மேற்குத் தொடர்ச்சி மலை

Image result for merku thodarchi malai
சமீபத்தில் மனையாளின் புண்ணியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான படம். பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம். அவ்வளவு சூப்பராக இருந்தது. இப்படியான படங்கள் மிகக்குறைவாகவே தமிழில் 'பார்த்திருக்கிறேன்'. 'வந்திருக்கின்றன' என்று சொன்னால்தானே தப்பாகிவிடும். 'பார்த்திருக்கிறேன்' என்றே சொல்லிவிடுவதே நம்மைப் போன்று சினிமாக் கொட்டகையைவிட்டு வெகு தொலைவில் விலகி வாழ்பவர்களுக்கு நல்லது.

தமிழக-கேரள எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்து மக்களின் கதை. படம் தொடங்கியதுமே அதற்குள் ஒருவராக நாம் மாறிவிட முடியும். நடக்கும் கதையில் நமக்கு ஓர் இடம் இல்லை என்றாலும் அதையெல்லாம் ஓரத்தில் நின்று ஒரு டீயைக் குடித்துக்கொண்டே பார்க்கும் ஒருவராக மாறிவிடலாம். இது ஒரு திரைப்படம் என்று எண்ணக்கூடிய வகையில் ஒரு பிசிறு கூட இல்லை. அப்படியான மக்களில் ஒருவராக அல்லது அவர்களின் வாழ்க்கையை மிக அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு இது மிகவும் எளிது. இதற்குப் பழக்கமே இல்லாத வேறு ஓர் உலகத்தைச் சேர்ந்தவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறோம். அவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நமக்கு இருக்கிற மாதிரியே அவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை ஓரிரு வாரங்கள் எங்கோ ஒரு தூர தேசத்துக்குப் பயணம் சென்று அங்குள்ள இடங்களையும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பார்த்துவிட்டு வருவது போன்ற மேற்கத்தியப் பழக்கவழக்கங்கள் கூடிவரும் இந்தக் காலத்தில், இதையும் அப்படியான ஒரு வாய்ப்பாகக் கருதி நமக்கு மிக அருகிலேயே இப்படியெல்லாம் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் என்ன தப்பாகிவிடப்போகிறது!

உலகத் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே சிறந்த படம் 'இந்தியன்' படந்தான் என்று நீண்ட காலம் நம்பிய - பேசியவன் நான். ஊழல்தான் நம் பெரும் பிரச்சனை என்ற மேம்போக்கான நம்பிக்கையின் அடிப்படையில் அப்படித் தோன்றியது முற்றிலும் தவறில்லைதான். இன்றும் ஊழல் பெரும் பிரச்சனைதான் நமக்கு. ஆனால் அதைவிடப் பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. அவை களையப்படும் போதுதான் ஊழல் ஒழியும். அவற்றையும் சேர்த்து முழுமையுணர்வோடு பேசும் படங்களும் நிறைய வர வேண்டியுள்ளது. அப்படியான ஒரு படம்தான் இது.

மனித வாழ்க்கையை மாற்றிய கண்டுபிடிப்புகளைப் பேசும் போது, நெருப்பு, சக்கரம், கழிப்பறை, மதம், மக்களாட்சி என்று எத்தனையோ பட்டியலிடுவோம். அப்படியான ஒன்றுதான் நிலவுடைமை. நாடோடித் திரிந்தவன் வேளாண்மை செய்யத் தொடங்கியதும் 'ஊர்' கண்டுபிடித்தான். அதன் தொடர்ச்சியாக தனிமனிதர்கள் அளவில்லாமல் நிலத்தை உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்ற மாற்றம் வந்த பின்புதான், மொத்த உலகமும் எல்லோருக்கும் சொந்தம் என்பது போய், மனிதன் அதற்கு முன்பு கண்டிராத எத்தனையோ புதிய பிரச்சனைகளுக்குள் நுழைந்தான். ஒரு கூலித் தொழிலாளி தனக்கென்று சொந்தமாக ஒரு காணி நிலம் வாங்க ஆசைப்படுகிறான். அதற்காக அவன் படும் பாடுதான் படம். எந்த நிலத்தை வாங்க நினைத்தானோ அந்த நிலம் எங்கோ இருந்து பிழைக்க வந்த ஒருவனின் கைக்குப் போய், அதே இடத்தில் வந்து நடப்படும் காற்றாலைகளுக்கு இவன் போய் காவலாளியாகப் பணி புரியும் நிலைக்குப் போய் நிற்பதோடு படம் முடியும்.

"மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை, அதனால் எவன் தன்னை எளிதில் மாற்றிக்கொள்கிறானோ அவன் பிழைத்துக்கொள்வான், இயலாதவன் அழிந்து போவான், இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது, இதுதான் இயற்கையின் நியதி" என்று மிக எளிதாகச் சொல்லிக் கடந்துவிட முடிகிற - குடியிருக்க ஒரேயொரு வீட்டைத் தவிர வேறெதற்கும் நிலம் தேவைப்படாத - அதற்குரிய தவணையை மாதாமாதம் கட்ட முடிகிற வாழ்க்கை அமையப் பெற்ற நம் போன்றவர்கள் நிறையப் பேருக்குத் தெரியாத ஒன்று இருக்கிறது. நாமும் நம் பிள்ளைகளும் கூட அந்த மாற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு வேகமாகப் பல மாற்றங்கள் பின்னணியில் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அன்றைக்கு நமக்காகப் போராட வாடகைக்குக் கூட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அந்த மாற்றத்துக்காகத்தான் நாம் எல்லோருமே இப்போது கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். அப்போது இயற்கையின் நியதி நம்மை என்ன செய்யப் போகிறது, அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களின் முடிவை நெருங்கும் போதுதான் நமக்குப் புரிபடும். இப்போதைக்கு அதற்கான விடை என்ன என்றுதான் தெரியவில்லை.

உலகமயமாக்கல் நம் வாழ்க்கையைப் பெரிதும் வளப்படுத்தியிருக்கிறது. நம்மைப் போன்று எத்தனையோ குடும்பங்களின் வளமான வாழ்க்கைக்கு மன்மோகன் சிங் புண்ணியத்தில் (உங்களில் சிலர் கோபித்துக்கொண்டு, "அது நரசிம்ம ராவ் புண்ணியத்தில்" எனக் கூடும்) திறந்துவிடப்பட்ட இந்தப் பொருளியல் மாற்றம்தான் மிக முக்கியமான காரணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சென்ற தலைமுறையில் ஒவ்வொரு மாமாவும் சித்தப்பாவும் தனக்கென்று ஒரு பசியும் பட்டினியும் கலந்த துயரக்கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கெடுவாய்ப்பு இன்று நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ கிட்டப்போவதே இல்லை. இன்னும் சொல்லப் போனால், மிதமிஞ்சிய உணவும் உணவில் இருக்கும் கொழுப்பும் பசியைவிடப் பெரும் பிரச்சனையாகப் போகும் காலம் மிக அருகில் வந்துவிட்டது. 

ஆனால் இதே உலகமயமாக்கல்தான் வேறொரு சாராரின் வாழ்வை நிரந்தரமாக அழித்திருக்கிறது - இன்னும் வேகமாக அழித்துக்கொண்டு வருகிறது. அதில் நமக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருத்து அது பற்றிய நம் பார்வைகள் மாறுபடலாம். அதுதான் இந்த இயற்கையின் நியதி இப்படியே விட்டுவிடப்பட வேண்டியதா அல்லது அதற்காக ஏதேனும் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் தீர்மானிப்பது. நம் உணவுக்காக இன்னோர் உயிரைக் கொல்வது சரியா தவறா என்பதற்கு எப்படி ஒத்த கருத்து இன்னும் உருவாகவில்லையோ அது போலவே நம் உணவுக்காக - பிழைப்புக்காக எளிய உயிர்களைப் பலி கொடுப்பது (இம்முறை மனித உயிர்கள்) தவறில்லை என்றும் தவறென்றும் நம் உரையாடல்கள் நீண்டுகொண்டே போகலாம். அப்படியான சூழ்நிலையில் அப்படிப் பலியிடப்படப்போகும் மனித உயிர்களுக்காகப் பேசும் படம்தான் இது. இப்போது அந்த இடத்தில் இல்லாததால் நாம் அந்தப் பலிபீடத்தில் எப்போதும் நிறுத்தப்படவே மாட்டோம் என்ற உத்திரவாதம் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக அதன் கொடுமைகளைப் பரிசீலிக்க வேண்டிய சுயநலக் கடமையாவது நமக்கு இருக்கிறதே.

'காதல்', 'ஆடுகளம்', 'பருத்தி வீரன்' போன்ற படங்கள் வந்த போது, அந்தப் படங்கள் என்ன கருத்து சொல்ல வருகின்றன என்பதற்கு அப்பால் அவை காட்சியமைக்கப்பட்ட விதத்தைக் கொண்டு பார்க்கையில் அவை நமக்குப் பெரும் கிளர்ச்சியூட்டும் அனுபவங்களாக இருந்தன. அப்படியே மதுரையிலோ இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலோ போய் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு கிடைத்தது. அதற்கெல்லாம் பல மடங்கு மேலே இந்தப் படம். அது மட்டுமல்ல, இந்தப் படம் எடுத்துக்கொண்டிருக்கும் கருத்தும் பல மடங்கு பெரியது.

நமக்கொன்றும் கேரள எல்லையருகில் உள்ள மலைவாழ் மக்களோடு வாழ்ந்த அனுபவமெல்லாம் இல்லை. ஆனால் வெளியுலகத்தோடு எந்தத் தொடர்புமில்லாத துண்டிக்கப்பட்ட குக்கிராமங்களில் - அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையும் அவர்கள் பேசும் - நடந்துகொள்ளும் விதமும் நிறையவே பழக்கப்பட்டதுதான். அப்படிப் பார்க்கையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வரும் கிராமமும் அங்குள்ள மக்களும் நமக்குப் பழக்கப்பட்டவர்களே.

படத்தில் நடித்திருக்கும் ஒருவர் கூட நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத மாதிரியான நடிப்பு படம் முழுக்கவும். இப்படியான ஒரு வெளியீட்டைக் (output) கொண்டுவர ஓர் இயக்குனர் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை. ஒரு திரைப்படத்தில் இதைப் பிறரிடம் இருந்து வெளிக்கொண்டு வருவது ஒருபுறம் என்றால் அதற்கு முன்பே அந்தப் படத்தின் இயக்குனர் தன் மனதுக்குள்ளேயே ஒரு மனப்படம் எடுத்திருப்பார். அதில் ஒவ்வொரு காட்சியையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அமைத்திருப்பார். அதிலேயே பிசிறில்லாத காட்சியமைப்புகள் செய்திருக்க வேண்டும் அவர். முதலாவது உடல் உழைப்பு. இரண்டாவது மன உழைப்பு. இரண்டுமே கடுமையாக உடசெலுத்தப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இளைஞன் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து இறங்கும் போது முதலில் தனக்குள் இருக்கும் கிராமத்தானை அப்படியே காப்பாற்றிக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. அவன் வாழும் ஊர் மட்டுமில்லை, அவன் உதவி இயக்குனராகப் பணிபுரியும் படங்களும் அவனுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதையும் மீறி அப்படியே தன் ஊரையும் தன் மக்களையும் அப்படியே பத்திரமாக தனக்குள் வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதில்லை. அதனால்தான் கிட்டத்தட்ட 'கிழக்குச் சீமையிலே' வரை அதை வைத்திருந்த பாரதிராஜாவால் அதன் பின்பு அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் அணியும் ஜீன்சும் இடையிடையே அடித்துவிடும் ஆங்கிலமும் அவ்வளவு காலம் அதை இருக்கவிட்டதே நம் பாக்கியம்தான்.

கிராமத்துப் படங்கள் எடுப்பதில் ஒரு பெரிய சிக்கல், அதன் அழுக்கை அப்படியே நுட்பமாக உள்ளடக்க வேண்டும். அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அழுக்கையும் ஒப்பனை போல படப்பிடிப்புக்கு முன்பு அப்பிவிடுவது. அல்லது, நடிகர்களை முழுக்க முழுக்க அந்தக் கிராமங்களில் முக்கி எடுப்பது. அதுவும் அப்படியான கிராமங்களில் பிறந்து வளர்ந்த மனிதர்களையே நடிக்கவைப்பது இன்னும் கூடுதலாக அழகு சேர்க்கும். நடிப்பில், இயல்பாக இருப்பதுதான் - இருக்க வைப்பதுதான் மிகக் கடினமான அழகு. அது இந்தியத் திரைப்படங்களில் மலையாளத்தில்தான் ஓரளவு உயிரோடு இருக்கிறது எனலாம். அவர்களும் கூட இப்போது முன்பு போல இல்லை என்றுதான் மலையாள நண்பர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கும் சுற்றியிருப்பவர்கள் கலர் கலராக விடும் ரீல்களைப் பார்த்து நாமும் அப்படி விட்டால்தான் என்ன என்று அந்த ஆசை வந்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் மலையாளப் படம் போல ஒரு தமிழ்ப் படம் எடுத்திருப்பது, அதுவும் கேரள - தமிழக எல்லையில் உள்ள கிராமங்களை வைத்து எடுத்திருப்பது, அவருக்கான ஊக்கம் மலையாளப் படங்களில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.

பொதுவாகவே ஒவ்வோர் இரண்டாவது மலையாளப் படத்திலும் நிறையத் தமிழ் இருக்கும். அதற்காக, "தமிழைத் தவிர்த்து கேரளமோ மலையாளமோ இல்லை" என்றெல்லாம் அடித்துவிட்டால் அது வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இப்படி வேண்டுமானால் சொல்லலாம். கேரளத்தின் முக்கால்வாசி எல்லை தமிழகத்தோடு இருப்பது போல், தமிழகத்தின் முக்கால்வாசி எல்லை கேரளத்தோடு இல்லை என்பதால், கேரளத்தின் ஒவ்வொரு மாவட்டமும் கடலை ஒட்டியோ தமிழகத்தை ஒட்டியோ இருக்கிற மாதிரி தமிழகத்தின் மாவட்டங்கள் இல்லை என்பதால், இயல்பாகவே கேரளத்தில் தமிழ் இருக்கும் அளவுக்கு தமிழகத்தில் மலையாளம் இல்லை. அது மட்டுமின்றி, கேரளம் செல்லும் தமிழர்கள் தமிழ் பேசியே சமாளிப்பதும் இங்கு வரும் மலையாளிகள் வந்த இரண்டாம் நாளே தமிழ் பேசப் பழகிவிடுவதும்தானே இயல்பாகவே நடப்பது. மலையாளப் படங்களில் இயல்பாகக் காட்சி அமைப்பதால் அவற்றில் தமிழர்கள் தமிழிலேயே பேசுவதாகக் காட்டுவதும், தமிழ்ப் படங்களில் பக்கத்து நாட்டுத் தீவிரவாதி கூட தமிழில் பேசுவது போலக் காட்டுவதும்தானே நமக்கு இயல்பான காட்சி அமைப்பு. அப்படியே பழகிய நமக்கு ஒரு மாற்றத்துக்காக இந்தப் படத்தில் படம் முழுக்கவும் மலையாளம் பேசும் மனிதர்களை அப்படியே காட்டுகிறார்கள். அதுவும் தமிழ்ப் படம் என்றால் மலையாளிகளை மோசடிக்காரர்களாகவே காட்ட வேண்டும், மலையாளப் படம் என்றால் தமிழர்களைக் குளிக்காத பாண்டிகளாகவே காட்ட வேண்டும் என்றில்லாமல், இரண்டு புறமும் இருக்கும் எல்லாவிதமான மனிதர்களையும் காட்டியிருப்பது முதிர்ச்சி மிக்க செயல்.

கேரளத்தையும் கேரளத்துக் காதலியையும் அழகழகாகக் காட்டிவிட்டு தேவையே இல்லாத ஒரு சண்டைக் காட்சியை வைத்து 'ஆட்டோகிராஃப்' படத்தில் ஒரு சிறிய நெருடலை உண்டுபண்ணியிருப்பார் சேரன். அப்படியில்லை இந்தப் படத்தில். அதற்கொரு காரணம் இயக்குனரின் பின்னணியாக இருக்கலாம். எதையுமே ஜாதி நோக்கத்திலேயே பார்த்துப் பழக்கப்பட்டவனுக்கு மற்ற விஷயங்களில் மூளை வேலையே செய்யாது. அப்படியே மதம், மொழி, இனம், பாலினம் என்று எல்லா பேதங்களிலும். எதைப் பார்த்தாலும் அந்த நோக்கத்திலேயே பார்ப்பது. அது போலவே மனிதர்களை வர்க்க ரீதியாகப் பிரித்துப் பார்த்துவிட்டவர்களுக்கு மற்ற பேதங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது. பிழைப்புக்காக எதுவும் செய்யும் கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்குள் 'நாம்' என்ன 'அவர்கள்' என்ன? அவர்களைப் பொருத்த மட்டில் சுரண்டுபவன் ஓரினம். சுரண்டப்படுபவன் ஓரினம். அவ்வளவுதான்.

எந்த நேரமும் கட்சி, மகாநாடு, தொழிலாளர்களுக்காகப் போராட்டம் என்றே ஒரு கிறுக்கு போல அலையும் சகாவுகளைப் பார்த்தவர்களுக்கு சாக்கோ சகாவு பாத்திரம் நன்றாகப் புரியும். அது போலவே விலை போகும் சகாவுகளும் இருக்கும் காலம்தானே இது. அதை இரண்டையுமே துல்லியமாகக் காட்சிப் படுத்திருப்பது அற்புதம்.

கிராம வாழ்க்கை, அதுவும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பழக்கப்பட்டவர்களுக்குக் கண்டிப்பாக அவர்கள் ஊரில் இந்தப் படத்தில் வரும் நாயகன் போல ஒருவரையோ பலரையோ தெரிந்திருக்கும். அந்தக் கைலி, சட்டை, அழுக்கு என்று அத்தனையும் கச்சிதமாக மெய் வாழ்க்கையில் உள்ளபடியே இருக்கிறார். படத்தில் வரும் எல்லோருமே அப்படியான உடைதான் அணிகிறார்கள். கைலி கட்டும் பழக்கமே அருகிவருகிற காலத்தில், கட்டப்படும் ஓரிரு கைலிகளும் நேற்று நெய்து இன்று வாங்கிக் கட்டிய கைலி போலத்தான் இருக்கின்றன நம் உலகத்தில். ஆனால் நம் ஊர்ப்பக்கம் இருப்பது போலவே இந்தப் படத்தில் வரும் கைலிகளும் துவைத்துத் துவைத்து நைத்து சாயம் போக்கிய கைலிகள். நாம் இதுவரை நம் திரைப்படங்களில் கண்ட பெண்கள் எல்லோருமே தாவணி போட்ட பெண்கள் மட்டுமே. நம் கிராமங்களில் சுடிதார் புகுந்துவிட்ட கதையே தெரியாதவர்கள்தாம் இன்னும் திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒருபுறம் என்றால், கிராமத்தில் காட்டு வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களின் சட்டை அணிவது மிகவும் பரவலான ஒரு பழக்கம். அதுவும் இந்தப் படத்தில் நுட்பமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படியான சட்டை அணிந்து வரும் நாயகியும் பட்டையைக் கிளப்புகிறார். இந்தக் கிராமத்துப் பெண்களின் சிரிப்பும் அவர்களின் கிண்டலும், அப்பப்பா... அப்படியே வந்திருக்கின்றன படத்தில்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிற நாயகன் விலை போன சகாவைக் கொலை செய்யும் சாக்கோ சகாவுக்குத் துணையாகப் போய் அவனும் அந்தக் கொலையில் பங்கெடுத்துக் கொள்ளும் காட்சி மிக நுட்பமாகக் கவனிக்க வேண்டியது. கமுக்கமானவன் அவனுக்கே உரிய பாணியில் கமுக்கமாக முடித்து வைப்பான். நகரத்துத் தன்னடக்கம் நமக்குத் தெரியும். ஏகப்பட்ட அறிவை அப்படியே உள்ளுக்குள் வைத்துக்கொண்டு அடக்கமாக வாழ்வார்கள். கிராமத்து அடக்கம் வேறு மாதிரியானது. விட்டால் நூறு பேரைத் தனி ஆளாகக் கொன்று போட்டு வருவான். ஆனால் அவனது வாழ்க்கையோ சமூக அமைப்போ வேறு ஏதொவொன்றோ அவனை அடக்கமானவனாகவே வைத்திருக்கும். உண்மையில் அதுவல்ல அவன். ஆனால் அப்படித்தான் வெளியில் வாழ்ந்து வருவான். அப்படியான ஓர் அடக்கமான மனிதன்தான் நம் கதைத் தலைவன்.

படத்தின் கதையைத் தீர்மானிக்கும் ஓர் ஏலக்காய் மூட்டையை நாயகனோடே அலையும் ஒரு துணைப்பாத்திரம் (இதுவும் அருமையாகக் காட்டப்பட்டிருக்கும் ஒரு பாத்திரம்தான்) தவறுதலாகத் தட்டிவிட்டு அது மலையிலிருந்து கீழே சிதறி விழும் காட்சியில்தான் நம் எல்லோருக்கும் மனம் நொறுங்கும். அப்போது நாயகன் ஓடிவந்து கோபத்தில் ஒரேயோர் அறை விடுவான். அறை வாங்கியவனும் நொறுங்கித்தான் போவான். ஆனால் அப்போதைக்கு வாங்கிய அறை அல்ல பிரச்சனை. அவன் செய்த தவறால் ஒரு பெருங்கனவு நொறுங்கிப் போவதுதான் அப்போதைய பிரச்சனை. அத்தோடு அது முடிந்துவிடும். அதன்பின்பு அவன் மிக இயல்பாக மீண்டும் இவனோடே அலைவான். இதுவும் எளிய மக்களின் உலகம் பற்றிய சரியான பிம்பத்தை நமக்குக் கொடுக்கும் ஒரு காட்சி. இப்படியான ஓர் இழப்பை ஏற்படுத்தியவனை அத்தோடு தீர்த்துக்கட்டி விடுவதும் அம்மக்களின் வாழ்வில் நடக்கக்கூடியதுதான். எல்லோரும் அப்படியில்லை - நம் நாயகன் அப்படியான ஒருவனில்லை என்பதுதான் இதில் சொல்லப்படுவது.

இவை எல்லாவற்றுக்கும் மேல், இந்தப் படத்தில் என்னை அடித்து வீழ்த்தியது. மனிதர்கள் பேசும் விதம்தான். அவ்வப்போது ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடரைச் செருகிப் பேசும் பெருநகர வழக்கம் போல், ஆங்காங்கே தனக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்கள் ஒன்றிரண்டைச் செருகிப் பேசும் சிறுநகர வழக்கம் போல், கிராமங்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதில் அந்த மண்ணுக்கென்று ஒரு மொழி இருக்கும், அதில் வேறெங்கும் கேள்விப்பட முடியாத சில சொற்கள் இருக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான். அதைத்தான் நாம் வட்டார வழக்கு என்கிறோம். அதற்கெல்லாம் அப்பால் பேசும் விதம் என்று ஒன்று இருக்கிறது. சொற்கள் மட்டுமே மொழி அல்ல. ஒரு பாத்திரத்தில் கற்களை நிரப்புவது போல் வைத்துக்கொள்ளுங்கள். இதில் சொற்கள் எனப்படுபவை கற்கள். அவ்வளவுதான். அந்தக் கற்கள் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு விதமானவை என்பதுதான் நாம் இதுவரை பார்த்த படங்கள் அனைத்திலும் காட்டப்பட்டுள்ளது. வட்டார வழக்கு பற்றிய ஆராய்ச்சிகளும் இத்தோடு நின்றுவிடுபவைதான். ஆனால் அந்தக் கற்களைக் கொண்டுள்ள பாத்திரமும் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு விதமானது என்பது எந்தப் படத்திலும் இவ்வளவு நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. நான் நிறையப் படங்கள் பார்த்ததில்லை என்பதால் அதை அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை. 

இதை இப்படிச் சொல்லி விளக்கலாம் என நினைக்கிறேன். என் சொந்த ஊர் பூதலப்புரம் எனும் குக்கிராமம். அதாவது, தந்தைவழிப் பூர்வீகம். நான் பிறந்ததும் பெரும்பான்மையான என் இளமைக் காலத்தைக் கழித்ததும் அதற்கருகில் உள்ள என் தாய் ஊரான நாகலாபுரம் எனும் பெரிய கிராமம் அல்லது சிறுநகரத்தில். அதன் பின்பு அருப்புக்கோட்டை, திருச்செந்தூர், அவ்வப்போது சிவகாசி, மதுரை, சென்னை, பின் நீண்ட காலம் பெங்களூர் என்று என் வாழ்வில் பல ஊர்கள் உண்டு. இதில் நாகலாபுரம் தொடங்கி பெங்களூர் வரை எல்லா ஊர்களின் மொழியும் ஓரளவுக்குச் சிறப்பாக நம் படங்களில் காட்டப்பட்டுவிட்டன எனலாம். இதற்கு முன்பு பார்த்துப் பரவசப்பட்ட கிராமப் படங்களில் நான் கண்டு கட்டுண்டது எல்லாம் நாகலாபுரத்தின் அல்லது அது போன்ற மொழியைத்தான். ஆனால் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட நான் பூதலப்புரத்தை, அதன் மக்களை, அந்த மக்களின் மொழியை இவ்வளவு முழுமையாகக் கண்டதில்லை. இந்தப் படம் முழுக்கவும் அதைக் கண்டேன். அதுதான் இதுவரை பார்த்த படங்களிலேயே சிறந்த படம் என்கிற அளவுக்கு இந்தப் படத்தை மேலே கொண்டுவந்து நிறுத்தியது. மீண்டும் சொல்கிறேன், இவ்விடத்தில் நான் மொழி என்று சொல்வது இட்டு நிரப்பப்படும் கற்களை அல்ல, அவற்றைக் கொண்டிருக்கும் கலனை. சென்னைக்காரர்கள், மதுரைக்காரர்களில் வாயடிப்பவர்களுக்கென்று ஒரு சில நுணுக்கங்கள் உண்டு. அவற்றுள் பொய் அல்லது மிகைப்படுத்தல், புள்ளிவிபரம் போல ஏதோவொன்றை இறைப்பது, சுவாரசியமாகப் பேசுவது, சரியான உச்சரிப்பு, விதவிதமான சொல்லாடல்கள் போன்று சில இருக்கும். அது போல, பூதலப்புரத்தின் எளிய மக்களின் பேச்சில் நான் கண்ட ஒரு முக்கியமான அம்சம், அவர்களின் பேச்சில் நம்மைப் போன்றவர்களுக்கு வீணானதாகவும் வெறுமையானதாகவும் படுகிற சொற்றொடர்கள் நிறைய விரவிக் கிடக்கும். 

அதை இந்தப் படத்தில் ஒரு காட்சியில் அப்படியே முழுமையாக உணர்ந்தேன். நாயகன் தன் தாயை அழைத்துக்கொண்டு பதிவாளர் அலுவலகம் நோக்கி வரும் போது, "வேகமா நடம்மா" என்பான். அதற்கு அவன் தாய், "வேகமாத்தானடா வர்றேன். நான் என்ன மெதுவாவா நடக்கேன்!" என்பார். இதில் இந்த "நான் என்ன மெதுவாவா நடக்கேன்" என்ற சொற்றொடரில்தான் அதை அப்படியே உணர்ந்தேன். இப்படியான சொற்றொடர்களால் நிரப்பப்பட்ட மொழிதான் அவர்களின் மொழி ('எங்களின்' என்று சொல்லாமல் 'அவர்களின்' என்று சொல்வதில்தான் உன் அரசியல் இருக்கிறது என்று யாரேனும் திட்டாமல் இருக்க வேண்டும் இன்று. நாம் பேசும் மொழி அப்படியில்லை என்பதால் மட்டுமே அப்படிச் சொன்னேன். மற்றபடி ஒன்றுமில்லை). விஷயம் நிறைய இல்லாதவனுக்குப் பொய்யும் பொய்யான புள்ளிவிபரமும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த வெறுமையான சொற்றொடர்கள் பேசுவதற்குப் பெரிதாக எதுவும் நிறைய இல்லாத அம்மனிதர்களுக்கு. இது எல்லா ஊர் மொழியிலும் இருப்பதில்லை. இதைப் படிக்கும் பத்தில் ஒன்பது பேருக்கு, 'இதற்குள்ளே இவ்வளவு இருக்கா?' என்றுதான் தோன்றும். அந்த ஒரு காட்சி என் மனதில் இந்தப் படத்துக்கான இடத்தை எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. இதை இயக்குனர் கவனமாகவும் படமாக்கியிருக்கலாம். அல்லது, மிக மிக இயல்பாக அந்த ஊரில் ஒருவராக வாழ்ந்து (அல்லது அப்படியான ஒருவராக மாறி), நடிப்பவரையும் அப்படி வாழவைத்து (அல்லது மாற வைத்து) படமாக்கியிருக்கலாம். எப்படி இருப்பினும் இதுதான் எனக்கு இந்தப் படத்தின் ஆகச் சிறந்த காட்சி. என்னைத் தவிர இந்தப் படத்தைப் பார்த்த ஒருவருக்குக் கூட இது ஒரு பொருட்டான விஷயமாகப் பட்டிருக்குமா என்று தெரியவில்லை. அப்படிப் பட்டிருந்தால் கண்டிப்பாகச் சொல்லுங்கள். நாம் பேசுவதற்கு நிறைய இருக்கக்கூடும்.

அங்கேயே வாழும் மனிதர்களையே இதில் நடிக்க வைத்திருப்போரோ என்ற கேள்வியும் வருகிறது. அதுவும் அவ்வளவு எளிதான வேலையில்லை. கோடம்பாக்கத்திலிருந்து நடிகர்களைக் கொண்டுவந்து இப்படியான பாத்திரங்களில் நடிக்க வைப்பது எவ்வளவு சிரமமோ அதைவிடச் சிரமம் அங்கேயே வாழும் மனிதர்களை நடிகர்களாக மாற்றுவது. கேமராவை ஆன் பண்ணிவிட்டு, "நீ நடி" என்றோ "நீ வாழ்" என்றோ சொல்லிவிட்டால் அவர்களால் சொல்கிறபடியெல்லாம் அப்படியே நடித்துவிடவோ வாழ்ந்துவிடவோ முடியாது. தன் வாழ்க்கை வேறு, இப்போது தன் போன்ற வேறொரு வாழ்க்கையை நடிக்கிறோம் என்கிற உணர்வு எப்படியும் கெடுத்துவிடும். எப்படித்தான் செய்தாரோ மனிதன்.

அத்தா என்ற முகமதியப் பாத்திரம் சூப்பர். அது போல, மலையேற்றத்துக்கு நடுவில் அந்த அத்துவானக் காட்டுக்குள் இருக்கும் கடை, மூட்டை தூக்கும் தன் தொழிலில் தான் எவ்வளவு பெரிய ஆள் என்று இறுமாப்பாகப் பேசி இருமி இருமியே செத்துப் போகும் தொழிலாளி (இதற்குள் மிகப் பெரிய ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. எந்தத் தொழிலாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்தத் தொழிலில் நானே சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று இறுமாப்பாக அலைகிற மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்)... இப்படி , ஒரே காட்சியில் வந்து செல்லும் துணை நடிகர்கள் கூட அப்படியே கச்சிதமாக ஒட்டியிருக்கிறார்கள்.

சாக்கோ சகாவு நடந்து செல்லும் ஒரு காட்சியில் கேமரா அப்படியே மேலே மேலே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் பருந்துப் பார்வையில் காட்டும். அதுதான் ஒளிப்பதிவாளரின் ஒரு சோறு பதம். இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. கதை நடப்பது அவருடைய மண்ணில். அவர் ஊரான பண்ணைபுரமும் வருகிறது. எனவே கதை மாந்தர்கள் அனைவரும் அவருக்கு நன்கு பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனவே இதுதான் இயல்பான கூட்டணி. இதில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்ததற்காக அவர்தான் அதிகம் மகிழ்ந்திருப்பார் - நன்றி கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

இப்படியான ஒரு படத்தைத் தயாரிப்பதன் மூலம் விஜய் சேதுபதி நமக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளார். எனவே அவருக்கு வேண்டிய எல்லா பலமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டி வாழ்த்துவோம். இந்தப் படத்தில் அவரே ஏன் நடிக்கவில்லை என்று உங்களுக்கு வந்த அதே கேள்விதான் எனக்கும் வந்தது. அதற்கு அவரே கேட்டும் லெனின் பாரதி ஒத்துக்கொள்ளவில்லையாம். இது, ஒரு முடிவோடு வந்திருப்பவனின் குணம் போலப் படுகிறது. இல்லையா? முதல் படத்திலேயே இத்தனை சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் அளவுக்கு உலகத் தரத்தில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் லெனின் பாரதி இன்னும் தமிழ்த் திரைத்துறைக்கு எவ்வளவோ கொடுக்கப் போகிறார் என்ற சிந்தனையே நமக்கு எவ்வளவோ ஊக்கத்தையும் பெருமிதத்தையும் கொடுக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். அது மட்டுமில்லை. மொத்தக் குழுவுமே தேடித் தேடிப் பிடித்துச் சேர்க்கப்பட்டிருப்பது படத்தின் தரத்தில் தெரிகிறது. அவர்கள் எல்லோருக்குமே வாழ்த்துக்கள். லெனின் பாரதியின் அடுத்த படத்துக்காக ஆவலோடு காத்திருப்போம். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்