சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி தமிழின் தலைசிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் புதினங்களைப் போல பெரிதும் பேசப்படாத நூல் என்பதால் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகத்தோடே தொடங்கினேன். தொடங்கிய சில அத்தியாயங்களிலேயே இந்தப் புதினத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியது. புதினத்தின் பாதியை நெருங்குவதற்குள் இதுதான் தமிழில் இதுவரை வெளிவந்த புதினங்களிலேயே சிறந்ததோ என்ற சந்தேகம் உருவாகி, முடிக்கும் போது இதுவரை நான் படித்த புதினங்களில் இதுதான் சிறந்தது என்று உறுதியாகப்பட்டது. ஜெயகாந்தன், ஜானகிராமன், கி. ரா. போன்ற பெரும் எழுத்தாளுமைகளின் புதினங்களோடு ஒப்பிடுகையில் இதில் புதினங்களுக்கென்று சொல்லப்படும் இலக்கணமோ அவ்விலக்கணத்தின்படியான அழகியலோ இலக்கிய மதிப்போ இல்லை என்று கூட வாதிடப்படலாம். இலக்கியத்திற்கென்று கறாரான இலக்கணங்கள் வைத்திருக்கும் சிலர், இந்தப் புதினத்தை இலக்கியமே இல்லை என்று முழுமையாக நிராகரிக்கவும் கூடும். நடந்ததை அப்படியே பதிவு செய்வதில் எங்கே இலக்கியச் சுவை இருக்கிறது எனக் கூடும். ஆனால் எனக்குப் படிக்கத் தொடங்கியதில் இருந்து, படித்து முடித்து விட்ட பின்பும் பல நாட்களாக மனதை அறுத்துக் கொண்டே இருக்கும் உணர்வைக் கொடுத்ததால், இதற்கு முன் வேறு எந்தப் புதினத்தைப் படிக்கும் போதும் இப்படி ஓர் உணர்வைப் பெற்றதில்லை என்பதால் என்னைப் பொருத்தமட்டில் இதுவே தமிழின் தலைசிறந்த புதினம் என்று கூச்சம் இல்லாமல் சொல்ல விரும்புகிறேன். 


பல்லாயிரமாண்டு நாகரீகம் பற்றிப் பேசுகிறோம், இரண்டாயிரமாண்டு இலக்கிய வரலாறு பற்றிப் பேசுகிறோம், கடந்த சில பத்தாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற்றிருப்பதைப் பற்றிப் பேசுகிறோம். நாம் உண்மையில் அவ்வளவு முன்னேறிய இனம்தானா என்கிற கேள்வியை இந்த நூல் அழுத்தமாக எழுப்புகிறது. அரச பயங்கரவாதங்களை ஒப்பிடுகையில் பிற சிறிய பயங்கரவாதக் குழுக்களின் பயங்கரவாதம் ஒன்றுமே இல்லை என்பதை மீண்டும் நமக்கு நினைவுபடுத்தும் நூல் இது. அரச பயங்கரவாதம் என்பது மத்திய அரசு மட்டுமே செய்வதாக இருக்க வேண்டும் என்பது இல்லை, மாநில அரசும் செய்வதுதான். வீரப்பன் என்ற சந்தனக் கடத்தல்காரனுக்கும் அவனைப் பிடிக்கத் துப்பில்லாத தமிழக, கர்நாடகக் காவல்துறைகளுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு சீரழிந்த மக்கள் பற்றி அந்தக் காலத்தில் நிறையவே படித்திருக்கிறோம் - கேள்விப்பட்டிருக்கிறோம். 


காவல்துறை சார்ந்த திரைப்படங்கள் பெரும்பாலும் அவர்களை நம்ப முடியாத அளவுக்கு நாயகர்களாகக் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டின. காவல்துறையின் துணைகொண்டு செய்யப்படும் அரச பயங்கரவாதத்தை ஆதரித்துக் கரவொலி எழுப்பும் கூட்டம், வீரப்பனை முழுமையாக நிராகரித்தது இயல்பானதுதான். ஆனால் வீரப்பனைப் பிடிப்பதற்காக அவர்கள் செய்த அத்தனை காட்டுமிராண்டித்தனங்களையும் நியாயப்படுத்த அவர்கள் வெட்கப்பட்டது இல்லை. அது எவ்வளவு கீழ்த்தரமான மனித வீழ்ச்சி என்பதுதான் இந்த நூல் சொல்வது. 


பாலமுருகன் எனப்படும் இந்த எழுத்தாளர் இதற்கு முன்பு பின்போ எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. அல்லது அவர் எழுதியது தெரியாமல் போய் இருக்கலாம். அவர் ஒரு பிறவி எழுத்தாளர் இல்லை. ஆனால் அவர் எழுதிய ஒரே ஒரு நூல் பல காலத்துக்கும் தமிழின் தலைசிறந்த நூலாக இருக்கப் போகிறது. 


சுருக்கமாகச் சொன்னால் ஒரு வெற்றிமாறன் திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது. இந்தப் புதினத்தை வெற்றிமாறன் ஒரு திரைப்படமாக எடுத்தாக வேண்டும். அவரைவிடச் சிறப்பாக இதை வேறு எவராலும் படமாக்க முடியாது. காவல்துறையினர் செய்த அட்டூழியங்களில் கொலைகள், கொடூரமான கற்பழிப்புகள், அவற்றை விடக் கொடூரமான சித்திரவதைகள் என அனைத்தும் உண்டு. காவல்துறையினரை விடக் கொள்ளைக்காரன் எனப்படும் அந்த வீரப்பன் பரவாயில்லையே என்று அந்தப் பழங்குடி மக்கள் சொல்வது கதையில் சொல்லப்படும் கொடுமைகளின் வீரியத்தை நமக்குச் சரியாக உணர்த்துகிறது. 


தமிழக - கர்நாடக எல்லைகளில் இருக்கும் மலைக்கிராமங்களில் வாழும் மக்கள் பட்ட பாடுதான் இந்தப் புதினம். காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டு காலம் காலமாக அங்கு இருந்த அந்த மக்களுக்குக் காட்டின் மேல் இருந்த உரிமையைப் பறித்து, அவர்களைச் சொற்களில் சொல்ல முடியாத விதத்தில் கொடுமைப்படுத்தி, எங்கு தப்பி ஓடுவது என்றே புரியாமல் தவிக்கவிட்டுத் துன்புறுத்திய காவல்துறையின் கீழ்மைகளை ஆவணப்படுத்தியிருப்பதே இந்நூலின் நோக்கம். 


சோளகர்கள் என்பவர்கள் ஒரு விதப் பழங்குடியினர். அவர்கள் வாழும் ஊருக்குத் ‘தொட்டி’ என்று பெயர். சோளகர் தொட்டி என்பது அப்படியான ஓர் ஊர். அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பு இருக்கிறது. அந்த ஊரின் தலைவராக இருப்பவர் கொத்தல்லி என்று அழைக்கப்படுகிறார். அவர்களுக்கு என்று ஒரு கோயில் இருக்கிறது. அதன் பெயர் மணிராசன் கோயில். அந்தக் கோயிலில் பூசை செய்பவர் கோல்காரன் என்று அழைக்கப்படுகிறார். காலம் காலமாக வழி வழியாக அவர்கள் குடும்பத்தில் ஒரு கோல் இருக்கிறது. தந்தை மகனுக்கு, அடுத்து அவரின் மகனுக்கு, அடுத்து அவரின் மகனுக்கு என்று அது வழி வழியாக கைமாற்றப்படுகிறது. 


கொத்தல்லி அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டியவர். அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அந்தப் பெரியவர், மரியாதை அறியாத காவல்துறைப் போக்கிரிகளால் அவர்களின் கண் முன்பே அடித்து அவமானப்படுத்தப்படுகிறார். அவர்கள் தமக்கும் தம் கடவுள் மணிராசனுக்கும் இடையில் வைத்துப் பார்க்கும் கோல்காரனையும் அவனின் குடும்பத்தையும் சீரழித்துச் சின்னாபின்னப்படுத்துகிறார்கள். அவர்களில் வயது மூத்தவர்கள் எவரும் எந்தக் காலத்திலும் கண்டிராத - அதற்கு முன் நடந்ததாகக் கேள்விப்பட்டிராத - இந்தப் புதிய சிக்கலை எப்படிக் கையாள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தத்தளிக்கிறார்கள் என்று சொன்னால் கூடச் சரியாக இராது. காட்டிலேயே வாழ்ந்தவர்களைக் கண்ணைக் கட்டி நாட்டில் விட்டது போலத் தத்தளிக்கிறார்கள் என்றால் சரியாக இருக்குமோ? சட்டத்திட்டங்கள் இல்லாத கொடுங்கோன்மையைக் காட்டாட்சி என்று சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் நாம். அவர்களை உலுக்கு உலுக்கென்று உலுக்கிய இந்த அனுபவங்கள் அனைத்தும் நாட்டாட்சியின் கொடுமைகள். நாடு காட்டுக்குள் கொண்டுவந்த கொடுமைகள்.


இந்த நூல் 2019-ஆம் ஆண்டுதான் வெளிவந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் நடந்த காலமான எண்பதுகளில் - தொண்ணூறுகளில் வெளிவந்திருந்தால் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும். தமிழில் வெளிவரும் ஒவ்வொரு நாளிதழையும் அன்றே அதிகாலையிலேயே வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வரி விடாமல் வாசித்து விடுகிற முதலமைச்சர் என்று சொல்லப்படும் கலைஞர் கருணாநிதி இந்த நூலை வாசித்திருப்பார். வாசித்து விட்டு வேறுவிதமாகச் செயல்பட்டு இருப்பாரா என்ற கேள்விக்கு நம்மிடம் விடை இல்லை. இந்த நூலில் குறிப்பிடப்பட்டு இருப்பதை விடவும் அதிகமாக இந்த அட்டூழியங்கள் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவும் கூடும். 


இவ்வளவு கொடுமைகளை நிகழ்த்திய அந்தக் காவல்துறையினரெல்லாம் பிற்காலத்தில் பதவி உயர்வுகள் பெற்று, ஊதிய உயர்வுகள் பெற்று, மரியாதையுடன் ஓய்வு பெற்று, பெருவாழ்வு வாழ்ந்து நல்ல சாவும் பெற்று இருக்கக்கூடும். இன்றும் பலர் உயிரோடு இருக்கவும் கூடும். அவர்களுடைய குழந்தைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெண்களையும் இந்த நூலைப் படிக்க வைக்க வேண்டும். எந்த நாகரிகச் சமூகமும் இப்படி ஒரு பெரும் அநீதியை - அநியாயத்தை இப்படிக் கண்டு கொள்ளாமல் விடாது. தவறு செய்த ஒவ்வொருவரையும் கூண்டில் ஏற்றித் தண்டனை பெறச் செய்திருக்கும். 


அரசியல் ரீதியாக - சட்டரீதியாக அப்படிப் பேசுகிறோம் என்றால், தத்துவ ரீதியாக யோசிக்கும் போதும் வெற்றிடமே விடையாகக் கிடைக்கிறது. ‘நமக்கு இவ்வளவு கொடுமைகளை செய்தவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நல்வாழ்வு வாழ்ந்துதானே மடிகிறார்கள் இந்த உலகத்தில்! இதில் கடவுளின் தலையீடே இல்லையே!’ இதைத்தான் சோளகர்களும் அவர்களின் மணிராசனிடம் முறையிட்டுக் கதறுகிறார்கள். “நீ இருக்கியா?” என்கிறார்கள். 


