புதன், செப்டம்பர் 29, 2010

வம்ச அரசியல் மோகம் (TRYST WITH THE DYNASTY)

முன் குறிப்பு: ஈழப் பிரச்சனையையும் அதில் காங்கிரசின் நிலைப்பாட்டையும் பற்றிய கோபங்களை மட்டும் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டு இதைப் படியுங்கள். அந்த கோபங்கள் அனைத்தும் எனக்கும் அப்படியே உண்டு. ஆனாலும், நாமெல்லாம் இப்போதைக்கு இந்த நாட்டின் ஓர் அங்கமாக இருப்பதால், அதற்கு அப்பாற்பட்டும் இந்திய அரசியல் பற்றிப் பேச வேண்டியுள்ளது என்பதும் காலத்தின் கட்டாயம்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் விடியலுக்கு முந்தைய இரவில் பேரறிஞர் (இந்த அடைமொழி அண்ணாவுக்கு மட்டுமே சொந்தம் எனப் பிடிவாதமாய் இருக்கும் தம்பி அல்ல நான்!) நேரு ஆற்றிய உரையின் பெயர் "TRYST WITH THE DESTINY". அதாவது, கிட்டத் தட்ட "விதியோடு உல்லாசம் / விளையாட்டு" என்று பொருள் படும் என வைத்துக் கொள்ளலாம். அதையே சிறிது சுளுக்கினால் TRYST WITH DYNASTY என்றாகிறது. அதன் பொருளோ "வம்ச அரசியலோடு உல்லாசம் / விளையாட்டு" என்றாகிறது. அதையே இன்னும் கொஞ்சம் சுளுக்கி "வம்ச அரசியல் மோகம்" என்றாக்கி விடுவோம் தமிழில். மோகம்தானே உல்லாசங்களின் மூலம்.

இதுவரை இந்த நாட்டை ஆண்டோரிலேயே அதிகம் தகுதி படைத்தவரும் இருந்த பிரதமர்களிலேயே பலவீனமான ஒருவருமானவரிடமிருந்து (பலரில் ஒருவர் என்றுதான் சொல்வேன்; அவரே எல்லோரையும் விடப் பலவீனமானவர் என்று எண்ண வில்லை; இருபது-முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதை கூட இல்லாமல் ஏற்கனவே சிலர் இந்த நாட்டை ஆண்டுவிட்டுச் சென்று விட்டார்கள்!) காங்கிரஸ் கட்சியின் இளவரசர் எப்போது அதிகாரத்தைக் கைப்பற்றப் போகிறார் என்பது அரச வம்சத்தோரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், இந்தக் கைப்பற்றல் கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒருவித நிலைப்புத் தன்மையைக் கொண்டு வரும். இப்போதைக்கு அது அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐ.மு.கூ-1 இல் சில முதுகெலும்பற்ற கோமாளிகள்கூட அவரை மதிக்காமல் அநியாயம் பண்ணினார்கள். ஐ.மு.கூ-2 இல் பரவாயில்லை. ஆனால் இன்னும் சரிப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மேலே உட்கார்ந்திருப்பவர் மக்களின் ஆதரவு அற்றவராக இருக்கும்போது அவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியாது. துரதிர்ஷ்ட வசமாக, பின் வாசல் வழியாக வந்ததால் முனைவர் சிங்கிடம் அது இல்லை. சில இடுகைகளுக்கு முன் பேசியது போல, அது அவருடைய பிரச்சனை அல்ல. நம்முடையது. அளவுக்கு மீறிய நாகரீகம் படைத்த ஒருவரை மதிக்கவும் ஆதரிக்கவும் முடியாதது நம்முடைய பிரச்சனைதான். அவருடையதல்ல.

பதவி கை மாறும்போது, நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு மக்கள் தலைவன் தலைமைப் பொறுப்பில் அமர்வது போலாகும். இந்த தேசம் கண்ட பிரதமர்களிலேயே பலவீனமான பிரதமர் என்று அத்வானியால் அழைக்க முடியாது. புத்திசாலித்தனமாக வித்தியாச வித்தியாசமாக யோசித்து விமர்சிப்பதற்கு ஏதாவது புதிய காரணங்கள் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும். பாதி இந்தியர் என்றோ பாதி இத்தாலியர் என்றோ சொல்ல வேண்டியிருக்கும். ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கும் வரை மண மேடையில் அமரும் எண்ணம் இளவரசருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முடிசூட்டு விழாவுக்கு முன்பே திருமணம் செய்ய நேர்ந்தால், அது விமர்சனங்களுக்கு விருந்து வைத்து அழைப்பு விடுத்தது போலாகிவிடும். அத்வானிகளுக்கும் மோதிகளுக்கும் அவருடைய அடையாளம் பற்றிக் கேள்வி எழுப்ப மேலும் ஒரு வாய்ப்புக் கொடுத்தது போலாகி விடும். கொலம்பியப் பெண் குட்டி பற்றிக் கேள்விப் படும் செய்திகளெல்லாம் பொய்யாக இருக்க வேண்டுமென்று மனமார ஆசைப்படுகிறேன். நம் நீண்ட வரலாற்றில், அடுத்த தலைமுறையின் அத்வானிகளும் மோதிகளும் வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றிய பிரச்சனையைப் பேசுவதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அடுத்த வெளிநாட்டு காந்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் தன் திறமை முழுமையையும் வீணடிக்கும் இன்னொரு சுப்ரமணியசாமி நமக்கு வேண்டாம்.

எப்படியிருந்தாலும், மாற்றம் நடக்கும் போது, பிரதமர் மீண்டும் இந்தியாவின் தலை சிறந்த அதிகாரம் படைத்தவராக ஆவார். அனைத்து அமைச்சர்களும் அவர் பேச்சைக் கேட்பார்கள். இல்லாவிட்டால், அடுத்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, அடுத்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் வண்டியிலேயே தத்தம் சொந்த மாநிலத்துக்கு மூட்டை கட்டி அனுப்பி விடுவார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். அரசியலமைப்பின்படி சர்வ அதிகாரமும் படைத்த பிரதமரானவர் ஒவ்வொரு கொள்கை முடிவுக்கும் அவருக்கும் மேலே இருக்கும் ஒருவரிடம் போய் அனுமதி வாங்க
வேண்டியிராது.

அது சரி, இளவரசர் அரசனானால் மகிழ்வேனா? இல்லை. கண்டிப்பாக இல்லை! ஏன்? வாஜ்பாய் - சோனியா மோதலின் போது, கட்சி என்கிற முறையில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் பரவாயில்லை என்று நினைக்கிற ஆளாக இருந்தாலும், சோனியாவைவிட வாஜ்பாய் பரவாயில்லை என்று நினைத்தேன். அத்வானி - சோனியா மோதலாக இருந்திருந்தாலும் கூட, அத்வானியைத் தான் ஆதரித்திருப்பேன். கொள்கை ரீதியான மோதல்களில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் பக்கமே அதிகம் சாய்வேன். ஆனால், ஆளுமைகளுக்கு இடையேயான போட்டியில், ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒருவரைத் தகுதியானவர் என்பதை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நம் அரசியலின் மிகப் பெரிய கோமாளித் தனம் அதுதான். சர்வ அதிகாரம் படைத்த பின்பெயரோடு, தகுதி பெறுவதற்குரிய திறமைகளும் கொண்டிருந்தால், கண்டிப்பாக நீங்கள் வரலாம். ஆனால், சின்ன வயதிலிருந்து மக்களுக்காக உழைத்த ஒருவரை விட, மக்களால் - மக்களுக்காக - மக்களாலேயே அமைக்கப் பட்ட அரசாங்கத்தில் அப்படி உழைத்த ஒருவருக்குப் பிறந்த ஒருவருக்குப் பிறந்த ஒருவருக்குப் பிறந்த ஒருவரை முன்னிறுத்துவது எந்த வகையிலும் நியாயப் படுத்தக் கூடியதாக இல்லை.

நூறு கோடி மக்கட்தொகை கொண்ட ஒரு நாட்டில் நாற்பது வருடங்களுக்கு முன்பு சரியான துணையைத் தேர்ந்தெடுக்கும் திறமை பெற்றிருந்த ஒரே காரணத்துக்காக ஒருவர் சகல வல்லமை கொண்ட ஒரு தலைவராக முடியும் என்பது மிக மிகக் கொடுமை. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் நாட்கள் தொட்டு, கையில் கட்சிக் கொடியையும் மனதில் பெரும் கனவுகளையும் ஏந்திக் கொண்டு சாலைகளிலும் வீதிகளிலும் தங்கள் வாழ்க்கையைச் செலவிட்டவர்களுக்கு அது பெரும் வலியாக இருக்கும். மன்மோகன் சிங் போன்றவர்கள் மக்கள் அனைவராலும் மதிக்கப் படுகிற - சர்வ அதிகாரமும் படைத்த தலைவராக இருப்பதையே முழு நிறைவோடு காண விரும்புவேன். ஆனால், அது நடைமுறைக்கு எட்டாத தொலைவில் உள்ள ஆசை. அவரே இன்றைக்குப் பெற்றிருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் இந்திய அரசியலின் அதிகார மையமாக இருக்கும் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றதால்தான் முடிந்தது.

எனவே, நடைமுறை சாத்தியங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், நம் மக்கள் தம் தலைவர்களின் குடும்பத்தைக் கண்டு அல்லாமல் சாதனைகளைக் கொண்டு அவர்களை ஆதரிக்கும் நாள் வரும்வரை அல்லது தமக்குப் பிடித்த தலைவர்களைத் தாமே தேர்ந்தெடுக்கும் விதத்தில் நம் அமைப்பு மாறும் வரை (கூடிய விரைவில் அதிபர் முறை அமைப்பைப் பற்றியும் எழுத வேண்டும் என்றோர் ஆசை), கீழ் வரும் காரணங்களுக்காக காங்கிரசின் இளவரசன் அரசனாவதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லை.

1. அந்த இருக்கைக்குரிய அதிகார வீச்சு என்னவென்று நிலை நிறுத்தப் படும். அதுவே உலக அரங்கில் நம் நாட்டை உறுதியாக்கும். அத்வானி சொல்வது போல, அது கண்ணியம் சம்பந்தப் பட்ட விஷயம் என்று சொல்ல மாட்டேன். சரியாகவும் 'கண்ணியமாகவும்' சொல்ல வேண்டுமென்றால், அது நிலைப்புத் தன்மை சார்ந்த விஷயம்.

2. அவருடைய வருகை தகுதியின்படியானது இல்லையென்றாலும், அரசியிலின் உள்ளோட்டங்களை அறிந்து கொள்வதில் தேவையான அளவு நேரம் செலவழித்து இருக்கிறார். எனவே, உள்ளே தள்ளி விடப்படும் வேளையில் அவருடைய தந்தை அளவுக்குக் கத்துக் குட்டியாக இருக்க மாட்டார். தந்தை செய்த அதே தவறுகளை இவரும் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அவருடைய தந்தையை விடப் பரவாயில்லாமல் பண்ணுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

3. இது வம்ச அரசியலுக்கு வரிந்து கட்டிப் பேசுவது போலத் தோன்றினாலும், ஒருவருடைய குடும்பம் பொது வாழ்க்கையில் இத்தனை தலைமுறைகளாக இருந்திருக்கிறது என்றால், அவருக்குக் கண்டிப்பாகப் பொது வாழ்வு பற்றிய நல்ல அறிவும் பிடியும் இருக்கும் என்று நம்புகிறேன். பின்பெயரை மட்டுமே வைத்து ஒருவரைப் பெரிதாக்குவதை எந்த வகையிலும் ஆதரிக்க வில்லை. ஆனால், நடக்கப் போவதை யாரும் தடுக்க முடியாது என்பதை அறிந்து அதைப் பற்றிய நேர்மறைகளை மட்டும் பேசக் காரணங்கள் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் 'ஆம்' அல்லது 'இல்லை' என்கிற இரு வார்த்தைகளில் என் முடிவைச் சொல்லி விட முடியாது. அவர் பிரதமராவதை நான் ஆதரிக்கிறேனா என்பதை ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், அந்த வாக்கியம் இப்படிப் போகும் - "இந்த நாட்டின் மக்கள் அடிமைகளைப் போல அவர்களுடைய தலைவனை திரும்பத் திரும்ப ஒரே குடும்பத்தில் இருந்து இழுத்துக் கொண்டு வராமல் நூறு கோடி மக்களில் இருந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; ஆனாலும், அந்த முதிர்ச்சி நமக்கு வரும்வரை, யாரோ ஒரு பிராந்திய அரசியல் அயோக்கியன் அல்லது அயோக்கியை வந்து நம்மை ஆள்வதற்குப் பதிலாக ராகுல் காந்தி போன்ற ஒருவர் நம் பிரதமராவது எனக்கு பரவாயில்லை என்றுதான் படுகிறது!". எவ்வளவு நீளமான "ஒரே வாக்கியம்"!? :)

விவாதக்காரத் தமிழர்?!

நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்யா சென் அவர்களின் ஆங்கில நூல் “THE ARGUMENTATIVE INDIAN” வாசித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் நேரடியாக மொழி பெயர்த்துச் சொல்லவேண்டுமென்றால் “விவாதக்கார இந்தியர்” என்று வரும். பொருளியல் மட்டுமல்ல, அவர் வரலாறு மற்றும் சமூகவியலிலும் கைதேர்ந்தவர்; தாகூருக்கும் சத்யஜித் ரேக்கும் அடுத்தபடியாக வங்க மண்ணில் தோன்றிய தலை சிறந்த அறிவாளி; இந்திய அளவிலும் ஒரு முக்கியமான இடம் கொடுக்கப்பட வேண்டிய அறிவாளர். அவர் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் விவாதங்கள் மிக முக்கியமானவை. எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் அதைக் கடுமையாக விவாதிக்கும் கலாச்சாரம் இந்தியாவில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது. அதுதான் இன்று நாம் நல்ல ஜனநாயக நாடாக இருக்க உதவுகிறது என்பது. நூல் முழுக்கவே வங்காள வாடை நிறைய அடிக்கிறது. வங்காளியாகப் பிறந்த ஒருத்தருடைய நூலில் வங்காள வாடை வருவதொன்றும் பெரும் குற்றமில்லை. அது மிக இயல்பானதே. அதற்கு அவர் “The Argumentative Bengali” (விவாதக்கார வங்காளி) என்றே பெயரிட்டிருந்தாலும் அது ஓரளவு ஒத்துத்தான் போயிருக்கும். அதைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து, அந்தக் கலாச்சாரம் நம்மிடம், அதாவது தமிழர்களிடம், இருந்ததா – இருக்கிறதா என்று ஒரு கேள்வி என்னை விரட்டிக் கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த இடுகை.

தமிழன் விவாதக்காரனா என்று பேசும் முன் நிறையப் பேசுபவனா, அதாவது சவடால்ப் பேர்வழியா என்பது பற்றிச் சிறிது பேசி விடுவோம். “நான் அப்படியெல்லாம் பேசுவதில்லை”, “என் தம்பி அப்படியெல்லாம் பேசுவதில்லை”, “என் கொழுந்தியாள் அப்படியெல்லாம் பேசுவதில்லை”, “எதற்காக இப்படிப் பொதுப் படையாக ஒரு பழியைப் போடுகிறாய்?” என்றெல்லாம் சண்டைக்கு வர எத்தனிப்பவர்களுக்கு ஒரே ஒரு முன் விளக்கம். நான் பேசப்போகிற எல்லாமே ஒரு சராசரித் தமிழனை மனதில் வைத்து. சில இடங்களில் சராசரி விதிவிலக்குகளையும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேன். அதையும் மீறி ஒரு வேளை மாற்றுக் கருத்து இருக்குமாயின் கண்டிப்பாகப் பேசலாம். அது நிச்சயமாக நம் இருவரில் ஒருவருக்குப் பயனளிக்கும்.

மற்ற ஊர் அரசியல்வாதிகளை விட நம்ம ஊர் ஆசாமிகள் கொஞ்சம் அதிகம்தான் பேசுகிறார்கள். பேசியே ஆட்சியைப் பிடித்த கதை இங்கு மட்டும்தானே நடந்தது. அரசியல்வாதிகள் இலக்கியம் பேச வேண்டுமென்ற எழுதப் படாத சட்டமும் இங்கேதான் இருக்கிறது. ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு ஒரியாவே தெரியாதாம். அப்படி ஒருத்தர் இங்கே ஆட்சி செய்ய முடியுமா? “அதற்குக் காரணம் போன தலைமுறையில் அவங்க அப்பா ஏற்கனவே முதலமைச்சராக இருந்து நற்பெயர் வாங்கியவர்” என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. அப்படி ஒரு அப்பாவை நாம் விட்டு வைத்திருப்போமா? ‘நீ தமிழனுக்கா பிறந்தாய்?’ என்றோர் அசிங்கமான கேள்வியை வேறொரு விதமாக மிக அழகாகத் தமிழில் கோர்வையாக்கிக் கேட்டு நாறடித்திருப்பார்கள். தம் மக்களின் மொழியைக்கூடப் பேச முடியாத ஒரு தலைவர் எப்படித்தான் அவர்கள் பிரச்சனையைப் புரிந்து கொள்கிறார் அல்லது எப்படி ஓட்டுக் கேட்கிறார் என்று ஆச்சரியமாகக் கேட்கிறவர்களுக்கு ஒரு மேட்டர். நிறையப் பேச நேரம் இல்லாததாலோ என்னவோ அவர் நல்லாட்சி கொடுத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் நாடறிந்த அறிஞர் பலர். இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற முதலமைச்சர்களில் ஒழுங்காக வேலை பார்ப்பவர்களில் அவரும் ஒருவர் என்கிறார்கள்.

