சனி, டிசம்பர் 28, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

பாதுகாப்பு

இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வளரா நாடுகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள்.  வன விலங்குகளைவிட மனித இனம் எவ்வளவு மேலானது என்று படுகிறதோ அதே அளவுக்கு மனிதருக்குள்ளேயே ஒரு சாரார் பண்பட்ட மனிதர் போல் மேலான வாழ்க்கையும் இன்னொரு சாரார் விலங்குகளைப் போலக் கொடூரமான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். விதிகளை மதித்தல், மனிதர் உயிர்க்குக் கொடுக்கும் மரியாதை போன்று பல விசயங்களில் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் மேலானவையாகப் பட்டாலும், அடிப்படையான சில விசயங்களில் அவர்கள் நம்மைவிடப் பின்தங்கி இருப்பது போலத்தான் படுகிறது. அதில் ஒன்று, தனிமனிதப் பாதுகாப்பு.

வந்து இறங்கிய பொழுதில் இருந்து எத்தனையோ வழிப்பறிக் கதைகள் பற்றிக் கேள்விப் பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்கும் பல விதமான கருத்துகள் சொல்கிறார்கள். ஒன்று, குற்றங்கள் பெருகிய நம் நாட்டில் மக்கட்தொகையும் அதிகம் இருப்பதால், நமக்கு நடக்கிற வரை அது பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை நாம். இங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதைக் கூடப் பெரிதாக்கிப் பேசுகிறோம். அதற்கொரு காரணம் - இங்கே ஏற்கனவே இருக்கிற சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருப்பதால் நம்மிடம் இருக்கும் மித மிஞ்சிய எதிர்பார்ப்பு. இன்னொன்று - இதைச் செய்வதும் இதனால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் உள்ளூர் ஆங்கிலேயர்கள் இல்லை என்கிறார்கள். பிழைக்க வந்தவர்களைக் குறி வைத்துப் பிழைக்க வந்தவர்களே செய்கிற குற்றங்களே இவை என்றே சொல்கிறார்கள். இருக்கலாம்.

இந்தியாவில் சாதாரணமாக நடமாடுகிற போது இருக்கிற அச்சமற்ற மனநிலையோடு எப்போதுமே இங்கே நடக்க முடிந்ததில்லை. நம்ம ஊரில் நமக்குத் தெரிந்தது போல, இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த ஊரில் எந்தெந்தப் பகுதி பாதுகாப்பானது எந்தெந்தப் பகுதி பாதுகாப்பற்றது என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். அதற்கேற்பத் தம் நடமாட்டங்களை வைத்துக் கொள்வர் என நினைக்கிறேன். "உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்; வெளியூர்க்காரன் நாய்க்குப் பயப்படுவான்" என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள். இங்கே நாய்கள் வீதிகளில் அவிழ்த்து விடப் படுவதில்லை என்பதால், "உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்; வெளியூர்க்காரன் சக மனிதர்க்குப் பயப்படுவான்" என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இது போன்று தெருக்களில் நடமாடும் போது வருகிற பயத்துக்கு இன்னொரு காரணம் - இந்தியாவில் எங்கு போனாலும் கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிறைந்திருப்பார்கள். இங்கோ அப்படியில்லை. எங்குமே அமைதியாகத்தான் இருக்கிறது. சுற்றி ஆட்கள் அதிகம் நடமாடவில்லை என்றாலே அங்கே குற்றத்துக்கான வாய்ப்புக் கூடி விடுகிறதுதானே! ஊரில் இருக்கிற காலத்தில் ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருக்கிற தெருக்களைக் கண்டால் மனதுக்கே இதமாக இருக்கும். இங்கு வந்த பின்பு அந்தச் சுவையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் கூட்டமாக இருக்கிற இடங்களைத்தான் பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், அங்கே பழகிய இடம் என்பதால், வழியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்பட்டால் கூட அதை எதிர் கொள்ளும் சில உத்திகள் நமக்கு எளிதாக வரலாம். எதற்காகத் தாக்குவார்கள், எப்படித் தாக்குவார்கள், எப்படித் தப்பலாம் என்று ஏதாவது கொஞ்சம் புரிபடும். இங்கே ஒரு கருமமும் புரிபடுவதில்லை.

எதற்காகத் தாக்குவார்கள் என்பதற்கு ஒரு விடை இருக்கிறது. இந்தியர்களின் தங்க நகை மோகம் உலகப் புகழ் பெற்றது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, இந்தியர்களைத் தங்கத்துக்காகக் குறி வைத்துத் தாக்கும் நடைமுறை இருந்து வரத்தான் செய்கிறது. இதைப் புரிந்து கொண்டு அந்த மாதிரியான ஆசைகளை ஊரிலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு வருகிற விபரமான ஆட்களும் இருக்கிறார்கள். "அதெல்லாம் பாத்துக்கிறலாம்" என்று துணிந்து வந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். "எவனோ என்னைக்கோ அடிச்சுப் பிடுங்குவாங்கிறதுக்காக என்னைக்குமே நகை போடாம இருக்க முடியுமா? என்னப்பா இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு?!" என்று துணிவோர்தான் பெரும்பாலும் இதற்கு இறையாவோர். இதுவும் குளிர் காலங்களில் பல அடுக்கு ஆடைகள் போடுவதால் அதிகம் நடப்பதில்லை. வெயில் காலத்தில்தான் பளபளவென்று நாம் ஆசைப்படுகிற மாதிரி வெளியில் நன்றாகத் தெரியும். அப்போதுதான் அவர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதைச் செய்வது பெரும்பாலும் வெள்ளையரோ, இந்தியரோ, பாகிஸ்தானியரோ, இலங்கையரோ அல்ல; ஆப்பிரிக்கர்களே என்றொரு பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரையும் அப்படி ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவது தவறு; அதைப் பற்றிப் பேசும் முன் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் - ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறது. அதனால் இது பற்றிப் பேசவே சிறிது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கருத்து என்ற முறையில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிவிடுவது என்று தீர்மானித்துச் சொல்லி விடுகிறேன். உண்மை, உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் எங்கோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அந்தக் காலத்தில் நம்ம ஊரில் கூட காவற்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் எல்லாருமே பயந்து நடுங்கி ஓடி ஒளிவார்களாம். ஆனால் இப்போது சுள்ளான் மாதிரி இருக்கிற பயகள் கூடப் பல இடங்களில் அவர்களை எதிர்த்து வாக்குவாதம் செய்வது பரவலான ஒன்றாகி விட்டது. ஆனாலும் எல்லோரும் அப்படி நடந்து கொள்வதில்லை. ஏனென்றால் சில அதிகாரிகள் கோபம் வந்தால் பொளேர் என்று வைத்து விடுவார்கள் என்ற பயம் இப்போதும் இருக்கிறது. அதுவும் அதிகமாகக் காவற்துறையோடு பழக்கம் இல்லாதவர்கள் - வைத்துக் கொள்ளாதவர்கள் கவனமாகவே இருப்பார். ஆனால் இங்கே காவற்துறை அதிகாரிகள் என்றால் யாரும் பயப்படுவது இல்லை. குற்றம் செய்தோர் கூட அவர்களிடம் குண்டக்க மண்டக்க வாதிடுவதும், சில நேரங்களில் தரமற்ற சொற்கள் பயன்படுத்திப் பேசுவதும் கூட சாதாரணமாக நடக்கிற ஒன்று என்கிறார்கள். இது இவர்களுடைய சட்டம் ஒழுங்கில் குறைபாடு உண்டு என்று நிறுவச் சொல்லும் கதை அல்ல. குற்றம் செய்தவருக்குச் சட்டப்படியான தண்டனை கிடைப்பது கிடைத்தே தீரும். ஆனால் அடித்தல் - துன்புறுத்துதல் போன்ற மனித உரிமை மீறும் உரிமைகள் காவற்துறைக்குக் கொடுக்கப்படவில்லை என்பதால் அவர்களைக் கண்டு அஞ்சுகிற பழக்கம் இல்லை என்று மட்டும் சொல்கிறேன். "அவர்களுக்கென்று கடமை இருக்கிறது. அதை அவர்கள் செய்யட்டும். நமக்கென்று உரிமை இருக்கிறது. அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது" என்கிற மனவோட்டம். அவ்வளவுதான்.

சிங்கப்பூரில் எங்கேனும் ஏதோவொரு சிறிய குற்றத்துக்கான சிறு அறிகுறி தெரிந்தாலும் கூட பொது பொதுவென வந்து குவிந்து விடுவார்கள் காவற்துறையினர். பார்க்கவே வியப்பாக இருக்கும் அக்காட்சி. அது போல இங்கும் எந்தக் குற்றமாக இருந்தாலும் தகவல் கிடைத்த ஒரு நிமிடத்துக்குள் காவற்துறை களத்துக்கு வந்து விடும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதனால் அடிக்கடி ஒலி எழுப்பிக் கொண்டு பறக்கும் காவற்துறை வாகனங்களைக் காண முடியும். நம்ம ஊரில் ஆம்புலன்ஸ் வண்டிகள் மட்டுந்தான் அப்படிச் செல்லும். இங்கே அதிகமாகக் காவற்துறை வண்டிகளே அப்படிச் செல்கின்றன. அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் குற்றமும் குற்றத்தைப் பிடிக்கப் போகும் அல்லது தடுக்கப் போகும் காட்சிகளும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதி கூட அப்படியான ஒரு பகுதிக்கு அருகிலானதுதான்!

போக்குவரத்து வசதிகள்
இலண்டனின் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகள் உலகறிந்தவை. தரைவழிப் பேருந்துகள், தரைக்கு மேலே செல்லும் இரயில் வண்டிகள், தரைக்கடியில் செல்லும் ட்யூப்கள், சாலையோடு சேர்ந்து கிடக்கும் இருப்புப் பாதையில் செல்லும் ட்ராம்கள் என்று பல விதமான வசதிகள் இருக்கின்றன. இதில் பெரும் வியப்பு - நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தரைக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டி அமைத்த ட்யூப் நிலையங்கள் - பாதைகள். இலண்டன் நகரம் முழுக்க அதன் தரைக்கடியில் எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிற இந்த நரம்பு வலைப் பின்னல் இருக்கிறது. அதுதான் இந்த நகரத்துக்கு இரத்தம் ஓட்டம் போலச் செயல்படுகிறது. இன்று புதிதாக ஒரு நகரத்தைக் கட்டச் சொன்னாற் கூட நம்மால் நம் நாட்டில் இது போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு நகரத்தைக் கட்ட முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு வியப்பாக இருக்கிறது. இது ஒன்று போதும். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை நிரூபிக்க. அடுத்தடுத்த நிமிடங்களில் வண்டிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆட்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு வண்டியிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதெல்லாம் செய்திருக்கவில்லையென்றால் இலண்டன் இன்று என்ன பாடு படும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

ஓட்டுனர் இல்லாமல் ஓடும் ட்யூப்களும் இருக்கின்றன. முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப் பட்டு விட்ட இந்த வண்டிகளின் இயக்கம் ஒரு பெரும் வியப்பு. ஒவ்வொரு நிலையத்திலும் சரியான அறிவிப்புகளைச் செய்து, சரியான இடைவெளி கொடுத்துக் காத்திருந்து, சரியாகக் கதவுகள் சாத்தி, வளைவுகளுக்கு ஏற்றபடிச் சரியான வேகமெடுத்து, இலட்சக்கணக்கான மக்களைத் தினமும் பாதுகாப்பாக இடம் பெயர்த்துக் கொண்டிருக்கும் இது போன்ற வசதிகள் வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமோ நமக்கு!

இங்கிருக்கிற வசதிகள் பற்றிப் பேசும் போது சொல்ல மறக்கக் கூடாத ஒன்று - இந்த வசதிகள் எல்லாம் யார் பணத்தில் கட்டப்பட்டவை என்பது. காலங்காலமாக இங்கிருக்கிற இந்தியர்கள் பலர் (துணைக் கண்டத்தினர் எல்லோருமே) இது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். "இந்த அழகழகான வீடுகளும் கட்டடங்களும் வசதிகளும் முழுக்க முழுக்க நம்ம ஊரில் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் - அடிமைகளாகக் கொண்டு வந்த ஆட்களை வைத்துக் கட்டியது!" என்று அவர்கள் சொல்லும் போதே, அதை அனுபவிக்கிற உரிமை நம்மை விட யாருக்கும் அதிகம் கிடையாது என்பது போல இருக்கும். வியப்பு என்னவென்றால், அதையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிற மாதிரிப் பேசுகிற ஆங்கிலேயர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதே. அதனாற்தான் அவர்களால் நம்மையும் அவர்களுள் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு இருக்க முடிகிறது.

சிங்கப்பூரில் இரயில்களுக்குள் தின்பது தடை செய்யப்பட்டிருக்கும். இங்கோ எப்போதும் யாராவது கையில் ஏதாவது ஒன்றை வைத்துத் தின்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதற்கொரு காரணம், மேற்கத்திய உணவு வகைகள் பெரும்பாலும் இடத்தை நாசம் பண்ணாத மாதிரிச் செய்யப் படுபவை. நம் கிழக்கத்திய உணவுகள் யாவும் கமகமவென்ற மணமும் நேரமாகி விட்டால் அதுவே கப்படிக்கிற அளவு நாற்றமும் கொண்டவை. கொட்டி விட்டால் இடத்தின் நிறத்தையே மாற்றி விடக் கூடிய - ஆட்களை வழுக்கி விழ வைத்துப் பரலோகம் அனுப்பி விடக் கூடிய ஆற்றல் படித்தவை. அதனால் இருக்கலாம்.

அமெரிக்கா முழுக்க முழுக்கப் புதுமை சார்ந்த நாடு என்பது போல், இங்கிலாந்து முழுக்க முழுக்கப் பழமையை மதிக்கிற - போற்றுகிற நாடு. நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கும் சேர்த்து வசதிகள் செய்து விட்டதால் அப்படி இருக்கலாம். இங்கிருக்கிற கட்டடங்கள் அனைத்துமே சாதாரணமாகப் பல நூறு வருட வயது கொண்டவை. சாலைகளும் அப்படியே. அதில் ஒரேயொரு பிரச்சனை, வசிப்பிடப் பகுதிகளில் இருக்கும் பல சாலைகள் அகலமாக இருந்த போதும், வீட்டுக்குப் பல வாகனங்கள் வைத்து வாழப் போகும் எதிர்காலத்தைப் பற்றிச் சரியாகக் கணிக்காமல் விட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி விட்டு விட்டதால், எதிரெதிர்த் திசைகளில் இரண்டு பேருந்துகள் செல்ல முடியாத மாதிரிக் குறுகி விட்டன. இரண்டும் பேருந்தாக இருக்கும் போது மட்டுமே இந்தப் பிரச்சனை. இதுவும் எல்லாச் சாலைகளிலும் இல்லை. அங்குலம் அங்குலமாக நகர்த்தி வண்டி ஓட்டிப் பழகிவிட்ட நமக்குக் கூட இது சிறிது எரிச்சலாக இருக்கிறது. "ஏன்டா, ஒனக்கே இது நாயமா இருக்கா?" என்று அவ்வப்போது மண்டையில் தட்டி நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

வியப்புகள் தொடரும்...

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

முரண்பாடுகளற்ற உலகம்

முரண்பாடுகளற்ற உலகம் படைத்திட
முற்றிலும் ஒத்துப் போகும்
மூவர் அணி ஒன்று படைத்தோம்

இயக்கம் தொடங்கிட
எந்த முரண்பாடும் இன்றி
இடம்
பொருள்
நேரம்
எல்லாம் குறித்தோம்

பேசி முடித்தபடி
குறித்த இடத்தில் கூடினோம்

குறித்த நேரத்தில்
குறித்தபடியே
குலவை எழுப்பித் தொடங்கப் போன
ஒலகமகா இயக்கம்
உடைந்து நொறுங்கிச் சிதைந்து விழுந்து
தொடங்கும் முன்பே முடிந்து போனது

குறித்த நேரம் என்பது
மூவரில் யார் கடிகாரத்தின்படி என்ற
மணித்துளிச் சண்டையில்...

கடிகாரத்தில் கண்ட குறை
கட்டியிருப்பவரையும் குறி வைத்துச் சொன்னதே என்ற
காழ்ப்புணர்ச்சி மட்டும் உண்மை என்பதில்
கருத்து வேறுபாடு இல்லாமல்
கலைந்து பிரிந்தோம்

ஒற்றுமை வேண்டி
ஒரு பொதுக் கடிகாரத்திடம் போதல்
ஒலகமகா மேதைகள் மூவரும்
தம்மைத்தாமே இழிவு படுத்திக் கொள்ளும்
தன்னம்பிக்கையற்ற செயலாகி விடும் என்பதால்...
முரண்பாடுகளற்ற உலகம் இயங்காது
முயலும் இயக்கமும் இயங்காது என்று
முடிவு செய்து கொண்டு
மூட்டையைக் கட்டினோம்!

சனி, நவம்பர் 16, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 5/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...


இலண்டனில் மற்றவர்கள்


எந்தப் பெருநகரமும் அது கிராமமாக இருந்த காலத்தில் இருந்து இருப்போர் மட்டுமே கொண்டு இருப்பதில்லை. எல்லோரும் உள்ளே வருவதால்தான் அது நகரமாகிறது - பெருநகரமாகிறது. எல்லோரும் சேர்ந்துதான் ஒரு பெருநகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். எந்த நகரத்திலும் வெளியோர் வந்து எடுத்துக் கொண்டு மட்டும் ஓடிவிடுவதில்லை. தம் உழைப்பையும் திறமைகளையும் கொடுத்துத்தான் பதிலுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு இலண்டனும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப் போனால், வெள்ளைக்காரர்கள் எங்கெல்லாம் போய் கொள்ளையடித்து விட்டு வந்தார்களோ அங்கிருந்து அவர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்ய ஆட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு வந்தார்கள். அதில் மிக முக்கியமான ஒன்று, அவர்களுடைய இராணுவத்தில் பணிபுரிய, இன்றைய பாகிஸ்தான் உள்ளிட்ட அன்றைய இந்தியாவில் இருந்து ஏராளமான ஆட்களை அழைத்துக் கொண்டு சென்றார்கள். அப்படித்தான் இங்கிலாந்தில் வெளி நாட்டவர்களின் - இந்தியர்களின் (இந்தியர் என்று சொல்லும் போதெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தவர் என்று கொள்க) இருப்புக் கூடியது. அப்படிச் சென்றவர்களை வைத்து அவர்களைச் சார்ந்தோர் குடியேறினர். அப்படியே கூடியதுதான் கூட்டம். இன்று மொத்த இலண்டன் மக்கட்தொகையில் மூன்றில் ஒருவர் இந்திய-பாகிஸ்தானிய வம்சாவழியினர் என்கிறார்கள்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்தியர்கள் குவிந்திருக்கிறார்கள். இதுவும் எல்லா ஊர்களிலும் இருக்கிற பழக்கந்தானே! வெளிப் பண்பாட்டினர் ஒன்று கூடி இருப்பதில் ஒரு கூடுதலான பாதுகாப்புணர்ச்சி கிடைக்கும். அதனால் அப்படி இருக்கிறார்கள். உள்ளூர்க்காரர்களுக்கு அதைக் கண்டால் பற்றிக் கொண்டு வரும். சென்னையில் சௌகார்பேட்டை முழுக்க மார்வாடிகள் ஒன்று கூடி இருக்கிறார்கள். பெங்களூரில் அல்சூர் முழுக்கத் தமிழர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள். அது போல ஒவ்வொரு பெருநகரத்திலும் குறிப்பிட்ட சில பகுதிகள் இருக்கின்றன. அது போல, இலண்டனில் இருக்கிற பகுதிகள் பல.

அவை எல்லாவற்றிலும் தலையாய இடம் சௌத்தால் (SOUTHALL) எனப்படும் பஞ்சாபி-சீக்கியர்களின் இடம். பாகிஸ்தானியரும் அதிகம் உண்டு. சௌத்தால் இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் 'சௌத்தால்' என்று பஞ்சாபியில் எழுதியிருப்பதைப் பார்க்கலாமாம் (நான் இன்னும் போனதில்லை). இங்கிலாந்தில் இந்திய மொழி ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் ஒரே இரயில் நிலையம் இதுதான் என்பார்கள். வெளியில் நமக்கு வேண்டிய மாதிரி நம் மொழியில் பலகை வைத்துக் கொண்டு நம் மொழியை வளர்ப்பது வேறு. அரசாங்கமே ஒரு மொழியை அங்கீகரித்து அதைச் செய்வது வேறு. இது அரசாங்கமே பஞ்சாபியரின் இருப்பை மதித்து மரியாதை செய்ததன் அடையாளம். முதன் முதலில் பிரிட்டிஷ் இராணுவத்துக்குச் சென்ற இந்தியர்கள் உருவாக்கிய பகுதி என்கிறார்கள். உள்ளே நடமாடும் போது ஒருத்தர் கூட வெள்ளையரைக் காண முடியாதாம். முழுக்க முழுக்க இந்தியா போலவே இருக்கும் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினரைத் தம்மில் ஓர் அங்கமாக ஏற்றுக் கொண்டு விட்டது போலவே, இந்து-முஸ்லிம்-சீக்கியர் என்று மும்மதத்தினரையும் தம்மோடு ஐக்கியமாகிக் கொள்ள அனுமதித்திருக்கிறார்கள். குறிப்பாக சீக்கியர்கள் மீது வெள்ளையர்கள் நல்ல மரியாதை கொண்டிருப்பது போல் தெரிகிறது.

பஞ்சாபி என்பது இந்தியரிலும் உண்டு - பாகிஸ்தானியரிலும் உண்டு. குஜராத்தி என்பதில் இந்தியரும் உண்டு - பாகிஸ்தானியரும் உண்டு (ஜின்னாவே குஜராத்தி என்றுதானே சொல்கிறார்கள்!). இவையெல்லாம் எல்லையோர மாநிலங்கள். இந்தியா போல இல்லாவிட்டாலும் பாகிஸ்தானிலும் பல மொழிகள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உருது கொன்று விட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கொரு பாகிஸ்தான் பஞ்சாபிய நண்பன் இருக்கிறான். அவனுடைய தாத்தா பிரிட்டிஷ் இராணுவத்தில் பணி புரியச் சென்றவராம். அவர் இங்கிலாந்து செல்லும் போது இந்தியர் - பஞ்சாபி. இன்று அவர்கள் குடும்பம் பாகிஸ்தானிய - உருதுக் குடும்பம். இங்கே எப்படி இந்தி பேசினால்தான் இந்தியன் என்று ஒரு முட்டாள் கூட்டம் சொல்கிறதோ அது போல அங்கும் அப்படியொரு நெருக்கடி இருந்திருக்கிறது. மற்ற மொழி பேசிய மக்கள் எல்லோருமே அடுத்த தலைமுறையை உருது பேசியே வளரும்படிப் பார்த்துக் கொள்ள நேர்ந்திருக்கிறது. இந்தியா இந்தியா என்பதால் இந்தித் திணிப்பு பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. பாகிஸ்தான் பாகிஸ்தான் என்பதால் உருதுத் திணிப்பு வெற்றி பெற்று விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், என் நண்பனின் தாத்தா பாகிஸ்தானில் கூட இருக்கவில்லை. நாட்டைவிட்டே போய்விட்ட பின்னும் தம் மக்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தன்னையும் மாற்றிக் கொண்டு தம் சந்ததியரையும் அப்படியே மாற்றி விட்டாராம். அதனால்தான் இன்றும் அவர்களால் தம் நாட்டோடு தொடர்பில் இருக்க முடிகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது பாகிஸ்தானையே அவன் ஆதரிக்கிறான். இங்கிலாந்து-இந்தியப் போட்டிகளின் போது இந்தியக் குழந்தைகளும் இந்தியாவையே ஆதரிக்கிறார்கள். இங்கிருந்து போனவர்கள் மாறாமல் இருப்பதல்ல பெரிது. பல தலைமுறைகளுக்குப் பிறகும் அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அப்படியே தொடர்வதும், அதை மண்ணின் மைந்தர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டு அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டாமல் இருப்பதும் பெரிதுதானே! அதுதானே உயர்ந்த பண்பாடு. அதே வேளையில் அவர்கள் தம் இங்கிலாந்து மீதான அன்பில் எந்த வகையிலும் குறை வைப்பதில்லை. தம்மை எப்போதும் அந்த மண்ணின் மைந்தர்களுள் ஒருவராகவே அடையாளம் காட்டியும் கொள்கிறார்கள். இது ஒரு சுவாரசியமான விசயம்.

அடுத்தது ஈஸ்ட் ஹாம் (EAST HAM) எனப்படும் பகுதி. நம் மொழியில் சொல்வதானால் கீழப்பட்டி என்று சொல்லலாம்! பெரும்பாலும் தமிழர் நிறைந்த பகுதி. இந்திய - ஈழத் தமிழர் இரு சாராரும் உண்டு இங்கே. மற்ற இந்திய-பாகிஸ்தானிய-வங்க தேசத்தவரும் உண்டு. இங்கும் ஓரிரு வெள்ளையரைக் கூடப் பார்க்க முடிவதில்லை. ஓரிரு நாட்கள் அங்கே போயிருக்கிறேன். வெள்ளைக்காரர்களைப் பொருத்த மட்டில், நம்மவர்கள் நாசம் செய்த பகுதி என்றும் சொல்வார்கள். இட்லி-தோசை-சாம்பார் சாதம் எல்லாம் அளவில்லாமல் கிடைக்கும் இடம். முருகன் கோயில் இருக்கிறது.

துணைக்கண்டத்தவர் அனைவரும் பெரும்பாலும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். பாகிஸ்தானியரும் வங்க தேசத்தவரும் நடத்தும் கடைகளில் கூட இந்திய உணவகம் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இங்கேதான் நாயும் பூனையும் போல அடித்துக் கொண்டு சாகிறோம் (இதற்கே, "யார் நாய்? யார் பூனை?" என்று கூட யாராவது சண்டை கிளப்ப முயலக் கூடும்).

அது போலவே, வங்க தேசத்தவர் எவரும் தன்னை நாம் இங்கே சொல்வது போல வங்கதேசர் (BANGLADESHI) என்று சொல்லிக் கொள்வதில்லை. அவர்கள் அனைவருமே மேற்கு வங்கத்தில் இருந்து வந்த வங்காளியர் போலவே தம்மை வங்காளி (BENGALI) என்றே அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள். அதுதானே அவர்களின் இனத்தின் சரியான பெயர். நாடுகள் என்பவை மனிதன் மிகச் சமீபத்தில் கண்டுபிடித்தவைதானே. அதையே இரண்டு இந்தியர்கள் இரண்டு விதமாகப் பார்க்கக் கூடும். நம்மைப் போன்றவர்கள் அதைக் கண்டு மகிழ்கிறோம். வேறு சிலரோ அதிலும் கோளாறு காண்கிறார்கள். "அவர்கள் வேறு. வங்காளியர் வேறு. அவர்கள் எப்படித் தன்னை வங்காளி என்றோ இந்தியன் என்றோ சொல்லிக் கொள்ள முடியும். அவர்கள் தம்மை வங்கதேசன் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும்!" என்று சொல்கிறார்கள்.

அது போல, ஈழத் தமிழர் நிறையப் பேர் நம்மைத் தமிழராகப் பார்க்கிறார்கள். மொழி கேட்பதற்கு சிறிது வேறு மாதிரி இருப்பினும் தமிழிலேயே பேசுகிறார்கள். சிலர் இந்தியராகப் பார்த்து ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட காலம் முன்பே சென்று குடியேறி விட்டவர்களாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் பேசும் போது அவர்கள் தம்மை இலங்கையர் (SRILANKAN) என்றே அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். இப்போதைக்கு அதுதானே சரி. நமக்குத்தான் ஏனோ அப்படி அவர்கள் சொல்வதைக் கேட்கும் போதே ஏதோ விதமாகப் படுகிறது. 'ஈழம்' அல்லது 'தமிழ்' என்கிற சொல்லை வெளியாரிடம் சொல்லிப் பேசும் அளவுக்கு இன்னும் காலம் கனியவில்லை போலவே தெரிகிறது.

நாங்கள் இருக்கும் இடம் க்ராய்டன். இங்கும் இந்தியரும் ஈழத் தமிழரும் அதிகம். ஈஸ்ட் ஹாம் அளவுக்கு இல்லை. ஓரளவுக்கு. இது போல வெம்ப்ளி என்றொரு இடம் உண்டு. அங்கு முழுக்க குஜராத்தியர் அதிகம். அங்கொரு பணக்காரக் கோயில் இருப்பதாகவும் கேள்விப் பட்டேன். இன்னும் போனதில்லை. இந்தியர் பகுதி என்றால் அங்கொரு கோயில் இருக்கும். உலகம் முழுக்க அதுதானே!

பெரும்பாலும் வெளியார் வருகையை ஏற்றுக் கொள்கிற பரந்த பண்பாடாகத்தான் வெள்ளையர் பண்பாடு இருக்கிறது. ஆனால் அடி மட்டத்தில் மக்கள் மத்தியில் சிற்சில பிரச்சனைகள் இருக்கக் கூடும்தான். தனித் தமிழ் இயக்கம் போல, "தமிழ்நாடு தமிழருக்கே" என்பது போல, அங்கும் ஒரு சாரார் வெளியார் குடியேற்றத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெளியார் வருகையால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் பற்றி அவ்வப்போது எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வெளியார் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுகிறது. வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை முறையைக் கண்டு கட்டுண்டு அவர்களைப் போலவே உடையையும் நடைமுறைகளையும் காட்டிக் கொண்டு நுழைகிறவர்கள், பின்னாளில் தம் சொந்த ஊரில் இருந்தால் இருப்பதை விடக் கூடுதலாகத் தம் அடையாளங்களைக் காட்டிக் கொள்வதைப் பற்றியும் - அவர்களுடைய கண் உறுத்துகிற மாதிரி வாழ்கிற வாழ்க்கை முறைகள் பற்றியும் ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கிறது. "உங்கள் நாட்டில் நாங்கள் வந்து இப்படி வாழ முடியுமா?" என்று கேட்கிறார்கள். ஆங்கிலேயர் நாட்டுத் தலைநகரில் "இது ஆங்கிலேயர் பகுதி" என்று சொல்லும் அளவுக்குப் பகுதிகள் உருவாவது எப்படி வலிக்காமல் இருக்கும்?! இயல்புதானே! 'நம் முன்னோர்கள் போய் உலகம் முழுவதும் மேய்ந்ததற்கான தண்டனையை நாம் அனுபவிக்கிறோம்!' என்று சமாதானம் சொல்லிக் கொள்வோரும் இருக்கிறார்கள். மாற்று பண்பாட்டினர் கலந்து உருவாகும் ஊர்களில் இருக்கும் பெரும் பிரச்சனை - இவர்களும் அவர்களும் கலந்து இரண்டின் நன்மைகளும் கூடிப் பெருகி வாழ்க்கை இருவருக்கும் மென்மேலும் சுகமானால் நன்றாக இருக்கும். அதை விடுத்து, 'உனக்கென்று ஒரு பகுதியை உருவாக்கி நீ உன்னைப் போலவே வாழ்வாய்; எனக்கென்று இருக்கும் பகுதியில் இருந்து கொண்டு நான் என்னைப் போலவே வாழ்வேன்!' என்று வாழ்கிற வாழ்க்கை எப்படியும் கசந்துதானே தீரும் ஒரு நாள்!

வியப்புகள் தொடரும்...

ஞாயிறு, நவம்பர் 10, 2013

கடிதக் கிறுக்கு


பெங்களூர் வருவதற்கு முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் கடுமையாக இருந்தது. கடிதத்தையும் எழுதிவிட்டு, அதை நாட்குறிப்பிலும் ஏற்றி விடுவேன். இன்னின்னார்க்கு இன்று கடிதம் எழுதினேன் என்று. கிட்டத்தட்ட இரண்டு-மூன்று  நாட்களுக்கு ஒருமுறை கடிதமும் பேனாவுமாக உட்கார்ந்து விடுவேன். நமக்குத்தான் படிப்பதைத் தவிர எல்லாம் பிடிக்குமே. அதனால் படிக்க வேண்டிய காலத்தில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள வைத்திருந்த டெக்னிக்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. வேலைக் கிறுக்கு பிடித்த பின் கடிதம் எழுதுதல் மெது-மெதுவாகக் குறைந்து போய் விட்டது. அத்தோடு சேர்ந்து மின்னஞ்சல் வேறு வந்து அதற்கான தேவையை இல்லாமலே செய்து விட்டது.  அப்புறம்தான் எதுவாக இருந்தாலும் அப்போதே பேசித் தீர்த்துக் கொள்ள வசதியாக 'செல்'லப்பன் வந்து விட்டானே!


இந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால், அது பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது.  உறவினர்களோடும் நண்பர்களோடும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஒரு பெரிய நற்பண்பாகவும் வெற்றி பெற்றவர்களில் பழக்கமாகவும் மனதில் பதிந்து விட்டதன் விளைவு. காந்தி கடிதம் எழுதுவார், நேரு கடிதம் எழுதுவார், அவர்கள் வழியில் விடுதலைப் போரில் இறங்கிப் போராடிய என் தாத்தா நிறையக் கடிதங்கள் எழுதுவார், அவர் வழியில் அரசியல் வாழ்வில் ஈடுபட்ட, சென்னையில் இருந்த என் சித்தப்பாமார் சிலர் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவர் என்பதையெல்லாம் படித்தும், கேள்விப்பட்டும், பார்த்தும் அதில் ஓர் அதீத நாட்டம் உருவாகி இருந்தது. நேரு அவருடைய மகளுக்கு எழுதிய கடிதங்கள் இந்த நாட்டுக்கு எவ்வளவு வரலாற்று முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக என் தாத்தா அவருடைய காலத்தில் பலருக்கு எழுதிய கடிதங்கள் எங்கள் குடும்பத்தில் பேசப்படுவதைத் திரும்பத் திரும்பக் கேட்டு வளர்ந்தேன்.

பெரும் பெரும் குடும்பப் பிரச்சனைகள் பற்றிப் பேசும்போதெல்லாம் அப்பிரச்சனைகளின் போதெல்லாம் அவர் பலருக்கும் பக்கம் பக்கமாக வரைந்த கடிதங்கள் பற்றியும் பேசுவார்கள். அதிலும் ஒரே கடிதத்தை கார்பன் பேப்பர் வைத்து எழுதி, பல நகல்கள் எடுத்து, உரியவருக்கு முக்கியப் பிரதியையும், நியாயத்தை உணர வேண்டிய மற்றவர்களுக்கு நகல்களையும் அனுப்பி வைப்பாராம். அதிலும் கடைசியில் கையெழுத்துக்குக் கீழே "நகல்: இன்னின்னார்க்கு..." என்று எழுதியும் விடுவாராம். கடிதத்தைப் படித்து முடித்து விட்டுக் கிழித்துப் போட்டாலும் அத்தோடு ஒழிந்தது தொல்லை என்று ஆசுவாசப் பட முடியாது. மற்றவர்களிடம் நகல் இருக்கும். என்றைக்கிருந்தாலும் அதைப் பற்றிப் பேச்சு வரும். நகல்கூட வெளிக் கிளம்பி வரும். நேரில் பிரச்சனை என்றாலும் கூட கிளம்பிப் போய் வெளியூரில் உட்கார்ந்து கொண்டு கோபக் கனலைக் கடிதத்தில் கொட்டி அனுப்புவது வசதியான ஓர் ஆப்சனாகப் படுகிறது, இல்லையா?!

இதோடு சேர்ந்து, ஆண்டுக்கொரு முறை இன்னொரு வேலையும் நடக்கும். பொங்கல் வந்து விட்டால், உற்றார்-உறாதார்-உறவினர் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து அனுப்புவது. நெல்லுக்கு இறைக்கிற நீரில் கொஞ்சத்தைப் புல்லுக்கும் புழுதிக்கும் திருப்பி விட்டுக் கொள்ளும் சிவகாசிக்காரர்களின் சூட்சுமங்களில் இதுவும் ஒன்று. தீபாவளி-பொங்கலின் பேரைச் சொல்லி, கொண்டாட்டங்களை மேலும் குதூகலமாக்க வெளிநாடுகளில் இருந்து கற்றுக் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று. நாலணாவுக்கு ஓர் அட்டையை வாங்கி, ஏற்கனவே அதில் எழுதப் பட்டிருக்கும் லொட்டைக் கவிதையோடு சேர்த்து அதைவிடவும் சிறப்பாக ஏதாவது எழுத முயன்று, தோல்வியுற்று, அதை அஞ்சல் செய்தால், அடுத்த கலியாணத்திலோ-காது குத்திலோ பார்த்துப் பெருமைப் படும்  உறவினர்களின் மகிழ்ச்சிக்கு அடிமைப் பட்டுத் தொடர்ந்த பழக்கம், அத்தோடு நிற்காது. வகுப்பறையில் பக்கத்து இருக்கையில் இருக்கும் நண்பனுக்கு, அவனையே உடன் அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்த மாதிரியான அட்டையை அவனையே தேர்ந்தெடுக்க வைத்து, அவன் முன்பாகவே அத்தனையையும் கிறுக்கி, மீண்டும் அவனையே அஞ்சல் அலுவலகம் வரை அழைத்துச் சென்று, அனுப்பி விட்டு வந்து, வந்து சேர்ந்து விட்டதை அவன் உறுதி செய்யும் வரை காத்திருக்கும் - ஒவ்வொரு நாளும் விசாரிக்கும் சுகம்... அப்பப்பா!

அப்புறம், "அந்த அட்டையில் சொன்னால்தான் வாழ்த்தா? அதைவிடக் குறைவான காசுக்கு அரசாங்கமே விற்கும் அஞ்சல் அட்டையில் அழகாகப் படம் வரைந்து நானே கிறுக்கி அனுப்பினால் அது வாழ்த்தாகாதா?!" என்று கேள்வி கேட்டு, பயக்கத்தில் - பண்பாட்டில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அப்புறம் விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்வதே பண்பாட்டுக்கு எதிரானது என்று எண்ணி (என்னத்தையாவது மாற்றி மாற்றி யோசித்துக் குழம்பிக் குட்டையை நாறடித்தால்தானே அறிவாளி!) அதை முழுக்கவே விட்டு விட்ட பின்பும் கடிதம் எழுதுவது மட்டும் தொடர்ந்தது. பதினொன்றாம் வகுப்பு முதல் விடுதி வாழ்க்கை என்பதால், அது மேலும் உக்கிரமடைந்தது. எழுதுவதற்குப் புதிதாக நிறைய நேரமும் பழைய நண்பர்களும் இருந்தார்கள். அடுத்துக் கல்லூரி வாழ்க்கையும் விடுதியில். கூடுதல் நேரம். கூடுதல் நண்பர்கள்.

எல்லோருமே ஆட்டோக்ராப் வாங்குவார்கள்; அடிக்கடிக் கடிதம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள்; ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மங்கிப் போய்விடும். மாறாக, அதெப்படி அப்படியெல்லாம் விடலாம் என்று விடாப்பிடியாகத் தொடர முயன்ற சில வேலையற்ற வீணர்களில் ஒருவனாக இருப்பதைப் பெரும் நற்பண்பாகக் கருதினேன். கொடுமை என்னவென்றால், உடனிருக்கும் போது நம்மைப் பெரிதாக மதிக்காத-நன்றாகப் பழகியிராத பல நண்பர்கள் கூட, பிரிவுக்குப் பின்பு, நம்முடைய விடாமுயற்சிக்காகவும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்காகவும் மனமிளகி நெருங்கிய நண்பர்கள் ஆகி விடுவார்கள். அருப்புக்கோட்டையில் ஓராண்டு மட்டும் என்னோடு படித்து இடையிலேயே பிரிந்து சென்ற இராமநாதபுரத்து நண்பன் ரஜினி அப்படியோர் ஆள். அது போலவே கல்லூரியிலும் ஓராண்டு மட்டும் உடன் இருந்து விட்டு காவற் துறையில் வேலை கிடைத்து இடையில் பிரிந்து டெல்லி சென்ற, வல்லநாட்டுப் பக்கம் இருந்து வந்த முத்துமாரியப்பன் இன்னோர் ஆள். இருவரோடுமே ஒரு சில ஆண்டுகள் மட்டும்தான் தொடர்பு தொடர்ந்தது. இப்போது எங்கிருக்கிறார்களோ தெரியவில்லை.

இணையத்தில் உரையாடும் வசதி (CHATTING) வந்த காலத்தில், இணைய வசதி இருந்த முக்கால்வாசிப்பேர் தெரியாத பெண்களிடம் தொடர்பு உண்டாக்கிக் கொண்டு பேசியே கரெக்ட் பண்ணும் வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள். சுற்றிலும் நன்கு தெரிந்தவர்கள் அத்தனை பேர் இருந்தும் தெரியாதவர்களிடம் போய் முயன்று பார்க்கிற அந்த விசித்திரத்தின் பின்னணி என்ன என்று குழம்புவேன். அதில் ஒரு சுதந்திரம். தான் தானாக இருக்க வேண்டிய கட்டாயமின்மை. கெட்டாலும் வெளியே தெரியாமல் மேன்மக்களாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடலாம். அது ஒருபுறம் என்றால், அந்நியர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதில் ஒருவித சுகம் இருக்கிறது சிலருக்கு. இப்போதும் சமூக வலைத்தளங்களில் அதை மட்டுமே மும்முரமாகச் செய்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது (தவறான நோக்கத்தோடுதான் அப்படிச் செய்கிறார்கள் என்று எல்லோரையும் சொல்ல முடியாதுதானே!). அப்படி அந்தக் காலத்திலும் ஒரு கூட்டம் இருந்தது. பேனா நண்பர்கள் என்று ஒரு சிறிய கூட்டம் இருந்தது. ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் (இந்தப் பேனா நண்பர்கள் கருத்தாக்கத்துக்கும் லேனா தமிழ்வாணனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. பழைய ஆள் யாராவது அப்படி ஏதும் இருக்கிறதா என்று நினைவு படுத்துங்கள்!).எனக்குப் பேனா நண்பர்கள் அளவுக்குப் போக விருப்பம் இருந்ததில்லை (நமக்குத்தான் அன்னியபோபியா ஆச்சே!). ஆனால் தெரிந்தவர்களுக்கு மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தேன்.

ம்ம்ம்... நினைவு வந்து விட்டது. பள்ளியில் என் உடன் படித்த நண்பன் ஒருவன் (சிவகாசி-வடமலாபுரம் தர்மபாலன்) அடிக்கடி லேனா தமிழ்வாணனுக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பான். அவரும் இவனுக்குச் சளைக்காமல் பதில் எழுதிக் கொண்டே இருப்பார். "நமக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவருக்கு எழுதலாம். அவரும் நமக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார்!" என்று வேறு சொன்னான். நமக்கு அந்த அளவுக்குப் பிரச்சனைகள் இல்லாததால் அதிலும் இறங்கவில்லை. ஆனால் நண்பர்களுக்குள் நிறையப் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வோம். பல நேரங்களில் அருகில் இருக்கிற யாராலும் கொடுக்க முடியாத நமக்கு வேண்டிய உந்துசக்தியை தொலைவில் இருக்கிற யாரோ ஒருவரிடம் இருந்து வரும் ஒரு கடிதம் கொடுத்துவிடும். அப்படியும் பல கதைகள் உண்டு. பெங்களூர் வந்த பின்பு கல்லூரி நண்பன் நாதனுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவனுக்கு அப்படியான ஒரு வேலையைச் செய்ததாக அவன் சொன்னதும் மகிழ்ந்ததும் இன்னமும் நினைவிருக்கிறது.

பொங்கல் வாழ்த்தில் இருக்கிற கவிதைக்குப் போட்டியாகக் கவிதை எழுதுகிற சவாலைப் போலவே, இந்தக் கடிதங்கள் எழுதுவதிலும் ஒரு சுய-இன்பம் இருந்தது. அந்தக் கடிதங்களில் வார்த்தை விளையாட்டுகள் செய்து, அடுக்கு மொழிகளில் எழுதி, தத்துவங்கள் என்று எண்ணிக் கொண்டு பக்குவமில்லாமல் எதையாவது கிறுக்கித் தள்ளி, ஏதோ பெரிய வெங்காயம் போல உணர்ந்து நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் கொடுத்தது.

அது மட்டுமில்லாமல், எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கே செல்லும் முன் அங்கேயிருக்கிற உற்றார்-உறவினர் அனைவருக்கும் கடிதம் எழுதிச் சொல்லி விட வேண்டும். இப்போது "கால் பண்ணிட்டு வா!" என்கிறார்களே, அது மாதிரித்தான். கடிதம் எழுதிச் சொல்வது போலவே, சொன்ன நாளில் போய் நிற்க வேண்டும். அவர்கள் வேலையைப் போட்டு விட்டு எங்கும் போகாமல் உட்கார்ந்திருப்பார்கள்.  அப்படிப் போய்ச் சேராவிட்டால், வேலையைப் போட்டு உட்கார்ந்திருந்தவருக்குப் பயம் தொற்றிக் கொள்ளும். என்னானதோ  ஏதானதோ என்று. சொன்னபடிப் போய் நிற்பது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை அப்போது. இப்போது போலத் திடீரெனெ வருகிற எதிர் பாராத வேலை வெட்டிகளோ வெட்டி வேலைகளோ அதிகம் இல்லாத காலம் அது (நேற்றுப் பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான், "அந்தக் காலம்", "அந்தக் காலம்" என்று பேசுவது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது!). ஏதோவொரு வெளியூருக்குப் போனால் அங்கிருக்கிற நம் ஆட்கள் எல்லோரையும் பார்த்து விட்டு வரவேண்டும் என்கிற பண்பாடுதான் இப்போது குறைந்து வருகிறதே. அதுவும் ஒரு வகையில் நல்லதுதானே. அதை ஓர் மனமகிழ்வாகச் செய்தார்கள் அப்போது. இருசாராருக்குமே (குறைந்த பட்சம் ஒரு சாராருக்கு) அது ஒரு பெரிய தொல்லையாகப் போய் விடுகிறது இப்போது. 'உள்ள வேலைக்கே நேரமில்லை. இதில் இது வேறயா?' என்று புலம்ப வைத்து விடுகிறது.

இது மட்டுமில்லாமல், கொரியர்க் கம்பெனிகள் வந்து வேறு இந்திய அஞ்சற் துறையைத் தேவையில்லாததாக ஆக்கி, அங்கே பணிபுரிகிற நம் உறவினர்கள் - நண்பர்கள் அனைவரும் எவ்வளவு கறி வலித்துப் போய் இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்தியும் விட்டன. அத்தோடு அஞ்சல் அலுவலகங்களைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிற பண்பாடு வந்து விட்டது. அந்த நேரத்தில்தான் வீட்டுக்கொரு தொலைபேசி வர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. குறைந்த பட்சம் கையில் ஓரளவு காசு இருக்கிற அளவுக்கு வசதியாகவும் விபரமாகவும் வாழ்ந்த வீடுகளில் தொலைபேசி வர ஆரம்பித்தது. "வந்து சேர்ந்துட்டேன். கடிதம் போடுறேன்!" என்று தந்தி அடிப்பது போலச் சுருக்கமாகப் பேச ஆரம்பித்து, தொலைபேசியின் பயன்பாட்டுக் கட்டணம் குறையக் குறைய அதன் பயன்பாடு கூடியது. அது மட்டுமில்லாமல், கொரியரில் கடிதம் அனுப்புதல் என்பது இயற்கைக்கு எதிரானதாகப் பட்டதாலும், அவ்வளவு அவசரம் என்றால் நேரில் பேசுவது போலக் குரலையே கேட்டுப் பேசிக் கொள்ளலாம் என்கிற வசதி வந்த பிறகும் எதற்குப் போட்டு எழுதிப் போராட வேண்டும் என்கிற எழுதுவதன் மீதான வெறுப்பாலும் கடிதம் எழுதுவது குறைந்தது என்றெண்ணுகிறேன். எழுத்துக் கிறுக்கு பிடித்த நம் போன்றோருக்கு அதைச் சோம்பேறித் தனம் என்று சொல்லத் தோன்றும் என்றாலும், பேசி முடிப்பதை விட எழுதி இழுப்பது கூட இயற்கைக்கு எதிரானதுதானே.

எதற்கெடுத்தாலும் அதென்ன இயற்கைக்கு எதிரானதா இல்லையா என்கிற வாதம் என்று பார்க்கிறீர்களா? ஒன்று காலம் கடந்து நிற்கிறது என்றால், நல்லதோ கெட்டதோ அது இயற்கைக்கு உகந்தது. மனிதன் தோன்றும் முன்பே தோன்றியது முழு இயற்கை, மனிதனோடு சேர்ந்து தோன்றியது இயற்கை, மனிதன் ஆதியில் கண்டுபிடித்தது அடுத்த இயற்கை, காலஞ்செல்ல காலஞ்செல்லக் கண்டுபிடித்தவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செயற்கைத் தன்மை கூடி விடுகிறவை. அந்தக் கணக்குப் படிப் பார்க்கையில் பேச்சுதானே இயற்கை! எழுத்து செயற்கைதானே! பேச்சும் பார்வையும் எழுத்தைவிட இயற்கை என்பதால்தானே திரைப்படமும் தொலைக்காட்சியும் இலக்கியத்தைவிட அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படித்தான் பாவம் கடிதமும் செத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆன்மா சாந்தியடையட்டும்!

மேகத்தின் கவலை

பூமியைப் பொருத்தமட்டில்
சூரியனைப் போல்
சந்திரனைப் போல்
வெள்ளிகளைப் போல்
நாங்களும் வானத்திலிருப்பதால்
எம்மினமும் வானவ இனம்தானாம்

வானவ உறவுகள்
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
வெள்ளிகளுக்குமோ
எம் மீது
வேறுவிதமான வருத்தம்

"பெயருக்குத்தான்
வானில் இருப்பதாகச்
சொல்லிக் கொள்வதெல்லாம்
இருப்பதோ
எப்போதும் பூமிக்கருகில்தான்...
பின்னே
அதெப்படி
நம்ம கூட்டம் என்று
ஏற்றுக் கொள்ள முடியும்?!"

* அறிவியலும் பிரிவியலும் கலந்த பொரியல் ஒன்று வைக்க முயன்ற வினை!

உங்களூர் எங்களூர்

உங்களூர்ச் சாலைகள்
எங்களூர்ச் சாலைகளை விடப் பளபளப்பு

உங்களூர்த் தெருக்கள்
எங்களூர்த் தெருக்களை விட அகலம்

உங்களூர்க் கட்டடங்கள்
எங்களூர்க் கட்டடங்களை விடப் பிரம்மாண்டம்

நிலம் நீர் காற்றும் அனலும் கூட
வெவ்வேறு மாதிரி இருக்கின்றன

ஆனால் -
உங்களூர் வானம் மட்டும் ஏன்
எங்களூர் வானம் போலவே இருக்கிறது?
அதே சூரியன்!
அதே நிலா!!
அதே வெள்ளிகள்!!!

* இத்தோடு முடிந்து விட்டது போல் உணர்ந்தால் நிறுத்தி விடுங்கள்! எப்போதும் போல், "என்ன சொல்ல வர்றேன்னே புரியலப்பு!" என்போர் தொடர்ந்து படியுங்கள்!

உங்களூர் மனிதர்கள்
எங்களூர் மனிதர்களை விட
வேறு விதங்களில்
உண்டு - உடுத்து - உறவாடுகிறார்கள்...
நிலம் நீர் காற்றும் அனலும் போல!

ஆனாலும் -
அவர்களுக்குள்ளும் வானம் போல ஏதோவொன்று
அதே சூரியன் அதே நிலா அதே வெள்ளிகளை
வைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது!

* "சரி, இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?!" என்போர், உங்கள் நேரத்தை வீணடித்தமைக்காக என் மீது வரும் கோபத்தை அடக்கிக் கொள்ள தியான வகுப்புகளுக்குச் செல்லுங்கள்!

சனி, செப்டம்பர் 28, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 4/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...


பருவங்கள்

குடும்பமும் வந்து விட்டது. குளிரும் ஆரம்பித்து விட்டது. கோடை காலத்தில் காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை வெளிச்சம் அடித்தது. உச்சகட்டக் குளிரின் போது காலை பதினொரு மணிக்குக் கூட இருட்டியது போலிருக்கும். மாலை நான்கு மணிக்கெல்லாம் மங்கி விடும் மீண்டும். இருளின் தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

நம்ம ஊரில் ஆறு பருவ காலங்கள் இருப்பது போல, இங்கே நான்கு பருவங்கள் இருக்கின்றன. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், கூதிர் காலம் ஆகிய நான்கும்தான் அவை. அனைத்து மேற்கு நாடுகளிலும் இதே நான்கு பருவங்கள்தாம். மொத்த ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் வட துருவத்துக்கு அருகில் இருப்பதால் அந்த வசதி. ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் நமக்கு மேற்கே இருந்த போதிலும் அவற்றை ஒருபோதும் நாம் மேற்கு நாடுகள் என்று அழைப்பதில்லை. என்ன கொடுமைடா சாமி இது - ஒரு திசையின் பெயரைக் கூட அதிகாரம் அதிகம் கொண்டவர்கள்தாம் அதிகம் உரிமை கொண்டாட முடிகிறது.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் குளிர் காலம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு இந்தக் காலத்தில்தான் வருகிறது. மழையில்லாத தீபாவளியா என்று நாம் ஆச்சரியப்படுவது போல, பனிப்பொழிவு இல்லாத கிறிஸ்துமஸ் இவர்களுக்குப் பெரிய ஆச்சரியமாம். மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல் இங்கிலாந்தில் முன்பெல்லாம் பனிப்பொழிவு குறைவாகத்தான் இருந்ததாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் பனி பெய்து வதைக்கிறதாம். சென்ற முறை வந்திருந்த போது இருந்த இரண்டு மாதங்களில் இரண்டு பனிப்பொழிவுகள் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

மார்ச் முதல் மே வரையிலானது வசந்த காலம். இந்தப் பருவத்தில் எல்லா மரங்களும் அழகழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. அடுத்து கோடை. வசந்தம் பிறந்ததுமே கோடை பிறந்து விட்டது என்று கொண்டாடத் தொடங்கி விடுகிறார்கள். கொஞ்சம் நன்றாகச் சூரிய ஒளி தெரிந்து விட்டால் போதும், ஊர் முழுக்க அது பற்றித்தான் பேச்சு. தெருவெல்லாம் ஆட்கள் நடமாட்டம் கூடி விடுகிறது. பூங்காக்களில் அரைகுறை ஆடைகளோடு படுத்து உருண்டு விளையாடுகிறார்கள். கூச்சலும் கூப்பாடும் தாங்க முடிவதில்லை. பாவம்! ஆண்டின் பன்னிரண்டு மாதங்களும் இப்படியே இருக்கும் நாடுகளில் இருந்து வரும் நம் போன்றவர்களுக்கு இதைப் பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும். இதனால்தான் இந்தியாவை மேய்ந்து கொண்டிருந்த காலத்தில் குளிர் காலம் வந்து விட்டாலே எல்லோரும் கிளம்பி வந்து பட்டறையை அங்கு போட்டு விடுவார்களாம். பின்னர் வசந்த காலம் மற்றும் கோடை காலம் தொடங்கியதும் அங்கிருக்கிற வெயில் தாங்க முடியாமல் இங்கே ஓடி வந்து விடுவார்களாம். இந்தியாவுக்கு விடுதலை கொடுத்த பின்பு இந்தப் பெரும் சுகத்தை இழக்க நேரிட்டது பாவம். எவ்வளவு அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு விடுதலை கொடுத்திருக்கிறார்கள். ரொம்போ நல்லவங்கடா நீங்க!

ஊரில் இருக்கும் போது வெயில் தாங்க முடியாமல் வழியில் கொஞ்சம் நிழல் சிக்கினால் கூட அதை அனுபவிக்கத் துடித்து ஒதுங்குவோம். அது இங்கே வந்த பின் அப்படியே தலைகீழாக மாறி விடுகிறது. நடக்கும் போது கூட வெயில் பட்டுக் கொண்டே நடக்க முடிந்தால் அதை மிகவும் விரும்பிச் செய்கிறோம். வெயிலே கண்ணில் காண முடியாத பொழுதுகளில் சின்னதாய் ஒரு வெயிற் கற்றை சிக்கினால் கூட அதை விடாமல் நெருங்கிச் சென்று அனுபவித்துக் கொள்கிறோம். குளிரில்தான் தெரிகிறது வெயிலின் அருமை.

அதீதக் குளிரும் குளிர் காலத்தின் கும்மிருட்டும் அடிக்கடிப் பெய்து கெடுக்கும் தூறலும் இங்குள்ள மக்களின் மனநிலையையும் அன்றாட வேலைகளின் வெற்றி-தோல்வியையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றன. வாழ்வின் பல முக்கியமான இன்ப-துன்பங்களைத் தீர்மானிக்கிற ஆற்றல் கொண்டதாக இருப்பதால்தான் தட்பவெப்ப நிலை பற்றிய பேச்சு ஒரு பெரும் பொழுதுபோக்காக இருக்கிறது இங்கே. நம்ம ஊரில் அரசியல்-சினிமா-கிரிக்கெட் பற்றிப் பேசுவது போல இங்கே தட்பவெப்ப நிலை பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். அலுவலக சகாக்கள் அனைவரும் அது பற்றிப் பேசுவார்கள். கிளம்பி வெளியே வந்து டாக்சியில் ஏறினால் டாக்சி ஓட்டுனர் அது பற்றி ஏதாவது பேச்சைப் போடுவார். ஊர்ப் பக்கம் உள்ள பெரியவர்கள், வெளியூரில் இருந்து யார் வந்தாலும் மழை பற்றிக் கேட்பார்கள். அது போல.

இப்படிப் பேசப்படும் ஒன்னொரு விஷயம் - காற்பந்து.

காற்பந்து 

நம்ம ஊரில் கிரிக்கெட் பேசுவதற்கும் இங்கே காற்பந்து பற்றிப் பேசுவதற்கும் இருக்கும் ஒரு பெரிய வேறுபாடு - அங்கே நாம் சர்வதேசப் போட்டிகள் பற்றிப் பேசுவோம். எல்லோருமே இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடே பார்ப்பதும் - பேசுவதும் - பதட்டப்படுவதும் - எல்லாமும். இங்கே அப்படியில்லை. இங்கே காற்பந்தில் இங்க்லீஷ் பிரீமியர் லீக் (EPL) ஒன்று இருக்கிறது. நம்ம ஊரில் கிரிக்கெட்டில் இப்போது வந்திருக்கிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போல. இதைப் பார்த்துக் காப்பியடித்திருப்பதுதான் அது. இது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருப்பது. இதன் வருகைக்கும் இங்கிலாந்தில் கிரிக்கெட் அழிவு ஆரம்பம் ஆனதற்கும் தொடர்பு இருப்பது போலவே படுகிறது. நான் இங்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் ஒரு இடத்தில் கூட நம்ம ஊரில் போல இளைஞர்கள் கூடி கிரிக்கெட் ஆடுவதைப் பார்க்க முடியவில்லை. ஆனால் பல இடங்களில் காற்பந்து ஆடும் கூட்டங்களைப் பார்த்து விட்டேன். மான்செஸ்டரில் இருந்த போது நிறையவே பார்த்தேன். குறிப்பாக மான்செஸ்டர் காற்பந்துக்குப் பெயர் போன இடம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான போட்டிகளில் மான்செஸ்டர் அணிதான் பாதிக்கும் மேலான கோப்பைகளை வென்றுள்ளது.

இங்கிலாந்து என்கிற நாட்டுக்குள் மாநிலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது. அதனால் ஊர்வாரியாகப் பிரிக்கப்பட்ட அணிகளே. கிரிக்கெட்டில் கவுண்டி அணிகள் போல இதில் க்ளப் அணிகள். ஒவ்வொரு க்ளப்பும் பல சர்வதேச வீரர்களோடு ஒப்பந்தம் கொண்டிருக்கும். அது போக உள்ளூர் வீரர்களும் இருப்பர். கிட்டத்தட்ட இங்கிலாந்தில் இருக்கும் எல்லோருமே தனக்கென விருப்பமான அணி என்று ஒன்றை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லாச் சந்திப்புகளிலுமே இது பற்றிய பேச்சு கண்டிப்பாக இருக்கும். மிக முக்கியமான அலுவல் சார்ந்த சந்திப்புகளில் கூட இது பற்றி மேலோட்டமாகப் பேசிக் கொள்வார்கள். அதற்கு மேல் ஆழமாகப் போவது நாகரிகமில்லை என்றொரு நிலைப்படும் கடைப்பிடிக்கப் படுகிறது. ஒருவருக்குப் பிடித்த ஒன்றைப் பற்றித் தவறாக ஏதும் பேசி அது தேவையில்லாத சிக்கல்களுக்கு வழி வகுத்து விடக் கூடும் என்ற அச்சமே காரணம்.

இந்தியாவிலேயே இதை மிக நெருக்கமாகப் பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அப்படி அங்கிருக்கும் போது பார்க்காதவர்கள் கூட இங்கே வந்து பார்த்துப் பழகிக் கொள்கிறார்கள். இங்கே இருப்பவர்களைப் போலவே, நம்மவர்களும் தனக்குப் பிடித்தது என்று ஓர் அணியையும் பிடித்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால் பல இடங்களில் வேற்றுக் கிரகவாசி போல உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் நானும் எப்படியும் இந்த உலகத்துக்குள் கூடிய சீக்கிரம் நுழைந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன். எவ்வளவு நாட்களுக்குத்தான், "எனக்கு இதெல்லாம் புரியாது!" என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?! அதுவும் அசடு வழியாமல்?! அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையோடு பேச நாம் என்ன இவர்களை வாழ்விக்கவா வந்திருக்கிறோம் படையெடுத்து?! வல்லரசுக் கனவில் இருக்கிற ஒரு வளரும் நாட்டில் இருந்து வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்திருக்கிறோம். ஒழுங்காக அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்வதுதானே நல்லது!

விலைவாசி

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகில், விலைவாசி இந்தியாவில் போல் எந்த நாட்டிலும் இவ்வளவு கொடூரமாக ஏறியிராது என்றே எண்ணுகிறேன். நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய தெருக்களும் கட்டடங்களும் அப்படியே இருப்பது போலவே அன்றாடத் தேவைப் பொருட்களின் விலையும் கூட அப்படியேதான் இருந்து வருகிறது என்று தோன்றுகிறது. வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து வசதிகளுக்குக்கான விலைவாசியில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். மற்றவை அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். பால் விலை பரவாயில்லை. சிங்கப்பூரில் இருந்த போது பாலுக்கே ஏகப்பட்ட பணம் காலியாவது போல இருக்கும். அதற்குக் காரணம் அங்கே பால் வெகு தொலைவில் இருந்து வரும். அங்கே ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கோ மொத்த நாட்டுக்கான பாலும் உள்நாட்டிலேயே கிடைத்து விடுவது போற் தெரிகிறது. பாலிலும் பல வகைப் பால்கள் இருக்கின்றன - முற்றிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால், சற்று மட்டும் கொழுப்பு நீக்கப்பட்ட பால், முழுமையான பால் என்று!

ஒரு காலத்தில் நீரை விட பீர் விலை குறைவாக இருந்ததாம். அதனால்தானோ என்னவோ குடி இங்கே மிகவும் அதிகம். நம்ம ஊரில் தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல், இங்கே தெருவுக்கு ஒரு பப் இருக்கிறது. வேலைக்குச் சென்று திரும்பும் போது நேராக பப்புக்கு வந்து குவிந்து விடுவார்கள் போற் தெரிகிறது. டீக்கடை போலவே தினமும் கூடிக் கதை பேசிப் பிரியும் இடம் போல இருக்கிறது. சுதந்திரம் அதிகமான சில வேலைகளில் இருப்போர், வேலைக்கு நடுநடுவேயும் பப்புக்குள் வந்து ஊற்றி விட்டுச் செல்வார்களா என்று தெரியவில்லை. பகல் நேரங்களிலும் ஆட்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வேலையே எதுவும் இல்லாதவர்களாகவும் இருக்கக் கூடும். புண்ணியவான்கள்!

வியப்புகள் தொடரும்...

சனி, ஆகஸ்ட் 17, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 3/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

நலப்பணி அரசு (WELFARE STATE)

இங்கே கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசம் என்று பார்த்தோம். பெரும் பணக்காரர்கள் தவிர்த்து மற்ற எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியான பள்ளிகளில்தாம் படிக்கிறார்கள். அப்படியொரு பேச்சைப் பேசவே, நம்ம ஊரில் பத்துத் தடவை யோசித்து, சுற்றி ஒருமுறை பார்த்து விட்டுத்தான் பேச முடிகிறது. "அதெப்படிய்யா பணக்காரன் பிள்ளையும் ஏழையின் பிள்ளையும் ஒரே படிப்பைப் படிக்க முடியும்?" என்பதைப் பதில் சொல்ல முடியாத அளவுக்குச் சுழற்றியடித்துக் கேட்டு விடுகிறார்கள். "நான் நாயாய் உழைத்துச் சம்பாதித்து என் பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறேன். அதே பள்ளிக்கூடத்தில் ஒரு பைசாக் கூடச் சேர்க்கத் துப்பில்லாத ஒரு சோம்பேறித் தகப்பனின் பிள்ளையும் சேர்ந்து விட்டால் உழைப்புக்கு என்னய்யா மரியாதை? வெண்ணெய் மாதிரிப் பேசுகிறாய்!" என்கிறார்கள். அதே மாதிரி ஆட்கள்தாம் அலுவலகத்தில் வேறு மாதிரிப் பேசுகிறார்கள். "என்னய்யா நான் நாயாய் உழைக்கிறேன். நீ சும்மா வாயை மட்டும் ஆட்டிக் கொண்டு வளர்கிறாய்!" என்றால், "நீ நாய். அதனால்தான் உழைக்கிறாய். நீ சாகும்வரை இப்படியே உழைத்துக் கொண்டேதான் இருப்பாய். நான் மண்டையெல்லாம் மூளை கொண்ட மனிதன். அதனால் அதைப் பயன்படுத்தி வளர்கிறேன்!" என்று பாடம் நடத்துகிறார்கள். சோம்பேறித் தகப்பனும் உழைப்பாளித் தகப்பனும் (அல்லது அறிவாளித் தகப்பனும்) ஒரே மாதிரிக் காரில் போக வேண்டும் என்று ஆசைப் பட்டால் அது தவறு. ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் இருவரும் ஒரே மாதிரிக் கல்வி வாய்ப்பு வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது தவறா என்று என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

அது போலவேதான் மருத்துவம். வசதி படைத்தவன் கண் தெரியாவிட்டால் லேசர் சிகிச்சை செய்து கொள்ளட்டும். அதே நேரம் வசதி இல்லாதவன் இற்றுப் போன கண்ணாடியாவது போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டியது எல்லோருடைய கூட்டுக் கடமைதானே. புற்று நோய் யாருக்கு வந்தாலும் காப்பாற்றப் பட வேண்டும்தானே. உயிர் என்று வந்து விட்டால் ஒரே மாதிரியான மரியாதை கொடுப்பதுதான் உயர்ந்த பண்பாடாகப் படுகிறது. இதை இங்கு வந்து புகழ்கிற இந்தியர்கள் கூட இந்தியா திரும்பியதும் அங்கு அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளக்கம் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதற்கு மேல் நிறையச் செய்கிறது இவர்களுடைய அரசாங்கம். அதனால்தான் இதை நலப்பணி அரசு என்கிறார்கள் (WELFARE STATE).

நலப்பணி அரசின் மிக முக்கியமான அம்சம் - எல்லோருக்கும் வீடு என்கிற உயரிய நோக்கம். இந்த நாட்டின் குடிமகனான எவரும் வீடு இல்லாமல் இருப்பதில்லை இங்கே. குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதற்கேற்ற அளவில் பெரியதாகவோ சிறியதாகவோ அவர்களுக்கு ஒரு வீட்டைக் கொடுத்து விடுகிறது அரசாங்கம். அது மட்டுமில்லாமல், கணவனை-மனைவியை இழந்திருக்கும் மற்றும் பிரிந்திருக்கும் தனிக்கட்டைகளுக்குப் பல கூடுதல் சலுகைகளும் வழங்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கத்தின் மீதும் நாட்டின் மீதும் பெரும் மரியாதை உண்டாகிறது. ஏழ்மையை ஒழிப்பதை ஏழைகளின் கடமையாக விட்டு விடாமல் எல்லோருக்குமான கடமையாக ஏற்றுக் கொள்வதுதானே உண்மையான முதிர்ச்சி. ஒன்றுமே இல்லாத ஒருவனை அதற்கு அவனே காரணம் என்று அவன் மீதே பழியைச் சுமத்தி ஒதுக்கி விடுதல் பெரும் கொடுமை அல்லவா. அவனுக்குச் சரியாக வைத்துப் பராமரிக்கத் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அவனிடம் இருக்க வேண்டிய எல்லாத்தையும் நாம் அல்லவா பறித்து வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதைப் புரியவே ஓர் இறைமனம் வேண்டியிருக்கிறது. அப்புறம்தானே பகிர்ந்துண்ணும் பழக்கம் எல்லாம் வரமுடியும்.

அதே வேளையில் இது போன்ற நலப்பணி அரசு இம்மக்களை மென்மேலும் சோம்பேறியாக்கி இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. பிறந்ததில் இருந்து ஒரு வேலைக்கும் செல்லாமலேயே வாழ்ந்து மடிந்து விடுகிற ஒரு பெருங்கூட்டம் இங்கே உருவாகி இருக்கிறது. முக்கியமாக கிழக்கு ஐரோப்பிய நாட்டினர் பலர் இந்த வசதிகளுக்காகவே இங்கு வந்து குடியேறிக் குந்தி விடுகிறார்கள் என்றொரு பெரும் வெறுப்புணர்வு இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையின் போது இவற்றை ஒவ்வொன்றாகக் குறைக்க வேண்டும் என்கிற அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறது இங்கேயிருக்கும் அரசாங்கம். சிலர் உழைப்பில் பலர் வாழ்கிறார்கள் என்கிற கோபம் கூடி வருகிறது. நம் சகோதரர் ஒருவர் கூட அதை உறுதிப் படுத்தும் விதமாகப் பேசினார். மகளின் பள்ளியில் சந்தித்த போது நம்மவர் என்று புளகாங்கிதம் அடைந்து வழக்கமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம். "என்ன வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டபோதுதான் புரிந்தது அது ஒரு தவறான கேள்வி என்று. "வேலையெல்லாம் இல்லை. அரசாங்கம் வீடு கொடுத்திருக்கிறது. எப்போதாவது பகுதி நேர வேலை ஏதாவது செய்தாலே போதும்!" என்றார். வைகைப்புயல் வடிவேலு சொல்வது போல வேலைக்குப் போவதே விபரங்கெட்ட வெண்ணெய்களின் வேலை என்பது போலப் பேசினார். இப்படி ஓர் உட்சமூகம் உருவாகி விட்டால் - அது பெரிதாகிக் கொண்டே போனால், இவர்களுடைய பொருளியல் என்ன ஆகும் என்று யோசித்தேன். மண்டை ரெண்டாகி விட்டது. பொறாமை! இதற்காகத்தான் நம் நாட்டில் அதெல்லாம் கூடாது சொல்கிறோம் என்று சுருக்கமாக முடித்து விடுவார்கள் சிலர்.

வந்தவர்கள் மட்டுமல்ல. மண்ணின் மைந்தர்கள் அதை விடச் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உள்ளவரைப் பார்த்துத்தான் வந்தவர் கெடுகிறார். அரசாங்கம் செய்து கொடுக்கும் வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களைக் கொன்று கொண்டு இருக்கிறது. வேலை செய்வதற்கெல்லாம் வெளிநாட்டு ஆள், ஓய்வு எடுப்பது மட்டுமே எங்கள் வேலை என்று இருக்க வேண்டும் என்றால், ஒன்று மண்ணுக்கடியில் நிறைய எண்ணெய் இருக்க வேண்டும் அல்லது அடிக்கடி நாடு பிடித்துக் கொள்ளையடிக்க வேண்டும். எண்ணெய் கண்டு பிடிக்கப் போகிறார்களா அல்லது நாடு பிடிக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. எண்ணெய் நிறைந்த நாடாகக் கூடப் பிடிக்கலாம்.

பள்ளிகள் மற்றும் கல்வி முறை 

நம்ம ஊரில் இருப்பது போல, வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகள் ஒரு தரத்திலும் அரசுப் பள்ளிகள் ஒரு தரத்திலும் என்றில்லாமல், எல்லாப் பகுதிகளிலுமே எல்லா விதமான பள்ளிகளும் இருக்கின்றன. இங்கும் தரமான பள்ளிகள், தரம் குறைவான பள்ளிகள் என்று பிரித்துப் பார்க்கப் படுகின்றன. ஆனால், அதற்குப் பெரும்பாலும் அடிப்படையாக இருப்பது பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் தரமே ஒழிய, படிக்க வரும் பிள்ளைகளின் பெற்றோரின் வசதி அல்ல. ஆனால் இலண்டனுக்குள் இருக்கும் வெவ்வேறு பகுதிகளுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. முன்பு சொன்னது போல, மத்திய இலண்டன் முழுக்க முழுக்க வசதியான மண்ணின் மைந்தர்கள் நிறைந்த பகுதி. கிழுக்கு இலண்டன் முழுக்க முழுக்க இந்தியத் துணைக்கண்டத்தின் மைந்தர்கள் நிறைந்த பகுதி. வசதியும் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். இந்த வேறுபாடுகளை அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் தரத்திலும் காண முடியும். ஒரே பகுதியில் வெவ்வேறு தரத்திலும் பள்ளிகள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதிக்கேற்ற மாதிரி அங்கிருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பின்னணியும் மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பெரும்பாலும் இந்தியப் பிள்ளைகளும் சில பள்ளிகளில் பெரும்பாலும் ஆப்பிரிக்கப் பிள்ளைகளும் சில பள்ளிகளில் மண்ணின் மைந்தர்களின் மைந்தர்களும் என்று  இருக்கிறார்கள்.

எல்லோருமே தம் பிள்ளைகளை வீட்டில் இருந்து இரண்டு மைல் தொலைவுக்கு உள்ளே இருக்கும் ஏதாவதொரு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம். இதனால் நல்ல பள்ளிகள் எல்லாம் ஒரே பகுதியில் குவிந்து விடாமல் பார்த்துக் கொள்ளப் படுகிறது. நல்ல பள்ளிகளில் விரைவில் காலியிடங்கள் தீர்ந்து விடுகின்றன. முந்தியவர்க்கு முதலில் என்ற முறையில்தான் இடம் கிடைக்கிறது. வேறு எந்தக் கொடுமையும் கிடையாது. குழந்தைகளுக்குத் தேர்வு, பெற்றோருக்குத் தேர்வு, நன்கொடை, பிச்சை என்று எதுவும் கிடையாது. எல்லோருமே வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கும் பள்ளியில் சேர்த்து விடுவதால் பள்ளிகள் சார்பில் போக்குவரத்து ஏற்பாடுகள் ஏதும் கிடையாது. இதனால் காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று வருவது பெற்றோருக்கு ஒரு பெரும் வேலையாக இருக்கிறது. அதுவே இருவரும் முழுநேர வேலைக்குச் செல்வதற்குப் பெரும் தடையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வேலைக்குச் செல்வதை முதன்மைப் படுத்தும் பழக்கம் இங்கில்லை. பிள்ளை வளர்ப்பு, பிராணி வளர்ப்பு, குடும்பம்... இவற்றுக்கெல்லாம் அடுத்த படியாகத்தான் வேலையை மதிக்கிறார்கள். அதனால் பிரச்சனையில்லை.

அது போலப் பள்ளியில் சேர்ந்த பின்பும் பிள்ளைகளுக்குப் படிப்பு ஒரு பெரும் இன்பமாக இருக்கிறது. விடுமுறை நாட்களை விடப் பள்ளி நாட்களை அதிகம் விரும்புகிற அளவுக்குப் பள்ளிக்கூடம் நடத்தப் படுகிறது. படிப்பை விளையாட்டோடு சேர்த்துத்தான் சொல்லித் தருகிறார்கள். கழுதைப் பொதி கட்டி அனுப்பி விடும் பழக்கமெல்லாம்  இல்லை. பெரும்பாலும் வெறும் கையை வீசிப் போகிற மாதிரித்தான் இருக்கிறது. வாரக்கடைசியில் கொடுக்கப் படும் வீட்டுப்பாடம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதுவும் எந்த வகையிலும் நம்ம ஊரில் நடத்தப் படும் கொடுமைக்கு அருகில் கூட வர முடியாது. இப்படியொரு சூழலில் படித்து வளரும் ஒரு குழந்தை ஊர் திரும்பியதும் எப்படிச் சமாளிக்கும் என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் திரும்பிய போது தாய் நாட்டில் கிடைத்த கொடுமையான அனுபவங்கள் பற்றி நண்பர்கள் பலர் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அதற்கும் விளக்கம் இல்லாமல் இல்லை. "அப்படியெல்லாம் உன்னைக் கொடுமைப் படுத்தி வளர்த்ததால்தான், இன்றைக்கு சோம்பேறிகளின் மண்ணில் போய் அவர்களுடைய வேலையை - உணவைப் பறித்துக் கொண்டு வரும் வல்லமை உனக்குக் கிடைத்திருக்கிறது. அங்கு போல விளையாட்டுத் தனமாக இருக்க விட்டிருந்தால் நீயும் இலவச வீட்டுக்கு அலைந்து கொண்டிருப்பாய் இன்று!" என்கிறார்கள். "நீ மட்டும் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து விட்டு, உலகிலேயே திறமையான இனம் என்ற பெருமையை அனுபவிக்க வேண்டும். உன் குழந்தைகளும் அக்கொடுமைகளையும் பெருமையையும் அடைந்து இன்புற்றிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இல்லையா?" என்று கடுமையான கேள்விகளையெல்லாம் கேட்கிறார்கள்.  

முதல் விஷயம் - இன்றைக்கு நம் குழந்தைகள் அனுபவிக்கிற அளவுக்குக் கொடுமைகளை நாம் அனுபவிக்கவில்லை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதுவும் குறிப்பாக நான் அப்படி எந்தக் கொடுமையும் அனுபவிக்கவில்லை. இன்னொன்று - திரை கடலோடித் திரவியம் தேடியோ திருடியோ வர வேண்டிய கட்டாயம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், நம்மைச் சுற்றியிருக்கிற எல்லோரைவிடவும் கூடுதலான சில வசதிகளை அனுபவிக்கிற - அவற்றையெல்லாம் உடனுக்குடன் முகநூலில் வந்து எல்லோருக்கும் சொல்லி வயிற்றெரிச்சலைக் கிளப்புகிற ஒரு வாழ்க்கையை நம் பிள்ளைகள் வாழ வேண்டும் என்ற பேராசையில் அவர்களுடைய இளமையை அழிக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா என்கிற கேள்வியில்தான் மற்ற எல்லா நியாயங்களும் அடிபட்டுப் போகின்றன. கடைசியாக ஒன்று - உலகமெல்லாம் கொள்ளையடித்துச் சென்று தம் நாடுகளைக் கட்டியவர்கள் கூட, ஒவ்வொரு முறை உணவுக்கும் பல கோடி உயிர்களைக் கொல்கிற 'பின்தங்கிய' நாகரிகம் கொண்டவர்கள் கூட, அவர்களுடைய மக்களுக்குள் போட்டியும் பொறாமையும் வந்து விடாமல் சமாதானச் சம வாழ்வுக்குத்தான் முயல்கிறார்கள். சேவற் சண்டையைக் கூட முழுதாக ஏற்றுக் கொள்ளாத பண்பாட்டில் பிறந்த நாமோ, கடந்த இருபது-முப்பது ஆண்டுகளாக நம் பிள்ளைகள் அனைவரிடமும், "இது போட்டி உலகம்! போட்டி உலகம்!!" என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிச் சொல்லி மனிதர்க் கெதிராய் மனிதரைத் தூண்டும் பெரும் பாவத்தைச் செய்து வருகிறோம். 

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைக்கும் போதுதான் பயம் வருகிறது. "வலிமைதான் வாழும். எளிமை அழிந்துதான் ஆக வேண்டும்!" என்று வியாக்கியானம் பேசும் போதெல்லாம் உள்ளுக்குள் ஓர் அச்சம் உருவாகி மறையத்தான் செய்கிறது. வியாக்கியானம் சரிதான். வலிமை எப்போதும் எளிமையை வீழ்த்தித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது வலிமை என்பதில்தான் பிரச்சனை. என்னிடம் அறிவு அதிகமாக இருக்கிறது என்றும் அதனால் அதுவே வலிமை என்றும் எண்ணி அப்படிப் பேசினால், அடுத்த நிமிடமே வேறொரு கேள்வியும் வருகிறது. கொள்ளையடிப்பவனும் கொலை செய்பவனும் கற்பழிப்பவனும் கூட அவனிடம் இருப்பதுதான் வலிமை; வலிமைதான் வாழும் என்று பேசினால் அதை எப்படிச் சமாளிப்பது? காலம் காலமாக அதிகாரத்துக்குச் சொரிந்து விடும் வேலையை மட்டும் செய்கிற அறிவு, தான் ஓர் எடுபிடி மட்டும்தான் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள அறிவில்லாமல் இறுமாப்பில் பேசினால், உலகம் முழுக்க இருக்கும் அறிவாளிகளைப் பணியிலமர்த்திச் செயல்படும் அதிகாரத்தின் வலிமைக்கு என்ன பெயர்? அது என்னை அழித்து விடாமல் இருக்க, அந்த அதிகாரத்தை நானோ என் பிள்ளைகளோ கைப்பற்ற, நம் கழுதைப் பொதிக் கல்வி முறை உண்மையிலேயே உதவுமா என்கிற கேள்விதான், கூடிய விரைவில் குடும்பத்தையும் அழைத்து வரப்போகும் இந்தப் பயணத்தின் பெரும் கேள்வியாக இருக்கிறது.

வியப்புகள் தொடரும்...

சனி, ஜூன் 29, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 2/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

வெஸ்ட்மின்ஸ்டர் 


கிரீன் பார்க்கும் பக்கிங்காம் அரண்மனையும் இருப்பது வெஸ்ட்மின்ஸ்டர் என்னுமிடத்தில். அங்குதான் இங்கிலாந்தின் பாராளுமன்றமும் பல தூதரகங்களும் கூட இருக்கின்றன. முதன்முறை டெல்லி சென்ற போது, பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை போன்ற தொலைக்காட்சியில் மட்டும் பார்த்திருந்த பல கட்டடங்களை நேரில் பார்த்த போது, ஒருவித சிலிர்ப்பு உண்டானது. அதைப் போன்ற ஓர் உணர்வு பக்கிங்காம் அரண்மனையைப் பார்க்கும் போதெல்லாம் உண்டானது. அந்தப் பகுதியில் நடமாடும் போது ஓர் அதீத பாதுகாப்பு உணர்வையும் உணர முடிந்தது. உலகிலேயே அதி பாதுகாப்பான ஓரீர் இடங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளை மாளிகைக்கு அடுத்த படியாக அல்லது அதை விட மேலாக! யாருக்குத் தெரியும். இந்தியக் குடியரசுத் தலைவர் போல பொம்மைப் பதவி என்று ஒருபுறம் சொல்லப் பட்டாலும், இன்றைக்கும் அமெரிக்க அதிபருக்கு இணையான அல்லது அதை விடக் கூடுதல் அதிகாரம் கொண்டவராக இராணியாரைச் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எது உண்மையென்று தெரியவில்லை. ஆனால், அரண்மனைக்கும் அங்கு உள்ளவர்களுக்கும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் வியப்பாகத்தான் இருக்கிறது. அதில் ஒன்று, அரண்மனையில் தினமும் நடக்கும் காவலர் மாற்ற நிகழ்ச்சி (CHANGE OF GUARD).

இந்தக் காவலர் மாற்ற நிகழ்ச்சி தினமும் காலை 11.30 மணிக்கு மிக விமரிசையாக நடைபெறுகிறது. அதற்கான செலவு மட்டும் கண்டிப்பாகப் பெரும் தொகையாக இருக்கும். நமக்குப் பெரிது. அவர்களுக்கு எப்படியோ. கடும் குளிர் அடிக்கும் - பனிப்பொழிவு இருக்கும் நாட்களில் மட்டும் இது நடைபெறுவதில்லையாம். எல்லா நாட்களுமே இதைப் பார்ப்பதற்குக் கூட்டம் அலை மோதுகிறது. நிகழ்ச்சியை ஒரு நாள்தான் பார்த்தேன். ஆனால் கூட்டத்தைப் பல நாட்கள் பார்த்தேன். இங்கே அரண்மனையில் காவலராகப் பணி புரிவோர் அதைப் பெரும் பெருமையாகக் கருதுகிறார்களாம். ஆங்கிலேயனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் இதை நேரில் பார்த்திருப்பார்களாம். பத்திரிகைகளில் கூட இராணி குடும்பத்துச் செய்திகளை - உப்புக்குப் பெறாதவற்றைக் கூட - மிகப் பெரிதாக எழுதுகிறார்கள். அரச குடும்பத்து விசயத்தில் காட்டப்படும் மித மிஞ்சிய தனி மனித வழிபாடு இந்தியர்களை விட மோசமாக இருக்கிறது. நம் வழிபாடு ஒரு சில வருடங்கள். அதிக பட்சம் ஓரிரு தலைமுறைகளுக்கு நீடிக்கும். அவர்கள் இதைத்தான் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள். நடிகையின் பூனைக்குட்டி பற்றிச் சினிமாப் பத்திரிகைகளில் எழுதப்படுவது போல இராணி வீட்டு மேட்டர்களை நாட்டின் முக்கியப் பத்திரிகைகளிலேயே பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இங்கிருக்கும் அரச குடும்பம் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல பொம்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த அரண்மனையின் மேல் காணப்படும் முக்கோணம் போன்ற முகட்டு வடிவம்தான் இந்தியாவில் இருக்கும் பல ஆங்கிலேயக் கட்டடங்களிலும் காணப் படுகிறது. அதிலும் சென்னை மற்றும் பெங்களூரில் இது போன்ற அமைப்புகள் நிறையவே இருக்கின்றன என நினைக்கிறேன். இவர்கள் மேய்ந்து விட்டு வந்ததற்கான அடையாளத்தை இந்தியாவில் என்னென்ன வடிவத்தில் எல்லாம் காணமுடிகிறது என்பதை இங்கு வந்த பின்பு இன்னும் நன்றாக உணர முடிகிறது. கட்டடம், கலாச்சாரம், மொழி, உணவு, உடை என்று எத்தனையோ விசயங்களில் அது தெரிகிறது.

இந்த நெரிசலான மாநகரப் போக்குவரத்துக்கு மத்தியிலும் அவ்வப்போது குதிரை வண்டி போவதைக் காண முடிகிறது. அதுவும் நம் வரலாற்றுப் பாடநூல்களில் பார்த்த மாதிரி, நீண்ட கிர்தாவும் மீசையுமாக இருக்கும் ஆங்கிலேயே வைஸ்ராய்கள் போன்ற முகம் கொண்ட கிழடுகள் தோரணையாக ஓட்டிச் செல்கிறார்கள். அந்த மிடுக்கான முகம் இவர்களுக்குப் பிறக்கும் போதே உடன் பிறந்ததா அல்லது அதற்கும் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுப்பார்களா அல்லது நம் அடிமைக் கண்களுக்குத்தான் அப்படியெல்லாம் தெரிகிறதா என்று தெரியவில்லை. இது வெஸ்ட்மின்ஸ்டரில் அல்லது மத்திய இலண்டனில் மட்டும் கிடைக்கும் காட்சியா அல்லது மொத்த இங்கிலாந்துக்குமானதா என்றும் தெரியவில்லை.

இடமாற்றம் 

மத்திய இலண்டன் வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பெட்டியைக் கட்டிக் கொண்டு மான்செஸ்டர் கிளம்பச் சொன்னார்கள். சரி, இலண்டனைத்தான் பார்த்து விட்டோமே. மிச்ச இங்கிலாந்தையும் பார்க்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கிளம்பினேன். "இங்கிலாந்து போனால், இலண்டனில் வாழ்வது வீண்; மற்ற ஊர்களில் எங்காவது வாழ்ந்தால்தான் இன்பமே!" என்றொரு நண்பன் வேறு சொல்லியிருக்கிறான். அந்தப் பேரின்பத்தையும் பார்த்து விடுவோம். ஆக, மார்க்ஸ் இருந்த இலண்டனில் இருந்து ஏங்கெல்ஸ் இருந்த மான்செஸ்டருக்குப் பயணம். உலகையே கட்டியாண்ட அதிகாரத்துக்கு அருகில் இருப்பது போலவே, உலகெங்கும் மேலோங்கிய அதிகாரத்தை உலுக்கியவர்களைப் பற்றிய சிந்தனையும் பெரும் சிலிர்ப்பைத் தரத்தான் செய்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதுதான் கூடுதற் சிலிர்ப்பைக் கொடுக்கிறது.

இலண்டனில் இருந்து மான்செஸ்டர் பயணித்த தொடர்வண்டிப் பயணம் இனிமையானது. இவ்விரு ஊர்களுக்குமான தொலைவு சுமார் 160 மைல்கள். இங்கு எல்லாமே மைற் கணக்குதான். நம் கணக்கில் சுமார் 260 கிலோ மீட்டர்கள் வரும். இங்கிருக்கும் அதிவேகத் தொடர் வண்டிகளின் புண்ணியத்தில் இந்தத் தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடந்து விட முடிகிறது. கிட்டத்தட்ட மதுரைக்கும் சேலத்துக்குமான தொலைவை விடச் சிறிது கூடுதல். அதற்கு நம் வண்டிகள் எடுக்கும் நேரம் ஐந்து மணி நேரத்துக்கு அருகில் வருகிறது. "ஏதோ வெள்ளைக்காரன் வந்ததால் நாமும் இரயில் வண்டிகளைப் பார்க்கும்-பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இல்லாவிட்டால், நாம் இன்னும் பின் தங்கிப் போயிருப்போம்!" என்று சொல்கிறவர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல் - இவர்கள் வந்து அங்கிருந்து அவ்வளவு கொள்ளையடித்து வந்திராவிட்டால், இவர்களுக்கு முன்பாகவே நாம் இது போன்ற அதிவேக வண்டிகளைப் பார்த்திருக்கலாமோ என்னவோ. இது ஓரிரு வரிகளில் பேச முடிகிற கதையல்ல. ஆனால், இதை வைத்துக் கொண்டு நன்றாக மண்டையைக் குழப்பி யோசித்தால் நிறையப் புரிபடும். இங்கிருக்கிற இந்திய-பாகிஸ்தானிய சகோதரர்கள் எல்லோருமே இது பற்றிச் சொல்கிறார்கள் - "நம்மிடம் அடித்து வந்த கொள்ளையில் கட்டியவைதான் இந்தக் கட்டடங்களும் கட்டமைப்புகளும்!" என்று.

இந்தப் பயணத்தின் போது இவர்களுடைய கிராமங்கள் இவர்களுடைய நகரங்களை விட அழகானவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நம் கிராமங்களை விடப் பல மடங்கு அழகானவை. முக்கியமாக ஒவ்வோர் ஊர் நுழைவிலும் சாலைக்கு இருபுறமும் அமர்ந்து யோகாசனம் (!) செய்கிற பழக்கம் இங்கில்லை என்பதால் இயல்பாகவே அழகு கூடி விடுகிறது. அதற்கும் அவர்கள் அடித்துச் சென்ற கொள்ளைதான் காரணமோ என்று எண்ணுகிற போது மீண்டும் மனம் கனக்கிறது. ஆனால் நம் கிராம வாழ்க்கையில் இருக்கும் பல சுகங்கள் இவர்களுக்கும் இருக்கும் என நினைக்கிறேன். எல்லோரையும் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும் வசதி, ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழ்தல், நகர வாழ்க்கைக்குரிய மன உளைச்சல் இன்மை போன்ற சுகங்கள். பயண நேரமும் அதிகமில்லை என்பதால் நிறையப் பேர் தினமும் இது போன்ற கிராமங்களில் இருந்து இலண்டனுக்கு வேலைக்கு வந்து செல்கிறார்கள். சனி-ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்கள். அதிலும் வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் நிறையப் பேர் வீட்டில் இருந்தே வேலை செய்வதாகச் சொல்லி உட்கார்ந்து கொள்கிறார்கள். இத்தகைய வசதிகள் வரும் காலத்தில் நாமும் இது போல வாழ்ந்து கொள்ளலாம். அப்படி நாமும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கோ பெங்களூருக்கோ தினமும் வேலைக்குச் சென்று வருகிற சுகம் கிடைக்கப் போகும் எந்நாளோ!? அது நம் வாழ்நாளில் வருமோ!?

நம் ஊர்க் காடுகளில் ஆடு-மாடு மேய்வது போல், இவர்களுடைய காடுகளில் குதிரைகள் அதிகம் மேய்கின்றன. விளைநிலம் என்று ஒன்று இங்கு இருப்பது போலத் தெரியவே இல்லை. அரிசி, கோதுமை, பால், பயறு, காய்கறி என்று எல்லாமே இறக்குமதிதான். ஆனாலும் தட்பவெப்ப நிலை காரணமாக எங்கும் பசுமையாக இருக்கிறது. ஆண்டில் பாதி கடுங்குளிர். மீதிப் பாதி மிதக் குளிர். ஆண்டு முழுமைக்கும் எந்த நேரமும் மழை பெய்கிறது. மழை என்பது கடும் மழையாக இருப்பதில்லை எப்போதும். புனுப் புனுவென்று தூறிக் கொல்கிறது. இதுதான் இக் கண் குளிரும் பசுமைக்குக் காரணம்.

கிராமங்களிலும் இலண்டன் போலவே எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகக் கட்டப் பட்டுள்ளன. ஒரு பாகிஸ்தானிய சகோதரர் அதைப் பற்றிச் சொல்லும் போது கூட, "இந்த அழகு வீடுகள் எல்லாம் 'நம்' நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் கட்டியதுதான்!" என்றார். இது ஒரு முக்கியமான விஷயம் - இங்கிருக்கும் மற்ற நாட்டவர்கள் எல்லோருமே ஆங்கிலேயர்களைக் கடுமையாக வெறுக்கிறார்கள். மற்ற நாட்டவர்கள் என்றால், இந்தியர் - பாகிஸ்தானியர் - ஆப்பிரிக்கர் என்று மட்டும் இல்லை. மற்ற ஐரோப்பியர்கள் கூட இதில் அடக்கம். கொஞ்சம் மனம் விட்டுப் பேசினால் நிறையக் கக்குகிறார்கள். குறிப்பாக டாக்சி ஓட்டுனர்கள் எல்லோரிடமுமே பேச்சைப் போட்டு இது போன்ற கதைகளைப் பேசினால் சுவாரசியமான நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன.

கட்டடங்களும் பூங்காக்களும் போலவே நிறைய இரயில் நிலையங்கள் இந்தியாவை நினைவு படுத்துகின்றன. குப்பைகளை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால் பல இரயில் நிலையங்கள் நம்ம ஊரில் இருக்கும் இரயில் நிலையங்கள் போலவே இருக்கின்றன. கூடுதலாக நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ஏதேதோ செய்திருக்கிறார்கள். பழைய தொழில்நுட்பத்திலேயே இருக்கும் கழிப்பறைகளை இன்னும் கொஞ்சம் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். வண்டிகள் பெரும்பாலும் நேரத்துக்கு வந்து விடுகின்றன. அவ்வப்போது ஓரிரு நிமிடங்கள் தப்புகின்றன. பெரும் தாமதங்கள் அவ்வளவு வழக்கமானவை அல்ல. ஆனால் அப்படி ஒன்றே இல்லாமலும் இல்லை. தட்ப வெப்பம், விபத்து, வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நம்ம ஊரில் போலவே பெரும் தாமதங்களும் எப்போதாவது ஏற்படுகின்றன. அந்த 'எப்போதாவது'க்கே நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அப்புறம் சிறிது நேரத்தில் அதற்கெல்லாம் நமக்குத் தகுதி இல்லை என்பதை உணர்ந்து அடங்கிக் கொள்கிறோம்.

விலைவாசி 

ஆச்சரியப்படும் விதத்தில் பல பொருட்கள் இந்திய விலைக்கு நெருங்கிய விலையிலும் கிடைக்கின்றன. இதெல்லாம் உலகமயமாக்கலின் விளைவாக இருக்க வேண்டும். சமீப காலத்தில் விண்ணைத் தொட்டு விட்ட இந்திய விலைவாசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருக்காது என நினைக்கிறேன். அதே நேரத்தில் பெரும்பாலான பொருட்கள் நம் விலையை விடப் பல மடங்கு கூடுதலாகத்தான் இருக்கின்றன. வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகள்தாம் தாங்க முடியாத அளவு அதிகம்.

சென்னை-பெங்களூரில் இருபதாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடுகள் போன்றவை இங்கே இலண்டனில் ஆயிரம் பவுண்டுகளுக்குக் குறைவாகக் கிடைப்பதில்லை. மான்செஸ்டர் போன்ற மற்ற நகரங்களில் அவ்வளவு  ஆவதில்லை. ஐநூறு முதல் எழுநூறு பவுண்டுகளுக்குக் கிடைக்கலாம். ஒரு பவுண்டு என்பது தோராயமாக நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வீட்டு வாடகைக்கு மட்டும் ஒரு இலட்சம் என்பது சாதாரணமில்லை. எதையும் அப்படியே நேரடிக் கணக்கு போடக் கூடாது என்பதை நன்கறிவேன். ஆனால் அதுதான் எளிதில் ஒரு விசயத்தைப் புரியவைக்க உதவும் என்பதால் அப்படிச் செய்கிறேன். அடுத்தது போக்குவரத்துச் செலவு. இலண்டன் புறநகரில் வசிக்கும் ஒருவர் தினமும் மத்திய இலண்டன் சென்று வர வேண்டுமென்றால் வாரம் ஐம்பது பவுண்டுகள் செலவழிக்க வேண்டும். அதாவது ஐயாயிரம். இது தொடர்வண்டி மற்றும் பேருந்துப் பயணம் செய்ய. டாக்சியில் செல்ல வேண்டும் என்றால் முன்பே சொன்னது போல சொத்தையே எழுதி வைக்க வேண்டும். ஒரு முறைக்கே இருபது மைல்கள் தொலைவைக் கடக்க ஐம்பது முதல் நூறு பவுண்டுகள் ஆகும். அதாவது, ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய். இதனால்தான் நம்மவர்கள் இங்கு வந்தால் குப்பைத்தொட்டி போன்ற இடத்தில் கூட படுக்க மட்டும் ஒரு கட்டில் கிடைத்தால் போதும் என்று செட்டில் ஆகி விடுகிறார்கள்.

மற்ற செலவுகள் இவ்வளவு கொடூரம் இல்லை. உணவுப் பொருட்களின் விலை கூடுதல்தான் என்றாலும் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து போல நெஞ்சுவலி வர வைப்பவை அல்ல. பால்விலை கூட சிங்கப்பூரை விடப் பெரிதும் குறைவாகவே இருக்கிறது. தினக்கூலி வேலைக்கு யாரை அழைத்தாலும் பெரும் தொகையைப் பதம் பார்த்து விடுகிறார்கள். அதனால் பல வேலைகளைத் தாமே செய்து பழகிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அதுவும் ஒரு வகையில் வளர்ச்சியின் அடையாளம்தானே. கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இலவசம். இதுதான் இதுதாண்டா நாடு என்று பாராட்ட வைக்கிறது. இவையிரண்டும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதுதானே உண்மையான வளர்ச்சியின் அடையாளம். அது பற்றி அடுத்த பிரிவில் நீளமாகப் பேசுவோம்.

வியப்புகள் தொடரும்...

சனி, மே 11, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 1/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் ஆரம்பம்... மீண்டும்...

பழங்கதை 

சென்ற ஆண்டு இலண்டனில் ஒரு மாத வேலைக்குக் குடும்பத்தோடு பெட்டி படுக்கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு வந்திறங்கினேன். ஒருவேளை நீண்ட காலம் இருக்க நேர்ந்தால் அப்படியே இருந்து கொள்ளலாம் அல்லது சொந்தச் செலவில் குடும்பத்துக்கும் ஒரு சுற்றுலா அனுபவம் கிடைத்த மாதிரி இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படிச் செய்தோம். வயிற்றில் ஒரு குழந்தையோடு இருந்த மனைவியோடு குளிர் காலத்தில் வந்திறங்கியதால் அதிகம் சுற்றியும் பார்க்க முடியவில்லை. அந்தப் பழம் புளித்து ஊர் திரும்பி விட்டோம். அது பற்றி நீள நீளமாகக் கட்டுரைகள் எழுதி விட்டு, அப்படியே குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்று விட்டோம். அங்கு ஓர் ஓராண்டு காலம் ஓடியது. இரண்டாவது குழந்தை அங்குதான் பிறந்தது. பெங்களூரில் உருவாகி இலண்டனில் பிறக்கப் போகும் குழந்தை என்றெண்ணியதைத் தவறாக்கிச் சிங்கப்பூரில் பிறந்தான். அதுவே இலண்டனாக இருந்திருந்தால் மேலும் பல மடங்கு சிரமமாகப் போயிருக்கும். சிங்கப்பூர் பெயருக்குத்தான் வெளிநாடு என்றாலும் பல வகைகளில் நம் நாட்டை விட நமக்கு வசதி மிக்க நாடு.

முதன்முறை தனியாகச் சிங்கப்பூர் சென்ற போது மீண்டும் வருவேன் என்று சொல்லி விட்டுத்தான் வண்டியேறினேன். அதன் படியே குடும்பத்தோடு போய் ஓராண்டு காலம் வாழ்ந்து விட்டும் வந்து விட்டோம். ஆனால் இலண்டனில் இருந்து சென்ற போது மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருப்பது போல் ஏதும் தோன்றவில்லை. ஆனால் இன்று மீண்டும் அதே ஊரை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சென்ற முறை மனைவியோடும் மகளோடும் பயணப் பட்டவன் இந்த முறை தனிக் கட்டையாய்ப் பறந்து கொண்டிருக்கிறேன். இப்போது கூடுதலாக ஓர் உறுப்பினர் கொண்டிருக்கிற குடும்பத்தைப் பிரிந்து எங்கு செல்லவும் விருப்பமில்லை. இதுவே குடும்பத்தோடு என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் நினைக்கிற படியெல்லாம் நடப்பதற்கு இதென்ன நாடகமா? வாழ்க்கை! திரைக்கதை முழுதையும் நாமே தீர்மானிக்க முடியாத கேவலப்பட்ட வாழ்க்கை!

சென்ற முறை ஊர் திரும்பியதும் என்ன கருமம் அந்த ஊர் எந்த நேரம் பார்த்தாலும் இருட்டிக் கிடக்கிறது என்று புலம்பிய போது அடுத்த மாதம் இலண்டன் சென்ற நண்பர் ஒருவர் அழைத்து, "என்னய்யா இந்த ஊரில் எட்டரை மணிவரை இருட்டவே மாட்டேன் என்கிறது?!" என்றார். இந்த முறை குளிர் காலம் முடிந்ததும் வந்திறங்குவதால் பளிச் என்றிருக்கும் பகற் பொழுதுகளை முழுமையாக அனுபவித்துக் கொள்ளப் போகிறேன்.

தரையிறங்கல்

அதிகாலையில் வந்திறங்குவதால் விமானம் இறங்கும் நேரத்தில் மேகத்துக்கு மேல் பயணித்த போது கிடைத்த காட்சி மிக அருமையாக இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கே பகல் போலப் பளிச் என்று இருந்தது. மேகங்களை ஊடுருவிக் கடந்த பின்தான் அதிகாலைப் பொழுதின் மந்தத்தை உணர முடிந்தது. கீழே இருக்கும் போது மேகம் வானத்தில் இருக்கிறது என்றே எண்ணுகிறோம். தரைக்குச் சற்று மேலே இருக்கிற எல்லாமே வானம்தான் நமக்கு. ஆனால் வானில் பறக்கும் போது மேகம் மிகத் தொலைவில் இருக்கிறது. அது பூமிக்குத்தான் நெருக்கமாக இருப்பது போலத் தெரிகிறது. மேகத்தைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. கீழே இருப்பவர்கள் வானத்து மேகம் என்றும் வானமோ பூமிக்கு நெருக்கமானது என்றும் எண்ணுகிற மாதிரி யாருக்குமற்றவராக இருக்கிறதே என்று. அதிகாலைப் பொழுதில் மேகங்களின் மேற்பகுதி ஒருவித ஊதா நிறத்தில் சொலித்தது. அதற்கும் அறிவியலில் படித்த ஓசோன் மண்டலத்தின் புற ஊதாக் கதிர்களுக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மத்திய இலண்டன்

சென்ற முறை மாலைப் பொழுதில் வந்து இறங்கினோம். குடும்பத்தோடு க்ராய்டன் போய்த் தங்கினோம். மொத்த ஒரு மாதத்தில் ஒரு நாள்தான் மத்திய இலண்டன் பக்கம் போனோம். இம்முறை தங்கப் போவதே மத்திய இலண்டன்தான். மத்திய இலண்டனிலும் மிக முக்கியமான இடம் - வெஸ்ட்மின்ஸ்டர். கிரீன் பார்க் எனப்படும் பெரிய பூங்காவுக்கு அருகில்தான் தங்குமிடம். பூங்காவுக்கு அந்தப் பக்கம் இங்கிலாந்து இராணியார் இருக்கும் பக்கிங்காம் அரண்மனை. இந்தப் பக்கம் நான் தங்குமிடம். அதிகாரத்துக்கு மிக அருகில் வந்து விட்டேன்! அதுவும் தங்கள் வல்லரசில் சூரியன் மறையவே மறையாது என்று எண்ணிய - தம்மைத் தவிர உலகின் பெரும்பகுதி மானிட இனத்தை விலங்குகளைப் போல் கருதிய - அவர்களைக் கட்டுக்கோப்போடு கட்டியாண்ட அதிகாரத்தின் மையப்புள்ளிக்கு அருகில்!!

எந்த ஊருமே, யாரோடு போகிறோம் - எங்கெங்கு போகிறோம் என்பதைப் பொருத்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களைக் கொடுக்க முடியும். இதை எங்கள் கிராமத்துக்கு ஒரு வெளியூர் நண்பனை அழைத்துப் போகும் போது கூட உணர்ந்திருக்கிறேன். அதே போல, ஒரு நண்பனோடு போகும் போது ஒரு மாதிரி இருக்கிற ஓர் ஊர், வேறொரு நண்பனோடோ ஓர் உறவினர் வீட்டுக்கோ செல்லும் போது - அவர்கள் அந்த ஊரைச் சுற்றிக் காட்டும் போது, முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை இது போலப் பல மாதிரியான பரிமாணங்களைக் காட்டியிருக்கிறது எனக்கு. அந்த வகையில், இம்முறை மத்திய இலண்டனில் தங்கப் போவதால் இலண்டன் பற்றிய பார்வையே முழுமையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கான அறிகுறி விமான நிலையத்திலிருந்து தங்குமிடத்துக்குப் பயணிக்கும் முதற் பயணத்திலேயே நன்றாகத் தெரிந்தது.

மத்திய இலண்டன்தான் முழுமையாக மண்ணின் மைந்தர்களுடையது. அதுதான் அவர்களுக்காகவே ஆரம்பத்திலேயே கட்டியெழுப்பப் பட்டது. மற்றவையெல்லாம் பிழைக்க வந்த மற்றவர்களால் அவர்களுக்காகப் பிற்காலத்தில் கட்டப்பட்டுக் கொண்டவையாக இருக்கும். இங்கிருக்கும் கட்டடங்கள் யாவும் நானூறு-ஐநூறு ஆண்டு காலப் பழமையானவையாக இருக்க வேண்டும். இன்றைய வானளாவிய கட்டடங்களைப் பார்த்த பின்பு அவை சாதாரணமாகத் தெரியலாம் நமக்கு. ஆனால் நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ்வளவு அழகான கட்டடங்களைக் கட்டியவர்கள் இப்போது அவற்றை இடித்துக் கட்டுவதற்கான தேவை ஏதும் இல்லை. அப்படிச் செய்வது ஒரு பலனையும் தரப் போவது இல்லை. அவையாவும் தற்காலக் கட்டடங்களை விடவும் பலமானவையாகவும் தெரிகின்றன. அது மட்டுமில்லை, அவர்கள் பழமையைப் பெரிதும் போற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனக்கும் வானளாவிய கட்டடங்களைப் பெரிதாகப் பிடிப்பதில்லை. கட்டடங்களின் உயரம் கூடக் கூட மனிதன் இயற்கையை விட்டு அப்பால் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஓரிரு கட்டடங்கள் தவிர்த்து இலண்டன் முழுக்கவே அத்தகைய வான்முட்டும் கட்டடங்களை அதிகம் பார்க்க முடியாது.

சீருந்துகள் (CABS)

பொதுவாகவே ஊரெங்கும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால் வாடகைக்கு வண்டி பிடிக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை. அப்படிப் பிடிக்க நினைப்பவர்களுக்கு இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன. ஒன்று, நம்ம ஊர் அம்பாசடர் வண்டிகளைப் போல, பழமையான தோற்றமுடைய கருப்பு வண்டிகள். அவைதான் நினைத்த இடத்தில் கையைக் காட்டி அழைக்கத்தக்க வசதியோடு ஊரெங்கும் ஓடிக் கொண்டிருப்பவை. ஆனால் கட்டணம் மிக அதிகம். நம் போன்றோர், தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு இவ்வண்டிகளில் சென்று வர வேண்டுமென்றால், மொத்தச் சம்பளமும் பற்றாது. அதனால் நம்மைப் போன்ற சராசரி மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை. குறிப்பிட்ட எண்ணுக்குத் தொலைபேசியில் அழைத்து வரச் சொல்லும் வாடகை வண்டிகள் புதுமையான நம் காலத்து வண்டிகள் போல இருந்தாலும் பாதிக் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். அதனால் பெரும்பாலானவர்கள் இந்த வண்டிகளைத்தான் அழைக்கிறார்கள். சென்ற முறை வந்திருந்த போதே இவற்றையெல்லாம் அறிந்திருந்ததால், சென்ற முறை விமான நிலையத்தில் இறக்கி விட்ட வாடகை வண்டிக்காரரையே விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்து கொண்டேன்.

கிரீன் பார்க் 

கிரீன் பார்க் ஊரின் மையத்தில் பெரிதாக விரிந்து கிடக்கிறது. பெங்களூர் கப்பன் பார்க் போல் லால்பாக் போல் இருக்கிறது. இதைக் கட்டியவர்கள்தாமே அவற்றையும்  கட்டியிருக்க வேண்டும். அது போல இலண்டனில் பல இடங்கள் இந்தியாவில் ஏதோவோர் இடத்தை நினைவு படுத்துவதாக இருக்கின்றன. ஏதோவோர் இடம் டெல்லி செங்கோட்டை போல் இருந்தது. விக்டோரியா இரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் போல் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது வெள்ளையருக்கு முந்தைய இந்தியா எப்படித்தான் இருந்திருக்கும் என்ற கேள்வி வருகிறது. வெள்ளையர் வந்திராவிட்டால் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியும்தான்.

பூங்கா என்றால், சதுரமாகவோ வட்டமாகவோ இருக்க வேண்டும் என்கிற என் ஆசைக்கிணங்க இல்லை இப்பூங்கா. முக்கோணம் போன்ற நாற்கோணமாக இருக்கிறது. அதற்குள் சில நினைவுத் தூண்களும் சுவர்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன. அந்த நாட்டைப் பிடித்தோம், இந்த நாட்டைப் பிடித்தோம், நம் போர் வீரர்களை வணங்குவோம் என்கிற மாதிரியான உணர்வுமயமான நினைவூட்டல்கள். மனிதர்க்கெதிராய் மனிதரைப் பயன்படுத்தும் - சேவற் சண்டையை விடக் கேவலமான இந்தக் கொடூரம் இவர்கள் உலகமயமாக்கியதுதானே!

எந்நேரமும் சிலர் நடமாடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கிறார்கள். நானும் அந்தப் பகுதியில் இருந்த இரண்டு வாரங்களும் தினமும் கிரீன் பார்க் சென்று ஓடிக் கொண்டும் உடற்பயிற்சி செய்து கொண்டும் இருந்தேன். புதுப் பணக்காரன் போல, புதுப் பயிற்சியாளன்! நான் போகும் நேரமெல்லாம் எழுபது வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவரும் தினமும் வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டிருந்தார். கண்டிப்பாக என்னை விட இரு மடங்கு வயதும் தெம்பும் கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு காட்சியைப் பார்த்த பின்பும் என்னால் அடங்கியிருக்க முடியவில்லை. பொதுவாகவே மேற்கர்கள் நம்மவர்களை விட உடலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே. நம்ம ஊரில்தான் அவ்வளவு வயதானவர்கள் வேகமாக நடந்தாலே கீழே விழுந்து செத்துப் போவார்கள் என்பது போல ஒரு பயம் பரவியிருக்கிறது. இந்த ஊர்ப் பெருசுகள் எல்லாத்திலுமே நம்ம ஊர்ப் பெருசுகளை விடப் பெருசுகள்தாம்.

ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு மிகுந்தவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது உண்மைதான் என்று உறுதிப் படுத்தும் விதமாக எல்லாப் பூங்காக்களிலுமே ஒரு நாயைப் பிடித்துக் கொண்டு நான்கு பேர் நடமாடிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு க்ரீன் பார்க் விதி விலக்கல்ல. சிலர் சரியாகக் கயிறு வைத்துக் கட்டாமலேயே வலம் வந்து கொண்டு நமக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். இங்கிருக்கும் குழந்தைகள் கூட அவற்றுக்குப் பயப்படுவது இல்லை. உற்சாகமாகப் போய் அவற்றோடு விளையாடத்தான் செய்கிறார்கள். ஆனாலும் நமக்கு முடியாதப்பா. இந்த நாய் வளர்க்கும் பழக்கத்தில் கூட இங்கிருந்து காப்பியடித்து நம்மவர்கள் நிறையக் கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். சரியான காப்பிக் கடையர்கள்! எங்கள் கிராமத்திலும் நாய் வளர்க்கிறார்கள். ஆனால் அங்கே வேறு  மாதிரியான நாய்களும் வேறு மாதிரியான வளர்ப்புமாக இருக்கிறது.

ஒருபுறம் சக மனிதனை நாயைப் போல் நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், நாயைக் கூட மனிதனைப் போல் மதிக்கிற மாண்பு பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் நாயில் கூட, அழகாகக் கொழுகொழுவென்று இருக்கும் நாய்க்குக் கொடுக்கப் படும் மரியாதையில் பாதி கூடத் தெருவில் திரியும் சொறி நாய்க்குக் கொடுக்கப் படுவதில்லையே என்பதை நினைக்கும் போது அவைகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் வேலையை நாம்தான் ஆரம்பித்து வைக்கிறோமோ என்ற கவலை வருகிறது! :)

வியப்புகள் தொடரும்...

சனி, மார்ச் 30, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 7/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

ஊரெங்கும் எல்லாச் சந்தைகளிலுமே டூரியன் (முள்நாறிப் பழம்) என்றொரு பழத்தைக் கூவிக் கூவி விற்கிறார்கள். அது குவித்துவைக்கப் பட்டிருக்கும் பக்கம் போனாலே நாற்றம் குமட்டுகிறது. ஆனால் அதைச் சிங்கப்பூரர்கள் பெரிதும் விரும்பி உண்பார்கள் போலத் தெரிகிறது. விற்பனை எப்போதும் பிய்த்து வாங்குகிறது. பார்ப்பதற்குப் பலாப் பழம் போல இருக்கிறது. ஒருமுறை வாங்கிச் சென்று விட்டு வீட்டில் யாருமே நெருங்கக் கூட மாட்டேன் என்று சபதம் எடுக்க, எல்லாத்தையும் நாமே தின்று தீர்க்க வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது. இப்படியெல்லாம் நம்மவர்கள் பயந்த போதும் உடம்புக்கு மிகவும் நல்லதாம் அந்தப் பழம். அதனால்தான் விற்பனை அப்படிப் பெரும் போடு போடுகிறது போலும். பொதுவாகவே சீன உணவுகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவை என்கிற ஒரு கருத்து இருக்கிறது பெரும்பாலானவர்களிடம். அதனால்தான் அவர்கள் உடம்பைக் கூட அப்படிக் கட்டாகப் பராமரிக்க முடிகிறது என்கிறார்கள். நம்முடைய உணவு முறை முற்றியும் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அல்லது அப்படி மாறி விட்டது என்றும் சொல்லலாம்.

நிறையச் சாப்பாட்டுக் கடைகளில் ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் போது சிறிய கடை கூடப் பெரிதாகத் தெரிகிறது. உள்ளே போனால்தான் புரிகிறது அது என்னவென்று. இரண்டு-மூன்று சுவர்களில் கண்ணாடி பதித்திருக்கிறார்கள். அது கடையை இரண்டு-மூன்று மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிறது. இது போன்ற ஏமாற்று வேலையை இந்தியாவிலும் சில கடைகளில் பார்த்த நினைவிருக்கிறது. ஆனால் அங்கை விட இங்கு அதிகமாக நடக்கிறது அந்த வேலை.

CIRCLE LINE என்கிற MRT பாதையில் ஓடும் இரயில் வண்டிகள் ஓட்டுனரே இல்லாமல் முழுக்க முழுக்கத் தானியங்குபவை. தொழில்நுட்பத்தை எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் பிளாஸ்டிக்குக்கு எதிராகப் பெரும் விழிப்புணர்வு எழுந்து வருகிறது. அதையெல்லாம் பார்த்த போது அது ஓர் உலகமெல்லாம் எழுந்து வரும் விழிப்புணர்வாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்தியாவில் இப்போது வருகிற எல்லாமே வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே வந்து விட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்கிற வழக்கமான நேர்கோட்டுச் சிந்தனையும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், இங்கு எல்லாக் கடைகளிலுமே எந்த மனச் சங்கடமும் இல்லாமல்  பிளாஸ்டிக் பைகள் அள்ளி அள்ளி வழங்கப் படுகின்றன - பயன்படுத்தப் படுகின்றன. ஒருவேளை விளைநிலங்கள் இல்லாததால், மண் என்ன நாசமாகப் போனாலும் என்ன என்று விடுகிறார்களோ என்னவோ! இன்னொரு புறம் இந்தச் சுற்றுச் சூழல் சார்ந்த நெருக்கடிகள் அனைத்துமே வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது மட்டுமே திணிக்க முயலும் நாட்டாண்மைத்தனம் என்கிற குற்றச்சாட்டும் சரியோ என்றும் தோன்றுகிறது.

வந்து  சேர்ந்த சில மாதங்களில் வேலைக்குப் பணிப்பெண் வைத்துக் கொள்ள வேண்டி ஒரு நிறுவனத்தை நாடினோம். பெரும்பாலும் இந்தோனேசியப் பெண்களே சிங்கப்பூரில் பணிப்பெண்களாக இருக்கிறார்கள். அதற்கடுத்த படியாக பிலிப்பினோப் பெண்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் போல இந்தோனேசியப் பெண்ணை வைத்துக் கொள்ளாமல் நாங்கள் பிலிப்பினோப் பெண் ஒருவரைத் தேர்ந்தெடுத்தோம். அப்போதே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆள் சொன்னார் - "தேவையில்லாமல் வெளியில் போக விடாதீர்கள். வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். கட்டட வேலை பார்க்க வந்திருக்கும் வங்காள நாட்டுப் பையன்கள் இவர்களைக் குறி வைத்தே சுற்றுவார்கள். இவர்களும் அவர்கள் பின்னால் போய் வில்லங்கத்தை விலைக்கு வாங்கி வருவார்கள்!" என்று. அது முதலில் புரியவில்லை. அதன் பின்பு ஞாயிற்றுக் கிழமை ஆகி விட்டால், வங்காள முகங்களும் பிலிப்பினோ முகங்களும் சேர்ந்து சேர்ந்து சுற்றித் திரிவதைப் பார்த்ததும் எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று புரிந்து விட்டது. என்னவோர் உலகளாவியக் கூட்டணி! வேலை முடிந்து ஊருக்குத் திரும்புகையில் இதையெல்லாம் போய்ப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள் போல.

தமிழ் நாட்டில் இருந்து வேலைக்கு வந்திருக்கும் பையன்களும் இருக்கிறார்கள். அவர்களும் இது போன்ற வீரதீரச் செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ஆனால் அவ்வளவு மோசமில்லை. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டும், காசு சேர்க்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வோ ஆசையோ கூடுதலாக இருக்கிறது. ஆனால் அவர்களோ (வங்கர்கள்) சம்பாதிக்கும் காசை முழுக்க முழுக்கக் குடியிலும் இந்தக் கும்மாளத்திலுமே தீர்த்து விடுவார்களாம் (குடி விசயத்தில் ஒருவேளை அவர்களை விட நம்மவர்கள் கூடுதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது!). சேர்த்து வைப்பது - வீட்டுக்கு அனுப்புவது என்பது மிகச் சிறிய தொகையாகத்தான் இருக்குமாம்.

சிங்கப்பூரில் இருக்கும் சீனர்களைச் சீனாவில் இருக்கும் சீனர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ஒரு படி கீழாகத்தான் பார்ப்பர் என்றும் இங்கிருக்கும் சில இந்தியர்களும் மலேயர்களும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது போலவே சீனாவில் இருந்து வந்திறங்கும் சீனர்களை இவர்களும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. இந்தியர்களைவிட அவர்களைக் கூடுதலாக ஏற்றுக் கொள்வதாக இருக்கலாம். ஆனால் தம்மில் ஒருவராக எளிதில் ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் இருந்த சீனர்கள் சீனாவுக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கும் படகேறி ஓடினார்களாம். இந்தியர்களை இந்தியா ஏற்றுக் கொண்ட மாதிரி சீனர்களைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லையாம். அது முதல் இங்கிருக்கும் சீனர்களுக்குச் சீனா மீது வெறுப்பு வந்து விட்டதாம். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மயிலிறகு குட்டி போடுகிற மாதிரிக் கதைகளாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தோடே கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டேன்.

ஊர் திரும்பும் காலம் என்பதால், சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்கிற மாதிரிப் பல விசயங்களையும் சொல்லியாக வேண்டுமே. நிறையப் பேர் என்ன செய்தாவது இந்த ஊரிலேயே இருந்து விட வேண்டும் என்று போராடுகிறார்கள். எல்லாம் தோல்வியடைந்து ஊர் திரும்ப நேர்ந்து விட்டால், அதற்காக ஏதோ பெரும் மகிழ்ச்சி அடைவது போலக் காட்டிக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். எனக்கும் அப்படியான ஓர் உணர்வு வருவதை ஓரளவு புரிய முடிந்தது. அதனால் அதையும் கொஞ்சம் பேசி விடுவோம்.

வந்தது முதலே ஒரு வளர்ந்த நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்கிற பெருமையும் மாதாமாதம் கையில் நிற்கிற மாதிரிக் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கிடைக்கிறது என்கிற மகிழ்ச்சியும் ஒருபுறம் இருக்கிறது என்றாலும், பெரிதும் மகிழ்ச்சிப் படுத்தாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் மறைக்காமல் சொல்லி விட வேண்டும்தானே. எல்லாமே நன்றாக இயங்குகிற போதும் நம்ம ஊரில் உணர்கிற ஒரு சுதந்திர உணர்வை இங்கே உணரவே முடியவில்லை. ஆனால், அதற்கு நேர் மாறாக, சொந்த ஊரில் இருக்கும் போது கூடக் கிடைக்காத ஒரு பாதுகாப்புணர்வு இந்த ஊரில் கிடைக்கிறது. அதற்காகவே இந்த ஊரிலேயே காலமெலாம் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

சுதந்திர உணர்வு பற்றிய சிந்தனை எப்படி எழுந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தால், அது அங்கிருக்கும் சட்டதிட்டங்கள் மீதான அச்சம் காரணமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. தெரியாமல் கொள்ளாமல் ஏதாவது செய்து விடுகிறவர்கள் கூட கம்பி என்ன வேண்டி வந்து விடுமோ - பிரம்படி வாங்க வேண்டி வந்து விடுமோ என்ற தெளிவற்ற சிந்தனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அவ்வளவு கடுமையான சட்டங்கள் இருக்கும் போது, நிரபராதி தண்டிக்கப் படாமல் இருக்கவும் திட்டமிட்டுச் செய்யும் குற்றங்களுக்கே கூடுதல் தண்டனை என்கிற மாதிரியான அமைப்பும் இருக்கத்தான் செய்யும். என்ன இருந்தாலும் வெளிநாடு இல்லையா?! அந்த பயம்தான்.

இது எல்லாவற்றுக்கும் மேல், ஆழ்ந்து பேசுகிற போதெல்லாம் நிறையப் பேர் சொல்கிற ஒன்று, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களுக்குத்தான் இந்த நாடு. அரசியல் கூட எல்லோருக்குமான விளையாட்டல்ல இங்கே. ஒரு சில வரம்புகளை உணர்ந்து இறங்குபவர்களுக்கு மட்டும்தான் இடம். பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு அரசுக்கு எதிராகச் சத்தமெல்லாம் கொடுத்தால் ஆளை முடித்து விடுவார்கள். ஏற்கனவே அப்படியொரு தமிழர் கொஞ்சம் கூடுதலாகச் சத்தமெல்லாம் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட கதை பற்றியெல்லாம் கேள்விப் பட்டேன். ஊடகங்கள் கூட அரசாங்கத்த்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. குண்டக்க மண்டக்க எதுவும் எழுத முடியாது. உள்ளதைக் கூட உள்ளபடி எல்லா நேரத்திலும் எழுத முடியாது என்றெல்லாம் கேள்விப் பட்ட போது கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. தறி கேட்டுப் போய் எதை வேண்டுமானாலும் எழுதுகிற - பேசுகிற, குறிப்பிட்ட கட்சிகளிடம் - மனிதர்களிடம் காசு வாங்கிக் கொண்டு ஊழியம் செய்கிற, நம் ஊடகங்களை விட அரசாங்கத்தால் கடிவாளம் போடப் பட்ட ஓர் ஊடகம் பல மடங்கு தேவலாம். ஆனால், அந்த அரசாங்கம் இன்று நன்றாக நடக்கிறது. இது பரவாயில்லை. நாளை அது தடம் மாறும் போது கூட அதை யாரும் சொல்ல முடியாது - அது பற்றிப் பேச முடியாது என்றாகி விட்டால், அப்புறம் என்ன சனநாயகம்?!

இதை விடக் கடுமையான ஒரு குற்றச்சாட்டு கூடச் சிலர் வைத்தார்கள். சிங்கப்பூர் வெளியில் பார்க்க சனநாயக நாடு போல இருந்தாலும் மொத்த நாடும் ஒரு குடும்பத்துக்குத்தான் சொந்தம். அவர்களுக்கு எதிராக இந்த நாடு ஒரு போதும் ஒன்றும் செய்ய முடியாது. நல்லது-கெட்டது எதுவாக இருந்தாலும் அது அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தாக வேண்டும். அது ஒரு நல்ல குடும்பமாக இருப்பதால், இந்த நாட்டு மக்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட குடும்பமாக இருப்பதால், பிரச்சனையில்லை. ஆனால், முற்றிலும் முதிர்ந்த சனநாயகம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. இந்தக் கட்டுப்பாடு கூட இந்த நாடு இவ்வளவு வளர்ந்ததற்கு ஒரு காரணம் என்றும் சொல்லலாம். நாம் சொல்கிற முற்றிலும் முதிர்ந்த சனநாயகமாக இருந்தால், அந்த இருபது-முப்பது கிலோ மீட்டரைக் கூட இரண்டாகப் பிரிக்க ஒருவன் பிறந்து வந்திருப்பானோ என்னவோ!

எவ்வளவோ சிக்கல்களோடு ரிஸ்க் எடுத்துக் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்ட போது எதிலுமே கோளாறு கண்டுபிடிக்கிற ஒரு சகா சொன்னான் - "நீ நினைக்கிற மாதிரி அது ஒன்றும் சொர்க்க பூமி இல்லை. அங்கு எல்லாமே பணம்தான். பெரும் பணம் பிடுங்கும் ஊர். யோசித்து முடிவு செய்!" என்று. அவனுடைய சொந்த அனுபவங்களும் அவனுக்குரிய சுபாவமும் அப்படிப் பேசச் செய்தன என்றே எடுத்துக் கொண்டேன். அவன் தமிழன் அல்லாதவன் என்பது கூட அவன் சிங்கப்பூரை அந்த அளவுக்கு நேசிக்க முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் எண்ணிக் கொண்டேன். ஆனால், அந்தப் "பணம் பிடுங்கும் ஊர்" என்ற குற்றச்சாட்டு மட்டும் திரும்பிக் கிளம்பப் போகிற நேரத்தில் நிறையவே நினைவு படுத்தப் படுகிறது. உலகமே அப்படித்தான் ஆகி விட்டது என்பது ஒருபுறம். இந்தியாவைவிட எந்த விதத்திலும் பெரிய பணம் பிடுங்கியாக இருக்க முடியாது அவர்களால் என்பது இன்னொரு புறம். பணம் இல்லாத வாழ்க்கை அங்கே சாத்தியமே இல்லை என்பதால் அப்படித்தான் எல்லோரும் இருந்தாக வேண்டும் என்கிற நியாயம் ஒருபுறம். ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் வாடிக்கையாளனை வரவேற்கும் போது கொடுக்கிற மரியாதையைத் துளியேனும் குறைத்துத்தான் அவன் விலகிச் செல்லும் போது கொடுக்கிறார்கள். இந்தியாவில் அப்பட்டமாகப் பெரிதளவில் செய்யப்படும் அந்தக் கொடுமையை இங்கே துளியளவு அனுபவிக்க நேர்ந்த போது பெரும் மன உளைச்சல் நேர்ந்தது. வீடு காலி செய்யும் போது தரகப் பெண்மணி நடந்து கொண்ட விதம் எல்லாம் கிளம்பப் போகும் நேரத்தில் இப்படிச் செய்கிறார்களே என்று வலித்தது.

முடியப் போகிற நேரத்தில் கடைசியாகச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரில் இருந்து வேலை செய்வதால் சென்னையின் பணிக் கலாச்சாரத்தைத் தொலைவில் இருந்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்புதான் கிடைத்ததே ஒழிய அதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயன்றதில்லை. சிங்கப்பூரில் இருந்த இந்த ஓராண்டில், இருப்பது வெளிநாடாக இருந்தாலும், அதற்கென்று ஒரு தனிப் பணிக் கலாச்சாரம் கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும், சென்னையில் இருந்திருந்தால் எப்படிப்பட்ட சூழலில் வேலை செய்திருப்போம் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்தது. முழுமையாகத் தமிழர்களைப் படிக்கும் வாய்ப்பாக அதைச் சொல்ல முடியாது. அதைத்தான் நம் சொந்த ஊரில் பார்த்துப் புரிந்து கொள்ளலாமே. அது போக பெங்களூரிலும் நம்மவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், சென்னைத் தமிழனுக்கும் பெங்களூர்த் தமிழனுக்குமே ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. பணியிடத்தில் அதுவும் நம்மவர்களே நிறைந்திருக்கும் ஓரிடத்தில் நம்மவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இவ்வளவு தொலைவில் வந்து புரிந்து கொள்ள ஓர் வாய்ப்பை வழங்கியதற்காக சிங்கப்பூருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

சென்று வருகிறேன், சிங்கப்பூர். மீண்டும் வருவது பற்றி இப்போதைக்குத் தெரியவில்லை. வந்தாலும் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு சூழ்நிலையில்தான் வருவேன். அப்படி வருகிற போது என்னவெல்லாம் மாறியிருக்குமோ தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் - நான் முதலில் நினைத்தது போல தமிழர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடங்கச் சரியான நாடு இதுதான். உலகம் சுற்றி முடித்து ஓரிடத்தில் அடங்க வேண்டும் என்று எண்ணுகிற போது அதற்கான சரியான இடமும் இதுதான். அப்படி அடங்க வந்தாலும் வரலாம். அப்படி வருகையில் இதை விட எளிதான - மகிழ்வான ஒரு வாழ்க்கை காத்திருக்கும் என்பது நிச்சயம். எல்லாவற்றுக்கும் மேலாக என் மகனின் பிறந்த ஊர் எப்போதும் இந்த ஊராகத்தான் இருக்கப் போகிறது. அதனால் அவன் ஒருவேளை இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டலாம். அப்படி அவன் மூலம் கூட வர நேரலாம். பார்க்கலாம், இந்த வாழ்க்கை என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று!

வியப்புகள் தொடரும்...

வியாழன், ஜனவரி 24, 2013

ஏக்கம்

என் மூன்றாம் வகுப்பில் மூன்று கருப்பசாமிகள் இருந்தார்கள்
ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள்
பத்தாம் வகுப்பில் கூட
ஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லை
பன்னிரண்டாம் வகுப்பில் கூட
ஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லை

பின்குறிப்பு: "இது போன்று கேவலமாக ஏதாவது எழுதிக் கொண்டு அதற்குக் கவிதை என்று பெயர் கொடுக்காதேடா வெங்காயம்!" என்று திட்டுபவர்கள் கூட ரமேஷ்-சுரேஷாக இருந்தால் நன்றாக இருக்கும் (பெண்கள் அப்படியெல்லாம் மண்டையாகப் பேச மாட்டார்கள் - பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்பதால் ஆஷா-உஷா பற்றிப் பேச வேண்டியதில்லை இங்கே!). :)

ஞாயிறு, ஜனவரி 13, 2013

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 6/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

இங்கே இருக்கும் 70% சீனர்கள் யாவரும் புத்த மதத்தவர் அல்லர். கிறித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தினரே. எனவே, புத்த மதப் பழக்க வழக்கங்களையும் நேரில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. புத்த மதம் பல வகைகளில் இந்து மதப் பழக்கங்களைக் கொண்டுள்ளது. சீனர்களின் கடையில் காலையில் நம்மைப் போன்றே கடவுளுக்குப் படையல் இட்டு வணங்கிய பின்தான் தொழில் ஆரம்பிக்கிறார்கள். பூசைச் சாமான்கள் மட்டும் விற்கும் கடைகள் கூட இருக்கின்றன. காவியும் மஞ்சளுமாக அவையும் கூட இந்து மதத்துக்கு உரியவை போலவே இருக்கின்றன. நம்மைப் போலவே ஊது பத்தி கொளுத்துகிறார்கள். சிலர் இந்தியாவில் போலவே நம்மிடம் கும்பிடு கூடப் போடுகிறார்கள். அதை இந்தியர்களிடம் மட்டும் செய்வார்களா அல்லது அவர்களுக்குள்ளும் செய்து கொள்வார்களா என்று தெரியவில்லை. கடைகளில் பணி புரிவோர் சில்லறை அல்லது கடன் அட்டையைத் திரும்பக் கொடுக்கும் போதும் பில் கொடுக்கும் போதும், நம்ம ஊரில் கோயிலில் செய்வது போல, மிகப் பணிவோடு, இடக்கை வலக்கையைத் தொட, வலக்கை பொருளைக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அது முழுக்க முழுக்க ஓர் இந்துப் பழக்கம் போல எண்ணிக் கொண்டிருந்தேன். நம்மை விடப் பல மடங்கு அதிகமாகவும் பணிவாகவும் எல்லா இடங்களிலும் இதைக் கடைப் பிடிக்கிறார்கள். புத்த மதம் இந்தியாவில் பிறந்து பயணித்ததை நினைவு படுத்துவதாக இருக்கிறது இவ்வொற்றுமைகள்.

பேய் விரட்டு மாதம் என்றொரு மாதம் இருக்கிறதாம். அந்த மாதத்தில் தெருவெங்கும் தீ மூட்டி ஏதோ காகிதங்களைப் போடுகிறார்கள். அம்மாதம் முழுக்க பக்தி அதிகமாகத் தென்படுகிறது. புத்த மதம் கடவுளைப் பெரிது படுத்தாத மதம் என்றோர் எண்ணம் இருந்தது. முதலில் அது பொய்த்தது. கடவுள் வந்து விட்டால் பேயும் வந்துதானே ஆக வேண்டும். பேய் பயத்தில் நம்மை விஞ்சி விடுவார்கள் போல. கடவுளை நம்பாதவர்களே பேய்க்குப் பயப்படுபவர்களாக இருப்பதும், கடவுளை நம்புபவர்கள் கடவுளை விடப் பேய்க்கு அதிகம் பயப்படுவதும் நமக்குப் புது விசயமா என்ன?!

சிங்கப்பூர் சிறிய ஊராக இருப்பதால், எங்கு சென்றாலும் திரும்பத் திரும்ப அதே ஆட்களைப் பார்க்கிற மாதிரியாக இருக்கிறது. சீன முகம் எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரியும் பிரச்சனையைச் சொல்ல வில்லை. இந்திய முகங்கள் பற்றித்தான் சொல்கிறேன். அலுவலகத்திலும் அதைச் சுற்றிலும் பார்க்கும் அதே முகங்கள்தாம் இரயிலிலும் கண்ணில் படுகின்றன. சனி-ஞாயிறு சாமான்கள் வாங்கச் செல்லும் போதும் திரும்பவும் அதே முகங்களே தென் படுகின்றன. ஐம்பது இலட்சம் பேர் வாழும் ஊரில் ஐந்து இலட்சம் பேர் கூட இந்தியரில்லை. அப்படியானால், இங்குள்ள தமிழரெல்லாம் சேர்ந்தால், திருநெல்வேலி அளவுக்கு ஓர் ஊர் உருவாக்கலாம். அவ்வளவுதான். திருநெல்வேலியில் ஒரு வருடம் இருந்தால் அதே ஆட்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது போலத்தானே இருக்கும். அதுதான் இங்கும்!

சின்ன வயதில் ஊரில் சுளீர் என்று அடிக்கும் வெயிலில் கூட நண்பர்களோடு சட்டையில்லாமல் உப்புப் படிந்த உடம்போடு சுற்றித் திரியும் போதெல்லாம் மாமா கடுமையாகக் கோபப் படுவார். சட்டையில்லாமல் திரிவது அநாகரிகம் என்பது அவருடைய கருத்து. அதன் பின்பு அவருக்கும் நாகரிக மனிதர்களின் பார்வைக்கும் பயந்து சட்டை போடப் பழகியபின் சட்டையில்லாமல் இருத்தல் என்பது மனித குலத்துக்கு எதிரான பெரும் குற்றமாகவே மனதில் பதிந்து விட்டது. அப்படிச் சட்டை போடாமல் உடன் சுற்றிய நண்பர்களும் அவர்களுடைய மாமா சொல்லாமலேயே சட்டை போடுவதைப் பார்த்த போது மாமா விபரமானவராகத்தான் தெரிந்தார். அதன் பின்பு சட்டை போடாமல் இருப்பதென்பது (அந்தப் பெரும் மானிட சுகம்!) தனிமையில் இருக்கும் போதும் வீட்டார் முன்பும் மட்டுமே என்றாகிப் போனது. வீட்டுக்கு யாராவது வந்தால் சட்டையில்லாமல் உடம்பைக் காட்டுவது கூட உடனிருப்போருக்கும் கூட அவமானகரமானதாக இருந்தது. தூங்கும் போதும் சட்டை (டி-சட்டை) போட்டே தூங்கும் நாகரிக மாந்தர்களின் மத்தியில் வாழ ஆரம்பித்த பின்பு, நாமும் அப்படியே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிங்கப்பூரில் உச்சி வெயில் தாங்க முடியாமல் வெற்றுடம்போடு இருக்கும் (வீட்டில்தான்) மனிதர்களைப் பார்த்த போது அது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை போல என்று பட்டது. அவர்கள்தாம் வளர்ந்த நாட்டு வாரிசுகள் ஆச்சே. அதை நாம் செய்தால் தப்பில்லையே. ஆக, இதிலும் வசதிக்கேற்றபடி வாழ்ந்துவிட்டுப் போவதை விட வசதியானவர்களின் வசதிக்கேற்ப வாழ்ந்து விட்டுப் போவதுதான் சரியாகப் படுகிறது.

இந்தியாவுக்கு வெளியே தீபாவளிக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பதில் ஆச்சரியப் படுவதற்கு ஏதுமில்லை. அதை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்தால் கொஞ்சம் வியப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் மாதாமாதம் அல்லது ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை வருகிற திருநாட்களுக்கு வாழ்த்துவதற்காகவே எப்போதும் ஒரு பலகை இருக்கிறது. கிறித்தவர்களை கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு வாழ்த்துவது போல (அவைதான் இப்போது மொத்த உலகத்துக்குமான திருநாட்கள் ஆகி விட்டனவே!), மண்ணின் மைந்தர்களான மலேய-முகமதியச் சிறுபான்மையினரை ஹரி ராயாவுக்கு (ரம்ஜானை அப்படித்தான் சொல்கிறார்கள்; என்னடா இது ஹரி-சிவன் என்று இந்துப் பெயர்கள் போல இருக்கிறதே என்று வியந்து போனேன்; அதுவும் பண்டைய பண்டமாற்று-பண்டிகை மாற்று முறைகளின் விளைவாக நிகழ்ந்த பெயர்ப் புழக்கமோ என்னவோ!) வாழ்த்துவது போல,  இந்திய-இந்துச் சிறுபான்மையினரை ஊரெங்கும் இருக்கும் பலகைகளில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி மகிழ்விக்கிறார்கள். இந்த வாழ்த்துக்களின் தொடர்ச்சியாக அந்த ஓரிரு வாரங்களும் ஊர் முழுக்க தீபாவளி விழாக் கொண்டாடுகிறார்கள்.

இந்த விழாக் கொண்டாடும் விதமே அலாதியானது. பெரும்பாலும் இந்திய-இந்து மக்களை அழைக்கிறார்கள். அதற்கு மிகக் குறைந்த விலையில் நுழைவுச் சீட்டு விற்கிறார்கள். மத எல்லைகளைக் கடந்து இந்திய முகமதியர்களும் கிறித்தவர்களும் கூட இதில் வந்து கலந்து கொண்டு தம் இந்தியச் சகோதரர்களோடு அளவளாவிக் கொள்கிறார்கள். குறிப்பாக, முன்பு சொன்னபடி, தமிழ் முகமதியர்கள் நிறையவே இங்கு இருக்கிறார்கள். அவர்களும் நிறையக் கலந்து கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல், அந்தந்தப் பகுதிகளில் இருக்கிற சமூக மையங்களில் (COMMUNITY CENTER) பொறுப்பில் இருக்கிற சீனர்களும் மலேயர்களும் கூட இதில் ஈடுபாட்டோடு கலந்து கொள்கின்றனர் (சமூகத்தில் நடக்கிற எல்லாத்திலும் ஈடுபாட்டோடு கலந்து கொள்கிறவர்கள்!). இந்தச் சமூக மையங்கள் சிங்கப்பூரில் முக்கியமான அமைப்பு. இவை அனைத்தையும் அரசே ஊக்குவித்து நடத்துகிறது. நாங்களும் போன புதிதில் இவற்றில் ஏதாவதொன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் எண்ணித் திட்டமிட்டதெல்லாம் வெறுங்கனவாகிப் போனது. 'உள்ள வேலையைப் பார்க்கவே துப்பில்லை; இதில் ஊர் வேலை வேற!' என்று மெதுவாக அமைதியாகி விட்டோம். தீபாவளிக்குத் திரும்புவோம்.

விழாவில் பெரும்பாலும் இந்திய நிகழ்சிகள் இடம் பெறுகின்றன. அதிலும் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளே இடம் பெறுகின்றன என்றாலும், மற்ற மொழி நிகழ்ச்சிகளுக்கும் வலிந்து முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பஞ்சாபில் இருந்து வந்த ஒரு குழு பாங்க்ரா நடனம் ஆடியது. அந்த மாதம் முழுக்க அவர்கள் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் சென்று நடனம் ஆடிக் கொண்டிருந்ததைச் செய்தித்தாட்களில் பார்க்க முடிந்தது. அதிகம் கைத்தட்டல் வாங்கிய நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. நாட்டுக்குள் இருக்கும் போது வெவ்வேறு நாட்டவர்களைப் போல இருந்தாலும், வெளி மண்ணில் வைத்துப் பார்க்கும் போது அதற்கும் சேர்த்துக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத்தான் செய்கிறோம். தமிழ்ப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது போலக் காட்டிக் கொள்ளும் பல விசயங்களைப் பார்க்கும் போது சிறிதளவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்க்கும் வட இந்தியர்களுக்கும் சகிக்கச் சிறிது சிரமமாகத்தான் இருக்கும் என்றாலும், நாம் நமக்கு ஒரு தொடர்பும் இல்லாத பாங்க்ராவுக்குக் கைத்தட்டியது போல அவர்களும் எதையாவது பார்த்து - நினைத்துப் பெருமைப் பட்டிருந்தால் நல்லது. 

பயங்கரக் கைத்தட்டல் வாங்கிய இன்னொரு நிகழ்ச்சி, சீனர் ஒருவர் அழகாகத் தமிழ்ப் பாடல் பாடியது. அந்த நிமிடம் ஒரே ஒரு சிறிய சில்லறைக் கேள்வி எழுந்தது. 'தமிழைச் சீனருக்கும் கொண்டு சேர்த்த பெருமை யாருக்குச் சேரும்?'. கண்டிப்பாக எந்த வித்துவானுக்கும் கிடையாது. அது, வயிற்றுப் பிழைப்புக்காக, உழைப்பை மட்டுமே நம்பி, பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு - மக்களை விட்டு - நாளைய நாள் எப்படி விடியப் போகிறது என்று கூடத் தெரியாமல் கப்பலேறி வந்த பாட்டாளி மக்களுக்குத்தானே சேரும்! மலேயர்களின் நடனம் ஒன்றும் அத்தகைய கைத்தட்டல் வாங்கியது.

பார்வையாளர்களையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக விழாவின் போதே அவர்களுக்கும் சில போட்டிகள் நடத்திப் பரிசுகளும் கொடுக்கின்றனர். அந்தப் பரிசுகளை சமூக மையத்தில் தலைவர்-செயலாளர்-பொருளாளர் பொறுப்பில் இருக்கிற சீனரோ-மலேயரோ வழங்கும் போது, சிங்கப்பூரின் பன்முகத் தன்மை நன்கு சத்தமாகவே பறைசாற்றப் படுகிறது.

சிங்கப்பூரர்கள் தீபாவளியை பெரும்பான்மை இந்தியர்கள் சொல்வது போல ஆங்கிலத்தில் 'திவாளி' (DIWALI) என்று சொல்வதில்லை. பெரும்பான்மைத் தமிழர்கள் சொல்வது போல முழுமையாக அழுத்தம் திருத்தமாக 'தீபாவளி' (DEEPAVALI) என்று சொல்கிறார்கள்.

தீபாவளிக்குப் பல வாரங்கள் முன்பிருந்தே லிட்டில் இந்தியா பகுதி களை கட்டி விடுகிறது. புதிது புதிதாகக் கொட்டகை போட்டுத் தற்காலிகத் துணிக்கடைகள் முளைக்கின்றன. சேட்டுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விதவிதமான இந்தியத் துணி மணிகளைக் குவிக்கிறார்கள். மக்களும் போய்க் குவிந்து அள்ளிக் கொண்டு வருகிறார்கள். உச்ச கட்டமாக தீபாவளி நாள் பிறக்கும் போது, சரியாகப் பன்னிரண்டு மணிக்கு முன்பாக, மேற்குவயப்பட்டுவிட்ட இளைய தலைமுறை வழக்கமாக ஆங்கிலப் புத்தாண்டுக்குச் சொல்லிக் குதூகலப் படுவது போல, "10, 9, 8..." என்று COUNTDOWN சொல்லி "2, 1, HAPPY DEEPAVALI" என்று அலறிக் காதைப் பிளக்க வைக்கிறார்கள். இந்தப் பழக்கம் என்னவோ தீபாவளிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது என்றபோதும், அங்கே இங்கே கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கிற போதும், ஒரு பற்பண்பாட்டுச் சூழலில், எது எதையோ கலந்தடித்தாவது அவர்களுடைய பாட்டனாரின் பண்பாட்டைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே என்கிற ஒற்றை மகிழ்ச்சி அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விடுகிறது. அதற்கு அடுத்த படிக்குப் போய், தீபாவளியே தமிழன் பண்டிகை இல்லை என்பதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் பேசிக் கொள்ள வேண்டிய சங்கதி. அவர்களிடமும் சொல்லிக் குழப்பினால், "போங்கடா... நீங்களும் உங்க இதும்!" என்று சொல்லி விட்டு COUNTDOWN-ஐ ஆங்கிலப் புத்தாண்டுக்கு மட்டும் சொல்லப் போய் விடுவார்கள்.

ஒவ்வொரு முக்கிலும் ஓர் உடற்பயிற்சிக்கான இடம் இருக்கிறது. தனியார் ஜிம்மில் இருப்பது போல மின்-இயந்திரங்கள் இருப்பதில்லை. ஆனால் மின்-இணைப்பின்றி அது போலவே அமைக்கப் பட்ட இயந்திரங்கள் இருக்கின்றன. அதனால் காசு பணம் செலவழிக்காமல் எல்லோரும் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ள முடிகிறது. இரவு-பகல் என்றில்லாமல் எந்த நேரமும் யாராவது இளைக்க இளைக்க ஓடி உடற்பயிற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்துச் சகியாமல், நானும் ஒரு நன்னாளில் தடாலடியாக ரோமில் ரோமனாக முடிவெடுத்து, சில மாதங்கள் கடுமையாக ஓடியும் உடற்பயிற்சி செய்தும் உடம்பையும் வயிற்றையும் நன்றாகக் குறைத்து விட்டேன். உடம்பைக் குறைத்த பின்தான் புரிகிறது - இப்படி இருக்க வேண்டிய உடம்பையா அவ்வளவு நாட்களாக அப்படி வைத்திருந்தோம் என்று. அந்த வகையில் உடல் பற்றிய தன்னுணர்வு வர வைத்தமைக்காக சிங்கப்பூருக்கும் அங்கே எந்த நேரமும் வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டிருக்கும் உடலுணர்வாளர்களுக்கும் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

இங்கும் கிரிக்கெட் கிளப் எல்லாம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஊருக்குள் அவ்வளவாகக் கிரிக்கெட் ஆடும் காட்சிகள் காண முடிந்ததில்லை (அதற்குக் கிரிக்கெட் ஆடும் மைதானங்களின் பக்கம் போயிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் இருக்கிறது!). வீடுகள் இல்லாத மொட்டை வெளிப் பகுதிகளில் பயணித்த போது ஓரிரு முறை அந்தக் காட்சி கிட்டியது. அதுவும் முழுக்க முழுக்க இந்திய முகங்கள்தாம் ஆடிக் கொண்டிருந்தன. அப்போதும் சில்லறையாக ஒரு சிந்தனை வந்து தொலைத்தது - 'அடிமைத் தனத்தைத் தூக்கிப் பிடிப்பதில் நமக்கிருக்கிற போதையும் வெறியும் மற்றவர்களுக்கு இல்லையோ!'.

பகுதிக்கு ஒரு நீச்சட்குளம் இருக்கிறது. அதற்குள்ளேயே மூன்று நான்கு விதமான ஆழங்களில் வெவ்வேறு குளங்கள் இருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொன்று. மிகக் குறைந்த கட்டணத்துக்குச் சாமானியர்களும் சென்று அனுபவித்துக் கொள்ள முடிகிறது. மகளை அழைத்துக் கொண்டு போய் ஒரு சில வாரங்கள் அதையும் அனுபவித்து விட்டு வந்தேன். எதையும் தொடர்ச்சியாகச் செய்கிற கடமையுணர்வுதான் நமக்குச் சுத்தமாகப் பிடிக்காதே!

நம் ஊரில் காண முடியாத ஒரு வேறுபட்ட காட்சி - ஏனோ அடிக்கடி மனவளம் குன்றியவர்கள் நிறையப் பேரைப் பொது இடங்களில் காணமுடிகிறது. விசாரித்துப் பார்த்த போது, நம்ம ஊரில் போல அவர்களை அடைத்து வைக்கக் கூடாதாம் இங்கு. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காதவர்கள் என்றால் அவர்களும் மற்ற மனிதர்களைப் போல சுதந்திரமாக நடமாட விடப்பட வேண்டுமாம். நல்ல விசயம்தான். அப்படி விட்டு விட்டாலே அப்படியானவர்கள் மீது உள்ள பயம் போய் விடும் (குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் குழந்தையுள்ளம் கொண்ட என் போன்றவர்களுக்கு!). அவர்களும் மேலும் மேலும் மனதளவில் பாதிக்கப் பட மாட்டார்கள். நன்றாக இருப்பவனையே லூசு லூசென்று சொல்லிச் சொல்லியே லூசாக்கி விடும் பண்பாடுடைய நமக்கு அது சிறிது பழகச் சிரமம்தான். பழகினால் நல்லது.

வியப்புகள் தொடரும்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...