உங்கள் ஊர்

வணக்கம். என் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நாகலாபுரம் என்னுமொரு செம ஊர். என் ஊரைப் பற்றிப் பேசுவதென்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எங்கள் ஊரைவிட நல்ல ஊர் இந்த உலகத்தில் இருக்குமா என்றொரு சந்தேகம் கூட எனக்கு உண்டு. உங்கள் ஊர் எப்படி? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.


ஊர் என்றதும் உங்களுக்கு எந்த ஊர் நினைவுக்கு வருகிறது? நீங்கள் பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? உங்கள் தந்தையின் ஊரா? தாயின் ஊரா? சொந்தமாக வீடு கட்டிய/வாங்கிய ஊரா? இது எல்லாமே ஒரே ஊர்தான் என்றால் நீங்கள் பாக்கியவன்தான். எனக்குத் தெரியும். நீங்கள் 5 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையில் அதிக காலம் வாழ்ந்த ஊர் எதுவோ அதைத்தான் சொல்வீர்கள். சிலர் ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறைக்குச் சென்ற பாட்டி ஊரைச் சொல்வார்கள். நீங்கள்?


உங்கள் ஊர் கிராமமா? நகரமா? இரண்டுக்கும் இடையிலா? உங்கள் ஊரில் உள்ள எல்லோருக்குமே எல்லோரையும் தெரியுமா அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூடத் தெரியாதா? இந்த ஊர் இதைவிடச் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா?


ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்குமே! அப்படி உங்கள் ஊரின் சிறப்பு என்ன? ஏதேனும் உணவா? தொழிலா? அங்கிருக்கும் மக்களா? 


உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு மறக்க முடியாத நினைவு ஒன்று இருக்குமே! அது என்ன? உங்கள் பள்ளியில் உடன் படித்த நண்பனோ தோழியோ இருப்பார்களே! மறக்க முடியாத ஆசிரியர் ஒருவர் இருப்பாரே! அவர்கள் எங்கிருக்கிறார்கள் இப்போது? அவர்களோடு கடைசியாக எப்போது பேசினீர்கள்? 


உங்கள் ஊருக்குப் போய் எத்தனை ஆண்டுகள் ஆகிறது? எந்த இடத்தை அடையும் போது, உங்கள் மனதுக்குள், “ஆகா, ஊர் வந்துவிட்டது!” என்று தோன்றும்? உங்கள் பள்ளி போகும் வழியிலேயே வருமா? பள்ளியைக் கடக்கும் போதெல்லாம் உங்களுக்கு யார் நினைவு வரும்? படிப்பை முடித்த பின்பு என்றாவது பள்ளிக்கு உள்ளே சென்றீர்களா? எப்போது? எதற்காக?


ஏதாவது கதை படிக்கும் போதோ படம் பார்க்கும் போதோ ஊர் நினைவு நிறைய வந்ததா? இப்போதே போக வேண்டும் போலத் தோன்றியதா? எந்தக் கதை அல்லது படம்? ஊரைப் பற்றிப் பேசத் தோன்றும் போதெல்லாம் யாரோடு பேசுவீர்கள் அல்லது பேச விரும்புவீர்கள்? உங்கள் காதலனோ காதலியோ வாழ்க்கைத் துணையோ உங்கள் ஊரேவா? அப்படியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?


உங்கள் ஊரில் ரயில் நிலையம் இருக்கிறதா? தேவையே இல்லாமல் அங்கே போய் உட்கார்ந்திருந்திருக்கிறீர்களா? நம்மூரிலும் ரயில் நிலையம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியிருக்கிறதா? உங்கள் ஊரில் ஆறு இருக்கிறதா? அங்கே அடிக்கடி போவீர்களா? நம்மூரிலும் ஆறு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியிருக்கிறதா? ஏரி, கண்மாய், குளம், ஓடை எல்லாம் இருக்கிறதா?


எந்த ஊரையாவது பார்த்து நம்மூரும் இது போலவே இருந்தால் எப்படி இருக்கும் என்று பொறாமைப்பட்டிருக்கிறீர்களா?


உங்கள் ஊர் மக்கள் எப்படியானவர்கள்? அமைதியை விரும்புபவர்களா? முரடர்களா? எங்கள் ஊரைப் போல எல்லோரும் ஒற்றுமையாக வாழ்பவர்களா அல்லது சாதி-மதம் என்று சண்டை போடுபவர்களா? உங்கள் ஊரில் ஒரு மோசடிக்காரர் இருந்தாரே! அவர் இன்னும் இருக்கிறாரா? நன்றாக இருக்கிறாரா? உங்கள் சிறுவயதில் ஒரு மனநிலை பிறழ்ந்த பிச்சைக்காரர் இருந்தாரே! அவருடைய பெயர் நினைவு இருக்கிறதா? அவர் பற்றி ஒரு கதை சொல்வார்களே! அது நினைவிருக்கிறதா?


உங்கள் நண்பர்களும் தோழிகளும் உங்கள் தெருவிலேயே இருந்தார்களா? அல்லது வேறு தெருக்களிலா? உங்கள் ஊரிலேயே உங்களுக்குப் பிடித்த தெரு எது? அந்தத் தெருவை ஏன் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்? அங்கு யாராவது உங்களுக்கு வேண்டியவர்கள் இருந்தார்களா? அந்தத் தெரு அகலமாக இருக்குமா? நீளமாக இருக்குமா? உங்களுக்குப் பிடித்த அந்தப் புளியமரம் இன்னும் இருக்கிறதா? ஓ, அது புளியமரம் இல்லையா? அந்தப் பேய்க்கதை நினைவிருக்கிறதா? உங்கள் ஊர்ப் பசங்கள் எங்கே கிரிக்கெட் ஆடுவார்கள்?


உங்களுக்குப் பிடித்த திரையரங்கம் இன்னும் திரையரங்கமாகவே இருக்கிறதா அல்லது திருமண மண்டபம் ஆகிவிட்டதா? சென்ற முறை ஊருக்குப் போயிருந்த போது அங்கு போனீர்களா? நீங்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு முறை பாம்பு வந்துவிட்டது என்று கூச்சலும் குழப்பமுமாகி படத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்திவைத்தார்களே! அந்த நாள் இன்னும் நினைவிருக்கிறதா?


சிறு வயதில், பின்னர் ஒரு காலத்தில் இப்படி ஊரைவிட்டு வெளியேறி வாழ வேண்டியது வரும் என்று நினைத்திருக்கிறீர்களா? சிறுவயதில் உங்கள் ஊருக்கோ தெருவுக்கோ தொடர்பேயில்லாத ஒருவர் அங்கு நடமாடுவதை வேடிக்கையாகப் பார்த்திருக்கிறீர்களா? சென்ற முறை நீங்கள் ஊருக்குப் போயிருந்த போது உங்களை ஒருவர் அப்படிப் பார்த்தாரே! அப்போது எப்படி இருந்தது? உங்களுக்குத் தெரிந்தவர்களே யாரேனும் உங்களை அடையாளம் தெரியாமல் அப்படிப் பார்த்திருக்கிறீர்களா? தெருக்களும் கட்டடங்களும் இன்னும் அப்படியே இருக்கின்றனவா அல்லது நிறைய மாறிப் போய்விட்டனவா? பெரிதாகி இருக்கின்றனவா? சிறிதாகி இருக்கின்றனவா? இதெல்லாம் நம்மூரில் நடக்கும் என்று நீங்கள் நினைத்தே பார்த்திராத ஏதேனும் நடந்திருக்கிறதா? நீங்கள் வளர்ந்த வீடு அப்படியே இருக்கிறதா? அதுவும் மாறியிருக்கிறதா?


உங்கள் ஊருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஊர் எவ்வளவு காலப் பழைமை வாய்ந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஊரில் இருக்கும் எல்லோருமே அங்கேயே காலங்காலமாக இருப்பவர்களா அல்லது நிறைய வெளியூர்க்காரர்களும் அங்கு குடியேறியிருக்கிறார்களா? நீங்களே அப்படியொரு வெளியூர்க்காரர்தானா?

 

நீங்கள் இப்போது இருக்கும் ஊரில் உங்கள் ஊர்க்காரர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களோடு உங்களுக்கு ஒத்து வருமா? அவர்களை அடிக்கடிச் சந்திப்பீர்களா?


நீங்கள் இப்போது வாங்கும் இதே சம்பளமோ இதைவிடக் கூடுதலாகவோ கொடுத்தால் உங்கள் ஊருக்கே திரும்பப் போவீர்களா?


உங்கள் கதையைக் கேட்க ஆவலோடு இருக்கிறேன். நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிலும் ஒரு வரி விடாமல் வாசிக்கப்படும். அதில் சிறந்த பதில் அடுத்த மாத இதழில் வெளியிடப்படும்.


* அமெரிக்க இந்திய இதழான 'ஸ்வரா'வுக்காக எழுதியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி