தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 3/6

தொடர்ச்சி...

மீடியம் என்ற கதை, கீழ்நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் பொருளியற் சிக்கல்களைச் சிறப்பாகச் சொல்கிறது. விபரம் தெரிந்த காலத்தில் இருந்து அண்டர்வேர் அணிந்து கொண்டிருந்த ஆள், குற்றாலம் போகையில் எல்லோரும் பார்த்துச் சிரிப்பதால், அவமானப் பட்டு தானும் நவ நாகரிக சமூகத்தின் ஒரு பங்காகி விட வேண்டும் என்று விரும்பி ஒரு ஜட்டி வாங்குகிறார். இன்னொரு ஜட்டி வாங்கக் காசு இல்லாமல் ஒரே ஜட்டியைத் தினமும் போடுகிறார். கொஞ்ச காலம் போனதும், அவருடைய வண்டவாளம் வெளியே தெரிய ஆரம்பித்து விடுகிறது. பிடுங்கி எடுக்கும் நாற்றத்தால் புதியதோர் அவமானத்துக்கு உள்ளாகிறார். அதிலிருந்து தப்பிப்பதற்காக, பிச்சை எடுக்காத குறையாக நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு மாற்று ஜட்டி வாங்கப் போகிறார். போகிற இடத்தில் அவர் வைத்திருக்கும் காசுக்கு ஜட்டி இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதை விடக் குறைந்த விலைக்கு ஏதாவது கிடைக்குமா என்பதை மிக நாகரிகமாக, "மீடியம் ரேட்டில் ஏதாவது இல்லையா?" என்பார். இருப்பதிலேயே குறைந்த விலை ஜட்டியை எடுத்துப் போட்ட கடைக்காரன் தன்னைப் பார்த்து ஏளனப் பார்வை பார்க்கிறானோ என்று அங்கும் ஓர் அவமானம். கடைசியில் ஒன்றும் வாங்காமல் படி தாண்டினால் இன்னும் அவமானமாகிப் போகுமே என்று கர்சீப் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

இது போன்ற கதைகளில்தான் தமிழ்ச்செல்வன், வாழ்க்கையை வெகு சிரமப் பட்டு வாழும் எளிய மக்களின் எழுத்தாளனாகி விடுகிறார். இது போன்ற வாழ்க்கை வாழும் மனிதர்கள் இல்லை என்றே நாமெல்லாம் எண்ணுகிறோம். இப்போது கூடப் பரவாயில்லை. இருபது-முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம் மிக மிகச் சாதாரணமாக நிறையப் பேர் அனுபவித்த ஒன்று. அவர்களுடைய வாழ்க்கையைச் சொல்லத்தான் ஆளில்லாமல் இருந்தது.

ஏற்கனவே ப்யூனிடம் கடன் வாங்கியிருப்பதால் அதே ஆளிடம் திரும்பவும் போய்க் கேட்க முடியாதே என்று தவிப்பார். ப்யூனிடம் கடன் வாங்குவதென்பது நாடு முழுக்கவுமே இருக்கும் நடைமுறை போல. எங்கள் ஊரிலும் எல்லா அரசு அலுவலகங்களிலும் இந்த நடைமுறை இருந்தது. நான் படித்த பள்ளிகளிலும் கல்லூரியிலும் கூட இந்த நடைமுறை இருந்தது. சிரமப் பட்டுப் படித்து முன்னுக்கு வந்தவர்கள் ஆசிரியராகவும் அலுவலராகவும் இருப்பார்கள். பத்தாம் வகுப்பில் தவறிய பணக்கார வீட்டுப் பிள்ளை பணம் கொடுத்துப் ப்யூன் வேலை வாங்கி வந்திருக்கும். ப்யூன் வேலை ஓரத் தொழிலாகவும் வட்டிக்கு விட்டு வாங்குதல் முக்கியத் தொழிலாகவும் இருக்கும். முக்கியமாக, வேலை பார்க்கும் இடத்தில் தன்னை விட மேலே இருக்கும் ஆட்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து மாட்ட வைத்திருப்பார்கள். அதனால் பியூன்கள் சில நேரங்களில் தோரணை காட்டுவதும் மேலே இருப்பவர்கள் சில அவமானங்களுக்கு ஆளாக நேரிடுவதும் அடிக்கடிக் கேள்விப் பட்டுள்ள கதை.

அண்டர்வேர்க்காரர் தன் அலுவலகத்தில் ஒரே ஒருத்தனிடம் மட்டும் கடன் வாங்காமல் மிச்சம் வைத்திருப்பார். கூச்சமான கூச்சப் பட்டு ஒரு வழியாக மனதைத் திடப் படுத்திக் கொண்டு அவனிடம் போய்க் கேட்டால், அவன் அஞ்சு ரூபாய் கொடுப்பான். இவரிடம் ரெண்டு ரூபாய் இருக்கும். ஏழு ரூபாயை வைத்துக் கொண்டு ஜட்டிக்கு ஆசைப்பட்டுத் துணிக்கடை வாசலில் கால் வைத்ததுதான் அத்தனை சிக்கலுக்கும் காரணம். கடைசியில் அவர் கடையை விட்டு வெளியேறும் போது நமக்கு அழுகையே வந்து விடும் போல் இருக்கிறது. கடனாளியாகவும் ஆகி, கிடைத்த பணத்தில் நினைத்ததை வாங்க முடியாமலும் போய், அதைப் போய் கர்சீப் வாங்குவதில் வீணடித்து, தன் பிரச்சனைகள் எதுவுமே தீராமல், கூடுதல் அவமானங்களை மட்டும் அனுபவித்துத் திரும்பும் அண்டர்வேர்க்காரரின் சோகம் நம்மை அடுத்த சில நாட்களுக்கு வறுத்தெடுக்கிறது.

தமிழ்ச்செல்வனின் கதைகள் அனைத்திலுமே இப்படியான ஓர் உணர்ச்சி விளையாட்டு இருக்கிறது. பாலா படங்களில் போல கதற வைக்கும் சோகம் இருப்பதில்லை. ஆனால், நீண்ட நேரம் வலிக்கிற மாதிரியான மெல்லிய சோகம் ஒன்று இழையோடுகிறது.

"கருப்பசாமியின்  அய்யா" கதையும் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய பெண்ணுரிமைப் பெர்சனாலிட்டிக்கு ஒத்துவராத திசையில் நகர்கிறது. கருப்பசாமியின் அய்யா குழந்தைத்தனமான ஆசாமியாக இருப்பான். எல்லாத்திலும் விளையாட்டு புத்தி. அவனுடைய பொண்டாட்டியோ பெரும் கொடுமைக்காரியாக இருப்பாள். அவளுடைய கொடுமை தாங்காமல் வீட்டை விட்டெல்லாம் ஓடிப் போய்விட்டுத் திரும்பி இருப்பான். ஒரு பெண் தன் கணவனைக் கொடுமைப் படுத்துவதைச் சொல்லும் அளவுக்கு நம் பெண்ணுரிமைப் போராளிகள் திறந்த மனம் கொண்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டிருக்கும் போது, முடிவு வேறு மாதிரியாக இருக்கும். ஓட்டல்க் கடை வைத்துப் பிழைக்க ஆரம்பித்த பின்னும் வடையைத் தூக்கிப் போட்டு விளையாடும் இவனுடைய புத்திதான் கோளாறு கொண்டது என்று முடிக்க முயன்றிருப்பது போலத் தெரியும். அவன் பொறுப்பான ஆளாக இருந்திருந்தால் பொண்டாட்டி அப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்திருக்க மாட்டாள் என்றோ, பொறுப்பான கணவர்களுக்கு எப்போதுமே பொண்டாட்டி கொடுமை என்பதே இராது என்றோ, பொண்டாட்டி கொடுமைக்கு ஆளாவோர் எல்லோரும் பொறுப்பற்ற புத்தியால்தான் அப்படி ஆவது என்றோ சொல்கிற மாதிரி இருக்கும். நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், பொண்டாட்டி கொடுமை பற்றிக் குற்றம் சாட்டும் முன் அவளுடைய மணாளன் என்னவெல்லாம் கோளாறுகள் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்து விட்டுப் பேசுங்கள் என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

"பொன்ராசின் காதல்" என்ற கதையில், மாமா மகளை லபக்க முயல்கிற பொன்ராசு, வசதி படைத்த மாமாவை மயக்க முடியாமல் மறுதலிக்கப் படுவான். அந்த அவமானம் அவனைச் சும்மா விடாது. இன்னொரு மாமா மகளான சென்பகவல்லியைக் கட்டிக் கொண்டு செட்டிலான பின்னும், தான் யாரென்று நிரூபிக்க வேண்டிய  கட்டாயம் ஒன்று மிச்சம் இருப்பதை மீண்டும் மீண்டும் எண்ணித் துடிப்பான். கடுமையான உழைப்பைச் செலுத்தி வெற்றி ஈட்டப் போராட ஆரம்பித்து விடுவான். ஆசைப்பட்ட மாமா மகள் என்ஜினியருக்கு வாக்கப் பட்டிருப்பாள். இவன்  அதை விடப் பெரிய ஆளாக முயல்வான். இதில் ஒரு நுட்பமான ஆண்-உளவியல் உள்ளது. ஒரு பெண்ணை அடைவதற்காக வெறி கொண்டு உழைக்கும் கூட்டம் ஒன்று உள்ளது போலவே, தன்னை நிராகரித்த பெண்ணை அதற்காக வருந்த வைக்க வேண்டும் என்று உழைக்கும் கூட்டமும் ஒன்று உள்ளது. ஆணைப் பொருத்தமட்டில் வெற்றி ஒன்றுதான் அதைச் செய்ய முடியும். அதனால் அப்படி இறங்கி விடுவார்கள். அதை இந்தக் கதை நன்றாகச் சொல்கிறது.

முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தேன். "வார்த்தை" சிறுகதைதான் தமிழ்ச்செல்வன் கதைகளிலேயே என்னை மிகவும் வருத்திய கதை. தன் மகனுடைய சுற்றுலா ஆசையை நிறைவேற்றி வைக்க முடியாமற் போய் விடுகிற போது மனம் உடைந்து வீட்டுக்குக் கூடத் திரும்பாமல் மடத்திலேயே படுத்து விடுகிற தந்தையின் வலியை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது என்னால். தன்னைச் சுற்றியிருக்கிற பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் ஒரு வசதி தனக்குக் கிடைக்காமல் போகிற போதுதான் அது பெரும் வலியாக இருக்கிறது. அதுவும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிகழும் போது மேலும் கூடுதலாக வலிக்கிறது.

இது போன்ற கதைகள்தாம் நம் அரசியல்-பொருளியல் அமைப்புகளையே கேள்வி கேட்க வைப்பவையாக இருக்கின்றன. இதை ஒரு ஏழைக் குடும்பத்தின்  இயலாமையாக எண்ணி எளிதாக ஒதுக்கி வைத்து விட்டுப் போய் விடலாம். ஆனால், அவ்வளவு சிறிய பிரச்சனையல்ல அது. காசு பெருத்தவன் எல்லாம் உழைத்தவன்-புத்திசாலி; கஞ்சிக்கு வழியில்லாதவன் எல்லாம் சோம்பேறி-முட்டாள் என்கிற பிதற்றல் கூட ஓகே. இருவருக்கும் ஏற்றத்தாழ்வு இருந்தே ஆக வேண்டும் என்கிற வாதங்களைக் கூட சிரமப்பட்டு சீரணிக்க முடிகிறது. ஆனால், பணக்காரனுக்குப் பிறந்தவன் பணக்காரன்; ஏழைக்குப் பிறந்தவன் ஏழை என்கிற நியாயம் மட்டும் என் மண்டைக்கு ஏறவே மாட்டேனென்கிறது. பெற்றோரின் பாவம் பிள்ளைகளுக்கும் போக வேண்டும் என்கிற நியாயம் கொண்ட ஒரே வல்லரசு நாம் வாழும் நாடு என்பதால், இதை அதிகம் பேச வேண்டிய கட்டாயம், நமக்கு நிறையவே இருக்கிறது.

"பிரக்ஞை" சிறுகதை அலுவலகப் பிரச்சனைகளைச் சுற்றி வருகிறது. கதை நாயகனுக்கு அலுவலக நினைப்பு வந்தாலே எல்லாம் கெட்டுப் போகும். கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாகவே ஆகியிருப்பான். காரணம், எல்லோரையும் பயப்பட வைக்கும் ஹெட்க்ளார்க். சரியான கடிப் பார்ட்டி. எல்லோரையும் நடுங்க வைக்கும் எல்லோரையுமே நடுங்க வைக்க ஒருவன் வந்துதானே தீர வேண்டும் வையகத்தில். அது இவனாக இருப்பான் இந்தக் கதையில். ஒவ்வொரு நூறு பேரிலுமோ ஆயிரம் பேரிலுமோ அநீதியை-அதர்மத்தை-அநியாயத்தை அவ்வளவு எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியாத போராளி ஒருத்தன் இருக்கத்தான் செய்வான். குறைந்த பட்சம் திமிர் பண்ணுவதைத் தாங்க முடியாத ஒருத்தன் இருந்தே தீருவான். அப்படியான ஆள் நம் நாயகன். ஒரு நாள் எல்லோர் முன்பாகவும் ஹெட்க்ளார்க்கை எதிர்த்துப் பேசி விடுவான். அன்று முதல் அலுவலகத்தில் அவனும் ஒரு பெரிய ஆளாக மாறி விடுவான். ஹெட்டுக்குப் பயப்படும் எல்லோருமே இவனுக்கும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். அந்த போதையில் இருந்து வெளியேறும் முன்பே, ஹெட் இவனுக்கு ஆப்பு அடித்து விடுவார். தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள், யாரை எங்கு போட்டுக் கொடுத்தால் எப்படி வழிக்கு வருவார்கள்  என்பதைக் கரைத்துக் குடித்து வைத்திருப்பவர்கள். அவர் போடுகிற போட்டில் அரண்டு வழிக்கு வந்து விடுவான் நம்ம ஆள். அன்று முதல் குட் மார்னிங் சொல்வது முதல் குனிந்து நடக்கிற வரை எல்லாம் சரியாக நடக்க ஆரம்பித்து விடும். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன் சுயமரியாதை எல்லாம் பார்த்தால் இப்படித்தான் முடியும் என்கிற நம் தொழிலாளி வர்க்கப் பிரச்சனையைச் சொல்லியிருக்கும் கதை. நம் வாழ்க்கை அனுபவங்கள் காரணமாக எளிதில் மனதில் ஒட்டுகிறது.

"வேறு ஊர்" கதையும் மனதைத் தொடுகிறது. படித்து முன்னுக்கு வந்த மகன் நகரத்தில் செட்டில் ஆகி விடுகிறான். பெற்றோர் கிராமத்தில் இருக்கிறார்கள். மாதாமாதம் மகன் அனுப்பும் பணத்தில் பிழைப்பு ஓடுகிறது பெருசுகளுக்கு. தமக்கு ஒரு சிறு தொகையைக் கொடுத்தாலும் தம் பிள்ளையும் அவனுடைய பிள்ளைகளும் நகரத்தில் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள் அவர்கள். அடுத்த மாதம் மகன் தம்மைப் பார்க்க வரும் போது, தற்போதைய தொகை பற்றவில்லை என்பதையும் தொகையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும்; அதை எப்படிச் சொல்வதோ என்று குழம்பிப் போய் உட்கார்ந்திருக்கும் பெற்றோரிடம், மகன் வேறொரு திட்டத்தோடு வருவான். கிடைக்கும் சம்பளத்தில் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அதனால் அவர்களையும் தன்னோடு நகரத்தில் வந்து தங்கி விடும் படியும் சொல்வான். பகல் நேரத்தில் வேலைக்குப் போய் விடுகிற தம்மால் கவனிக்க முடியாத தம் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்ட மாதிரி இருக்கும் என்று இன்னொரு கணக்கும் இருக்கும். நல்ல வேளை, கழற்றி விடாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் வரை நல்லதுதானே!

இதில் இரண்டு அதிர்ச்சிகள். ஒன்று, தன் மகன் நகரத்தில் நல்லாப் பிழைக்கிறான் என்று அத்தனை நாளும் எண்ணிக் கொண்டிருந்தது தவறாகி விடும். இன்னொன்று, இத்தனை காலமும் வாழ்ந்து பழகி விட்ட ஊரை விட்டுக் காலி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு உள்ளானது. இரண்டாவது பிரச்சனைதான் பெரும் பிரச்சனை. இதிலும் கீழ்நடுத்தர வர்க்கத்து மக்களின் அவலங்கள் சொல்லப் பட்டிருக்கிறது ஒருபுறம் என்றாலும், அதை விட முக்கியமாகச் சொல்லப் பட்டிருக்கும் கருத்து, எவருக்கும் சொந்த ஊர் என்று ஒன்றில்லை என்கிற முதிர்ச்சியான கருத்து. எல்லோருக்குமே தன் இளமைக் காலத்தைக் கழித்த ஊர் பிடிக்கத்தான் செய்யும். ஆனால் இந்த இடத்தை விட்டே நகர மாட்டேன் என்பதே மனித இயற்கைக்கு எதிரானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன் இடம் விட்டு இடம் பெயர்ந்திருக்கிறான். இன்று தன் சொந்த ஊரென்று எண்ணிக் கொண்டு விட்டுச் செல்ல மனமில்லாமல் துடிக்கும் இந்த ஊருக்கும் ஒரு காலத்தில் தம் முன்னோர்கள் தெற்கே இருந்து பஞ்சம் பிழைக்க வந்தது பற்றித் தன் அய்யா சொன்னது பற்றிய பெரியவரின் நினைப்பு,அவருடைய மனதைத் தேற்றிக் கொள்ள மட்டுமில்லாமல், ஊரை விட்டு வந்ததற்காக வருத்தப் பட்டிருக்கும் நம் எல்லோருடைய மனதையும் தேற்றுவதாகத்தான் இருக்கிறது.

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்