புதன், செப்டம்பர் 28, 2011

சாம, தான, பேத, தண்டம்

சாம, தான, பேத, தண்டம்...

இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...

எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.

நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடியாக மூன்றாவதுக்குப் போனால் கொழுப்பு என்று அர்த்தம். அது மட்டுமில்லை, பிரச்சனை திசை திரும்பி விடவும் வாய்ப்பு இருக்கிறது. நேரடியாக நான்காவதுக்குப் போனால் சல்லிப் பயல் என்று அர்த்தம். என்றோ ஒருநாள் அவனும் தண்டத்துக்குப் பலியாகப் பிறந்தவன் என்று டைரியில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

எதிரியிடம் மட்டுமில்லை. குழந்தைகளிடம் கூட இந்த முறையையே கடை பிடிக்க வேண்டும் என்று கூட ஒரு சிலர் எழுதி இருக்கிறார்கள். சிலர் தீவிரவாதிகளோடு இந்தியா இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதையே சிலர் கொஞ்சம் மாற்றி, பாகிஸ்தானோடு இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் ஈழத்தில் நம்மவர்கள் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில், யாரோடு சிக்கல் வந்தாலும் இதை முயன்று பார்க்கலாம் போலத் தெரிகிறது.

இவை நான்கும் வடமொழி வார்த்தைகள் என்றும் சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி. அதன் படியே, மகாபாரதத்தில் முதல் மூன்றும் முயன்று பார்த்தும் முடியாமல் போனதால் பாண்டவர்கள் போரில் இறங்கி விட முடிவு செய்ததாகச் சொல்லப் படுகிறது. மகாபாரதத்துக்கு முன்பே சாணக்கியர் வாழ்ந்தாரா அல்லது மகாபாரதத்தை வைத்தே அதைச் சொன்னாரா என்பதெல்லாம் தெரியவில்லை. விபரம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் விளக்கிச் சொல்லவும்.

இன்னொரு மேட்டர்: சாணக்கியர் பிறப்பால் தமிழ் பிராமணர் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இது பற்றி தகவல் ஏதேனும் உண்டா?

சனி, செப்டம்பர் 17, 2011

பதிவிடுதல் - பல கேள்விகள்

சக ஆங்கிலப் பதிவர் திரு. ஹரிஹரன் அவர்கள், இன்று வெள்ளி விழா கொண்டாடுகிறார். Valady Views என்ற தளத்தில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இன்று அவருடைய இருபத்தி ஐந்தாவது இடுகையை இட்டிருக்கிறார். அந்த இடுகையின் தலைப்பு ???. அவ்வளவுதான். மூன்றே மூன்று கேள்விக் குறிகள். ஆனால், உள்ளே ஏகப் பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார். அனைத்தும் சக பதிவர்களுக்கான கேள்விகள். முதலில் இவ்வளவு சீக்கிரமாக இருபத்தி ஐந்து இடுகைகள் இட்டமைக்கு அவரை வாழ்த்துவோம். இரண்டே மாதங்களில் இதைச் செய்திருப்பதுதான் சாதனை. அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார், இல்லையா? என் பதில்களை அவருடைய இடுகைக்குக் கீழ் ஒரு கருத்துரையாக இட்டிருக்கலாம். ஆனால், அது அவருடைய இடுகையை விடப் பெரிதாக வருவதால், அதையே ஒரு இடுகையாக என் பதிவில் இட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நமக்கும் ஒரு நம்பர் கூடிய பெருமை கிடைக்கும் அல்லவா? இதோ...

முதலில் அவரையே அவர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள். அவற்றுக்கு என் பதில்களையும் கொடுத்து விட்டு, பின்னர் அவர் மற்றவர்களுக்குக் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்ப்போம்...

கே: எது என் முதல் இடுகையை எழுத உந்துதலாக இருந்தது?
ப: எனக்கு எப்போதுமே எழுதுதல் பிடிக்கும். தமிழில் நிறைய எழுதுவேன். ஆனால், தமிழில் எப்படித் தட்டச்சு செய்வது என்று தெரியாததால் பதிவுலகில் முதலில் ஆங்கிலத்தில்தான் ஆரம்பித்தேன். இப்போது ஆங்கிலத்தை விடத் தமிழில்தான் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும், என் பெரும்பாலான இடுகைகள் இரண்டு மொழிகளிலும் இருக்கின்றன. ஒன்றில் எழுதி மற்றொன்றுக்கு மொழி பெயர்ப்பு செய்கிறேன். தமிழ் தெரியாத நண்பர்களும் எனக்கு சமமான அல்லது அதிகமான அளவில் இருப்பதால் இப்படிச் செய்கிறேன். முதன் முதலில் பதிவிட ஆரம்பித்ததும் நான் எழுதிய முதல் இடுகையில் சொன்னது போல... எனக்கு நிறைய எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது; ஆனால், என் எழுத்துக்களை அவை எழுதப் பட்டதன் பின்னணி அறியாத ஒருவர் திருத்தம் செய்வதில் எனக்கு ஈடுபாடு இல்லை. சின்ன வயதில் இருந்தே டைரி எழுதும் பழக்கமும் எனக்கு இருந்து வந்தது. பதிவிடுதல் என்பது டைரி எழுதல் மற்றும் பத்திரிகையியல் ஆகிய இரண்டின் பரிபூரணக் கலவையாக இருக்கிறது. என் முதல் ஆங்கில இடுகை இன்னும் இங்கு இருக்கிறது - "Well begun is half done". பின்னர், அதற்கு முன்பு எழுதியிருந்த பல எழுத்துக்களையும் பழைய தேதிகளில் ஏற்றினேன். இப்போதும், என் பழைய டைரிகளில் இருந்தும் கிழிந்த பேப்பர்களில் இருந்தும் கிடைக்கும் என் பழைய எழுத்துக்களைக் கண்டெடுக்கும் போதெல்லாம் அதைச் செய்கிறேன். தேவைக்கும் மேலான விளக்கம் இது என்பதை நன்கறிவேன். ஆனால், இப்படித்தான் நான் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பழகி விட்டேன். :)

கே: இப்போதும் அந்த உந்துதல் இருக்கிறதா?
ப: ஆம். அப்படியே இருக்கிறது. இதில் வசதிகள் அதிகம் இருப்பதால் டைரி எழுதுவதைக் கூட நிறுத்தி விட்டேன் இப்போது.

கே: எது என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது?
ப: சின்ன வயதில் இருந்தே நான் ஒரு பெரிய எழுத்தாளர் ஆகப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அதில் துளி கூட இன்னும் வரவில்லை என்பதையும் அறிவேன். இது என் பயிற்சிக் களம். அவ்வளவுதான். இந்தப் பயிற்சி மூலம் இன்று நான் எழுதுவது நேற்றை விடச் சிறப்பாக இருக்க முடியுமானால் அதுவே போதும். அது ஒன்றுதான் என் பதிவிடலுக்கான காரணம். எனவே, ஓர் இடுகையில் கிடைக்கும் ஒரே ஒரு பாராட்டு அல்லது ஒரு கருத்துரை கூட என்னை மேன்மைப் படுத்துகிறது அல்லது அப்படி உணர்கிறேன். இரண்டுமே தொலை நோக்கில் நல்லதுதானே. இதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. எவருமே என் பதிவைப் பற்றி எதுவுமே சொல்லியிரா விட்டால் 'ஒருவேளை' நான் பதிவிடுவதை நிறுத்தி இருக்கலாம். 'ஒருவேளை' என்று ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பாராட்டும் இல்லாமலே நீண்ட காலம் எழுதிக் கொண்டும் வந்தேன். அதன் காரணம் - வாசிக்க ஓர் ஆள் இருக்கிறாரா இல்லையா என்பதை மீறி எழுத்தின் மீது எனக்கிருந்த ஆர்வம். ஒருத்தரும் சிக்கா விட்டால், நானே என் வாசகனாக இருந்து விட்டுப் போகிறேன் என்பதுதான் நான் நினைத்தது.

கே: ஒவ்வொரு படைப்புக்கும் தலைப்பை எப்படித் தேர்வு செய்தேன்?
ப: இந்த உலகத்தில் உள்ள எல்லாம் பற்றிப் பேச வேண்டும் என்பதே என் பேராசை. சர்ச்சைக்குரிய எல்லா விஷயத்திலும் சமச்சீரான ஒரு கருத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப் படுபவன் நான். ஆங்கிலத்தில் துலாம் இராசிக்காரனான நான், சரியான பக்கம் நிற்பதை விட சமமான இடத்தில் நிற்க விரும்புவது இயற்கைதானே. மற்றபடி, சர்ச்சைகள் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. வாதத்துக்கு மருந்தே இல்லை என்று நம்புவோரில் நானும் ஒருவன். அந்த வகையில் பதிவுலகமும் நிறைய முதிர்ச்சி பெற்றிருக்கிறது. தன் கருத்துக்கு ஒத்து வராத மாதிரி யோசிப்பவர்களை எவரும் கண்டு கொள்வதில்லை. பொதுவாக, ஒத்து வரும் மாதிரியான பதிவர்களின் படைப்புகளை மட்டுமே நாம் வாசிக்கிறோம். இந்த வசதியும் பதிவுலகை நான் விரும்புவதற்கு இன்னொரு காரணம். விஷயத்துக்கு வருவோம்... நான் எழுத விரும்பும் விஷயங்கள் என்று என்னிடம் ஒரு மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இது வளர்ந்து கொண்டே வருகிறது. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது மட்டுமே எழுதுவேன். அது பொதுவாக வார இறுதி நாட்கள். இன்னொரு வகைத் தலைப்புக்கள் இருக்கின்றன. அவை ஒருபோதும் அந்தப் பட்டியலில் இடம் பிடிப்பதில்லை. நேரடியாக வந்து எழுத ஆரம்பித்து விடுவேன். அவைதான் எழுதியே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் விஷயங்கள். பெரும்பாலும் நாட்டு நடப்புகள் பற்றிய விஷயங்கள். ஹரிஹரன் அவர்களின் இருபத்தி ஐந்தாவது இடுகையும் அப்படியொரு கட்டாயப் படுத்திய விஷயம். அந்தப் பெரிய பட்டியலுக்குள் நுழையாமலே பதிவுக்குள் வந்த ஒரு விஷயம். அவருடைய இடுகையைப் படித்த உடனேயே இதை எழுத ஆரம்பித்து விட்டேன். ஒருவேளை, அது வார இறுதியில் வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். :)

கே: தலைப்பை உண்மையிலேயே தேர்வு செய்தேனா அல்லது எழுதுவதற்குக் கட்டாயப் படுத்தப் பட்டு எழுதினேனா?
ப: இரண்டும். என் முந்தைய பதில் இதற்கான பதிலைச் சொல்லி விட்டது என நினைக்கிறேன். நீளமான பதில்கள் சொல்வதில் உள்ள வசதி இதுதான். :)

இதோ இவைதான் அவர் தன் சக பதிவர்களைக் கேட்டிருக்கும் கேள்விகள்...

கே: எதைப் பற்றி எழுதுவது என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?எப்போதுமே கட்டாயப் படுத்தும் கதை ஒன்று உங்களிடம் இருக்கிறதா - அரசியல்க் கதையாகட்டும், சொந்தக் கதையாகட்டும், ஒரு காதல்க் கவிதையாகட்டும், புகைப்படம் ஆகட்டும், சமையல்க் குறிப்பு ஆகட்டும், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இடத்தைச் சென்று பார்த்த அனுபவமாகட்டும் - ஏதோவொன்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? அப்படிக் கட்டாயப் பட்டு எழுத நேர்கையில் அதில் ஆய்வுக்கான பங்கு என்ன? ஆய்வு செய்யாமல் புதிய சிந்தனைகள் எப்படிக் கிடைக்கின்றன? புதுப் புது விஷயங்களில் எப்படிக் கருத்துக்கள் பெறுவது?
அல்லது முதலில் தலைப்பை முடிவு செய்து அதில் ஆய்வு செய்கிறீர்களா? அப்படியானால், உணர்வு பூர்வமாக அதில் எப்படி இறங்க முடியும்? அது அறிவார்ந்ததாகவும் படைப்பாற்றலுக்கு வேலையில்லாததாகவும் ஆகி விடாதா? அது கருத்தை விடப் படிவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகி விடாதா?
ப: கேள்வியின் சில பகுதிகள் ஏற்கனவே பதில் அளிக்கப் பட்டு விட்டன. பதில் அளிக்கப் படாத பகுதிகளுக்குப் பதில் அளிக்க முயல்வோம் இப்போது. பொதுவாக நான் பதிவிடும் விஷயங்கள் பற்றி அதிக அளவில் ஆய்வுகள் செய்வதில்லை. பெரும்பாலும் மனதில் ஏற்கனவே பதிவாகி இருக்கும் விஷயங்களையே இங்கு இறக்கி வைக்கிறேன். கருத்துருவாக்கமோ பிரச்சாரமோ நியாயப் படுத்தல்களோ செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாததால் தகவல்கள் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. மாறாக, ஒரு பதிவன் என்ற முறையில் என் குழப்பங்களைப் பகிர்ந்து கொள்வதையும் அதன் மூலம் வாசிப்போரையும் குழப்பமடைய வைப்பதையும் அவர்களுக்கும் புதிது புதிதாகப் பல கேள்விகளை எழ வைப்பதையும் அதன் மூலம் அவர்களையும் பதில்கள் தேட வைப்பதையும் என் முதன்மையான கடமையாகக் கருதுகிறேன். மேலும், ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் முழு நேர ஊழியனாக இருந்து கொண்டு, எடுத்துக் கொள்ளும் எந்தப் பிரச்சனையிலுமே அதன் வேரை அடைய முயற்சிக்கும் அளவுக்கு எனக்கு ஒருபோதும் நேரம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அவ்வாறு பிரச்சனைகளின் வேரை அடைந்தவர்களும் ஒரு வேரைத்தான் அடைந்திருப்பார்கள்; மற்ற பல வேர்களை மறந்திருப்பார்கள் அல்லது மறுத்திருப்பார்கள். எப்போதுமே இப்படித்தான் இருப்பேனா என்று தெரியவில்லை. இப்போதைக்கு எனக்குப் போதுமான அறிவு இல்லை; போதுமான வாசிப்பு இல்லை; எனவே, இப்படி இருப்பதே நல்லது. ஒருவேளை இன்னும் கொஞ்சம் அறிவாளியாகும்போது கருத்துருவாக்கங்கள் செய்து அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும் செய்வேன். இப்போதைக்கு என் நிலைப்பாடு என்னவென்றால், இந்த உலகம் இவ்வளவு பிரச்சனைக்குரியதாக இருப்பதற்கு மூல காரணம் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்வோர் அல்ல; ஏற்கனவே ஏகப் பட்ட கருத்துக்கள் கொண்டிருப்போரே; எனவே எல்லாத்திலும் ஒரு பிடிவாதமான கருத்துக் கொண்டிருப்பதை விட எல்லாத்தையும் கேட்டுக் கொள்ளும் திறந்த மனம் கொண்டிருப்பதே மேல். மற்றபடி, மிக எளிதாக நிலைப்பாடு எடுக்க முடிந்த பிரச்சனைகளில் எனக்கும் கருத்துக்கள் இருக்கின்றன; நானும் அவற்றை நேரடியாகவே வெளிப் படுத்துகிறேன். மென்மேலும் படித்து உங்களைப் போன்ற பலரிடம் உரையாடி மற்ற விஷயங்களிலும் நான் இந்த நிலையை அடையலாம் ஒரு நாள்.

கே: அடக்க முடியாத ஏதோவோர் உள்ளுணர்வு உங்களை எழுதத் தூண்டுகிறதா? அல்லது பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக எழுதுகிறீர்களா? 

இப்போதைய நிலவரத்தைப் (TREND) பார்த்து அதற்குள் குதிக்கிறீர்களா? எதார்த்தவாதம் எனலாம் அதை. அல்லது ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாக உணர்ந்து அதுவே ஒருநாள் 'நிலவரம்' ஆகும் என்று உணர்கிறீர்களா? எதார்த்தவாதமா அல்லது இலட்சியவாதமா? எது உங்களை இயக்குவிப்பது?

ப: இரண்டுமே. ஏற்கனவே சொன்னது போல, நான் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்தி விட்டு உடனடியாக அது பற்றி எழுதப் பணிக்கும் விஷயங்களும் உண்டு. என் நீண்ட பட்டியலுக்குள் இடம் பிடித்து நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதப் படும் விஷயங்களும் உண்டு. இரண்டாவது வகை, என் கருத்துக்களையும் வெளிப்படுத்தி, கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்தப் படும் விஷயங்கள். கூட்டம் ஏன் சேர்க்க வேண்டும்? பிறர் கவனத்துக்காக ஏன் அலைய வேண்டும்? என் எழுத்துக்களை நிறையப் பேர் படித்து அவர்களுடைய கருத்துக்களைச் சொன்னால் என் எழுத்தாற்றலை மேன்மைப் படுத்த அது உதவும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு விமர்சனங்களில் அதிக ஆர்வம் இல்லை. என்னை வாசிப்போர் என்னைப் பாராட்ட வேண்டும், என் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும், என்னை இதை விடப் பரவாயில்லாத எழுதுபவனாக மாற்ற வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். எனக்கு ஒருவருடைய எழுத்து ஈர்க்காத போது அவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விடுவேன். அவர்கள் எழுதியது குப்பை என்று ஒருபோதும் சொல்வதில்லை. அதையே நான் பிறரிடமும் எதிர் பார்க்கிறேன். மற்றபடி, குறிப்பிட்டுச் சொல்லப் படும் குறைபாடுகள் எனக்குப் பிடிக்கும். அவைதான் என்னைச் சரி செய்து கொள்ளவும் வளர்த்துக் கொளவும் உதவப் போகின்றவை. வேறுபாடு சரியாகப் புரிகிறது என்று கருதுகிறேன். ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாக உணர்ந்து அதுவே ஒரு நாள் 'நிலவரம்' ஆகும் என்று உணர்கிறேனா? இல்லை. அபூர்வமாக அப்படி உணர்ந்திருக்கிறேன். மாறாக, நான் தீவிரமாக உணரக் கூடிய ஆனால் ஒருநாளும் அது ஒரு நிலவரம் ஆகாது என்று எண்ணக் கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. அவ்விஷயங்களைப் பற்றி நான் எழுதாமல் விட்டு விடுவதில்லை. அதைப் பெரும்பாலானவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் யாரோ ஓரிருவர் அதை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதி விடுவேன். அதுவே எனக்குப் போதும். அதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யார் மதித்தாலும் மதிக்கா விட்டாலும் என்றுமே நான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் எழுதி விடுவேன். ஒருவேளை, நான் இதை விடப் பரவாயில்லாத எழுதுபவனாக ஆகையில் இவற்றை மேன்மைப் படுத்தி வேறுவிதமாக உலகத்தாருக்குப் படைக்கலாம். ஆனால், அவற்றை விட்டு விட்டுப் போவது மட்டும் இல்லை. ஏனென்றால், அவை விரிசல்களுக்குள் விழுந்து தொலைந்து போக நேரலாம்.

கே: எழுதும் போது மொழி மற்றும் அதன் தரம் பற்றிய உணர்வு எப்போதுமே இருக்குமா? எழுதி எழுதி அழித்து அழித்து எழுதும் பழக்கம் உள்ளதா? மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்ற ஒரு சொல்லையோ சொற்றொடரையோ அதை விடச் சிறப்பான ஒன்றைக் கொண்டு மாற்றி அமைப்பீர்களா? அல்லது கருத்தில் மட்டுமே கவனம் செலுத்துவீர்களா?
ப: ஆம். அந்த உணர்வு எப்போதும் உண்டு. ஒரு முறை முதல் வரைவு தயாரானதும் பெரும்பாலும் ஒரே ஒரு முறைதான் வாசித்துப் பார்ப்பேன். அதுவும் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யத்தான். மற்றபடி, தரம் பற்றி இப்போதைக்கு அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ள விருப்பம் இல்லை. முடிந்த அளவு உற்பத்தி செய்ய வேண்டும் முதலில். பின்னர், அளவிலாத நேரம் செலவிட்டு அவை ஒவ்வொன்றின் தரத்தையும் கூட்டிக் கொள்ளலாம். இப்போது அவை மிகவும் மோசமாக இல்லை என்றும் எண்ணுகிறேன். எனவே, அந்த எண்ணம்தான் என்னைத் திருத்தங்கள் செய்ய விடாமல் சோம்பேறியாக்குகிறது. இருப்பினும், பிற்காலத்தில் என் இடுகைகளின் தரத்தை மேன்மைப் படுத்த ஏகப் பட்ட நேரம் செலவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்காலத்தில்தான்... இப்போதல்ல!


கே: வெளியிடும் முன் உங்கள் இடுகைகளைத் திரும்பத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பீர்களா? 
வாசிப்போர் உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள முடியாதோ என்று கவலைப் படுவீர்களா? வாசிப்போரின் மனம் புண்படும் எனப் பயந்து அடக்கி வாசிப்பீர்களா? இடதுசாரி, வலதுசாரி, மதச்சார்பற்றவர் அல்லது பழமைவாதி போன்ற பெயரிடல்களுக்குப் பயந்து நேர்மையான உங்கள் கருத்துக்களை வெளியிடாமல் தவிர்ப்பீர்களா?
ப: ஆம். முடிந்த அளவு எந்த ஒரு பக்கமும் சாய்ந்து விடாமல் தப்ப முயல்வேன். பணியிடங்களில் பயின்ற நுட்பங்களைப் பயன்படுத்துவேன். எல்லா அப்ரைசல்களிலுமே முதலில் நல்லவற்றைச் சொல்லி விட்டுத்தானே அடுத்து கெட்டவற்றைப் பற்றிப் பேசுவார்கள். கெட்டவை அதிகமாக இருப்பினும் அதிக பிரச்சனைக்குரியவை எனினும் கூட, முதலில் நல்லவை பற்றித்தான் பேசுவேன். அதுதான் வாசிக்க வந்திருப்பவரைச் சரியாகத் தயார் படுத்தும். முதல் பத்தியிலேயே முடிவு சொல்வது போலப் பேசினால் அடுத்த பத்திக்கே போக மாட்டார்களே. என்னை ஒரு பெயர் சொல்லி அழைத்து விட்டு அவர்கள் அவர்களாகவே இருந்து விடுவார்கள்.

ஒருபோதும் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. அதுபோலவே, என்னை யாரும் புன்படுத்துவதையும் நான் விரும்புவதில்லை. அப்ரைசல்களில் போலவே, நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு குறைகளை வசதியாக விட்டு விட்டுப் போவோரும் இருக்கிறார்கள். அதுதான் இந்த அணுகுமுறையின் மற்றொரு பக்கம்.

ஆம். அப்போதைய தேவை அதுதான் என்றில்லாத சில நேரங்களில் நான் நேர்மையாக இருக்க முயல்வதில்லை. அது சரியான எழுத்து தர்மம் அல்ல; அரசியல் ரீதியான அணுகுமுறை என்பதையும் அறிவேன். அதையே இப்படிச் சொன்னால் நேர்மறையாக இருக்கும் என நினைக்கிறேன் - உளவியல் ரீதியாக அது மேலான அணுகுமுறை!

ஆம். பெயரிடப் படல் எனக்கும் பிடிக்கவே பிடிக்காது. இவன் இப்படி என்று பெயரிடப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு சில விஷயங்களில் என் கருத்தைக் கூட மாற்றிக் கொள்வேன். அது சரியில்லை என்பதை அறிவேன். ஆனால், முன்பு சொன்னது போல, ஆங்கிலத்தில் துலாம் இராசிக்காரன் என்பதால், பொதுக் கருத்து உருவாக்கலும் அமைதியும்தான் மற்ற எல்லாத்தையும் விட எனக்கு முக்கியம். மற்ற எல்லாத்திலும் போலவே, இதிலும் விதிவிலக்குகள் உண்டு. சில விஷயங்களில் இவன் இப்படித்தான் என்று பெயரிடப் படுதளுக்காகக் கவலைப் படுவதில்லை. 'இருக்கட்டும்' என்று விட்டு விடுவேன். 

கே: ஒவ்வொரு இடுகைக்குப் பின்பும் ஒரு சாதனை உணர்வு வருகிறதா? அல்லது இதை விடச் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று நினைப்பீர்களா?
ப: ஆம். சாதனை உணர்வு வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு முறை இடுகைகளின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கும்போதும் என் தன்னம்பிக்கை இன்னும் கொஞ்சம் கூடும். ஒருத்தர் பாராட்டி விட்டாலும், திருப்தி அடைந்து விடுவேன். அது மட்டுமில்லை, இதை விடச் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்றும் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். ஆனால், மற்ற வேலைகளையும் நேரமின்மையையும் கருத்தில் கொண்டு அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.

கே: ஓர் இடுகை இடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடிய வில்லையே என்று ஆற்றாமையில் துடிப்பதுண்டா? எடுத்துக்காட்டாக, ஒரு தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி எழுதிய பின்... அல்லது ஒரு பிச்சைக்காரரின் நிலையைப் படம் பிடித்த பின்... அல்லது சரியாகக் கண்டு கொள்ளப் படாத ஒரு கோயிலைப் பார்த்த பின்பு? அல்லது ஒரு பதிவர் என்ற முறையில் உங்கள் கடமையைச் செய்து விட்டதாகத் திருப்திப் படுவீர்களா?
ப: ஆம். ஆற்றாமையை உணர்வதுண்டு. அதையே இப்படிப் பார்ப்போம். நான் அடிக்கடிச் சொல்வதுண்டு - நான் எழுதுவதைக் காதலிப்பதற்கான ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்று, என் வெறுப்புகளை - வயிற்றெரிச்சலை ஏதோவொரு படிவத்தில் வெளிப்படுத்த இது உதவுகிறது; இன்னொருவர் மேலும் வெறுப்படையவும் என்னால் உதவ முடிகிறது; அதுவே கண்டிப்பாக என்றோ ஒருநாள் ஏதோவொரு மாற்றம் உண்டாக வழி வகுக்கும். ஓர் அமைதிப் புரட்சியில் பங்கு வகிப்பது போன்ற உணர்வு. பதிவுலகிலும் சமூக ஊடகங்களிலும் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பல துளிகள் சேர்ந்து... ஒரு சமுத்திரம் உண்டாதல்!

கே: உங்கள் இடுகையில் வரும் கடுமையான கருத்துரை ஒன்றை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? ஆதரவுக் கருத்தை விட அது மேல் என்பீர்களா? கருத்துரையே இல்லாமல் இருப்பதை விட அது மேல் என்பீர்களா? 
ப: இங்கும் நேர்மையாகவே இருக்க விரும்புகிறேன். அது போன்ற கருத்துரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஒருவரிடம் நேரடியாகப் பேசுவதில் மற்றும் எழுதுவதில் ஒரு குறிப்பிட்ட அளவு நாகரிகம் காக்க வேண்டும் என்று ஆணித் தரமாக நம்புகிறேன். எனக்குப் பிடிக்காத விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் போவதற்காவது எனக்கு முதிர்ச்சி இருக்கிறது. குறைந்த பட்சம், பிறரிடம் இருந்து இதை நான் எதிர் பார்க்கிறேன். இருப்பினும், என்னைத் திருத்திக் கொள்ளவும் மேன்மைப் படுத்தவும் கொடுக்கப் படும் - குறிப்பிட்டுச் சொல்லும்படியான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் திறந்த மனம் எனக்குண்டு. சகிப்பின்மையை ஆக்கபூர்வமான விமர்சனம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அவை வெவ்வேறு. அந்த வேறுபாடு எனக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சரி என்றே எண்ணுகிறேன்! :)

மற்றபடி, 'கேவலமான நடத்தை'யைக் கேவலமான சொற்கள் கொண்டுதான் விமர்சிக்க வேண்டும் என்றும் அழுத்தமாக நம்புகிறேன். 

கே: இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் ஓர் 'ஆம்' அல்லது 'இல்லை'யா? அல்லது இரண்டுக்கும் நடுவில் எங்கோவா?
ப: இரண்டும். 'ஆம் அல்லது இல்லை' மற்றும் 'இரண்டுக்கும் நடுவில்' ஆகிய இரண்டுமே.

உள்ளாட்சித் தேர்தல் - கூட்டணிக் கூத்துகள்

அருமை. அருமை. அதிமுகவின் மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பட்டியல் வந்து விட்டது. எப்போதும் போல், தைரிய லட்சுமி அம்மா கூட்டணிக் கட்சிகளுக்கு ஓர் இடம் கூட விட்டு வைக்காமல் பத்து மாநகராட்சிகளுக்கும் தன் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். பத்துப் பேரும் சாமியைக் கும்பிட ஆரம்பித்திருப்பார்கள். சட்டப் பேரவைத் தேர்தலில் நடந்த மாதிரி சமரசம் ஏதும் ஆகி விடக் கூடாது. அப்புறம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும். சமரசம் ஆகா விட்டாலும் கூட வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் வரை அவர்கள் சாமி கும்பிடத்தான் வேண்டும். இந்த முறை சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றே எனக்குப் படுகிறது. ஏன்? ஏனென்றால், போன முறை ஆட்சியைப் பிடிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதைத்தான் பிடித்து விட்டாயிற்றே. இன்னும் ஐந்து வருடங்களுக்கு யாரையும் மதிக்க வேண்டியதில்லை.

ஒருவேளை, சமரசம் ஆனால் எப்படி ஆகலாம்? அல்லது, ஏற்கனவே நியாயமான முறையில் முடிவு செய்திருந்தால், எப்படிச் செய்திருக்கலாம்? முன்பு போல், ஆறே ஆறு மாநகராட்சிகள் என்றால், நான்கை வைத்துக் கொண்டு இரண்டை தேமுதிகவுக்குக் கொடுக்கலாம். சிவப்புத் துண்டுக் காரர்களுக்குச் சில நகராட்சிகளைக் கொடுத்திருக்கலாம். இப்போதுதான், தமிழகத்தின் அதிவேக நகரமயமாக்கலின் புண்ணியத்தில் பத்து மாநகராட்சிகள் ஆகி விட்டனவே. ஆறை வைத்துக் கொண்டு இரண்டு தேமுதிகவுக்கும் (அல்லது ஐந்தை வைத்துக் கொண்டு மூன்று தேமுதிகவுக்கும்) கொடுத்து விட்டு, தோழர்களுக்குத் தலா ஒன்றைக் கொடுக்கலாம்.

அப்படியானால், யார் யாருக்கு எது எது? தேமுதிகவுக்கு அவர்கள் பலமாக உள்ள வட மாவட்டங்களில் இருந்து சேலம் மற்றும் வேலூரைக் கொடுத்து விட்டு, மார்க்சீயக் கட்சிக்கு கோவையையோ மதுரையையோ கொடுத்து (அதற்கு ஏகப் பட்ட பெருந்தன்மை வேண்டும். ஏனென்றால், இரண்டும் சென்னைக்கடுத்த மிகப் பெரிய ஊர்கள். இரண்டுமே அதிமுகவுக்கும் இப்போது கோட்டை!). வலது சிவப்புக்கு திருப்பூரைக் கொடுக்கலாம். மிச்சமிருக்கும் இடங்களில் இவர்கள் போட்டியிடலாம். இப்போது பெரும்பாலும் இந்த 'லாம்'களுக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.

கேப்டன் இத்தனை நாளாக எதுவும் பேசாமல் சும்மா இருந்ததற்கு ஆப்பு விழுந்து விட்டது. பேசாமல் முதல் நாளில் இருந்தே எல்லாத்தையும் எதிர்த்திருக்கலாம். குறைந்த பட்சம் தப்பு என்று தெரிகிற பிரசினைகளிலாவது எதிர்ப்புத் தெரிவித்து இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் உடைந்து விட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ஆகி விடும் என்று பண்ருட்டிக் காரர் பேச்சைக் கேட்டுக் கொண்டு எல்லாத்துக்கும் சும்மா இருந்தது தப்பாப் போச்சு என்று இப்போதுதான் புரிந்திருக்கும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் நினைக்க நினைக்க இனிக்கிறது. என்னவெல்லாம் நடக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

எது நடந்தாலும் நல்லதற்கே என்பார்களே. அப்படி உணர்கிறேன் இப்போது. சட்டப் பேரவைத் தேர்தலிலேயே, கூட்டணிக் குளறுபடிகளைக் கண்டு மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அது இப்போது நடப்பது மகிழ்ச்சியே. ஏற்கனவே திமுகவும் காங்கிரசும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதும் நமக்கு நல்லதே. "உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டே!" என்கிற கதைதான் திமுக-காங்கிரஸ் கதை. இவர்களோடு சேர்ந்தது அவர்களைப் பாதித்ததா அல்லது அவர்களோடு சேர்ந்தது இவர்களைப் பாதித்ததா என்பது இந்த நிமிடம் வரைச் சரியாகப் புரியவில்லை. இப்போதும் ஊருக்குப் பயந்துதான் பிரிந்திருக்கிறார்களே ஒழிய உண்மையாகவே அல்ல. அவர்களுக்கு இவர்களுடைய நம்பர் தேவை; இவர்களுக்கு ஊழலில் இருந்து தப்பிக்க அவர்களுடைய ஒத்துழைப்புத் தேவை. எனவே, பின்னணியில் நடைபெறும் கூட்டுக் களவாணித் தனங்கள் தொடரத்தான் செய்யும்.

எப்படியிருந்தாலும் காங்கிரஸ் கட்சி ஒரு நகராட்சி கூட வெல்ல முடியாது. மாநகராட்சி பற்றி அப்புறம் பேசுவோம். அரசியலில் தமிழ் நாட்டுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சில ஊராட்சிகளில் வெல்லலாம். அதிமுக அணியின் குளறுபடிகளால், அழியப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் திமுகவுக்குக் கண்டிப்பாகக் கொஞ்சம் உயிர் கிடைக்க வாய்ப்புள்ளது. சட்டப் பேரவை முடிவுகளையும் கணக்கில் கொண்டு, தனிப்பட்ட முறையில் திமுக-அதிமுக என்று பார்த்தால் திமுக ஒரு மாநகராட்சி கூட வர வாய்ப்பில்லாதது போலவே இருக்கிறது. ஆனால் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அணிகளின் புண்ணியத்தில் நடை பெறப் போகும் குழப்பங்களில் அவர்கள் சில மாநகராட்சிகளைக் கைப்பற்றவும் வாய்ப்பு உருவாகி விட்டதாகத் தெரிகிறது. அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதிமுக எல்லாத்திலும் வென்று விடும். சட்டமன்றத் தேர்தலில் செய்த கொஞ்ச நஞ்ச சேட்டைகளையும் இப்போது செய்ய முடியாது என்பதால் திமுகவுக்கு மேலும் சிரமமே. ஒரேயொரு நல்ல விஷயம் - கொள்ளையடித்த காசில் நமக்குப் பங்கு கொடுக்க மாட்டார்கள் இனிமேல். போனமுறை கொடுத்ததற்குப் பலனில்லாமல் போய்விட்டதல்லவா?!

உள்ளாட்சித் தேர்தல் உள்ளூர்ப் பிரச்சனைகளின் அடிப்படியிலானது என்ற பாட்டை ஏற்றுக் கொண்டாலும் மாநகராட்சி மற்றும் நகராட்சித் தலைவர்கள் கட்சி அடிப்படையிலும் நிறைய வாக்குகள் பெறுவார்கள். எனவே, அதிமுகவைப் பொருத்த மட்டில் ஒரு மாநகராட்சியில் தோற்றாலும் அது நல்ல செய்தியாக இராது. அவர்கள்தாம் தைரியசாலிகள் ஆயிற்றே. அவர்களுக்குத்தான் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் தின்பது போலவே. முயன்று பார்க்கட்டும். ஆட்சியா கவிழப் போகிறது என்ற தெனாவெட்டில் இறங்குகிறார்கள். எதிரி சொதப்பும்போது எதுவும் செய்யாதே என்பார்கள். அந்த வேலையைத் திமுக கன கச்சிதமாகச் செய்து விடும் இப்போது. எல்லாம் சோ சொல்லிக் கொடுத்த டெக்னிக்காக இருக்கும். அப்படியே நடக்கட்டும். அவர்களே அனுபவிக்கட்டும்.

அதிமுக எப்போதுமே தெரியாத பெயர்களை அறிவிக்கிறது என்று ஒரு குறையாகச் சொல்கிறோம். ஆனால், அதுதான் அவர்களுக்குப் பலம் பல நேரங்களில். தெரிந்தவர் என்றால் அவர் செய்த திருட்டுத் தனங்களும் எல்லோருக்கும் தெரியுமே. தெரியாதவர் யோக்கியரோ அயோக்கியரோ அவருடைய சேட்டைகள் பற்றித் தெரியாது. எனவே, தெரிந்த திருடர்களுக்கு எதிராகத் தெரியாத திருடர்களை (அல்லது நல்லவர்களை!) நிறுத்தினால் வேலை எளிது. சட்டமன்றத் தேர்தலிலேயே இதைப் பல இடங்களில் உணர முடிந்தது.

திமுகவைப் பொருத்த வரை அவர்கள் எப்போதுமே எதற்காகவும் கவலைப் பட வேண்டியதில்லை. ஆட்சியில் இருந்தால், எதிர்க் கட்சியாக இருப்போர் செயல்படவே மாட்டார்கள். ஓய்வெடுக்கப் போய் விடுவார்கள். அதனால் அப்படியொன்று இருப்பதே மக்களுக்குத் தெரிய வராது. சென்ற முறை அவர்கள் பெற்ற தோல்வி அவர்களே குடும்பத்தோடு சேர்ந்து ஆட்டம் போட்டுத் தேடிக் கொண்டது. சும்மா இருந்திருந்தாலே மீண்டும் வென்றிருப்பார்கள். எதிர்க் கட்சியாக இருந்தாலும் பிரச்சனையில்லை. ஆளும் கட்சி வழிய வந்து அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அவர்கள். ஆளும் கட்சி ஆட்கள் அதற்கான வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்குள் பாதிப் பெயரைக் கெடுத்து விட வேண்டும் என்று கேரளாவில் இருந்து வந்த சோதிடர் யாராவது சொல்லியிருக்க வேண்டும். அப்படியே ஆகட்டும் இரத்தத்தின் இரத்தங்களே. வாழ்த்துக்கள்!

இப்போதைக்குக் குறைந்த பட்சம் ஐந்து அணிகள் போலத் தெரிகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தோழர்கள் ஆகிய ஐந்து அணிகள். காங்கிரஸ் கட்சியை எவருமே கண்டு கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். யாராவது கண்டு கொண்டால் அவர்களுக்குக் கண்டம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். எனவே, அவர்கள் தனி அணிதான். அதுவே நமக்கும் நல்லது. பாஜக தலைமையில் ஓரணி அமையுமா அல்லது மதிமுக தலைமையிலோ தேமுதிக தலைமையிலோ பாமக தலைமையிலோ அவர்கள் அணி சேர்வார்களா என்று தெரிய வில்லை. தோழர்கள் எப்போதும் போல், காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத ஓரணியில் இருப்பார்கள். மேற் சொன்ன கட்சிகளின் ஒன்றின் தலைமையை ஏற்று இவர்களும் அணி சேர்வார்கள். பிரிந்து சென்றோர் திரும்பி வரலாம் என்று சாணக்கியர் முரசொலியில் அழைப்பு விடுவார். புத்திசாலிகள் திமுக பக்கம் போக மாட்டார்கள். அதற்கான நேரம் அல்ல இது என்று அவர்களுக்குத் தெரியும். வைகோ மட்டும் எதற்கும் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும். போக மாட்டார் என்றே நினைக்கிறேன். பாமகவை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நான் பிறந்ததில் இருந்தே பார்க்கிறேன். அந்த ஆள் சொல்லும் ஒரு வார்த்தையைக் கூடக் காப்பாற்றுவது கிடையாது. அதனால் இறுதி நிமிடம் வரை எல்லாக் கதவையும் திறந்தே வைக்கலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு பத்து பத்தாது. இருபது மாநகராட்சிகள் வேண்டும். ஆளே இல்லாத கடையில் ஆற்றுவதற்கு மட்டும் அத்தனை கும்பல்கள் இருக்கிறார்கள். இதில் ஈரோடு ஈவிகேஎஸ் கும்பலுக்குப் போகும். திருச்சி மேதாவி சிதம்பரம் கும்பலுக்கு - அதுவும் அவருடைய நெருங்கிய தோழி சாருபாலாவுக்கே போகும். கண்டிப்பாக வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் படிவத்தில் சில கோளாறுகளோடு சென்னையில் தங்கபாலுவின் மனைவி வேட்பு மனுத் தாக்கல் செய்வார். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது அவர் வீட்டுச் சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால், அது ராகுல் காந்திக்குப் புரியுமா என்று தெரியவில்லை. உண்மையில் அவர்கள் ஒன்றில் கூட டெபாசிட் வாங்க முடியுமா என்பது சந்தேகமே. இன்னமும் தமிழர்கள் அதிபுத்திசாலிகள் என்ற கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு அவர்கள் கொடுத்திருக்கும் இடம் அதை ஓரளவு தற்காலிகமாக உண்மையாக்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அழிவு ஒன்றே இந்தியாவின் எதிர் காலத்துக்கு நல்லது போலத் தெரிகிறது.

பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை எனினும், தொலை நோக்குப் பார்வையில் யோசிப்பவர்கள், அவர்களை நாடி இணைந்து கொள்வது நல்லது. அதற்கு மருத்துவர் கடுமையாக முயல்வார் என நினைக்கிறேன். மகன் நலம் பேணாத தந்தைதான் நம் மண்ணின் உண்டா? அதற்கு முன்பாக அவருடைய முன்னாள் உறவினர் பண்ருட்டி சுதாரித்து அந்த ஐடியாவைக் கேப்டனுக்குக் கொடுத்தால் மருத்துவர் குடும்பத்துக்கு ஆப்புக் கிடைக்கும். வைகோ இந்த அளவுக்கெல்லாம் யோசித்து எதுவும் செய்வாரா என்று தெரியவில்லை. எங்கள் தலைமையில் வருவோர் மட்டும் வாருங்கள் என்று காத்திருந்து கடைசியில் தனியாகவோ சில சில்லறைக் கட்சிகளுடன் சேர்ந்தோ இறங்க வாய்ப்புள்ளது. பாஜகவுடன் யார் சேர்ந்தாலும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய நிரந்த உறவினர் தோட்டத்தில் இருப்பவரே. மற்றவர்கள் எல்லாம் தேர்தலுக்கான நண்பர்கள். கறிவேப்பிலைகள்!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மோதியும் அத்வானியும் தோட்டத்துக்கு வந்து பேசி எல்லாத்தையும் சரியாக நடத்தி முடித்து விடுவார்கள். அவர்கள்தானே கொள்கை ரீதியான கூட்டணி. பெரியார் வழி வந்த திராவிடக் கட்சியான அதிமுகவுக்கும் இந்து மதவாதம் பேசும் பாஜகவுக்கும் என்ன கொள்கைக் கூட்டணி என்று அப்பாவியாகக் கேட்பவரா நீங்கள்? பாவம்தான் போங்கள். திராவிடக் கட்சியின் தலைவி யார்? தினம் நூறு பூசைகள் செய்யும் பக்திப் பேரொளி. அது தப்பில்லை. பாஜகவின் - பஞ்சங் தள்ளின் தலைவியாக இருக்க வேண்டியவர் திராவிடக் கட்சி ஒன்றுக்குத் தலைவியாக இருப்பதுதான் கொடூரம். நல்ல நாடு. நல்ல கொள்கை. நல்ல மக்கள்.

பாஜகவைப் பொருத்த மட்டில் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இப்போதே உருவாக்க முயலலாம். ஒருவரும் ஒத்து வரா விட்டால் தனியாக நின்றால் கூட அடுத்து மாநகராட்சியாகப் போகும் நகராட்சியான நாகர்கோவிலில் வென்று விடுவார்கள். கோவையில் கொஞ்சம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகளின் அணிக்கு இவர்கள் போக முடியாது. அதிமுக அல்லது புதிதாக உருவாகப் போகும் ஓரணியைச் சரிக்கட்ட முயல்வார்கள். கேப்டன், வைகோ, பாமக, விசி - இவர்களில் யாருடனுமோ எல்லோருடனுமோ சேர்ந்து ஓர் அணியை உருவாக்க முயல்வார்கள். இந்த அணி பலமானதாக இருந்தாலும் நல்லதே. மதவாதம் நல்லதில்லை. ஆனால் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இவர்கள் பரவாயில்லை. கொஞ்சம் (கொஞ்சம்தான்!) கைச்சுத்தம் கூடுதலாக இருக்கும்.

இடதுசாரிகளுக்கு எப்போதுமே இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போதும் அப்படியே. புதிய கூட்டணிகளில் சேர்ந்தால், அவர்கள் பலமாக உள்ள கோவை, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளைக் கேட்டுப் பெறலாம். வெல்ல முடியுமா என்பது வேறு கேள்வி. பலமான கூட்டணிகளில் இருந்தால், நகராட்சிகள் மட்டுமே கிடைக்கும். போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிக்கு மாடாக வேலை பார்ப்பதை விட  போட்டியிட்டு மக்களுக்குச் சின்னத்தை நினைவு படுத்துவதே மேல் அல்லவா? இப்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு அணிகளிலும் சேர முடியாத அணி இவர்களுடையதே. வெட்கத்தை விட்டுத் தோட்டத்துக்குப் போய் பேசிப் பார்க்கலாம். அதைச் செய்யவும் செய்வார்கள். திரும்பவும் அவமானப் பட்டே திரும்ப வேண்டும். அதற்குப் பதிலாக புதிதாக ஏதாவது முயன்று பார்க்கலாமே. கொள்கை ரீதியாகக் கொஞ்சமும் ஒத்து வராத ஒருவரோடு கிடந்து தினம் தினம் போராடுவதை விட பிரிந்து செல்வதே மேல். இதில் இரு சிவப்புகளும் ஓரணியில் இருக்க வேண்டும் என்கிற சவால் வேறு இருக்கிறது. அதற்கே ஏகப் பட்ட போராட்டம் நடத்த வேண்டும். மதிமுக, பாமக, விசி ஆகிய மூவரும் சேர்ந்து ஈழ ஆதரவு அணி அமைத்தால், அதில் வலது அளவுக்கு இடது ஆர்வம் காட்டாது.

இந்த ஈழ ஆதரவு அணி அமைந்தால் கொள்கை ரீதியான அரசியலுக்கு அடித்தளம் போடும் படியாக இருக்கும். எதிர் காலத் தமிழக அரசியலுக்கு அது நல்லது. ஆனால், மருத்துவரை நம்பி எதைச் செய்தாலும் சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமம். கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. எல்லோருமே மாற்றி மாற்றிப் பேசுவோர் என்றாலும் இந்த அளவுக்குக் கேவலமாக மாற்றி மாற்றிப் பேசும் ஓர் ஆளை நான் இதுவரை பார்த்ததில்லை. ஈழ ஆதரவு என்பதும் மனப்பூர்வமானதில்லை. மகனுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பதாக யாராவது சொல்லி விட்டால் அதற்காக எதையும் விட்டுக் கொடுப்பார். எதையும் என்றால், மானமும் அதில் அடக்கம். ஆனால், திராவிட இயக்கங்களின் தோல்வியை இந்தக் கூட்டணிதான் சரிசெய்ய முடியும். அதற்கான அச்சாரம் போடப் பட்டால் பெரிதும் மகிழ்வேன்.

ஆனால், அதில் ஏகப் பட்ட சிக்கல்கள் உள்ளன. யார் தலைமையில் கூட்டணி என்று வந்தால், நாங்கள் தான் பெரிய கட்சி என்று அடம் பிடிக்கவும் செய்வார் மருத்துவர். வைகோ அதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். விட்டுக் கொடுப்பது ஒன்றும் அவருக்குப் புது விஷயமில்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்று சேரலாம். பார்க்கலாம். என்ன செய்கிறார்கள் என்று. சென்னையையும் சேலத்தையும் பாமகவுக்குக் கொடுத்து விட்டு, வேலூரைத் திருமாவுக்குக் கொடுத்து விட்டு, மற்ற ஏழிலும் மதிமுக போட்டியிடலாம். இடதுசாரிகளும் வந்தால் அவர்களுக்கு அவர்களுடைய மூன்று விருப்பங்களான கோவை, மதுரை மற்றும் திருப்பூரில் இரண்டைக் கொடுத்து விட்டு ஐந்தில் போட்டியிடலாம்.

வைகோவுக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இனியும் அவர் அதிமுக அல்லது திமுக பின்னால் போனால் ஏற்கனவே செல்லாக் காசாக இருக்கும் அவர் எதுக்கும் உதவாத கிழிந்த கேசாகி விடுவார். காங்கிரஸ் கட்சியுடன் கண்டிப்பாகச் சேர மாட்டார். அவர் இதுவரை பேசி வருவதைப் பார்த்தால் தேமுதிகவுடனும் சேர்வதில் விருப்பம் இல்லாதவர் போலத் தெரிகிறது. அவருக்கு இருக்கும் இரண்டே ஆப்ஷன்கள் - பாஜகவும் தோழர்களும். அதாவது, கொள்கை ரீதியாக எதிரெதிர்த் துருவங்களாக இருக்கும் வலது சாரிகளும் இடது சாரிகளும். கொடுமையைப் பாருங்கள் - எதிரெதிர்க் கொள்கைகள் கொண்ட இரு அணிகளில் சேர முடிந்த ஒருவரால், கொள்கைகளே அற்ற அரசியல் செய்யும் மற்றவர்களுடன் சேர முடியவில்லை. நம் அரசியல் பற்றி நினைத்தாலே தலை சுற்றுகிறது. இல்லையா?

தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் பெரிதாக மரியாதை இராது இம்முறை.
காலத்துக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெற்றதே அவர்களின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன். அதிமுகவுடனான சண்டையை அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம். அதுதான் கட்சியை வளர்க்க வழி. எனக்கு இருக்கும் ஒரே பயம் - பழைய நினைவு திரும்ப வந்து, பண்ருட்டி குண்டக்க மண்டக்க ஏதாவது சொல்லிக் கொடுத்து, செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியோடு போய் இவர்கள் சேர்ந்தால், இவர்கள் அழிந்து போவார்கள் என்றாலும் அவர்களுக்குக் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுத்தது போலாகி விடும். இவர்கள் அழிவதில் நமக்கு இழப்பில்லை. ஆனால் அவர்கள் உயிர் பெறுவதில் நமக்கு உயிரிழப்பே நேரலாம். எனவே, அது மட்டும் நடந்து விடக் கூடாது.

தோட்டத்தில் அவமானப் பட்டவர்கள் மட்டும் ஓரணியாக நிற்கலாம். சென்னை, வேலூர், சேலம் ஆகிய வட மாவட்ட ஊர்களை தேமுதிக வைத்துக் கொண்டு மற்றவற்றில் பிரிக்கலாம். இடதுசாரிகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய கோவை, மதுரை மற்றும் திருப்பூர் கிடைக்கும். மமக மற்றும் புதிய தமிழகத்துக்கும் நெல்லையையும் தூத்துக்குடியையும் கொடுக்கலாம். சரத் குமார் கண்டிப்பாக வெளியே வர மாட்டார். இரட்டை இலைச் சின்னத்தில் நின்றது ஒரு காரணம். சட்டமன்றத்துக்குள் கூட்டிச் சென்றதுக்காக அம்மாவைப் பிரதமர் ஆக்காமல் அந்த அணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் எடுத்துக் கொண்டிருக்கும் சபதம் ஒரு காரணம். கருப்பு எம்ஜியார் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருப்பதில் எனக்கு அவ்வளவு கோபம் வருவதில்லை. ஆனால், இவர் சிவப்புக் காமராஜர் என்று சொல்லிக் கொள்வதைக் கேட்டால் கொதிக்கிறது இரத்தம். காரணம் - எனக்குக் காமராஜர் மேல் இருக்கும் அளவிலாத மரியாதை.

கொங்குக் கட்சி இந்த முறை புதிய கூட்டணிகளில் ஒன்றில் சேர்வது நல்லது. தோட்டத்தில் மரியாதை கிடைக்காது. அறிவாலயம் போனால் மக்களிடத்தில் மரியாதை கிடைக்காது. அப்ப எது நல்லது? புதிதாக ஒரு கூட்டம் பிடிப்பதுதானே. எதுவும் இல்லாவிட்டால், ஈரோடு மட்டுமாவது கிடைக்கும். எங்கு நின்றாலும் சாதிக் கட்சி என்பதால் மற்றவர்கள் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். அதை மறந்து வாக்களிக்கும் அளவுக்கு அலை எதுவும் இல்லை உள்ளாட்சித் தேர்தலில். இவர்கள் மட்டுமல்ல; எல்லாச் சாதிக் கட்சிகளுக்குமே அதே நிலைதான் நேரும். அடுத்தவன் கண்ணை உறுத்தவே கட்சி ஆரம்பிக்கும் ஒரு கூட்டம், அவர்களுடைய ஓட்டை மட்டும் எதிர் பார்த்தால் எப்படி?

ஒவ்வொருவரும் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாரானால் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக தவிர்த்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பலமான அணி அமைக்கலாம். நான் சட்டமன்றத் தேர்தலில் ஆசைப்பட்ட மூன்றாவது அணி. அது அமைவது மிக மிகக் கடினம். அமைந்தால் சூப்பர். கேப்டனைப் பிடிக்காத பாமக, விசி, மதிமுக ஆகிய மூவருமே அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அவரும் நிறைய இறங்கி வர வேண்டும். நான் எம்ஜியார் மாதிரி என்று சொல்லிக் கொண்டிருந்தால் தொப்பி மட்டும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். சரக்கு அடிப்பதையும் கொஞ்சம் குறைத்தால்தான் இவர்கள் பக்கத்தில் வருவார்கள். இல்லையேல், பார்க்கவே பயந்து போய் ஒளிந்து கொள்வார்கள். இந்தக் கனவு அணி அமைந்தால், சென்னை மற்றும் மதுரையை தேமுதிகவும் திருச்சியை மதிமுகவும் கோவையை மார்க்சீயக் கட்சியும் சேலத்தை பாமகவும் திருப்பூரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேலூரை விடுதலைச் சிறுத்தைகளும் ஈரோட்டைக் கொங்குக் கட்சியும் நெல்லையை மமகவும் தூத்துக்குடியைப் புதிய தமிழகமும் எடுத்துக் கொள்ளலாம். இது நடக்கவே நடக்காது. இது மட்டும் நடந்தால் லீவ் போட்டு வந்து இந்தக் கூட்டணிக்குக் கொஞ்ச காலம் வேலை பார்க்க நான் தயார்.

நம் மக்களுக்கு நிறைய ஆப்ஷன்களைக் கொடுத்துப் பழக்க வேண்டியுள்ளது. இப்போதே அதைச் செய்தால் பின்னர் சரியான நேரத்தில் பயன்பட வாய்ப்புள்ளது. அதற்கு இதை விடச் சிறந்த பயிற்சிக் களமோ காலமோ இனிக் கிடைக்காது. அதனால் இந்த வாய்ப்பை எல்லோரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். இல்லாவிட்டால், மூன்றாவது அணி பற்றிப் பேசினால், காலமெல்லாம், "அதெல்லாம் ஒத்து வராதுப்பா!" என்றுதான் கதை சொல்வார்கள்.

* எது என்ன ஆனாலும் சென்னையில் சைதைக்காரர் வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. சட்டப் பேரவைத் தேர்தலின் போதே அவரைப் பற்றிக் கேள்விப் பட்ட பிறகு அவர் கண்டிப்பாகத் தமிழக அரசியலில் முக்கிய இடம் தரப்பட வேண்டிய ஆள் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அதிமுகவின் பட்டியலில் நான் கேள்விப் பட்ட ஒரேயோர் இன்னொரு பெயர் மதுரையில் அறிவிக்கப் பட்டிருக்கும் பெயர் - ராஜன் செல்லப்பா. ஆனால், அவர் எப்படிப் பட்டவர் என்று தெரியவில்லை. மற்றவர்கள் புதியவர்கள் என்றில்லை. நான் கேள்விப் பட்டதில்லை. அவ்வளவுதான்.

திங்கள், செப்டம்பர் 12, 2011

பொன்னியின் செல்வன் - சில குறிப்புகள்


இதுவும் சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள் போல், குறிப்புகளின் தொகுப்பே. நூல் விமர்சனம் அல்ல. அந்த அளவுக்குக் கூட நீளமானதோ விரிவானதோ அல்ல இது. மிகச் சில குறிப்புகளே.

"ஆதித்த சோழன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் சேரும் இடம் வரையில் 64 சிவாலயங்கள் எடுப்பித்தான்." என்றொரு வரி வருகிறது. தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் கோயில் கட்டுவதை ஒரு பெரும் அரும் பணியாகவே செய்திருக்கிறார்கள். பக்தி மார்க்கம் தவறில்லை. ஆனால், அதே அளவு நேரத்தையும் ஆற்றலையும் மக்கள் நலப் பணிகளில் செலவிட்டிருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றொரு எண்ணவோட்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

"கூட்டாஞ்சோறும் சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பங் குடும்பமாக வந்திருந்தார்கள்." என்றொரு வரி வருகிறது. சித்திரான்னம் என்பது இன்றைக்கும் கர்நாடகத்தில் ஒரு முக்கிய உணவு வகை. அது வேறொன்றுமில்லை. நம்ம ஊரில் எலுமிச்சை சாதம் என்றழைக்கப் பட்டு இப்போது லெமன் ரைஸ் ஆகியிருக்கும் அதே உணவுதான் கர்நாடகத்தில் சித்திரான்னம் என்றழைக்கப் படுகிறது. ஒரே ஒரு சின்ன வேறுபாடு - கர்நாடக சித்திரான்னத்தில் எலுமிச்சையின் அறிகுறியே தெரியாது. மஞ்சள் பொடி போட்டு நிறம் மட்டும் கொண்டு வந்து விடுவார்கள். இது கடைகளிலேயே சாப்பிட்டுள்ளதால் எனக்கு அப்படித் தவறாகவும் தோன்றலாம். கடைகளில்தான் எதையுமே தேவையான அளவு போட மாட்டார்களே. ஒருவேளை, வீடுகளில் தயார் செய்யப் படும் சித்திரான்னங்களில் கூடுதல் எலுமிச்சை வாடை வரலாம். அல்லது, சித்திரான்னம் என்றாலே அதற்கு மஞ்சள் நிறம்தான் முக்கியம் என்றும் எலுமிச்சை வாடை அல்ல என்றும் கூட இருக்கலாம். எது எப்படியோ, இங்கு நான் பேச வந்தது அது பற்றி அல்ல. இங்கே எப்படி எலுமிச்சை வாடை என்பது அரிதோ அது போல, நம்ம ஊரில் நான் இதுவரை இந்த வார்த்தையைக் கேள்விப் பட்டதே இல்லை. ஆனால், கல்கி அந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம், ஒருவேளை இதுவும் நம்முடைய சொல்லாக இருந்து, பின்னர் மறக்கப் பட்டு விட்டதோ என்றொரு சந்தேகம் வருகிறது. இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமானால் கருத்துரையில் எழுதுங்கள்.

"முதற்பராந்தகச் சோழன் தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொற்கூரை வேய்ந்தான். வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தான். பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக் கணக்கான வீரர்கள் வேலையின்றி சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும்பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப் பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன் படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏறி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரில் வீர நாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப் பட்டு விளங்கிற்று. ஸ்ரீமந் நாராயண மூர்த்தி நீரில் பள்ளி கொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக எரிக்கரையையோட்டி ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான். அதுவே இப்போது வீராணம் ஏரி என்றழைக்கப் படுகிறது." என்றொரு நீண்ட பத்தி வருகிறது.

அருமை. அருமை. இதைத் தான் முதல் குறிப்பில் சொல்லியிருந்தேன். ஆட்சி புரிவோர் இப்படிப் பட்ட வேலைகளைச் செய்கிற போது, வரலாற்றில் அவர்களுடைய பெயர் இன்னும் சிறப்பாக இடம் பெறும். வீராணம் ஏரிக்கு இப்படியொரு சூப்பர்க்கதை இருந்தது இப்போதுதான் தெரிகிறது. அத்தோடு கடவுளுக்கும் பணிகள் செய்வது அருமையோ அருமை. அதையே முழு முதற் பணியாகக் கொள்வதுதான் அவ்வளவு அருமையாக இருப்பதில்லை. பின்னாளில் அதே சோழ நாட்டில் இருந்து வந்தவர்தான் இதே வீராணம் ஏரியை வைத்து அறிவியல் பூர்வமான ஊழல் செய்து இந்திய ஊழல் வரைபடத்தில் நமக்கு மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்துக் கொடுத்தார். தமிழகம் ஆனதும் சோழராலே அழிந்ததும் சோழராலே என்று ஒரு கிண்டல் வரி சொன்னால், இன்றைய சோழர்கள் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! :)

"விஜயாலயச் சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார்." என்றொரு குறிப்பு வருகிறது. சோழர்களுக்கு முத்தரையர்கள் மிகப் பெரும் அளவில் தலைவலியாய் இருந்திருப்பார்கள் போல்த் தெரிகிறது. தமிழகத்தில் இருக்கும் முரட்டு இனங்களில் (பெருமையாகச் சொல்ல வேண்டுமானால், 'வீரப் பரம்பரைகளில்...') இவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்கள் என நினைக்கிறேன். எல்லாப் பகுதிகளிலும் பெரும்பான்மையாக நிறைந்தில்லாததால் அவர்கள் கதைகள் நிறைய வெளிவரவில்லை போல்த் தெரிகிறது.

"வேற்று நாடுகளில் படையெடுத்துச் செல்லும் போது, படை வீரர்களின் உணவுக்கு அந்தந்த நாடுகளிலேயே பறிமுதல் செய்வதே நியதியாக இருந்தது. முதல் முறையாக அருள்மொழி வர்மன் (இராஜராஜன்) தான் ஈழ நாட்டின் மீது படையெடுத்த போது கப்பல்களில் உணவு அனுப்பச் செய்திருக்கிறான். 'அரசியலில் அறிவியல்'." என்று ஒரு பத்தி வருகிறது. அந்த நாளில் இது எவ்வளவு பெரிய புரட்சியாக இருந்திருக்க வேண்டும் பாருங்கள். எவ்வளவு பெரிய மனிதாபிமானியாக இருந்திருக்க வேண்டும் அவன். சூப்பரப்பு. இன்னொன்றைப் பாருங்கள் - ஈழ நாடாம். இலங்கை என்றால் தமிழர் எதிரி என்றும் ஈழம் என்றால் மட்டுமே தமிழ் உணர்வாளர் என்றும் ஒரு கருத்தோட்டம் உருவாக்கி வருகிறது இப்போது. ஏனென்றால், ஈழம்தான் தமிழ்ப் பெயர்; இலங்கை பின்னாளில் பிறர் கொண்டு வந்த பெயர் என்று கருதப் படுகிறது. அந்தக் காலத்திலேயே கல்கி அவர்கள் ஈழ நாடு என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால் பன்னெடுங்காலமாகவே இந்தப் பெயர் இருப்பது தெரிகிறது. அருள்மொழி வர்மன் காலத்து ஈழப் படையெடுப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. விடுதலைப் புலிகள் என்று பெயரில் புலிகளைச் சேர்த்தமைக்கு சோழர்களின் புலிச் சின்னமும் காரணம் என்று சொல்லப் படுவதுண்டு.

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் சிறப்பம்சங்களில் ஒன்றாக நான் நினைப்பது - அருள்மொழி வர்மனின் (இராஜராஜனை விட எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடிக்கும்!) பாத்திரத்தைப் பற்றி கல்கி அவர்கள் உருவாக்கியிருக்கும் சித்திரம். இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் அவன் மீது ஒரு அளவிலாத காதல் வரும். பெண்களுக்கு அதுவே குண்டக்க மண்டக்க என்று போய் விடும் என நினைக்கிறேன். அப்படியொரு கதையைப் படமாக எடுப்பதாக இருந்தால் அதற்குச் சரியான நடிகர்கள் பிடிப்பதே பெரும் சிரமம் என்று எழுத்தாளர் சுஜாதா கூடக் கூறியிருந்தார் ஒருமுறை. அதையேதான் நானும் வழிமொழிகிறேன். எவர் நடித்தாலும் அவர் மீது கதை படிக்கும்போது நாம் அருள்மொழி வர்மன் மீது பெற்ற அபிமானத்தைப் பெற முடியாது. இப்படியும் ஒரு மனிதன் நாம் வாழ்ந்த இதே மண்ணின் வாழ்ந்தானா என்று திக்கு முக்காட வைக்கும் கதை. கதைக்காகப் பல மிகைப் படுத்தல்கள் இருக்கும் எனினும் அப்படியொரு சித்திரத்தை உருவாக்குவதே ஒரு கதையாளரின் மிகப் பெரும் வெற்றி. எவ்வளவு மனிதாபிமானம், புரட்சிச் சிந்தனைகள், தியாக உணர்வு, இன்னும் என்னென்னவோ...

"கடைசியாக, சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரமான உரையூரைவிட்டு நகர வேண்டி வந்தது. அப்படி நகர்ந்தவர்கள் குடந்தைக்கு அருகில் இருந்த பழையாறை என்னும் நகருக்கு வந்து சேர்ந்தார்கள்." என்றொரு பத்தி வருகிறது. ஆக, உறையூரில் இருந்து தலைநகரை மாற்றியதற்கு இவர்கள் தான் காரணமா? உறையூர் அளவுக்குப் பழையாறை வரலாற்றில் நிற்க வில்லை என நினைக்கிறேன். சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தஞ்சாவூரும் உறையூரும்தானே. உறையூருக்கருகில் இருக்கும் சிராப்பள்ளி என்பார்களாம் அந்தக் காலத்தில். இப்போது சிராப்பள்ளிக்கு அருகில் அல்ல, சிராப்பள்ளிக்கு உள்ளேயே ஒரு பகுதியாக சுருங்கி விட்டது உறையூர். அதென்ன சிராப்பள்ளி? திருச்சிராப்பள்ளிதான்! நெல்வேலி தானே திருநெல்வேலி.

இவ்வளவுதான் இப்போதைக்குக் கிடைத்திருக்கிறது. மிச்ச சொச்சம் கிடைக்கிறபோது வந்து சேர்த்து விடுகிறேன்.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

என் மதுரை உறவினர்களுக்கு...

மதுரையைத் தம் தாய் மண்ணாக்கிக் கொண்டு வாழும் என் அன்பு உறவினர் அனைவருக்கும் உங்களில் ஒருவன் - உங்கள் அன்பு உறவினன் எழுதிக் கொள்வது. எப்போதும் போலவே, என் பேச்சுக்கள் உங்களுக்கு எரிச்சலை ஊட்ட வாய்ப்புள்ளது; நான் சொல்ல முனைவதை உங்களுக்குச் சரியாகச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்ற சந்தேகமும் அப்படியே உள்ளது. இப்போதைய சூழலில் ஒருவேளை எடுபடலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏதாவது அர்த்தமிருப்பதாகத் தெரிந்தால், தொடர்ந்து படியுங்கள், இல்லையேல், எப்போதும் போலவே, "போடா, நீயும் உன் புண்ணாக்கு எழுத்தும்!" என்று புறந்தள்ளி விட்டு அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள்.

"ஆக வேண்டிய வேலை என்றால்? என்ன வேலையெல்லாம் பார்க்கச் சொல்கிறாய்? கொழுப்புக் கூடி விட்டதா?" என்று கோபம் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வந்தது... வட்டி வசூலிக்கப் போவதோ, வாய்தாப் போடப் போவதோ, அடுத்த தலைவனை அடையாளம் கண்டு அடியாள் வேலைக்குப் போவதோ, சினிமாத் தியேட்டரில் கலாட்டா செய்யப் போவதோ, புதிதாய் ஒரு சாதிக் கலவரத்துக்குத் திட்டம் தீட்டப் போவதோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் பிரியம். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் உங்களை வேலைக்குப் போவென்று சொல்லி உங்கள் மேலான உறவை இழக்க மட்டும் எனக்கு விருப்பம் இல்லை.

முறையாக உழைத்துப் பிழைக்கும் - தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் - என் மற்ற உறவினர்கள் எப்போதும் போல், "இது எனக்கில்லை!" என்று எண்ணிக் கொண்டு, இந்தக் கடிதத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்தில் விட்டு விட்டு வரவோ திரும்பக் கூட்டி வரவோ கிளம்புங்கள். உங்களைப் பற்றி எனக்கு எப்போதுமே கவலை இல்லை. எனக்குத் தெரியும். நீங்கள் மெதுவாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்; ஆனால், ஆழமாக ஊன்றி வளர்கிறீர்கள் என்று. இந்த நுணுக்கம் தெரியாதவர்கள்தாம் - நம்ம ஆட்கள் நிறையப் பேர், தவறான பாதைகளில் போய், தன்னையும் கெடுத்து ஊரையும் கெடுத்து தானும் கெட்டு ஊரும் கெட்டு இப்போது நட்டாற்றில் நிற்கிறார்கள்.

நான் இங்கு நலம். நீங்கள் யாரும் அங்கு நலமாய் இல்லை என்பதை நன்கறிவேன். நம் வீடுகளில் எத்தனை பேர் இன்னமும் அப்படியே இருக்கிறீர்கள் என்று கூடச் சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால், கடந்த சில வாரங்களாக நம் உறவினர்கள் நிறையப் பேர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளுக்கும் படையெடுத்துக் கொண்டிருப்பதைத் தினம் தினம் செய்தித் தாட்களிலும் தொலைக் காட்சிச் செய்திகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் காணும்போது, எப்போதும்போலவே, கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் கவலையாகவும் உள்ளது. தப்புச் செய்தவர்கள் உள்ளே போவது கண்டு அடைகிற மகிழ்ச்சி. தம் இரத்த உறவுகள் எத்தனை முறை பட்டாலும் திருந்த மாட்டேன் என்கிறார்களே என்ற கவலை.

வெள்ளைக் காரன் காலத்தில் இருந்தே நம்மவர்களின் முக்கால்வாசி வாழ்க்கை சிறைகளில்தான் கழிகிறது. விடுதலைப் போராட்டம் முதற்கொண்டு திருட்டு வழக்கு வரை வெவ்வேறு காரணங்களுக்காக நம்மவர்கள் சிறைச் சாலைகளுக்குப் போய்க் கொண்டேதான் இருக்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை நம் சிறைச்சாலைகளுடனான உறவு சிறிதும் குறைந்த பாடில்லை. நம்மைக் கட்டிக் கொண்டு வரும் நம் குலப் பெண்களும் சரி, சென்ற பிறவியில் செய்த பாவங்களுக்காக நம் உயிரணுவில் உதிக்கும் நம் பிள்ளைகளும் சரி, நமக்குச் சரியான பாடங்களைச் சொல்லிக் கொடுக்காத நம் பெற்றோரும் சரி, ஒருக்காலும் நம்மை நினைத்துப் பெருமைப் படும் படி நம் வாழ்க்கை இல்லை. ஒருநாள் இரவு கூட அவர்களை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாது என்பது நம் குலசாமி கட்டளை அல்லவா? அதைக் கண்டிப்பாகக் காப்போம்.

நம் வீடுகளில், "மூன்று தலைமுறை மேலேயே இருந்தவனும் இல்லை; மூன்று தலைமுறை கீழேயே இருந்தவனும் இல்லை!" என்றொரு பழமொழி சொல்வார்கள் அடிக்கடி. நமக்கென்னவோ அது மூன்று வருடங்கள்தான் நீடிக்கிறது. அதிக பட்சம் ஐந்தாண்டுகள். ஆட்சி மாற்றம் வரும்வரை. முன்பெல்லாம் ஆட்சி மாற்றம் ஆனவுடன் நாமும் கட்சி மாற்றம் செய்து கொண்டு பிழைப்பை ஓட்டி விடுவோம். இப்போது அதுவும் நடக்காது போல்த் தெரிகிறது. அவர்களும் தெளிந்து விட்டார்கள். நம்மை நம்பினால் அவர்கள் பிழைப்பு நாறி விடும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். நாம்தான் இன்னும் தெளியவேயில்லை. அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவே இல்லை.

திடீரென்று புதுப் பணக்காரனாகிறோம். டாம் டூம் என்று போட்டுத் தாக்குகிறோம். திடீரென்று பார்த்தால், ஓட்டாண்டியாகி, ஓடி ஒளியும் வேலைகளில் தீவிரமாகி விடுகிறோம். வாழும்போது நம் உறவினர் எல்லோரும் நம்மைச் சூழ்ந்திருந்து பூரித்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார்கள். நம் தாத்தாவுக்கும் அடையாளம் காண முடியாத மாதிரியான ஆட்கள் எல்லாம் ஊர்களில் இருந்து வந்து உறவினர்கள் என்று சொல்லிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். வீழும்போது, உடன் பிறந்த சகோதரரும் பெண் கொடுத்த சம்பந்தகாரரும் கூட, நம்மை அடையாளம் தெரியவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். நாமும் கூட்டம் சேரும்போது கொண்டாடிவிட்டு, குறையும்போது குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.

இது அவர்களுடைய தப்பா? அல்லது, நாம் வாழும் வாழ்க்கை முறையின் தப்பா? யோசித்துப் பார்த்தேன். நம்மிடமும் நிறையக் கோளாறு இருப்பதாகவே படுகிறது எனக்கு. சில நேரங்களில், இப்படி ஒரு பிழைப்புப் பிழைப்பதற்கு... நம்ம ஊர் வழக்கப் படி சொன்னால்... நாண்டு கொண்டு சாகலாமே என்று கூடத் தோன்றுகிறது. பேசுவது மட்டும் வாய் கிழிந்து காதோடு ஒட்டிக் கொள்ளுகிற மாதிரிப் பேசுகிறோம். சேர சோழ பாண்டியர் எல்லாம் நாங்கள்தாம் என்கிறோம். மன்னர் பரம்பரை என்கிறோம். வீரப் பரம்பரை என்கிறோம். ஆனால், எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நாம் செய்யும் தொழில் என்னவோ அதிகாரத்தில் இருப்போருக்குச் சொறிந்து விடும் வேலைதான். அதெப்படி ஒரு மன்னர் பரம்பரையில் தோன்றிய கூட்டம் இவ்வளவு கேவலமான நிலைக்குப் போக முடியும்? அதுவும் இவ்வளவு சீக்கிரமாக? எனக்கென்னவோ வரலாற்றில் சந்தேகம் வருகிறதப்பா. அதெப்படித் தமிழ்நாட்டில் மட்டும் மொத்த மக்கட்தொகையில் பாதிப் பேர் மன்னர் பரம்பரையாக இருக்க முடிகிறது?

நாம் மூன்று தலைமுறை வாழ்க்கை பற்றிச் சொலவடை போட்டுக் கொண்டு, மூன்று வருடம் கூட ஒழுங்காக வாழ முடியாமல் இருக்கிறோம். வேறு சிலரோ மூன்று தலைமுறை அல்ல மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக எந்தப் பெருமையும் அடித்துக் கொள்ளாமல் அமைதியாக நல்வாழ்வு வாழ்கிறார்கள். அதெப்படி அவர்களால் மட்டும் அப்படி முடிகிறது என்று நீண்ட நாட்களாகவே எனக்கொரு கேள்வி. விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் வாழ்க்கையை அருகில் இருந்தும் கவனித்துப் பார்த்தேன். அடிப்படையிலேயே அவர்களுடைய வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் நிரம்ப வேறுபாடு தெரிகிறதப்பா... அண்ணன்-தம்பிகளே! மச்சான்-மாப்பிள்ளைகளே! கேட்டால், "வந்தேறிகள் பயந்தாங்கொள்ளிகள். நாம் மண்ணின் மைந்தர்கள். உசுரை மசுராக மதிப்பவர்கள்!" என்றொரு வில்லங்கமான விளக்கம் கொடுப்பீர்கள்.

சரி, அப்படி என்னதான் வேறுபாடு கண்டேன் என்கிறீர்களா? அதையும் சொல்கிறேன் கேளுங்கள். முதல் வேறுபாடு - நாம் ஏற்கனவே பேசியதுதான். அவர்கள் பயப்படுகிறார்கள். நம்மவர்களிடம் அந்தப் பழக்கமே இல்லை. தகிரியம் நல்லதுதான். ஆனால், தப்புப் பண்ணப் பயப்பட்டால்தானே உருப்பட முடியும்? "கொலை செய்வேன்; கொள்ளை அடிப்பேன்; அடியாள் வேலை பார்ப்பேன்; அல்லக்கையாக இருப்பேன்; பிரியாணிக்கும் சாராயத்துக்கும் பிள்ளை குட்டிகளைக் கூட மறந்து எது வேண்டுமானாலும் செய்வேன்!" என்று வாழும் வாழ்க்கை எப்படிப்பா நமக்கு மட்டும் அவ்வளவு பெருமையாக இருக்கிறது? இதையெல்லாம் வெளியில் சொன்னால், நம்முடன் பழுகுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள் பலர். அவர்களைப் பயந்தாங்கொள்ளிகள் என்பதா? அல்லது, ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி வந்த நாம் அதற்கும் முந்தைய வாழ்க்கை முறையை விட்டு இன்னும் மீளவே இல்லை என்பதா?

பாண்டிய நாடு வீரம் விளைந்த பூமி என்பது உண்மைதான். ஆனால், நம்ம பூமியில் ஈரம் இல்லாததால், வேறொன்றும் விளையாததால்தானே நாம் அதை மட்டும் விதைத்துக் கொண்டும் விளைவித்துக் கொண்டும் இருக்கிறோம். முப்போகம் விளைகிற காவிரி ஆற்றுப் படுகையில் இருந்தா நாம் எல்லாவற்றையும் தூக்கி வீசி விட்டு மதுரைக்குச் சாதிக்க வந்தோம்? காய்ந்து போன மண்ணில் தம் பிள்ளைகளும் காய்ந்து மண்ணாகி விடக் கூடாது என்று பயந்து பஞ்சம் பிழைக்கத்தானே கடந்த அம்பது நூறு வருடங்களாக நம் முன்னோர்கள் மதுரையில் வந்து குடியேறினார்கள்? வந்தவர்கள் நன்றாக இருக்கும் நகர வாழ்க்கையைப் பார்த்து நாகரிகமாக மாற வேண்டியதுதானே. வந்து சேர்ந்த நகரத்தைத்தான் அவர்களுடைய வசதிக்கு ஏற்றமாதிரி மாற்றினார்கள். நம்ம ஊர்கள் மதுரை மாதிரி ஆவதற்குப் பதிலாக மதுரைதான் இப்போது நம்ம ஊர்கள் போல ஆகியிருக்கிறது.

"பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கடா!" என்று கருத்துச் சொல்ல ஒருவர் படம் எடுத்தால், அதை விட்டு விட்டு அதற்கு முன்பு படம் முழுக்கக் காட்டிய எல்லா மொள்ளமாரி வேலைகளையும் மட்டும் பிக்-அப் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் நம் இளைஞர்கள். எப்போது உருப்பட? படித்த பயபிள்ளைகளாவது உருப்படும் என்று பார்த்தால், படிக்கப் போன இடத்தில் சாதிக் கலவரம் செய்து கொண்டு, கல்லூரியில் பட்டத்துக்குப் பதிலா பாதியிலேயே கொடுக்கும் லெட்டரை வாங்கிக் கொண்டு வருதுகள். பழகப் பழகிக்கிட்டு வா என்று அனுப்பினால், முறைக்கப் பழகி விட்டு வருதுகள். உயர வழி பாருடா என்று அனுப்பி வைத்தால், உயர்வு தாழ்வு பேசிக் கொண்டு வந்து மேலும் மேலும் கீழே போக வழி சொல்லுதுகள்.

கிழக்கே நம்ம பகுதியில் காமராஜர் காலத்தில் ஒரு சாதிக் கலவரம் நடந்தது. காவல்த்துறை ஆட்கள் வந்து, கம்மாக் கரையில் கண்ணைக் கட்டி நிற்கதியாய் நிற்க வைத்து, மிருகத்தைச் சுடுவது போல சுட்டுப் போட்டார்கள். அத்தோடு நம் வீடுகளில் நீண்ட காலம் அடாவடித் தனம் குறைந்தது. அமைதி என்றால் என்ன என்று பெரிசுகள் நிறையப் பேர் விடாமல் பாடம் நடத்தினார்கள். இடையில் கொஞ்சம் திருந்தியது போலத் தெரிந்தது. வேதாளம் சும்மா இருந்தாலும் அதுக்குள்ளே இருக்கிற அதோட புத்தி சும்மா விடுமா? திரும்ப முருங்கை மரம் ஏறி விட்டது.

ஆறு வருடங்களுக்கு முன்பு தி.மு.க.வின் திசைப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று இருந்தவர்கள், அடுத்த வருடமே ஆட்சி மாறியதும், பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும்போது போகிற மாதிரி அஞ்சா நெஞ்சரிடம் போய், அடியாள் வேலைக்கும் அல்லக்கை வேலைக்கும் பதிந்து கொண்டு வந்தார்கள். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்கிற அறிவு அவர்களுக்குத்தான் இல்லை; ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கட்சி மாறும் நமக்கு இருக்க வேண்டாமா? "அவர்களுக்கே இல்லையே என்று நாங்களும் துணிந்து விட்டோம்!" என்று புத்தியைக் கடன் கொடுத்து விட்டு இப்போது கவலைப் படுகிறார் கந்து வட்டி மாமா ஒருத்தர். ஒன்று சொல்கிறேன் - அடியாள் வேலையும் அல்லக்கை வேலையும் பார்ப்பதை விட கந்து வட்டியும் கட்டப் பஞ்சாயத்தும் சாராய வியாபாரமுமே மேல் போல் தெரிகிறது.

'இதுவும் கடந்து போம்!' என்றொரு தத்துவம் சொல்வார்கள். நமக்கு எல்லாமே உடனே கடந்து போம். நாளையே இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து விட்டால், பழைய படி மொள்ளமாரி வேலைகளை ஆரம்பித்து விடுவீர்கள். "பயந்தா தொழில் பண்ண முடியுமா? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்!" என்றொரு விளக்கம் கொடுத்து விட்டு, வெளுத்த வெள்ளை வேட்டி சட்டையை மாட்டிக் கொண்டு, உடம்பெல்லாம் தங்கத்தைத் தொங்க விட்டுக் கொண்டு, முடிந்தால் ஏமாற்ற வசதியாக பக்திப் பழம் போல் நெற்றியில் திருநீறையும் பூசிக் கொண்டு, கிளம்பி விடுவீர்கள். உயிர் இந்தக் கட்டையை விட்டுப் பிரியும் முன் வயிற்றில் அடிக்க வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கை நிறைய மிச்சம் இருக்கிறது என்று கூடுதல் வீரியத்தோடு ஆரம்பிப்பீர்கள்.

நம்ம க்ரூப் ஆட்கள் ஒரு சிலர் ஆரம்பத்தில் இருந்தே இந்த வம்பு தும்புகளுக்கெல்லாம் போகாமல் ஒழுங்காகப் படித்து முன்னுக்கு வந்து தம் பிள்ளைகளையும் படிக்க வைத்து நல்ல இடங்களில் கட்டிக் கொடுத்து நிம்மதியாக வாழ்கிறார்கள். முடிந்த அளவு கண் காணாத இடத்துக்குப் போய் விட்டார்கள். அல்லது, கண்ணுக்கு முன்பே வாழ்ந்து கொண்டு, நம்மையெல்லாம் கண்டுகொள்ளாமல் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்; ஆனால், சிக்கினால் நொங்கெடுத்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் என்னைச் சுற்றி இருக்கிற எல்லோருக்கும் சொல்கிறேன்.

இன்னொரு க்ரூப் இருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பம் என்னவோ அருவருப்புதான். ஏதேதோ தொழில்கள் செய்து எப்படியோ முன்னுக்கு வந்தவர்கள். ஆனால், காசு வந்ததும் நிறைய மாறி விட்டார்கள். பிள்ளைகளாவது நல்லபடி வளரட்டும் என்றெண்ணி நம் பார்வைகளில் இருந்து விலகி நல்லபடி வாழப் பழகி விட்டவர்கள். பேரப்பிள்ளைகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் வாழ்க்கை முறையே மாறி விட்டது. அவ்வப்போது தேவை வந்தால் அவர்களுடைய பிறவிப் புத்தி வெளியே வரும். மற்ற படி, பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தரமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் இவர்கள் போலாவது வாழ்ந்து விடுவோம் என்றுதான் என் சுற்றத்தார் எல்லோரிடமும் சொல்கிறேன்.

இதையெல்லாம் விட்டு விட்டு, இந்த வாழ்க்கையில்தான் கிக் இருக்கிறது என்று இப்படியே தொடர விரும்புவீர்களேயானால், உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடம் வேறொன்றுமில்லை. என்னைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களைப் பத்திரிகைகளில் பார்க்கும்போது கொஞ்ச நஞ்சம் வரும் வருத்தம் கூட வராத அளவு பழகிக் கொள்ள வேண்டும். நீங்களே அதெற்கெல்லாம் பெருமைப் பட்டுக் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். நான் போய் எதற்கு அதைக் கேவலமாகப் பேச வேண்டும். உங்களுக்கு என் மீது வருத்தம் வர வேண்டும்! விடுங்கள்.

* இன்னும் நிறைய எழுத வேண்டும் என நினைத்தேன். நானும் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் இல்லையா? அதான்... நினைவு வர வர வந்து சேர்த்து விடுகிறேன்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

தற்கொலை

ஏதோ விதமாய்
இருக்க நினைத்து
எவருமே ஒத்து வராமல்
எவருக்குமே ஒத்து வராமல்
எதுவுமே செய்ய முடியாமல்
பேசக்கூட ஆளில்லாமல்
கேட்கக் கூடக் காதில்லாமல்
விளிம்பு நிலைக்குத் தள்ளப் பட்டு
விரக்திப் பட்டவர்கள்
எல்லாம் முயன்று
எதுவும் சரி வராமல்
எடுக்கும் இறுதி முடிவு

வாழ முடியாதவன்
கோழை எனும் கூட்டத்தில்
வீழ முடிந்தவன்
வீரன் என்று விவாதித்தவர்கள்
விரும்பி நாடிய முடிவு

மனம் பொறுக்காமல்
மாரடைப்பில் மாள்வது மட்டும்
மன தைரியமா?
மாவீரமா?  - என்று
மாற்றி யோசித்தோர்
மனமார ஏற்ற முடிவு

மா-ரண வேதனையைவிட
மரண வேதனை மேல் எனும்
கருணைக் கொலை மட்டும்
காருண்யமென்றால்
வலி பொறுக்காமல்
வலியப் போய் மாய்த்துக் கொளும்...
வதை தாங்காமல்
கதை முடித்து மடிந்து கொளும்...
தற்கொலை எப்படித் தவறாகும்? - என்று
தர்க்கம் பேசியோர்
தவறாக எடுத்த முடிவு

உயிரை ஒழித்துக் கொள்ளும்
உரிமை இல்லையெனில்
வாழ்வை வருத்திக் கொள்ளும்
வசதியை மட்டும் எமக்கு
வழங்கியது யார்? - என்று
வழக்காடியவர்கள்
வழியின்றி வரவேற்ற முடிவு

முடித்துக் கொள்ள எடுத்த முடிவு...
ஒருவருக்கு முடித்து வைத்து
பலருக்குத் தொடங்கி வைத்திருக்கிறது...
முடிவே இல்லாத துயரக் கணக்குகளை!

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

மாற்றுத் திறனாளி

என்னிடம்
எந்தக் குறைபாடும்
இல்லை இல்லை என்று
சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டியதில்லை நீங்கள்

அது
ஏதோ
இருக்கிறதோ இருக்கிறதோ என்று
நினைவு படுத்திக் கொண்டே
இருப்பதாகவே உள்ளது

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...