என் காதல் - புடலங்காயும் பூசணிக்காயும்!

ஒரு மனிதனைப் பிடிப்பதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும் அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் அல்லது நம் மீது பாசக்காரராக இருக்க வேண்டும் என்று எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இருக்க வேண்டியதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெயர் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு காரணம் கூட இருக்கலாம். நம் வாழ்வின் மறக்க முடியாத ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடன் இருந்திருந்தால் கூட அத்தகைய பிடிப்புகள் ஏற்படலாம். அது மனிதர்களுக்கு மட்டுமில்லை. பொருட்களுக்கும் கண்ணால் காண முடியாத மற்ற பல்வேறு விஷயங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு பாடல் பிடித்துப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில சொல்லி விளக்க முடிந்தவை. சில அப்படி முடியாதவை. சில நேரங்களில் குரல், சில நேரங்களில் மெட்டு, சில நேரங்களில் இசை என்று பாடலின் அடிப்படையான பண்புகள் தவிர்த்து முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட சூழல் கூட அத்தகைய பிடிப்பைத் தீர்மானிக்க முடியும். முதல் முறையை விடுங்கள், பல முறை கேட்டுப் பிடிக்காத ஒரு பாடல் திடீரென ஒரு குறிப்பிட்ட சூழலில் கேட்டபின் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதுவரை பேசியதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயங்கள். இதற்கென்று ஒரு பத்தியை வீணடித்திருக்க வேண்டியதில்லை என எண்ண வைப்பவை. இன்று திடீரெனச் சிந்தித்துணர்ந்த இது போன்ற இன்னோர் உணர்வுதான் இதை எழுதத் தூண்டியது.

இந்தக் கோட்பாடு உணவுப் பொருட்களுக்கும் காய்கறிகளுக்கும் கூடப் பொருந்தும் என்று இன்றுதான் உணர்ந்தேன். சின்ன வயதில் இருந்தே இட்லி எனக்கு மிக மிகப் பிடித்த ஓர் உணவு. மூன்று வேளையும் முன்னூறு நாட்களுக்குத் தினமும் இட்லி சாப்பிட வேண்டும் என்று சொன்னால் கூட அதை விரும்பிச் செய்வேன் என்று சொல்லித் திரிந்த காலம் உண்டு. பகத் சிங்கின் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" போல், "எனக்கு ஏன் இட்லி பிடிக்கிறது?" என்று யோசிக்க ஆரம்பித்தால், அது முழுக்க முழுக்க அந்தச் சுவையால் ஈர்க்கப் பட்டதால் ஏற்பட்ட பிடிப்பு என்றெண்ணுகிறேன். அது போலவே இரசம் மிகவும் பிடிக்கவும். அதுவும் சுவையால் ஈர்க்கப் பட்ட பிடிப்புதான். அதற்கு மேல் அதில் போடப் படும் மிளகு மற்றும் மற்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஏன் உணர்கிறேன் என்றால், மிளகு முதல் இஞ்சி, பூண்டு, மஞ்சள் பொடி, கீரை, வாழைப்பூ, வாழைத்தண்டு வரை மருத்துவ குணம் கொண்ட பல உணவுப் பொருட்கள் பிடித்துப் போனதன் பின்னணியில் இளம் வயதிலேயே அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த பெருமைகளும் முக்கியக் காரணம். அதனாலேயே அவற்றின் சுவையும் பிடித்துப் போனன. அல்லது வெளியில் தெரிந்தது சுவை மீதான காதலாக இருந்தாலும் உள்ளுக்குள் வேறொரு காரணமும் இருந்தது என்று சொல்லலாம். அழகான பிள்ளை நல்ல குணமாகவும் இருந்தால் எப்படி இருக்கும். அப்படி. இதுவும் சாதாரணம்தான். அடுத்தொரு லிஸ்ட் இருக்கிறது. அதுதான் இன்றைய ஞானோதயத்தில் உதித்தது. அது புடலங்காய் மற்றும் பூசணிக்காய் மீதான காதல்.

புடலங்காயும் பூசணிக்காயும் அதிகம் கிடைக்காத காலத்தில் அவை எங்கு கிடைத்தாலும் வாங்கி விட வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி விடுவேன். வீட்டுக்கு வந்து கூட்டு வைத்துக் கொடுத்தால் அதிகம் சாப்பிட முடியாது. வாங்குவதில் காட்டிய ஆர்வம் தின்பதில் இராது. பல முறை முயன்றும் எதிர் பார்த்த ஏதோவொன்று கிடைக்காதது போலவே உணர்வேன். அதன் பிறகு புடலங்காயும் பூசணிக்காயும் நிறையக் கிடைக்க ஆரம்பித்து விட்ட போதும் அவற்றைப் பார்க்கும் போது ஏற்படுகிற காதலுணர்ச்சி கட்டுப் படுத்தவே முடியாததாகவே இருக்கிறது. வாங்கி வந்தால் சாப்பிடவும் முடியவில்லை. சில பெண்களைக் காதலியாகத்தான் பிடிக்கும்; மனைவியாகப் பிடிக்காது என்று சொல்வீர்களே, அது போல. இந்த இரண்டையும் நான் எதிர் பார்க்கும் சுவையோடு செய்து கொடுத்து விட வேண்டும் என்று வீட்டுக்காரியும் என்னென்னவோ முயன்று பார்த்து விட்டாள். இன்னும் திருப்திப் பட்ட பாடு இல்லை. சின்ன வயதில் கிராமத்தில் இருந்த போது பாட்டி சமைத்த புடலங்காயிலும் பூசணிக்காயிலும் கிடைத்த சுவை இன்னும் கிடைக்கவேயில்லை என்றுதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். இன்று புடலங்காய் சாப்பிடும் போதுதான் "மாத்தி யோசி" என்றோர் அசரீரி வந்தது.

"பாட்டி சமைத்த மாதிரி சுவை கிடைக்கவில்லையா அல்லது அது பாட்டி சமைத்தது என்பதால் இதில் சுவை கிடைக்க மாட்டேன் என்கிறதா?" என்றொரு கேள்வி. நல்ல கேள்வியாகத்தான் இருக்கிறது. பாட்டி ஒன்றும் சமையலில் கை தேர்ந்த ஆள் இல்லை. மனைவியோ சமையலில் புலி. 'அப்படியிருக்கையில் இப்படியேன் தோன்றுகிறது? யோசி... யோசி...' என்று மண்டை குடை பட்டது. செட்டிநாட்டுப் பாணியில் நடுவில் வெட்டவெளி கொண்ட கிராமத்துப் பெரிய வீட்டின் நட்ட நடுவில் பாட்டி புடலங்காயும் பூசணிக்காயும் கொடி போட்டு வளர்த்தார். அதனால் பாட்டியின் காலத்துக்குப் பின்னும் அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் பாட்டியின் நினைவு வரத் தவறுவதேயில்லை. அந்தப் பாட்டிப் பாசம்தான் அல்லது பாட்டியின் நினைவுதான் புடலங்காயாகவும் பூசணிக்காயாகவும் உருவெடுத்து விரட்டிக் கொண்டிருக்கிறதோ என்று இன்று திடீரெனத் தோன்றிய உணர்வை, "விடாதே... விடாதே... அதேதான்!" என்று சொல்லிச் சென்று விட்டது அசரீரி. அப்படியே நீட்டினால் புடலங்காயும் பூசணிக்காயும் மட்டுமில்லை. இது போல எத்தனையோ இனம் புரியாத உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. ஒவ்வொன்றிலும் பாட்டியின் நினைவு போல ஏதோவொன்று இருக்கிறது. சில நினைவிருப்பவை. சில நினைவிலிருந்து ஓய்விலிருப்பவை. இது போலவே என்றாவது ஒருநாள் கிணறு வெட்டும் போது கிளம்பி வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி