ஞாயிறு, மார்ச் 15, 2015

நம்பிக்கைதான் நண்பா!

தோழா
இதுவரை
நான் இழுத்த இழுப்புக்கெல்லாம்
நீ வந்ததற்கு நன்றி

நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் 
நான் வந்ததும்
உண்மைதான்
தவறுதான்
அதற்கொரு வெறும் மன்னிப்பு விடையாகாதுதான்

ஆனால்
இனியும்
தொடர்ந்து இழுபட என்னால் முடியாது
அதற்கான தெம்பும் திராணியும் என்னிடம் இல்லை

எனக்கென்றொரு
வாழ்க்கை
வட்டம்
பயணம்
இருக்கிறது

அதில்
அதற்குள்
என்னோடு
நீ வரமுடியாதது
எனக்கும் வருத்தந்தான்

உனக்கென்றிருக்கிற
வாழ்க்கை
வட்டம்
பயணம்
பற்றி எனக்கும் தெரியும்

அதில்
அதற்குள்
நான் வரமுடியாமைக்கு
உனக்கும் கோபம் என்பது எனக்குத் தெரியுந்தான்

விலகிடல் ஒன்றுதான்
விதியென்று ஆகிவிட்ட பின்பு
விருப்பும் இன்றி
வெறுப்பும் இன்றி
விலகி விடுவதுதான் நியாயம்

வலிந்து போய்
வலி கொடுப்பது
வழியில் முட்கள் வீசுவது
பழி போடுவது
பெயர் கெடுப்பது
பிழைப்பைக் கெடுப்பது
அவதூறு அள்ளி வீசுவது

இப்படி எந்த வேலையும்
உன்னளவுக்கு இல்லாவிட்டாலும்
என்னாலும் செய்ய முடியுமென்றாலும்
நான் செய்ய மாட்டேன் என்று
உனக்குத் தெரியுமென்றாலும்
நீ நிம்மதியாகத் தூங்கப் போகவேண்டும் என்பதற்காக
இங்கேயே கையொப்பமிட்டுக் கொடுக்கிறேன்

இவையெல்லாம்
உனக்கிருக்கிற வசதிகள் கொண்டு
என்னைவிட அதிகமாகவே உன்னால்
எளிதில் செய்திட முடியுமென்றாலும்
நீயும் செய்ய மாட்டாய் என்றுதான்
நானும் நம்பிச் செல்கிறேன்
நிம்மதியாகத் தூங்க...
கையொப்பம் கூடக் கேட்காமல்...

நாளை காலை
எழுந்தபின் தெரியும்

நம் நம்பிக்கைகள் சரிதானா என்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...