"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

 

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

ஜோ மெக்கலக் | ஆகஸ்ட் 24, 2011

காமென் காலெவ் இயக்கிய “தி ஐலண்ட்” (The Island) திரைப்படத்திலிருந்து


இது வேடிக்கையானதுதான், அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கி அறிமுகமே தேவையில்லாத ஒரு தலைசிறந்த மனிதரா அல்லது அவரது எண்ணற்ற ஈடுபாடுகளின் பரப்பு தெளிவான சுற்றுக்கோடு ஒன்றை வரையக் கோருகிறதா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எனது இந்தச் சமரசத்தை மன்னியுங்கள். திரைப்படம், சர்க்கஸ், இசை, ஊமம் (mime), கவிதை, நாடகம், டாரோ, அதற்கு மேல் நாற்பத்தைந்து ஆண்டுகளாக, வரைகதை (காமிக்ஸ்) ஆகியவற்றில் முதுவரான, 82 வயதான சிலி நாட்டின் மைந்தர், நான்கு மொழிகளில் புதிய அல்லது கூடிய விரைவில் வெளிவரப்போகிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெருமைக்குரிய இவரை இதுதான் என்று குறிப்பிட்டு வகைப்படுத்துவது பெரும் சிரமமாகவே உள்ளது. ஸ்பானிய வாசகர்கள் அவரது சமீபத்திய உரைநடைப் படைப்பான ‘மெட்டா ஹினியாலோஹியா’ (ஆங்கிலத்தில் ‘மெட்டாஜீனியாலஜி’) (மரியான் கோஸ்டாவுடன் இணைந்து எழுதியது) எனும் நூலை விரைவில் வாசித்து அனுபவிக்கலாம். இது, 2010-இல் வெளிவந்த ‘இன்னர் ட்ரெடிஷன்ஸ்’ (Inner Traditions) நிறுவனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான Psychomagic: The Transformative Power of Shamanic Psychotherapy (சைக்கோமேஜிக்: ஷேமனிய உளவியல் சிகிச்சையின் பெருமாற்ற ஆற்றல்) எனும் நூலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள ‘சைக்கோமேஜிக்’ (உளவியல் மாயவித்தை) என்னும் கருத்துருவை மேலும் விரிவாக்கும் வகையில் இருக்கும். அதே வேளையில் ஜெர்மானியக் கலை நூல் வெளியீட்டாளர் ஹாட்ய கெண்ட்ஸ் ஃபெலாக் (Hatje Cantz Verlag), ஃபிராங்க் ஹெர்பர்ட்டின் ‘டூன்’ (Dune) புதினத்தைத் திரைப்படமாகத் தழுவுவதற்கான தயாரிப்பு வேலைகளின் போது தொகுக்கப்பட்ட 1974 குறிப்பேட்டிலிருந்து 48-பக்க மீள்நகல் சாரத்தை (facsimile extract) எடுக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். கைவிடப்பட்ட இந்தப் பணியின் போதுதான் ஜோடராவ்ஸ்கி ஓவியர் ஜான் "மோபியஸ்" ஜீஹோ (Jean “Moebius” Giraud)-வைச் சந்தித்தார். இந்த உறவு ஜோடராவ்ஸ்கியை பிரெஞ்சு வரைகதைக்கு இட்டுச் சென்றது. ஃபைனல் இன்கல் (Final Incal)-இன் இரண்டாவது தொகுதி (ஓவியம்: ஹோஸே லட்ரான்) அவருடைய சமீபத்திய பிரெஞ்சுப் படைப்பு. இது, 2000-களில் நவீனமயமாக்க முயன்று தோல்வி கண்ட பிறகு அதன் அசல் 1980-88 வண்ணங்களுடனேயே மீட்டெடுக்கப்பட்ட, இப்போது ஆங்கிலத்தில் ‘The Incal Classic Collection’ (இன்கல் செவ்வியல் தொகுப்பு) என்று ஒரே அட்டையின் கீழ் சேகரிக்கப்பட்டுள்ள பரந்த, டாரோமயமான, மோபியஸ் ஓவியத்தில் வெளிவந்த அறிவியற் புனைவுத் தொடரின் தொடர்ச்சி.

இன்னமும் வரைகதையாளர் ஜோடராவ்ஸ்கியைப் பற்றிய சித்திரத்தை முழுமையாகக் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. 1967 முதல் 1973 வரை அவர் ஃபேபுலஸ் பேனிகாஸ் (2006-இல் க்ரியாபோ [Grijalbo]-வால் ஸ்பானிஷ் மொழியில் சேகரிக்கப்பட்டது) தொடரை எழுதி வரைந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு ஃபெர்னாண்டோ அர்ரபல் மற்றும் ரோலண்ட் டாப்பருடன் அவர் உருவாக்கிய பீதி இயக்கத்திற்காகப் (Panic Movement) பெயரிடப்பட்ட ஒரு மெக்சிகன் வார இதழ் சிறப்புப் பகுதி. இது, 1966 வரை பின்னோக்கிப் போகும் ஓவியர் மானுவல் மோரோவுடன் இவர் இணைந்து உருவாக்கிய வரைகதைகள் உட்பட சமீபத்தில் மெக்சிகோ சிட்டியில் உள்ள கரில்லோ கில் கலை அருங்காட்சியகத்தில் (Museo de Arte Carrillo Gil) நடைபெற்ற அவரது ‘கபிநேத்தே கிரஃபிகோ’ (Gabinete Gráfico) கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மற்ற மெக்சிகன் பணிகளுடன் இணைந்தே உருவாக்கப்பட்டது. ஜோடராவ்ஸ்கியின் பிரெஞ்சுப் படைப்புகளின் ஆங்கிலப் பதிப்புகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, இந்தப் பணிகள் தனியாக மொழிபெயர்க்கப்படாமலே கிடக்கின்றன. அமெரிக்காவில் ‘பாண்ட் டிசினி’ (bandes dessinées) தொடரை உள்ளூர்மயப்படுத்த முயன்ற பணி போலவே நிறுத்தலும் தொடங்கலுமாக - தனித்த ஆல்பங்கள், பத்திரிகைத் தொடர்கள், வரைகதை நூல் வரிகள், சூப்பர் ஹீரோ பதிப்பாளர்களுடனான கூட்டணிகளாக - ஊறிக் கிடக்கின்றன.