வழக்கறிஞரான நூலாசிரியர் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகச் செயல்பட்ட அனுபவம் உடையவர். அவர் கேள்விப்பட்ட தன் மனதை அறுத்துக் கொண்டிருக்கும் இந்தக் கதைகளைச் சொல்லாமல் விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதைவிட என்ன பெரிய இலக்கியம் இருந்து விடப்போகிறது! இதுதானே இலக்கியம்! எதைச் சொல்லி ஆக வேண்டுமோ அதைச் சொல்லியே தீருவேன் என்று சொல்லும் போதுதான் இலக்கியம் அழகு பெறுகிறது. எதையோ கற்பனை செய்து, அழகு படுத்தி, மிகைப்படுத்திப் பேசும் இலக்கியங்களுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது என்று வாதிடும் கூட்டம் ஒன்றும் இருக்கிறதல்லவா? இது அவர்களுக்கான இலக்கியம். உங்களுக்கு அதுதான் பிடிக்கும் என்றால் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. இதன் மீதுதான் மரியாதை வருகிறது. நாம் இருவரும் வாழ்வதற்கான இடம் இந்த உலகத்தில் இருக்கத்தானே செய்கிறது. 


காவல்துறையினர் - இந்த அரசாங்கங்கள் பணிக்கு அமர்த்தி வைத்திருக்கும் மனிதர்கள், எவ்வளவு வக்கிரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! மனிதத்தன்மையே அற்றவர்களாக இருக்கிறார்கள்! பெண்களையும் பெரியவர்களையும் குழந்தைகளையும் அவர்கள் சித்திரவதை செய்யும் பாங்கு தனி விதமாக இருக்கிறது. எவரேனும் தவறு செய்தால் தவறு செய்தவனைத் தண்டிக்க வேண்டும் என்பது ஒரு சாரார். தவறு செய்தவனைத் தண்டிக்க முடியாவிட்டால் - பிடிக்க முடியாவிட்டால் அவனைச் சுற்றி இருப்பவர்கள், சூழ்ந்தவர்கள், தொடர்புடையவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவன் வீட்டுப் பெண்கள், குழந்தைகள் இப்படி எல்லோரையும் துன்புறுத்தலாம் - கொடுமை செய்யலாம் என்பவர்கள் இன்னொரு சாரார். இப்படி எல்லாம் செய்தாலாவது அவன் தவறு செய்யாமல் இருப்பான் என்பது இவர்களின் நியாயம். இந்த நியாயத்தின்படிதான் வீரப்பனைப் பிடிக்க முடியாதவர்கள், அவனுக்கு உதவுகிறவர்கள் என்று சொல்லி, உதவுகிறவர்களையும் உதவுவதாகச் சந்தேகப்படுபவர்களையும் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களையும் மனச்சாட்சியே இல்லாமல் கொன்று சாய்க்கிறார்கள் - துன்புறுத்துகிறார்கள். தந்தையையும் மகனையும் நிற்க வைத்து, ஒருவர் முன் இன்னொருவரை அடித்துத் துன்புறுத்துவது, இருவர் கைகளிலும் செருப்பைக் கொடுத்து, “நீ உன் அப்பனை அடி” என்றும் “நீ உன் மகனை அடி” என்றும் வக்கிரமாக நடத்துவது, தாயையும் மகளையும் அழைத்துச் சென்று, எந்தப் பெண்ணும் நினைத்தாலே அடிவயிறு வெடித்து விடுகிற மாதிரியான கொடுமைகளைச் செய்வது, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்று செய்யப்படும் கொடுமை என்று பல கொடுங்காட்சிகள் இருக்கின்றன. பெண்களின் பிறப்புறுப்பிலும் மார்பகங்களிலும் மின்சாரம் பாய்ச்சிக் கொடுமை செய்யும் பயங்கரவாதக் குழு எந்த நாட்டிலும் இருக்கிறதா என்று தெரியவில்லை.


வீரப்பனுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் வீரப்பனின் ஆட்கள் இத்தனை பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று நாம் நாளிதழ்களில் படித்த கதை எவ்வளவு பெரிய கட்டுக் கதை என்பது இந்த நூலைப் படித்தவர்களுக்குப் புரிகிறது. தொட்டியில் உள்ள மூன்று பேரை அழைத்துச் சென்று, கொடுமை செய்து துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வீரப்பனின் ஆட்களைப் போல உடையைத் தைத்துக் கொடுத்து, மாற்றச் செய்து, கோழைத்தனமாகக் கொன்றுபோட்டுவிட்டு, இவர்கள் ஏதோ வீரமாக வீரப்பன் ஆட்களை நேரடி மோதலில் கொன்றுவிட்டதாக நம்மிடம் கதைவிட்டு இருக்கிறார்கள். எவ்வளவு கீழ்த்தரமான ஆட்டம் இது! 


வீரப்பனைக் கொன்ற காவல்துறை அதிகாரிக்குப் பாராட்டு விழா நடத்தியது, பதவி உயர்வு கொடுத்தது, அவருடைய அனுபவத்தை நூலாக எழுதி வெளியிட்டது - எல்லாமே நல்லதுதான். வீரப்பனைப் பிடிக்கப் போகிறேன் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, ஆதரவற்ற எளிய பழங்குடி மக்களை இப்படி அணுவணுவாகச் சித்திரவதை செய்து, அவர்கள் வாழ்வை அழித்த - கொடூரமான மனிதத்தன்மையற்ற மற்ற காவலர்களை இந்த அமைப்பு தண்டித்திருக்க வேண்டும். அந்தக் கடமை அன்று முதல் இன்று வரை காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை, ஏன் மத்திய அரசுக்கும் கூட இருக்கிறதுதானே! 


ஏதேதோ காரணங்களுக்காக மாநில ஆட்சியைக் கலைக்கும் மத்திய அரசுகள் இது போன்ற ஒரு கொடுமையை நிகழ்த்திய அரசுகளுக்குத் தலைமை வகித்த அத்தனை முதலமைச்சர்களையும் நிரந்தரமாக அரசியலை விட்டு நீக்கக் கூட உரிமை இருக்கிறது என்று ஏன் கருதுவதில்லை! அதற்கு அவர்கள் யோக்கியமாக இருக்க வேண்டுமே என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. 


இதை ஒரு தொட்டியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றிப் பேசும் புதினம் என்றும் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் மேலிருந்து பார்த்தால், காவல்துறை செய்யும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புதினம் என்று சொல்லலாம். இன்னும் மேலே இருந்து பார்த்தால், தன் பல்லாயிரம் ஆண்டு காலப் பெருமைகளைப் பேசிக்கொண்டு தம்பட்டம் அடிக்கும் ஒரு கூட்டம் - ஓர் இனம், எவ்வளவு மனசாட்சி இல்லாததாக இருந்து வந்திருக்கிறது என்பதைப் பேசும் புதினம் என்று சொல்லலாம். 


முன்னேறிய மக்களாட்சிகளில் ஒரு குடிமகனை - குடிமகளைக் கூட அவர்களின் அரசுகளோ அரசுகள் ஏவிவிடும் காவல்துறையோ எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்தியா போன்ற வல்லரசுப் பித்தலாட்டம் செய்யும் நாடுகளில் இன்னமும் காவல்துறைக்கு எவ்வளவு கொடுமையான - கீழ்த்தரமான அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன! இவ்வளவு காலம் ஆன பின்பும் அதைக் கேள்வி கேட்க - தடுத்து நிறுத்த ஒருத்தர் கூட வரவில்லை என்பது எவ்வளவு கொடூரமான விஷயம். இப்போது கூட இந்தக் கொடுமையைச் செய்த எல்லோரையும் கைது செய்து, கூண்டில் ஏற்றி, அவர்கள் செய்த கொடுமைக்கு 10% தண்டனை கொடுத்தால் கூட மனித இனத்தின் மீது நம்பிக்கையைக் கூட்டும் ஒரு நிகழ்வாக இருக்கும். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி