செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

உளறல்.காம்

எத்தனையோ அரசியல் அறிஞர்கள், ஆன்மீக ஆய்வாளர்கள், இலக்கியச் சொற்பொழிவாளர்கள், தத்துவ ஞானிகளின் பேச்சுகளும் உரைகளும் கேட்கிறோம். ஒவ்வொருவருடைய பேச்சும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருக்கிறது. சிலர் பேச்சில் அனல் பறக்கிறது; சிலர் பேச்சில் இடி இடிக்கிறது; சிலர் பேச்சில் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன; சிலர் பேச்சில் நகைச்சுவையும் நையாண்டியும் அருவியாய்க் கொட்டுகின்றன; சிலர் பேச்சில் அடுக்கு மொழி வசனங்கள் அழகழகாய் அலங்காரம் செய்கின்றன; சிலர் பேச்சு கவிதைகளும் பாடல்களுமாக இனிக்கின்றன. சிலர் பேச்சில் எங்கெங்கிருந்தோ மேற்கோள்கள் வந்து இறங்குகின்றன. இப்படி அத்தனை விதமான பேச்சுகளிலும் ஒவ்வோர் அழகு.

இவை எல்லாவற்றையும் விட குடிகாரர்களின் உளறலிலும் மனநிலைக் கோளாறு உள்ளவர்களின் பேச்சிலும் எனக்கொரு தனிவித சுவையை உணர முடிகிறது. சிலர் இயற்கையாகவே எது பற்றிப் பேசினாலும் தெள்ளத் தெளிவாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்கள். அவர்களைப் பேச விட்டுக் கேட்பதில் ஓர் அலாதி இன்பம் இருக்கிறது. அவர்கள்தாம் சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது, மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஆவது. இயல்பாகவே பேசப் பிடிக்காதவர்கள் கூடச் சிலர், ஒரு கிளாஸ் உள்ளே போய்விட்டால் பட்டையைக் கிளப்புவார்கள். இவனுக்குள் இவ்வளவு புத்திசாலித்தனம் இவ்வளவு நாட்களாக எங்கே ஒளிந்திருந்தது என்று வியக்கிற அளவுக்குப் பேசுவார்கள். அத்தனை கருத்துக்கள், தத்துவங்கள், நக்கல், நகைச்சுவை என்று எல்லாமே தெளிவாய்த் தெறிக்கும். அவர்களின் பேச்சுகளுக்கு நான் எப்போதுமே அடிமை.

அதுபோலவே, மனநிலை பாதிக்கப் பட்டவர்களும் எவ்வளவோ தத்துவங்கள் வைத்திருக்கிறார்கள். வாழ்க்கை பற்றிப் பல விஷயங்களில் நமக்கு இல்லாத தெளிவு எவ்வளவோ அவர்களிடம் இருப்பது போலப் படும். கண்ணில் காணும் எது பற்றியும் ஒரு கருத்துச் சொல்வார்கள். நம்மிடமும் அந்தக் கருத்துக்கள் மனசினுள் கிடக்கும். ஆனால், வெளியில் வராது. நாம் பேசக் கூச்சப் படும் அவற்றை அவர்கள் பேசும்போது கேட்கக் கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். மனித இனத்தின் மூன்றில் ஒரு பங்கினர் ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் என்றொரு புள்ளி விபரம் சொல்கிறது. முழுநேர ஊழியர் மற்றும் பகுதி நேர ஊழியர் போல முழுநேரக் கோளாறு மற்றும் பகுதி நேரக் கோளாறு என்று இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மூன்றில் ஒரு பங்கு என்று சொல்லப் படுவோரில் பெரும்பாலானோர் அப்படிப் பகுதி நேரக் கோளாறு கொண்டோர்.

இன்னொன்று - தெளிவாகப் பேசுவோர் சரியாகப் பேசாததும் பேசவே விரும்பாதவர் அதிகமாகப் பேசுவதும் உளறல் எனப் படுகிறது. ஆக, உளறல் என்பதற்கு சரியான வரையறையே பேச்சின் சாரத்தைப் பொறுத்தது அல்ல; பேசுவோரின் பின்புலத்தைப் பொறுத்தது - பேசப்படும் இடத்தைப் பொறுத்தது - கேட்போரின் பின்புலத்தையும் பொறுத்தது. இதில் தன்னால் புரிந்து கொள்ளப் பட முடியாத பேச்சுக்களும் கூட உளறல் என்றே அழைக்கப் படுகின்றன நம்மால். நம் கருத்துக்கு எதிர்க் கருத்துக்கள் உளறல் எனப் படுகின்றன. முக்கியமான விஷயங்களில் நமக்கு எதிரான கருத்துக் கொண்டிருப்போர், எது பேசினாலும் - நாம் சொல்வதையே வேறு மாதிரிச் சொன்னாலும் கூட, அவற்றையும் உளறல் என்றே அழைக்கிறோம்; நிரூபிக்க முனைகிறோம்.

உளறத் தூண்டுவது எது? உளறலை ரசிக்க வைப்பது எது? தூண்டுவது - சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல முடியாத மாதிரி இருக்கும் சமூகக் கட்டுப்பாடு. அதற்கான வாய்ப்புக் கிடைக்கும்போது முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறது நம் மனம். ரசிக்க வைப்பது - நம் ஆழ் மனதில் நினைத்திருந்து பேசத் தயங்கிய விஷயங்களை வேறொருவர் பேசும்போது அவற்றை ரசிக்கிறோம். அதையே வேறொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், உளறுவதுதான் இயற்கை; பேசுவது செயற்கை; பிற்காலத்தில் இயற்கையான செயற்கை. மனிதன் தோன்றிய நாள் முதல் நடப்பது உளறல்; இடைக்காலத்தில் பழகியது பேச்சு. இப்போதைய நம் உளறல் ஆதி உளறலில் இருந்து சற்று வேறுபட்டது. இடைக்காலத்தில் பழகிய உளறல் எனலாம். ஆனால், பேச்சுக்குக் கொஞ்சம் முந்தைய கண்டுபிடிப்பு. உளறலுடனான அந்தப் பூர்வ உறவுதான் நம்மைச் சில நேரங்களில் உளறத் தூண்டுகிறதோ - அதை ரசிக்க வைக்கிறதோ என்றும் கூடத் தோன்றுகிறது.

எல்லாப் பேச்சுகளும் வெளிப்படையானவை அல்ல. பலர் பல நேரங்களில் உள்நோக்கங்களோடு ஏதேதோ பேசுகிறார்கள். அவை புரிந்தால் மாட்டிக் கொள்கிறார்கள். புரியாவிட்டால் உளறல் என்கிறோம். அப்படிப் பேசுவதன் உள்நோக்கம் அவர்களுக்கே புரியாமல் பேசுவார்கள். கொஞ்சம் கூடுதல் அறிவாளிகள். அவற்றை ஆழ்நோக்கங்கள் எனலாம். அவர்களுக்கே தெரியாமல், மின்னல் வேகத்தில் எது தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்களுடைய ஆழ்மனம் கணக்குப் போட்டு விடும். அவற்றையும் நமக்குப் புரிந்து கொள்ள முடியாத போது, உளறல் என்றே ஒதுக்கி விடுவோம். அவர்களை விட அறிவாளிகள் அதையும் எளிதில் பிடித்து விடுவார்கள்.

ஆக, உளறல் என்பது உளறல் மட்டுமல்ல. உளறல்லாத பல பேச்சுக்களும் கூடத் தவறான பெயரில் மறைந்து கொண்டு நம்மை ஏமாற்றுகின்றன. சிலருக்கு அது ஒரு முகமூடியாகவும் இருக்கிறது. எனவே, எல்லா உளறல்களையும் கண்டு கொள்ளாமல் விட முடியாது. உளறல்களையும் உற்று நோக்குதல் முக்கியம். அவற்றுக்குள்ளும் அர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றுக்கென்றும் காரணங்கள் இருக்கின்றன.

குழந்தையும் உளறுவதாகச் சொல்கிறோம்; முதியோரும் உளறுவதாகச் சொல்கிறோம்; பைத்தியமும் உளறுவதாகச் சொல்கிறோம்; ஞானியும் உளறுவதாகச் சொல்கிறோம்; குடிகாரனும் உளறுவதாகச் சொல்கிறோம்; சராசரியும் உளறுவதாகச் சொல்கிறோம். அப்படியானால், உளறல் யாருக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்ட தனிச் சொத்து அல்ல. நம் எல்லோருக்கும் பொது. சிலருக்கு எப்போதும்... சிலருக்கு எப்போதாவது... எனக்கு இப்போது... :)

"சரியான உளறலப்பா..." என்கிறீர்களா??? :)

தோல்விக்கழும் துரோகி

அசார் டெண்டுல்கரின்
அதிரடி ஆட்டத்தாலும்
பரபரப்பான போட்டியின்
பதற்றமான கடைசி ஓவரில்
பறக்கடிக்கப்பட்ட சிக்சர்களாலும்
கோப்பையை வென்றுவிட்ட
கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்
என்னைச் சுற்றியுள்ள எல்லோரும்

அடிபட்ட பவுலர்
அழுதுகொண்டே போன கேப்டன்
ஏமாந்த ரசிகர்கள்
எதிர்நாட்டவர் எல்லோருக்காகவும்
என் மனம் கவலையில்

இதற்கு முந்தைய தொடரில்
இது எல்லாமே
இந்தப் பக்கம் நடந்தது

எப்போதுமே
தோல்விக்காகத்
துயரப் படுவதே
தொழிலாகப் போய்விட்டது
எனக்கு

இந்நாடு வென்றாலும்
எந்நாடு வென்றாலும்

விளையாட்டு வெற்றிக்கு
வெடி போடுவதுதான்
தேசப் பற்றாகி விட்ட வேளையில்
விளையாட்டு அரசியலானதும்
அரசியல் விளையாட்டனதும்
வியப்புமில்லை
ஆச்சரியமுமில்லை

அணுகுண்டு விளையாட்டிலும்
அப்படித்தான்

எதிரியைத் தாக்க
எம்மிடம் இருக்கும்
எண்ணிக்கையைச்
சொல்லிச் சொல்லி
துள்ளிக் குதிக்கிறார்கள்
என்னைச் சுற்றியுள்ள எல்லோரும்

எனக்கு மட்டும்
அழியப் போகும்
அந்நாட்டு அப்பாவிகள்
விதவைகளாகப் போகும்
வீரர்களின் மனைவிகள்
அனாதைகளாகப் போகும்
அவர்களின் பிள்ளைகள்
வழக்கம் போலவே
வருத்தங்கள்...

அழியப் போவது
அவர்கள் மட்டுமா?

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

மக்கட்தொகை

இந்தியா
இன்னும்
இருளில் கிடக்கிறதாம்...

ஓ!
அதனால்தான்
இனப்பெருக்கத்தில்
இவ்வளவு வேகமோ?!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

ஊழலும் ஊழல் சார்ந்தவையும்

ஊழல்தான் இன்றைய சூடான விவாதப் பொருள். தனிப் பட்ட முறையில் நானும், ஊழல்தான் மற்ற எல்லாச் சமூகப் பிரச்சனைகளையும் விடப் பெரும் அபாயம் என்று நம்பும் ஓர் ஆள். தீவிரவாதம், பாதுகாப்பு, மதவாதம், பொருளியல், சுகாதாரம், இன்ன பிற வசதிகள் சார்ந்த பிரச்சனைகள் - இவை அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஊழல் என்பது என் கருத்து. ஏனென்றால், இவை எல்லாவற்றிலுமே ஊழல் நுழைந்திருக்கிறது. இவை அனைத்தின் தரக் குறைவுக்கும் ஊழல் ஒரு முக்கியக் காரணம். இந்த ஒரு பிரச்சனை தீர்க்கப் பட்டால் முக்கால்வாசிப் பிரச்சனைகள் தானாகவே சரியாகி விடும். ஓர் ஊழல்வாதிக்கு எதிராக எவ்வளவு பெரிய குறைபாடு கொண்ட எவர் நின்றாலும் அவருக்கே என் வாக்கு.

ஊழல் பற்றிய ஓர் உரையாடலில் ஒருவர் சொன்னார் - "இந்திய ஊழலுக்கு நம் சமூகப் பின்னணியும் ஒரு காரணம்!". குறுக்கு வழியில் காரியம் சாதிப்பது காலம் காலமாகவே நம்மிடம் இருக்கும் ஒரு பயக்க வயக்கம். தெரிந்தவரை வைத்துக் காரியம் சாதிப்பது, சொந்தக்காரர் வைத்துக் காரியம் சாதிப்பது, குடும்பப் பின்னணியை வைத்துக் கூடுதல் பலன் அடைவது, அன்பளிப்புக் கொடுத்துக் காரியம் சாதிப்பது... இப்படி சமூகத்தில் சமநிலை என்பது எப்போதுமே நம்மிடம் இருந்ததில்லை. எனவேதான் ஊழல் நம் இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருக்கிறது. "'எல்லோரும் சமம்!' என்பதே மேற்கத்தியச்  சிந்தனை. நமக்கெல்லாம் அது ஒத்து வராது!" என்று அடித்துச் சொல்கிறார்கள் சில மண்ணின் மைந்தர்கள். என்னத்தச் சொல்ல? 

நம்மால் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் ஊழலை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். குப்பனும் சுப்பனும் ரமேஷுக்கும் சுரேஷுக்கும் சமம் இல்லை என்றால், குப்பனும் சுப்பனும் ஏமாற்றப் படத்தான் செய்வான். ஏமாந்து விட்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது காதைக் கட்டி அறையத்தான் செய்வான். அவன் மேலே வந்தால், அவனும் ரமேஷையும் சுரேஷையும் ஏமாற்றும் வழிகளைத்தான் பார்ப்பான். உடன் இருக்கும் தம் மக்களையும் சேர்த்து ஏமாற்றுவது தவறில்லை; அதுதான் வென்றவர்களின் வாழ்க்கை முறை - வெற்றிக்கான சூத்திரம் என்று விளக்கம்தான் கொடுப்பான்.

ஊழல் பற்றிய எந்த உரையாடலிலும் இப்படியொரு வாதத்தோடு ரெண்டுமூணு அறிவாளிகள் வருவார்கள் - "யார் ஊழல் செய்யவில்லை? நீ செய்யவில்லையா? நான் செய்யவில்லையா? சும்மா எல்லாத்துக்கும் அரசியல்வாதிகளையே குற்றம் சாட்டாதீர்கள். எல்லாத்துக்கும் நாம்தான் காரணம்!". வாதம் நன்றாகத்தான் இருக்கிறது. நாமும் கொஞ்சம் திருந்த வேண்டும் என்று சொல்லும் நல்லெண்ணம் அதில் இருக்கிறது. ஆனால், இது பிரச்சனையை முடித்து வைக்க உதவாது. இன்னொரு விதமாகப் பார்த்தால் இப்படிப் பேசுவது தட்டிக் கழிக்கும் நுட்பங்களில் ஒன்று என்றும் சொல்லலாம். 

அப்படியானால், கையூட்டே கொடுத்துப் பழக்கம் இல்லாத வெளிநாடு வாழ் நம்மவர்கள் இங்கே வந்தால் அது கொடுக்க நிற்கிறதே. அதற்கு யார் பொறுப்பு? எல்லாத்துக்கும் காசு கொடுத்துக் காரியம் சாதிக்கும் நம்மவர்கள் வெளிநாடு போனால் அதெல்லாம் கொடுக்க வேண்டியதில்லையே. அதற்கு யார் பொறுப்பு? அப்படியானால், அது அந்தத் தனி மனிதர்களின் பிரச்சனையா? அந்தந்த மண்ணின் பிரச்சனை. மண்ணின் பண்பாட்டுப் பிரச்சனை. அதில் தனி மனிதர்களுக்கும் துளித் துளியளவு பொறுப்புள்ளது. ஆனால், அந்தத் தனி மனிதர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது பற்றிய அறிவு கொண்டிருந்தாலும் கொண்டிராவிட்டாலும் பண்பாடு குறிப்பிட்ட சில தனி மனிதர்களாலேயே தீர்மானிக்கப் படுகிறது. மற்றவர்கள் செம்மறி ஆட்டுக் கூட்டம். எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டு 'வாழ்க' போட்டு விட்டுப் பின்னால் போபவர்கள். அந்தக் குறிப்பிட்ட சில தனி மனிதர்களைப் பிடிக்கிற விதமாகப் பிடித்தால் பிரச்சனை சரியாகும் என்பதே ஊழல் பற்றித் திரும்பத் திரும்ப உளறிக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கை.

நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் சரியே. நாம் சரியான ஆட்களை நம் தலைவர்களாக - முன்னோடிகளாக - நம் பண்பாட்டைத் தீர்மானிக்கிறவர்களாக அடையாளம் காண வேண்டும் என்பது உண்மையே. அப்படிச் சரியானவர்களை அடையாளம் காண சரியில்லாதவர்கள் பற்றியும் திரும்பத் திரும்பப் பேச வேண்டும். சரியில்லாதவர் என்றால் என்ன என்ற சரியான புரிதல் வர வேண்டுமே.  அதற்காகத்தான் இவ்வளவு பேச்சும் எழுத்தும். அதற்குள்ளும் சாதி, மதம், பின்னணி என எல்லாத்தையும் நுழைக்கிறார்கள் சிலர். அதெல்லாம் பேச வேண்டிய நேரம் இல்லை இது. ஊழல் யார் செய்தாலும் ஊழலே. அதை ஒழிக்க யார் உதவினாலும் அது உதவியே. தவறுக்கு உதவும் சனநாயகத்தை நன்மைக்கு உதவும் மற்றொரு முறை வீழ்த்த முடியுமானால் அதுவும் நமக்கு ஓகேதான்.

திருட வேண்டும் என்று திட்டம் போட்டே வருகிறவர்களை விடுங்கள். அவர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு வீழ்த்துவதும் ஓரளவு எளிது. ஆனால், கனவுகளோடு சாதிக்கப் புறப்படுபவனையும் சமூகத்தைச் சீர்படுத்தக் கிளம்பியவனையும் கூட பணம், பதவி, புகழ் போன்ற போதைகளைக் கொடுத்துப் பாழாக்குவது - திசை திருப்புவது சமூகமே. அதைப் பல முறை பார்த்து விட்டோம் வரலாற்றில். எதற்காக மேலே வந்தோம் என்பதை மறந்து, மேலே இருப்பதே அவர்களின் முதன்மைக் குறிக்கோளாக ஆவதற்கு அவர்களுக்கு நாம் கொடுக்கும் அதீத மரியாதையும் காரணம். 

அதற்கு மூல காரணம் என்ன? 'எது' என்பதை விட 'யார்' என்பதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் தனி மனித வழிபாடு எனும் நம் பண்பாட்டுப் பிரச்சனையே. ஊழலுக்கு எதிரான போரில் அது பற்றியும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் - அன்னாவுக்குக் கொடுக்கும் மரியாதை பற்றிச் சொல்ல வில்லை; அவரால் எதிர்க்கப் படும் - ஊழல்த் துர்நாற்றம் பிடித்த தலைகள் பல அப்படி ஆனதற்கு நம் தனிமனித வழிபாடுதான் காரணம் என்கிறேன்.

அப்படியே பார்த்தால், புதிய நம் புதிய பொருளியல்க் கொள்கையும் இந்தக் கொள்ளைகளுக்குக் காரணம் என்று சிலர் வாதிடுகிறார்கள். அது ஓரளவு சரியே. ஓரளவுதான் சரி. கொஞ்சமாகப் பணம் இருந்த போது கொஞ்சமாகக் கொள்ளை அடித்தோம். நிறையப் பணம் வந்த பின்பு நிறையக் கொள்ளை அடிக்கிறோம். இதற்குப் பொருளியல்க் கொள்கை எப்படிக் காரணமாக முடியும்? நிறையப் பணம் வந்தது தப்பாக முடியாது. எவ்வளவு பணம் வந்தாலும் அதில் ஒரு பங்கைக் கொள்ளை அடிப்பதுதான் என் கொள்கை என்று கொண்டுள்ள தனி மனிதக் கொள்கைதான் காரணம். கொடுக்கப் பட்டுள்ள வரை படத்தைப் பாருங்கள். மஞ்சளாக உள்ள நாடுகள் அனைத்தும் தாராளமயக் கொள்கை கொண்டவர்கள்தாம். அங்கெல்லாம் கொள்ளை ஏன் குறைவாக உள்ளது?

இன்னொரு சாரார் சொல்வது - நம் கல்விமுறை கணிதமும் அறிவியலும் பற்றிப் பேசும் அளவுக்கு தனி மனிதக் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுவதில்லை; கற்றுக் கொடுப்பதில்லை. அதுவும் சரிதான். ஊழல் குறைவான நாடுகளில் அதற்கென்று பாடம் இருக்கிறதென்று இல்லை. பாடம் இல்லாமலே அவர்கள் சரியாக இருக்கலாம். ஆனால், உடம்பில் இவ்வளவு திருட்டுத்தனம் கலந்துள்ள ஓர் இனம் (அல்லது இனங்களின் தொகுப்பு!), அதற்கென்று ஒரு தனிப்பாடம் வைத்துக் கற்றுக் கொடுத்தாலும் தகும் என்கிறார்கள். சரியாகத்தான் படுகிறது. என்ன சொல்கிறீர்கள்?

சனி, ஆகஸ்ட் 27, 2011

யார் திருடவில்லை?

இன்னொரு படத்திலிருந்து
கதையைத் திருடியிருக்கிறார்
கதாசிரியர்

இன்னொரு பாடலிலிருந்து
வரிகளைத் திருடியிருக்கிறார்
கவிஞர்

இன்னொரு மொழியிலிருந்து
மெட்டுகளைத் திருடியிருக்கிறார்
இசையமைப்பாளர்

நானும்தான்...
அந்தப் படத்தைப் பார்க்க
அப்பா சட்டைப் பையிலிருந்து
பணத்தைத் திருடியிருக்கிறேன்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கரிசல் பூமி

தமிழ் நாடு சாதிக் கலவரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 98-இல் எழுதியது...

பாடுபட்டாலும்
பலனை எதிர்பார்க்க முடியாத
கீதாவுபதேச வாழ்க்கை

வெயிலில் காய்ந்து
விதைத்து உழுது
விளைச்சல் ரசித்த
உழைப்பின் பயனை
இன்றுவரை அடையவில்லை

இயற்கையை நம்பி
ஏமாந்த விரக்தியில்
விவரந் தெரிந்தவர்கள்
விவசாயத்துக்கு டாட்டாக் காட்டிவிட்டு
வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
நகரங்களை நோக்கி

வியாபாரம் செய்தால்
வெளக்கு வீட்டு வேலு போல
அடுத்த வருசத் திருவிழாவுக்காவது
அம்பாசிடரில் வரலாமென்ற
ஆசைக் கனவுகளோடு

பருவமழை பொய்த்துப்
பஞ்சத்தின் பிடியில் தவிக்கும்
பாவப்பட்ட சனங்களுக்கு
புகலிடமுமில்லை
பொழுதுபோக்குமில்லை

கம்மாக்கரை ஆலமரத்துக்கும்
போரடித்து விட்டது
இவர்களின்
புலம்பல்களைக் கேட்டதில்

படித்து முடித்துப்
பட்டம் விடும்
வேலையில்லா இளசுகளின்
வழிகாட்டுதலில்
கரிசல் பூமி...
கலவர பூமியாய்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

நாட்குறிப்பிலிருந்து... - பாகம் 1

முந்தைய இடுகையில் நாட்குறிப்புடனான என் உறவு பற்றி எழுதியிருந்தேன். அதில் சொல்லியிருந்த படி, 1997-இல் இருந்து என்னுடைய அனைத்து நாட்குறிப்புகளையும் புரட்டியதில் கிடைத்த - இப்போதும் எனக்குப் பிடிக்கும் குறிப்புகளை இங்கு தருகிறேன்.

திருக்குறள்:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
பொருள்: எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கூடக் கொடிய ஆயதங்கள் இருக்கக் கூடும். கவனமாக இருக்க வேண்டும்.

திருக்குறள்:
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
பொருள்: வாளைப் போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயப்பட வேண்டியதில்லை. சிநேகிதர் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும்.

பலாப் பழம் இந்தியாவில் தோன்றியது. புளியம்பழம் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது.

கூரை மேல சோத்த வச்சா ஆயிரம் காக்கா
பொருள்: திறமையிருந்தால், அது எல்லோருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் இருந்தால், வேண்டியவர்கள் தேடி வருவார்கள்.

பத்தாவது தடவையாக 
விழுந்தவனுக்கு 
முத்தமிட்டுச் சொன்னது பூமி 
"ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!"
-தமிழன்பன்

ஆடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு
மாடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவன் வயிறு
ஆல இலை போலக் காய்ஞ்சிருக்கு

அரசியலிலும் சினிமாவிலும் இன்ன பிற தொழில்களிலும் துறைகளிலும் உள்ளதுபோல் இலக்கிய உலகில் மட்டும் என் வாரிசுகள் வந்து கலக்க முடிவதில்லை? திறமை மட்டுமே வெல்ல முடிகிற இடம் இது என்பதாலோ?

குக்கோடாவின் ரதிரகஸ்யாவில் சொல்லப்பட்டிருக்கும் பெண்களில் நான்கு விதம்...
பத்மினி: நல்ல அழகு, நிறம், நாணம், அளவான சாப்பாடு, நடையில் நளினம், பதிவிரதைத் தனம், வெள்ளை நிறப் பூ மற்றும் உடைகளில் ஈடுபாடு, கணவனின் மீது எப்போதும் காதல், முதுகிலும் இடது விலாப் புரத்துக்குக் கீழேயும் மச்சம், வசதியான வாழ்க்கை.
சித்தினி: பத்மினி மாதிரியே. ஆனால், அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம், குறைவான சாப்பாடு, அதிகமான காதல் உணர்ச்சி, சதைப் பற்றும், தொடையில் மச்சமும்.
சங்கினி: நடுத்தர உடல்வாகு, பூமி அதிர்கிற நடை, சத்தமான பேச்சு, சிவப்பு நிற ஆடைகளில் ஆர்வம், எதற்கும் அஞ்சாமை, அதிகமான காதல் உணர்ச்சி, நிறைய சாப்பாடு, நிறைய தூக்கம், கணவன் சரியில்லா விட்டால் மனம் போன போக்கில் வாழ்க்கை.
அத்தினி: எதற்கும் அடங்காமை, வேகமான நடை, கால் கட்டை விரலை விட நீளமான அடுத்த விரல், உடம்பில் நிறைய உரோமம், காரசார உணவில் பிடித்தம், வெட்கமின்மை, அதிகமான காம உணர்ச்சி, கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாதல் மற்றும் கலைத்தல்.

ஆண்களில் மூன்று விதம்...
மான் ஜாதி: புனிதமானவர்கள், மனைவியைத் தவிர யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவர்கள், கொஞ்சம் சாப்பாடு, அதிக பக்தி, கவர்ச்சி ஆனவர்கள். பத்மினிகளுக்குச் சரியான பொருத்தம்.
பறவை ஜாதி: மதமதப்பான பார்வை, மனைவியை அடக்கியாளும் குணம், நல்ல வசதி, முடி அலங்காரத்தில் பிரியம் (மீசை, தாடி, கிருதா கலக்கர்கள்!), அரசாங்க செல்வாக்குடையவர்கள், வேலை முடிஞ்சா வீடு, நெஞ்சிலும் முதுகிலும் மச்சம்.
குதிரை ஜாதி: வேடிக்கை-விசித்திரமான நடை, உடை, பாவனை, நிறையக் கெட்ட பழக்கங்கள், சண்டைப் பிரியர்கள், அத்தினிகளுக்குப் பொருத்தமானவர்கள். மாறி அமைந்தால் ஓடாது.

அம்பேத்கரின் மனைவி சவீதா ஒரு பார்ப்பனர்.

நான் படித்த காதற் கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது... :)
நீ நீயாய்...
நான் நாயாய்...

தமிழ் இலக்கியம் முழுக்க முழுக்கக் கவிதைகளாகவும் பாடல்களாகவும் மட்டுமே இருந்து வந்தது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே சிறுகதை, நாவல், உரைநடை போன்ற நடைகள் அறிமுகப் படுத்தப் பட்டன.

இலையின் நிறம் பச்சை, பாலின் நிறம் வெண்மை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்பவன் இங்கிலீஷ் மீடியம் ஸ்டூடன்ட்.

தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களுக்குமே முதல் முதல்வர் ரெட்டி சமூகத்தவர். தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் இருக்கும் இனம். கேரளாவிலும் கூட மிகக் குறைந்த அளவில் உண்டு. ராஷ்ட்ரகூடர்களில் இருந்து வந்தவர்கள்.

திருடன் போலீஸ் விளையாட்டு இந்த நாட்டின் தேசிய விளையாட்டாகி விட்டது.

செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்.

எனக்கொரு சந்தேகம் - பெண்ணிய விழிப்புணர்வின் இறுதிக்கட்டம் எப்படி இருக்கும்? இந்த பூமியின் கடைசிப் பெண்ணும் "நானும் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்!" என்று சொல்வாளா? அறிவியல்தான் வலியில்லாமல் பிள்ளை பெற்றுக் கொள்ள வழி கண்டு சொல்ல வேண்டும்.

அடக்குதல், தோல் நோய்களையும் ஒவ்வாமையையும் நுரையீரல் சம்பந்தப் பட்ட நோய்களையும் உருவாக்குகிறது. பயப்படுதல், நரம்புத் தளர்ச்சியையும்; கவலைப் படுதல், வயிற்று உபாதைகளையும்; அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இதய நோய்களையும் உருவாக்குகின்றன.

அவர் ஒரு பலசரக்குக் கடைக்காரர். யாருக்கு என்ன வேண்டுமோ அதை அவரிடம் வாங்கிக் கொள்ளலாம்.
-திருவள்ளுவர் பற்றி பெரியார்

பட்டப் படிப்பில் தவறிய இராஜாஜி மூதறிஞர் ஆனார். பள்ளி இறுதித் தேர்வில் தவறிய அண்ணா பேரறிஞர் ஆனார்.

பூஜ்யம் கண்டு பிடித்தது இந்தியர். மற்ற எண்கள் அனைத்தும் கண்டு பிடித்தது அரேபியர்.
-முகமது பின் அஹமத்

புத்தகத்துக்குப் போட்டால் அட்டை; மனிதனுக்குப் போட்டால் சட்டை.

போலீஸ்காரர் - தொப்பியும் தொப்பையுமானவர்!


திருக்குறள்:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
பொருள்: தேவையே இல்லை என நினைக்கிறேன்.

இலட்சுமணன் இராமனுடன் காட்டுக்குப் போனபோது அவனுடைய மனைவி ஊர்மிளை அவனுடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு 14 ஆண்டுகள் இரவும் பகலும் தூங்கினாளாம்.

ஊட்டியில் சூடுன்னு வேலூரில் வீடு கட்டினானாம்.

பெண்ணைத் தொட்டுட்டா விடாதே; தம்மை விட்டுட்டாத் தொடாதே!

ஏசு சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்த கதையை தாமஸ் நம்ப மறுத்ததால், நேரில் பார்க்காமல் எதையும் நம்ப மறுப்பவர்களை DOUBTING THOMAS என்று அழைக்கத் தொடங்கி விட்டார்களாம்.

"நீங்கள் இந்தக் குலத்துக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள். இந்தக் குளத்தில் எங்கள் மக்கள் குளிக்க முடியாது. நீங்கள் இந்தக் கிணற்றுக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள், இந்தக் கிணற்று நீரை எம்மக்கள் உயிர் போகும்போது கூட தாகத்துக்கு அருந்த முடியாது. நீங்கள் இந்தச் சாலைக்கு விடுதலை வேண்டும் என்று கேட்கிறீர்கள், எங்கள் மக்களின் பிணங்கள் கூட இந்தச் சாலை வழியாகப் போக முடியாது. முதலில் எங்களுக்குச் சமூக விடுதலை கிடைக்கட்டும்."
-இந்திய விடுதலைக்கு முன் அம்பேத்கர்

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்.

ஜனநாயகம் வீட்டு விளக்கு; சர்வாதிகாரம் காட்டுத்தீ.
-அண்ணா

இராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராகும் முன் அமைச்சராக இருந்த அனுபவமில்லாதவர்கள்.

ஏப்ரல் 6, 1997: இன்று கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் காணாமல் போல 10 ரூபாய்க்காக தன் மகளையே தீ வைத்துக் கொளுத்தி இருக்கின்றன இரண்டு மிருகங்கள். கடைசியில் அந்தப் பத்து ரூபாய் கிடைத்து விட்டதாம்.

பகையாளியை உறவாடிக் கெடு.

மனிதனின் மொத்த ஆயுட்காலம் நூறு வருடமெனக் கருதி, தலா இருபத்தைந்து ஆண்டுகளாக நான்கு கட்டங்களாகப் பிரிக்கப் படுகிறது. பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வனபிரஸ்தம், மற்றும் சந்நியாசம்.
- மனுஸ்மிருதி

1885-இல் அமெரிக்கத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப் பட்டது. வேலை நேரத்தை தினசரி எட்டு மணி நேரமாக்க வேண்டிப் போராட்டம் நடத்தினர். அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதற்கெதிராகத் தீர்ப்பளித்தது. 1886 மே 1-இல் சிக்காகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்படை நான்கு பேரைக் கொன்றது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து மே 4-இல் மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப் பட்டது. முடிவில் ஆயுதப் படைக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் சேதமேற்பட்டது. தொழிலாளர்களின் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டது. அவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டது. 1987 நவம்பர் 11-இல் மூவர் தூக்கிலிடப் பட்டனர். 1890 முதல் மே 1-இல் தொழிலாளர் தினம் கொண்டாடப் படுகிறது.

அழுக்குத் தீரக் குளித்தவனுமில்லை; ஆசை தீர சுகித்தவனுமில்லை.

போலீசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம்?
'அடிதடி' செய்தால் பொறுக்கி; 'தடி அடி' செய்தால் போலீஸ்!

மே 22, 1997: இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாதான் வெற்றி பெறுமென்று ஒரு ஜோதிடர் கூறியிருந்தார். ஆனால் வென்றது - பாகிஸ்தான். இதே ஜோதிடர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - சோனியா என்று கூறியிருக்கிறார். பார்ப்போம்...

மே 26, 1997: இன்று, திண்டிவனத்துக்கும் வந்தவாசிக்குமிடையே உள்ள அருவடைந்தாங்கல் என்ற என்ற கிராமத்தில் ஒரு பயங்கர சம்பவம். பாலாஜி என்றொரு கொடியவனுடைய கனவில் மாரியம்மாள் வந்து, "உன் மனைவியையாவது கடைசிப் பிள்ளையையாவது நரபலி கொடுக்க வேண்டும்" என்று கேட்டதாம். தன்னுடைய கடைசிப் பையன் அன்பரசை கோயிலுக்குத் தூக்கிச் சென்று, "கண்ணை மூடிச் சாமி கும்பிடுடா" என்று கூறிவிட்டு, மகன் கண்ணை மூடியவுடன் அரிவாளால் வெட்டிப் பலி கொடுத்திருக்கிறான்.

ஜூன் 8, 1997: இன்று தஞ்சை பெரிய கோயிலில் நடந்த குடமுழுக்கு விழ - யாக சாலையில் தீப் பிடித்ததில் நூறுக்கும் மேற்பட்டோர் பலி. கும்பகோணம் மகாமகம், பத்ரிநாத், ஹஜ் பயண விபத்து என்று கடவுளைத் தேடித் போவோர் மரணமடையும் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஜூன் 15, 1997: இன்று காலை நாகலாபுரத்தில் இருந்து சிவகாசி கிளம்பினேன். கிளம்பும் முன்பே ஏதோ ஒருவித வேறுபட்ட உணர்வு. பஸ்ஸில் ஏறி அமர்ந்த நிமிடம் முதல் பயங்கர தலைவலி. பஸ்ஸில் பின்புறம் வெடிகுண்டு வெடிக்கப் போவது போல ஓர் உணர்வு. கடைசியில் வண்டி டயர் வெடித்து நின்றது. அப்புறம்தான் நிம்மதி.

ஜூலை 1, 1997: இன்று தமிழகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை கலவரங்களுக்குக் காரணமாயிருந்த - மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் வைக்கப் பட்டிருந்த தலைவர்களுடைய பெயர்களை நீக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சர்தார் பட்டேல் பிறந்த நாளும் இந்திரா காந்தி இறந்த நாளும் ஒன்று. அக்டோபர் 31.

இந்தியா
மூன்று பக்கம் கடலாலும்
நான்கு பக்கம் கடனாலும்
சூழப்பட்ட நாடு.
- யாரோ

குருச்சேவ் இந்தியா வந்திருந்தபோது, பந்தாவாக ஆக்ராவுக்கு அழைத்துச் சென்று, தாஜ்மகாலைக் காட்டினார்கள். பார்த்ததும் அவர் சொன்னார்: "இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு அடிமைகள் உயிரைக் கொடுத்தார்களோ?".

அதிகாரப் பூர்வமான தகவல்படி, இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடி.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தி.மு.க. - அன்றும் இன்றும் (பார்த்ததில் பிடித்தது)

மேல் வரிசையில் உள்ள முதல்வரைத் தவிர்த்து எஞ்சிய நால்வர் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக இந்தப் படத்தைச் சேமிப்பில் வைத்திருந்தேன். அது இப்போதைக்கு முடியுமா என்ற குழப்பம் வந்து விட்டதால், சரி - படத்தையாவது வீணாக்காமல் போட்டு விடுவோம் என்று போட்டு விட்டேன். எந்தப் பத்திரிகையில் வந்ததென்று நினைவில்லை. அனேகமாக தினமணியாக இருக்க வேண்டும். அதில்தான் மதியின் ஓவியங்கள் வரும், அல்லவா? எனவே, நன்றி: மதிக்கும் தினமணிக்கும் - மணியான படத்துக்கு!

சனி, ஆகஸ்ட் 20, 2011

அமெரிக்காவின் அஅஅ...அஅ+... (USAAA To USAA+)

நண்பர் சரவணக்குமாரிடம் இருந்து "உலகமயமாவோமே!" என்று சொல்லி இன்னொரு தலைப்பு. "அமெரிக்காவின் அஅஅ தரம் அஅ+ ஆகக் குறைக்கப்பட்டது பற்றிப் பேசலாமே!" என்றார். ம்ம்ம்... அதை ஏன் விட்டு வைக்க வேண்டும்? வாருங்கள் கடையலாம். இதோ...

எப்போதும்போல், அடிப்படையில் இருந்து ஆரம்பிப்போம். எங்கு களைப்பாகிறோமோ அங்கு நிறுத்துவோம். அதற்கு முன்பு எனக்கும் பொருளியலுக்குமான தொடர்பைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். சின்ன வயதில் எப்போதுமே எனக்கு என்னை விடப் பெரியவர்களோடு இருப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் தெருவில் சதக் அப்துல்லா என்றொரு சீனியர் நண்பர் இருந்தார். என்னை விடப் பல வருடங்கள் மூத்தவர். பல வருடங்கள் என்றால்? தெளிவில்லை. சரியாகச் சொல். எத்தனை வருடங்கள்? சரி. ஐந்து வருடங்கள். நான் ஏழு படித்துக் கொண்டிருந்தபோது அவர் பன்னிரண்டு படித்துக் கொண்டு இருந்தார். மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை பெரும்பாலும் நான் இரண்டாவது ரேங்க்தான். ஆறு வருடமுமே முதலில் வந்தது ஒரே ஆள் இல்லை. வெவ்வேறு ஆட்கள். முதலிடத்துக்கு மட்டும்தான் எப்போதும் போட்டி. இரண்டாவது இடத்துக்கு இல்லாத மாதிரிப் பார்த்துக் கொண்டேன். எனவே, பதினொன்று செல்லும்போது முதல் பிரிவில் (அதாவது, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கொண்ட பிரிவு) இடம் கிடைக்கும் இரண்டாவது ஆளாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், சதக் மூன்றாம் பிரிவில் (வரலாறு, பொருளியல், அரசியலறிவியல் மற்றும் புவியியல் பாடங்கள் கொண்ட பிரிவு) படித்துக் கொண்டிருந்தார். இதே பிரிவை பக்கத்தில் இருந்த சில ஊர்களில் நான்காம் பிரிவு என்றும் சொல்வார்கள். அங்கே கணிதம், பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் கொண்ட பிரிவை மூன்றாம் பிரிவு என்பார்கள். மூன்றாம் பிரிவை வணிகவியல்ப் பிரிவு என்றும் நான்காம் பிரிவை கலைப் பிரிவு என்றும் சொல்வார்கள்.

மிகச் சிறிய வயதில் சதக் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்கள் இரண்டு (ஏழு படிக்கும் பொது எனக்கு மிகச் சிறிய வயது என்று இப்போது சொல்கிறேன் என்றாலும் அப்போது அதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்). முதல் பாடம் - "எப்போதும் மனப்பாடம் செய்யக் கூடக் கூடாது. எதைப் படித்தாலும் புரிந்து படிக்க வேண்டும். புரியாததை விட்டு விட வேண்டும். கருத்து முக்கியமே தவிர மதிப்பெண்கள் அல்ல!". புரிந்து படிப்பது எப்படி என்று அவர் படிக்கும்போது காட்டி எனக்குச் சொல்லியும் கொடுப்பார்.  கல்லூரியில் கடைசித் தேர்வு எழுதிய நாள் வரை இதை நான் மறக்கவே இல்லை. அடுத்த பாடம் - "மனித இனத்துக்கு அறிவியலை விடக் கலை மிகவும் முக்கியம்!". மேல்நிலைப் பள்ளி செல்லும்வரை இதற்காக நான் பல வாதங்கள் செய்திருக்கிறேன். இப்போது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கலைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாம் சரியாகக் கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். கலை என்றால், கலைப்பாடங்கள் - அதாவது, வரலாறு, பொருளியல், அரசியலறிவியல் மற்றும் புவியியல் பற்றிச் சொல்கிறேன். ஆடலும் பாடலும் வரைதலும் பற்றி அல்ல.

என்னுடைய வாதங்களில், "அறிவியல் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும்; ஆனால் கலைதான் நமக்கு பழமையைக் கற்றுக் கொடுக்கும்; அது இல்லாவிட்டால், முன்னேற்றம் கண்ட - ஆனால் பண்புகளற்ற ஒரு இனமாகத்தான் நாம் இருப்போம்!" என்பது போன்ற தத்துவங்கள் எல்லாம் பேசுவேன். இப்போதும் அது சரி என்றுதான் எண்ணுகிறேன். வரலாறு தெரியாத சமூகங்கள் செய்த தப்பையே செய்வதிலேயே நேரத்தை வீணடித்து விடுவார்கள் அல்லவா? எனவே, பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தாலும் (அப்படி வரவில்லை) மூன்றாம் பிரிவில்தான் சேர வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். அந்த நேரத்தில் அது புரட்சிச் சிந்தனை. நல்லவேளையாக, சரியான நேரத்தில் புத்தியைக் கடன் கொடுக்காமல் தப்பினேன். எல்லோரையும் போல ஊரோடு ஒத்து ஊதி விட்டேன். ஒருவேளை, இப்போதிருப்பதைவிட மிகப் பெரிய ஆளாகக் கூட ஆகியிருக்கலாம். ஆனால், பயணம் கொஞ்சம் கடினமானதாகவே இருந்திருக்கும். மேல்நிலையில் முதல் பிரிவில் சேர்ந்தாலும் கலைப் பாடங்கள் மீதான காதல் குறையாமல் இருந்தது. அப்போதும், கலைப்பிரிவு மாணவர்களுடன் அவர்களுடைய பாடங்கள் பற்றி அதிகம் பேசுவேன்.

ஓர் அறிவியல் மாணவன் அதிக பட்சம் என்னவாக முடியும்? விஞ்ஞானி! ஆனால், கலை மாணவன் அதிக பட்சம் என்னவாக முடியும்? நிதி அமைச்சர்! யார் பெரியவர்? நிதி அமைச்சர்! பின்னர்தான் புரிந்தது விஞ்ஞானி ஆனால் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் ஆகலாம் என்று. யார் பெரியவர் - நிதி அமைச்சரா குடியரசுத் தலைவரா? தெரியவில்லை! எனவே, என் மூளையின் எங்கோ ஒரு மூலையில் இந்தியாவின் பிரதமராவதற்கு முன்பு நிதி அமைச்சராவேன் என்றொரு படம் ஓடிக் கொண்டிருந்தது. சிக்கலை மேலும் பெரிதாக்க, நம்ம பகுதிக்காரர் (சிதம்பரம்... அப்போது அவர் மிகவும் நேர்மையான அரசியல்வாதி!) தேவே கவுடா அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆகி இருந்தார் (அப்போது தேவே கவுடா எவ்வளவு நேர்மையானவர் என்று தெரியவில்லை!). எனவே, அவர் ஊருக்கும் எங்கள் ஊருக்குமான தூரத்தையும் அவருக்கும் எனக்கும் நடுவில் நிதி அமைச்சராகப் போகிறவர்களின் எண்ணிக்கையையும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கனவுதான் என்னை வரலாற்றுப் புத்தகங்களின் பின்னாலும் பொருளியல்ப் புத்தகங்களின் பின்னாலும் துரத்திக் கொண்டிருந்தது.

கல்லூரியில் கணிப்பொறியியல் படிக்கும்போது கூட, நண்பர்களிடம் இருந்து பொருளியல்ப் புத்தகம் வாங்கி, படிக்க முக்கிக் கொண்டு இருப்பேன். கவனிக்க - முக்கல் மட்டும்தான்... படித்தல் இல்லை! கடுமையான முக்கல்களுக்குப் பின் எனக்குப் புரிந்ததெல்லாம் இரண்டே வார்த்தைகள்தான் - பேரினப் பொருளியல் மற்றும் நுண்ணினப் பொருளியல். வேறு எதுவும் விளங்க வில்லை. அதுவும், நிதி அமைச்சராக நுண்ணினப் பொருளியல் புரியவேண்டியதில்லை என்றொரு புரிதல் வேறு. பின்னர்தான் உண்மையான இரகசியம் புரிந்தது - 'நிதி அமைச்சராக எதுவுமே புரிய வேண்டியதில்லை. கீழே இருக்கும் அதிகாரிகள் உன்னைப் புரிந்து கொண்டாலே போதும்!' என்று. எனவே, இதுதான் எனக்கும் பொருளியலுக்குமான தொடர்பு. சீ கருமம்... இப்பவே இத்தனை பத்திகளா! வாருங்கள் மேட்டருக்குள் குதிப்போம்...

AAA to AA+? அதென்ன பொருளியலில் ABCD? அதற்குப் பெயர் நாணய நிலைத் தரவரிசை (CREDIT RATING). அப்டின்னா? ஒரு நாடு அல்லது நிறுவனத்தின் நாணயத் தன்மை. அப்டின்னா? வேறொன்றுமில்லை - ஒருவரின் கடனைத் திருப்பிக் கட்டும் ஆற்றல். தனி மனிதர்களுக்கு வித விதமாகக் கடன் அட்டை (CREDIT CARD) கொடுக்கிறார்களே அது போல. டைட்டானியம் அட்டை, பிளாட்டினம் அட்டை, தங்க நிற அட்டை, வெள்ளி நிற அட்டை என்கிறார்களே அப்படி. ஆண்டுக்கு இருபது இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவருக்கு டைட்டானியம் அட்டை. பதினைந்து இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்போருக்கு பிளாட்டினம் அட்டை. பத்து இலட்சத்துக்கு மேல் என்றால் தங்க நிற அட்டை. அதற்கும் கீழ் உள்ளோருக்கு வெள்ளி நிற அட்டை. இதெல்லாம் நமக்கு வங்கிகள் வைத்திருக்கும் தரவரிசை. அது போலவே நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரவரிசை போடச் சில முகமையகங்கள் (AGENCIES) உள்ளன. மூடி'ஸ் (MOODY'S), ஸ்டேண்டர்ட் & பூவர் (S&P), மற்றும் ஃபிட்ச் (FITCH) ஆகியவை அவற்றுள் சில முக்கியமான முகமையகங்கள். AAA, AA+, AA, AA-, A+, A, A- வில் ஆரம்பித்து D வரை நீள்கிறது இந்தத் தர வரிசை. இங்கே '-' என்பது எதிர்மறை என்றில்லை. அந்த எழுத்துக்குழு வரிசையில் அவற்றுக்குக் குறைவான தரம். அவ்வளவே. எனவே, AA- என்பது A+ வை விட மேல்தான். AAA எல்லோருக்கும் மேலானவர். D என்பவர் டிமிக்கிப் பார்ட்டி (DEFAULTER).  B மற்றும் C வரிசை கூட அவ்வளவு நல்லவர்கள் இல்லை. இந்த எழுத்துக் குழுக்களின் சேர்ப்பு முறை மட்டும் ஒவ்வொரு முகமையகத்துக்கும் சிற்சிறிது மாறும்.

உலகப் பொருளாதாரம் கண்ட எல்லாச் சரிவுகளையும் மீறி, இந்தத் தர வரிசை போட ஆரம்பித்த நாளில் இருந்து அமெரிக்கா எப்போதுமே AAA வாகவே இருந்திருக்கிறது. மேலே சொன்ன மூவரில் S&P இப்போது அமெரிக்காவை AA+ க்குப் பிடித்துத் தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இப்படியே போனால் பிற்காலத்தில் AA ஆனாலும் ஆகலாம் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறது. மூடி'ஸ் மற்றும் ஃபிட்ச் இருவரும் அந்த வேலையை இன்னும் செய்ய வில்லை. மூடி'ஸ் இன்னமும் அமெரிக்காவைப் பெரிதாகவே பேசுகிறது. ஃபிட்ச் என்கிறவர்கள், "நாங்கள் முழுதாக எங்கள் ஆய்வை முடிக்கவில்லை!" என்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால் அவர்களும் கீழே பிடித்துத் தள்ளலாம் என்பதே. இந்தத் தர வரிசையைக் கொடுத்தபோது, S&P அமெரிக்காவைக் கொஞ்சம் திட்டவும் செய்திருக்கிறது. எப்படி? "உன்னிடம் நிலைப்புத் தன்மை இல்லை, செயலுறுதி இல்லை, உன்னைக் கணிக்கவும் முடியவில்லை!" என்று. நம்ம பேச்சில் சொன்னால், அதை எப்படிச் சொல்லலாம்? "நண்பர்களே... உறவினர்களே... சுற்றத்தாரே... இந்த ஆளை இது வரை நம்பியது போல் நம்பாதீர்கள். இவனிடம் அதிகமாகப் பணத்தைக் கொடுக்காதீர்கள். திரும்ப வாங்க முடியாது. அவர்களிடம் எதுவும் வாங்கினால் சொன்ன விலைக்கே வாங்கி விடாதீர்கள். அவர்களுடைய மதிப்பு அது அல்ல. பாதி விலைக்குக் கேட்டாலும் வழிக்கு வருவார்கள். விபரமாக இருந்து கொள்ளுங்கள்!". அத்தோடு நிறுத்தாமல், கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இதைச் சரி செய்யவும் இவர்களிடம் சரியான திட்டங்கள் இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.

சரி. இது ஏன் இப்படி ஆனது? ஏனென்றால், ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம்மைப் போன்றோருக்கு இது புதிதில்லை. ஆனால் அவர்களுக்கு? கூடவே கூடாது. அவர்கள் உலகப் பணக்காரர்கள். உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்கள்தாம் உலகின் தலைசிறந்த வல்லரசு. அப்புறம் ஏன் ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதி நிலை அறிக்கை? அவர்கள் சக்திக்கு மீறிச் செலவழித்து விட்டார்கள். செலவும் செய்து அழித்தும் விட்டார்கள். எங்கு போய்ச் செலவழித்தார்கள்? போர்களில், ஆயுதங்கள் தயாரிப்பதில், மேலும் பல வேண்டாத வேலைகளில்! அவர்களுடைய போர்கள் வேண்டாத வேலைகளா? தவிர்த்திருக்கவே முடியாதவையா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சரியாகத் தெரியவில்லை. ஆனால், என் இரண்டு செண்ட் அறிவு சொல்கிறது - இராக் போரைத் தவிர்த்திருக்க முடியும் என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்? உடனடியாக மனதுக்கு வருவது இன்னொரு பொருளியல்ச் சரிவு. பொருளியல்ப் பெருவளர்ச்சிகளும் சரிவுகளும் வளர்பிறை தேய்பிறை போல வர ஆரம்பித்து விட்டன இப்போது. ஆனாலும் நிறையப் பேருக்கு சேமிப்பின் மதிப்பு தெரியவில்லை. வளர்ச்சியில் கிளர்ச்சி செய்கிறார்கள். சரிவில் சங்கூதுகிறார்கள். இப்போதைய தேவை - சிந்தனையிலும் செயலிலும் பொருளியல்ப் பழமைவாதம். பொறுமை காக்க வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். ஒன்றுக்குமாகாத வெற்றுத் தாளைக் கூட வேண்டாததா என்று இரண்டு முறை கேட்டுவிட்டுப் போட வேண்டும். பீதி கூடக் கூட இங்கு முதலீடு செய்திருக்கும் மற்ற நாட்டுக் காரர்கள் எல்லோரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலை தப்பினால் போதும் என்று ஓடப் பார்ப்பார்கள். அவர்களிடம் உட்கார்ந்து சரிக்கட்டுவதிலும் சமாதானப் படுத்துவதிலும் ஏகப்பட்ட நேரம் செலவிட வேண்டும்.

அவர்களுடைய சொந்த மக்களுக்கு என்னவாகும்? எதற்காக இருந்தாலும் அவர்கள் கூடுதல் வட்டி கட்ட வேண்டி வரும். கூடுதல் வரி கூடக் கட்ட வேண்டி வரும். சொத்துகளின் விலை அனைத்தும் டொமீர் எனக் கீழே விழும். எப்படி? டொமீர் என! வாங்கிய விலைக்கு வீட்டை விற்க முடியாது. பல மடங்கு குறைவாகும். அதற்கும் வாங்க ஆள் வர மாட்டார்கள். மற்ற நாட்டுப் பண மதிப்போடு பார்த்தால் இவர்களின் டாலர் மதிப்பு குறையும். எனவே, அங்கே உட்கார்ந்து குளு குளு குளிர் பானம் அருந்திக் கொண்டிருக்கும் நம் ஒன்னு விட்ட அண்ணன், தம்பி, மச்சான்மார் சிலருக்கும் அடியில் கொஞ்சம் சுடும். ஆனால், எல்லாத்துக்கும் முடிவாக, அவர்கள் பொருளியலில் பல நல்ல திருத்தங்கள் ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள ஆன்றோர்கள். அந்த முடிவு எப்போது? அது எனக்குத் தெரியவில்லை. அந்த ஆன்றோருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். திவாலாகி விட்டோம் என்று எந்த வங்கியும் அரசாங்கத்திடம் உதவி கேட்டுப் போக முடியாது. ஏன்? அரசாங்கம் கடுப்பாகி விடும். "அடப் பரதேசிப் பயபிள்ள... நானே கால் ரெண்டையும் முதலை வாயில குடுத்துட்டு காப்பாத்த ஆளில்லாம கத்திக்கிட்டு - முக்கிக்கிட்டு இருக்கேன். இதுல நீ வேறயா?" என்று கையில் கிடைத்ததைக் கொண்டு மூஞ்சியில் வீசும்.

இதற்கு ஒபாமா எப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா? "எந்த ஏஜென்சி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாம் ஐக்கிய அமெரிக்க   மாநிலங்கள். நாம் எப்போதுமே AAA தான்!". ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சுருக்கம் என்னவென்று மறந்து விட்டது போல அவருக்கு. ஒபாமா சார், நீங்க எப்பவுமே USA, ஆனா AAA இல்ல. இது போன்ற எவ்வளவு பேச்சுகளைக் கேட்டு விட்டோம் நம்ம ஊரில்? இதற்கு மேலெல்லாம் பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே. இது அவர் இரண்டாம் முறை அதிபராகத் தடையாக இருக்குமா? பெரும்பாலும் அப்படித்தான்! அவர் வந்தபோது எவ்வளவு நம்பிக்கை. நோபல் பரிசு கூடக் கொடுத்தார்கள். எல்லாமே வண்ணமயமாக இருந்தது. இன்னைக்கு நிலைமை முழுக்க முழுக்க இருட்டாக ஆனது போல் இருக்கிறது. இப்படியொரு துயர முடிவு நிகழ்ந்திருக்கக் கூடாது பாவம். இது எல்லாமே அவருடைய பிரச்சனையா? இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்தான் பொறுப்பு. அவர்களுடைய மன்மோகன் சிங் ஒருவர் (அதாவது, நல்ல பொருளியலாளர் என்று சொல்ல வந்தேன்!) தலைமை ஏற்க வேண்டும். ஆனால், அவர்களுக்கும் நம்ம பிரச்சனைகள் வந்து சேர்ந்து விடக் கூடாது. :)

இதில் இருந்து மற்ற நாடுகளுக்கு என்ன பாடம் இருக்கிறது? நாடுகளுக்கு மட்டுமல்ல... தனி மனிதர்களுக்கும் ஒரு சூப்பர்ப் பாடம் இருக்கிறது. கட்ட முடியாத அளவு கடன் வாங்காதே. வாழப் புது வீடு, போய்வரப் புதுக் கார், பாதுகாப்புக்கு ஆயுதங்கள், வசதிக்கு வார இறுதி ஷாப்பிங், உல்லாசக் களியாட்டங்கள், பொழுதுபோக்குக்குக் கடன்களை வாங்கிக் குவித்தல்... இவை எல்லாமே கொஞ்ச காலம் பொறுக்கலாம். முடிந்ததை விடக் கூடுதலாகச் செலவு செய்து தொலைத்தால், நாணயமற்றவன் என்றொரு பெயர் - அதுவும் அவப்பெயர் வாங்கி மூலையில் உட்கார வேண்டி வரும். அப்புறம் ஒருத்தரும் உதவ வர மாட்டார்கள். வாழ்ந்து கெட்டவனைப் பார்த்து என்ன பேசுவார்கள்? பாவம் என்பதோடு பாவி என்றும் சொல்வார்கள். வேண்டியதெல்லாம் தேவை என்று சொல்லக் கூடாது. வேண்டியது வேறு. தேவை வேறு. பையிலும் கடன் அட்டையிலும் இருந்து ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் போட்டுச் செலவழிக்காவிட்டால், பையும் இராது; அட்டையும் இராது.

இவை எல்லாமே மிகைப் படுத்தப் பட்ட வரிகளா? இருக்கலாம். முறையான சட்டதிட்டங்களும் சிக்கன நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டால், திரும்பவும் பழைய இடத்தைப் பிடிக்கலாம். ஆனால், அவர்களுடைய அறிவாளர்களே சொல்கிறார்கள் - "முடியும், ஆனா முடியாது!" என்று. அதாவது, இப்போதைக்கு முடியாது. காலம் ஆகும். சிலர் சொல்கிறார்கள் - "AAA கிடைக்க வேண்டுமானால் காலம் ஆகலாம். ஆனால், பீதியையும் உடனடிப் பிரச்சனைகளையும் ஓரளவு பரவாயில்லாமல் சமாளிக்கலாம்!" என்று. எல்லாத்துக்கும் மேல் இது ஒரு மானப் பிரச்சனை என்பதுதான் முக்கியம். மற்றபடி, இன்னும் இவர்களுக்குக் கீழ் நூற்றுக்கும் மேலான நாடுகள் இருக்கின்றன. அதை விட முக்கியம் - அவர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மிடம் கூட சில டிப்ஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நாம் எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள இடுகையின் முடிவுக்குச் செல்லுங்கள். :)

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு? அவர்கள் மேல் நாம் ரெம்பவும் குதிரை ஏறிக் கொண்டிருப்பதால் நமக்கும் கொஞ்சம் பிரச்சனைதான் என்கிறார்கள் சிலர். அதுவும் உண்மைதான். சமீப காலங்களில் நாம் கொஞ்சம் ஓவராகவே அவர்களோடு கொஞ்சிக் குலாவுகின்றோம். மற்ற நாடுகளைப் போலல்லாமல், எவருடைய பொருளியல்ச் சரிவும் நம்மை எதுவும் செய்யாத அளவுக்கு நம் பொருளியல் பலமானது என்றும் சிலர் சொல்கிறார்கள். வழக்கம் போல், குழப்பத்தில்தான் மாட்டிக் கொள்கிறேன் இதிலும்! நமக்குப் புரிகிற மொழியில் விபரமான ஆள் யாராவது கருத்துரையில் இதை விளக்கினால் கோடி நன்றி கொடுப்பேன் - அரசியல்ப் பாரபட்சம் ஏதும் இல்லாமல் பேச வேண்டும். ஆக, இத்தோடு முடிகிறது கதை.

கூடுதல் விபரமாக, இன்னமும் AAA ஆக இருக்கிற ஆட்கள் யாரென்று பார்ப்போமா? யோக்கியர்கள்... மன்னிக்க... நாணயகாரர்கள் (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா?!)... அதில் 16 பேர் இருக்கிறார்கள். ஐஸ்ல் ஆஃப் மேன் (இதற்கு முன் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை!) எனும் சின்னப் பையன் உட்பட. மீதி 15? ஃபிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, UK, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஃபின்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாண்ட்ஸ், மற்றும் நியூசிலாந்து. வெவ்வேறு பட்டியல்கள் வெவ்வேறு பெயர்கள் கொண்டிருக்கின்றன. எனவே, உறுதியாகத் தெரியவில்லை! இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீனா AA-.

சரி, நம்ம எங்க இருக்கோம்? இந்தியா BBB-. நல்ல வேளப்பா! :)

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

ஆரிய-திராவிடம்: போரா? அக்கப்போரா??


சக ஆங்கிலப் பதிவர் ஒருவர் ஆரிய-திராவிடப் பிரச்சனையில் என்னுடைய கருத்துகள் பற்றிக் கேட்டிருந்தார். கடந்த சில நாட்களில் அவர் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கோர் இடுகையின் பெயரைச் சொல்லிப் படிக்கச் சொன்னேன். உன் கேள்விக்கான பதில் அதில் இருக்கிறதென்று. எல்லாக் கேள்விகளுக்கும் கிடைக்கும் ஒரே மாதிரியான இந்த இயந்திரத்தனமான பதிலில் கடுப்பாகி விட்டார் போல்த்தேரிகிறது. இம்முறை வித்தியாசமாக நான் இதுவரை பதிவுலகில் வாய் திறந்து பேசியிராத புதியதொரு விஷயம் பற்றிக் கேட்டார். அத்தகைய கேள்விகளுக்கும் என்னிடம் இயந்திரத்தனமான பதில் ஒன்று இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாகப்பட்டது - "ம்ம்ம்... நீண்ட நாட்களாகவே இதைப் பற்றி ஓர் இடுகை எழுதலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன்!" என்பேன் அல்லது "ம்ம்ம்... அது ஏற்கனவே என் லிஸ்ட்டில் இருக்கிறது!" என்பேன். எனவே, அவருக்கும் அந்த இரண்டில் ஒன்றைத்தான் பதிலாகக் கொடுத்தேன். இத்தோடு என்னிடம் கேள்வி கேட்பதையே நிறுத்தி விடுவார் என நினைக்கிறேன். :)

சரி. மேட்டருக்குள் போவோம். ஆரிய-திராவிடப் பிரச்சனை பற்றி என்ன நினைக்கிறேன்? என்னைப் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு ஏற்கனவே இது தெரிந்திருக்கும். எல்லாப் பிரச்சனையிலும் எனக்கென்று ஒரு கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. கருத்துருவாக்கம் இன்னும் கருத்தரித்துக் கொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் பல நிலைப்பாடுகள் உள்ளன. அதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். அடித்துக் கொள்ளும் இரு சாராரில் ஒருவரைக் கூமுட்டைகள் என்று அழைக்காத காரணத்தால் இரு சாராராலுமே நான் கூமுட்டை என்று அழைக்கப் படுவேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இன்னும் நான் கற்றுக்குட்டியாகவே இருப்பதாகக் கருதுகிறேன். அதனால் இருவரில் யார் புத்திசாலி என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வளவுதான். ஆரிய-திராவிடப் பிரச்சனையிலும் எனக்கு அழுத்தமான நிலைப்பாடுகள் இல்லை. அப்படியே தலைகீழான இருவேறு கருத்துக்களை இரு சாரார், அதே அளவு இரைச்சலோடு வாதிடும்போது, இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒரு பாதையைப் பிடித்துப் போவது அல்லது அந்த இடத்திலேயே நின்று விடுவது கொஞ்சம் புத்திசாலித் தனமான முடிவாகப் படுகிறது. அதில்தான் வேலை கெடாமல் - நேரம் வீணாகாமல் இருக்கிறது. இல்லையா?

எந்தப் பிரச்சனையிலுமே ஒருவரின் பின்னணியை வைத்து அவருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம். எது புத்திசாலித்தனமாக இருக்கிறது என்பதை விட எது நமக்கு நல்லதாக இருக்கும் என்று கணக்குப் போட்டுத்தான் நம் நிலைப்பாடுகளை முடிவு செய்கிறோம். தொலைநோக்கில் நமக்கும் நம் சமூகத்துக்கும் எது நல்லதாக இருக்கும் என்று மின்னல் வேகத்தில் கணக்குப் போட்டுச் சொல்லும் மூளையின் சில பகுதிகள்தாம் நாம் எந்தப் பக்கம் என்பதை முடிவு செய்கின்றன. நம்முடைய கருத்துக்களை முடிவு செய்யும் இன்னொரு காரணி - நம் சுற்றுப் புறம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும் என்கிற மாதிரியான சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எல்லோருமே இப்படித்தான் இதைப் பார்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, "நீ இது. இந்த மண் காலம் காலமாக உனக்குச் சொந்தம்!" என்று ஒரு கருத்து வைக்கப் பட்டால் கேட்பவர் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். அதையே, "நீ இது. நீ இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு பிழைக்க வந்தவன். வந்தேறி!" என்றால் அதைப் பொய்ப்பிப்பதற்கான வழிகளைத்தான் அவர் தேடுவார். ஏன்? ஏனென்றால், அது அவர்களுடைய அடிப்படை உரிமையிலேயே கை வைப்பதாக இருக்கிறது. எனவே, அது போன்ற உள் நோக்கங்களோடு வைக்கப்படும் கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு கருத்து அவ்வளவு உண்மையானால் எதிர்த் தரப்பில் இருப்போரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த மாதிரியான ஒரு கருத்தொற்றுமை இந்தப் பிரச்சனையில் இல்லை. இதுவே இந்தப் பிரச்சனையில் எனக்கென்று ஒரு நிலைப்பாடு கொள்தல் மேலும் சிரமமானதற்குக் காரணம்.

எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தனிமைப்படுத்த முயற்சிக்கும் அல்லது வந்தேறி என்று பட்டமளிக்க முயற்சிக்கும் எந்தக் கொள்கையும் என்னை ஈர்ப்பதில்லை. இன, மொழி, மத, சாதி, பிறப்பிட ரீதியிலான இரண்டாம் பட்ச நடத்துதலை எந்த சமூகத்தின் மீதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. திராவிடர் ஆரியரை வந்தேறிகள் என்பதும் சரி, இந்துக்கள் முகமதியரை வந்தேறிகள் என்பதும் சரி, தமிழகத்தில் உள்ள தமிழர்கள் இங்குள்ள தெலுங்கர்களை வந்தேறிகள் என்பதும் சரி, கர்நாடகத்துக் கன்னடர்கள் தமிழர்களை வந்தேறிகள் என்பதும் சரி... எதையுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு போய் விட்ட ஒரே காரணத்துக்காக ஒருவர் மனிதனாக நடத்தப் படக் கூடாது என்றில்லை. அவர்களும் சக மனிதனாகவே நடத்தப் பட வேண்டும்; தேவையில்லாமல் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பிறப்பிடம் அல்லது பூர்வீகம் பற்றி நினைவு படுத்திக் கொண்டே இருக்கக் கூடாது. அதே வேளையில், வந்தேறியவர்கள் காலம் காலமாக அந்த மண்ணில் இருந்து வந்த அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஏதாவது செய்தால் அவை பிரச்சனையாவது இயற்கையே.

எனவே, அதில் என் கருத்து என்ன என்பதற்கு முன்பாக, முதலில் பிரச்சனை என்னவென்று பார்ப்போம். பிரச்சனை என்ன? ஐயோ... அது பற்றி யோசித்தாலே மண்டை சுற்றுகிறது. அது பற்றி ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து சொல்கிறார். தமிழனாகப் பிறந்து விட்டதால், பிறந்தது முதல் இன்று வரை எத்தனையோ விதமான கதைகளைக் கேட்டு விட்டேன் - படித்து விட்டேன். அவற்றுள் சில கதைகள் நீங்கள் கேள்வியே பட்டிருக்க மாட்டீர்கள். இந்த இடுகையில், என்னுடைய கருத்தைச் சொல்வதை விட, இந்தப் பிரச்சனையில் எத்தனை விதமான கருத்துகள் இருக்கின்றனவோ அத்தனை விதமான கருத்துகளையும் உங்கள் முன் கொண்டு வந்து போட முயலலாம் என்றெண்ணுகிறேன். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், இந்தப் பிரச்சனையில் நான் குழம்பித்தான் கிடக்கிறேன். அதற்காகப் பெரிதும் வருந்தவும் இல்லை. எனக்கென்று ஒரு கருத்தும் இல்லை - கொள்கையும் இல்லை. ஆனால், அதுவே நாம் இது பற்றிப் பேசவே கூடாது என்று தடையாக இருக்க வேண்டியதில்லை.

நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது போல, எழுதுபவன் (நல்லாப் பாத்துக்குங்க - எழுத்தாளன் என்றோ எழுத்தை ஆள்பவன் என்றோவெல்லாம் சொல்லவில்லை. எழுதுபவன் என்று மட்டுமே சொல்கிறேன். இதை வைத்து யாரும் சண்டைக்கு வர வேண்டாம்!) எப்போதும் வாசிப்போரின் குழப்பங்களைத் தீர்ப்பவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. தன் எழுத்தைப் படித்து விட்டு ஒருவர் வாசிக்க ஆரம்பித்த போது இருந்ததை விட இன்னும் கொஞ்சம் குழம்பிய நிலைக்குப் போவார் என்றால் அதற்காகவும் எழுதுபவன் திருப்திப் பட்டுக் கொள்ளலாம். ஏனென்றால், அந்த இடத்தில்தான் வாசகனின் கூடுதல்த் தேடலுக்கு விதை போடப் படுகிறது. ஒத்துக் கொள்கிறீர்களா? அல்லது, குழப்பி விட்டேனா? :)

கருத்து 1 என்ன சொல்கிறதென்றால்... அது மிகவும் எளிதான - குழப்பம் இல்லாத கருத்து. தென்னிந்தியர் அனைவரும் திராவிடர்; வட இந்தியர் அனைவரும் ஆரியர்; எங்கோ இருந்து வந்த ஆரியர்கள் திராவிடர்களைத் தெற்கு நோக்கி அடித்து விரட்டினார்கள். இந்தக் கருத்துப் படி, திராவிட மொழி பேசுவோர் அனைவரும் திராவிடர்; மற்றோர் அனைவரும் ஆரியர். திராவிட மொழிகள் என்பவை யாவை? தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவையும் இன்னும் சில பெயர் தெரியாத சிறு சிறு மொழிகளும்! அதில் தென்னிந்திய பிராமணர்களும் அடக்கம். ஏனென்றால், அவர்களும் இம்மொழிகளில் ஒன்றைத்தானே வீட்டில் பேசுகிறார்கள். வடமொழி அல்லவே. ஒரு விதத்தில் இதிலும் அர்த்தம் இருக்கிறது. காலம் காலமாகவே ஒரு இனத்தை அடையாளம் காண மொழி ஒரு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. மனிதன் தோன்றிய காலம் முதல் என்று சொல்ல முடியாது எனினும் மொழி தோன்றிய நாள் முதல் என்று சொல்லலாம். இப்போது அவர்கள் வீட்டில் தமிழோ கன்னடமோ பேசுகிறார்கள் என்றால் சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய மூதாதையர் வேறொரு மொழி பேசுவோராக இருந்திருக்க முடியாது. சரிதானே! ஆனால், இந்தக் கருத்தைச் சொல்லி அடித்துக் கொள்வோர் ஊருக்குள் நிறையப் பேர் இல்லை.

கருத்து 2 தான் நம்மையெல்லாம் கடந்த நாற்பதைம்பது வருடங்களாகப் போட்டு வாட்டி எடுப்பது. அது சொல்வது என்னவென்றால், இன்று இந்தியா என்று அழைக்கப் படும் நிலப்பரப்பு முழுமையுமே திராவிடர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது; இமயம் முதல் குமரி வரை திராவிடரே நிறைந்திருந்தனர்; சிந்து சமவெளி நாகரிகம் கூட திராவிடருடையதே; மத்திய ஆசியாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஆரியர், திராவிடர் அனைவரையும் அடித்துத் தெற்கே அனுப்பி வைத்து விட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்துக் கொண்டார்கள். திராவிடர்கள் கிழக்குப் பக்கமும் அடித்து விரட்டப் பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். இந்தக் கருத்தின் படி, பிராமணர் அனைவரும் ஆரியர்; மற்றவர் அனைவரும் திராவிடர். அப்படியானால், தென்னிந்திய பிராமணர் ஒருவர் ஆரியர் என்றும் வட இந்திய மற்றவர் ஒருவர் திராவிடர் என்றும் ஆகுமா? ஆம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், தன்னை திராவிடராக அடையாளம் காட்டிக் கொள்ளும் வட இந்திய மற்றவர் ஒருவரை இன்று வரை நான் சந்திக்க வில்லை. தென்னிந்திய மற்றவர்கள் மட்டுமே தம்மைப் பெருமையோடு திராவிடர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்திய மற்றவர்கள் மட்டுமே இது பற்றி அதிகம் பேசவும் செய்கிறார்கள்.

இதெல்லாம் நடந்து நீண்ட காலம் ஆகி விட்டதால் - ஏகப்பட்ட கலப்புகளும் நடந்து விட்டதால், யார் ஆரியர் யார் திராவிடர் என்றெல்லாம் இப்போது தெளிவாகப் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். அதற்கொருவர் விளக்கம் கொடுக்கிறார் - "நீ எந்த ஊர்க்காரன் என்பதையெல்லாம் விட்டு விடு. சிவப்பாக இருந்தால் நீ ஆரியன்; கறுப்பாக இருந்தால் நீ திராவிடன்!". இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அதிலும் ஓர் அர்த்தம் இருப்பது போல்த் தெரிகிறது. பிராமணர்கள் ஆரியர் - மற்றவர்கள் திராவிடர் என்கிற கருத்துப் படி பார்த்தால் - பிற்காலத்தில் ஏகப் பட்ட கலப்புகள் நிகழ்ந்து விட்டன என்பதை ஏற்றுக் கொண்டு பார்த்தால், இது சரியென்று தான் படுகிறது. சராசரியாக பிராமணர்கள் மற்றவர்களை விட நிறம் கூடுதலாகத்தானே இருக்கிறார்கள். ஆனால், ஒரு பிராமணக் குடும்பம் பல தலைமுறைகளாகக் காட்டு வேலை பார்த்தால் ஓரிரு தலைமுறைகளுக்கு அடுத்து அவர்களுடைய சந்ததியர் கறுப்பாகி விடுவார்கள். அதுபோலவே, மற்றவர் குடும்பம் ஒன்று பல தலைமுறைகளாக வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்கும் வேலை பார்த்தால் ஓரிரு தலைமுறைகளுக்குப் பின் அவர்கள் சந்ததியர் நிறம் கூடி விடுவார்கள். ஆனால், இவையெல்லாம் விதிவிலக்குகள். பொதுவாகப் பார்த்தால், ஒரு சராசரி பிராமணர் சராசரி மற்றவரை விடக் கூடுதல் நிறம் கொண்டிருக்கிறார். எனவே, இதை நாம் அரை மனதோடாவது ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தக் கருத்து சொல்லும் இன்னொரு கருத்து - திராவிடர்கள் ஆரியர்கள் போலத் திறமை படைத்தவர்களாக இருக்க வில்லை. அதனால்தான் வந்தவர்களிடம் நாட்டை இழந்து விட்டு அவர்களாலேயே ஆளப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆரியர் வருகைக்கு முன் இம்மண்ணில் மதம் என்று ஒன்றே இருக்க வில்லை; அப்போது பேசப்பட்ட மொழியின் பெயர் திராவிடம்; அவர்கள்தாம் இந்து மதத்தையும் வடமொழியையும் கொண்டு வந்தார்கள்; அவர்கள்தாம் காலா காலத்துக்கும் அவர்களுடைய மேன்மையைத் தக்க வைத்துக் கொள்ள சாதி என்ற அமைப்பை அறிமுகப் படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் கருத்தை முன்வைத்து வாதிடுவோருக்கு என்னுடைய ஒரே கேள்வி - அவர்கள் அவ்வளவு பலம் பொருந்தியவர்கள் என்றால், அவர்களுடைய மொழியையும் திராவிடர் மீது திணித்திருக்கலாமே? பின் ஏன் திராவிடரின் மொழியை அவர்கள் தம்முடையதாக ஏற்றுக் கொண்டார்கள்? பொதுவாக, இடத்தை மாற்றுவோர் நிறைய உண்டு; மதத்தை மாற்றிக் கொள்வோர் நிறைய உண்டு; தாய்மொழியை மாற்றிக் கொண்டோர் நிறைய இல்லை. எனவே, பிராமணர்கள் தம் தாய்மொழியை வட மொழியில் இருந்து தமிழுக்கோ கன்னடத்துக்கோ மற்றெந்த திராவிட மொழிக்கோ மாற்றியிருக்க முடியாது என்றும் கொள்ளலாம் அல்லவா?

அதே வேளையில், இங்கும் விதிவிலக்குகள் இருப்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். படையெடுத்து வருவோர் எல்லோருமே மொழி தவிர்த்து எல்லாத்தையுமே தாக்குவார்கள். கெய்ரோவில் இருந்து வந்ததாகச் சொல்லும் முகமதியர்கள் நம்ம ஊரில் தமிழ்தான் பேசுகிறார்கள். போர்ச்சுகீசில் இருந்து வந்ததாகச் சொல்லும் கிறித்தவர்கள் கேரளத்தில் மலையாளம்தான் பேசுகிறார்கள். அப்படியானால், வேறொரு மொழியைப் பேசிக்கொண்டு வந்த பிராமணர்கள் தம் தாய்மொழியை உள்ளூர் மொழிக்கு மாற்றிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது எனலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நாம் நம்புவதற்கு இடம் கொடுக்கும் இன்னொரு விஷயம் - விபரம் குறைந்தவர்களைத் தம் மொழியைக் கற்கச் சொல்வதை விடுத்து விபரமானவர்கள்தாம் எளிய மக்களின் மொழியை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். அதன்படி பார்த்தால் ஆரியர்கள் திராவிட மொழிகளைக் கற்றுக் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

இந்தக் கருத்துக்கான இன்னோர் ஆதரவு வாதம் - ஐரோப்பிய மொழிகளில் நிறைய வடமொழித் தாக்கம் இருக்கிறது என்பது. அப்படியானால்? வடமொழி மத்திய ஆசியாவில் இருந்து வந்தது. சரி. மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தது. பின் ஏன் இந்தியாவில் மட்டும் அது உயிரோடிருக்கிறது; ஐரோப்பாவிலோ மத்திய ஆசியாவிலோ அடையாளமே இல்லாமல் அழிந்து போயிருக்கிறது? அப்படியானால், ஆரியர்கள் எல்லோருமே தம் இருப்பிடங்களைக் காலி செய்து கொண்டு மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து விட்டார்களா? இது எளிதில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. ஆனால், ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ கதைகளை உள்வாங்கிக் கொண்டிருப்பதுதான் வரலாறு என்பதையும் நான் அறிவேன். எனவே, என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் - என்னால் இதில் ஒரு தீர்ப்புச் சொல்ல முடியாது என்பதே.

இன்னொரு தொடர்புடைய கேள்வி - ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா வந்தார்கள் என்றால், அவர்களுடைய பண்பாடு ஏன் இந்தியாவில் மட்டும் உயிரோடிருக்கிறது; மத்திய ஆசியாவிலோ ஐரோப்பாவிலோ இல்லவே இல்லை? அதற்கும் பொருள் எல்லா ஆரியருமே காலி செய்து ஓடி வந்தார்கள் என்பதா? யூதர்களுக்கு நிகழ்ந்தது போல - இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்தது போல (இரண்டும் வெவ்வேறு என்பதையும் நான் அறிவேன்!), இன ஒழிப்பு நிகழ்ந்திருந்தால் அதுவும் சாத்தியம்தான். ஆனால், அப்படியோர் இன ஒழிப்பு ஆரியருக்கு எதிராக நடந்ததாக நான் ஏதும் கேள்விப் பட்டதில்லை. அதிலும் ஒரு கேள்வி இருக்கிறது - வந்தேறிய நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு ஆற்றல் மிக்கவர்கள், அதற்கு முன் இருந்த தம் சொந்த நாட்டில் மற்றவர்களை எப்படிக் கையாள முடியாமல் போயிருப்பார்கள்? ஆக, இதில் ஏதோ ஒரு புரியாத குளறுபடி இருக்கிறது.

கருத்து 3 சொல்வது என்ன தெரியுமா? ஆரம்பத்தில் இப்படியொரு பிரச்சனையே இருக்க வில்லை; பிரித்தாளும் சூழ்ச்சியைப் பெரிதளவில் நடைமுறைப் படுத்தி வெற்றி கண்ட வெள்ளைக்காரன்தான் இதையும் அறிமுகப் படுத்தியது. அதுவும் சரியாகத்தான் படுகிறது. அவர்களும் அதைப் பல விதங்களில் செய்து பார்த்தார்கள். இந்து-முஸ்லிம் பிரச்சனையையும் அவர்கள்தாம் பெரிதாக்கி விட்டுப் போனார்கள். கொடுமை என்னவென்றால், இனத்தைச் சொல்லி எம்மைப் பிரித்ததாக வெள்ளையர் மீது கோபப்படும் அதே ஆட்கள் மதப் பிரச்சனையில் மட்டும் வெள்ளையர் மீது கோபப்படாமல் பிரச்சனையை மேலும் ஊதிப் பெரிதாக்கவே பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் வந்தேறிகள் என்று நிரூபிக்கத் துடிக்கிறார்கள். திராவிடக் கோட்பாடு கொண்ட சிலர் இப்படியும் சொல்கிறார்கள் - ஆரிய-திராவிடப் பிரச்சனை நினைவுக்கு வந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்காகவே ஆரியர்கள் எப்போதும் இந்து-முஸ்லிம் பிரச்சனையைப் பெரிதாக்குகிறார்கள். இதிலும் அர்த்தம் இருப்பது போல்த்தேரிகிறது.

எங்கோ இருந்து வந்த வெள்ளையன் கொளுத்திப் போட முடிந்ததென்றால் ஏற்கனேவே இங்கு ஏதோ புகைந்து கொண்டு இருந்ததாகத்தானே பொருள்? எந்த இரு குழுக்களாயினும் சரி. ஒருவரில் இருந்து ஏதோ ஒன்று மற்றவரைப் பிரித்துக் காட்டியிருக்கிறது. பண்பாடோ... நம்பிக்கையோ... வேறு ஏதோ. அப்படியானால், அவர்கள் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் அல்லவா? உறுதியாகச் சொல்ல முடியாதுதான் என்றாலும்!

எடுத்துக்காட்டாக, ஆரியர் என்றழைக்கப் படுவோர் அனைவரும் சைவம் சாப்பிடுவோர்; ஆனால், திராவிடரில் பெரும்பாலானோர் அசைவர்கள். அப்படியானால், அவர்கள் வெவ்வேறு பகுதியினராக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், திராவிடரிலும் சைவ இனங்கள் இருக்கின்றனவே. அவர்கள் இதைத் தவறேன்றல்லவா நிரூபிக்கிறார்கள்! அவர்களை யாரும் ஆரியர் என்பதில்லையே. எனவே, இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், ஆரியருக்கும் மத்திய ஆசியருக்கும் இருப்பதை விட ஆரியருக்கும் திராவிடருக்கும் தான் அதிக ஒற்றுமைகள் இருக்கின்றன. அப்படியானால், அதில் என்ன நிரூபிக்கப் படுகிறது?

இன்னொன்று - இந்தப் பிரிவினையைப் பெரிதாக்கி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டவரே (மேக்ஸ் முல்லர்) பின்னாளில் பின் வாங்கி விட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்புறம், நாம் எங்கிட்டுப் போய் இதை நிரூபிப்பது?

கருத்து 4 தான் என்னை அதிகம் ஆச்சர்யப் படுத்துவது. சமீப காலங்களில் அதிகம் கேள்விப் படுவது. நவீன திராவிடக் கோட்பாட்டாளர்கள் எனலாம் அவர்களை. இவர்கள் சொல்வது என்னவென்றால், ஆரியர் மற்றும் திராவிடர் ஆகிய இரு சொற்களுமே ஒரே இனத்தை - அதாவது, பிராமணர்களைக் குறிப்பவை. அவர்கள் சொல்வது - வட இந்திய பிராமணர்கள் ஆரியர்... தென்னிந்திய பிராமணர்கள் திராவிடர்; இந்தப் பெயர்கள் அனைத்தும் அவர்களுக்குள் பகுதி வாரியாக வேறுபடுத்திக் கொள்ள வைத்துக் கொண்டது. கூடவே ஒரு கேள்வியும் கேட்கிறார்கள் - "அப்புறம் ஏன் தென்னிந்திய பிராமணரான ராகுல் திராவிட் வைத்திருக்கும் திராவிட் என்ற பின்பெயரை தென்னிந்திய மற்றவர் யாரும் வைத்துக் கொண்டில்லை?". இவர்கள் யாரை வந்தேறியதாகச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆரியர்-திராவிடர் இருவருமே வந்தேறினார்களா அல்லது யாருமே எங்கிருந்துமே வரவில்லை என்கிறார்களா என்பது ஒன்றும் இப்போதைக்குப் புரியவில்லை. :)

சரி. இதெல்லாம் கருத்துகள். விட்டுத் தள்ளுங்கள். இவற்றை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்தினார்கள்? (அதைப் பிழைப்புக்கும் சிலர் பின்னர் பயன்படுத்தினார்கள் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது!)

பெரியாரின் திராவிடர் கழகத்தில் ஆரம்பித்தது. அவருடைய அரசியல் பெரும்பாலும் தமிழகத்திலேயே நிகழ்ந்தது. டெல்லியை எதிர் பார்த்துக் கை நீட்டி நிற்கும் வரை நாம் தேற மாட்டோம் என்றார். இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்தார். அதன் ஆதிக்கம் தமிழை அழிக்கும் - நம்மவர்களைக் கீழே தள்ளி விடும் என்றார். அப்படியானால், தமிழர் கழகம் என்றே பெயரிட்டிருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை அவர்? ஏதோ காரணத்துக்காக பிராமணர்கள் மீது தாளாத வெறுப்புக் கொண்டிருந்தார். பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்கள் அனைவருடைய பிரச்சனைகளுக்கும் பிராமணர்கள் அறிமுகப் படுத்திய சாதி அமைப்பே அடிப்படைக் காரணம்; அதை அப்படியே உயிர்ப்பித்து வைத்திருக்க அவர்கள் எதுவும் செய்வார்கள்;  அவர்களையும் தன்னோடு வைத்துக் கொண்டிருந்தால் சமூக நீதியை வென்றெடுக்கவே முடியாது; சமூக நீதியை அடைவதற்கான ஒரே வழி - அவர்களுடைய ஆதிக்கத்தை வீழ்த்துவதே என்று நம்பினார். எனவே, அவருடைய கட்சி பிராமணர் அல்லாதோர் மட்டும் நிறைந்த தமிழர்களின் கட்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். பிராமணர் அல்லாதோர் அனைவரும் திராவிடர் என்றொரு கருத்து ஏற்கனவே இருந்ததால், தன் கட்சிக்கு திராவிடர் கழகம் என்றே பெயரிட்டார். தி.க.வின் பிள்ளையும் பேரப்பிள்ளையுமாய் இருக்கிற கட்சிகள்தாம் இன்றைய நம் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும். இன்று தி.மு.க. பெரிதாகப் பிராமணர் எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. அ.தி.மு.க. சுத்தமாகச் செய்வதில்லை. அதற்கும் ஒரு படி மேலே போய், பெரியாரின் திராவிடக் கொள்கை எதையுமே ஏற்றுக் கொள்ளாத ஒரு பிராமணப் பெண்மணிதான் அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கிறார் இன்று.

இதையெல்லாம் பற்றிப் பேசுவதால் பிரயோசனம் ஏதாவது உண்டா? கண்டிப்பாக இல்லை. பிரிவினை அரசியல் எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. திரும்பவும் சொல்கிறேன் - எதிலும்! எதிலும் என்றால்... சாதி, மொழி, பிராந்தியம், மதம், இனம், பிறப்பு, நாடு... எதிலும்! அவர்களுடைய கோணத்தையும் புரிந்து கொள்வதற்காகக் கவனிக்கலாம். ஆனால், கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

ஆனால், இது போன்ற ஒவ்வொரு பிரிவினை முடிவுக்கும் பழைய வரலாற்று முக்கியத்துவத்தை விட தற்போதைய சூழலுக்கேற்ற ஒரு சமூக முக்கியத்துவம் இருக்கும். எனக்குத் தெரிந்தவரை இந்த மொத்த இயக்கமும் அரசியலிலும் மற்ற முக்கியத் துறைகளிலும் இருந்த பிராமண ஆதிக்கத்துக்கு எதிர்ப்பாகக் கிளம்பிய ஒன்றே. அது தமிழ்நாட்டில் திராவிட அரசியல் என்று பெயர் பெற்றது ஒரு தற்செயல் நிகழ்வு போலத்தான் தெரிகிறது. அதுவே பின்னர் மேக்ஸ் முல்லரின் மறக்கப்பட்ட ஆரிய-திராவிடக் கோட்பாடுகள் மீதான ஆய்வுகளை நோக்கி நம் மொத்த மாநிலமும் ஓடக் காரணமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. மற்றபடி, கர்நாடகத்தின் கவுடா அரசியல், ஆந்திரத்தின் ரெட்டி/நாயுடு அரசியல், உ.பி. மற்றும் பிகாரின் யாதவர்/தலித் அரசியல் போன்றவை போன்ற ஒன்றே இதுவும். இப்போது ஓரிரு தலைமுறைகளாக அரசியல் அதிகாரம் முழுக்க பிராமணர்களிடம் இருந்து பெரும்பான்மை சாதிக்காரர்களிடம் கை மாறி விட்டது. ஆனால், இப்போது மேற்சொன்ன எல்லா மாநிலங்களிலுமே பிராமண எதிர்ப்புக் கொள்கைகளோடு உள்ளே வந்த எல்லோருமே குண்டக்க மண்டக்கச் சொதப்பி விட்டார்கள். அது எவ்வளவு உன்னதமான போர் என்பதைப் புரிய வைக்கும் ஒரே கொள்கையை மட்டும் நம்பியிராமல் ஒழுங்காகத் திறமையையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்களைக் காலம் தள்ளியிருக்கிறது இப்போது. அப்படியானால், அவை உன்னதமான போர்கள் என்றுதான் நான் நம்புகிறேனா? அது இன்னொரு சர்ச்சைக்குரிய சங்கதி - திறமையா சமூக நீதியா என்பது. திறமைக்கு எதிரானதா நீதி? ஏதோ கோளாறு இருப்பது போல் அல்லவா உள்ளது இந்தக் கோட்பாடு? ஆம். அப்படித்தான் தெரிகிறது. ஆனால், அதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அதற்குள் இப்போது போக வேண்டாம். அது இன்னும் பத்துப் பதினைந்து பத்திகளில் போய்த்தான் முடியும். இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்வோம் அதை.

முடிவு: ஒருவருக்கு வாக்களிக்கும் முன்போ அவரோடு இணைந்து வேலை செய்யவோ அவருடைய வரலாற்றைப் போய்ப் படிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அந்த ஒருவர், கை சுத்தமானவராக இருக்க வேண்டும் - பொது வாழ்க்கையில் நேர்மை காப்பவராக இருக்கக வேண்டும் - நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உழைப்பவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி, செயல்பாட்டுக்கும் தரத்துக்கும் பதிலாக வரலாறும் பின்னணியும் ஒருபோதும் என் கண்ணை மறைக்க - குருடாக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்ற குருட்டுத் தனங்களால் ஏற்கனவே ஏகப்பட்ட இழப்புகளைப் பார்த்து விட்டோம்.

பின் குறிப்பு: "பாரதீயின் பதிவுச்சுடர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு எல்லாச் சுடரையும் நுனிப் புல்லிலேயே ஏற்றுகிறாயே! இது பற்றி முழுமையாக ஆய்வேதும் செய்தாயா?" என்று கேட்போருக்கு ஒன்று சொல்லி விடுகிறேன். அப்படியெல்லாம் ஏதும் செய்ய வில்லை. மாற்றுக் கருத்துகள் இருப்பின் வாருங்கள் வாதிடலாம். அதன் முடிவில் என் கருத்துகள் மாறவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், நாம் அமரும் இடத்துக்கு இருபுறமும் சாக்கடை இருக்கிறது. சாக்கடையில் விழாமல் சண்டை போடலாம். வாருங்கள்.

சனி, ஆகஸ்ட் 13, 2011

நவீன ஓவியங்கள் (மாடர்ன் ஆர்ட்ஸ்)

மாடர்ன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியங்கள் எனக்கு எப்போதுமே புரிபடுவதில்லை. இவர்கள் ஏன் இப்படியெல்லாம் புரியாத விதமாக ஏதோதோ கிறுக்கி நம்மை ரசிக்கச் சொல்லிப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அவற்றைப் பார்த்து விட்டு, "ஆகா!", "ஓகோ!" என்று சிலாகிப்போரைக் கண்டால் ஒருவித சந்தேகம். இவர்கள் எல்லாம் புரிந்துதான் இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது தம்மைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்வதற்காக இப்படியெல்லாம் நடிக்கிறார்களா என்று கூடத் தோன்றும். இயலாதோர் எல்லோருமே இப்படித்தானே. இயன்றவர்களின் திறமை மீதான பொறாமையை இப்படியெல்லாம் வெளிப்படுத்துவர். அதை உணர்ந்தபோது அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தேன். முடியவில்லை. சரி. ஏன்தான் இப்படியெல்லாம் வரைகிறார்கள் என்று புரிந்து கொள்ளவாவது வேண்டும் என்று முயன்றபோது, கசக்கிய மூளையில் இருந்து எனக்குக் கிடைத்த கருத்து இதுதான்...

ஆதியில் ஓவியர்களின் வேலையென்பது காண்பவை அனைத்தையும் தத்ரூபமாக வரைவதாக இருந்தது. அதாவது, இன்று கேமராக்கள் செய்த வேலையை அவர்கள் செய்து வந்தார்கள். அரசர்களும் செல்வந்தர்களும் அவர்களுடைய படங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்று அவர்களை அணுகி, பணம் கொடுத்து, வரையச் சொல்லி மகிழ்ந்தார்கள். இப்போதுதான் அந்த வேலையைச் செய்ய கேமராவும் கணிப்பொறிகளும் வந்து விட்டனவே. அவர்கள் என்ன செய்வது? அடுத்து புதிதாக ஏதாவது செய்தாக வேண்டுமே. அந்த வாழ்வியல் நெருக்கடிதான் - கேமராவால் முடியாத ஏதோவொன்றைச் செய்தாக வேண்டுமென்ற கட்டாயம்தான் இன்று நவீன ஓவியங்களில் வந்து முடிந்திருக்கிறது. அதையும் கணிப்பொறியில் வரையும் காலம் வரக் கொஞ்சம் காலம் ஆகும். அதுவரை ஓவியர்கள் இப்படியே ஓட்டலாம். அதற்குள் இன்னும் புதிய உத்திகள் ஏதாவது கண்டு பிடித்து விடுவார்கள்.

இப்படி வரையப் படும் சில படங்களைப் பார்க்கும்போது என்ன இது ஒரு குழந்தை கிறுக்குவது போலக் கிறுக்கியிருக்கிறார்களே என்று கூடத் தோன்றும். குழந்தைத் தன்மை போலப் படுகிற ஆனால் காண்போரைவிட முதிர்ந்த நிலையை அடைந்து விட்ட படைப்பாளிகள் அவர்கள். முதிர்ச்சி என்றால் கூடத் தவறாகி விடலாம். ஆனால் அவர்கள் வேறொரு சிந்தனைத் தளத்தில் இயங்குபவர்கள் என்று சொல்லலாம். அதாவது, சிலர் பேசுவதும் எழுதுவதும் நமக்குப் புரிவதேயில்லை. குழந்தை உளறுவது போலக் கூட இருக்கும். அதன் பொருள் அவர்களுக்கு அறிவில்லை என்றில்லை. அவர்களுடைய பேச்சைப் புரிந்து கொள்ளும் நுட்பம் நமக்கு இன்னும் வரவில்லை என்றே கொள்ள வேண்டும். மோனாலிசாவின் சிரிப்பில் உள்ள மர்மமே... அதாவது அந்தச் சிரிப்பில் அப்படியொரு மர்மம் இருக்கிறது என்பதே இன்னும் புரிபடாத என் போன்றோருக்கு இதெல்லாம் புரிபட இன்னும் ஏகப் பட்ட காலம் ஆகும் என நினைக்கிறேன்.

இந்த நவீன ஓவியங்களில் எனக்குப் புரிபடாத இன்னொரு விஷயம் - வருகிற பாதிப் படங்கள் நிர்வாணத்தைக் காட்டுவதே வேலையாக வைத்திருக்கின்றன. எல்லாப் படைப்புகளிலுமே ஒரு போதைக்காகச் சேர்க்கப் படும் விஷயம் போல்த்தான் இதுவுமா இல்லை வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓவியத்தில் கரை கண்டவர்கள் இருந்தால் கருத்துரையில் விளக்குங்கள். புரிகிறதா என் மரமண்டைக்கு என்று பார்க்கலாம். இலக்கியத்தில் போலவே இதிலும் பல இயங்கள்/துவங்கள் (அதாவது இசங்கள்) இருக்கின்றன. அதாவது, நவீனத்துவம் (MODERNISM), பின்-நவீனத்துவம் (POST-MODERNISM), பதிவுத்துவம் (IMPRESSIONISM), பின்-பதிவுத்துவம் (POST-IMPRESSIONISM) போன்றவை! இலக்கியங்களைப் போலவே இங்கும் அவை என்னவென்றே புரிவதில்லை. ஆனால், அங்கு போலவே இங்கும் அவற்றால் கிரங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. அவர்களில் ஒருவனாக வேண்டும் என்று ஒருபக்கம் ஆசை.

ஒரு காலத்தில் நம்மால் முடியாதது என்று எதுவுமே இருக்கக் கூடாது என்று பேராசைப் பட்டதுண்டு. அதற்காகவே நுனிப்புல் மேய்தலிலும் ஒருவித ஆர்வமும் உண்டு. பின்னொரு காலத்தில் நமக்கு ஒத்து வராததை உதறி விட்டு வருவதைப் பிடித்துக் கொண்டு போவதுதான் நல்லது என்று ஒரு ஞானோதயமும் வந்தது. அதன்படித்தான் இது போன்ற ஓவியங்களை மேலோட்டமாகக் கூடப் பார்க்க விருப்பமில்லாமல் தப்பிக் கொண்டிருந்தேன். இப்படியே விட்டு விடலாமா அல்லது மனிதனாகப் பிறந்தவன் இழக்கவே கூடாத சுகம் ஏதேனும் அதில் இருக்கிறதா?

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

வாசிப்பதை விட அதிகம் எழுதிக் கொண்டிருந்த ஆள் நான். எழுதும் அளவுக்கு வாசிப்பதில் ஆர்வமும் இருக்க வில்லை. இருக்க வில்லை என்றில்லை. எழுதும் அளவுக்கு இருக்க வில்லை. முதற் சிறுகதை எழுதி முடித்த போது, சில சிறுகதைகள் படித்திருந்தேனே ஒழிய, சிறுகதைத் தொகுப்பு என்று முழுதாய் ஒரு நூல் கூட முடித்ததில்லை. வார இதழ்களில் தொடர்கள் படிப்பது பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால், அதற்கு வாராவாரம் இதழ் வாங்க வேண்டியிருக்கும். நாவல் என்ற படிவம் படைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. முடியுமா என்ற நம்பிக்கை இல்லை. அவற்றைப் படிக்கவும் நிறையப் பொறுமை வேண்டியிருக்கும் என்றெண்ணி அவற்றின் பக்கமும் போவதே இல்லை. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் எழுத்து வடிவங்களிலேயே மேலானது வரலாற்று நாவல்கள்தான் என்று சொல்லி அவற்றைப் படித்து முடித்திருந்த நண்பன் மணிகண்டன் வந்து கல்கியின் சில நாவல்களைப் படிக்கச் சொன்னான். படித்த முடித்த போது எனக்கும் கிட்டத்தட்ட அந்தக் கருத்தில் ஏற்பு ஏற்பட்டது. பார்த்திபன் கனவில் ஆரம்பித்து, பொன்னியின் செல்வன் படித்து, அதன் பின்பு படித்ததே சிவகாமியின் சபதம். பார்த்திபன் கனவு குறிப்பு எடுத்ததாக நினைவில்லை. பொன்னியின் செல்வன் குறிப்புகளுக்கு முன்பே சிவகாமியின் சபதம் குறிப்புகள் என்னுடைய நாட்குறிப்பு ஒன்றில் கிடைத்தது. இது ஒரு நூல் விமர்சனம் போல் இராது எனினும், அந்த நூலைப் படித்த போது என்னைக் கவர்ந்த வரிகளின் தொகுப்பு என்று வைத்துக் கொள்ளலாம். சுண்ணாம்பில் கலந்த தண்ணீராய்... இடையிடையில் என் வரிகளும்...

