சனி, அக்டோபர் 29, 2011

கிரிக்கெட், மக்கட்தொகை மற்றும் இந்தியா

சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இந்தியா வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொள்வேன். அதுவும் முக்கியமான தொடர்களிலும் உலகக் கோப்பையிலும் என்ன விலை கொடுத்தாவது இந்தியா வென்று விட வேண்டும் என்று துடிப்பேன். ஏன்? அதேதான். சரியான விடை. ஏனென்றால், நான் இந்தியன். அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருந்தது. என்ன அது? மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியா வெல்கிற போதெல்லாம் ஒப்பற்ற அளவிலான உலக மக்கட்தொகை கொண்டாடிக் குதிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்தியாதான் அதிக மக்கட்தொகை கொண்டுள்ளது. எனவே இந்தியாதான் வெல்ல வேண்டும் என்றே சொல்வேன். இந்த உண்மையை அறிய உலகளாவிய அறிவெல்லாம் வேண்டியதில்லை. ஏனென்றால், சீனா கிரிக்கெட் ஆடுவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீண்ட காலமாகவே சரியான புள்ளிவிபரம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்றுதான் அதற்கான நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதைப் பார்த்து சில அருமையான (!) கருத்துக்களைக் கண்டெடுத்திருக்கிறேன். இதோ...


ஆஸ்திரேலியா
22,567,780
நியூ சிலாந்து
4,393,500
இலங்கை
21,513,990
பாகிஸ்தான்
174,578,558
இங்கிலாந்து
49,138,831
தென் ஆப்பிரிக்கா
49,991,300
மேற்கிந்தியத் தீவுகள்
3,117,300
மற்றவை மொத்தம்
325,301,259
இந்தியா
1,191,000,000
மொத்தம்
1,516,301,259

இதில் இருந்து என்ன புரிகிறது?

1. கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தையும் விட அதிக மக்கட்தொகை கொண்ட நாடு இந்தியா. தெரிந்த கதை! அடுத்த மேட்டருக்குப் போட்டும். :)
2. கிரிக்கெட் விளையாடும் எல்லா நாட்டு மக்கட்தொகையையும் கூட்டினாலும் அது இந்தியாவின் மக்கட்தொகையை விடக் குறைவுதான். தெரியாத கதை, அல்லவா? ஆமாம்! அதுக்கு என்ன இப்போ? இதுக்கு என்ன அர்த்தம் என்றால், எந்த நேரத்திலும் உலக அணி ஒன்றைக் கொடுத்தால் அதை அடித்து மண்ணைக் கவ்வ வைக்கிற அளவுக்கு நாம் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். இருக்கிறோமா? தெரியவில்லை!
3. அது மட்டுமில்லை - இந்தியாவின் மக்கட்தொகை மற்ற எல்லா நாடுகளின் மக்கட்தொகையையும் கூட்டினால் வரும் தொகையை விட 3.6 மடங்கு அதிகம். அப்டீன்னா இன்னா அர்த்தம் நைனா? அப்டீன்னாக்கா... நாம் முன்னே சொன்ன மாதிரி ஓர் உலக அணியைக் கொடுத்தால் அதை நம் நாட்டின் மூன்றாம் தர அணி கூட வீழ்த்தி விக்கல் எடுக்க வைத்து விட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அது முடியுமா? நம் மூன்றாம் தர அணி இலங்கையின் மூன்றாம் தர அணியைக் கூட எதுவும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

இப்போது சொல்லுங்கள் - இந்த வெற்றிகளுக்கெல்லாம் நாம் இவ்வளவு ஆட்டம் போடுவது சரியா?

50 ஆஸ்திரேலியா அணிகளையும் 380 மேற்கிந்திய அணிகளையும் உருவாக்கி இருக்க வேண்டும் நாம். அப்புறம் ஏன் இந்தச் சின்னப் பசங்களைக் கூடத் "தொடர்ச்சியாக"  வெல்ல முடியாத மாதிரி ஓர் அணியை வைத்துக் கொண்டிருக்கிறோம்? அதை விடுங்கள். அவர்கள்தாம் தொலைவில் இருக்கிறார்கள் என்பதால் நம்மை விட நிறையத் திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நம்ம தம்பிமார் ரெண்டுபேர் இருக்காங்களே. அவங்களைப் பார்ப்போம். 20 இலங்கை அணிகளையும் 7 பாகிஸ்தான் அணிகளையும் உருவாக்கி இருக்க வேண்டும். செய்தோமா? சென்னையில் ஒரு காலத்தில் தமிழ் நாடு அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கோபாலன் கோப்பை என்றொரு தொடர் நடை பெரும். அதில் வந்து தோற்று விட்டுப் போவார்கள் இலங்கைப் பொடியன்கள். இன்று? இந்தியாவே அவர்களை முக்கித் தக்கித்தான் வெல்ல முடிகிறது ஒவ்வொரு முறையும்.

எல்லாத்தையும் விடுங்கள். குறைந்த பட்சம் ஐந்து உலகத் தரமான அணிகளாவது நம்மிடம் இருந்திருக்க வேண்டும் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மையம் என்று. ஒவ்வொரு அணியில் இருப்போருக்கும் உலகத் தரமான அடிப்படைத் திறமைகள் இருக்கலாம். ஆனால் அடிக்கடி உலக அரங்கில் ஆடி அதனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள் கிடைக்காமல் போனதால் அவர்கள் அப்படியே வீணாகி இருக்கக் கூடும். ஒரு சொதக்கடா அணியை திரும்பத் திரும்ப உலக அரங்கில் விளையாட விட்டுப் பார்த்தால், உழைப்பு இருந்தாலே போதும்... அவர்கள் உலகத் தரம் பெற்று விடுவார்கள். அதுதான் இலங்கைக்கு நடந்தது. என் சின்ன வயதில் எல்லாம், இலங்கையும் இப்போதைய கென்யா மற்றம் வங்க தேசம் போல ஒரு பொடிப் பசங்க அணியாக இருந்தது.

மற்ற மாநிலங்களில் கல்லூரி அணியில் கூட விளையாடத் தகுதி பெற முடியாத பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ள கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற அணிகளுடன் ஆடி சச்சின் முன்னூறும் நானூறும் அடிக்கும் போட்டிகளை நடத்தும் ரஞ்சிக் கோப்பையை முதலில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு முக்கியமான தொடரில் தோல்வி அடையும் போது, ஆஸ்திரேலியாவில் மட்டும் அருமையாக இருக்கும் ஆறே ஆறு அணிகள் கொண்ட உள்நாட்டு அணி அமைப்பு பற்றி எல்லோரும் பேசுவார்கள். திரும்பவும் வெல்ல ஆரம்பித்ததும் எல்லாம் மறந்து போகும். உலகக் கோப்பை நடைபெறும் வேளையில் அது பற்றி ஒரு தனி இடுகை இட்டிருந்தேன். அதையும் இங்கே வாசித்துக் கொள்ளுங்கள் - கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!
இப்போது ஓர் அடி பின்னால் வைத்து இன்னொரு பெரிய விஷயம் பற்றிப் பேசுவோம். அதுதான் நமக்குப் பிடிக்காத விஷயம் ஆயிற்றே. ஆனாலும் பேசி விடுவோம். மித மிஞ்சிய மக்கட்தொகை ஒரே அணியாக இருப்பது கிரிக்கெட்டில் வளர்வதற்கு மட்டுமே தடையாக இருக்கும் பிரச்சனையா? இந்தியா என்ற நாட்டின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இதுவே காரணம் என நினைக்கிறேன். நம் எல்லா வேலைகளுமே டமார் ஆவதற்குக் காரணம் என்று நான் கருதுவது - நம்மிடம் ஏகப் பட்ட வேலைகள் இருக்கின்றன; அவற்றைச் செய்ய அளவுக்கு மிஞ்சி ஆட்கள் இருக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சி என்றால், அளவுக்கு மித மிஞ்சி! நாட்டைத் துண்டாட வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆனால், நிர்வாகத்துக்கு வசதியாகப் பிரித்துக் கொள்ளலாம் அல்லவா? இராஜாஜி சொன்ன மாதிரி ஐந்து பாகங்கள்! சேர்ந்திருக்க வேண்டிய விஷயங்களில் சேர்ந்திருந்து கொள்ள வேண்டியதுதான். சேர்ந்திருந்தால் பலம் என்கிற விஷயங்களில் சேர்ந்திருந்து கொள்ள வேண்டியதுதான். இராணுவம், ஆராய்ச்சி போன்றவற்றில்! மற்றவை பரவலாக்கம் செய்யப் பட வேண்டும். ஊழல் உட்பட! ஒட்டு மொத்தமாக ஒரு கூட்டம் டெல்லியில் வைத்து அடிப்பதை அவரவர் ஊரில் அடித்துக் கொள்ள விட்டு விட்டால் நல்லதுதானே. மாநில அரசுகள் அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொள்ளட்டும். மற்ற எந்த ஆசிய நாடும் சாதிக்க முடியாததை சிங்கப்பூர் எப்படிச் சாதித்தது? எப்படி என்றால், அவர்களிடம் குறைவான நிலப் பரப்பும் குறைவான மக்களும் இருக்கிறார்கள். எனவே நிர்வாகம் எளிதாகி விடுகிறது. அதை ஏன் நாமும் முயன்று பார்க்கக் கூடாது? ஒருவேளை, பெரிய அளவில் சாதிக்க உதவலாம்.

வெள்ளி, அக்டோபர் 28, 2011

சிறார்-பெரார்

இளமைப் பருவம் முழுக்க
எல்லோரும் போலவே
எண்ணிக் கொண்டிருந்தேன்...
சிறியோரெலாம் விபரமிலார்!
பெரியோரெலாம் விபரமுளோர்!

சிறிது பெரியவனாகையில்...
சிறியோர் சிலர் பெரியோர் போலும்
பெரியோர் பலர் சிறியோர் போலும்
உருமாறி உருமாறி உணர்த்தினார்கள்...

அதற்கும் வயதுக்கும் உறவே இல்லை!

