இந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து முறை இழுத்து மூடப்பட்ட பின்னும் தொடரும் ஸ்டெர்லைட் காப்பரின் உய்வு, இந்தியாவின் நெளிவுசுளிவான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளது. இப்போதைக்கு. எதிர்பார்த்தபடியே, ஒரு மாசுபடுத்தும் தொழிலுக்கு எதிரான 23 ஆண்டு காலப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர், அது ஒரு மாபெரும் மனித விலை கொடுத்துப் பெறப்பட்டது என்றாலும் கூட. ஆனால் தமிழகத்தின் இந்தக் கடற்கரை நகரத்தில் ஓர் அமைதியான கலக்கம் இருக்கிறது. இத்தோடு போராட்டத்தை நிறுத்திவிட வேண்டுமோ என்று ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 13 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட மே 22 காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அம்மக்களிடம் பேசிப் பார்க்கும் போது அந்த உணர்வு நன்றாகப் புலப்படுகிறது.

அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா லிமிடெடுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமான இந்த ஆலையை மூடக்கோரி, சுமார் 15,000 மக்கள் தெருக்களுக்கு வந்திருந்தனர். தாமிர உருக்கு என்பது மிகப்பெரும் மாசுபடுத்தும் செய்முறை. பிப்ரவரி மாதத்தில் ஸ்டெர்லைட் காப்பர் தன் உற்பத்தியை 0.4 மில்லியன் டன்களிலிருந்து 0.8 மில்லியன் டன்களுக்கு இரட்டிப்பாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து போராட்டங்கள் தொடங்கின.

மக்களின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, மே 24 அன்று இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து, மே 27 அன்று அதை ரூ. 20 இலட்சத்திற்கு உயர்த்தியது அரசு. ஆனால் அது சற்றும் உதவவில்லை. "அவர்கள் குடும்பத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு, அவர்களுக்குப் பணம் கொடுத்தால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேட்கிறார் தூத்துக்குடியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குமாரெட்டியாபுரம்தான் தாமிர ஆலைக்கு மிக அருகில் இருக்கும் கிராமம். அங்கிருந்துதான் பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. அம்மக்கள் வைக்கும் கோரிக்கை மிக எளிமையானது - அது, ஸ்டெர்லைட்டின் நிரந்தர மூடல்.

மே 23 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் மனுக்களை விசாரித்தபின் ஆலையை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தடை விதித்தது. அடுத்த நாள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (த.நா.மா.க.வா. - TNPCB) ஆலைக்குச் செல்லும் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டித்தது. மே 28 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாநில அரசின் ஆணைப்படி, ஆலைக்கு சீல் வைத்து, ஸ்டெர்லைட் காப்பர் நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவித்தார். 1974-ஆம் ஆண்டின் நீர்ப்பாசனச் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி நிலத்தடி நீரை மாசு படுத்தியதாக ஸ்டெர்லைட் மீது குற்றம் சாட்டிய த.நா.மா.க.வா.வின் ஏப்ரல் 9-ஆம் நாளைய ஆணைதான் மூடல் முடிவின் அடிப்படை. ஆனாலும் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்றே தூத்துக்குடி மக்கள் அஞ்சுகின்றனர். 2018-க்கு முன்பு, 1995-இல் ஆலை செயல்படத் தொடங்கியதில் இருந்து நான்கு முறை மூடப்பட்டது. ஆனால் எப்போதும் மீண்டும் திறந்துவிடுகிறது.

தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (தே.சு.பொ.ஆ.நி. - NEERI - ‘நீரி’) மற்றும் த.நா.மா.க.வா. போன்ற நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால், ஸ்டெர்லைட்டால் எப்படியும் இயங்கிக்கொண்டே இருக்க முடிகிறது என்கிறார்கள் இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் ஆர்வலர்கள். தற்போதைய மூடல் ஆணையை நீதிமன்றத்தில் எதிர்த்து மீண்டும் ஸ்டெர்லைட் திறந்துவிடும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 2002-இலிருந்து இந்தப் பிரச்சனையைக் கவனித்து வரும் எழுத்தாளரும் ஆர்வலருமான நித்யானந்த் ஜெயராமன், த.நா.மா.க.வா.வின் ஏப்ரல் 9 ஆணை என்பது தோல்வியடைவதற்காகவே வடிவமைக்கப்பட்டது என்றும் சட்டத்தின் சோதனையை அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஸ்டெர்லைட்டின் தவறுகளைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க முடியாவிட்டால், நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கும். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் இந்த ஆணையை தற்போதைய நிலைமையை நீர்த்துப்போக வைப்பதற்கான “கண்துடைப்பு” என்றே அழைத்துள்ளனர். மறுபுறம், அரசோ, அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்ப்புக்களைத் தூண்டிவிடுவதாக எதிர்க்கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்த எதிர்ப்புகளில் மிகவும் கலங்கிப்போய்த்தான், ஸ்டெர்லைட் எந்தத் தவறும் இல்லையென்று மறுக்கிறது. ஸ்டெர்லைட், மே 28 அன்று, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகவும் வெளிப்படைத்தன்மையோடும் தொடர்ந்து இயங்குகிற வகையிலுமே 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையை இயக்கியிருக்கிறோம்," என்று கூறியிருக்கிறது. அதிகாரிகள் மாசுபாடு குறித்து எந்தச் சான்றும் மேற்கோள் காட்டவில்லை என்பதால் தற்போதைய மூடலை அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் எதிர்க்கும் என்றே ஸ்டெர்லைட்டின் பக்கம் இருந்து ஊடகங்களுக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. இப்போதைக்குப் பொதுமக்களின் கோபம் குறையட்டும் என்று காத்திருக்கிறது. அவ்வளவுதான்.

3,500 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதோடு தன் வணிகப் பரிமாற்றங்களின் மூலம் 35,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் ஸ்டெர்லைட் கூறுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் தாமிரத்தில் 36 சதவிகிதம் இந்த ஆலைதான் உற்பத்தி செய்கிறது. இந்த மூடல், தாமிரத் தொழிலில் மட்டுமல்லாமல், வாகன உற்பத்தி போன்ற மேலும் பல உற்பத்தித் தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதன் தொழில் முக்கியத்துவமும் அந்தப் பகுதியின் பொருளாதாரமும் எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடும் சுகாதாரப் பாதிப்பும் உண்மை.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, 2008-இல், "தூத்துக்குடி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெடைச் சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள சுகாதார நிலை மற்றும் தொற்றாய்வு" [“Health Status and Epidemiological Study Around 5 km Radius of Sterlite Industries (India) Limited, Thoothukudi”] என்ற தலைப்பில் வெளியிட்ட ஓர் அறிக்கை, இந்தப் பகுதியில் உள்ள 50 விழுக்காடு மக்கள் நோய்கள் மற்றும் நீடித்த பிணிகளால் இறப்பதாகவும், 50 விழுக்காடு பெண்களுக்கு இரத்த சோகை இருப்பதாகவும் கூறுகிறது. 49 விழுக்காடு பள்ளிக்குழந்தைகள் எடை குறைவாகவும், 41 விழுக்காடு வளர்ச்சி தடைபட்டவர்களாகவும் இருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. "ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெண்கள், அவர்களில் பலர் 35 வயதுக்குட்பட்டவர்கள், நோய்த்தொற்றுகளுக்குப் பயந்து தங்கள் கருப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக்கொண்டுள்ளனர். குழந்தை கருப்பையில் உயிர்த்திருக்க முடியாமல் போனதால் பலர் கருக்கலைப்புக்கு உள்ளாகியுள்ளனர்," என்கிறார் குமாரெட்டியாபுரத்தைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மூச்சுத் திணறல்கள், தோல் மற்றும் கண் நோய்கள், கருச்சிதைவுகள், புற்றுநோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் பற்றிப் பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர் இம்மக்கள்.

தாமிர உருக்கு என்பது, காற்று, நீர் மற்றும் நில மாசுபாட்டை ஏற்படுத்துவது. இந்தச் செய்முறை, சுவாச நோய்களை உண்டாக்கும் கொடிய மாசுபடுத்தியான கந்தக ஈருயிரிகை (கந்தக டையாக்ஸைடு) வாயுவை வெளியேற்றுகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அறிக்கையில், 13 விழுக்காடு மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது சுற்றியிருக்கும் மற்ற பகுதிகளைவிட மிகவும் அதிகம். இந்த உருக்குச் செய்முறை, கதிரம் (ரேடான்), இரும்பு, செவ்விரும்பு (மாங்கனீஸ்), ஈயம், உள்ளியம், நைட்ரேட்டுகள், ஃபுளோரைடு ஆகியவற்றையும் வெளியேற்றுகிறது. இவை தொழிற்சாலைக் கழிவுகளின் வழியாக, நீர் ஆதாரங்கள் மற்றும் மண்ணை அடைகின்றன. உருக்குச் செய்முறையில் உள்ள வழக்கமான தூய்மைக்கேடு தவிர்த்து, 1997-க்கும் 2013-க்கும் இடையில் இந்தத் தொழிற்சாலை 27 தொழில்சார் விபத்துக்களையும் வாயுக் கசிவுகளையும் பார்த்துள்ளது, என்கிறார் ஜெயராமன்.

அந்தர்பல்டி

‘நீரி’ அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் ஸ்டெர்லைட் அதன் பொறுப்பிலிருந்து தப்ப உதவியுள்ளன
"அத்தனை கோளாறுகளுக்கும் பின்பும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் ஸ்டெர்லைட் தொடர்ந்து இயங்க முடிகிறது," என்கிறார் 1995-இலிருந்து இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சூழியலாளர்
ஃபாத்திமா பாபு. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி ஐந்து ஆய்வுகளை (1998,1999, 2003, 2005 மற்றும் 2011) நடத்தி வெவ்வேறு முடிவுகளை வெளியிட்டிருக்கும் ‘நீரி’.

இவற்றில் முதல் ஆய்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு 1998 நவம்பரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1996-இல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் செய்துள்ள மாசுபாட்டுக்கு எதிராக, இப்போது செயல்பாட்டிலில்லாத ‘சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை’ (National Trust for Clean Environment) என்கிற தொண்டு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை நீதிமன்றம் விசாரித்தது. இந்த அறிக்கை, ஆலைக் கட்டுமானத்தின் போதே ஸ்டெர்லைட்டால் மீறப்பட்ட சுற்றுச்சூழல் விதிகளைத் தெளிவாகக் கூறியது.

முதலாவதாக, ‘நீரி’ சொல்வதன்படியே, தாமிர உருக்கு போன்ற அபாயகரமான ஒரு தொழிற்சாலை ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திலிருந்து (Eco Sensitive Zone) 25 கி.மீ. தொலைவுக்கு மேல் இருந்திருக்க வேண்டும் எனும் போது, இந்த ஆலை ‘மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா’வில் (Gulf of Mannar Marine National Park) இருந்து 14 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டது. முறைப்படி அபாயகரமான மாசுபடுத்தும் தன்மையுள்ள ஆலைகளைச் இருக்க வேண்டிய பசுமை வளையத்தை 250 மீட்டரிலிருந்து வெறும் 25 மீட்டராகக் குறைக்க ஸ்டெர்லைட் ஏதோ ஒரு வகையில் த.நா.மா.க.வா.வை சரிக்கட்டியிருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை கண்டறிந்தது.

ஆனால், தொழிற்சாலைக்குள்ளும் அதைச் சுற்றிலும் ஈயம், நீலீயம் (காட்மியம்), மதிமம் (செலினியம்), உள்ளியம் (ஆர்செனிக்),வெளிமம் (மக்னீஷியம்), தாமிரம் ஆகிய நிலத்தடி நீர் மாசுபடுத்திகளை அனுமதிக்கத்தக்க அளவுகளுக்கும் அதிகமாகவே கண்டுபிடித்திருந்த போதும், முதல் அறிக்கைக்குப் பின் சில மாதங்களிலேயே, 1999 பிப்ரவரியில், ‘நீரி’, அதன் இரண்டாம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (Environment Impact Assessement - EIA) அறிக்கையில், ஸ்டெர்லைட்டுக்கு ‘சுத்தச் சான்றிதழ்’ (Clean Chit) கொடுத்தது. எடுத்துக்காட்டாக, ஆழ்துளைக் கிணறுகளிலும் தோண்டுகிணறுகளிலும் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளில் உள்ளியம் அனுமதிக்கத்தக்க அளவைவிடக் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக இருந்தது. "இதிலிருந்துதான் ‘நீரி’ காட்டில் மழை கொட்டத் தொடங்கியது. 1999-க்கும் 2007-க்கும் இடையில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கைகள் தயாரிக்கவே இந்த நிறுவனத்துக்கு ஸ்டெர்லைட் ரூ. 1.27 கோடி அளித்திருப்பதாக ‘நீரி’யில் பதிவு செய்த ஒரு தகவல் உரிமைக் (RTI) கேள்விக்கான பதிலில் தெரிகிறது,” என்கிறார் ஜெயராமன். இந்தக் காலத்தில் - 1999, 2003, 2005 ஆகிய மூன்று ஆண்டுகளில் - மூன்று சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. "இவற்றில் எதுவுமே சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி நடத்தப்பட்ட 1998 அறிக்கை போல இந்த நிறுவனத்தின் மீது கடுமையாக இருக்கவில்லை. ஏனென்றால், அந்த அறிக்கை ஒன்றுக்குத்தான் ஸ்டெர்லைட்டிடம் இருந்து ‘நீரி’ பணமே வாங்கவில்லை,” என்றும் கூறுகிறார் ஜெயராமன்.

1996-இல் தொடுத்த வழக்குக்கான தீர்ப்பு, செப்டம்பர் 2010-இல் வந்தது, அதில் சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட ஆணையிட்டது. அந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மூன்றே நாட்களுக்குள் அதற்குத் தடை வாங்கியது ஸ்டெர்லைட். உச்ச நீதிமன்றம், இன்னொரு மதிப்பீடு செய்யுமாறு ‘நீரி’யை மீண்டும் கட்டளையிட்டது, அதன்படியே மதிப்பீடு செய்து ஜூன் 2011-இல் அறிக்கை சமர்ப்பித்தது ‘நீரி’. இம்முறை வியப்பூட்டும் வகையில், அறிக்கையின் "கவனிப்புகள்" (Observations) பிரிவில், அவர்கள் ஆய்வு செய்த நிலத்தடி நீர் மாதிரிகளில் உள்ளியம், துத்தநாகம், ஃப்ளோரைடு ஆகிய எந்தக் குறிப்பிடத்தக்க மாசுபடுத்தியும் இல்லை என்று கூறினர். ஆனால் அதே ஆய்வில் வழங்கப்பட்ட தரவுகள், பீசோமெட்ரிக் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட 12 மாதிரிகளில் ஆறில் ஃப்ளோரைடின் அளவு அனுமதிக்கத்தக்க அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறின. ஒரு மாதிரியில், ஃப்ளோரைடு அனுமதிக்கத்தக்க அளவைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இருந்தது.

2011 அறிக்கையில், ‘நீரி’, ஆலைக்கு அருகிலேயே 5-23 பெக்கரல்/மீ3 (பெக்கரல் என்பது கதிரியக்கத்தின் ஓர் அலகு) அளவு கதிரியக்க வாயுவான கதிரம் (ரேடான்) இருப்பதைக் கண்டறிந்திருந்தாலும், அனுமதிக்கத்தக்க அளவுகளுடன் ஒப்பிடுவதற்கு எந்தத் தேசியத் தரமோ சர்வதேசத் தரமோ இல்லை என்றது. இது தவறு. ஐக்கிய அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (United States Environment Protection Agency) வெளிப்புறக் கதிர வாயுக்கான வரையறை நிலை 14.8 பெக்கரல் / மீ3. விண்மத்தின் (யூரேனியம்) இயல் கதிரியக்கச் சிதைவிலிருந்து கதிர வாயு வெளியேற்றப்படுகிறது, இதில் ஸ்டெர்லைட்டால் பயன்படுத்தப்படும் தாமிரத் தாதுக்களும் விண்மத்தால் அசுத்தப்படுத்தப்படலாம்.

2011 அறிக்கை, ஆலையைச் சுற்றிலும் மிகப்பெரும் அளவில் இரும்பு, வெளிமம் (மெக்னீசியம்), சுண்ணம் (கால்சியம்), கந்தக உப்பு (சல்பேட்டுகள்) ஆகியவை இருப்பதையும் கண்டுபிடித்தது. ஆனால், ‘நீரி’யோ, உச்சநீதிமன்றம் ஒரு கடுமையான தண்டனையை வழங்குவதற்கு உதவும் வகையில் குற்றச்சாட்டுகளை வைக்காமல், இந்த நிலைமையை மேம்படுத்திக்கொள்ளுமாறு ஸ்டெர்லைட் நிறுவனத்தை அறிவுறுத்தியது. குறிப்பிட்ட சில சான்றுகளில் அதிக அளவு மாசுபடுத்திகள் இருப்பதற்கு ஸ்டெர்லைட்டை நேரடியாகக் காரணம் சொல்ல முடியாது என்று கூடக் குறிப்பிட்டது. அதிகப்படியான இரும்புச் செறிவுக்கு, கரும்பொன்ம உயிரகை (டைட்டேனியம் ஆக்சைடு) தயாரிக்கும் கில்பர்ன் கெமிக்கல்ஸ் லிமிடெட் போன்ற அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளைக் குறை கூறியது. அதன் விளைவாக, உச்சநீதிமன்றம் அதன் 2013 தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளும் சுற்றுப்புறத்திலும் மாசுபாட்டை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டுவிட்டு, ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூடல் ஆணையை ஆதரிக்காமல் விட்டது. மாறாக, ஸ்டெர்லைட்டை ரூ. 100 கோடி அபராதம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டது. உச்ச நீதிமன்றத்தில், ‘நீரி’யும் த.நா.மா.க.வா.வும் ஸ்டெர்லைட் ஒரு மாதிரி ஆலையாக மாறுவதற்கான ஆலோசனைகளை அளித்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பின்பற்றுவதாகவும் ஸ்டெர்லைட் கூறியது. ஆனால் ஸ்டெர்லைட் மாசுபாட்டைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் இப்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் ஜெயராமன்.
ஸ்டெர்லைட் அவமதித்த இன்னொரு நெறிமுறை உள்ளது. 2011 ‘நீரி’ அறிக்கையில், ஸ்டெர்லைட் அதன் செயல்பாட்டுப் பகுதி 102.5 ஹெக்டேர் என்றும் கழிவுப்பொருள் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலும் 65 ஹெக்டேர் கூட்டிக்கொள்ள விரும்புவதாகவும் கூறியது. 2012-இல், த.நா.மா.க.வா. மற்றும் ‘நீரி’ ஆகியவற்றின் கூட்டு ஆய்வு அறிக்கையோ, ஆலையின் செயல்பாட்டுப் பகுதி 172.13 ஹெக்டேர் எனவும், ஆனால் கழிவு மேலாண்மை எதுவும் செய்யப்படவில்லை எனவும் கூறியது. "அதைவிடக் கொடுமை என்னவென்றால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேண்டுகோளுக்கிணங்கச் செய்யப்பட வேண்டிய நிகழ்நேரக் கண்காணிப்பை (Real-time Monitoring) த.நா.மா.க.வா. 2013-இலேயே நிறுத்திவிட்டது,” என்கிறார் சென்னையில் உள்ள எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவருமான ஜீவ கரிகாலன். இதுதான் ஆர்வலர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. த.நா.மா.க.வா. ஏற்கனவே கண்காணிப்பதை நிறுத்திவிட்டதால், அதன் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இனி உச்ச நீதிமன்றத்தில் நிற்காது. இதைத்தான் ஸ்டெர்லைட் பெரிதும் நம்பியிருக்கிறது போலும்.

“இந்தியாவில் மாசுக் கட்டுப்பாடு நிறுவனங்கள் அவற்றின் திறமையின்மைக்காகப் பழிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல” என்கிறார் தழைம (நைட்ரஜன்) மாசுபாடு சார்ந்த ஆய்வுகளில் பணிபுரியும் அறிவியலாளர்களின் அமைப்பான தில்லியைச் சேர்ந்த இந்தியத் தழைமக் குழுமத்தின் (Indian Nitrogen Group) தலைவரான என். ரகுராம். எடுத்துக்காட்டுக்கு, ‘நீரி’ அமைப்பே, சந்தேகத்திற்கிடமான சுற்றுச்சூழல் அறிக்கைகள் தயாரித்ததற்காகப் பல முறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 1993-இல், தாஜ் மகால் மீதான மாசுபாட்டின் விளைவுகள் பற்றிய இரண்டு அறிக்கைகள் தயாரித்து, அதற்கு அங்குள்ள உள்ளூர்த் தொழிற்சாலைகளைக் குறை கூறியது, ஆனால் அந்தப் பகுதியில் உள்ள பெரிய மாசுபடுத்தும் ஆலையான மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அவ்வறிக்கைகளில் இருந்த மாசுபாடு பற்றிய தரவுகளில் பல முரண்பாடுகள் இருந்தன. 2014-இல் கர்நாடக மாநிலத்தில் உள்ள அகநாஷினி கழிமுகத்தில் அமைந்துள்ள தடாதி துறைமுகக் கட்டமைப்பு பற்றிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கையில் இது போலத்தான் குளறுபடி செய்தது ‘நீரி’. கழிமுகத்தின் தொன்மையையும் அழகையும் மறைப்பதற்காக, அந்தப் பகுதியில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களைப் பற்றிக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டி கழிமுகத்தின் பரப்பளவை மிகைப்படுத்திக் காட்டியது மதிப்பீட்டுக் குழு.

"ஸ்டெர்லைட் காப்பர் ஒரு மக்கள் இயக்கத்தின் காரணமாகவே மூடப்பட்டிருக்கிறது, த.நா.மா.க.வா.வோ ‘நீரி’யோ அதற்குக் காரணமல்ல. “இந்தியா சுற்றுச்சூழலில் உலகுக்கே முன்னோடி என்று படம் காட்ட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஓர் எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்," என்கிறார் ரகுராம். "நம் கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாட்டில் உள்ள இரகசியத்தன்மை அவற்றை பல்லில்லாதவையாக்கி விட்டிருக்கின்றன. அறிவியல் முன்னேற வேண்டுமானால் அதற்குப் பொதுமக்களின் கண்காணிப்பு முக்கியம்," என்றும் சொல்கிறார் அவர்.

மாசுபடுத்துபவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்
கட்டுப்பாட்டு முறைமைகள் முழுமையாகப் பழுதுநீக்கப்பட்டு தற்சார்பாக்கப்பட வேண்டும்
நாட்டின் சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட். நம் கட்டுப்பாட்டு அமைப்புகள் எளிதில் வளைத்துப்போடத் தக்கவையாக இருக்கின்றன. அவை மக்களின் பக்கம் நிற்காமல் தொழிற்துறையின் பக்கமே நிற்கின்றன. இந்த ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, மாவட்டத்தை, குறிப்பாக அதன் நீர் வளங்களை, சுத்தம் செய்தலே தூத்துக்குடியின் தேவை. இதில் ஆலையை மூடியாயிற்று.

"அதற்கான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்ற போதும் நிலத்தடி நீர் மறுசீரமைப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று," என்கிறார் ‘நீரி’ நீர்த் தொழில்நுட்பத்தின் முன்னாள் அறிவியலாளர் மனிஷ் ரகாதே. இதில் நிலத்தடி நீரை வெளியில் எடுத்தல், சிகிச்சை செய்தல், மீண்டும் உள்ளே செலுத்துதல் என்று மூன்று வேலைகள் உள்ளன. நீண்ட காலமாகத் தொடர்ந்து வகைதொகையில்லாமல் மாசுபடுத்தப்பட்ட நீர் ஆதாரங்களை அசுத்தம் நீக்கிக் கொண்டுவருவது என்பது தொழில்நுட்பரீதியாகக் கடினமான வேலை என்பதால் இது மிகவும் விலையுயர்ந்ததாகவும் நீண்ட காலம் எடுப்பதாகவும் இருக்கலாம். சில மாசுபடுத்திகளுக்கு நீரில் நீண்ட பிடிப்பு நேரம் உள்ளது. அது சில நேரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீளும். நீரின் ஆதாரம் (நிலத்தடி நீரா மேற்பரப்பு நீரா என்பது), நீரின் அளவு, நீர் ஆழம், நீரில் உள்ள வேதிப்பொருளின் வகை மற்றும் அளவு உட்படப் பல்வேறு காரணிகளைச் சார்ந்து சிகிச்சை மாறுபடும். "தூத்துக்குடியில் நடந்துள்ளது போன்ற நிலத்தடி நீர் மாசுபாடு, இந்தச் சமுதாயத்திற்கு ஒரு சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல் இழப்பு," என்கிறார் ரகாதே.

ஸ்டெர்லைட், அதன் மாசுபாட்டைக் குறைத்துக்கொள்வதற்கும் கழிவுகளை இதைவிட நன்றாக நிர்வகிக்கவும் தயங்குவதற்கு, அவர்களின் தாமிர உற்பத்திக்கான பொருளாதாரக் காரணங்கள் (உற்பத்திச் செலவு, ஆதாயம் போன்றவை) முக்கிய காரணியாக இருக்கலாம். ஒரு நிறுவனம் சந்தையில் போட்டியிடக்கூடிய நிலையில் இருப்பதற்கு, அதன் உற்பத்தி செலவினங்களை இயன்ற அளவு குறைவாக வைத்திருக்க வேண்டும், எனவே, கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க வேறு பல வழிமுறைகளைப் பயன்படுத்தப்பட வேண்டும். "நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய நிர்பந்திக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான தண்டனைகள் இங்கே தேவையான அளவு வலுவாக இல்லை. மாசுபடுத்துவதும் நீதிமன்றத்தில் போராடுவதும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதும் ஸ்டெர்லைட்டுக்கு மலிவாக இருந்ததால், 20 ஆண்டுகளாக நம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,” என்கிறார் தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொண்டு மையத்தின் (Centre for Science and Environment) துணைப் பொது இயக்குனர் சந்திர பூஷன். கொள்திறன் மேம்பாடு, கூடுதலான தற்சார்பு ஏற்படுத்தல் ஆகிய இரண்டு கூறுகளிலும் நம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் பெரும் நிறுவனச் சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன.

"அரசு மற்றும் த.நா.மா.க.வா., அவர்கள் பிறப்பித்த ஆணையை அவர்களே ஆதரித்து நிற்கும் மனத்திட்பத்தோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே ஸ்டெர்லைட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். தற்போதைய ஆதாரங்களை அவர்கள் தற்காத்து வாதாடினால், ஆலை மூடப்பட்டே இருக்கும். அவர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், ஸ்டெர்லைட் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்," என்கிறார் ரகுராம். "இந்தக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் 1974-இல் வடிவமைக்கப்பட்டவை, எனவே பெருமளவில் இவற்றை முழுப்பழுதுபார்ப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. 21-ஆம் நூற்றாண்டின் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன," என்கிறார் பூஷண்.

[இந்தக் கட்டுரை முதன்முதலில் ‘டவுன் டு எர்த்’ (Down To Earth) ஜூன் 16-30 இதழில் ‘தொடர் குற்றவாளி’ (‘Repeat offender’) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது].

விதிமீறல்களுக்குப் பின்னும் உய்வித்திருத்தல்
புத்தகத்தில் உள்ள அனைத்து விதிகளையும் மீறியுள்ளது ஸ்டெர்லைட், ஆனாலும் அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு எழும்பி நிற்கிறது

 • 1992: ஸ்டெர்லைட் முதன்முதலில் மகாராஷ்டிரத்தில் ஒரு தாமிர உருக்கு ஆலைத் திட்டத்தை முன்வைத்தது. அதற்கு ரத்னகிரி மாவட்டத்தில் 202 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 • 1993: மகாராஷ்டிரா மாநில அரசாங்கக் குழு இந்த ஆலை மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அபாயத்தை அளிக்கிறது என்று கண்டுபிடித்தது. மாவட்ட ஆட்சியர் கட்டுமானத்தை நிறுத்திவைத்தார்.
 • 1994: அதைத் தமிழ்நாடு அனுமதிக்கிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (த.நா.மா.க.வா.) சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமான மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்கு வெளியேதான் ஆலை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ‘மறுப்பின்மைச் சான்றிதழ்’ (NOC) அளித்தது. அத்தோடு ஸ்டெர்லைட்டை ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்துமாறும் கேட்டுக்கொண்டது.
 • ஜனவரி 1995: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (MoEF) ஸ்டெர்லைட்டுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது. ஸ்டெர்லைட் அதுவரையிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கவேயில்லை.
 • மே 1995: ஸ்டெர்லைட் கட்டுமானத்தைத் தொடங்க அனுமதித்து த.நா.மா.க.வா. ‘நிறுவல் ஒப்புதல்’ (Consent to Establish) கொடுக்கிறது. ஸ்டெர்லைட்டை ஒரு துரிதச் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்துமாறும் கேட்டுக்கொண்டது. மன்னார் வளைகுடாவில் இருந்து 14 கி.மீ. தொலைவில் ஆலை கட்டப்படுகிறது.
 • 1996: ஸ்டெர்லைட் ஆலை நிலத்தடி நீரையும் காற்றையும் மாசுபடுத்தக் கூடாது என்றும் ஆலையைச் சுற்றிலும் 25 மீட்டர் தொலைவில் பச்சை வளையம் அமைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளோடு ஆலை செயல்படுவதற்கான உரிமத்தை த.நா.மா.க.வா. வழங்குகிறது.
 • நவம்பர் 1998: சென்னை உயர் நீதிமன்றம், ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்யுமாறு தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்துக்குக் (‘நீரி’) கட்டளையிடுகிறது. ஸ்டெர்லைட் தொடர்ச்சியாகப் பல சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை மீறியுள்ளது என்பதை ‘நீரி’ கண்டறிகிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட ஆணையிடுகிறது.
 • டிசம்பர் 1998: சென்னை உயர்நீதிமன்றம் அதன் முந்தைய ஆணையை மாற்றிக்கொண்டு, ‘நீரி’யை இன்னோர் ஆய்வு நடத்துமாறு கட்டளையிடுகிறது.
 • பிப்ரவரி 1999: ‘நீரி’, தொழிற்சாலை அதன் முழுக் கொள்திறனோடு இயங்குவதற்கும் விரிவான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.
 • மார்ச் 1999: த.நா.மா.க.வா., வாயுக் கசிவுகள் காரணமாக ஏற்பட்ட சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பாக உள்ளூர் மக்கள் கொடுத்த புகார்கள் மீது ஸ்டெர்லைட்டுக்கு ‘சுத்தச் சான்றிதழ்’ வழங்கி, கொள்திறனை 40,000 டன்களில் இருந்து 70,000 டன்களுக்கு உயர்த்த அனுமதிக்கிறது.
 • ஜூலை 2003: ஒன்பது ஆண்டு காலத் தாமதத்துக்குப் பின் ஸ்டெர்லைட் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கிறது.
 • செப்டம்பர் 2004: உச்ச நீதிமன்றக் கண்காணிப்புக் குழு (Supreme Court Monitoring Committee - SCMC) ஸ்டெர்லைட்டைப் பரிசோதித்துவிட்டு, ஆலை உற்பத்தி விரிவாக்கத்துக்கான அனுமதி வழங்கப்படக்கூடாது என்று பரிந்துரைக்கிறது.
 • செப்டம்பர் 2004: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஸ்டெர்லைட்டின் கொள்திறனை விரிவாக்க அனுமதியளிக்கிறது.
 • நவம்பர் 2004: ஸ்டெர்லைட் சட்டவிரோதமாக உரிமம் அளிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்குக்கும் மேலான தாமிரம் தயாரிப்பதாக த.நா.மா.க.வா. சொல்கிறது.
 • 2005: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் உச்ச நீதிமன்றத் கண்காணிப்புக் குழுவும், விதிமீறல்கள் இருப்பினும் ஸ்டெர்லைட்டைச் செயல்பட அனுமதிக்குமாறு த.நா.மா.க.வா.வைக் கேட்டுக்கொள்கின்றன.
 • செப்டம்பர் 2010: சென்னை உயர் நீதிமன்றம், 1996 வழக்கில் ஸ்டெர்லைட்டை மூட ஆணையிடுகிறது.
 • அக்டோபர் 2010: சென்னை உயர் நீதிமன்ற ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்கிறது.
 • மார்ச் 2013: மூச்சுத் திணறல், இருமல், கண் பிரச்சனைகள் ஆகியவற்றுக்குக் காரணமான வாயுக் கசிவு பற்றி மக்கள் புகாரளித்ததால், த.நா.மா.க.வா. இன்னொரு முறை ஸ்டெர்லைட்டை மூட ஆணையிடுகிறது. மற்ற தொழிற்சாலைகள்தான் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்று அந்த ஆணையை ஸ்டெர்லைட் எதிர்க்கிறது. மூடல் திரும்பப்பெறப்படுகிறது.
 • ஏப்ரல் 2013: ஸ்டெர்லைட் தூத்துக்குடியை மாசுபடுத்தியது என்று ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்குகிறது,. ஆனால், பொருளாதாரம் மற்றும் வேலைகள் மீதான அதன் விளைவு காரணமாக உச்ச நீதிமன்றம் ஆலையை மூடாமல், ஸ்டெர்லைட்டுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்கிறது.
 • ஏப்ரல் 2018: ஸ்டெர்லைட்டின் சுற்றுச்சூழல் நெறிமுறைகள் மீறல் அடிப்படையில் ஆலையின் ‘செயல்படுவதற்கான ஒப்புதலை’ த.நா.மா.க.வா. புதுப்பிக்க மறுக்கிறது.
 • மே 23, 2018: த.நா.மா.க.வா., ஸ்டெர்லைட்டுக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஆலையின் விரிவாக்கத்தைத் தடை செய்கிறது.
 • மே 28, 2018: தமிழ்நாடு அரசு, ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிடுகிறது.

www.downtoearth.org.in/news/sterlite-typifies-all-that-s-wrong-with-environmental-governance-in-india-60877
Translation of an article written in 'Down to Earth' magazine by Akshit Sangomla...
* 2018 ஆகஸ்ட் கணையாழி இதழில் வெளியானது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்