கொரோனாக்கிருமிக்கு முன்பும் அதன் காலத்திலும் அதற்குப் பின்பும் உலகம்: யுவால் நோவா ஹராரியுடன்

யுவால்: இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள் தோலுக்கு மேலேயே நடந்தன. அது இப்போது தோலுக்குக் கீழே போகப் போகிறது. இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால், இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள், ஃபேஸ்புக் அல்லது அமேசான் போன்ற பெருநிறுவனங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அரசாங்கங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அவை இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள், இணையத்தில் எந்தச் செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பனவற்றைப் பற்றியவையே. ஆனால் அவை தோலுக்குக் கீழேயோ, உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்கள் மூளைக்கு உள்ளேயும் என்ன நடக்கிறது என்றோ பார்க்கவில்லை. ஆனால் இப்போது நாம் தெரிந்துகொள்ள விரும்பும் முக்கியமான விஷயம் உடலுக்குள் இருக்கிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா இல்லையா, உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறதா, உங்கள் உடல் வெப்பநிலை என்ன, உங்கள் இரத்த அழுத்தம், உங்கள் இதயத்துடிப்பின் வேகம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இது கண்காணிப்பின் தன்மையையே மாற்றுகிறது. இப்போதைக்கு நோயின் மீதுதான் நம் கவனமெல்லாம் இருக்கிறது. ஆனால் உணர்வுகள் என்பவை நோய்களைப் போலவே உயிரியல் நிகழ்வுகள். உங்களுக்குக் கோவிட்-19 இருக்கிறதா என்று சொல்லக்கூடிய அதே கண்காணிப்பு, நீங்கள் கோபமாக இருக்கும் போது - மகிழ்ச்சியாக இருக்கும் போது - சலிப்பாக இருக்கும் போது அதையும் சொல்ல முடியும். எனவே, நீங்கள் இப்போது இந்த நேர்காணலைப் பார்க்கிறீர்கள் என்றால், உங்களிடம் - உங்கள் மணிக்கட்டில், உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கும் ஓர் உயிரியளவுக் காப்பு (biometric bracelet) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் என்னோடு உடன்படுகிறீர்களா இல்லையா என்பதையும், ‘ஐயோ, இது பயமுறுத்துவதாக இருக்கிறது’ என்று எண்ணுகிறீர்களா, ‘போப்பா, இதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, இந்த ஆள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறான்!’ என்று எண்ணுகிறீர்களா என்பதையும், நீங்கள் சலிப்படைந்தாலும் சரி, வேறு எதுவானாலும் சரி, நான் அதை அறிந்துகொள்ள முடியும். இப்போதிருந்து 10 ஆண்டுகள் கழித்து, வட கொரியா போன்ற ஓரிடத்தில், ஒவ்வொரு குடிமகனும் 24 மணி நேரமும் உயிரியளவுக் காப்பு அணிய வேண்டும் என்றால், எண்ணிப் பாருங்கள். உங்கள் பெருந்தலைவரின் உரையைக் கேட்கும் போது நீங்கள் புன்னகைக்கலாம், கைதட்டலாம், ஆனால் உங்கள் உடலுக்குள் நடப்பதன் மீது உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இராது. உங்கள் பெருந்தலைவர் மேல் நீங்கள் கோபமாக இருந்தால், அவர்களுக்கு அது தெரிந்துவிடும். இது, 1984-இல் ஜார்ஜ் ஓர்வெல் கூடக் கற்பனை செய்து பார்த்திடாத ஒருவித முழுச் சர்வாதிகார அமைப்பு.


கேள்வி: இதுதான் நாம் சந்திக்கப் போகும் முதல் கொள்ளை நோய் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி வைத்துக்கொண்டால், தொலைநோக்கில் நாம் மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஏறக்குறைய நாசமாகிவிட்டது என்றுதான் படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?


யுவால்: மக்களாட்சி நாசமாகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. அப்படியொன்றும் வேறு வழியில்லாமல் போய்விடவில்லை. முதலில், உடல்நலமா தனிமறைவா (privacy) என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மக்களுக்கு அதை இரண்டு வேறு தெரிவுகளாகக் கொடுக்க வேண்டும் என்றே நான் எண்ணவில்லை. ஒரே நேரத்தில் இரண்டையுமே மக்கள் அனுபவிக்க முடிய வேண்டும். இதெல்லாம் முன்பும் பார்த்திருக்கிறோம். நான் என் மருத்துவரிடம் செல்லும் போது, எனக்கு என் உடல்நலமும் வேண்டும், தனிமறைவும் வேண்டும். இரண்டும் வேண்டும். என் மருத்துவர், “ஏய், தொடங்கும் முன்பே, உன் முடிவைச் சொல்லிவிட வேண்டும். உனக்கு உடல்நலம் வேண்டுமா? தனிமறைவு வேண்டுமா? இரண்டில் எது வேண்டும்?” என்று சொல்வதில்லை. இல்லை. எனக்கு இரண்டும் கிடைக்கிறது. என் உடலைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் மருத்துவரிடம் மிக நெருக்கமான விஷயங்களைச் சொல்லலாம். அவரும் என் பாலியல் வாழ்க்கை போன்ற விஷயங்கள் பற்றிக்கூட என்னிடம் கேள்விகள் கேட்கலாம். நானும் நான் சொல்கிற இந்தத் தகவல்களை அவர் வேறு எவரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார் என்று எண்ணி, எனக்கு வேண்டிய சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்காக அவரிடம் அனைத்தையும் நேர்மையாகச் சொல்வேன். அது நமக்குப் புரிவதுதான். இப்போது நாம் பேசும் புதிய கண்காணிப்புகளிலும் அது போலவே இருக்க வேண்டும். நமக்கு இந்தக் கண்காணிப்புகள் வேண்டுந்தான். ஆனால் அது கவனமாகச் செய்யப்பட வேண்டும். முதலில், கொள்ளை நோய்களைத் தடுப்பதை மட்டுமே கவனமாகக் கொண்டு அது மிகவும் குறுகிய நோக்கமுடையதாக இருக்க வேண்டும். எனவே இந்தக் கண்காணிப்பு இதற்கென்றே அமைக்கப்பட்ட சிறப்பு சுகாதார அதிகார அமைப்பால் கையாளப்பட வேண்டும். அது காவல் துறையாகவோ இரகசியப் போலீசாகவோ இராணுவமாகவோ இருக்கக் கூடாது. அது கொள்ளை நோய்களையும் பிற நோய்களையும் பற்றி மட்டுமே கவலைப்படும், வேறு எவருடனும் தகவல்களைக் காட்டாத, இதற்காகவே அமைக்கப்பட்ட சிறப்பு சுகாதார அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். 


மக்களாட்சியைப் பேணிக்காக்க முடியும். அது முழுதும் நாசமாகிவிடவில்லை. நம்மிடம் கூடுதலான கண்காணிப்புகள் இருக்கும் போதெல்லாம் அது எப்போதுமே இரண்டு திசைகளிலும் போகும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். சர்வாதிகாரத்தில் அது ஒரு திசையில் மட்டுமே போகும். உங்களைப் பற்றி அரசாங்கத்துக்கு எக்கச்சக்கமாகத் தெரியும். ஆனால் உங்களுக்கு அரசாங்கம் பற்றி எதுவுமே தெரியாது. எனவே, மக்களாட்சியில் அது இரு வழிகளிலும் செல்ல வேண்டும். ஆம், நாம் குடிமக்களைக் கண்காணிக்க வேண்டுந்தான். அதே வேளையில், அதுவும் குறிப்பாக இந்த நேரத்தில், நமக்குத்தான் அரசாங்கத்தை நிறையக் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இது போன்ற நேரத்தில் அரசாங்கம் எல்லாவிதமான நெருக்கடிநிலை அதிகாரங்களையும் பெற்றுக்கொள்கிறது. அத்தோடு, மிக முக்கியமான முடிவுகளும் எடுக்கிறது. எனவே, நான் ஒரு குடிமகனாக, அரசாங்கம் யாரை மீட்டெடுக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, அரசாங்கம், தன் அமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் உரிமையாளர்களின் பெரும் பெருநிறுவனங்களை மீட்டெடுக்கிறதா அல்லது சிறிய குடும்பத் தொழில்களையும் உணவகங்களையும் கடைகளையும் மீட்டெடுக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன். எனவே, இதுவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். “இல்லை, இல்லை, உங்களை எல்லாம் எங்கள் வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்கவிட முடியாது. அது நிரம்பச் சிக்கல் மிக்கது” என்றெல்லாம் அரசாங்கம் சொல்வதை நான் விரும்பவில்லை. இல்லை, என்னைப் பின்தொடர்வது உங்களுக்கு அவ்வளவு சிக்கலானதாக இல்லை என்றால், அதே நேரத்தில் உங்களைப் பின்தொடர்வதும் எங்களுக்கு அவ்வளவு சிக்கலானதாக இராது. ஒரே நேரத்தில் மேல் நோக்கியும் செல்லும் கீழ் நோக்கியும் செல்லும் இது போன்ற இரட்டைக் கண்காணிப்பு இருந்தால் மக்களாட்சி பாதுகாப்பாகத்தான் இருக்கும்.


கேள்வி: சரி, ஒரு வினாடி, நான் வாதத்திற்காகக் கேட்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியை அதிகரித்து வலியைக் குறைக்க முயற்சிக்கிறவர்கள்தானே! அறியாமையே ஆனந்தம் என்று நம்புகிறவர்கள்தானே! அரசாங்கம் மக்களை இப்படி ஒட்டுமொத்தமாகக் கண்காணிப்பதும் கையாளுவதும் நம் மகிழ்ச்சிக்காகத்தானே! நம் மகிழ்ச்சிக்கு இது முக்கியம் இல்லையா?


யுவால்: நிச்சயமாக இல்லை. இந்தக் கண்காணிப்பையும் கையாளுதலையும் செய்பவர்கள் யார் என்று பாருங்கள். இவர்கள் எல்லாம் நாம் நம்புகிற அளவுக்கு அதிபுத்திசாலிகளாகவோ இரக்கவான்களாகவோ இருந்திருந்தால் இப்போது நாம் அது பற்றியெல்லாம் வாதிடலாம். ஆனால் உலகெங்கும் இது போன்ற கண்காணிப்பு வேலைகள் செய்யும் பெரும்பாலான அரசாங்கங்களைப் பார்க்கும் போது, அவர்கள் எல்லாம் மிகவும் அறிவாளிகளாகவோ மிகவும் இரக்கவான்களாகவோ கூட இருக்க வேண்டும் என்று கூடக் கேட்கவில்லை. இந்த அரசியல்வாதிகள் நிறையப்பேரிடம் மக்களைப் பற்றிய சிறந்த நோக்கங்கள் கூட இல்லை. இதற்கு முன்பும் பல முறை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தாலுமே கூட, பிரச்சனை என்னவென்றால், மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். அரசாங்கம் ஒரு போதும் தவறு செய்யாது என்ற ஊகத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் அமைப்பைக் கட்டினீர்கள் என்றால், அது ஒரு பேரழிவுக்கான வழிமுறையே ஆகும். சர்வாதிகாரங்களிடம் இருக்கும் பெரும் பிரச்சனை என்னவென்றால், ஆம், அவற்றில் சில நன்மைகள் இருக்கின்றனதான், நிறையப்பேரிடம் கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்பதால் முடிவெடுக்கும் செயல்முறையை வேகப்படுத்தலாம், ஒருவர்தான் எல்லா முக்கியமான முடிவுகளையும் எடுக்கிறார், எனவே சொல்லவே வேண்டியதில்லை, அது வேகமாகத்தான் இருக்கும், ஆனால் பிரச்சனை என்னவென்றால், அந்த ஒருவர் தவறு செய்தால், அவர் யாராக இருந்தாலும் இன்றோ நாளையோ தவறு செய்யத்தான் செய்வார், ஒரு போதும் அவர்கள் தம் தவற்றை ஒத்துக்கொண்டு வேறொன்றை முயற்சித்துப் பார்க்கவே போவதில்லை. வழக்கமாகவே அவர்கள் பழியையெல்லாம் எதிரிகள் மேல் போடுவார்கள் அல்லது துரோகிகள் மீது போடுவார்கள். அப்படிப் போட்டுவிட்டு, இந்த எதிரிகளோடும் துரோகிகளோடும் சண்டையிடுவதற்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று கேட்பார்கள். இப்படியே அவர்களுடைய தவறுகளை இரட்டிப்பாக்குவார்கள். 


மாறாக, மக்களாட்சியில் அரசாங்கம் தவறுகளை ஒப்புக்கொள்வதில் கூடுதலான விருப்ப உணர்வு கொண்டிருக்கும். அல்லது, நீங்கள் அந்த அரசாங்கத்தையே மாற்றிக்கொள்ளலாம். அல்லது, வாக்காளர்களே, “ஓ, இந்த ஆளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நாம் தவறு செய்துவிட்டோம், அடுத்த முறை வேறொருவரைத் தேர்ந்தெடுப்போம்” என்று ஒப்புக்கொள்ளலாம். ஏனென்றால், அமைப்புக்குள் செயல்திட்டங்களைவிடக் கூடுதலான அளவில் அவற்றைக் கேள்வி கேட்கும் குரல்கள் இருக்கின்றன. “சரி, இதை முயன்று பார்த்தோம், அது வேலை செய்யவில்லை. வேறொன்றை முயன்று பார்ப்போம்” என்று சொல்வது எளிது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் பழியைத் தூக்கிப் போடுவதற்காக நீங்கள் புதிது புதிதாக எதிரிகளையும் துரோகிகளையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. “ஆம், தவறு செய்துவிட்டோம். முந்தைய கொள்கை மிகச் சிறந்ததாக இருக்கவில்லை. வேறு ஏதாவது முயற்சிப்போம்” என்று சொல்லிவிடலாம். தவறை ஒப்புக்கொண்டு வேறு ஏதாவது முயன்று பார்ப்பதற்கான இந்த விருப்ப உணர்வு - இதுதான் கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலுமே மனிதகுல வளர்ச்சிக்கான உண்மையான திறவுகோல். 


கேள்வி: உலகெங்கும் வெவ்வேறு அரசாங்கங்களிலும் நிறைய தேசியவாதப் போக்குகளைப் பார்க்கிறோம். இந்த நெருக்கடியையும் இந்தக் கிருமியையும் தேசிய அளவில் எதிர்த்துப் போரிடுவது ஒரு நல்ல முடிவு என்று நினைக்கிறீர்களா அல்லது இதை வேறு விதமாகக் கையாள வேண்டுமா? இதை வேறு விதமாகக் கையாள வேண்டுமென்றால், இது போன்ற ஒரு விஷயத்தில் உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது என்று எண்ணுகிறீர்கள்?


யுவால்: தேசியவாதம் நிச்சயம் தவறில்லை. மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்த மிகச் சிறப்பானவற்றில் அதுவும் ஒன்று. இந்த நாட்டின் வேறொரு பகுதியில் இருக்கும் எனக்குத் தெரியவே தெரியாத மனிதர்கள் உட்பட என்னைச் சுற்றியிருக்கும் பிற மனிதர்களோடு எனக்கு ஒரு பிணைப்பு இருக்கிறது, இதனால்தான் நான் வரி கட்டுகிறேன், அதன் மூலம் எனக்குத் தெரியாத - என் நண்பர்களோ உறவினர்களோ கூட அல்லாத நாட்டின் வேறொரு பகுதியில் இருக்கும் மனிதர்களுக்கும் கூட நல்ல சுகாதாரம் கிடைக்கும் எனும் இந்தச் சிந்தனை - இம்மாதிரியான தேசியவாதம் மிகவும் நல்லது. தேசியவாதத்தைப் பற்றி நாம் உணர வேண்டியது என்னவென்றால், தேசியவாதம் என்பது வேற்று நாட்டவரை வெறுப்பதல்ல. தேசியவாதம் என்பது உங்கள் நாட்டவரை நேசிப்பதும் அவர்களைக் கவனித்துக்கொள்வதும் ஆகும். அதன் பொருள் நாம் மற்ற நாடுகளோடு சண்டை போட வேண்டும் என்பதல்ல. இந்தக் கொள்ளை நோயின் போது போலவே மற்ற நாடுகளோடும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டிய வேறு பல சூழ்நிலைகளும் இருக்கின்றன. ஏனென்றால், பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற கொள்ளை நோய்களை ஒரு தனி நாட்டின் அளவிலேயே கையாள முடியாது. முதலில், தகவல்தான் இது போன்ற கொள்ளை நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான மிக முக்கியமான உடைமை. இந்த நோயை உண்டாக்கியது எது, நோயின் மூலத்தைத் தடுப்பது எப்படி, அது பரவாமல் தடுப்பது எப்படி என்பனவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தகவல்களில் நிறைய மற்ற நாடுகளில் இருந்து வருகின்றன. இந்தக் கொள்ளை நோய் சீனாவில் தொடங்கியது. சீனாதான் முதலில் அதை எதிர்கொண்டது. இப்போது உலகின் எல்லா நாடுகளுமே ஓரளவு சீனா வழங்கும் தகவல்களை நம்பியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சீனர்கள்தாம் முதலில் இந்தக் கிருமியையும் அதன் வரிசையையும் மரபணுக் குறியீட்டையும் அடையாளம் கண்டார்கள். இது பிற நாடுகளுக்கு இந்தக் கொள்ளை நோய் வந்த போது அதைக் கையாள்வதற்கு உதவியது. இப்போது, இந்தப் பூட்டடைப்பை எப்படி முடித்து வைப்பது என்று நிறைய நாடுகள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன. எனவே, சீனா மட்டுமல்ல, கொரியா, தைவான் போன்ற நாடுகளும் பெரும்பாலான நாடுகளுக்கு முன்பே இதைச் சந்தித்துவிட்டன. இப்போது இந்த நோய் மீண்டும் பரவிவிடாமல் இந்தப் பூட்டடைப்பை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பற்றி இத்தாலிய அரசாங்கம் விவாதித்துக்கொண்டிருக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்களே கண்மூடித்தனமாக ஊகங்கள் செய்து, முயற்சிகளும் பிழைகளும் (trial and error) செய்து கண்டுபிடிக்கலாம். ஒரு வேளை அது தோல்வியடையலாம் என்று எதையாவது முயன்று பார்க்கலாம். அல்லது மிகவும் புத்திசாலித்தனமான முறையில், இதே சூழ்நிலையில் சீனர்கள் என்ன செய்தார்கள், கொரியர்கள் என்ன செய்தார்கள், தைவானியர்கள் என்ன செய்தார்கள், எது வேலை செய்தது, எது வேலை செய்யவில்லை என்பதை விசாரித்தறிந்து, பின்னர் அவர்களின் அனுபவத்தை நம்பி இறங்கலாம். நாடுகளுக்கு இடையிலான இது போன்ற ஒத்துழைப்பு இந்தக் கொள்ளை நோயைக் கையாள்வதை எல்லோருக்கும் மிகவும் எளிதாக்கும். 


அது போலவே, மருத்துவ உபகரணங்களைப் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு நாடும் தாமாகவே அவற்றை உற்பத்தி செய்ய முயற்சித்துக்கொண்டு உபகாரணத்துக்காகவும் மூலப்பொருட்களுக்காகவும் மற்ற நாடுகளோடு சண்டை போட்டால் இது உற்பத்தியில் ஒரு பெரும் திறனின்மையையே உண்டாக்கும். மிகப்பணக்கார நாடுகள் மட்டும் உபகரணங்களைப் பதுக்கி  வைத்துக்கொண்டு, உண்மையில் அது தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு அவை போயே சேராது. அதற்குப் பதிலாக, அனைத்து உபகரணங்களையும் மிகவும் திறன்மிக்க வகையில் உற்பத்தி செய்வதிலும் பின்னர் நியாயமான முறையில் விநியோகிப்பதிலும் போடப்படும் முயற்சிகளை ஒன்றிணைப்பது பற்றி உலகளாவிய அல்லது ஒரு கண்ட அளவில், எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியதுக்கும் ஓர் ஒற்றைக் கொள்கை வைத்துக்கொள்ள முடியும் என்றால், அது மிகவும் திறன்மிக்கதாகவும் விலையைக் குறைப்பதாகவும் மிகவும் நியாயமானதாகவும் ஆக்கும். 


நமக்குத் தேவையான இன்னொரு விஷயம் பொருளியல் துறையில் உள்ளது. சொல்ல வேண்டியதே இல்லை, இது ஒரு சுகாதார நெருக்கடி மட்டுமல்ல, இது ஓர் உலகளாவிய பொருளியல் நெருக்கடி. ஒவ்வொரு நாடும் தன் சொந்த நலன்களை மட்டும் பாதுகாத்துக்கொண்டால், ஒரு பெரும் பொருளியல் குழப்பம் வரும். நிச்சயமாக, மிகவும் பலவீனமான நாடுகளும் மிகவும் ஏழ்மையான நாடுகளும் இதைச் சமாளிக்க முடியாது. அமெரிக்கா 2 ட்ரில்லியன் டாலர் மீட்புப் பொதியம் (rescue package) ஒதுக்க முடியும். ஆனால் பிரேசிலோ எகிப்தோ பாகிஸ்தானோ அப்படிச் செய்ய முடியாது. எனவே, உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பு வலை என்று ஒன்றில்லை என்றால் எல்லா நாடுகளும் சரிந்து வீழலாம். 


இவைதான் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படுவதற்கான சில முக்கியக் காரணங்கள். துரதிஷ்டவசமாக, பெரியவர்களே இல்லாத அறையில் உள்ள சின்னக் குழந்தைகள் போல, இந்த உலகத்தில் தலைமைப் பற்றாக்குறை இருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருத்தரும் தன் சொந்த உடனடி நலன்களை மட்டும் கவனித்துக்கொள்கிறார். ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக எப்படி இந்த நெருக்கடியைச் சமாளிப்பது என்ற திட்டத்தை எவருமே கொண்டுவரவில்லை. எபோலாக் கொள்ளை நோயின் போதும், 2008 உலகளாவியப் பொருளாதார நெருக்கடியின் போதும், இதற்கு முன்பு உலகத் தலைமையாக இருந்த நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் உலகத் தலைமை என்ற தன் பொறுப்பைத் துறந்துவிட்டது. அமெரிக்கா இப்போது தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது, ‘அமெரிக்காதான் முதலில், மற்றதெல்லாம் அப்புறமே’ என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்திவிட்டது. இந்த நிலைப்பாடு வேலை செய்யவில்லை என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அமெரிக்காதான் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. புள்ளிவிவரங்களைப் பாருங்கள். அமெரிக்காதான் முதலில் உள்ளது. எனவே நமக்குத் தலைமை இல்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என்றும் தோன்றுகிறது. அதாவது, அமெரிக்காவோ சீனாவோ வேறு ஏதோ ஒரு நாடோ நமக்குத் தலைமையேற்க வேண்டும் என்று ஓர் ஒற்றை நாட்டை எதிர்பார்த்துக்கொண்டிராமல் ஒரு பயனுள்ள கூட்டுத்தலைமை - விருப்பமுள்ளவர்களின் கூட்டணி போல ஒன்று வைத்துக்கொள்வதே நல்லது. 


தேசியவாதத்தின் அடிப்படையிலான தனிமைப்படுத்தல்கள், வெறுப்பு, நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுதல், நாடுகள் தம் இனச் சிறுபான்மையினரைக் குற்றஞ்சாட்டுதல் ஆகியவை எல்லாம் கூடிவருகின்றன என்பதை அறிவேன். பயனுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நெருக்கடியைத் தோற்கடிக்க முடியாது என்பதை மென்மேலும் மனிதர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தேசியவாதம் உண்மையில் உலகளாவிய ஒத்துழைப்பைக் கோரும். ஏனென்றால், உங்கள் நாட்டவரைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் வேற்று நாட்டினரோடு ஒத்துழைக்க வேண்டும். இந்தக் கொள்ளை நோயை எல்லா நாடுகளிலிருந்தும் ஒழிக்கும் வரை எந்த நாட்டுக்கும் பாதுகாப்பில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் உங்கள் நாட்டில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் வெற்றிபெற்றால் கூட, அது மற்ற நாடுகளில் பரவிக்கொண்டிருக்கும் வரை, அது திரும்பி உங்கள் நாட்டுக்குள்ளும் வரலாம், திரும்பி வரும். இப்போது இந்தக் கொள்ளை நோயில் நமக்கிருக்கும் மிகப்பெரிய எதிரி கிருமி அல்ல. கிருமியை நாம் சமாளிக்க முடியும். நமக்குள் இருக்கும் மிகப்பெரிய அகப் பேய்களே, குறிப்பாக நம் வெறுப்புகளே நமக்கிருக்கும் மிகப்பெரிய எதிரி. அவை அனைத்தும் இப்போது வெளியேறி வருகின்றன. நம் வெறுப்புகளை வென்று ஒத்துழைக்க முடிந்தால், நம்மால் இந்தக் கிருமியை எளிதாக வீழ்த்த முடியும். 


கேள்வி: இது நம்மால் முடியுமா முடியாதா என்பதைப் பற்றியது. நெருக்கடிகள்தாம் வரலாற்றின் இயங்குவிசையைத் துரிப்படுத்துகின்றன என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நம் தேசியவாத இயங்குவிசையைத் துரிதப்படுத்தப் போகிறோமா அல்லது உலகளாவிய ஒத்துழைப்பைத் துரிதப்படுத்தப் போகிறோமா என்கிற ஒரு முக்கியமான சந்தியில் இப்போது நாம் நிற்கிறோம் என்பது போலப் படுகிறது. உண்மையில் என்ன நடக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


யுவால்: எனக்குத் தெரியவில்லை. என்னால் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நான் இது போன்ற நேர்காணல்களில் கலந்துகொள்வது, எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அல்ல. நிகழ்காலத்தின் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதற்காகவே அதைச் செய்கிறேன். வெறுப்பை வளர்க்காமல், இரக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நல்ல முடிவுகளை எடுக்கும் வகையில், இந்த வேளையில் உலகளாவிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வதற்கு உதவ விரும்புகிறேன். இதுவே இந்தக் கொள்ளை நோயை முறியடிப்பதை மேலும் எளிதாக்கும். எதிர்காலத்தில் வரப்போகும் நெருக்கடிகளைக் கையாள்வதையும் இது மேலும் எளிதாக்கும். இதுவே 21-ஆம் நூற்றாண்டின் கடைசி நெருக்கடி இல்லை. இன்னும் பல கொள்ளை நோய்கள் வரலாம். தட்பவெப்ப மாற்றம் போன்ற மற்ற பிரச்சனைகளும் இருக்கின்றன. இப்போது நாம் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக்கொள்ளவும் சண்டை போடவும் தொடங்கினால் அவை அனைத்தும் மேலும் மோசமாகும். இப்போது நாம் உலகளாவிய ஒற்றுமையை வளர்த்தால் அவை அனைத்தும் கையாள மேலும் எளிதாகிவிடும்.


கேள்வி: கணிப்புகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நான் அடுத்துக் கேட்க இருந்த கேள்வி இதுதான். உங்களிடம் மந்திரக்கோல் இல்லை, உங்களால் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று சொல்ல முடியாது, ஆனால் கணிப்புகள் செய்ய முடியும், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ அதை மாற்ற முடியலாம் என்று நம்புவதாகச் சொன்னீர்கள். இது உங்கள் நூல்களில் ஒன்றில் நீங்கள் சொல்வது. நல்ல கணிப்புகளுக்கு அவை கணிக்க முயற்சிக்கும் எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் உண்டு. அதுவே கடைசியில் அந்தக் கணிப்புகளையே பயனற்றவையாகவோ தவறானவையாகவோ ஆக்கிவிடுகின்றன. டேவிட் குவாமன் மற்றும் பில் கேட்ஸ் போன்றவர்களால் இந்தக் கொள்ளை நோய் பற்றிய கணிப்புகள் இருக்கத்தான் செய்தன. இந்தக் கணிப்புகள் ஏன் மாறுபட்டவை? அவற்றால் மாற்றியிருக்க முடிந்த அளவுக்கு அவை ஏன் எதிர்காலத்தை மாற்றவில்லை?