மற்ற பல மாநிலங்களிலிருந்து வருகிற அரசியல்வாதிகளும் மற்ற துறைத் தலைவர்களும் கூட நன்றாகப் பேசத்தான் செய்கிறார்கள். விவேகானந்தர், காந்தி, நேரு, அம்பேத்கர், தாகூர், ஜின்னா, கிருஷ்ண மேனன் (கேரளாவைச் சேர்ந்த இவர் ஐ.நா. சபையில் விடாமல் எட்டு மணி நேரம் பேசிச் சாதனை செய்தவர்), சத்யஜித் ரே, அமர்த்யா சென், வாஜ்பாய், மோதி (அவர் பெயர் மோடி அல்ல), அத்வானி மற்றும் லல்லு ஆகியோர் வெவ்வேறு கால கட்டங்களில் பெரிதாகப் பேசப் பட்ட பேச்சாளர்கள். சென்ற இடுகையில் சொன்னது போல, சிறந்த பேச்சாளர்களும் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகம் தோன்றி இருக்கிறார்கள். வங்கத்திலிருந்து நிறையப் பேரறிவாளிகளும் பேச்சாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அதற்கடுத்து தமிழகத்திலிருந்து நிறையத் தோன்றியிருக்கிறார்கள். சிங்காரவேலர், சத்தியமூர்த்தி, டாக்டர். ராதாகிருஷ்ணன், பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் இந்திய அளவில் போடப்படும் எந்தப் பேச்சாளர் பட்டியலிலும் இடம்பெறத் தக்கவர்கள். சிறந்த பேச்சாளராக இருக்க ஒருவர் அடிப்படையில் சிறந்த சிந்தனையாளராக இருக்க வேண்டும். பெரிதாகச் சிந்தனை பலம் எதுவும் இல்லாமல் வெறுமனே சொற்களை மட்டும் அடுக்குகிற வரட்டுப் பேச்சாளர்கள் நிறைய நம்ம ஊரில் இருக்கிறார்கள். மற்ற ஊர்களில் அது எப்படி என்று தெரியவில்லை. முழு நேரப் பேச்சாளர்களை விட முழு நேர எழுத்தாளர்களை விட அவை தவிர்த்து வேறு ஏதாவது சாதித்து விட்டு வந்து பேசினாலோ எழுதினாலோ அவரை நாம் அதிகம் மதிப்போம். பெரும் பெரும் சிந்தனையாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் நிறையப் பேர் பேச்சாற்றல் மட்டும் இல்லாமல் இருப்பதையும் நம் பொது வாழ்க்கைப் பிரமுகர்கள் பலரும் நம் அலுவலகங்களில் இருக்கிற பெரியவர்கள் பலரும் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அடுத்து திரைப்படங்கள். எடுத்துக்காட்டாக, மலையாளப் படங்களை விட நம் படங்களில் பேச்சு கொஞ்சம் அதிகம்தான் போல் தெரிகிறது. அவர்களிடம் மேட்டர் அதிகம்; பேச்சு குறைவு என்று அவர்களில் சிலர் என்னிடம் அடிக்காத குறையாகச் சொல்கிறார்கள். உண்மைதான். அவர்களுடைய திரைப்படங்களில் அளவிலாத தரம் இருக்கிறது (சத்தியமாகச் சொல்கிறேன் - சனிக்கிழமை இரவு சூர்யா டி.வி.யில் வருகிற படங்களை மனதில் வைத்துச் சொல்லவில்லை இதை!). மோகன்லால் கொஞ்சம் பொறி பறக்கும் விதமாக வசனங்கள் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். வங்காளப் படங்களில் கண்டிப்பாக நம்மை விட அதிகமான வசனங்கள் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இந்திப் படங்களிலோ மற்ற மொழிப் படங்களிலோ நெடு நீண்ட வசனங்கள் பேசுகிற காட்சிகள் நிறைய வருகின்றனவா என்று தெரியவில்லை. பராசக்தியில் சிவாஜி பேசியதாகட்டும் கேப்டன் பிரபாகரனில் விஜயகாந்த் பேசியதாகட்டும் நீதிமன்றக் காட்சிகளுக்கென்று ஒரு மவுசு இருந்த காலம் உண்டு நம் ஊரில். அந்தக் காலத்தில் பல படங்கள் சிவாஜியின் வசனங்களுக்காகவே ஓடியதாகக் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

நீதித் துறையில் அல்லது வழக்கறிஞர் தொழிலில் இந்திய அளவில் நம்மவர்கள் பெரிதாக யாரும் வந்த மாதிரித் தெரியவில்லை. சுப்ரமணிய சுவாமி அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பெரிதாக ஏதும் பெயர் பெற்ற மாதிரித் தெரியவில்லை. சிதம்பரம் பதவியில் இல்லாத காலங்களில் முறையாக வக்கீல்த் தொழில் பார்க்கிறார் என்கிறார்கள். அவர் ஒரு நல்ல பேச்சாளர்தான். ஆனால் நாம் சொல்கிற அளவுக்குப் பெரிய வழக்கறிஞர் என்று சொல்ல முடியாது. இதுதான் நாம் ஒருவேளை வெட்டிப் பேச்சுக் கூட்டமோ என்றொரு சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. நான் குழப்பங்களைத் தீர்க்க எழுத வந்தவனில்லையாதலால் தங்களால் என் குழப்பங்களைத் தீர்க்க முடியுமாயினும் ஓகே தான். என்னுடைய குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக எழுத வந்தவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது தெளிய வைக்கும் முயற்சியைக் கிளப்பி விடுவதற்காக குழப்புகிறவனாகக் கூடச் சொல்லலாம். முன்னமே சொன்னேனே, வாசகரின் சிந்தனையை மட்டும் தூண்டுவதல்ல எழுத்து; எழுதுபவனின் சிந்தனையையும் தூண்டுவதுண்டு அது.

தமிழ்நாட்டுக்குள் பார்த்தால் சில பகுதியினர் பேச்சே பிழைப்பாகத் திரிகிறார்கள். நான் பார்த்ததில் அப்படிப் பட்ட ஓர் ஊர் மதுரை. அதிகம் பேசாத மதுரைக்காரர்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இவர்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா என்ற அளவுக்குப் பேசுவார்கள். மொட்டைத் தலையனுக்குச் சீப்பு விற்கிற அளவு பேச்சாற்றல் கொண்டவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். அது போல, பிறரை விவாதங்களுக்கு இழுப்பது, பின்னர் குரலை உயர்த்திக் குண்டக்க மண்டக்கப் பேசி, எதிராளியை நிலை குலையச் செய்து விட்டு, ரெம்ப மமதையோடு எழுந்து போய் அடுத்த ஆள் தேட ஆரம்பிப்பது, இப்படியாக அன்றாட வாழ்க்கையைப் பேச்சிலேயே ஓட்டுகிற ஆசாமிகள் நிறையப் பேரை அங்குதான் அதிகம் பார்த்திருக்கிறேன்; வெளியில் பார்த்ததில்லை. அதற்கொரு காரணம் வேலை பார்க்கிற காலத்தில் வெளியேறியதாகக் கூட இருக்கலாம். மதுரைக்காரர்கள் அவ்வளவு பேசியும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அது போல ஆங்கிலத்தில் பேச முடியாமல் தமிழில் மட்டும் அப்படிப் பேச முடிந்ததால் இருக்கலாம். நல்ல வேலை ஆங்கிலம் நல்லாப் பேச வரவில்லை எங்க ஊர்க்காரர்களுக்கு என்று சில நேரம் தோன்றும். ஏனென்றால், அப்படி ஆங்கிலமும் பேசப் பழகிக் கொண்டு வருகிற சில பேர்வழிகள் பேச்சை மட்டுமே வைத்துப் பிழைப்பு நடத்துவதைப் பார்த்தால் வயிறு கொஞ்சம் எரியத்தான் செய்யும். பேச்சு மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும்?!

அடுத்ததாக, ஊர்ப்பக்கம் இருந்து வருகிற எம்மைப் போன்ற ஆசாமிகளிடம் இருக்கிற ஒரு நம்பிக்கை, சென்னைக்காரர்கள் எல்லாம் பெரும் சவடால்ப் பேர்வழிகள் என்பது. “வாயிலேயே கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்திருவான்யா” என்று பேசிக் கொள்வார்கள். அதை ஓரளவு நானும் கவனித்திருக்கிறேன். அதைத் தன்னம்பிக்கை சம்பந்தப் பட்ட ஒன்றாகப் பார்க்கிறேன். மக்கட்பெருக்கம் நிறைந்த ஊர்களில் நிறையக் கூட்டங்களோடு கூட்டமாக வாழ்கிறபோது அது தானாகவே வந்து விடும் என நினைக்கிறேன். கிராமப் புறங்களில் இருந்து வருகிறவர்கள் சின்னச் சின்ன மேட்டர்களைப் பெரிதாக நினைத்துக் கொண்டு ஆச்சரியப் படும் நேரத்தில் நம் நகர மாந்தர்கள் பல மைல் தொலைவு முன்னால் போய் விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

பெங்களூரில் நான் கண்ணாரக் கண்டு வியந்த ஒன்று – நம்ம ஊரில் நமக்கு சாதாரணமாகப் படுகிற பல சங்கதிகளை இங்கே பேசும்போது இங்கே உள்ளவர்களுக்கு அது ஏதோ பெரிய தத்துவம் பேசுவது போலத் தோன்றும். “ஆகா... ஓகோ...” என்று பெருமிதப் படுவார்கள். எனக்குத் தெரிந்து அதற்கான காரணமாகப் படுவது, ஒன்று தத்துவங்களுக்கான குறைபாடு அல்லது அப்படிச் சமாச்சாரங்களைப் பேசுகிற சவடாலர்களுக்குக் குறைபாடு. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தத்துவங்களுக்குக் குறைபாடு போலத் தெரியவில்லை. இதுதான் நாம் வாய்ப் பேச்சில் வல்லவர்களோ என்று பல முறை என்னைச் சிந்திக்க வைத்தது. அதே போல, பெங்களூரில் நான் கண்ட கடும் உழைப்பாளிகளும் நம்மவர்களே; வாயிலேயே கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துபவர்களும் நம்மவர்களே. இங்கிருப்பவர்களோ சாதாரணமாக வேலை பார்ப்பார்கள்; சாதாரணமாகப் பேசுவார்கள்; கல்லைக்கூடத் தூக்க முடியாமல் உட்கார்ந்து கொண்டு மலையையே பெயர்க்கும் வல்லமை கொண்ட ஆஞ்சநேயரின் அக்கா மகன் போலப் பேச மாட்டார்கள். அதுவும் பல நேரங்களில் மதிக்கும் படியாகத்தான் இருக்கிறது.

“சரிப்பா, குழப்பியது போதும். இறுதியாக என்ன சொல்கிறாய்? தெளிவாகச் சொல்” என்பவர்களுக்கு என் ஒரு வரி இதுதான் – வாய்ச் சவடாலில் கண்டிப்பாக நாம் மற்றவர்களை விட ஒரு படி மேலேதான்.

சவடால் மட்டுமில்லை. விவாதங்களும் நிறைய நடந்திருக்கின்றன இங்கே. அமர்த்யா சென் சொல்லாமல் விட்ட விவாதங்கள் நிறைய இருக்கின்றன நம்மிடம். இந்தியாவிலேயே அதிகம் கோயில்கள் இருக்கிற மாநிலம் நம்முடையது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்புப்படி, இந்தியாவிலேயே அரசாங்கப் பொது இடங்களில் – புறம்போக்கு நிலங்களில் அதிகம் கோயில் கட்டியிருக்கிற மாநிலம் தமிழகம். இது ஏன் சரியென்றும் ஏன் தவறென்றும் ரெண்டு பேர் வாதிடுவதையும் போன வாரம்தான் ஒரு வாரப் பத்திரிகையில் படித்தேன். இந்தியாவிலேயே கடவுள் நம்பிக்கைக்கு எதிராக அவ்வளவு பெரிய இயக்கம் நடந்ததும் இங்கேதான். “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!” என்று ஆண்டவனிடமே விவாதம் நிகழ்த்திய நக்கீரன் (இதை எழுதும் போது எந்த வாரப்பத்திரிகையின் பெயரும் என் நினைவில் வரவில்லை என்பதைப் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்) வாழ்ந்ததும் இங்கேதான். இராமசாமி என்ற பெயர் கொண்ட ஒருத்தர்தான் சாமியே இல்லை என்று ஊர் ஊராகப் போய்ப் பேசினார். ஊரெல்லாம் கோயில்கள் நிறைந்த காஞ்சியில்தான் கோயில்களில் இறைவன் இல்லை என்று சொல்கிற ஒருத்தர் பிறந்தார். பின்னர் அதையும் ஓட்டுக்காக ஓரளவு மாற்றிக் கொண்டார். ஒன்பது கோள்களுக்கும் கோயில் கொண்டிருக்கிற தஞ்சைச் சீமையில்தான் கோள்களையும் நம்பவில்லை கோயில்களையும் நம்பவில்லை என்று பேசுகிற மஞ்சள்த் துண்டுக்காரர் பிறந்தார். இதை விடத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் சிவபிரானை உருகி உருகிப் பாடிக் களித்த ஆரூராரின் ஊருக்கு அருகில்தான் ‘என் பிராணன் போகும் வரை எந்தப் பிரானையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று சொன்னவரின் ஊரும் (“சொல்வது மட்டும்தான்; செயலில் இல்லை” என்று சிலர் சொல்வது கேட்கிறது. விவாதிகளின் மிகப் பெரிய பிரச்சனையே அதுதானே! ‘ஊருக்குத்தானடி உபதேசம்’ கதையும் இங்கேதானே பிறந்தது!). இராமசாமி, துரைச்சாமி, தட்சிணாமூர்த்தி, நாராயணசாமி, இராமையா என்பார்தான் (எல்லாமே சாமிப் பெயர்கள்) பிற்காலத்தில் முறையே பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் என்று வழங்கப் படலானார்.

குறிப்பின்றி மணிக்கணக்காகப் பேசும் ஆசாமிகள் இங்குதான் அதிகம். அடுக்கு மொழி பேசுவதையே தன் வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்ட அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் இங்குதான் இருக்கிறார்கள். கடவுள் உள்ளாரா இல்லையா என்கிற விவாதம் மட்டுமில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இங்கு போல எங்கும் இவ்வளவு உட்கட்சிப் பூசல் (அதிமுக அத்வைதக் கோட்பாடு கொண்ட கட்சி என்பதால் அது விதிவிலக்கு – “கட்சி வேறு அதன் தலைமை வேறு அல்ல; தலைமைதான் கட்சி!” என்பவர்கள்) இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பமே கட்சியாக இருக்கிற ஒரு கட்சியில் உட்பூசல் காரணமாக ஒரு பெரும் கொலையே விழுந்தது. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை விடத் தலைவர்கள் அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இது போதாதா நாம் எவ்வளவு பெரிய விவாதக்காரர்கள் என்று நிரூபிக்க?! எனவே, இந்த மன்றம் இறுதியாகவும் உறுதியாகவும் இப்படித் தீர்ப்பளிக்கிறது – “தமிழர்கள் விவாதக்காரர்களே! விவாதக்காரர்களே!! விவாதக்காரர்களே!!!”. அதன் பின்பு “நன்றி! நன்றி!! நன்றி!!!” (மூன்று முடிச்சுக்கு ஒரு பொருள் இருப்பது போல சில தொலைக்காட்சிகளில் மூன்று நன்றிக்கும் ஏதோவொரு பொருள் வைத்திருக்கிறார்கள்).

பின் குறிப்பு: மேற்சொன்ன படித் தீர்ப்பளிக்கும் பட்டி மன்றம் என்கிற படிவம் உலகத்திலேயே முதல் முறையாக உருக்கொண்ட இடம் இந்தத் தமிழ்த்திரு மண்ணே. ‘இறந்த கிழவியை எரிப்பதா? புதைப்பதா?’ என்கிற அளவுக்கு அது இறங்கிப் போய் விட்டாலும், திரும்பத் திரும்ப அரைச்ச மாவையே (புருசன் பொண்டாட்டி பிரச்சனைதான் இதில் மாவு) புளித்த பின்னும் அரைத்துக் கொண்டிருந்தாலும், எல்லாத் தட்டு மக்களையும் பங்கெடுக்க வைக்கும் அதன் உள்நோக்கம், நம் விவாதங்களின் மீதான காதலைக் கொடி கட்டி உயர்த்திப் பிடிக்கிறது.

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

அயோத்தி: எங்கே நிற்கிறேன்?

அயோத்திப் பிரச்சனையைப் பற்றிப் பேச இதை விடச் சிறந்த தருணம் இருக்க முடியாது. கடந்த சில மாதங்களில் எத்தனையோ பெரிதாகச் சொல்ல முடியாத பிரச்சனைகள் பற்றிப் பேச முடிந்த எனக்கு இது போன்றதொரு மிக முக்கியமான பிரச்சனை பற்றிப் பேச நேரம் செலவிடா விட்டால் அது நியாயமாகாது. வேலியின் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்சனையின் கட்சிக்காரர்கள் அதை வெவ்வேறு விதமாக அழைப்பதால், நான் அதை அயோத்திப் பிரச்சனை என்றே அழைக்க விரும்புகிறேன். ஒரு சாரார் இராமர் கோயில் பிரச்சனை என்கிறார்கள்; இன்னொரு சாரார் பாபர் மசூதிப் பிரச்சனை என்கிறார்கள். அல்லது, இராமர் கோயில் - பாபர் மசூதிப் பிரச்சனை என்றோ பாபர் மசூதி - இராமர் கோயில்ப் பிரச்சனை என்றோ அவர்களுடைய கருத்தை உலகறியச் செய்யும் படி எது அவர்கள் மனதில் முதலில் வருகிறதோ அதன் படி வரிசையை மாற்றி அழைக்கிறார்கள். சர்ச்சைகளுக்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை. அதற்குப் பதிலாக, என் சுற்றத்தை மேலும் குழம்பிய நிலையில் விடுவதையே வசதியான வேலையாக நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் நம்மை மேலும் தெளிவான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதைத் தீர்க்கமாக நம்புபவன் நான்.

தீர்ப்பு எதுவும் கொடுக்கிற அளவுக்கு என்னிடம் புள்ளி விபரங்கள் இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. ஏனென்றால், யாரையுமே சரியாகவோ தவறாகவோ நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கில்லை. மேலும், அத்தகைய விஷயங்களில் என் நேரத்தை வீணடிக்க நான் எந்த வலதுசாரி இயக்கத்தையும் சார்ந்தவனில்லை. நான் பிறந்த குடும்பத்தை வைத்து என்னை இந்து என்று அழைக்கிறார்கள். இன்று என் குடும்பத்தினர் செய்யும் அத்தனை சடங்குகளையும் என் முன்னோர் அனைவரும் செய்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கை மீதான நம்பிக்கை குறையக் குறைய சடங்குகளின் மீதான இந்தப் பிடிவாதம் கூடிக் கொண்டு இருப்பதாக உணர்கிறேன். நான் புரிந்தது சரியென்றால், இந்து மதமும் என்னைப் போலவே தன் மத அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்று கவலைப் படுவதில்லை. அல்லது, இன்று இந்து என்று அழைக்கப்படும் எல்லோருமே சில தலைமுறைகளுக்கு முன் இதெல்லாம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஓர் உட்குழுவினர் மட்டுமே இன்றைக்கு நாம் சடங்குகள் என்றழைக்கும் எல்லாவற்றையும் செய்திருப்பார்கள். இந்தப் பழக்க வழக்கங்களைக் கூட முறையாகக் கடை பிடிக்காத நம் அனைவரையும் எது கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஒரே பதாகையின் கீழ் ஒன்றிணைத்தது என்றால், அது நாம் அனுபவித்த பாதுகாப்பின்மை எனும் உணர்வு! கடந்த பல ஆண்டுகளாக என்னைச் சுற்றி நான் அடிக்கடிக் கேள்விப் படும் ஒரு கேள்வி - "அவனுக்கு அவன் மதம் அவ்வளவு முக்கியம் என்றால் உனக்கு மட்டும் ஏன் அது முக்கியமாகக் கூடாது?". என்னைப் போன்ற எந்தவொரு சாமானியனுக்கும் இது முற்றிலும் நியாயமான கேள்வி. "உன் மதத்தை நீ தூக்கி எறிய விரும்பினால் அதற்கு முன் எல்லோருமே அதே போல் செய்கிறார்களா என்று பார்" என்று ஒருவர் என்னிடம் சொல்லும் போது அது இயல்பாகவே என்னை ஈர்க்கிறது. "அடுத்தவர்களைப் பற்றி ஏன் கவலைப் படுகிறாய்?" என்று கேட்காதீர்கள். ஏன் கவலைப் படுகிறேன் என்றால் நான் இந்த சமூகத்தில் ஒற்றைக் குரங்காகத் தனிமைப் பட விரும்ப வில்லை. எனவே, சராசரிகளின் அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்கும் சாமானியனாகவே இருக்க விரும்புகிறேன்.

என் சொந்தக் கருத்து என்னவென்றால், அயோத்திப் பிரச்சனை போன்ற ஒரு பிரச்சனை நம் எவருக்குமே ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு நாடு என்ற முறையில் நமக்கிருக்கும் எந்தப் பெரிய பிரச்சனையையும் அது தீர்க்க உதவுவதில்லை. மாறாக, நம்மிடம் இருக்கும் பெரிய பிரச்சனைகளின் பட்டியலில் இதுவும் ஒன்றாகக் கூடிக் கொள்ளத்தான் செய்கிறது. பின் ஏன் நாம் அது பற்றி அவ்வளவு கவலைப் பட வேண்டும்? இரு சமூகங்களுமே ஒற்றுமையாக ஒருவர் உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்கிற மாதிரி இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே எழுந்திராது முதலில். இரு சாராருமே மற்றொருவருடைய சகிப்பின்மையைக் குறை சொல்லிச் சொல்லி, இது ஒரு பிரச்சனை ஆகி விட்டதால், தீர்வு என்னவென்று தெரியவில்லை நமக்கு. இப்பிரச்சனை பற்றிய முடிவுக்கு வரும் முன் சரியான - தகுதி படைத்த பெருமக்கள் தேவையான அளவுக்கு ஆய்வும் விசாரணைகளும் செய்திருக்கிறார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். எனவே, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம். இந்த முறை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் பின் எப்போதும் ஏற்றுக் கொள்வோமா என்று தெரியவில்லை.

இந்த நாட்டின் ஒவ்வொரு இந்துவும் இது ஒரு பிரச்சனையே இல்லை என நினைக்க வேண்டுமென விரும்புகிறேன். அது ஒன்றே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வழி. பிறப்பால் இந்துவாக இருப்பதால் (இப்போதும் அது சார்ந்த அனைத்துக் கேள்விகளும் அப்படியே உயிரோடிருக்கின்றன), அதுதான் என் மதத்தைச்  சேர்ந்தவர்களை என்னால் கேட்டுக் கொள்ள முடிந்தது.  "எனக்கு மதமில்லை" என்று சொல்லவே விருபுகிறேன். ஆனால், ஏன் எல்லா மதங்களிலும் என்னைப் போன்ற ஆட்களைச் சந்திக்க முடியவில்லை என்று நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டிருப்பதையும் இங்கு ஒத்துக் கொண்டாக வேண்டும். என்னுடைய மதம் ஒன்றே உண்மையானது என்று சொல்லிக் கொடுப்பதில் யாரும் என்னோடு நேரத்தை வீணடித்ததில்லை. அது போன்ற நம்பிக்கையும் கற்பித்தலும் உபதேசமுமே இந்தப் பூமிக் கோளை வாழ்வதற்கு மென்மேலும் பாதுகாப்பில்லாத இடமாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களில் எத்தனை பேர் இதை மறுக்க விரும்புகிறீர்கள்?

இதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எம் மக்களை (எளிதான பிரயோகத்துக்காக மட்டுமே அவர்களை 'எம் மக்கள்' என்கிறேன்; வரிகளுக்கு இடையே பொருள் தேடி என்னை ஒரு இந்து வெறியன் என்றெல்லாம் முத்திரை குத்த முயற்சிக்காதீர்கள்) நான் வேண்டிக் கொண்ட போது, "இதை ஏன் முஸ்லிம்களிடம் நீ சொல்லக் கூடாது?" என்று சிலர் கோபப்பட்டார்கள். ஒரு நடுநிலையாளன் என்ற முறையில் அடுத்த மதத்தைச் சேர்ந்த என் சகோதரர்களிடமும் அதே கருத்தைச் சொல்ல முடிந்திருக்க வேண்டும் அல்லவா? நான் சொல்லலாமா? எனக்கு அப்படித் தோன்ற வில்லை. நான் சொல்லப் போவது சரியென்று உறுதியாகத் தெரிந்தாலும், அதைச் செய்வதில் எனக்கு சௌகரியம் இல்லை. ஏன்? ஏனென்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிற உரிமை எனக்கு இல்லாதது போல உணர்கிறேன். அல்லது, குறுகிய மனப்பான்மை உடையவன் அல்லது மதச் சார்புடையவன் என்று முத்திரை குத்தப் பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறேன். 

எனக்கிப்போது இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று - மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தால் கவரப்பட்டு, ஏன் அப்படி மாறுகிறேன் என்று கூடப் புரியாமல் மேலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவனாக மாறி, இந்துக்களுக்கு எதிராகக் கண்மூடித் தனமாகப் பேச ஆரம்பிப்பது. அப்படிச் செய்தால் என்னைப் பேரறிவாளி என்பார்கள் என்றெண்ணி அதுதான் நீண்ட காலமாகச் செய்து கொண்டிருந்தேன்.  இரண்டாவது - தைரியமாக எழுந்து நின்று, "என்னுடைய மனசாட்சிப்படி நான் நடுநிலையாளன். என்னைப் போலவே வேலிக்கு அந்தப் பக்கம் இருக்கும் முற்போக்கான முஸ்லிம் சகோதரர்களும் என்னளவுக்கு நடுநிலையாளர்களாக மாறி இதே கருத்தை அவர்களுடைய மக்களிடம் விதைத்தால் பேருவகை அடைவேன்." என்று சொல்வது. இரண்டாவது பாதை சிறிது மேம்பட்டதாகத் தெரிகிறது. ஏன்? "முதல் பிரிவில் என் போன்றோர் அதிகம் இருந்ததால்தான் வலதுசாரி அரசியல் பெரிதடைந்தது - வேகம் பெற்றது.". உங்களில் யாராவது இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் எனக்கு எழுதுங்கள். இதுதான் இந்த இடுகையின் மூலம் நான் சொல்ல விரும்பிய சேதி.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இறுதித் தீர்ப்பு பற்றிய நம் நிலைப்பாடு பற்றிப் பேசும்போது, அதன் பொருள் என்ன? தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்று ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், என்னால் நிபந்தனையின்றி - உரக்கச் சொல்ல முடியும்... நீதி மன்றம் பிரச்சனைக்குரிய இடத்தில் கோயில் கட்டச் சொன்னாலும் சரி... மீண்டும் மசூதி கட்டச் சொன்னாலும் சரி... எல்லாவற்றையும் இடித்து விட்டு வேறு ஏதாவது கட்டச் சொன்னாலும் சரி... நான் துளியும் கவலைப் படப் போவதில்லை. என் இந்து சகோதரர்கள் அனைவருமே அப்படி இருப்பதைத்தான் நான் விரும்புகிறேன். அதே வேளையில், கோயில் கட்ட உத்தரவிட்டாலும் அல்லது மசூதியை இடித்ததை நியாயப் படுத்தினாலும் (அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும்) இந்த நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம் சகோதரர்களும் அப்படியே இருக்கக வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன்.  நிபந்தனையற்ற "ஆம்" ஒன்றை இதற்கு பதிலாக உங்களில் ஒருவர் அனுப்பி வைத்தாலும், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் என்னுடைய பணியைச் சிறிதளவு செய்து விட்டேன் என்றே கொள்வேன்.

என் எழுத்தில் எவ்வளவு நேர்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு நேர்மையாக இருந்துள்ளேன். ஆனாலும், யாரோ ஒருவர் என் வரிகளுக்கிடையில் வாசித்து இயல்பாகவே என்னிடம் என் மதம் மீது பாகுபாட்டுணர்வு இருக்கிறது என்று கத்தினாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால், நானே என்னுடைய நண்பர்கள் பலரிடம் அப்படியெல்லாம் வாதாடியிருக்கிறேன். ஆனால், உங்களுக்கொன்று சொல்லி விடுகிறேன் - இது போன்ற முத்திரை குத்தல்கள்தான் என் போன்ற நடுநிலையாளர்களை நட்டாற்றில் விடுபவை. அதுதான் இந்த நாட்டில் வலதுசாரி அரசியல் தழைத்தோங்க வழி செய்திருக்கிறது. இனியும் அவர்கள் வளர வேண்டாமென்று நினைத்தால், பொய்யான - போலியான ஓர் உலகில் வாழாமல், நாம் இன்னும் யதார்த்தமானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் (நேர்மையானவன் என்று பெயரெடுப்பதற்காக கண் மூடித்தனமாக தான் சார்ந்த குழுவை எப்போதுமே எதிர்க்காமல் இருப்பதும் நேர்மையே) மாற வேண்டும்.

இதுதான் என் நிறைவான சொல். தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி... என் அடி மனதின் ஆழத்தில் இருந்து நான் நினைப்பது என்னவென்றால், இது போன்ற அற்பமான காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை இழப்பது அர்த்தமில்லாதது. யாரோ ஒருவரின் அரசியல் மூலதனத்தை அதிகப்படுத்தும் வேலையைத்தான் செய்வீர்கள். இந்தச் சண்டைகளில் ஈடுபடுவதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியோ... உணவோ... வாழ்க்கை முறையோ... இன்னும் சொல்லப் போனால் நல்ல பண்பாடோ கண்டிப்பாகக் கிடைக்கப் போவதில்லை. வீதிகளுக்கு வரும் உங்களில் சிலருக்கு சில நாட்களுக்கு வேண்டுமானால் நல்ல உணவு கிடைக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை உங்கள் வாழ்க்கையாக (அல்லது உயிராக) இருக்கலாம். அந்த அளவுக்கு அது பிரயோசனம் உள்ளதா? அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

நம் வருங்கால சந்ததிகள் வாழ்வதற்கு மேலும் பாதுகாப்பற்ற ஒரு இடத்தை உருவாக்கப் போகிறோம். அவ்வளவுதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் செய்ய விரும்புவது அதுதானா?

உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்...

சனி, செப்டம்பர் 25, 2010

தமிழன்னா என்ன பருப்பா?!

எந்த ஒரு பெருங்குழுவிலும் குறிப்பிட்ட சில உட்குழுக்கள் உயர்ந்தவர்களாகக் கருதப் படுவது இயல்பு. உயர்வு தாழ்வு என்பதைத் தவறான நோக்கம் எதுவும் கொண்டு சொல்லவில்லை. அறிவு ரீதியாக, ஆற்றல் ரீதியாக, சராசரி மக்கள் பார்வையில் படுவது பற்றி மட்டுமே பேசுகிறேன்.

ஏதோ ஒரு நூலில் கண்ணதாசன் கூட அது பற்றி ஏதோ சொல்லியதைப் படித்த நினைவு இருக்கிறது. அவர் சொல்ல முனைந்தது என்னவென்றால், இந்தியாவில் எல்லா இனங்களுமே சிறந்தவைதான் என்றாலும் தமிழர், வங்காளர், மராட்டியர் போன்றோர் இன்னும் சிறந்தோர் என்பது போன்ற ஒரு கருத்து. பின்பொரு நாளில் கர்நாடகத்து ஐயங்கார் பையன் ஒருவன் சொன்னான், “தமிழன், மலையாளி, பஞ்சாபி – இந்த மூவரையும் உலகத்தில் எந்த மூலையில் சென்றாலும் பார்க்கலாம்” என்று. அப்புறம் ஆந்திராவில் இருந்து வந்த ஒருநாள் நண்பர் ஒருவர் சொன்னார், “தமிழர்கள் அறிவாளிகள், கடுமையான உழைப்பாளிகள்” என்று. பின்பொரு காலத்தில், தமிழரையும் பஞ்சாபியையும் பிடிக்காத மலையாளப் பெண்மணி ஒருவர், “அவ்விரு இனங்களுமே ஒரே மாதிரிக் குணம் கொண்டவை; திருடர்கள் – மொள்ளமாறிகள் – சுயநல வாதிகள்; வளர்ச்சிக்காக எதையும் செய்வர்” என்பது போன்று ஒரு கருத்துச் சொன்னார். ‘நம் இனங்கள் எப்படியோ, நான் உன்னை விட நாகரிகமானவன்’ என்று உணர்த்த முயன்று நான் அமைதி காத்து விட்டேன். நான் நினைத்தபடி உணர்த்துவதில் வென்று விட்டது போல் இன்றுவரை தெரியவில்லை.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து தூத்துக்குடி விரைவு வண்டியில் ஊருக்குப் பயணப் பட்டுக் கொண்டிருந்த போது இரு கன்னடர்கள் மதுரையைப் பார்த்து விட்டுக் கேட்டார்கள், “தமிழர்கள் மிக அறிவாளிகளே, இந்த ஊரை ஏன் இப்படி நாற விட்டிருக்கிறீர்கள்?”. உடனடியாகப் பெருமையில் மிதப்பது போல் காட்டிக் கொண்டு விட்டால், அதுவே நாம் அறிவாளிகள் என்பதைப் பொய்ப்பித்து விடும் என்று பயந்து அவர்கள் சொன்னதில் நம்பிக்கை இல்லாதது போல் சிரித்தேன். அதில் ஒருவர் அதை மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டு, “என்ன சிரிக்கிறீர்கள்? தமிழர்கள் அறிவாளிப் பேர்வழிகள். இன்றைக்கு மன்மோகன் சிங் கையில் 44 IAS அதிகாரிகள் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்!” என்று ஏதோ ஒரு புரியாத புள்ளி விபரத்தை விட்டெறிந்தார். அவர்களிடம் மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், வைகையின் நாற்றத்தை மீறி ஒரு சின்ன மகிழ்ச்சி என்னை அடுத்துப் பல நாட்களுக்கு ஆட்கொண்டது பற்றி உங்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். நம்பிக்கை ஒளி தெரிகிற மாதிரி யார் என்ன பேசினாலும் எனக்கு நிரம்பப் பிடித்து விடும். இப்போதுதான் புரிகிறது – எப்போதெல்லாம் பொய் நல்லதென்று. வள்ளுவர்த் தாத்தா சொன்னது சரிதான் இல்லையா? “பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்”! மீண்டும் ஒரு ஒருநாள் நண்பர் (கர்நாடகத்து ஐயங்கார்) சொன்னார், “உழைப்பில் உங்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை” என்று. அலுவலகத்தில் ஓர் உரையாடலின் போது ஒரு கருத்து வந்தது – வங்காளரும் நாமும் வேலையில் வேகமானவர்கள் என்று. இன்னொரு நண்பர் சொன்னார் – “மேல் தட்டு என்பதில் எல்லா இனத்தவரும் இடம் பிடித்திருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். பொதுவுடைமை பேசிய மாநிலங்களில் கூட வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே சிக்கிக் கொண்டிருக்கிறது” என்று. இது நானும் முழு மனதோடு ஆதரிக்கும் கருத்து.

இந்த எல்லா உரையாடல்களின் மூலம் புரிகிற ஒன்று – இந்தியாவில் சில இனங்கள் மற்றவர்களை விடக் கண்டிப்பாக ஒரு படி மேலே நிற்கின்றன என்பது. அதில் தமிழருக்கும் உறுதியாக இடம் உண்டு. நம்மவர்கள் மட்டும் அப்படிப் பீற்றிக் கொள்வதால் அல்ல, பிறரும் அதை ஏற்றுக் கொள்வதால்.

கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், பொருளியல் போன்றவை இந்த அளவிடலுக்குப் பெருமளவு அடிப்படையாக இருக்க வேண்டும். அறிவியல் தவிர்த்து இவை எல்லாவற்றிலுமே வங்கத்தவர் நிறையச் சாதித்திருக்கிறார்கள். மலையாளத்தார் சிலவற்றில் (கலை மற்றும் இலக்கியம்) நிறையச் சாதித்திருகிறார்கள். குஜராத்தியர் அரசியலில் நிறையச் சாதித்திருக்கிறார். காந்தியும் பட்டேலும் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்வானியும் மோதியும் (அவர் பெயர் மோடி அல்ல, மோதி) அந்தப் பட்டியலில் வருவார்களா என்பது உங்கள் அரசியல் நிலைப்பாடு பொறுத்தது. கன்னடத்தார் இலக்கியத்தில் கலக்கி இருக்கிறார்கள். இதுவரை ஏழு ஞானபீட விருதுகள் வாங்கி விட்டுப் பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் நெருங்கி வருகிற மாதிரி பக்கத்தில் கூட யாரும் இல்லை. தமிழர்கள் கலை, இலக்கியம், அரசியலில் ஓரளவும் அறிவியலில் பேரளவும் சாதித்திருக்கிறோம். எப்படிச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

மேற்சொன்ன துறைகளில் கலை தவிர மற்றவற்றை அளவிட நோபல் பரிசு இருக்கிறது. அத்துறைகளில் அதுதான் உலகத்தின் தலை சிறந்த பரிசு. கலைக்கு (இந்நூற்றாண்டில் கலைகளில் தலையாயக் கலையாகத் தலை எடுத்திருப்பது திரைப்படக் கலை) ஆஸ்கார்.

இதுவரை நோபல் பரிசு பெற்ற எட்டு இந்தியரில் இருவர் வங்காளர்; மூவர் தமிழர் (இரண்டரை என்றும் சொல்லலாம்); ஒருவர் பஞ்சாபி; ஒருவர் அன்னை தெரசா; ஒருவர் நைபால். முதல் பத்தியில் நாம் பேசியதற்கும் இதற்கும் ஏதோ ஒரு சொதப்பலான உறவு இருப்பது தெரிகிறதா இப்போது? கீழே விரிவாகப் பார்ப்போம். முடிந்தால் தெளிவாகப் பார்ப்போம்; தெளிவாக்கப் பார்ப்போம்.

இரு வங்காளர் தாகூரும் அமர்த்யா சென்னும். முதலாவது இலக்கியத்துக்கு. இரண்டாவது பொருளியலுக்கு. மூன்று தமிழர் சர் சி. வி. இராமன், டாக்டர். சந்திரசேகர் மற்றும் போன வருடம் வாங்கிய அமெரிக்கத் தமிழர் வெங்கி ஆகியோர். வெங்கியின் முழுப் பெருமை நமக்குச் சேராது (ஆனால் அவருடைய இரத்தத்தில் நமக்கு அளவிலா உரிமை இருக்கிறது). சின்னப்பிள்ளையிலேயே குஜராத் போய் பின்னர் அமெரிக்கா போனவர். மூன்றுமே அறிவியலுக்குக் கிடைத்தவை. இது போதாதா நாம் அறிவாளி என்று மார் தட்டிக் கொள்ள?! என்ன கொடுமை என்றால் இராமன் அவர்களும் சந்திரசேகர் அவர்களும் ஒரு குடும்பத்து ஆட்கள். வெங்கியைச் சேர்த்துப் பார்த்தால் மூவருமே நம்ம ஊர் ஐயர் அல்லது ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள். “எனவே, தமிழரெல்லாம் அறிவாளி ஆகி விட முடியாது மக்களா! நாங்கள் மட்டும்தான் அதில் அறிவாளி என்று யாரும் சண்டைக்கு வர மாட்டீர்கள்” என்று உறுதியாக நம்புகிறேன், அதில் ஓரளவு உண்மை இருப்பினும்! பஞ்சாபி (ஹர்கோபிந்த் கொரானா) வாங்கியது மருத்துவத் துறையில். அதையும் அறிவியலிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். அன்னை தெரசா அமைதிக்கு. அவர் நம் மண்ணில் பிறந்தவரல்ல, ஆனால் இதைத் தம் மண்ணாக ஏற்றுக் கொண்டவர். நைபால் இந்தியப் பெற்றோருக்கு வெளி நாட்டில் பிறந்த இந்தியர். அரை டிக்கெட்டாகத்தான் சேர்க்க முடியும் இவரையும்.

ஆஸ்கார் கதைக்கு வருவோமானால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு நீண்ட காலமாக ஒரே ஒரு இந்தியர்தான் அந்தப் பரிசைப் பெற்றிருந்தார். அதுவும் ஆயுட் காலச் சாதனைக்கான பரிசு. அது சத்யஜித் ரே அவர்கள். அவரும் வங்காளர். பானு அத்தையா என்றொரு இன்னொரு பம்பாய்க்காரப் (அப்பாடா, இது ஒன்றுதான் நீண்ட நேரமாக விடு பட்டுக் கொண்டிருந்தது!) பெண்மணியும் வாங்கியிருந்தார். ஆனால் அது “காந்தி” ஆங்கிலப் படத்துக்கு என்பதால் அரை டிக்கெட்தான். சமீபத்தில் வாங்கிய மூவரில் ஒருவர் நம்மவர். இரட்டை மாங்காய் அடித்த நம் தங்கத்தின் தங்கம் ரஹ்மான். பூக்குட்டி, மலைக்கு அந்தப்புரம் (‘ர’ போடுவதா ‘ற’ போடுவதா என்று மாபெரும் குழப்பம். தவறாக இருந்தால் அது என் சொற்குற்றம். கண்டிப்பாகப் பொருட்குற்றமோ சிலேடையோ அல்ல!) இருக்கிற பக்கத்து ஊர்க்காரர். இன்னொருவர் கவிஞர் குல்சார். அவர் பஞ்சாபி. பாடல் வரிகளுக்கு வாங்கியதால் கலையிலும் சேர்க்கலாம்; இலக்கியத்திலும் சேர்க்கலாம்.

இவை தவிர்த்து விடுபட்ட சில துறைகளும் உள்ளன. கணிதத்தில் நம்ம ஊரில் தோன்றிய இராமானுஜர் போலொருவர் வேறெங்கும் தோன்றியதில்லை. வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாத சதுரங்க விளையாட்டில் விட்டு விளாசிக் கொண்டிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் நம் படைப்புதான். அதுபோலொருவர் இன்னும் இங்கு உருவாகவுமில்லை. குறுகிய காலத்தில் உருவாக வாய்ப்பும் இருப்பது போல் தெரியவில்லை.

இத்தனையையும் படித்த பின்பு உறுதியாகத் தெரிகிறது – கடந்த ஒரு நூற்றாண்டில் வெற்றிக் காற்று சில வீட்டு வாசல்களில் மட்டுமே வீசியிருக்கிறது; அதில் ஒன்று நம்ம வீடும் என்பது. ஒரு வேளை இந்த அளவிடுதலில் வேறு ஏதாவது பரிசுகளோ சாதனைகளோ சேர்த்துக் கொள்ளப் பட வேண்டுமாயின் சொல்லுங்கள். செய்து விடுவோம்.

பின் குறிப்பு: நம்ம ஊரில் ஒரு குடும்பத்தில் இரு இயற்பியல் மேதைகள் பிறந்தது போல (ஒருவரே இரு பரிசுகள் வாங்கியது ஒரு கதை – ரஹ்மானின் ஆஸ்கார் பற்றிச் சொல்கிறேன்), வங்கத்தில் சாதித்த மூவருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ரேயும் சென்னும் தாகூர் நடத்திய சாந்திநிகேதன் பள்ளியில் படித்தவர்கள். வெற்றியும் சில நேரங்களில் இட ஒதுக்கீடு செய்வது போல் தெரிகிறதல்லவா?! :)

புதன், செப்டம்பர் 22, 2010

மோதியும் அவர் அரசியலும்

கத்லால் இடைத்தேர்தல் வெற்றி மோதி மற்றும் அவருடைய அரசியல் பற்றிய என் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யப் பணிக்கிறது. இந்திய அரசியலில் அவரை விரும்புவது மனிதாபிமானமற்ற குற்றமாகிவிடும் என்பதை நான் அறிவேன். தீவிரவாதிகளுக்கு எதிரான அவரது இரும்புக் கரம் பாராட்டப்பட வேண்டும். அதே வேளையில், தன் சொந்த 'அப்பாவி' மக்களையே கொடூரமாகக் கொன்று குவிக்க ஒரு முதலமைச்சர் பச்சைக் கொடி காட்டுவது நிச்சயமாக ஒரு மூன்றாம் தரமான வேலை. ஓர் உண்மையான தேசியத் தலைவர் அப்படியொரு வேலையைச் செய்ய முடியாது. ஒரு சனநாயக நாட்டில் அவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு ஒரு முதலமைச்சர் எவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியும் என்பதை நிரூபித்த பெருமை அவரையே சாரும்.

கோத்ரா ரயிலில் தீயிட்ட கொடூரர்கள் அனைவரையும் பிடித்து ஊடகங்களின் முன்னிலையில் அவர்களை வீதிகளில் தூக்கில் தொங்க விட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன். அவர்களுக்கு அத்தகைய தண்டனை தகும். ஆனால், அதைச் செய்தோர் பிறந்த மதத்தில் பிறந்த ஒரே பாவத்துக்காக அம்மதத்தைச் சேர்ந்த அப்பாவிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்? எந்தத் தண்டனையும் தவறு செய்தவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டும்; சாதி, சமூகம், மதம், பகுதி, இனம், மொழி, தேசியம் போன்ற மக்களைப் பிரிக்கும் எந்தவிதமான பிரிவையும் பொறுத்து அல்ல - அதைச் சார்ந்த மற்றவர்களுக்கு அல்ல என்பது மிக அடிப்படையான அறிவு. 

ஒரு பிரிவைச் சேர்ந்த பலமான ஒருவர் செய்யும் தவறான செயல்களுக்கு அதே பிரிவைச் சேர்ந்த பலவீனமான வேறு சிலரை வதைப்பது நியாயம் என்று பேசும் ஆட்களும் இருப்பதை நான் அறிவேன். மென்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்படிப் பேசுவோரெல்லாம் இன்னும் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் எல்லோருமே அப்படி யோசிப்பதில்லை என்பதுதான். அறிவுள்ளோர் இன்னும் உள்ளார். சுருங்கச் சொன்னால் அப்படிப் பேசுவது மனிதத் தன்மையற்ற - காட்டுமிராண்டித் தனமான செயல். எந்தப் பிரிவினருக்கு எதிராகவும் நடத்தப்படும் எந்த இயக்கத்தைப் பற்றியும் இதுதான் என் பார்வை. யூதர்கள், பிராமணர்கள், முகமதியர்கள், அல்லது அவர்களில் ஒரு சாரார் செய்யும் சேட்டைகளுக்குத் தண்டனையாக மொத்த இனமே குறி வைக்கப் படும் எந்த இனமானாலும் சரி, அவர்கள் மீதான தாக்குதல்களை நான் ஆதரிக்க வில்லை. முதலில் அது ஒரு கோழைத்தனத்தின் அடையாளம். இரண்டாவது, அதுதான் தலைவர்களையும் அறிஞர்களையும் சாமானியர்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது.

ஒரு பிரிவைச் சேர்ந்த சிலர் செய்யும் தவறுகளுக்கு அப்பிரிவைச் சேர்ந்த எல்லோருமே கொன்றழிக்கப் பட வேண்டும் என்றால், நீங்களும் நானும் கூட இவ்வளவு காலம் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். குற்றவாளிகள் எல்லாப் பிரிவுகளிலும் இருக்கிறார்கள். அதில் சிலர் ஏதோவொரு தவறு செய்தால் உடனடியாக அந்த இனத்தையே அழித்தொழிக்கும் வேலையில் முழு மூச்சாக இறங்கி விடுவது நல்ல புத்திசாலித்தனமா? அப்படித்தான் நீங்கள் யோசிப்பீர்கள் என்றால், ஒரு மாநிலத்தின் தலைசிறந்த அரசியல்ப் பதவி உங்களுக்கு லாயக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உங்களைப் போன்றே சிந்திக்கும் அரை வேக்காட்டுச் சாமானியர்களுடன் தெரு முக்குகளில் உட்கார்ந்து விவாதம் புரியத்தான் சரிப்பட்டு வருவீர்கள்.

அதெல்லாம் சரி. அதற்காக அவர் முதலமைச்சர் என்ற முறையில் செய்துள்ள சாதனைகளை மறைக்க முயல்வதும் ஏற்றுக் கொள்ள மறுப்பதும் சரியாகி விடுமா? ஒரு சிறந்த நிர்வாகி என்ற முறையில் அவர் செய்திருக்கும் நற்பணிகளைப் பற்றி எடுத்துரைக்க எவருக்கும் தைரியம் வர மறுக்கிறது. அவர் செய்யும் எதையும் பாராட்டி விட்டால் நம் மீது ஏதாவது முத்திரை குத்தப் பட்டு விடுமோ என்று பயப்படுகிறோம். அவர் ஓர் அருமையான நிர்வாகி என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்து விட்டார். அவருடைய மக்களை அவர்கள் இதுவரை கண்டிராத - அசாதாரண ஆட்சிமுறைக்குப் பழக்கப் படுத்தி வருகிறார். அப்படியில்லாமல் இரண்டாவது முறையாக அவரால் வென்றிருக்க முடியாது. 

மோதியின் வேட்பாளருக்கு (அவரை பா.ஜ.க.வின் வேட்பாளர் என்று சொல்ல மாட்டேன்) ஏன் வாக்களித்தோம் என்று கத்லால் முஸ்லிம்கள் விளக்கிச் சொல்வதைப் பார்க்கும் போது உண்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன். கேமரா முன் அப்படிப் பேசுவதற்காக அவர்களுக்குக் காசு கொடுக்கப் பட்டது என்று சொல்பவர்களை நான் கண்டு கொள்ளப் போவதில்லை. என்னோடு இந்துக் கோயில்களுக்கும் வந்த என் நண்பர்களின் முஸ்லிம் தெருவில் வளர்ந்த எனக்கு (நானும் அவர்களுடைய மசூதிகளுக்குள் அது போல் போயிருக்கிறேனா என்பது போன்ற அற்பான கேள்விகளை யாரும் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) இது போன்ற நடப்புகள் உணர்ச்சிவசப் பட வைக்கின்றன. இதற்கு சரியான முறையில் மோதியும் பதிலுதவி செய்ய வேண்டும் என்று மனமார ஆசைப் படுகிறேன்.

இது ஒரு சமூக நல்லிணக்கத்தின் அடையாளமில்லையா? நீண்ட காலமாகத் தன் எதிரி மீது ஒரு சமூகம் சுமந்து வந்த கசப்பான உணர்வுகளுக்கு முடிவு கட்டப்போவதன் ஆரம்பமில்லையா இது? மோதியை அவர் மீதிருக்கும் அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுவிக்கச் சொல்லி இதை எழுத வில்லை. 2002 கலவரத்தில் அவருக்குத் தொடர்பே இல்லை என்று வாதிட வில்லை. நான் செய்ய முயல்வதெல்லாம், ஒரு சுத்தமான அரசியல்வாதியின் - இனியொரு முறை கண்டிப்பாக வெளிவரப்போகாத கேவலமான ஒரு பக்கத்தோடு சேர்த்து அவருடைய நல்ல பக்கத்தையும் பற்றிப் பேசுவது. அவ்வளவுதான்.

அரசியல் எப்போதுமே திருட்டும் ஊழலும் நிறைந்த கொள்ளைக் காரர்களின் வியாபாரமாகத்தான் இருந்து வருகிறது. இந்த நாட்டின் எந்த சாமானியனையும் போலவே, அப்படிப்பட்டோரையே அதிகம் பார்த்து வருவதால் (சமீப காலங்களில் அப்படிப் பட்டோரை மட்டுமே பார்க்க முடிகிறது), ஒரு சுத்தமான அமைப்பு என்பது மிக அடிப்படையான தேவையாக இருக்க வேண்டும் என்ற போதிலும் அதுதான் நம் தலைசிறந்த எதிர் பார்ப்பாக இருக்கிறது இப்போதைக்கு. நம்முடைய நாட்டில் அப்படியோர் அரசைப் பார்ப்பதென்பது பேரதிசயமாக இருக்கிறது. நல்லது எதுவுமே நடக்க வாய்ப்பில்லாத ஒரு மண்ணில் அதையெல்லாம் நடத்திக் காட்டியிருக்கிறார் இவர். மதச் சார்பற்ற மாமனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர் போன்ற மற்றவர்கள் இந்த ஒரு பாடத்தை அவரிடம் கற்றுக் கொண்டால், அவரைப் பெருமையாகப் பேச எனக்குக் காரணமே கிடைக்காது. இதைப் படிக்கும் உங்களில் சிலரை அது மகிழ்ச்சிப்படுத்தும் என்பதையும் நன்கறிவேன்.

தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்

நம்மை வெளியில் கோமாளிகளாக்கக் கூடிய பல குறைபாடுகளில் ஒன்று, நம்முடைய பெயரிடும் முறை. பெயரிடுவது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன நம் ஊரில். 

கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு வைக்கக் கூடிய பெயர் வாயில் நுழையக் கூடாது என்கிற ஒரே கொள்கையோடு பெயர் தேடுபவர்கள் ஒருபுறம். எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கட்டும், எப்படி வேண்டுமானாலும் முடியட்டும், பெயரின் ஏதாவதொரு பகுதியில் ‘ஷ்’ என்ற வடமொழி எழுத்து மட்டும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லித் தேடுபவர்கள் ஒருபுறம். இன்ன நட்சத்திரத்துக்கு இன்ன எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்று தேடுகிறவர்கள் ஒருபுறம். தனித்தமிழ் பெயர் தேடுபவர்களும் வைக்கப்பட்ட வடமொழிப் பெயர்களைப் பெரும் எண்ணிக்கையில் மாற்றிக் கொண்டிருக்கிறவர்களும் ஒருபுறம். 

சினிமா நடிகர் நடிகைகளின் பெயர்களைத்தான் என் பிள்ளைகளுக்கு வைக்கவேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இருப்பவர்கள் ஒருபுறம். குறிப்பிட்ட சில திரைப்படங்களில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் வைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம். அதையே இலக்கியப் படைப்புகளில் இருந்து எடுத்துச் செய்பவர்கள் ஒருபுறம். பொன்னியின் செல்வன் வந்த காலத்தில் தமிழகம் முழுக்க நிறைய வானதிகள் பிறந்தார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கடவுள் பெயர் மட்டும் வைப்போர் ஒருபுறம். பல தலைமுறைகளாகத் தாத்தா பாட்டிமார் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு வருவோர் ஒருபுறம். புரட்சியாளர்கள் மற்றும் மக்களுக்குப் பாடுபட்டு வாழ்ந்து சென்ற தலைவர்களின் பெயர்களை மட்டும் வைப்போர் ஒருபுறம். தன் கட்சித் தலைவனின் அம்மா, ஆட்டுக்குட்டி, வீட்டு நாய் ஆகியவற்றின் பெயரை மட்டும் அவர் வாயாலேயே சூட்டக் கேட்டுக் களிக்கிற வகையினர் ஓரினம். 

தான் கை பிடிக்க முடியாது போன காதலி மற்றும் காதலனின் பெயரை இடுவோர் ஒருபுறம். உயிர் நண்பனின் பெயரை இடுவோர் ஒருபுறம். அந்தச் சொல்லுக்கு எந்த மொழியிலும் பொருள் மட்டும் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக சில எழுத்துக்களை மட்டும் கூட்டிப் போட்டுக் கூட்டுப் பொறியல் போலப் பெயரிடுவோர் ஒருபுறம். பிள்ளை பிறக்கிற நேரத்தில் செய்திகளில் அதிகம் அடிபடுகிற பெயராகப் பார்த்து இடுகிற கூட்டம் ஒருபுறம். இப்படி நீள்கிறது பட்டியல். மேற்சொன்ன சிலவற்றைப் பின்பற்றித்தான் எங்கள் வீட்டிலும் பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன. தாத்தாவின் விடுதலைப் போராட்டப் பின்னணி காரணமாக அளவிலாத தலைவர்களின் பெயர்கள் எங்கள் வீட்டில். பகத் சிங்கில் தொடங்கி உள்ளூர் இடது சாரித் தலைவர்கள் வரைப் பல்வேறு விதமான பெயர்கள். அதன் சில பிரச்சனைகளை அனுபவித்தவர்கள் என்ற முறையில் இந்தப் பெயரிடுதல் பற்றிக் கொஞ்சம் பேச விரும்புகிறேன். இதில் அதிகம் பாதிக்கப் பட்டவர் பகத் சிங்காகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

மேற்சொன்னவற்றில் எவை சிக்கலுக்குரியவை என்றால் குழப்புப் படியான பிற்பெயர் கொண்ட பெயர்கள் இடுவது. பிற்பெயர் என்பது என்ன? உலகம் முழுக்க உள்ள ஒரு பழக்கங்களில் ஒன்று, ஒரு மனிதரை அவருக்கு இடப்பட்ட பெயரை முற்பெயராகவும் இன, குடும்ப, கூட்ட, தொழில், ஊர், பரம்பரைப் பெயரைப் பிற்பெயராகவும் கொண்டு விளிப்பது. நம்மிலும் இது சில தலைமுறைகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போதும் நம்ம ஊர்க் கிராமத்துப் பெருசுகள் இதை விட வில்லை. பிற்பெயர் பெரும்பாலான நேரங்களில் ஒருத்தருடைய சாதியைச் சுட்டுவதாக இருந்ததால் நம் முன்னோரில் சில நல்லவர்கள் அதைப் பயன்படுத்துவதை அநாகரீகமாகக் கருதிக் கழற்றி விட முடிவு செய்தார்கள். அதிலிருந்து நாம் நம் தந்தையின் பெயரையே பிற்பெயராகக் கொண்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டோம். இந்தக் கதை நம்மில் பலருக்கு உருப்படியாக வந்து சேராததால் “ஏய், உனக்குப் பிற்பெயர் இல்லையா? அப்பா பெயர்தான் அதுவா?” என்று சில வெளிமாநிலத்துக் காரர்கள் கேட்டுச் சிரிக்கும்போது உடன் சேர்ந்து சிரித்து விட்டு நகர்கிறோம். இன்று முதல் இனி அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் இந்தக் கதையைச் சொல்லி “அட முட்டாப் பயகளா! நீங்கள் இன்னும் நாகரிகமடையவே இல்லையா?” என்று கேட்டுப் பதிலுக்குச் சிரித்து விடுங்கள். இன்று வட மாநிலங்களில் பல இயக்கங்கள் தமிழ் நாட்டைப் போல் அவர்கள் மாநிலத்திலும் இதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், சாதி வேரைக் கிள்ளி எறியும் முயற்சிக்கு இது சரியான முதல் படி.

