இடது, வலது மற்றும் நடுவுலது!


இன்றைய அரசியலில் எவ்வளவுதான் செல்லாக்காசாகி விட்டார்கள் என்றபோதிலும், ஓர் இடதுசாரிக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து விட்டதால் அவர்கள் மீதான ஈர்ப்பு ஒரு முனையில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பின்னணி நம்மைப் பெரும்பாலும் குருடாக்கி விடுகிறது. அவர்களின் குறைகளையெல்லாம் லாவகமாக மறக்கடிக்கச் செய்து (அல்லது மறைக்க வைத்து) நிறைகளை மட்டும் பெரிதாக்கிப் பேசித் திரிய வைக்கிறது. பிரச்சார நெடி தாங்காமல் சுற்றியிருப்போர் முகம் சுழித்தால்கூட அதைப் பொருட்படுத்தாமல் நம் விருப்பு வெறுப்புகளில் பிடிவாதம் காட்ட வைக்கிறது. நம்முடைய அனைத்துச் சிந்தனைகளிலும் பேச்சுகளிலும் அது பிரதிபலிக்கிறது. ஆனாலும் சமீப காலங்களில் இடதுசாரிகளை விரும்புவதை விட வெறுப்பதற்கான காரணங்களே கூடி வருவது போல்த் தெரிகிறது. இன்றும் அவர்கள்தாம் சுயநலமற்ற, ஊழலற்ற, அனைத்து தேசிய மற்றும் சர்வதேசிய விவகாரங்கள் குறித்து வாதிடக் கூடிய சரக்குடைய ஒரே கூட்டம். எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பது முக்கியமில்லை இங்கே. முதலில் நிற்கத் தெரிகிறதா இல்லையா என்பது பற்றிப் பேசுவோம். வறுமையை ஒழிக்க அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இன்றைக்கும் வறுமையின் கொடுமை மற்றும் அதன் வலியை உணரக்கூடிய ஒரே கூட்டம் இவர்களே. அதை ஒற்றியே அவர்களுடைய கொள்கைகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓர் உண்மையான இடதுசாரி சக மனிதனின் பொருளியல்ப் பிரச்சனைகளைச் சரியாகப் புரியத் தக்கவர். இங்குதான் வலதுசாரிகள் (அதாவது காவிக் கூட்டம்) வந்து சொல்வார்கள் - "நாங்கள்தாம் சக மனிதனின் பொருளற்ற... மன்னிக்க... ஆன்மீகத் தேவைகளை சரியாகப் புரியத் தக்கவர்கள்" என்று. இதில் காங்கிரசின் இடம் எங்கே? அவர்கள் இடதா? வலதா? இரண்டுமற்ற நடுவுலதா? அவர்கள்தாம் நடுவுலது. இடது சார்ந்து ஆரம்பித்து இப்போது திசை மாறிக் கொண்டிருக்கும் அவர்கள்தாம் நடுவுலவர்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் - "நாங்கள்தாம் நடுநிலைமை தவறாமல் ஆராய்ந்து இந்த நாட்டின் உண்மையான தேவை என்ன என்பதைப் புரிந்து செயல்படும் நடுநிலைமையாளர்கள்" என்று சொல்லக் கூடும். அவர்களைப் பொருத்த மட்டில் இந்தியா எனும் இந்த நாட்டைப் பிறப்பித்து உயிர் கொடுத்தது அவர்களே. 

காங்கிரஸ் கொள்கைகளில் இடது சார்ந்து ஆரம்பித்தவர்கள் என்ற போதிலும் நடைமுறையில் வலது சார்ந்து வாழ்வோரே. இடது சார்ந்து ஆரம்பித்தார்கள் என்ற போதிலும் தாராளமயமாக்கலுக்குப் பின் வலது சாய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இடது என்பது பொதுவுடைமையாளர்கள் அல்லது சமதர்மவாதிகள் என்று பொருளாகாது. இடது என்பதன் உண்மைப் பொருள் முற்போக்குவாதிகள் என்பதே. இடது மற்றும் வலது எனும் சொல்லாடல்கள் உருவான காலத்தில் சமதர்ம - பொதுவுடைமைவாதிகள் முற்போக்காளர்களாக இருந்ததால் அப்படியே ஊன்றி விட்டது. ஆனால், இன்றைக்கு அதை அப்படியே பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. தோல்வியுற்ற - நூற்றாண்டு காலப் பழைய அமைப்பு ஒன்றைப் பிடித்துத் தொங்காய்த் தொங்குகிற - பிடிவாதக்கார இடதுசாரிகள் எப்படி முற்போக்காளர் ஆவர்? அதுதானே பழமைவாதம்! அதன் நோக்கம் நிறைவேறத் தவறிவிட்ட பின்பும் கூட அதன் பழமையை அப்படியே மாற்றமில்லாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்போர் பழமைவாதிகள்தாமே! இந்தக் குழப்பங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், காங்கிரசை நடுவுலது என்று அழைப்பது இரு காரணங்களுக்காக சரியென்றே படுகிறது. ஒன்று - அவர்களின் கொள்கைச் சமநிலை அல்லது கொள்கைச் சமயோசிதம் அல்லது கொள்கைச் சந்தர்ப்பவாதம் அல்லது பல நேரங்களில் கொள்கையே இல்லாமை. இரண்டு - அதிக காலம் நடுவண் அரசில் விடாமல் ஆண்டு கொண்டிருப்பதால் நடுவுலது என்ற சொல் நன்றாகவே அவர்களுக்கு ஒத்துப் போகிறது. :)

தோழர்கள் பக்கம் வருவோம். இந்த தேசம் கண்ட தலை சிறந்த எளிமைவாதிகள் அனைவருமே இடதுசாரிகள்தாம். மற்ற எந்த இயக்கத்திலும் எளிமையும் நேர்மையும் ஒருங்கே கொண்ட தலைவர்கள் இந்த அளவுக்கு நிறைந்து கிடக்கவில்லை. எளிமையைப் பொருத்த மட்டில் ஒவ்வொரு கட்சித் தொண்டரும் ஒரு காந்தியைப் போல வாழ்கிற இயக்கம் இடதுசாரிகளுடையது.   மற்ற எந்தக் கட்சியிலும் போல் இங்கே இருப்பவர்கள் பிழைப்பு நடத்துவதற்காக அரசியலில் இருப்பவர்கள் அல்ல. பதவி அவர்களைப் பாழாக்கவில்லை. அதிகபட்சம் அது அவர்களைத் திமிர் பிடித்தவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் ஆக்கியிருக்கிறது. அவர்கள் என்றோ வரப்போகிற (அப்படியெல்லாம் ஒன்றும் வரப்போவதில்லை என்று அவர்கள் பிள்ளைகளே காமெடி பண்ணுவது வேறு கதை) புரட்சிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களுடைய அரசியல்ப் பிடிவாதம்தான் அவர்களைக் கொன்று கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு அது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. அவர்களைப் பொருத்த மட்டில் கொள்கையில் சமரசம் செய்து கொண்டு வாழ்வதே வீண். சரியோ தவறோ அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களிடம் வளைந்து கொடுக்கும் நற்குணமும் இல்லை. அதே பெயரில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் இல்லை. அவர்கள் அழியத்தான் போகிறார்கள் என்றுதான் படுகிறது. இதற்கு மேல் அவர்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிப்பது கூட வேண்டாமென்று நினைக்கிறேன். மன்மோகன் சிங் - வாஜ்பாய் போன்ற தலைவர்களை வரவிடாமல் செய்வதற்காக எந்தத் தகுதியும் இல்லாத மூன்றாம் தர - மாநில அரசியல் புள்ளிகளைக் கூட ஆதரிக்கும் நிலைக்கு அவர்கள் வந்து விட்ட பின்பு, என்ன சொல்ல அவர்களைப் பற்றி?! அது கூடக் கொள்கை அடிப்படையில் எடுக்கப் பட்ட முடிவு என்று அவர்கள் சொன்னாலும் என்னால் அத்தகைய செயல்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சிறிது நேரத்துக்கு மாநிலக் குப்பைகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டுப் பேசுவோம். இரு பெரும் தேசியக் கட்சிகளில் என் மனம் காங்கிரஸ் பக்கம் தான் கொஞ்சம் சாய்கிறது. பா.ஜ.க. கண்டிப்பாக காங்கிரசை விடத் தூய்மையானவர்களையும் உட்கட்சி சனநாயகமும் கொண்ட கட்சி. இடதுசாரிகளைப் போலவே இவர்களும் பிறப்புச் சான்றிதழுக்கு அதிகம் மரியாதை கொடுப்பதில்லை. தலைவன் அடித்தட்டிலிருந்துதான் தலை எடுக்கிறான். கட்சிக்குள் வளர்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது நேர் வழி. நம்மவர்களுக்குப் பிடிக்காத வழி. ஆனால் அவர்களிடம் எனக்குப் பிடிக்காதது பிரிவினைவாதம் (ஆங்கிலத்தில் EXCLUSIVISM என்பார்களே. அதைச் சொல்கிறேன். பிரிவினைவாதம் என்பது ஒரு பொதுச் சொல். நாட்டைப் பிரிக்கச் சொல்கிறவர்களுக்கும் அது பொருந்தும். மக்களைப் பிரிக்கிறவர்களுக்கும் அது பொருந்தும். மதப் பிரிவினைவாதம் என்று சொல்லலாம்!). இளமைக் காலத்தில் ஒரு முகமதியத் தெருவில் வளர்ந்தவன் நான். டெண்டுல்கரின் சதங்களையும் கபில்தேவின் விக்கெட்டுகளையும் என்னை விட மகிழ்ச்சியோடு அவர்கள் கொண்டாடியதைப் பார்த்து வளர்ந்தவன் நான் - பாகிஸ்தானுக்கு எதிராகவும் கூட. அந்த உணர்வை அதே அளவு இன்று என்னால் பார்க்க முடியவில்லை என்பதையும் நான் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏதோவொரு வகையில் இந்த நாடு அவர்களுக்கு வேறு மாதிரியாகத் தெரிகிறது. இது அவர்களுடைய பிரச்சனை மட்டுமல்ல. நம்முடையதும்தான். திரும்பவும் சொல்கிறேன் - திருப்பியும் சொல்கிறேன் - வேறு மாதிரியாகத் திருப்பியும் சொல்கிறேன் - பிரச்சனை அவர்களுடையதும்தான். அது ஓர் உணர்வு பூர்வமான பெரும் பிரச்சனை. அதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக் கொள்வோம். இப்போதைக்குப் பொதுவோட்ட அரசியல் (MAINSTREAM POLITICS) பற்றி மட்டும் பேசுவோம்.

எவ்வளவு ஊழல் மிக்கவனாக இருந்தாலும் வீணாப்போன கேசாக இருந்தாலும் எல்லோரையும் சேர்த்துச் செய்யும் அரசியல்தான் நீடித்து நிலைக்க வல்லது. ஏனென்றால் அரசியல் என்பதே அதுதான் - எல்லோரையும் சேர்த்து இழுத்துச் செல்வதுதான் (இப்போது INCLUSIVISM என்பார்களே. அது பற்றிச் சொல்கிறேன்!). காதோடு அறையலாமா என்று தோன்ற வைக்கிற மாதிரிப் பேசுபவனிடம் கூடப் பல்லைக் காட்டி ஏமாற்ற வேண்டும். எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நிறைய நண்பர்களையும் கூட்டலாம். ஆனால், காலமெலாம் பகையுணர்வோடே வாழ்வதில் யாருக்கும் ஈடுபாடு இராது. அந்தச் சூட்சுமம் புரிந்து கொண்டுதான் கைக்கட்சிக்காரர்கள் வெளியிலாவது நல்ல பிள்ளை வேடம் போடுகிறார்கள். அதனால்தான் எங்கிருந்தோ முகவரி தெரியாமல் வருகிற எவருக்கும் அதுவே புகலிடமாக இருக்கிறது. சசி தரூர்ச் சேட்டா ஏன் பா.ஜ.க. வில் சேராமல் காங்கிரசில் சேர்கிறார்? பா.ஜ.க. வில் ஏன் காங்கிரஸ் அளவுக்கு மேதாவிகள் நிறைய இல்லாமல் இருக்கிறது? வாதத்துக்குரிய விஷயம்தான். ஆனாலும் எனக்கென்னவோ காங்கிரசில் இருக்கும் அளவுக்கு வலது புறத்தில் அறிவாளிகள் அதிகம் இருப்பது போல் தெரியவில்லை. ஒருவேளை, மேதாவித்தனம் என்பதே இடதுசாரிகளின் குணாதிசயம் என்கிற கருத்தில் ஊறிப் போய் விட்டதால் எனக்கு வலதுசாரிகள் அது இல்லாதவர்கள் போலத் தோன்றலாம்.

