செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

என் காதல் - புடலங்காயும் பூசணிக்காயும்!

ஒரு மனிதனைப் பிடிப்பதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும் அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் அல்லது நம் மீது பாசக்காரராக இருக்க வேண்டும் என்று எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இருக்க வேண்டியதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெயர் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு காரணம் கூட இருக்கலாம். நம் வாழ்வின் மறக்க முடியாத ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடன் இருந்திருந்தால் கூட அத்தகைய பிடிப்புகள் ஏற்படலாம். அது மனிதர்களுக்கு மட்டுமில்லை. பொருட்களுக்கும் கண்ணால் காண முடியாத மற்ற பல்வேறு விஷயங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு பாடல் பிடித்துப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில சொல்லி விளக்க முடிந்தவை. சில அப்படி முடியாதவை. சில நேரங்களில் குரல், சில நேரங்களில் மெட்டு, சில நேரங்களில் இசை என்று பாடலின் அடிப்படையான பண்புகள் தவிர்த்து முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட சூழல் கூட அத்தகைய பிடிப்பைத் தீர்மானிக்க முடியும். முதல் முறையை விடுங்கள், பல முறை கேட்டுப் பிடிக்காத ஒரு பாடல் திடீரென ஒரு குறிப்பிட்ட சூழலில் கேட்டபின் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதுவரை பேசியதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயங்கள். இதற்கென்று ஒரு பத்தியை வீணடித்திருக்க வேண்டியதில்லை என எண்ண வைப்பவை. இன்று திடீரெனச் சிந்தித்துணர்ந்த இது போன்ற இன்னோர் உணர்வுதான் இதை எழுதத் தூண்டியது.

இந்தக் கோட்பாடு உணவுப் பொருட்களுக்கும் காய்கறிகளுக்கும் கூடப் பொருந்தும் என்று இன்றுதான் உணர்ந்தேன். சின்ன வயதில் இருந்தே இட்லி எனக்கு மிக மிகப் பிடித்த ஓர் உணவு. மூன்று வேளையும் முன்னூறு நாட்களுக்குத் தினமும் இட்லி சாப்பிட வேண்டும் என்று சொன்னால் கூட அதை விரும்பிச் செய்வேன் என்று சொல்லித் திரிந்த காலம் உண்டு. பகத் சிங்கின் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" போல், "எனக்கு ஏன் இட்லி பிடிக்கிறது?" என்று யோசிக்க ஆரம்பித்தால், அது முழுக்க முழுக்க அந்தச் சுவையால் ஈர்க்கப் பட்டதால் ஏற்பட்ட பிடிப்பு என்றெண்ணுகிறேன். அது போலவே இரசம் மிகவும் பிடிக்கவும். அதுவும் சுவையால் ஈர்க்கப் பட்ட பிடிப்புதான். அதற்கு மேல் அதில் போடப் படும் மிளகு மற்றும் மற்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஏன் உணர்கிறேன் என்றால், மிளகு முதல் இஞ்சி, பூண்டு, மஞ்சள் பொடி, கீரை, வாழைப்பூ, வாழைத்தண்டு வரை மருத்துவ குணம் கொண்ட பல உணவுப் பொருட்கள் பிடித்துப் போனதன் பின்னணியில் இளம் வயதிலேயே அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த பெருமைகளும் முக்கியக் காரணம். அதனாலேயே அவற்றின் சுவையும் பிடித்துப் போனன. அல்லது வெளியில் தெரிந்தது சுவை மீதான காதலாக இருந்தாலும் உள்ளுக்குள் வேறொரு காரணமும் இருந்தது என்று சொல்லலாம். அழகான பிள்ளை நல்ல குணமாகவும் இருந்தால் எப்படி இருக்கும். அப்படி. இதுவும் சாதாரணம்தான். அடுத்தொரு லிஸ்ட் இருக்கிறது. அதுதான் இன்றைய ஞானோதயத்தில் உதித்தது. அது புடலங்காய் மற்றும் பூசணிக்காய் மீதான காதல்.

புடலங்காயும் பூசணிக்காயும் அதிகம் கிடைக்காத காலத்தில் அவை எங்கு கிடைத்தாலும் வாங்கி விட வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி விடுவேன். வீட்டுக்கு வந்து கூட்டு வைத்துக் கொடுத்தால் அதிகம் சாப்பிட முடியாது. வாங்குவதில் காட்டிய ஆர்வம் தின்பதில் இராது. பல முறை முயன்றும் எதிர் பார்த்த ஏதோவொன்று கிடைக்காதது போலவே உணர்வேன். அதன் பிறகு புடலங்காயும் பூசணிக்காயும் நிறையக் கிடைக்க ஆரம்பித்து விட்ட போதும் அவற்றைப் பார்க்கும் போது ஏற்படுகிற காதலுணர்ச்சி கட்டுப் படுத்தவே முடியாததாகவே இருக்கிறது. வாங்கி வந்தால் சாப்பிடவும் முடியவில்லை. சில பெண்களைக் காதலியாகத்தான் பிடிக்கும்; மனைவியாகப் பிடிக்காது என்று சொல்வீர்களே, அது போல. இந்த இரண்டையும் நான் எதிர் பார்க்கும் சுவையோடு செய்து கொடுத்து விட வேண்டும் என்று வீட்டுக்காரியும் என்னென்னவோ முயன்று பார்த்து விட்டாள். இன்னும் திருப்திப் பட்ட பாடு இல்லை. சின்ன வயதில் கிராமத்தில் இருந்த போது பாட்டி சமைத்த புடலங்காயிலும் பூசணிக்காயிலும் கிடைத்த சுவை இன்னும் கிடைக்கவேயில்லை என்றுதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். இன்று புடலங்காய் சாப்பிடும் போதுதான் "மாத்தி யோசி" என்றோர் அசரீரி வந்தது.

"பாட்டி சமைத்த மாதிரி சுவை கிடைக்கவில்லையா அல்லது அது பாட்டி சமைத்தது என்பதால் இதில் சுவை கிடைக்க மாட்டேன் என்கிறதா?" என்றொரு கேள்வி. நல்ல கேள்வியாகத்தான் இருக்கிறது. பாட்டி ஒன்றும் சமையலில் கை தேர்ந்த ஆள் இல்லை. மனைவியோ சமையலில் புலி. 'அப்படியிருக்கையில் இப்படியேன் தோன்றுகிறது? யோசி... யோசி...' என்று மண்டை குடை பட்டது. செட்டிநாட்டுப் பாணியில் நடுவில் வெட்டவெளி கொண்ட கிராமத்துப் பெரிய வீட்டின் நட்ட நடுவில் பாட்டி புடலங்காயும் பூசணிக்காயும் கொடி போட்டு வளர்த்தார். அதனால் பாட்டியின் காலத்துக்குப் பின்னும் அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் பாட்டியின் நினைவு வரத் தவறுவதேயில்லை. அந்தப் பாட்டிப் பாசம்தான் அல்லது பாட்டியின் நினைவுதான் புடலங்காயாகவும் பூசணிக்காயாகவும் உருவெடுத்து விரட்டிக் கொண்டிருக்கிறதோ என்று இன்று திடீரெனத் தோன்றிய உணர்வை, "விடாதே... விடாதே... அதேதான்!" என்று சொல்லிச் சென்று விட்டது அசரீரி. அப்படியே நீட்டினால் புடலங்காயும் பூசணிக்காயும் மட்டுமில்லை. இது போல எத்தனையோ இனம் புரியாத உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. ஒவ்வொன்றிலும் பாட்டியின் நினைவு போல ஏதோவொன்று இருக்கிறது. சில நினைவிருப்பவை. சில நினைவிலிருந்து ஓய்விலிருப்பவை. இது போலவே என்றாவது ஒருநாள் கிணறு வெட்டும் போது கிளம்பி வரலாம்.

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

இசை - எனக்குத் தெரிந்த கற்பூர வாசனை


இசைக்கும் எனக்குமான உறவு அமாவாசைக்கும் அப்துல் காதருக்குமான உறவு போல. அப்துல் காதர், அமாவாசையை வைத்து அடுத்த மூன்று நாட்களில் பிறை வரும் என்பதைக் கணக்குப் போட முடியும் என்பது போல், எனக்கும் இசைக்கும் இருக்கும் உறவையும் ஓரளவு பெரிதாக்கிக் காட்ட முடியும், வலுக்கட்டாயமாக முயன்றால். ஆனால், உண்மையில் எங்களிடையான உறவு எப்படி என்றால், வருடத்தில் ஓரிரு முறைகள் பார்க்கும் படங்களில் வரும் பாடல்களைப் பார்ப்பேன்; பேருந்தில் பயணம் செய்யும் நேரங்களில் வேறு வழியில்லாமல் கேட்க நேரும் பாடல்களைக் கேட்பேன். வீட்டில் எந்நேரமும் யாருக்கோவென்று ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் ஓடும் பாடல்களையும் அவ்வப்போது கேட்டுக் கொள்வேன். மற்றபடி, பாடல் கேட்க வேண்டும் என்று முயன்று முன் சென்று போட்டு விட்டுக் கேட்டதெல்லாம் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறைதான். முறையான இசை என்று பார்த்தால் அதில் என் அறிவு அமாவாசை வெளிச்சத்தின் அளவு என்று சொல்லலாம் (அய்யோ... இந்த அமாவாசை ஏன்தான் இப்படித் திரும்பத் திரும்ப வந்து லொள்ளுப் பண்ணுகிறதோ இன்னைக்கு!)

சிங்கப்பூர் வந்து ஆரம்பித்திருக்கும் இன்னொரு பழக்கம் - ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பாட்டுக் கேட்பது. எந்த வண்டியில் ஏறினாலும் எல்லோருமே காதில் இரண்டை மாட்டிக் கொண்டு தன் மொபைல் போனுக்குள் மூழ்கிக் கிடப்பதைத்தான் பார்க்க முடியும். சரி, ஊரோடு ஒத்துப் போவோம் என்று நானும் அதே மாதிரி ஆரம்பித்து விட்டேன். நான்கைந்து நாட்கள் பாட்டுக் கேட்டதிலேயே மனதில் இசை பற்றிய எத்தனையோ கருத்துகள் உதிக்கின்றன. சினிமா பற்றியும் இசை பற்றியும் லயித்து லயித்துப் பேசும் கூட்டங்களில் மாட்டிக் கொள்ளும் போது வேற்றுக் கிரகத்து வாசி போல விழிக்கும் பிரச்சனை இனி இராது போலத் தெரிகிறது. பத்துக் கருத்துச் சொல்பவர்களுக்கு மத்தியில் நாமும் ஒரு கருத்தோ இரண்டு கருத்தோ சொன்னால் கூடப் போதுமே. மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களோ இல்லையோ நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம், 'நானும் ஒரு கருத்துச் சொல்லிட்டேன்ல!' என்று.

அப்படி உதித்த முதல் கருத்து - 'இளையராஜாவின் இசையில் ஒரு குறிப்பிட்ட தினுசு (PATTERN) இருக்கிறது!'. அதாகப் பட்டது, அவருடைய பல பாடல்கள் ஆரம்பத்தில் பிரமாதமாக இல்லாமல் நடுவில்தான் உச்சகட்ட சூடு பிடிக்கின்றன. பொறுமையில்லாதவர்கள் முதல் இரண்டு வரிகளிலேயே தாவி ஓட வாய்ப்பிருக்கிறது. பாதியாவது தாண்டாமல் அவருடைய பாடல்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாது. இன்னொன்று, அவருடைய இசையில் வயலின் மிக அதிகமான அளவில் பயன் படுத்தப் படுகிறது. ஒவ்வொருத்தருக்கும் பிடித்தவை சில இருக்கும் பிடிக்காதவை சில இருக்கும். அந்த வகையில் நீண்ட நாட்களாக இசையில் இரு குறிப்பிட்ட விதமான சத்தம் மட்டும் பிடிக்காமலே இருந்தது. அது என்னவென்று தெரியாமல் இருந்தேன். இப்போது அதுதான் வயலின் என்று புரிந்துள்ளது. அந்தச் சத்தமே ஒருவித இரைச்சல் போல இருக்கிறது. பல பெண்கள் கூடிக் குழுவாக "லலலா... லலலா..." போடுவதும் இளையராஜா பாடல்களில் மட்டுமே அடிக்கடி வருகிறது.

இதெல்லாம் சொல்வதால், பண்ணைபுரம் என்ற பட்டிக்காட்டில் இருந்து கிளம்பி பரம்பரை பரம்பரையாக இசையைப் பழமாகத் தின்று கொட்டை போட்டவர்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் செய்த அவருடைய வெற்றியைச் சகித்துக் கொள்ள முடியாதவன் என்றோ ஏற்றுக் கொள்ள முடியாதவன் என்றோ சொல்லிச் சுருக்கி விட வேண்டாம். நான்கு நாட்கள் பாட்டுக் கேட்ட ஒருத்தனின் கருத்து எந்த வகையிலும் அந்தக் கருவிக்கோ அதைப் படைத்த கலைஞனுக்கோ இழுக்காக இருக்க முடியாது. "கழுதைக்குத் தெரியுமா...?" என்ற பழமொழியைச் சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். ஆனாலும், என்னுடைய சுவை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால், இவற்றையெல்லாம் அஞ்சாமல் வெளியே சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

இரண்டாவது கருத்து - கண்ணதாசனின் பாடல்கள் பற்றியது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் அவருடைய வரிகளைச் சொல்லி வாதாடும் போதெல்லாம் இருக்கிற வசீகரம்... சில இரவுகளில் கேட்டால் கிறக்கிப் போடும் அவருடைய சில தத்துவப் பாடல்கள், காலையில் அலுவலகம் செல்லும் போதோ மாலை அல்லது இரவு வீடு திரும்பும் போதோ கேட்டால்... முடியல... என்னத்தச் சொல்ல... 'அததுக்கு ஒரு நேரம்-காலம் இருக்கிறது!' என்கிற தத்துவம்தான் உதிக்கிறது. துரித உணவுக் காலத்தில் இலை போட்டுத் திகட்டத் திகட்டச் சாப்பிடுவதெல்லாம் எல்லா நேரத்திலும் ஒத்து வராதது என்பதும் புரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேல், ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. திருவிழாக் கொட்டு மேளங்களின் மூலமும் தெம்மாங்குப் பாடல்களின் மூலமும் இசையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நம்மைப் போன்ற பட்டிக்காட்டான்களுக்கு, தொடக்கம் முதல் முடிவு வரை காது கிழிகிற மாதிரி அடிக்கும் டண்டணக்கா இசைதான் எக்காலத்திலும் பிடித்ததாக இருக்கிறது. மெல்லிசையிலும் கூட இந்த வல்லிசைச் சாயல் இருந்தால்தான் அதைச் சுவைக்க முடிகிறது. அப்படியான பாடல்களும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. குறைந்த பட்சம் ஐந்துக்கு ஒரு பாடல் நமக்கான பாடலாக இருக்கிறது. நம் இனம் இருக்கும் வரை நமக்கான இந்த இட ஒதுக்கீடும் இருந்து கொண்டேதான் இருக்கும் போலத் தெரிகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 10/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

போக விட்டானா அவன்?! இல்லையே. யாரவன்? ஒரு சூதாட்டக்காரன். என்ன செய்தான்? ஒரு எலுமிச்சம் பழத்தையும் மூன்று கிண்ணங்களையும் கைகளில் வைத்துக் கொண்டு ஏதோவொரு சித்து விளையாட்டுக் காட்டினான். கிண்ணங்களை எலுமிச்சம் பழத்துக்கு மேல் கவிழ்த்தி கையை இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டி பழத்தை இடம் மாற்றி இறுதியில் பழம்  எங்கே இருக்கிறது என்று கேட்பானாம். சுற்றியிருக்கிற முட்டாள்கள் எல்லாம் கையில் இருக்கிற காசைக் கட்டி, "இதற்குள் இருக்கிறது... இதற்குள் இருக்கிறது..." என்று கரைவார்களாம். சரியாகச் சொன்னவர்களுக்கு கட்டியதை விட இரண்டு மடங்குப்  பணம் ஆட்டத்தை நடத்துபவன் கொடுப்பானாம். தப்பாகச் சொன்னவர்களின் பணத்தை அவன் எடுத்துக் கொள்வானாம். இதைக் காலம் காலமாக தினம் தினம் பாலம் பார்க்க வருபவர்களிடம் காலை முதல் இரவு வரை செய்து கொண்டிருக்கிறான் போலும். இந்த மாதிரிச் சோலிகளைக் கண்டாலே முதல் வேலையாக அதற்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்து விடுவது என்  வழக்கம். இப்படி ஏதாவது நடந்தால் அங்கேயே மகுடி ஊதப் பட்ட பாம்பு போல மயங்கி விழுவது என் வீட்டுக்காரியின் பழக்கம் என்பது அன்றுதான் புரிந்தது. சந்திரமுகியில் ஜோதிகா மூஞ்சி போகிற மாதிரிப்  போனது அவள் மூஞ்சியும். விளையாட்டை விரட்டி விரட்டி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

விபரீதம் புரிய ஆரம்பித்து, "கிளம்பு..." "கிளம்பு..." என்று சொல்லிப் பார்த்தேன். கிளம்புகிற மாதிரித் தெரியவில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால், அந்த அரை மணி நேரமும் நான் இருந்த உலகத்திலேயே அவள் இல்லை. இரண்டு-மூன்று முறை பார்த்து விட்டு, "நல்லாத் தெரியுது. எந்தக் கிண்ணத்தில் எலுமிச்சம் பழம் இருக்கிறது என்று. ஏன்தான் இப்படித் தப்புத் தப்பாகச் சொல்கிறார்களோ. இந்த முறை நான் சரியாகச் சொல்லி அவன் பணத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வருகிறேன் பாருங்கள்!" என்று போனாள். அதன் பிறகு என்ன நடந்தது என்று சொல்ல வேண்டுமா? இந்த மாதிரிக் கதைகள் எல்லாத்துக்குமே முடிவு ஒரு மாதிரித்தானே இருக்கும். உண்ணாமல் தின்னாமல் அண்ணாமலைக்கு அள்ளிக் கொடுத்து விட்டு வந்தாள். எவ்வளவு என்று சொன்னால் அது பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் நழுவிக் கொள்ள அனுமதி கொடுங்கள். இந்த நிகழ்வின் மூலம் முதல் முறையாக முறைத்துக் கொள்ளும் (முறைத்துக் கொல்லும் என்று சொன்னாலும் தகும்!) வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அளவுக்கு மேல் சீண்டினாலும் அது திரும்பி நம்மைத்தான் அடிக்கும் என்பதைப் புரிந்து அத்தோடு சமாதானப் பட்டுக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கிப் பயணப் பட்டோம்.

அடுத்த இடம் எதுவாக இருக்க முடியும்? இலண்டன் செல்லும் தமிழர் எவரும் பார்க்காமல் திரும்பக் கூடாத இடம் அது. ஈஸ்ட் ஹாம். ஈஸ்ட் ஹாம் பற்றிப் பத்து வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன். சென்று வந்த நண்பர்கள் கதை கதையாகச் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி-கமல் படங்கள் போட்ட சலூன் கடைகள் முதல் சாம்பார் சாதம் விற்கும் சாப்பாட்டுக் கடைகள் வரை எல்லாமும் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். போய் இறங்கியதும் "நீ ஏன் ஈஸ்ட் ஹாமில் தங்கக் கூடாது? அதுதானே உங்கள் பேட்டை?" என்று சில நண்பர்கள் வேறு கேட்டு நினைவு படுத்தினார்கள். "அங்கே செல்ல வேண்டுமானால் நாங்கள் எல்லாம் தனியாக விசா எடுத்துத்தானே வர முடியும்?!" என்று வெள்ளைக்காரர்களே கேலியாகச் சொல்வார்களாம். அந்த அளவுக்குத் தமிழ் மக்கள் கட்டி ஆளும் பகுதி. ஆனால், "அவ்வளவு பாதுகாப்பான இடம் இல்லை. கவனமாகப் போய் வா!" என்றும் சிலர் எச்சரிக்கை மணி அடித்திருந்தார்கள். இலண்டனிலேயே குப்பையான இடம் இதுதான் என்று நம்மவர்கள் சிலர் உரிமையோடு சொல்லி அனுப்பினார்கள். 'நம்ம பகுதியில் என்றால் இது கூட இல்லையென்றால் எப்படி?' என்று எண்ணிக் கொண்டே மதியச் சாப்பாட்டுக்கு சாம்பார் சாதம் சாப்பிடப் போய் இறங்கினோம். 

இரயில் நிலையத்தில் இறங்கி சிறிது தொலைவு நடந்தால் வசந்த பவன் வந்தது. கடை முழுக்க பச்சைத் தமிழ் முகங்கள். ஓரிரு வெள்ளைக்காரர்களையும் காண முடிந்தது. தமிழ்நாட்டில் சாப்பிட்ட மாதிரியான சுவையும் உணர்வும் கிடைத்தது. சாப்பிட்டு முடிந்ததும் அங்கிருக்கும் முருகன் கோயில் பற்றி விசாரித்தோம். ஆனால், குளிரில் நடக்கவோ பயணிக்கவோ தெம்பு சிறிதும் இல்லை. பனிமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் வந்தன. நல்ல பிள்ளையாக வீடு திரும்புவதுதானே நல்லது. ரஜினி-கமல் படம் போட்ட சலூன் கடையைக் கூடப் பார்க்க முடியவில்லை. இலண்டனில் பார்க்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடத்தையும் பார்த்த திருப்தியில் வீடு திரும்ப முடிவு செய்து அந்த ஒரு சாலையை (ஹை ஸ்ட்ரீட்) மட்டும் பார்த்து விட்டு அப்படியே திரும்பி இரயில் நிலையம் நோக்கி நடந்தோம். அவ்வளவு ஒன்றும் குப்பையாக இல்லை. ஒருவேளை நாங்கள்தான் குப்பையான பகுதிகளைப் பார்க்க வில்லையோ என்னவோ. என்னதான் நம்ம பகுதி என்றாலும் வீடுகள் அனைத்தும் சாரை சாரையாக பிரிட்டிஷ் பாணியிலேயே இருந்தன. 

திரும்பும் வழியில் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று அதிகம் புழக்கம் இல்லாத பாதையைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையில் குளிர்/ பனிமழை காரணமாக இரயில் சேவை பாதியில் தடை பட்டு, கொல்லும் குளிரில் பேருந்துக்குக் காத்துக் கிடந்து, வந்த பேருந்திலும் அடித்துப் பிடித்து ஏற முடியாமல் சிரமப் பட்டு, நாய்ப்பாடு பட்டு ஒரு வழியாக வீடு திரும்பினோம். காலை மிதித்தான்-கையை இடித்தான் என்று கெட்ட வார்த்தை பேசித் திட்டிச் சண்டை போட்டுக் கொண்ட காட்சி ஒன்றையும் பார்த்து ஆடிப் போனோம். அது இலண்டனின் பிரச்சனையோ இங்கிலாந்தின் பிரச்சனையோ இல்லாமலும் இருக்கலாம். அந்தப் பகுதியின் பிரச்சனையாகக் கூட இருக்கலாம். நீண்ட காலமாக இலண்டனில் இருப்பவர்கள் கூட சிறிது வியப்படையத்தான் செய்தார்கள் இதைக் கேள்விப் பட்டு.

ஓர் உப்புக்கல்லுக்குக்  கூடப் பிரயோசனமில்லாத மாதிரியான பல வீண் பழக்கங்கள் நமக்கு உண்டு. அதில் ஒன்று, வழியில் போகிற வருகிற ஆட்களைப் பயமுறுத்துவது போலக் குர்ரென்று பார்ப்பது (அது பற்றி இங்கே சொடுக்கிப் படியுங்கள்!). அதில் எனக்கோர் இன்பம். அப்படிப் பார்த்து பார்த்து அவர்கள் பற்றி ஏதாவது கணிக்கவும் கற்பனை செய்யவும் முயல்வது. அது ஓர் ஈத்தர வேலை என்பது எனக்கும் தெரியும் என்றாலும் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தானே இத்தனையும் பேசிக் கொண்டிருக்கிறேன். அதனால் அதையும் சொல்லி விடுகிறேன். அதிலும் குறிப்பாக, வெளியிடங்களில் நம்மவர்களை உற்றுக் கவனித்து வேடிக்கை பார்ப்பது நம்மில் நிறையப் பேருக்கு வாடிக்கைதானே. பெங்களூர் போன காலத்தில் அங்குள்ள தமிழர்களை அப்படித்தான் வேடிக்கை பார்ப்பேன். அது போல வெளி நாடுகளில் இந்திய முகங்களைக் கூடுதல் உரிமையோடு வேடிக்கை பார்ப்பேன். அதுவும் இலண்டன் கொஞ்சம் தொலைவில் இருக்கும் ஊரல்லவா? அப்படிப் பார்க்கும் போது அங்கே இருக்கும் நம்மவர்களை அல்லது அவர்களின் பார்வைகளை இரு வேறு விதமான ஆட்களாக அல்லது பார்வைகளாகப் பிரிக்க முடிந்தது. ஒன்று, 'ஆகா, நம்மைப் போலவே நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் பரக்கப் பரக்கப் பராக் பார்த்துக் கொண்டிருக்கிறான்!' என்று ஒருவிதப் பாசத்தோடு பார்த்துச் செல்வோர் அல்லது அவர்களின் பார்வை. இன்னொன்று, 'ஏய், என்னப்பு, இலண்டனுக்குப் புதுசா? நாங்கெல்லாம் இங்கதான் காலங்காலமா...' என்கிற மாதிரியான ஆட்கள் அல்லது பார்வை. அவர்கள் பாட்டுக்கு எதையோ யோசித்துக் கொண்டும் சென்றிருக்கலாம். நமக்குத்தான் கண்ணில் நொல்லையோ என்னவோ.

மனைவியும் மகளும்!
அடுத்ததாக இலண்டனில் பார்க்க வேண்டிய இடம் எதுவென்று சொல்லுங்கள். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (BRITISH MUSEUM) தானே. அங்கும் சென்றோம். அன்றே அல்ல. அடுத்த வாரம். ஒரு வாரத்தில் ஓர் இடத்துக்கு மேல் பார்க்கக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டவன் நான். இரண்டு இடங்கள் பார்த்ததே பெரிய சாதனை. அதனால் மூன்றாமிடம் அடுத்த வாரம்தான் முடியும். கொள்கைப் படியே நன்றாகத் தூங்கி எழுந்து மெதுவாகத் தயாராகிக் கிளம்பி அருங்காட்சியகம் நோக்கிப் புறப்பட்டோம்.

அதற்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து கொண்டிருந்த போது ஒரு சிறிய அனுபவம். வாழ்க்கை முழுக்க மறக்க முடியாதது. அருங்காட்சியகத்தில் பார்த்த பொருட்கள் கூட ஒன்று கூட இப்போது சரியாக நினைவில்லை. ஆனால் இது இருக்கிறது. காலா காலத்துக்கும் இருக்கும். எப்போதும் போல மகள் ஏகப்பட்ட கேள்விகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு வாயடித்துக் கொண்டு வந்தாள். நான் எப்போதும் போல அவளைக் கவனித்தும் கவனிக்காமலும் எனக்கு வேண்டியதை மட்டும் முழுமையாகக் கவனித்துக் கொண்டும் வந்தேன். இந்திய(!) முகம் கொண்ட இளைஞன் ஒருவன் சைக்கிளை ஏதோ சரி செய்து கொண்டு உருட்டிக் கொண்டே எங்களோடு இணையாக ஒரு நிமிடம் நடந்து வந்தான். மகளின் தமிழால் ஈர்க்கப் பட்டு, எங்கள் பக்கம் திரும்பி, "நீங்கள் இலங்கையா?" ("ARE YOU SRI LANKANS?") என்று வெள்ளைக்கார உச்சரிப்பில் ஒரு கேள்வியைப் போட்டான். புரியாமல் திரும்பச் சொல்லச் சொன்னேன். இரண்டாம் முறை புரிந்ததும், "இல்லை, இந்தியர்கள்!" என்று மட்டும் சொன்னேன். "ஓ!" என்று பெருவிரலை உயர்த்தி ஓர் ஓப்போட்டு விட்டு வேகமாக விலகி நடக்க ஆரம்பித்தான். செவிட்டில் அடித்தது மாதிரி இருந்தது. 'அடப்பாவி, எங்கள் மீது ஏனப்பா இவ்வளவு கோபம்!' என்று உட்கேள்வி கேட்டு கோபத்தின் நியாயத்தை உணரும் முன் சிறிது விலகிப் போயிருந்தான். 'அட, நம்ம ஆளுய்யா இவன்...' என்று உடனடியாக உணர்ந்து, வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்ற அவசரத்தில், "ஆனால், தமிழர்கள்!" (BUT, TAMILIANS!") என்று கத்திச் சொன்னேன். 'பரவாயில்லை, இருக்கட்டும்!' என்கிற மாதிரி மீண்டும் பெருவிரலை உயர்த்திக் காட்டி விட்டு, வண்டியில் ஏறி ஓட்ட ஆரம்பித்தான்.

இந்த நிகழ்வு மனதைக் கடுமையாகப் பாதித்து விட்டது. 'கொலைகாரப் பாவிகளா!' என்று சபித்து விட்டுப் போவது போல இருந்தது. கொலைகாரர்களைத் தண்டிக்கும் (எவ்வளவு சிறிய அளவில் என்றாலும்) வாய்ப்பை விரல் நுனியில் வைத்திருந்த போதும் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஏமாந்து அவர்களிடமே வாக்குகளை விற்றவர்களும் கொலைகாரர்கள்தானே. அவனாவது "தமிழா?" என்று கேட்டிருக்கலாமே. இந்தியத் தமிழர்கள் என்றால் கிளம்பிப் போய்க் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அப்படிக் கேள்வியைப் போட்டானோ என்று தோன்றியது. "இலங்கையா?" என்று கேட்டால், "இந்தியா!" என்று சொல்வதுதானே முறை. "தமிழ்நாடு!" என்று சொல்லியிருக்க வேண்டுமோ என்று ஓர் உட்கேள்வி. அப்படிச் சொல்லியிருந்தால் மட்டும் நின்று பேசியிருக்கவா போகிறான்?! இந்தியாவில் இருக்கிற மற்றவர்களிடம் கூடப் பேசினாலும் பேசுவார்கள். நம்மிடம் பேசும் முன் நாலு முறை யோசித்து விட்டுப் பேச வேண்டும் என்றுதான் அவர்களின் பிள்ளைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்றும் தப்பில்லையே!

மூட்-அவுட் ஆகி விட்டது. அடுத்த வாரம்... அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்து விடுவோம்...

வியப்புகள் தொடரும்...

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (3/3)

மலர்ச்சி...

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நூலிலேயே நா.பா. அரசியல் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதையும் காறித் துப்பியிருப்பதையும் படிக்கும் போது பல பழைய தலைவர்களையும் கட்சிகளையும் பற்றிக் கேள்விப் பட்டதெல்லாம் உண்மைதான் போலும் என்று எண்ண நேர்கிறது. நாம் நினைப்பது போல திடீரெனச் சேற்றில் குதித்த இனமல்ல நம்முடையது. மெல்லத்தான் தமிழ் மனச்சாட்சி செத்திருக்கிறது. விடுதலை பெற்றேடுத்தோர் வாழ்ந்து முடிந்த பின்பு வீழ்ந்ததல்ல நம் அரசியல்; அவர்கள் வாழும் போதே வீழ்ந்திருக்கிறது அல்லது அவர்களில் சிலரே கூட வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இன்றைக்கு இருப்பவர்களுக்குச் சற்றும் சளைக்காதவராக இருக்கிறார் பர்மாக்காரர். வெளியில் கும்பிடு போட்டு விட்டுப் பின்னணியில் பேய் வேலைகள் பார்ப்பது அப்போதே அரசியலின் அடிப்படைத் தேவையாக இருந்திருக்கிறது.

அதே கால கட்டத்தில்தான் காமராஜர், கக்கன் போன்ற மாமனிதர்களும் அதே மதுரை வட்டாரத்தில் அரசியல் செய்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தக் காலம், கதையில் வருவது போல, நன்மைக்கும் தீமைக்குமான போர்க் காலமாக இருந்து, அதற்குப் பிந்தைய காலம், முழுமையாகத் தீமைக்கும் தீமைக்குமான போர்க்காலமாக மாறியிருக்கலாம். நம் அடுத்த சந்ததி இப்படித்தான் நம் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் என்றெண்ணுகிறேன்.

கதை முழுக்க பர்மாக்காரர், புது மண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் என்று மொள்ளமாரிகளுக்கும் 'ர்' போட்டு மரியாதையோடு பேசியிருப்பது அரவிந்தனின் கோளாறா நா.பா.வின் கோளாறா என்று தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற பெரும் பெரும் நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் கூட மரியாதை இல்லாமல் 'அவன்', 'இவன்' என்று பேசும் நாட்டில் இப்படிப் பட்ட திருடர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்துப் பேச வேண்டும் என்கிற கண்ணியம் காக்கப் பட்டு வருகிறது என்பது எனக்குப் புரிபடாத ஒரு லாஜிக். தமிழ் கூறும் நல்லுலகம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. ஒருவேளை, நடிகரோ விளையாட்டு வீரரோ வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப மாட்டார் என்கிற தைரியமாக இருக்குமோ! :)

பர்மாக்காரர் வயதான காலத்தில் அங்கிருந்து அழகி ஒருத்தியை அள்ளிக் (சரியாகக் கவனிக்கவும்... 'தள்ளி' அல்ல... 'அள்ளி'!) கொண்டு வந்திருப்பதையும் அவர்கள் பெற்ற பிள்ளை அதனினும் அழகாக இருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் நா.பா. பர்மாவில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்த தன் மனைவியைப் பற்றிப் பேசும் போது பர்மாக்காரர் காட்டும் காதலுணர்ச்சி அருமை. வயதான காலத்தில் இளம்பெண் ஒருத்தியை இழுத்துக் கொண்டு வர வேண்டும் என்றால், அதெல்லாம் இல்லாமலா முடியும்? இப்படியொரு மனிதரை நேரில் பார்க்காமல் அவ்வளவு சிறப்பாகச் சித்தரித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். ஆக, அந்தக் காலத்திலேயே அரசியலில் இருக்கும் கிழவர்களுக்கு இந்தப் பலவீனமும் இருந்திருக்கிறது. :)

புதினத்தில் எனக்கென்று தனிப்பட்ட முறையில் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. பர்மாக்காரர் கிழக்கே இராமநாதபுரம் பகுதிக்காரர். அரவிந்தனும் கூட அந்தப் பகுதிக்காரனே. இராமநாதபுரம் பகுதிக்கு மிக நெருங்கியவன் என்ற முறையில் இது போன்ற பல விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. அந்தக் காலத்தில் கீழ்த்திசையில் கடல் கடந்து பயணித்ததில் கடலோர மாவட்டத்தினரே அதிகம். அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தினரே பர்மாப் பக்கம் நிறையப் போனது. சிங்கப்பூரில் கூடப் பழைய இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தினரே அதிகம் இருக்கிறார்கள். பர்மாவில் இருந்து தப்பி வந்த கூட்டத்தில் எனக்கு வேண்டியவர்களும் உண்டு. அவர்கள் மதுரையில் நிறைந்திருப்பதும் நிறையப் பேருக்குத் தெரியாத ஒன்று. இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். அவற்றைப் பதிவு செய்த விதம் பாராட்டத் தக்கது. இலக்கியத்தின் மிகப் பெரும் பயன்பாடே அதுதானே. நாம் உலகை வென்றதையும் சொல்ல வேண்டும். பஞ்சம் பிழைக்கப் போனதையும் சொல்ல வேண்டும். அதுதான் நேர்மையான வரலாறு.

இதில் இன்னொரு உண்மையும் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கிறது. பர்மாக்காரரும் அரவிந்தனும் கிழக்கே இராமநாதபுரம் சீமையில் இருந்து வந்தவர்கள். அரவிந்தனின் முதலாளி அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் மேற்கே சோழவந்தான் பக்கம் இருந்து வந்தவர். மதுரை என்பதே இப்படிக் கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வந்து குடியேறியவர்களால் பெரிதான ஊர். மீனாட்சி அம்மன் கோயிலும் அதைச் சுற்றிய நான்கைந்து தெருக்களும் அக்கால வரையறைகளின் படி வேண்டுமானால் உலக மகா நகரமாக இருக்கலாம். இன்று திருமங்கலம் முதல் வாடிப்பட்டி வரை பரந்து விரிந்து கிடக்கும் மதுரை இப்படி வந்தேறியவர்களால் வளர்ச்சியுற்றதே. மதுரைக்காரர்களிடம் கேட்டால் இதையெல்லாம் கதை கதையாகச் சொல்வார்கள். இதற்கெல்லாம் மேல், உருது பேசும் முகமதியர்கள், தெலுங்கு பேசும் நாயக்கர்கள், சௌராஷ்டிரம் பேசும் சௌராஷ்டிரர்கள் என்று எல்லோரும் கலந்து உருக்கொண்ட நகரம்தான் சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரை. அவர்களை மறுத்து maமதுரை முழுமையாகி விட முடியாது.

வட மதுரை மற்றும் தென் மதுரை பற்றிப் பேசியிருக்கும் வரிகள் மிகவும் நன்றாக இருந்தன. ஒவ்வொரு ஊரிலும் இப்படி இரு பகுதிகள் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லா ஊரிலும் வட பகுதி வளர்ச்சியுற்றதாகவும் தென் பகுதி தேய்ச்சியுற்றதாகவும் இருக்கும் (அண்ணாவின் பேச்சில் ஈர்க்கப் பட்டு வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவன்!). அதன்படியே மதுரையிலும் பாலத்துக்கு இந்தப் பக்கம் வறியோரின் பக்கமாகவும் அந்தப் பக்கம் வலியோரின் பக்கமாகவும் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது என்றெண்ணுகிறேன். மாட்டுத்தாவணி வேறு வந்து இந்த ஏற்றத்தாழ்வை இன்னும் அதிகமாக்கி விட்டது. நதிகளைச் சுற்றி வளர்ந்த நகரங்களில் இந்த ஏற்றத் தாழ்வைக் காப்பது எளிது. இக்கரை-அக்கரை என்பதை விடப் பெரிய வேறுபாடு வேண்டுமா என்ன, நம்ம ஆட்களைப் பிரிக்க?! திருநெல்வேலிக்கும் பாளையங்கோட்டைக்கும் இடையிலான இடைவெளியும் அப்படியானதே. அங்கே மேற்கு கீழே; கிழக்கு மேலே! அப்படியானால், சென்னையில் எப்படி என்று யோசிக்கிறீர்களா?அது கொஞ்சம் தலை கீழ். வடக்குதான் வயிற்றுப் போக்கு ஆனது போல் இருக்கிறது; தெற்கு தெம்பாக இருக்கிறது.

மங்களேசுவரி அம்மாள் மற்றும் பர்மாக்காரர் மூலம் மட்டுமில்லை. இன்னோர் இடத்திலும் மற்ற நாடுகளுடனான தமிழகத்தின் உறவு பற்றி எழுதியிருக்கிறார் ஆசிரியர். பூரணி யாழ்ப்பாணம் மற்றும் மலேயா போன்ற இடங்களுக்கும் சொற்பொழிவு ஆற்றப் போவதாகச் சொல்லியிருப்பது அந்தக் காலத்திலேயே இந்தப் பரிமாற்றங்கள் நடந்திருப்பது பற்றி எடுத்துரைக்கிறது. இதெல்லாம் அதற்கு முன்பிருந்தே இருந்து வருவது நாம் கேள்விப் பட்ட ஒன்றுதான் என்றாலும் இது போலக் கால வாரியாகப் படித்துக் கொண்டே வரும்போது இது போன்ற உண்மைகள் இன்னும் நன்றாகப் புரிபடுகின்றன. இதில் குறிப்பாக யாழ்ப்பாணப் பயணம் மிகச் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தவர்கள் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்டவர்கள் என்று சொல்லியிருக்கிறார். நாடு என்பதை இலங்கை என்று பார்த்தால் இந்தக் கருத்து சரியாகப் புரிபடாது. ஈழம் என்று மாற்றிப் பாருங்கள். அது மட்டுமில்லை. அவர்கள் இலக்கியத்திலும் கலையிலும் தமிழகத்தில் இருந்து அவற்றைக் கொண்டு வருவோரையும் பெரிதும் மதிப்பதையும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலன்றி நல்ல மனிதத்தன்மையும் பண்பாடும் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்நூல் எடுத்துச் சொல்கிறது.

தொலைக்காட்சித் தொடரில் வருவது போல அரவிந்தன் அடி வாங்கிய காட்சி புதினத்தில் வரவில்லை. தர்ம அடி வாங்கப் போகும் சூழல் ஒன்று உருவாகி அதிலிருந்து தப்பும் காட்சி ஒன்று வருகிறது. அதைத்தான் மசாலாவின் முக்கியத்துவம் கருதி தொலைக்காட்சித் தொடரில் அடி வாங்குவதாகவே காட்டியிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே மேலும் படித்த போது தேர்தல் பணிகளின் போது அரவிந்தனைக் கடத்திச் சென்று விடுகிற காட்சி ஒன்றும் வருகிறது. அதில்தான் அடி பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று யார் கிளம்பினாலும் அவர்களை சாம தான பேத தண்டங்கள் அனைத்தையும் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கும் வேலைகள் அப்போதே நடந்திருக்கின்றன. பூரணி அரசியற் சாக்கடைக்கு வருவதை முதலில் சற்றும் விரும்பாத அரவிந்தன் பின்னர் அந்தச் சுழலுக்குள் இழுத்து வரப்படுவது கதை நன்றாக நகர வழி செய்கிறது. அதெல்லாம் அதன் பின்பு நல்லபடி முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி ஆக வில்லையே!

தேர்தல் வருகிறது. எதிரணியின் கேவலமான உத்திகள் அவர்களைக் கவிழ்த்தி, நேர்மையையும் நியாயத்தையும் பூரணியையும் வெல்ல வைக்கின்றன. இதற்கிடையில் சுதந்திரம் கிடைத்த நாளில் கல்கத்தா நகர வீதிகளில் ஏதோ செய்து கொண்டிருந்த காந்தி போல, தேர்தல் முடிவுகள் வரும் முன் விஷக் காய்ச்சல் வந்து வாட்டிக் கொண்டிருக்கிற ஒரு கிராமத்துக்கு விரைகிறான் அரவிந்தன். வெற்றிச் செய்தி வருகிறது. ஊரே மாலையோடு திரண்டு வருகிறது - பூரணியை வாழ்த்த! நடப்பதென்ன? அந்த மாலைகள் அனைத்தும் விஷக் காய்ச்சலால் உயிரிழக்கும் அரவிந்தனுக்கு வந்து விழுகின்றன. இதில் விமர்சனத்துக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விமர்சனம் என்றால் நா.பா.வின் எழுத்தில் இல்லை, புதினத்தையே ஒரு வாழ்க்கையாகப் பார்த்தால் வருகிற விமர்சனங்கள்.

ஒன்று, இந்த அளவுக்குத் தன்னை முற்றிலும் தியாகம் செய்து மக்களுக்காக அழித்துக் கொள்கிற ஆட்கள் என்பது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. ஒருவேளை அறுபது ஆண்டுகள் கழித்து இன்று உட்கார்ந்து பேசுகையில் அப்படி இருக்கிறதோ என்னவோ. அன்றைய காலத்தில் அப்படி நிறையப் பேர் இருந்திருக்கக் கூடும். அல்லது கொஞ்சமாவது சிலர் இருந்திருக்கக் கூடும். அல்லது இலக்கியம் என்பதே பிரச்சார நெடி அதிகம் கொண்டதாக இருந்த காலமாக இருந்திருக்கலாம் அது. தமிழ்த் திருநாடு முழுக்கவும் ஏகப் பட்ட அரவிந்தன்களும் பூரணிகளும் பிறக்க வேண்டும் என்று ஆசிரியரே கூறியிருக்கிறார். அந்தப் பெயர்களில் நிறையப் பேர் பிறந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அதே பண்புகளோடு எவ்வளவு பேர் பிறந்தார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக பிழைக்கத் தெரியாமல் உயிரை அழித்துக் கொண்ட அரவிந்தன் போல் தன் பிள்ளை வரவேண்டும் என்று எத்தனை பெற்றோர் எண்ணுவார்கள்! இராசியில்லாத பெயர் என்று கூட நிறையப் பேர் அப்பெயரைத் தவிர்த்திருக்கக் கூடும். மற்றபடி, ஒரு படைப்பாளன் என்ற முறையில் நா.பா.வின் நல்லெண்ணம் பாராட்டப் பட வேண்டியதே. இன்றைக்கும் நல்லவனாக இருக்கிற நிறையப்பேர் சினிமாப் பார்த்துத்தான் அப்படி இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் நிதர்சனத்துக்கு நெருங்கி வருகிற மாதிரிச் செய்கிற பிரச்சாரம்தான் எடுபடும். முழுக்க முழுக்க நல்லவன் மாதிரியே காட்டுகிற உத்திகள் எல்லாம் இப்போது சுத்தமாக எடுபடாது.

இரண்டு, நல்லவர்களை விட வல்லவர்களே நிறையச் சாதிக்க முடியும். அன்றைய காலம் அப்படியல்லவா அல்லது இன்றைய காலம்தான் அப்படியா அல்லது எல்லாக் காலமுமே அப்படித்தானா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், நல்லதே நினைத்தல் மட்டுமே உலகப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து விட முடியாது. கொஞ்சமாவது சூது வாது அறிந்திருக்க வேண்டும். உயிரா கொள்கையா என்று வருகையில் கொள்கைதான் என்று முடிவெடுப்பது சில நேரங்களில் ஈத்தரத்தனம் ஆகிவிடும். ஏனென்றால் உயிரோடு சேர்ந்து கொள்கையும் செத்துப் போய்விட வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து தன்னைக் காத்துக் கொள்ளும் உத்திகளை முதலில் வளர்த்துக் கொண்டுதான் பின்னர் ஊரைக் காக்கும் வேலைகளுக்கே வரவேண்டும். அதை விடுத்து அப்படியெல்லாம் ஏமாளிப் பயலாக இருப்பது மாபெரும் பாவம். அதுவே சமூகத்துக்கு இழைக்கும் இன்னோர் அநீதி.

கடைசியில் அரவிந்தனின் மரணத்தால் உடைந்து போகும் பூரணி வந்த பதவியையும் வேண்டாமென்று திரும்பக் கொடுத்து விடுவது அதை விடக் கொடுமையாக இருக்கிறது. அது அவளைப் போல ஒருத்தியை நம்பி வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி. அந்தப் பதவியில் இருந்து சாதித்துக் காட்டியிருந்தால் நல்ல முடிவாக இருந்திருக்கும். சாக்கடைக்குள் குதித்தவளை அரவிந்தன் செத்துக் காப்பாற்றினான் என்றும் சொல்லிக் கொள்ளலாம். தாங்க முடியாத சோகத்தைப் பிழிவது கதையை மேலும் பிரபலமாக்கும் என்ற உத்தியை நா.பா.வும் கடைப் பிடித்தாரோ என்னவோ! அப்படியில்லாமல், வெறும் நல்லவனாகவே மட்டும் இருந்தால் கடைசியில் கதை இப்படித்தான் முடியும் என்று சொல்ல முயன்றிருந்தால் (அப்படித் தெரியவில்லை!) கண்டிப்பாக இது சூப்பர்ப் புதினம்தான்.

மலர்ந்து உதிர்ந்து விட்டது!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...