கல்கி அவர்கள் தன் ஆசிரிய உரையில், "'சிவகாமி சப்த'த்தில் கடைசிப் பாகம், கடைசி அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது." என்று சொல்லி ஆரம்பிக்கிறார்.

நீண்ட நாட்களாகவே எழுதுவது என்பது நினைவில் வருவதை எழுதி வைத்துப் பின்னர் கோர்ப்பது என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன். கோணங்கியின் அளவிலாத அலைச்சல்களையும் தேடல்களையும் கண்டு, 'ஏன் இப்படிச் சுற்றித் திரிகிறார்?' என்று கூடத் தோன்றும். தோன்றுவதை மட்டும் எழுதுவது எழுத்தின் ஆரம்பப் பள்ளி; பல வருடத் தேடல்களையும் ஆய்வுகளையும் தொகுத்துப் பரிமாறுவதுதான் காலத்தை வென்று நிலைக்கத் தக்க எழுத்துகளின் பண்பு என்பது பின்னர்தான் புரிந்தது. தன் எழுத்துகளுக்கான எரிபொருளுக்காகத்தான் அப்படி ஓடித் திரிகிறார் என்பது கோணங்கியின் வாழ்க்கையாலும் இந்த வரியாலும் எனக்கு நன்றாகப் புரிந்தது. ஒரு சிறுகதையோ கட்டுரையோ கூட ஆரம்பித்து விட்டால், அது முடியும் வரை ஒருவித பார உணர்வு நம்மை எதுவுமே செய்ய விடுவதில்லை. அதைப் பன்னிரண்டு வருடங்கள் ஒருவர் சுமந்தார் என்றால், அப்பப்பா... நினைத்தே பார்க்க முடியவில்லை. அடுத்த கட்டுரை எழுதும் போது அதே உணர்வு வரும் போது இதைத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் படைப்பது என்பது இருநூற்றி நாற்பத்தியேழு எழுத்துக்களையும் மாற்றி மாற்றிப் போடுவது மட்டுமல்ல; அதற்குள் இன்னும் என்னென்னவோ செலுத்த வேண்டும் போலத் தெரிகிறது. இல்லையா?

"குழந்தையை அடித்து அழச் செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடி மேல் அடி அடித்து ஓடச் செய்யலாம். ஆனால் ஆடச் செய்ய முடியாது." என்கிறார். மிக அடிப்படையான ஒரு தத்துவம்தான். கலை என்பது அடித்துக் கற்றுக் கொடுக்க முடியாதது; அதுவாகவே வர வேண்டும் என்கிறார். ஒத்துக் கொள்கிறேன். எழுதுவதும் கூட அப்படித்தானே!

"தெற்கே பாண்டிய நாட்டின் எல்லையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதி வரையில் பரந்திருந்த பல்லவ ராஜ்யத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மகேந்திர வர்ம சக்கரவர்த்தி சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழகமெங்கும் ஓர் அதிசயமான 'கலை மறுமலர்ச்சி' ஏற்பட்டிருந்தது." என்கிறார். கலை மறுமலர்ச்சி என்பது ஒரு சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு இப்போதும் தெளிவான சிந்தனை இல்லை. கலை மனிதனுக்குச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. பல நேரங்களில் எளிதில் சென்றடைய முடியாத கருத்துக்களை எளிய மக்களுக்குக் கொண்டு செல்ல மிகச் சிறந்த வாகனமாக இருக்கிறது. அத்தகைய கலை மீது என்றுமே ஒருவித மரியாதை உண்டு. கலையை வளர்ப்பதற்காகவே அளவிலாத வளங்களை அளித்தல் ஒரு சமூகத்துக்கு எவ்வளவு நல்லது என்று தெரியவில்லை.

"செந்தமிழ் நாடெங்கும் மகா சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் தோன்றி சிற்ப, சித்திரக் கலைகளை அற்புதமாக வளர்த்து வந்தார்கள். குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்கும் கலையும் கற்பாறைகளிலேயே சிற்பங்களைச் செதுக்கும் கலையும் எங்கெங்கும் பரவி வந்தன." என்றும் சொல்கிறார். சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் வேறு ஏதாவது மக்களுக்குப் பயன்படும் வேலைகளைச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. இன்னும் மாமல்லபுரம் போய்ப் பார்த்ததில்லை. ஒருவேளை இவையெல்லாம் மக்களின் விழிப்புணர்வை வளர்க்கப் பயன் பட்டனவோ என்பதை அப்போதைய நிலவரம் எப்படி இருந்தது என்பதை முழுமையாக அறிந்து கொண்டே சொல்ல முடியும். பெரும்பாலும் இந்த வேலைகளை அரசர்கள் தம் பெயரை நிலைத்து நிற்கச் செய்வதற்காகவே செய்தார்கள் என்றுதான் இப்போதைக்கு அறிகிறேன்.

"நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி! அதனாலேதான் இதைத் தெய்வ மாக் கலையென்றும் பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்துதான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவத்துவத்தை அறிய முடியாது." என்று ஆயனர் சிவகாமியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தான் அறிந்த ஒன்றை அதுவே உலகக் கலைகளில் எல்லாம் சிறந்தது என்று சொல்லும் போக்கும் காலம் காலமாகவே இருந்து வருகிறது என நினைக்கிறேன். இதைப் படிப்போர் யாராவது நிருத்யக் கலை வல்லவராக இருந்தால், என்னுடைய இந்த வரி உங்களை வருத்தமளிக்கச் செய்தால், அதற்கு மன்னிக்கவும். ஏனென்றால், அது பற்றியும் அதன் அருமையும் அறியாமலேயே ஒரு கருத்தைச் சொல்வது சரியாகாது என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும், அதைப் படித்தபோது மனதில் தோன்றிய ஒன்றைச் சொல்லாமல் விடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். பரதத்தை விட இழவு வீட்டில் ஆடும் ஆட்டம்தான் சிறந்தது என்று கூடச் சிலர் சொல்கிறார்கள். அதன் பொருளும் அதே. தனக்குத் தெரிந்ததை உலகிலேயே சிறந்ததாகச் சொல்வது. சிற்பமும் சித்திரமும் நிருத்யக் கலையால் உண்டானவையா என்று உறுதியாகத் தெரியவில்லை. இசைக்கு ஆதாரம் நிருத்யமா அல்லது மாற்றிச் சொல்கிறாரா என்றும் குழப்பம் வருகிறது.

சிவகாமி: "பரதம், சங்கீதம், சிற்பம், சித்திரம் - இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்?"
ஆயனர்: ... "வசந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்? மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன்? கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது."

இதே கேள்விதான் எனக்கும். இப்போதும். ஆயனரின் பதில் முழுமையாக என்னை ஈர்க்க வில்லை. மற்றவையெல்லாம் இயற்கையாக நடப்பவை. கலை என்பது ஒரு மனிதன் தன் அன்றாட உற்பத்தி வேலைகளை விட்டு விட்டுப் போய்ச் செய்வது. அப்படியானால், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத் தக்கதாக அது இருக்க வேண்டும். அதே வேளையில், வேலையை மட்டுமே மனிதர்கள் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்றால், மனித இனமே என்றோ அழிந்து போயிருக்கும் என்பதுவும் சரிதான். கலைதான் அவனைச் சிரிக்க வைப்பது, சிந்திக்க வைப்பது, வாழ்வை மேலும் சுவாரசியமானதாக்குவது, திரும்பவும் கூடுதல் ஆற்றலோடு போய் வேலையைத் தொடர வழி செய்வது என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. கவலை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது ஓய்வெடுக்க வைக்கும் எதுவும் நமக்கு அவசியமே.

"கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும், தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால் சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை." என்று சூப்பராகச் சொல்லியிருக்கிறார் ஓரிடத்தில். அப்படிக் கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவன், இயற்கையில் சங்கோசமுடையவன், நீண்ட காலமாகத் தாயுடன் கூட ஒழுங்காகப் பழகி அறியாதவன் என்ற முறையில் பரஞ்சோதி பற்றிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்து விட்டன. அது எல்லாமே இப்போது அறிகுறி இல்லாமல் அழிந்து போய் விட்ட பண்புகள் என்பது வேறு கதை. :)

"நாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால்..." என்கிறார் ஓரிடத்தில். யானையையும் நாகம் என்பார்கள் என்பது புதிய விஷயம். இனிமேல் குண்டாக இருக்கும் நாகராஜ்கள் பாடு திண்டாட்டம்தான். அவர்களுடைய பெயரை யானைராஜ் என்று மாற்றி விட்டு, சிவகாமியின் சபதம் படிக்கச் சொல்லலாம். :)

"ஆயனரே! சாதாரணமாக, இளம்பெண்கள் உயிரின் மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா?" என்று புத்த பிக்ஷு ஆயனரிடம் சொல்வதாக ஒரு வரி வருகிறது. இதில் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது. :)

"கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தர விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வட மேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்த பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனை செய்து தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக் கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பல வகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அன்னியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக் கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்." என்று ஓரிடத்தில் ஆசிரியர் அடிக்குறிப்பாகக் குறிப்பிடுகிறார்.

இது இன்னமும் தெளிவாகாத ஒரு குழப்பம். பெரும்பாலான ஆய்வுகள் பல்லவர்கள் தமிழர்களே அல்ல என்றேதான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் பலரும் அவர்களை உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினரே தம்மை வர்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே பல்லவர்கள் என்கிறார்கள். தேவர்களோ தமிழகத்தின் அனைத்து அரச வம்சங்களுமே தம்மவர்கள்; தமிழகத்தின் ஒரே சத்திரிய இனம் தாமே என்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் போலன்றி, பல்லவர்கள் வடமொழியில் தேர்ச்சி பெற்றிருந்ததால் அவர்கள் பார்ப்பனர்கள் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். இதற்கு சரியான விளக்கம் யாரிடமாவது இருந்தால் கொஞ்சம் விளக்கிப் புரிய வையுங்கள். நிறைய நன்றிகள் சொல்வேன். இந்த இடத்தில் இது போன்ற இன்னொரு செய்தியைக் கூடுதலாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இராஜராஜ சோழனே இன்னும் எந்த சாதி என்ற முடிவுக்கு வரவில்லை நாம். இன்று வரை உச்ச நீதி மன்றத்தில் மொத்தம் எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். "அவர் எங்கள் சாதிதான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்!" என்று.

"ஐயா! என்னுடைய வேலை என்ன என்பது பற்றி நீங்கள் ஒன்றும் கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்று பரஞ்சோதி சொல்வதாக ஒரு வரி வரும். புத்திசாலித்தனத்தைப் பாருங்கள். இதுதானே இன்றைக்கு நம் அலுவலகங்களிலும் நடக்கிறது. நமக்குக் கீழே பணி புரியும் யாருமே விரும்பாத கேள்வி அல்லது நமக்கு மேலே இருப்போர் நம்மிடம் கேட்பதை நாம் விரும்புவதில்லை என்கிற கேள்வி இதுதான் - "என்ன செய்கிறாய்?". 'என்ன வேண்டும் என்பதைச் சொல். முடிந்தால் கொடுக்கிறேன். என்ன செய்கிறேன் என்பது பற்றியெல்லாம் ஏன் கேட்கிறாய்?' என்று எண்ணிக் கொண்டு ஏதோவொரு பொய்யைச் சொல்வோம். வேலை செய்யாமல் வெட்டிக் கதை படித்துக் கொண்டு இருப்பதை வெளியிலா சொல்ல முடியும்? 'உண்மை வேண்டுமானால் நீயே கண்டு பிடித்துக் கொள்; அதைச் சொல்வதல்ல என் வேலை!'.

இதில் வைஜெயந்திப் பட்டணம் என்றொரு நகரத்தின் பெயர் வருகிறது. அது விசாகப் பட்டணமாகத்தான் இருக்கும் என்பது என் நினைப்பு.

"புலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன. (பிற்காலத்தில் இந்தக் கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.)" என்றோர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் தமிழே மூலம் என்கிற சேதியைச் சின்ன வயதிலேயே பள்ளிக் கூடத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் அதில் முழுமையாய் எனக்கு நம்பிக்கை வரவில்லை. இவர்கள்தாம் ஒவ்வோர் ஆட்சி மாற்றத்துக்கும் பின் அவர்களுக்கு ஏற்ற மாதிரிக் கதை சொல்பவர்களே. அதனால்தான். பெங்களூர் வந்த பின்பு, மற்ற மொழிக் காரர்களிடம் அதைச் சொன்னால், அவர்கள் ஏதோ அவர்கள் பிறப்பே தப்பு என்று சொன்னது போலக் கோபப் பட்டுக் கொண்டு வருவார்கள். அப்படிச் சொன்ன ஒரு பொழுதில், ஒரு கன்னட நண்பன், "இதையே வெளியில் போய்ச் சொல்லி விடாதே. கவனம்!" என்று எச்சரித்தான். அப்போது சேட்டா ஒருவர் வந்து ஆதரவுக் கரம் நீட்டினார். "எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மலையாளம் என்றொரு மொழி கிடையாது. இன்றைய கேரளத்திலும் தமிழ்தான் பேசினார்கள். வாழும் மொழிகளிலேயே தமிழ்தான் முதன் மொழி. இதைக் கேரளத்தில் உள்ள பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வார்கள்!" என்று ஒரு போடு போட்டார். அதன் பின்பு இந்தக் கருத்தைப் பேசுவது மிக எளிதாகி விட்டது எனக்கு.

ஆனால், தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக நம்மை விட்டுப் பிரிந்தது கன்னடம். நம் மூத்த தம்பி. அதனால்தான் மொழி விஷயத்தில் நம்மிடம் கொஞ்சம் மொரண்டு அதிகம் பிடிப்பான். கன்னடத்துக்கும் முன்பே துளு பிரிந்து விட்டது என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். எது உண்மையோ தெரியவில்லை. அதிகமான வடமொழிச் சொற்கள் கொண்டு விலகிச் சென்றதால்தான் கன்னடத்தவர்கள் எளிதாக வடமொழி எழுத்துக்களை உச்சரிக்கிறார்கள். உச்சரிப்பு விஷயத்தில் அவர்கள் நம்மை விட ஒரு படி மேல். நாம்தான் தமிழ் என்ற நம் மொழியின் பெயரையே ஒழுங்காக உச்சரிக்க முடியாமல் தமில் என்று உச்சரிக்கிற மாதிரி வளர்ந்து விட்டோம். கன்னடத்தவர்கள் தமிழை தமிள் என்பார்கள். தமிலை விடத் தமிள் பரவாயில்லை அல்லவா? ல, ள வேறுபாடு சரியாகக் காட்டுவார்கள். அதையே நான் பெங்களூர் வந்துதான் ஓரளவு வேறுபடுத்தக் கற்றுக் கொண்டேன். அதனால்தான் பிரகாஷ் ராஜ் தமிழை அவ்வளவு சூப்பராக உச்சரிக்கிறார்.

இன்னொரு விஷயம் - கல்கியும் நிறைய வடமொழிக் கலப்பு மிக்க சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அது அவரது பின்னணி காரணமாகவா அல்லது அவரது காலத்தில் தமிழைத் தூய்மைப் படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்க வில்லையா அல்லது கதை நடந்த காலத்தில் நம் மொழி அப்படித்தான் இருந்தது என்பதாலா என்று தெரியவில்லை. மூன்றுமே கூடக் காரணமாக இருக்கலாம்."தீபத்தை ஏற்றி நடுக்கூடத்தில் வைக்க வேண்டும். அப்படியின்றி மூலை முடுக்கிலே வைத்துத் துணியைப் போட்டு மூடினால், தீபம் அணைந்து போவதுடன், துணியும் அல்லவா எரிந்து போகும்?" என்று நாகநந்தி சிவகாமி பற்றி ஆயனரிடம் கேட்பதாக ஒரு கேள்வி வருகிறது. நல்ல கேள்வி. தீபத்தை மறைத்து வைப்பதே தவறு. அதுவும் துணியால் மூடினால் துணிக்குமல்லவா கேடு? எனவே, இனிமேல் தமிழர்களாகிய நாம் தீபத்தை அணைத்த பின்பு துணியால் மூட வேண்டும். அல்லது சும்மாவாவது கொண்டு போய் மூலையில் வைக்க வேண்டும். எரிகிற தீபத்தை மூலையில் வைத்துத் துணியால் மூடுகிற வேலையை மட்டும் செய்யக் கூடாது. அது போல, தீபத்தை வைக்கும் இடத்தில் தீப்பந்தத்தையும் வைக்கக் கூடாது. அது வீட்டையும் சேர்த்து எரித்து விடும். இல்லையா?

"காதலை நெருப்பு என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானது. சத்ருக்னா! நெருப்பு சொற்பமாயிருந்தால், காற்று அடித்ததும் அணைந்து விடுகிறது. பெருநெருப்பாயிருந்தால், காற்று அடிக்க அடிக்க நெருப்பின் ஜ்வாலை அதிகமாகிக் கொழுந்து விட்டு எரிகிறது. நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குப் பிரிவு என்று தோன்றுகிறது. பொய்க்காதலாயிருந்தால் பிரிவினால் அது அழிந்து விடுகிறது. உண்மைக் காதலாயிருந்தாலோ, பிரிவினால் அது நாளுக்கு நாள் வளர்ந்து பெரு நெருப்பாய் மூளுகிறது." என்று மகேந்திர வர்மர் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. நல்ல உவமை அல்லவா? உங்களுடைய நெருப்பு எப்படி?

"நம் அன்புக்குரியவர்களைப் பற்றிச் சாதாரணமாக ஏதேனும் கெடுதலான விஷயத்தைக் கேள்விப்பட்டால் நம் உள்ளம் சுலபத்தில் நம்புவதில்லை. 'அப்படியெல்லாம் இராது' என்று மனதைத் திருப்தி செய்து கொள்கிறோம். அவதூறு சொல்கிறவர்களிடம் சண்டை பிடிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால், எக்காரணத்தினாலாவது நமக்கு வேண்டியவர்களிடம் குற்றம் இருக்கிறதென்று நம்பும்படி நேர்ந்து விட்டால் உள்ளத்தில் கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்குகிறது. வேண்டியவர்கள் மீது மட்டுமல்ல; உலகத்தின் மேலேயே கோபம் கொள்கிறோம். இந்த மனித இயற்கை காதலர்களின் விஷயத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகிறது. காதலன் எவனும் தன்னுடைய காதலியைச் சாதாரண மானிடப் பெண்ணாகக் கருதுவதில்லை. தெய்வப்பிறவி என்றே கருதுகிறான். தேவலோகத்தில் அமிர்தபானம் செய்து கொண்டு, ஆனந்த அமர வாழ்க்கை நடத்த வேண்டியவள் தன் பேரில் கொண்ட அன்பினாலேயே இந்தப் பூலோகத்திலே வாழ்ந்து வருவதாகக் கருதுகிறான். காதலியோ, குழந்தைப் பிராயத்திலிருந்து தன் மனத்தில் தானே சிருஷ்டி செய்து கொண்டிருந்த இலட்சிய புருஷனுக்குரிய சகல உத்தம குணங்களையும் காதலன் மீது ஏற்றி அவனைக் குற்றங்கள் குறையல்லாத தெய்வீகப் புருஷனாகவே எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தினால் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும்போது மகத்தான ஏமாற்றம் உண்டாகி விடுகிறது. மலையின் சிகரத்திலிருந்து திடீரென்று அதல பாதாளத்தில் விழுகிறவர்களைப் போல் ஆகி விடுகிறார்கள்." என்ற பத்திகள் காதலர்களின் கண்மூடித் தனம் பற்றி மிகச் சிறப்பாக விவரிக்கின்றன.

எத்தனையோ திரைப்படங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு இதெல்லாம் இன்றைக்கு நமக்கு மிகச் சாதாரணமான விஷயங்களாகி விட்டன. அவர் எழுதிய காலத்தில் வேண்டுமானால் பெரும் தத்துவங்களாக இருந்திருக்கலாம். திருமணத்துக்கு முந்தைய காதல் போதை நம்மை எவ்வளவு கிறுக்குப் பிடிக்க வைக்கிறதோ அதே அளவு திருமணத்துக்குப் பிந்தைய பிரச்சனைகளும் நம்மைக் கிறுக்கப் பிடிக்க வைக்கின்றன. காதலிப்போரிடம் போய் இதையெல்லாம் சொல்லிப் பாருங்கள். பொளேர் என்று நம்மை ஓர் அறை அறைந்தாலும் அறைவார்களே ஒழிய இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்!' என்கிற கணக்கு திருமண நாளில் இருந்துதான் ஆரம்பிக்கும். காதல் மட்டும் செய்து கொண்டிருந்தால் அது பல ஆண்டுகளுக்குக் கூட ஓடும்.

"ஆம் சிவகாமி, ஆமாம்! அது மட்டுமல்ல, உலகத்தில் எல்லாம் அன்புமயமாய்ப் போய்விட்டால், வீரம் என்பதே இல்லாமற் போய்விடும். வீரம் இல்லாத உலகம் என்ன உலகம்? அப்புறம் கதை ஏது, கதைதான் ஏது?" என்றார் ஆயனர். கதையே வேண்டாம். வீரமற்ற உலகம் உயிர்கள் பயமின்றி வாழ உதவுமானால் யாருக்கு வேண்டும் கதைகள்.

"'விஹாரம்' என்பது புத்தபெருமானின் கோயிலும் பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் மடமும் சேர்ந்து அமைந்தது. 'சைத்யம்' என்பது புத்த பகவானின் தனிப்பட்ட ஆலயமாகும்." என்று அடிக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"அந்தக் கடைக்கண் பாணமும் கள்ளப் புன்னகையும் என்னைக் கொன்றன." என்று மாமல்லர் சிவகாமியிடம் சொல்வதாக ஒரு வரி வருகிறது. மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை எனும் இவ்வுலகில் இது மட்டும் எத்தனை யுகங்கள் போனாலும் மாறாது போல்த் தெரிகிறது.

"அசாதாரண அழகு படைத்த ஸ்திரீகளைப் பிரம்ம தேவன் சிருஷ்டிக்கும்போது தன்னுடைய நாலிரு கண்களிலிருந்தும் சொட்டும் கண்ணீரையும் மண்ணுடனே கலந்து சிருஷ்டிப்பதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட அசாதாரண சௌந்தரியவதிகளால் உலகத்திலே எத்தனையோ துன்பங்கள் உண்டாகுமென்று பிரம்மதேவனுக்குத் தெரிந்தபடியினாலேதான் அப்படி அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அவர்களைப் படைப்பானாம்!" என்று மகேந்திர வர்மர் சிவகாமியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது.

இந்த வரிகளில் உள்ள வர்ணனைப் பூச்சுகளை எல்லாம் விட்டு விட்டுப் பார்த்தால் அவர் சொல்ல வருவது இதுதான் - அழகு ஆபத்து! யாருக்கு? அழகாக இருப்பவருக்கு... உடன் இருப்பவர்களுக்கு... சந்திக்க நேர்பவர்களுக்கு... பெரிய மனிதர்களுக்கு... அரசாங்கங்களுக்கு... உலகத்துக்கு... சாணக்கியர் கூட பெண்களைக் கொண்டு சாம்ராஜ்யங்களைச் சரிப்பது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் பார்க்கிற எல்லோருமே பொறாமைப் படுகிறார்கள். பெண்கள் ஒருவிதத்தில் பொறாமைப் படுகிறார்கள். ஆண்கள் வேறொரு விதத்தில் பொறாமைப் படுகிறார்கள். எல்லோரும் எளிதில் சமம் என்று ஆகி விட முடியாமல் தடுக்கும் காரணிகளில் அழகும் ஒன்றுதானே. சின்ன வயதிலேயே ஓணானை விரட்டி விரட்டி அடிக்கிற - துன்புறுத்துகிற நமக்கு அணிலைப் பார்த்தால் பிடிக்கிறது. ஏன்? அழகுதானே காரணம்?! பார்க்க அழகாக இருக்கிற ஒருவர் கஷ்டப் படுவதைப் பார்த்துச் சகிப்பது சிரமமாக இருக்கிறது. அதே கஷ்டத்தை அதே வலியோடு அனுபவிக்கும் சராசரியான ஆளைப் பார்த்து அவ்வளவு மன உளைச்சல் அடைவதில்லை நாம். அழகாக இருப்பவர்கள் திருடினால் கூட நம்ப முடிவதில்லை. அதையே சுமாரான அழகுடைய ஒருவர் செய்தால் திருட்டுப் பட்டம் கட்டுவதோ சந்தேகப் படுவதோ மிக எளிதாகி விடுகிறது. உண்மையா இல்லையா?

மகேந்திரரின் சிவகாமியுடனான உரையாடலில் இன்னொரு வரி வருகிறது - "சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு; அரச குலத்தினருக்குத் தர்மம் வேறு." என்று. இதுவும் ஏற்றத் தாழ்வுகள் பற்றியதே. அவர்கள் சில தவறுகளைச் செய்து விட்டு எளிதில் தப்பிக் கொள்ளலாம் என்பது ஒன்று. அவர்கள் செய்து வெளிவரும் போது சிறிய தவறுகள் கூடப் பெரிதாகப் பேசப்படும் என்பது ஒன்று. நம்ம ஊரில் உள்ள கொள்ளைக் குடும்பங்களிடம் கேட்டால் இதற்கு இன்னும் தெளிவான விளக்கவுரைகள் கொடுப்பார்கள். பில் கிளிண்டனிடம் போய்க் கேட்டுப் பாருங்கள். அவரும் இதை நன்கு அனுபவித்து உணர்ந்தவர். இதுதான் இன்று வரை நம்ம ஊரில் பிரச்சனையாக இருப்பது. லோக் பால் மசோதாவில் கூட அதுதானே பிரச்சனை. ஆளுக்கொரு சட்டம் என்றாகி விட்டால் ஆள்வோருக்கு வாழ்க்கை எளிதாகி விடுமே.

அரச குடும்பத்தில் மாமியாரை 'அம்மா' என்று அழைப்பதாக வருகிறது. எங்கள் ஊர்ப் பக்கம் இதை ஒரு கொலைக் குற்றம் போலப் பேசுவார்கள். மாமியார் அம்மா என்றால், வீட்டுக்காரர் அண்ணனா? "ஐயோ கருமமே, அண்ணனோடு போய்..." என்பார்கள். அப்படியாவது தாய்க்கு இணையான மரியாதையும் கவனிப்பும் கிடைத்தால் நல்லது என்று அப்படிச் சொல்வதாக அப்படிச் சொல்வோர் சொல்கிறார்கள். பெரும்பாலும் ஐயர் வீடுகளில் மட்டுமே இந்தப் பழக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். பல்லவர்கள் பார்ப்பனர் என்று சொல்வோர் இதையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். இங்காவது மாமனார்-மாமியாரை மட்டுமே அப்பா-அம்மா என்கிறார்கள். கேரளத்தில் வீட்டுக்காரரையும் சேட்டா அல்லது ஏட்டாதான். ஒரு மலையாளப் படத்தில் படம் முடியப் போகிற நேரத்தில் கதாநாயகி போய் மாமனாரிடம் கேட்பாள், "உங்களை நான் அப்பாவென்று அழைக்கலாமா?". பதறிப் போனேன். பாதகத்தி, முடியப் போகிற நேரத்தில் இப்படி ஒரு குண்டைப் போடுகிறாளே என்று. அப்புறம்தான் புரிந்தது இதெல்லாம் அவர்கள் பண்பாடு என்று. 'எதெல்லாம்?' என்கிறீர்களா?! :)

"பல்லவ சாம்ராஜ்யத்தில் மந்திரி மண்டலம் என்றும் அமைச்சர் குழு என்றும் இரண்டு சபைகள் சக்கரவர்த்திக்கு இராஜ்ய நிர்வாகக் காரியங்களில் துணை செய்தன. மந்திரிகள் ஆலோசனை சொல்வதற்கு உரியவர்கள். அமைச்சர் அல்லது அமாத்தியர் காரிய நிர்வாகத் தலைவர்கள். சாம்ராஜ்யம் பற்பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கோட்டத் தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்படுவார்கள்." என்று பல்லவர்களின் அரசமைப்பு பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவைதாம் வரலாற்று நாவல்களில் வரும் கற்பனையற்ற தகவல்கள். செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் சேகரிக்கும் குறிப்புகள். நம்மைப் பொருத்த மட்டில் மந்திரியும் அமைச்சரும் ஒன்றுதான். அது வடமொழிச் சொல். இது தூய தமிழ்ச் சொல். மற்றபடி, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர்கள் காலத்தில் ஒருவேளை மந்திரிகளை மந்திரிகள் என்றும் அவர்களுக்குக் கீழே இருக்கும் இன்றைய ஆட்சிப் பணி அதிகாரிகள் போன்றோரை அமைச்சர்கள் என்றும் அழைத்திருக்கக் கூடும் என்றெண்ணுகிறேன். கோட்டத் தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் போல இருக்கும்போல்த் தெரிகிறது. சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள் - மாவட்டச் செயலாளர் போல் அல்ல... மாவட்ட ஆட்சித் தலைவர் போல். :)

"சிநேகம் என்பது சமநிலையில் உள்ளவர்களுக்கிடையேதான் ஏற்பட முடியும். அறிவாளிகளுக்குள்ளேதான் அன்பு வளர முடியும். அறிவற்ற மூடர்களையும் அதிகப் பிரசங்கிகளையும் தண்டோபாயத்தைக் கைக் கொண்டே சீர்திருத்தியாக வேண்டும்." என்று மகேந்திர வர்மர் மனைவியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. மூடர்களையும் அதிகப் பிரசங்கிகளையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் இந்தப் பார்வை எனக்குப் பிடித்திருந்தது. அதிகப் பிரசங்கிகள் மூடர்கள் இல்லை. அவர்களும் அறிவாளிகளே. ஆனால், அறிவைவிட அகந்தை அதிகம் கொண்டோர். அதாவது, அளவை விட அதிகம் பேசுவோர் - அதிகம் பிரசங்கம் செய்வோர். எல்லா இயக்கங்களும் உடைந்து செயலிழந்து போவதற்கு இவ்விரு சாராருமே சமமான அளவில் காரணமாக இருப்பார்கள். அறிவை வர வைப்பதும் அகந்தையைப் போக வைப்பதும் அவ்வளவு எளிதானவையா என்ன? அதிலேயே அறிவாளிகளின் நேரம் வீணாகி விடுவதால் சாதனைகள் சாதிக்க கால அவகாசம் காணாமல் போய்விடுகிறது.

"இராஜ குலத்தினருக்கு விவஸ்தை ஏது? இன்றைக்கு சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக் குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை போடுவார்கள்!" என்று கமலி சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. அரசியல் சார்ந்த வாழ்க்கை என்பதே எல்லாக் காலத்திலும் விவஸ்தை இல்லாததாகவே இருக்கிறது போலும். இப்போதிருப்பதை விட இது பரவாயில்லை என்றுதான் படுகிறது.

"இராஜரீக சாஸ்திரத்தில் முதலாவது பாடம் என்னவென்பதை இன்னமும் நீ தெரிந்து கொள்ளவில்லையா? தோல்வியடைந்து விட்டதாக ஒரு நாளும் ஒப்புக் கொள்ளக் கூடாதென்பதுதான் அந்தப் பாடம்." என்று நாகநந்தி புலிகேசியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. இது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இராஜரீகத்தில் மட்டுமல்ல. இன்று பணியிடங்களில் கூட இந்தப் பண்பாடு தலை தூக்கி விட்டது. இப்போதுதான் எல்லோரும் இராஜாவாகி விட்டோமே. எல்லோருமே நேர்மை பற்றிப் பேசுவார்கள். ஆனால், ஒருவன் நேர்மையாகத் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டால் அத்தோடு முடிந்தது கதை. வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். "எதிலுமே என்னை வீழ்த்த முடியாது!" என்று தினம் தினம் வீழ்ந்து கொண்டிருக்கும் நிறையப் பேர் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தன்னையும் சுற்றியிருக்கும் பெரும்பாலானோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் புரியாத ஒன்று அல்லது அவர்கள் கவலைப் படாத ஒன்று - இந்தத் திருட்டுத் தனங்களையும் புரிந்து கொண்டு நிறையப் பேர் புரியாதது போலவும் பரிதாபமாகவும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது. விலங்குகளை வேட்டையாடி உணவு கொண்டு வந்த மனிதன் இன்று மனிதர்களையே தினம் தினம் வேட்டையாடி வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டிருக்கிறான். இதன் முடிவுதான் என்ன என்று தெரியவில்லை.

"'சூரியன் மறைந்தால் என்ன? அதோடு உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா? இதோ நான் ஒருவன் இருக்கிறேனே' என்று பறையறைந்து கொண்டு கீழ்த்திசையில் பூரண சந்திரன் உதயமானான்." என்று இன்று சாதாரணமாகப் படுகிற ஒரு வாக்கியம் வருகிறது. 'ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்கும்' என்கிற அதே தத்துவம்தான் வேறீர் உவமைகளோடு சொல்லப் பட்டிருக்கிறது. கதவு திறக்கா விட்டாலும் மூச்சடைத்துச் சாகாத அளவுக்குச் சன்னல்களாவது திறக்கும். அப்படிப் பட்ட நம்பிக்கையில்தான் அடைபட்டுச் சிக்கிக் கொண்ட நிறையப் பேர் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எதுவுமே திறக்காமல் போய் விடுகிற வாழ்க்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அமாவாசை அன்று சூரியன் போனபின் பூரணச் சந்திரன் வரவா செய்கிறது?! அப்படி அமாவாசையாகப் போன வாழ்க்கைகளும் இருக்கத்தானே செய்கின்றன.

'சைனியம் தண்டு இறங்கியிருந்தது' என்றதொரு சொல்லாடல் 'சிவகாமியின் சபதம்' முழுக்க அடிக்கடி வருகிறது. அதன் பொருள் என்னவென்று புரிபட வில்லை. பழையவர்கள் யாராவது இருந்தால் புரிந்திட உதவுங்கள். பழமையையும் வென்ற புதியவர்களானாலும் சரி. :)

ஆசிரியர் காஞ்சியையும் வாதாபியையும் ஒப்பிட்டுப் பல பத்திகள் எழுதியுள்ளார். அதுவும் பண்பாட்டு ரீதியான வேறுபாடுகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இது போன்ற ஒப்பீடுகள் ஒருவரை உயர்வாகவும் இன்னொருவரைத் தாழ்வாகவும் காட்டி விடுவதால் ஒப்பீடுகள் என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்து விட்டது இப்போது. ஆனாலும் அப்பத்திகள் சுவாரசியமாக இருக்கின்றன.

"பழமையான காலத்திலிருந்து செல்வமும் பண்பாடும் சேர்ந்து வளர்ந்து வந்த நகரத்துக்கும் திடீரென்று செல்வம் படைத்துச் செழிப்படைந்த புதுப் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் அவளுக்கு நன்கு புலனாகி வந்தன. காஞ்சியில் செல்வத்திற் சிறந்த சீமான்களும் சீமாட்டிகளும் ஆடை ஆபரணங்கள் பூணுவதில் அடக்கம் காட்டுவார்கள். அவர்களுடைய அலங்காரங்களில் கலை உணர்ச்சியே பிரதானமாயிருக்கும். இந்த நகரிலோ எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் படாடோபமும் பகட்டும் தாண்டவமாடின. காஞ்சி வீதிகளில் தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியில் தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும்போது இடிமுழக்க ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடும்போது கூட அன்புடனும் ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள் வேலைக்காரர்களிடம் பேசும்போது கடுமையான மொழிகளையும் துர்வசனங்களையும் கையாண்டார்கள்." என்கிற வரிகள் இரு நகரங்களை மட்டுமல்ல இரு மனிதர்களை ஒப்பிடுவது போலவும் இருந்தது. 

எங்கள் ஊர்ப்பக்கம் புதுப் பணக்காரன் என்பார்கள். ஊருக்கு ஒருத்தர் அந்தப் பெயர் கொண்டிருப்பார். அதை அவர் பெருமையாக நினைத்தாலும் ஊர்காரர்கள் அதை ஒரு கேவலமான அடையாளமாகவே பயன் படுத்துவார்கள். 'அற்பனுக்கு வாழ்வு வந்தால்...' என்போமே அதுதான். எதையுமே புதிதாகப் பார்க்கிறவன் கொஞ்சம் கூடுதலாகக் குதியாளம் போடுவது இயற்கையான ஒன்றுதான். இதில் கொடுமை என்னவென்றால், இது புதுப் பணக்காரர்களுக்கு வந்திருக்கும் தன்னம்பிக்கையை உடைத்து வீசவும் பயன்படுத்தப் படும் உத்தி. திமிர் என்பது பரம்பரைப் பணக்காரனுக்கு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் படும்; புதியவனுக்கு இருந்தால் ஏற்றுக் கொள்ளப் படாது. காரணம்? அவன் காலம் முழுக்க அப்படியே இருப்பவன். இவன் வேறு மாதிரி இருந்து மாறுபவன். அதனால்தான். நமக்குத்தான் நம்மில் ஒருவன் - நம் மட்டத்தில் இருந்தவன், மேலே போனால் தாங்க முடியாதே. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!" என்கிற வரியும் நினைவுக்கு வருகிறது இவ்விடத்தில். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. சிலர் புற வாழ்க்கையில் எந்த நிலைக்குத் தாழ்ந்தாலும் பண்பில் தாழ்ந்து விடுவதில்லை. அதேவேளையில், சிலர் வெளி வாழ்க்கையில் எவ்வளவு வெற்றிகள் கண்டாலும் ஊரோடு போகும் வெள்ளத்திலும் நக்கித்தான் குடிக்கிறார்கள். இதுவும் கீழே இருப்பவன் மேலே செல்வதைக் கண்டு வயிற்றெரிச்சல் அடைந்தும் சொல்லப் படுவதுண்டு. அத்தகைய நேரங்களில் அதை நாம் ஏற்காமல் புறந்தள்ளி விட வேண்டும். அரசியலில் பரம்பரைப் பணக்காரர்கள் வந்தால் ஊழல் செய்ய மாட்டார்கள்; உயர் சாதியினர் மட்டுமே இருந்தால் நிறையத் தப்புகள் நடக்காது என்றெல்லாம் என்னைச் சுற்றி இருக்கும் நிறையப் பேர் அடிக்கடிப் பேசுகிறார்கள். காமராஜர் யார்? அதே கட்சியில் இன்று இருக்கும் உலக மகாக் கொள்ளையர்கள் யார்? இது விதிவிலக்கு என்று மட்டும் சொல்லிவிட்டுத் தப்பப் பார்க்காதீர்கள். காமராஜர் உடன் இருந்த கக்கன் யார்? ஓலைக் குடிசையில் உயிரை விட்ட ஜீவா யார்? கிடைத்த ஒரு கோடியையும் மக்களுக்குக் கொடுத்த நல்லகண்ணு யார்? எல்லாமே விதிவிலக்குகளா? இல்லையே! காலம் மாறி விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கீழோர் மேல் வந்ததால் ஏற்பட்ட மாற்றம் என்று சொல்லி முடிக்கவும் செய்யலாம். அதற்கு மேல் அது பற்றிப் பேசி முடிவு காண முடியாது.

"காஞ்சி வீதிகளில் புத்த பிக்ஷுக்கள், திகம்பர சமணர்கள், வைதிக சந்நியாசிகள், ஆண்டிகள், கபாலிகர்கள், வெறும் பிச்சைக்காரர்கள் ஆகியவர்கள் மொய்த்துக்கொண்டு வீதியில் போவோர் வருவோரின் பிராணனை வாங்குவது வழக்கம். தர்ம புத்தியுள்ள தனவான்கள் அதிகம் உள்ள இடத்திலே யாசகர் கூட்டமும் அதிகமாகப் பெருகிவிடும் போலும்! வாதாபியின் வீதிகளில் அம்மாதிரி பிக்ஷுக்களும் யாசகர்களும் அதிகம் காணப்படவில்லை. தர்மம் கொடுப்பவர்கள் இல்லாதபடியால் யாசகர்களும் இல்லை போலும்!" என்றும் காஞ்சியின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் படியான சில வரிகள் வருகின்றன. இவையெல்லாம் உண்மைதானா என்ற கேள்வி ஒன்றும் வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் விற்கப் போகும் கதை என்பதால் விடப்பட்ட கதைகளாகவும் இருக்கலாமல்லவா?! "கதைதானே அது; அதில் ஏன் இத்தனை சந்தேகங்கள் உனக்கு?!" என்கிறீர்களா?


"கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால், அவர் கருணாமூர்த்தி என்பதும் உண்மையானால், உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்களை வைத்திருக்கிறார்? மனித வர்க்கம் ஏன் இத்தனை கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது? இந்தக் கேள்விகள் ஆதிகாலந் தொட்டு கேட்கப்பட்டு வருகின்றன." என்கிறார் ஓரிடத்தில். அவற்றுக்கு ஒருபோதும் எல்லோரும் ஏற்கத்தக்க விடை கிடைக்கப் போவதில்லை. அப்படியெல்லாம் கேட்பதால் கோபப்பட்டு அவர் வந்து எல்லாப் பிரச்சனைகளையும் நமக்குத் தீர்த்துக் கொடுக்கவும் போவதில்லை. நம் பிரச்சனைகளை நாம்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கும். இல்லையா?!

"சோக ரசமுள்ள கதைகள், காவியங்களைப் படிக்கிறோம், சோகமயமான நாடகங்களைப் பார்க்கிறோம்; சோகத்தை ஊட்டும் கீதங்களைப் பாடுகிறோம், கேட்கிறோம். இப்படியெல்லாம் துன்பத்தை நாமாகத்தானே தேடி அனுபவிக்கிறோம்... எதற்காக? அந்தத் துன்பங்களிலேயெல்லாம் உள்ளுக்குள்ளே இன்பம் பொதிந்திருப்பதனாலேதான். நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. 'இது சகிக்க முடியாத கஷ்டம்' என்று தோன்றுகிறது. 'இந்த வாழ்க்கையே வேண்டாம்' என்று தீர்மானிக்கிறோம். எல்லாக் கஷ்டங்களையும் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். அப்படி நாம் அனுபவித்த சகிக்க முடியாத கஷ்டங்களைச் சில வருஷ காலம் கழித்து நினைத்துப் பார்க்கும்போது ஒருவகை அபூர்வ இன்பம் ஏற்படுகிறது. பழைய கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பதிலும் அவற்றைக் குறித்துப் பேசுவதிலும் சந்தோஷம் அடைகிறோம்." என்று சோகம் மற்றும் கஷ்டங்கள் பற்றி நீண்ட பத்திகள் எழுதியுள்ளார் கல்கியார். அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை அல்லவா? 

சாடிஸ்ட் அல்லது சேடிஸ்ட் (தமிழில் இரண்டுமே சரிதான். இதற்கொரு புதிய உயிரெழுத்து சேர்க்க வேண்டும் தமிழில். அதை யாராவது முதலமைச்சராக இருக்கிற ஆள் சொன்னால் ஏற்றுச் செய்வார்கள். நாம் சொன்னால் யார் கேட்பார்?) என்பவர் 'பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்' என்றே இவ்வளவு நாளாக நினைத்து வந்தோம் இல்லையா?! இனிமேல் அவர்களை மொட்டையாக 'துன்பத்தில் இன்பம் காண்பவர்' என்றே வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், தன்னையே துன்புறுத்திப் பார்த்துக் கொள்வோரும் இருக்கிறார்கள் அல்லவா? அல்லது, எல்லோருமே ஒவ்வொரு சூழ்நிலையில் தன்னையும் துன்புறுத்திப் பார்த்துக் கொள்வோரே என்றும் கூடச் சொல்லலாம். டவுசர் போடும் காலத்தில் காட்டுப் பக்கம் போய் காற்றுக்கு எதிராக நின்று கொண்டு இராமராஜனின் சோகப் பாடல்களைப் பாடிப் பாடி வம்படியாக சோகத்தை வரவழைத்துக் கொண்ட அனுபவங்கள் உங்களுக்கெல்லாம் உண்டா என்று தெரியவில்லை. இருந்தால் இந்த வரிகளை நிச்சயம் சிலாகிப்பீர்கள்.

"இந்த வராக நதியில் தலை கீழாக நின்றால் தண்ணீர் மூக்கு வரை வரும்." என்று பாண்டிய நாட்டுப் போர்வீரன் ஒருவன் நக்கலடிக்கிற வரி ஒன்று வருகிறது. பாண்டிய நாட்டில் உள்ள நதிகளில் தலை கீழாக நின்றாலும் கூட மூக்கில் இருந்துதான் தண்ணீர் வர வேண்டும். ஆற்றில் வராது. நக்கல் அடிப்பதில் கில்லாடிகள் அவர்கள். மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்க்கும்போதெல்லாம், 'இதை எப்படி எம் மூதாதையர் கட்டினார்கள்? இவ்வளவு பெரிய கோயிலை வாயிலேயே கட்டுவது அவ்வளவு எளிதில்லையே! ஒருவேளை அடுத்த நாட்டுப் போர்க் கைதிகளை வைத்துக் கட்டியிருப்பார்களோ?!' என்றெல்லாம் தோன்றும் எனக்கு. :)

"துயரத்தினாலும் கவலையினாலும் தூக்கம் கெடுவதைக் காட்டிலும், எதிர்பாராத சந்தோஷங்களாலும் உள்ளக் கிளர்ச்சியாலும் உறக்கம் அதிகமாகக் கெடும்..." என்று ஒரு வரியில் சொல்கிறார். முதன்முதலில் வேலை கிடைத்த சேதி கிடைத்த நாளில் எனக்கு அப்படித்தான் இருந்தது. உங்களுக்கும் அது போலப் பல தருணங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

"இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாதாபிப் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து பாண்டிய நாட்டை அடைந்தபோது நெல்வேலிப் போர்க்களத்தில் அவனைப் பாண்டியன் நெடுமாறன் முறியடித்துத் தமிழகத்தின் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றான்." என்றொரு தகவல் வருகிறது. இது என்னை ஈர்த்ததன் காரணங்கள் இரண்டு - ஒன்று, நெல்வேலி; மற்றொன்று, நெடுமாறன். நெல்வேலி என்பது கண்டிப்பாகத் திருநெல்வேலியாகத்தான் இருக்க வேண்டும். அன்று முதல் இன்றுவரை அது ஒரு போர்க்களமாக மட்டுமே இருக்கிறது. வேறு எதற்கும் லாயக்கில்லை. போர்க்களத்தில் ஊரைக் கட்டிய பாவத்தால் வந்த வினையென நினைக்கிறேன். அதுபோல, சிராப்பள்ளிதான் பின்னர் திருச்சிராப்பள்ளி ஆகியிருக்கிறது; ஆரூர்தான் பின்னர் திருவாரூர் ஆகியிருக்கிறது; அண்ணாமலைதான் திருவண்ணாமலை ஆகியிருக்க வேண்டும். பதிதான் திருப்பதி ஆனதா என்று தெரியவில்லை. நெடுமாறன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பெயர். அந்தப் பெயர் கொண்டிருக்கும் தலைவரைக் கூட எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். அது ஒரு வீரமிகு பாண்டிய மன்னனின் பெயர் என்பதை அறியும்போது மரியாதை இன்னும் கூடுகிறது. கொலைகாரப் பாவி என்றும் சொல்லலாம். ஆனால் வேண்டாம். மண்ணைக் காக்க மண்டைகளை உருட்டுவது மகத்தான தேசப் பணி. அதைப் போய் அப்படியெல்லாம் சொல்லலாமா? மாறன் என்ற சொல் எதனோடு சேர்ந்தாலும் நல்ல தமிழ்ப் பெயராகவே ஆகிறது. அத்தகையத் தமிழ்ச் சொல் அது. சமீபத்திய தமிழ் கூறும் நல்லுலகின் கொள்ளை அரசியலுக்குப் பழக்கப் பட்டுப் போன இரு பெயர்கள் - நிதியும் மாறனும். மாறன் சுத்தத் தமிழ். நிதி தமிழே அல்ல. வடமொழித் தழுவல். அது தமிழைக் காக்க வேண்டும் என்று நம்பித்தான் ஏமாந்து போனோம். நிதி பெருக்குவதில் காட்டிய ஆர்வத்தைத் தமிழ் காப்பதில் காட்டவில்லையே என்ன செய்ய?

"வேங்கி அரசன் ஆதித்த வர்மன் மாமல்லருடைய தயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன் வம்சத்தில் பிறந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில் கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள்." என்கிற வரிகள் மாமல்லர் அல்லது பல்லவர்களின் இன ஆராய்ச்சியில் இன்னும் குழப்பத்தை உண்டு பண்ணுபவை என நினைக்கிறேன். 

"குண்டோதரன் தன் மனத்திற்குள், 'ஆ! ஸ்திரீகளைத் திருப்தி செய்வது மிகவும் கடினமான காரியம். இப்படி திருப்தி செய்ய முடியாத ஸ்திரீகளுக்காகச் சிலர் இத்தனை சிரமம் எடுத்துக்கொண்டு இப்படி உயிரை விடுகிறார்களே? என்ன பைத்தியக்காரத்தனம்!' என்று எண்ணினான்." என்று ஒரு பத்தி வருகிறது. ஆக, அப்போதும் பைத்தியக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். தெளிந்த கட்டைகளும் இருந்திருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், அடுத்தவனுக்கு நிகழும்போது எல்லாம் தெளிவாக யோசிப்பவர்கள் தனக்கு வருகிற தலைவலி மட்டும் வலிக்கிறதென்று தலை கீழாக நின்று குதிப்பார்கள். அதுவும் இந்த ஸ்திரீகள் மேட்டர் அப்படியொரு தலைவலி நிறைந்த மேட்டர். இல்லையா? :)

"பழைய பாரத நாட்டில் இராஜங்கங்களும் இராஜ வம்சங்களும் மாறியபோது சமயங்களுடைய செல்வாக்கு மாறுவதும் சர்வ சாதாரணமாயிருந்தது. இந்த நாளில் போலவே அந்தக் காலத்திலும் விசால நோக்கமின்றிக் குறுகிய சமயப்பற்றும் துவேச புத்தியுங் கொண்ட மக்கள் இருக்கவே செய்தார்கள். சமரச புத்தியுடன் சகல மதங்களையும் ஒருங்கு நோக்கிக் கலைகளை வளர்த்து நாட்டிற்கே மேன்மையளித்த புரவலர்களும் அவ்வப்போது தோன்றினார்கள்." என்கிறார் ஆசிரியர். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தில் என்றில்லை. எந்தக் காலத்தில் இந்த உலகம் அழிய நேர்ந்தாலும் அதற்கு இந்த மத வெறி பிடித்த மண்டையர்கள்தான் காரணமாக இருப்பார்கள். இந்த மதம் அந்த மதம் என்றில்லை. எந்த மதமாக இருந்தாலும் பிடித்து விட்டால் அது பீடைதான். அவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் வாழும் ஊருக்கும் நாட்டுக்கும் மொத்த உலகுக்கும். என்ன சொல்கிறீர்கள்? பற்று என்கிற வரை ஓகே. பித்து என்றாகி விட்டால் தெளிய வைப்பது சிரமம்தான்.

"அண்ணா! ஒன்று நான் தெரிந்து கொண்டேன். இளம் பிராயத்திலிருந்தே பிரம்மசரியத்தையும் பிக்ஷு விரதத்தையும் மேற்கொள்வது ரொம்பத் தவறானது. இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து விட்டுத் தொலைத்த பிறகுதான் சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும். வாலிபத்திலேயே வாழ்க்கை வைராக்கியம் கொள்கிறவர்கள் உன்னைப்போல் தான் பிற்காலத்தில் யாராவது ஒரு மாயக்காரியின் மோக வலையில் விழுந்து பைத்தியமாகி விடுகிறார்கள்!" என்று புலிகேசி நாகநந்தியிடம் சொல்வதாக வருகிறது. இது முழுக்க முழுக்க உண்மை. அது அதை அந்தந்த வயதில் செய்யாதவர்கள் பின்னர் அவற்றைச் செய்யக் கூடாத வயதில் அதிகம் செய்வோராகவே வருவர். எனவே வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி கூடச் சில நேரங்களில் நல்லதில்லை. எங்கள் ஊரில் என்னுடைய உறவினரே ஒருத்தர் இது போல் இருந்தார். கடைசிக் காலம் வரை சாமியார் போல வாழ்ந்து விட்டு வாழ்வில் பொழுது சாய்கிற நேரம் ஒரு சாமியார் வேடம் தரித்த பெண்ணோடு சேர்ந்து வாழ நேரிட்டது. எதிரெதிர் துருவங்கள் ஈர்த்தன என்பது ஒருபுறம் என்றாலும் வாழ்வின் வெறுமை சும்மா இருக்க விடாது. அதுபோலவே பள்ளிக் காலங்களில் அநியாயத்துக்கு ஒழுக்கமாக இருந்த சில நண்பர்களை இப்போது பார்க்கையில் "இவனா இப்படி?" என்று கேட்கிற அளவு மாறியிருப்பது கண்டும் இது சரிதான் என உறுதி செய்ய முடிகிறது. சில சாமியார்கள் பெண்கள் விஷயத்தில் பலவீனமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்க முடியும். இதற்காகவே சாமியார் ஆவோரை விட்டு விடுங்கள். நல்லபடியாகத் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்கள் திடீரென இப்படியெல்லாம் மாறுவது இந்த விதியின் படிதான் என நினைக்கிறேன்.

"மனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அவர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. இன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணரச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்க பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும் அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. இரத்தத்தைப் பார்க்கப் பார்க்க இரத்தவெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும்போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய இரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவிந்து கிடந்த மனித உடல்களையும் பார்த்து, படுகாயமடைந்து உயிர் போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்டபிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், 'இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு? மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக?' என்ற கேள்விகள் எழுந்திருந்தன." என்ற நீண்ட பத்தி வன்முறை பற்றிய இரு வேறு சுபாவங்களை நன்றாகச் சொல்கின்றன.

இன்றைய சினிமாக்கள் அதைத்தான் செய்து கொண்டு வருகின்றன. என்றோ பார்க்க நேரும் இரத்தத்தை தினம் தினம் திரையில் பார்த்து அது மீதான பயமோ பரிதாபமோ சிறிதும் இல்லாமல் போய் விட்டது நமக்கு. இராணுவம் என்கிற அமைப்பே மனித இனத்துக்கு எதிரானதுதான். கொல்வதும் கொல்லப்படுவதும் தம் அன்றாடப் பணிகள் என்றாகி விட்டால் மனித உயிருக்கு மரியாதை எப்படி இருக்கும்? போர்களில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு மனநிலை தவறியவர்களும் உண்டு. அதுபோல நிறையக் கொடுமைகள் செய்ய ஏதுவாக அடிக்கடிப் போர்கள் நடக்காமல் இருக்கின்றனவே என்று மனநிலை தவறியவர்களும் உண்டு. ராகிங் எனப்படும் கொடூரம் இன்னமும் எதனால் நடக்கிறது? சேர்ந்த வருடம் அடி வாங்கிய ஒருவன் அடுத்த வருடம் அதே துன்பத்தைத் தனக்கு இளையவர்களிடம் செய்யக் கூடாது என்று நினைத்தால் அது முடிந்திருக்கும். அடித்தவனைத் திருப்பி அடித்திருந்தாலும் முடிந்திருக்கும். வலியவனிடம் வீழ்ந்து விட்டு வந்து தன்னை விட எளியவனை வீழ்த்துவதே இந்த உலகில் பிறந்த கையாலாகாத எல்லோருக்குமே பழக்கமாகிப் போய்விட்டது. தம் உணவுக்காகப் பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகளை விட பிற உயிர்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் விலங்குகள் கேவலமானவையல்லவா?

"நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்தக் கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலை நாட்டிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் பழி வாங்க முற்படுவதால், இரு தரப்பிலும் குற்றமற்ற ஜனங்கள் அல்லவா சொல்லமுடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்." என்று வருந்துகிறார். இந்த வருத்தத்துக்கு மனித குலம் அழிந்தொழியும் வரை முடிவே இல்லை என நினைக்கிறேன். ஹிட்லர் என்ற ஒரு மனிதனால் எத்தனை உயிர்கள்? ஒசாமா என்ற ஒரு மனிதனால் எத்தனை உயிர்கள்? புஷ் என்ற ஒரு மனிதனால் எத்தனை உயிர்கள்? கொடுமை என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் வெல்லம் தின்பவன் விரல் சூம்புவதில்லை. அனைத்துக்கும் காரணமான எதிரிகள் கூட பகையை மறந்து விட்டுப் படுத்துத் தூங்கப் போய் விடுவார்கள். அவர்களின் எடுபிடிகளான பொதுமக்களும் படை வீரர்களும்தாம் பகையை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு சென்று தம்மை மாய்த்துக் கொள்வர்.

"ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடிய காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளின் செய்து விடலாம் என்னும் உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்தார்." என்கிற வரிகள் அப்போதே திட்டமிடல் நுட்பங்கள் மற்றும் பணித்திட்ட மேலாண்மை (PLANNING TECHNIQUES AND PROJECT MANAGEMENT) போன்றவை முதிர்வடைந்திருந்தன என்பதற்குச் சான்று. எப்போது? பரஞ்சோதி காலமா கல்கி காலமா என்பது சரியாகத் தெரியவில்லை. :)

"பிரபு! குழந்தைகளுக்கும் ஸ்திரீகளுக்கும் எந்த விதத்திலும் துன்பமுண்டாகக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஆண் மக்களில் எதிர்த்தவர்களையெல்லாம்  கொன்று விடும் படியும் பணிந்தவர்களையெல்லாம் சிறைப்பிடிக்கும்படியும் கட்டளையிட்டிருக்கிறேன். வாதாபி நகரில் ஒரு வீடு மிச்சமில்லாமல் எரிந்து சாம்பலாக வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறேன். தீயை அணைக்க முயல்வோரை எல்லாம் கொன்று விடும்படி சொல்லியிருக்கிறேன். நகரை விட்டு ஓட விரும்பும் பிரஜைகளைப் போக விடும்படியும், ஆனால் அவர்கள் எந்தவிதமான பொருளையும் கொண்டு போக விடக் கூடாது என்றும் ஆக்ஞையிட்டிருக்கிறேன். நம்முடைய வீரர்கள் வாதாபி நகரிலிருந்து அவரவர்களால் முடிந்தவரையில் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றும், ஒவ்வொருவரும் கொண்டு வருவதில் பாதிப் பொருள் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஏதேனும் கட்டளையிட்டிருந்தாள் தெரியப் படுத்த வேண்டும்." என்று பரஞ்சோதி சொல்வதாக ஒரு நீண்ட பத்தி வருகிறது. 

இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் பாதித்த பத்தி இதுதான். இதைப் படிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருந்தது. போர் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது மிக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஒரேயோர் ஆறுதல் அந்தக் காலத்தில் போர் புரிந்தோர் குழந்தைகளையும் பெண்களையும் மதித்தார்கள்; இப்போது வந்திருக்கும் தீவிரவாத மிருகங்கள் அந்த விதிகளையும் உடைத்து வீசி விட்டன. 'எதிர்ப்போரைக் கொல்; பணிவோரைக் கைது செய்!' என்கிற பாணி பணிவுக்கு வாழ்நாள் அதிகம் என்கிற உண்மையை உணர்த்துகிறது. ஆனால், கைது செய்து கொண்டு வந்து என்னென்ன கொடுமைகள் செய்வார்களோ என நினைத்தால் அதுவும் தலை சுற்றத்தான் வைக்கிறது. கொள்ளையடித்தலும் ஊரைக் கொளுத்தலும் போரின் முக்கிய உட்பணிகள். கொள்ளையில் பங்கு என்பது கொள்ளையை நல்லபடி நடத்தி முடிக்க நல்லதொரு உத்தி. எல்லாக் காலத்திலும்.

"எதிரில் பாயும் புலியைக் காட்டிலும் காலடியில் நெளிந்து ஓடும் பாம்பு அதிக அபாயம் உள்ளதல்லவா?" என்று மாமல்லரிடம் பரஞ்சோதி சொல்வதாக ஒரு வரி வருகிறது. அபாயம் எதில் அதிகம் என்பதை சைஸை வைத்து முடிவு செய்யக் கூடாது அதன் அருகாமையை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்பதற்கான கல்கி காலத்து எடுத்துக்காட்டு இது.

"எத்தகைய ஆபத்திலிருந்தும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யும் இயற்கைச் சுபாவத்தை ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவன் அளித்திருக்கிறான் அல்லவா?" என்று ஒரு கேள்வி கேட்கிறார். உண்மை. அந்த சுபாவம்தான் பின்னர் ஆபத்தே இல்லாத பொழுதுகளில் கூட தன் சுக போகங்களுக்காக மற்ற உயிர்களைக் கொன்று போட்டு விட்டுப் போகும் சுபாவமாக மாறியது.

"அவளுடைய அடி வயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி மேலே வந்து மார்பையும் தொண்டையையும் அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமலும் தேம்பி அழுவதற்கு முடியாமலும் செய்தது." என்றோர் இடத்தில் சொல்கிறார். இதைப் படித்தவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? ஆம். "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி!" என்ற 'காதலன்' திரைப்படத்தில் வரும் வைர வரிதான் எனக்கும் நினைவுக்கு வந்தது. காப்பி அடித்தாரா அல்லது இவரும் அவரைப் போலவே சிந்தித்தாரா என்று தெரியவில்லை.

ம்ம்ம்... இத்தோடு நான் எழுதி வைத்திருந்த குறிப்புகள் முடிவுக்கு வருகின்றன.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...