கடிதங்கள் கழிதலும்

எனக்குச் சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அது என் முன்னோர்களிடமிருந்து எனக்கு வந்தது. என் தாத்தா முதலில் காந்தியடிகளையும் பின்னர் நேதாஜியையும் பின்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காந்தியைப் போலவே அவரின் தொண்டர்களும் கடிதம் எழுதுவதில் ஆர்வமுடையவர்கள் என்பார்கள். சிறு வயதிலிருந்தே தாத்தா எழுதிய பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் பற்றி வீட்டில் அடிக்கடிப் பேசக் கேள்விப்பட்டது மட்டுமில்லாமல், தாத்தாவின் சீடர்களான சித்தப்பாக்கள் சிலரும் அப்படியே கடிதங்கள் எழுதுபவர்களாக இருந்தது, எனக்கும் கடிதங்கள் மீது அளவில்லா ஈடுபாட்டைக் கொடுத்தது.

ஆண்டுக்கு ஒரு முறையோ அதைவிடவும் குறைவாகவோ சந்திக்கும் சில உறவினர்களோடு பேசும் போது, அவர்களுடனேயே இருந்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நமக்கும் படிக்க எவ்வளவோ கொட்டிக் கிடப்பது போல இருக்கும். ஏனென்றால் அவர்கள் வேறு யாரோ அல்லர்; நம்மில் ஒருவர் - நம்மைப் போன்ற பின்னணியிலேயே பிறந்து வளர்ந்து சாதித்திருப்பவர்கள். அவர்களின் சாதனைக் கதைகளைக் கேட்கும் போது நாமும் அதெல்லாம் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை நிறையக் கிடைக்கும். 


ஆனால் நாம் கேட்டுக்கொண்டே இருக்கும் அளவுக்குப் பேசிக்கொண்டே இருக்க அவர்கள் நம்மோடே இருக்க வேண்டுமே! அவர்களுக்கும் அவர்களுடைய வேலையைப் பார்க்க வேண்டுமே! அதனால் வந்த வேலை முடிந்ததும் ஓரிரு நாட்களில் திரும்பிப் போய்விடுவார்கள். நமக்கு அவர்கள் நினைவாகவே இருக்கும். அடுத்த முறை எப்போது அவர்களுடன் பேசும் வாய்ப்புக் கிடைக்குமோ என்று ஏக்கமாக இருக்கும். அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவ்வப்போது அவர்களுக்கு நீள நீளமாகக் கடிதங்கள் எழுதுவேன். அவர்களும் நேரில் பேசுகிற மாதிரியே நிறைய எழுதி அனுப்புவார்கள். அவற்றையெல்லாம் படிப்பது பேரின்பமாக இருக்கும்.


நேரில் பேசுகிற அளவுக்குக் கடிதங்களில் எழுதிவிட முடியாதுதான். ஆனாலும் கடிதங்களில் சொல்லும் போது சுருக்கமாகச் சொன்னாலும் ஆழமாக நிறையக் கருத்துகள் சொல்லிவிட்டது போல இருக்கும். அது நேரில் பேசுவதை விடவும் நிறையவே அள்ளிக் கொடுப்பது போல இருக்கும். இதில் இன்னும் வியக்கத்தக்க ஒன்று என்னவென்றால், நேரில் அவ்வளவாகப் பேசாதவர்கள் கூட கடிதங்களில் நிறைய வெளிப்படையாக எழுதுவது கடிதங்களின் மீதும் ஒரு தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருந்தது. அப்படி என்ன கூடுதல் போதை இந்தக் கடிதங்கள் எழுதுவதில் என்று வியப்பான வியப்பாக இருக்கும். 


இப்படியே போன வாழ்க்கையில், இன்னும் சிறிது பெரியவன் ஆகையில், ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் விடப்படும் கோடை விடுமுறையின் போது, இன்னொரு புதிய வாய்ப்பும் கிடைத்தது. கோடை விடுமுறை என்றாலே நாமும் நண்பர்களும் உறவினர்களின் ஊர்களுக்குச் செல்வதும் நம் ஊருக்கு உறவினர்களும் நண்பர்களின் உறவினர்களும் வருவதுமாகத்தானே ஓடும். அப்படிப் புதிய நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைப் பிரிய நேர்வதும் கடிதம் எழுத்துவதற்குப் புதிதாகச் சில பெருநர்களையும் பெற்றுத் தந்தன. அது போக, விடுமுறையின் போது ஓரிரு மாதங்கள் பிரிந்திருந்த நெருங்கிய நண்பர்களோடும் கடிதங்கள் பரிமாறியும் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டோம். கடிதம் எழுதும் பழக்கத்தோடும் உறவை வலுப்படுத்திக்கொண்டோம்.