அடுத்து நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, வட நாட்டுப் பிற்பெயர்களை இணைத்துக் கோமாளித்தனமான பெயர்கள் வைப்பது. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள், வடமொழிப் பெயர்கள் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வடநாட்டுக் காரர்களின் பிற்பெயர்களை வைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறீர்கள். அதாகப் பட்டது, உங்கள் பிள்ளைகளின் பெயரில் சிங், சர்மா, குப்தா, மேத்தா, கபூர், காந்தி, நேரு போன்ற பெயர்களைச் சேர்க்காதீர்கள். காந்தியைப் பிடித்தால் மோகன்தாஸ் என்று வையுங்கள். நேருவைப் பிடித்தால் ஜவகர் என்று வையுங்கள். பகத் சிங்கைப் பிடித்தால் பகத் என்று வையுங்கள். அவைதான் அவர்களின் முற்பெயர். அதை விடுத்து அவர்களின் பிற்பெயர் வைப்பது எப்படி இருக்கும் என்றால், வடநாட்டுக்காரன் அவன் பிள்ளைக்குத் தேவர், கவுண்டர், நாடார் என்று வைப்பது போல் இருக்கும். அப்படி ஒரு கோமாளித்தனத்தை அவர்கள் செய்வதில்லை. பின் ஏன் நாம் மட்டும் செய்ய வேண்டும்?!

அப்படிச் செய்தது போன தலைமுறை வரை ஓகே. ஏனென்றால், நம் பிள்ளைகள் பெரும்பாலும் வெளியேறவில்லை அப்போது. ஊர்க்காரன் மட்டும் “ஆகா, என்ன ஒரு புதுமையான பெயர்?!” என்று ஆச்சரியப்படுவான். நாமும் ரெம்பப் பெருமையாகப் பல்லைக் காட்டித் திரிவோம். இப்போது அப்படி இல்லை. பிள்ளை வெளியே பல இடங்களுக்குப் போகும்போது பலருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும். வேடிக்கைப் பொருளாய் உடன் சிரிப்பது மட்டுமின்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மானத்தையும் இழக்க ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் மேல் நான் இதை ஓர் அடிமைத்தனத்தின் சின்னமாக, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். இப்படிப் பெயர்களிடம் மாட்டிக் கொண்டு புழுங்கிக் கொண்டிருப்போரையும் அறிவேன். அதனால் காமெடிப்பீஸ் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பல்லைக் காட்டித் திரிவோரையும் அறிவேன். உங்கள் பிள்ளைகள் இரண்டில் எதுவுமே ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கடமை.

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

கலாச்சார வியப்புகள்: ஒரு ஸ்பானிய நண்பனுடன் 3 வாரங்கள்!

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

என் மேற்கு நோக்கிய பயணம் பற்றிய கடந்த இடுகையின் தொடர்ச்சி இது. மேற்கு நோக்கிய என் பயணத்தைத் தொடங்குவதற்கு சற்று முன்பு மேற்கத்திய நண்பன் ஒருவனுடன் இந்தியாவிலேயே நிறைய நேரம் செலவிட ஓர் அரும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. என்னுடைய பயணத்துக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்கு அது பேருதவியாக இருந்தது. நானும் இந்தியாவின் எல்லா நல்ல விஷயங்களையும் அவனுக்குக் காட்ட விரும்பினேன். ஆனால், அதற்காக அவனை எங்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதற்குப் பதிலாக, என்னால் அவனுடன் எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்து இந்தியாவுக்கென்று இருக்கும் பெயரைக் காப்பாற்ற என்னால் முடிந்ததைச் செய்தேன்.

எனக்குப் புதுப் புதுக் கலாச்சாரங்களைப் படிப்பதின் மீது இருக்கும் அதீத ஆர்வம் பற்றியும் அதனால் அவனிடம் அளவுக்கு மிஞ்சிக் கேள்விகள் (பல கேள்விகள் பைத்தியக்காரத்தனமானவை) கேட்பேன் என்பது பற்றியும் முதலிலேயே தெளிவாகச் சொல்லி விட்டேன். அவனும் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு என் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முறையான பதில்களை அளித்துக் கொண்டே இருந்தான். நானும் அவனை எதற்கும் தயங்காமல் எல்லா விதமான கேள்விகளும் கேட்க ஊக்கப்படுத்தினேன். கடைசியில், இருவருமே இவருடைய கலாச்சாரங்கள் பற்றியும் அளவிலாத உள்ளறிவு பெற்றோம் என்று நம்புகிறேன்.

உலகில் சீன மொழிக்கு அடுத்த படியாக அதிகமான மக்களால் தாய் மொழியாகப் பேசப்படும் மொழி என்ற சிறப்புப் பெற்றது ஸ்பானிய மொழி. அவர்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்கள் முழுமைக்கும் காண முடியும். ஸ்பெயினில் பேசப்படும் ஸ்பானிய மொழிக்கும் லத்தின் அமெரிக்காவில் பேசப்படும் ஸ்பானிய மொழிக்கும் இருக்கும் வேறுபாடுகள் பற்றியும் எனக்கு நிறைய விளக்கினான். "எடு" என்பதற்கு ஸ்பெயினில் சொல்லப்படும் அதே சொல் லத்தின் அமெரிக்காவில் மிக மோசமான கெட்ட வார்த்தையாம் ("கை தட்டு" என்பதற்கு மலையாளிகள் சொல்லும் சொல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கெட்ட வார்த்தை. அது மாதிரி!). பிரேசில் தவிர லத்தின் அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் ஸ்பானிய நாடுகள் என்பது எனக்குப் பெரும் ஆச்சரியத் தகவல். இன்னும் சொல்லப்போனால், மெக்சிகோவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் ஸ்பானியர்களின் மக்கட்தொகை ஸ்பெயினில் இருக்கும் ஸ்பானியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாம்.

இந்தியாவுக்கு வருவதற்கு முன் அவன் லத்தின் அமெரிக்காவில் நிறைய காலம் இருந்து - சீனாவுக்கும் ஒரு முறை சென்று இருக்கிறானாம். அதுவே  அவனை என்னிடம் மேலும் சுவாரசியமான ஆளாக்கியது. அதனால் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகிய மூன்று பகுதிகளையும் அவனால் பல விஷயங்களில் ஒப்பிட்டுப் பேச முடிந்தது. இந்தியாவும் மெக்சிகோவும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான நாடுகள் என்று இரண்டாவது முறையாக எனக்குச் சொன்னவன் இவன்தான். இந்த இடத்தில் நினைவு கூற வேண்டிய ஒரு சங்கதி - அமெரிக்காவில் மெக்சிகன்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சட்டவிரோதமாகக் குடியேறி இருக்கும் கூட்டம் நம் இந்தியக் கூட்டம். இதிலேயே மிக எளிதாகச் சொல்லப்பட்டு விட்டது நம் ஒற்றுமை. சட்டவிரோதக் குடியேற்றங்கள் மட்டுமில்லை; நான் கேள்விப்பட்டவரை இன்னும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் கூட இந்தியாவில் போலே இருக்குமாம் அங்கும்.

எல்லாவற்றுக்கும் முதலில், மேற்குலகில் எல்லாமே கன கச்சிதமாக - முழு நிறைவோடு (அல்லது, துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், கூடுதலான விஷயங்கள் கூடுதல் நிறைவோடு) இருக்கும் என்று எண்ணியதுண்டு. அப்படியே இது போலத்தான் லத்தின் அமெரிக்க மக்கள் ஐரோப்பாவைப் பற்றி நினைத்தார்கள் என்றும் சொன்னான். அவர்களுடையதுதான் மேலான நாகரிகம் எனக் கருதி நாமெல்லாம் அவர்களை ஈயடிச்சான் காப்பி அடிக்க முயல்வதாலும் அவர்களைப் போலவே நடந்து கொள்வதற்குப் பயிற்சியளிக்கப் படுவதாலும், அவனுக்கு நம்மைப் பற்றி நிறையப் புலம்ப வேண்டியிருக்கும் - நம்மை மிகவும் தாழ்வாக நினைப்பான் என்றெண்ணினேன். வியப்பூட்டும் விதமாக, நம்மைப் பார்த்துப் பெருமைப் பட நிறையக் காரணங்கள் இருந்தன அவனிடம். அது மட்டுமில்லை,  அவனால் ஏன் நம்மை அப்படி மட்டமாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அப்படி நம்மை மட்டமாகப் பார்ப்போர் யார் என்பது பற்றியும் சொன்னான். ஒருவேளை, அவனுடைய இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் இந்த அளவு முதிர்ச்சி காட்டியிருக்க மாட்டார்களோ என்னவோ. அடுத்த நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றபடித் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்த அவனுடைய திறமும் அதை மதிக்கத் தெரிந்த அவனுடைய மனப்பக்குவமும்தான் அவனை எனக்கு மிகவும் சிறப்பான ஆளாகக் காட்டின.

செயற்கையான சிரிப்போடு 'ஹாய்', 'ஹலோ', 'ஹவ் ஆர் யூ?' என்றெல்லாம் கேட்கக் கற்றுத் தரும் பயிற்சிகள் மூலம் நாம் மேற்கத்திய மோகத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தோம் என்றெண்ணினேன். அவன் சொன்னான், "எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கிறது. ஏனென்றால் இங்குள்ள மக்கள் மிகவும் நட்புறவோடு பழகுகிறார்கள். ஒவ்வொரு முறை அவர்களை அணுகும்போதும் புன்னகைக்கிறார்கள்."! இப்போது என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒருத்தர் உன்னிடம் வரும்போது சிரிப்பதில் அர்த்தமிருக்கிறது. அது உன்னை நட்புறவான ஆளாகக் காட்டுவது மட்டுமின்றி உன் கலாச்சாரத்தையே ஒரு படி மேலே தூக்கிக் காட்டுகிறது. நல்ல வேலையாக நம் அரசு அலவலகம் எங்கும் அவனை அழைத்துச் செல்லவில்லை. அது மட்டுமில்லை, போக்குவரத்துப் பிரச்சனைகளுக்காக நடக்கும் நம் தெருச்சண்டைகளையும் அவன் இங்கு இருந்த மூன்று வாரங்களில் பார்க்கவில்லை. தப்பித்தோம்!

ஆனால், வண்டி ஓட்டும்போது ஏன் நாம் ஒலி பெருக்கியை அவ்வளவு அடிக்கிறோம் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டான். மிகவும் அக்கறையோடு கேட்டான், "எல்லோருமே அதை அதிகமாக அடித்தால் யார்தான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வார்கள்?" என்று! எனக்கே பல வருடங்களாக இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காததால் என்னால் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை. அளவுக்கதிகமான மக்கட்தொகை காரணமாக மித மிஞ்சிய சப்தத்துக்குப் பழக்கப்பட்டு விட்டோம்; அதனால் அது ஒழுங்காக எங்களுக்குக் கேட்க வேண்டுமென்றால் அப்படித்தான் அடித்தாக வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஏற்றுக் கொண்டது போலக் காட்டிக் கொண்டான். உண்மையிலேயே ஏற்றுக் கொண்டானா தெரியவில்லை. நம் சாலைகளில் இருக்கும் குழிகளைக் கண்டால் அவனுக்கு உயிர் பயம் வந்து விடும். அதனாலேயே இருட்டும் முன்பே வண்டி ஓட்டும் வேலைகளை முடித்துக் கொள்வான்.

வலது புறம் ஓட்டுவது என்பது அமெரிக்கப் பழக்கம்; மொத்த ஐரோப்பாவும் இடது புறம் ஓட்டும் பழக்கம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் புரிந்தது இடது புறம் ஓட்டுவது இங்கிலாந்தில் மட்டும் இருக்கும் பழக்கம்; மொத்த அமெரிக்காவும் மிச்சமுள்ள ஐரோப்பாவும் வலது புறம் ஓட்டுகிற பழக்கமுள்ளவையே என்று. எந்தப் பக்கம் ஓட்டுனர் உட்காருவார்; எப்படி மற்ற வாகனங்களை அவர்கள் கடந்து செல்வார்கள்; இரு முறைகளிலும் இருக்கும் வசதிகள் - சிரமங்கள் அனைத்தும் பற்றிப் பேசினோம்.

இது நம்மைக் காண வரும் மேற்கர்களுக்கும் மேற்கே செல்லும் நம்மவர்களுக்கும் இருக்கும் ஒரு வழக்கமான வியப்பு. கோயம்புத்தூரில் சந்தித்த ஆங்கிலேயர் ஒருவர் சொல்லியும் இதை முன்பு கேட்டிருக்கிறேன். அவர் சொன்னார், "பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறீர்கள் ஆனால் பொது இடத்தில முத்தம் கொடுப்பதை அநாகரிகமாகப் பார்க்கிறீர்கள். எங்கள் ஊரிலோ அது அப்படியே தலை கீழ்.". இந்தப் புதிய நண்பனுக்கும் அதே வியப்புதான். அவன் சொன்னான், "எங்கள் ஊரில் பொது இடத்தில் ஒன்னுக்கு அடித்தால் சிறையில் கூடத் தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது". அப்படின்னா, அங்க போகும்போது கவனமா இருக்கணும் போல. :) 

ஓர் உயிரைக் கொல்லாதபோது முட்டை எப்படி அசைவமாகும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை அவனால். "முட்டை என்பது முட்டை. அதெப்படி உயிராகும்?" என்பது அவன் கேள்வி. எளிதில் தப்பிப்பதற்காக "முட்டை என்பது இப்போதெல்லாம் இங்கே சைவத்துக்கும் அசைவத்துக்கும் நடுவில்" என்றேன். அது எப்படி அசைவமாகும் என்பதை விளக்க முயற்சிக்கவில்லை. முட்டையை விட பாலிலும் தேனிலும் விலங்கு வதை அதிகமோ என்று நானே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 2005-இல் பாலும் தயிரும் கூடப் பருகாமல் இருக்க முயற்சித்தேன் சில மாதங்கள். ஆனால், தோல்விகரமாகப் ('வெற்றிகரமாக' என்பதற்கு எதிர்ச்சொல்!) பின் வாங்கி விட்டேன் பின்பு.

நம் தந்தூரி சிக்கன் அவனுக்கு மிகவும் பிடித்தது. அவன் கிளம்பும் முன் சில தந்தூரி சிக்கன் மசாலா பொட்டலங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். அதுவும் தோல்விதான். இங்கிருந்தபோது மற்ற மாமிச உணவுகள் கிடைக்காமல் சிரமப் பட்டதாகச் சொன்னான். எந்த விகிதாச்சாரத்தில் மாமிசம் சாப்பிட வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி கொடுத்தான். ஒரு தட்டுச் சாப்பாட்டில் ஒரு சில துண்டுகளே நம்ம ஆட்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால், இரண்டும் சம அளவு தின்ன வேண்டுமாம். இல்லையேல், புரதச் சத்தெல்லாம் (PROTEIN) கிடைக்காதாம். வெறும் மாவுச் சத்துதான் (CARBOHYDRATE). நாம் சுவைக்காகத் தானே சாப்பிடுகிறோம்? நம்முடைய பேரங்காடிகளில் மாமிசம் தவிர  எல்லாமே இருப்பது அவனுக்கொரு வியப்பு. நம் கசாப்புக் கடைகளில் கடைப்பிடிக்கப் படும் சுத்தம் அவனுக்கோர் அதிர்ச்சி. அவன் அதைப் பெரிய பிரச்சனையாகச் சொல்லாவிட்டாலும் அது அவனுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது என்னால். அதையெல்லாம் பார்த்த பின்னும் அவன் நம் மாமிசத்தைச் சாப்பிட்டதற்கு வணக்கம் போடத்தான் வேண்டும்.

நாம் கையால் சோறு சாப்பிடுவது கண்டு பெரிதும் வியந்தான். அவனால் செய்ய முடிகிறதா என்று முயன்று பார்க்கச் சொன்னேன். நம்முடைய ஸ்டைலுக்குக் கொஞ்சம் கூடப் பக்கத்தில் வர முடியவில்லை அவனால். அதைக் கற்றுக் கொள்ள அவன் இன்னும் சில மாதங்கள் இருந்திருக்க வேண்டும். நல்ல வேளை, இலையில் சோறு போட்டு - கரண்டியில் சாப்பிடுவதை நம் பண்பாட்டுக்கே எதிரான பழக்கமாகப் பார்க்கும் சுத்தத் தென்னிந்திய உணவகம் எதற்கும் அழைத்துச் செல்லவில்லை அவனை. அவனுக்கு அதைப் பார்க்கவே சகிக்க வில்லை என்றபோதிலும் சிரமம் இல்லாமல் கையால் சாப்பிடுவது எப்படி என்பதை அவனுக்குக் காட்டி விட்டேன். அது நம் கடமை அல்லவா?!

தினமும் கடைசியில் நான் தயிர்ச் சாதம் சாப்பிட்டதால் அதுதான் நம் டெசெர்ட்டா என்றான். தலையை ஆட்டிவிட்டு நாம் சாப்பாட்டுக்குப் பின் சாப்பிடும் சோம்பு, பீடா அல்லது வெற்றிலை, பாயசம், அல்லது மற்ற இனிப்பு வகைகள் எல்லாம் டெசெர்ட் என்று அழைக்கப் படலாமா என்று யோசித்தேன். மற்றொருமுறை, நாம் ஏன் டெசெர்ட் எதுவும் சாப்பிடுவதில்லை தினமும் என்று கேட்டான். என்னுடைய முறை வந்தபோது, அவர்கள் ஏன் தினமும் டெசெர்ட் சாப்பிடுகிறார்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டு விட்டேன். இருவரிடமுமே இருந்தது ஒரே பதில்தான் - "அதுதான் எங்கள் கலாச்சாரம்". பீட்சாக் கிறுக்கு அவர்கள் பண்பாட்டில் இல்லை என்று கேள்விப் பட்டபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுடைய உணவு வகைகளே நிறைய இருக்கின்றனவாம். சுருட்டு வாங்குவது போல துப்பாக்கி வாங்கும் பழக்கமும் அவர்களுடைய பண்பாட்டில் இல்லை என்றறிந்த போது அதை விட மேலும் மகிழ்ந்தேன்.

இதுதான் எங்கள் உரையாடல்களின் உச்ச கட்டம். உலகின் எந்த மூலையிலும் குழப்பம் நிறைந்த பேசுபொருளான ஆண்-பெண் உறவுகளின் எல்லைகள் (எங்கள் இவருடைய கலாச்சாரத்திலும்) பற்றிப் பேசிய நாளில், ஒரே வாக்கியத்தில் அதை எளிமைப் படுத்திவிட்டான். "எங்க ஊரில் ஓர் இருபத்தி ஐந்து வயதுப் பெண் மூன்று அல்லது நான்கு ஆண் நண்பர்களோடு பழகியிருத்தல் மிகச் சாதாரணம்; இதுவரை தனக்கு ஆண் நண்பனே இல்லையென்று ஓர் இளம்பெண் சொன்னால் அவளுக்கு ஏதோ கோளாறு என்று அவளிடமிருந்து பதறி ஓடுவார்கள்; இங்கோ அப்படி மூன்று நான்கு ஆண் நண்பர்களோடு இருந்திருக்கிறேன் என்று ஓர் இளம்பெண் சொன்னால் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று அவளிடமிருந்து தப்பி ஓடுவீர்கள்."! ஆகா... என்னவொரு கவனிப்பு - கலாசார வேறுபாட்டை விளக்க எவ்வளவு எளிதான ஒரு வழி?! :)

இங்கே இரண்டு தலைமுறைகளுக்கு முன் எதிர் பாலரிடம் கை குலுக்கிக் கொள்வது கூடத் தவறு என்று சொன்னேன் அவனிடம். குறும்பாகச் சிரித்துக் கொண்டே சொன்னான், "ஐயோ. என்னுடன் சேர்ந்த உங்க ஊர்ப்பிள்ளைகளிடம் முதல் நாளே வேறு ஒரு வேலை செய்து விட்டேன்."! என்னப்பா அது? எல்லோருக்கும் முத்தம் கொடுத்து விட்டு, "கவலைப் படாதீங்க. நான் ஸ்பெயின்காரன். அங்கெல்லாம் இது சாதாரணம்!" என்றானாம் அவர்களுடைய வெட்கத்தைப் பார்த்து விட்டு. அவர்களுடைய செட்டில் அவன் மிகப் பிரபலம் என்று ஒருவர் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். இப்போதுதான் புரிந்தது எப்படி அவ்வளவு பிரபலமானான் என்று. :)

நம் கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடிசைகளைக் கண்டு ஆச்சரியப் பட்டான். அவர்கள் உடுத்தும் கைலி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் பெருநகரங்களில் மிகக் குறைவான ஆட்களே அவ்வுடை உடுத்துகிறார்கள். அது எவ்வளவு பிரபலமான உடை என்பதைக் காண அவன் நம் நாட்டுப் புறத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவர்களுடைய ஊரில் இருக்கும் எந்தக் கருவியும் இல்லாமல் எப்படி நம்ம ஊர்க்காரர்கள் சரியான நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்கிறார்கள் என்று புரியவில்லை அவனுக்கு. "எல்லாமே இங்கே கைவேலைதான்; ஆனாலும் வேலை முடிகிறது - அதுவும் பயன்படும் வகையில்!?"! 

ஐரோப்பியர்கள் எப்போதுமே மென்மையான நிறங்களில் - இறுக்கமான உடைகளே உடுத்துவார்களாம். நம்மில் சிலரைப் போல அடிக்கும் நிறங்களோ அமெரிக்கர்கள் போல தொள தொள உடைகளோ அணிவதில்லையாம். நல்ல வேளை, நம்முடைய திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை அவன். ஆரஞ்சு நிற பேண்ட்டும் பள பளக்கும் பச்சை நிறச் சட்டைகளும் போடும் நம் நாயகர்கள் சிலரைப் பார்த்திருந்தால் நம்மைப் பார்த்துப் பெருமைப்பட இன்னொரு காரணம் கிடைத்திருக்கும் அவனுக்கு.

தோலைக் கறுக்க வைப்பதற்காக சூரியக் குளியல் எடுத்துக் கொள்ளும் அவனுக்கு குறிப்பிட்ட வாரங்களில் சிவப்பாக மாறுவதற்கு விற்கப்படும் பூச்சுப் பொருட்களுக்கான விளம்பரங்களைப் பார்த்து மிகுந்த ஆச்சரியம். நாம் ஏன் சிவப்பாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். அரசியல் ரீதியாகச் சரியான பதில் என்னிடம் இல்லை. அவனிடம் சொல்லவில்லை என்றாலும் என்னிடமிருந்த எளிமையான - ஓரளவு அறிவுள்ள பதில், "கறுப்பாய் இருப்போருக்குச் சிவப்பாக ஆசை; சிவப்பாயிருப்போருக்குக் கறுப்பாக ஆசை". இன்னமும் அது ஒரு முழுமையான பதில் இல்லை. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், எதிரெதிர்த் துருவங்கள் ஈர்க்கும் எனலாம். எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் இரண்டும் ஒரு நடுப்புள்ளியில் சந்தித்து நிறம் சார்ந்த எல்லாப் பிரச்சனைகளும் காலத்துக்கும் ஒரு முடிவுக்கு வந்தால் நல்லதுதான்.

நம் நாட்டில் இருக்கும் சாதி அமைப்பு பற்றி அவன் அறிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "அது பணியிடங்களிலோ பாட சாலைகளிலோ இப்போது இல்லையென்றும் திருமண நேரத்தில் மட்டும்தான் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கேள்விப் பட்டேன்" என்றான்! 'நாம் யார்' - 'எங்கிருந்து வருகிறோம்' என்பதைப் பொறுத்து அவன் சொல்வது பாதி சரி - பாதித் தவறு என நினைக்கிறேன். மேலும், செய்யும் வேலையை வைத்து அப்படியொரு பாகுபாடு அவர்களுடைய ஊரில் இல்லையென்றும் அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். அதெப்படி அங்கு மட்டும் அது சாத்தியம் - இங்கு சாத்தியமில்லை என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை.

கையால் சாப்பிடுவது போல், அவர்கள் நாட்டிலும் சில வெளிநாட்டவர்கள் சிறு சிறு வீடுகளில் நிறையப்பேர் தங்குவதும் தரையில் படுத்துத் தூங்குவதும் அவனுக்கு அதை நினைத்துப் பார்ப்பது கூட எவ்வளவு கடினம் என்பது பற்றியும் பேசினான். நல்ல வேளை, நடு இரவில் நம் சாலையோர நடைமேடைகளை அவன் பார்க்க வில்லை. உபயம் - நம் சாலைகளில் இருந்த குழிகள் மீதான அவன் பயம்.

அவர்களுடைய பண்பாட்டில் சும்மா ஒருத்தரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகப் புகழ்வது மிக சாதாரணமாம் (நம் கழகக் கண்மணிகள் அங்குதான் பயிற்சி எடுத்தனவோ என்னவோ!). நாம் ஒருவரைச் சந்திக்கும் போது, 'ஹாய்', 'ஹலோ', 'எப்டி கீரிங்க?' என்பது போல், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் (அவள் அழகாய் இல்லாவிட்டாலும் கூட) 'ஏய், அழகுப் பெண்ணே', 'ஹாய், தேவதையே', 'ஹலோ, வசீகரியே' என்றெல்லாம் அழைப்பது வழக்கமாம். ஒருவேளை, நம் பெண்களெல்லாம் தேவைக்கு மேல் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருப்பார்களோ என்று கவலை வேறு பட்டான். இருந்தாலும், அவர்களையெல்லாம் மகிழ்ச்சிப் படுத்தியதில் அவனுக்கொரு மகிழ்ச்சிதான்!

வெவ்வேறு ஐரோப்பிய மொழிகளில் ஊர்ப்பெயர்களும் நாட்டுப் பெயர்களும் வெவ்வேறு விதமாக அழைக்கப் படும் என்று அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டாக, லண்டனும் ஸ்பெயினும் அவ்வாறு அழைக்கப் படுவது ஆங்கிலத்தில் மட்டும்தானாம். அவற்றை முறையே லந்த்ரேஸ் என்றும் இஸ்பானியா என்றும் தான் அழைப்பார்களாம் ஸ்பானிய மொழியில். ஸ்பானிய மொழியையே ஸ்பானிய மொழியில் இஸ்பனால் என்றுதான் அழைப்பார்களாம். எப்படியிருக்கிறது கதை!

மூட நம்பிக்கைகள் நம்முடைய பிறப்புரிமை மட்டுமல்ல; மேற்கிலும் அவற்றுக்கு நல்லதோர் இடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும், மாடிப்படிகளுக்குக் கீழே உட்காருவது ஸ்பெயினில் ஏழு வருடக் கெட்ட நேரத்தைக் கொண்டு வரும் என்றும் சீப்பைத் தவற விடுவது பல வருட நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்றும் கேள்விப்பட்டபோது வியப்பாகத்தான் இருந்தது.

ஐரோப்பிய வரைபடத்தை நன்றாகப் புரிந்து கொண்டேன். ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் எவ்வளவு அருகில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். மொராக்கோவும் ஸ்பெயினும் நீந்திச் செல்லும் தொலைவில் இருக்கின்றன. அவர்களுடைய நாட்டிலும் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் கிராமங்களும் சிறு நகரங்களும் இருக்கின்றன; எங்கள் ஊரில் போலவே அவர்களுக்கும் உழவும் விவசாயமும்தான் முக்கியத் தொழில்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆண்டு முழுக்க சில சிலைகள் செய்வதில் கழித்து, ஒரு குறிப்பிட்ட நாளில் அவற்றை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி, அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் பழக்கம் ஒன்று அவர்களிடமும் இருப்பது கண்டு வியந்தேன். நம்ம ஊர் விநாயகர் சதுர்த்தி போலத் தெரியுதா?

கடைசியில், அவனே ஒருமுறை சொன்னது போல, எவ்வளவு வேற்றுமை நமக்குள் - ஆனாலும் எவ்வளவு ஒற்றுமையும் நமக்குள் என்பதைப் புரிந்து கொண்டோம் இருவருமே!!!

* இன்னமும் நிறைய மறந்து விட்டதாக உணர்கிறேன். நினைவு வர வர இந்த இடுகையில் வந்து ஒவ்வொன்றாகச் சேர்த்து விடுகிறேன்.

சனி, செப்டம்பர் 18, 2010

ஆதலினால் எழுதித் தள்ளுவீர் உலகத்தீரே!

எல்லாத் துறைகளிலும் வென்றவர்களும் தோற்றவர்களும் இருக்கிறார்கள். இது தவிர்த்து இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துறையில் வெல்வதற்குரிய அனைத்துத் திறமைகளும் தகுதிகளும் இருப்பினும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் விட்டு விடுவோர். அப்படி விடுவதற்குப் பல காரணங்கள். ஒன்று சோம்பல். இன்னொன்று நேரமின்மை. மற்றொன்று தனக்குள் அப்படியொரு மிருகம் உறங்கிக் கொண்டிருப்பதை உணராமலேயே வாழ்க்கையை ஓட்டிவிடுவது. அப்படிப் போய் விடுவதற்குக் காரணம், அன்றாடப் பிழைப்பைப் பார்ப்பதிலேயே வாழ்க்கை முழுக்கக் கழிந்து விடுவது. பல வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, நம்ம ஊரில் நம் படிப்பும் நாம் செய்யும் தொழிலும் நம் திறமை மற்றும் ஆர்வத்தை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப் படுவதில்லை. அதற்குக் காரணம் நம் பொருளாதார சூழ்நிலை.

இப்படி முயலாமல் விட்டு விட்ட பலருடைய வெற்றியைத்தான் முயன்று பார்த்து வென்றவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முயலாதது எந்த வகையிலும் முயன்று வென்றவர்களின் வெற்றியைச் சிறுமைப் படுத்தக் கூடாது. அது அவர்கள் முயலாமைக்குக் கொடுத்த விலை. இது இவர்கள் முயன்றதற்குக் கிடைத்த பரிசு. நாம் இங்கே செய்ய முயல்வதெல்லாம் முயலாதவர்களை எழுப்பி விட வேண்டும் என்ற முயற்சியே ஒழிய, முயன்றவர்களின் வெற்றியை இழிவு படுத்துவதல்ல. அது மட்டுமல்ல, முயலாதிருப்போர் அனைவரும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியின் தரத்தைப் பெருமளவு கூட்ட முடியும். இன்று வென்றிருப்பவர்கள் இதனினும் பெரிதாய் வென்றிருக்கவும் கூடும். சரியான போட்டியின்மையின் ஒரே காரணத்தால் அவர்கள் சிறிது மெத்தனமாக இருந்திருக்கக் கூடும். நுகர்வோர் கோட்பாட்டுப் படி, இப்படிப் பலருடைய பங்களிப்பு இராததால் – போட்டி இல்லாமல் போனதால் - இழந்தது இறுதிப் பயனாளிகள்தான். எல்லோரும் கலந்து கொள்ள முடிந்திருந்தால் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கப் போகிற நன்மைகளை – புதுமைகளை இப்போதே அனுபவித்திருக்க முடியும். எவ்வளவு அற்புதமானது அது?

இந்த நியதிக்கு எழுத்துலகமும் விதிவிலக்கல்ல. இன்றைக்கு வலைத்தளங்களில் அவரவர் ஆசைக்கேற்ற படி பதிவுகள் செய்துகொள்ளும் வசதி வந்து விட்ட பிறகு, எழுத்துலகத்தின் மீதான பார்வையே புரட்டிப் போடப் பட்டிருக்கிறது. “எங்கே போயிருந்தார்கள் இவர்களெல்லாம் இவ்வளவு காலமாக?” என்றொரு வேதனையான கேள்வி எழுகிறது, இவ்வளவு காலத்து இழப்புகளைத் தாங்க முடியாமல். “இப்போதும் இவர்கள் ஏன் வெளிச்சத்தை விட்டு விலகி இருக்கிறார்கள்? எது அவர்களை ‘எழுத்தாளன்’ என்ற பட்டத்தினின்று தொலைமைப் படுத்தி இருக்கிறது?” என்ற கேள்விகளுக்கான விடை தேடல் அவசியமாகப் படுகிறது. ஒரு சாரார் தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தன் முக்கியத் தொழிலைத் தவிர வேறு எதையுமே தொழிலாகச் சிந்தித்தும் பார்க்க முடியாதவர்கள். அல்லது, அதற்கு நேரம் கிடைக்காதவர்கள். நேரம் கிடைக்கிற போதெல்லாம் எழுதுவதெல்லாம் தன் மன திருப்திக்காகவும் தனக்கு மிக நெருங்கிய சிலரிடம் மட்டும் படித்துக் காட்டிப் பாராட்டுப் பெறுவதற்காகவும் மட்டுமே.

அடுத்தது, “நாம் எழுதுவதெல்லாம் பெரிய எழுத்தா?” என்ற அவநம்பிக்கையோடே நிறைய அழகழகாய் எழுதிக் குவித்துக் கொண்டிருப்போர். இவர்கள்தாம் உடனடியாக உள்ளிழுத்து வரப்பட வேண்டியவர்கள். நம்பிக்கை தவிர எல்லாம் இருக்கிற இடத்தில் அதை மட்டும் வர வைப்பது ஓரளவு எளிதாகத்தான் படுகிறது. அதன் பயனோ மலையளவு பெரியது.

மற்றொரு சாரார், எல்லோரும் வாசிக்கும் படி அல்லாமல் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் வாசிக்கும் வகையில் எழுதுவோர். அப்படிப் பட்ட எழுத்தை விரும்பி வாசிப்போர் எங்கிருக்கிறார் என்று தெரியாமலேயே, தவறான கைகளிடம் சிக்கி, தக்க ஆதரவின்றி, நம்பிக்கை இழந்து கை விட்டு விடுபவர்கள். இவர்கள் நம்பிக்கை இழக்கும் முன்பு, இவர்களுடைய எழுத்துக்களை விரும்பிப் படிக்கும் ஒருத்தராவது சிக்கி விட்டால் போதும். பிழைப்பு ஓடி விடும்.

ஒரே ஒரு டிப். பிறருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது, ‘இவனெல்லாம் என்ன எழுதுகிறான்? சுத்தப் பேத்தல்!’ என்று அடிக்கடித் தோன்றினால், கண்டிப்பாக அதை விடச் சிறப்பாக எழுதும் திறமை உங்களிடம் இருக்கிறது என்பதை மட்டும் உங்கள் மனதில் அழுத்தமாக இட்டுக் கொள்ளுங்கள். ஏனையவை இயல்பாகவே வரும்.

“வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பத்தி பத்தியாய் எழுதுகிற பொறுமையெல்லாம் எவனுக்குய்யா இருக்கு?” என்று கோபப் படுபவராக இருந்தால் உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடம் அதிகம் எதுவுமில்லை. நீங்கள் வாசிக்கிற எழுத்துக்களை சில வரிகளில் மட்டும் விமர்சிக்க முயற்சியுங்கள். முடியாவிட்டால், சில வார்த்தைகளில். அதுவே உங்களை எங்காவது கொண்டு போய் விடலாம்.

எனவே, நான் ஆசைப்படுவதெல்லாம் என்னவென்றால், வாசிப்பவர் எல்லோருமே வாசகராக மட்டும் இருந்து விடாமல், மனதில் தோன்றுவதையெல்லாம் கிறுக்க வேண்டும். புதிதாக எதுவுமே இல்லாவிட்டாலும், வாசிக்கிற கருத்துக்கள் பற்றியாவது தத்தம் எழுத்துக்களில் வாதிடலாம். அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். தினமும் டைரி எழுதலாம். அப்படி ஏதோ ஒரு வகையில் எது பற்றியாவது எழுதுவதில் கிடைப்பது இரண்டு மாங்காய்கள். ஒன்று, உங்கள் எழுத்தாற்றல் கூர்மையடையும். “அதில் என்ன கிடைக்கப் போகிறது” என்கிறீர்களா? சரி, விடுங்கள். மற்றொன்று, சிந்தனையே கூர்மையடையும். சிந்தனை கூர்மையடைவதை விரும்பாத ஆள்தான் உண்டா நம்மில்? எனவே, இந்தப் புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று உங்களுக்கொரு விண்ணப்பம் வைக்கிறேன் - “ஆதலினால் எழுதித் தள்ளுவீர் உலகத்தீரே!”

புதன், செப்டம்பர் 15, 2010

மேற்கு நோக்கி...

தாத்தா பொதுவுடைமை இயக்கத்தில் இருந்ததால் மேற்படிப்புக்கு ரஷ்யா அனுப்பி வைக்கப்படுவதாகச் சின்ன வயதில் அதிகம் ஆசை காட்டப்பட்டவன் நான். பொதுவுடைமையாளர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மேற்படிப்புக்கு அதுவும் மருத்துவம் படிக்க ரஷ்யா அனுப்பி வைக்கப்படுவது அப்போது ஒரு சாதாரணம். சோவியத் நாடு சிதறுண்ட நாளில் நான் மிகவும் பெரிதாக எடுத்துக் கொண்டிராத அந்தக் கனவும் தகர்ந்தது. அது நடந்திராவிட்டாலும் இது நடந்திராது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், எல்லோரும் அதைப் பேச்சுக்குத்தான் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். அவ்வளவு பெரிதாக யாரும் முயற்சித்திருக்க மாட்டார்கள். ஆனால், மிகச் சின்ன வயதிலேயே வெளிநாடு பறந்து செல்வது பற்றியும் வெளிநாட்டவரோடு கலந்து வாழ்வது பற்றியும் கனவு காண அது அடித்தளமிட்டது. அது தவிர்த்து, கணிப்பொறியியல் படிக்க முடிவெடுக்கும் வரை அனுதினமும் வெளிநாட்டவரோடு வேலை செய்யும் சூழ்நிலைகள் பற்றி யோசிக்கவே வாய்ப்பிருக்க வில்லை. அதற்குள், கணிப்பொறியியல் படித்த மச்சான் ஒருவர் சாப்ட்வேர் துறைக்குள் வந்து வெளிநாடுகள் பயணப்பட ஆரம்பித்திருந்தார். அதுவே எனக்கும் உலகமெலாம் சுற்றி வரும் கனவுகளையும் காணத் தூண்டியது. யார் போட்ட கண்ணோ? அதுவும் இன்றுவரை நடந்த பாடில்லை. கனவுகளையுமா கண்ணு போடுவார்கள்?! 

என் இளமைக் காலத்தின் பெரும்பகுதியைச் செலவிட்ட - பேரூரா சிறு நகரமா என்று சொல்ல முடியாத - எங்கள் ஊரில் இரு பெரிய தேவாலயங்கள் இருந்தன. ஒன்று ரோமன் கத்தோலிக் (RC); மற்றொன்று தென்னிந்தியத் திருச்சபை (CSI). இரு தேவாலயங்களுமே சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் தேவாலயங்களைவிடப் பெரியவை. எங்கள் ஊர் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கெல்லாம் ஒரு தலைநகரம் போல. எங்கள் ஊரில் இருந்த தேவாலயங்கள் அவ்வூர்களில் இருந்த தேவாலயங்களுக்குத் தலைமையகம் போல. இந்த தேவாலயங்களில் கணிசமான எண்ணிக்கையில் பாதிரியார்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்துதான் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கெல்லாம் அவர்கள் சென்று வருவார்கள். அவ்வப்போது சில வெள்ளைக்காரர்களும் அங்குள்ள தேவாலயங்களுக்கு வந்து செல்வார்கள். அதுதான் முதன்முதலில் நான் வெள்ளைக்காரர்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு. அப்போதெல்லாம் வெளிநாடு என்றாலே வெள்ளைக்காரர்கள் அதிகம் இருக்கும் மேற்கு நாடுகள்தாம். பாகிஸ்தானோ இலங்கையோ வெளிநாடு என்று யாராவது சொன்னால் சிரி சிரி எனச் சிரித்திருப்போம்.

சில நேரங்களில் அவர்கள் ஜெர்மனியில் (அல்லது ஏதோவொரு மேற்கு நாடு) இருந்து வந்திருப்பதாகவும் அவர்களுடைய மதத்துக்கு மாறினால் நாங்களும் ஜெர்மனிக்குப் (அல்லது ஏதோவொரு மேற்கு நாட்டுக்கு) பறக்க முடியும் என்றும் கேள்விப் படுவோம். பார்ப்பதற்கு எங்களைப் போலவே இருக்கும் உள்ளூர் ஆட்கள் சிலர் எப்போதும் அவர்களுடன் வருவார்கள். அவர்களைச் சுற்றிக் காட்டவும் எங்களுக்கு மிக மிகச் சாதாரணமாகப் பட்ட ஆனால் வந்தவர்களுக்குப் பெரும் ஆச்சரியமாகப் படும் விஷயங்களை விளக்கிச் சொல்லவும். உள்ளூர்க்காரர்களாக இருந்து கொண்டு - பார்ப்பதற்கும் எங்களைப் போலவே இருந்து கொண்டு (சில நேரங்களில் எங்களை விடவும் கறுப்பாக இருந்து கொண்டு) ஆங்கிலம் மட்டும் எப்படி அவ்வளவு சரளமாகப் பேசுகிறார்கள் என்று ஆச்சரியமான ஆச்சரியப்படுவோம். :)

வெள்ளைக்காரர்கள் வரும் நாட்களில் எங்கள் மைதானங்களில் பெரும் ஆட் தட்டுப்பாடு ஏற்படும். எங்கள் நண்பர்கள் எல்லோரும் வேறு மாதிரியாக இருக்கும் வெள்ளைத்தோல் விருந்தாளிகளை வேடிக்கை பார்க்கச் சென்று விடுவார்கள். அவர்களுடைய பயணத்திட்டப்படி அவர்கள் அடுத்த ஊருக்குக் கிளம்பும் வரை அவர்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பது, அவ்வப்போது வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடன் கை குலுக்கிக் கொள்வது, அவர்கள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து செல்வது ஆகிய எல்லாமே என் நண்பர்களுக்கு அலாதியான இன்பம். ஆனாலும், நான் அவர்களோடு அவ்வளவு நெருக்கமாகப் போனதில்லை. தொலைவில் இருந்து பார்ப்பதோடு சரி.

அதன் பின்பு, அவ்வப்போது எங்காவது வெளிநாட்டுக் காரர்களைப் பார்ப்பதுண்டு. கல்லூரியில் படித்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்த போது அங்குள்ள நண்பன் ஒருவனைப் பார்க்க வெள்ளைக்காரர் ஒருவர் வந்திருந்தார். ஆங்கிலத்தில் பேச வேண்டுமே என்று பயந்து அப்போதும் நான் அருகில் செல்லவேயில்லை. இரண்டோ மூன்றோ பேர் மட்டும் சென்று பேசினார்கள். நாங்கள் படித்த அதே வகுப்பறையில் படித்துக் கொண்டு நாங்கள் தங்கிய அதே விடுதி அறைகளில் தங்கிக் கொண்டு ஆங்கிலம் பேசிய எங்கள் நண்பர்களை மிரண்டு போய் ஆச்சரியமாகப் பார்த்தார்கள் மற்ற அனைவரும். உங்களில் சிலருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாங்கள் வளர்ந்தோம். இதைப் படிக்கும் என் கல்லூரி நண்பர்கள் கண்டிப்பாக நான் சொல்வதை ஆதரிப்பார்கள்.

பின்பொருமுறை, தேசிய மாணவர் படையில் (NCC) இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் சென்ற பொது, அங்கே சில வெளிநாட்டவர்களைப் பார்த்து உடன் இருந்த நண்பர்களில் ஒருவர் ஆசைப்பட்டபடி அவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஏனென்று தெரியவில்லை. ஆனால், நெடுங்காலமாகவே நம்மிடம் இப்படியொரு பழக்கம் இருக்கிறது. வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து நின்று படம் பிடித்துக் கொள்ளும் பழக்கம். அப்போதும், மொத்தக் கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசினார். மற்ற எல்லோருமே அதெப்படி அவர் மட்டும் அவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருந்தோம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசும் நாட்டவரா என்று கூட அப்போது தெரியாது. மேற்கர்களைக் கண்டபோதெல்லாம் நம் நினைவுக்கு வருவது ஆங்கிலம்தான். இப்போதுதான் புரிகிறது - நம்மைப் போலவே பெரும்பாலான மேற்கர்களுக்கும் அது ஓர் அந்நிய மொழி என்பது.  அவர்களில் பலருக்கு அது நமக்கு இருப்பதை விட அந்நியமான மொழி.

அடுத்து, நான் பணிபுரிந்த முதல் சாப்ட்வேர் நிறுவனத்தில் நிறைய வெளிநாட்டு வாடிக்கையர் இருக்க வில்லை. பெரும்பாலான வாடிக்கையர் உள்நாடு. இருந்த மிகச் சில வெளிநாட்டு வேலைகளிலும் இருப்பதிலேயே திறமையான சில ஆட்கள் மட்டுமே இருந்தார்கள். அதிலும் இடம் பிடிக்கும் அளவுக்குத் திறமை இராததால் வெளிநாட்டு வாடிக்கையரோடு பணிபுரியும் வாய்ப்புக் கிட்டவில்லை எனக்கு.

அடுத்து, இரண்டாவது நிறுவனத்தில் குவாலிட்டி ஆசாமியாகச் சேர்ந்ததால் வெளிநாட்டுக் காரர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.  அது முதல், உள்-வாடிக்கையர் என்பார்களே (INTERNAL CUSTOMERS) அவர்களுடன்தான் எல்லா வேலையும். சில நேரங்களில் வெளியில் இருக்கும் வாடிக்கையரை விட இவர்களைத் திருப்திப் படுத்துவதுதான் அதிக சிரமம். இப்போது கன்சல்டிங் பக்கம் வந்த பின்புதான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. நிறையச் சம்பாதிக்கலாம் என்பதைவிட பல்வேறு பட்ட பண்பாட்டுப் பின்னணி கொண்டோருடன் பணிபுரியும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே வெளிநாடு செல்லும் ஆசைக்கு மிக முக்கியமான காரணம். ஒரு நேரத்தில், இலங்கைக்கோ பாகிஸ்தானுக்கோ கூடச் செல்லத் தயாராக இருந்தேன். எங்காவது போக வேண்டும் என்பது மட்டும்தான் குறி.

இரண்டாவது நிறுவனத்தில், பிரான்சிலிருந்து வந்திருந்த வாடிக்கையர் ஆள் ஒருவருடன் பேசிக்கொள்ளும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததால் அது ஓர் எளிதான அனுபவமாக இருந்தது. அன்று முடிவு செய்தேன் - போனால் பிரான்ஸ்தான் போக வேண்டும் என்று. ஏனென்றால் அவர்களைவிட நான் நன்றாக ஆங்கிலம் பேச முடிவதால். அப்போது மிக வசதியாக நான் மறந்து விட்டது என்னவென்றால், அவர்களை விட நன்றாகப் பேச முடிந்த ஆங்கிலத்தோடு அவ்வளவு எளிதாக அவர்களுடைய மண்ணில் நான் பிழைப்பை ஓட்டமுடியாது என்பது. அவர்களுடைய இடத்தில் சிரமமில்லாமல் வாழ விரும்பினால் அவர்களைப் போலவே அவர்களுடைய மொழியைப் பேச வேண்டும். அதுதானே சரி?!

இரண்டாவது நிறுவனத்தில் மற்றொரு வாய்ப்பு வந்தது. நிறுவனத்துக்குள்  அனைவருக்கும் அனுப்பப்படும் சுற்றிதழ் ஒன்றுக்கு நான் ஒரு கட்டுரை எழுத ஏற்பாடு செய்யும்படி அவருடைய தனிச் செயலரிடம் ஆணையிட்டார் அமெரிக்காவில் இருந்த பெருந்தலை. இருவரும் (பெருந்தலையின் தனிச் செயலரும் நானும்) தொலைபேசியில் பேசியபோது இருவருக்குமே ஒருத்தர் பேசுவது இன்னொருத்தருக்குப் புரியவில்லை. மொழிப்பிரச்சனை என்று சொல்ல முடியாது. ஒரே மொழியை இருவரும் வேறு வேறு விதமாகப் பேசிய பிரச்சனை. அந்தப் பிரச்சனையால் அழைப்பைப் பாதியிலேயே துண்டித்துக் கொண்டோம். அப்போது ஒரு முடிவெடுத்தோம். நான் சொல்வதை அவர் எழுதுவதற்குப் பதிலாக நானே எழுதி விடுவது என்று. என் எழுத்தாங்கிலம் பேச்சாங்கிலத்தை விடப் பரவாயில்லாமல் இருந்ததால் அதுவே பின்னர் நல்ல முடிவாக மாறியது. ஆனால், இந்த அனுபவம் தொடர்ந்து ஒருவித சஞ்சலத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது எனக்கு. பிறவி-ஆங்கிலர் ஒருவருடனான முதல்ச் சந்திப்பு பற்றிய பயம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அடுத்து, மூன்றாவது நிறுவனத்தில்... அங்கு பணி புரிந்ததாகவே நான் உணரவில்லை. இருந்ததே மிகக் குறைவான காலம். எனவே, வெளிநாட்டுக்காரர்களுடன் வேலை பார்ப்பது பற்றியெல்லாம் பேசவே வேண்டியதில்லை. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களுடனேயே அதிகம் பேசியதில்லை அப்போது.

அடுத்து, இப்போதிருக்கும் நிறுவனம். முதல் மூன்றரை வருடங்கள் உள்ளுக்குள்ளேயே குவாலிட்டி வேலை. அதில் வாடிக்கையருடன் பேசுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. எப்போதாவது சில வெளிநாட்டு அழைப்புகளில் வேடிக்கையாளனாக மட்டும் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் அந்தப் பக்கம் இருப்பவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதே பெரிய சிரமமாக இருக்கும். சில நேரங்களில் எங்கள் அலுவலகங்களுக்கு வந்த சில வெளிநாட்டவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்துமே சுருக்கமாகவும் சுவையாகவும் முடிந்து விட்டவை.

கன்சல்டிங் பக்கம் வந்த பிறகு, இப்போதுதான் அனுதினமும் பல மேற்கர்களோடு பேச ஆரம்பித்திருக்கிறேன். முதல் நாள், முதல் தொலைபேசிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பு வந்த உணர்வே ஒருவிதமானது. இப்போது தினம் தினம் அவர்களுடன் பேசுவதும் நிறைய மேற்குலக நண்பர்கள் கொண்டிருப்பதும் சாதாரணமாகி விடும் போல் தெரிகிறது. ஆனாலும், அந்த முதல் நாள் உணர்வு வேறுபட்ட ஒன்றுதான். இந்த அனுபவத்திற்காக 12 வருடங்கள் காக்க வேண்டியிருந்ததுதான் இப்போதைய ஒரே கவலை. அவர்கள் பலரோடு பணி புரியும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இதற்கா அவ்வளவு ஆசைப்பட்டோம் என்று அற்பமாகக் கூடத் தோன்றுகிறது சில நேரங்களில்.

சென்ற மாதம் பெங்களூர் வந்திருந்த ஸ்பானிய நண்பன் ஒருவனுடன் மூன்று வாரங்கள் பணி புரிய வேண்டியிருந்தது. இதுதான் ஒரு வெளிநாட்டவருடன் வேலை செய்யக் கிடைத்த மிக நெருங்கிய அனுபவம் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அருமையான அனுபவம். நாங்கள் சேர்ந்து பணி புரிந்த மூன்று வாரங்களில் எங்கள் இருவரின் கலாச்சாரங்கள் பற்றியும் விலாவாரியாகப் பேசிக் கொள்வதற்கு எங்களுக்கு அளவிலாத நேரம் இருந்தது. பகலவனுக்குக் கீழே உள்ள இந்தப் பூவுலகில் உள்ள எல்லா விஷயங்கள் பற்றியும் பேசினோம் என்பதால், எங்கள் கருத்துப் பரிமாற்றங்களில் வியக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருந்ததில் வியப்பேதும் இல்லை. இந்த இடுகையை எழுத ஆரம்பித்ததே அந்த வியப்புகள் அனைத்தும் பற்றிப் பேசத்தான். ஆனால் அதற்கான முன்னுரை மட்டுமே எழுத முடிந்திருக்கிறது. எனவே, அதை ஒரு தனி இடுகையில் எழுதி விடுகிறேன். இது என் மேற்கு நோக்கிய பயணம் பற்றிய ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும்... மேற்கு நோக்கி...

காவிரியும் கர்நாடகத் தமிழரும்

தமிழனாகப் பிறந்து பெங்களூரில் வந்து வாழ்வதில் நிறையப் புதுமையான அனுபவங்கள் கிடைக்கப் பெறுவதுண்டு. பொது இடங்களில் சத்தமாகத் தமிழில் பேசிக்கொண்டிருக்கிற நம்மவர்கள் நிறையப் பேரை இங்கே பார்க்க முடியும். அல்சூர் போன்ற பகுதிகளில் தமிழ்ச் செய்தித் தாட்கள் பரப்பிக் கிடக்கும் கடைகளைப் பார்க்க முடியும். சில இடங்களில் தமிழே உலகின் முதன் மொழி என்று எழுதிப் போட்டிருப்பதைப் பார்க்க முடியும். போகிற இடங்களில் எல்லாம் நாம் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பிக்கும் முன், முகத்தை வைத்தே நம்மை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் நம் மொழியை மிக அழகாகப் பேசுவது அடிக்கடிப் பார்க்க முடியும். அப்படிப் பட்ட ஓர் உறவுக்கார ஊர் பெங்களூர் நம்மவர்களுக்கு.

காவிரிக்கு வெகு தொலைவில் இருக்கிற தென் பாண்டி நாட்டில் பிறந்து விட்டதால் காவிரிக்கும் எனக்கும் ஒரு சொட்டுக் கூட தொடர்பு இருக்கவில்லை. அவர்கள் விட்டாலும் விடா விட்டாலும் அதனால் எந்த இலாபமும் இழப்பும் நேரடியாக அடைந்ததில்லை. ஆனால், தஞ்சையில் இருக்கிற நம் உறவினருக்கு இவர்கள் எப்போதும் நீர் விட மறுப்பவர்கள், நீர் கேட்டால் பெங்களூரில் இருக்கிற உறவினரை அடித்து விரட்டுபவர்கள், இன வெறியர்கள் என்று அவர்கள் பற்றிப் பல கடுமையான கருத்துக்கள் மட்டும் இருந்ததுண்டு. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலங்களில் பெங்களூர் என்றாலே தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டுவார்கள் என்பது போன்ற ஒரு கருத்துக் கொண்டிருந்தது இப்போதும் நினைவிருக்கிறது. 1992-ல் அப்படி ஒன்று நிகழ்ந்திருக்கிறது. காவிரிப் பிரச்சனையை மையமாக வைத்து நடைபெற்ற பல்வேறு கலவரங்களில் தமிழர்கள் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பும் பின்பும் அப்படியேதும் நடக்கவில்லை. ஆனால், எவருடையதாயினும் 18 உயிர்கள் என்பது அவ்வளவு மலிவானவையல்ல. அவற்றைப் பறித்தவர்களின் உயிரைப் பறிப்பது தவிர அதற்கு வேறு சரியான தண்டனை இருக்க முடியாது. காவிரிப் பிரச்சனை தலை தூக்கும் போதெல்லாம் பெங்களூரில் வாழ்கிற ஒவ்வொரு தமிழனும் வெளியில் தலை காட்டப் பயந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவது உண்மையே. தஞ்சைத் தமிழனுக்கு அது வாழ்க்கைப் பிரச்சனை. ஆனால், பெங்களூர்த் தமிழனுக்கோ அது பிழைப்புப் பிரச்சனை. ஆனால், உண்மையிலேயே கன்னடர்கள் அவ்வளவு மோசமானவர்களா? என் கருத்து, கண்டிப்பாக இல்லை என்பது. ஒரு சராசரித் தமிழனை விட சராசரிக் கன்னடன் ஓரளவு நல்லவனே. அதற்கான காரணங்களைச் சொல்கிறேன். இதற்கான காரணங்களை நான் ஏன் பேச வேண்டும் அல்லது நாம் ஏன் அவர்கள் பற்றிச் சரியான புரிதல் கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், இதோ என் பதில். எல்லாப் பிரச்சனையையும் உச்ச நீதி மன்றத்தில் போய்த் தீர்க்க முடியாது. என் சகோதரனோடு எனக்குப் பல பிரச்சனைகள் வரலாம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் பஞ்சாயத்தைக் கூட்ட முடியாது. நாங்கள் இருவரும் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டியவர்கள். இருவரும் தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பது ஒருபோதும் உருப்படுவதற்கான வழி இல்லை. உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வந்த போது, இங்கேயே இருந்து கொண்டு இங்கே இருப்பவர்களையே கண்டிக்கும் விதமாக, “உச்ச நீதி மன்றத்தை விடப் பெரியவர்கள் யாரும் இல்லை” என்று சொன்ன ஞான பீட விருது பெற்ற கன்னட அறிவாளர் கிரிஷ் கர்னாட் அவர்களை எனக்கு மிகவும் பிடித்தது. தனக்குச் சரியெனப் படுவதைப் பேசுவதற்கே பல நேரங்களில் தைரியம் தேவைப் படுகிறது. அதுவும் ஊரே ஒரே குரலில் ஒரு தவறைச் சரி போல வாதிடும் நேரத்தில் ஒத்து ஊதுவதுதான் சிறந்த அரசியல்ப் பண்பாக மதிக்கப் படுகிறது. ஆனால், ஒருவேளை நாம் நினைப்பது தவறோ என்று உடன் இருக்கிற இன்னும் பலர் யோசிக்க வேண்டுமானால் ஒரு சிலர் இது போலப் பேசியே ஆக வேண்டும். வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் தறி கெட்ட பேச்சுகளும் இத்தகைய பிரச்சனைகளுக்கு ஒரு போதும் முடிவாகா.

அதற்கு முன்பு, காவிரிப் பிரச்சனை பற்றிச் சிறிது பேசி விடுவோம். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது எந்த வகையிலும் மன்னிக்கத்தக்கதோ நியாயப் படுத்தத்தக்கதோ இல்லை. அந்த வகையில் நியாயம் தமிழகத்தின் பக்கமே உள்ளது. தஞ்சை மாவட்டம் கர்நாடகத்தில் ஒரு மாவட்டமாக இருந்திருந்தால் இது ஒரு பிரச்சனையாகவே ஆகியிராது. இதிலிருந்தே புரிகிறது, இது தண்ணீர் மட்டும் சம்பந்தப் பட்ட பிரச்சனை அல்ல; இன்னும் என்னென்னவோ சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது. முதல் பிரச்சனை தமிழ்-கன்னட உறவில் இருக்கிற பிரச்சனைகளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. பழங்காலங்களில் பெரும்பாலான தமிழ் மன்னர்கள் சுற்றி இருக்கிற இன்ன பிற இனத்தவரைத் தொடர்ந்து படையெடுத்துச் சென்று அவர்தம் ஆட்சிகளைக் கைப்பற்றி அவர்களைப் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். சில முறை அவர்களும் அதை நம்மிடம் செய்திருக்கிறார்கள். இலங்கையும் கர்நாடகமும் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டுகள். எனவே, காலங்காலமாகவே அவர்களுக்கு நம் மீது ஒரு வித வெறுப்புணர்வு இருந்து வருகிறது. இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பவர்கள் என்கிற பய உணர்வும் உண்டு. அதற்கேற்றாற்போல் சில வாதங்களும் அவர்களிடம் உள்ளன.

அடுத்தது அரசியல். மக்கட்தொகை குறைவாக இருந்த காலங்களில் - மழை சரியாகப் பெய்த காலங்களில் இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. காங்கிரஸ் மட்டுமே இரண்டு இடங்களிலும் ஆண்ட போது எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இங்கே திராவிடக் கட்சிகள் தலையெடுத்த பின்பு காங்கிரசுக்குத் தமிழ்நாடு வேண்டாத நாடாகி விட்டது. தனி நாடு கேட்போருக்குப் பாடம் புகட்ட மத்தியில் இருப்பவர்களே இது போன்ற சிக்கல்களை வளர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரே கட்சி ஆண்ட போது வெற்றிக்காக வேண்டாத வேலைகள் பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. வெற்றி என்பது எட்டாக் கனியாகும் காலகட்டத்தில் இரு சாராருமே நரித்தனங்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். வெல்வதை மட்டுமே முழு முதல் நோக்கமாகக் கொண்டு உழைக்கும் புதிய அரசியல் பண்பாடு வந்து சேர்ந்தது. வெல்ல முடியாத போது வென்றவரைச் சிக்கலுக்குள்ளாக்கும் வேலைகள் ஒரு வித ஈனக் களிப்பை உண்டு பண்ணின தோற்றவர்களுக்கு. இப்படியே சன்னம் சன்னமாக வளர்ந்து பிரச்சனை பூதாகரமாகி விட்டது. பிரச்சனை பற்றி எதுவுமே புரியாவிட்டாலும், “கொடுக்கக் கூடாது” / “விடக் கூடாது” என்கிற மனப்பான்மை மட்டும் உறுதியாக வளர்ந்து விட்டது. இன்றைக்கு அது ஒரு முடிவே இல்லாத பிரச்சனையாக வந்து நிற்கிறது.

எனக்கு நியாயம் என்று படுகிற, அவர்கள் வைக்கிற வாதங்களில் ஒன்று, “இதுவே தமிழ்நாட்டை நம்பி நாங்கள் வாழ்வதாக இருந்திருந்தால், நாங்கள் கொடுக்கிற இந்தச் சில சொட்டுகள் கூட எங்களுக்குக் கிடைத்திருக்காது” என்பது. எல்லாவற்றிலும் அரசியல் பண்ணுகிற நம்மவர்கள் இதைவிடக் கேவலமாகத்தான் நடந்திருப்பார்கள் என்று படுகிறது. காமராஜருக்குப் பின் நம்ம ஊரில் கிருஷ்ணா போன்ற ஒரு பண்பாளர் ஆட்சியில் அமர்ந்ததில்லை. எனவே யாராக இருந்தாலும் அது போலவே நடந்திருப்பர் அல்லது அதை விட மோசமாக நடந்திருப்பர் என்றுதான் படுகிறது.

இதே பிரச்சனையை இதை விட ஓரளவு பரவாயில்லாமல், வீதிக்கு வராமல், தீர்த்திருக்க முடியும் நம்மால். நம்ம ஊர் நரிகளும் இதில் நிறைய விளையாடுகின்றன. தேவையில்லாத அறிக்கைகள், வம்பிழுத்தல்கள், அரசியலாக்கல்கள் எனப் பிரச்சனையைத் தீர்க்க உதவாத பல வேலைகள் செய்பவர்கள்தான் நம்முடைய சாபக்கேடு.

வெளியூரில் போய் வாழ்கிற போது எப்படி வாழ வேண்டும் என்கிற இங்கிதமும் நம்மவர்களுக்கு வந்தாக வேண்டும். அவர்களுடைய மற்றொரு மாபெரும் குற்றச்சாட்டு இது. “எங்களுக்கு ஏன் தெலுங்கர்களையும் மலையாளிகளையும் கண்டால் இவ்வளவு கோபம் வருவதில்லை? ஏனென்றால், அவர்கள் எங்கள் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு எங்களையே யார் என்று கேட்கிற வேலையைச் செய்வதில்லை” என்பது. அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. அவர்கள் எவரும் உள்ளூர்க்காரர்களை அதிகம் சீண்டுவதில்லை. ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் ஓவர். அதற்கு இன்னொரு காரணம், நாம் எண்ணிக்கையில் கன்னடத்தவருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள். அந்த ஊரின் வரலாற்றில் நமக்குப் பெரும் பங்கு இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்திலேயே கூலி வேலைக்குப் போய் அங்கேயே குடியேறி விட்டவர்களின் அளவு கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களில் பலருக்குத் தமிழ் தெரியுமே ஒழிய தமிழ் நாட்டில் அவர்கள் ஊர் எது என்று தெரியாது. அந்த அளவுக்கு மண்ணின் மைந்தர்கள் ஆகி விட்டார்கள் நம்மவர்களும் அங்கே. எனவே, மும்பையில் செய்ய முடியாத சேட்டைகளை (அங்கேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேறு கதை!), டெல்லியில் காட்ட முடியாத உரிமையை நாம் இங்கு காட்டுவது இயற்கையானதுதான். ஆனால், அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்ள மறுப்பது, பொது இடங்களில் அவர்கள் மொழியையும் பண்பாட்டையும் கிண்டல் பண்ணுவது, நாமாகக் கூட்டம் (தனித் தமிழ்க் கூட்டம்) சேர்ப்பது, அதில் அவர்களை ஒதுக்கி வைப்பது, பணியிடங்களில் அவர்களுக்கு எதிராகவே அரசியல் பண்ணுவது இதையெல்லாம் நாம் தவிர்த்தே ஆகவேண்டும். நம் உரிமையைக் கேட்கத் தூண்டி விடுகிற யாரும் நமக்கு இதெல்லாம் கற்றுக் கொடுப்பதில்லை.

சராசரித் தமிழனை விட சராசரிக் கன்னடன் நல்லவன் என்ற ஒரு கருங்காலித்தனமான கருத்தொன்று வைத்தேன் ஆரம்பத்தில். அது எப்படி என்பது பற்றிச் சொல்கிறேன். பெரியார் சொன்னது போல், அடிப்படையில் நாம் ஒரு காட்டு மிராண்டிக் கூட்டம். நம்முடைய பழக்க வழக்கங்களில் ஒருவித மூர்க்கத்தனம் இருக்கிறது. பொது இடத்தில் இன்னொரு சக மனிதனை முறைப்பதைப் பெரிய பருப்புத் தனமாக நினைக்கிற மனோபாவம் நமக்கு மட்டுமே இருப்பது போல்த் தெரிகிறது. சாதாரணமாக ஓர் உரையாடலின் முடிவில் புன்னகைக்கிற குணம் நம்மிடம் இல்லை. கேள்வி கேட்போரைச் சண்டைக்காரன் போலப் பார்த்துப் பேசுவது சுய மரியாதையாகக் கருதப் படும் பண்பாடு நம்முடையது. ஓர் அயலவரைத் தம்மவராக ஏற்றுக் கொள்கிற பழக்கம் நமக்கில்லை. எம் ஜி ஆரை, ஜெயலலிதாவை, ரஜினி காந்தை ஏற்றுக் கொண்ட கதை வேறு. ஆனால், அடி மட்டத்தில் வெளியூர்க்காரர்கள் வந்து குடியேறும் அளவுக்குத் தமிழ்நாடு இன்னும் திறந்த மனப்பான்மை பெற்று விட வில்லை. அது பெங்களூரில் இருக்கிறது. அதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒரு கன்னடன் சென்னையில் வந்து வாழ்வதை விடத் தமிழன் பெங்களூரில் வந்து வாழ்வது எளிது. இந்த ஒரு வரியைத் தவறென்று யாராவது நிரூபிக்க விரும்பினால், தயவு செய்து முன் வருக. பெங்களூரை விடச் சென்னையில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதைத் தவிர நல்லதாக ஒரு கருத்து யாரிடமும் இருக்க முடியாது.

கர்நாடகத்தில் எல்லோருமே தமிழர்களை வெறுப்பவர்கள் அல்ல. அந்த வெறுப்புணர்வு என்பது நான்கே நான்கு மாவட்டங்களில் மட்டும் இருப்பது. பெங்களூர், மைசூர், மண்டியா (இதை இதுவரை 'மாண்டியா' என்றே சொல்லி வருபவரா நீங்கள்? அதுவும் நம் ஊடங்கங்கள் நமக்குத் தவறாகச் சொல்லிக் கொடுத்தவற்றில் ஒன்றே. இனி, மாற்றிக் கொள்ளுங்கள்!), சாம்ராஜ் நகர் ஆகியவை மட்டுமே. காரணம், காவிரி. காவிரிப் பிரச்சனையின் போது மற்ற மாவட்டத்தினர் இவர்களுக்காக கண்ணைக் கூடச் சிமிட்ட மாட்டார்கள். சில தொலைக் காட்சிகளில் தக்க காட்சிகளுடன் அழகாகக் காட்டுவார்கள் - “காவிரியில் நீர் விடக்கூடாது என்று வலியுறுத்தி இன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய போராட்டத்தால் மங்களூர், ஹுப்லி, சிமோகா போன்ற நகரங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை; இயல்பு நிலை அப்படியே இருந்தது; கடைகளும் அலுவலகங்களும் வாகனங்களும் எப்போதும் போலவே இன்றும் இயங்கின!” என்று. இதை இங்கிருந்து உற்றுக் கவனித்தவர்களுக்குத் தெரியும். நாம் நினைப்பது போல, மொத்தக் கர்நாடகமும் தமிழர்களை எதிரிகளாகப் பார்ப்பதில்லை. இதெல்லாம் நம் ஊடகத்தார் நமக்கு விதைத்த தவறான நச்சு விதைகள். அடிப்படையில் அவர்களும் வந்தாரை வாழ வைக்கும் பண்பாடு கொண்டோரே. அப்படியில்லையேல், பெங்களூரில் இத்தனை லட்சம் தமிழர்கள் வந்து கூடாரம் போட்டுக் கும்மாளம் போட முடியுமா?

ஆனால், காவிரிப் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்ததும் இங்கே ஒரு விதமான மாற்றம் ஏற்படும். தமிழ்த் தொலைக்காட்சிகள் எல்லாம் தடை படும். அவர்கள் பேச்சில் ஒருவித வெறுப்புணர்வு வரும். மற்ற எல்லா இனத்தவர் மீதான வெறுப்புகளும் தொலைந்து போய்விடும். சிலர் நம்மை எதிரிகள் போல் பார்ப்பர். வீண் வாதங்களுக்கும் வம்புகளுக்கும் இழுப்பர். தமிழ் நாட்டு வண்டிகள் ஓட்டுவோரைத் தெருவில் போகிற நாய்கள் எல்லாம் முறைக்கும். எனக்குத் தலையெல்லாம் வெடிக்கிற மாதிரிக் கொதிக்கும். அவர்களுடைய இந்த மனநிலைக் கோளாறுக்கு என்ன காரணம் என்று இன்று வரை முழுமையாகப் புரியவில்லை.

இதுவரை காவிரிப் பிரச்சனையைப் பொருத்தமட்டில் நாம் அடி படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். அதற்கான பதிலடி சிறிது கூடக் கொடுக்கவில்லை. ஆனால், முதல் முறையாக போன முறை ஒகேனக்கல் பிரச்சனை வந்தபோது, திருமாவளவன் - ராமதாஸ் குழுவினர் புண்ணியத்தில், தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் அவர்களுடைய வண்டிகளும் வணிகத் தலங்களும் அடிக்கப்பட்டன. சரியோ தவறோ இது ஒரு மாபெரும் மாற்றம்.

ஆனால், எம்.ஜி.ஆரை, ஜெயலலிதாவை, ரஜினி காந்தை தமிழன் ஏற்றுக் கொண்டது போல இங்குள்ளவர்கள் பெரிதாக வெளியினத்தார் எவரையும் பெரிதாக ஏற்றுக் கொண்டதில்லை. அதற்குக் காரணம் ஒன்று இருக்கிறது. நம்மிடம் மட்டுமே சினிமா மோகம் பேய் பிடித்து ஆடியது. அது நம்முடைய வேறொரு பிரச்சனை. அவர்கள் அங்கே வந்தார்கள் என்றால் அந்த அளவு நம் சினிமாத்துறை திறந்த வெளியாக இருந்தது. அதில் வாய்ப்புகள் இருந்தன. இங்கே சினிமா மோகம் இல்லை. இருக்கிற சிறிதளவு மோகமும் மேலே குறிப்பிட்ட அந்தச் சில மாவட்டங்களில் தான். மற்ற மாவட்டத்தினர் சினிமா குறைவாகப் பார்க்கிறார்கள் அல்லது இந்திப் படங்கள் பார்க்கிறார்கள். சினிமாத்துறை அவ்வளவு சிறப்பாக இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி அளவுக்கு ராஜ்குமார் பெரிதாகப் பேசப்படாதது அதனால்தான். கொஞ்சம் நஞ்சம் பேசப்பட்டது நம்மவர் வீரப்பன் செய்த காரியத்துக்குப் பின்புதான். மற்றபடி, இவர்களுடைய சினிமாத்துறையிலும் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்லாது, மற்ற பல பணிகளிலும். எப்படியிருப்பினும் யார் நல்லவர்கள் என்ற விவாதத்தில் அது பயனற்றது.

இவை எல்லாவற்றையும் விட நம்மை மேலானவர்களாகக் காட்டுகின்ற மிக அடிப்படையான ஒன்று, அரசியல் ரீதியாகப் பல முறை நாம் மொழி மற்றும் இன அடிப்படையிலான போராட்டங்களில் ஈடு பட்டிருக்கிறோம்; அத்தகைய பிரச்சனைகளுக்குள் தள்ளப் பட்டிருக்கிறோம். அப்படிப் பட்ட தருணங்களில் ஒரு முறை கூட ஒரு அயல் இனத்தவரின் உயிரை நாம் பறித்ததில்லை. யார் வந்து தூண்டி விட்டாலும் அது கொலையில் முடிந்ததில்லை. அதை அந்தப் பாதகர்கள் செய்திருக்கிறார்கள். அதற்குப் பின்பும் நான் சொல்கிறேன், அவர்கள் நம்மை விட நல்லவர்கள் என்று. ஏனென்றால், அதுதான் அவர்களுடனான என்னுடைய அன்றாட உறவுகள் மூலம் நான் புரிந்து கொண்டது. இதை இங்கே வந்து வாழ்ந்து விட்டுப் போன எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். நான் திருமணத்துக்கு முன்பு தனியே தங்கியிருந்த காலத்தில் எங்கள் பகுதியில் ஒரு உள்ளூர்ப் போக்கிரி இருந்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம், ஒரு மலையாளி உணவகத்தில் என் நண்பர்களும் நானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது , அந்தப் போக்கிரியும் அங்கே அவனுடைய நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எல்லோரும் நல்ல போதையில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில், காரணமே இல்லாமல் கலாட்டா செய்து, அங்கிருந்த தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துக் கீழே போட்டு சத்தம் எழுப்பினான். சேட்டாவிடம் தமிழில் வேறு கோபமாக இது இல்லையா அது இல்லையா என்று இல்லாதவற்றை எல்லாம் கேட்டுக் கத்துகிறான். உடன் இருப்பவர்கள் எல்லாம், "டேய், அவர் சேட்டாடா, தமிழ் இல்லடா!" என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அவன் செய்த அத்தனை கலாட்டக்களுக்கும் காரணம் அது தமிழரின் கடை என அவன் தவறாக நினைத்தது.

அடுத்த சில மாதங்களுக்குள் இன்னொரு காட்சி. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக பெங்களூரில் இருந்து அளவிலாத உதவிகள் போகின்றன. உணவு, உடை மற்றும் இதர பொருட்களோடு ஒவ்வொரு பகுதியிலும் இருந்து ஏகப்பட்ட லாரிகள் போகின்றன. அப்படித் தமிழ் நாட்டுக்குப் போகும் லாரி ஒன்றில் படு மும்முரமாக இதே ஆள் ஏதேதோ ஏற்றிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்தபோது எனக்கு ஒருவிதமான புல்லரிப்பு. எது அவனை அன்று கடையில் கலாட்டா செய்ய வைத்தது? எது அவனை இன்று இவ்வளவு மும்முரமாக வேலை செய்ய வைத்தது? அவன் தமிழர்களுக்கு ஆதரவானவனா எதிரானவனா என்பதை எப்படி முடிவு செய்வது? அவனைப் பொருத்த மட்டில் ஏதோ ஒன்றில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்க வேண்டும். சண்டை போடுவதாக இருந்தாலும் சரி. உதவிக்கரம் நீட்டுவதாக இருந்தாலும் சரி. அவ்வளவுதான்.

இது இன்னொன்றையும் நினைவு படுத்துகிறது. நாம் எவ்வளவுதான் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுவோராக இருந்தாலும் மறுக்க முடியாத ஒரு உண்மை (ஏனென்றால், அது புள்ளி விபரம்!) - இந்தியாவில் எந்தப் பிரச்சனை என்றாலும் எல்லோரையும் விட அதிகமாக உதவுவது நம்மவர்கள்தாம். எனக்கு விபரம் தெரிந்து கார்கில் போரில் ஆரம்பித்து குஜராத் நில நடுக்கம், ஒரிசா வெள்ளம் என அனைத்துக்கும் நம்மவர்கள்தாம் எல்லோரையும் விட அதிகம் உதவியிருக்கிறார்கள். அப்படியானால், நாமும் நல்லவர்கள்தாமே?! பின் ஏன் நமக்குள் இவ்வளவு பிரச்சனைகள் வர வேண்டும்? அங்குதான் அரசியல் வந்து அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு விடாதபடிக்கு வெறுப்பு விற்போர் வந்து வேலையைக் காட்டி விடுகிறார்கள். நாம்தானே கவனமாக இருக்க வேண்டும்?!

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...