ஊழலும் ஊழல் சார்ந்தவையும்

ஊழல்தான் இன்றைய சூடான விவாதப் பொருள். தனிப் பட்ட முறையில் நானும், ஊழல்தான் மற்ற எல்லாச் சமூகப் பிரச்சனைகளையும் விடப் பெரும் அபாயம் என்று நம்பும் ஓர் ஆள். தீவிரவாதம், பாதுகாப்பு, மதவாதம், பொருளியல், சுகாதாரம், இன்ன பிற வசதிகள் சார்ந்த பிரச்சனைகள் - இவை அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஊழல் என்பது என் கருத்து. ஏனென்றால், இவை எல்லாவற்றிலுமே ஊழல் நுழைந்திருக்கிறது. இவை அனைத்தின் தரக் குறைவுக்கும் ஊழல் ஒரு முக்கியக் காரணம். இந்த ஒரு பிரச்சனை தீர்க்கப் பட்டால் முக்கால்வாசிப் பிரச்சனைகள் தானாகவே சரியாகி விடும். ஓர் ஊழல்வாதிக்கு எதிராக எவ்வளவு பெரிய குறைபாடு கொண்ட எவர் நின்றாலும் அவருக்கே என் வாக்கு.

ஊழல் பற்றிய ஓர் உரையாடலில் ஒருவர் சொன்னார் - "இந்திய ஊழலுக்கு நம் சமூகப் பின்னணியும் ஒரு காரணம்!". குறுக்கு வழியில் காரியம் சாதிப்பது காலம் காலமாகவே நம்மிடம் இருக்கும் ஒரு பயக்க வயக்கம். தெரிந்தவரை வைத்துக் காரியம் சாதிப்பது, சொந்தக்காரர் வைத்துக் காரியம் சாதிப்பது, குடும்பப் பின்னணியை வைத்துக் கூடுதல் பலன் அடைவது, அன்பளிப்புக் கொடுத்துக் காரியம் சாதிப்பது... இப்படி சமூகத்தில் சமநிலை என்பது எப்போதுமே நம்மிடம் இருந்ததில்லை. எனவேதான் ஊழல் நம் இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருக்கிறது. "'எல்லோரும் சமம்!' என்பதே மேற்கத்தியச்  சிந்தனை. நமக்கெல்லாம் அது ஒத்து வராது!" என்று அடித்துச் சொல்கிறார்கள் சில மண்ணின் மைந்தர்கள். என்னத்தச் சொல்ல? 

நம்மால் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் ஊழலை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். குப்பனும் சுப்பனும் ரமேஷுக்கும் சுரேஷுக்கும் சமம் இல்லை என்றால், குப்பனும் சுப்பனும் ஏமாற்றப் படத்தான் செய்வான். ஏமாந்து விட்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது காதைக் கட்டி அறையத்தான் செய்வான். அவன் மேலே வந்தால், அவனும் ரமேஷையும் சுரேஷையும் ஏமாற்றும் வழிகளைத்தான் பார்ப்பான். உடன் இருக்கும் தம் மக்களையும் சேர்த்து ஏமாற்றுவது தவறில்லை; அதுதான் வென்றவர்களின் வாழ்க்கை முறை - வெற்றிக்கான சூத்திரம் என்று விளக்கம்தான் கொடுப்பான்.

ஊழல் பற்றிய எந்த உரையாடலிலும் இப்படியொரு வாதத்தோடு ரெண்டுமூணு அறிவாளிகள் வருவார்கள் - "யார் ஊழல் செய்யவில்லை? நீ செய்யவில்லையா? நான் செய்யவில்லையா? சும்மா எல்லாத்துக்கும் அரசியல்வாதிகளையே குற்றம் சாட்டாதீர்கள். எல்லாத்துக்கும் நாம்தான் காரணம்!". வாதம் நன்றாகத்தான் இருக்கிறது. நாமும் கொஞ்சம் திருந்த வேண்டும் என்று சொல்லும் நல்லெண்ணம் அதில் இருக்கிறது. ஆனால், இது பிரச்சனையை முடித்து வைக்க உதவாது. இன்னொரு விதமாகப் பார்த்தால் இப்படிப் பேசுவது தட்டிக் கழிக்கும் நுட்பங்களில் ஒன்று என்றும் சொல்லலாம். 

அப்படியானால், கையூட்டே கொடுத்துப் பழக்கம் இல்லாத வெளிநாடு வாழ் நம்மவர்கள் இங்கே வந்தால் அது கொடுக்க நிற்கிறதே. அதற்கு யார் பொறுப்பு? எல்லாத்துக்கும் காசு கொடுத்துக் காரியம் சாதிக்கும் நம்மவர்கள் வெளிநாடு போனால் அதெல்லாம் கொடுக்க வேண்டியதில்லையே. அதற்கு யார் பொறுப்பு? அப்படியானால், அது அந்தத் தனி மனிதர்களின் பிரச்சனையா? அந்தந்த மண்ணின் பிரச்சனை. மண்ணின் பண்பாட்டுப் பிரச்சனை. அதில் தனி மனிதர்களுக்கும் துளித் துளியளவு பொறுப்புள்ளது. ஆனால், அந்தத் தனி மனிதர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது பற்றிய அறிவு கொண்டிருந்தாலும் கொண்டிராவிட்டாலும் பண்பாடு குறிப்பிட்ட சில தனி மனிதர்களாலேயே தீர்மானிக்கப் படுகிறது. மற்றவர்கள் செம்மறி ஆட்டுக் கூட்டம். எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டு 'வாழ்க' போட்டு விட்டுப் பின்னால் போபவர்கள். அந்தக் குறிப்பிட்ட சில தனி மனிதர்களைப் பிடிக்கிற விதமாகப் பிடித்தால் பிரச்சனை சரியாகும் என்பதே ஊழல் பற்றித் திரும்பத் திரும்ப உளறிக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கை.

நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் சரியே. நாம் சரியான ஆட்களை நம் தலைவர்களாக - முன்னோடிகளாக - நம் பண்பாட்டைத் தீர்மானிக்கிறவர்களாக அடையாளம் காண வேண்டும் என்பது உண்மையே. அப்படிச் சரியானவர்களை அடையாளம் காண சரியில்லாதவர்கள் பற்றியும் திரும்பத் திரும்பப் பேச வேண்டும். சரியில்லாதவர் என்றால் என்ன என்ற சரியான புரிதல் வர வேண்டுமே.  அதற்காகத்தான் இவ்வளவு பேச்சும் எழுத்தும். அதற்குள்ளும் சாதி, மதம், பின்னணி என எல்லாத்தையும் நுழைக்கிறார்கள் சிலர். அதெல்லாம் பேச வேண்டிய நேரம் இல்லை இது. ஊழல் யார் செய்தாலும் ஊழலே. அதை ஒழிக்க யார் உதவினாலும் அது உதவியே. தவறுக்கு உதவும் சனநாயகத்தை நன்மைக்கு உதவும் மற்றொரு முறை வீழ்த்த முடியுமானால் அதுவும் நமக்கு ஓகேதான்.

திருட வேண்டும் என்று திட்டம் போட்டே வருகிறவர்களை விடுங்கள். அவர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு வீழ்த்துவதும் ஓரளவு எளிது. ஆனால், கனவுகளோடு சாதிக்கப் புறப்படுபவனையும் சமூகத்தைச் சீர்படுத்தக் கிளம்பியவனையும் கூட பணம், பதவி, புகழ் போன்ற போதைகளைக் கொடுத்துப் பாழாக்குவது - திசை திருப்புவது சமூகமே. அதைப் பல முறை பார்த்து விட்டோம் வரலாற்றில். எதற்காக மேலே வந்தோம் என்பதை மறந்து, மேலே இருப்பதே அவர்களின் முதன்மைக் குறிக்கோளாக ஆவதற்கு அவர்களுக்கு நாம் கொடுக்கும் அதீத மரியாதையும் காரணம். 

அதற்கு மூல காரணம் என்ன? 'எது' என்பதை விட 'யார்' என்பதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் தனி மனித வழிபாடு எனும் நம் பண்பாட்டுப் பிரச்சனையே. ஊழலுக்கு எதிரான போரில் அது பற்றியும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் - அன்னாவுக்குக் கொடுக்கும் மரியாதை பற்றிச் சொல்ல வில்லை; அவரால் எதிர்க்கப் படும் - ஊழல்த் துர்நாற்றம் பிடித்த தலைகள் பல அப்படி ஆனதற்கு நம் தனிமனித வழிபாடுதான் காரணம் என்கிறேன்.

அப்படியே பார்த்தால், புதிய நம் புதிய பொருளியல்க் கொள்கையும் இந்தக் கொள்ளைகளுக்குக் காரணம் என்று சிலர் வாதிடுகிறார்கள். அது ஓரளவு சரியே. ஓரளவுதான் சரி. கொஞ்சமாகப் பணம் இருந்த போது கொஞ்சமாகக் கொள்ளை அடித்தோம். நிறையப் பணம் வந்த பின்பு நிறையக் கொள்ளை அடிக்கிறோம். இதற்குப் பொருளியல்க் கொள்கை எப்படிக் காரணமாக முடியும்? நிறையப் பணம் வந்தது தப்பாக முடியாது. எவ்வளவு பணம் வந்தாலும் அதில் ஒரு பங்கைக் கொள்ளை அடிப்பதுதான் என் கொள்கை என்று கொண்டுள்ள தனி மனிதக் கொள்கைதான் காரணம். கொடுக்கப் பட்டுள்ள வரை படத்தைப் பாருங்கள். மஞ்சளாக உள்ள நாடுகள் அனைத்தும் தாராளமயக் கொள்கை கொண்டவர்கள்தாம். அங்கெல்லாம் கொள்ளை ஏன் குறைவாக உள்ளது?

இன்னொரு சாரார் சொல்வது - நம் கல்விமுறை கணிதமும் அறிவியலும் பற்றிப் பேசும் அளவுக்கு தனி மனிதக் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுவதில்லை; கற்றுக் கொடுப்பதில்லை. அதுவும் சரிதான். ஊழல் குறைவான நாடுகளில் அதற்கென்று பாடம் இருக்கிறதென்று இல்லை. பாடம் இல்லாமலே அவர்கள் சரியாக இருக்கலாம். ஆனால், உடம்பில் இவ்வளவு திருட்டுத்தனம் கலந்துள்ள ஓர் இனம் (அல்லது இனங்களின் தொகுப்பு!), அதற்கென்று ஒரு தனிப்பாடம் வைத்துக் கற்றுக் கொடுத்தாலும் தகும் என்கிறார்கள். சரியாகத்தான் படுகிறது. என்ன சொல்கிறீர்கள்?

கருத்துகள்

  1. நல்ல பதிவு நண்பா, கையுட்டு மேல் நாடுகளில் குறைவு அனால் பெரிய அளவிலான corruption அங்கு அதிகம், இதில் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தல், போலீஸ் மேல் நாடுகளில் வாங்கும் சம்பளம் அவர்களுக்கு போதுமானது, நம் ஊரில் அது பல மடங்கு குறைவு, அவர்களுக்கும் சமமான வருமானம் இருந்தால் அவர்கள் ஏன் கையுட்டு பெறவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு நண்பா, கையுட்டு மேல் நாடுகளில் குறைவு அனால் பெரிய அளவிலான corruption அங்கு அதிகம், இதில் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தல், போலீஸ் மேல் நாடுகளில் வாங்கும் சம்பளம் அவர்களுக்கு போதுமானது, நம் ஊரில் அது பல மடங்கு குறைவு, அவர்களுக்கும் சமமான வருமானம் இருந்தால் அவர்கள் ஏன் கையுட்டு பெறவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி அருண். மேல் நாடுகளில் பெரிய அளவிலான ஊழல் உண்டு என்பது உண்மையே. அதுவும் பெரிய அளவில் மக்களைப் பாதிக்காத மாதிரி இருக்கும். ஆனால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் அலைக்கற்றை வியாபாரிகள். நாட்டின் பொருளாதாரத்தையே உலுக்கும் அளவுக்கா அடிப்பது? கீழ்மட்ட ஊழல்களுக்காவது நியாயம் கூறலாம். திகாரில் இருக்கும் திருடர்களுக்கு என்ன கொள்ளை வந்தது? அளவாக அடித்துக் கொண்டு வளமாக வாழலாம்ல. காய்ந்த மாடு கம்புல விழுந்த மாதிரி அடித்து இப்போது ஏன் இப்படி நாற வேண்டும்? உண்மைதான். நம் ஆட்கள் கையைக் கடித்துக் கொண்டே இருக்கும் நிதி நிலையோடு வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருப்பதால், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய் நீரை வடிக்கிறார்கள். எனவே, காவல்த்துறை போன்ற பொதுப் பணிகளில் இருப்பவர்களின் சம்பளம் கூடினால் ஊழல் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்கு அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் வளர வேண்டும். உள்ளார்-இல்லார் இடைவெளியே எல்லாத்துக்கும் காரணம் போல்த் தெரிகிறது. இல்லையா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி