ஞாயிறு, அக்டோபர் 08, 2017

அதே இடம்

எது எங்கள் குலத்தொழில்? என் தொழில் கட்டடம் கட்டுவது. எங்கள் சொந்தக்காரர்களில் எல்லோரும் கட்டடம் கட்டுபவர்கள் இல்லை. எங்கள் பெரியப்பா வீட்டில் எல்லோரும் படித்து நல்ல பணிகளில் இருக்கிறார்கள். அதில் கட்டடம் கட்டும் இஞ்சினியர் வேலைக்குப் படித்த அண்ணன் ஒருத்தனும் உண்டு. சின்ன வயதில் இஞ்சினியர் என்றாலே கட்டடமும் பாலமும் கட்டுபவன் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட அந்த வயதில் கேள்விப்பட்ட எல்லாமே தவறாகித்தான் போனது. பெரியப்பா மகனும் கூட கட்டடம் எல்லாம் கட்டுவதில்லையாம். கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தினுள் உட்கார்ந்து கம்ப்யூட்டரில்தான் வேலை செய்கிறானாம் இப்போது. பிள்ளைகள் எல்லாம் படித்து விட்டதால் பெரியப்பாவும் பிள்ளைகளும் ஊர்ப்பக்கமே எட்டிப் பார்ப்பதே இல்லை. தாத்தாவும் தாத்தாவுக்குத் தாத்தாவும் விவசாயம்தான் செய்திருக்கிறார்கள். அதனால் விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களின் பெரிய மீசைகள் எப்போதும் நாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனால் அரசாள்வதே எங்கள் குலத்தொழிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. அதில் ஒரே ஒரு பிரச்சனை – எங்களைப் போலவே நூற்றுக் கணக்கான வீடுகள் உள்ள எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டு இளவட்டமும் அதைத்தான் சொல்லிக் கொள்கிறார்கள். எங்கள் ஊர் மட்டுமல்ல, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பதினேழு பட்டிகளிலும் கூட அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். சென்னை, சிங்கப்பூர், பெங்களூர், ஹைதராபாத் என்று வெளியூர்களில் வேலைக்குப் போயிருந்த போது, வட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிலரும் கூடத் தம்மை மன்னர் பரம்பரை என்றே சொல்லிக் கொண்டார்கள். அதன்பிறகு அப்படிச் சொல்லிக் கொள்ளக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஒரு நாடே தன்னை மன்னர் பரம்பரை என்று சொல்லித் திரிவது, அந்த நாட்டில் மக்களை விட மன்னர்கள் அதிகம் இருந்ததாகச் சொல்வது போலாகி விடாதா? அது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்று புரிந்த முதல் அறிவாளி என்ற பெருமையோடு அப்படிச் சொல்லிக் கொள்வதை நிறுத்தி விட்டேன். 

என் உறவினர்களில் சிலர் என் சின்ன வயதில் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்கள். பின்னர் அவர்களே அரசாங்கத்திடம் இருந்து மதுபானக்கடை ஏலம் எடுத்து, நன்றாகச் சம்பாதித்து, அரசியலில் இறங்கி, தினம் தினம் வெள்ளை வேட்டி – சட்டை போட்டுக் கொண்டு, சமூகத்தின் மரியாதைக்குரிய பொறுப்புகளில் இடம் பெற்றார்கள். அதன் படி பார்த்தால், கள்ளச்சாராயம் காய்ச்சுவது எங்கள் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. அரசியல் இன்னும் எங்கள் குலத்தொழிலாக இருக்கிறது. மன்னர் பரம்பரை அல்லவா? அரசியலிலும் வெவ்வேறு மட்டங்களில் எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் முதல் எண்ணிக் கொடுக்கப்படும் ஓரிரு பெரிய நோட்டுகளுக்காக எல்லாக் கட்சி மாநாட்டுக்கும் வேட்டியின் கரையை மட்டும் மாற்றிக் கொண்டு போய்க் கலந்து கொள்கிற அடிமட்டத் தொண்டன் வரை எல்லா மட்டங்களிலும் எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். சினிமாத் தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் எங்கள் மாமா மகன் ஒருவன், “என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்றால், கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல், சிரிக்காமல், “சினிமாத் துறையில் இருக்கிறேன்” என்பான். அவன் சொல்வது ஒன்றும் தவறில்லையே. அது போலத்தான் அரசியல் என்பதும் எல்லோரும் அடங்கியதுதானே. விசிலடிக்க ஆளில்லாத இடத்தில் கலைஞனுக்கு ஏது வெற்றி? அது போலத்தான் நாங்கள் எல்லாம் கொடி பிடிக்கப் போய் நிற்காவிட்டால் தலைவர்கள் எப்படி உருவாக முடியும்? அந்த வகையில் தலைவர்களை உருவாக்கும் பணி என்பதை எங்கள் கடமையாகத்தான் நினைக்கிறோம் நாங்கள். நாங்கள்? ஆம், நாங்கள்தான். எங்கள் ஆட்கள் எங்கள் ஆட்கள் என்று எவ்வளவு நேரம் பிரித்துப் பேசுவது. நானும் அதில் ஒருத்தன்தானே. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி என்று நானும் பல மாநாடுகளுக்குப் போயிருக்கிறேன். பல்வேறு கரை வேட்டிகள் கட்டியிருக்கிறேன். பல கட்சிகளின் கொடிகளைத் தாங்கிப் பிடித்துப் பல தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பணியில் பங்கெடுத்திருக்கிறேன். அதில் அடிக்கடிப் போக நேர்ந்தது திருச்சிதான். ஏன்தான் மாநாடுன்னாலே திருச்சிக்கு திருச்சிக்குக் கூப்புடுவாய்ங்களோ! அது போல கோயம்புத்தூர் மட்டும் இன்னும் போனதில்லை. ஏனோ எனக்கு விபரம் தெரிந்து – நான் ஊரில் இருக்கிற நாட்களில், எந்தக் கட்சியும் கோயம்புத்தூரில் மட்டும் மாநாடு வைத்ததில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் பணியில் ஈடுபட முடியும். தேர்தல் என்பது வருடாவருடம் வருவதில்லை என்பதால் முழுக்கவும் அதை நம்பியே வாழ முடியாதே. ஹைதராபாதில் மாட்டிக்கொண்ட ஒரேயொரு முறை தவிர எல்லாத் தேர்தல்களுக்கும் ஊரில் இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்வேன். அதிகம் உடல் நோகாத சம்பாத்தியம். குடும்பத்தோடு இருந்த மாதிரியும் இருக்கும். தேர்தல் முடிந்தவுடன் ஏதாவதொரு கூட்டத்தோடு சேர்ந்து ஏதோவோர் ஊருக்குக் கட்டட வேலைக்குக் கிளம்பி விடுவேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் குலத்தொழில் கட்டடம் கட்டுவதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளைகளையாவது பெரியப்பா மகன் போல நாம் கட்டிய கட்டடம் ஒன்றுக்குள் உட்கார்ந்து பார்க்கும் வேலைக்குள் நுழைத்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம். காலம் என்ன திட்டம் வைத்திருக்கிறதோ? 

இது போக இன்னொரு குலத்தொழிலும் இருக்கிறது. சம்பாதித்த பணத்தை ஒழுங்காகச் சேர்த்து வைத்திருக்க முடிந்த எம் உறவினர்கள் சிலர், அதைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் மதுரையிலும் சென்னையிலும் வட்டிக்கு விட்டுப் பிழைக்கிறார்கள். வட்டி என்றால் சாதாரண வட்டியில்லை. கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்று ஸ்பீடு வட்டிகள். மன்னர் பரம்பரை அல்லவா? அதில் ஒருத்தன் சென்னையில் சினிமாக்காரர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறான். எங்கள் குலத்திலேயே பெரும் பணக்காரன் அவந்தான். அதன்படி பார்த்தால் அதுதானே எங்கள் குலத்தொழிலாக இருக்க வேண்டும்! எனக்கும் அவ்வப்போது அந்த ஆசை வரும். என் மாப்பிள்ளை (மாமா மகன்) ஒருத்தன் கூட புரட்டாசிப் பொங்கலுக்கு வந்திருந்த போது சென்னைக்கு அவனோடு சேர்ந்து கொள்ள அழைத்தான். அதில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று, அவன் என்னைவிட மூணு வயசு சின்னவன். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது நாலாம் வகுப்புப் படித்த பயல். நான் ஏழாவது படிக்கும் போதே அவன் ஆறாவது வந்துவிட்ட அவமானம் தாங்க முடியாமல்தான் ஏழாவதிலேயே என் படிப்பை விட்டேன். இன்னொரு வருடம் தங்கினால் சின்னப்பயல் அவன் வந்து நம் தோளில் கையைப் போடும் நிலை வந்து விடும் என்று பயந்து படிப்பை நிறுத்தியவன், அவனிடமே போய்க் கையைக் கட்டி வேலை பார்க்கவா என்ற கர்வம் இடம் கொடுக்கவில்லை. இன்னொன்று, எங்கம்மாதான் எங்கள் வீட்டில் எல்லாம். எங்கம்மா மிகவும் தெளிவானவர். அவர் எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அப்போதே அவர் மாப்பிள்ளையோடு சேர்ந்து போய்விட அழுத்தம் கொடுத்தார். ஆனால் எங்கப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. எங்கப்பா ஒரு ஒண்ணுக்கும் ஆகாத ஈத்தரை. ஊருக்குள் எவனும் அவர் சொல்வதை மதிக்க மாட்டான். ஆனால் நான் மதித்தேன். ஏன்னா அவர் சொன்னதுல ஒரு நியாயம் இருந்தது. “பிச்சை கூட எடுக்கலாம்டா. தப்பில்ல. ஆனா வட்டிக்குக் குடுத்து வாழ்ற வாழ்க்கை மாதிரிப் பாவம் ஒலகத்துலேயே வேற எதுவும் இல்ல”-ன்னு உறுதியாச் சொல்லிட்டார். “அப்பிடிலாம் பாத்தா ஒலகத்துல ஒரு பய பேங்க் நடத்த மாட்டான். சரி, எப்பிடியும் தொலைங்க. ஒங்களப் போலவே ஒங்க மகனும் காலம் பூராப் பிச்சக்காரனாத் திரியணும்னு ஆண்டவன் ஒங்க தலைல எழுதி வச்சிருந்தா யாரு காப்பாத்த முடியும் ஒங்கள? என்ன மாதிரி இன்னொருத்தி வாழ்க்கையும் நாசமாப் போகப் போகுதேன்னுதான் கவலையா இருக்கு. அது எங்கண்ணன் பிள்ளைகளா இருக்கக் கூடாது” என்று வேண்டிக் கொண்டு, அத்தோடு விட்டு விட்டார் அம்மா. அவ்வப்போது அவருக்கு அந்த நினைவு வரும். புலம்புவார். விட்டு விடுவார். 

ஒவ்வொரு முறை வெளியூரில் இருந்து வேலை முடிந்து திரும்பும் போதும், பிறந்த போது எப்படிப் பெரியப்பா பிள்ளைகளை விடச் சிவப்பாக இருந்தேன் என்றும் இப்போது எப்படிப் படிப்படியாகக் கறுத்துப் போய்விட்டேன் என்றும் சொல்லி வருந்துவார். அதைக் கேட்டு அவ்வப்போது எனக்கும் கொஞ்சம் சபலம் தட்டும். மாப்பிள்ளையிடம் போய் வேலைக்குச் சேர்ந்து விடலாமா என்று தோன்றும். நான் நாலாவது படிக்கும் போது ஏழாவது படித்த மச்சான்மார்களே கூட அவனிடம் வேலை பார்த்தார்கள். பின்னர் அவர்களும் அவர்களுக்கென்று தனியாகத் தொழில் தொடங்கிக் கொண்டார்கள். தொழில்? குலத்தொழில்தான். வட்டிக்கு விடும் சேவை. அவர்களுக்கு இல்லாத இந்தக் கொழுப்புதான் என்னை இன்னும் கட்டட வேலை பார்க்க வைக்கிறது. அம்மாவின் புலம்பலை விட, எனக்கே ஒரு முறை அவனைப் போய்ப் பார்த்துக் காலைப் பிடித்து விடலாமா என்று தோன்றியது. அப்போது சென்னையில்தான் வேலை. சிறுசேரி என்ற இடத்தில். ஈ.சி.ஆர். அருகில். பத்துப் பத்து மாடிகளாகக் கட்டிக் குவித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் மாலை – பொழுது சாயும் நேரம், நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டடத்திலேயே ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் இந்திக்காரன் ஒரு பையன் சம்பவ இடத்திலேயே செத்துப் போனான். ஊர் நினைவும் அம்மா நினைவும் வந்தது. அதற்கு முந்தைய வாரம்தான் எங்கள் குலத்தொழில் செய்யும் மாப்பிள்ளை ஒருத்தனைப் பார்த்திருந்தேன். அவர்கள் எல்லோருமே வேளச்சேரி பகுதியில்தான் இருக்கிறார்களாம். ஒரு ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘இவன்லாம் ஓர் ஆளு... நான் பார்த்து ஒழுங்காப் பிடிச்சு உச்சாப் போகத் தெரியாத பய... இவன் பெழைக்கிற பெழைப்பைப் போய் நாங்க பாத்துட்டு வரணுமாக்கும்... எல்லாம் நேரம்!’ என்று விட்டு விட்டேன். ஆனால் இறந்து போன இந்திக்காரன் மீண்டும் அவர்களைப் பற்றியெல்லாம் நினைக்க வைத்து விட்டான். அவனுக்கு இங்கே யாருமே கிடையாது. அவனுக்கு இருக்கிறதெல்லாம் அவனை மாதிரியே வேலை பார்க்கும் அவங்க நாட்டுக்காரங்க மட்டுந்தான். நமக்கு இது நம்ம ஊரு. நம்ம சொந்தக்காரய்ங்க எத்தனையோ பேர் இங்க நல்ல வசதியா இருக்காய்ங்க. அது மட்டுமில்லை. நான் இந்த வேலைக்கு வந்த புதிதில் நிறையத் தமிழ்ப் பையன்கள் இருந்தார்கள். பின்னர் எல்லோருமே விலகிப் போய் ஏதோவொரு கௌரவமான தொழில் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இப்போது முழுக்க முழுக்க இந்திக்காரப் பையன்கள்தான். பாதிச் சம்பளத்துக்கு நாலு ஆள் வேலை பார்க்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவர்களோடு போட்டி போட்டு வேலை பார்க்க முடியுமோ, தெரியவில்லை. அன்று இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. ஊருக்குத் திரும்பி விடலாமா என்றிருந்தது. வேளச்சேரிக்காவது போய் வரலாமா என்று தோன்றியது. அவங்க கூடச் சேர்ந்து தொழில்ல இறங்கலைன்னாக் கூடப் பரவால்ல. சும்மா போய்ப் பார்த்துட்டு வந்தா மனசுக்கு ஒரு நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. ஒரு சில பையன்கள் மட்டும் அன்று இரவெல்லாம் ஒரு மாதிரி இருந்தார்கள். பெரும்பாலான பையன்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டார்கள். “எந்த வேலைலதான் ஆபத்து இல்ல? ஆபத்து இல்லாத வேலை ஒலகத்துலயே இல்லை!” என்றான் ஒருத்தன். “நம்ம வேலைல இதெல்லாம் ரெம்பச் சாதாரணம். நான் வேலைக்கு வந்த புதுசுலல்லாம் வாரவாரம் ஒருத்தன் சாவான். இப்பத்தான் எல்லா வேலையுமே ரெம்பப் பாதுகாப்பாப் பண்றமே! என்ன பயம்?” என்றான் இன்னொருத்தன். ‘இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு பேசிக்கிட்டு இருக்காய்ங்க பாரு’ என்பது போலப் பார்த்து விட்டு நகர்ந்தார்கள் சிலர். ஒரு நிமிடம் நின்று யோசித்தேன். ‘நாம் தைரியசாலிகள் பக்கமா? பயந்தாங்கொள்ளிகள் பக்கமா? தைரியசாலிகள் பக்கம்னா, ஒழுங்காப் படுத்துத் தூங்க வேண்டியதுதான். பயந்தாங்கொள்ளிகள் பக்கம்னா, நாளைக்குக் காலைலயே எழுந்து வேளச்சேரி கிளம்ப வேண்டியதுதான். வேளச்சேரி போனா மாப்பிள்ளையையும் பார்த்துட்டு, அவன் தங்கச்சியையும் பார்த்து வரலாம்’ என்று எண்ணிக் கொண்டே தூங்கிப் போனேன். 

மறுநாள் காலை எழுந்த போது, மன உளைச்சல் குறைந்திருந்தது. போலீஸ்காரர்கள் வந்து சென்றார்கள். இன்ஜினியர்களும் மேனேஜர்களும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எல்லோரும் வழவழவென்று பேசினார்கள். பேசி விட்டுப் போய்விட்டார்கள். வேலை எப்போதும் போல் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மறந்து பழைய படி வாழ்க்கை ஓடத் தொடங்கி விட்டது. பத்துப் பத்து மாடிகளாகப் பன்னிரண்டு கட்டடங்களைக் கட்டிக் குவித்து விட்டு, வேலை முடிந்ததென்று ஊர் திரும்பி விட்டேன்.

அடுத்த பணி பெங்களூரில். பெங்களூரில்தான் பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். பெரியப்பாவும் கூட. வேளச்சேரியில் இருந்த உறவினர்கள் ஒரு மாதிரியான வாழ்க்கை என்றால், பெங்களூரில் இருந்த உறவினர்கள் வேறொரு மாதிரியான வாழ்க்கை வாழ்பவர்கள். அப்பா பொறுப்பாக பெரியப்பா வீட்டு முகவரி எழுதிக் கொடுத்து அனுப்பினார். இங்கே வேலை எலெக்ட்ரானிக் சிட்டியில். இங்கும் அதே போல் பத்துப் பத்து மாடிகளாகக் கட்டிக் குவிக்கும் வேலைதான். ஊரில் கொத்தனாரிடம் வேலை பார்த்த காலத்தில், ஒரேயொரு மாடி வச்சுக் கட்டுற ஒரு சின்ன வீட்டுக்கு ஒரு வருசத்துக்கும் மேல இழுவா இழுத்து, வீடு கட்ட ஆசைப்பட்டவன ஏன்டா இப்பிடியோர் ஆசைப்பட்டோம்னு நெனைக்க வச்சு, பாடாய்ப் படுத்துவோம். இதுல சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொருத்தர்ட்டயும், “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைக் கட்டிப்பார்னு சும்மாவா பெரியவங்க சொல்லியிருக்காங்க”-ன்னு கொத்தனார் ஒரு பழமொழிய வேற அவிழ்த்து விடுவார். இங்க என்னடான்னா, பத்து பத்து மாடிக் கட்டடங்கள்ல அசால்ட்டா மாசம் ஒரு மாடி ஏறுது. இதப் போயிக் கொத்தனாரப் பாத்துச் சொல்லணும்னு நெனைச்சுக்கிட்டே இருந்து நடக்கவே இல்ல. அடுத்த முறை கண்டிப்பாச் செஞ்சிரணும்.

ஞாயிற்றுக் கிழமைதான் வசதியான நாள் என்று முதல் ஞாயிற்றுக் கிழமையே பெரியப்பா வீட்டுக்குக் கிளம்ப முயற்சி செய்தேன். ஏன்னா ரெண்டு வாரம் போச்சுன்னா இங்கேயே நமக்கு நண்பர்கள் செட் ஆகி விடுவார்கள். அப்புறம் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல முடியாது. ஞாயிற்றுக் கிழமை காலையே எழுந்து கிளம்பி விட்டேன். வீடு ஒயிட்ஃபீல்ட் என்ற பகுதியில். எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சரியான தொலைவு. போக ஒரு நாள், வர ஒரு நாள் வேண்டும் போல. ஞாயிற்றுக் கிழமை என்பதால் ட்ராஃபிக் ஃப்ரீயாக இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். இவய்ங்க ஃப்ரீயே இப்பிடின்னா மற்ற நாட்கள்ல எப்பிடி இருக்குமோன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்னர் அதையும் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குக் கன்னடம் தெரியாது. இந்திக்காரய்ங்க கூட வேலை பார்த்ததுல நாலு இந்தி வார்த்தைகள் தெரியும். பெங்களூர்ல தொண்ணூறு சதவீதம் தமிழ்தான் என்று வேறு ஒருத்தன் சொன்னான். அவனுக்குத் தெரிஞ்ச சதவீதக் கணக்கு! அதனால் எல்லா இடத்திலும் எடுத்த உடனேயே தமிழில்தான் பேசுவேன். பெரும்பாலும் தமிழிலேயே பதில் கிடைக்கும். சிலர் நேரடியாகத் தமிழில் பேசுவார்கள். சிலர் தமிழையே ஒரு மாதிரிப் பேசுவார்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், ஆனால் பதில் மட்டும் கன்னடத்தில் சொல்வார்கள். சிலர் குர்ரென்று ஒரு பார்வை பார்த்து விட்டுத் தமிழில் பேசுவார்கள். சிலர் குர்ரென்று பார்ப்பார்கள், ஆனால் கன்னடத்தில் பதில் சொல்வார்கள். அவ்வப்போது சிலர் கோபமாக இந்தியிலும் பதில் சொல்வார்கள். அதைப் பார்த்து நாம் நமக்குத் தெரிந்த நாலு வார்த்தையில் இந்தியில் பேசத் தொடங்கினால் அவர்களும் குர்ரென்று பார்ப்பார்கள். வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்றோம்னு நினைப்பாய்ங்க போல. பின்னர் கொஞ்சம் கொஞ்சம் கன்னடமும் பழகிக்கிட்டேன். வெளியில் போனால் மூஞ்சியைப் பார்த்து யாரிடம் தமிழில் தொடங்குவது, யாரிடம் கன்னடத்தில் தொடங்குவது, யாரிடத்தில் இந்தியில் தொடங்குவது என்ற அவர்களின் சூத்திரமும் பின்னர் புரிந்து விட்டது. பெரும்பாலும் அது சரியாக வேலை செய்யும். சில நேரங்களில் அதுவும் புட்டுக்கும். 

ஒய்ட்ஃபீல்ட் போய் இறங்கி முகவரி கேட்டால், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் போக வேண்டும் என்றார்கள். ஆட்டோவில்தான் போக வேண்டுமாம். சென்னை மாதிரி இங்கே ஷேர் ஆட்டோ வேறு இல்லை. ‘போங்கடா’ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். நாங்க நடக்காத தொலைவா? ஈசியார்ல எங்க கால் படாத இடம் ஓர் அடி கூடக் கிடையாது. சென்னையை விட பெங்களூர் சின்ன ஊர்தான் என்றார்கள். ஆனாலும் பெங்களூரில் சென்னையைவிட ஏதோவொன்று கூடுதலாக இருக்கிறது. ஊரோட குளிரா? வெள்ளக்காரய்ங்க மாதிரி பளபளன்னு திரியுற பிள்ளைகளா? இவைய்ங்க பேசுற ஆங்கிலமா? அது என்னன்னு தெரியல. முகவரியைச் சென்றடைந்த பின்னர்தான் புரிந்தது பெரியப்பாவும் அவர் பிள்ளைகளும் இருப்பது அப்பார்ட்மெண்டில் என்று. நாம பார்க்காத அப்பார்ட்மெண்டா? எத்தனை பத்து மாடிக் கட்டடங்களைக் கட்டிக் குவிச்ச ஆளு நாம? செக்யூரிட்டி இந்திக்காரன் போலத் தெரிந்தது. நமக்குத் தெரிந்த இந்தியிலேயே எடுத்து விட்டேன். ஏதோ நம்பிக்கை இல்லாமல் பார்த்தான். ஆனால் உள்ளே விட்டு விட்டான். உள்ளே போனால் அங்கேயும் ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு செக்யூரிட்டி. பெரியப்பாவின் கட்டடத்துக்குப் போய், அங்குள்ள செக்யூரிட்டியிடமும் நாலு வார்த்தை இந்தி பேச வேண்டியதாயிற்று. இவன் மேலும் நம்பிக்கைக் குறைபாடு கொண்டவனாகத் தெரிந்தான். அங்கேயே உட்காரச் சொல்லிவிட்டு ஃபோனை எடுத்து யாரையோ அழைத்தான். குழப்பத்தோடே அழைப்பைத் துண்டித்தான். அதற்குள் ஒரு பத்து வயதுப் பையன் அந்தப் பக்கம் ஓடி வந்தான். அவனிடம் “யே அங்கிள் ஆப்கா கர்க்குத்தான் வந்திருக்கார்”-னு நமக்குப் புரியுற இந்தியிலேயே நாலு வார்த்தை பேசினான். ‘ஆ, இது பெரியவர் பேரனா? அவரை மாதிரியே இருக்கானே!’ என்று வியந்து பார்த்தேன். பையனுக்குப் பத்து முதல் பன்னிரண்டு வயது இருக்கும். இன்று வரை ஊர்ப்பக்கமே மூஞ்சியைக் காட்டிவிடாமல் பார்த்துக் கொண்டார் பெரியவர். அந்தப் பையனோ அவன் பங்குக்கு ஒரு முறை குர்ரென்று பார்த்து விட்டு இன்னொரு பையன் பின்னால் ஏதோ கத்திக் கொண்டு ஓடி விட்டான். செக்யூரிட்டி, “எட்டாவது மாடி” என்று நினைவூட்டினான். லிஃப்டில் நுழையும் போதுதான் சிந்திக்கிறேன். வீடோ... வேலையிடமோ... எத்தனையோ அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டிக் குவித்திருக்கிறேன். ஆனால் ஒன்று கூட முழுதாகக் கட்டி முடித்துப் பயன்பாட்டின் இருக்கும் போது இது போல நான் நுழைந்து புழங்கியதில்லை. அதுவும் ஒரு கட்டட வேலைக்காரனாக இல்லாமல், விருந்தினராகவோ வேறு ஏதாகவோ. இதுதான் முதல் முறை. அது ஒரு முற்றிலும் வேறுபட்ட உணர்வுதான். அந்த நிமிடத்தில் எனக்கு இன்னோர் ஆசை வந்தது. ‘இது போல நான் வேலை பார்த்துக் கட்டி முடித்த கட்டடம் ஒன்றுக்குள் அது பயன்பாட்டுக்கு வந்தபின் நடமாட வேண்டும்!’. ஆகா, என்னவொரு வேறுபட்ட சிந்தனை. நினைத்துப் பார்க்கவே எவ்வளவு இன்பமாக இருக்கிறது. கொத்தனாரிடம் வேலை பார்த்த காலத்தில் அவர் மூலம் கட்டிய வீடுகளில் பால் காய்ச்சும் போது அழைத்து விருந்து கொடுப்பார்கள், வேட்டி-சட்டை வாங்கிக் கொடுப்பார்கள். அதன் பின்பு கூட சில வீடுகளுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நாம் கல்லும் மண்ணும் குப்பையுமாகப் புழங்கிய அதே இடத்தில் உணவும் படுக்கையும் கேளிக்கையும் என்று வேறொரு கூட்டம் அனுபவிப்பதைப் பார்க்கும் போது அது ஒரு வேறுபட்ட உணர்வாக இருக்கும். அவையெல்லாம் தம்மாத்தூண்டு வீடுகள். ஆனால் இது போலப் பெருநகரங்களில் கட்டிய பெரும் அடுக்கு மாடிக் கட்டடங்களுக்குள் நுழைந்ததே இல்லை. அதையும் பார்த்து விட வேண்டும். அப்போதே வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் சென்னைக்குப் போய் சிறுசேரியில் கட்டிய நம் கட்டடம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டேன்.