அந்நியர்களைக் கண்டு அஞ்சுபவர்களைப் போலவே அந்நியர்களோடு பழகுவதைப் பெரும் இன்பமாகக் கருதும் ஒரு கூட்டமும் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களின் உதவியோடு தெரியாத எத்தனையோ அந்நியர்களோடு பழக்கம் வைத்துக்கொண்டுள்ளோம். புதிதாக எத்தனை பேரோடு வேண்டுமானாலும் இமைக்கும் நேரத்தில் நட்புகளை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். அப்போது அந்த வசதி இல்லை. அதைப் போக்கும் விதமாக அந்தக் காலத்தில் ‘பேனா நண்பர்கள்’ என்றொரு கூட்டம் இருப்பார்கள். ஊருக்கு ஓரிருவர் அது போல இருப்பார்கள். அவர்கள் வேறு ஏதோ வெகு தொலைவில் வசிக்கும் ஒருவரோடு கடிதங்களின் மூலமே தொடர்பில் இருப்பார்கள். தன் நெருங்கிய நண்பர்களோடு கூட மனம் விட்டுப் பேசாத பல விஷயங்களை அவர்களோடு கடிதங்களின் வழியாக வெளிப்படையாகப் பேசுவார்கள். பழகிய மனிதர்களிடம் முகத்தைப் பார்த்துப் பேசும் போது கிடைக்காத ஏதோவொரு வசதி தொலை தூரத்தில் இருக்கும் எவரோ ஒருவருக்குக் கடிதமாக எழுதும் போது கிடைக்கிறது என்பது எவ்வளவு பெரிய அதிசயம்! இப்படியே இவர்களின் நட்பு வளர்ந்து பின்னர் பல ஆண்டுகள் கழித்துச் சிலர் நேரில் சந்தித்துக்கொள்வார்கள். சிலர் காதலில் கூட விழுந்து திருமணம் கூடச் செய்துகொள்வார்கள். ஆனால் இதெல்லாம் இப்போது போலல்லாமல் பெரும் புரட்சி அப்போது.


சில நண்பர்கள் நூல்களைப் படித்துவிட்டு அவற்றின் ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதுவார்கள். அவர்களிடம் தம் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்பார்கள். அவர்களும் பெரும்பாலும் ஒவ்வொரு வாசகருக்கும் பதில் எழுதி அனுப்புபவர்களாகவே இருப்பார்கள். வியப்பூட்டும் வகையில், அதுவரை எவர் சொல்வதையும் கேட்டுப் பயன் பெற்றிடாத இவர்கள் தம் விருப்ப எழுத்தாளர் கடிதத்தில் சொல்லும் தீர்வை முறையாகக் கடைபிடித்து வெற்றியும் கண்டுவிடுவார்கள். சிலர் சினிமா நடிகர்களின் - நடிகைகளின் முகவரியைக் கண்டுபிடித்து அவர்களையும் அவர்கள் நடித்த படங்களையும் பற்றிப் புகழ்ந்து தள்ளிக் கடிதம் எழுதுவார்கள். சிலரிடமிருந்து பதிலே வராது. சிலர் தன் கையெழுத்துப் போட்ட புகைப்படம் ஒன்றை அனுப்பிவைப்பார்கள்.


நானும் என் பங்குக்கு ஒரு முறை கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். எப்போது தெரியுமா? அவர் கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் மனம் உடைந்து பல பக்கங்களில் ஒரு கடிதம் எழுதினேன். அப்போது நான் பள்ளிச் சிறுவன். கடிதத்தைப் படித்ததுமே அது அவருக்குப் புரிந்திருக்கும் போல. அதனால் அந்தக் கடிதத்துக்குப் பதிலே வரவில்லை.


இப்படியெல்லாம் கடிதங்கள் எழுதி எழுதிக் குவித்து கடிதங்கள் மீதே காதலில் விழுந்து கிடந்த என் போன்ற பலருக்குப் பெரும் அடியாக வந்திறங்கியது தொலைபேசி. அதுவும் அலைபேசி வந்ததும் எல்லாமே உடனுக்குடன் பேசிக்கொள்ள முடிவதால் எழுதுவதற்கே வேலை இல்லாமல் போய்விட்டது. அதையும் மீறி எழுத விரும்பினால் மின்னஞ்சலில் எழுதலாம். அதற்கெல்லாம் எங்கே பொறுமை இருக்கிறது! அப்போதைக்கப்போது குட்டிக் குட்டியாக குறுஞ்செய்தியாக எழுதிக்கொள்வது அதைவிட வசதியாக இருக்கிறதே! இப்போது வாட்சாப் வந்த பின்பு அதுவும் முற்றிலும் மாறிப் போய்விட்டது. யாரோ எழுதியனுப்பும் குப்பைகளைத்தான் நாளெல்லாம் வாசிக்கிறோம். அவற்றில் பெரும் பங்கு பொய்யும் புரட்டும் பிரச்சாரமுமே இருக்கின்றன. அப்படி வரும் ஆயிரம் தகவல்களுக்கு ஒரு தகவல் என்ற விகிதத்தில் கூட நாமே ஒருவருக்கு ஏதேனும் அடித்து அனுப்புவது என்பதோ நமக்கு ஒருவர் அடித்து அனுப்புவது என்பதோ கிடையாது.


இதெல்லாம் எதில் போய் முடியப் போகிறது? மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் என்பதே இல்லாமல் போய்விடும். அப்படியே வாசிக்கும் பழக்கமும் இல்லாமல் போய்விடும். எழுத்தும் வாசிப்பும் மனிதன் கண்ட மிகப் பெரும் புரட்சிகளில் ஒன்றல்லவா! அவை அப்படியே அழிந்து இனி காட்சியும் கேள்வியும் மட்டுமே பிழைத்திருக்கப் போகின்றன என்கிற காலத்தின் தொடக்கத்தில் வந்து நிற்கிறோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்லதுதான். கழிவதெல்லாம் வேண்டாததாகவும் புகுவதெல்லாம் பயனுள்ளதாகவும் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. இது அப்படியா என்று தெரியவில்லையே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி