புதன், அக்டோபர் 31, 2012

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 2/6

தொடர்ச்சி...

கவிதை எழுதுவதுதான் உலகிலேயே உன்னதமான தொழில் என்றும் கவிஞர்களிடம்தான் நாட்டைக் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணித் திரிந்து கொண்டிருந்த இளமைக் காலத்தில், இலக்கியத்தில் இப்படியும் ஒரு வடிவம் இருக்கிறது என்று சிறுகதைகளை அறிமுகம் செய்து வைத்து, அதிலும் ஏதாவது கிறுக்கிப் பார் என்று எனக்கு நினைவு படுத்திய பெருமை கோணங்கியையே சாரும். இதே சொற்களில் இப்படியே சொன்னார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் சொல்லாமலே அவரிடம் இருந்து எடுத்துக் கொண்ட விஷயங்கள் பல. அப்படியான ஒன்றுதான் இதுவும். "என்னடா, எங்கயோ வந்து எதையோ பத்திப் பேசுற?" என்று நீங்கள் படும் கோபம் புரிகிறது. பொறுங்கள், அதையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்று சொல்லி விடுகிறேன்.

இந்த நூலில் இருக்கும் கதைகளில் ஒன்றில் வரும் பட்டாளத்து மாமா பாத்திரம், பட்டாளத்தில் இருந்த ஒரே காரணத்துக்காகத் தன்னை இம்மானுவேல் சேகரனோடு ஒப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்வது போல, ஒவ்வொரு கதையையும் முடிக்கிற போது நானும் என்னால் முடிந்த ஓர் ஒப்பீட்டைச் செய்து கொண்டே இருந்தேன் தமிழ்ச்செல்வனோடு. அது முற்றிலும் கண்டிக்கத் தக்கது - காவாலித்தனமானது எனினும், இது போன்ற சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடுகளின் மூலம்தானே கொஞ்சமாவது நம் தன்னம்பிக்கையையும் கூட்டிக் கொள்ள முடியும். அப்படித்தானே எல்லோருமே ஆரம்பிப்பது. எட்ட முடியாத உயரத்தைக் கூட எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பதன் மூலம் எட்டுவதற்கான வாய்ப்பு உருவாகி வரும் என்ற நம்பிக்கை. அவ்வளவுதான்.

கல்லூரிக் காலங்களில் என் சக்திக்கு முடிந்த அளவு நானும் கொஞ்சம் சிறுகதைகள் முயன்றேன். அதிக பட்சம் அப்படி ஒரு பத்துக் கதைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். ஓரிரு கதைகள் கல்லூரி இதழில் வெளி வந்தன. வெளியில் எந்தப் பத்திரிகைக்கும் ஒன்று கூட அனுப்பி முயன்று பார்த்ததில்லை (ஏனோ அதில் இன்றுவரை ஆர்வம் வரவே மாட்டேன் என்கிறது!). ஆனால், சீனியர் செல்வராஜ் அண்ணன் கல்லூரி இதழில் வந்த கதையை அப்படியே தூக்கிப் பெயரை மட்டும் மாற்றி அவர் பெயரைப் போட்டு ஒரு வார இதழில் வர வைத்து விட்டார். அதிலிருந்து ஒரு நம்பிக்கை... நாம் ஆசைப்படுகிற காலத்தில் நம் கதைகளை ஏதாவதொரு உருப்படாத பத்திரிகையிலாவது வரவைத்துக் கொள்ள முடியும் என்று.

அதாவது, சொல்ல வரும் விசயம் என்னவென்றால், இந்த நூலைப் படித்த பின்பு, அப்படி நான் எழுதிய பத்துக் கதைகளுமே ஏற்கனவே எழுதப் பட்டு விட்ட கதைகளோ என்றொரு கேள்வி வந்திருக்கிறது. இதில் நன்மை என்னவென்றால், கதைக்கருவாக நான் தேர்ந்தெடுத்த பல விசயங்கள் தமிழ்ச்செல்வன் போன்ற ஒருவரின் சிந்தனைக்குப் பக்கத்தில் இருப்பது நம்ப முடியாத அளவுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதற்கு எங்கள் பின்னணியில் இருக்கும் ஒற்றுமை காரணமா அல்லது அவருடைய கதைகளையெல்லாம் படித்து எழுத ஆரம்பித்ததால் ஏற்பட்ட சிக்கலா என்று தெரியவில்லை. அதில் இருக்கும் தீமை என்னவென்றால், 'இதையெல்லாம் ஏற்கனவே சொல்லி விட்டார்கள் தம்பி. அதுவும் நீ சொல்வதை விடப் பல மடங்கு அழகாகவும் தரமாகவும் சொல்லி விட்டார்கள். அதனால் நீ உன் வேலையை மட்டும் பார்த்தால் போதும். எழுதுகிற பக்கமெல்லாம் வர வேண்டாம்!' என்றொரு உள்ளொலி கேட்கிறது. கோணங்கி மனதில் நிற்கிற மாதிரிச் சொல்லிச் சென்றுள்ள பல கருத்துக்களில் ஒன்று, "எல்லாமே சொல்லப் பட்ட கதைகள்தான்டா தம்பி!" என்பது. அது கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது. "அவர்கள் சொன்னதையே நீயும் சொன்னாலும் தப்பில்லை தம்பி. உனக்கேற்ற மாதிரி - உன் ஆட்களுக்கேற்ற மாதிரிச் சொல்லிக் கொள்!" என்றொரு தெளிவும் பிறக்கிறது.

இப்போது நூலுக்குள் செல்வோம். நூலின் முதற் கதையான "பாவனைகள்", கிராமத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சென்னையிலும் பெங்களூரிலும் இருக்கும் என் நண்பர்கள் பலருக்கு இதையெல்லாம் நம்பவே முடியாது. சிலர் மிகைப் படுத்தப் பட்டவை என்று கூடக் குற்றம் சாட்டலாம். அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், அதற்கு மிக அருகில் வாழ்ந்த அனுபவம் உள்ளவன் என்ற முறையில் அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. தந்தையிடம் கேட்ட அல்வாக் கிடைக்கவில்லை என்று அழுது அடம் பிடிக்கிற சிறுவன், கடைசியில் "புண்ணாக்கு எடுத்து வந்து கொடுக்கிறேன்" என்று அவனுடைய அண்ணன் சொன்னதும், "அல்வாவை நம்புவதை விட புண்ணாக்கை நம்பலாம்!" என்று சமாதானம் ஆகி விடுகிறான்.

புண்ணாக்கு என்றொரு சரக்கு இருப்பதே நிறையப் பேருக்குத் தெரியாது என நினைக்கிறேன். அப்படித் தெரிந்த பலருக்கும் அதை மனிதர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று தெரிந்திராது. அது மாடு சாப்பிடும் உணவு என்பது மட்டும்தான் தெரிந்திருக்கும். அதுதான் உண்மை எனினும், மனிதர்களும் அதை விரும்பிச் சுவைப்பதுண்டு என்பதை நினைவு படுத்துகிறது இந்தக் கதை. அப்படிப் புண்ணாக்குச் சாப்பிட்டுப் பழக்கப் பட்டவர்களே கூட அதை மறந்து விட்டாலும் இந்தக் கதையைப் படித்தால், "நீயும் இதைச் சாப்பிட்டிருக்கிறாய். மறந்து விட்டாயா?!" என்று நினைவு படுத்தப் படுவார்கள். சின்ன வயதில் அந்தப் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது. புண்ணாக்கு என்றால் ஏதோ அசுத்தமான ஒன்று என்று யாரும் முகம் சுளிக்காதீர்கள். எண்ணெய்ச் செக்கில் மிஞ்சும் சக்கைதான் புண்ணாக்கு. அதை முக்கிய உணவாக யாரும் உண்பதில்லை. நேரடியாக செக்கில் இருந்து எடுத்துச் சுவைத்தால் சிறிது சுவையாக இருக்கும். அப்படிப் பொழுதுகளில் மட்டும் சுவைத்துக் கொள்வர். அவ்வளவுதான்.

அந்தக் கதையில் மற்றொரு முக்கிய விசயம் - அழுது அடம் பிடிக்கும் தன் பிள்ளையை தாய் 'முதுகில் ஒன்று வைத்தாள்' என்று வரும் வரி. குழந்தையைக் கொடுமைப் படுத்துவது, மனைவியைக் கொடுமைப் படுத்துவது, பெற்றோரைக் கொடுமைப் படுத்துவது ஆகிய அனைத்தும் நகரங்களிலும் நாகரிக சமூகத்திலும் கூட இன்றும் உள்ளது எனினும், அவை கிராமங்களிலும் கீழ்த்தட்டு மக்களிடமும்தான் அதிகமாக இருக்கிறது. குழந்தையின் கண்ணில் தூசி பட்டால் கூடக் கதறி விடுகிறோம் பெரும்பான்மை நகரவாசிகள். பெற்றோரில் ஒருவர் குழந்தையைத் திட்டியதற்காகவோ கடுமையாகப் பேசியதற்காகவோ கொடூரமாகச் சண்டை போட்டுக் கொள்ளும் கணவன்-மனைவியர் கூட நிறைய உண்டு நம்மில். புண்ணாக்கு தின்னுவது போலவே இதுவும் நமக்குப் பெரும் ஆச்சரியமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலானவர்கள், இது நடக்கிறது - ஆனால், நம்மைச் சுற்றி நடப்பதில்லை என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பெற்று விட்டால் அந்தக் குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் - அதற்கான உரிமை தமக்கு உள்ளது என்று நிறையப் பேர் எண்ணுகிறார்கள்.

பத்து ரூபாய் காணவில்லை என்று குழந்தையைத் தீ வைத்துக் கொளுத்திக் கொன்ற கொடுமை நம் தமிழ் மண்ணில்தான் (கும்பகோணம் அருகில்) நடந்தது (பின்னர் அந்தப் பத்து ரூபாய் கிடைத்து விட்டது என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்!). அமெரிக்காவில் குழந்தையைத் தொட்டால் அத்தோடு அந்தப் பெற்றோரின் சோலி முடிந்தது. போலீஸ் வந்து விடும். நம் கிராமங்களின் பெருமைகளைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் அதே வேளையில், நாகரிகத்தில் நாம் எவ்வளவு தொலைவு இன்னும் பயணப் பட வேண்டியுள்ளது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. அதை இந்த வரி போகிற போக்கில் சொல்லிச் சென்று விடுகிறது என்றாலும், அடுத்து சில நிமிடங்களுக்கு அடிபட்ட குழந்தையை விட்டு நம்மால் நகர முடிவதில்லை. தீவிர சிந்தனைச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. மனித உரிமை என்பது கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் தண்டனைகளில் இருந்து காப்பது மட்டுமல்ல. இது போன்று வதைப் படும் குழந்தைகளையும் காக்க வேண்டும். அழுவதை நிறுத்துவதற்காக அடி வாங்கும் குழந்தைதான் அடுத்து எந்தக் காரியத்தையும் சாதிக்க வன்முறையைக் கையில் எடுக்கும். இது மனிதாபிமானம் மட்டுமே சம்பந்தப் பட்ட பிரச்சனை அல்ல. அறியாமையும் ஒரு பெரும் காரணம். இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கிறது. அது மாறாதவரை எதையுமே குறை சொல்ல முடியாது என்பதும் உண்மைதான்.

அடுத்த கதை, அசோகவனங்கள். வெயிலோடு போய் கதையில் வரும் அதே மாரியம்மாதான் இதிலும் நாயகி. சிறுகதையில் இது ஒரு புதிய உத்தி. சுஜாதாவின் கதைகளில் கணேஷ் மற்றும் வசந்த் என்று இரு பாத்திரங்கள் வந்தே தீரும் என்பார்கள். அது பெயரை மட்டும் மீண்டும் மீண்டும் பயன் படுத்திக் கொள்ளும் உத்தி. அது போல நிறையப் பேர் தத்தமக்கென்று பெயர்களும் பாத்திரங்களும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அப்படியல்ல. அதே ஆட்களின் இரு கதைகள் போல இருக்கிறது. இதிலும் மாரியம்மாவின் மச்சான் தங்கராசுதான். கதை என்னவென்றால், மாரியம்மா தங்கராசுவின் நினைப்பிலேயே திரிபவள். தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் அதை ஒரு சினிமாவாக ரசிப்பவள். இந்த வரியும் எனக்கு மிகவும் பிடித்தது. எங்கள் கிராமங்களில் (உங்கள் நகரங்களிலும்தான்!) இது போன்ற  எக்கச் சக்கப் பெண்களைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே சினிமாவை வைத்துத்தான் சிந்திப்பார்கள். கமல் மாதிரியே கணவன் வேண்டும்; தீபாவளித் திரைப்படத்தில் பார்த்தது போலவே பொங்கலுக்குப் புடவை வேண்டும்; ஒரே பாட்டில் பத்து நாடும் பதினைந்து உடைகளும் மாற்றிக் கொள்ளும் வாழ்க்கை வேண்டும்; இப்படி இயலாத எல்லாமே வேண்டும்.

தீப்பெட்டி ஆபீசில் கணக்கப்பிள்ளையிடம் திட்டு வாங்கி விட்டு, வீடு திரும்பிய பின்னும் தோழி கோமதியின் "பொண்டாட்டியக் கூப்புடற மாதிரிக் கூப்புட்றான் எடுபட்ட பய" என்ற கமென்ட் அறுத்துக் கொண்டே இருக்கும். அன்றிரவு வீட்டில் போய் படுக்கையில் விழுந்து வழக்கம் போல் கனவு காண முயல்கையில், கனவில் தங்கராசு வராமல் திட்டிய கணக்கப்பிள்ளை வருவான். அவன் பின்னால் கழுத்தில் மாலையோடு சென்று கொண்டிருப்பாள். இதில் நம் கரிசற் பெண்களின் உளவியல் மென்மையாகச் சொல்லப் பட்டிருக்கும். ஒரே நிகழ்வில் - ஒரே சொல்லில் நம் பெண்களின் மனதை உடைத்து விடுகிற முடியும் அளவுக்கு ஆண்-பெண் உறவு கண்ணாடியாக வைக்கப் பட்டிருக்கிறது நம் மண்ணில்.

அடுத்த கதை, நம் சினிமாப் புகழ் "வெயிலோடு போய்". அந்தக் கதைதான் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே. அதே மாரியம்மாள். அவள் ஆசைப்பட்ட மச்சான் வேறொருத்தியைக் கட்டிக் கொண்டு போய் விடுகிறான். தான் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது இருப்பது யாரென்று பார்த்து ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வுதானே. பார்த்து வரலாம் என்று செல்கிறாள். போன இடத்தில் தன் மனசெல்லாம் நிறைந்த மச்சானைக் கொடுமைப் படுத்திக் கொண்டு இருப்பாள் வந்தவள். தான் மச்சானைக் கைப் பிடிக்க முடியாமல் போய் விட்டதை விட அவன் கொடுமைப் பட்டுக் கொண்டிருப்பது கண்டு கதறி கதறிக் அழுவாள். தன்னிடம் சிக்கியிருந்தால் கொஞ்சமாகக் கொடுமைப் படுவானே என்று எண்ணினாளோ என்னவோ! :)

இதில் பேசுவதற்குப் பல விசயங்கள் இருக்கின்றன. ஒன்று, பொழுதெல்லாம் பெண்ணுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன் போன்ற ஒருவர், கொடுமை ஆண்கள் மட்டும் செய்வதில்லை என்கிற தன் பாகுபாடற்ற மனத்தை அப்படியே வெளிக் காட்டியிருப்பது ஓர் உலக மகா அதிசயம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினால் மட்டுமே பிழைப்பு ஓடும் என்கிற மாதிரியான ஒரு சூழலில் இப்படியெல்லாம் யாராவது ஏதாவது சொல்லி விட்டால் நாம் அளவுக்கதிகமாகவே உணர்ச்சி வசப்பட வேண்டியுள்ளது. உலக எழுத்துக்களிலேயே உன்னதமானவை பிரசாரத்துக்காக எழுதப்பட்ட எழுத்துக்கள்தான் எனினும் அவை நடைமுறையை விட்டு மித மிஞ்சி விலகிப் போகையில் அவற்றின் நம்பகத் தன்மையையும் இழந்து விட வாய்ப்புண்டு என்பதைப் புரிந்துள்ள பிரச்சார எழுத்தாளர் இவர் என்பது பெருமையான ஒன்றுதான். இரண்டு, மாரியம்மாவே அவனைத் திருமணம் செய்திருந்தாலும் அப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருக்கலாம். திருமண உறவு என்பது அவ்வளவு சிக்கலானது. சில பெண்களை அவர்களுடைய கணவர்களுக்கும் சில ஆண்களை அவர்களுடைய மனைவிகளுக்கும் கொடுமைப் படுத்துவது அவ்வளவு அல்வாவாக இனிக்கும் (என் மனைவி இதை வாசிக்கிறாளா என்று தெரியவில்லை!). தன் கணவனை அல்லது மனைவியைக் கொடுமைப் படுத்தும் ஒரே காரணத்துக்காக ஒருத்தரைக் கொடுமைக்காரர் என்று சொல்ல முடியாது. இல்லையா?! :)

வீடு திரும்பிய மாரியம்மா தன் மச்சானை நினைத்து வீரிட்டு அழுவாள். அவளுடைய வீட்டுக்காரன் பாவம். தான்தான் தவறாக ஏதோ பேசிவிட்டோமோ என்று பயந்து நடுங்கி மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கூத்தாடி அவளைச் சரிக்கட்ட முயல்வான். அந்த வரியில்தான் சசி மனமுடைந்து அதைப் படமாக எடுக்க முடிவு செய்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல, காதற் கசக்கல்கள் எல்லாம் அனுபவித்திராததால் நம்மால் ஓரளவுக்கு மேல் அதற்காக மனம் உடைந்து போக முடியவில்லை.

தொடரும்...

வெள்ளி, அக்டோபர் 26, 2012

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 4/4


தொடர்ச்சி...

வக்கீல் ராகவன் பாத்திரம் சூப்பராக இருக்கிறது. பெரும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும்  இருப்பான். ரங்கா அவன் பற்றிச் சொன்னதும் 'ஐயரா?' என்று கல்யாணி கேட்பதுதான், கதையில் வரும் கதைக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளிலேயே முக்கியமான கேள்வி என்று நினைக்கிறேன். சரியோ தவறோ, ஒருத்தன் இப்படி என்று சொன்னதும் அவன் இன்ன ஆளா என்று கேட்பதுதானே நம் பரம்பரைப் பழக்கம்!? ராகவன் பற்றிய இளமைக் காலக் கதை அருமையாக இருக்கும். இந்த நாவல் படிக்கிற அளவுக்குப் படித்த முக்கால்வாசித் தமிழ் இளைஞர்கள் அது போன்றதொரு வாழ்க்கையைக் கனவு கண்டிருப்போம். அது பெரும்பாலும் ஐயர் பையன்களுக்கு மட்டும்தான் நனவு என்கிற நிலைக்குச் சென்றிருக்கும். மற்றவர்களுக்கெல்லாம் இளமைக் காலக் கனவாகவே இருந்து விடும். அல்லது பிள்ளைகளுக்கான பிளான் ஆகி விடும். "எந்த விஷயத்தையும் - எல்லா விஷயத்துக்குமே ஒரு ஆழமிருக்குமில்லையா? அந்த ஆழத்தோடதான் பேசுவான்..." என்கிற அவன் பற்றிய அறிமுகம் ஜெயகாந்தன் பற்றியது போலவும் இருக்கும். பெரிய வக்கீல் என்று சொல்லி அழைத்துச் செல்வான். நேரில் போய்ப் பார்த்தால் பங்கரை போல் இருப்பான். சிகரெட்டைப் போட்டு ஊதித் தள்ளுவான். அவனும் பயங்கர விபரமாகப் பேசிப் போட்டுத் தாக்குவான். "சட்டங்களுக்கு இருக்கிற ரொம்ப விசேஷமான அம்சம் என்னன்னா சட்டத்தையேகூட மாத்தலாம். ஆனா இன்னொரு சட்டம் மூலமாத்தான் மாத்தலாம்!" என்கிற மாதிரி முத்தாய்ப்பாகப் பேசும் அவனுடைய வசனங்கள் அவன் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை நேரடியாக வாசகனுக்கு உணர்த்துபவையாக இருக்கும்.

ரங்காவோடு அவன் ஆங்கிலத்திலேயே பேசிக் கொளல், வெளியுலகம் அறியாத அன்றைய கிராமத்து வாசகர்களுக்கு, "தமிழைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே!" என்று வாழும் நாம் வாழும் அதே நாட்டிற்குள்ளேயே அப்படியோர் உலகமும் இருப்பதை அறிமுகப் படுத்தியிருக்கும். அவனும் ஒரு கம்யூனிஸ்ட் என்பது அன்றைக்கு மிகப் பொருத்தமான பாத்திர அமைப்பு. தமிழகத்தின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் எல்லோரும் கம்யூனிஸ்ட்களாக இருந்த காலமும் ஒன்று உண்டு. இன்றைக்கு அத்தகையவர்கள் கம்யூனிஸ்ட்டாக இல்லை என்பது மட்டுமில்லை; அப்படி வழக்கறிஞர்களும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு விபரமான ஆட்கள் எல்லாம் அமெரிக்காவில் போய் சாப்ட்வேர் எழுத ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல், ராகவன் வீட்டில் இருக்கும் கார்ல் மார்க்ஸ் படத்தைக் காட்டி இவன் "யார் என்று தெரிகிறதா?" என்று கேட்பதும், இவளும் சரியாகச் சொல்லி விடுவதும் ஆசிரியரின் பால்ய காலக் கம்யூனிஸ்ட் தொடர்பை நினைவு படுத்துபவையாக இருக்கின்றன.

"விவாகரத்து செய்ய விரும்புபவர்கள் அதற்கென்று ஒரு திட்டவட்டமான காரணம் வைத்திருக்க வேண்டும். உங்கள் கேசில் அது என்ன?" என்று ராகவன் கேட்கும் போது, இந்தப் பார்ட்டிகள் ரெண்டும் திருதிருவென்று ஒன்றை மாற்றி ஒன்று பார்த்து விழிக்கும். அது அவ்வளவு வழக்குகளைப் பார்த்திருக்கும் அவனுக்கே பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். நமக்குக் குறைவாகவா இருக்கும்? இதெல்லாம் கண்டிப்பாக அவர்களுக்கு எப்படியோ, வேடிக்கை பார்க்கும் நமக்குக் கனவு  வாழ்க்கை போல இருக்கும். சில வலிகளுக்கு அப்படியோர் ஆற்றல் - வேடிக்கை பார்க்கையிலும் கனவாகக் காண்கையிலும் அவ்வளவு சுகமாக இருக்கும்!

ஆணை பலவீனமாகவும் பெண்ணை பலமாகவும் காட்டும் படைப்புகளுக்கென்று ஒரு மரியாதை இருந்து வருகிறது. பல வீடுகளில் உண்மையிலேயே ஆண்களை விட பெண்கள் பலமானவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லது, நாம் நினைக்கும் அளவுக்கு ஆண்கள் பலமானவர்களும் இல்லை; நாம் நினைக்கும் அளவுக்கு பெண்கள் பலமற்றவர்களும் இல்லை என்பதைச் சொல்ல முயன்றதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இலக்கியம் என்றால், அப்படி எல்லாம்தானே இருக்க வேண்டும். எப்படி எல்லாம்? சிறிதைப் பெரிதாக்கி... அல்லது, பாதி உண்மையை முழு உண்மையாக்கி... அழுத்தி அழுத்திப் பேசுவதன் மூலம் அதையே உண்மையாக்குவது! அதுவும் நல்லதுக்குத்தானே செய்கிறார்கள்.

ஆணின் தாழ்வு மனப்பான்மை அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. திருமணம் வரை அல்லது முதன்முறையாகப் பெண்ணொருத்தியோடு இணையும் வரை ஆண்கள் அளவிலாத தாழ்வு மனப்பான்மையோடே அலைகிறார்கள். பெண்கள் இந்த உலகமே தன்னைக் கண்டு வழிகிறது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்களில் அதன் பின்பு எல்லாமே தலை கீழாகி விடும். ஓர் ஆண் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பினும் இந்த உணர்சிகளோடேதான் திரிவான். சிலர் திருமணத்துக்குப் பின்னும் இந்த மனப்பான்மையை விட முடியாமல் தவிப்பார்கள். வெளியில் மட்டும்தான் அப்பாட்டக்கர் போலக் காட்டிக் கொள்வதெல்லாம்.

இவன் பிரச்சனைக்குரிய மாதிரிப் பேசும் போதெல்லாம் கல்யாணி ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக் குழப்பும் திறமை அவளுடைய முதிர்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது. அது எல்லாப் பெண்களுக்கும் (அல்லது ஆண்களுக்கும்) கை வந்த கலை அல்ல. ரங்கா மட்டுமல்ல, நாமுமே இதற்கு என்னதான் பொருள் என்று மண்டையைக் குடையும் விதமாக இருக்கும். அந்த வகையில், இருவருமே பெரும் அறிவாளிகள்தாம் - விபரமானவர்கள்தாம். ஆனால், அறிவாளியாக இருப்பது மட்டுமே சுமூகமான மண வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்பதும் அந்தக் காலத்திலேயே நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், கொஞ்சம் விபரம் குறைவானவர்களாக இருந்திருந்தாலே போதும், அவர்கள் மண வாழ்க்கை சுமூகமாக இருந்திருக்கும்!

"வர்க்கங்களும் ஜாதிகளும் இனபேதங்களும் அழிந்து போனாலும் தனி மனிதர்களின் தனி வாழ்வில், அந்தரங்கமான அகவாழ்வில் அவற்றின் தன்மைகள், அவற்றின் பாதிப்புகள் கொஞ்ச காலத்திற்கு - ஏன் வெகு காலத்திற்கு - ஏற்பட்டுக் கொண்டுதானிருக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது" என்ற வரிகள் அன்றைய ஜெயகாந்தனின் இடதுசாரிச் சிந்தனையோடு வந்திருந்தாலும், இன்று அதை இப்படிப் பொதுப் படையாகச் சொல்லிக் கொள்ளலாம்: "உலகப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டாலும் இந்தப் பிரச்சனை மட்டும் என்றைக்கும் முடியாதப்பா!".

அடுத்ததாக, "ஆணும் பெண்ணும் சமம் என்பதும் மனிதர்கள் எல்லாரும் ஒரே நிறை என்பதும், உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவினின்றும் தோன்றுகிற அதன் அம்சங்களே என்பதும் - ஜனநாயக நாகரிகம், சோஷலிசம், அத்வைதம் என்று இவற்றுக்கு என்ன பெயர் கூறினாலும் - இவை எல்லாமே வாழ்க்கையை அறிவாலும், அறிவு சார்ந்த மனத்தாலும் புரிந்து கொள்ளுகிற, அவ்விதம் ஆக்குகிற முயற்சிதானே தவிர, சமம் எனப்படுபவை எல்லாம் இரண்டும் ஒன்று என்றாகிவிடாது. முரண்படுவதும், ஒத்திசைவதும் பொதுவான இயற்கையின் இயல்பாக இருக்கையில், சமம் என்ற மனோபாவத்தினால் மட்டும் முரண்பாடுகளே இல்லாமற் போய்விடுகிறது என்பது கற்பனை அல்லவா?" என்று கல்யாணியோடு தன்னை ஒப்பிட்டுத் தாழ்த்திக் கொள்ளும் ரங்காவின் மூலம் ஆசிரியர் ஒரு பெரும் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு ட்ரேட்மார்க் ஜெயகாந்தன் விதம். சாதி பற்றிச் சொல்லும் போது கூட இப்படித்தான் சொல்வார். அதன் பொருள், அந்தச் சமமின்மை (அல்லது ஏற்றத்தாழ்வு) வேண்டும் என்பதல்ல. அது இருக்கிறது என்பதை மட்டும் அழுத்தமாகச்ச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். சாதி வேறுபாடு இல்லாமல் போகக்கூட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ஒருவேளை, வெள்ளைக்காரர்களைக் காப்பி அடித்து நாமும் அதெல்லாம் இல்லாமல் செய்யும் காலம் வரலாம். ஆனால், எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் போகும் நாள் சாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு வெள்ளைக்காரர்களே இன்னும் முன்னுக்கு வரவில்லை. அப்புறம் எப்படி அது சாத்தியம் ஆகும்? அப்படியே ஒரு பேச்சுக்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லாமல் போய் விட்டாலும் கூட, வேறுபாடுகள் என்பது இருந்துதானே தீரும்.

"பசிக்கிறபோது தன் பசியளவு வேட்டையாடித் தின்று மிச்சத்தைத் திரும்பிப் பாராமல் ஒதுக்கிவிட்டுத் திரிந்தலையும் கம்பீர இயல்பு பொருந்திய சிங்கமும் பிணத்தையே மேய்ந்து, அழுகலையே தின்று அதிலேயே உழலும் கழுதைப் புலியும் - மிருகம் என்கிற பொதுவான பிரிவின் பொதுவான பிறப்பு, இறப்பு, உயிர் தரிப்பு, வம்ச விருத்தி, நாலு கால், ஒரு வால் என்கிற பொதுத்தன்மைகளினால் மட்டுமே ஒன்றாகிவிட முடியுமா?" என்று மேலும் அந்த வாதத்தை நீட்டுகிறார். ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகக் கொடி பிடிக்கும் இடதுசாரியாக இருந்ததாலோ என்னவோ அந்த விசயத்தில் அளவிலாத ஈடுபாடு கொண்டிருக்கிறார். அது எதுவுமே அதைத் தூக்கிப் பிடிக்கும் ஆளாக இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அல்ல. அது பற்றியே நிறையச் சிந்தித்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது அது.

"ஆம்பளை எல்லா விசயத்திலேயும் வீரனா இருந்தாலும் பொம்பளைங்க விசயத்திலே அம்பேல்தான்..." என்று நக்கலடித்துச் சிரிக்கும் சின்ன நைனா, அவ்வப்போது இப்படி ஏதாவது உதிர்த்துக் கொண்டே இருக்கிறார். சென்னை எத்தனைதான் பெரிய மாநகரமாக இருந்தாலும் அதற்குள்ளும் எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன. அந்தக் கிராமங்களின் உயிராக இருப்பவர்கள் இந்தச் சின்ன நைனாக்கள்தாம். "போட்டியிலேதான் இருக்குது பொம்பளைங்க ஆசை, பாசம் எல்லாம்!..." என்று ஒரு பெரிய ரோசனை வேறு சொல்வார். அதாவது, சைடில் ஒன்று வைத்துக் கொண்டால்தான் மனைவிமார் பயத்தில் கூடுதல் பாசத்தைக் கொட்டுவார்கள் என்பதுதான் அதற்கான பொழிப்புரை. அது அன்றைக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். இப்போது சிறிது மாறி விட்டது. கலியாணத்துக்கு முன்பு அப்படியெல்லாம் பிலிம் போட்டு ஓட்டிக் கொள்ளலாம். ஒருத்திக்குப் பிடிக்கிற மாதிரி இடம் பிடித்து விட்டால் போதும், அவளைச் சுற்றியிருக்கிற எல்லோரும் போட்டா போட்டியில் சுற்றிச் சுற்றி வருவார்கள். மனைவியோடெல்லாம் அதெல்லாம் எடுபடாது. "போடா ங்கொய்யாலே!" என்று கிளம்பிப் போய் விடுவார்கள்.

"யோசிக்கிறதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். பேச வேண்டாத எவ்வளவோ விஷயங்களை யோசிக்கிறோம், பேசினதையே திரும்பத் திரும்ப யோசிக்கிறோம் - பேசக் கூடாததைக் கூட யோசிக்கிறோம் - பேசிப் பிரயோசனம் இல்லேன்னு கூடச் சில சமயத்திலே யோசிக்க வேண்டியிருக்கு" என்று நிறுத்தி நிறுத்தி மாற்றி மாற்றிச் சொன்னான் என்று ரங்கா சொல்வதாக வரும் வரி, சொற்களின் சோடனையாக மட்டும் இல்லாமல் உண்மையாகவே நாம் எப்படியெல்லாம் பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம் என்று சரியாகச் சொல்கிறது. ஒரு வேலையும் இல்லாமல் உட்கார விட்டால், இதைத்தான் நம்மில் நிறையப் பேர் செய்கிறோம். வேலை நிறைய இருந்தாலும் இதற்கென்று நேரம் ஒதுக்கியும் சிலர் இதெல்லாம் செய்கிறோம்! :)

கடைசியில் கல்யாணி படுத்த படுக்கையாய் விழுகையில் அண்ணாசாமி போய் ரங்காவை அழைத்து வரும் காட்சி மனதைத் தொடுகிறது. எது எப்படியோ, சரியாக எப்போது வர வேண்டுமோ அப்போது வந்து இணைந்து விடும் ரங்கா கடைசியில் ஓரளவு நம் வெறுப்பில் இருந்து தப்பி விடுகிறான்.

கதை முடிந்த பின்பு, பின்கதை என்ற பெயரில் முடித்து வைக்கப் படாத மிச்சத்தையும் சொல்லி முடித்து விடுகிறார். வார இதழில் தொடராக எழுதிய போது, கடைசி வாரத்துக்கு அடுத்த வாரத்தில், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக இதையெல்லாம் செய்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பின்கதை: 1. அக்கா புருசனைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்த சுமதி நல்ல வேலையில் அமர்ந்து, அங்கொருவரைக் கரெக்ட் பண்ணி (அல்லது பண்ணப் பட்டு) காதல்த் திருமணம் செய்து கொள்வாள். தமிழ் நாட்டில் காதற் திருமணங்களின் ஆரம்ப காலமாக இருக்கும் போலத் தெரிகிறது! 2. கல்யாணியைப் போல் வாழ்க்கையை நாடகமாகப் பார்க்க வேண்டுமென்று புரிந்து கொள்வான் ரங்கா. இந்தக் கதையின் மூலம் சொல்லப் பட்டிருக்கும் மிகப் பெரும் தத்துவம் அதுதான். 3. ரங்காவின் மகள் இந்து, இரு பெற்றோருக்குப் பிள்ளையாகி விடுவாள். ரங்கா-கல்யாணி தம்பதிக்கும் அவளுடைய சித்தி சுமதி மற்றும் அவளுடைய கணவன் தம்பதிக்கும்!

ஆனால், கல்யாணி கடைசியில் படுக்கையில் இருந்து எழுந்தாளா இல்லையா என்று சொல்லாமலே கதையை முடித்து விட்டது பல கேள்விகளை எழுப்புகிறது. இது கதைக்கு வலுச் சேர்ப்பதற்காக விடப் பட்டதா? அது கதையின் முடிவுக்குச் சம்பந்தமில்லாதது என்று விடப்பட்டதா? சுபம் சொல்லி முடிப்பது சினிமாவுக்கு மட்டுமான சூத்திரமாக இருக்கட்டும் என்று விடப் பட்டதா? வேண்டிய நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்து விட்டாலும் அவன் படுத்திய பாட்டில்தான் அவள் வீழ்ந்தாள் என்பதை நினைவில் இருந்து அகல விடக் கூடாது என்று விடப் பட்டதா? இவை எல்லாமுமா? இத்தோடு இன்னும் சிலவுமா?

எது எப்படியோ, இது எல்லாமே காலம் கடந்தும் பேசப் படும்!

முற்றும்.

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

பாரதியார் கட்டுரைகள் - 1/N

பாரதியை அவன் அவன் என்று அடிக்கடிச் சொல்வதற்காக எங்கள் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுயம்பு அவர்கள் அடிக்கடிக் கோபப் பட்டுக் கொள்வார் என் மேல். "நீ என்னடா பெரிய பெரிய ஆளுகளை எல்லாம் அவன்-இவன் என்கிறாய்?!" என்பார். எனக்கோ அந்தக் குற்றச்சாட்டு ஆச்சரியமாக இருக்கும். தமிழ் நாட்டில் பாரதியை அவர்-இவர் என்று பேசுபவர்களை விட அவன்-இவன் என்று பேசுபவர்கள்தாம் அதிகம் என்றெண்ணுகிறேன். அதெப்படி அவர் காதில் விழாமல் போனது என்பது என்னுடைய ஆச்சரியம். ஒருவேளை ஒரு சில குறிப்பிட்ட முகாம்களில் மட்டும் அந்தப் பழக்கம் அதிகமோ என்னவோ. நான் பார்த்தவரை, மற்ற எல்லோரையும் விடக் குறிப்பாகப் பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் அவரை அதிகம் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பாரதியை எப்போதும் அவன்-இவன் என்றுதான் விளிக்கிறார்கள். அடுத்த படியாக இலக்கியவாதிகள்-கவிஞர்கள் கூட்டம். அவர்களும் அப்படியே செய்கிறார்கள். சிறு வயதிலேயே இறந்து விட்டதாலோ என்னவோ நிறையப் பேருக்கு எளிதாக அப்படி வாயில் வந்து விடுகிறது. ஒருவேளை அவர் மீதான கூடுதல் உரிமையும் காரணமாக இருக்கலாம். 

இந்த நூலின் பதிப்புரையும் அப்படித்தான் 'அவரை' 'அவன்' என்று விளித்தே ஆரம்பிக்கிறது. "அவனுடைய கவிதைகள் மக்களிடம் பரவி பாதிப்பை ஏற்படுத்திய அளவில் அவனுடைய ஏனைய எழுத்தோவியங்களான கட்டுரைகளும், கதைகளும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை எனலாம்" என்று சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிக்கும் போது ஓர் உணர்ச்சி மிக்க கவிஞனாகத்தான் தெரிகிறார். உணர்ச்சி ததும்பக் கவிதை எழுதும் நிறையப் பேரைப் பார்த்து, சொற்களைக் குவிப்பது மட்டும் அறிவாற்றலின் அடையாளம் ஆகாது என்கிற மாதிரி முடிவுகளுக்கெல்லாம் வந்து விட்ட பின்பு, அவருடைய கவிதைகளை மட்டும் படித்து விட்டுப் பேசும் போது, பாரதி மீதான மதிப்பீடும் அப்படித்தான் ஆகி விடுகிறது. இந்தக் கவிதைகளை மட்டும் வைத்து எப்படி அவரை அவ்வளவு பெரிய அறிவாளி என்று சொல்கிறார்கள்; தாகூரோடு எல்லாம் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்ற ஆச்சரியக் குறியுடனான கேள்வி அவ்வப்போது வந்து செல்வதும் உண்டு. 

வடமொழியை விடத் தமிழ்தான் உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டிருப்போர் போலவே தாகூரைவிட பாரதிதான் பெரிய அறிவாளி என்றும் ஒருசாரார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் அந்தப் பட்டியலில் சாரு நிவேதிதா கூட இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். அது உண்மையா-பொய்யா அல்லது சரியா-தவறா என்றெல்லாம் பேசுகிற அளவுக்கு பாரதியையும் படித்ததில்லை; தாகூரையும் படித்ததில்லை (வடமொழி-தமிழ் விவகாரத்தில் கருத்துச் சொல்லும் அளவுக்கு வடமொழியும் கற்றதில்லை; தமிழும் கற்றதில்லை என்பது போலவே!). ஆனால், பாரதியின் கட்டுரைகளைப் படிக்கும் போதுதான் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தார் என்பதே சரியாகப் புரிபடுகிறது. இதன் பொருள் அவருடைய கவிதைகள் வலுவற்றவை என்பதல்ல. கவிதைகளை விடக் கட்டுரைகளில்தான் முழுமையாக அவற்றின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிற குழுவில் நான் இருக்கிறேன். அவ்வளவுதான். அது அவருடைய கோளாறு அல்லவே அல்ல. அப்படியிருந்தால் இத்தனை கோடித் தமிழரை அவருடைய கவிதைகள் அந்த அளவு பாதித்திருக்க முடியாதே! 

உலக இலக்கியத்தில் கவிதைகளின் வீழ்ச்சியும் உரைநடையின் வீச்சும் அந்த அளவுக்கு இருக்கிறது. உலகமயமாக்கல் (இந்த உலகமயமாக்கலுக்கு மன்மோகன் சிங் அல்ல பொறுப்பு!) கவிதையையே - இன்னும் சரியாகச் சொல்லப் போனால், செய்யுளையே - தம் இயல் இலக்கிய வடிவமாகக் கொண்ட தமிழர் நம்மையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் பாரதிக்கு ஒரு பெரும் பங்கு இருந்திருக்கிறது என்பது அவருடைய கட்டுரைகளைப் படிக்கும் போது நன்றாகப் புரிகிறது. அவருடைய கட்டுரைகளைப் படிப்பது இதுதான் முதல் முறை என்றில்லை. பள்ளிக் காலங்களிலும் கூடச் சில கட்டுரைகள் படித்த நினைவு வருகிறது. அப்போதே அவருடைய கட்டுரைகளில் இருந்த வடமொழிக் கலப்பு பற்றி யோசித்ததும் உண்டு. அதை முழுமையாகப் படித்து யோசித்துப் பார்க்கும் வாய்ப்பு இம்முறை கிடைத்தது. அது ஓர் இடைக்காலத்தில் பெரிதும் மதிக்கப் பட்ட - கவர்ச்சிகரமான நடையாக இருந்தது என்பதை எம் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியை திருமதி. பிச்சம்மாள் அவர்கள் (தமிழ் மீதான ஆர்வத்துக்கு அன்றன்றைக்கு ஒருவர் காரணம் என்றால், அன்றைக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் அவர்!) அடிக்கடிச் சொல்லிக் கேள்விப் பட்ட நினைவு இருக்கிறது. அதன் பெயர் கூட மணிப்பிரவாள நடை என்பார். பெயரே தமிழை விட்டு அவ்வளவு விலகிப் போயிருக்கிறதே! 

பாரதியின் நடையும் மணிப்பிரவாள நடையாக இருந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அவருடைய பின்னணி ஒரு முக்கியக் காரணமாக இருக்கக் கூடும். அவருடைய இளமைக்காலக் காசி அனுபவம் இன்னொரு காரணமாக இருக்கலாம். அதன் விளைவாக பின்னர் அவர் வெளி மொழிகளில் வெளி வந்த பல இதழ்களையும் படித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கவிதையில் அவ்வளவு தமிழ் இருந்த போது, உரைநடையில் மட்டும் அப்படி ஆனதற்கு அன்றைய பொழுதில் அந்த நடைக்கு இருந்த மரியாதை ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைக்கு ஆங்கிலச் சொற்கள் சொல்லாமல் சில விசயங்களைப் புரிய வைக்கவே முடியாது என்று இருக்கிற உயர்நடு மற்றும் மேற்தட்டு மக்களைப் போன்ற ஒரு கூட்டம் அப்போது வடமொழியைப் பற்றிக் கொண்டு இருந்திருக்கலாம். அல்லது கவிதைகளைப் பொது மக்களுக்கும் கட்டுரைகளை அப்படிப் பட்டவர்களுக்கும் என்று பிரித்தெழுதும் சூட்சுமம் கொண்டிருந்திருக்கலாம் ("கவிதைகளில் நறுக்குத் தெறித்தாற்போல சுருக்கமாகச் சொல்லிய நெருப்புப் பொறிகளுக்கு விரிவான இலக்கியமாக அவனுடைய கட்டுரைகள் அமைந்துள்ளன" என்றும் பதிப்புரை சொல்கிறது!). அல்லது உண்மையாகவே அன்றைய பொழுதில் அதுதான் உரைநடைக்கான பொதுவான நடையாக இருந்திருக்கலாம். 

எது எப்படியோ திராவிட இயக்கத்தின் புண்ணியத்தில் (அவர்கள் செய்த சில புண்ணியங்களில் இதுவும் ஒன்று!) இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் எவ்வளவோ மாறி விட்டிருக்கிறது. அப்படியான ஒரு நடைக்குப் பழக்கப் பட்டுப் போன நமக்கு இந்த நடை முற்றிலும் சிரமமளிப்பதாக இருக்கிறது. சிரமம் என்பதை விட தடையற்ற வாசிப்புக்குத் தொல்லையாக இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அதுவும் அவர் குற்றமில்லை. காலம் செய்த கோலமடி; கடவுள் செய்த குற்றமடி என்று முடித்துக் கொள்ளலாம். பதிப்புரையே அது பற்றியும் சொல்கிறது. "வடமொழிக் கலப்புடன் அமைந்த வலிமையான உரைநடை" என்கிறது. அந்த அளவுக்குக் கலந்தால் இன்று அதை வலிமை என்று சொல்வோமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்த திராவிட இயக்கத்துப் பெரும்பிடுகுகள் கூட சில பேர் தம் பெயரை மட்டும் முழுமையான வடமொழியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வடமொழி என்று கூடத் தெரியாமல் வைத்துக் கொண்டார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் (சந்ததியரை இந்தி வகுப்புகளுக்கு அனுப்பியதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களைப் போல இதற்கும் ஒரு விசித்திரக் காரணம் இருக்கவும் கூடும்!). அந்த அளவுக்கு வடமொழி நம்மில் கலந்து விட்டது என்பதைத்தான் அது காட்டுகிறது. அவர்களும் கூட நாடு என்று சொல்லாமல் தேசம் என்று சொல்லித்தான் தம் பேச்சில் வலிமை சேர்க்கிறார்கள். ஆனாலும், கணிதமும் விஞ்ஞானமும் பௌதீகமும் ரசாயனமும் சரித்திரமும் பூகோளமும்... கணக்காகவும் அறிவியலாகவும் இயற்பியலாகவும் வேதியியலாகவும் வரலாறாகவும் புவியியலாகவும் மாறியிருக்கிறது என்றால் அதற்கு அவர்களும் காரணம் என்றே நினைக்கிறேன். 

இசையைப் போல நாடகத்தைப் போல இயற்றமிழும் மேற்தட்டிடம் மட்டும் மாட்டிக் கொண்டிருந்த காலத்தில், அத்தனை கோடிப் பேரிடம் தமிழை எடுத்துச் சென்ற பாரதியின் உரைநடையிலேயே தமிழ் முழுமையாக இல்லை என்பதும் அவருடைய காலத்துக்குப் பின்னும் தமிழ் எவ்வளவு சுத்திகரிக்கப் பட்டுள்ளது என்பதும் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. கட்சியைக் கக்ஷி என்பதில் ஆரம்பித்து... உபாஸனை, ஸ்வதந்திரம், ஸபை, ஸங்கம், ஸத்யம், யோஜனை, லக்ஷம், க்ஷவரம், மனச்சாக்ஷி, பரீக்ஷை, ஸ்திரீ, போஜனம், ஸித்தி, ஸூர்யன், ஸம்ஸ்கிருதம், பாஷை, ஸம்பத்து, ஸாதாரணம், ஸாரம், ஸர்வம், ஸனாதனம், சமத்வம், ஸரி, ஸுகம், மாஸம், ஸமானம், ஸாமான்ய, ஸாங்கியம், ஸ்வாமி, ஸத்து, ஸ்வதர்மம், ஸாதிப்பது, ஸமாதானம், ஸம்மதம், ஸமீப, ராஜதானி என்று புளிக்கப் புளிக்கப் போட்டுத் தாக்கியிருக்கிறார். இது ஓர் எடுத்துக்காட்டுக்குச் சொன்னது. இன்னும் இது போல எத்தனையோ சொற்கள்.

இது போன்ற விசயங்களில் ஆர்வம் இருக்கிற யாராவது ஒருவர் இந்தச் சொற்களை மட்டும் பிரித்தெடுத்து, "பாரதியின் உரைநடையில் இருக்கும் வடமொழிச் சொற்கள்" என்றோர் ஆய்வே செய்யலாம். இதில் இன்னொரு பயனும் இருக்கும். நமக்கே தெரியாமல் எத்தனை வடமொழிச் சொற்கள் நம் மொழியுள் ஊடுருவி இருக்கின்றன என்பது புரிபடும். அவையும் அதற்கு முந்தைய காலத்தில் தமிழில் இருந்து வடமொழிக்குப் போனவையே என்று நிரூபிக்கவோ அல்லது போனவையா என்று இன்னோர் ஆய்வைத் தொடங்கி வைக்கவும் கூட உதவியாக இருக்கும். மனிதர் வடமொழிச் சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே வம்புக்கென்றே அப்படி எல்லா இடங்களிலும் போட்டிருப்பது போலத் தெரிகிறது. வடமொழி மீது நிறைய மரியாதை வைத்திருந்திருக்கிறார். அதை அவர் யாருக்கும் பயந்து மறைக்கவும் இல்லை. அதே வேளையில் தன்னைத் தமிழனாகவே பெரும் பெருமையோடு அடையாள படுத்திக் கொள்கிறார். அதையும் யாரையும் ஏமாற்றுவதற்காகச் சொல்லும் அயோக்கியத்தனத்தோடு சொல்வது போலத் தெரியவில்லை.

அது மட்டுமில்லை. ஆங்கிலத்தை இங்கிலீஷ் என்றே சொல்கிறார். அமெரிக்கரை யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர் என்கிறார். திடீரென்று ப்ரெஸ்டீஜ் என்று அப்படியே அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். திருஷ்டாந்தமாக என்கிற சொல்லை அடிக்கடிச் சொல்கிறார். சொற்களில் மட்டுமல்ல. அவருடைய கருத்துக்களிலும் வேற்றுப் பண்பாடுகள் பற்றியும் மனிதர்கள் பற்றியும் நிறைய இருக்கிறது. அதுதான் அவரைக் குண்டுச் சட்டிக்கு வெளியில் போய் குதிரை ஓட்டியவராகக் காட்டுகிறது. மேற்கத்திய, கிழக்கத்திய, வட இந்திய எடுத்துக்காட்டுகள் நிறையச் சொல்கிறார். இவையெல்லாம் சொல்கிற இன்னொரு விசயம் என்னவென்றால், எந்த மொழிக்கும் புதுமையான நடை என்று முற்றிலும் புதிதான ஒன்றைக் கொண்டு வரும் பெரும்பாலானவர்கள் வேற்று மொழித் தொடர்பும் வாசிப்பும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக பாரதியை மேலாகக் காட்டுவது, இத்தனையையும் அவர் எழுதியது தன் முப்பத்தி ஒன்பது வயதுக்கு முன்பு என்கிற செய்தி. தாகூரோடு ஒப்பிடுவோருக்கு இன்னொரு குறிப்பு: முப்பத்தி ஒன்பது வயதில் தாகூர் என்ன சாதித்திருந்தார் என்று ஒப்பிட்டுப் பேசலாம்... ஆராயலாம்.

தாகூர் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார். நல்ல மரியாதையும் கொண்டிருந்திருக்கிறார். அடிக்கடி அவரைப் பற்றிப் பெருமையாக ஏதாவது சொல்கிறார் (பின்னாளில் அவரோடு தான் ஒப்பிடப் படுவோம் என்று தெரிந்திருந்தால் ரெண்டு திட்டியிருக்கலாம் என்று ஆய்வுகள் எதுவும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை!). உலகத்திலேயே தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டவர் என்கிறார். அவர் ஜப்பான் நாட்டில் ஆற்றிய உரையைத் தமிழில் எழுதுகிறார். வங்கமொழியில் எழுதிய கட்டுரை ஒன்றை மொழி பெயர்த்து எழுதுகிறார். இப்படியாகத் தாகூரை அதிகம் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ய முயன்றதாலும் அவருடைய சில பேச்சுக்களையும் எழுத்துக்களையும் பற்றி விலாவாரியாகப் பேசியதாலும் கூட அவரைப் போலவே இவரும் வந்து விடுவார் என்று எல்லோரும் எண்ணியிருக்கக் கூடும்.

தத்துவம், மாதர், கலைகள், சமூகம் என்று மொத்தம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது நூல். இது மட்டும் ஏன் தத்வம், ஸ்திரீ, கலா, ஸமூகம் என்றில்லை என்றொரு சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை! அதற்குக் காரணம், அவருடைய கட்டுரைகளைத் தொகுத்தவர்கள் இட்ட தலைப்புகள் இவை. பாரதியின் உரைநடைகளை முழுமையாகத் தமிழ் படுத்தும் வேலை என்றே ஒன்று நடந்ததாகக் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். மனிதர் அந்த அளவுக்குப் படுத்தியிருக்கிறார்.இந்த நூலைப் படிப்பதன் மூலம் இவை நான்கும்தான் அவருடைய மனதுக்கு வேண்டிய விசயங்களாக இருந்திருக்க வேண்டும் என்று புரிபடுகிறது. 

தொடரும்...

திங்கள், அக்டோபர் 08, 2012

கருத்துப் பஞ்சமா?

கொஞ்ச காலம் முன்பு, இசைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்து, சிங்கப்பூர் வந்தபின் எப்படிக் கொஞ்சம் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன் என்றும் அதன் பின்பு இசை பற்றிப் பல கருத்துகள் உருவாகி இருப்பது பற்றியும் எழுதியிருந்தேன். அது பற்றிப் படிக்க இங்கே சொடுக்குங்கள். அது போலவே, தீவிர வாசிப்பு இதுவரை ஆரம்பமாகவில்லை. இப்போதுதான் ஓரளவுக்கு வாசிக்கலாம் என்று பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். அதற்குள்ளாகவே வாசிப்பிலும் சில சுவாரசியமான அனுபவங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. அப்படியான ஒரு முக்கியமான அனுபவம் - குறிப்பிட்ட சில தகவல்களைத் திரும்பத் திரும்பப் பல நூல்களில் காண முடிகிறது. மொத்த உலகத்திலும் இவ்வளவுதான் கருத்துக்களா என்று தோன்றும் அளவுக்குச் சில தகவல்களும் கருத்துக்களும் திரும்பத் திரும்பக் கண்ணில் படுகின்றன. அப்படியாகக் கடந்த சில வாரங்களில் அடிக்கடிக் கேள்விப் பட்ட ஒரு சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன்:

1. ஜெயகாந்தன் பற்றி நான் தெரிந்து வைத்திருப்பது அதிகமில்லை. ஆனால் அவர் பற்றி அறிந்து கொள்ள முயன்று தேடித் பார்த்த போதெல்லாம் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிற சில தகவல்களே திரும்பத் திரும்ப வந்து விழுந்தன. சென்ற வாரம் அவர் பற்றிய ஆவணப் படம் பார்த்த போது கூட அது போலச் சில தகவல்கள் கிடைத்தன. அது பற்றிய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். இவ்வளவு பெரிய சமுத்திர இணையத்தில் இப்படி நடப்பது மகா ஆச்சரியமாக இருக்கிறது.

2. அது போலவே எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பற்றித் தேடிய போதும் ஏற்கனவே வேறு மூலங்களின் மூலமாகக் கேள்விப் பட்டிருந்த சில தகவல்கள் மற்றும் அவருடைய கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வந்தன.

3. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விழைந்து, சோம்பல் காரணமாக சில காணொளிகள் கண்டேன். முதலில் பார்த்தது, தமிழருவி மணியன் அவர்கள் காமராசர் பற்றி நிகழ்த்திய உரை ஒன்று. அடுத்ததாக நெல்லை கண்ணன் அவர்கள் காமராசர் பற்றி நிகழ்த்திய உரை ஒன்று. இரண்டிலுமே சில பொதுத் தகவல்கள். இதன் பொருள் பெரியவருடைய வாழ்வில் வேறு பெரிய நிகழ்வுகளே இல்லை என்பதில்லை. அப்படியொரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவருடைய மகானின் வாழ்வில் சுவாரசியமான கதைகளுக்கும் அனுபவங்களுக்குமா பஞ்சமிருக்க முடியும்? பின் ஏன் அப்படி?

4. இதுதான் இதுவரை பார்த்த அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்றது. கடந்த சில வாரங்களாக இரு முற்றிலும் வேறுபட்ட நிறமும் குணமும் மொழியும் கொண்ட நூல்களைப் படித்து வருகிறேன். ஒன்று, தமிழில் பாரதியார் கட்டுரைகள் என்ற நூல். இன்னொன்று, ஆங்கிலத்தில் நெப்போலியன் ஹில் என்பாருடைய THINK AND GROW RICH. பாரதியார் பார் அறிந்த ஒரு பக்கா இலக்கியவாதி. ஆன்மீகமும் இலக்கியமும் அரசியலும் பேசும் தேசபக்தர். நெப்போலியன் ஹில் சுய முன்னேற்றம் மற்றும் நிர்வாகவியல் பேசும் அமெரிக்க முதலாளித்துவவாதி. முதல் நாள் இரயிலில் போகும் போது நெப்போலியன் முகமது நபி பற்றிப் பேசும் ஒரு நிகழ்வைப் படித்து விட்டு வீடு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, மறுநாள் காலை வீட்டில் பாரதியார் கட்டுரைகளை எடுத்துப் பார்த்தால், அதே நிகழ்வை அதே சொற்களில் ஆனால் வேறொரு மொழியில் எழுதியிருக்கிறார் நம்மவர். ஆடிப் போனேன். இருவரும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர் என்பதைத் தவிர அவர்களுக்கிடையில் ஒற்றுமை என்று வேறெதுவும் சொல்வதற்கில்லை. அப்படியிருக்க இதெப்படி சாத்தியமாயிற்று? நெப்போலியன் ஹில்லின் நூலைப் படித்துத்தான் பாரதியார் இதை எழுதியிருக்க வேண்டும் என்று யாராவது வம்பை இழுத்து வைக்காதீர்கள். 

சொல்வதற்கிருக்கும் சரக்கு மொத்த உலகத்திலும் இவ்வளவுதான் என்பதை விட, ஏதோவொரு வகையில் என் வாசிப்பில் ஒரு தினுசு (PATTERN) உருவாகி விட்டதோ (அப்படி இருக்க விடவே கூடாது என்று வலிந்து முயன்றும்) என்ற அச்சம் வருகிறது. பழியை வேறு யார் மீதாவது போட வேண்டும் என்று வேலைக்கு வந்த பின் படித்த பாடத்தின் படிப் பார்த்தால், அதிக பட்சம் அதை இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மீது போடலாம். "மெனக்கெட்டு நூல்களை எடுத்து வாசித்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிராது தம்பி; நோகாமல் நொங்கு தின்ன முயன்றதால் வந்த வினை; எல்லாம் பழைய நொங்காக இருக்கிறது!" என்று யாரோ சொல்வதும் கேட்கிறது. அதுவும் கூட நான்காவது மேட்டருக்குப் பொருந்தாதே!

இது பற்றி நீங்க என்ன சொல்றிங்க?

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 3/4

தொடர்ச்சி...

கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் முன் எல்லா சராசரி ஆணையும் போலவே தன் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பவளாக இருப்பது தனக்குப் பின்னர் பிரச்சனையாக மாறி விடுமா என்று யோசிக்கிறான் ரங்கா. ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலும் கவர்ச்சியும் கொண்டு அவர்களுக்கும் கூட திருமணத்தை நெருங்கும் பொழுதில் துளிர் விட ஆரம்பிக்கும் வேறுபாடுகள் நன்றாக விவரிக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாகப் பெண்கள் மட்டுமே திரும்பத் திரும்ப இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வதைப் பார்க்கவும் கேள்விப் படவும் செய்திருக்கிறோம். இந்தக் கதையில் வித்தியாசமாக ஆண்மகன் அதைச் செய்கிறான். "நீ என்னை உண்மையிலேயே விரும்புகிறாயா? இன்னமும் காதலிக்கிறாயா?" என்கிற மாதிரித் திரும்பத் திரும்ப அவளிடம் கேட்க வேண்டி அவனுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான். அந்தக் கேள்வி ஒன்றே அவர்களுக்குள் பெரும் இடைவெளியை உண்டு பண்ணுகிறது. "உனக்காக நான் எல்லாத்தையும் விட்டு விட்டு வந்தேன்; நீ என்ன எனக்காக விடுகிறாய்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கடுப்படிக்கிறான். அழகும் அறிவும் முதிர்ச்சியும் பெற்ற ஒரு நடிகையைக் கலியாணம் செய்து கொண்டதால் ஒருவேளை அவனுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். ஆண்களுக்கும் அது போன்ற சிந்தனைகள் வரத்தான் செய்யும் என்பதையும் இந்தக் கதை நினைவு படுத்துகிறது. அது மட்டுமில்லை, இதை ஒரு கதையில் படிக்கும் போது வேடிக்கையாகப் பார்க்கிற-பேசுகிற நாம், அவனுடைய இடத்தில் இருந்திருந்தால் அப்படியேவோ அதை விடக் கொடூரமாகவோ கூட இருந்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கல்யாணியின் சித்தி மகள் பட்டு மற்றும் அவளுடைய நாடகக் குழுவில் தாளம் போடும் தாமுவின் காதற் கதை ஒன்று ஒரு கதைக்குள் இன்னொரு கதையாக ஓடுகிறது. அந்தக் கதையும் ஆண்-பெண் உறவின் மற்றும் கவர்ச்சியின் சிக்கல்களையும் நிலைப்பற்ற தன்மையையும் சொல்லிச் செல்கிறது. மணந்தால் தாமு மாமு இல்லையேல் மரண மாமு என்று துடித்து அவனைக் கட்டிக் கொள்ளும் அவளும் மணவாழ்க்கை என்று வரும்போது பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பது நமக்குப் பலமுறை சொல்லப் பட்டு விட்ட கதைதான். ஆனால் ஜெயகாந்தனின் காலத்தில் அதையும் எதிர்த்துக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தியிருக்கக் கூடும். காதற் திருமணங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் வரும் அல்லது அதில்தான் அதிகம் வரும் என்கிற தெளிவே நம் தலைமுறையில்தான் நடைமுறைக்கு வந்தது என்று நினைக்கிறேன்.

விரசமான காட்சிகளை கோட்டைத் தாண்டாமல் விளக்கியிருப்பது மரியாதைக்குரியது. கதவு மூடியது, கன்னத்தில் மை போன்ற சில சொற்களில் மிச்சத்தை வாசகனின் கற்பனைக்கு விட்டு விடுவது நாகரிகமாக இருக்கிறது. இளைய தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் (இருவருக்கும் சமமான பொறுப்பு இருக்கிறதே!) இதையே சரியான எழுத்துமுறையாகக் கொண்டால் நல்லது. "தெருவில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது", "இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கும் முன்பே ரங்கா கை கழுவி விட்டான்" போன்ற பாரதிராஜா பாணிக் குறிப்பு விவரிப்புகளும் அன்றைக்குப் புதியதாக இருந்திருக்க வேண்டும்.

"பெர்னாட்ஷா சொன்னது போல இது அங்கீகரிக்கப்பட்ட விபசாரமல்லவா?" என்று திருமணம் பற்றி ரங்கா யோசிக்கிறான். நிச்சயிக்கப் படும் திருமணங்கள் இருக்கும் வரையும் இந்தக் கேள்வியும் நம் பண்பாட்டில் இருந்து கொண்டே இருக்கும் போல்தான் தெரிகிறது. மௌனராகம் படத்தில் கூட இது போலத்தான் ரேவதி ஏதோ கேட்பார். இது மாதிரியான ஒரு கேள்வி இளமைக்காலத்தில் நிறையவே வந்தது. இப்போது பழகிப் போய் விட்டது. இப்படி அங்கீகரிக்கப் பட்டிராவிட்டால் எம்மைப் போல் நிறையப் பேருக்குத் திருமணமே நடந்திருக்காதே என்று எண்ணிப் பார்க்கையில் கழுதை இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் இந்தக் கலாச்சாரம் என்றுதான் தோன்றுகிறது.

கல்யாணியோடு கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு தன் தெருவுக்குத் திரும்பிப் போகையில், அங்கே இருக்கிறவர்கள் புருஷனை 'நீ, வா போ' என்று அழைக்கும் ஒருமை விளி அப்போது ரங்காவுக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரியும். முன்பெல்லாம் அது மிகவும் சாதாரணம். ஏன், தன் முதல் மனைவி தேவகிகூடத் தன்னை அப்படித்தான் அழைப்பாள் என்கிற நினைப்பு வரும். இதுதான் வேறுபட்ட பண்பாடுகளைப் பழகுவதில் உள்ள நல்லது-கெட்டது இரண்டுமே. அப்படிப் புதிதாக ஒன்றைப் பார்த்து விட்டு வரும் போது, நமக்கென்று இருந்த பண்பாடு கேள்விக்குள்ளாகும். இதைத்தான் மேற்கு நாடுகளுக்குச் சென்று திரும்பும் நிறையப் பேர் நம்ம ஊரில் வந்து செய்கிறார்கள்; பெருநகரங்களுக்குச் சென்று வரும் நம் கிராமத்தவர்கள் ஊரில் வந்து செய்கிறார்கள். அது எல்லா நேரத்திலும் தப்பென்றும் சொல்ல முடியாது; சரியென்றும் சொல்ல முடியாது. அவர்கள் எடுத்துக் கொண்டு வருவதில் நல்லதும் இருக்கிறது; கெட்டதும் இருக்கிறது; பயனும் கேடும் அற்ற அவர்களின் பம்மாத்தும் இருக்கிறது.

ரங்காவின் சித்தப்பு அவனுக்கு ஒரு பழைய நாடக நடிகையின் கதையைச் சொல்வார். ஊர் ஊராகப் போய் நாடகங்களில் நடிக்கும் அந்த நடிகையை மடக்க சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை பணக்காரர்களும் வந்து கழுகாக வட்டமடிப்பார்கள். அப்படிச் சுற்றிச் சூழ்ந்த ஜமீன்தார்களையும் சேட்டுகளையும் 'இத்தினி பேரு இப்படியெல்லாம் வரீங்களே-எவனாவது என்னைக் கல்யாணம் கட்டிக்கினு சம்சாரம் நடத்திறீங்களாடா?' என்று அவள் ஒரு கேள்வி கேட்பாளாம். அத்தனை பெரும் கடுப்பாகி அடிக்க வருவானுகளாம் - ஓடிப் போவானுகளாம். இந்தக் கேள்வி இன்று வரை நடிகைகளுக்குப் பொருந்துவதாகத்தான் இருக்கிறது. ஏதோ அப்பா-அம்மா கட்டுப்பாட்டில் இல்லாத சில அமெரிக்கத் தொழிலதிபர்கள்தாம் அவர்களைக் கட்டிக் கொண்டு தாம்பாளத் தட்டில் வைத்துத் தூக்கிப் போகிறார்கள்; பின்னர் சில மாதங்களில் திரும்பி வந்து விட்டு விட்டும் போய் விடுகிறார்கள் அல்லது டிக்கெட் போட்டு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

கல்யாணி போன்ற அழகியிடம் மயங்கிப் போய்க் கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு மீண்டும் தெருவுக்குள் நுழைகிற போது புதிதாகப் புத்தி வந்தவன் போல் யோசிக்கிறான்: "நாம் பார்க்கவும் கூசுகிற மாதிரி இருக்கிற பெண்களையும் குழந்தைகளையும் இங்கே வாழ்கிற ஆண்மகன் உயிருக்குயிராய் நேசிக்கின்றான். இவர்களிடையே இருக்கின்ற உறவுகள் மரணத்தால் மட்டுமே பிரிக்கப் படுகின்றன. எப்படி?" என்று. ஆக, அந்த நேசிப்பு எப்படி சாத்தியமாகிறது? அதுதான் அந்தப் பண்பாடு என்கிற மண்ணாங்கட்டியின் பவர். அந்தச் சொல்கூடக் கொஞ்சம் பெரிதாகப் பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறது. எனவே இப்படிச் சொல்லலாம் - எல்லோரும் காலங்காலமாகச் சொல்லிக் கொடுக்கிற பயக்க வயக்கங்களுக்கு எப்போதுமே அப்படியான ஒரு கட்டிப் போடும் தன்மை இருக்கிறது. அதுதானேஉலகப் பெரும் பந்தின் இந்த நிலப் பகுதியில் வாழும் கோடானு கோடி மக்கள் நம்மை இப்படிக் கட்டிப் போட்டு வைக்கிறது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவது நல்லதுக்கா-கெட்டதுக்கா என்பது, ரங்கா-கல்யாணிகள் மட்டுமின்றி பெரும்பாலானவர்கள் அப்படி வாழ ஆரம்பித்த பின்புதான் முழுமையாகப் புரிபடும்.

எல்லாத்தையும் இழந்து விட்டு வருகிறவன், அதற்காகவே அவளும் அவளுடைய எல்லாத்தையும் இழக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன் வரவு எந்த வகையிலும் அவளின் சுயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்கிற உணர்வு அவனை மிகவும் வலிக்க வைக்கிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்து, பின்னர் ஒரு பொழுதில் நிறுத்தியே விடுகிறான். இதில் இடையில் சொந்த மண்ணுக்குப் போய் வரும் ஒரு நாளில் ரெம்பவும் அய்யாவுக்கு மனமாற்றம் நிகழ்ந்து விடும்.

வீட்டுக்கு வராமல் இருக்கும் கணவனை ஒருநாள் கூடக் கேள்வி கேட்காத மனைவி - இழுக்கிற இழுவைக்கெல்லாம் உடன் செல்லும் பாங்கு - 'உன் சுகமே என் சுகம்; உனக்குப் பிடிக்காத எதையும் வற்புறுத்த மாட்டேன்' என்கிற முதிர்ச்சி - எதிலும் 'பற்றில்லாத அன்பு' கொண்டிருக்கும் பாங்கு என்று கல்யாணியின் பண்புகள் எல்லாமே அன்றைய நாளில் தமிழ் கூறும் நல்லுலகுக்குப் புதுமையான கதாநாயகி ஒருத்தியை அறிமுகப் படுத்தி நம்மவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்க வேண்டும். எத்தனை பேர் புரோக்கரிடம் கல்யாணி மாதிரிப் பெண் வேண்டும் என்று சொன்னார்களோ! இந்த நாவலின் மிகப் பெரும் தத்துவம் என்னவென்றால், இதற்கெல்லாம் காரணம் என்று ரங்கா உணர்வதும் அவன் மூலம் ஆசிரியர் உணர்த்தியிருப்பதுமான இதுதான் - 'அவள் வாழ்க்கையை ஒரு நாடகம் போல் ரசித்துப் பார்க்கிறாள். அதனாலே எதுவுமே அவளைக் கலங்கடிப்பதில்லை!'. ஜெயகாந்தன் அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்பவராகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அப்படியான வாழ்க்கையின் ஆகப் பெரும் சுகத்தை இவ்வளவு சுகமாக எழுதியிருக்க முடியாது. நம்மில் பலர் அது போன்றதொரு வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால் அதில் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. நாம் பிறர் வாழ்க்கையை மட்டும் நாடகமாகப் பார்ப்போம்; கல்யாணியோ அவளுடைய வாழ்க்கையையும் அப்படிப் பார்ப்பவளாக இருப்பாள். அதைத்தானே இப்போது பல ஆன்மீகவாதிகள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணி, "அம்பிகாபதி-அமராவதி காதலின் பெருமையே அவர்களுடைய காதல் கைகூடாமல் போனதுதான்" என்று தத்துவம் சொல்லும் போதும், உணர்ச்சிக் காதல்களைப் பெரிதாக மதியாமையும் அவளுடைய மனமுதிர்ச்சி மீது நமக்கு அபரிமிதமான ஒரு மரியாதையை வரவழைக்கிறது. இதே நாம் ரங்கா இடத்தில் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருந்திருப்போம் என்பது வேறு கதை. :)

ரங்காவும் முழுக்க முழுக்கக் கெட்டவனில்லை. அவனும் முற்போக்காக நிறைய யோசிக்கிறான். ஆனால் பாவம் பயலுக்கு முடியாது. 'மனைவிக்கு என்று ஒன்றும் தனி இலக்கணம் இல்லை.அது கணவனைப் பொறுத்தது' என்றெல்லாம் யோசிப்பான். அதுவும் சுய பரிதாபத்தில்தான் முடியும் பாவம்.

மணவாழ்க்கை என்பது தினமும் அடித்துக் கட்டி உருளும் கணவன்-மனைவிக்கு மட்டுமே தோல்வியடையும் என்றில்லை. எதுவுமே பேசிக் கொள்ளாமலே கூட விரிசல் பெரிசாகலாம் என்று காட்டும் விதமாகத்தான் ரங்கா-கல்யாணி பிரிவு காட்டப்பட்டிருக்கும். குரல் கனத்த பேச்சோ, சச்சரவோ, ஊடலோ, வாதப் பிரதிவாதங்களோ எதுவும் இல்லாத ஒருவகை மனஸ்தாபம் உறுதியாகிக் கெட்டிதட்டிப் போய் விட்டது என்று சொல்லியிருக்கிறாரே அப்படி நடக்கும் அந்தக் கொடுமை. இது நாம் பலரும் பல உறவுகளில் அனுபவித்திருக்கிற ஒன்றுதான். சில உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சண்டையிடுவதற்கு ஒன்றும் இராது; ஆனால் கொஞ்சிக் குலாவவும் ஒன்றும் இராமல் மெது மெதுவாக விலகிப் போய் விடுவோம். ஐந்தறிவு விலங்குகளைப் போலே அடித்துக் கொண்டு சாவதற்கு இது எவ்வளவோ மேல்தானே. இதெல்லாம்தான் மனிதகுலத்தை நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் நடத்தைகள் அல்லவா. இதைத்தான் ஜெயகாந்தன் தமிழ்ச் சமூகத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார். அதனால்தான் அவரை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.

திடீரென்று ஒருநாள், மிக சுமூகமாக, "நாம் விவாகரத்து பெற்றுக் கொள்வோம்!" என்று முடிவு செய்வார்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே கதைகள் பேசிக் கொண்டு வக்கீலைப் பார்க்கப் போவார்கள். எழுபதுகளில் இதெல்லாம் எவ்வளவு பெரிய புரட்சிக் கருத்து?! எழுத்தாளர் ஞானி கூட இது போல ஏதோ அவருடைய வாழ்க்கை பற்றிச் சொல்லியிருக்கிறார். "கணவனும் மனைவியுமாக வாழ்ந்த எங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நாங்கள் நண்பர்களாக வாழ்ந்து விடலாம் என்று தீர்மானித்த நாள் முதல் இல்லாமல் போய் விட்டது!" என்கிற மாதிரிச் சொல்லியிருந்தார். இப்போதும் அவருடைய முன்னாள் மனைவியும் அவரும் அப்படித்தான் திருமண உறவை முறித்துக் கொண்டு நண்பர்களாக வாழ்கிறார்களாம். பிற்காலத்தில் அது போன்ற பல உறவுகளுக்கு இந்த நாவல் நல்வழி காட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நிறையப் பேர் அது போல ஆரம்பித்து விட்டார்கள் - "நாங்கள் நண்பர்களாக வாழ முடிவு செய்து கொண்டோம்!" என்று. நல்ல முன்னேற்றம்தானே!

தொடரும்...

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஜெயகாந்தன் பற்றிய ஆவணப் படம்

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படித்து விட்டு அது பற்றி ஓர் இடுகை போட்டேன். அதற்குக் கருத்துரையாக தோகா டாக்கீஸ் என்கிற நண்பர் இந்தக் காணொளிகளின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அனைத்துப் பாகங்களையும் இரவோடு இரவாக ஒரே மூச்சாக உட்கார்ந்து பார்த்து முடித்தேன். தமிழகம் கொண்டாட வேண்டிய - ஓரளவு கொண்டாடி விட்ட - ஒரு மாபெரும் படைப்பாளியை, அவருடைய அன்றாடத்தில் எப்படி இருக்கிறார் என்று மிக அருகாமையில் காட்டியிருப்பதன் மூலம் இந்த ஆவணப் படம் மிகப் பெரும் சாதனையைச் செய்திருக்கிறது. நன்றி, ரவி சுப்பிரமணியன் அவர்களே! வரலாற்றில் ஒரு வரியில் இடம் பெற்று விட்டீர்கள்!!

மொத்தத்தில் ஆவணப் படம் அருமையோ அருமை. ஆனால், பாகங்களாகப் போடப்படும் காணொளிகளுக்கே உரிய பிரச்சனையை இந்தத் தொடரும் சந்தித்திருக்கிறது. முதல் பாகத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது பார்த்தவர்களின் எண்ணிக்கை. ஒரே படமாகப் போட்டிருந்தாலும் பாதியில் போபவர்கள் போகத்தான் செய்திருப்பார்கள். அது தெரிந்திருக்காது நமக்கு. அவ்வளவுதானே! :)

1 முதல் 7 வரை 9 பாகங்கள் போட்டிருக்கிறார்கள். அதெப்படி என்கிறீர்களா? 2A மற்றும் 5A என்று இரண்டு குறுக்குச்சால்கள் இருக்கின்றன.

நிறையச் சின்னச் சின்னப் பெரிய விசயங்களைச் சொல்லியிருக்கிறார். தமிழ் கூறும் நல்லுலகில் எழுதத் துடிக்கும் - வாசிப்புக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் - எல்லோரும் கண்டு தீர வேண்டியது.

ஒரு பழைய பாட்டு; அப்புறம் பாரதியின் இருட்டு-வெளிச்சம் பற்றி ஜெயகாந்தன் பேசுவதோடு ஆரம்பிக்கிறது. எழுத்தாளர்களுக்கே கவுரவம் பெற்றுத் தந்தவர் என்கிற அறிமுகம் கொடுக்கிறார் காணொளித் தொகுப்பாளர்.

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்குமான உறவுக்குத் தமிழர்கள் எப்படி முக்கியக் காரணமாக இருந்தார்கள் என்பதும் பாரதிதான் ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடிய முதல் உலகக் கவிஞன் என்பதும் காந்திக்கு எப்படி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்கள் ஆரம்பமாக இருந்தார்கள் என்பதும் நல்ல தகவல்கள். இதுதான் காணொளியில் வரும் அவருடைய முதல் மேடைப் பேச்சு.

அவர் இருக்கும் இடமெல்லாம் ஒரு சபை கூடி விடும் என்பது சுவாரசியமான தகவல். காணொளி முழுக்கவும் அப்படியான காட்சிகள் நிறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி எழுத்தாளர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். "நான் ஒருத்தன் இருந்தால் போதும்; சபை கூடி விடும். சில நேரம் இருவர்; சில நேரம் இருபது பேர்!" என்கிறார்.

இலக்கணம் படித்துத் தமிழில் எழுத முயலும் எல்லோருக்குமே செய்யுள் வடிவம்தான் முந்திக் கொண்டு வரும். அது உரைநடை எழுத ஆசைப் படுபவனுக்கு உதவாது. முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு வரும் செய்யுளைத் தவிர்த்து உரைநடையில் எழுதுவது எவ்வளவு முக்கியம் என்பது பற்றிச் சொல்லியிருப்பது சூப்பர். அவருடைய பாடலாசிரியர் அனுபவம் அருமை.

ஒரு குழந்தையைப் போலச் சிரித்துச் சிரித்துப் பேசுவது மனத்தைக் கொள்ளை கொள்கிறது. அந்தக் குழந்தைத்தனம்தான் எழுத்துக்கு அடிப்படைத் தேவை போலும். இது போன்ற பல விசயங்களில் கோணங்கியை நினைவு படுத்துகிறார் (இருவரும் இருவேறு விதமான எழுத்தாளர்கள் எனினும்!).

கடவுள் நம்பிக்கை உண்டா என்றால், "எதையாவது நம்பித் தொலைப்போம்!" என்று சொல்லி முடித்து விட்டார். "ஓயாமல் மயிறு மயிறு என்கிறீர்களே!" என்றால், "மயிறு திருவள்ளுவர் கூடச் சொல்லியிருக்கார்!" என்று அது பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கிறார். "உங்கள் கெட்ட பழக்கங்களை உங்களோடு சேர்வோருக்கும் கற்றுக் கொடுத்துக் கெடுக்கிறீர்களாமே?!" என்பதற்கு, "இந்த சமூகம் என்னை எப்படிக் கெடுத்ததோ அப்படியே இந்த சமூகத்தையும் கெடுப்பதாக உத்தேசம்!" என்கிறார்.

"ஆறாம் வகுப்பில் படிப்பை நிறுத்திய நீங்கள் எங்கே இவ்வளவு ஆங்கிலம் கற்றீர்கள்?!" என்ற கேள்விக்கு, "எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சியில்தான்! இராமாயணம், மகாபாரதம்... எல்லாமே அங்கேதான்!" என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவனெல்லாம் வெறும் பஞ்சம் பற்றி மட்டுமே தெரிந்த பரதேசிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கி.வீரமணி இவரோடு ஏதோ இளமைக் காலப் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் வந்து, "சின்ன வயதிலேயே பீடி குடித்தல் போன்ற அரும் பெரும் பழக்கங்களை எல்லாம் முயன்று பார்த்து விட்டவர் இவர்!" என்று நல்ல அறிமுகமும் கொடுக்கிறார்.

"நம்முடைய விருப்பமில்லாமல் நடப்பதற்கு விதி என்று பெயர். பிறக்கும் நாம் இறக்கக் கூடாது என்று நினைக்கிறோம். இறப்பதுதான் விதி!" என்கிறார் ஒரு மேடையில்.

"கலைஞர் ஒரு மேடையில் சொன்னார் - 'பெரியாரையும் அண்ணாவையும் பார்த்திரா விட்டால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்' என்று! கூத்து என்ன தெரியுமா? அவர்கள் இருவரையும் பார்த்ததால்தான் நான் கம்யூனிஸ்ட் ஆனேன்! அவரவர் கோணத்தில்தானே அவரவர் பேசுவர்!" என்று ஒரு மேடையில் அவர் சொல்வது தமிழக அரசியல் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டியதன் கட்டாயத்தைச் சொல்லிச் செல்கிறது. அதை அவர் சொல்லும் போது ஒரே கலகலப்பு மேடையில்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் மீது அளவிலாக் காதலோடு பேசுகிறார். பார்ப்பன எதிர்ப்பு அரசியலை முதலில் ஆரம்பித்து வைத்ததே பாரதிதாசன்தான் என்கிறார். பெரியாரெல்லாம் அதற்குப் பின்புதானாம். பாரதியைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அடித்துப் போடுவாராம் பாரதிதாசன். அப்படியொரு ஐயர் மீது வெறி கலந்த அன்பு கொண்டிருந்த பாரதிதாசன் மற்ற ஐயர்களை வெறி கலந்து வெறுத்திருக்கிறார். கேட்டால், "அவன் ஒருத்தன்தான் உண்மையான ஐயர்!" என்பாராம்.

"கும்பல் எதுக்குத்தான் வராது. அதெல்லாம் ஒரு விசயமா?! ORGANIZED MEETING IS DIFFERENT FROM KUMBAL, இல்லையா?"என்கிறார் ஓரிடத்தில்... அப்பப்பா... எங்கயோ போயிட்டிங்க தலைவா நீங்க!!! :)

"எனக்கு திராவிட மாயை வராமல் காப்பாற்றியது ஜீவாதான். தமிழ் வந்தாலே அதுவும் கூட வந்துடுதே!" என்கிறார் ஜீவா பற்றிப் பேசும்போது. "அவர் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வராமல் இருந்திருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் தமிழை ஒரு மாதிரிப் புதைத்து விட்டிருப்போம்!" என்று சிரிப்பலைகளைக் கிளப்புகிறார் ஒரு மேடையில். நல்ல பேச்சாளருக்குரிய ஒரு முக்கிய அம்சம் - நவரசங்களையும் வரவைக்க முடிய வேண்டும். அவர் பேச்சில் அது இருக்கிறது. எல்லா மேடைகளிலுமே தீப்பொறியும் பறக்கிறது. சிரிப்பொலியும் கேட்கிறது.

அதே மேடையில், "திருக்குறள் படிக்காமல் மார்க்சிசம் படிக்கிற தமிழன் உருப்பட மாட்டான் என்று ஜீவா தெளிவாகச் சொன்னார்!" என்கிறார். "நீ அடங்காப் பிடாரிடா" என்று ஜீவா தன்னைச் சொல்லியதுதான் தனக்குக் கிடைத்த அற்புதமான சான்றிதழ் என்று பூரிக்கிறார். "அவருக்கே அடங்காதவன் எவனுக்கு அடங்குவான்!?" என்கிறார். கம்பராமாயணம் படித்து விட்டு அப்புறம் மார்க்சிசம் படித்தவர் ஜீவா என்கிறார். "தமிழுக்கு அமுதென்று பெயர் என்று சொன்ன பாரதிதாசன், தமிழுக்கு ஜீவா என்றும் ஒரு பெயருண்டு என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன்!" என்கிறார்.

இந்திரா காந்தியோடு தன் தொடர்பு பற்றிச் சொல்கிறார். அவரிடம் சஞ்சய் காந்தி பற்றிப் பேச விரும்புவதாகச் சொன்ன பின்பு கழற்றி விட்டு விட்டார்கள் என்றும் சொல்லிச் சிரிக்கிறார். "எம்.ஜி.ஆர். என்னைச் சந்திக்க விரும்பினார்; ஆனால் நான் அதை விரும்பவில்லை. நல்லதோ-கெட்டதோ, சில விசயங்களை நான் விரும்புவதில்லை. பழகியவர்கள் அவர் நல்லவர் என்கிறார்கள். நல்லவராகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்!" என்கிறார். "அப்படின்னா உனக்கு யார்தான்யா பிடிக்கும்?!" என்கிற போது, "காமராஜரைப் பிடிக்கும்! சங்கராச்சாரியாரைப் பிடிக்கும்!! கலாமைப் பிடிக்கும்!!!"என்று அடுக்குகிறார். காமராஜரின் எளிமை-நேர்மை பற்றி அழகாகச் சொல்கிறார். அவரைப் பிடிக்காதவரும் இந்த மண்ணில் உண்டோ என்ன? கொஞ்ச நஞ்சம் அவரைப் பிடிக்காத மாதிரிப் பேசுகிறவர்கள் கூட அவர் பற்றி எதுவும் தெரியாமல் வேறு சில கணக்குகளின் படி வெறுப்பவர்களே. அது என்ன கணக்குகள் என்று தெரிய வேண்டுமானால் எங்கள் பகுதிக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள்.

மனிதர் இராமனைப் பற்றிக் கேட்டதும் கடும் கோபம் அடைந்து விடுகிறார். கெட்ட வார்த்தைகள் கூடச் சொல்லித் திட்டுவது போலத் தெரிகிறது. "ஏன்யா இப்டி?" என்றதும் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார். "கவிஞர்கள்-கலைஞர்கள்-வாத்தியார்கள் எல்லாம் இப்படித்தான். இதைக் கோபம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதற்குரிய உணர்ச்சியோடு ஒன்றைப் பேசுவது!"என்று கலகலவெனச் சிரிக்கிறார். இந்த ஒரு காட்சியில்தான் எங்கே சோமபானம் வேலை செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. அதையும் சில காட்சிகளில் காட்டத்தான் செய்கிறார்கள். இப்போது புரிகிறது, சீமான் யாரைப் பார்த்துக் கெட்டுப் போனார் என்று (பேட்டி எடுப்பவர்களிடம் கோபப் படுவதைச் சொல்கிறேன்!). :)

அடுத்து, "இராமன் வாலியைக் கொன்ற விதத்தைக் கூடப் புரிந்து கொள்கிறேன். ஆனால், சூர்ப்பநகையை மார்பை அறுத்தது நியாயமா?" என்று கொதிக்கிறார்.அடுத்த நிமிடமே அதை மறந்து வேறெதற்கோ கெக்கேக் கெக்கேவென்று சிரிக்கிறார்.

மேசையில் அவருடைய மொபைல் போனும் தேமேவென்று கிடக்கிறது. இருப்பதிலேயே விலை குறைவான நோக்கியா மாடல். அப்பாடா, "என்னப்பா இன்னமும் இந்த போனை வச்சிக்கிட்டு..." என்று இழுப்பவர்களிடம் எடுத்துக் காட்டிப் பேச இன்னோர் ஆள் சிக்கி விட்டார்.

"ஆத்மா என்பது கடவுள் சம்பந்தப் பட்டதல்ல. அது மனிதன் சம்பந்தப் பட்டது. கடவுள் வேறு மனிதன் வேறு என்பது லௌகீகம். நானே கடவுள் என்பதே ஆன்மிகம்!" என்கிறார்.  அதைத்தான் நேற்று வேறொரு காணொளியில் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கரும் சொல்லிக் கொண்டிருந்தார். அதைத்தான் சாமியை நம்பாத கமலும் 'அன்பே சிவத்தில்' சொன்னார்.

"உலகமயமாக்கலை ஆதரித்துப் பேசுகிறார். ஓர் உலகம் என்பதற்கு நெருங்கி வருகிறது உலகமயமாக்கல். முதலாளித்துவத்தால் கொண்டு வரப் படுவதால் அதை எதிர்க்கக் கூடாது!" என்கிறார். "முன்னாள் கம்யூனிஸ்ட் உறுப்பினரான நீங்களா?" என்றால், "17-ஆம், 18-ஆம் நூற்றாண்டின் கம்யூனிசத்தை வைத்துக் கொண்டு பேசாதே!" என்கிறார். "கருத்தை மாற்றி மாற்றிச் சொல்கிறீர்கள்!" என்று கண்ணதாசன் மீது வைத்த பழைய குற்றச்சாட்டை இவர் மீதும் வைக்கும் போது, கண்ணதாசன் மாதிரியே, "கருத்துன்னா மாறணும்" என்கிற மாதிரி ஏதோ சொல்கிறார். "எல்லா எழுத்தாளர்களையும் விட நீங்கள் EGO-CENTRIC ஆக இருக்கிறீர்கள்!" என்றால், "எல்லோருக்குமே இருக்கணும்; ஆனா இல்லையே, என்ன செய்ய?!" என்கிறார்.

அவருடைய நாடக நடிப்பனுபவம் பற்றி மிக வேடிக்கையாக விளக்கியுமிருக்கிறார். அவர் உன்னைப் போல் ஒருவன் என்றொரு திரைப்படத்தை எடுத்து "இது நூறு நாட்கள் ஓடுவதற்காக எடுக்கப் பட்ட படமல்ல; நூறு ஆண்டுகள் பேசப்படுவதற்காக எடுக்கப்பட்ட படம் என்றாராம். அது தேசிய விருது பெற்றதாம். அதன் பின் ஏன் சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. அந்தப் படத்தை இன்னும் பார்க்க வில்லையே என்றும் கூட வருத்தமாக இருக்கிறது. அவருடைய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல்களும் கூடப் படமாக்கப் பட்டது பேசப் பட்டிருக்கிறது. அவருடைய கதாபாத்திரங்களுக்கு இலட்சுமியை விடச் சிறந்த நடிகையை உலகத்தில் எங்குமே பிடித்திருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

பெண்ணியம் பற்றியும் ஓர் எளிதில் புரிபடாத மொழியில் பேசுகிறார். அவ்வையார் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

"இந்தியா விடுதலை அடைந்து விட்டதா?" என்று கேட்கும் போது, "ஒரு விடுதலை மொத்த விடுதலை ஆகாது. 1947-இல் நிகழ்ந்தது GATEWAY OF FREEDOM!" என்று சூப்பராகச் சொல்கிறார். "சனநாயகத்தில் சரி-தப்பு பார்க்க முடியாது. சனநாயகம் மட்டுமே பார்க்க முடியும்!" என்று எளிமையான பெரும் தத்துவத்தைச் சொல்கிறார்.

"கர்நாடகத்தில் தமிழ் கற்றுக் கொள்ளவே முடியாதாம்!" என்றால், "அவன் பிசிநாறியாக இருந்தால் நீ தாராளமாக இருந்து அவனுக்குக் கற்றுக் கொடு!" என்கிற கருத்து நிச்சயமாக நிறையப் பேருக்குப் புரியாது. கர்நாடகத்தில் இருந்ததால் எனக்கு ஓரளவு புரிகிறது. கன்னட வெறி என்பதே "தமிழன் பார், வெறியாய் இருக்கிறான்... தமிழன் பார், வெறியாய் இருக்கிறான்..." என்று சொல்லி வளர்க்கப் படுவது. அது எவ்வளவு உண்மை என்பது வேறு விஷயம். "நாங்கள் அப்படி இல்லை!" என்று காட்டுவதன் மூலம் அவர்களையும் திருந்தச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம் என்றொரு கருத்து வைக்கிறார். அதை விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லாததால் நாம் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. விவாதங்களுக்கெல்லாம் முடிவில் அவர் கருத்தில் ஓர் உட்பொருள் இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. "பாரதி சொன்னது போல், வையத் தலைமை கொள்; வட்டாரத் தலைமை போதாது எனக்கு!" என்கிறார். இந்த ஒரு விஷயம் மட்டுமே ஒரு கட்டுரைக்கான அளவு கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. அதனால் அதை அப்படியே விட்டு விடுகிறேன் இப்போதைக்கு. இதைப் பார்த்த பின்பு பாரதியை நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் குண்டக்க மண்டக்கக் கூடியிருக்கிறது.

"சகல ஆதிக்கங்களுக்கும் எதிரான எழுத்து அது!" என்று சமகால எழுத்தாளர் பிரபஞ்சன் வந்து ஜெயகாந்தன் எழுத்து பற்றி ஒரு வரியில் சொல்லி விடுகிறார்.

பிற எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற வேலையை இவர் எப்போதும் தவிர்த்திருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது. "நான் எழுத்தாளன் மட்டுமே; வாசகன் அல்ல!" என்றொரு விளக்கமும் கொடுக்கிறார்.

"எங்கள் ஊர் இருக்கிறது. எங்கள் வீட்டைக் காணோம். எனக்குத் தெரிந்த மனிதர்கள் யாரையும் காணோம்!" என்று கடலூரைக் காட்டிப் பேசுவது நன்றாக இருக்கிறது.

பொடிப் பையனாக இருக்கும் போதே பெரியாரையே எதிர்த்து அதே மேடையில் இவர் பேசிய விவகாரம் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

அப்துல் கலாமிடம் ஞான பீட விருது வாங்கியது கூட ஒருவகையில் வரலாற்றுச் சிறப்புதான். அந்த நேரம் பார்த்து ஏன் போய் அந்தக் கம்பீரமான மீசையை எடுத்துத் தொலைத்தாரோ! அவ்வளவு அகோரமாக இருக்கிறது!

நிகழ்ச்சித் தொகுப்பாளர் இடையில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: "ஏற்றுக் கொள்ள முடியாத மாதிரியான கருத்துக்களைச் சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழும் காலத்திலேயே தான் வாழ்ந்த சமூகத்தால் அக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் வைத்தவர் இவர்!". சரியாகச் சொல்லப் பட்டிருக்கும் வாக்கியம். அவருடைய கதைகளில் வருபவை அனைத்தும் இன்று நடந்திருந்தால் நம்பத் தக்கவை. அன்று நடந்ததால் நம்ப முடியவில்லை. அதன் பொருள் இதுவன்றி வேறென்ன?!

இந்த இடுகை ஓரளவுக்காவது உங்களுக்கு சுவாரசியமாக இருந்தால், கண்டிப்பாக இந்த இணைப்பைச் சொடுக்கி மொத்தத் தொடரையும் பாருங்கள். இது சுத்தமாக சுவாரசியம் இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக இந்த இணைப்பைச் சொடுக்கி மொத்தத் தொடரையும் பாருங்கள். காணொளி எழுத்தை விட ஆற்றல் மிக்கது என்பது மட்டுமில்லை. இதை நான் எழுதியிருக்கிறேன்; அதை வேறொருவர் எடுத்திருக்கிறார் என்பதையும் மனதில் வைத்துச் சொல்கிறேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தயார் பண்ணிக் கொண்டு உட்காருங்கள். நன்றி.

இதோ முதல் பாகம்: http://www.youtube.com/watch?v=t2NR8bFmhpI&feature=relmfu

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 2/4

தொடர்ச்சி...

நல்ல எழுத்தாளர்கள் எல்லோருமே நன்றாகச் செய்யும் வேலை, மனவோட்டங்களைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுதல். அதைத் தலைவரும் ("அடப்பாவி, இவரையுமாடா?!" என்கிறீர்களா? நமக்கு எல்லோரும் தலைவர்தானே!) சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படியான ஒரு நடையைத் தமிழுக்கு இவர்தான் முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும் என நினைக்கிறன். அதனால்தான் அவரை இவ்வளவு கொண்டாடுகிறார்களோ என்னவோ.

அது மட்டுமில்லை, அவருக்கென்று ஒரு மொழி நடையும் வைத்திருக்கிறார். பாரதியின் உரைநடையில் வரும் வடமொழித் தாக்கம் போல் இவருடைய எழுத்தில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆங்கிலத் தாக்கம் மற்றும் கலப்பு இருக்கிறது. தாக்கம் தவறில்லை. கலப்புதான் தாங்க முடிவதில்லை. லாயரை வழக்கறிஞர் என்று சொல்லாவிட்டாலும் வக்கீல் என்று சொல்லியிருக்கலாம். பாத்திரங்கள் பேசும் போது சொல்வது வேறு. அது பிரச்சனையில்லை. ஆசிரியரே தான் சொல்வதாகச் சொல்லும் வரிகளில் கூட அப்படியான சொற்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் இடிக்கிறது. அது போலவே ஸெல்ஃப் என்கிற சொல். அதற்கு சுயம் என்கிற சொல் நன்றாகப் பொருந்தியிருக்கும். ஒருவேளை அதெல்லாம் அவருக்குப் பிந்தைய காலத்துத் தமிழாக்கமோ என்னவோ. குறைந்த பட்சம் செல்ஃப் என்றாவது சொல்லியிருக்கலாம். 'ஸார்' என்பதை 'சார்' என்றிருக்கலாம். 'ச' தான் சகலகலா எழுத்தாயிற்றே. அது மட்டுமின்றி மூர்த்தாட்சண்யம், சமத்காரம் போன்ற சொற்களும் அடிக்கடி நடமாடுகின்றன. மூர்த்தாட்சண்யம் இப்போது மூர்க்கத்தனம் ஆகிவிட்டது நல்ல முன்னேற்றம். 'ஒப்புத்துக்கிட்டோம்' என்பது தேவையில்லாத நீளம் கொண்டிருக்கிறது. 'ஒத்துக்கிட்டோம்' என்றால் போதுமே. வக்கிரம் என்கிற வார்த்தை திரும்பத் திரும்பத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது போலவே இருக்கிறது. அண்ணாசாமி எதற்கெடுத்தாலும் வக்கிரம் வக்கிரம் என்று வைது தீர்க்கிறார். செல்லமாகச் சொல்லும் போது கூட "அவன் ஒரு வக்கிரம்" என்கிறார். ஒருவேளை அது அந்தக் காலத்து ஐயர் பேச்சோ என்னவோ. நம்முடைய காலத்தில் வக்கிரம் என்பது மிகக் கேவலமான ஒரு உணர்வுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பெயர். பிற்காலத் தமிழ்ச் சமூகம் இதில் கொஞ்சம் குழம்பிப் போகலாம்.

இன்றைக்கு விபரமான ஆள் போல் பேசுகிற எல்லோருமே தவிர்க்க முடியாமல் அடிக்கடிப் பயன்படுத்தும் சொல் - விஷயம். "தவிர்க்க முடியாத விஷயம் என்னன்னா...", "பாராட்டப் பட வேண்டிய விஷயம் என்னன்னா..." என்று எதற்கெடுத்தாலும் போட்டுத் தாக்க ஆரம்பித்து விட்டோம். அது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், ஆங்கிலத்தின் THING-இலிருந்து வந்திருக்க வேண்டும் என்று என் ஊகம். இந்த நூலைப் படித்த பின்பு தமிழுக்கு அதைக் கொண்டு வந்ததே இவராகத்தான் இருக்குமோ என்றொரு சந்தேகம் வருகிறது. ஜெயகாந்தனும் அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை பற்றிச் சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்த காலத்தில் அங்கு வரும் தலைவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்து இவரும் ஓரளவு ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முயன்ற கதைகள் எல்லாம் அந்தக் காலத்திலேயே கேள்விப் பட்டிருக்கிறேன். அதுதான் அவரை எழுத்தில் இந்த மாதிரியான ஒரு நடையைப் பிக்-அப் பண்ண வைத்ததோ என்று தோன்றுகிறது. நடை மட்டுமில்லை; ஒட்டு மொத்தத்தில் சிறந்த எழுத்தாளராக ஆகவே அந்த வாழ்க்கை உதவியிருக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவமே மேற்கத்தியது. அன்றைய நாட்களில் உலக இலக்கியங்கள் படித்தவர்கள்தாம் புதிய நடைகளில் எழுத ஆரம்பித்தார்கள். அப்படித்தான் இவரும் இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன்.

ஐயர் பேச்சு, சென்னைத் தமிழ் இரண்டுமே சரளமாக வருகிறது ஆசிரியருக்கு. அண்ணாசாமி ஐயர் அப்படியே ஐயராத்துப் பேச்சு பேசுகிறார். ரங்காவின் க்ரூப் முழுக்க சென்னைத் தமிழ் பேசும் மண்ணின் மைந்தர் கூட்டம். இரண்டுமே இப்போது ஓரளவு ந்யூற்றல் ஆகி வருகிறது என்றே எண்ணுகிறேன். ஐயர்கள் எல்லோருமே இப்போது வீட்டுக்கு வெளியே ஐயர் தமிழ் பேசுவதில்லை. அது போலவே சென்னைக்காரர்களும் ஓரளவுக்கு ந்யூற்றலான மொழியைப் பழகி வருகிறார்கள். 'வாங்க', 'போங்க', 'சொல்லுங்க' எல்லாம் ஓரளவுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. தன்னை மறந்து வந்து விடுகிற அவர்களுக்கே உரிய 'அந்தச்' சில வார்த்தைகளைப் பெரிது படுத்த வேண்டியதில்லை இங்கே. :)

"கவிதை, நாடகம், கலை, ரசனை என்பதெல்லாம் வசதி படைத்தவர்கள் வாழ்க்கையை விரயமாக்கிக் கொள்ளக் கண்டு பிடித்த வக்கரிப்பு என்றுகூட அவன் நினைக்கிறான். இதை வெளியில் சொல்ல அவன் அஞ்சுகிறானோ? அல்லது சொல்லிப் பயனில்லை என்று சும்மா இருக்கிறானோ! ஆனால் சில சமயங்களில் அவன் இவ்விதம் நினைப்பது மட்டும் உண்மை." என்ற வரிகளைப் படித்த போது எங்கே நம்மைப் பற்றித்தான் பேசுகிறாரோ என்று கூடத் தோன்றியது. இளமைக்காலத்தில் இடதுசாரிச் சிந்தனையின் தாக்கம் கொண்ட - உலகத்தைப் பசியின் பால் துடிப்பவனின் பார்வை வழியே பார்க்கும் - எல்லோருக்குமே இப்படித்தான் தோன்றுமோ என்னவோ. இன்று வரை இதில் ஒரு தெளிவு பிறந்த பாடில்லை. சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம் கொண்ட தம்பியிடம், "உலகத்தில் எத்தனையோ பேர் சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கிறான்; ஏன் நம்மைச் சுற்றியே நிறையப் பேர் இருக்கிறார்கள்; நீ இப்படியெல்லாம் செய்வது தவறு!" என்று வாதிட்டபோது, "அப்படியானால், நீ மட்டும் ஏன் விளையாட்டுச் செய்தி படிக்க வார இதழ் வாங்குகிறாய்?!" என்று சிந்தனையை மேலும் தூண்டி தோல்வியை ஒப்புக் கொள்ள வைத்தான். அத்தோடு அதையும் நிறுத்தி விட்டேன் (அப்படியெல்லாம் பேசிவிட்டு இப்போது எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வேறு கதை!).

"செடி கொடி வளர்த்தல், நாய் வளர்த்தல், மீன் வளர்ப்பு, கிரிக்கெட் கமெண்டரி கேட்டல், திருவிழாக்கள், ஆடம்பரங்கள், பணக்காரர்களின் வெற்று விளையாட்டுகள் மேல்வர்க்க இரவல்; அதில் கடைசிவரை மாறாத பிடிவாதம், ஆனாலும் கடைசியில் அதை மனைவிக்காகச் செய்யும் விட்டுக் கொடுக்கும் நற்குணம்" என்று சொல்லும் போதும் அதன் தொடர்ச்சியாகவே தீவிரமாகச் சிந்தித்தேன். இதில் முக்கால்வாசி விசயங்களில் எனக்கும் அந்தப் பிடிவாதங்கள் அப்படியே இருக்கின்றன. சிலவற்றை மனைவிக்காக விட்டுக் கொடுக்கும் நற்குணம் இன்னும் கைவரவில்லை. இப்போதும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எல்லா விசயத்திலும் காட்டி விட்டால் பிரச்சனையில்லை. சிலவற்றில் வியாக்கியானம் பேசி சிலவற்றில் தளர்ச்சி காட்டும் போதுதான் விவாதங்கள் சூடு பிடித்து விடுகின்றன. யோக்கியன் எல்லா விசயத்திலும் யோக்கியமாக இருக்க வேண்டுமே. எனக்குப் பிடித்ததில் மட்டும் வேறு மாதிரி இருந்து கொள்வேன் என்றால் எப்படி முடியும்?

கல்யாணி முதல் முறையாக அவனுக்கு மொட்டையாய் இரு வரிகள் மட்டும் எழுதி, "நான் யாரென்று கண்டுபிடித்து விட்டால் வந்து சந்தியுங்கள்!" என்று கடிதம் அனுப்புவதும் அவன் அதைப் புரிந்து கொண்டு - ஆனால் காட்டிக் கொள்ளாமல் - பேட்டி எடுக்க வந்திருப்பதாகச் சொல்லி நிற்கும் போது 'புரிந்து வந்தனா அல்லது புரியாமல் வந்தனா?!' என்று இவள் குழம்புவதும் பயங்கர ரொமாண்டிக். இது ஐம்பது வருடங்களுக்கு முன்பே சாத்தியம் எனும் போது காதல் மட்டும் பரிணாம வளர்ச்சியெல்லாம் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே வளர்ந்தே இருக்கிற ஒன்றோ என்று தோன்ற வைக்கிறது. ஆசிரியர் காதல் உணர்வில் கை தேர்ந்தவர் என்பதும் பல இடங்களில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அது போலவே 1971-இல் வெளிவந்த இந்த நாவலிலேயே பதிவுத் திருமணம் பற்றிப் பேசியிருப்பது எங்க ஊரை விட இருபது வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் சென்னையில் ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரியப் படுத்துகிறது. பேட்டி எடுக்க வந்ததாகச் சொல்லி வீட்டுக்குள் நுழைந்து எடுத்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பேட்டி கடைசிவரை வெளிவராமலே போய்விடும். கதையில் எதற்கென்றே தெரியாமல் பிடித்து விட்ட அம்சங்களில் ஒன்று இது.

ஆர் கே நாராயணின் வழிகாட்டிக்கும் (THE GUIDE) இந்த நாவலுக்கும் நிறைய ஒற்றுமைகள் பார்க்க முடிந்தது. இரண்டிலுமே காதல் மரபானதாயில்லை என்பது தவிர்த்து, வேறு பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இரண்டிலுமே நாயகிகள் தேவதாசிக் குடும்பத்தில் பிறந்தவர்கள். அந்த நேரத்து இளைஞர்கள் - அதுவும் எழுதும் இளைஞர்கள் - அவர்களைப் பற்றி 'கிக்'கான ஓர் உணர்வு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அது மட்டுமில்லை, அதில் நாயகி நாட்டியக்காரி; இதில் நாடகக்காரி. கதைகளில் மட்டுமில்லை, எழுத்தாளர் என்ற முறையிலும் இருவருக்கும் ஓர் ஒற்றுமை - இருவருமே காதலை மிக நாகரிகமான முறையில் சொல்கிறார்கள். விரசமான காட்சிகளை விளக்காமலேயே அவரவர் சக்திக்கேற்பக் கற்பனை செய்து கொள்ள விட்டு விடுகிறார்கள். இப்படி எழுதும் போது இவர்கள் மீது, "அப்படியான சிந்தனைக்கு என்னை நினைவு படுத்தினார்கள்!" என்பதைத் தவிர வேறெதுவும் குற்றம் சாற்ற முடியாது. இப்போதெல்லாம் அந்த மாதிரிக் காட்சிகளை - ஐந்து நிமிடம் நடந்ததை அரை மணி நேரம் படிக்கிற மாதிரிக் காட்டும் எழுத்தாளர்களையே இளைஞ-இளைஞிகளுக்கு நிறையப் பிடிக்கிறது.

"எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனாலும் நீ இதை இடவரும்போது வேணாம்னு தடுக்கற பிடிவாதமும் இல்லை" என்று விபூதியை ஏற்றுக் கொள்ளும் ரங்காவைப் போல்தான் நானும் இருக்கிறேன். நம்மில் நிறையப் பேர் இருக்கிறோம். கடவுள் இல்லை என்று உறுதியாகச் சொல்கிற அளவு விபரமும் இல்லை. கடவுளை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் வைத்திருக்கும் முறைகளில் எது சரியென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கும் விபரமில்லை. இந்த விசயத்தில் மிகவும் ஆர்வமுள்ள ஆளாக இருந்தால் "நாத்திகம் - இன்னொரு மதம்!" என்கிற என் பழைய இடுகையை வாசித்துப் பாருங்கள்.

"யாருக்குமே இவன் ஒரு நாடகக்காரியைக் கல்யாணம் செய்து கொள்வதில் சம்மதமில்லை" என்ற வரி வைரமுத்துவின் "நடிகை மாப்பிள்ளை தேடுகிறாள்" கவிதையை நினைவு படுத்தியது. நடிகைகளின் வாழ்க்கையே ஒரு விசித்திரம். கனவுகளில் எல்லோருமே இவர்களோடு வாழ்ந்து பார்ப்பார்கள். ஆனால், அதே ஆளைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு பய வர மாட்டான். இதையும் வேறொரு நாடக நடிகையின் அனுபவம் பற்றி ரங்காவின் சித்தப்பு சொல்வதாக விளக்கியிருப்பார் ஆசிரியர்.

"அவனை விருந்துக்கு அழைத்தாளே, அன்றே இவன் கேட்கவும் தான் தரவும் இனிமேல் எதுவும் இல்லை என்கிற விதமாக எந்தப் பேரமும் பேசாமல் தன்னை முழுமையாக அவள் இவனிடம் சமர்ப்பித்துக் கொண்டு விட்டாள். அப்படித் தன்னை அளிப்பதன் மூலம் தனக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படும் என்று அவள் நினைக்கவில்லை. அதற்கு மறுநாளிலிருந்து அவன் அவளிடம் வராமல் போய்விட்டாலும்கூட, அவன் வந்ததை லாபமாகக் கருதி நிறைவு கொள்ளும் அளவுக்கு அவள் மனம் பக்குவம் பெற்றிருந்தது. அதனால் அவன் வியந்து பிரமிக்கிறமாதிரி அவனிடம் அவள் தன்னைச் சமர்ப்பித்துக்கொள்ள முடிந்தது." என்கிற வரிகள் எந்த அளவுக்கு நம்ப முடியாதவையாக இருந்ததோ அந்த அளவுக்கு அது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. கல்லூரிக் காலங்களிலேயே காதற் தோல்வி அடைந்த நண்பன் ஒருவனிடம் இது போன்ற மனவோட்டத்தைப் பார்த்திருக்கிறேன். "போய் விட்டாளே என்று வருத்தப் படுவதை விட இவ்வளவு நாள் உடன் இருந்தாளே என்று உடன் இருந்த நாட்களைப் பற்றி நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்து கொள்வதுதான் சரி!" என்பான். ஒரே வேறுபாடு அவன் ஆண்மகன். இவள் பெண். ஆணுக்கு முடிவது பெண்ணுக்கும் முடியத்தானே வேணும். எத்தனையோ பெண்பிள்ளைகளை ஆண் போல வளர்க்கிறார்கள் இப்போது. அவளும் அப்படி ஆண் போல வளர்க்கப் பட்டிருந்தால் அது சாத்தியம்தானே.

தன் பிள்ளைத் தன்னை யாரோவென்று எண்ணி விலகி ஓடுவதும் அவளை வளர்க்கும் தன் மச்சினிச்சி தன் மீதே ஆசை கொண்டிருப்பதையும் கதையில் கூடுதற் குழப்பமாகச் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். இறந்த மனைவியை விட்டு வாழ்வதை விட இருக்கும் மகளை விட்டுப் பிரிந்து வாழ்வது சிரமமான ஒன்றாகப் படுகிறது. வேறு வழியே இல்லை என்று ஆகிற போது அது போல மச்சினிச்சி என்ற வசதியிருப்பவர்கள் அதைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகத் தன் மனைவியின் தங்கையை மனைவியாக ஏற்றுக் கொள்வது கடினம் என்பதும் புரிகிறது.

தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...