அதே சாம்பல்

நம்மைக் காட்டிலும்
நல்லோருடன் முடியவில்லை...
நாம் அவர்களுக்குக்
கெட்ட பிள்ளையாகி விடுகிறோம்!
நம்மைக் காட்டிலும்
கெட்டோருடன் முடியவில்லை...
அவர்கள் நமக்குக்
கெட்ட பிள்ளையாக இருக்கிறார்கள்!

நம் போலவே நல்லோர்
நம் அளவே நல்லோர்
நம் போலவே கெட்டோர்
நம் அளவே கெட்டோர்
அதே அளவு கருப்பு
அதே அளவு வெள்ளை
அதே அளவு சாம்பல்
தேடிக் கொண்டே இருக்கிறோம்...

அவ்வப்போது அகப்படும்
அது போன்ற சில ஆட்களும்
அப்படியே தொடர்ந்திடுவதில்லை
அது போன்றே இருந்திடுவதில்லை

அதையும் மீறி
அப்படியே இருந்து விட்டாலும்
நாம் அவர்களையோ
அவர்கள் நம்மையோ
அப்படியே இருக்க விடுவதில்லை...
அல்லது இருக்கவே விடுவதில்லை...

செவ்வாய், அக்டோபர் 25, 2011

பெரும்பான்மை-சிறுபான்மை


பேசா விட்டாலும் 
பெரும்பான்மைகளின் உரிமைகள்
பெரிதும் பேணப்படும்

சில முறை பேசினால் போதும் 
சிறுபான்மைகளின் உரிமைகள்
சிரத்தையோடு காக்கப் படும்

பெரும்பான்மைப் போர்வையோடு
பெரிதாய்க் கூச்சலிடும்
சிறுபான்மைகளின் குரல்கள்
பெரும்பாலும் புரிந்து கொள்ளப் படும்
அவை செவிடன் காதில் சங்கு!

பேசக்கூட முடியாத அளவு 
பெரிதும் சிறுகி இருக்கும்
சிறுபான்மைகளின் குரல்கள்
சிறிதும் மதிக்கப் படா
அவை செத்தவன் காதில் சங்கு!

சனி, அக்டோபர் 22, 2011

உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 3/3

அரசியல் என்றாலே துரோகங்கள் அதில் ஒரு முக்கிய அங்கம் என்ற போதிலும் உள்ளாட்சித் தேர்தல்கள்தான் ஒரே நேரத்தில் அதிக பட்சத் துரோகங்களை ஒருங்கே அரங்கேற்ற விட்டு வேடிக்கை பார்ப்பது. போட்டியில் இருக்கும் எல்லோருமே தெரிந்த ஆட்களாக இருக்கும் போது யாருக்கு ஆதரவு என்ற குழப்பம் உருவாகிறது. அதுவே பக்கம் விட்டுப் பக்கம் பாயும் பாதகச் செயலுக்கு வழி கோலுகிறது. கடைசி வரை வெளியில் ஒருவரை ஆதரிப்பது போல் பேசிவிட்டு திரை மறைவில் இன்னொருவருக்கு வேலைகள் செய்தல் நடக்கிறது. தலைவனாக வேண்டும் என்று ஆசையில் திரியும் ஒருவரிடம் ஐந்து வருடங்கள் ஏமாற்றி ஏமாற்றிப் பிடுங்கித் தின்று விட்டு, கூடுதலாகக் கொஞ்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான நேரத்தில் அணி மாறி விடுகிற அவலங்கள் நடக்கின்றன. ஊர்க்காசைத் தின்ன ஆசைப் படுபவன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஊர்க்காரர்களின் இழுத்த இழுவைக்கெல்லாம் போக வேண்டும்; உண்மை பேசக் கூடாது; கேட்கும் உறுதிமொழிகளை எல்லாம் அள்ளிக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஆசை நிறைவேறாது. எது பெட்டர்?

எதிராளியைப் பலவீனப் படுத்த, தனிப்பட்ட முறையில் ஒருவருடைய செல்வாக்கை வீழ்த்தும் வகையில் என்னென்னவோ புரளிகளைக் கிளப்பி விடும் கொடுமைகள் நடக்கின்றன. இருக்கும் ஒன்றிரண்டு நல்லவர்களையும் ஏதாவதொரு இல்லாத குற்றச்சாட்டை வைத்து பெயரைக் கெடுக்கும் வகையில் பரப்பி விடுகிறார்கள். காசு வாங்கி விட்டான், கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறான், முறைகேடு செய்தவன் என்று அந்த நேரத்தில் எடுபடும் விதமாக வாய்க்கு வந்த மாதிரி ஏதோ சொல்லி மரியாதையைக் காலி செய்யும் வேலைகள் செய்கிறார்கள். எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி வீழ்த்துவது ஒருமுறை என்றால், பலம் எதுவாக இருந்தாலும் அதை அடித்து வீழ்த்துவது இன்னொரு முறையாக இருக்கிறது. மொத்தத்தில் அரசியலில் இன்று நாம் காணும் கேவலங்கள் அனைத்தும் மேலிருந்து கீழ் வந்ததா அல்லது கீழிருந்துதான் மேலே வருகிறதா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தமிழ்நாடெங்கும் 'ஒரு ஓட்டுக் கூட வாங்காதவர்கள்' என்றொரு நீண்ட பட்டியல் பல பத்திரிகைகளில் வந்தன. அதையெல்லாம் படித்து விட்டு ஒரு புறம் சிரிப்பு; இன்னொரு புறம் அதிர்ச்சி! இதுவும் ஒரு விதத்தில் நம் சனநாயகத்தின் முதிர்ச்சியையே காட்டுகிறது. தன்னுடைய வாக்கையே வேறொருவருக்கு அளிக்கும் ஒருவன் என்ன 'முடி'க்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்? இதில் ஒரு சிலர் காசு வாங்கிக் கொண்டு அமைதியாகி விட்டவர்கள் என்கிறார்கள். "நிச்சயம் ஒரு ஓட்டுக் கூட வாங்க மாட்டேன் பாருங்கள்; எல்லாத்தையும் உங்களுக்கே விழ வைக்கிறேன்!" என்று காசு வாங்கும் போது சத்தியம் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். நாம்தான் சத்தியத்தைக் காப்பாற்றும் மகான்கள் ஆயிற்றே. காசு கொடுக்கும் எல்லோருமே சத்தியம் வாங்கிக் கொண்டுதான் கொடுக்கிறார்கள். அந்த வகையில் சத்தியத்தை மீறாத மக்கள் நம்மைச் சுற்றி இவ்வளவு பேர் இருப்பது புல்லரிக்கத்தான் வைக்கிறது.

முதல் பாகத்தில் பணம் கொடுப்பது பற்றி எழுதியிருந்தேன். அது தேர்தலுக்கு முன்பு என்பதால் கடைசி நேரத்தில் களத்தில் நடந்த பல விஷயங்கள் பற்றி அதில் எழுத முடியவில்லை. தேர்தலுக்குப் பின் கேள்விப் பட்ட கதைகள் அனைத்தும் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன. நான் கேள்விப் பட்ட வரையில் காசு கொடுக்காத யாருமே எங்குமே வெல்ல வில்லை. "காசு கொடுக்காமல் நின்று பார்க்கிறேன். அதில் வெல்ல முடியாவிட்டால் போகுது கழுதை!" என்று முடிவெடுத்து இறங்கியவர்கள் எல்லாம் படு கேவலமாகத் தோற்றிருக்கிறார்கள். காசு கொடுத்தவர்களும் சரி, வாங்கியவர்களும் சரி, இதை வெளிப்படையாகவே பேசுகிறார்கள் இப்போது. இன்னொரு கொடுமை - எல்லா இடங்களிலுமே பெரும்பாலான வேட்பாளர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்லது என்று நினைத்தேன். நான் நினைத்தது - 'எல்லோரும் கொடுத்தால், அதற்கு மரியாதை இல்லாமல் போய் விடும்; எனவே, இறுதியில் தான் விரும்பியவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்' என்று. நடந்ததென்ன தெரியுமா? பலரிடம் பணம் வாங்கிய எல்லா வீடுகளிலும், "யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது!" என்று ஒரு நியாயம் கண்டு பிடித்து பணம் கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரும் ஒரு வாக்கு வீதம் பிரித்து வாக்களித்து தமிழ் மண்ணின் நேர்மைக் கொடியைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

சென்ற முறை பணம் வாங்குவதைக் கேவலமாகப் பார்த்த பல பணக்காரர்கள் கூட இம்முறை மறுக்காமல் வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். "வழிய வந்து கொடுப்பதை ஏன் வேண்டாமென்று சொல்ல வேண்டும்? நான் வேண்டாமென்று சொல்லி விட்டால், அந்தப் பணத்தை என்ன மக்கள் பணிக்கா செலவிடப் போகிறார்கள்?" என்று நியாயமான கேள்வி கேட்கிறார்கள். பணம் கொடுத்த எல்லோரும் வெல்ல வில்லை என்றாலும் பணம் கொடுக்காத யாரும் வெல்ல வில்லை. பணம் அதிகம் கொடுத்தவர்களே பெரும்பாலும் வென்றிருக்கிறார்கள். இதனால் இந்தப் புதிய பண்பாடு இன்னும் பத்து - இருபது வருடங்களுக்கு நம் மண்ணில் தொடரும் என்றே தோன்றுகிறது. ஒரேயொரு நல்ல விஷயம் - பணம் கொடுத்துத் தோற்றவர்கள் அடுத்த முறை அடக்கி வாசிக்க வாய்ப்புள்ளது. அதிலும் பணம் கொடுத்துத் தோல்வியுற்ற அடாவடியான ஆட்கள் பணத்தை வாங்கியவர்களில் பயந்தாங்கொள்ளிகளாகப் பார்த்து வம்புச் சண்டை இழுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதிலாவது கருமம் இந்த மக்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை.