எட்டாவது மாடி வந்தது. எட்டாவது மாடியல்ல, பத்தாவது மாடியே பார்த்தவன்தான் நான். வேலை பார்க்கும் போது. ஆனால் குடும்பம், பிள்ளை குட்டிகளோடு வாழும் மனிதர்கள் எப்படி இப்படி எட்டாவது – பத்தாவது மாடியில் எல்லாம் வாழ்கிறார்களோ என்று வியப்பாக இருந்தது. எட்டாவது மாடியில் மட்டும் நான்கு வீடுகள் இருப்பது போல் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஏற்கனவே நமக்கு பாண்டியராஜன் முழி என்று ஊருக்குள் பயமுறுத்துவார்கள். வேலைக்கு வந்த புதிதில் இரண்டு-மூன்று முறை சந்தேகக் கேஸ் என்று போலீஸ் பிடித்திருக்கிறார்கள். இப்போதுதான் அதெல்லாம் குறைந்திருக்கிறது. ஆனாலும் பத்தடிக்கு மேல் பார்க்க நேர்ந்தாலே அந்த பயத்தோடேதான் இப்போதும் பார்க்கிறேன். இருட்டடைந்த மாதிரியான ஒரு மூலையில் பெரியப்பா போல் ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். அவரேதான்! ஏதோ என் வருகைக்காகவே காத்திருந்தது போல் நின்று கொண்டிருந்தார். அருகில் சென்ற போதுதான் புரிந்தது, யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் காத்திருந்திருப்பார் போல. அவ்வளவு சிறப்பான வரவேற்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரித்தார். “வர்றவன் ஃபோன் பண்ணிட்டு வர வேண்டாமாடா?!” என்றார், ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல. அவர் எப்போதும் அப்படித்தான். “சரி, வா வா. உள்ள வா. செருப்ப இங்கயே கழட்டீரு. சாப்டியா? இந்தா இங்க ஒக்காரு” என்றார். வீட்டுக்குள் ஏகப்பட்ட ஆட்கள் இயந்திரம் போல் நடமாடிக் கொண்டிருந்தார்கள். பெரியம்மா வந்து நின்றார்கள். “என்னப்பா, ஒங்கம்மா எப்பிடியிருக்கா? அப்பா? அக்கா வீட்ல?” என்றார்கள். பதில் சொல்லிக்கொண்டே சுவர்களைப் பார்த்தேன். பெரியப்பா மகன் – அண்ணன் ஆளைக் காணவில்லை. வெளியில் எங்கோ போயிருக்கிறான் என்றார்கள். இன்னோர் அண்ணன் பக்கத்தில்தான் இருக்கிறானாம். அண்ணன் மனைவி சிரிக்கவா – வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தாலும் கூட அதை வென்று சிரித்த முகத்தோடு “வாங்க, நல்லா இருக்கீங்களா?” என்றார். வியப்புதான். கல்யாணத்துக்குக் கூடப் போனதில்லை. அப்புறம் எப்படித் தெரியும்? மதுரைப் பொண்ணு. மதுரைக்கெல்லாம் அடிக்கடி வந்து போவதாகச் சொல்வார்கள். ஆனால் அங்கருந்து மூணு மணி நேரம் தள்ளியிருக்கிற ஊருக்கு வர்றதுக்கு அவுகளுக்குப் பிடிக்கல. அடுத்த பல மாதங்கள் பெங்களூரில்தான் இருக்கப் போகிறேன் என்கிற தகவலையும் கொடுத்தாயிற்று. அத்தனை நாட்கள் சென்னையில் இருந்த போதும் ஒரு நாள் கூட வேளச்சேரி போனதில்லை. ஆனால் வந்த முதல் வாரமே இந்த ஆளை வந்து பாக்குறம்னா என்ன காரணம்? பங்காளி. அப்பன் கூடப் பெறந்தவர்னுதான். ஆனா அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ அது நல்ல செய்தியா கெட்ட செய்தியான்னு தெரியல. இரண்டும் இல்லாமலும் இருக்கலாம். எனக்கே கூட அது நமக்குச் சம்பந்தமே இல்லாத இடம் மாதிரி இருந்தது. சின்னப் பிள்ளையா இருக்கப்ப இவரு மகன்கள் ரெண்டு பேருமே (அண்ணன்கள்தான்!) ஊருக்கு வந்தா எங்கூடதான் விளையாடுவாங்க. அப்ப மதுரைல இருந்தாங்க. ஆனாலும் அவைய்ங்களோட நமக்கு செட்டாகாது. அப்பவே அப்பிடின்னா... இப்பச் சொல்லணுமா? கொஞ்ச நேரத்தில் வெளியில் போயிருந்த அண்ணன் வந்தான். அவனும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கமான ஒரு வரவேற்புதான். வேலை எங்கே என்று கேட்டேன். பக்கத்தில்தானாம். நான் எலெக்ட்ரானிக் சிட்டி என்றதும், “அப்பப்ப, அங்கேயும் வருவேன்” என்றான். எனக்கு அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. அப்படியானால் அடிக்கடி சந்தித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டேன். அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி போலத் தெரியவில்லை. அவனுடைய மொபைல் நம்பர் கேட்டு வாங்கிக் கொண்டேன். அதைக் கொடுப்பதற்கு அவனுக்கு ஏதோ சிரமம் இருப்பது போல் தெரிந்தது. அல்லது எனக்கு அப்படிப் பட்டது. ஆனாலும் கொடுத்து விட்டான். தானாடாவிட்டாலும் தன் சதையாடும்னு சும்மாவா சொன்னாய்ங்க! சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டேன். பயந்து பயந்தே சாப்பிட்டேன். சிட்டில எப்பிடிச் சாப்புடுவாய்ங்களோ, நம்ம பாட்டுக்கு பட்டிக்காட்டான் மாதிரிச் சாப்புட்டு, அது வேற அவுகளுக்குச் சங்கடமாயிடக் கூடாது பாருங்க. ஆனா, பெரியவரு மகன் மூத்தவன் அப்பவே என்னவிட ரெண்டு மடங்கு கட்டுவான். அது அப்ப... இப்ப எப்பிடியோ?

அவர்களும் ஆளாளுக்கு ஒரு வேலையில் இறங்கி விட்டது போலப் பட்டது. சாப்பிட்டு முடிந்து எனக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. உள்ளே வரும் போது கீழே பார்த்த பையன் சாப்பிட வந்தான். அவன் பாட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுத் திரும்பக் கத்திக் கொண்டே கிளம்பிப் போய்விட்டான் (என்ன கருமமோ, எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டே திரிகிறான். இதுதான் பெருநகர வளர்ப்பு போல!). அவனும் பேச விரும்பவில்லை. பெரியவர்களும் யாரும் அவனை என்னிடம் பேச வைக்க முயலவில்லை. நானே தொடங்கிச் சில கேள்விகள் கேட்டேன். “தாத்தா பேரு? பாட்டி பேரு? ஒங்க ஊரு?” என்று எனக்கு விடை தெரிந்த கேள்விகளாக மட்டும் கேட்டேன். இரண்டு தாத்தாக்கள், இரண்டு பாட்டிகளின் பெயர்களைச் சொன்னான். நல்ல குடும்பம்தான். ஊர்ப் பெயர் மட்டும் “மதுரை” என்பதோடு நிறுத்திக் கொண்டான். அடப்பாவிப் பயகளா? ஊர்ப் பேரு கூடவா சொல்லிக் குடுக்காம வளக்குறாய்ங்க? இன்னொரு சின்னப் பிள்ளை இருந்தது. பெண் பிள்ளை. அதனிடமும் இதே இரண்டு மூன்று கேள்விகளைக் கேட்டேன். அது பக்கத்தில் கூட வராமல் ஓடிப் போய்விட்டது. “அந்த அண்ணன் வீடு?” என்றேன். எல்லோருமே ஒன்று கூடி, அதற்கு முட்டுக்கட்டை போட்டார்கள். “அவன் ஆள் கிடைப்பதே சிரமம். பாதி நாள்தான் ஊர்லயே இருப்பான். அவர்களுக்கு இருப்பதே ஒரு ஞாயிற்றுக் கிழமை. முன்னப் பின்னச் சொல்லாமக் கொள்ளாமப் போனா நல்லா இருக்காதுல்ல. இன்னொரு முறை பார்க்கலாம்” என்பதுதான் அவர்கள் பேசியதன் சுருக்கம். ‘இதென்னடா கொடுமையா இருக்கு? ஒரேயொரு ஞாயிற்றுக் கிழமைதானாமே!’ என்று வியப்பாக இருந்தது நமக்கு. அது போக, “முன்னப் பின்னச் சொல்லாமக் கொள்ளாமப் போனா நல்லா இருக்காதுல்ல” என்றது அங்கு சென்றதற்கும் சேர்த்துச் சொன்னது மாதிரி இருந்தது. மாதிரி இருந்ததா, அப்படித்தானா என்று தெரியவில்லை. ‘சரி விடுங்க’ என்று எண்ணிக் கொண்டு விடைபெற்றுக் கிளம்பினேன். பெரியப்பா மட்டும் கொஞ்சம் கரிசனத்தோடு கேட்டார் – “திரும்பப் போயிருவியாடா? வழி நெனவிருக்கா? எல்லாரும் பிசியா இருக்காங்க. இல்லைன்னா அண்ணனக் கூட பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடச் சொல்லீருவேன்”. “இதெல்லாம் நமக்கு ஒரு மேட்டரே இல்ல பெரியப்பா. சென்னைல இருக்குறப்ப... ஈசியார் ஏரியால...”-ன்னு நம்ம கதையைச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

திரும்பி வரும்போது குளிர் கூடிவிட்டது. சிந்தனை மட்டும் இம்மனிதர்களின் நகர வாழ்க்கையைச் சுற்றியும் இவர்களின் அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றியும் ஓடிக் கொண்டிருந்தது. இன்று இந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தது போல, கண்டிப்பாக ஒரு நாள் சென்னை சென்று சிறுசேரியில் நாம் கட்டிய கட்டடம் இன்று எப்படியிருக்கிறது, அங்கேயுள்ள செக்யூரிட்டிகள், லிஃப்ட், மனிதர்கள், வாகனங்கள்... எல்லாம் எப்படியிருக்கின்றன என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மட்டும் உறுதியானது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள் இருக்கிறது. அது போல இதற்கும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடே – அந்த நாளைப் பற்றிய முன்னினைவுகளோடே எலெக்ட்ரானிக் சிட்டி வந்து சேர்ந்தேன். ‘பெரியப்பா வீட்டில் நம்மை ஒழுங்காக மதித்தார்களா? அல்லது அவர்களுடைய வாழ்க்கை முறையே இப்படித்தான் மாறிவிட்டதா? இது போலவே மதினி வீட்டு ஆட்கள் வந்திருந்தாலும் நடந்து கொண்டிருந்திருப்பார்களா? நாமும் அவர்களைப் போலப் படித்து - வசதியாக வேலையில் இருந்திருந்தால் வேறு மாதிரி வரவேற்றிருப்பார்களோ?’ என்பது போலப் பல கேள்விகள் மனதுக்குள் ஓடின. ஒரு தாய் மக்களின் உடைமைகள் எல்லாம் இருவருக்கும் சமமாகச் சொந்தம் என்றுதானே ஊரில் இருக்கும் அம்மாக்கள் எப்போதும் எண்ணுகிறார்கள். இது இப்போது அறுபடுகிறது? அவ்வுடைமைகள் தத்தமக்கென்று திருமணம் செய்து கொள்ளும் போதா? அவையெல்லாம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்தாலும் அதை விட முக்கியமாக அந்த அப்பார்ட்மென்ட் பற்றிய நினைவுகளும் ஓடிக்கொண்டிருந்தன.

அதன்பின்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் பெங்களூரில் இருந்தேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட பெரியப்பா வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியதில்லை. ஒரேயொரு முறை மத்தியானம் எலெக்ட்ரானிக் சிட்டியில் வைத்து பெரியண்ணன் அவனுடைய நண்பர்கள் சிலரோடு காரில் போகும் போது பார்த்தேன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்தனர். இந்திக்காரர்கள் அல்லது கன்னடத்துக்காரர்கள் போலத் தெரிந்தது. இருவருக்குமே தமிழ் முகம் இல்லை. நானும் என்னுடைய நண்பர்களோடு இருந்தேன். பெரும்பாலும் இந்திக்காரர்கள்தான். என்னைப் போன்று ஒரு சில தமிழர்கள். ஆனாலும் இரு வேறு விதமான இந்திக்காரர்கள் – தமிழர்கள் அல்லவா? அதனால் விட்டு விட்டேன். அதன் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் கம்பெனிக்குள் போய் ஒரு நாளாவது பார்க்க வேண்டும் என்ற ஓர் ஆசை மட்டும் இருந்தது. அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இதற்கிடையில் பெங்களூரில் கட்டிய கட்டடப் பணி நிறைவுறும் காலம் நெருங்கியது. துவக்கத்தில் எனக்குச் சென்னை அளவு பெங்களூர் பிடிக்கவில்லை. இந்த ஊரின் குளிர், சாப்பாடு, வெளியூர் என்ற உணர்வு என்று எதுவுமே பிடிக்கவில்லை. பின்னர் மெது மெதுவாக பெங்களூர் மிகவும் பிடிக்கத் தொடங்கி விட்டது. பெங்களூரில் கட்டிய கட்டடத்தின் ஒவ்வொரு மூலையையும் என் சொந்த வீடு போலப் பாவித்து வேலை செய்தேன். ஒவ்வொரு கட்டடத்தின் அருகில் செல்லும் போதும், அதை விட்டுச் செல்லும் போதும், இங்கே இது செய்தேன், அங்கே அது செய்தேன் என்று மனதில் பதிந்து வைக்கத் தொடங்கினேன். அந்தக் கட்டங்களோடு பேசத் தொடங்கினேன். “இப்போது இப்படி இருக்கிறீர்கள். எனக்கே எனக்காக இருக்கிறீர்கள். கட்டி முடிக்கப்பட்ட பின் யார் யாருக்கோ சொந்தமாகி விடுவீர்கள். முற்றிலும் மாறி விடுவீர்கள். இங்கே நடமாடும் மனிதர்கள், வாகனங்கள், வைக்கப்படும் பொருட்கள் என்று எல்லாமே மாறி விடும். அப்போதும் உங்களைப் பார்க்க வருவேன். அப்போது உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுமா என்று தெரியவில்லை” என்றெல்லாம் பினாத்துவேன். 

இப்படியே சென்னையில் கட்டிய கட்டடத்தை விட பெங்களூரில் கட்டிய கட்டடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. முடியப் போகும் கடைசிச் சில நாட்களில் அந்தக் கட்டடத்தின் ஒவ்வோர் அடியும் ஒரு நினைவைக் கொடுத்தன. பகலில் படுத்துக் கிடந்த இடம், இரவில் படுத்துக் கிடந்த இடம், சாப்பிட்ட இடம், டீ குடித்த இடம், நண்பர்களோடு சகதியில் விளையாடிய இடம், துணி காயப்போட்ட இடம், ஒன்பதாவது மாடியில் இருந்து உச்சாப் போன மூலை, காலையும் மாலையும் பக்கத்துக் கம்பெனியில் நடமாடும் பசுமைகளைக் கண்டு களித்த மொட்டை மாடி மூலை, மேனேஜரைக் காதோடு அறைய வேண்டும் என்று நினைத்து அடக்கிக் கொண்ட குட்டைக் கட்டடத்தின் இரண்டாம் மாடி... என்று எண்ணிலடங்காத நினைவுகள். துவங்கியபோது வெறும் பொட்டலாக இருந்த இடம், இப்போது கட்டி முடிக்கப் பட்ட அழகுக் கட்டடங்களாக மாறியிருந்தன. வேலையும் முடிந்து ஊர் திரும்பினேன். சென்னையும் சிறுசேரியும் மனதில் இருந்து போயே போய்விட்டது. அடுத்த வேலையும் பெங்களூரிலேயே கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

ஆனால் விதி என்னை ஹைதராபாத் அழைத்துச் சென்றது இம்முறை. பெங்களூர் வழியேதான் போனேன். பேருந்து காலை எலெக்ட்ரானிக் சிட்டி கடந்த போது, நாங்கள் கட்டிய கட்டடங்கள் தெரியாது என்று தெரிந்த போதும் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன். ஹைதராபாத்தில் ஒரு வருடம் இருந்தேன். அங்கேயும் பத்துப் பத்து மாடிகளாகக் கட்டிக் குவிக்கும் வேலைதான். அங்கேயும் ஏகப்பட்ட நினைவுகள். ஆனாலும் இந்த இடத்தைப் பார்க்க வர வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. இந்தப் பக்கம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் தோன்றியது. திரும்பி வரும் போது பெங்களூரில் இறங்கி, எலெக்ட்ரானிக் சிட்டி போய் அந்தக் கட்டடங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். விதி இம்முறை சென்னை வழியே அழைத்துச் சென்றது. ஆனாலும் சிறுசேரி சென்று வர வேண்டும் என்று தோன்றவில்லை. சென்னைக் காதலிகளை விட பெங்களூர்க் காதலிகளே முக்கியமாகிப் போயிருந்தார்கள். ஊர் திரும்பியபின் பெங்களூர் சென்று வர வேண்டும் என்று அடிக்கடித் தோன்றும். ஆனால் அதற்கான நேரம் வாய்க்கவே இல்லை. 

பக்கத்து ஊர்ப் பையன்கள் சிலர் சிங்கப்பூர் சென்று நன்றாகச் சம்பாதித்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர்களைப் போய்ப் பார்த்தேன். அவர்களை வைத்து, திருச்சியில் ஒரு தஞ்சாவூர்க்காரரைப் பிடித்துப் பணம் கட்டி, சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் சென்று பணி புரிந்தது நல்ல அனுபவம். இங்கே கிடைக்காத பல நல்ல அனுபவங்கள் அங்கே கிடைத்தன. வாழ்க்கை மீது நம்பிக்கை வந்திருந்தது. அந்த நம்பிக்கையோடு நம்பிக்கையாக ஊர் திரும்பியதும் பெங்களூர் சென்று காதலிகளைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்ற ஆவலும் கூடிக் கொண்டே வந்தது. சிங்கப்பூரில் இரண்டு வருடங்கள் இருந்தேன். பொங்கல் நேரத்தில் ஒரு மாத விடுமுறை. ஊர் திரும்பினேன். கையிலும் பணம் இருந்தது. ஓரிரு நாட்கள் கழித்து விட்டு, ஒரு மாலைப் பொழுதில், பெங்களூர் கிளம்பினேன். 

அதிகாலை எலெக்ட்ரானிக் சிட்டி வந்து இறங்கினேன். அங்கிருந்து ஓர் ஒன்றரைக் கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். நல்ல குளிர். சென்னையில் ஈசியார் போலவே இங்கிருக்கும் சாலையும் ஒவ்வோர் அடியும் என் கால் பட்டவை. இங்கே அதிகாலை, மதியம், மாலை, நள்ளிரவு என்று எல்லா நேரங்களிலும் நடமாடி இருக்கிறேன். இடம் நிறையவே மாறியிருக்கிறது. நானும் ஓரளவு மாறியிருக்கிறேன். கற்றிருந்த நாலு கன்னட வார்த்தைகளை மீண்டும் அசை போட்டு நினைவு படுத்திக் கொண்டேன். என் கட்டடங்களோடு பேசக் கன்னடம் தேவையில்லை. தமிழ் போதும். இங்கிருக்கும் செக்யூரிட்டிகளும் இந்திக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் இந்தியில் தெரிந்த நாலு வார்த்தைகளையும் அசை போட்டு நினைவுபடுத்திக் கொண்டேன். இவ்வளவு பெரிய கம்பெனிக்குள் அப்படியெல்லாம் உள்ளே விட்டு விடுவார்களா என்ன? ஆனாலும் ஒரு நம்பிக்கை. விளக்கிச் சொல்லுவோம்; சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறேன் என்பதையும் எடுத்துச் சொல்வோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே கட்டடங்களை நெருங்கி விட்டேன். வியப்பூட்டும் அளவுக்கு மாறியிருந்தன. ஒளி வெள்ளம் பல மடங்கு கூடியிருந்தது. அப்போதும் ஒரு சில ஆண்களும் பெண்களும் நடமாடிக் கொண்டிருந்தனர். நைட் ட்யூட்டியில் வேலை பார்ப்பவர்களாக இருக்குமோ? நிறைய வெள்ளை வெள்ளை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. உடம்புக்குள் நடுக்கம் கொடுக்கத் தொடங்கியது. என்னடா இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது?! “யாரோ ஒருத்தன் கட்டடம் கட்டியவனாம். அவன் கட்டிய கட்டடங்களைப் பார்க்க வேண்டுமாம்” என்று செக்யூரிட்டிகள் தொலைபேசியில் பேசிக் கொள்வது போன்ற காட்சி கண்ணுக்குள் வந்து போனது. இவ்வளவு தொலைவு வந்தாயிற்று. இனி சாண் – முழமெல்லாம் பார்க்க முடியுமா? 

செக்யூரிட்டியிடம் போய்ச் செருமினேன். எதிர்பார்த்தது போலவே “க்யா?” என்றான். எனக்குத் தெரிந்த இந்தியில் என் விண்ணப்பத்தை விளக்கினேன். அவன் ஒரு விதமாகப் பார்த்தான். பார்த்து விட்டு அவனுக்குத் தெரிந்த இந்தியில் ஏதோ சொன்னான். “ஜா... ஜா...” என்பது மட்டுமே புரிந்தது. அடங்கொக்கமக்கா... “நான் கட்டிய கட்டடங்களடா இவை! இங்கிருக்கும் ஒவ்வோர் அடி நிலமும் என் கால் பட்டவை; இங்குள்ள ஒவ்வொரு கட்டடத்திலும், ஒவ்வொரு மாடியிலும், ஒவ்வொரு மூலையிலும் எனக்கொரு நினைவு இருக்கிறது...” என்று இந்தியிலும் தமிழிலும் கலந்து உளறத் தொடங்கினேன். ஒவ்வொரு கதையாகத் தமிழிலேயே சொல்லத் தொடங்கியிருந்தேன். அதற்குள் நான்கைந்து செக்யூரிட்டிகள் கூடியிருந்தனர். உள்ளே போய் வந்து கொண்டிருக்கும் சில ஆண்களும் பெண்களும் கூட ஒரு விதமாகப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார்கள். எனக்கு ஒரு மாதிரியாக வந்தது. அப்படியே சோர்ந்து அருகில் இருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். 

என் காலத்தில் அந்த மரம் இருக்கவில்லை. ஆனால் அந்த இடத்திலும் கூட எனக்கொரு நினைவு இருக்கிறது. வேலை தொடங்கும் முன் அந்த இடத்தில் ஒரு சிறிய பாறை இருந்தது. அதற்கருகில் எந்நேரமும் ஒரு கறுப்பு நாய் படுத்துக் கிடக்கும். நாங்கள் வந்திறங்கியதும் முதல் வேலையாக அந்த நாயை அடித்து விரட்டினோம். ‘விரட்டினோம்’ என்று சொல்ல முடியாது. ‘விரட்டினார்கள்’. நான் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து நான் துடிக்கவும் இல்லை; தடுக்கவும் இல்லை. அதனால் நானும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தன் என்ற முறையில் ‘விரட்டினோம்’ என்று சொன்னாலும் சரிதான். அந்தப் பாறையையும் நகர்த்தி வேறோர் இடத்தில் போட்டோம். அதே இடம்.

*நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பிறந்த நாளில் எழுத உட்கார்ந்து, நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த இந்தக் கதையை ஒரே அமர்வில் எழுதியும் முடித்து விட்டேன். அடுத்த பிறந்த நாளுக்குள் நிறைய எழுத ஆசை. பார்க்கலாம்.

சனி, செப்டம்பர் 30, 2017

நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜீவ கரிகாலன் என்ற காளிதாசனும் நானும் ஒருவரை ஒருவர் கண்டெடுத்தோம். ஆனால் எங்கள் உறவு கிட்டத்தட்ட எண்பதாண்டுப் பழமை (!) வாய்ந்தது. ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. சாதி, மதம், மொழி, இனம், நாடு, ஊர் என்று ஏதோவொன்றின் மீது ஏற்படும் கிறுக்கில் இருந்து நம் எவருமே தப்பியதில்லை என்றே நினைக்கிறேன். அப்படியான ஒரு கிறுக்கு சொல்லி வைத்தாற்போல் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருக்குமே எங்கள் ஊரின் மீது உண்டு. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே வருகிறோம். எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே இணையத்தில் தேடிய முதற் சில சொற்களில் ஒன்று எங்கள் ஊரின் பெயராகத்தான் இருக்கும். நானும் இன்றுவரை அதைப் பல முறை செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று புதிதாய்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஓர் ஊர் அது. அப்படியான ஒரு தேடலின் போது நான் எங்கள் ஊரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்றைக் கண்டு தொடர்பு எல்லைக்குள் வந்தார் காளிதாசன். காளிதாசன் மட்டுமல்ல, அது போலப் பல பழைய உறவுகளை மீட்டுக் கொடுத்த கட்டுரை அது. அப்போது நான் சிங்கப்பூரில் இருந்தேன். இருவருக்குமே அம்புட்டு மகிழ்ச்சி. அந்த நாள் முழுக்கப் பெரும் மகிழ்ச்சியோடே கழிந்தது. இன்று காலை எழுந்த போது, சரியாக இன்றோடு ஐந்தாண்டுகள் ஆகிறது என்று முகநூல் நினைவுபடுத்தியது. இது பற்றிய உணர்வே இல்லாமல்தான் இன்றைய நாள் முழுக்கவும் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கே செலவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு நேற்றிரவு தூங்கச் சென்றேன். ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே பேசும் நாங்கள் நேற்றுப் பேசியதும் கூட அப்படியே நடந்திருந்தது. ஏதோ பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருக்கிறது இப்போது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் திடீரென்று அழைத்து நான் ஏதோவொரு கேள்வி கேட்க (அதுவொரு முக்கியமான கேள்வி என்பதைப் பின்பொரு நாளில் பேசுவோம்), அதற்குப் பதிலாக இந்த நூலைப் படிக்குமாறு அது பற்றிய இணைப்பு ஒன்றை அனுப்பினார். உடனடியாக அந்த நூலை வாங்கி மூன்றே நாட்களில் தூக்கம் கெடுத்துப் படித்து முடித்து விட்டேன். அந்த அனுபவம் பற்றிய கட்டுரையே ஐந்தாம் ஆண்டு விழாக் கொண்டாடும் இந்த ‘எண்பதாண்டுப் பழைய’ நட்புக்குப் படையல்.

அவர் படிக்கச் சொன்ன நூலின் பெயர் – “Everybody loves a good drought” by P.Sainath. தமிழில் “நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது” என்று வைத்துக் கொள்ளலாம். அதென்ன நல்ல வறட்சி? அதே கேள்விதான் எனக்கும். நூல் வீடு வந்து சேர்வதற்கு முன்பே – நூலைப் பற்றிய அறிமுகம் படித்த போதே - ஒருவிதக் கிறக்கம் ஏற்பட்டது. அதெப்படி ஒருவனிடம் முதல் முறையாக ஒரு நூலைப் படிக்கச் சொல்லும் போதே இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்டான் இந்தக் காளிதாசன் என்று மண்டை சுற்றியது. இதை விடச் சிறந்த வேறொரு நூலை எனக்குப் பரிந்துரைத்திருக்க முடியுமா என்றே தெரியவில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த நூலின் களம், எங்கள் ஊரும் ஊர் சார்ந்த பகுதிகளும் போல இந்தியாவெங்கும் இருக்கும் எட்டு மாவட்டங்கள். அதில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் என்பது கூடுதல் ஈர்ப்பு. எங்கள் ஊர் இருப்பதென்னவோ தூத்துக்குடி மாவட்டம் என்றாலும் பண்பாட்டில், பழக்கவழக்கத்தில், மொழியில் இராமநாதபுரம் மாவட்டத்துக்கே பக்கம். அது மட்டுமில்லை. அதுவும் குறிப்பாக எங்கள் முன்னோர்கள் அனைவரும் பல தலைமுறைகள் முன்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்து இங்கே குடியேறியவர்கள் என்பது எங்கள் வீடுகளில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் கதை என்பதாலும், இந்த நூல் அதைப் பற்றியே மிக நுட்பமாகப் பேசுகிறது என்பதாலும், இந்த வாசிப்பு இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லும் அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் அனுபவம்.

2005 என்று நினைக்கிறேன். ஏதோவொரு கட்டுரையில் தமிழ்நாட்டின் மிகவும் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் பற்றி ஒரு தகவலைப் படித்து விட்டு அதை உடனடியாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. தகவல் – தமிழ்நாட்டின் மிக முன்னேறிய மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம், வட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சி வட்டம்; தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முதுகுளத்தூர் வட்டம். அந்தத் தகவலுக்குள் நம்மைப் பற்றி ஏதோ இருப்பது போலவும் அதை உடனடியாக நம்மவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. இப்போது போல் முகநூல் அவ்வளவு பிரபலம் இல்லை அப்போது. இப்போது முகநூல் போல அப்போது மின்னஞ்சல். நகைச்சுவைகள், துணுக்குகள்,  பிரச்சாரங்கள்... எல்லாமே மின்னஞ்சலிலேயே பகிரப்படும் (ஆனாலும் இந்த அளவுக்கு இல்லையப்பா! கூலிக்கு மாரடிப்பவர்கள், குண்டக்க மண்டக்கப் பொய் சொல்பவர்கள் எல்லாம் ரெம்பவே கூடி விட்டனர் இப்போது!). உடனடியாக என் கல்லூரி நண்பர்கள் மட்டும் இருக்கும் யாஹூ மின்னஞ்சல் குழுவுக்கு அதை அனுப்பி வைக்கிறேன். அதுவொரு தவறான அவையில் பகிரப்பட்ட பயனற்ற தகவல் என்பதை உடனடியாக உணர்கிறேன். காரணம், என் கல்லூரி நண்பர்கள் எவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தவரோ இராமநாதபுரம் மாவட்டத்தவரோ பொள்ளாச்சி வட்டத்தவரோ முதுகுளத்தூர் வட்டத்தவரோ அல்லர். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், எங்கள் இனக்குழுவின் தாய்க்கிராமம் முதுகுளத்தூர் வட்டத்தில்தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; என் தாய்வழி குலதெய்வம் கூட முதுகுளத்தூர் வட்டத்தில்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது, அங்கே வெயிலில் சுருண்டு கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, ‘இந்த வெயிலில் சுருண்டு கொண்டிருந்திருக்க வேண்டியவர்கள்தாம் நாமும்; அன்று ஒரேயொரு மனிதனோ குடும்பமோ இங்கிருந்து வெளியேறி நம் எல்லோருக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வழங்கி விட்டார்கள்’ என்று எண்ணிக் கொள்வோம். அதனால் அந்தத் தகவல் எனக்கு முக்கியமாகப் பட்டது. எனக்கு முக்கியமெனப் படுகிற தகவல் எல்லாம் என்னைச் சுற்றியிருக்கிற எல்லோருக்கும் முக்கியமாகப் பட வேண்டியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை புரிந்து கொண்டு, அந்தத் தகவலை மட்டும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்கிறேன். அது இன்று வரை அவ்வப்போது மனக் கண்மாயில் கரையொதுங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

பெங்களூர் வந்த புதிதில் அடிக்கடி இது பற்றிச் சிந்திப்பேன். நம்மைச் சுற்றியிருக்கும் தமிழ் நண்பர்களை ஒரு பார்வை பார்த்தால், எல்லோருமே கொங்கு நாட்டு – சோழ நாட்டு – பல்லவ நாட்டு மைந்தர்கள்தான் இருப்பர். மருந்துக்குக் கூட ஒரு மதுரைக்காரனோ திருநெல்வேலிக்காரனோ இருக்க மாட்டான். இதனால்தான் அந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியோ என்று எண்ணிக் கொள்வேன். இப்போது நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது என்பது வேறு கதை. காவிரி ஓடும் கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் வளம் கொழிக்கும் பூமி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் வட மாவட்டங்களில் பயணிக்கும் போதெல்லாம் அவை இராமநாதபுரத்தை விடவும் பின்தங்கி இருப்பது போலவே படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிலையைவிட இராமநாதபுரம் பரவாயில்லையே என்றுதான் தோன்றும். ஆனால் வட மாவட்டங்களில் உள்ளவர்கள் பஞ்சம் பிழைக்க சென்னைக்கோ பெங்களூருக்கோ வந்து அமைத்துக் கொள்கிற மாதிரியான வாழ்க்கையை இராமநாதபுரத்துக்காரர்கள் மதுரையில் வந்து அமைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. மதுரையே ஒரு பெரிய இராமநாதபுரம்தானே. ஆக, வெளியேறி வந்து விட்ட அந்த மண்ணின் மைந்தர்கள் வேறு, எஞ்சியிருக்கும் மண் வேறு என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. சரி போகட்டும். கதைக்கு வருவோம்.

நூலாசிரியர் பி.சாய்நாத் மும்பைக்காரர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர் (இப்போதே இதைப் படிப்பதை நிறுத்தி விட நினைப்பவர்கள் நிறுத்தி விடலாம்!). டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழின் உதவித்தொகை பெற்று, இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டுகளாக அவை ஒவ்வொன்றுக்கும் போய், அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களோடே பல நாட்கள் இருந்து, இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். இது எளிய பணி அல்ல. இன்று நடக்கிற பல ஆய்வுகள், கூகுளில் தேடித் பார்த்துத் தெரிந்து கொண்டு, தனக்கேற்றபடி தொகுத்து வழங்கப் படும் தகவல்களுக்கு வெளியே போவதில்லை. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குள் போய்ச் செய்ய வேண்டிய ஆய்வுகளை, எளிதில் அடைய முடிகிற – நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிற சில ஊர்களில் மட்டும் நாலு பேரைச் சந்தித்து முடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். தான் ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர் என்ற போதும், இந்திய மொழி இதழ்களை விட ஆங்கில மொழி இதழ்களின் தரம் பல வகைகளில் மேலானதாக இருக்கின்றது என்று நம்பினாலும், இது போன்ற ஆய்வுகளில் ஆங்கில இதழ்கள் கள நிலவரத்தை விட்டு நெடுந்தொலைவு தள்ளி நின்றே கருத்துச் சொல்கின்றன, அதனாலேயே உண்மைக்குப் புறம்பாகவும் நிறையப் பேசி விடுகின்றன என்பதையும், உள்ளூர் மொழி இதழ்களே உண்மைக்கு அருகில் இருப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார்.

இப்படியான தன் ஆய்வைக் கட்டுரைகளாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் முதலில் வெளியிட்டிருக்கிறார். சில கட்டுரைகள், ஒரு பத்திரிகையாளரோ அவர் எழுதும் கட்டுரைகளோ என்ன சாதித்து விட முடியும் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அதிகாரத்தின் நாற்காலிகளை உடைத்திருக்கின்றன. நாம் வில்லன்களாகவே கேள்விப்பட்டுப் பழகிவிட்ட சில தலைவர்கள் கூட எப்படிச் சில வேளைகளில் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. சில பிரச்சனைகளை அவர்கள் அரசியல் நோக்கோடு அணுகி எப்படிக் கேடு செய்கிறார்கள் என்பதும் வருகிறது. எப்போதும் மக்களோடு நிற்கிற நாயகர்கள் எவரும் அரசியல் அதிகாரத்துக்கு அருகில்கூடச் செல்வதில்லை என்பதும், அப்படித் தப்பித் தவறி அதிகாரத்தைச் சுவைத்து விடுகிற சிலர், பின்னர் எப்படி அதிகாரம் ஒன்றையே வாழ்வின் நோக்கமாக்கி மாறத் தொடங்கி விடுகிறார்கள் என்பதும் கூட ஒரு சில இடங்களில் வருகிறது.

பின்னர் இந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்ட போது, பெருமளவில் வரவேற்பையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இதெல்லாம் நடந்து இருபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த ஆய்வு, இந்தியப் பொருளியல் தரை தட்டிய தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இந்தியாவில் தாராளமயக் கதவுகள் திறந்து விடப் பட்ட காலத்தோடு உடன் பயணிக்கிறது. அதனால் பல பிரச்சனைகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியவில்லை. மேலும் மோசமடைந்தும் இருக்கலாம். நாம் நம்ப விரும்புவது போல ஒரு வேளை தாராளமயம் அவற்றையெல்லாம் சரியும் செய்திருக்கலாம். கடந்த இருபது ஆண்டுகளில் உங்களுக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. அது எல்லோருக்கும் நடந்திருக்கிறதா என்றால், அது தெரியவில்லை. நீங்களும் நானும் மட்டும்தான் இந்தியா என்றுதான் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றஞ்சாட்டுபவர்களுக்குச் சரியான பதில் சொல்லும் பொருட்டாவது மீள் பார்வைக்கு உட்படுத்தப் பட வேண்டிய முக்கியமானதோர் ஆய்வு இது. அதுவே தாராளமயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் இருக்கும். உங்களுக்கும் எனக்கும் போலவே இந்த எட்டு மாவட்டத்து மக்களுக்கும் பசியும் பட்டினியும் வறட்சியும் நீங்கியிருந்தால் அது தாராளமயத்தின் வெற்றியின்றி வேறில்லை. ஒரு வேளை அவர்களுடைய வாழ்க்கை மேலும் சீரழிந்து போயிருந்தால், அவர்களுடைய உணவைப் பிடுங்கித் தின்ற பாவம் நம்மைச் சும்மா விடாது என்ற மன உளைச்சலோடே நமக்கான தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.

முதலில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்கள் எவை என்ற பட்டியலைப் பார்த்தாலே அதில் நிறையப் பேச இருக்கின்றன. காலம் காலமாகவே இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்கள் என்றால் BIMARU என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள். பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களே அவை. இவர் என்னவென்றால் பீகாரில் இரண்டு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்கள் என்று தொடங்கி ஒரிசாவில் இரண்டு மாவட்டங்கள் (அதில் ஒன்று ஆந்திரப் பிரதேச எல்லையில் இருப்பதால் ஆந்திரப் பிரதேச மாவட்டம் ஒன்றும் துணை நடிகராக உள்ளே வருகிறது), தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் என்று நம்மைக் குழப்பி விட்டிருக்கிறார். அப்படியானால் இராஜஸ்தானும் உத்திரப் பிரதேசமும் முன்னேறி விட்டனவா? எல்லோரும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று என்று சொல்வது டுபுக்கா? இப்படிப் பல கேள்விகள் வரலாம். அதற்கான விடை சிறிதளவு உற்றுக் கவனித்தாலே புரிந்து விடும். BIMARU என்கிற பட்டியல் மாநிலங்களுக்கானது. இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மாவட்ட வாரியானது. இராஜஸ்தானும் உத்திரப் பிரதேசமும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மட்டும் என்றில்லாது மொத்த மாநிலமும் சீரான சீரழிவைக் கொண்டிருப்பதால் இந்தப் பட்டியலில் இருந்து தப்பியிருக்கலாம். அது போலவே, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான - மொத்தத் தென்னிந்தியாவுக்கும் முன்னணி மாநிலமான - தமிழ்நாடு, சில மாவட்டங்களில் மட்டும் பின்தங்கியிருக்கலாம். இருப்பினும், இவ்வளவு முன்னேறியிருக்கும் ஒரு மாநிலம், இப்படி மொத்த நாட்டிலும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களின் பட்டியலில் தன்னுடைய இரண்டு மாவட்டங்களும் இடம் பெற்றிருப்பதைப் பெரும் அவமானமாகக் கருத வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. தென்னிந்தியாவின் வேறு எந்த மாநிலமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது அதை மேலும் சிக்கலாக்குகிறது. அதற்கான உரிய பணிகளை உடனடியாகச் செய்து சரி செய்ய வேண்டும். ஏற்கனவே இது சரியாகியும் இருக்கலாம். தொண்ணூறுகளின் துவக்கத்தில் எழுதிய கட்டுரைகளை தொண்ணூறுகளின் நடுவில் நூலாக வெளியிடும் போதே “இதே எட்டு மாவட்டங்கள்தாம் இப்போதும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கடைசி எட்டு மாவட்டங்கள் என்று சொல்ல முடியாது” என்றிருக்கிறார் ஆசிரியர். இரண்டு – மூன்று ஆண்டுகளிலேயே அவ்வளவு மாறியிருக்கலாம் என்றால், இருபது ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கலாம். சில மாறாமலும் இருக்கலாம். பஞ்சத்து ஆண்டியும் இருக்கிறார்கள்; பரம்பரை ஆண்டியும் இருக்கிறார்கள் அல்லவா? யார் யார் எது எது என்றுதான் தெரியவில்லை.

சரி, அப்படித் தமிழ்நாட்டின் மானத்தைக் கொடி கட்டிப் பறக்க விடும் அந்த இரு மாவட்டங்கள்தாம் எவை?

பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் பாண்டிய நாட்டு இராமநாதபுரமும் புதுக்கோட்டையுமே அவை. இதில் கொடுமை என்னவென்றால் புதுக்கோட்டையை ஒட்டியிருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்தின் வளமான மாவட்டங்களில் ஒன்று. அண்ணாந்து பார்க்கின்ற மாளிகையும் அருகினில் ஓலைக் குடிசையும் எப்போதுமே பிரிக்க முடியாதவையா என்ன?

“இராமநாதபுரம் சரி, புதுக்கோட்டையுமா???” என்ற அதே வியப்புதான் எனக்கும். இதில் வேறு பல காரணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது இன்னும் நன்றாகப் புரியும். இந்த எட்டு மாவட்டங்களுக்கும் என்று சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. வறட்சிக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதே வேளையில் இந்த எட்டு மாவட்டங்களுமே இந்தியாவிலேயே குறைவான மழைப் பொழிவு அல்லது நீர்வரத்து கொண்ட மாவட்டங்களா என்றால் இல்லை. இந்தியாவிலேயே குறைவான மழைப் பொழிவு கொண்ட மாவட்டங்களாக இருக்கின்றன தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும். இயற்கையே நமக்கு எதிராக இருக்கிறது. அதையும் மீறி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்டங்களில் அற்புதமான நீர் மேலாண்மைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். எடுத்துக்காட்டுக்கு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் எப்போது கட்டப்பட்டது என்ற தகவலே கிடைக்கவில்லை; அவ்வளவு பழைமையானது; குறைந்த பட்சம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்கிறார். அது போல எண்ணிலடங்காத கண்மாய்கள் இருக்கின்றன இம்மாவட்டம் முழுவதும். ஆனால் மற்ற ஆறு மாவட்டங்களில் அதுவல்ல பிரச்சனை. நல்ல மழைப் பொழிவு இருந்தும், நீர் வரத்து இருந்தும் கூட முறையற்ற நீர் மேலாண்மையும் வேறு பல பிரச்சனைகளும் சேர்ந்து அங்கிருக்கும் எளிய மக்களைக் கொல்கின்றன. அதற்கு இயற்கை பொறுப்பல்ல. முழுக்க முழுக்க மனிதப் பேராசையும் சுரண்டலும் பொறுப்பின்மையும் விழிப்புணர்வின்மையும் மேலும் பல குறைபாடுகளுமே அவர்களை நாசம் செய்கின்றன. இயற்கை அல்ல. அது மட்டுமில்லை. வறட்சியின் போது மற்ற ஆறு மாவட்டங்களில் படும் அளவுக்கு இவ்விரு மாவட்டங்களில் உள்ள மக்கள் துன்பப் படுவதில்லை; உயிரிழப்பில்லை. அவர்களை விட எளிதில் சமாளித்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் இங்குள்ள மக்களின் கல்வியறிவு, விழிப்புணர்வு, அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சி என்று சொல்கிறார். இது நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கிறது. தமிழ்நாடு எப்போதுமே அரசியல் ரீதியாகவும் கல்வியறிவிலும் விழிப்புணர்விலும் முன்னணியில்தான் உள்ளது. இதில் புரட்டிப் பேசும் வேலை எப்போது தொடங்குகிறது என்றால், தமிழ் தேசியம், திராவிடம், இந்துத்துவம் என்று ஏதோவொரு தன் அரசியல் விருப்பத்தை விற்க வேண்டிய நிலை வரும் போதுதான், கண்மூடித்தனமாக “ஐயையோ, தமிழ்நாடு இவர்களால் நாசமாப் போச்சே! அவர்களால் நாசமாப் போச்சே!!” என்று கூக்குரல் எழுப்ப வேண்டியதாகிறது. அதை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் (யாராக வேண்டுமானாலும்), ‘இது என் நிலம்; இங்கு நடந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நானும் என் முன்னோரும் பொறுப்பு’ என்ற புள்ளியில் நின்று பார்த்தீர்களானால், இதில் இரு வேறு விதமான கருத்துகள் இருக்கவே முடியாது - தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லை. தென்னிந்தியாவே நூறாண்டுகள் வட இந்தியாவை விட முன்னால்தான் இருக்கிறது. பொருளியல் வளர்ச்சியானாலும் சரி, மற்ற எந்த வளர்ச்சியானாலும் சரி, “இன்றைய இந்தியா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பா போலத்தான் இருக்கிறது” என்று சொல்லும் எவரிடமும், “தென்னிந்தியா?” என்று கேட்டால், “ஒரு நூற்றாண்டு” என்று இறங்கி வந்து விடுகிறார்கள். இன்று பொருளியல் – சமூகவியல் பேசும் எவருமே சொல்வது இதுதான் – “தென்னிந்தியாவையோ, தமிழ்நாட்டையோ, கேரளத்தையோ தனியாக எடுத்துப் பார்த்தால், அவற்றின் வளர்ச்சி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்கின்றன” என்பதுதான். இதை நாம் ஒவ்வொருவரும் நம் பிரச்சாரத்துக்கு எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முற்றிலும் வேறுபட்ட பிரச்சனை. இதன் பொருள் இங்கே ஆண்டவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்பதோ இதைவிட நல்லாட்சி கொடுத்துவிடவே முடியாது என்பதோவும் அல்ல. இதைவிட யோக்கியர்களோ இதைவிட நல்லாட்சியோ கிடைத்திருந்தால் நாம் இதைவிட வளர்ந்திருக்கலாம். ஒரு வேளை ஒட்டுமொத்த ஐரோப்பாவுடனோ மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனோ ஒப்பிடும் அளவுக்கு நல்வாழ்வு வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. இந்த நூலும் அதை உறுதி செய்கிறது. வட இந்திய மாவட்டங்கள் தென்னிந்தியாவைவிட நூறாண்டுகள் பின்தங்கி இருப்பதாக ஆசிரியர் வெளிப்படையாகவே சொல்கிறார்.

பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டுவிட்டுப் போகும் சராசரிப் பத்திரிகையாளராக இல்லாமல், சில பிரச்சனைகள் அவர் கண் முன்பே எப்படிச் சிறப்பாகக் கையாளப் பட்டன என்றும் வேறு என்ன விதமான தீர்வுகளை அணுகலாம் என்றும் கூட நூலின் பிற்பகுதியில் விளக்குகிறார். அதில் முக்கியமாக வருவது, தமிழகத்தில் அறிவொளி இயக்கம் இங்கு எத்தகைய ஒரு பெரும் புரட்சியைச் செய்தது என்பது. வறட்சிக்கும் நீருக்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ அது போலவே வறட்சிக்கும் கல்விக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம் நம் மக்கள் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவம். இதைக் கண் முன்னால் கண்ட தலைமுறை நாம். முக்கியமாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கம் நிகழ்த்திய சமூக மாற்றமும், வேறு சில பணிகளும் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப் பட்டால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சாத்தியப்பட்ட இது போன்ற மாற்றங்கள் மற்ற மாநிலங்களில் முயன்றே பார்க்கப்படாமல் போனதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதைத்தான் நாம் சிந்தித்து நமக்கேற்ற படி முடிவு செய்து கொள்ள வேண்டும்! நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டிருக்கும் தகவல்களின் படி (ஆய்வுக்கு முந்தைய – அறிவொளி இயக்கத்துக்கு முந்தைய தகவல் படியே), தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும் கல்வியறிவில் மற்ற ஆறு மாவட்டங்களோடு ஒப்பிடக் கூட முடியாத அளவு முன்னணியிலேயே இருந்தன. அறிவொளி இயக்கத்துக்குப் பின் புதுக்கோட்டை மாவட்டம்தான் கேரளத்துக்கு வெளியே நூறு விழுக்காடு எழுத்தறிவு அடைந்த முதல் இந்திய மாவட்டம் என்பதும் கூடுதல் தகவல். அப்படியான ஒரு மாவட்டம் இந்தியாவிலேயே பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதுதான் பெருங்கோடுமையே.

பள்ளிக் காலத்தில் சீலா ராணி சுன்கத் என்றொரு பெயர் அடிக்கடி செய்திகளில் அடிபடும். அந்தப் பெயர் இந்த நூலிலும் அடிக்கடி அடிபடுகிறது. அவர் பெயர் அவ்வளவு அடிபட்டதன் காரணம் என்ன என்பதும் இப்போது தெரிய வருகிறது. அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போதுதான் பெரும் சமூக மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவரும் அறிவொளி இயக்கமும் இணைந்து நடத்திய புதுமையான ‘பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைக்கும்’ இயக்கம் எவ்வளவு பெரிய சமூக மாற்றத்தை நடத்தியது என்பதை வேறொருவர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டி வந்தது வேதனையாகத்தான் இருக்கிறது. மாவட்டம் முழுக்க பெண்கள் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை ஊக்குவித்து, அதை ஒரு பெண் விடுதலைக்கான அடையாளமாக முன்வைத்து, அதைச் சாதித்தும் காட்டிய கதை கண்டிப்பாக ஆசிரியர் சொல்வது போல நாடு முழுக்கவும் எடுத்துச் செல்லப் பட வேண்டியது. சைக்கிள் ஓட்டுவது வெறும் அடையாளம் மட்டுமல்ல. அது சைக்கிள் ஓட்டுவதோடு நின்று விடுவதில்லை. புது விதத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆண்கள் மீதான சார்பைக் குறைத்தது. எல்லாவற்றிலும்.

தனியார் கொள்ளைக்காரர்கள் நடத்திய கல்குவாரிகளை, ஒரு குவாரிக்கு இருபது பெண்கள் என்ற வீதத்தில் படிப்பறிவு கூட இல்லாத பட்டியல் இனப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுத்ததில் பெற்ற வெற்றி அதற்கடுத்த படி. இப்பெண்கள் நடத்திய குவாரிகளில் இவர்களின் கணவர்கள் சம்பளத்துக்குப் பணி புரிந்தது மொத்த சமூகத்தின் சமன்பாட்டையே புரட்டிப் போட்டு விடுகிறது. ஆண்கள் நிர்வகித்த குடும்பத்தில் பெரும் பங்கு செலவு சாராயத்துக்குப் போகிறது; அதுவே பெண்கள் நிர்வாகத்துக்குள் வரும்போது முழுக்கவும் குடும்பச் செலவுக்குப் போகிறது. குழந்தைகளின் உணவும் கல்வியும் உத்திரவாதம் பெறுகிறது. அடுத்த கட்டமாக இப்பெண்கள் சாராயத்துக்கு எதிராகப் போராடி வெல்கிறார்கள். அறிவொளி இயக்கமும் சைக்கிள் ஓட்டுவதும் கலந்து அவர்களுக்குக் கல்வியறிவையும் தற்சார்பையும் கூடுதல் பணத்தையும் நிர்வாகத் திறமையையும் மட்டும் கொடுக்கவில்லை; அரசாங்கத்துக்கே கூடுதல் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. அதைத் தோல்வியுறச் செய்வதில் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களும் எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள் என்பதும் இந்தியா முழுக்க எடுத்துச் செல்லப்பட வேண்டியதே. அங்கும் அப்படி நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள. படிப்பறிவில்லாத – வெளி உலகம் அறியாத பெண்கள் வந்து பெரும் அரசியற் பொறுப்புகளை ஏற்கும் போது ஏற்படும் பின்னடைவுகள் பற்றியும் மற்ற மாநிலக் கதைகளில் சொல்லப்படுகிறது. கல்குவாரி நடத்துவது வேறு; உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களின் கைப்பாவையாக இருந்து செயல்படுவது வேறு அல்லவா?

சுன்கத்துக்கு அடுத்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நல்லவராக அமைந்து விட்டதால் புதுக்கோட்டைக்கு உண்மையாகவே நல்ல காலம் பிறந்து விட்டது என்றே எல்லோரும் நம்பினார்கள் என்றாலும், அடுத்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்படி இல்லாமல் போனால் கண் மூடி முழிக்கும் முன் எல்லாமே பழையபடி சரிந்து விழுந்து விடும் என்கிற பயம் பற்றியும் சொல்கிறார். அங்குதான் தனிமனித சாகசங்களை மட்டும் நம்பி நடத்தப்படும் மாற்றங்கள் காலம் கடந்து நிற்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலை வருகிறது. நூல் முழுக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல சாகசங்கள் நிகழ்த்தும் நாயகர்கள் பற்றிப் பேசப்படுகிறது. இப்படியான சூழல்களில் எதுவுமே நம்பிக்கையளிக்கும் படி இல்லாத போதும் ஒரே நம்பிக்கைக் கீற்றாக இந்த நாயகர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – அச்சுறுத்தல்கள் பற்றியும், இவர்கள் மீது திருப்பப்படும் மிதமிஞ்சிய கவனம் எப்படிப் பல நேரங்களில் பிரச்சனையின் மீது காட்டப்பட வேண்டிய கவனத்தைத் திருப்பி விடுகிறது என்றும் சொல்கிறார். எண்பதுகளில் பத்திரிகையாளர்கள் செய்த சில அரும் பணிகளைப் பற்றிப் பேசுவது போலவே, பல நேரங்களில் அவர்கள் எப்படிப் பேச வேண்டிய பிரச்சனையை விடுத்துத் தேவையற்ற தனிமனிதக் கதைத்தல்களில் விரயமானார்கள் என்றும் சொல்கிறார்.

வட இந்திய மாவட்டங்களில் குழந்தைகளைப் பள்ளிக்குக் வரவைப்பதே எவ்வளவு பெரிய சவால் என்பதும், அதை எப்படித் தமிழ்நாடு சத்துணவுத் திட்டத்தின் மூலம் முறியடித்தது என்பதும், அது போல அங்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டது பற்றியும் கேள்விப்படும்போது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டின் இரு மாவட்டங்களைத் தவிர்த்துப் பார்த்தால் பேசப்படும் மற்ற ஆறு வட மாநில மாவட்டங்களுமே மலைப் பகுதிகள். பழங்குடியினர் நிறைந்த பகுதிகள். பழங்குடியினர் முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதானதில்லை. மற்ற மனிதர்களைப் போல அல்லாமல், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நல்லது-கெட்டது கொண்டவர்கள். நாம் முன்னேற்றம் என்பதை அவர்களுக்கும் முன்னேற்றம் என்று சொல்லித் திணிப்பது வளர்ச்சி ஆகாது; அதற்குப் பெயர் வேறு. ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு – சில பழங்குடியின மக்களுக்குள் கடுமையான வன்முறையும் அடிதடிகளும் நடக்கின்றன; ஆனால் அவர்கள் வெளி மக்களிடம் அதைக் காட்டிக் கொள்வதே இல்லை; அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொள்கின்றனர்; ஒரு போதும் திருடுவதோ, பொய் சொல்வதோ இல்லை; வன்முறை சார்ந்த ஏதோவொரு குற்றத்துக்காக அவர்களைச் சிறையில் அடைத்தால், திரும்பி வரும்போது பொய் சொல்லப் பழகிக் கொண்டு வந்து விடுகிறார்கள்; இது அவ்வினக்குழுவின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது. இந்தப் புள்ளியில்தான் எது வளர்ச்சி என்ற கேள்வி வருகிறது. “இப்படி ஒரு வளர்ச்சி இம்மக்களுக்குத் தேவையா?” என்கிறார் அங்கொருவர்.

பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெரும் அநீதி அவர்களை அவர்களின் நிலங்களை விட்டு விரட்டுவது. அணை கட்டுவதற்காக விரட்டியது, தொழிற்சாலை கட்டுவதற்காக விரட்டியது, இராணுவத்தளம் அமைப்பதற்காக விரட்டியது என்று பல காரணங்களுக்காக இம்மக்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாள் இரவு நம் படுக்கையறையைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டால் மண்டை காய்ந்து விடுகிற நம்மால், நாட்டின் வளர்ச்சிக்காக இதையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஒரு இராணுவத்தளத்தில் பயிற்சி என்று அறிவிக்கப்படும் போதெல்லாம் அங்கிருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் எல்லாம் காலி செய்து வெளியேறி விட வேண்டுமாம். பயிற்சி முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து கொள்ளலாமாம். இப்படி வெளியேறுவதற்கு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கொடுப்பார்களாம். இது போன்ற ஒரு வேலையை மும்பை நகரத்தில் உள்ள ஒரு பகுதியில் செய்ய முடியுமா என்று கேட்கிறார் ஒருவர். இது விதண்டாவாதம் போலத்தான் படும் நமக்கு. நம்மைப் போன்றவர்கள் வாழும் மும்பை வேறு, பழங்குடியினர் வாழும் அந்தக் கிராமங்கள் வேறு என்பதற்கு இருக்கும் முக்கியமான வேறுபாடு, நம்மைப் போன்றவர்களிடம் அப்படி ஆட்டம் காட்டினால் அந்த அரசாங்கத்தையே ஆட்டம் காண வைக்கும் கூட்டு சக்தி நம் ஓட்டுக்கு இருக்கிறது; அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற படிக்காத பழங்குடி மக்களுக்கு இல்லை. அவர்களில் பலருக்கு ஓட்டே இல்லை என்பது வேறொரு கிளைக் கதை. இதெல்லாம் மக்களாட்சி முறையின் கரிய பக்கங்கள். “அதனால்தான் மக்களாட்சியே தோற்றுப் போய்விட்டது என்கிறோம்; எங்கள் தலைவரை நிரந்தர சர்வாதிகாரி ஆக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும்” என்கிறீர்களா? நல்லது! அப்படியே ஆகட்டும்.

இன்னோர் ஊரின் கதை அதை விடக் கொடுமை. ஓர் ஊரிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், இன்னோர் இடத்தில் அது போலவே ஓர் ஊரை உருவாக்கி அதே பெயரையும் இடுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து அந்த ஊரையும் காலி செய்யச் சொல்கிறார்கள். இப்போது மூன்றாமிடத்தில் மீண்டும் ஓர் ஊர் கட்டுகிறார்கள். இப்போது அதையும் காலி செய்யச் சொல்கிறார்கள். நாட்டு நலனுக்காகக் காலி செய்வது முக்கியம். சரி. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது நாட்டின் கடமை இல்லையா? அதை நாடு செய்வதில்லை. அதற்கு வரும் பணத்தை முழுங்கி ஏப்பம் விடுவதையே தன் முழுநேரத் தொழிலாகக் கொண்டு ஒரு கூட்டம் அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இது போன்ற இடப்பெயர்ச்சிகளின் போது இழக்க நேரிடும் உறவுகள் வேறு இவர்களின் பலத்தைப் பிடுங்கி விடுகிறது.

இடம் மாறுவதில் இடம் மாறுவது மட்டும் பிரச்சனையில்லை. அப்படி இடம் மாறும் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தான் வாழ்ந்த இடத்தில் இருந்த குறிப்பிட்ட செடி-கொடி-மரங்களை மட்டுமே சார்ந்து தம் உணவு முறைகளையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் அவை வாழ்வாதாரம் எனப்படுகின்றன. அந்த இடத்தை விட்டு வேறோர் இடத்துக்குப் போகும் போது புதிய இடத்தில் இவர்களுடையே செடி-கொடி-மரம் இருப்பதில்லை. அப்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பிடுங்கப் படுகிறது. அரை மணி நேரம் வை-ஃபை பிடுங்கப் பட்டால் தாங்க முடியாத - ஒரு வாரம் வெளியூரில் போய் நம்மூர்ச் சாப்பாடு இல்லாமல் வாழ முடியாத நம்மால் அதற்கும் விளக்கம் கொடுக்க முடியும். வலுவுள்ளதே வாழும் என்று. நான்கு நாட்கள் அரசாங்கமும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் அமைப்புகளும் இயங்காவிட்டால் வலு என்பதன் பொருளே மாறிவிடும். அவர்களின் வலுவுக்கும் வாழ்வுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இரையாகி விடுவோம் என்பதைக் கூட உணர முடியாதவர்களா நாம்? அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது என்று ஒரு நம்பிக்கைதான். இல்லையா?!

பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இன்னொரு விதமான கொடுமையும் இருக்கிறது. “இடமெல்லாம் மாற வேண்டாம். நீ இருக்கிற இடத்தில் இருந்து கொள். ஆனால் உன்னைச் சுற்றியிருக்கிற எதுவும் உன்னுடையதில்லை. நிலம் உட்பட அதில் வளரும் மரம்-செடி-கொடி வரை எல்லாம் அரசுக்குச் சொந்தம்” என்று சொல்லி விடுவது. இதுவும் அவர்களை இடப்பெயர்ச்சி செய்யச் சொல்வது போலத்தான். வாழ்வாதாரத்தை மட்டும் பறித்துக் கொள்வது கொல்வதைப் போலத்தானே. பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வளர்த்துப் பாதுகாத்த நிலத்தையும் அதன் உற்பத்தியையும் அவர்களுக்குச் சொந்தமில்லை என்று சொல்ல நாம் யார் என்ற மனச்சாட்சியே நமக்கு நிறையப் பேருக்கு வேலை செய்வதில்லை. பாதி இயற்கை; பாதி அவர்கள் பேணியது. தன் வாழ்க்கையில் அனைத்தையுமே மூங்கிலைச் சுற்றியே அமைத்துக் கொண்ட ஓர் இனத்தைத் திடீரென ஒரு நாளில் அந்த மூங்கிலை நீங்கள் தொடவே கூடாது என்று சொல்கிற கதை ஒன்று வருகிறது. வனத்தைப் பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்ட வனத்துறையினரின் கொள்ளையிலும் கடத்திலிலும் இருந்து வனத்தைக் காக்க பழங்குடி மக்கள் படும் பாடு பற்றிய கதை ஒன்றும் வருகிறது. என்னவொரு வேடிக்கை.

இதையெல்லாம் பார்க்கும் போது பெரும்பாலும் சமவெளியாக இருப்பதும் குறைவான பழங்குடியினர் எண்ணிக்கையும் கூட தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணமோ என்று படுகிறது.

இந்த மாவட்டங்கள் அனைத்திலுமே பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவராகவோ பட்டியல் இன மக்களாகவோதான் இருக்கிறார்கள். அதுவே எப்போதும் அவர்களுக்கான நீதியைக் கிடைக்கவிடாமல் செய்து விடுகிறது. அவர்களே அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டால்தான் உண்டு என்று சொல்லிவிடுகிற அளவுக்கு அது அவ்வளவு எளிதில்லை. இது ஒரு கொடுமையான சுழற்சி. ஒவ்வொரு நாளும் அன்றைக்கான சாப்பாட்டுக்கான போராட்டமே அவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கும் போது அதிலிருந்து வெளியேறி அவர்கள் தம் மற்ற உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் போராடுவதெல்லாம் வாய்ப்பே இல்லாத மாதிரித்தான் படுகிறது. அதற்கு முன் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

கடனும் கந்து வட்டியும் கொடுப்பவர்கள், இந்த எட்டு மாவட்டங்களை அப்படியே வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றுபவர்கள். நிலமுடையவர்களை வளைத்து நிலத்தைப் பிடுங்குகிறார்கள்; அதுவுமற்றவர்களை வளைத்து அவர்களைக் கொத்தடிமை ஆக்கிக் கொள்கிறார்கள்; வேறு சில இடங்களில் அதுவே விபச்சாரம் முதலான பெருங் கொடுமைகளுக்கும் வித்திடுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட நிலச் சீர்திருத்தம் இதற்கொரு முக்கியத் தீர்வாக இருக்க முடியும் என்கிறார். அதெல்லாம் நடக்கிற காரியமா? போங்க பாஸ்! ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள் – நிலச் சீர்திருத்தம் செய்த நான்கு மாநிலங்களில் இருந்து ஒரு மாவட்டம் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை!

வறுமைக்கோடு என்பது எப்படி வரையறுக்கப்பட்டது என்கிற கதை வியப்பூட்டுகிறது. நாளொன்றுக்கு இத்தனை கலோரி சாப்பிட முடிந்தவர்கள் மேலே, முடியாதவர்கள் கீழே என்று எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்; கல்வி, சுகாதாரம், பிற வசதிகள் எதைப் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது ஏன் என்று வியந்து முடிவதற்குள் அதற்கான நியாயமும் சொல்லப்படுகிறது. அன்று வரையறுக்கும் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் நேர்மையும் நல்லெண்ணமும் நிறைந்தவர்கள். கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் போபவர்கள் அல்லர். அதனால் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் மற்ற வசதிகளும் அரசாங்கத்தால் எல்லோருக்கும் முறையாக அளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு உணவை மட்டும் அடிப்படையாக வைத்து இப்படி வரையறுத்தார்கள். அதனால் இப்போது வரையறையை மாற்ற வேண்டியதாகியுள்ளது. இப்படி நாற்பது ஆண்டுகள் கழித்தும் கல்வியும் சுகாதாரமும் அடிப்படை வசதிகளும் மக்களுக்குச் சென்று சேர்ந்திராது என்று தெரிந்திருந்தால் அப்போதே முறையாக வரையறுத்திருப்பார்கள் என்கிறார். ஓரளவு சரியாகத்தான் படுகிறது. அத்தோடு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிற மக்களின் எண்ணிக்கை பாதியாகிவிட்டது - கால்வாசியாகிவிட்டது என்று உள்ளூரில் ஒரு பொய் சொல்லிக் கொண்டு, அதுவே பல மடங்காகக் கூடி விட்டது என்று போய் ஐ.நா. சபையிலும் உலக வங்கியிடமும் காசுக்காக வேறொரு பொய் சொல்ல முடிகிற மனச் சாட்சி – நேர்மை நம் அரசாங்கங்களுக்கு இருந்திருக்கிறது.

இந்த நாட்டை ‘உண்மையாக’ நேசிக்கிறவர்கள் (நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், ‘உண்மையாக’... சும்மா வெற்றுக் கூச்சல்களையும் அடையாளங்கள் மீதான பித்துக்களையும் தேசபக்தி என்று கூறித் தன்னையும் பிறரையும் ஏய்ப்பவர்கள் அல்லர்), தாம் நேசிக்கும் இந்த நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது, அது எப்படியெல்லாம் இங்குள்ள எளிய மக்களைச் சீரழிக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த நூலில் புதையல் போல விதவிதமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு தனி மனிதனாக என்னால் புரிந்து கொள்ளப்பட முடிந்தவை சில. அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை. நீங்கள் படித்தால் உங்களுக்கு எவ்வளவோ கிடைக்கலாம்.

நூலைப் பற்றிய சில மதிப்புரைகளைப் படிக்கும் போது நிறையப் பேர், “இந்த நூல் என் கண்ணைத் திறந்துவிட்டது; நான் வாழும் இதே நாட்டில் இப்படி ஒரு வேலைச் சோற்றுக்குக் கூடப் போராடும் மக்களும் வாழ்கிறார்களா?; நொறுங்கிப் போய்விட்டேன்; இன்னும் மீளவில்லை” என்று பலவிதமான வியப்புகளை விளக்கியிருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வாழும் சொகுசான வாழ்க்கையாக இருக்கலாம். அதுவே பலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை வரவிடாமலும் கூடச் செய்யலாம். இதை நம்ப முடியவில்லை என்று ஒரு சாரார் சொல்ல முடிகிறதென்றால் அதுவே இங்கிருக்கும் இடைவெளிக்கான பெரும் சாட்சி. ஆனால் எனக்கு இந்த நூல் வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்தது. நூலில் வரும் பல மாந்தர்கள் என் வாழ்வில் சிறு வயதில் ஒவ்வொரு நாளும் நான் பார்த்து வளர்ந்தவர்கள். அன்றோ இன்றோ நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு குறைச்சலும் இல்லை என்பதற்காக, நம் கண் முன் கண்டவற்றைக் கூட மறந்துவிட வேண்டும் என்று கட்டாயமில்லையே!


இரவு சாப்பாடு பற்றிக் கேட்டபோது, “மதியமே சாப்பிட்டு விட்டோம்; அதனால் நாளைதான் அடுத்து சாப்பாடு!” என்று சொன்ன நண்பர்கள் எனக்கிருந்திருக்கிரார்கள். அதனால் என்னால் இவற்றை எளிதில் கடந்து விட முடியாது. கள்ளச்சாராயம் காய்ச்சிய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்; பக்கத்து நகரத்தில் சில்லறைக்குப் பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருளை, மொத்த விலைக்கு என்று வரும்போது இரண்டு-மூன்று ரூபாய்க்கு சிரிப்பு மாறாமல் கேட்கும் இடைத்தரகர்களைப் பார்த்திருக்கிறேன்; இதற்கெதற்கு இம்மக்கள் இப்படிச் சண்டைக்காரனிடம் பேசுவது போல வெறி கொண்டு பேசுகிறார்கள் என்று பருத்தி-மிளகாய்-அவுரி விளைவித்த விவசாயிகளைப் பார்த்து வியந்திருக்கிறேன்; அரசுப் பணியில் இருந்து கொண்டு தனியார் மருத்துவமனை நடத்திய மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன்; கந்துவட்டி வசூலிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்; வாங்கியதை விடப் பல மடங்கு கட்டியபின்னும் கடன்காரனாகவே இருந்து அடியாட்களிடம் அடிபட்டவர்களைப் பார்த்திருக்கிறேன்; அதிலேயே வீட்டையும் சொத்தையும் இழந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்; தனக்கான நீதிக்காகவும் தன் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பவும் உண்மையை மிகப் படுத்திப் பேசும் மக்களைப் பார்த்திருக்கிறேன்; பஞ்ச காலத்தில் பல மைல் தொலைவு தண்ணீருக்கு அலைந்த மக்களைப் பார்த்திருக்கிறேன்; நூலில் வரும் இராமநாதபுரத்து மாந்தரில் ஒருவர் (சுரண்டுபவரோ சுரண்டப் படுபவரோ) என் இரத்த உறவினராகக் கூட இருக்கலாம்; ஒரு காரணமும் இல்லாமல் மக்களுக்கு உழைத்துத் தேய்வதையே மனநோய் போலக் கொண்டு உழைத்து அழிந்த சில உன்னதமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் இந்த நூல் என்னைப் பற்றியது; என்னைச் சுற்றியிருந்த மனிதர்களைப் பற்றியது. என்னைப் போலவே நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் கூட இதில் இருக்கலாம். படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

வியாழன், ஜூலை 13, 2017

தாயுள்ளம்

ஒரு கொலைகாரனை
கோபக்காரன்
திமிர் பிடித்தவன்
பொறுப்பற்றவன்
சோம்பேறி
என்று
மற்ற எல்லாக் குறைகளையும் மட்டும்
சொல்லித் திட்ட
பெரும் தாயுள்ளம் வேண்டும்

வெள்ளி, ஜூலை 07, 2017

நாயே

எவரையும்
எளிதில்
நாய் என்றிடுகிறீர்கள்

நன்றியுடைமை
நக்குதல்
குரைத்தல்
கடித்துக் குதறுதல்
இடமறிந்து வாலாட்டுதல்
இவை தவிர
நாய்கள் பற்றி
வேறேதும்
இல்லையென்று எண்ணி விட்டீர்களா?

நாய்களில்தான் எத்தனை வகை?

துளியும் உழைக்காமல்
எவர்க்கும் ஒரு பயனுமில்லாமல்
ஒருத்தரின் அன்பை மட்டும் வெல்வதன் மூலம்
அளவில்லாக் கவனிப்பு கிடைக்கப் பெற்று
பிற நாய்களின் பொறாமைக்குள்ளாகுமளவு
கொழு கொழுவென்று
கொழுத்துப் போய்த் திரியும்
பெரிய வீட்டு நாய்கள் உள்ளன

இப்போது தான்
எட்டுப் பேரின்
குருதி குடித்துவிட்டு வந்தது போல
கோபமும் கோரமும் நிறைந்த
கொடூரமான முகத்தோடு
தெருக்களைச் சுற்றி வந்து
போவோர் வருவோரையெல்லாம்
மிரட்டுதலில் மட்டுமே இன்பம் காணும்
அழுக்குப் பிடித்த சொறி நாய்கள் உள்ளன

என்றோ ஒரு நாள்
நிகழப் போகும்
நிகழாது போய்விடக் கூடும்
ஒரு நாட் திருட்டிலிருந்து காத்துக் கொள்வதற்காக
ஆண்டாண்டு காலமாய்
நலம் பேணப்பட்டு
அது நடக்கிற நாளில்
எவனோ போடும்
எலும்புத் துண்டுக்கு ஏமாந்து
மயங்கித் தொலையும்
மங்குனி நாய்கள் உள்ளன

இப்படி
மனிதரில் போலவே
வகை வகையாய் விரிந்து கிடக்கிற நாயினத்தில்
எந்த வகையை எண்ணித் திட்டுகிறீர்கள் அப்படி?

புதன், ஜூன் 14, 2017

அன்பு

நீ
மிதமிஞ்சிச் செலுத்திய நஞ்செல்லாம்
என் பாதி உயிரைக் குடித்தபின்தான் உணர்த்தின
அவை யாவும் அளவுக்கு மீறிய அமிர்தத்தின் மறு வடிவம் என்று

செவ்வாய், ஜூன் 06, 2017

திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம்

அதற்காக...
என்னை வாழவைக்கும் திருடன்
என்னைக் கேள்வி கேட்கும் திருடன்
பேசாமல்
தானுண்டு தன் திருட்டுண்டு
என்றிருக்கும் திருடன்

எல்லோரும் ஒன்றாகிடுவரா?

சனி, மே 27, 2017

தலைவன்

அகநானூற்றுத் தலைவன்
உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான்
கேள்வி கேட்காமல் தன்னையே கொடுத்து ஏமாந்தாள் தலைவி

வீட்டைவிட்டு வெளியே வந்ததும்
அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாத
புறநானூற்றுத் தலைவன்
இங்கும் அதே போல்
உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான்
கேள்வி கேட்காமல் மண்ணைக் கொடுத்து ஏமாந்தான் தொண்டன்

கொடுப்பேன் என்று சொல்லாமல் கொடுத்தவர்
என்றோ ஒருநாள் புரட்டப்படும் வரலாறானார்

கொடுப்பேன் என்று சொல்ல மட்டும் செய்தவர்
வரலாற்றையும் மாற்றி எழுதவல்ல தலைவரானார்

திங்கள், மே 15, 2017

நெனப்பு

பூனை
தன்னைப்
புலியாக நினைத்துக் கொண்டு
பாய்ந்த போது
எலி
இரையாகும் முன்
தன்னை
மானாக எண்ணிக் கொண்டது

வெள்ளி, மே 12, 2017

அறிவாயுதம்

அறிவு பெரும் ஆயுதந்தான்

தன்னையும்
தன் பிள்ளைகளையும் மட்டுமே
காத்துக் கொள்ளும்
மடக்குக் கத்திகளும் உள

மண்ணைக் காக்கும்
போர்வாட்களும் உள

உயிர்காக்கும் சிகிச்சைக்குப் பயன்படும்
அறுவைக் கத்திகளும் உள

வெற்று மிரட்டல்களுக்கும்
வேடிக்கை காட்டவும்
நடிப்புக்கும் மட்டுமே பயன்படும்
அட்டைக்கத்திகளும் உள

இதில் எது உன் ஆயுதம்?

செவ்வாய், மே 02, 2017

பசி

பசியில் துடிக்கிறானா?
பக்கத்தில் இருப்பவனைப் பகைவனாக்கி விடு
பசி மறந்து போகும்

ஞாயிறு, ஏப்ரல் 30, 2017

மொழியும் மதமும்

உணர்ச்சி - வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்களில் பெரும்பாலும் முதலில் தமிழனாக இருந்து பின்னர் இந்துவான கூட்டங்களின் பிள்ளைகள் மொழிவாத அரசியலையும், முதலில் இந்துவாக இருந்து பின்னர் தமிழனான கூட்டங்களின் பிள்ளைகள் மதவாத அரசியலையும் வெறி கொண்டு ஆதரிக்கிறார்கள்.

இதில், "பின் ஏன் முதலில் தமிழராக இருந்து, பின்னர் இந்துவாகி, பின்னர் வேறு ஏதோ மதத்துக்குப் போனவர்களின் பிள்ளைகள் மட்டும் மொழிவாத அரசியலைவிட மதவாத அரசியலை அதிகம் ஆதரிக்கிறார்கள்?" என்ற கேள்வியும் வேறுவிதமான பதில்களை நோக்கித் தொக்கி நிற்கின்றன.

வேறு ஏதாகவோ இருந்து பின்னர் இந்துவாகவும் தமிழனாகவும் ஆன கூட்டங்களின் பிள்ளைகள் திராவிட அரசியலை ஆதரிக்கிறார்கள் அல்லது தமிழனாகும் முன்பே இந்துவானதால் மதவாத அரசியலை ஆதரிக்கிறார்கள் என்றும் யாராவது இங்கே பொடி வைக்கக் கூடும். அதுவும் சரிதான் என்பதால் கேட்டுக் கொள்வோம்.

ஆக, எல்லோரும் தத்தம் பிறப்புக்கு உண்மையாக இருக்கிறார்கள். அதுதானே தர்மம் என்றால், இதில் நல்லது - கெட்டது பற்றி என்ன கருமத்துக்குப் பேச வேண்டும்?

இது ஒரு பெரும் ஆராய்ச்சிக்கான பொருள். இதுவும் உணர்ச்சி - வெறுப்பு அரசியலுக்கான விதையாகித் தொலைக்காமல் இருக்கக் கடவ.

சாமி சரணம்!

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

கோடைதான்

உன் வருகைக்கு முன்பும்
பிரிவுக்குப் பின்புமான வாழ்க்கை
சென்ற கோடைக்கும்
இந்தக் கோடைக்கும்
இடையிலான வேறுபாடு போலத்தான்
வறட்சிதான் என்றாலும்
நடுவில் வந்து சென்ற
அழகிய மழைக்காலத்தின் நினைவுகள்
சூட்டைத் தணிக்கவும் செய்கின்றன
தகிப்பையும் தவிப்பையும்
பெருக்கவும் செய்கின்றன

வியாழன், ஏப்ரல் 27, 2017

உளநோய்

சாமியாடி வழிந்தோடிய
எம் தாய்மாரின் உளக்கொதிப்பெல்லாம்
உளவுலைக்குள்ளேயே தேங்கி
உருக்குலைக்கின்றன
எம் பிள்ளைகளை
உள நோய்களாய்

புதன், ஏப்ரல் 26, 2017

பழி

எனக்கு ஒரு கண் போனாலும்
உனக்கு இரு கண்கள் போக வேண்டும்

என் இரு கண்களையும் இழந்தாவது
உனக்கு ஒரு கண்ணாவது போக வைப்பேன்

உன் மேல் பழி விழுமென்றால்
என் கண்களைக் கூட இழக்கத் தயார்

அரசு அலுவலகம்

தமிழ்ல போட்ற எல்லாத்தையும் இங்கிலீஷ்ல போட முடியாது. ஆனா இங்கிலீஷ்ல போட்ற எல்லாத்தையும் தமிழ்ல போடலாமே! அதனால... இதையும் போட்ருவோம்னு ஒரு முடிவு.

கொஞ்சநாள் முன்னாடி, சில ஆவணங்கள் கொடுப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்துக்குப் போயிருந்தேன்.

அங்க இருந்த ஆள், கனிவான சிரிப்போடு, "சார், இது ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணக் கூடாது. பரவால்ல. குடுங்க" என்றார்.

ஆனாலும், "இப்பிடிப் பிரிண்ட் பண்ணக் கூடாதுன்னு எந்த விதிமுறைல இருக்குன்னு காட்ட முடியுமா?"-ன்னு கேட்டுத் திமுர் பண்ணேன்.

விதி வலியது இல்லையா? இன்னைக்கு ஓர் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாப் போனேன்.

அங்க இருந்த ஆள் ரெம்பக் கோவமாப் பேசுனாப்ல, "ஹலோ, இப்டிலாம் முன்னும் பின்னுமா ஒரே பேப்பர்ல பிரிண்ட் பண்ணக் கூடாது. போய்த் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணிக்கிட்டு வாங்க".

"சரி, சார்"-னு ரெம்பப் பவ்யமாச் சொல்லிட்டு (இதுல முக்கியமான மேட்டர் என்னன்னா, அவர் சாரெல்லாம் கெடையாது, அங்க இருக்கிற அல்லக்கை, அவ்வளவுதான்), குடுகுடுன்னு கொயந்த மாதிரி பிரிண்டிங் கடைக்குப் போனேன். அங்க போய், "இது கூடத் தெரியாதா ஒனக்கு?"-ன்னு அங்க இருந்த பையனத் திட்டீட்டு, தனித்தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணி வாங்கிக்கிட்டுத் திரும்பவும் அரசு அலுவலகத்துக்கு ஓடோடி வந்தேன்.

இப்ப என்னடான்னா அதே எடத்துல வேற ஓர் ஆள் ஒக்காந்திருந்தாப்ல. அவரும் அதே மாதிரி செயற்கையான ஒரு கோவக்கார மூஞ்சியோடயே பேசுனாரு. "ஹலோ, யாரு ஒங்கள இப்பிடித் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணச் சொன்னது? மொறைப்படி ஒரே பேப்பேர்ல முன்னும் பின்னுமாப் பிரிண்ட் பண்ணனும். தெர்லன்னாக் கேளுங்கய்யா"-ன்னார்.

நானும் ரெம்பப் பவ்யமா, "சரி, சார்"-னுட்டுக் கையில இருந்த பழைய பிரிண்ட்-அவுட்டக் குடுத்தேன். அதுதான் ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணதாச்சே! (மனசுக்குள்ள இப்ப என்ன பண்ணுவன்னு நக்கல் வேற!). இதுக்கு எடையில ஒரு பாவமும் அறியாத பிரிண்டிங் கடைப் பையனுக்காக வருத்தம் வேறு பட்டுக் கொண்டேன். அவனுக்கு எங்க தெரியப் போகுது அரசு அலுவலகம்னா எப்பிடி வேலை நடக்கும்னு.

தலைவர் இன்னும் கோவமாவே இருக்குற மாதிரி இருந்தது. எதுக்குன்னுதான் புர்ல. "முன்னும் பின்னும் ஒரே பேப்பர்ல அடிச்சது சரிதான். இந்த பார்மட் ஒனக்கு யாரு குடுத்தான்னு சொல்லு. இது மொறைப்படி இல்ல"-ன்னு அப்டியே லெப்ட்ல திரும்பி ரைட்டுல ஒரு சிக்சர் அடிச்சார். (இப்ப என்ன பண்ணுவன்னு சிரிச்சுக்கிட்டே கேக்குகிற மாதிரி இருந்துச்சு)

இப்ப என்ன பண்ணலாம்??? எந்த விதிமுறைல இருக்குன்னு கேள்வி கேட்டுப் பாக்கலாமா???

#கதைபாதி #வதைபாதி

ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

வியாழன், ஏப்ரல் 20, 2017

நம்பிக்கை

என்னால்
அவர்களைப் போல்
விண்வெளிக்கெல்லாம்
பயணிக்க முடியுமா
தெரியவில்லை

முதன் முதலில்
அ முதல் ஃ வரை சொன்ன
அண்ணனைப் பார்த்து
அடைந்த மாதிரியாகவே
பிரமிப்பாக இருக்கிறது

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

இதுவும் அதுவும்

இதுக்கு அது பரவாயில்லை என்றோம்
அது இதுவானது
இது அதுவானது
இப்போதும் அதையே சொல்கிறோம்
இதுக்கு அது பரவாயில்லை

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...