யுவால்: ஏனென்றால், போதுமான அளவிலான மனிதர்கள் அவர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எதிர்காலத்தைப் பற்றிய எல்லாவிதமான ஆபத்தான சாத்தியங்கள் பற்றியும் கேள்விப்படுவதும் பிரச்சனையின் ஒரு பகுதி எனலாம். அவர்கள் சொல்வது நடக்காதவரை அவர்களை எவ்வளவு பொருட்படுத்துவது என்று யாருக்கும் தெரியாது. இது உண்மையிலேயே நடக்கும் என்பதற்கான வாய்ப்புகள் என்ன? எடுத்துக்காட்டாக, மனித நாகரீகத்தையே அழிக்கக்கூடிய அளவில் விண்வெளியிலிருந்து வந்து தாக்கப் போகும் ஒரு சிறுகோளிலிருந்து பூமியைக் காப்பதற்காக பயங்கரமான அளவில் பணத்தைக் கொட்டலாம். மாறாக, அடுத்த மில்லியன் ஆண்டுகளில் கூட அப்படியொரு சிறுகோள் வந்து பூமியைத் தாக்காமலும் போய்விடலாம். அப்போது, சுகாதாரத்துக்கும் கல்விக்கும் கொடுக்காமல் இதற்குப் போய் ஏன் இவ்வளவு பணத்தைச் செல்வழித்தீர்கள் என்று மக்கள் கேட்பார்கள். அந்தப் பணத்தை எல்லாம் வராமலே போய்விட்ட ஒரு சிறுகோளிலிருந்து காப்பாற்றுவதற்காகச் செலவழித்துவிட்டீர்களே என்பார்கள். எனவே இது போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. அது மட்டுமில்லை, இது போன்ற எச்சரிக்கையை மக்கள் காதில் வாங்கிக்கொண்டு, நல்ல வகையில் ஏதேனும் செய்து, மிக மோசமான விளைவிலிருந்து உண்மையாகவே தடுத்துக்கொள்ளும் காலங்களும் இருக்கின்றன. அப்போது, “ம்ம்ம், அதான் ஒன்றும் நடக்கவில்லையே! ஏன் அந்தப் பணத்தையெல்லாம் வீணாக்கினோம்?” என்பார்கள். 2003-இல் வந்த சார்ஸ் கொள்ளை நோயைத் திரும்பிப் பார்த்தால், அதுவும் ஒரு கொரோனாக்கிருமிதான், அது இப்போதைய இந்தக் கொள்ளை நோயைவிட மிக வேகமாக நிறுத்தப்பட்டது. முந்தைய வெற்றிகளின் காரணமாக சில நாடுகள் எச்சரிக்கையை இம்முறை போதுமான அளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள் சிலர். ஏனென்றால், “ஏய், 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த சார்ஸ் அச்சுறுத்தலின் காரணமாக நாங்கள் எவ்வளவோ பணம் செலவழித்தோம். கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லை” என்றார்கள். நீங்கள் பணம் செலவழித்ததாலும் சரியான விஷயங்களைச் செய்ததாலுந்தான் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அப்போது கொள்ளை நோய் வரவில்லை, மிகக் குறைவான மனிதர்களே இறந்தார்கள் என்பதால் அது தவறான எச்சரிக்கை என்று எண்ணிக்கொண்டோம். இது மிக மிகச் சிக்கலானது. எச்சரிக்கையைச் சரியாகக் காதில் வாங்கிக்கொண்டு, சரியாக ஏதேனும் செய்து, பேரழிவைத் தடுத்துவிட்டால், கண் முன்னால் எதுவும் நடக்கவில்லை என்பதால், “அது சரி, பணத்தையெல்லாம் இப்படி வீணடித்துவிட்டீர்களே!” என்பார்கள். எனவே எந்த எச்சரிக்கைகளைக் காதில் வாங்கிக்கொள்வது, எந்த எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பது மிக மிகச் சிக்கலானது.


கேள்வி: நீங்கள் சொன்னவற்றுள் ஒன்று இது. உங்களிடமிருந்து இதைப் படிக்கவும் செய்திருக்கிறேன். வாழ்க்கைக்கு இன்பம், வலி என்று இரண்டு எசமானார்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். கடந்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களில் நாம் வளர்த்துக்கொண்டுள்ள இந்த பயம் நம் நடத்தையை அடிப்படையிலேயே மாற்றப்போகிறது என்று எண்ணுகிறீர்களா? இதெல்லாம் முடிந்த பின்பு அல்லது வேகம் குறைந்த பின்பு, மனிதர்கள் சமூக ரீதியாக ஒருத்தருக்கொருத்தரிடம் வேறு விதமாக நடந்துகொள்ளப் போகிறார்களா?


யுவால்: ஓரளவுக்கு, வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும் என்று உணரும் போது வேலைவாய்ப்புச் சந்தை போன்ற இடங்களில் ஒரு வேளை மாற்றங்கள் ஏற்படலாம், பல்கலைக் கழகங்களும் பள்ளிகளும் இணையத்திலேயே பாடங்கள் நடத்தலாம். எனவே இந்தப் பாடங்கள் அனேகமாக மனிதர்கள் வேலை செய்யும் விதத்திலும் தகவல் தொடர்பு செய்துகொள்ளும் விதம் போன்றவற்றிலும் பெருமளவில் மாற்றம் செய்யப் போகின்றன. ஆனால், இன்னும் அடிப்படையான மட்டத்தில், மனித இயல்பு பற்றிச் சிந்தித்தீர்கள் என்றால், அது மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை. நாம் சமூக விலங்குகள். நெருக்கத்தை விரும்புபவர்கள். ஒருவர் உடல்நிலை சரியில்லாமலோ ஏதேனும் சிக்கலிலோ இருக்கும் போது நாம் உதவுவதற்குப் பாய்ந்து செல்பவர்கள். நம் நண்பர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் குடும்பத்தினருக்கும் உதவுவது நம் சிறந்த இயல்புணர்வுகளில் ஒன்று. இப்போது இந்தக் கிருமி இதை நமக்கு எதிராகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. மனித இயல்பின் சிறந்த பகுதியை நமக்கு எதிராகப் பயன்படுத்தித்தான் இந்தக் கிருமி இப்படிப் பரவுகிறது. நல்ல வேளையாக, தனக்கென்று சிந்தனைத்திறன் இல்லாத இந்தக் கிருமியைப் போலல்லாமல், நமக்கென்று மூளை இருக்கிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியும் போது அதை முறியடிப்பதற்கு நம்மால் நம் நடத்தையை மாற்றிக்கொள்ள முடியும். மிதமிஞ்சிய நெருக்கம் கொள்ளை நோயைப் பரப்பலாம் என்பதை இப்போது நாம் புரிந்துகொள்கிறோம். எனவே அதை நாம் நிறுத்திவிட்டோம். நாம் இதயத்திலிருந்து செயல்படாமல் மூளையிலிருந்து செயல்படுகிறோம். ஆனால் இது நம் அடிப்படை இயல்பை மாற்றாது. நெருக்கடி முடிந்த பின்பும், மனித இயல்பு அப்படியேதான் இருக்கும். கவலையே படாதீர்கள். இதைவிடப் பல மடங்கு மோசமான கருஞ்சாவு (Black Death) எனும் கொள்ளை நோயே அதை மாற்றவில்லை. 1918-இல் வந்த ‘இன்ஃப்ளூயன்சா’ கொள்ளை நோய் அதை மாற்றவில்லை. எடுத்துக்காட்டுக்கு, 1980-களில் வந்த எய்ட்ஸைப் பாருங்கள். எயிட்ஸ் பல வகைகளிலும் இப்போது நடப்பதைவிடப் பல மடங்கு மோசமானது. முதலில், 1980-களில் உங்களுக்கு எயிட்ஸ் வந்தால் நீங்கள் செத்துப் போவீர்கள். அவ்வளவுதான். கொரோனாக்கிருமியோடு போல் அல்ல அது. இந்த நோய் வரும் பெரும்பாலானவர்கள் சிறிது நோய்வாய்ப்படலாம். மிகச் சிறிய விழுக்காட்டினரே இறப்பார்கள். எயிட்ஸ், அப்படி அல்ல, அது மரண தண்டனை. முதல் நோயாளிகள் நிறையப் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதால் பாதிக்கப்பட்ட குடிமக்களை முதலில் அரசுகள் கைவிட்டன. பல அரசுகள், “அவர்கள் சாகட்டும். எங்களுக்கு ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள் சாவது நல்லதுதான்” என்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது  என்று  பார்த்தீர்கள் என்றால், எல்ஜீபீட்டி (LGBT) சமூகத்தில் இருந்த மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்தார்கள். அந்தச் சமூகத்தை யாரும் அழிக்கவில்லை. உண்மையில் அவர்கள் தன்னார்வமாக முன்வந்தார்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைப்புகளை நிறுவினார்கள். அந்தப் பயங்கரமான கொடும் கொள்ளை நோய் பற்றிய நம்பத்தக்க தகவல்களைப் பரப்புவதற்காக அமைப்புகளை நிறுவினார்கள். அரசாங்கத்தின் மீதும் சுகாதார அதிகாரங்களின் மீதும் அழுத்தம் போட்டார்கள். எல்ஜீபீட்டி சமூகம், 1990-களில், அந்தக் கொள்ளை நோயின் மிக மோசமான ஆண்டுகளுக்குப் பின், நோய் முழுமையாக முடிந்துவிடாத போது, கொள்ளை நோய்க்கு முன்பு 1970-களில் இருந்ததைவிட மிக வலுவாக ஆகியிருந்தது. எனவே, “ஆம், நெருக்கடியின் உச்சகட்டத்தில் இருக்கும் போது மாறி ஆக வேண்டும் என்பதற்காக மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்வார்கள்தான். ஆனால் சமூக விலங்குகள் என்ற முறையில் அது மனிதர்களின் அடிப்படையான இயல்பை மாற்றாது” என்பதற்கு இது போல இன்னும் நிறையக் கதைகள் இருக்கின்றன. இதெல்லாம் முடிந்த பின்பு, மீண்டும் வந்து, இதற்கு முன்பு நாம் அருமை புரியாமல் இருந்தவற்றின் அருமையை எல்லாம் கூட இன்னும் கூடுதலாகப் புரிந்துகொள்வோம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.


கேள்வி: இந்த உலகளாவிய நெருக்கடியை தேசிய அளவில் மட்டுமே கையாண்டு, சில நாடுகளில் மட்டும் இந்தக் கிருமியை ஒழிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்?


யுவால்: ஒரு பேச்சுக்கு, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு வீழ்ச்சிகளால் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் வீழ்கின்றன என்று வைத்துக்கொள்வோம். பேரலை போல ஓர் இடப்பெயர்ச்சியும் குடியேற்றமும் நிகழும். ஆப்பிரிக்காவை மட்டுமல்லாது ஐரோப்பாவையும் நிலைகுலைக்கும் போர்கள் மூளும். எனவே அப்படியொன்று நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பொருளியலையும் அரசியலையும் கூட ஒதுக்கிவைத்துவிடுவோம். சுகாதாரம் பற்றி மட்டும் யோசித்தால் கூட, ஒரு கொள்ளை நோய் மற்ற நாடுகளில் பரவிக்கொண்டிருக்கும் வரை உங்கள் நாட்டுக்கும் அது திரும்பி வரலாம், அப்படி வரும் போது அது இன்னும் மோசமான வடிவில் வரலாம். ஏன்? விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கும் தாவும் நோய்க்கிருமிகளும் சரி, பிற நுண்ணுயிர்களும் சரி, முதலில் அவை மனித உடலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்வதில்லை. அவை ஒரு வௌவாலின் உடலுக்குத் தகவமைத்துக்கொண்டிருந்தவை. மனித உடலுக்குத் தகவமைத்துக்கொள்ளவும் தொற்றுத்தன்மையை அதிகரிக்கவும் மேலும் கொடியதாகவும் அவற்றை ஆற்றுவிப்பது எதுவென்றால், அது வகைமாற்றங்கள் (mutations). இப்போது, உலகில் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், ஒரு மனித உடலில் இந்தக் கிருமி கூடுதலான காலம் வாழ வாழ அது கூடுதல் தொற்றுத்தன்மை உடையதாகவும் கொடியதாகவும் வகைமாற்றம் அடைவதற்கான வாய்ப்புக்களும் கூடும். எடுத்துக்காட்டாக, அதை 2014-இல் வந்த எபோலாக் கொள்ளை நோயில் பார்த்தோம். அதுவும் முதலில் வௌவால்களிலிருந்துதான் வந்தது. அந்தக் கிருமி முதலில் மனிதர்களுக்குள் வந்த போது, அது கொடியதாக இருந்தது. ஆனால், மனித உயிரணுக்களுக்குள் நுழைவதில் சிரமம் இருந்ததால் அது தொற்றுத்தன்மை அதிகம் கொண்டிருக்கவில்லை. அதற்கடுத்து, மேற்கு ஆப்பிரிக்காவில் எங்கோ ஓரிடத்தில் அந்தக் கிருமி ஒரேயோரு மனிதரின் ஒரேயொரு மரபணுவில் ஒற்றை வகைமாற்றத்துக்கு மட்டும் உட்பட்டது. அது அந்தக் கிருமியை நான்கு மடங்குகள் கூடுதலான தொற்றுத்தன்மை உடையதாக ஆக்கியது. அதுதான் உண்மையான கொள்ளை நோயைத் தொடங்கிவைத்தது. இது நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட நடக்கலாம். அப்படியான ஒன்று இத்தாலியிலோ ஈரானிலோ பிரேசிலிலோ இந்த உலகத்தில் வேறெங்கிலுமோ இப்போது கொரோனாக்கிருமிக்கு நடந்துகொண்டிருக்கலாம். அது கொரோனாக்கிருமியை மேலும் தொற்றுத்தன்மை கொண்டதாகவும் மேலும் கொடியதாகவும் ஆக்கிவிடும். இது எல்லா மனிதர்களுக்கும் ஆபத்து. எனவே, இந்தக் கிருமி ஏதோவொரு மனிதத் தொகையில் பரவிக்கொண்டிருக்கும் வரை எவருமே உண்மையில் பாதுகாப்பாக உணர முடியாது. 


கேள்வி: தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, நம் நிறுவனங்களை நம்ப முடிய வேண்டும் என்கிறீர்கள். அது சாத்தியமானதுதானா? ஆம் எனில், எப்படி? எப்படிச் சாத்தியமாகும்?


யுவால்: நிறுவனங்கள்தாம் முக்கியமானவை. தனிமனிதர்களை நம்பலாம், ஆனால் நமக்கு நிறையத் தனிமனிதர்களைத் தெரியாது. உங்களுக்கு, நூறு பேரையோ இருநூறு பேரையோ தெரியலாம். அது போதாது. ஓர் அறிவியலாளன் என்ற முறையில் நானும் கூட மற்ற அறிவியலாளர்களின் முடிவுகளை நம்புவதற்கான காரணம், அவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அல்ல, நான் நிறுவனங்களை நம்புகிறேன் என்பதாலேயே. அவர்களுக்குப் பட்டமளித்த பல்கலைக் கழகத்தை நம்புகிறேன். அவர்களின் கட்டுரையை வெளியிட்ட இதழை நம்புகிறேன். அவர்கள் சோதனை செய்த ஆய்வகங்களை நம்புகிறேன். நல்ல சுதந்திரமான நிறுவனங்களைக் கட்டுவதற்கு நேரம் ஆகும். சமீப ஆண்டுகளில் மக்களுக்குப்  பிடித்த அரசியல்வாதிகள் வேண்டுமென்றே பல்கலைக் கழகங்கள், மதிப்பிற்குரிய ஊடக நிறுவனங்கள் போன்ற சில முக்கியமான நிறுவனங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் குழிபறிப்பதைப் பார்த்தோம். இந்த மக்களை மயக்கும் அரசியல்வாதிகள், “இந்தச் சிறிய மேற்தட்டு அறிவியலாளர்கள் உண்மையான மக்களிடமிருந்து தொடர்பறுந்தவர்கள். அவர்களை நாம் நம்பக்கூடாது” என்று மக்களிடம் சொன்னார்கள். “தட்பவெப்ப மாற்றம் வெறும் புரளி, அது உண்மையானதல்ல, பூமி உண்மையில் தட்டையானது, தடுப்பூசிகள் கேடு விளைவிப்பவை” போன்ற இந்தச் சதிக்கதைகள் எல்லாம் வந்தன. அது பரவியது. 


ஆனால் இப்போதும் மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் எண்ணவில்லை. குறிப்பாக நெருக்கடி நிலையில் மக்கள் தம் கருத்துக்களை மிக வேகமாக மாற்றிக்கொள்ளலாம், மறைந்துகிடக்கும் நம்பிக்கையின் களஞ்சியங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த நெருக்கடியிலேயே பாருங்கள். மக்கள் யாரை நம்புகிறார்கள்? அனைத்து நாடுகளிலும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அறிவியலாளர்களைத்தான் நம்புகிறார்கள். இஸ்ரேலில் யூதத் திருக்கோயில்களைப் பூட்டிப் போடுகிறார்கள். ஈரானில் மசூதிகளைப் பூட்டிப் போடுகிறார்கள். உலகெங்கும் உள்ள தேவாலயங்கள் “யாரும் தேவாலயங்களுக்கு வராதீர்கள்” என்கின்றன. போப்பாண்டவர் ஸூமிலோ யூட்யூபிலோ வந்து அவரின் சடங்குகளைச் செய்யவில்லை. அவர்கள் ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? ஏனென்றால், அறிவியலாளர்கள் பரிந்துரைத்தார்கள். இந்த நெருக்கடி வேளையில், மதத் தலைவர்கள் கூட அறிவியலாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நெருக்கடி முடிந்தபின், உண்மையிலேயே நம்பத்தக்க தகவல் வேண்டுமென்றால் இங்குதான் போக வேண்டும், ஒரு நெருக்கடியின் போது இவர்களைத்தான் நம்ப வேண்டும் என்பதை மக்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த நெருக்கடி முடிந்த பின்னும், ஓரிரு ஆண்டுகள் கழித்த பின்னும், எடுத்துக்காட்டாக தட்பவெப்ப மாற்றம் பற்றி அறிவியலாளர்கள் எச்சரிக்கும் போது, அப்போது வந்து, “இதெல்லாம் புரளி” என்று சொல்லக்கூடாது. இந்த அறிவியலாளர்கள்... இவர்களை ஏன் நாம் நம்ப வேண்டும் என்பதையும் இன்று யாரை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நெருக்கடி முடிந்த பின்பும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.


https://www.youtube.com/watch?v=RS8TxC3mJzk

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி