யாதும் ஊரே: அமேரிக்கா 1

இவ்வளவு நாட்களாக பயணக்கட்டுரைகளை 'கலாச்சார வியப்புகள்' என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றையெல்லாம் தொகுத்து மின்நூலாகவும் வெளியிட்டாகிவிட்டது. காலம் கடந்து, அந்தப் பெயர் சலித்துப்போய் இருக்கிறது இப்போது. அதனால் இதுமுதல் பயணக்கட்டுரைகளுக்கு 'யாதும் ஊரே' என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூலின் அடுத்த பதிப்புக்கும் இதே பெயரை இட்டுக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.

எப்படி இருக்கிறது புதிய பெயர்?

'அமெரிக்கா'வை எல்லோரும் சொல்வது போல 'அமெரிக்கா' என்று சொல்லாமல் ஏன் 'அமேரிக்கா' என்று சொல்ல வேண்டும்? உண்மை என்னவென்றால், தமிழில்தான் அப்படி 'அமெரிக்கா' என்று எழுதுகிறோம். எழுதுவது மட்டுமே அப்படி. பேசும்போது கூடப் பெரும்பாலானவர்கள் 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறோம். சிறு வயதில் 'அமேரிக்கா' என்று சொல்வது சிறிது பட்டிக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று எண்ணி, எழுதுவது போலவே 'அமெரிக்கா' என்று கவனமாக மாற்றிச் சொல்லப் பழகிக்கொண்டோம் என்கிற நினைவும் வருகிறது இந்த வேளையில். பின்னர் அதையே 'யூ. எஸ்.' என்றும் 'ஸ்டேட்ஸ்' என்றும் சொல்வதே நாகரீகம் என்றும் நமக்கு நாமே எண்ணிக்கொண்டு மாற்றிக்கொண்டும் விட்டோம். இப்போது அமேரிக்கா வந்து பார்த்தால்தான் தெரிகிறது - அதை அவர்களே 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறார்கள் (ஒருவேளை இங்கேயும் வெவ்வேறு பின்னணி கொண்ட மக்கள் 'யூ. எஸ்.', 'ஸ்டேட்ஸ்' என்று வெவ்வேறு விதமாக அழைத்துக்கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை). குறிலை நெடிலாக்கவும் நெடிலைக் குறிலாக்கவுமே உருவாக்கப்பட்ட நாடு அமேரிக்கா என்பதால், அவர்களின் பண்பாட்டை - பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டிய கடமை 'வந்தேறி' நமக்கு இருக்கிறது என்பதால், அப்படியே நாமும் செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டேன். தப்பில்லைதானே!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடிய நாளில் இனியும் ஊர் ஊராகப் பயணம் செய்கிற பணி நமக்கு ஒத்துவராது என்ற கனத்த முடிவொன்றோடு குடும்பத்தோடு தாய்மண்ணுக்குத் திரும்பினோம். அதன்பின் சில ஆண்டுகள் வாழ்க்கை நம்மைக் கட்டிப்போட்டு அடித்தது. நன்றாகக் கவனிக்கவும். 'கட்டிப்போட்டு' அடித்தது. வெறுமனே அடிப்பதற்கும் கட்டிப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அடிக்க மட்டும் செய்தால் திருப்பி அடிக்கவும், தப்பி ஓடவும் இடமுண்டு. கட்டிப்போட்டு அடிக்கும் போது அதற்கெல்லாம் இடமில்லை. வாங்கிக்கொண்டு தாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது மனமுடைந்து செத்துப்போக வேண்டும். அப்படியான பயங்கரமான ஒரு வாழ்வை அனுபவித்துத்தான் மீண்டிருக்கிறோம். பெரும் போராட்டங்களுக்கும் மறுபிறப்புக்கும் பிறகு மனைவியின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகளும் சிறிது பெரியவர்களாகிவிட்ட இந்த வேளையில், மீண்டும் 'பயணங்கள் முடிவதில்லை' என்று அடுத்த சுற்றைத் தொடங்கிவிட்டோம். கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பிறவிக்குரிய துன்பங்களை முழுதும் அனுபவித்து முடிந்துவிட்டதால் அடுத்த சில ஆண்டுகள் சிறிது வலியின்றி அமைய வேண்டும் என்று நம்புகிறோம். பார்க்கலாம்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, முந்தைய நிறுவனத்தில் பணிபுரியும் போது, அமேரிக்கா வருவதற்காகப் பெற்றிருந்த விசாவை மூன்று முறை புதுப்பித்துப் புதுப்பித்துப் போட்டுவிட்டு, பல முறை 'அங்கே போக வேண்டும்', 'இங்கே போக வேண்டும்' என்று பாவலா மட்டும் காட்டிவிட்டு, அசந்து படுத்துத் தூங்கிவிட்டிருந்த ஒரு வேளையில் அழைத்து, "பெட்டியைக் கட்டு. இப்போதே புறப்படவேண்டும்" என்றார்கள். எப்போதுமே நம் ராசி அப்படி. எல்லாமே கடைசி நிமிடத்தில்தான் முடிவாகும். அப்படியே அடித்துப் பிடித்து ஓடுகிற மாதிரித்தான் வரும். வழக்கம் போலவே, குடும்பத்தை அழைத்துச் செல்லலாமா இல்லையா என்பதில் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரை குழப்பம். நான்கு மாதங்களுக்கு மேல் என்றால் குடும்பத்தை அழைத்துச் செல்லலாம். வேலையோ சரியாகப் பதினைந்து வாரங்களுக்கு (நமக்குன்னே ஒக்காந்து யோசிச்சு முடிவு பண்ணுவாய்ங்க போல!). "இன்னும் ஒரே ஒரு வாரம் சேத்துப் போட்டுக்குங்க சார்" என்று கெஞ்சிக் கூத்தாடித் தலையசைக்க வைத்துக் கடைசியில் எல்லோருமாகப் புறப்பட்டோம்.

"பயணம் என்றால் இனி நீங்கள் மட்டும் போய்க்கொள்ளுங்கள், வந்துகொள்ளுங்கள்" - "நான் மட்டும் போய்க்கொள்கிறேன், வந்துகொள்கிறேன்" என்று போட்டிருந்த தீர்மானம், ஒரே இரவில் "உங்களை விட்டுவிட்டு நாங்கள் மட்டும் இங்கே கிடந்து சீரழிவதற்கு, எல்லோருமாகச் சேர்ந்தே சென்று ஒரே இடத்தில் கிடந்து சீரழிவது எவ்வளவோ மேல்" - "உங்களை இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் அங்கே போய்த் தனியாகக் கிடந்து சீரழிவதற்கு, எல்லோருமாகச் சேர்ந்தே சென்று ஒரே இடத்தில் கிடந்து சீரழிவது எவ்வளவோ மேல்" என்று மாறியது. வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே மாதிரியான சூழ்நிலையை மீண்டும் மீண்டும் கையில் கொடுத்து வேடிக்கை பார்ப்பதில்தான் இந்த வாழ்க்கைக்கு எவ்வளவு இன்பம்!

ஆனாலும் இந்த முறை எடுத்த முடிவில் தவறில்லை என்றே படுகிறது. முன்பெல்லாம் மனைவியின் உடல்நிலை இருந்த இருப்பில் பயணம் செய்வதே தவறாக இருந்த வேளைகளில் பயணம் செய்யும் முடிவை எடுத்ததாகவும், இப்போதைய சூழ்நிலையிலோ பயணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை - தனியாக விட்டுச் செல்வதுதான் அதைவிடப் பெருந்தவறு என்றும் தெளிவாகப் பேசி முடிவெடுத்தோம் (முடிவு எடுக்கும் போது எப்போதுமே தெளிவாகத்தானே இருப்போம்!).

இப்போதைய புதிய சூழ்நிலையில் பழைய பிரச்சனைகள் பல இல்லை. குழந்தைகள் வயிற்றுக்குள் கருவாகவோ சமீபத்தில் பிறந்த சிசுவாகவோ இல்லாமல் ஓரளவு வளர்ந்துவிட்ட குழந்தைகளாகி இருப்பதே பயணத்துக்குப் பெரும் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதுவே புதியதொரு பிரச்சனையையும் உருவாக்கி இருக்கிறது. குட்டி போட்ட பூனை போல இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பது பிள்ளைகளின் படிப்புக்குப் பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆனால் அதற்கு மகள் பழக்கப்பட்டுவிட்டாள். இப்போதெல்லாம் பள்ளியை - இடத்தை மாற்றாவிட்டால்தான், "என்னப்பா, நீண்ட காலமாக ஒரே இடத்தில் ஓடிக்கொண்டிருப்பது போல இருக்கிறது!" என்று கேட்கத் தொடங்கிவிட்டாள். எனவே, 'இந்த ஒரு முறை மட்டும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு இடமாற்றம் செய்து பார்ப்போம். அதன்பின்பும் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையென்றால் மீண்டும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்வோம்' என்று முடிவு செய்தோம்.

இதற்கு முன்பு சென்ற நாடுகளைவிட பல வகைகளிலும் அமேரிக்கா வேறுபட்ட நாடு. அது எங்களின் இந்த முடிவுக்கு ஏற்றபடிப் பல கூடுதல் வசதிகளையே அளிக்கிறது. மற்ற எல்லா நாடுகளையும்விட எங்கள் பணிக்கு நிறையவே வாய்ப்புகள் குவிந்து இருக்கும் இடம் அமேரிக்கா. வந்துவிட்டால் கொஞ்ச காலம் எப்படியாவது ஓட்டிவிடலாம். வந்த அதே வேகத்தில் விரட்டப்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இப்போதைய சூழ்நிலை மற்ற எல்லா நாடுகளையும்விட இங்கே மோசமாகத்தான் இருக்கிறது. வந்து இறங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக வெளியார்கள் விரட்டிவிடப்படும் கதைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக் கேள்விப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். எனக்கும் கூட வந்திறங்கிய அடுத்த மாதமே, "உனக்குக் கொடுத்திருந்த கெடு முடிந்துவிட்டது. புறப்படு" என்று தகவல் வந்தது. முன்பெல்லாம் வந்துவிட்டால் ஆறு ஆண்டுகள் ஓடும். இப்போதெல்லாம் எல்லோருக்குமே ஆறு மாதம் - ஒரு வருடம் என்று கெடு கொடுத்துவிடுகிறார்கள். இடமாற்றம் - நீட்டிப்பு என்று கோருபவர்களுக்கு, "அதெல்லாம் கிடையாது, இடத்தைக் காலி பண்ணு" என்று கூறிவிடுகிறார்கள். அதனால் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு ஓட்டிவிடவே விரும்புகிறார்கள் நண்பர்கள். இது பற்றிப் பின்னர் விரிவாகவே பேசுவோம்.

அடுத்ததாக, இதற்கு முன்பு சென்ற இடங்கள் கார் அதிகம் பயன்படுத்தப்படாத இடங்கள். அமேரிக்கா அப்படியல்ல. இங்கே கார் இல்லாவிட்டால் கால் இல்லாதது போல என்பார்கள். கார் இல்லாத வீடுகளே இல்லை. எனவே இங்கே வருகிற எவரும் முதல் வேலையாகக் கார் வாங்கிவிடுவார்கள். குடும்பத்தோடு வருகிறவர்களுக்கு அதுவே ஒரு வசதிதான் (வாங்கும்வரை படுகிற பாடு தனிக்கதை). இது பற்றியும் பின்னர் விரிவாகப் பேசுவோம்.

அமேரிக்கா என்றதும் நம் ஒவ்வொருவருக்கும் ஏதோதோ நினைவு வரும். அப்படி எனக்கும் சில உண்டு. மூன்று தலைமுறைகளுக்கு முன்பே எங்கள் பாட்டி ஒருவர், பேருந்து வசதி கூட இல்லாத எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்து அமேரிக்கா வந்து வாழ்ந்துவிட்டுத் திரும்பினார். இங்கே வரும் போது ஒரு மாதிரி வந்தவர், திரும்பி ஊருக்கு வரும் போது வேறு மாதிரி வந்து இறங்கினார் என்பார்கள். அப்படியான நாடு இது. எல்லோருமே அவரை 'அமேரிக்காக் கிழவி' என்றுதான் அழைப்போம். பெரும்பாலானவர்கள் செருப்பே போடாத ஊரில், அவர் காலை மறைத்துக் காலுறையும் காலணியும் அணிவார். தெரியாத மனிதர்களை முறைப்பதைப் பெரிய வெண்ணெய்த்தனம் என்று எண்ணுகிறவர்களுக்கு நடுவில் சிரித்து வரவேற்று "ஹாய்" என்பார். அவ்வப்போது முழுமையாகச் சில ஆங்கிலமும் பேசிப் போடுவார். "நல்லபடிப் போறவனை அரைக்கிறுக்காக்கும் - அரைக்கிறுக்கை முழுக்கிறுக்காக்கிவிடும் ஊர் அமேரிக்கா" என்பார்கள் ஊர்க்காரர்கள். இதில் கோளாறு பாட்டியினுடையதா ஊரினுடையதா என்பது முடிவற்ற உரையாடலுக்கானது. நாம் எப்படி வந்து இறங்கியிருக்கிறோம் என்று வேறு தெரியவில்லை. திரும்பிப் போகும்போது என்ன நிலையில் போய் இறங்கப் போகிறோம் என்றும் தெரியவில்லை. ஊர் திரும்பும் போது ஊரில் நம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து வந்திறங்கும் போது எப்படி இருந்திருப்போம் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ஊர்க்காரர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவுக்கு வெளியே நம் நண்பர்கள் அதிகம் பணிபுரியும் நாடு அமேரிக்காதான்.

கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே சொல்லிவைத்த மாதிரிச் சொல்வதும் இதுதான் - "உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நாடும் ஒரு விதம் என்றாலும், மற்ற எல்லா நாடுகளையும் விட முற்றிலும் மாறுபட்ட நாடு அமேரிக்கா. அங்கே இருந்திருக்கிறேன் இங்கே இருந்திருக்கிறேன் என்கிற கதைகள் எதுவும் எடுபடாமல் போய்விடுகிற இடம் இது. இங்கே இருக்கும் மனிதர்கள் வேறு மாதிரியானவர்கள். இங்கே வந்து இறங்கியதுமே ஒரு மாற்றம் வரத் தொடங்கும். மனிதர்கள் இங்கே குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இருந்துவிட்டால் வேறொரு மனிதனாக மாறிவிடுவார்கள். அதில் நீயும் தப்ப முடியாது."

அதையும் பார்த்துவிடுவோமே என்றுதான் வந்து இறங்கியிருக்கிறோம். பார்க்கலாம்.

இதற்கு முன்பு பார்த்த நாடுகளைவிட அமேரிக்கா ஒரு வகையில் வேறுபட்டுத்தான் இருக்கிறது. முதலில் சிங்கப்பூர் சென்ற போது, அங்கே இருக்கும் தமிழர்களோ இந்தியர்களோ துளியளவு கூட தம் தமிழ்த்தனத்தையோ இந்தியத்தனத்தையோ விட்டுவிடாமல் வாழ்வதைத்தான் பார்த்துப் பார்த்துப் பிரமித்தோம். இங்கிலாந்து சென்ற போதும் அப்படியே. சிங்கப்பூர் அளவுக்கு இல்லாவிட்டாலும், இந்தியர்களும் மற்றைய நம் பக்கத்து நாட்டுக்காரர்களும் பெரும்பாலும் அந்த அடையாளத்தோடே அங்கே வாழ்கிறார்கள். அது இங்கேயும் இருக்கிறது. ஆனால் மிகவும் குறைவு. அதற்குத் தொலைவும் எண்ணிக்கையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மண்ணுக்கே உரிய சில காரணிகளும் இருக்கலாம். இன்னும் சிறிது காலம் இருந்து பார்த்தால் புரிந்துவிடும்.

அடுத்ததாக நினைவுக்கு வருவது, தன் வாழ்வின் முக்கியமான பகுதியை நீண்ட காலம் பெங்களூரிலேயே கழித்த சுஜாதா, ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் பெங்களூர் வந்து பார்த்துவிட்டு, "பெங்களூரில் அமெரிக்காவில் போல் பெரிய பாலம் எல்லாம் கட்டியிருக்கிறார்கள்" என்று எழுதினார். 'அப்பச் சரி, அமேரிக்கா பார்க்க வேண்டியதில்லை!' என்று எண்ண வைத்த வரி அது!

அடுத்ததாக, ஜெயகாந்தன் அமேரிக்காவைப் பார்த்துவிட்டு வந்து, "இதுதான் மார்க்ஸ் கனவு கண்ட நாடு" என்று சொன்னதாகச் சொல்லி ஞாநி வந்து பார்த்துவிட்டு, அவரும் அமேரிக்காவைப் பற்றி நிறையப் பிரமித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது.

இது போக, "இன்றைய இந்தியா என்பது அப்படியே முப்பது-நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய அமேரிக்கா போல் இருக்கிறது" என்று சொல்லிவைத்தாற்போல் இரண்டு-மூன்று நண்பர்கள் ஒரே மாதிரிச் சொன்னது, "பஜ்ஜியில் எண்ணெய் அதிகம் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் பஜ்ஜியைக் கைப்பற்றத் தன் படைகளோடு வந்திறங்கிய அமேரிக்கா" என்கிற கேலிச்சித்திரம், இரட்டை கோபுரத் தகர்ப்பு, ஒபாமாவின் காலம் என்று  இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளும் உண்டு. அதற்கெல்லாம் மேல், சிறு வயதிலிருந்தே அமேரிக்காவின் உலக அரசியல் அட்டூழியங்கள் பற்றி நாம் கேள்விப்பட்ட - படித்த அத்தனை கதைகளும் அப்படியேதான் மனதில் இருக்கின்றன.

சமீபத்தில்தான், அமேரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின் உள்ள அரசியலை விளக்கும் 'ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்' (Confessions of an Economic Hit Man) என்ற அந்த மிக முக்கியமான நூலையும் படித்தேன். அந்த நூலைப் படித்ததில் நான் புரிந்து கொண்டது இதுதான். அமேரிக்காவில் ஓடும் கார்களின் எண்ணிக்கை பற்றிப் பேசினோம் அல்லவா? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவர்களின் நில அமைப்பு அப்படி. நிறையத் துப்பாக்கி வைத்துக்கொண்டிருப்பதற்குக் கூட இதே காரணந்தான் சொல்கிறார்கள். மிதமிஞ்சிய கார்களின் எண்ணிக்கைதான் எண்ணெய் அதிகம் இருக்கிற பஜ்ஜியைக் கூட விடாமல் விரட்டும் நாடாக அமேரிக்காவை ஆக்கியது. எண்ணெய்க்கு மட்டும் பஞ்சம் வந்துவிட்டால் இங்கே மக்கள் கொதித்துப் போவார்கள். அது ஒருமுறை நடந்தும் இருக்கிறது. எனவே காற்றைப் போல், நீரைப் போல், உணவைப் போல், தம் மக்களின் தலையாய தேவையாக இருக்கிற எண்ணெயை எப்போதும் தங்குதடையின்றிக் கிடைக்கவைக்க வேண்டிய கடமை இங்கே இருக்கிற அரசுக்கு இருக்கிறது. அதற்காக இந்த அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன வேண்டுமானாலும்! அது பற்றி இம்மக்களுக்குக் கவலையில்லை. அவர்களின் வாழ்க்கை எந்த இடையூறும் இல்லாமல் ஓட வேண்டும். இதுதானே எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா மக்களின் ஆசையும்! அதனால்தான், அமேரிக்க அரசியலைப் பற்றிப் பேசும் போதெல்லாம் எல்லோருமே "பிறருக்கு எப்படியோ, தம் மக்களுக்கு உண்மையாய் இருக்கிறார்களே! நம்மூரில் அதுவும் கூட இல்லையே!" என்கிறார்கள்.

அப்படியான அமேரிக்காவில் எனக்கு நான்கு மாத வேலை. அதற்குக் குடும்பத்தோடு வந்து இறங்கினேன். இரண்டு-மூன்று வார நீட்டிப்போடு, வந்த வேலை முடிந்தும் விட்டது. இன்னும் ஓரிரு வாரங்கள் இருந்து வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த இடைவெளியில் அதைப் பற்றி எழுதும் இந்த வேலையையும் பார்த்துவிடலாம் என்று திட்டம். பார்க்கலாம்.

நண்பர் ஒருவன் கேட்டான் - "என்ன நண்பா, நீயும் கடைசியில் அந்தப் பாவநீரில் மூழ்கப் புறப்பட்டுவிட்டாயே!" என்று. உண்மைதான். தனிமனிதர்களைப் போல், குடும்பங்களைப் போல், நிறுவனங்களைப் போல், நாடுகளும் பிழைப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் பாவம் செய்யத்தான் செய்கின்றன. அதற்கு மறைமுகமான காரணமாக மட்டுமே நாம் இருக்கும்வரை நமக்கு மனம் அவ்வளவு வலிப்பதில்லை. 'கறிக் கடைக்காரன் அளவுக்குக் கறி வாங்கிச் சாப்பிடுபவனுக்குப் பாவம் சேர்வதில்லை' என்கிற மாதிரியான தத்துவம்தான். "அதனாலென்ன! திரும்பப் போகும் போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!' என்று அதன் குகைக்குள்ளேயே நின்று கமுக்கமாகக் கத்திவிட்டு ஓடிவிட வேண்டியதுதானே!" என்று இன்னொரு நண்பர் கூடக் கிண்டல் அடித்தார்.

எனக்குப் பள்ளிப் பருவத்தில் நடந்த இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஓரளவுக்கு மனதைத் தேற்றிக் கொண்டேன். ஓரளவுக்குத்தான்.

"எம்ஜியார் பிடிக்காதுன்னா அவர் போடுற சத்துணவு மட்டும் ஏன்டா சாப்புடுற?"

"என்னது, எம்ஜியார் போடுற சத்துணவா? அதென்ன அவங்க அப்பன் வீட்டுக் காசா? அதுல எங்கப்பன் காசும் இருக்குடா வெண்ண!"

(பயணம் தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி