட்டுப் போய் விடலாம். ஆனால், அவ்வளவு சிறிய பிரச்சனையல்ல அது. காசு பெருத்தவன் எல்லாம் உழைத்தவன்-புத்திசாலி; கஞ்சிக்கு வழியில்லாதவன் எல்லாம் சோம்பேறி-முட்டாள் என்கிற பிதற்றல் கூட ஓகே. இருவருக்கும் ஏற்றத்தாழ்வு இருந்தே ஆக வேண்டும் என்கிற வாதங்களைக் கூட சிரமப்பட்டு சீரணிக்க முடிகிறது. ஆனால், பணக்காரனுக்குப் பிறந்தவன் பணக்காரன்; ஏழைக்குப் பிறந்தவன் ஏழை என்கிற நியாயம் மட்டும் என் மண்டைக்கு ஏறவே மாட்டேனென்கிறது. பெற்றோரின் பாவம் பிள்ளைகளுக்கும் போக வேண்டும் என்கிற நியாயம் கொண்ட ஒரே வல்லரசு நாம் வாழும் நாடு என்பதால், இதை அதிகம் பேச வேண்டிய கட்டாயம், நமக்கு நிறையவே இருக்கிறது.

"பிரக்ஞை" சிறுகதை அலுவலகப் பிரச்சனைகளைச் சுற்றி வருகிறது. கதை நாயகனுக்கு அலுவலக நினைப்பு வந்தாலே எல்லாம் கெட்டுப் போகும். கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாகவே ஆகியிருப்பான். காரணம், எல்லோரையும் பயப்பட வைக்கும் ஹெட்க்ளார்க். சரியான கடிப் பார்ட்டி. எல்லோரையும் நடுங்க வைக்கும் எல்லோரையுமே நடுங்க வைக்க ஒருவன் வந்துதானே தீர வேண்டும் வையகத்தில். அது இவனாக இருப்பான் இந்தக் கதையில். ஒவ்வொரு நூறு பேரிலுமோ ஆயிரம் பேரிலுமோ அநீதியை-அதர்மத்தை-அநியாயத்தை அவ்வளவு எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியாத போராளி ஒருத்தன் இருக்கத்தான் செய்வான். குறைந்த பட்சம் திமிர் பண்ணுவதைத் தாங்க முடியாத ஒருத்தன் இருந்தே தீருவான். அப்படியான ஆள் நம் நாயகன். ஒரு நாள் எல்லோர் முன்பாகவும் ஹெட்க்ளார்க்கை எதிர்த்துப் பேசி விடுவான். அன்று முதல் அலுவலகத்தில் அவனும் ஒரு பெரிய ஆளாக மாறி விடுவான். ஹெட்டுக்குப் பயப்படும் எல்லோருமே இவனுக்கும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். அந்த போதையில் இருந்து வெளியேறும் முன்பே, ஹெட் இவனுக்கு ஆப்பு அடித்து விடுவார். தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள், யாரை எங்கு போட்டுக் கொடுத்தால் எப்படி வழிக்கு வருவார்கள்  என்பதைக் கரைத்துக் குடித்து வைத்திருப்பவர்கள். அவர் போடுகிற போட்டில் அரண்டு வழிக்கு வந்து விடுவான் நம்ம ஆள். அன்று முதல் குட் மார்னிங் சொல்வது முதல் குனிந்து நடக்கிற வரை எல்லாம் சரியாக நடக்க ஆரம்பித்து விடும். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன் சுயமரியாதை எல்லாம் பார்த்தால் இப்படித்தான் முடியும் என்கிற நம் தொழிலாளி வர்க்கப் பிரச்சனையைச் சொல்லியிருக்கும் கதை. நம் வாழ்க்கை அனுபவங்கள் காரணமாக எளிதில் மனதில் ஒட்டுகிறது.

"வேறு ஊர்" கதையும் மனதைத் தொடுகிறது. படித்து முன்னுக்கு வந்த மகன் நகரத்தில் செட்டில் ஆகி விடுகிறான். பெற்றோர் கிராமத்தில் இருக்கிறார்கள். மாதாமாதம் மகன் அனுப்பும் பணத்தில் பிழைப்பு ஓடுகிறது பெருசுகளுக்கு. தமக்கு ஒரு சிறு தொகையைக் கொடுத்தாலும் தம் பிள்ளையும் அவனுடைய பிள்ளைகளும் நகரத்தில் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள் அவர்கள். அடுத்த மாதம் மகன் தம்மைப் பார்க்க வரும் போது, தற்போதைய தொகை பற்றவில்லை என்பதையும் தொகையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும்; அதை எப்படிச் சொல்வதோ என்று குழம்பிப் போய் உட்கார்ந்திருக்கும் பெற்றோரிடம், மகன் வேறொரு திட்டத்தோடு வருவான். கிடைக்கும் சம்பளத்தில் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அதனால் அவர்களையும் தன்னோடு நகரத்தில் வந்து தங்கி விடும் படியும் சொல்வான். பகல் நேரத்தில் வேலைக்குப் போய் விடுகிற தம்மால் கவனிக்க முடியாத தம் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்ட மாதிரி இருக்கும் என்று இன்னொரு கணக்கும் இருக்கும். நல்ல வேளை, கழற்றி விடாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் வரை நல்லதுதானே!

இதில் இரண்டு அதிர்ச்சிகள். ஒன்று, தன் மகன் நகரத்தில் நல்லாப் பிழைக்கிறான் என்று அத்தனை நாளும் எண்ணிக் கொண்டிருந்தது தவறாகி விடும். இன்னொன்று, இத்தனை காலமும் வாழ்ந்து பழகி விட்ட ஊரை விட்டுக் காலி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு உள்ளானது. இரண்டாவது பிரச்சனைதான் பெரும் பிரச்சனை. இதிலும் கீழ்நடுத்தர வர்க்கத்து மக்களின் அவலங்கள் சொல்லப் பட்டிருக்கிறது ஒருபுறம் என்றாலும், அதை விட முக்கியமாகச் சொல்லப் பட்டிருக்கும் கருத்து, எவருக்கும் சொந்த ஊர் என்று ஒன்றில்லை என்கிற முதிர்ச்சியான கருத்து. எல்லோருக்குமே தன் இளமைக் காலத்தைக் கழித்த ஊர் பிடிக்கத்தான் செய்யும். ஆனால் இந்த இடத்தை விட்டே நகர மாட்டேன் என்பதே மனித இயற்கைக்கு எதிரானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன் இடம் விட்டு இடம் பெயர்ந்திருக்கிறான். இன்று தன் சொந்த ஊரென்று எண்ணிக் கொண்டு விட்டுச் செல்ல மனமில்லாமல் துடிக்கும் இந்த ஊருக்கும் ஒரு காலத்தில் தம் முன்னோர்கள் தெற்கே இருந்து பஞ்சம் பிழைக்க வந்தது பற்றித் தன் அய்யா சொன்னது பற்றிய பெரியவரின் நினைப்பு,அவருடைய மனதைத் தேற்றிக் கொள்ள மட்டுமில்லாமல், ஊரை விட்டு வந்ததற்காக வருத்தப் பட்டிருக்கும் நம் எல்லோருடைய மனதையும் தேற்றுவதாகத்தான் இருக்கிறது.

தொடரும்...

சனி, நவம்பர் 10, 2012

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 5/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...


குடியேற்றம் (IMMIGRATION) தொடர்பான குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதே இல்லை என்பது போல், குடியேறுபவர்களை வரவேற்று உபசரிப்பதிலும் சிங்கப்பூருக்கு இணை சிங்கப்பூரே. மனிதவளத் துறையின் அலுவலகத்துக்கு பணி அனுமதி (EMPLOYMENT PASS) வாங்கச் செல்லும் போது ஒரு விருந்தினருக்குக் கொடுக்கும் உபசரிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் கொடுப்பார்கள். பெரும்பாலான நாடுகளில் விசா வழங்கும் இடத்தில் - குறிப்பாக இந்தியர்களுக்கு - மூன்றாம் தர மரியாதைதான். அது போன்ற நடத்தையை சிங்கப்பூரில் யாரிடமும் காட்ட மாட்டார்கள். சரியாகக் குறித்த நேரத்தில் உள்ளே நுழைந்ததும் கூப்பிட்டு எல்லா வேலையையும் செய்து கொடுத்து அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களில் அனுப்பி வைத்து விடுவார்கள். ஒரு வாரத்துக்குள்அனுமதி அட்டை தயாராகி விடும். அதுவும் குழந்தை குட்டிகளோடு செல்வோரை ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் வேலையை முடித்துக் கொடுத்து அனுப்பி வைத்து விடுவார்கள். இதெல்லாம் பார்க்கும் போது இதுவல்லவோ நாகரிகம் என்று வியப்பு மேலிடுகிறது. ஒரு நாட்டுக்குள் பணி நிமித்தமாக நுழையும் எல்லோரும் செல்லக் கூடிய ஓரிடத்தில் காட்டப்படும் இது போன்ற நன்னடவடிக்கை அங்கு வரும் எல்லோருக்குமே அந்த நாட்டின் மீது நன்மதிப்பை உண்டு பண்ணத்தானே செய்யும். அதனால்தான் தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலில் வருகிறது. இது வரை வந்துள்ள அத்தகைய பெரும்பாலான பட்டியல்களில் சிங்கப்பூர்தான் முதலிடம் பெறுகிறது.

மக்கட் தொடர்புப் பணிகளில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மிகவும் நட்புறவோடு நடந்து கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். வேலைக்கு ஆள் எடுக்கும் போதே அதையெல்லாம் பார்த்து எடுப்பார்களா அல்லது எடுத்த பின் கொடுக்கும் பயிற்சிகளில் அதையெல்லாம் கொண்டு வந்து விடுவார்களா அல்லது இரண்டுமா என்று தெரியவில்லை. அந்த அளவு மக்களை மதிக்கிறார்கள். குறிப்பாகப் பேருந்து ஓட்டுனர்களின் பொறுமை வியப்படைய வைக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் கண்ணுக்குத் தெரிகிற தொலைவில் யாராவது கையைக் காட்டி விட்டால் போதும். பொறுமையாக நின்று அவரை ஏற்றிக் கொண்ட பின்புதான் புறப்படுகிறார்கள். அது போலவே இறங்கும் போதும், பெரியவர்கள் மற்றும் பிள்ளைகுட்டி-தட்டுமொட்டுச் சாமான்கள் உடையவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சிரித்த முகத்தோடு எல்லாத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். நம் அரசாங்கத்திடம் பணம் இருந்தால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துப் பணியாளர்களை இங்கு அழைத்து வந்து, "பாருங்கப்பா, இவங்களும் நீங்கள் பார்க்கும் அதே வேலையைத்தான் பார்க்கிறார்கள். அப்புறம் ஏன் உங்களுக்கு மட்டும் அம்புட்டுக் கோபமும் கொந்தளிப்பும் வருகிறது?!" என்று காட்டிப் பயிற்சி கொடுக்கலாம். ஆனால், நம்ம ஊரில் இருக்கும் அளவுக்குக் கூட்டமோ போக்குவரத்து நெரிசலோ இங்கே இல்லை. அதுவே பாதி மன அமைதியைக் கொடுத்து விடும் இங்கிருக்கும் ஓட்டுனர்களுக்கு. நம்மவர்களின் நிலை அப்படியா? எத்தனை பேருடைய பலமுனைத் தாக்குதல்களைச் சமாளித்து ஒவ்வொரு நாளும் அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்!

சிங்கப்பூரின் பிரச்சனைகளில் ஒன்றாகச் சொல்லப் படுவது இங்கே இருப்பவர்கள், சாகும் வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது. காரணம், வெளிநாட்டவர்கள் வந்து குவிந்து ஊரின் விலைவாசியை ஏற்றி விட்டார்கள். ஆனால், உள்ளூர்க்காரர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானத்துடனே வாழ்கிறார்கள். அந்த வருமானத்தில் ஓரளவு வசதியான வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் வீட்டில் இருக்கும் எல்லோரும் உழைத்தாக வேண்டும். வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் அளவுக்குப் பிள்ளைகள் சம்பாதிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்? பெற்றோரும் வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும். பல மேற்கு நாடுகளில் போல வயதான பின் அரசாங்கமே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படியான அமைப்பு இங்கில்லை. அதனால் நம்மவர்கள் சின்னச் சின்னப் பையன்கள் கூட இங்கு வந்து சாப்ட்வேரில் சம்பாதித்து ஆட்டம் போடுவது பார்க்கக் கொஞ்சம் சீரணிக்க முடியாமல் தான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அப்படியெல்லாம் பொறாமைப் படுவது போலத் தெரியவில்லை. இதனால்தான் நம்மவர்கள் நிறையப் பேர், சம்பாதித்து விட்டுக் கடைசிக் காலத்தில் அதை அனுபவிக்க ஊர் திரும்பி விட வேண்டும் என்கிறார்கள் போலும். அதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் வேறொரு நாட்டில் போய் அனுபவிக்கலாம். மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? இங்கேயே இருந்து உழைத்துத்தானே ஆக வேண்டும்!

மலேயர்கள் இந்தியர்களோடு ஓரளவு நெருங்குகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அவர்களுடைய மொழியும் தோற்றமும் பண்பாடும் கூட நமக்கும் சீனர்களுக்கும் நடுவிலானதாகத்தான் இருக்கிறது. பல மலாய்ச் சொற்கள் வடமொழி-தமிழ்ச் சொற்கள் போல் இருக்கின்றன. 'கடை'யை 'கெடை' என்கிறார்கள். 'தண்டம்' என்பதை 'தெண்டா' என்கிறார்கள். 'மொழி'யை 'பாஷா' என்கிறார்கள். மலாய் மொழியின் மாபெரும் ஆச்சரியம், அவர்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். அத்தனை மொழிகள் இருக்க, ஆங்கிலத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரியவில்லை. அப்படியானால், வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பின்னர்தான் எழுதவே ஆரம்பித்தார்களா? அவர்களுக்கென்று ஜாவி என்ற வேறொரு பழைய எழுத்து முறையும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஏன் அதை மறந்து ஆங்கிலத்துக்குள் போனார்கள் என்றும் தெரியவில்லை.

இங்கிருக்கும் மலேயர்கள், தம் பெயரில் பின் அல்லது பின்டே போட்டுக் கொள்கிறார்கள். அதாவது, மகன் அல்லது மகள் என்பதற்கு அப்படிப் போட்டுக் கொள்கிறார்கள. ஒசாமா பின் லேடன் என்பது போல. ஒசாமா பின் லேடன் என்றால், லேடனின் மகன் ஒசாமா என்று பொருள். அதை அப்படியே ஆங்கிலத்தில் நம்மவர்கள் சிலர், S/O அல்லது D/O போட்டு எழுதுகிறார்கள். சுப்பையா S/O கருப்பையா என்பது போல. முழுப்பெயர் என்றால் அலுவல் ரீதியாக எழுதும் போது கூட இப்படித்தான் எழுதுகிறார்கள். அது கொஞ்சம் விகாரமாக இருக்கிறது. மற்றவர்கள் எப்படியும் போகட்டும். தமிழர் வாழ்வில் இந்த அளவுக்கு ஆங்கிலம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

உட்கார வசதியாக ஊரெங்கும் அமைக்கப் பட்டிருக்கும் பெஞ்சுகள் அருமை. எந்த இடத்திலும் களைப்பாக உணர்ந்தால், பத்தடிக்குள் ஓர் இருக்கை கிடைத்து விடும். அது போலவே, கையில் குப்பையை வைத்துக் கொண்டு, சுற்றிப் பார்த்தால், பத்தடிக்குள் ஒரு குப்பைத் தொட்டியும் இருக்கும். அந்த அளவுக்கு வசதி செய்து வைத்திருப்பதால்தான் சாலைகளில் குப்பை போடாமல் பராமரிக்க முடிகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் - ஆனால் இங்கே இராது என்று எதிர் பார்த்து வந்த சில பிரச்சனைகளும் இங்கே இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று, பல இடங்களில் பயமுறுத்தும் அளவுக்குக் கரப்பான் பூச்சிகள் நடமாடுகின்றன. அது போல, நம்ம ஊரில் தெருநாய்கள் போல, இங்கே தெருப் பூனைகள் நிறையத் திரிகின்றன. சாலையில் எல்லாம் வந்து தொல்லை கொடுப்பதில்லை. பெரும்பாலும் கட்டடங்களுக்குள்ளேயே அலைந்து கொண்டிருக்கின்றன. தெருநாய்கள் இங்கு இல்லவே இல்லை. வீடுகளுக்குள் வளர்த்துக் கொள்வதோடு சரி. வீடுகளில் பல்லி நடமாட்டம் ஓரளவுக்கு இருக்கிறது. நாகரிக மனிதன் முற்றிலும் அழிக்க முடியாத உயிரினங்களில் கரப்பான் பூச்சியும் பல்லியும் முக்கியமானவை என நினைக்கிறேன். மற்றபடி, எலி, பெருச்சாளி எல்லாம் இன்னும் பார்க்கவில்லை.

எப்போதாவது சில நேரங்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடிகிறது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் அடிக்கடி மனநிலை குன்றியவர்களைப் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம், இங்கே அப்படிப் பட்டவர்களை அடைத்து வைக்கக் கூடாதாம். நல்ல விசயம்தான். அப்படியே வெளியே விட்டு விட்டால், அவர்கள் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் வாழ்ந்து பழகிக் கொள்வார்கள் போலும். இங்கும் சிறு சிறு சாலையோரக் கடைகளைப் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு லாட்டரிச் சீட்டுக் கடையும் பார்த்தேன். யப்பா... அதுவுமா? கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை இல்லை. ஆகவே, பிளாஸ்டிக் பைகளின் நடமாட்டம் மித மிஞ்சி இருக்கிறது. எல்லாக் குப்பைகளையும் அழித்து விடுவதால் அது பிரச்சனையில்லை என்கிறார்கள். அது மட்டுமில்லை, சாலைகளில் குப்பை போடும் பழக்கம் இல்லாததால் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பது ஓரளவு எளிதுதான்.

வசதி படைத்த இந்தியர்களுக்கு இங்கே இருக்கும் பெரும் வசதி - பணிப்பெண்கள் அமைத்துக் கொள்ளும் வசதி. இந்தியர்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான் அது வசதி. வீட்டு வேலைக்கு வேறொரு பெண்ணை நியமித்துக் கொள்வதன் மூலம் பெண்ணுரிமையை மீட்டெடுத்து விட முடியும் என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் நாம் என்பதால் அப்படி அழுத்திச் சொல்ல வேண்டியதாகி விட்டது. பெரும்பாலும் இந்தோனேசியப் பெண்கள்தான் பணிப்பெண்களாகப் பணி புரிகிறார்கள் இங்கே. ஓரளவுக்கு பிலிப்பினோப் பெண்களும் இருக்கிறார்கள். இந்தியர்கள் மிகக் குறைவு. வேலையை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிற மாதிரியான பணிப்பெண்கள் மிகவும் குறைவு. வீட்டோடு தங்கி வேலை செய்யும் மாதிரியானவர்களே அதிகம். அதற்குக் காரணம், இங்கே தங்குவதற்கு ஏகப்பட்ட பணம் வேண்டும். அதனால் இங்கேயே இருப்பவர்கள் அனைவரும் அந்த அளவுக்குப் பணம் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணிப்பெண்களை வெளியில் தங்க வைக்க வேண்டும் என்றால், அதற்கு வாடகை கட்டக் கூட நாம் தரும் சம்பளம் அவர்களுக்குப் பற்றாது. அதனால்தான் இப்படியொரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

எல்லாம் கேட்கத்தான் நன்றாக இருக்கிறது. அவர்களை வைத்துச் சமாளிப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. நாங்கள் இரண்டு மாதங்கள் வைத்துப் பார்த்து விட்டுக் கும்பிடு போட்டு அனுப்பி வைத்து விட்டோம். அவர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அவர்களை எப்படியெல்லாம் நடத்த வேண்டும் என்று நமக்கு அறிவுரைகள் சொல்கிறார்கள். அதன் படியோ அதை விடக் கெடுபிடியாகவோ நடந்து கொள்ளத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு பிரச்சனையில்லை. நம்மைப் போன்று பாவம் பார்க்கும் பாவிகளுக்கு வெகு விரைவிலேயே ஆப்பு வைத்து விடுவார்கள். முதல் ஆறு மாதங்களுக்கு வெளியில் விடவே கூடாது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய நிறுவனத்தினர். வந்த முதல் வாரமே ஏதாவதொரு புதுமையான காரணம் சொல்லி வெளியில் செல்ல வேண்டும் என்பார்கள் இவர்கள். பொய்தான் சொல்கிறார்கள் என்று தெரிந்தாலும், உண்மையாக இருந்தால் என்ன செய்வது என்று நாம் நம்பி வெளியில் விட்டால், வம்பை இழுத்துக் கொண்டு வந்து நிற்பார்கள். அடுத்தது, மொபைல் போனை அவர்கள் கையில் கொடுக்கக் கூடாது என்கிறார்கள் அவர்கள். அது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது என்று விளக்கம் சொல்லி விட்டு வந்து முதல் நிமிடமே போனை எடுத்துக் கையில் நீட்டினோம். முதற் சில நாட்கள் எல்லாம் நன்றாகப் போனது. அடுத்து அதிலும் சிக்கல் ஆரம்பித்தது. வேலையில் ஆர்வம் போய், போனில் பயங்கர பிசி ஆகி விடுவார்கள்.

எல்லா வேலையையும் சொல்லிச் சொல்லித்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும், 'இது கூடவா சொல்லிச் சொல்லி நினைவு படுத்த வேண்டும்!' என்று நமக்கு ஒரு வெறுப்பு வரும் மூன்றாவது வாரத்தில். பல நேரங்களில், 'இவளிடம் சொல்லிச் சொதப்பி பின்னர் அதைத் திரும்ப நாமே செய்து கொள்வதற்குப் பதில், முதலிலேயே நாமே செய்து விட்டால் என்ன?!' என்கிற நம் பாட்டாளிப் புத்திக்கு இதெல்லாம் ஒத்து வராது என்பதை உணர்ந்து, நான்காவது வாரத்தில் இருந்து அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் நாம் செய்த தவறுக்கான தண்டனையாகப் பார்க்க ஆரம்பிப்போம். அதிக பட்சம் அடுத்த ஒரு மாதத்தில், ஆள் வைத்து வேலை வாங்கும் அளவுக்கு நமக்குத் தாட்டியம் பற்றாது என்று ஒரு மனதாக முடிவு செய்து, அது முதல் என்றுமே வாழ்க்கையில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சூளுரைக்க வைத்து விடுவார்கள்.

நல்ல பணிப்பெண்கள் கிடைத்த பலரும் அவர்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் விடாமல் பற்றி வைத்துக் கொண்டிருக்கும் கதைகளும் பல கேள்விப் பட்டோம். அந்த யோகம் நமக்கில்லை. என்ன செய்ய?! போகட்டும். நல்லதுதான் ஒரு வகையில். அவர்கள் நல்லவர்களாக இருப்பதும் இல்லாததும் நம் கையில்தான் இருக்கிறது என்றும் சில நல்லவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். சரியாகத்தான் படுகிறது. அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த முதற் சில மாதங்கள் மாங்கு மாங்கென்று உழைத்து விட்டு அல்லது அப்படி நடித்து விட்டு அடுத்து நம் வேலையைக் காட்டுவது இல்லையா?! அது போலத்தான் இதுவும். இது உலகப் பிரச்சனை. உலகத் தொழிலாளர்கள் எல்லோருக்கு எதிராகவும் அவர்களுடைய தின்று கொழுத்த முதலாளிகள் வைக்கும் குற்றச்சாட்டு! ஆகையால், அந்தச் சுழலுக்குள் சிக்காமல் மாட்டிக் கொள்வது ஒன்றே தொழிலாளர் இனத்தின் தொடர் ஆதரவாளனாக நாம் இருப்பதற்கான வழி!

வியப்புகள் தொடரும்...

புதன், நவம்பர் 07, 2012

பாரதியார் கட்டுரைகள் - 2/N


தொடர்ச்சி...

யாரைத் தொழுவது? என்ற கட்டுரைதான் நூலின் முதற் கட்டுரை. கடவுள் வாழ்த்து போல ஆரம்பிக்கும் அக்கட்டுரையில், "சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்குப் பூஜை நடந்ததாக வேதம் சொல்லுகிறது" என்கிற வியப்பூட்டும் தகவல் ஒன்று வருகிறது. வேதம் தெரியாததால் அப்படி வியப்பாக இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால், பாரதி வேதங்களை எந்த அளவுக்குக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்பது நன்றாகப் புரிகிறது. அவரை மிகவும் பிடித்த சிலரால் கூட அவர் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவரும் ஓர் இந்துத்துவர் என்பது. அதற்கான முக்கியக் காரணம், அவர் வேதம் படித்தார், கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார், இந்து மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் போன்றவை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் என்று மாறிக் கொண்டே இருக்கும் வரையறைகள் இருக்கின்றன. ஒருவன் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகப் பேசும் போது அவன் எல்லா விதத்திலும் நூறு விழுக்காடு முழுமையான புரட்சியாளனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதன் மூலம் வரும் பிரச்சனை அது. ஒடுக்கப் பட்ட மக்களுக்காகப் பேசுவதையும் இந்து மதத்தின் மீது ஈடுபாட்டோடு இருப்பதையும் இரு வேறு விசயங்களாகப் பார்த்தவர் பாரதி. கிட்டத்தட்ட காந்தி போல.

ஒடுக்கப் படுவோரும் இந்துக்களே; அவர்களையும் தம் மதத்தினர் தம்மை மதிப்பது போலவே மதித்து முறையாக நடத்த வேண்டும் என்ற கருத்தை விதைத்தவர்கள். மக்களில் ஒரு சாரார் ஒடுக்கப் படுவதற்குக் காரணமே இந்து மதத்தின் அடிப்படையில் இருக்கும் கோளாறுகளும் அதன் மீது தீராத காதலும் வெறியும் கொண்டிருக்கும் இன்னொரு சாராருமே என்பவர்கள் அவருக்குப் பின் வந்தவர்கள். அதனால் அவர்களின் தொண்டராக பாரதி இராதது அவருடைய குற்றமில்லை. சாதிப்  பிரச்சனையையும் மதப் பிரச்சனையையும் முடிச்சுப் போட்டுப் பேசக் கூடாது என்பவர்களும், அப்படித்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்பவர்களும், ஒரு போதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளப்  போவதில்லை. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சமூகச் சமநிலை ஓரளவு பரவாயில்லாமல் இருப்பதற்குப் பெரியார் பெரிதும் காரணமென்று சொல்கிறவர்கள் போலவே பாரதி காரணமென்று சொல்கிற ஒரு பெருங்கூட்டமும் இருக்கிறது. அதற்குக் காரணம், பாரதி பார்ப்பனராகப் பிறந்து, வேதங்கள் படித்து, தினமும் காலையில் கடவுளைத் தொழுது, மற்ற எல்லா வகையிலும் அவர்களைப் போலவே இருந்து கொண்டு சில முக்கியமான சமூகப் பிரச்சனைகளில் மட்டும் வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லி உள்ளுக்குள்ளேயே புரட்சி நடத்தினார். அதைப் பார்த்து ஆயிரமாயிரம் உயர் சாதியினர் தம் கருத்துக்களை மறுபரிசீலனை செய்தனர்.

எந்தப் புரட்சிக்கும் எல்லோருடைய பங்களிப்பும் தேவை - எல்லா மாதிரியான ஆட்களும் தேவை. வெளியில் இருந்து விமர்சிப்போரும் தேவை. உள்ளுக்குள் இருந்தே கலகம் செய்வோரும் தேவை. அடித்துப் பிடுங்குவோரும் தேவை. பேசிக் கொடுக்க வைப்போரும் தேவை. REVOLUTION-ம் தேவை. EVOLUTION-ம் தேவை. "இதுதான் சரி; இது மட்டும்தான் சரி!" என்று சொல்லும் அளவுக்கு இந்த உலகம் எதற்கும் அவ்வளவு எளிதான சூத்திரங்களைக் கொண்டில்லை. உலகப் பிரச்சனைகள் யாவும் அவ்வளவு எளிதானவையும் அல்ல. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் தேவைப் படுகின்றன. சில நேரங்களில் அவை முற்றிலும் முரண்பட்ட அணுகுமுறைகளாக இருக்கின்றன. சில நேரங்களில் முற்றிலும் முரண்பட்ட அணுகுமுறைகளின் கூட்டணி கூட வெல்கிறது. ஆகவே, அதில் பாரதிக்கென்று ஒரு பின்னணியும், காலச் சூழலும், அணுகுமுறையும் இருந்ததை மறக்கக் கூடாது. அவருடைய உள்நோக்கம் தெளிவாக இருந்ததா என்பதை மட்டும் பார்த்து விட்டு, மற்ற மயிர் பிளக்கும் ஆராய்ச்சிகளை ஒதுக்கி விடுவதே நல்லது.

அவர் இன்றைய இந்துத்துவர்களைப் போல வெறுப்பு விதைக்கவில்லை (அதை அவர்கள் மட்டும் செய்யவில்லை என்பதையும் அறிவேன். அவர்கள் அப்படி ஆனதற்கான காரணங்களையும் அறிவேன்!). அதனால் அவரையும் அந்தப் பெயருக்குள் அடைத்துச் சுருக்கக் கூடாது. அப்படியே அவரை ஓர் இந்துத்துவர் என்று ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும் என்று வாதிடுவீர்களேயானால் அத்தோடு அவர் பின்னணியையும் வாழ்ந்த காலச் சூழலையும் சேர்த்துக் கணக்கில் வைத்துக் கொண்டு வாதிடுங்கள். யாருக்குமே தன் தாய் தந்தையும் தாத்தா பாட்டியும் சொல்லிக் கொடுத்ததை மறுப்பதே மறப்பதோ அவ்வளவு எளிதில்லை  (அதையும் செய்பவன்தான் முழுமையான புரட்சியாளன் அல்லது அதுதான் புரட்சியாளனின் முதற் தகுதி என்பதும் ஒரு வகையில் சரியே!).

நூறடிப் பள்ளத்தில் விழுந்திருப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இருபதடி ஏற்றி விடுபவனும் புரட்சியாளனே. அவனையும்  வேடிக்கை பார்ப்போரில் ஒருவன் போலச் சித்தரிப்பதும் பிடித்து உள்ளே தள்ளுபவர்களோடு இணைத்துப் பேசுவதும் முறையாகாது. பிடித்து உள்ளே தள்ளுபவர்களோடு உறவும் வைத்துக் கொண்டு உள்ளே கிடப்பவர்களை ஏற்றி விடவும் செய்யும் ஆட்களையும் கூட அரவணைத்துத்தான் செல்ல வேண்டும். சில உறவுகள் பிறப்பால் பிணைக்கப் பட்டவை. அவை அனைத்தையும் உதறி வந்தால்தான் உன் கையைப் பிடிப்பேன் என்பது அறிவீனம். "முதலில் உன்னை ஏற்றிவிட முயற்சிக்கிறேன். இதுதான் பெரிய பிரச்சனை. அப்புறமாக அவர்களோடு உறவை முறிப்பதா வேண்டாமா என்கிற சிந்தனைகளில் நேரத்தை வீணடிக்கிறேன்!" என்பதும் நியாயமான போக்குதானே. அப்படியில்லாமல், "வாழ்ந்தால் என்னோடு, இல்லையேல் மண்ணோடு!" என்கிற போக்கு, எந்தப் புரட்சி இயக்கத்தையும் பின்னுக்குத்தான் இழுத்துச் செல்லும்.

தொடக்கூட மாட்டேன் என்பவர்களுக்கு மத்தியில் தோளில் கை போட்டுப் பேசும் அளவுக்கு நெருங்கி வருபவனை உற்சாகப் படுத்துவதன் மூலம்தான் அவர்களையும் மற்றவர்களையும் அடுத்த கட்ட முதிர்ச்சிக்கு அழைத்துச் செல்ல முடியும். அதை விடுத்து, அவனும் முழுமையாக மாறவில்லை - எம் வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ளும் அளவுக்கு இன்னும் மனம் திறக்கவில்லை என்பதை விமர்சிப்பது நியாயம்-அநியாயம் என்ற அளவில் வைத்துப் பார்த்தால் முற்றிலும் நியாயமே. ஆனால், நாம் விரும்பும் மாற்றம் வேண்டுமென்றால் அது சரியான அணுகுமுறை ஆகாது. என் அடிப்படை உரிமையை அடைவதற்கு நான் எதற்கு யாரையும் தட்டிக் கொடுத்து - தடவிக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டும் என்கிற தார்மீக கோபம் நியாயமே. அதைக் கொஞ்சம் ஏமாற்றிப் பிடுங்கும் அளவுக்கு முதிர்ச்சியை வளர்த்துக் கொண்டால் வெற்றி இன்னும் எளிதாகும் என்பதே என் கருத்து.


"'கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிடவேண்டும் என்ற நியமம் எதற்காக?'  என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக" என்கிறார். இதை இன்று நிறையப் பேர் சொல்கிறார்கள். ஆனால், சமீப காலத்தில் இதன் ஆரம்பம் பாரதியாக இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன். இதில் ஓரளவு பொருள் பொதிந்திருப்பதையும் உணர முடிகிறது. கோயிலுக்குப் போகும் நிறையப் பேர், அங்கே போய் வரும் போது கிடைக்கும் மன உணர்வுகள் பற்றிப் பேசுகிறார்கள். அவை அனைத்துமே எல்லோருக்குமே கடவுள் கொடுக்கும் உணர்வுகள் போலவும் தெரியவில்லை. அங்கேயும் ஒரு கூட்டம் உருவாக்குகிறார்கள். அங்கே வருகிற கூட்டத்தில் தானும் ஒருவராக இருந்து, அங்கே நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் கலந்து கொண்டு திரும்பும் போது ஒரு திருப்தி கிடைக்கிறது. சமூக வாழ்க்கைக்கு (SOCIAL LIFE) வசதி செய்து கொடுக்கும் ஓரிடமாகக் கோயில் பயன் படுகிறது பலருக்கு. விளையாடுவதற்காக அல்லாமல் மைதானத்துக்கு வேடிக்கை பார்க்கவும் அங்குள்ள ஆட்களோடு அளவளாவவும் நிறையப் பேர் வருகிறார்களே! அது போல. 

மனிதனுக்குத் தன்னை அங்கீகரிக்கும் - தனக்கேற்ற மாதிரியான ஆட்கள் கிடைக்கும் ஓரிடம் தேவைப் படுகிறது. அது சிலருக்கு மைதானமாக இருக்கிறது. சிலருக்கு மரத்தடியாக இருக்கிறது. சிலருக்கு முடிதிருத்தும் கடையாக இருக்கிறது. சிலருக்கு சாராயக் கடையாக இருக்கிறது. சிலருக்கு அலுவலகமாக இருக்கிறது. சிலருக்கு அரசியல் கட்சி அலுவலகமாக இருக்கிறது. சிலருக்கு நடிகருக்கு வைக்கும் ரசிகர் மன்றமாக இருக்கிறது. சிலருக்குச் சீட்டாடும் இடமாக இருக்கிறது. அதுவே சிலருக்குக் கோயிலாக இருக்கிறது (எல்லோருக்கும் என்று சொல்லவில்லை. யாரும் கோபப் பட்டு உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்!). வெள்ளிக் கிழமை ஆகிவிட்டால் அங்கு போய் நிற்கா விட்டால் கை-கால் உதறல் எடுக்கும் என்று சொல்கிறவர்களைப் பார்த்திருக்கிறோம் அல்லவா! அந்த உதறல் எல்லோருக்குமே அந்த இடத்துக்கே உரிய பொருளுக்காக இருப்பதில்லை. அந்த இடத்தில் கிடைக்கும் சமூக வாழ்க்கைக்காகவும் அப்படியான உதறல் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு தேவையை எந்தக் கேடும் அளிக்காத கோயில் போன்ற ஓரிடம் கொடுக்க முடிந்தால் நல்லதுதானே! முறையான வடிகால் (CHANNELIZE) அமைத்துக் கொடுத்து விட்டால், தேவையில்லாத இடங்களுக்குச் செல்லாதே கால். அதைத்தான் பாரதி சொல்கிறார் என நினைக்கிறேன். அந்தச் சமூக வாழ்க்கையைத்தான் சில மதத்தினர் அதிகம் அவர்களுடைய ஆலயங்களில் அதிகம் பெறுவதாக உணர்கிறார்கள். சிலர் குறைவாக உணர்கிறார்கள்.

"இது தான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்? என்பது முன்னோர் கொள்கை' என்றும் சொல்கிறார். இதுதான் எனக்கு ஆன்மீகத்தில் மிகவும் பிடித்த பகுதி. அதன் அடிப்படைக் காரணமே இந்த இரண்டு கால் மிருகங்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமே என்று எண்ணியதுதான். அதையும் சிக்கலாக்கி, இதுதான் உண்மையான கடவுள் - அதுதான் உண்மையான கடவுள் - இதுதான் உயர்ந்தது - அதுதான் மேலானது என்று வெறுப்பு பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அதுதானே நியாயம் என்று அவர்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி வாதங்கள் வேறு வைக்கிறார்கள். நடக்கட்டும். எதில் போய் முடிகிறது என்று பார்ப்போம். ஞானி என்பவனே அடிப்படையை நினைவூட்டுபவன்தான் என்றாகி விடுகிறது பெரும்பாலான நேரங்களில். எட்டு மாடி கட்ட வேண்டும் - இருபது மாடி கட்ட வேண்டும் என்று பெரிது பெரிதாகக் கனவு கண்டு கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில், "இதற்கான அடித்தளம் ஓட்டு வீட்டுக்குப் போட்டதப்பா! மாடி கட்டத் திட்டம் போட்டால், இருக்கிற இருவர்-மூவரும் இருக்க இடம் இல்லாமல் போய் விடும். அதனால் இருப்பதைக் காக்கவும் பலப்படுத்தவும் வழி பார்ப்போம்!" என்பதை நினைவு படுத்தவும் நமக்கு அவ்வப்போது ஆள் தேவைப் படுகிறது. வேதனைதான்!

"உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை - எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்" என்கிற வரி, பாரதி ஆன்மீகத்தில் - இந்து மதத்தில் எதைத் தேடினார் என்பதைக் காட்டுகிறது. இந்த வரி, நாம் தெய்வத்தைக் காக்க வேண்டுமா தெய்வம் நம்மைக் காக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. உன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களைக் காத்தாலே போதும், நீ தெய்வத்தைக் காத்தவனாகி விடுகிறாய். அப்புறம் ஏன் தெய்வம் உன்னைக் காக்க வேண்டும்?! இப்படி எல்லோரும் தன்னால் இயன்ற அளவு உலக உயிர்களைக் காத்தால், அதுவே தெய்வத்தைக் காப்பதாகவும், அதுவே அப்படியே எல்லா உயிர்களையும் காப்பதாகவும் ஆகி விடும். கடைசியில், தெய்வம் என்ற அந்த உணர்வே நம் எல்லோரையும் காத்ததாகவும் ஆகி விடும். இதுதான் தெய்வம் நம்மைக் காக்கும் இரகசியம் போலும். இது போன்ற தத்துவங்களைப் படிக்கும் போதுதான் வேதம் படிக்க வேண்டும் என்ற ஆசையே வருகிறது. எல்லா மதத்து வேதங்களையும்தான் சொல்கிறேன். "பாரதியின் கட்டுரைகளைப் படித்து இன்னொருத்தன் இந்துத்துவன் ஆகி விட்டான்; அதனால் இனி யாரையும் பாரதியைப் படிக்க விடக் கூடாது; பாரதி ஓர் இந்துத்துவன்; அவனைப் படிப்போர் இந்துத்துவர்!" என்று தூற்ற ஆரம்பித்து விடாதீர்கள் அவசரப் பட்டு. அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ஆகி விடும்!

"ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக" என்று சொல்வதும் அப்படியே. குடும்பம் சிறியதுதான். அதிக பட்சம் பத்துப் பேருக்கு மேல் இருப்பதில்லை. அதுவும் இப்போதெல்லாம் நான்கு பேருக்கு மேல் இருப்பதில்லை. அதனால் எல்லோரும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்றாகி விடுமா? ஒவ்வொருவரும் அவரவர்க்கான ஓர் உலகில் இருந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் பல உலகங்களாக வாழ்கிறோம். மிகச் சில வீடுகளிலேயே எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் கூட இருக்கிறது. அப்படித் துண்டாகிக் கிடப்பவர்களை இணைக்கும் ஒரு பாலமாகவும் மதம் பயன் பட்டிருக்கிறது. "சாமி கும்பிடும் போதாவது சேருங்களேன்ப்பா!" என்று செய்த சம்பிரதாயம்தான் வீட்டுக்குள் பூசையறை என்று சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். 

தொடரும்...

ஞாயிறு, நவம்பர் 04, 2012

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - 1/N

இன்றைய தலைமுறைக்கு, வாசிக்க அளவிலாத நூல்கள் இருக்கின்றன தமிழில். எழுதுவதற்கு எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக வாசிக்கத் துவங்கும் எவருக்கும் எதில் இருந்து ஆரம்பிப்பது என்பது பெரும் குழப்பம்தான். எல்லாத் தலைமுறையையும் சேர்ந்த எல்லா எழுத்தாளர்களும் கவிஞர்களும் சொல்லும் மூன்று - திருக்குறள், கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம். "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை" என்று அதைத்தானே பாரதியும் சொல்கிறார். இவை மூன்றும் ஒவ்வொரு வேறுபட்ட வகை இலக்கியம். திருக்குறள் புனைவற்ற இலக்கியம் (NON-FICTION). கம்பராமாயணம் வேற்று மொழியில் எழுதப் பட்ட ஒன்றின் தழுவல். கிட்டத்தட்ட மொழிபெயர்ப்பு போன்றது. சிலப்பதிகாரம் தமிழிலேயே எழுதப்பட்ட முழுமையான புனைவிலக்கியம் (FICTION). ஆக, தமிழில் எழுதப் பட்ட தலைசிறந்த புனைவிலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று இதுதான். மொத்த இந்தியாவுக்கு இராமாயணம்-மகாபாரதம் எவ்வளவு பெரிய காப்பியங்களோ அந்த அளவுக்கு சிலப்பதிகாரம் தமிழகத்துக்கு முக்கியம். இந்தியர் நாம் இராமாயணம்-மகாபாரதத்தை தொலைக்காட்சித் தொடராகவெல்லாம் போட்டுச் சிறப்புச் செய்த அளவுக்குத் தமிழர் நாம் சிலப்பதிகாரத்தைக் கொண்டாடியிருக்கிறோமா? இல்லை! இன்னும் சொல்லப் போனால் இது தமிழகமும் கேரளமும் சேர்ந்து கொண்டாட வேண்டிய படைப்பு. ஏன் அந்த அளவுக்குக் கொண்டாடப் படவில்லை என்று தெரியவில்லை.

ஜெயகாந்தன் போன்ற பெரும் பெரும் எழுத்தாளர்களே, தமிழனாகப் பிறந்தவர்கள் முதலில் தமிழின் பழைய இலக்கியங்களைப் படியுங்கள்; அப்புறம் உலக இலக்கியங்கள் எல்லாம் படிக்கலாம் என்று சொல்வதைக் கேட்டு, அதற்கான சரியான நூல்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நூலகத்தில் வித்வான். டாக்டர். துரை. இராஜாராம் அவர்கள் எழுதிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (முழுவதும் - உரைநடையில்) என்ற நூலைக் கண்டதும் அப்படியே அள்ளிக் கொண்டு வந்து விட்டேன். நூலின் அட்டையில் இருக்கும் படம் கொஞ்சம் குழப்புகிறது. அழகான ஒரு பெண்ணுக்கு இன்னோர் அழகான பெண் (இரண்டும் வெவ்வேறு விதமான அழகுகள்) தலை வாரி விடுவது போன்ற படம். கண்ணகியும் மாதவியுமாக இருக்குமோ என்றால், அவர்கள் அந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்து வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லையே. ஒருவேளை அவர்கள் அப்படி இருந்து கொண்டால் தனக்கு வசதி என்று கோவலன் கனவு கண்டிருக்கலாம். அல்லது, ஒருவர் கண்ணகியாகவோ மாதவியாகவோ இருக்கலாம்; மற்றவர் பணிப்பெண்ணாக இருக்கலாம். சிலப்பதிகாரம் என்றாலே கண்ணகி-மாதவி என்ற இரு பெண்களின் கதை என்று நம் மனதில் பதிந்து விட்டதால் வந்த குழப்பம். பாசக்கலர் உடை அணிந்திருக்கும் அழகி அழகாக இருக்கும் அதே வேளையில் அப்படியே தமிழ் முகம் கொண்டவளாகவும் இருக்கிறாள்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் செய்யுட் பகுதியில் படித்த சிலப்பதிகாரம் ஒரு போதும் முழுமையான கதையையும் படிக்கும் வாய்ப்பைக் கொடுக்க வில்லை. ஏதாவதொரு பகுதியை மட்டும் கொடுத்து, அதையும் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து, மனப்பாடப் பகுதியில் பத்து மதிப்பெண்கள் சுளையாக வாங்க வேண்டுமென்றால், அத்தனையையும் அப்படியே அச்சரம் தவறாமல் மனப்பாடம் செய்து கொள்ளுமாறுதான் அறிவுறுத்துவார்கள். அதிலும் எம்மைப் போன்ற நல்ல தமிழாசிரியர் பெற்ற பாக்கியசாலிகள் கூடுதலாகக் கொஞ்சம் புரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அப்படி எங்கள் தமிழாசிரியை சொன்ன எத்தனையோ தகவல்கள்-கருத்துகள், மனதின் ஆழத்தில் அப்படியே புதைந்து கிடக்கின்றன. எந்த நூலை எடுத்தாலும் அந்த நூல் பற்றி அவர் கொடுத்த அறிமுகம்தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படி அவர் சிலப்பதிகாரம் பற்றிச் சொன்ன ஒரு தகவல், "சிலப்பதிகாரம்... புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று சேர-சோழ-பாண்டிய ஆகிய மூன்று நாடுகளிலும் நடந்த கதை. சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, நீதி தவறிய பாண்டிய மன்னனின் உயிரைக் குடித்து, சேர நாட்டில் போய்க் கடவுள் நிலை அடைவாள்!" என்று சொல்வார்.

அதை நினைத்துக் கொண்டே முதற் சில பக்கங்களைப் புரட்டினால், அவர் சொன்ன மாதிரியே மூன்று பாகங்களாகவும் அவற்றுக்குள்முப்பது காதைகளாகவும் பிரித்தமைக்கப் பட்டிருக்கிறது நூல். இதில் புகார்க் காண்டம் மட்டுமே படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் கொடுக்கப் பட்ட காலம் முடிந்து விட்டது என்று நூலகத்தில் இருந்து தகவல் வந்து விட்டது. கொடுத்து விட்டு மீண்டும் எடுத்து வர வேண்டும். பயப்பட வேண்டாம். நூல் ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை. நாம் வாசிக்கும் வேகம் அப்படி.

முன்னுரையில் சில முக்கியமான தகவல்கள் உள்ளன. தமிழில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவிதமான காப்பியங்கள் உள்ளன என்றும் அவற்றை எப்படி வேறுபடுத்துவது என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். "பெருங்காப்பியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனைப் பெற்றிருக்கும்; ஏற்புடைய கடவுள் வாழ்த்தோடு விளங்கும்; மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்பன போன்றவற்றின் வருணனைகள் ஆங்காங்கே உரிய இடங்களில் காணப்படும். காண்டம், இலம்பகம், சருக்கம், காதை, படலம் போன்ற பெரும் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும் கொண்டதாயிருக்கும். நகை, வீரம், வெகுளி போன்ற ஒன்பான் சுவைகளைப் பெற்றிருத்தலோடு, ஆறாம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களை உடைத்தாயிருக்கும். மேலே கூறியவற்றில் எவை குறைந்தாலும் பரவாயில்லை. ஆனால், நால்வகைப் பயன்களில் பெருங்காப்பியத்தில் ஒன்றுகூடக் குறைந்துவிடக் கூடாது" என்கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் இவ்வாறமைந்த தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் சிலப்பதிகாரமே எல்லாவற்றுக்கும் மூத்ததாகக் கருதப் படுவது.

சிலம்புதான் இக்காப்பியத்தின் நாயகம். காப்பியத்தலைவன் கோவலனின் (அவன்தான் காப்பியத் தலைவனா அல்லது இது தலைவிகளை மையமாகக் கொண்ட காப்பியமா என்று தெரியவில்லை!) உயிரையும் பாண்டிய மன்னனின் உயிரையும் குடித்து இப்படியொரு காப்பியம் உருவாகக் காரணமாக இருந்தது  இந்தச் சிலம்புதான். சிலம்புதான் சிலப்பு. சிலம்பதிகாரம்தான் சிலப்பதிகாரம். கடைசியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் முறையிடுகையில், "என்னுடைய சிலம்பு முத்துப் பரல்கள் கொண்டவை; உன்னுடையவை மாணிக்கப் பரல்கள் கொண்டவை!" (முத்தும் மாணிக்கமும் இடம் மாறியிருக்க வாய்ப்புள்ளது!) என்று குழப்பத்தை நிவர்த்தி செய்து வைக்கும் காதை ஏதோவொரு வகுப்பில் படித்த நினைவும் இருக்கிறது.

இந்த நூல் சொல்வதாகச் சொல்லப் படும் நீதிகள் மூன்று: 1. அறநெறி தவறிய அரசனை அறக்கடவுளே இயமனாக நின்று அழிக்கும், 2. கற்புடை மகளிரை இவ்வுலகத்தார் மட்டுமல்லாது வானோரும் போற்றுவர், 3. ஊழ்வினை எவரையும் விடாது உருத்துவந்து ஊட்டும்.

நீதி 1. அறநெறி தவறினால் அரசனே ஆனாலும் அழிக்கப் பட வேண்டும் அல்லது தன்னைத் தானே அழித்துக்  கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு இந்த மண்ணில் நியாயமும் நீதியும் மேலோங்கியிருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களால் முடிகிறது என்றால் அதையும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போதைய அரசர்களும் அவர்களுடைய உறவுகளும் (இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்கிற விளக்கம் வேறு!) நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே அதற்குக் காரணம். சிலப்பதிகாரம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் கேள்விப் பட்டிராத அரசர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்; அதில் ஆராய்ச்சி செய்து களைத்து ஆட்சி செய்ய வந்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

நீதி 2. கற்புடை மகளிரின் பெருமையை இளங்கோவடிகள் சொல்லிச் சென்று பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இன்னும் கற்பு பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், "கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்!" என்று சொல்லும் அளவுக்கு முற்போக்குச் சிந்தனை கொண்ட பாரதி என்ற மகான் ஒருவர் பிறந்து, கற்பு சார்ந்த வாதங்களை அவற்றின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். முதல் நீதி முற்றிலும் அழிந்து விட்டதே என்று கவலை கொள்ளும் வேளையில், இரண்டாம் நீதி பேச்சளவிலாவது ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது நல்ல செய்திதானே. கற்பு நிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கும் அதே வேகத்தில் அதற்கான முக்கியத்துவமும் குறைந்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. "கற்பை இழந்தால், செத்தா போய்விடப் போகிறோம்?!" என்று கேள்வி கேட்கும் அளவுக்கு முன்னேறி விட்டோம். அதுவும் நல்ல முன்னேற்றமே. உயிரை விட மானம் பெரிதுதான். மானம் என்பது கற்பு மட்டுமே சார்ந்ததல்ல. ஒருவனுக்கு ஒருத்தியோ அல்லது ஒருத்திக்கு ஒருவனோ உண்மையாக இருக்க வேண்டியது முக்கியம்தான். அதற்கு அந்த ஒருவனோ ஒருத்தியோ தகுதியானவர்களா என்பதும் முக்கியம். ஒருத்தர் மட்டும் உண்மையாகவும் இன்னொருவர் ஏமாளியாகவும் இருப்பதை விடவும் எல்லோரும் அதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவது உத்தமம்தானே.

நீதி 3. சிலப்பதிகாரம் என்றாலே, நினைவுக்கு வரும் மனப்பாட வரி, "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பது. அதாவது, என்னதான் திட்டமிட்டுச் செயல் பட்டாலும், பொறுப்பாக இருந்தாலும், இருக்க முயன்றாலும், முற்பிறவியில் செய்த புண்ணியமும் பாவமும் உனக்கு நிகழ்த்த வேண்டியவற்றை நிகழ்த்தாமல் செல்லா என்பதே அதன் பொருள். இது கொஞ்சம் இடிக்கிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணும் படிதான் நம் வாழ்க்கைகள் இருக்கின்றன என்றாலும், இப்படி ஒரு கருத்தைச் சொல்லி விடுவதன் மூலம், நம் தவறுகள் அனைத்துக்கும் நாம் பொறுப்பேற்காமல் தப்ப வாய்ப்புக் கொடுக்கப் படுகிறது.

இதை எழுதியவர், இளங்கோவடிகள். ஒரு சேர மன்னனின் மகன். இவருடைய அண்ணன்தான் செங்குட்டுவன். செங்குட்டுவன்தான் கண்ணகிக்குக் கோயில் கட்டியவர். மன்னவனான அண்ணன் அவரால் முடிந்ததைச் செய்கையில், எழுத்தாணியைக் கையில் பிடித்த இவர், இவரால் முடிந்ததாகச் செய்ததுதான் இந்த மாபெரும் இலக்கியம். இருவரும் சேர மன்னர் குடும்பத்தில் பிறந்ததால்தான் கேரளமும் இவர்களைக் கொண்டாட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அவர்கள் எந்த அளவு அதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கண்ணகி கோயில் இன்னும் கேரளாவில் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதுவும் அதே பெயரில் இல்லை. மங்கள தேவி கோயில் என்று சொல்கிறார்களாம். அதுவும் தமிழக எல்லைக்கு அருகில் இருப்பதால், நம்மவர்கள் போய் சித்திரைப் பவுர்ணமிக்கு வணங்கி விட்டு வருகிறார்களாம். அதற்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள். தேக்கடியில் கூட்டம் குறைந்து வருவதால், இதைச் சுற்றுலாத் தளமாக்க யோசனை செய்து கொண்டிருக்கிறதாம் கேரளா வனத்துறை. நம்மவர்கள் மந்தை மந்தையாகப் போய்க் குவிகிற விதமாக, 'ஆண்டு தோறும் கண்ணகிக்குப் பச்சைச் சேலை வைத்து வணங்கி வந்தால் மூத்த பிள்ளைக்குப் பணக்கார வீட்டில் பெண் கிடைக்கும்' என்கிற மாதிரி ஏதாவது ஒரு கதையைக் கட்டி விட்டார்கள் என்றால், கண்ணகியின் புகழ் காலத்துக்கும் இருக்கும். அவர்களுக்கும் வருமானத்துக்கு வருமானம் ஆகி விடும். துணிக்கடைக்காரர்களாவது பிள்ளைக்குக் கண்ணகி என்று பெயர் வைப்பார்கள்.

தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...