போலி ஒற்றுமைவாதிகளை (PSEUDO-SECULARISTS) உண்மையான ஒற்றுமைவாதிகள் (SECULARISTS) என்றெண்ணி ஏமாறக் கூடாது. ஆனால் அதன் பொருள் ஒற்றுமைவாதத்தை விட பிரிவினைவாதம் மேலானது என்பதாகாது. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். நீங்கள் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் நேர்மையாகத் தப்புச் செய்வதைவிட ஏமாற்றுக்காக நல்ல பிள்ளை போல் நடிப்பது பரவாயில்லை எனப் படுகிறது. அப்படி அவர்கள் ஏமாற்றுக்குச் செய்யும் நடிப்பு கூட சமூகத்தை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நீங்கள் செய்யும் காரியம் சில உடனடி பலன்களைப் பெறுவதற்காக சமூகத்தில் வெறுப்பை விதைக்கிறது. அது கண்டிப்பாக இந்த மண்ணைப் பாதுகாப்பானதாக ஆக்காது. 

பிரிவினை அரசியல் மாநில அளவில் வெற்றி பெறலாம். சிறிது கூடுதல்க் காலம் நீடித்திருக்கலாம். ஏனென்றால், அங்கே உங்களுக்கு பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள்! இந்தியா போன்ற எண்ணிலாச் சிக்கல்கள் கொண்ட ஒரு நாட்டில் மதவாதம் அவ்வளவு எளிதில் மக்களை ஈர்த்து விட முடியாது. ஏனென்றால் இருக்கிற பல பிரிவினைகளில் அதுவும் ஒரு பிரிவினை. அதுவே எல்லோருக்கும் அதிகம் பிடித்த பிரிவினையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மை மக்களுக்கு அது எளிதில் ஈர்க்காது. இந்த "நானா நீயா" சண்டைகள் 80%-க்கு மேலான மக்கட்தொகை கொண்ட ஒரு சாராரை இழுக்கா. வேற்றுமையில் ஒற்றுமைதான் அவர்களிடம் எடுபடும். ஒரு சாரார் மட்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசுவது குறைவான எண்ணிக்கையில் இருப்போரிடம் மட்டுமே எடுபடும். 

இந்துத்துவம் இங்கு எடுபடாமல் போனதற்கு அதுதான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். 2 சீட்டிலிருந்து 80 சீட்டுகளாக முடிந்தது - 80 சீட்டிலிருந்து 194 சீட்டுகளாக முடிந்தது - 194 இலிருந்து ஏன் 267 ஆக முடியவில்லை? ஓர் அரசியல்வாதி மக்கள் பிரச்சனை பற்றிப் பேச வேண்டும் (மக்கள் பிரச்சனைக்காக உழைக்க வேண்டும் என்பது கூட இல்லை). பெரும்பாலான இந்தியர்களுக்கு மதம் அப்படி ஒரு முக்கியப் பிரச்சனை என்று நினைக்கிறீர்களா? பசி அளவுக்கு படிப்பு அளவுக்கு அது முக்கிய பிரச்சனையா? நிறையப் பேருக்கு ஓட்டுக்குக் கொடுக்கப்படும் நோட்டு அளவுக்குக் கூட அது ஒரு முக்கியமான விஷயமில்லை. வீட்டுக்கு வெளியில் நடக்கும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் - கவலைப்படாமல் - குருடாக - செவிடாக இருப்பதற்காகவே கொடுக்கப்பட்ட வண்ணத்தொலைக்காட்சிகள் அளவுக்குக் கூட மதம் ஒரு பெரிய விஷயமில்லை நம் மக்களுக்கு.

இது ஒரு புறமிருக்க, அப்படியானால் அரசியலில் மதவாதத்தை ஆதரிப்பது யார்? 1. சாதி அரசியல் செய்ய முடியாத சாதியில் பிறந்தவர்கள், 2. வன்முறையையும் தீவிரவாதத்தையும் கையிலெடுத்திருக்கும் எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க இதுதான் வழி என்று நம்புபவர்கள், 3. ஐம்பதாண்டு காலக் காங்கிரஸ் அரசாங்கங்களின் கேவலங்களைக் கண்டு சகிக்க முடியாமல் - ஏமாற்று அரசியலில் இருந்து விலகி ஓட - ஒரு மாற்று அரசியல் வேண்டி வெதும்பிக் கிடந்தோர் (இவர்கள் பா.ஜ.க. வந்தால் ஏமாற்று அரசியல்களுக்கு இடமிராது என்று நம்புவோர்), 4. நாம் வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததற்குத் தலைகீழான வரலாறுகளைப் படித்து விட்டு வந்தவர்கள் - பா.ஜ.க. தான் அந்தச் சரியான வரலாறை அறிந்த கட்சி என்றெண்ணுபவர்கள், 5. மத மாச்சரியங்களும் எல்லை கடந்த பயங்கரவாதங்களும் அதிகம் நடைபெறும் பிரதேசங்களில் வாழ்பவர்கள், 6. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலில் நுழைவதைக் கண்டு சகிக்க முடியாதவர்கள்.

இதெல்லாம் சொல்வதனால் நான் காங்கிரஸ் அனுதாபியா என்றால் கண்டிப்பாக இல்லை. கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது எல்லோரையும் போல் நானும் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி மாநிலத்தையே நாசம் செய்திருந்தது. நம்பிக்கை ஒளி சிறிதும் தென் படவில்லை. திரு. கிருஷ்ணா அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து இறங்கியபின் இந்த ஆட்சி வந்தபின்தான் அரசாங்கம் இயங்கவே ஆரம்பித்தது. அவரும் தரந்தாழ்ந்த - கேவலமான அரசியலின் பலிகடா என்றுதான் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் ஆட்சியில் உட்கட்டுமான வேலைகள் வெகு வேகமாக நடந்தன. மத்தியிலும் அவர்களுடைய ஆட்சி சிறப்பாகத்தான் இருந்தது. நெடுஞ்சாலைப் பணிகள் அதி வேகமாக நடைபெற்றன. 

ஆனால், பொருளியல் என்ற பாடம் அவர்களுக்குப் புரிபடாத ஒன்றோ என்று தோன்றுமளவுக்குத்தான் அவர்களுடைய ஆட்சி நடைபெற்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒன்று பேசினார்கள். வந்தபின்பு வேறொன்றைச் செய்தார்கள். நல்லவேளை, சொன்னபடிச் செய்யவில்லை என்று மகிழ்ச்சிதான் பட வேண்டும். அப்படியெல்லாம் செய்திருந்தால் - பொருளியல்க் கொள்கைகளைத் திசை மாற்றித் திருப்பியிருந்தால் பெரும் விபத்தாக முடிந்திருக்கும். ஊர் வந்து சேரப்போகிற நேரம் பாதை சரியில்லை என்று எதிர்த் திசையில் பயணித்தால் என்ன ஆகும் என்று சொல்லியா புரிய வைக்க வேண்டும்?! அதை விடக் கொடுமை அவர்கள் சொன்ன திசையில் போயிருந்தால் பெரும் பள்ளத்தாக்குதான் இருந்தது. விழுந்து அழிந்திருப்போம். மனித வள மேம்பாட்டுத் துறையிலும் தேவையில்லாத சர்ச்சைகள் நிறைய நிகழ்ந்தன. சர்ச்சைகள் இல்லாமலே சாதிக்கிற மாதிரியான வாய்ப்புகள் நிறைய இருக்கும் ஒரு துறை அது. கூட்டணி கோல்மால்கள் அப்போதும் நடந்தன. தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ இரண்டு அணிகளிலும் இடம் பிடித்து அவர்களுடைய வாழ்க்கையைப் பாடாய்ப் படுத்தின. மொத்தத்தில், இவ்விருவரில் காங்கிரஸ் ஒரு நாட்டை ஆள்கிற அளவுக்குத் தகுதி மிக்க அறிவாதாரம் கொண்ட கட்சியாகப் படுகிறது. ஏனென்றால், அவர்கள் மனதில் வேறேதும் சர்ச்சைக்குரிய திட்டங்கள் இல்லை (தமக்கும் தம் பிள்ளைகளுக்கும் கோடி கோடியாகக் கொள்ளையடித்துக் காசு சேர்த்து வைக்க வேண்டும் என்கிற திட்டம் இரு சாராரிடமுமே இப்போது மிகுந்து விட்டது வேறு கதை). அவர்களுடைய ஐம்பதாண்டு கால அனுபவம் தேவைப்படும் நேரங்களில் கை கொடுக்கிறது என நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் காங்கிரசை வெறுப்பதற்கு எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. சிங்கள இனவாத அரசின் காட்டுமிராண்டித் தனமான பேரினப் படுகொலைக்குத் துணை போன கட்சி அது. எம் குலக் குழந்தைகளும் பெண்களும் பெரியோரும் இந்தப் புனித பூமியை நோக்கி உயிர்ப்பிச்சை கேட்டுக் கதறியபோதும் காது கொடாத கூட்டம் இந்தக் கூட்டம். பா.ஜ.க. ஆட்சியில் இருந்திருந்தால் ஒருவேளை இந்தக் கணக்குகள் மாறியிருக்கலாம்.  பசிக்காக (இது வேறு பசி) எதையும் திங்கும் நம்ம ஊர்க் கிழட்டு நரிதான் காங்கிரசை விட அதற்குப் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அது காசு கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து சில கடல் மைல் தொலைவில்தான் அத்தனை கொடுமைகளும் நடந்து கொண்டிருந்தன. அப்படியெல்லாம் சேகரிக்கும் ஓட்டு மனிதக் கழிவை விட எந்த வகையிலும் வேறுபட்டதாக எனக்குப் பட வில்லை. எனவே, தானே இந்த இனத்தின் தலைவன் என்று அறிவித்துக் கொண்ட ஓர் ஈனப் பிறவியே இதைக் கண்டு கொள்ளாத போது காங்கிரஸ் மீது கோபம் கொள்வது எனக்குச் சரியாகப் படவில்லை. இப்படி ஒரு கருத்தைக் கொண்டிருப்பதற்கு நான் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளனாகவோ தேச விரோதியாகவோ இருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

இது எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் அரசியலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை காங்கிரஸ் செய்திருக்கிறது. இந்த நாட்டின் தலைசிறந்த பதவியை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தூய - நன்கு படித்த - திறமை மிக்க - தொலை நோக்குப் பார்வை கொண்ட - நடுத்தரக் குடும்பத்தவருக்குக் கொடுத்திருக்கிறது. இது மீண்டுமொருமுறை இந்தியாவில் நடக்குமா? தெரியவில்லை. நடக்கலாம். நடக்காமலும் போகலாம். அப்படியொரு தூயவர் அரசியலில் இருப்பது ஒரு பெரும் விபத்து. அதுவும் இன்னொரு அரசியல் விபத்தால் நிகழ்ந்த விபத்து. சிங் ஒரு பலவீனமான கிங்கா? இருக்கலாம். தேர்தலை வாக்காளராக மட்டுமே சந்திக்கிற ஒருவர் இதைவிட பலமானவராக இருக்க முடியாது. இது அவருடைய பிரச்சனை அல்ல. நம்முடைய பிரச்சனை. நமக்குத்தான் கேவலம். கிரிமினல்கள் எல்லாம் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் மண்ணில் இவ்வளவு சிறந்த மனிதர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாத அளவுக்கு - போட்டியிடவே பயப்படும் அளவுக்கு நம் நாடு இருப்பது, நம் சனநாயகம் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே காட்டுகிறது. காங்கிரசை விமர்சிக்க இன்னுமொரு காரணத்தைக் கொடுப்பதால் அவரது பலவீனம் கண்டு நாம் மகிழ்ச்சி அடைந்தால், நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி - யார்தான் அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்? பிரணாப் முகர்ஜியா, சிதம்பரமா, அல்லது அர்ஜுன் சிங்கா? நேர்மையோடு சொல்லுங்கள் - சிங் அவர்கள் எல்லோரையும் விடச் சிறந்த தேர்வு என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா இல்லையா? 

சோனியாவின் கைப்பாவையாக இருப்பதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தைக் குறைத்து விட்டார் என்று அத்வானி சொல்வதை நீங்கள் ஆதரிப்பவராக இருந்தால், உங்களுக்கு இன்னொன்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - இவரைத் தவிர இந்த இடத்தில் வேறு எவர் இருந்திருப்பினும் இதை விட மோசமாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லோரும் சிங்கி அடிக்கும் தொழிலை சிறு வயதில் இருந்தே கற்றுத் தேர்ந்த முழு நேர அரசியல்வாதிகள். காங்கிரஸ் அரசாங்கத்துக்கு அத்வானி கண்டிப்பாகத் தலைமை ஏற்க முடியாது. அப்படியானால், வேறு யார்? ராகுல் காந்தியா? அப்படியானால், குடும்ப அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது? கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரதமர்தான் பலமாக இருந்திருக்கிறார்? இதே தி.மு.க. அல்லது அ.திமு.க. தான் இரு பெரும் கட்சிகளையும் கூட்டணியில் சேர்ந்து கொண்டு பந்தாடுகிறார்கள். அவமானப் படுத்துகிறார்கள். இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் கூட சென்னை வரும்போதெல்லாம் கூச்சமில்லாமல் தோட்டத்து அம்மாவைப் போய்ப் பார்க்கத்தான் செய்தார் - அவர் ஊழலின் உச்சத்தில் இருந்த போது - எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய காலத்திலும் கூட. 

எனவே, காங்கிரசை வெறுக்கும் எல்லோருக்கும் ஒரே ஒரு கோரிக்கை - கட்சித் தலைமையைத் திட்டுங்கள், அந்தக் கட்சியில் இருக்கும் எல்லாப் பொதுச் செயலாளர்களையும் தாறு மாறாகத் திட்டுங்கள், பிழைப்புக்காக அந்தக் கட்சியிலிருக்கும் ஒவ்வொரு முழு நேர அரசியல்வாதியையும் குண்டக்க மண்டக்கத் திட்டுங்கள்; ஆனால் ஒருபோதும் சிங் போன்ற ஒரு பண்பாளரைத் திட்டாதீர்கள். இன்னும் முதிர்ச்சியடையாத (உலகிலேயே பெரியதாக இருக்கலாம்; பழமையானதாக இருக்கலாம்; வயதோ உருவமோ ஒருபோதும் முதிர்ச்சியின் அடையாளமாக முடியாது என்பதற்குத்தான் நம்மிடம் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றனவே!) ஒரு சனநாயக நாட்டில் முன்னெப்போதும் நிகழாத ஒரு முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. அது ஊக்குவிக்கப்படட்டும். படித்த - பண்புள்ள - அறிவுள்ள - திறமை மிக்க - தூய தலைவர்கள் நிறைய வேண்டியுள்ளது நமக்கு.

* 10/08/2010 ஆங்கிலப் பதிவில் எழுதியதன் தமிழாக்கம்...

கருத்துகள்

  1. இந்தக் கட்டுரை எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆன பின்பு இப்போது திரும்பப் படிக்கும் இவ்வேளையில் - காங்கிரஸ் கட்சி மேலும் துகிலுரியப்பட்டு அம்மணமாய் நிற்கிற காலத்தில் - அக்கட்சி மீதான என் மதிப்பீடு மென்மேலும் குறைந்து விட்டது என்பதையும் உணர்கிறேன். கர்நாடக பா.ஜ.க.வும் அதே போல ஆகி விட்டது. தேசிய அரசியலை மட்டும் மனதில் வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பெரும்பாலும் தமிழர் அல்லாதோர் படிக்க எழுதியது. எனவே, இது அவர்களுடைய அரசியல் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு எழுதியது என்ற சாக்கை ஏற்றுக் கொண்டு விடை பெறுங்கள். நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி