புதன், அக்டோபர் 20, 2010

உணர்ச்சிப் பெருநாள்!

என் வாழ்வில் முக்கியமானதொரு மைல்க்கல்லைக் கடக்கிறேன் இன்று. இப்போதுதான் என் மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறேன். இது ஒருவிதமான உணர்ச்சி மேலோங்கிய நாள். அவளை விட்டு விட்டு வெளியே வரும்போது அழுது விடுவேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, என் மனைவியைச் சிறிது நேரம் அங்கு இருந்து கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள். அது கொஞ்சம் கதையின் போக்கை மாற்றி விட்டது. அடுத்த மைல்க்கல்லைக் கடக்கும் போது சிந்திக் கொள்வதற்காகச் சிறிது கண்ணீரைச் சேமித்துக் கொண்டேன். இன்று காலை, என் மகள் முதல் நாளாக வீட்டை விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிய போது, மணப்பெண்ணாக வீட்டை விட்டுக் கிளம்பப் போகும் அந்த நாள் பற்றிய நினைவு திரும்பத் திரும்ப வந்து சென்றது. அந்த நாளை எப்படிக் கையாளப் போகிறேன் என்று தெரிய வில்லை. இப்போதே அது பற்றிச் சிந்திக்க விரும்ப வில்லை. அதே வேளையில், அது பற்றிச் சிந்திக்காமலே இருக்கவும் விரும்ப வில்லை. அவளுக்கு மூன்று வயதே ஆகும் இந்தப் பொழுதில் அது பற்றி எல்லாம் சிந்திப்பது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. ஆனால், அவள் பிறந்த நாளன்று இன்றைய தினம் பற்றிச் சிந்தித்தேன். பிறந்த அன்றைக்கே பள்ளிக்கு அனுப்புவது பற்றி யோசிப்பது கொஞ்சம் ஓவர்தான் என்பது உண்மைதான். ஆனாலும், இந்த நாளை எளிதாக எதிர் கொள்ளவும் மனதளவில் என்னைத் தயார் படுத்திக் கொள்ளவும் அது உதவியது. இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவே இல்லை.வந்து விட்டது. அது போல அந்த நாளும் சீக்கிரமே வந்து விடலாம் அல்லவா?!

இது போன்ற ஓர் உணர்ச்சியை உணர்வது இதுவே முதல் முறை அல்ல. வாழ்க்கை முழுக்க இது போலப் பல நாட்கள் இருந்திருக்கின்றன. உணர்ச்சிகள் வெவ்வேறு விதமானவையாக இருந்திருக்கலாம். ஆனால், இது போன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் பொதுவாகச் செல்லும் ஒரு பிணைப்புக் கயிர் எதுவென்றால், அது பிரிவுணர்ச்சி. முதல் நாள், அவளைப் பள்ளியில் விட்டு விட்டு, அலுவலகம் நோக்கி வண்டி ஓட்டிக் கொண்டு வந்த வேளையில், என் வாழ்வில் உணர்வு மேலோங்கி நடந்த எல்லாப் பிரிவுகள் பற்றியும் ஒரு நீண்ட சிந்தனையோட்டம். என் பதிவில் தடுக்கி விழுகிற உங்கள் எல்லோருக்குமே அது ஒரு சுவாரசியமான உரையாடலாக இல்லாமல் போகலாம். ஒரு காலத்தில் எனக்கும் நான் அனுபவிக்காத - அனுபவித்து உணராத எதுவுமே பற்றிப் பேசுவது சுவாரசியமாகப் பட்டதில்லை. ஆனால், இதை இப்போதே எழுதாவிட்டால், என் வாழ்வில் நான் அனுபவித்ததிலேயே கிளர்ச்சியூட்டும் மிக முக்கியமான ஓர் உணர்வைப் பதிவு செய்யத் தவறி விட்டவனாகி விடுவேன். எனவே, இதோ...

ஏழு வயதில், தாய் மாமாமாரின் அழைப்பை ஏற்று, கிராமத்தில் இருந்த பெற்றோரைப் பிரிந்து, வீட்டை விட்டுக் கிளம்பி, பக்கத்தில் இருக்கும் சிறு நகரத்துக்கு இடம் பெயர்ந்த போது, அது பெரிதும் சிரமமாக இல்லை. நான் புறப்பட்ட ஊரும் போய்ச் சேர்ந்த ஊரும் அருகருகில் இருந்தன. பெற்றோரை என்று பார்க்க விரும்பினாலும் அவர்கள் இருக்குமிடத்துக்கு ஒரு மணி நேரத்துக்குள் போய்ச் சேர்ந்து விடலாம். இன்றும் என் வாழ்வை மாற்றிய மிக முக்கியமான தருணங்களில் ஒன்று எனக் கருதும் பொழுது அது. அவ்வளவு சின்ன வயதில் தாயின் அன்பை விட்டுத் தொலைவில் வந்ததை இன்று நினைத்தாலும் வருந்தத்தான் செய்கிறேன். என்றைக்கும் இணைக்க முடியாத மாதிரியான ஓர் இடைவெளியை அம்மாவுடன் ஏற்படுத்தி விட்டது அந்த முடிவு. தாய் அத்தையைப் போலவும் அத்தைகள் தாயைப் போலவும் ஆனார்கள். தந்தை மாமா போலவும் மாமாமார் தந்தை போலவும் ஆனார்கள். அந்த மாற்றத்தால் பல ஆயுட்கால பலன்கள் கிடைத்தன. சிறிது மேம்பட்ட கல்வி கிடைத்தது! சிறிது மேம்பட்ட வெளியுலக அனுபவங்கள் கிடைத்தன! பின்னாளில் அதை விடப் பெரிய பிரிவுகளை எளிதில் சமாளிக்கக் கூடிய மாதிரியான வலிமையான மனம் கிடைத்தது! என்னைப் பற்றிக் கவலைப் படவும் கண்டு கொள்ளவும் எல்லோருக்கும் இருக்கும் இருவருக்கும் மேலாக எனக்குக் கூடுதலாகச் சிலர் கிடைத்தார்கள்!

வெற்றிகரமாக பத்தாம் வகுப்பு முடித்து, பதினொன்றுக்கு அந்தப் பகுதியில் இருந்த சிறந்த மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றில் சேர்வதற்காக அந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்த போது அடுத்த பிரிவு நேர்ந்தது. நீண்ட காலமாக அது பற்றிப் பேசியிருந்த போதும், முதல் முறையாக விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய நிலை வந்த போது அது ஒரு வேறுபட்ட அனுபவமாகவே இருந்தது. அப்பா இல்லை, அம்மா இல்லை, மாமாமார் இல்லை, அத்தைமார் இல்லை... எல்லாமே புது முகங்கள்! புது நண்பர்கள்! கையாள்வதற்குக் கடினமான அனுபவம். முதல் நாள் மாலை, உடன் இருந்த நிறையப் பையன்கள் முதல் முறையாக வீட்டை விட்டுப் பிரிந்து வந்திருப்பதற்காக அதை நினைத்து நினைத்து அழுதார்கள். முதல் நாள்ப் பகல்ப் பொழுது அதிகமாகக் கண்ணீரை வீணடிக்காமல் கழிந்தது. அழுகைக் காட்சிகள் மாலையில்தான் ஆரம்பித்தன. சுற்றியிருந்த பல பையன்கள் அழுத போதும், எனக்கும் அழ வேண்டும் போலத் தோன்றிய போதும், நான் அழ வில்லை. முதலில், நான் வீட்டை விட்டு வருவது இது முதல் முறையல்ல. இந்த முறை, என் இரண்டாவது வீட்டை விட்டு வந்திருந்தேன். அடுத்து, 15 வயது அழுவதற்கு  உகந்த வயதாகத் தெரியவில்லை. முதல் சில நாட்கள் (குறிப்பாக, மாலைப் பொழுதுகள்) வீட்டுக் காய்ச்சலில் கழிந்தன. பின்னர், விடுமுறைகளில் கூட விடுதியில் இருந்த நண்பர்களைப் பிரிந்து வருவது மிகச் சிரமமாக மாறியது.

பின்னர், அந்த நண்பர்களையும் ஆட்டோகிராப் கூட வாங்காமல் நிரந்தரமாகப் பிரிய நேர்ந்தது. ஒரே வளாகத்துக்குள் எத்தனை விதமான பிறவிகள்?! ஒவ்வொன்றுடனும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. வெவ்வேறு விதமான பிறவிகளிடம் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டு விட்டு பொழுது சாய்கையில் வீடு திரும்பி விடுவதாக இருந்தால் பிரச்சனையில்லை. அவர்களின் எல்லாப் பரிமாணங்களோடும் பரிமாற்றங்கள் நிகழ்த்த வேண்டியதில்லை. ஆனால், விடுதியில் தங்கும் போது, அதே ஆட்களுடன்தான் நாள் முழுக்கவும் இருக்க வேண்டும். இரவு-பகல் என்று மொத்த இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்களோடு இருக்க வேண்டும். எனவே, சண்டைகளும் சச்சரவுகளும் வருவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. அவையெல்லாவற்றையும் கடந்து, ஒன்று கூடி வாழ ஆரம்பிக்கப் போகும் போது, அவர்களை விட்டுப் பிரிய வேண்டும். நிரந்தரமாக! அதில் ஓரிருவர்தாம் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால், அன்றைய நாளில், அந்த "சரிடா, பார்க்கலாம்!" சொன்ன நேரத்தில், அது அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. அழ முயன்றேன்; ஆனால், தோல்வி அடைந்தேன். அதுதான் இயல்பாகவே வரவில்லையே. அப்புறம் ஏன் மெனக்கெட வேண்டும்?!

அடுத்து, கல்லூரியில் சேர வேண்டியிருந்தது. கல்லூரி சென்று படித்தவர்கள் எல்லோருக்குமே அவர்கள் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இந்தக் கல்லூரியும் இருக்கும். முக்கியமான நினைவுகளில் முக்கால்வாசி நினைவுகள் அங்கிருந்து சுமந்து வருபவையாகத்தான் இருக்கும். ஒரு மணி நேரத் தொலைவில் இருந்த முந்தைய இடத்தைப் போலல்லாமல் இது வீட்டை விட்டுக் கிட்டத் தட்ட நான்கு மணி நேரத் தொலைவில் இருந்தது. அதாவது இரண்டாவது வீட்டை விட்டு. முன் அனுபவம் இருந்ததால் இந்த முறை அழ வேண்டும் போல் தோன்ற வில்லை என்றில்லை. தோன்றத்தான் செய்தது. கல்லூரியில் என்னைச் சேர்த்து விட்டுக் கிளம்பிய மாமாவை வழியனுப்பி வைத்த அந்தப் பின்மதிய வேளை எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. புதிய நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே உணரத்தான் செய்வார்கள் என்று எண்ணினேன். ஆனால், அவர்களில் சிலர் குழந்தையைப் போல அழுதது கண்டு வியப்பான வியப்பாக இருந்தது எனக்கு. எனக்கும் அழ வேண்டும் போலத் தோன்றினாலும் அந்த வயதில் அழுவதென்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. எனக்குத் தோன்றத்தான் செய்தது; அவர்களோ அழவே செய்தார்கள்! திரும்பவும், அடுத்த சில நாட்கள், அதுவும் மாலைப் பொழுதுகள் மிகச் சிரமமாக இருந்தன. எங்கள் விடுதி கடற்கரையோரம் இருந்தது. கடற்கரை மாலைப் பொழுதுகளை வீட்டுக் காய்ச்சலுக்கு மிக வசதியாக மாற்றியது. அதே கடற்கரைதான் கல்லூரி வாழ்க்கையைப் பின்னாளில் மேலும் சிறப்பாக்கியது. அந்த வாழ்க்கையையும் வெற்றிகரமாக நீந்திக் கடந்தோம் (கடற்கரையில் நீச்சல்!). ஆனால், எங்கள் உணர்ச்சித் திறனைச் சோதித்துப் பார்க்க இன்னொரு நாள் வந்தது. மீண்டும் ஒருநாள்!

எது அது? இன்னொரு பிரிவுபச்சார நாள்! முந்தைய பிரிவுபச்சார நாளை விட இந்த நாள் கடினமானதாக இருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த நண்பர்களோடு கூடுதற் காலம் உடனிருந்தது. இரண்டு, இந்த நட்பு கூடுதல் முதிர்ச்சி கொண்டிருந்தது. கூடுதலான காலம் தொடரவும் போகிறது. பெரும்பாலானவர்கள் இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். அதற்கொரு காரணம் - கணிப்பொறி சம்பந்தமாகப் படித்தோம், ஒரே மாதிரியான வேலைகள் வாங்கினோம், எப்போதும் தொழில் நுட்பத்தின் உதவியோடு இயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த முறை, ஆட்டோகிராப்கள் வாங்கத் தவற வில்லை; தொலைபேசி எண்களும் முகவரிகளும் வாங்கத் தவற வில்லை. ஆனாலும், அந்த நாளில் அந்த இடத்தில் இருந்து சில ஆயுட்கால நண்பர்களை விட்டுப் பிரிவது அவ்வளவு எளிதாக இல்லை. பிரிந்து சென்ற பின்பு, சுமக்க வேண்டிய பொறுப்புகள் - காப்பாற்ற வேண்டிய வாக்குறுதிகள் - ஆற்ற வேண்டிய கடமைகள் என்று எத்தனையோ விஷயங்களைத் தனிக் கட்டையாகச் சமாளிக்க வேண்டுமே என்று எண்ணியபோது பிரிவு கூடுதல் வருத்தத்தைக் கொடுத்தது.

அடுத்து என்ன? படிப்புகள் முடிந்தன! தேர்வுகள் முடிந்தன! வேலை வாங்க வேண்டும். ஒரு மணி நேர தூரத்திலோ நான்கு மணி நேர தூரத்திலோ இருக்கிற ஊர்களில் எந்த வேலையும் இல்லை. பயந்து பயந்து இரவெலாம் பயணம் செய்து சென்னை என்றோர் ஊருக்கு வர வேண்டியானது. முழு நேர வேலையாக ஒரு வேலை தேடும் வேலையைச் செய்வதற்காக! வீட்டில் எல்லோருக்குமே பயம்; ஏனென்றால், சென்னையை விட்டுப் பன்னிரண்டு மணி நேரத் தொலைவில் இருந்த எங்களுக்கெல்லாம், முதல் முறை அங்கு தனியாகச் செல்வது என்பது ஒரு பெரிய வீர தீரச் செயல். ஏனென்றால், சென்னை சென்று வந்த எல்லோருமே, அந்த ஊர் வெளியூர்க் காரர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பற்ற ஊர் என்று விளக்குகிற மாதிரிப் பல கதைகள் கொண்டு வருவார்கள் (தமிழர்கள் எல்லோருக்குமே சென்னை மிகப் பாதுகாப்பான இடம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் மற்ற மொழிக் காரர்களுக்கு இதைச் சொன்னால் ஆச்சர்யம் அடைவார்கள்!). அப்படி ஒரு பயங்கரமான ஊராகத்தான் நம் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உள்ளூர்ப் பத்திரிகைகளும் சென்னையை நமக்கு அறிமுகப் படுத்தி இருந்தன. அவையனைத்தும் கட்டுக் கதைகளும் அல்ல. அங்கே வாழ்கிறவர்களுக்கு அவை மிகச் சாதாரணமான அல்லது எங்கோ ஒரு மூலையில் நடக்கிற நிகழ்வுகள். ஆனால், முதல் முறை அங்கு செல்கிற நமக்கு, எதுக்கும் தயாராக இருக்கிற மாதிரித் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய மிகப் பெரிய ப்ராஜெக்ட் அது. இன்று போல், தகவல்த் தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத அந்நாளில்,  அங்கிருந்த மாமா-சித்தப்பாக்களுக்குக் கடிதங்கள் போட்டு, எங்கெங்கோ இருந்த தரைவழித் தொலைபேசிகளில் அழைத்துச் சொல்லி, ஒவ்வொரு சின்னச் செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பல நாட்கள் பேசிப் பேசித் தைரியம் வரவழைத்துக் கொண்டு, ஓட்டுனரிடம் சிறப்பு விண்ணப்பங்கள் கொடுக்கப் பட்டு வண்டியேறினேன். இன்னொரு மறக்க முடியாத மாலைப் பொழுது! என் வாழ்வின் புதியோதொரு சகாப்தம் தொடங்குவதற்கு முந்தைய மாலை, எனக்குப் பாதி வயதுக்கும் குறைந்த (அப்போது) எங்கள் வீட்டுச் சிறுவர் கள் எல்லாம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

அதன்பிறகு நடந்ததெல்லாம் அதிசயம். வேலை தேடுவதைத் தவிர வேறொரு வேலை இல்லை அப்போது. வேலை தேடித் தேடி சென்னை மாநகரத்தின் ஒவ்வொரு சந்து பொந்துக்கும் சென்று வந்தேன். கிட்டத் தட்ட எல்லாப் பேருந்துகளின் எண்களையும் மனப்பாடம் செய்து விட்டேன். அத்தனை புதிராக இருந்த நகரம் ஆறே மாதங்களில் அத்துப் படியானது. ஆனால், இன்றும் நான் சென்னையில் சென்று இறங்கும் போது, முதல் நாள் அங்கு சென்று இறங்குவதற்கு முன்பாக எனக்கிருந்த சிந்தனைகள் பற்றிய மங்கலான நினைவுகள் மனதில் வருகின்றன. அதுதான் அந்த ஊருக்கு நான் சென்றிறங்கும் ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பானதாக்குகிறது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் மிகப்பெரிய மாநகராகவும் இருப்பதால் நம் அரசாங்கம், ஊடகங்கள், பொழுதுபோக்குத் துறையினர் ஆகிய எல்லோருடைய முழு கவனத்தையும் பெறுகிற நகரமாக இருக்கிறது. நம் தலைவர்கள், நட்சத்திரங்கள், அறிஞர்கள்... எல்லோருமே இருக்கும் இடம் அதுதான். எல்லோரும் என்றில்லாவிட்டாலும், பெரும்பாலானோர்! எனவே, அது போன்றதோர் ஊரின் மீது அது போன்றதோர் ஈர்ப்பு வருவது இயல்பு தானே.

அடுத்து, ஆறு மாதங்களுக்குப் பின் தெளிவாகப் புரிந்தது, 'நான் தேடுவது சாப்ட்வேர் வேலை என்றால் அதற்கான இடம் சென்னை அல்ல; அந்த இடம் சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் - என் மாநிலத்துக்கு வெளியில் இருக்கிறது' என்று. பிறகென்ன? பெங்களூருக்குப் பயணப் பட நேர்ந்தது. இந்த முறை வந்திறங்கிய புது இடம் மேலும் பயமூட்டும் விதமாக இருந்தது. ஏனென்றால், நான் அது எல்லா வகையிலும் தெரியாத இடம். எல்லாமே தெரியாதவை... மக்கள், மொழி, உணவு, தட்பவெப்பம், பண்பாடு... எல்லாமே! இன்று, திரும்பிப் பார்க்கையில், எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. வேறு எந்த இடத்தையும் விட அதிகமான காலம் (இன்றைய கணக்குப்படி) செலவிட்டுள்ள ஓர் இடத்துக்கு வர நான் இவ்வளவு பயந்திருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள்! வேறு எந்த இடத்திலும் இவ்வளவு வசதியாக இருக்க முடியுமா என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. வேறு எந்த ஊரிலும் இல்லாத அளவு இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். வேறு எந்த ஊரைப் பற்றியும் இல்லாத அளவுக்கு இந்த ஊரைப் பற்றிய நினைவுகள் இருக்கின்றன. வேறு எந்த ஊரிலும் இருந்ததை விட மேம்பட்ட வாழ்க்கையை இங்கு வாழ்ந்திருக்கிறேன். 2001-இலேயே வேலை நிமித்தமாக நாடு முழுக்கச் சுற்றும் ஒரு பயணத்தில் இருந்த போது, முதல் பத்து நாட்கள் சமாளிக்க முடிந்தது. பதினோராவது நாள், பெங்களூர் திரும்ப வேண்டும் போல் உணரத் தொடங்கி விட்டேன். நான் சொல்வது 2001-இல். கிட்டத் தட்டப் பத்தாண்டுகளுக்குப் பின்... இன்று... இந்த ஊர் எனக்கு அதற்கும் மேலாக எவ்வளவோ அர்த்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

முதலில், ஒரு சாப்ட்வேர் அல்லாத நிறுவனத்தில் கணிப்பொறி சார்ந்த வேலை. சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் வேலை என்று இரண்டு கண்களும் குறி வைத்துக் கிடந்த காலத்தில், ஒன்றரை ஆண்டுகள் மின்னல் வேகத்தில் ஓடின. அது நடந்தது ப்ளூ சிப் கம்ப்யூட்டர் கன்சல்டண்ட்ஸ் என்கிற நிறுவனத்தில். இங்குதான் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அளவு அதிக காலம் செலவிட்டிருக்கிறேன். இங்குதான் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அளவு அதிகமான நண்பர்களைப் பெற்றேன். மற்ற எல்லா நிறுவனங்களும் கொடுத்ததை விட இந்த நிறுவனம் எனக்கு நிறையக் கொடுத்தது (பண நோக்கத்தில் பேச வில்லை). எனக்கொரு வேலை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஒரு வேலையைக் கொடுத்தது. என்னை நானாகவே ஏற்றுக் கொண்டது. பின்னர் நான் சென்று சேர்ந்த எல்லா இடங்களிலும் என் திறமையைக் கொடுத்து ஊதியம் பெற்றேன். இங்குதான் இரண்டும் ஒரு சேரப் பெற்றேன். மற்ற நிறுவனங்களிலும் நான் திறமைகளை வளர்த்துக் கொள்ள வில்லை என்று சொல்ல வில்லை. ஆனால், ப்ளூ சிப்பில் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தேன். எல்லாச் சாலைகளும் ரோமாபுரிக்குச் செல்பவை. ரோமாபுரிக்குச் செல்லும் எல்லாச் சாலைகளும் ரோமாபுரியில் முடிய வேண்டும். பின்பு, அங்கிருந்து புதியதொரு சாலையைப் பிடிக்க வேண்டும். ப்ளூ சிப்புடனான என் சாலையும் முடிவடைந்தது. அந்தக் கடைசி நாள் உண்மையாகவே உணர்ச்சி மேலிட்ட நாள். கடைசி நாள், திரும்பவும் மாலைப் பொழுதுதான், உடன் பணி புரிந்த சகாக்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கிய போது, அழுகைக்கு மிக அருகில் சென்று விட்டு வந்தேன் (இந்த முறையும் அழ வில்லை). அதன் பின்பும், அது போன்ற பல மாலைப் பொழுதுகள் பார்த்து விட்டேன். ஆனால், அந்த மாலைப் பொழுதைப் போன்றதொரு மாலை பொழுது அதன் பின் வரவேயில்லை. அன்று நான் எழுதிய நீண்ட மின்னஞ்சலை என் ஆங்கில வலைப்பதிவில் ஆரம்பத்தில் காணலாம். அது முதல்தான் பதிவுலகில் காலடி வைத்தேன்.

அடுத்து, எந்த மனிதனின் வாழ்க்கையிலும் நிகழும் உச்ச கட்டக் கிளர்ச்சி அனுபவமான திருமணம் நடந்தது. திருமணத்துக் கொஞ்சம் முன்பான அந்த நாட்களிலும் அதன் பின்பும், இந்த உலகில் உள்ள எல்லா அற்பமான விஷயங்கள் பற்றியும் அளவிலாமல் உரையாடியும் சண்டை போட்டும் கழித்த எத்தனையோ உறக்கமில்லா இரவுகள் உண்டு. ஆனால், இன்றும் உணர்ச்சி மேலோங்கிய பிரிவாக (அதைப் பிரிவு என்று சொல்வதற்காகவே நீங்கள் சிரிப்பீர்கள் என்று தெரியும்!) நான் நினைப்பது எதுவென்றால், வாழ்வின் மிகக் குறுகிய விடுமுறையான (சரியான நாள்க் கணக்குப்படி பார்த்தால் அதுதான் இதுவரை நான் பெற்ற மிக நீண்ட விடுமுறை; மூன்று வாரங்களும் நான்கு வார இறுதிகளும் அவ்வளவு குறுகியன அல்லவே!) திருமண விடுமுறைக்குப் பின்பு, ஊரிலிருந்து பெங்களூர் திரும்பி வந்து, முதல் நாள் புதுப் பொண்டாட்டியை வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் செல்ல நேர்ந்ததே அந்தப் பிரிவுதான். ஒவ்வொரு நாளும் தங்கள் கணவர்கள் பணிக்குச் செல்லும் போது கோடிக்கணக்கான பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று நன்கறிவேன். அவர்களெல்லாம் வீட்டில் தனியாக இருக்க முடியாது என்றோ அவர்கள் எல்லோருமே தனியாக இருக்கும் போது பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்றோ இல்லை. ஆனாலும், அந்தக் குளிர்ந்த காலைப் பொழுதில் எந்தக் கோளாறும் இல்லாமல் இருந்த என் பைக்கை ஸ்டார்ட் பண்ணுவது எனக்கு அவ்வளவு கடினமாக இருந்தது. 

திருமணத்துக்குப் பின்பு, எல்லா இணைப்புகளும் துண்டிக்கப் பட்டு எனக்கே எனக்கான ஓர் உலகுக்குள் போய் விட்டேன். முழுக்க முழுக்க இருந்த நேரத்தையெல்லாம் குடும்பத்துடன் செலவிட்டேன். அதுதான் முக்கியம் என்று மண வாழ்வில் வென்றோரும் சொன்னார்கள்; தோற்றோரும் சொன்னார்கள். அதன் பின்பு, முதல் முறை நாங்கள் பிரிய நேர்ந்தது, வளைகாப்புக்கு சில நாட்கள் முன்பு என் மனைவியை உறவினர் சிலரோடு எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த பிரிவு. அன்றிரவு வீடு திரும்பி பைத்தியம் போல் அழுதேன். முன்பெப்போதும் இல்லாத மாதிரி! முன்பெப்போதும் நான் இவ்வளவு பைத்தியமாக இருந்ததில்லை. அடுத்து, சில நாட்களுக்குப் பின்பு, நாங்கள் சந்தித்தோம், திட்டமிட்ட படி வளைகாப்பு நடந்தது. அதன் பின்பு, நாங்கள் நீண்ட காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. அதாவது, ஏழு மாதங்கள். அவளைச் சந்திப்பதற்காக, கிட்டத் தட்ட ஒவ்வொரு வாரமும் மேலும் கீழுமாக 700 கிலோ மீட்டர்கள் பயணப் படப் போகிறேன் என்று தெரிந்திருந்தும், அந்த நாள் - அந்த நிமிடம் அந்தப் பிரிவைக் கையாள்வது மிகச் சிரமமாகத்தான் இருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. என்ன சிறுபிள்ளைத் தனமாக... என்று!

அதன் பின்பு, சமீபத்தியது இன்று நிகழ்ந்தது. குழந்தை என்று ஒன்று வரும் முன், எவ்வளவு சிறிய பிரிவாக இருப்பினும், நாங்கள் பிரிந்த போதெல்லாம் என் மனைவியைத்தான் எப்போதும் பிரிந்துணர்ந்தேன். கு.பி.யில் (குழந்தை பிறப்புக்குப் பின்) பிரிவு நேரும்போதெல்லாம், என் மகளைத்தான் அதிகம் பிரிந்துணர்கிறேன் இப்போதெல்லாம். இப்போது கொஞ்ச காலமாகவே இது ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்கும் போது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்பதை நன்கறிவேன். ஏனென்றால், மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக இப்படி எல்லாம் நடந்தது கொண்ட போது அப்படித்தான் நானும் உணர்ந்தேன். ஆனால், இப்போது, இதே பாதையில் முன் சென்ற கோடிக்கணக்கான தந்தைகளின் உணர்வை என்னால் புரிய முடிகிறது. அது ஒரு நல்ல உணர்வுதான் அல்லவா?!

செவ்வாய், அக்டோபர் 19, 2010

மாக்களாட்சி?!

எத்தனையோ கோளாறுகள் இருந்தாலும் மக்களாட்சிதான் இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள அமைப்பு. மற்ற அமைப்புகள் அனைத்திலும் இதை விடப் பெரிய பிரச்சனைகள் (குறைவாக இருக்கலாம்) இருக்கின்றன. மற்ற அமைப்புகள் மக்களாட்சிக்குப் பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்குப் பிரபலமற்றவையாக இருப்பதால், இந்த மக்களாட்சி அமைப்பில் இருக்கிற பிரச்சனைகளைக் களைந்து இதை மேலும் மேம்பட்டதாக ஆக்கத் தேவையான மாற்றங்கள் பற்றிப் பேசுவதே நல்லதாகப் படுகிறது. குறிப்பாக, இந்திய மக்களாட்சியில்.

உலகிலேயே பெரிய மக்களாட்சி அமைப்பு இதுதான் என்றும் அதை இவ்வளவு பாதுகாப்பாக அழிய விடாமல் வைத்திருப்பதே பெரும் சாதனை என்றும் பீற்றிக் கொண்டு இருந்தாலும், கடந்த அறுபதாண்டு கால மக்களாட்சியின் விளைவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை.

நிச்சயமாக நாம் நிறையச் செய்திருக்கிறோம்; ஆனால், அவை நம் தரத்துக்கு மிக மிகக் குறைவு. எத்தனை முறை சாப்பிட்டிருக்கிறோம் - கடந்த அறுபது ஆண்டுகளில் எத்தனை இரவுகள் தூங்கியிருக்கிறோம் என்பது போன்ற மிக அடிப்படையான புள்ளி விபரங்கள் பேசுவதில் பிரயோசனமில்லை. இவ்வளவு அறிஞர்களையும் நிபுணர்களையும் வைத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பட்டினிச் சாவுகள் இல்லாமல் செய்திருக்க வேண்டும்; கல்லாமையை இல்லாமை ஆக்கியிருக்க வேண்டும்; உலக மகா ஊழல்கள் இல்லாமல் செய்திருக்க வேண்டும்.

எது நம்மை அதைச் செய்ய விடாமல் தடுத்திருக்கிறது? சரியான ஆட்கள் சரியான இடத்தில் வைக்கப் படவில்லை. நேருவின் காலத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக நம் அரசியல்வாதிகளின் தரம் கீழே போய் விட்டது என்று சொல்லலாம். திரும்பத் திரும்ப வெவ்வேறு காரணங்களுக்காக திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் போக்கிரிகளையும் நம் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம்.

ஏன் அப்படிச் செய்தோம்? எல்லாக் காரணங்களையும் சேர்த்துப் போட்டு ஒரு மூலக் காரண ஆய்வு (ROOT CAUSE ANALYSIS) செய்து பார்த்தால் கிடைக்கும் விடை - நம் மக்கள் சுத்த மண்ணாங்கட்டிகள் என்பதே. யார் சரியான ஆள் - யார் தவறான ஆள் என்று புரிந்து கொள்ளக் கூடத் தேவையான அளவு அவர்களிடம் கல்வியறிவோ பொது அறிவோ இல்லை.

அப்படியானால், மக்களாட்சிக்கான தகுதி நம்மிடம் உள்ளதா? இல்லை. மக்களாட்சி என்பது ஓரளவு கல்வியறிவு பெற்ற சமூகங்களுக்கானது; யார் எந்தக் கட்சிக் காரர் - எதை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலை.

அப்படியானால், நமக்கான சரியான அமைப்பு எது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எது? அதை யார் முடிவு செய்வது?

நம் ஆட்சிப் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் விட்டு விடலாமா அந்தப் பணியை? அவர்கள்தானே நம் அமைப்பில் இருக்கும் அதி புத்திசாலிகள்! அவர்களிடம்தானே நம் நாட்டுக்கு எது சரிப்பட்டு வரும் என்கிற சரியான புரிதல் இருக்கும்! அவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்கும் பட்சத்தில், மக்களாட்சி அமைப்பால் ஊழல் வீச்சமெடுத்துப் போயிருக்கும் அவர்களுடைய ஒன்னு விட்ட சகோதரர்களான அரசியல்வாதிகளுடனான அவர்களின் முன்னனுபவத்தைப் பயன் படுத்தி விடாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது?

மாவோயிஸ்ட்களிடம் விட்டு விடலாமா? அவர்கள்தாமே பலம் வாய்ந்தவர்கள்! ஏழு மாநிலங்களை ஏற்கனவே தம் பலமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அடுத்த பலசாலிகள்! ஓர் உயிரின் மதிப்பைக் கூட உணர முடியாத அவர்களிடம் எப்படி மக்களுக்கான தேவையைச் சரியாகப் புரிந்து செயல்படும் பண்பை எதிர் பார்க்க முடியும்? அதுவும் மாதச் சம்பளத்துக்கு அரசாங்கப் பணியில் இருக்கும் பாவப்பட்ட பாதுகாப்புப் பிரிவினரின் உயிரின் மதிப்பை உணர முடியாதவர்கள்.

நமக்கு சாலப் பொருத்தமான ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அதைச் செய்வதற்கு சாலப் பொருத்தமான ஆட்கள் என்று நம் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்களால்தான் செய்யப்பட வேண்டும். அது வேறு யாருமில்லை; நம்முடைய இன்றைய தலைவர்கள்தாம். அவர்களில் பெரும்பாலானவர்கள்தாம் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் போக்கிரிகள் இனத்தைச் சேர்ந்தவர்களே! அப்படியானால், சிறந்த அமைப்பைத் தேர்ந்தெடுக்கவே நாம் சிறந்த ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது இப்போதிருக்கிற ஆட்கள் இல்லை. எந்த அடிப்படையில் அதைச் செய்வது? சிறப்பான ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எந்த அடிப்படையில் என்கிற விபரம் தெரிந்து விட்டால், சிறப்பான அமைப்பே கிடைத்ததாகி விடும். அப்புறம் மக்களாட்சிக்கும் தகுதியானவர்கள் ஆகிவிடும்.

சுத்தமாக எந்த விபரமும் இல்லாத மக்களைத் தேர்தலில் இருந்து தள்ளி வைக்க முடியுமா? தான் போடும் ஓட்டால் என்ன பயன் என்று கூடத் தெரியாத ஒரு பிறவி ஓட்டுப் போடுவதில் என்ன பயன்? அப்படி அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படா விட்டால் அவர்களின் நல்வாழ்வைப் பெற்றுக் கொடுக்க அவர்களுக்கான பிரதிநிதியாக யார் இருப்பார் - யார் கவலைப் படுவார்? அவர்களும் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஓர் ஆயுதம் தாங்கிய குழுவை அமைத்து, இருப்பதையெல்லாம் அடித்துப் பிடுங்கி அவர்களின் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

அப்படியானால், எதுதான் முடிவு? முடிவே இல்லை. இயற்கை அதன் போக்கில் அழைத்துச் செல்லும். ஆனால், ஒரு கேள்வி! அவர்களுடைய தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்க முடிகிற இப்போது அவர்களுடைய சரியான பங்கு அவர்களுக்கு வந்து சேர்கிறதா? அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா? அவர்கள் நல்வாழ்வுக்காக யாரேனும் கவலைப் படுகிறார்களா? இல்லை. எப்படியிருந்தாலும் யாரும் கண்டு கொள்ளப் படப் போவதில்லை. விபரமானவர்களுக்காவது அவர்களுக்குச் சேர வேண்டிய சரியான பங்கு போய்ச் சேரும். அதன் பின்பு விபரமில்லாதோருக்கும் மேம்பட்ட மரியாதை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்புக்கே வாய்ப்பில்லாமல் இருக்கிறது இப்போது. அவர்களும் இன்னும் கொஞ்சம் விபரமானவர்களாக மாற ஓர் அழுத்தம் கொடுக்கப்படும். வேட்பாளர்களுக்குத் தகுதிப் பரிசோதனை செய்ய இருக்கும் விதிமுறைகளைப் போல வாக்காளர்களுக்கும் ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் நான் சொல்ல வருவது. 

ஊழல்தான் மிகப்பெரிய பிரச்சனை; சாமானியர்களால் அவர்களின் ஊழல்வாதத் தலைவர்களை அடையாளம் காண முடியாது என்றால், அப்படிப் பட்ட ஏமாற்றுக் காரர்களைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்யும் சட்டம் ஏன் இருக்கக் கூடாது? இருக்கலாம். இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை நிரூபிக்கப் பட்ட குற்றவாளிகளைத் தடை செய்யும் விதத்தில் சட்டம் இருக்கிறது. குற்றம் செய்வோரைத் தடை செய்யச் சட்டம் இருக்கும்போது அதற்குக் காரணமாக இருக்கும் ஏமாளிகளையும் தடை செய்யும் சட்டம் ஏன் இருக்கக் கூடாது? இருக்கலாம். அப்படியொரு சட்டம் இயற்றலாம்.

சரி. அப்படியானால், மசோதாவைத் தாக்கல் செய்து விடலாமா? இல்லை. அது முடியாது. தடைகள் ஏதும் இருக்கின்றனவா? மசோதாவைச் சட்டமாக்குவதில் அப்படியென்ன தடைகள் இருக்குமென நினைக்கிறீர்கள்? யாருமே அந்த மசோதாவை ஆதரிக்க மாட்டார்கள். ஏன்? அது அவர்களையே பிரச்சனைக்குள்ளாக்கும். மசோதாவை ஆதரிக்க வேண்டிய பெரும்பாலானவர்கள் அந்தப் பதவியில் இருப்பதே நிறைவேறப் போகும் சட்டத்தின் படி தகுதி இழக்கப் போகும் மக்களின் தயவில்தான். தனக்குத் தானே யார்தான் குழி பறித்துக் கொள்வார்கள்? தனக்குத்தான் அந்தக் குழி என்று முன்னமே தெரிந்திருந்தும் அதைப் போய் யாராவது செய்வார்களா?!

இது போன்ற அத்தனை குறைபாடுகளையும் வைத்துக் கொண்டு, இது போன்றதொரு மசோதா ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் ஒரு ஊகத்துக்கு வைத்துக் கொண்டு பார்த்தோமானால், இன்றைய நம் அமைப்பில் நான் காண விரும்பும் மூன்று முக்கிய மாற்றங்கள் யாவை?

1. இப்போது நான் சொன்னது. தேர்தல் என்பது என்ன என்று புரியும் ஆற்றல் கொண்டோர் மட்டும் அதில் பங்கு கொள்ளும் வகையில் ஒரு சட்டம். வண்டி ஓட்டுவதற்கு உரிமம் வேண்டும் என்கிற நாட்டில் வாக்களிப்பதற்கு ஏன் அது இருக்கக் கூடாது? பதினெட்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளும் இளைஞர்களும் அவர்களின் முதிர்ச்சியின்மை காரணமாக வாக்களிக்க முடியாது என்றால், அந்த வயதைக் கடந்த பின்பும் முதிர்ச்சியுறாமல் இருப்போருக்கு என்ன சொல்கிறீர்கள்? சட்டவிரோத நடவடிக்கைகளில் வேட்பாளர் தடை செய்யப் பட முடியும் என்றால், அதை ஏன் அதே சட்ட விரோத வேட்பாளருக்கு (ஊழல் சட்ட விரோதம் தானே!) வாக்களித்தவருக்குச் செய்யக் கூடாது? ஒவ்வொரு முறையும் நான் எதற்காகவாவது அரசியல்வாதிகளைத் திட்டும் போதும், ஏதாவதொரு நடுத்தர வர்க்கத்து மூஞ்சி  என்னோடு சண்டைக்கு வரும் - "அது அவர்களுடைய பிரசின்னை இல்லை; வாக்களித்த உன்னைடையது" என்றொரு புத்திசாலித் தனமான வாதம் ஒன்றோடு. அந்தப் புத்திசாலித் தனமான பதிலைக் கேட்டு நான் அடையும் எரிச்சல் இல்லாமல் போக வேண்டுமானால், இது ஒன்றே வழி என நினைக்கிறேன்.

2. இன்று நாம் கொண்டிருக்கும் அதே நோக்கங்களோடே இன்றைய அமைப்பு வடிவமைக்கப் பட்டது. ஆனால் அந்த அமைப்பும் அதன் நோக்கங்களும் தோல்வியுற்று விட்டன. நம் தலையாய தலைவர்களோடு நாம் நேரடித் தொடர்பு கொண்டிராததால் அவர்களை நாமே தேர்ந்தெடுப்பதை அது விரும்ப வில்லை. மாறாக, நமக்குத் தெரிந்தவர்களில் இருந்து நாம் சிலரைத் தேர்ந்தெடுத்தால் (அதாவது சட்ட மன்ற மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள்) நம் சார்பாக அவர்கள் நம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பார்கள். நல்ல சிந்தனை. ஆனால், தோல்வியுற்று விட்டது. ஏன்? பெரும்பாலான நேரங்களில், அவர்கள் ஏன் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை அல்லது அது அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக, அவர்களுடைய வாழ்க்கையே அவர்களின் தலைவரின் தயவில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் கொள்ளைப் பணத்தின் பங்கை வாங்கிக் கொண்டு தம் தலைவனுக்கு எதிராகத் திரைக்குப் பின் வேலைகள் செய்வதில் அளவிலாத நேரத்தை வீணடிக்கவும் இது இடமளிக்கிறது. அதாவது, குதிரை பேரம் பற்றிச் சொல்கிறேன்! அது தடுக்கப் பட வேண்டுமானால், மக்களே அவர்தம் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த பட்சம் நிலைப்புத் தன்மையாவது உறுதிப்படும். சமீப காலங்களில் அளவுக்கு மிஞ்சிய கூட்டணிக் கூத்துகளைப் பார்த்து விட்டு, நிலையான ஆட்சி அமைவது மிகவும் அவசியம் என்று தோன்றுகிறது.மிகப் பெரிய ரிஸ்க் என்னவென்றால், டாக்டர் சிங் போன்றோருக்கு அது வழியே இல்லாமல் செய்து விடும். ஆனால், ஒற்றை இலக்கத்துக்குச் சற்று கூடுதலாக உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதமராக ஆசைப்படும் சில கோமாளி மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் அதே நிலை ஏற்படும். அந்த வகையில் அது நல்லதே.

3. அதுவே உள்ளாட்சித் தேர்தல்களிலும் செய்யப் பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் செய்யப் பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குதிரை பேரத்துக்கு அளவிலாத இடமளிக்கின்றன. அவை நல்ல பல விஷயங்களைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கூடவே பெரும் பெரும் ஓட்டைகளையும் கொண்டு வந்துள்ளன போல்த் தெரிகிறது. நம் பெற்றோர்கள் தம் ஊராட்சித் தலைவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்தது போல் அல்லாமல், இப்போது எல்லா ஊராட்சித் தலைவர்களுமே (ஒன்றிய, மாவட்ட, நகராட்சி மன்றங்களில்) தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். மொத்த நடைமுறையையும் இது சிரிப்பானிக் கூத்தாக்கி விடுகிறது. ஒவ்வோர் உறுப்பினரும் அணி மாறுவதற்காக ஆயுட்காலத் தொகை ஒன்று கொடுக்கப் படுகிறார். அவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்கும் மேலாக பிணைக் கைதிகளைப் போலக் கடத்திச் செல்லப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறார்கள். அந்தச் சில நாட்களில், அவர்கள் அதிகமாகப் பணம் பெற்றுக் கொண்டு அணி மாறி விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக அருகில் உள்ள உல்லாச இடங்களுக்கும் மலை வாசத் தளங்களுக்கும் பண்ணை வீடுகளுக்கும் தூக்கிச் செல்லப் படுகிறார்கள் (குட்டி போட்ட பூனை அதன் குட்டிகளின் பாதுகாப்புக்காக ஒன்பது முறை இடம் மாற்றுவது போல). எங்கள் ஊரில், ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான ஒருவர் (நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் - உறுப்பினர்தான்!) ஒரே தேர்தலில் பெரும் பணக்காரரானதைப்  பார்த்திருக்கிறேன். இது தடுக்கப் பட வேண்டுமானால், இந்தப் பழுது பார்ப்பு நிச்சயம் நடக்க வேண்டும்.

புதன், அக்டோபர் 13, 2010

துரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத்தம்


நம் இதிகாசங்கள், திரைப்படங்கள் மற்றும் கதைகள் ஆகிய எல்லாவற்றிலுமே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று நாயகன்; இன்னொன்று வில்லன். நாயகன் நல்லவன்; வில்லன் கெட்டவன். அவர்கள் இருவரும் எதிரிகள். எதிரி என்பவன் கண்டிப்பாக நமக்கு எதிராகச் செயல்படுபவன் என்பது நமக்கு எப்போதுமே தெரியும். இதிகாசங்களும் கதைகளும் துரோகிகளுக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்திருக்கின்றன. துரோகி என்பவன் யார்? எதிரியை விட எந்த வகையில் அவன் வேறுபட்டவன்? எதிரியைப் போலன்றி, துரோகி என்பவன் நம்மில் ஒருவன்; ஏதோவொரு சூழலில் எதிர்பாராத விதமாக நமக்கு எதிராகத் திரும்பி விடுபவன். பாதி வழியில் பாதையை மாற்றிக் கொண்டவன்! அவனும் அதன் பின்பு நம் எதிரி ஆகியிருப்பான். ஆனால், முதலில் அவன் துரோகி; பின்புதான் பிரதான எதிரி ஆகிறான் - எதிரியை விடக் கூடுதல் எதிரி! துரோகிகளை எது அவ்வளவு முக்கியமானவர்கள் ஆக்குகிறது? கதைக்கு எதிர் பாராத திருப்பத்தைக் கொடுப்பவர்கள் அவர்களே. அந்த நிமிடத்திலிருந்து கதையின் போக்கும் திசையும் மாறுகிறது. அதன் பின்பு முற்றிலும் புதியோதோர் அணுகுமுறை - திட்டமிடுதல் - வியூகமமைத்தல் தேவைப் படுகிறது. நமக்கு எதிரியைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஆனால், துரோகியைப் பற்றி எல்லாம் தெரியும். ஏனென்றால், அவன் நம்மில் ஒருவனாக இருந்தவன். இன்னொரு புறம், நம் எதிரிக்கும் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் இருந்தது. ஆனால், நம் துரோகி கட்சி மாறியபின் எதிரிக்கு நம்மைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கும். இவர்கள் பல காரணங்களுக்காக அணி மாறுவார்கள். பார்வையாளர்கள் என்ற முறையில் நாம் ஒட்டு மொத்தச் சூழலையும் கணக்கில் கொண்டு நாம் ஓர் அணியை ஆதரிப்போம். ஆனால், அவர்களுக்கோ அப்படியொரு முடிவை எடுக்க வேறுபட்ட கட்டாயங்கள் இருக்கலாம்.

உலக வரலாற்றில் காட்டிக் கொடுத்தலுக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகச் சொல்லப் படுபவன் ப்ரூட்டஸ். தமிழகத்தில் எட்டப்பன். வரலாற்றில் ஒவ்வொரு பேரரசும் ஏகப் பட்ட துரோகக் கதைகளைக் கொண்டிருக்கிறது. நம் இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும் விரிவான அளவில் அவர்கள் பற்றிப் பேசுகின்றன. நம் அரசியல்வாதிகள் அதைத் தினம் தினம் செய்கிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில், இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அரசாங்கத்தின் அங்கமாக இருந்த பத்துக்கும் மேற்பட்ட கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள், பூட்டிய அறைக்குள் தம் முன்னாள் எதிரிகளோடு (அதற்கு முன் நண்பர்கள்தாம்) அமர்ந்து, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அரசாங்கத்தை எப்படிக் கவிழ்ப்பது என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பக்கம் வந்தபோதும் அவர்கள் செய்தது துரோகம்தான். தங்கள் கட்சிகளுக்குச் செய்யும் துரோகம் மட்டுமின்றி, கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு அவர்கள் தம் மக்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போரிலும் முன்னாள் பெரும் புலி ஒருவரின் காட்டிக் கொடுத்தலில்தான் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது. பல இடங்களில், தீமையை வெட்ட வெளிச்சமாக்கும் நன்மையும் துரோகம் என்றே அழைக்கப் படுகிறது பாதிக்கப் பட்டவர்களால். எது எப்படியோ, இத்தகைய துரோகங்களைச் செய்ய எது ஒருவரைத் தூண்டுகிறது என்பதைப் பார்த்து விடுவோம்.

சிலருக்கு துரோகம் அவர்களின் வாழ்க்கை முறை. அந்த முடிவை எடுக்க அவர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அவர்களுக்கு ஓர் அணியில் சலிப்பு உண்டாகி விட்டால், வளர்ச்சியைத் தொடர்ந்து கையில் வைத்திருக்க அணியை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு நிலைக்குப் பின் அவர்கள் தேங்கி விடுவார்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அத்தோடு நின்று போய் விடுகின்றன. காலத்தின் கட்டாயமாகி (!) விடுகிற அந்த மகா மாற்றத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும். நல்ல வாய்ப்புக்களுக்காக அடிக்கடி வேலை மாற்றிக் கொள்ளும் நம்மைப் போலவேதான். அவர்களைப் பொருத்த மட்டில் அது ஒரு பிழைப்புக்கான சூட்சுமம். வலியோருக்குத்தான் வாழ்க்கை என்பதுதான் வாழ்க்கை நியதி என்றாகி விட்ட இடத்தில், அவ்வளவு வலிமை இல்லாத அவர்கள் எப்படிப் பிழைப்பு நடத்துவது?  தம் குலப் பெண்டிரையும் குழந்தைகளையும் பசியினின்றும் உலகியல்ப் பிரச்சனைகளில் இருந்தும் காக்க இது ஒன்றே வழி அவர்களுக்கு. வலிமையாய் இர முடியாத போது வலிமையோடு இரு! 'அது சரியா தவறா?' என்ற ஆய்வல்ல நாம் செய்வது. அதற்கான காரணங்கள் அனைத்தையும் கண்டு பிடிக்க முயல்கிறோம். அவ்வளவுதான்.

சில நேரங்களில், இரண்டே வாய்ப்புகள் இருக்கும் போது, இரண்டு குப்பைகளில் எந்தக் குப்பை பரவாயில்லை என்று தேர்ந்தெடுக்க நேர்கிறது (நம் தமிழ்ப் பெருங்குடிக்குத்தான் இது நன்றாகப் புரியுமே!). அப்படி ஏதோவொரு குப்பையோடு இருக்க நிற்பவன், குப்பையின் நல்லதுகளை விட நாற்றங்களைப் பற்றித்தான் அதிகம் சிந்திக்க நேரும். எதிரியை விட நண்பனுக்குத்தான் நிறையப் பாடங்கள் புகட்டத் துடிப்பான். அதுவும் அனுதினமும் எதிரியை நேரில் சந்திக்காத கொல்லைப்புற வேலைகள் செய்யும் அல்லக்கைகளுக்கு எதிரியை வெறுக்கக் காரணமே இராது. எதிரி இந்தக் குப்பையை விட நல்ல குப்பையாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். தற்போதைய பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வாய்ப்புக் கிடைத்தால் அணி மாறி விடுவார்கள். அணி மாறும் போது, பழைய இடத்தை விடப் புதிய இடத்தில் அதிக மரியாதை கிடைப்பது கண்டு குளிர்ந்து போவார்கள். அது அவர்கள் கொண்டு வரும் தகவல்களுக்கான மரியாதை.

இவை எல்லாவற்றிலும் கொடூரமானது சகோதர யுத்தத்தால் நிகழ்வது. எது மாவோயிஸ்ட்களை அவர்களின் கொள்கைச் சகோதரர்களான மார்க்சிஸ்ட்களின் பரம எதிரியான மமதா பானர்ஜீயுடன் கை கோக்க வைக்கிறது என்று எப்போதுமே வியந்திருக்கிறேன். நாமெல்லாம் அவருக்கு அரசியலில் மட்டும்தான் எதிரிகள் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த போது எது பிரமோத் மகாஜனின் சொந்தச் சகோதரனையே அவருடைய எதிரியாக்கி உயுரைக் குடித்தது? 1996-இல் எது தன் சொந்தக் கட்சியின் வேற்று மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்களையே ஜோதிபாசுவைப் பிரதமராக விடாமல் தடுத்தது? 1997-இல் எது தன்னைத் தானே தமிழினத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவரை இன்னொரு தமிழகத் தலைவர் பிரதமர் ஆகவிடாமல் தடுக்கும் கேவலமான வேலையைச் செய்ய வைத்தது? எது சில தேசியக் கட்சிகளை அவர்களுடைய கொள்கைக்குத் தலைகீழான கொள்கை கொண்ட திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வைக்கிறது (கொள்ளையடிப்பது அவர்கள் வெளிப்படையாகச் சொன்ன ஒரு கொள்கையல்ல என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!)? எது பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானை தொலைவில் இருக்கிற நண்பன் ஒருவன் இந்தியாவுக்கு எதிராகச் சண்டையிட உதவ வைக்கிறது? எங்கள் ஊரில், கொஞ்ச காலம் முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஒன்றில், ஒரே கூட்டணியில் இருந்த ஒரு பொதுவுடைமைக் கட்சியை வீழ்த்த இன்னொரு பொதுவுடைமைக் கட்சிக் காரர்கள் எதிரியுடன் திரைக்குப் பின் கூட்டணி போட்டு வேலை செய்தார்கள். இதற்கெல்லாம் தூண்டு கோலாக இருப்பது சகோதர யுத்தம். முதலில் சகோதரர்களுக்கு மத்தியில் ஏன் சண்டை வருகிறது?

1. எதிரியை விட சகோதரனிடம் எதிர் பார்ப்புகள் அதிகம். என் சகோதரன் என்னை விட நன்றாக இருக்கும் போது, அவனுக்குச் செய்து கொள்வதை விட எனக்கு அதிகமாகச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். அவனுடைய வரையறைகள் எனக்குப் புரிவதில்லை. நான் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும்; நிபந்தனையில்லாமல் எனக்கு உதவ வேண்டும். அப்படிச் செய்யாதபோது, நான் மூடிய அறைகளில் எதிரியோடு சேர்ந்து திட்டமிட ஆரம்பித்து விடுகிறேன். எங்கள் இருவருக்கும் அது வெற்றி-வெற்றி, எனக்கும் எதிரிக்கும். இருவருக்குமே வீழ்த்தப் பட வேண்டியது ஒரே ஆள். என் சகோதரனின் தகவல்கள் மற்றும் இடங்களை எதிரியை விட நான் எளிதில் அணுக முடியும் என்பதாலும் என் வேலையை எளிதாக்க எதிரி ஏற்கனவே ஏகப்பட்ட களப்பணி செய்திருக்கிறான் என்பதாலும் இது எங்கள் இருவருக்குமே எளிதாகி விடுகிறது.

2. மற்றவர்களை விட நம் சகோதரர்களோடு நாம் நெருக்கமாக இருக்கிறோம்; அருகருகில் அதிக நேரம் செலவிடுகிறோம். எனவே, இருவருக்குமிடையில் அதிகமான பிரச்சனைகளுக்கு அது வாய்ப்பளிக்கிறது. எல்லா இடங்களிலுமே - தூங்குமிடத்தில், திங்குமிடத்தில், விளையாடுமிடத்தில், உடுத்துமிடத்தில், இணைந்து செய்கிற எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்கிற இடத்தில், பிரச்சனைகளை உண்டாக்கவும் அல்லது பிரச்சனைகளுக்கு உள்ளாகவும் வாய்ப்பிருக்கிறது.ஒரு பிரச்சனை உருவாக்கி விட்டால், அதைப் பற்றி விடாமல் பேசவும் ஒவ்வொருவர் நியாயத்துக்காகவும் விவாதம் செய்யவும் அளவிலாத வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பொதுவான இடங்கள் மட்டுமில்லை, பிரச்சனைகளைப் பற்றிப் பரிமாறிக் கொள்ள - ஆதரவு தெரிவிக்க - ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ அறிவுரை சொல்ல என எல்லாத்துக்கும் பொதுவான ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். இது பிரச்சனையைத் தீர்க்காமல் பெரிதாக்கத்தான் செய்யும். மறந்து விட்டு முன் சென்றிருந்தால் காலம் களிம்பு போட்டு ஆற்றியிருக்க வேண்டிய பிரச்சனை அந்த எளிதான தீர்வை இழந்திருக்கும். எந்த இருவருமே நீண்ட காலம் சேர்ந்திருப்பது என்பது ஒத்தே வராதது. யாராக இருந்தாலும் சரி - பெற்றோர்-குழந்தை, தம்பதியர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள்... யாராக இருந்தாலும்!

3. ஒரு கட்டத்துக்குப் பின்பு, சகோதரர்களுக்கு அவர்களுக்கென்று தனித் தனி நலம் விரும்பிகள் வந்து விடுவர். அவர்கள் யாவரும் இருவரும் ஒற்றுமையாக இருக்க விரும்புவதை விட அவர்களுடைய ஆள் நன்றாக இருக்க விரும்பவதையே முதல் நோக்கமாகக் கொண்டிருப்பர். இந்த இடத்தில், தங்களுக்கும் தம் ஆளுக்குமான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக, சிக்கலில் இருக்கும் இவருடைய நலம் விரும்பிகளுமே அவரவர் ஆளைக் குளிப்பாட்டி எடுப்பார்கள். மனிதர்களின் சொந்த வாழ்க்கைச் சூழலில் இருந்து சொல்ல வேண்டுமென்றால், வாழ்க்கைத் துணைகளும் மாமனார் வீட்டு ஆட்களும் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. மண வாழ்வில் மட்டுமல்ல; எல்லா இடங்களிலுமே வெவ்வேறு பெயர்களில் துணைகளும் மாமனார் வீட்டு ஆட்களும் இருக்கின்றனர். ஒரு சில நாடுகளின் வாழ்க்கைத் துணையாக இருக்கும் சில பெரிய நாடுகள் அவர்களுக்கு மற்ற சகோதர நாடுகளுடன் இருக்கும் உறவுகளைக் கெடுத்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, இலங்கையும் சீனாவும் அப்படிப் பட்ட வாழ்க்கைத் துணைகள் போல் ஆகி விட்டன. இலங்கையின் இந்தியாவுடனான சகோதர உறவைச் சீரழிக்காமல் விடாது சீனா. சில வாழ்க்கைத் துணைக் கட்சிகள் இருக்கின்றன. அவை தம் துணைக் கட்சிகளைக் குறிப்பிட்ட கட்சிகளுடன் சேரவே விடாமல் பார்த்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, இடதுசாரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அப்படியொரு வலிமையான துணையை வைத்துக் கொண்டு அவர்களை பா.ஜ.க.வுடன் சேரவே விடுவதில்லை.

4. இயல்பான மனிதக் குறைபாடொன்று இருக்கிறது. யார் எவ்வளவு பெரிய ஆளானாலும் சகித்துக் கொள்வேன். என் சகோதரன் என்னைப் போலவே இருக்க வேண்டும். யாரோ ஒரு மூன்றாம் மனிதன் வளர்கையில் எனக்கு ஒன்றும் நேர்வதில்லை. ஆனால், என்னுடைய சகோதரன் என்னை விடப் பெரிய ஆள் ஆகையில் நான் பல விஷயங்களை நினைத்துக் கவலைப் பட வேண்டும். என்னுடைய மரியாதை குறையும். என்னைக் கீழாகப் பார்ப்பார்கள். அவனுடைய பேச்சை நான் கேட்க வேண்டும். என் வாழ்க்கைத் துணையும் குழந்தைகளும் அவனுடைய வாழ்க்கைத் துணைக்கும் குழந்தைகளுக்கும் அடங்கிப் போக வேண்டும். திரும்பவும் சொல்கிறேன். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைக் கதைகள் எல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகளே. எல்லா விதமான அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.

5. எதிரி என்பவன், என் எல்லாக் கருத்துக்களுக்கும் எதிரான கருத்துக்களைக் கொண்டவன் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் திரும்பத் திரும்பச் சொல்லி விட்டவன்; அதன் படியே எப்போதும் நடந்து வருபவன். ஆனால், என் சகோதரன் என்பவன் என்னுடனேயே இருப்பதாக காலமெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அவன் ஏன் எனக்குப் பிடிக்காத வேலைகள் செய்கிறான்? அவன் செய்கிற வேலைகள் எதிரி செய்பவற்றைப் போல மோசமானவை இல்லையென்றாலும், நம்மால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை; ஏனென்றால், அவன் நம்மைப் போலவே சிந்தித்திருக்க வேண்டும் - இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று எண்ணுகிறோம். எதிரி முழுமையான எதிரியாக இருக்க வேண்டும் - பங்காளி முழுமையான பங்காளியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அது இயற்கைக்கு எதிரானது. திரைப்படங்களில்தான் நல்லது மட்டுமே செய்கிற முழுமையான நாயகர்களையும் கேட்டது மட்டுமே செய்கிற முழுமையான வில்லன்களையும் காண முடியும். நிஜ வாழ்க்கைச் சமன்பாடுகள் நம் கண்ணுக்குத் தெரிவதை விடக் குழப்பமானவை - சிக்கலானவை.

இதனால்தான் நாடுகள் ஒற்றர் பிரிவு வைத்திருக்கின்றன; அரசியல்வாதிகள் யாரையும் நம்புவதில்லை; நிறுவனங்கள் பாதுகாப்புக் கொள்கைகள் கொண்டிருக்கின்றன; தனி மனிதர்கள் நல்வாழ்க்கை வாழும்போது தம் சகோதரர்களுக்கு உதவுமாறு சொல்லித் தரப் படுகிறார்கள்.

ஒன்று சொல்லுங்கள் - இன்று தேசியப் பாதுகாப்பு பற்றி அதிகம் கவலைப் படுவது யார்? வெளியுறவுத் துறையா அல்லது உள்துறையா? இதனால்தான் நம்மைச் சுற்றியிருப்போர் அனைவரையும் நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். நம் அளவுக்கு மகிழ்ச்சியாக! முடிந்தால், நம்மை விட!! அதனால்தான் அரசாளுகை என்பது அரசாளுகை மட்டுமல்ல. அரசாளுகை என்பது நிர்வாகத்துக்கும் மேல் நிறைய விஷயங்கள் கொண்டது. இல்லையேல், மாற்றங்கள் நிகழும்; அத்தோடு அரசாங்கமே மாற வேண்டியதாகி விடும். மனித இருப்பு இருக்குமிடமெல்லாம், அடிப்படை வேலைகளுக்கு மேலாக, துரோகிகளை ஒற்று செய்யவும் ஒற்றர்களையே ஒற்று செய்யவும் போதுமான ஆற்றல் போயாக வேண்டும். மக்களையும் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் விலை கொடுத்து, துரோகிகளை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக சமரசங்கள் செய்யப் படும்.

மரியாதை - அளவுக்கு மிஞ்சினால்?

50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததென்று தெரிய வில்லை. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலான என் பணியிட அனுபவத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால், சக மனிதர்களை மதிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றோர் எல்லையிலா வளர்ச்சி பெறுகிறார்கள். அது போலவேதான் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடோரும். எந்தத் துறையிலும் வளர்ச்சி என்பது அந்தத் துறை சார்ந்த தொழில் நுட்ப அறிவால் மட்டும் கிடைப்பதில்லை - அது சக மனிதரோடு பழகும் திறம் முதலான பல காரணிகளால் நிர்ணயிக்கப் படுவது - பழகும் திறம்தான் அந்தப் பட்டியலில் முதன்மையாக இருப்பது என்பதெல்லாம் அதிகமானோருக்கு அதிகமான அளவில் வெளிப்படியாகத் தெரிந்து விட்டது இப்போது. பழகும் திறம் என்று சொல்லும் போது, அது மனிதர்களை மதிப்பது மட்டும் ஆகாது.  சரியான முறையில் அவர்களைக் கையாள்வதும் அடங்கும். அதாவது, மனிதர்களுடன் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை அல்லது பங்களிப்பைப் பெறுவது. தேவைப் படும் போது அவர்களைக் கடுமையாக நடத்துவதும் அதில் அடக்கம். சொல்லவே வேண்டியதில்லை - கடுமையாக நடந்து கொள்வதற்காகவோ அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படும்போதெல்லாம் அந்தத் திறத்தைச் சோதித்துக் கொள்வதற்காகவோ கடுமையாக நடந்து கொள்ள வேண்டியதில்லை.

குடும்பத்துக்குள்ளும் சொந்தபந்தங்கள் மத்தியிலும் பெரியவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒருவனாகப் பார்க்கப் படுவதால், அவர்களைச் சரியாக மதிப்பதில்லை என்ற குற்றச் சாட்டுக்குப் பல முறை ஆளாகியிருக்கிறேன். அவர்கள் என்னுடைய குடும்பத்தினர் என்பதால் அது தேவையில்லை என்றே நான் நினைத்தேன். மரியாதையில்லாமல் பேசுவேன் என்றோ தகாத வார்த்தைகளில் திட்டுவேன் என்றோ அர்த்தமில்லை அதற்கு. அவர்களுடைய கோணத்தில், என் பாவனைகள் மற்றும் கருத்துச் சொல்லும் விதம் ஆகியவை மரியாதைக் குரியனவாக இல்லை. நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், எதையும் செய்யும் முன்பு நான் எப்போதுமே அவர்களுடைய கருத்தைக் கேட்க வேண்டும்; அவர்கள் சொல்படியே நடந்து அவர்களுக்கு என் மரியாதையைக் காட்ட வேண்டும். மாறாக, நான் அவர்களிடம் கருத்துக் கேட்டுச் செல்வதும் இல்லை; அப்படியே வழிய வந்து சேர்கிற கருத்துக்களையும் பெரிதாக மதித்துச் செயல்படுத்த முடிவதில்லை. பெரும்பாலான நேரங்களில், என் திட்டங்கள் யாருடைய மதிப்பீட்டுக்கும் உள்ளாகாமலே செயல்படுத்தப் பட்டு விடுகின்றன. என் திட்டங்களை மேம்படுத்திக் கொள்ளவோ மதிப்பீடு செய்வோரை மகிழ்ச்சிப் படுத்தவோ ஒருபோதும் மதிப்பீடு செய்துகொள்ள முயன்றதில்லை.

மற்றொரு புறம், நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் (அந்த மனிதர் எவ்வளவு நல்லவர் அல்லது கொடூரமானவர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு) சரியாக மதிப்பது பணியிடத்தில் வெற்றி பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்றொரு கருத்தை மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொண்டேன். பணியிடத்தில் மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியேறி விட்டால், வெளியில் சந்திக்கிற அனைவரிடமுமே மரியாதையாக நடந்து கொள்வது தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். இன்று நாம் நற்குணங்கள் என்று சொல்லிக் கொள்கிற எல்லாக் குணங்களுமே சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவையே என்கிறார் 'சுயநலம் எனும் நற்பண்பு' (THE VIRTUE OF SELFISHNESS) நூலை எழுதிய அயன் ராண்ட். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் நற்பண்புகளைப் பழகிக் கொள்வதே நம்முடைய அமைதியான வாழ்க்கைக்காகவே ஒழிய ஊரில் உள்ள எல்லோருக்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுக்க அல்ல. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட பின்பு, சில பக்கங்களுக்கு மேல் அவருடைய நூலை என்னால் படிக்க முடியவில்லை. ஆனாலும் இந்தக் கருத்தை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் கல்லூரிக் காலங்களில் ஒரு கவிதையில் எழுதினேன் - "நான் மனிதர்களுக்கு அடுத்த படியாக அதிகம் அஞ்சுவது பாம்புகளுக்கும் நாய்களுக்கும்" என்று. இதை எந்த அளவு நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது ஆதரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் மனதுக்கு அடிக்கடி வந்து செல்லும் நான் எழுதிய மிகச் சில வரிகளில் இதுவும் ஒன்று. அது அப்படியே என்னையும் என் பயன்களையும் பற்றிப் பிரதிபலிக்கிறது. எனவே, இது என் நீண்ட காலம் என் மனதில் நிலைத்து நிற்கும். அந்நியர்களைக் கண்டால் எனக்கொரு பைத்தியக் காரத்தனமான பயம். பாம்புகளும் நாய்களும் அதிக பட்சம் கடிக்கத்தான் முடியும். ஆனால், நான் பார்த்த அந்நியமான செயல்கள் எல்லாமே அந்நியர்களால் (அதாவது மனிதர்கள்) செய்யப் பட்டவை. இது போல் இப்படி நடந்ததில்லை என்று திகைக்க வைக்கிற எல்லாக் குற்றச் செயல்களுமே மனிதர்களால் செய்யப் பட்டவையே; மற்றெந்த உயிரினங்களாலும் அல்ல. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பாதுகாப்பற்ற இந்த உலகில் பாதுகாப்பாக இருந்து கொள்ளும் ஒரே காரணத்துக்காக மனிதர்களை மதிக்கும் இந்த நற்பண்பை வளர்த்துக் கொண்டேன். எடுத்துக் காட்டாக, ஒரு தெருச் சந்தையில், கவனமாகப் பேசுகிற ஒருவரை விட அதிகமாக வார்த்தையை விடுபவன்தான் முதலில் அறை வாங்குகிறான் (இது ஒரு முடிவல்ல - சவால் விடத் தக்க ஒரு கருதுகோளே. அதைத்தான் இக்கட்டுரையின் மிச்சப் பகுதியில் நானும் செய்யப் போகிறேன்). இதுதான் என்னை அந்நியர்களிடமும் வெளியாட்களிடமும் என் நடத்தை பற்றிக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் படி மாற்றியது.

இப்போது, அப்படியே நம் வீட்டு நிலவரத்தைப் போய்ப் பார்ப்போம். நான் என்ன செய்தாலும் பேசினாலும் என் குடும்பத்தினர் ஒருபோதும் என்னிடம் எதிர் பாராத விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால்தான் அவர்களோடு என் பேச்சுத் தொனியிலும் முக பாவங்களிலும் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இது என் குணாதிசயமும் அதற்கான காரணங்களும் பற்றியது. இதற்கு அப்படியே தலைகீழாக நடந்து கொள்வோரும் கண்டிருக்கிறேன். குடும்பத்தினருடன் அளவிலாத நல்ல பிள்ளையாக இருப்பார்கள். அவர்களுக்குப் பிடித்தோரை மாசு படிந்த காற்று கூடத் தொடாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அந்நியரிடம் பேருந்தில் இடம் போடுவது போன்ற கேவலமான விஷயங்களுக்காகக் கூட எந்த விதமான சண்டைக்கும் தயங்காமல் தயாராக இருப்பார்கள். அவர்களுடைய காரணம் என்னவென்றால், "என் குடும்பத்தாரின் முகத்தை நான் ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும்; காலம் முழுக்க அவர்களோடே வாழ வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குப் பின் ஓர் அன்னியரை நான் திரும்பச் சந்திக்க வேண்டியதே இல்லாமல் போகலாம் அல்லது அவர்களை வேண்டுமென்றே தவிர்க்க விரும்பினால் அதையும் செய்யலாம்.". அதுவும் சரியாகத்தான் படுகிறது. ஆனால், என் சிந்தனாவோட்டம் பாதுகாப்பு என்ற கோணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால், அவர்களுடையதோ... தெரியவில்லை எதிலிருந்து என்று.

பெரியோரை மதிப்பது நம் கலாசாரத்தில் சிறந்த நற்பழக்கம். ஒருவரின் வயதுக்கு அளவுக்கதிகமான மரியாதை கொடுக்கிறேன். ஓர் இளம் வயது அலுவலருக்குக் கீழ் பணி புரியும் வயதான உதவியாளரைக் காணும்போதெல்லாம் என் மனம் வெம்பும். அலுவலரின் தந்தை வயது கொண்ட அவருடைய உதவியாளர் அவர் முன் மரியாதைக்காகக் குனியும் போது, அதற்காக எவ்வளவோ வருந்தி இந்த உலகின் விதிகள் அனைத்தையும் தூற்றுவேன். அது போன்ற காட்சிகள் பல நாட்களுக்கு என்னோடு பயணிப்பன. இது ஓர் இந்தியப் பிரச்சனை என்றே நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகவே இராமல் இருக்கலாம். உரிய (பல நேரங்களில் தேவைக்கும் மேல்) மரியாதையைக் குறை வைக்காமல் கொடுத்து விடுவதால், வெளியுலகில் பெரியவர்கள் ஏகப்பட்ட பேர் என்னை மிகவும் நேசிக்கிறார்கள் (வீட்டில் இருக்கும் பெரிசுகள் இன்னமும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்). அப்படி நடந்து கொள்வதன் மூலம் நிறைய பலன்களை அறுவடை செய்திருக்கிறேன். அவர்களை மதியாதோரை விட நான் கூடுதல் நிம்மதியோடு வாழ்ந்திருக்கிறேன். ஆனால், வயதான ஒரே காரணத்துக்காகச் சிலரை அவர்களுடைய தகுதிக்கு மிஞ்சி மதித்ததால் எண்ணிலடங்காப் பிரச்சனைகளுக்கும் உள்ளாகியிருக்கிறேன் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றித் தான் இன்று உங்களோடு பேச விரும்புகிறேன்.

தன்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டு எல்லோரும் தற்போதை விடத் தன்னை அதிகமாக மதிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிற மறை கழண்ட பேர்வழிகள் நிறையப் பேரைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் இருப்பதே நல்லது. இல்லையேல், எப்போதும் அவர்களுடைய பேச்சைக் கேட்பதும் அவர்களைத் திருப்திப் படுத்துவதுமான முடிவில்லா வலைக்குள் சிக்கி விடுவோம். இந்த ஆட்கள் வெளிப்படையாகவே அவர்கள் எதிர் பார்க்கும் மரியாதை பற்றிச் சொல்லி விடுவார்கள். கண்டு கொள்ளாவிட்டால், தொடர்ந்து புலம்புவார்கள். அவர்கள் புலம்பல்களைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அவர்களையும் பெரிதாக மதிக்க ஆரம்பித்தோமேயானால், முடிந்தது கதை. அவர்கள் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகும். நீங்களும் தரத்தைக் கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும். அது கண்டிப்பாக உங்களைச் சிக்கலில் கொண்டு போய்த்தான் விடும். அவர்கள் பேச்சைக் கேட்பதை விடக் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. அவர்கள் மரியாதைப் பிச்சைக் காரர்கள். மரியாதையைப் பெறுவதற்கும் கேட்டு வாங்குவதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள். துரதிர்ஷ்ட வசமாக, கேட்டுப் பெறுவதில்லை மரியாதை; அவர்களின் செயல்பாட்டைக் கண்டு அது இயல்பாகவே வரவேண்டும் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது. விளக்கினால் புரியவும் செய்யாது.

அடுத்த பிரிவினர் தம்மைத் தாமே பெரிதாக நினைத்துக் கொள்வோர் அல்ல; ஆனால் நாம் அவர்களை அப்படி ஆக்கி விடுகிறோம். அவ்வளவு மரியாதைக்கு அவர்கள் தகுதி உடையோரும் அல்ல; இதுவரை இந்தப் பூவுலகில் எவரும் அப்படியொரு மரியாதையை அவருக்குக் கொடுத்துப் பழக்கியிருக்கவும் மாட்டார். அப்படியொரு மரியாதையை நம்மிடமும் அவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். வரலாறு காணாத மரியாதை கிடைப்பதைக் கண்டு அவர்களைப் பிடிக்கவே முடியாது; அதுவே அவர்கள் கோமாளி போல நடந்து கொள்ள வழி வகுக்கும். அப்படிப் பட்ட மரியாதையைக் கொடுப்பதால், அவர்களைப் பற்றிய உங்கள் சரியான மதிப்பிடலுக்காக (நமக்குத்தான் தெரியும் அது எவ்வளவு சரி என்று!) அவர்களுக்கு உங்களை மிகவும் பிடித்து விடும். ஆனால், மெதுவாக உங்களிடம் விளையாட்டுக் காட்ட ஆரம்பிப்பார்கள். அதுவே பின்பு மிக அதிகமாகி விடும். ஏனென்றால், அவர்களுடைய வாழ்க்கையிலேயே அவர்களை ஒரு பொருட்டாக மதித்த ஒரே ஆள் நீங்கள்தானே. அவர்கள் நினைப்பார்கள் - 'சரி, இந்த ஆள் நம்மளைப் பெரிய ஆள் என்று நினைக்கிறான். எனவே, நம்முடைய பெருமையை அவ்வப்போது காட்டிக் கொண்டே இருந்தால்தான் மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.'! ஆனால், அவர்கள் உணரத் தவறி விடுவது என்னவென்றால், இந்த விளையாட்டில் அவர்கள் மரியாதையை இழக்கத்தான் செய்கிறார்கள். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது அறிவுரைகள் செய்வார்கள். அதுவும் அளவுக்கு அதிகமாக. உங்களுக்குச் சரியான வழிகாட்டி அவர்கள்தாம் என்று காட்டிக் கொள்வதற்காக நிறையக் குறைகளைக் கண்டு சுட்டிக் காட்டுவார்கள். நிரந்தரமாக அவர்களிடம் இருந்து தப்பிக்கும் வரை அல்லது பொளேர் என்று கன்னத்தில் வைத்து "பொத்திக்கிட்டு போறியா வாயை!"  என்று சொல்லும் வரை இது தொடரத்தான் செய்யும். அறையை வாங்கிக் கொண்டு, தன்னை மதித்த ஒரே ஆளையும் இழந்து விட்டோமே என்று மிகவும் வருத்தப் படுவார்கள்.

மேலே சொன்னது போலவே இருக்கும் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசம் - அவர்களைப் போலல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே உங்களை இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. தம்மை மதிப்பதை உணர்ந்த நிமிடம் முதல் உங்களை மனிதக் கழிவு போல நடத்துவார்கள். அவர்களைப் பொருத்த மட்டில், நீங்கள் ஒரு வெட்டிப் பேர்வழி, ஏனென்றால் நீங்கள்தான் உங்களை விடக் கேவலமான அவர்களை மதிக்கிறீர்களே. அவர்களுக்கு நீங்கள் மதிப்பைக் கூட்டக் கூட்ட அவர்கள் குறைப்பார்கள். சாகும் வரை விடவும் மாட்டார்கள். உங்கள் சாவு அல்லது அவர்கள் சாவு. இந்தக் கோமாளிகளுக்கும், அவர்கள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக இவ்வளவு மரியாதைக் காட்டியது நீங்கள்தாம். எப்படி உங்களை விட முடியும்? அறைந்து வாயைப் பொத்திக் கொண்டு போகச் சொன்னாலும், அவர்களுக்கு நடந்ததற்காக வருத்தப் படுவார்களே ஒழிய உங்கள் உறவை இழந்ததற்காக அல்ல. அவர்களுக்கு நேர்ந்த அநீதிக்குப் பதிலடியாக, அலுவலகத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து உலகமெலாம் உங்கள் பெயரைக் கெடுக்கும் வேலையில் இறங்கி விடுவார்கள். :)

எனவே, இதன் மூலம் நாம் செய்யும் முடிவு என்னவென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவு மரியாதை - மதிப்புக் கொடுப்பது என்பதை அளந்து கொடுப்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பல நேரங்களில், அளவுக்கதிகமாகக் கொடுத்து விட்டால் நம்மில் பலருக்கு அதைத் திரும்பப் பிடுங்குவதோ குறைத்துக் கொள்வதோ சிரமமாகி விடும். அதை (திரும்பப் பிடுங்குவது அல்லது குறைப்பது) மிக எளிதாகவும் வெற்றிகரமாகவும் செய்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டியதில்லை. அவர்கள் சாமர்த்திய சாலிகள். அவர்களுக்கு எதுவுமே பிரச்சனை இல்லை. எதை அளக்க முடியாதோ அதை வளர்க்க முடியாது என்பது என் தொழில் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு பாடம். ஆனால், இவர்களுக்கு அளத்தலும் தேவையில்லை; வளர்த்தாலும் தேவையில்லை. எல்லாமே அந்தந்த நேரத்தில் கை வந்து விடும் அவர்களுக்கு. ஆனால், நம்மைப் போன்று எளிதில் ஏமாந்து போவோருக்கு, மதிப்பை மதிப்பிட்டு - மதிப்பெண் இட்டுக் கொடுப்பது கண்டிப்பாக உதவும். அளவுக்கதிமாகக் கொடுப்பதால் நாம் ஒன்றும் இழப்பதில்லை என்பது போலத் தெரிந்தாலும், தவறான ஆட்களுக்கு மித மிஞ்சிக் கொடுப்பதால் கண்டிப்பாக இழக்கத்தான் செய்வோம் என்பது என் அபிப்ராயம். அப்படி இழப்பது பெருமளவு நிம்மதியும்தான்

உயிர்களின் எதிரிகள்

அணு குண்டு வீச்சில்
உயிர் பிழைத்த கரப்பான் பூச்சிகளெல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன...
தம் எதிரிகளின் முடிவை!
எல்லா உயிர்களுக்கும் எதிரிகள் அவர்களே!!
பாவிகள்
எல்லைக்கு இருபுறமும் இருக்கிறார்கள்!!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண் என் பணியில் கிடைக்கும் சம்பளம். எழுத்து என் வேட்கை. எண் ஈட்டி வருவதும் எழுத்து படைப்பதும் செய்து கொண்டே இருப்பேன். என்னால் முடியும் வரை. எண் என் குடும்பத்துக்காகவும் எனக்காகவும். எழுத்து எனக்காக மட்டும். என் சமூகத்துக்காகவும் எண் ஈட்டி வரும் ஆற்றல் கிட்டுமானால், என் சமூகத்துக்காகவும் என் எழுத்து பயன்பட முடியுமானால் அதை விடப் பேருவகை ஒன்று இருக்க முடியாதெனக்கு. என் பிறவிப் பெரும்பயன் எய்தி விட்டதாகக் கூடக் கொள்ளலாம். இல்லையேல், என் குடும்பத்துக்கும் எனக்குமாகவாவது எண் ஈட்டிக் கொண்டு வருவேன்; எனக்கு மட்டுமாகவாவது எழுதிக் கொண்டிருப்பேன்.

சம்பளம் எவ்வளவு வந்தாலும் பற்றாதுதான். சமாளித்து வென்றே தீர வேண்டும். எழுதி எழுதி பூமியின் சுழற்சிப் பாதையை மாற்றிய எழுத்தாளர் எவருமில்லைதான். சினிமா பார்த்துத் திருந்தி விடுகிற நல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிற நம் மண்ணில் எழுத்தைப் படித்துப் பயனடைகிற பெருமக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எழுத்து படிப்பவரையும் எழுதுபவரையும் சிந்தனையைப் பட்டை தீட்டப் பணிக்கிறது. என்னுடையது அதற்கும் பயன்படாத எழுத்தாகுமானால் குறைந்த பட்சம் பொழுதுபோக்குக்காகவாவது பயன்படுகிற மாதிரி எழுதிக் தள்ளுவேன்.

எதற்கும் பயன்படாது போனாலும், எனக்குத் தெரிந்து கண்டிப்பாக ஒரு பயன் இருக்கும். என் வயிற்றெரிச்சலையெல்லாம் அள்ளி அள்ளிக் கொட்ட ஒரு இடமாவது கிடைக்கும். சும்மா இருந்த காலத்தைவிட டைரி எழுதும் காலத்தில் அதற்கொரு வடிகால் கிடைத்ததை நன்றாக உணர முடிந்தது. எதுவுமே செய்ய முடியாத பல பிரச்சனைகளுக்குத் தீர்வு அவை பற்றி இன்னொரு சக மனிதனிடம் போய்ச் சொல்வதன் மூலம் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன். அந்தச் சகா காது கொடுத்துக் கவனிக்கக் கூடப் பொறுமை இல்லாதவராக இருந்தாலும். எழுதுவதென்பது அதையே பலரிடம் போய்ச் சொல்கிற உணர்வைக் கொடுக்கிறது. யாருமே அதைப் படிக்க மாட்டார்கள் என்றாலும் கூட. எனவே அதைச் செய்து கொண்டே இருப்பேன்.

எண்ணையும் எழுத்தையும் கலக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. அதாவது, எழுத்தையே முழு நேரத் தொழிலாகக் கொள்வது பற்றிச் சொல்கிறேன். அது பற்றியெல்லாம் பேச இது அதி சீக்கிரம் என்றாலும், திட்டமிடுவதொன்றும் குற்றமில்லையே. அப்படிச் செய்வதன் மூலம் இரண்டுமே மேன்மையடையும் வாய்ப்பு ஒரு வேளை கிட்டுமானால் அதைக் கொலைக் குற்றம் போல்க் கருதி ஒதுங்கி ஓட மாட்டேன். கண்டிப்பாகக் கையிலெடுத்துச் செய்வேன். நன்றாகப் படித்துப் புரிக. “இரண்டுமே மேன்மையடையும்” என்கிற சூழ்நிலையில் மட்டுமே.

எழுத்தை முழு நேரத் தொழிலாகச் செய்வதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை இப்போதைக்கு. எழுதுபவர்கள் அவ்வளவு மதிக்கப் படும் இடமாக நம் இடம் இல்லை என்பது ஒன்று. எழுத்து தவிர்த்து வேறு ஏதாவது சாதித்துக் கொண்டும் வந்து எழுதினால் எழுத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக மதிப்பார்களே என்றும் ஒரு நம்பிக்கை. “அதிக பட்சம் உன்னால் என்ன பண்ண முடியும்? உன் மச்சு வீட்டுக் கதவை மூடிக் கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து எழுதத்தானே முடியும்?” என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல மெனக்கெட வேண்டியதில்லையே.

எழுத்தை மட்டுமே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லை. இயற்கையாகவே வேறு ஏதாவதொரு சாதனையும் செய்ய வாய்ப்பு இருக்கிற ஒரு துறையில் வந்து சேர்ந்து விட்டதாலும் அந்தத் துறை வெறுக்கும் அளவுக்கு வேலைகள் கொண்டு இல்லாததாலும் இதையும் தொடரலாமே என்றொரு எண்ணம். ஆனால், ‘இந்த வேலையைச் செய்யத்தான் நிறையப் பேர் இருக்கிறார்களே; நீ முழுமையாக எழுத்தில் இறங்கினால் என்ன?’ என்றொரு உட்கேள்வி வரும். அன்று எடுக்கலாம் அந்த முடிவை.

முழு நேர எழுத்தாளர்களுக்கு இருக்கிற முக்கியப் பிரச்சனை – மாபெரும் சவால், அடுப்பில் பூனை வந்து வீடு கட்டி விடும்; பிள்ளைகளின் பள்ளிக்கூடப் பையில் கரையான்கள் வீடு கட்டி விடும். வேறு ஏதாவது வசதி வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் அப்படி ரிஸ்க்கை எடுப்பது நம்மைப் போன்றவர்களுக்கு நல்லதில்லை. புத்தன் வாழ்க்கையில் நடந்தது போல, அப்படியெல்லாம் ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வருவதன் மூலம் கோடானு கோடிக் குடும்பங்களை நடுத்தெருவில் இருந்து நடு வீட்டுக்கு இட்டுச் சென்று விட முடியுமானால் பரவாயில்லை. அதுவும் எழுதிச் சாதித்தல்... அப்படித்தான் இதுவரை யாரும் எழுத வில்லையே.

முழு நேர எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்த பலர் பின்னாளில் ஏதாவதொரு வேலை கிடைத்தால் பரவாயில்லை என்று தேடும் கதைகளையும் பார்க்கிறோம். சினிமாவுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுத வருவதையும் பார்க்கிறோம். அதைப் பதவி உயர்வாக நாம் பார்க்கையில் கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் அதை ஒரு தரம் தாழ்கையாகப் பார்க்கிறார்கள். இன்று வரை அது ஏன் என்று மட்டும் எனக்குப் புரியவில்லை.

பொருளாதாரம் இன்றும் ஓர் உலகளாவிய பாடம்தான். உலக மாந்தரின் நல்வாழ்வை அதுவும் பேரளவு தீர்மானிக்கிறது. அதனால்தான் அமெரிக்காவைத் தலை சிறந்த நாடு என்கிறோம். அது இல்லாதவர்களைப் பார்த்துப் பாவப் படுகிறோம். வாழ்வும் நல்வாழ்வும் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது சிற்றின்பம். பொருளியளைத் தாண்டி வருவோருக்குத்தான் பேரின்பம் கிட்டும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் கருத்தில் மட்டும் இன்னமும் முழுசாய் நம்பிக்கை வர மறுக்கிறது. அதுவரை எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றே இருக்கட்டும்.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

அதீத உற்றுநோக்கல்க் கோளாறு! (OBSESSIVE OBSERVATION DISORDER!)

கவனித்தல் அல்லது உற்றுநோக்கல் என்பது மனிதனாகப் பிறந்த நாம் எல்லோரும் தினம் தோறும் செய்யும் ஒன்று. மற்றவர்களை விட பிரச்சனைகளை முன் கூட்டியே கணிக்கத் தெரிந்ததாலும் மறைமுகச் செய்திகளைப் புரிந்து கொள்ள முடிவதாலும் அதை அதிகமாகச் செய்வோர் அறிவாளிகளாகக் கருதப் படுகிறார்கள் (அடுத்தவர்களால் என்பதை விடத் தாமே நினைத்துக் கொள்வதுதான் அதிகம்!). அதற்கு அறிவியல் மற்றும் தத்துவம் இரண்டிலுமே சிறந்ததோர் இடமிருக்கிறது.  இன்று நான் உங்களோடு உரையாட விரும்புவது அதன் பின்னால் இருக்கும் அறிவியல் பற்றியோ அது பற்றிய தத்துவம் பற்றியோ அல்லது அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியோ அல்ல. அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதில் உள்ள பிரச்சனைகள் பற்றி. அதாவது அதீத கவனிப்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி. நானே இதன் பலியாகி இருக்கிறேன் பலமுறை. நான் உற்று நோக்கிய வரையில் (நான் செய்வது எல்லாமே உற்று நோக்கல் என்றுதான் சொல்லப் பட வேண்டும்; பார்த்ததாகவோ கேட்டதாகவோ சொல்லப் படக் கூடாது; ஏனென்றால் நல்ல உற்று நோக்கி என்று சொல்லப் படுவதைப் பெருமையாகவும் உயர்வாகவும் கருதுகிறேன்!) இதில் மூன்று பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன.

நான் உற்று நோக்கிய(!) முதல் பிரச்சனை என்னவென்றால், தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் பொருட்களையும் உற்று நோக்குவதில் நிறைய நேரம் செலவிடுவோர் எல்லோருமே அந்த உற்று நோக்கல் என்ற செயல்பாட்டுக்கு ஒரு வித அடிமை ஆகி விடுகிறார்கள். இது மற்ற அடிமைமைகள் ('அடிமைத்தனங்கள்' என்பதற்குச் சுருக்கம்!) போலவே ஒரு அடிமைமை. ஒரு அளவுக்கு மேல் போகும்போது அது மிக அதிகமாகி விடுகிறது - அதுவே வாழ்வின் ஒரே நோக்கமாகி விடுகிறது. எங்கு சென்றாலும் உற்று நோக்க ஆரம்பித்து விடுவேன். 'உற்று நோக்கு... உற்று நோக்கு... உற்று நோக்கு... வேறு எதுவும் செய்யாதே' என்பதே வாழ்க்கையின் தத்துவம் ஆகி விடுகிறது. என்னைச் சுற்றி இயங்குகிற இயங்காத எல்லாவற்றையும் நான் உற்று நோக்குகிறேன். சாதாரண மனிதக் கண்களுக்குப் படாத பல மிக நுணுக்கமான மற்றும் மறை பொருட்களை எல்லாம் உற்று நோக்குகிறேன். உற்று நோக்குவதில் அளவுக்கு அதிகமான நேரம் செலவிட்டுச் செலவிட்டு உருப்படியான எந்த வேலையும் செய்ய நேரமில்லாமல் போய் விடுகிறது. அதீத ஆராய்ச்சிகள் செய்கிறேன் - ஏகப் பட்ட முடிவுகளுக்கு வருகிறேன். இரண்டுமே சிறிது நேரத்துக்குப் பின் எனக்கு எந்தப் பயனும் அளிக்கா. சந்திப்புகள், கூட்டங்கள், பயிற்சிகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள ஆட்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் உற்று நோக்குவதில் போகிற கவனம்,  முக்கியக் கருத்துக்களைத் தவற விடச் செய்கிறது. கடைசியில் கருத்துக்கள்தானே தோற்றங்களை விட முக்கியம். ஏதாவது விளையாடும் போது அவ்வளவு உற்று நோக்கத் தேவையில்லாத விஷயங்களை உற்று நோக்குகிறேன்; ஆனால் ஆட்டத்தில் தோற்று விடுகிறேன். வண்டி ஓட்டும் போது, சுற்றியிருக்கும் அழகுகளை (நீங்கள் நினைக்கும் அழகு மட்டுமில்லை!) நோக்குவது ஆயுட்காலப் பிரச்சனைகளில் கொண்டு சென்று விட்டு விடும்.

இரண்டாவது பிரச்சனையும் முதலாவதைப் போன்றே இருப்பது அல்லது அவையிரண்டும் ஒன்றுக்கொன்று ஈடு செய்து கொள்பவை. இங்கே என்ன நடக்கும் என்றால், உற்று நோக்குவதில் பல மணி நேரம் செலவிடுவோர் உலகில் எல்லாத்தையுமே வேடிக்கைக்குப் பார்க்க ஆரம்பித்து விடுவர். மற்றவர்களால் காண முடியாதவற்றைக் காணும் ஒரு சிறப்புக் கண் கிடைக்கிற எனக்கு, தவற விடக் கூடாத பல எளிய விஷயங்கள் தெரியாமல் போய் விடுகின்றன. எல்லோருமே வேடிக்கையாகத் தெரிகிறார்கள். எல்லாமே கோமாளித் தனமாகத் தெரிகிறது. சில நேரங்களில் தேவையின் போது பேசுவோர் கூட வேடிக்கைப் பொருளாகி விடுகிறார்கள். வாழ்க்கையில் எல்லாத்தையுமே விமர்சிப்பவனாகவும் எதிர் மறையாகப் பார்க்கிறவனாகவும் ஆகி விடுகிறேன். நாங்கள்தாம் அமைதியான சந்திப்புகளிலும் பொதுக் கூட்டங்களிலும் முணுமுணுக்கும் கும்பல். பொது இடங்களில் மூச்சு விடக் கூடக் கூச்சப் படுபவனாக ஆகி விடுகிறேன். எனக்கு சரியாகப் படுவதற்கும் எழுந்து நிற்பதில்லை; பிறருக்குச் சரியாகப் படுகிறவற்றுக்கும் எழுந்து நிற்பதில்லை. என்னால் செய்ய முடியாதவற்றைப் பிறர் செய்யும்போது அவர்களின் தன்னம்பிக்கைக்குத் தடையாகிறேன். நான் ஒரு விமர்சகன். அவ்வளவுதான். என்னைப் பொருத்த மட்டில், செய்வதை விட அதை உற்று நோக்குவதுதான் உயர்வான வேலை. தன்னுடைய சுற்று வரும்போது செய்யக் கூட அது பயன்படாதென்றால் அந்தக் கருமத்தைச் செய்துதான் என்ன பயன்? சில நேரங்களில் அதிகம் பேசுகிறேன்; பேசுவதற்கு நிறைய விஷயங்களை உற்று நோக்கியிருப்பதால். சில நேரங்களில் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை; சுற்றியிருக்கும் எல்லா வேடிக்கைகளையும் உற்று நோக்கலில் மும்முரமாகி விடுவதால். எல்லாத்திலுமே ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் ஒன்றுமே செய்வதில்லை. நம்மால் செய்ய முடியாதவற்றில் நமக்கு எதுவும் கருத்து இருக்கக் கூடாது என்றில்லை (ஒன்றுமே செய்ய முடியா விட்டாலும் கூட முடிந்த அளவுக்கு எல்லா விஷயங்களிலும் ஒரு கருத்துக் கொண்டிருத்தல் நல்லதென்று என் முந்தைய இடுகை ஒன்றில் உறுதியாக வழக்காடியிருந்தேன்). ஆனால், எல்லாத்திலுமே கருத்து மட்டுமே கொண்டிருப்பேன்; என்னால் முடிகிற வேலைகளைக் கூடச் செய்ய முயல மாட்டேன் என்றாகி விடக் கூடாது.

மூன்றாவது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. எல்லா உற்று நோக்கல்களுமே பாரபட்சமானவை. உற்று நோக்குவோர் எல்லோருமே அவர்களுக்கு வேண்டிய பதிலைத்தான் தேடுகிறார்கள். சரியான பதில்களைத் தேடுவதில்லை; நல்ல பதில்களைத் தேடுவதில்லை; என் மனதில் ஏற்கனவே இருக்கும் பதில்களைத்தான் தேடுகிறேன். என் நம்பிக்கைகளை உறுதிப் படுத்திக் கொள்ளவும் வலிமைப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவியாகவே என் உற்று நோக்கல்களைப் பயன் படுத்துகிறேன். அதை விடக் கூடுதலாகவும் இல்லை! குறைவாகவும் இல்லை! உற்று நோக்குதல் மூலம் கூடுதலாக எதையும் அடைய முயல்வதில்லை. என் நம்பிக்கைகளைச் சரி பார்த்துக் கொள்ளக் கூட அவற்றை நான் பயன் படுத்துவதில்லை. எதிர்க் கருத்துகளுக்கும் மாற்றுப் பாதைகளுக்கும் என் மனம் திறந்த நிலையில் இல்லை. இது என்னுடைய நம்பிக்கைகளுக்கு ஆதரவான வாதங்களுக்கு மட்டுமே திறந்த மனம் கொண்ட - மூடிய மனம் கொண்டவனாக்குகிறது. இது ஒருபோதும் என் அறிவின் பக்கவாட்டு வளர்ச்சிக்கு (LATERAL ENHANCEMENT) உதவுவதில்லை. என் நம்பிக்கைகளை மட்டுமே பலப் படுத்துகிறது. தேர்ந்தெடுத்த உற்று நோக்கல்களுக்குத்தான் (SELECTIVE OBSERVATIONS) ஏற்பாடு செய்கிறது; புதிய முடிவுகள் ஏதும் கொணர்வதில்லை. கால ஓட்டத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், அப்படிப் பட்டவர்கள் தம் உற்று நோக்கல்த் திறத்தை முழுமையாகப் பயன் படுத்த விரும்பினால், விழிப்புணர்வோடு தொடர்ந்து தம் நம்பிக்கைகளுக்குச் சவால் விட வேண்டும்; தம் உற்று நோக்கல்களின் மூலம் அவற்றைச் சுக்கு நூறாக்க வாய்ப்புகள் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

என் துறவுரையோடு (DISCLAIMER) முடிவுரைக்கு வருகிறேன். உற்று நோக்குதல் தவறில்லை. இதை எழுதுவதன் மூலம் "எதையும் உற்று நோக்கக் கூடாது" என்று சொல்ல முயலவில்லை. வீணான நேரங்களை உற்று நோக்கலில் செலவழிக்க முடிந்தவர்கள் பெருங் கொடுப்பினை கொண்டோர். மற்றவர்கள் சிந்திக்க முடியாதவர்கள் இல்லை. அவர்கள் ஏற்கனவே தன் மனதில் இருப்பவை பற்றி யோசிக்கிறார்கள் (அதாவது, சிந்தனைக்கு வெளியில் இருந்து உள்ளீடு தேடாமல் உள்ளுக்குள் சேமித்து வைத்திருக்கும் தகவல்களையே கொண்டு மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வோர்). நாமோ நம் நேரத்தை அந்த நேரத்தில் நாம் உற்று நோக்குவதன் மூலம் கிடைத்தவற்றைக் கொண்டு யோசிப்பதில் செலவிடுகிறோம். தம்மைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்குவதன் மூலம் - எப்போதும் நம் சுற்றுப்புறத்தை அறிந்து வைத்திருப்பதன் மூலம், பலருக்கு என்னவென்றே புரியாத பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அதை அதிகப் படியாகச் செய்வதால் மூன்று பிரச்சனைகளே உள்ளன. அதைச் சரியாகச் செய்வதன் மூலம் பத்துப் பதினைந்து பயன்பாடுகள் இருக்கலாம். எனவே, சுற்றி நடக்கிற எல்லாத்தையுமே உற்று நோக்கி மகிழுங்கள். ஆனால், அதைச் செய்யும்போது அடிமைமை, எதிர்மறைமை மற்றும் பாரபட்சம் ஆகியவை தலை தூக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே அற்புதங்களை அள்ளித் தரலாம்!

வியாழன், அக்டோபர் 07, 2010

வேட்டிதான் கிழிகிறது

நீ என்னைச் சந்தேகிக்கும் போதும்
எனக்கே அவமானம்!

நான் உன்னைச் சந்தேகிப்பதாக
நீ குற்றம் சாட்டும் போதும்
எனக்கே அவமானம்!

புதன், அக்டோபர் 06, 2010

இரயில்வே அமைச்சரானதும் விபத்தா?!

தொடர்ந்து நிகழும் இரயில் விபத்துகள் நாட்டை உலுக்கி எடுக்கின்றன. இப்படியே தொடர்ந்தால், அத்தகைய செய்திகளைக் கேட்டுக் கேட்டு நமக்கு மனம் மரத்துப் போகலாம். இன்னும் பொறுப்பான செயல்பாடுகள் மற்றும் சிறப்பான சட்டங்கள் மூலம் இவை தவிர்க்கப் படலாம் என்பது என் உறுதியான நம்பிக்கை. 86% இரயில் விபத்துகள் மனிதத் தவறுகளால் நிகழ்பவை என்றொரு இரயில்வே புள்ளி விபரம் அதை மேலும் உறுதிப் படுத்துகிறது. இன்னொரு புறம், அவையெல்லாமே மனிதத் தவறுகள் அல்ல இயந்திரக் கோளாறுகள் என்று ஒருவர் விளக்கம் அளிக்கிறார். நம்முடைய இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டுமே மற்ற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக இல்லை என்பது நன்கறிந்த உண்மை ஆகி விட்டது. எனவே, உண்மையில் எது இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று தெரியவில்லை.

எது எப்படியிருப்பினும், தெளிவாக வெளிவரும் உண்மை என்னவென்றால், உலகின் மற்ற பகுதிகள் போல் இந்தியாவில் மனித உயிர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது. அளவுக்கதிகமான எண்ணிக்கை அதற்கொரு காரணமாக இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடந்த இரயில் விபத்துகளைப் பட்டியலிட்டு விக்கிபீடியாவில் (WIKIPEDIA) ஒரு தனிப் பக்கமே உள்ளது. உலகிலுள்ள வேறு எந்த நாடும் இப்படியொரு பக்கமும் அவ்வளவு பெரிய பட்டியலும் கொண்டிருக்கும் என நினைக்க வில்லை. நம் இரயில்வே எவ்வளவு பொறுப்பற்று இருக்கிறது என்பதை நிரூபிக்க இது போதும். பட்டியலைப் பார்த்து நான் புரிந்து கொள்வது என்னவென்றால், கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய இரயில் விபத்து நடந்திருக்கிறது. அதுவும் முக்கியமாக 2010-இல் அளவுக்கதிகமாக நடந்திருக்கிறது.

ஏன் 2010? என் மனதுக்கு உடனடியாகத் தோன்றுவது என்னவென்றால், 2010 தான் இப்போதைய இரயில்வே அமைச்சரின் முதலமைச்சர் ஆசைகளுக்கு இறக்கை கட்டி விட்ட ஆண்டு. அவருடைய முக்கியத்துவங்களுக்கு இடையில் இழுபறிப் போட்டிகள். வங்கத்துக்கும் இரயில்வேக்கும் இடையிலான இழுபறி. அவருக்கு அளிக்கப் பட்டிருக்கும் பொறுப்புக்கும் அவர் கனவு காணும் பதவிக்கும் இடையிலான இழுபறி. கையில் இருப்பதற்கும் மனதில் இருப்பதற்கும் இடையிலான இழுபறி. எது அதி முக்கியம் என்ற யுத்தத்தில் வென்றது அவருடைய கனவு; தோற்றது உலகின் மிகப் பெரிய இரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்று. இரயில்வே அமைச்சர் என்ற பணியில் அவர் பெருந்தோல்வி அடைந்து விட்டார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

இரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்வதற்கான சரியான தருணம் இது. ஆணவம் பிடித்த இடதுசாரி முன்னணியைத் தூக்கி வீசி விட்டு மேற்கு வங்க முதல்வராக அவர் ஆகும் நாளை எதிர் நோக்கிக் காத்திருக்கும் கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன். ஆனால், இத்தகைய பொறுப்பை ஆர்வமில்லாமல் ஒருவர் செய்வதைப் பார்க்க நான் விரும்பவில்லை. எனவே, தன் பெரும்பாலான நேரம் சொந்த மாநிலத்தின் பிரச்சனைகளைச் சமாளிப்பதிலேயே போகிறது என்று சொல்லி 2010-இல் ஏற்பட்ட எல்லாத் தோல்விகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதே புத்திசாலித் தனமாக இருக்கும். அதுவும் அவருக்கு சமமான முக்கியத்துவம் கொண்டது. மக்களின் அழைப்பை மதியாமல் இருக்க முடியாது. தன் மாநிலத்தின் முதலமைச்சர் ஆகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் அதுதான். போகிற போக்கில், இரயில்வே அமைச்சர் ஆகி விட்டார். அதுவே ஒரு விபத்து. அவருடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த ஒரு விபத்து மேலும் பல விபத்துகளுக்குக் காரணமாக இருக்கக் கூடாது.

தன் தோல்வியைத் தானே ஒத்துக் கொண்டால் அவருடைய அரசியல் எதிரிகள் அதில் ஆதாயம் தேட முயல்வார்களோ என்று பயப்படுகிறார். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இப்போது அவர் அதைச் செய்யத் தவறினால் சரியான நேரத்தில் கண்ணியமாகக் கழண்டு கொள்ளாவிட்டால் அவர் தெருவில் கத்துவதற்கு மட்டுமே லாயக்கு என்றும் நிர்வாகி என்ற முறையில் பெரும் தோல்வி அடைந்து விட்டார் என்றும் நிரூபிக்க அவருடைய எதிரிகளுக்கு மிக எளிதாகி விடும். விடாத இடைவெளிகளில் இரயில் விபத்துகள் நடப்பதைப் பார்த்தால் அதுவும் உண்மையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மமதா என்ற அமைச்சரை விட மமதா என்ற அரசியல்வாதி திறமையானவரோ என்று தோன்றுகிறது. அப்படியானால், அவர் ஒரு சிறந்த முதலமைச்சராக இருக்க முடியும் என்று எப்படி அவருடைய மக்களிடம் நிரூபிக்கப் போகிறார்?

இவர் ஒரு காங்கிரஸ்காரராக இருந்திருந்தால், உள்துறை அமைச்சராக இருந்த திரு. பாட்டீல் அவர்களைத் தூக்கி வீசியது போல வீசி எறிவது எளிதாக இருந்திருக்கும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, கூட்டணியின் மிகப்பெரிய கட்சி இவருடையது. எனவே, அவருடைய மனம் புண் பட வைக்க முடியாது. சென்ற இன்னிங்சில் அவர்களுடைய உள்துறை அமைச்சருக்குச் செய்ததை இந்த இன்னிங்சில் இரயில்வே அமைச்சருக்குச் செய்ய முடியாது. ஆனால், அது காலத்தின் கட்டாயம். இழக்கப் பட்ட உயிர் எந்த அமைச்சகத்தின் தோல்வியால் இழக்கப் பட்டாலும் அது உயிர்தான். என்னிடம் தகவல்கள் இல்லை. ஆனால், இரயில் விபத்துகளில் இழந்த உயிர்களின் எண்ணிக்கை தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இழந்த உயிர்களின் எண்ணிக்கையை விட அதிகம். நம் கட்டுப்பாட்டில் இருப்பதை முதலில் சரி செய்ய வேண்டும் அல்லவா? தீவிரவாதிகளின் தாக்குதலை விட இரயில் விபத்துகள் அதிக அளவில் நம் கட்டுப்பாட்டில் இருப்பவை என்று உறுதியாக நம்புகிறேன். இங்கே எதிரி என்றொருவர் இல்லாததால் இழப்புகள் தேவையான அளவுக்கு எடுத்துக் காட்டப் படுவதில்லையோ என்றெண்ணுகிறேன். நாம்தாம் நம் எதிரிகள்.

இரயில்வேயில் இது போன்ற தோல்விகள் ஏற்படும்போது எப்படிப் பட்ட தண்டனை அமைப்பு கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவை போதாதென்றும் திறம்பட்ட செயல்பாட்டின் தரத்துக்கு மிகத் தொலைவிலும் இருப்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எந்த அடி மட்ட நடவடிக்கையும் அதை முழுமையாகத் தவிர்க்க உதவாது. எனவே, மேல் மட்டத்தில் இருப்போரையும் தண்டிக்க மேலும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்பது தெளிவாகிறது. அதுதான் அவர்களை மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள் ஆக்கும். அத்தகைய கடும் தண்டனைகள் கொடுப்பதன் மூலம் நமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில், அவர்களின் வேலைகளை இன்னும் சிறப்பாகச் செய்ய ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள்.

இரயில்வேயில் மட்டுமில்லை. எந்தத் துறையிலும் இது போன்ற தோல்விகள் நிகழ்ந்தால் அத்தோடு அத்துறை அமைச்சர்கள் எக்காலமும் எந்த அமைச்சர் பதவியிலும் நீடிக்க முடியாத படியான சட்டங்கள் வர வேண்டும். ஒரு ஓட்டுனர் தன் மொத்த வாழ்க்கையில் ஒரு விபத்துக்குக் காரணமானால் போதும். அத்தோடு அவருடைய வாழ்க்கையே முடிந்தது போலாகி விடும். எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாக வேண்டும் என்பதைத் தனிப்பட்ட முறையில் நான் பார்த்திருக்கிறேன். ஒரு சாமானியனுக்கு அவ்வளவு கடும் தண்டனைகள் சாத்தியம் என்றால், இந்தப் பெருமக்கட்கு மட்டும் ஏன் அது சாத்தியமில்லை? இப்போது இது ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனம் போலத் தோன்றலாம். செய்வதை விட சொல்லத்தான் எளிது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கல்வி கற்கும் உரிமைச் சட்டமும் ஒரு காலத்தில் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டவைதான்; செயலினும் சொல்லல் எளிது என்று இருந்தவைதான். இன்றைக்கு அவை எதார்த்தம் ஆகி இருக்கின்றன. எனவே, ஒரு அரசாங்கம் அதனைத் தம் மக்களுக்கு அர்ப்பணித்த ஒன்றாக இருந்தால், எதுவும் சாத்தியமே!

டாக்டர். சிங்! எனக்குத் தெரியும், நீங்கள் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று!!

செவ்வாய், அக்டோபர் 05, 2010

அயோத்தி: நீதி மன்றத்திலிருந்து மக்கள் மன்றத்திற்கு...

அயோத்திப் பிரச்சனைக்கு இவ்வளவு எளிதான ஒரு தீர்வு இருப்பதாக நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஓரிரு சாரார் இதிலும் இன்பமடையவில்லை என்றபோதிலும் பிரச்சனைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுத்தல் என்பது 'எல்லோருக்கும் இன்பம்' என்கிற மாதிரியான தீர்வு. முதல் முறைத் தீர்ப்பைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, பிரச்சனை இரு சமூகங்களுக்கு இடையில் எனும் போது "அது யார் மூவர்?" என்பது. சிலர் சொன்னார்கள் - "மூன்றில் ஒரு பகுதி இந்துக்களுக்கு, இன்னொரு பகுதி முஸ்லிம்களுக்கு, மற்றொன்று நிர்மோஹி அகாராவுக்கு" என்று. வேறு சிலர் சொன்னார்கள் - "மூன்றில் இரண்டு பகுதிகள் இந்துக்களுக்கு; ஒரு பகுதி முஸ்லிம்களுக்கு" என்று. கடந்த சில நாட்களில் நான் படித்த பத்து-இருபது கட்டுரைகளில் எந்தக் கட்டுரையிலும் நிர்மோஹி அகரா என்பது யார் என்பது தெளிவாக விளக்கப் பட வில்லை. வழக்கம் போல, அதைப் புரிந்து கொள்ள இணையத்திடம்தான் போக வேண்டியிருந்தது.  அதன் பின்பும், அவர்கள் ஏன் மூன்றாவது குழுவாக இருக்க வேண்டும்; ஏன் இந்துக்களிலேயே ஒரு பகுதியாக இருக்கக் கூடாது என்ற தெளிவில்லை. அப்படியானால், ஒரு மசூதிக்கு அருகில் இரண்டு பெரும் கோவில்கள் இருக்குமா?

"இந்தத் தீர்ப்பு 1992-இல் நடந்ததை நியாயப் படுத்துகிறதா?" என்றொருவர் கேட்டார். கண்டிப்பாக இல்லை என்றே நினைக்கிறேன். நீதித்துறையின் செயல்பாடு என்பது முழுக்க முழுக்க சுதந்திரமான ஒன்று. அது பாபர் இராமர் கோவிலை இடித்ததையோ இந்து மதவாதிகள் பாபர் மசூதியை இடித்ததையோ நியாயப் படுத்தாது. சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களை ஆய்ந்து தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான். மசூதி இடிப்பு பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அது பற்றிய குற்றவியல் வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது பற்றிய எந்த முடிவுக்கும் நாம் இப்போது வர முடியாது. இப்போது உரிமையியல் வழக்கில் வந்துள்ள தீர்ப்பு இந்துக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதால், குற்றவியல் வழக்கிலும் எந்தத் தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். மொத்தத்தில், அவர்களுடைய உணர்வுகள் மதிக்கப் பட்டுள்ளன; அவர்களுடைய முக்கியக் கோரிக்கைக்கு (கோவில் கட்டுவது) பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது.

சரி. அப்படியானால், இந்து மதவாதிகள் தீர்ப்பு வரும்வரை காத்திருந்து சட்டத்தைத் தம் கையில் எடுக்காமல் அதன் பாதையில் சென்றிருந்தால் கண்ணியமாக இருந்திருக்கும் அல்லவா? ஆம். அப்படித்தான் நான் நினைக்கிறேன். தம் கருத்தை நிரூபிக்க அவர்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை இருந்திருந்தால், நாடு தழுவிய இயக்கம் ஒன்றை நடத்தி மசூதியை இடித்திருக்கவே வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் வேறு ஏதோ ஒரு நோக்கம் இருந்ததாகச் சந்தேகிப்பதற்கு என்னிடம் எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. சட்டத்தின் பாதையில் சென்று வழக்கை வெல்வதில் சிலருக்கு நம்பிக்கை இருக்க வில்லை. அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வதற்காக சிலருக்கு அதை அரசியலாக்க வேண்டியிருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு உறுதியான ஒரு கருத்தைத் தெரிவிக்க விரும்பினார்கள் சிலர். வேறு என்ன என்ன நோக்கங்கள் இருந்தன என்பது இராமபிரானுக்குத்தான் தெரியும்.

சரி. 92-இல் மசூதி இடிக்கப் படாமல் இருந்திருந்தால் இது போன்ற ஒரு தீர்ப்பை நீதிபதிகளால் கொடுக்க முடிந்திருக்குமா? சொல்ல முடியவில்லை. நல்ல நிலையில் இருந்த மசூதியின் ஒரு பகுதியைக் கோவில் கட்ட விட்டுக் கொடுக்குமாறு சொல்வது அவ்வளவு எளிதாக இருந்திராது. இப்போது இடிக்கப் பட்டு விட்டதால் - பிரச்சனைக்குரிய இடத்தில் பெரிதாக எதுவும் (அதாவது குவிமாடங்கள்) இல்லாததால், இது போன்ற தீர்ப்பை எளிதில் ஏற்றுக் கொள்ள எல்லோராலும் முடிகிறது. மசூதி இருந்த எந்த ஒரு இடத்தையும் யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக இப்போதும் சிலர் சொல்லிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப் பட்டேன். இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு மசூதி கட்டப்பட வில்லை என்பது தீர்ப்பில் வந்த மற்றொரு சுவாரசியமான தகவல். முஸ்லிம்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்களேயானால், அது மிகச் சிறந்த முறையில் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும்.

மிகப் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சம்பந்தப் பட்ட எல்லா அணியினரும் மிக முதிர்ந்த முறையில் நடந்து கொண்டார்கள். இருபது-முப்பது வருடங்களுக்கு முன்பு நிலைமை அப்படியில்லை. சராசரி இந்தியர்கள் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் அளவுக்கு இது ஒரு முக்கியப் பிரச்சனை இல்லை என்று உணர்ந்து விட்டார்கள் என்பதே இதன் பொருளாகும். "கடந்த காலத்தின் கசப்புணர்வுகளை மறக்க வேண்டிய தருணம்" என்றும் "இது கொண்டாடுவதற்கான நேரமில்லை" என்றும் ஆர். எஸ். எஸ். தலைவர் சொன்னார். கேமராவின் முன் தன் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது வக்ப் வாரிய வழக்கறிஞர் திரு. கிலானி அவர்களும் மிகக் கண்ணியமான முறையில் நடந்து கொண்டார். பெரும்பாலான அரசியல்க் கட்சிகளும் பெருமளவில் நாகரிகம் காத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு இதை விட முக்கியமான வேலைகள் நிறைய இருப்பதை இரு சமூகங்களுமே உலகுக்கு உணர்த்தி விட்டன. இவையனைத்தும் நிறைய நிம்மதியைக் கொடுத்தன. இதன் பிறகு எல்லாமே இன்பமயம் என்று சொல்லி விடுவதற்கில்லை. நாம் நினைத்ததை விடச் சிறப்பாக உயர் நீதி மன்றம் அதன் பணியைச் செய்து விட்டது. வழக்கு உச்ச நீதி மன்றத்தின் பார்வைக்குச் செல்லும் போது அவர்களும் தங்களால் இயன்ற அளவு மிகச் சிறப்பான வேலையைச் செய்வார்கள். அது வரை இந்தச் சூழ்நிலையை எப்படி நிர்வகிக்க விரும்புகிறோம் என்ற கேள்வி நம்முடைய மன்றத்தில்தான் (சாமானியர்களாகிய நம் மக்கள் மன்றத்தில்) இருக்கும். எல்லாம் சரியாகிற மாதிரியான சூழ்நிலையில் தேச விரோதிகள் அவர்கள் வேலையை ஆரம்பிக்கக் கூடும். அடுத்து சுமார் ஒரு வருடத்துக்கு எந்த வேண்டாத சம்பவங்களும் நடந்து விடாத அளவுக்கு நம் அரசாங்கமும் நாமும் விழிப்போடு இருக்க வேண்டும். கண்டிப்பாகச் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க முயல்வார்கள். மக்கள் அவர்களை நிராகரித்து முன் செல்ல வேண்டும். இதை விட முக்கியமான பல பிரச்சனைகளை நாம் தீர்க்க வேண்டியுள்ளது. கோவிலும் மசூதியும் வாழ்வில் எல்லாம் (அளவுக்கதிகமான நேரமும்) உடையவர்களுக்குத்தான் முக்கியம். தூங்கச் செல்லும் முன் வெகு தொலைவு செல்ல வேண்டிய நம் போன்றவர்களுக்கில்லை.

உயர் தனிச் செம்மொழி?!

பிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது? தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள்.

எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு உரு மாறியதே ஒழிய அதன் பெயரே மாறும் அளவுக்கு மாற்றம் ஏதும் நடைபெறவில்லை. சொற்கள் மட்டும்தான் திணிக்கப் பட்டன. வந்தவர்கள் புகுத்திய எழுத்துக்கள் கூட இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. மற்ற எல்லோரிடமும் பெருமளவில் கலப்படம் நிகழ்ந்தது. மொழியின் பெயரே மாறியது. புதிய எழுத்துக்கள், உச்சரிப்புக்கள், பெயர் மாற்றம் எல்லாம் நுழைந்தன. நம்மிடம் மட்டும் தொல்காப்பியத்தில் உள்ள அந்த எழுத்துக்கள் மட்டும்தான் இப்பவும் உள்ளன. அதே உச்சரிப்புதான் இப்பவும் இருக்கிறது. இப்பவும் தொல் காப்பியன் என்ற பெயர் வைக்கிற ஆட்கள் இருக்கிறார்கள். புதிதாக வந்த எழுத்துக்கள் இன்னமும் வடமொழி எழுத்துக்கள் என்ற பெயரோடு திண்ணையில்தான் படுக்க வைக்கப் பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துக்களின் அட்டவணையில் அவற்றுக்கு இடமில்லை. வடமொழியிடம் வாங்கிய வார்த்தைகளில் மட்டும்தான் அவர்களுடைய உச்சரிப்பைப் பயன்படுத்துகிறோம். வடமொழியில் வேதம் ஓதும் ஐயர் முதலாக எல்லோருமே வீட்டில் தமிழைப் பெருமையோடுதான் பேசுகிறார்கள்.

நம்ம ஆட்கள் உலகெலாம் சுற்றி உழைக்கிறார்கள். அங்கே பல்வேறு மொழிகள் கற்றுப் பேசுகிறார்கள். பல இடங்களில் நம் பேச்சில் இருக்கிற குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டுக் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறோம். இப்படியிருக்கையில், அந்தக் குறைபாடுகள் பற்றி ஓரளவு அறிந்து வைத்துக் கொள்வது அத்தகைய சிற்சில – சிறிய அவமானங்களில் இருந்து தப்பிக் கொள்ள உதவும் என நினைக்கிறேன். அதன் வெளிப்பாடே இவ்விடுகை.

உண்மையிலேயே நம் மொழியில் குறைபாடுகள் உள்ளனவா? ஆம். அப்படியானால், நாம் நினைக்கிற அளவுக்கு நம் மொழி ஒன்றும் ஓங்கி உயர்ந்த செம்மொழி இல்லையா? அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிற தனிப்பட்ட பண்புகளைப் போல, ஒவ்வொரு மொழிக்கும் பல தனிப்பட்ட பண்புகள் இருக்கின்றன. எல்லா மொழிகளிலும் இருக்கிற எல்லா எழுத்துகளுக்கும் உச்சரிப்புகளுக்கும் இணையான எழுத்துக்களும் உச்சரிப்புகளும் கொண்ட ஒரே ஒரு மொழி எது என்றால், அப்படி ஒரு மொழி உலகத்தில் எங்கும் இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் நம் ‘ழ’கரத்துக்கு இணையான எழுத்து இல்லை. இன்னும் சொல்லப்போனால், மலையாளம் தவிர மற்ற எந்த இந்திய மொழியிலும் அது இல்லை. அது மட்டுமில்லை. ஆங்கிலத்தில் இன்னும் என்னென்னவோ இல்லை. அது போல, மலையாளம் உட்பட எந்த இந்திய மொழியிலும் ஆங்கில ‘Z’ க்கு இணையான எழுத்து இல்லை. ஏன் மலையாளம் உட்பட என்றேன் என்றால், மலையாளம்தான் தமிழையும் வடமொழியையும் பூரணமாகக் கலந்து உருவான மொழி.

வங்காள மற்றும் ஒரிய மொழிகளில் ‘வ’ வரிசையே இல்லை. ஆங்கிலத்தில் ‘V’ என்று எழுதினால் அதையும் ‘B’ என்றுதான் வாசிக்கிறார்கள். முன்னொரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த வங்காள நண்பன் ஒருவனை ‘VB’, ‘BV’, ‘VV’, ‘BB’ ஆகிய நான்கையும் வெண்பலகையில் எழுதிப் போட்டு வாசிக்கச் சொன்னேன். மிகச் சிரமப் பட்டு வித விதமாக வாயை வளைத்து அத்தனையையும் ‘BB’, ‘BB’, ‘BB’, ‘BB’ என்று வாசித்து எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தான். அதன் பொருள், வங்க மொழி லேசுப் பட்டதென்பதில்லை. இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் (ஆங்கிலத்தில் எழுதும் பாதி இந்தியர் நைபாலை இங்கே சேர்க்க வேண்டியதில்லை) வங்க மொழியில் எழுதித் தள்ளியவர். எனவே இத்தகைய குறைபாடுகள் ஒரு மொழியை உயர்ந்ததாக அல்லது தாழ்ந்ததாக எடை போட உதவாது. இது போல கோளாறுகள் நம் மொழியிலும் உள்ளன. அவற்றை மட்டும் குறிப்பாக இவ்விடுகையில் பார்ப்போம். அக்குறைபாடுகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றியும் பார்க்கலாம்.

இந்திய மொழிகள் அனைத்துமே உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் மட்டுமே கணக்கிலிட்டுச் சொல்பவை. எனவே அவர்களிடம் “உங்கள் மொழியில் எத்தனை எழுத்துக்கள்?” என்று கேட்டால், ஐம்பது அல்லது அறுபதுக்குள் ஒரு எண்ணைச் சொல்வார்கள். நாமோ உயிர், மெய், உயிர் மெய், ஆய்தம் ஆகிய நான்கு வகைகளைக் கொண்டு கணக்குப் போடுபவர்கள். எனவே நாம் 247 என்றதும், “உள்ள எழுத்துக்களையே ஒழுங்காக உச்சரிக்க முடியாதவர்களிடம் இவ்வளவு எழுத்துக்களா?” என்று கலகலவெனச் சிரிப்பார்கள். முதலில் மேலே கண்ட விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அதன் பின்பும் ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

உள்ள எழுத்துக்களையே ஒழுங்காக உச்சரிக்க முடியாதவர்களா? ஆம். அதனால்தான் நம்மவர்களால் மற்றவர்களைப் போலப் பிற மொழிகளை எளிதில் கற்க முடிவதில்லை. நாம் ஒரே ஒரு ‘க’ வரிசையை வைத்துக் கொண்டு ஓட்டுகிற பிழைப்பை மற்ற மொழிகளில் எல்லாம் KA, KHA, GA, GHA, HA என்கிற மாதிரி உச்சரிப்பு வருகிற ஐந்து ‘க’க்கள் வைத்துக் கொண்டு ஓட்டுகிறார்கள். கந்தன், கலீல் (க்ஹலில் என்று உச்சரிக்க வேண்டும் அதை), கணேசன், மேகம், மோகன் ஆகிய ஐந்து சொற்களிலும் வருகிற ‘க’ வெவ்வேறு விதமாக உச்சரிக்கப் பட வேண்டும். நாம் அது பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. எல்லாமே ஒரே ‘க’ தான். அங்குதான் நாம் கேலிக்குள்ளாகி விடுகிறோம். நம்மில் பலருக்கு உச்சரிப்பு வேறுபாடு தெரியும். ஆனால், ஏன் நான்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லை என்பதற்கான விளக்கம் மட்டும் இராது. அது என்ன என்று இன்று பார்த்து விடுவோம். இதற்கிடையில் இன்னொரு விசயம். நான் மேலே சொன்ன நான்கு சொற்களில் கந்தன் என்ற ஒன்றுதான் தூய தமிழ். அந்தக் ‘க’ மட்டும்தான் நம் ‘க’. மற்ற ‘க’க்கள் எல்லாமே வடமொழிக் ‘க’க்கள். HA இடையில் வந்தால் ‘க’ வாகிறது. அதுவே முதலில் வந்தால் ‘அ’ வாகிவிடும். அரிச்சந்திரனில் வருவது போல. பல நேரங்களில் நம்மவர்கள் திண்ணையில் வைக்கப் பட்டிருக்கும் ‘ஹ’ வையும் பயன் படுத்துகிறார்கள்.

அதுபோலவே, CA, CHA, JA, JHA, SA, SHA, SSHA என்கிற மாதிரி உச்சரிப்பு வருகிற ஏழு எழுத்துக்களுக்கும் நம்மிடம் இருப்பது ஒரே ஒரு ‘ச’. சிரிக்கத்தானே செய்வார்கள்? ஏன் சிரிக்கக் கூடாது என்பது பற்றிக் கண்டிப்பாகப் பார்ப்போம். அதற்கு முன் மேலே சொன்ன எழுத்துக்களின் உச்சரிப்பு வேறுபாட்டைப் பார்த்து விடுவோம். CA மற்றும் CHA இடையிலான வேறுபாட்டை ஆங்கிலத்திலோ தமிழிலோ விளக்குவது கடினம். சந்திரனில் வருகிற ‘ச’ இது. JA ஜம்பு லிங்கத்தில் வருகிற ‘ச’. JHA வையும் ஆங்கிலத்திலோ தமிழிலோ விளக்குவது சிரமம். SA ஒன்றுதான் நம்முடைய பழந்தமிழ் ‘ச’. அதையும் திருநெல்வேலிப் பக்கம் போனால் எல்லாமே CHA மாதிரித்தான் உச்சரிப்பார்கள். மற்ற ஊர்களில் சாப்பாடு SAAPPAADU என்று அழைக்கப்படும்போது தெற்கே அது CHAAPPAADU என்று அழைக்கப்படுகிறது. SHA மற்றும் SSHA இடையிலான வேறுபாட்டையும் ஆங்கிலத்திலோ தமிழிலோ விளக்க முடியாது. இயக்குனர் ஷங்கர் பெயரில் வருகிற ‘ச’ அது. இதில் ஜ மற்றும் ஷ இன்னும் திண்ணையில் வைக்கப் பட்டிருப்பவை. இதெல்லாம் போக, KSHA வரிசை ஒன்று இருக்கிறது. லக்ஷ்மி மற்றும் க்ஷத்ரியர் போன்ற வடமொழிச் சொற்களில் பயன்படுத்தப்படும் எழுத்து. அதை நாம் மொட்டையாக லட்சுமி அல்லது சத்திரியர் என்று அடித்து விடுகிறோம்.

இது போலவே, நம் ஒரு ‘த’ வரிசைக்கு இணையாக நான்கு வரிசைகள் (THA, DHA, TTHA, DDHA என்று சொல்லலாம்), ‘ட’ வரிசைக்கு இணையாக நான்கு வரிசைகள் (TA, DA, TTA, DDA என்று சொல்லலாம்), ‘ப’ வரிசைக்கு இணையாக நான்கு வரிசைகள் (PA, PHA, BA, BHA) என அடுக்கித் தள்ளியிருக்கிறார்கள். இவை அனைத்திலும் இருக்கிற நான்கு வேறு உச்சரிப்புகளையும் புரிந்து கொள்ளாவிட்டாலும் இரண்டிரண்டாவது புரிந்து கொள்ள வேண்டும். THA வுக்கும் DHA வுக்குமான வேறுபாடு என்னவென்றால், தங்கம் மற்றும் தனம் ஆகிய சொற்களில் வருகிற ‘த’க்களுக்கிடையேயான வேறுபாடு. TA வுக்கும் DA வுக்குமான வேறுபாடு என்னவென்றால், முட்டம் மற்றும் முடம் ஆகிய சொற்களில் வருகிற ‘ட’க்களுக்கிடையேயான வேறுபாடு. PA வுக்கும் BA வுக்குமான வேறுபாடு என்னவென்றால், பண்பு மற்றும் பயம் ஆகிய சொற்களில் வருகிற ‘ப’க்களுக்கிடையேயான வேறுபாடு. PHA மற்றும் BHA வை ப்ஹா என்று முக்கிக் கொண்டு சொல்வார்கள். என் பெயரை பாரதிராஜா என்று சொன்னால் சிரித்து விட்டு, “ப்ஹாரத்திராஜா-வா?” என்பார்கள். “ஆமாம்” என்று அசடு வழிந்து கொள்வேன். வடமொழிப் பெயரை வைத்துக் கொண்டு அவர்களைப் போல உச்சரிக்கா விட்டால் சிக்கல்தானே!

இதெல்லாம் போக, கூட்டெழுத்துக்கள் என்று ஒரு க்ரூப் இருக்கிறது. தனியாகப் பெயரேதும் இல்லாவிட்டாலும் அது நம் மொழியில் வேறு விதமாகக் கையாளப் படுகிறது. எனவே அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ம்ம, ர்ர, ல்ல, ள்ள, ன்ன போன்றவை அனைத்தும் அந்தக் க்ரூப்பில் வருபவை. பல மொழிகளில் இவற்றைக் கீழே தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எழுதி மொழியைக் கடினமாக்கி விடுகிறார்கள். நல்ல வேளை, நம்மிடம் அதெல்லாம் இல்லை என்று தோன்றுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தமிழ்’ என்று பெயர் கொண்ட ஒரு மொழியைப் பேசுகிற முக்கால்வாசிப் பேருக்கு அந்தச் சொல்லில் வருகிற ‘ழ்’ என்ற எழுத்தைச் சரியாக உச்சரிக்க வருவதில்லையே! இது யார் குற்றம்? இதற்காக, மொழியின் பெயரை ‘தமில்’ என்று மாற்றவும் முடியாது; சரியான உச்சரிப்பைக் கொண்டு வருவதற்காகக் கோடிக் கணக்கில் திட்டங்கள் போடவும் முடியாது. நல்ல ஐடியா ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பயன்படும்.

சரி, குறைபாட்டுக்கான காரணம் என்னவென்று இப்போது பார்த்து விடுவோம். சில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால், எல்லாமே குறைபாடுகள் அல்ல. ‘க’ முதலில் வந்தால் KA போன்றும், நடுவில் வந்தால் HA அல்லது GA போன்றும் உச்சரிக்கப் பட வேண்டும் என்கிற மாதிரி நம் இலக்கணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இடையிலும் ‘க்’க்குப் பின் வந்தால் KA போன்றும் ‘ங்’க்குப் பின் வந்தால் GA போன்றும் உச்சரிக்கப்பட வேண்டும். எனவே, இதை எப்படி விளக்க வேண்டும் என்றால், “எங்கள் மொழியில் எழுத்துக்கள் இல்லை என்றில்லை; ஒரே எழுத்தை வெவ்வேறு விதமாக உச்சரிக்கும் விதத்தில் செறிவான இலக்கணம் இருப்பதால் பொது எழுத்துக்களைப் (Common Letters) பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று சொல்ல வேண்டும். அதே போலத்தான் ச, ட, த, ப ஆகிய எல்லா எழுத்துக்களும் இடத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்கின்றன. “அடப்பாவிகளா, உங்கள் எழுத்துக்களுமா சந்தர்ப்பவாதிகள்?!” என்று எவனாவது (அல்லது எவளாவது!) நக்கல் பண்ணினால் ‘பொளேர்’ என்று கன்னத்தில் ஒரு அரை விட்டு “இப்படியும் மாறுவோம்” என்று காட்டி விடுங்கள்.

“அது சரி, எல்லா இந்திய மொழிகளும் ஒரு முறையைக் கடைப் பிடிக்கும்போது ஏன் நீங்கள் மட்டும் பிடிவாதமாக வேறு விதி முறைகளைக் கடைப் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டால் என்ன சொல்வது? கேட்காவிட்டாலும் நாமே அந்தக் கேள்வியைக் கேட்டு விளக்கம் கொடுக்கவும் தயாராக இருந்து கொள்வோமே! நம் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மொழியாதலால் மற்றவர்கள் செய்தது போல நம்மவர்கள் அதற்குப் பின்னால் வந்த மொழிகளிடம் இருந்து எதையும் கடன் வாங்க விரும்ப வில்லை. நம் மொழியைவிட வடமொழி கண்டிப்பாக வசதியான மொழிதான். அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. வம்புக்கு “என் மொழிதான் உலகத்திலேயே தலை சிறந்த மொழி” என்று வறட்டு வாதங்கள் செய்கிற ஆளில்லை நான். ஆனால், நல்லதை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வோம் என்கிற திறந்த மனப்பான்மை இருந்திருந்தால் ஒருவேளை நாமும் மற்றவர்களைப் போல காப்பி அடித்து விட்டு, நம் பாரம்பரியப் பெருமையை மறந்திருப்போமோ என்னவோ? நமக்கென்று இருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றைத் தொலைத்திருப்போமோ என்னவோ? “உலகின் முதன் மொழி தமிழ்” என்று பெங்களூரில் தார் வைத்து எழுதும் வேலையை விட்டுவிட்டு எல்லோரையும் போல், “வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட டமிலோ டுமீலோ எங்கள் தாய்மொழி” என்று பள்ளிகளில் ஏதோவொரு புது மொழியில் மனப்பாடம் செய்து கொண்டிருந்திருப்போமோ என்னவோ? அதனால்தானோ என்னவோ நம்மவர்கள் இப்பவும் புதிய எழுத்துக்களை நுழைத்து மொழியை வளமைப்படுத்தும் பணியைச் செய்ய முன் வருவதில்லை என நினைக்கிறேன். ஒருவேளை வெளி உலகோடு இன்றளவுக்கு உறவாடியதில்லையாதலால் அதைப்பற்றிச் சிந்திக்க இதுதான் சரியான தருணமோ என்னவோ? இது போன்று எத்தனையோ “என்னவோ”க்கள். காலம்தான் விடை சொல்ல வேண்டும்.

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...