எப்படியும் வென்று விட வேண்டும் என்ற கட்டாயம் வந்ததும் கடைசி நேரத்தில் பல இலட்சங்களை இறக்கி விட்டார்கள் பலர். இதில் தன் மொத்த வாழ்க்கையின் சம்பாத்தியத்தையும் அழித்து விட்டுத் தெருவில் வந்து நிற்போரும் இருக்கிறார்கள். கூடுதலாகக் கடன் வேறு வாங்கிச் செலவழித்து அழிந்தோரும் இருக்கிறார்கள். இப்படியாவது அடுத்த முறை இந்தக் கொடுமை குறையட்டும் என்று நினைத்தால், "இந்த முறை விட்டால் என்ன, அடுத்த முறை இதை விட அதிகமாகச் செலவழித்து எப்படியும் இழந்த பணத்தை மொத்தமாகத் திரும்ப எடுத்து விட வேண்டும்!" என்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களிலேயே பேச்சுக்களைக் கேட்க முடிந்தது. ஊராட்சி மன்றத் தேர்தலில் மூன்று இலட்சம் செலவழித்துத் தோல்வியுற்ற ஒருவர் நிரம்ப விபரமாக - மக்கள் நலனில் அக்கறையோடு பேசினார் - "நாங்களெல்லாம் ஒரே வருடத்தில் போட்ட பணத்தை எடுக்க முயல மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மூன்று வருடத்தில் கிடைத்தால் போதும்!". இது ஒரு சூதாட்டமாகவே ஆகி விட்டது. கண்ணுக்குத் தெரிந்த தொலைவில் இதற்கு ஒரு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

தன் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு சமூகப் பணியிலேயே கழிய வேண்டும் என்று அர்ப்பணித்துக் கொண்ட பலர், உள்ளாட்சித் தேர்தலை ஒரு குறி வைத்தே இதெல்லாம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்கள் எல்லாம் பெரும்பாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை இம்முறை. சேவையையும் அரசியலையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்கிறார்கள் மக்கள். இதற்கான தகுதியும் அதற்கான தகுதியும் வெவ்வேறு என்று எண்ணுகிறார்கள். அரசியலில் சோபிக்க ஆசைப் படுவோரிடம் பண பலம், இன பலம், ஆள் பலம் என்று எத்தனையோ அடிப்படைத் தேவைகள் எதிர் பார்க்கப் படுகின்றன. "அவன் பாட்டுக்கு ஏதாவது எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டு இருப்பதை விடுத்து அரசியலுக்கெல்லாம் வர வேண்டும் என்று ஏன் ஆசைப் படுகிறான்?! இவனும் அரசியலுக்கு வந்து விட்டால் நமக்கு வேண்டிய வேலைகளையெல்லாம் யார் செய்வார்கள்?!" என்று கேட்டுக் காமெடி பண்ணுகிறார்கள்.

இதில் சக வேட்பாளர்களைச் சரிக் கட்டும் வேலை என்று ஒரு படலம் இருக்கிறது. அதில்தான் எவ்வளவு பொய்கள், உறுதிமொழிகள், ஏமாற்று வேலைகள், பித்தலாட்டங்கள், மிரட்டல்கள்? நல்லவர்கள் எல்லோரும் இந்த ஒரு கட்டத்தில் வடி கட்டப் பட்டு விடுகிறார்கள். பிச்சைக் காரர்களைப் போலக் கெஞ்சுகிறார்கள் (பிச்சைக்காரர்களே இப்போதெல்லாம் கெஞ்சுவதில்லை. அதனால் அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது!). "என்ன வேண்டுமானாலும் கேள்; செய்து கொடுக்கிறேன். ஆனால் அந்தப் பதவியை மட்டும் எனக்கு விட்டுக் கொடுத்து விட வேண்டும்!" என்று மன்றாடுகிறார்கள். "உன்னை அதாக்குகிறேன் - இதாக்குகிறேன்; அடுத்த முறை முன்னால் நின்று வேலை பார்த்து இதே இடத்தில் உன்னை உட்கார வைக்கிறேன்!" என்று வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள் (இத்தனை தேர்தல்கள் பார்த்து விட்டோமே, அடுத்த முறை என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியாதா என்ன?). கொஞ்சம் பாவப் பட்ட ஆட்களை மிரட்டவும் செய்கிறார்கள். நல்லவர்கள் - தப்புத் தண்டா செய்யப் பயந்தவர்கள், "என்னடா கருமம் இது?" என்றோ "எதுக்குடா சாமி வம்பு?" என்றோ பின் வாங்கி விடுவார்கள்.

தலைவனாக ஆசைப் பட்ட ஆட்களின் பாடுதான் அப்படியென்றால், பாவப் பட்ட மக்கள் படும் பாடு அதை விடக் கொடுமை. தினமும் நாலு பேர் வந்து கதவைத் தட்டி விடுகிறார்கள். பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்த பொழுதில் எங்கள் ஊரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அது ஒரு பெரிய காமெடி. ஏதோவொரு முகவரி தேடிச் சென்ற நண்பர்கள் நால்வர், ஒரு வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். உள்ளே இருந்து அவசர அவசரமாகக் கதவைத் திறந்த ஆசாமி ஒருவர், என்ன ஏதென்று எதுவும் கேட்காமல், "கண்டிப்பா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்!" என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு உடனடியாகக் கதவை மூடிக் கொண்டாராம். அன்றிரவு வந்து சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறான் நண்பன். எந்த அளவுக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள். நீங்களே சொல்லுங்கள் - இதெல்லாம் பாவமில்லையா? கொடுமையில்லையா?! :)

இப்போதெல்லாம் நிறைய மருத்துவர்கள் அரசியலுக்கு வருகிறார்களே என்னவென்று வியந்து கொண்டிருந்தேன். பின்புதான் புரிந்தது - இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலில் அவர்கள் நிறையவே வந்திருக்கிறார்கள் என்று. நேரடியாகத் தினமும் நிறைய மக்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ள அனைவருமே அரசியலுக்குள் வருகிறார்கள். இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பால்க்காரர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், கடை வைத்திருப்பவர்கள், ஒரு வேலையும் இல்லாமல் ஊரையே சுற்றிச் சுற்றி வருபர்கள் போன்ற அனைவரும் அடக்கம்.

திமுக ஆட்சியை விட முறைகேடுகள் குறைவுதான். ஆனால், இப்போதும் நிறைய முறைகேடுகள் பற்றிக் கேள்விப் பட முடிந்தது. பல உத்திகளைக் கையாண்டு தோற்றவர் வென்றதாக அறிவித்தல், தோற்கப் போகிற நேரத்தில் தோற்பவர் வெல்வதற்கான வேலைகள் பார்த்தல் (வாக்கு எண்ணிக்கையின் போது!), வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பெட்டி காணாமல் போதல், வாக்கு எண்ணிக்கையின் போது கண்கட்டி வித்தைகள் செய்தல் போன்ற பல முறைகேடுகள் நடந்திருக்கின்றன. நான் கேள்விப் பட்ட இவையனைத்தும் சீட்டு பயன் படுத்தப் பட்ட ஊராட்சிப் பகுதிகளில். மக்களும் நான்கு சீட்டுகளை வைத்துக் கொண்டு குழம்பித் தவிக்கிறார்கள். எதுவுமே புரியாத நிலையில், எங்கெங்கு இரட்டை இலை இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்குக் குத்தி விட்டு, இல்லாத இடங்களில் உதய சூரியன் அல்லது கை போன்ற பழக்கப் பட்ட சின்னங்களுக்குக் குத்தி விட்டு, மற்ற சீட்டுகளில் நல்லா இருக்கும் சின்னம் ஏதோவொன்றில் குத்தி விட்டு வந்ததாகச் சொன்னவர்களும் உண்டு. இயந்திரமே பரவாயில்லை போலத் தெரிகிறது. வேலையும் விரைவாக நடந்து நேரமும் மிச்சம். ஆனால், நகர்ப் புறங்களில் அவற்றிலும் முறைகேடு நடந்தனவா என்று தெரியவில்லை.

சென்ற முறையை விடக் குதிரை பேரம் கொஞ்சம் குறையும். எல்லாத் தலைவர்களுமே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்ட கொடுமையில் சனநாயகம் ஆடையை அவிழ்த்துப் போட்டு ஆடிக் கொண்டிருந்தது. அவர்களைக் கடத்திச் சென்று கவனிப்பது, காசை இறைத்துக் கட்சி மாற வைப்பது போன்ற அநியாயங்கள் கொஞ்சம் குறையும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுவார் என்பதால், மொத்தமாக அவிழ்த்துப் போட்டு ஆடிய சனநாயகம் இப்போது மேல்ச் சட்டையை மட்டும் அவிழ்த்துப் போட்டு ஆடுகிறது என்று சொல்லலாம். ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்களையும் அதே போலத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வந்து விட்டால், இன்னும் சிறப்பாகும். ஆனாலும் அதிகாரத்துக்குப் பதிலாக ஊழல் பரவலாகி இருக்கிறது என்கிற உண்மையை மனநிலைக் கோளாறற்ற எவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதற்கெல்லாம் முடிவுதான் என்ன?

ஒன்று - எம்ஜிஆர் காலத்தில் போல உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல் செய்து விடலாம். இப்படிச் செய்வதில் உள்ள குறைபாடு - ஆளும் கட்சியின் ஆட்கள்தாம் உள்ளாட்சி அமைப்பினர் போலச் செயல்பட்டு எல்லாத்தையும் வருவாய்த் துறையோடு பங்கு போட்டு விழுங்குவார்கள் அல்லது மொத்தப் பணத்தையும் அரசு இயந்திரம் முழுமையாக விழுங்கி விடும்.

அல்லது - முன்பு போல, குறைவான பிரதிநிதிகளோடு இன்னும் கொஞ்சம் ஒல்லியான உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு கொள்ளையைக் குறைக்கலாம். இதில் எல்லோருமே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படும் விதமாக இருக்க வேண்டும். ஊழலைக் குறைக்கும் விதத்தில் சட்டங்களையும் இறுக்கலாம்.

அல்லது - "இதெல்லாம் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக - அதிகாரப் பகிர்வுக்காகப் புத்திசாலிகள் ஒன்று கூடித் தொலை நோக்குப் பார்வையில் போட்ட திட்டம். உன்னைப் போல முட்டாப் பயகளுக்கெல்லாம் ஒன்றும் புரியாது!" என்று எமக்குப் புரியாத மாதிரி ஏதோ சொல்லி விட்டு, இன்னும் இருபது - முப்பது ஆண்டுகளுக்கு இந்தக் கொள்ளையைத் தொடர விட்டுப் பார்க்கலாம். அதற்குள் சனநாயகம் எப்படியும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி விடும்.

இதில் எது சிறந்ததாகத் தெரிகிறது என்று உங்கள் கருத்தையும் தெரிவித்தீர்கள் என்றால், நன்றாக இருக்கும். அட்வான்ஸ் நன்றிகள்.

பின்குறிப்பு: இந்தத் தேர்தல் முடிவுகள் என்னவோ எல்லாக் கட்சிகளுக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாகவே உள்ளது. நாம் அழிந்து விட்டதாக நினைத்த எந்தக் கட்சியும் இன்னும் அழிந்து விடவில்லை; அவ்வளவு எளிதாக அழியப் போவதுமில்லை என்றே தோன்றுகின்றது.

சனி, அக்டோபர் 15, 2011

உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 2/3

முன்னுரை: நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. ஒடுக்கப் பட்ட மக்கள் ஒடுங்கியே கிடக்க வேண்டும் என்று எண்ணுபவனும் அல்ல. என் குடும்பப் பின்னணி மற்றும் இளமைக் கால வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள் இதை அறிவார்கள். பெண்கள் அடுப்பூதிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருக்கும் ஆளும் இல்லை. உண்மையை என் மனைவியிடம் வந்து விசாரித்துப் பாருங்கள் (எனக்குள்ளும் கொல்ல முடியாத ஆணாதிக்க குணங்கள் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் பெண்கள் நிறைய முன்னுக்கு வரவேண்டும் என்று மனமார விரும்புகிறேன்; பல இடங்களில் அவர்கள் ஆண்களை விட மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்; ஏற்றுக் கொள்கிறேன்!). உண்மையில், சாதிகள் மற்றும் பாலினம் கடந்து சமத்துவம் தலை தூக்க வேண்டும் என்று மனமார ஆசைப் படுவோரில் நானும் ஒருவன். "இதை நம்ப முடியாது. சும்மா வெளிப் பேச்சுக்கு அப்படிப் பேசுகிறாய்!" என்று சொல்வீர்களேயானால் உங்களிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. விட்டு விடுங்கள். நான் சொல்வதில் சிறிதேனும் நம்பிக்கை இருந்தால், நான் சொல்லப் போகும் கருத்துக்களைத் திறந்த மனதோடு படித்து, ஆரோக்கியமான விவாதத்துக்கு வழி செய்யுங்கள்.

இப்போது விசயத்துக்கு வருவோம். உள்ளாட்சித் தேர்தல்களில் அளிக்கப் படும் இட ஒதுக்கீடு இன்றுவரை எந்த வகையிலும் அதன் நோக்கத்தை எட்ட உதவ வில்லை என்பது என் அழுத்தமான கருத்து. உள்ளாட்சித் தேர்தல்களே அவற்றின் நோக்கத்தை எட்ட உதவ வில்லை என்பதும் சரிதான். அதனால், இட ஒதுக்கீடு மட்டுமே அதில் ஒரு பிரச்சனை என்று திசை திருப்பவும் முயலவில்லை. அதே வேளையில் இட ஒதுக்கீடு என்பது ஒரு தொலை நோக்குப் பார்வையிலான திட்டம் என்று சொல்வதை மறுப்பவனும் இல்லை நான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதனால் செய்யப் படும் அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டால் ஒரு துளி கூட பெண்களின் நிலை மாறியுள்ளது என்று எவரும் நிரூபிக்க முடியாது. எல்லா இடங்களிலுமே அதே கொள்ளைக்காரர்கள்தாம் தத்தம் பொண்டாட்டிகளை முன்னிறுத்திக் கொள்ளையைத் தொடர்கிறார்கள். இடதுசாரிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

இதன் மூலம் எத்தனை ராப்ரி தேவிகளைக் கண்டெடுத்திருக்கிறோம் தெரியுமா? ராப்ரி தேவி என்றால் மட்டமா என்று மட்டமான விவாதங்களுக்குள் என்னை இழுக்காதீர்கள். இன்றுவரை தான் நின்ற வார்டு எது என்று கூடத் தெரியாத பெண்மணி ஒருவர் ஐந்தாண்டு காலம் ஊராட்சி மன்றத்தில் உறுப்பினராக இருந்து முடித்து விட்டார். இவரெல்லாம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் போய் எண்ணத்தைப் பிடுங்குவார் என்று எதிர் பார்க்க? அரசியலை விடுங்கள்... எது பற்றியுமே எந்தவிதமான அடிப்படை அறிவும் அற்ற என் உறவினரே ஒருவர் சென்ற முறை உள்ளாட்சி அமைப்பில் நுழைந்தார். அதன் கொடுமையைக் கண் கூடாகப் பார்த்தேன். இந்த முறையும் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தால் வேதனையில் உள்ளம் கொதிக்கிறது. எதற்கும் எடுபடாத கேஸ் என்று ஊரில் தண்ணீர் தெளித்து விட்டிருக்கும் உதவாக்கரைகள் எல்லாம் நன்கு வெளுத்த வெள்ளைச் சட்டைகளை மாட்டிக் கொண்டு, தானும் ஒரு வருங்கால சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் நினைப்பை வைத்துக் கொண்டு செயற்கைச் சிரிப்போடும் கும்பிடுகளோடும் வலம் வருகின்றன.

நிறையப் பேர் இதுதான் நம் சனநாயகத்தின் முதிர்ச்சி என்று முதிர்ச்சி இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதெப்படி முற்போக்கான அரசியல்க் கொள்கையாகும் என்று புரிய மறுக்கிறது எனக்கு. குண்டக்க மண்டக்க ஏதாவது பேசுவதே கொள்கை என்று எதையோ தவறாகப் படித்து விட்டு வந்திருக்கிறார்களா இவர்கள் என்று புரியவில்லை. அடி மட்டக் கள நிலவரம் அறியாமல் பேசும் கருத்தியல்கள் எல்லாம் கருமாந்திரங்கள். "எல்லாக் கொள்கையிலும் குறைபாடுகள் உண்டு. அதனால் கொள்கையையே எதிர்க்கக் கூடாது!" என்று பேசும் புத்திசாலிகளுக்கு ஒரு கேள்வி - சுற்றிப் பார்த்தால் நூற்றில் ஒன்று கூட உருப்பட உதவ வில்லை என்று தெரிந்த பின்பும் எப்படி அதில் குறைகளை விட நிறைகள் அதிகம் என்று வாதிடுகிறீர்கள்? இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும்வரை நீங்கள் மட்டுமே உங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு திரிய வேண்டும். மக்களின் மரியாதை எல்லாம் ஒன்றும் கிடைக்காது. சரி, அதை விடுங்கள். எங்கள் மரமண்டைகளுக்குப் புரிகிற மாதிரியாவது உங்களால் பேச முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்புறம் என்ன நீங்கள் அறிவாளிகள்?

அடுத்து, பட்டியல் இன (SCHEDULED CASTE) மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிப் பேசுவோம். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விட இது ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. ஏனென்றால், எல்லா வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லா வீட்டிலும் பட்டியல் இன மக்கள் இல்லை. "என்ன சொல்ல வருகிறாய்?" என்று முழிக்கிறீர்களா? இதோ.. இதுதான் மேட்டர் - இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பல இடங்களில் பட்டியல் இன மக்கள் ஒன்று கூடி ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஆனால், அப்படியோர் ஒன்று கூடலோ சூழலோ பெண்களுக்கு நேர்வதே இல்லை. ஏனென்றால், அவர்களுக்கும் சேர்ந்து அதே வீட்டில் இருக்கும் அவர்களுடைய கணவர்களே யோசிக்கிறார்கள் - முடிவெடுக்கிறார்கள். ஆக பலசாலிப் பெண் வெளியே வருவதில்லை. பலசாலிக் கணவனின் மனைவியே வெளியே வருகிறாள். பலசாலிக் கணவனில் காலுக்கடியில் கிடக்கும் அவள் எப்படி பலசாலியாக இருப்பாள்? ஒன்றுமே தெரியாத அவள் எப்படி தன் பலசாலிக் கணவனை விட நல்ல முடிவுகள் எடுக்க முடியும்? சரி, நீங்கள் "இதில்தான் நிறைகள் அதிகம்!" என்று பிடிவாதத்துக்குப் பேசிக்கொண்டு உங்கள் மனசையே மேலும் சிந்திக்க விடாமல் ஒடுக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒருவர் என்றால், இதற்கு மேல் ஒன்றும் பேச முடியாது. உங்கள் வழிக்கே வந்து ஒரு கருத்தைச் சொல்லி விடுகிறேன். குறைந்த பட்சம், இதில் இருக்கும் மிகக் குறைந்த குறைகளையாவது களைய வழி பாருங்கள்.

சரி, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொடுக்கப் படும் இட ஒதுக்கீட்டால் அவர்களுடைய வாழ்க்கை முன்னுக்கு வந்து விட்டதா? அதுவும் இல்லை. அதே பலசாலிக் கணவன் - மனைவி கதைதான் ஆதிக்க சாதிகளுக்கும் ஒடுக்கப் பட்ட சாதிகளுக்கும் இடையில் பல கிராமங்களில் நடக்கிறது. ஊரிலேயே பலசாலியான ஒருவன், தன் பேச்சுக்குக் கட்டுப் படும் ஓர் ஒடுக்கப் பட்ட இனத்தவனைத் தன் சொந்தச் செலவில் நிறுத்தி வெற்றி பெற வைத்து விடுகிறான். அவனுக்கு எதிராக நிற்கும் ஒடுக்கப் பட்ட மக்களின் உண்மையான பிரதிநிதியை - அவர்களில் பலசாலியை - மிரட்டி ஒதுங்க வைத்து அல்லது தோற்கடித்து தன்னுடைய சொல் பேச்சுப் படியே எல்லாத்தையும் நடத்துகிறான். எனக்குத் தெரிந்து பல ஊர்களில் இது நடந்திருக்கிறது. இப்போதும் நடக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவருக்கான சம்பளம் முதற்கொண்டு எல்லாமே ஆதிக்க சாதிக் கார முதலாளிக்கே போகும்; மாதத்துக்கு ஐம்பது கிலோ அரிசி மட்டும் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டுக்குப் போகும். முதலாளி முதலாளியாகவே இருப்பான். வேலைக்காரன் வேலைக்காரனாகவே இருப்பான். அதுவும் அதே வீட்டில். கேட்கிற இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுப்பான். இது எப்படி ஒடுக்கப் பட்ட மக்களின் விடிவுக்கு வழி வகுக்கிறது என்று யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்.

சரி, அதை விடுங்கள். அவர்களின் உண்மையான பிரதிநிதிகளே கூட எளிதில் வெல்ல முடிகிறதா? வென்றாலும் அவர்கள் பக்கமே காலம் முழுக்க நிற்பார்களா? அதற்கும் பதில் நல்லபடி இல்லை. பெரும்பான்மை மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் வெல்கிறார். அதாவது, ஒடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாகக் களம் இறங்குபவர் மற்றவர்களின் நண்பன் போலக் காட்டிக் கொண்டால்தான், ஒடுக்கப் பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி அதிகம் பேசாமல் இருந்தால்தான், மற்றவர்களைக் கவர முடியும். இல்லையேல், அவர் அந்தந்தச் சாதி வட்டத்துக்குள் சுருட்டப் பட்டு விடுவார். அப்படியே வென்றாலும், பெரும் கட்சிகளில் வளர வேண்டுமானால், அந்தச் சாதி அடையாளத்தை அதிகம் பயன்படுத்தாமலே இருக்க வேண்டும். இதெப்படி அவர்களின் மக்களுக்கு உதவுகிறது? ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் பதவி சுகம் அனுபவிப்பதற்கும் அந்த இனத்தின் விடுதலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே இதுவரை நான் கண்ட அரசியலின் நிதர்சனம். இதற்கு மாற்றுக் கருத்து யாரிடமும் இருக்கிறதா?

இதில் நிறை என்று பார்த்தால், எல்லோரும் சொல்லும் ஒரு விசயம் இதுதான். இது ஆரம்ப காலம் - மாற்றத்தின் காலம்; இப்போதைக்கு இது போன்ற குறைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்; காலம் போகப் போக எல்லாம் சரியாகி விடும்; இதைப் பயன்படுத்தி மெதுவாகக் கால மாற்றம் நிகழ்ந்து விடும். பொதுத் தேர்தல்களில் ஒடுக்கப் பட்ட மக்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள இட ஒதுக்கீட்டால், சுதந்திரம் அடைந்த பின் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு மாறியுள்ளது என்பதைப் பார்த்தால் இதற்குச் சரியான விடை கிடைக்க வாய்ப்புள்ளது. கண்டிப்பாக மாறவில்லை என்று சொல்வதிற்கில்லை. எவ்வளவோ மாறியிருக்கிறது. அதற்கு அரசியல் அதிகாரமும் ஒரு காரணம். அது மட்டுமே என்று சொல்ல முடியாது என்றாலும் அதுவும் என்று சொல்லலாம். அதுவும் தனித் தொகுதிகள் இருப்பதால் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய வாக்குகளும் தேவைப்படுவதால் என்றுதான் சொல்ல முடியும். இன்னொன்று - பொதுத் தேர்தல்களில் இது பெரிதாகத் தோல்வி அடையாததற்குக் காரணம், பல இலட்சம் பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் வருகிற போது ஓரளவு எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். அதுவே உள்ளாட்சி அமைப்புகளில் எடு படாமல் இருப்பதற்குக் காரணம் - இது சில நூறு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதே. அந்த நூற்றில் ஒருவர் இல்லாதபோது தகுதியற்றவர் ஒருவர் தலையெடுத்து விடுகிறார். இட ஒதுக்கீடு இல்லாமல் வருகிற எல்லோரும் தகுதியானவர்களா என்றால், அதுவும் இல்லை. அதிலும் நிறையப் புட்ட கேஸ்கள் வரத்தான் செய்கின்றன. அதற்கு யார் பொறுப்பு? நம்முடைய அறிவீனம். அதை எப்படிச் சரி செய்வது? அவ்வளவு சீக்கிரம் அதைச் சரி செய்ய முடியாது. அதையும் மீறி நல்ல உள்ளாட்சி அமைப்புகளை நடத்தியாக வேண்டும். அதற்கு நம் சட்டங்களை இறுக்க வேண்டும். போட்டியிடுவதற்கான தகுதிகளைக் கடுமையாக்க வேண்டும். பதவியில் இருந்து கொண்டு சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் புரிவோரை அரசியலுக்குள் வரவே முடியாது விரட்டும் அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் எல்லாம் மக்கள் தம் தலைவரை இயல்பாகவே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்களே ஒதுங்கிக் கொள்ள விரும்பினாலும் விடாது வற்புறுத்தி உள்ளே வர வைத்திருக்கிறார்கள். அதுதான் முதிர்ந்த சமூகங்களில் நடக்கும் என்பது என் நம்பிக்கை. முன்னுக்கு வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்கே பின்னுக்குச் சென்று கொண்டு இருக்கிறோமோ என்று சந்தேகமாக உள்ளது. "போட்டியின்றித் தேர்வு செய்வதாக இருந்தால் வருகிறேன். இல்லையேல், வேறு ஆளைப் பாருங்கள்!" என்று சொல்கிற கதைகள் எல்லாம் முன்பு நிறையக் கேள்விப் பட்டிருக்கிறோம். இப்போது அப்படியெல்லாம் யாரும் சொல்வதில்லை. மக்கள் பணி செய்ய வருபவர் அப்படித் தானே வர வேண்டும். நான் அந்த மக்களுக்கே பிடிக்காத ஒருவன் என்றால், எதற்காக அவர்களுக்கு உதவும் ஒரு பொறுப்புக்காக அலைய வேண்டும்? அதை அடைய அத்தனை முறைகேடுகள் செய்ய வேண்டும்? நாகரிகமாக ஒதுங்கிக் கொள்தல்தானே முறை? அது ஏன் நடப்பதில்லை? உழைக்காமல் சம்பாதிக்க இது ஒரு மிக எளிய தொழில் வாய்ப்பாகப் பார்க்கப் படுகிறது. அதன் வருமானம் பற்றி எண்ணும் போதே புல்லரிக்கிறது.

இப்போதைய அமைப்பில் இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை - ஒடுக்கப் பட்ட மக்களில் இருக்கும் தகுதி உடைய தலைவர்கள் பற்றி வெளியில் தெரியவே வராது. அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க எவருமே முன் வர மாட்டார்கள். பெரியவர் பெரியவராகவே இருப்பார். அடிமைகள் அடிமைகளாகவே இருப்பர். சாதிக் கட்டமைப்புகள் இறுக்கமாக இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பெரியவர்களின் கைக்கூலிகளாகவே இருப்பர். அது கண்டிப்பாக நல்லதில்லையே. அவர்களில் திறமைசாலிகளை வெளிக் கொணர வேண்டும் என்றால் இந்த இட ஒதுக்கீடு இருந்தே ஆக வேண்டும். அதே வேளையில் இத்தனை ஆண்டுகளில் இட ஒதுக்கீடு முழுமையான வெற்றி பெறவில்லை என்பதையும் கோபப் படாமல் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதன் மூலம் புரிபடும் ஓர் உண்மை - அது மட்டுமே நம் குறிக்கோளை அடைய உதவாது; இன்னும் என்னன்னவோ செய்ய வேண்டியுள்ளது என்பதே. அது வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அது மட்டுமே பற்றாது. அத்தோடு மேலும் பல வசதிகளையும் கேட்க வேண்டியுள்ளது. இதன் நியாயத்தை உணர்ந்து நடந்து கொள்வதை விட அதை வைத்து அரசியல் செய்வதையே நிறையப் பேர் செய்கிறார்கள். அதனால்தான் அம்மக்களின் விடியல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதை அவர்களே உணர வேண்டும். இதன் மூலம் நான் எதையும் திசை திருப்ப முயலவில்லை என்பதைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். ப்ளீஸ்!

அமைப்பு ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. சட்டமன்ற/ நாடாளுமன்றத் தொகுதிகளைப் போல் உள்ளாட்சித் தொகுதிகளிலும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதைப் பொறுத்து இட ஒதுக்கீட்டை மாற்றி அமைக்க வேண்டும். சுதந்திரம் வாங்கிய போது ஊராட்சிகள் எப்படிப் பிரிக்கப் பட்டிருந்தனவோ அப்படியே இப்போதும் பிரிக்கப் பட்டிருக்கின்றன. எத்தனையோ கிராமங்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டன. நகரங்களுக்கு அருகில் இருக்கும் பல கிராமங்கள் பன்மடங்கு பல்கிப் பெருகி இருக்கின்றன. சில ஊராட்சிகள் இருநூறு/ முன்னூறு பேரையும் வேறு சில ஊராட்சிகள் பல்லாயிரக் கணக்கான வாக்காளர்களையும் கொண்டுள்ளன. இது முறையாகாது இல்லையா? எனவே, ஆயிரம் முதல் இரண்டாயிரம் என்றோ ஐயாயிரம் முதல் ஆறாயிரம் என்றோ ஓர் ஊராட்சியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாவிட்டால் குறிப்பிட்ட சிலர் மட்டும் அடிக்கும் கொள்ளையை அவை இருந்தால் நிறையப் பேர் பங்கு போட்டு அடிக்கிறார்கள். கேள்வி கேட்காத படிக்கு அமைதி காப்பதற்காகவே தலைவர்கள் உறுப்பினர்களுக்கென்று ஒரு பங்கு கொடுத்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்து எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் வருவாய்க்கு அதிகம் வாய்ப்புள்ள ஒரு நகராட்சியில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் மாதாமாதம் முப்பதாயிரம் ரூபாய் வீடு தேடி வந்து விடுகிறது. நேர்மையாக இருக்க விரும்பும் 'பிழைக்கத் தெரியாத பேர்வழி' யாராவது அதை வேண்டாம் என்று சொன்னால், அதையும் மிச்சமிருக்கும் முப்பது பேருக்குப் பங்கு போட்டு விடுவார்கள். மொத்தத்தில் ஊழல் சனநாயகப் படுத்தப் படுகிறது. அதுவும் முட்டாள்களும் சரி சமமாகக் கொள்ளையில் பங்கு கொள்ளும் விதமான சனநாயகம் எவ்வளவு உயர்ந்தது?! இது நல்லதா கெட்டதா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்கள் பெரும் திருடர்களா அல்லது அரசு ஊழியர்கள் பெரும் திருடர்களா என்று கண்டு பிடித்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் பற்றிய சரியான முடிவுக்கு வர முடியும்.

இது தவிரவும் இன்னும் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. எனவே, *தொடரும்*.

சனி, அக்டோபர் 08, 2011

உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 1/3

ஒட்டுமொத்தமாகவே நம் அரசியல் நாறிப் போய் விட்டது என்றாலும், உள்ளாட்சித் தேர்தல்தான் அது எவ்வளவு நாறிக் கிடக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளச் சரியான தருணம் போலத் தெரிகிறது. பொதுத் தேர்தல்களில் பணி புரியும் மூஞ்சிகளைக் கண்டுதான் அது எவ்வளவு கேவலமாகி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லக்கை வேலை பார்த்த அதே மூஞ்சிகள் இப்போது அவரவர் தகுதிக்கேற்ப ("இங்கே எங்கிருந்துடா தகுதி வந்தது?" என்கிறீர்களா?) வேட்பாளராகி வலம் வருகின்றன. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பகுதிப் பக்கம் போனாலே, இதையெல்லாம் பார்த்து எங்கே சீக்கிரம் செத்துப் போவேனோ என்று பயமாக இருக்கிறது. கடுமையான மது வாடை, குண்டக்க மண்டக்கச் சேட்டைகள் செய்யும் அடாவடித்தனம், முகம் சுளிக்கும் அளவுக்கு அநாகரிகமான கெட்ட வார்த்தைப் பேச்சுகள்... இவற்றுக்கெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் எப்போது இடம் கொடுக்கப் பட்டது? இவர்கள் எல்லாம் உள்ளே வந்து என்ன 'முடி'யைப் பிடுங்கி விடப் போகிறார்கள்?

இதிலும் ஏகப்பட்ட நியாயங்கள் சொல்லப் படுகின்றன. குடிகாரன், ரவுடி, கெட்ட வார்த்தை பேசுபவன் எல்லாம் பதவிக்கு வரக் கூடாதா? தரமானவர்களும் தகுதி உடையவர்களும் நல்லொழுக்கம் படைத்தோரும் மட்டுமே உள்ளாட்சிப் பதவிகளுக்கு வர வேண்டும் என்று சொல்வது சமத்துவத்துக்கு எதிரான பேச்சு என்று கொதிக்கிறார்கள். இது எல்லாமே எளிய மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சனநாயகத்தின் வெற்றிப் பாதை என்கிறார்கள். அப்படியானால், எளிய மக்களில் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், தராதரம் உடையவர்களே இல்லையா? என்னத்தச் சொல்ல? காலம் கெட்டுக் கிடக்கிறது. நாக்கைக் கொஞ்சம் இன்னும் நன்றாக வளைத்துப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதில் இன்னொரு கூத்தும் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் இடத்திலேயே எந்தப் பதவி சம்பாதிக்க ஏதுவானது என்று பட்டிமன்றங்கள் வேறு நடத்துகிறார்கள். "இவர் நிரம்ப விபரமானவர்... அவர் நிரம்பத் திறமையானவர்... நன்றாகச் சம்பாதித்து விடுவார்!" என்பது போன்ற பெருமையான கருத்துக்கள் வேறு பேசிக் கொள்ளப் படுகின்றன. இதெல்லாம் யார் செய்த குற்றம் என்பது மட்டும் புரியவில்லை. இதையெல்லாம் சாடி இப்படியெல்லாம் பேசுவதால் என்னைத்தான் கேனைப்பயல் என்று சொல்வார்களோ என்று கூடப் பயமாக இருக்கிறது.

மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல் வந்து விட்டால், ஊரில் இளவட்டங்கள் பாடு படு கொண்டாட்டம். ஒரே ஊருக்குள் இருக்கும் பத்துப் பதினைந்து வேட்பாளர்களிடமும் வார்த்தை மாறாமல் ஒரே மாதிரி, "அண்ணே, உங்களுக்குத்தான் வாய்ப்பு நல்லா இருக்குன்னு பேசிக்கிறாங்க. நம்ம பக்கம் ஒரு பத்து இருபது ஓட்டுக இருக்கு. அத்தனையையும் உங்களுக்குப் போடுற மாதிரி எங்க மக்களிடம் எல்லாம் பேசியாச்சு!" என்று ஒரு பொய்யைச் சொல்லி, அவர்களுக்கே உரிய கும்பிடையும் போட்டு, அன்றாட இரவுத் தண்ணிக்குக் காசு கறந்து விடுகிறார்கள். எப்போதும் இல்லாத விதமாக, இந்த வளரும் தலைவர்கள் எல்லோருமே ஒரே மாதிரி, "போட்ட பணத்தை எடுக்காமல் விட்டு விடுவேனா?!" என்கிற ரீதியில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். 'இதே ஊருக்குள் இவ்வளவு வள்ளல்கள் இருந்தார்களா? எங்கே இருந்தார்கள் இவ்வளவு நாட்களாக?!' என்று மூக்கில் விரலை வைக்கிற அளவுக்கு இருக்கிறது அவர்களின் 'வள்ளமை'.

அப்பப்பா... சில ஆட்கள் என்னமாய் நடிக்கிறார்கள்? வாய்ப்பே இல்லை. பிறந்ததில் இருந்து மொள்ளமாறித் தனம் செய்து கொண்டு அலையும் ஒருவன், இந்த ஒரு மாதத்தில் நல்லவன் போல நாடகம் ஆடினால் அது எப்படிப் பார்க்கச் சகிக்கும்? நான் உலக மகா வேடிக்கைகளில் ஒன்றாகப் பார்த்து மகிழும் விசயங்களில் ஒன்று, தேர்தல்க் காலங்களில் மட்டுமே போடப்படும் இந்த நல்ல மனுசன் வேடம். இவர்கள் எல்லாம் நல்லவனாக நடித்தால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்களா? அல்லது, பிறந்ததில் இருந்து பேண்ட்-சட்டை போட்டுக் கொண்டு இருந்து விட்டு அரசியல் நுழைந்தவுடன் வேட்டி-சட்டை போடுவது போல, அதுதான் அரசியல்ப் பண்பாடு என்று ஏற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து ஊதுபவர்களா? இப்படி நடிப்பது ஓர் அரசியல்வாதிக்கு முக்கியம் என்று எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? முதன் முதலில் உலக அரசியலில் இதை யார் அறிமுகப் படுத்தியது? உலகப் பண்பாடுகளின் ஊற்றுக் கண் என்று சொல்லிக் குதித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில் யார் செய்தது? இந்தப் பாழாய்ப் போன தமிழ் மண்ணில் யார் பண்ணியது? இங்கே பெரும்பாலும் திராவிடக் கட்சிகளில் உருவான ஒரு வியாபாரிதான் பண்ணியிருக்க வேண்டும். அது சரி, அதெப்படி ஒரு மாதம் நிமிர்ந்திருந்த வால் ("யார் வால்?" என்று கேட்டு என்னை வம்புக்குள் இழுக்காதீர்கள்!) முடிவு வந்த நிமிடமே திரும்ப வளைந்து கொள்கிறது?

இன்னொரு கொடுமை - இவர்கள் எல்லாம் ஏன் அன்றன்றைக்கு வாழ்கிறார்கள்? ஏமாற்றுவதுதான் ஏமாற்றுகிறார்கள். தொலை நோக்கில் சிந்தித்து ஏன் கூடக் கொஞ்ச காலம் ஏமாற்றக் கூடாது? ஒரு மாதம் நடிப்பவன் ஐந்து வருடங்கள் நடித்தால் வாய்ப்பு இன்னும் பிரகாசமாகாதா? அதையே வாழ்க்கை முழுக்கச் செய்தால் வெற்றி அதை விட உறுதியாகாதா? எந்த நடைமுறைச் சிக்கல் அவர்களை நீண்ட காலம் தொடர்ந்து நடிக்க முடியாமல் சித்திரவதை செய்கிறது? ஒருவேளை, கொஞ்ச நஞ்சம் வரலாறு படித்திருந்தால் அதை அவர்கள் எளிதாகச் செய்திருப்பார்களா? முழுக்க முழுக்க முட்டாள்களே வந்ததில் இதுவும் ஓர் இழப்பு. அதாவது, ஏமாற்றுவதிலும் அரைவேக்காட்டுத்தனம் பற்றிச் சொல்கிறேன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு நாங்கள் வாழ்ந்த ஊரில் புதியதொரு பகுதியில் புதியதாய் வீடு கட்டிக் குடி போனோம். போன நாள் முதல் ஒருவன் விரட்டி விரட்டிக் கும்பிடு போட்டான். சிரித்துப் பேசக் காசு கேட்கும் ஊரில் இப்படியொரு நல்லவன் எதற்காக வாலை (திரும்பவும் வால்தானா?!) இந்த ஆட்டு ஆட்டுகிறான் என்று எங்களுக்கெல்லாம் குழப்பமான குழப்பம். "அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திட்டம் ஏதாவது இருக்கும்!" என்று என் தம்பி சாதாரணமாகச் சொன்னான் ஒருநாள். கடைசியில் அது அப்படியே நடந்தது. ஆடிப் போனேன். கண்டிப்பாக 'ஒருமாத' அரசியல்வாதியை விட இப்படிப் பட்டவர்கள் பரவாயில்லை. ஆனால், கும்பிடு போடுவது ஒன்றுதான் ஒரு தலைவனுக்குத் தகுதியா? கடந்த நாற்பது வருடங்களாக அப்படித்தான் நடந்து வருகிறது. அதை யாரும் அவ்வளவு எளிதாக மாற்ற முடியுமா? இப்போதைக்கு நம்பிக்கையில்லை. கும்பிடு மட்டும் சரியாகப் போட்டு விட்டால், அவன் அதன் பின் எது செய்தாலும் நமக்கு ஓகேவா? அப்படித்தான் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நடந்து வருகிறது. இதையெல்லாம் பார்த்து விட்டுத்தான் எப்போதுமே மக்களை மதிக்காத சில ஆட்களைப் பார்த்தால் மரியாதை வருகிறது. காரியம் ஆகும் வரை மதித்து விட்டு அதன் பின்னர் கழற்றி விடுவோரை விட இவர்கள் பரவாயில்லை அல்லவா? எப்போதும் உண்மையாக இருக்கிறார்களே! ஒருநாள் சரியான நேரத்தைக் காட்டி விட்டு மற்ற நாட்களில் தவறான நேரம் காட்டும் கடிகாரத்தை விட காலம் முழுக்க ஓடாமல் இருக்கும் ஓட்டைக் கடிகாரம் பரவாயில்லை அல்லவா?

அதுபோலவே இன்னோர் அனுபவம். நாங்கள் இருந்த பழைய பகுதியில் ஒரு பழுத்த அரசியல்வாதி இருந்தார். எந்தக் கட்சி என்பது வேண்டாம். எல்லாக் கட்சியிலுமே பழுத்த கேஸ்கள் எல்லாம் புழுத்த கேஸ்களாகத்தான் இருக்கின்றன. அவரும் விரட்டி விரட்டிக் கும்பிடு போடுவார். இவ்வளவு பெரிய மனிதர் ஏன் நம்மைப் போன்ற சின்னப் பசங்களை எல்லாம் கும்பிட வேண்டும் என்று கூச்சமாக இருக்கும். சமீபத்தில் பார்த்த போது கண்டு கொள்ளாமல் போனார். ஏனிந்த மாற்றம் என்று கடுமையாக யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது - நாம்தான் பகுதி மாறி வந்து விட்டோமே; இனியும் நம் வாக்குகள் அவருக்குத் தேவையில்லையே. அடக் கருமமே, இப்படியொரு பிழைப்புப் பிழைக்கணுமா? ஒருவேளை, சட்டமன்றத் தேர்தலில் நின்றால் திரும்ப நமக்குக் கும்பிடு போட வேண்டிய கட்டாயம் வரும். ஆனால், அவர் தகுதிக்கு கவுன்சிலர் பதவிதான் அதிகபட்ச ஆயுட்காலப் பதவியாக இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் சிலர். அப்படியானால், எவ்வளவு பெரிய திட்டத்தோடு அவர்கள் பொது வாழ்க்கைக்குள் வருகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எங்கள் ஊராட்சி, நகராட்சிக்கு அருகில் உள்ள - நிறைய வருவாய்க்கு வாய்ப்புள்ள (தலைவரின் வருவாய்க்கு... ஊராட்சியின் வருவாய்க்கு அல்ல!) ஓர் ஊராட்சி என்பதால் இருக்கலாம். ஆனாலும் ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு முயல்கிற ஆளே இதெல்லாம் செய்கிறார் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் போன்ற மற்ற பெருமன்றங்களுக்கு முயல்கிற ஆட்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இந்தத் தேர்தலில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கொடுக்கிற காசு சொந்தக் காசு என்பதால் பெரும்பாலும் அது மக்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது. இடைத்தரகர்கள் யாரும் அதை விழுங்க முடிவதில்லை. சட்ட மன்றத் தேர்தலில்தான் டெல்லியில் அடித்த கொள்ளையை இங்கே கொட்டினார்கள். அதை இடையில் இருந்த எல்லோருமே முடிந்தவரை சுருட்டினார்கள். கடைசியில் நிறையப் பேருக்கு வந்து சேர வேண்டிய பணம் வரவே இல்லை.

இன்னொன்றும் சொல்லி விடுகிறேன். சென்ற முறை திமுக தோற்றதால் பணம் கொடுக்கும் பண்பாடு முடிவுக்கு வந்து விட்டதாக யாரும் எண்ணி ஏமாற வேண்டாம். இன்னும் திருந்திய பாடு இல்லை பாவிகள். இந்த முறையும் காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் ஆப்படித்தால் நிறுத்தி விடுவார்கள். அது மட்டுமில்லை. பணம் கொடுப்பது என்பது கட்சி சார்பில்லாமல் எல்லோருமே அவரவர் திராணிக்கு ஏற்ற அளவு செய்யும் ஈன வேலையாகி இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இப்படிக் கேடு கெட்ட குடியாக இருக்கும் என்று நான் எள்ளளவும் எண்ணியதில்லை.

சொந்த வாழ்க்கையைத் தூக்கி வீசி விட்டுப் பொது வாழ்க்கையில் நுழைந்ததால் நம் பழைய தலைவர்கள் எல்லோருக்குமே சொந்த வாழ்க்கையில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் படியான சாதனைகள் இராது. அதற்காக, சொந்த வாழ்க்கையில் வீணாய்ப் போன எல்லோருமே வந்து நாறடிக்கும் அளவுக்கு பொது வாழ்க்கையின் இன்றைய சூழல் மாறி விட்டது என்பதைப் பார்க்கும்போது நிரம்பவே வலிக்கிறது. எல்லோரும் அரசியல்வாதியையே குறை சொல்கிறார்களே - குற்றம் சாட்டுகிறார்களே - கேவலமாகப் பார்க்கிறார்களே என்று ஆதங்கப் பட்ட ஒரு குறுகிய காலம் என் வாழ்விலும் உண்டு. இப்போதுதான் புரிகிறது - அவை அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மையான குற்றச் சாட்டுகள் என்று. பெரும்பாலும் தெருப் பொறுக்கிகள், போக்கிரிகள், அடியாள் வேலை பார்ப்போர், குடிகாரர்கள், கொள்ளைக் காரர்கள், சட்டத்துக்குப் புறம்பான அனைத்து விதமான குற்றங்களும் கூச்சமில்லாமல் செய்வோர்... என்று சமூகத்தில் புறக்கணிக்கப் பட வேண்டிய மாதிரியான எல்லோருமே உள்ளே வந்து விட்டார்கள். இவர்கள்தாம் பின்னர் நம் தலைவர்கள் ஆகிறார்கள். இதற்கு எப்படி முடிவு கிடைக்கும் என்று எனக்குப் புரியவே இல்லை. தப்பித் தவறி நல்லவன் எவனாவது நுழைய முயன்றால் அவன் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்துத்தான் அதைச் செய்ய வேண்டும். எத்தனையோ மிரட்டல்கள், பழி வாங்கல்கள், தொல்லைகள்... அப்பப்பா!

அதிலும் சிறுபான்மை சாதிக்காரர்கள் ஆளவே லாயக்கில்லாதவர்கள் போல ஆகி விட்டது இன்றைய சூழல். அரசியல் என்றாலே பெரும்பான்மை சமூகங்கள் மட்டுமே நுழைய வேண்டிய தொழில் என்றாகி விட்டது. இரண்டாம் மூன்றாம் இடங்களில் அடுத்தடுத்து இருக்கும் சில சாதிகள் கூட பெரும்பானமையாக இருப்போரைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள் கொண்டு, தமக்குள் மட்டும் உள்ள ஒட்டு மொத்த ஒற்றுமையைக் காட்டி, வென்று விடுகிறார்கள். மிகக் குறைவாக இருக்கும் சமூகங்களில் பிறந்தவர்களுக்கு அரசியல் உணர்வே இருக்கக் கூடாது என்றாகி விட்டது. அப்படியெல்லாம் ஏதாவது இருந்தாலும் பல குறுக்கு வழிகளைப் பிடித்து சிறிய அளவில் ஏதாவது செய்து கொள்ளலாம். பெரும் கனவுகள் எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், பெரும்பான்மை சமூகங்களில் பிறந்து விட்டால், நீங்கள் எவ்வளவு இற்ற கேசாக இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் ஆக முடியும். என்ன கொடுமை இது?! இப்படியே போனால், சுனாமி வந்துதான் சாவீர்கள் பாவிகளா.

உள்ளாட்சித் தேர்தல் என்பது அடி மட்டத்தில் இருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் - அவரவர் தேவைகளை அவரவர் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கைக்கெட்டும் தொலைவில் தத்தம் தலைவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவாக்கப் பட்ட அமைப்பு. ஆளும் கட்சியைப் பொருத்த மட்டில் கட்சிக்காரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க ஒரு வாய்ப்பு. அதாவது, சட்ட மன்றத் தேர்தலில் அதிருப்தி அடைந்தவர்களை சரிக்கட்டக் கிடைத்த வாய்ப்பு. மற்ற கட்சிகளுக்கு அடி மட்டக் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. ஒன்றுமில்லாத சில கட்சிகளுக்கு ஆளுக்கொரு பதவிக்கான வாய்ப்பைக் கொடுத்து புதிதாக நிறைய ஆட்கள் சேர்த்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பு.

ஆனால், மொத்தத்தில் அதனால் அடையும் பயன்களை விட பிரச்சனைகளே அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஒவ்வோர் உள்ளாட்சித் தேர்தலின் போதும் கிராமங்கள் பல துண்டுகளாகின்றன. சாதி அடிப்படையில் பிரிகிறார்கள். மத அடிப்படையில் பிரிகிறார்கள். பூர்வீகமாக இருப்பவர்கள் என்றும் பிழைக்க வந்தவர்கள் என்றும் இணைய முடியாத மாதிரியான நச்சுக் கோடு போட்டுக் கொள்கிறார்கள். ஓர் ஊராட்சியில் வரும் இரு கிராமங்கள் அடித்துக் கொள்கின்றன. காவிரியில் தண்ணீர் கொடாத கர்நாடகத்தைக் கடிந்து கொள்ளும் நாம் பக்கத்து ஊருக்கே தண்ணீர் கொடுக்க மறுக்கும் கேவலப் பிறவிகள் என்பதை நினைவு படுத்திக் கொள்கிறோம். நெடுநாள் நண்பர்கள் எதிரிகள் ஆகிறார்கள். உறவுகளுக்குள்ளேயே பதவி ஆசையில் வெட்டிக் கொண்டு சாகிறார்கள். இந்த முதிர்ச்சி கூட இல்லாத மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று எளிதாகச் சொல்ல முடியவில்லை. அடி மட்டத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கொடூரமானவை.

பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களும் இருக்கும் இடங்களில் சாதிவாரியாகப் பிரிவினை பேசும் அதே ஆட்கள், ஒரே சாதி மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாதிக்குள்ளேயே உட்பிரிவு பார்க்கிறார்கள். உள்ளூர்த் தேவர் - வெளியூர்த் தேவர், இந்த வன்னியர் - அந்த வன்னியர், வெள்ளாளக் கவுண்டர் - வேட்டுவக் கவுண்டர், இந்து நாடார் - கிறித்தவ நாடார் என்று வித விதமாகப் பிரிவினை பேசுகிறார்கள். இந்தத் தேர்தல்கள் பல இடங்களில் கட்சி பலத்தை விட சாதி பலத்தை மதிப்பிட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப் படுகின்றன. சாதிக் கிறுக்கு பிடித்த சில சாதிக்காரர்கள் இரு பக்கமும் இருக்கும் தம் ஆட்களிடம் பேசி கட்சிப் பாகுபாடு மறந்து பல உள்ளடி வேலைகளுக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். சில கேவலர்கள் எல்லா இடங்களிலும் தம் ஆட்களே வர வேண்டும் என்பதற்காக, எதிர்க் கட்சி சார்பில் தம் சாதி ஆட்கள் போட்டியிடும் இடங்களில் தம் கட்சி சார்பாகப் பலவீனமான ஆட்களை நிறுத்துகிறார்கள். இவற்றில் சில அவர்களின் மேலிடங்களுக்குப் போகின்றன; பல அந்தச் சாதி அமைப்புகளைச் சேர்ந்தோரைத் தவிர வெளியே யாருக்கும் தெரிய வருவதில்லை. நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள் - இதெல்லாம் முதிர்ந்த சமூகங்களில் நடக்கக் கூடிய விசயங்களா? கேவலம் அல்லவா?

முக்கியமான இன்னொரு விசயத்தையும் பற்றிப் பேச வேண்டும் இப்போது. கோபப் படாமல், உணர்ச்சி வசப் படாமல், படித்து முடியுங்கள் முதலில். பின்னர் அறிவு பூர்வமான பதில்களைக் கொடுக்க முயற்சியுங்கள். சொல்ல வருவதைச் சொல்லும் முன்பே, "நீ அது... இது..." என்று காட்டுக் கத்து கத்தி உரையாடலைத் திசை திருப்பி விடாதீர்கள். மீண்டும் சொல்கிறேன் - உணர்ச்சி வசப் படாமல் பேச முடியும் என்றால் மட்டும் தொடர்ந்து படியுங்கள். முடியாதென்றால், தயவு செய்து இத்தோடு நிறுத்தி விடுங்கள். *தொடரும்...*

செவ்வாய், அக்டோபர் 04, 2011

ஆஸ்கார் நாயகனின் அம்'மனம்'!

கமலின் ரசிகன் என்று சொல்ல முடியாது. எப்போதுமே யாருக்குமே ரசிகனாக இருக்க விரும்பியதில்லை. ஆனால், நீண்ட காலமாகத் தமிழ்ச் சினிமாவில் அதிகம் மதித்த ஆள் கமல். நடிப்புக்காக மட்டுமல்ல... அவருடைய பேச்சுக்காகவும் அறிவாற்றலுக்காகவும் ஒட்டு மொத்தத் திறமைக்காகவும்! சில மாதங்களுக்கு முன் கமல் பேசிய ஒரு பேச்சு பற்றி இன்று கேள்விப் பட்ட போது காறித் துப்பலாம் போல உணர்ந்தேன். சிறந்த கலைஞர்கள் பெரும்பாலும் திறந்த கலைஞர்களாகவே இருப்பது நம் சாபக் கேடா? 'திறந்த' என்றால் 'மனம் திறந்த' என்று அதைப் பெருமைப் படுத்தி விட வேண்டாம். மனதின் அசிங்கத்தை மறைக்கத் தெரியாத அசிங்கம் அது.

"எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் விட்டுச் சென்ற சிம்மாசனம் இன்னும் காலியாகவே உள்ளது. அதை தேவிஸ்ரீ பிரசாத் தான் நிரப்ப வேண்டும்!" என்று சொல்லியிருக்கிறார். இப்படியொரு கருத்தைச் சொல்வதன் உள்நோக்கம் என்னவென்று இதைப் படிக்கும் எவருக்கும் மிக எளிதாகவே புரிந்து விடும். ரஹ்மான் என்ற கலைஞனை அவமானப் படுத்த முனைந்த அரைவேக்காட்டுத்தனம்தான் அது. அது எதற்காக? ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியபோதே என் தம்பி சொன்னான் - "இனியும் கமலஹாசன் ஆஸ்கர் நாயகன் என்று கூச்சமில்லாமல் போட்டுக் கொள்ள முடியுமா வாழ்க்கையில்..." என்று. அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. பதிலை வைத்துக் கொண்டு கேள்விக்காக அலைந்தேன். இப்போது கிடைத்து விட்டது. இப்போது புரிகிறதா? எதற்காக ரஹ்மான் மீது இப்படியொரு கோபம் என்று. இதில் கொடுமை என்னவென்றால், இதற்கு எவருமே சரியான பதிலடி கொடுக்க முன்வர வில்லை. இதையும் தமிழ்நாடு ஆதரிப்பதாக யாரும் விளக்கம் கொடுக்காதவரை நல்லது.

இது ஓர் ஈனப் பிறவி என்று பலர் சொன்னபோது ஏற்றுக் கொள்ள வில்லை. பகுத்தறிவு பிழைப்புக்குப் போடும் இன்னொரு வேடம் என்று எத்தனையோ பேர் சொன்ன போது நம்பவில்லை. தேவர் மகனும் சண்டியர் என்ற விருமாண்டியும் எடுக்க முயன்ற போது அதன் பின்னணியில் இருந்த கேவலமான அரசியல் பற்றிப் பலர் பேசிய போது முழுமையாய் ஒத்துக் கொள்ள வில்லை. இன்றிரவு என் கருத்துக்கள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். உன்னால் முடியாததை இன்னொருவன் செய்த போது வந்த பொறாமை இயல்பானது. அதை இவ்வளவு கேவலமாக வெளிப்படுத்திய ஒரு பிறவிக்கு இனிமேலும் புத்திசாலிப் பட்டத்தை மட்டும் என்னால் கொடுக்க முடியாது. மன்னிக்கவும் உலக நாயகா! உன் புத்தி அளவுக்கு உலகம் இன்னும் சுருங்க வில்லை.

குமுதம் இதழில் இந்தச் சர்ச்சைக்கு முடிவுரை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? "'தியாகராஜ பாகவதரும் சிவாஜி கணேசனும் விட்டுச் சென்ற சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது. அதை சிம்புதான் வந்து நிரப்ப வேண்டும்!' என்று யாராவது சொன்னால் கமலுக்கு எப்படி இருக்கும்?!". அருமை... அருமை... 'க'வுக்குக் 'கு'வே பரவாயில்லை.

இந்த மகா நடிகன் எழுதிய கவிதை ஒன்று சொல்கிறது... சிங்கம் செத்தபின் ஈக்கள் அதைத் திங்குமாம்; ஆனால் சிங்கம் மட்டும் உயிரோடு இருக்கும் போது எப்போதுமே ஈக்களைத் தின்னாதாம். இதில் யார் சிங்கம்? யார் ஈ? ரஹ்மான் யாரையும் திங்கவில்லை. நீதான் எது எதையோ தின்று கொண்டிருக்கிறாய். ரஹ்மான் வேண்டுமானால் மான் என்று சொல்லலாம். அதை அடித்துத் தின்னப் பார்க்கும் பிழைப்புவாத 'மிருகம்' தன்னைச் சிங்கம் என்று எண்ணிக் கொண்டு திரிந்தால் அது யார் குற்றம்?

பின்குறிப்பு: திரைப்படத்துறை பற்றி எழுத நேர்ந்த முதல் இடுகை இப்படி ஆனதில் (அதுவும் நான் அதிகம் மதித்த ஒரு கலைஞன் பற்றி!) கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், விதியை யார் வெல்ல முடியும்? ஆர்வம் அதிகமில்லாத ஒரு துறை பற்றி ஒருவரை எழுத வைக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி, அவருடைய மனதைப் பாதிக்கும் விதமாக அந்தத் துறையில் ஒன்று நடப்பதுதான்.

அது சரி, 'அம்மணம்' கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன 'அம்மனம்' என்கிறீர்களா? அம்மணமான மனத்துக்குச் சுருக்கம்! பொறாமையை ஆடை போடாமல் அப்படியே வெளிப்படுத்தும் மனம் 'அம்மனம்'தானே.

திராவிடத் திருடர்களும் தேசியத் திருடர்களும்


திராவிடத் திருடர்களுக்கும் தேசியத் திருடர்களுக்கும் (திருடுபவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன். அதனால் மற்றவர்கள் கோபப் பட வேண்டியதில்லை!) என்ன வேறுபாடு? திராவிடத் திருடர்கள் பார்க்கவும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள். அதனால் மக்கள் அவர்கள் செய்யும் திருட்டை எளிதில் நம்பி விடுகிறார்கள்; அவர்களை எளிதில் வெறுத்து விடுகிறார்கள். தேசியத் திருடர்கள் எவ்வளவு திருடினாலும் நம்ப முடிவதில்லை; நம்பினாலும் வெறுக்க முடிவதில்லை. காரணம்? வெள்ளைத் தோலா? அல்லது வேறு எதுவுமா?

காங்கிரசும் சத்தியமூர்த்தி பவனும்காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடுகிறார்களோ இல்லையோ சத்தியமூர்த்தி பவனைச் சூறையாடுகிறார்கள். அடித்து நொறுக்கும் வேலையைச் செய்யும் ஆட்கள் மட்டும் வாக்களித்தால் போதும். கட்சிக்கு டெபாசிட் மட்டும் கிடைத்து விடும். காசை வாங்கிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் கலாட்டப் பண்ணுபவர்கள் அதே காசை இன்னும் கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொண்டு ஓட்டை மட்டும் வேறு யாருக்காவது போட்டு விடுகிறார்கள். அது சரி, தயவுசெய்து அந்தக் கட்டடத்தின் பெயரையாவது மாற்றுங்கள் சாமிகளா. அந்த நல்ல மனிதரை ஏன் போட்டு அடித்து நொறுக்கிக் கேவலப் படுத்துகிறீர்கள்?

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...