தடித்த, தனிப்பட்ட தொடர்களின் விரிவான தொகுப்புகளுக்கும் ஹுமனாய்ட்ஸ் (Humanoids, Inc.) வெளியீடுகளுக்குமே இப்போது விருப்பம் அதிகமாக இருக்கிறது. ஹுமனாய்ட்ஸ் இன்க் என்பது, 1974-ஆம் ஆண்டு மோபியஸ் இணைந்து நிறுவிய நீடித்து நிற்கும் பிரெஞ்சு வெளியீட்டாளரான ‘லேஸ் ஹுமனோய்டஸ் அஸோஸியேஸ்’ (Les Humanoïdes Associés)-இன் வட அமெரிக்கப் பிரிவு. ஹுமனாய்ட்ஸ், இன்கல் தொடரின் இடைவிளைவான ‘த மெட்டாபேரன்ஸ்’ (ஓவியம் - ஹுவான் கிமெனெஸ்), ‘த டெக்னோபிரீஸ்ட்ஸ்’ (ஃபிரெட் பெல்ட்ரானின் டிஜிட்டல் கூறுகளுடன் ஜோரன் ஜான்ஜெடோவ் வரைந்தது) ஆகியவற்றுடன் டார்க் ஹார்ஸ் நிறுவனம் (தொடக்கத்தில் அரைகுறையாக) வெளியிட்ட - மோபியஸ் உடன் இணைந்து பணியாற்றி வெளியான ‘மேட்வுமன் ஆஃப் த சேக்ரட் ஹார்ட்’ (Madwoman of the Sacred Heart), பல்கலைஞர் (multi-artist) குறும்படத் தொகுப்பான அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கியின் ‘ஸ்க்ரீமிங் பிளானட்’ (முன்பு, இது சாத்தியப்பட்ட காலத்தில், இதன் பகுதிகள் ‘மெட்டல் உஹ்லான்’-இன் தனிப்பட்ட வரைகதை நூல் வெளியீடுகள் நெடுகவும் தொகுக்கப்பட்டன) ஆகியவற்றையும் முறையே மொழிபெயர்த்து முடித்தது. ஜோடராவ்ஸ்கியின் குடும்பம், உளவியல், வரைகதைகள் வடிவத்தில் கொடுக்கும் சாகசமிகு படவியல் (iconography) ஆகியவற்றின் மீதான கவர்ச்சியின் மிக விரிவான வெளிப்பாடான ‘மெட்டாபேரன்ஸ்’-இன் அனைத்துமடங்கிய பதிப்பு கூடிய விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையளிக்கும் அதே வேளையில், இன்றைய நாள், துப்பாக்கிச் சண்டைத் தொடரான ​​’பவுன்சர்’ (ஓவியம் - ஃபிரன்ஸ்வா பூச் [François Boucq])-இலிருந்து ஒரு புதிய பகுதி வெளியிடப்படுவதைக் காண்கிறது. இதற்கிடையில் -- குடும்பக் கருப்பொருள் விஷயத்தில் -- அடிமைத்தளை அறுத்த மெட்டல் உஹ்லானின் அரைச் சகோதரர் ‘ஹெவி மெட்டல்’ (Heavy Metal), ஜோடராவ்ஸ்கியின் கத்தோலிக்கக் கலவரப் படைப்பான போஜா (Borgia) (ஓவியம் - மீலோ மனாரா)-வின் நான்காவதும் இறுதியுமான தவணையை எதிர்பார்க்கிறது. அதே வேளையில், அதன் ஆவணங்கள் பல ஆண்டுகளுக்கு முந்தைய அவரது மெக்சிகன் வரைகதையில் ஒன்றான அனிபால் 5-இன் 1990-களில்  நிகழ்ந்த இரு தொகுதி மறுமலர்ச்சியை (ஓவியம்: ஜார்ஜ் பெஸ்) மறைக்கின்றன. பையப் பைய, தாரகைகள் கண்ணுக்குத் தட்டுப்படத் தொடங்குகின்றன.

பின்வருவது மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட ஒரு குறுகிய நேர்காணல்; எவ்வளவு விலாவரியான கேள்விகளின் மூலமும் வரைகதை உலகின் மாபெரும் வாழ்வின் அகலத்தை உள்ளடக்கிவிட முடியாது. இருப்பினும், ஜோடராவ்ஸ்கி ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் இருக்கிறார், திருகல் பேச்சைப் பொறுத்துக்கொள்ள விருப்பமில்லாத குதூகலத்தோடும் இருக்கிறார். இந்தக் கலைஞரிடம் அவருக்கென்று ஒரு பதிலளிக்கும் பாணி இருக்கிறது. அதைப் பாதுகாக்கும் வகையில், ஆங்காங்கே சில சிறிய அச்சுக்கலைத் திருத்தங்கள் மட்டும் செய்துள்ளேன். நீங்கள் கூடிய விரைவில் மீண்டும் அவரிடமிருந்து கேள்விப்படுவீர்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், ஆனால் அது நிச்சயமாக வேறொரு வடிவத்திலோ வேறொரு மொழியிலோ - கண்டிப்பாக வேறோர் இடத்திலோ இருக்கும் என்பதையும் சொல்ல முடியும்.

***

மெக்கலக் : வரைகதை (காமிக்ஸ்) உடனான உங்களின் முதல் அனுபவங்களுடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். சிலியிலோ பிரான்சிலோ நீங்கள் குழந்தையாகவோ மாணவராகவோ இருந்தபோது, ​​அல்லது கவிதைகள் இயற்றுகையிலோ ஊமை நாடகங்களில் நடிக்கும் போதோ, நீங்கள் வரைகதைகள் வாசித்தீர்களா?

ஜோடராவ்ஸ்கி : நான் 7 வயதில் வரைகதைகள் படிக்க ஆரம்பித்தேன், சிலியில் அமெரிக்க இதழ்களின் ஞாயிறு பக்கங்களை வெளியிட்டனர்: மந்திரவாதி மாண்ட்ரேக், இளவரசர் வேலியண்ட் (Prince Valiant), ஃப்ளாஷ் கார்டன் (Flash Gordon), போபியே , டார்சன் போன்றவை... 14 வயதில், வில் ஈஸ்னரின் (Will Eisner) ‘ஸ்பிரிட்’ (Spirit) மீது எனக்குப் பைத்தியம் பிடித்தது.

மெக்கலக் : நீங்கள் ஃபெர்னாண்டோ அர்ரபல், ரோலண்ட் டாப்பர் ஆகியோருடன் இணைந்து பீதி இயக்கத்தை நிறுவிய பிறகு, மெக்சிகோவிலிருந்து உங்கள் ஆரம்பகால வரைகதைகள் வந்தன. குறிப்பாக, 1966-இல் ஓவியர் மானுவல் மோரோவுடன் இணைந்து செய்த அனிபால் 5. அவருடன் இணைந்து அடுத்து நீங்கள் ‘லோஸ் இன்சோபோர்டாப்லே பொர்போயா’ (Los insoportables Borbolla) செய்தீர்கள். இந்த வெளியீடுகள் எப்படி உருவாகின? மோரோவுடனான உங்கள் பணி, உங்கள் பிற்கால வரைகதைக் கூட்டுப்பணிகளில் இருந்து வேறுபட்டதா?

ஜோடராவ்ஸ்கி : மெக்சிகோவில் வரைகதைத் துறை பிரபலமாகவும் குழந்தைத்தனமாகவும் மெக்சிகனியமாகவும் இருந்தது. என் மேடை நாடகங்களின் புண்ணியத்தில், நோவாரோ பதிப்புகளின் வெளியீட்டு இயக்குனர் ஒருவரை என் ரசிகராகப் பெற்றேன். அவரை ஓர் அறிவியற் புனைவுத் தொடர் உருவாக்கச் சம்மதிக்க வைத்தேன். 12 எண்ணங்கள் வெளியிட முடிவு செய்தோம். பதிப்பாசிரியர்கள், என்ன செய்கிறோம் என்று புரியாமல், ஜேம்ஸ் பாண்டைப் போலப் போலி செய்யும் எனக்குப் பிடிக்காத ஒரு நடிகரின் படங்களை முன் அட்டையிலும், மடப்பேரழகி ஒருத்தியைப் பின் அட்டையிலும் வெளியிட்டனர். அதை மாற்றுவதற்குச் சண்டை போட்டு, 6-ஆவது எண்ணத்தின் அட்டைப்படம் மோரோதான் வரைவார் என்று பேசி முடித்தேன். அதன் மூலம் ஒரு நல்லது நடந்தது என்றால் ஒரு கேடும் ஏற்பட்டது. நோவாரோவின் உரிமையாளர் என் கதைகளைப் படித்துவிட்டு, மோரோவின் ஓவியங்கள் தொடரைத் திடீரென முடித்துவிடுகின்றன என்று கோளாறு சொன்னார். மோரோ ஒரு கலைஞராக மதிக்கப்படாமல், ஓர் ஓவியப் பணியாளராக - ஊழியராக நடத்தப்பட்டார். அவர்கள் வரையச் சொன்ன எதையும் அவர் வரைய வேண்டும். ‘அனிபால் 5’ வரைவது அவருக்கு ஒரு வகையான விடுதலையாக இருந்தது.

மெக்கலக் : 67-இல், ‘ஃபாண்டோ ஒய் லிஸ்’ (Fando y Lis), ‘எல் டோபோ’ (El Topo), ‘த ஹோலி மௌண்டைன்’ (The Holy Mountain) போன்ற உங்கள் திரைப்படங்களோடு சேர்த்து, அவற்றுக்கு இணையாக, ‘எல் ஹெரால்டோ டி மெக்ஸிகோ’-வுக்கான (El Heraldo de México) ஞாயிறு வரைகதை ‘ஃபேபுலஸ் பேனிகாஸ்’ வரையத் தொடங்கினீர்கள். பீதி இயக்கத்துடன் ஒத்ததிர்ந்த வரைகதைகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தரம் உள்ளதா?

ஜோடராவ்ஸ்கி : ஒரு வகையில் பீதி இயக்கம் ஒரு கேலிக்கூத்து. டாப்பர் அர்ரபலும் நானும் நாங்கள் செய்த எல்லாவற்றையுமே பீதி என்று பெயரிட்டு அழைத்தோம். அது ஒரு கோட்பாடு என்று சொல்வதை விட ஒரு வணிகக்குறி (பிராண்ட்) போன்றது எனலாம். ‘அனிபால் 5’ ஒரு கலை முயற்சி, தொழில் முயற்சி அல்ல. அதை நான் நோவாரோவுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தேன்.

மெக்கலக் : உங்கள் பெரும்பாலான வரைகதைகள் பிற ஓவியர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டவை. திரைப்படத் தயாரிப்பிலோ நாடகங்கள் இயக்குவதிலோ இல்லாத ஒரு நெருக்கம் வரைகதைகள் படைப்பதில் இணைந்து இயங்கும் போது இருப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது, மாறாக, ஒரே ஒருவருடன் பணி புரியும் போது கொடுக்கல் வாங்கல் கூடுதலாக உள்ளதா?

ஜோடராவ்ஸ்கி : ஆம், வரைகதை படைப்பது ஒரு சொர்க்க உணர்வு. அதுவும் உங்களோடு பணி புரியும் ஓவியக் கலைஞர் போற்றத்தக்கவராக இருந்தால் அது தெளிவாகத் தெரியும். இந்தப் பணியில் உங்கள் முதுகின் மேல் பேராசை பிடித்த தயாரிப்பாளர் கிடையாது. நீங்கள் விரும்பும் அனைத்தையும் பொருளாதார வரம்புகள் இல்லாமல் நீங்கள் கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு 10000 அண்ட விண்கலங்கள் வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். அதற்காகும் செலவு, ஒரு குதிரை வரைவதற்கு ஆகும் செலவை விட அதிகம் ஆகாது.


“லே யூஹ் டு ஷாஹ்” ("Les Yeux du Chat")-இலிருந்து; ஓவியம் - மோபியஸ்


மெக்கலக் : மோபியஸ் உடனான உங்கள் முதல் வரைகதை 78-இல் வெளிவந்த ‘லே யூஹ் டு ஷாஹ்’. இது, அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு மோபியஸ் இணைந்து நிறுவியிருந்த லேஸ் ‘ஹுமனோய்ட்ஸ் அஸோஸியேஸ்’ (Les Humanoïdes Associés)-க்கு நீங்கள் இலவசமாகக் கொடுத்தது போன்ற நூல். மோபியஸ் உடன் ஒரு வரைகதை இணைந்துருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருந்ததாக நீங்கள் முன்பே குறிப்பிட்டுள்ளீர்கள் - மெட்டல் உஹ்லானில் உள்ளது போன்ற அதிகற்பனை - அடிமன வழியான மிகைபுனைவு வகையை நோக்கிய பிரெஞ்சு வரைகதைகளின் வளர்ச்சியை கவனித்துக்கொண்டு வந்தீர்களா?

ஜோடராவ்ஸ்கி : ஆம், மெட்டல் உஹ்லானின் அடித்தளத்தில் எனது கருத்துக்களையும் இணைத்து - சூப்பர்மேனின் விந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியே உள்நுழைந்து உடல் முழுக்கவும் சென்று தலைக்குப் போய் தலை வெடித்து வானளாவிய கட்டடம் ஒன்றைச் சிதறடிப்பது போல் நான் சூப்பர்மேனின் விந்துவெளிப்படலை விவரித்திருந்த "சூப்பர்மேனின் கலவி வாழ்க்கை" போன்ற புரட்சிகர வாசகங்களையும் இணைத்து - உருவாக்கினேன்.

மெக்கலக் : அதன் பின்பு நீங்கள் பல ஓவியர்களுடன் பல்வேறு கதைகளில் பணியாற்றியிருக்கிறீர்கள். ஓர் ஓவியர் அதை வரைவதற்கு முன்பு உங்கள் கதை எவ்வாறு தொடரப் போகிறது என்பது பற்றி உங்களுக்கு உறுதியான திட்டம் உள்ளதா அல்லது ஓவியர்களோடு இணைந்து பணி புரியும் செயல்பாட்டில் உங்கள் கதைகள் இன்னும் அதிகமாக உருப்பெறுகின்றனவா? ஓவியர்கள் அவர்களின் ஓவியங்களைப் படைக்கும் போது அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றுகிறீர்கள்?

ஜோடராவ்ஸ்கி : எனக்கென்று ஒரு திட்டம் இருக்கும். அத்தோடு நான் எழுதத் தொடங்கும் போது, ​​இன்னும் ​​பல புதிய யோசனைகள் வரும். நான் தினமும் ஓவியரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசவும் செய்வேன்.

மெக்கலக் : இன்கல், தற்போது அமெரிக்க வாசகர்களுக்கு ஒரு சுவையான தொடராக இருக்கிறது, ஏனெனில் இதுதான் ‘மெட்டாபேரன்ஸ்’ (Metabarons), ‘த டெக்னோப்ரீஸ்ட்ஸ்’ (The Technopriests) போன்ற உங்களின் பிற தொடர்களின் பிறப்பிடம். ஆண்டுகள் செல்லச் செல்ல, கூடுதலான விவரங்களும் வரலாறும் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள், அவற்றோடு இந்தப் ‘பகிரப்பட்ட பிரபஞ்சத்தை’ மறுபார்வை இடும் போது, அதைப் பற்றிய உங்கள் அணுகுமுறை மாறுவதாகக் காண்கிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி : அது ஒரு மரம் போல. வளர்வதை நிறுத்துவதே இல்லை.

"டெக்னோப்ரீஸ்ட்ஸ்"-இலிருந்து; ஓவியம்: ஜோரன் ஜான்ஜெடோவ் & ஃப்ரெட் பெல்ட்ரான்

மெக்கலக் : தொடக்கத்தில் மோபியஸின் வடிவமைப்புகளுக்கு நெருக்கமான பாணியில் ஜோரன் ஜான்ஜெடோவ் வரைந்த ‘அவண் எல் இன்கல்’ ( Avant l'Incal ) போன்ற பல இன்கலுக்கு நேரடியான தொடர்ச்சிகளும் உள்ளன. இந்தக் கதைகளை அவர்தான் முதலில் வரைந்தவர் என்பதால் மோபியஸின் வடிவமைப்புகளுக்கு நெருக்கமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ‘ஃபைனல் இன்கல்’ (Final Incal)-இல் லாட்ரான் உடனான உங்கள் கூட்டணியில் இது தாக்கம் செலுத்தியதா?

ஜோடராவ்ஸ்கி : ஆம், இந்தக் கதையை மோபியஸின் ஓவியங்களுக்கு நெருக்கமாக வைத்திருப்பது அவசியம், ஆனால் அவருடைய ஓவியங்களை அப்படியே  நகலெடுத்து செழுமையாக்கியதாக இருக்கக் கூடாது.

மெக்கலக் : இன்கல், அவண் எல் இன்கல் ஆகிய இரண்டும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன, ஒரு கட்டத்தில் மோபியஸ், ஜான்ஜெடோவ் ஆகியோரின் ஓவியங்களின் மேல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய, கணிசமாக வேறுபட்ட வண்ணங்களுடன் உள்ளன. இந்தக் காட்சி மாற்றங்கள் குறித்து நீங்கள் ஆலோசிக்கப்பட்டீர்களா? ஒரு வரைகதை வெளியிடப்படுவதோடு அது "முடிந்துவிட்டது" என்று நினைக்கிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி : ஹுமனாய்ட்ஸ் ஆசிரியர் இளம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் வகையில் 3டி பாணியுடன் வரைகதையின் நிறங்களை மாற்றினார். எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் வரைகதைகள் என்பவை திரைப்படங்களைப் போலவே ஒரு தொழிற் கலை, அதுவும் அதன் தயாரிப்புகளை விற்க வேண்டும். ஆனால் காலம் நானே சரி என்றது. பார்வையாளர்கள் அசல் வண்ணங்களையே விரும்புகிறார்கள்.

மெக்கலக் : தொடர்புடைய ஒன்று, உங்கள் பல வரைகதைகள் ஒவ்வொரு ஆல்பமும் ஒரு தனித்த கதையைச் சொல்வது போலக் கவனம் செலுத்துவதை நான் கவனித்தேன். எடுத்துக்காட்டாக, மெட்டாபேரன்ஸின் ஒவ்வோர் அத்தியாயமும் ‘டோண்டோ’ (Tonto) கதாபாத்திரம் ஒரு கதையைத் தொடங்கி முடிப்பது போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘தி டெக்னோப்ரீஸ்ட்ஸ்’-இல் அல்பினோவின் விவரிப்புகளிலும் இதுவே நடக்கிறது. ‘மேட்வுமன் ஆஃப் த சேக்ரட் ஹார்ட்’-இல் கூட, காலப்போக்கில், அத்தியாயங்களுக்கு இடையில் மோபியஸின் வரைபடங்களில் ஒரு தனித்துவமான மாற்றம் உள்ளது. தனிப்பட்ட வரைகதை ஆல்பங்கள், அவை ஒரு பெரிய கதையில் ஓர் அத்தியாயம் மட்டும் என்று இருந்தால் கூட, தனியாக அனுபவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலும் அமெரிக்காவில் உள்ள வாசகர்கள் இந்தத் தொடர்களைப் பெரிய சர்வபுல (ஓம்னிபஸ்) நூல்களாக மட்டுமே வாசிப்பதில் சில இன்பத்தை இழக்கிறார்களா?

ஜோடராவ்ஸ்கி : இந்தக் கேள்வி எனக்கு மிகவும் நீளமானதாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது. வேண்டாம். விடுங்க.

"மேட்வுமன் ஆஃப் த சேக்ரட் ஹார்ட்"-இலிருந்து; ஓவியம்: மோபியஸ்


மெக்கலக் : 2000-களில் மெட்டல் உஹ்லான் புத்துயிர் பெற்ற போது, ​​ஒரு கோளின் துண்டு பல்வேறு உலகங்களைக் கடந்து செல்லும் கருப்பொருளில் பல சிறுகதைகளைத் தொடர்ச்சியாக எழுதினீர்கள் (பின்னர் அவை அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கியின் ‘ஸ்க்ரீமிங் பிளானட்’-இல் சேகரிக்கப்பட்டன). பல கதைகளை எழுதுவதற்கு முன்பு நீங்கள் ஓவியர்களின் படைப்பு மாதிரிகளைப் பார்க்கவில்லை என்று மெட்டல் உஹ்லானின் பதிப்பாசிரியர்கள் குறிப்பிட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன், இது நீங்கள் வழக்கமாக ஓவியர்களுடன் பணிபுரியும் விதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தக் கதைகள் எப்படி உருப்பெற்றன? சிறிய மெட்டல் உஹ்லான் துண்டுகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தவை என்று ஏதேனும் உள்ளனவா?

ஜோடராவ்ஸ்கி : ஓவியர்களின் பண்புகளையும் வரம்புகளையும் பதிப்பாசிரியர் என்னிடம் சொல்லிவிட்டார். எடுத்துக்காட்டாக, ஒருவர் கதாபாத்திரங்களை நன்றாக வரைந்தார், ஆனால் நகரங்களை ஒழுங்காக வரையவில்லை. அதனால் பாலைவனத்திலேயே நடக்கும் கதை ஒன்றைக் கண்டுபிடித்தேன். இன்னொருவருக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியவில்லை, அதனால் மனிதர்களே இல்லாத ஒரு ரோபோ உலகத்தைக் கண்டுபிடித்தேன். நான் அதை ஒரு சவாலாக, விளையாட்டாக எடுத்துக் கொண்டேன்.

மெக்கலக் : வீடியோ கேம்களை, தொழிற்துறையின் வற்புறுத்தலால் வக்கிரப்படுத்தப்பட்ட படைப்பாக்க வெளிப்பாடாகவும், மனித உறவுகளை விழுங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கவலையாகவும் ‘டெக்னோப்ரீஸ்ட்ஸ்’ முழுக்கக் காட்டப்படும் உருவகத்தை நான் பெரிதும் ரசித்தேன். காலப்போக்கிலும் தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாகவும் வரைகதைத் துறையின் வழிப்போக்கு மாறி இருக்கிறதா?

ஜோடராவ்ஸ்கி : எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது, வரைகதைகள் மட்டுமல்ல, மனிதர்களின் மூளையும் கூட மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

"The இன்கல்-இலிருந்து; ஓவியம் - மோபியஸ் 


மெக்கலக் : ஒருமுறை, நீங்கள் திரைத்துறை மாயவித்தைக்காரரா என்று கேட்டதற்கு, நீங்கள் மிகக் குறைவான படங்களையே தயாரித்துள்ளீர்கள் என்றும், திரைப்படத் தயாரிப்பு கராத்தே போன்றது என்றும், மாயவித்தையை வெளிக்கொணர நீங்கள் குத்து குத்தென்று குத்த வேண்டும் என்றும் பதிலளித்தீர்கள். நீங்கள் வரைகதைகளின் மாயவித்தைக்காரராக உங்களை நினைக்கிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி : நான் என்னை ஒரு மேதையாகவும் புனித வேசியாகவும் உணர்கிறேன்.

மெக்கலக் : நீங்கள் பல புதிய வரைகதைகளைப் படிக்கிறீர்களா? குறிப்பாக நீங்கள் ரசித்த ஏதேனும் உள்ளதா?

ஜோடராவ்ஸ்கி : இளவரசர் வேலியண்ட் (Prince Valiant), வில் ஐஸ்னரின் கிராஃபிக் நாவல்கள், [கட்சுஹிரோ] ஓத்தொமோவின் ‘அகிரா’ (Akira).

மெக்கலக் : இறுதியாக, இன்று வரைகதைகளை உருவாக்கும் கலைஞர்களுக்கு நீங்கள் ஏதாவது கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி : சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்!!! உங்கள் சொந்தக் கனவுகளைச் சொல்லுங்கள்.

எழுதியவர்

ஜோ மெக்கலக்

இடுகையிடப்பட்டது

ஆகஸ்ட் 24, 2011


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி