கண்

 “உங்களுக்கு நன்றி” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்தேன். நேர்காணல்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட அறை போல் இருக்கிறது. மொத்தமே மூன்று-நான்கு பேருக்கு மேல் கொள்ளாத அறை.


அவர் புன்னகையோடு எழுந்து நின்று அவரது வலது கையை நீட்டிக் குலுக்கினார்.


புன்னகை எல்லாம் நல்லபடி முடிந்தது என்றே சொன்னது.


திரும்பி மெதுவாக அறையின் கதவைத் திறந்து வெளியேறினேன். உள்ளே செல்லும் போது, “வாழ்த்துக்கள்” என்று புன்னகைத்துச் சொன்ன அதே அழகான மாநிறப் பெண் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும். பெங்களூரில் இருக்கும் மாநிறப் பெண்கள் எல்லோருமே தமிழ்ப் பெண்கள் என்றுதான் தோன்றுகிறது. அவளின் வாழ்த்தே ஒரு நல்ல சகுணமாகத்தான் இருந்தது. எல்லா நிறுவனங்களிலுமா நேர்காணலுக்கு உள் நுழைவோருக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பிவைக்கப் போகிறார்கள். இப்படியான ஒரு நிறுவனத்தில்தான் பணி புரிய வேண்டும். இப்போதும் புன்னகைத்தாள்.


“எப்படிப் போனது?” என்றாள்.


இவ்வளவு நன்றாகப் பேசுகிறாளே! எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவாளா? வருகிற எல்லோரிடமும் இப்படித்தான் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்களோ!


“நன்றாகப் போனது” என்று கேள்விக்கு மட்டும் பதில் அளித்துப் பதிலுக்குப் புன்னகைத்தேன். புன்னகையைச் சிறிது குறைத்து சொற்களைக் கொஞ்சம் கூட்டியிருக்கலாம். எல்லாம் நல்லபடிப் போனது போலத்தான் படுகிறது. பணியில் சேர வரும் போது நினைவு வைத்திருந்து வரவேற்கும் அளவுக்கு நான்கு சொற்கள் கூடுதலாகச் சொன்னால்தான் என்ன! திரும்பவும்தான் வரப் போகிறோமே! அப்போது பேசிக்கொள்ளலாம். இப்போது என்ன அவசரம்! அவள் புன்னகைத்துப் பேசுவது அழகாக இருக்கிறது. அதையே நானும் செய்தால் வழிவது போல் இருந்துவிட்டால் என்ன செய்வது?


அவளுக்கு முன் இருந்த ஏட்டில் வெளியில் செல்லும் நேரத்தைக் குறித்தேன். நான்கு திசைகளில் ஒன்றைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள் என்று சொல்ல முடியாத படிக்கு எட்டுத் திசைகளில் ஒன்றைப் பார்த்து அமர்ந்திருந்தாள். அப்படியான ஒரு மூலையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்தாள். அல்லது அமர்த்தியிருந்தார்கள். ஈசான மூலையாக இருக்க வேண்டும். எல்லா மூலையும் ஈசான மூலைதான். அதுதான் எளிதாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் திசையை அறிய முயலும் இந்தப் புத்தி எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை.


பேனாவைப் பதமாக ஏட்டின் மேல் வைத்துவிட்டு, அவளுக்கு ஓர் “உங்களுக்கு நன்றி” சொல்லிவிட்டுத் திரும்பினேன். “நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்” என்று தெளிவாகவும் ஒலியின் அளவைக் குறைக்காமலும் சொன்னாள். நன்றி, நல்வரவுக்கெல்லாம் ஒலியின் அளவைக் குறைத்துச் சொல்லும் வழக்கம் இந்த ஊரில் இல்லையோ! நிறைய ஆங்கிலப் படங்கள் பார்ப்பாளோ என்னவோ! இல்லை, இதுவும் பயிற்சியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.


திறந்தே இருந்த கண்ணாடிக் கதவுக்கு அருகில் நின்ற பாதுகாவலரும் நன்றாகவே புன்னகைத்துத் தலையை ஆட்டினார். அவருக்கும் புன்னகைத்துப் பதில் கொடுத்துவிட்டு, மூன்றே படிக்கட்டுகளில் அந்தச் சிறிய அழகான கட்டடத்துக்கு முன்னால் இருந்த மண் சாலையில் இறங்கினேன். முதுகுக்குப் பின் பாதுகாவலரோடு ஏதோ பேசினாள். பேசிவிட்டுப் போகட்டுமே, அதனால் என்ன!


வலது புறம் திரும்பி நூறு மீட்டர் நடந்தால் முக்கியச் சாலை. அங்குதான் பேருந்து நிறுத்தமும். இன்று வேலை கிடைத்துவிட்டது போலத்தான் இருக்கிறது. ஆட்டோவில் கூடப் போகலாம். வேலை கிடைத்த பின்பும் கூட அதெல்லாம் பண்ணக் கூடாது. பேருந்து நிறுத்தம் வந்து சில நிமிடங்களிலேயே வேண்டிய பேருந்தும் வந்தது. நேராக ஒன்பது கிலோ மீட்டர் வந்தால் மடிவாளா மசூதி நிறுத்தம். இறங்கி பதினைந்து நிமிடங்கள் மேற்கே நடந்தால் வீடு. மடிவாளா பெங்களூரின் திருவல்லிக்கேணி. முற்றிலும் வேறுவிதமான திருவல்லிக்கேணி. மடிவாளா சந்தையில் காய்கறி விற்கும் தமிழர்கள் மட்டும் மடவாளம் என்பார்கள்.


வீடு வந்து சேர்ந்தேன். கதவைத் தட்டினேன். கார்த்தி கதவைத் திறந்தான். அவன் கண்களில் ஆர்வம் தெரிந்தது. என் கண்களுக்குள்ளேயே எல்லாம் கிடைத்துவிடும் என்பது போலத் தேடினான். 


“ரெண்டு பேர்ல ஒருத்தருக்குக் கெடைச்சிட்டா இன்னொருத்தருக்கும் சீக்கிரம் கெடைச்சிரும்னு தோணுது. முதல் தாயந்தான் நேரம் ஆகும்” என்று சொல்லி என் சொற்களுக்கான பாதையை விரித்தான்.


காலணிகளைக் கழற்றிக்கொண்டே அவனைத் திரும்பிப் பாராமல், “நல்ல வேளை, சென்னைக்குப் போகலைன்னு நெனைச்சுக்கோ. கண்ணன், செந்தில் மாதிரி நல்லா வாராவாரம் ரிலீஸ் படம் பாத்துட்டு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய் வயிறு முட்டச் சாப்டுட்டு வேலைன்னு ஒன்னு தேடணுங்கிற ஆசையே இல்லாம ஆட்டம் போட்டுத் திரிஞ்சிருப்போம். எதோ பெங்களூர் வரப்போய் இங்க உள்ளவனுகளப் போல நம்மளும் ஒரு வேலையப் பிடிக்கணும் - உருப்படனும்னு அலையிறோம்” என்றேன்.


குனிந்து ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டே, “போன கதையச் சொல்றான்னா…” என்று எரிச்சிரிப்போடு முறைத்தான்.


“அது கெடைச்சிரும் போலத்தான் தெரியுதுறா. ஆரம்பிச்சதுல இருந்தே எல்லாம் சரிய்யாப் போன மாதிரி இருந்தது. எவளோ சீக்கிரம் சேர முடியும்னு கேட்டானுக. கேக்குற விதத்துலயே தெரியும்ல. அடுத்த வாரமே ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும் போலத் தெரியுது.”


“சூப்பர் மச்சி. உங் கையக் குடு. ரெம்ப நாள் கழிச்சு இப்பத்தான் உன் வாயில இருந்து நல்ல வார்த்தை கேட்டிருக்கேன். கண்டிப்பா நடக்கும்” என்று முகமெல்லாம் மலர்ந்து கையை நீட்டினான்.


“போடா இவன் ஒருத்தன். இந்த மூணு வருசத்துல நீ எத்தனை தடவ ஏமாந்திருக்கன்னு எனக்குத் தெரியும். நான் எத்தனை தடவ ஏமாந்திருக்கன்னு ஒனக்குத் தெரியும். கையில ஆஃபர் லெட்டர் வர்ற வரைக்கும் இவனுக பேச்சையே நம்பக் கூடாது. சரி, அந்த ரிமோட்டக் குடு” என்று கையை நீட்டினேன்.


“ஆஃபர் லெட்டரா? அதுக்குப் பெறகும் மாத்துனவங்களையுந்தான் பாத்துட்டமே! இந்தா, ஒன்னும் உருப்படியா இல்ல” என்று ரிமோட்டை நீட்டினான்.


ரிமோட்டை வாங்கி, அதிலிருக்கும் எண்களையே பார்த்துக்கொண்டு, “இந்தத் தடவ வீட்டுக்கே கூடச் சொல்ல வேண்டான்னு பாக்குறண்டா. முந்தி முந்திச் சொல்றதாலதான் நக்கிக்கிட்டுப் போயிருதோன்னு தோணுது” என்றேன்.


“அப்டியே செய். என்ட்டச் சொன்னதோட இருக்கட்டும். ஆனா இன்னைக்கு நைட்டு நம்ம கொண்டாடுறத கொண்டாடிருவோம். இல்லன்னா சாமிக்குத்தம் ஆயிருண்டா” என்றான் அவனுக்கே உரிய எகத்தாளத்தோடு.


அவன் எதைச் சொல்கிறான் என்று தெரியும். நாய்க்கு குடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். கஞ்சிக்கே வழியில்லை. இதில் இவனுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது என்னத்தையாவது ஒரு கதையைச் சொல்லி குடித்தே ஆக வேண்டும்.


ஈயெஸ்பீயென்னில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் ஆடும் ஐந்து நாள் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. எப்போதுமே இந்தியாவைத் தவிர எந்த நாட்டோடு ஆடினாலும் பாகிஸ்தானுக்குத்தான் நம் ஆதரவு. வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாத வாசிம் அக்ரமின் நொட்டாங்கை வீச்சை நாள் முழுக்கவும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்ததுதான் நினைவில் இருக்கிறது. 


“எய், எந்திர்ரா. எட்டரை மணி ஆயிருச்சு. எப்பிட்ரா இப்பிடி போட்ட பேண்டோடயே தூங்க முடியுது! நீ மட்டுந்தான் இப்பிடியா இல்ல உங்க நாகலாபுரத்துக்காரனுங்க எல்லாருமே இப்படித்தானா?” கார்த்தியின் சத்தம்.


எழுந்து ஒரு காலை நீட்டியபடியே ஒரு காலை மட்டும் பாதி மடக்கி ஒருச்சாய்த்து உட்கார்ந்தேன். 


தொலைக்காட்சி அமர்த்தப்பட்டு இருந்தது. அதிலெல்லாம் பொறுப்பான ஆள். அவன் மட்டுந்தான் அப்படியா அல்லது அவன் ஊர்க்காரர்கள் எல்லோருமே அப்படியா என்று கேட்கவில்லை.


 “டேய், எந்திர்ரா. எத்தனை தடவ சொல்றது! படுத்துக்கிட்டு நாலு மணி நேரம். ஒக்காந்துக்கிட்டு ஒன்ற மணி நேரம். நல்லாத் தூங்குறிங்கடா. நீயும் உங்க ஊர்க்காரனுகளும்.”


“ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது எங்க ஊர்க்காரய்ங்கள இது பண்ணலைன்னா உனக்கு…” உதறி எழுந்தேன். 


குளித்து, சீவி சிங்காரித்து, வேலைக்குப் போவது போலத் தயாராக இருந்தான். முழுதும் எழுந்து முடிப்பதற்கு முன்பே காலிலேயே பாயைச் சுருட்டினான். “எத்தனை தடவ சொல்லியிருக்கேன். வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் மாதிரி.” 


எந்த வேலையைச் சொல்கிறான் என்று தெரியவில்லை. பாய் மடிக்கும் வேலையையா குடிக்கும் வேலையையா! பையன் பெருத்த இன்பத்தில் இருப்பது வந்து விழும் ஒவ்வொரு சொல்லிலும் ஒலித்தது. குடிக்குப் பின்பு இந்த இன்பம் இன்னும் கூடி இரட்டிப்பாகும். கூட இருப்பவனுக்குத்தான் துன்பம் எல்லாம். வீடு வந்து சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். 


“சரி, பொறப்படு.”


“டேய், ஒங்க ஊர்ல தூங்கி எந்திரிச்சா மூஞ்சியக் கூடக் கழுவ மாட்டாங்களா?” இப்போதுதான் முதல் முறை இப்படி நடப்பதைப் பார்ப்பது போலக் கேட்டான்.


“ஏய், மணி எட்டரை ஆச்சு. கெளம்புடா.”


“பார்றா. பிள்ளைக்கு அவசரத்த…” 


வெளியேறிக் கதவைப் பூட்டிவிட்டு அவனுடைய ஆர்.எக்ஸ்.100 வண்டியைக் கிளப்பினான். புலிக்குட்டி துடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சத்தத்துக்கு ஏதோவொரு கிறங்கடிக்கும் திறன் இருப்பதாக ஒரு முறை சொல்லிவிட்டு விட்டுவிட்டான். ஒவ்வொரு முறை கிளப்பும் போதும் பின்னால் அமரும் எனக்கு அது மனதில் வராமல் இருப்பதே இல்லை.


“எங்கடா?”


“வேறெங்க? நம்ம கங்கோத்ரிக்குத்தான்!”


கங்கோத்ரி பி.டி.எம். லேயவுட்டில் இருக்கும் ஓர் அழகான குடிப்பிடம். உள்ளேயே மரங்கள் இருக்கும். மரத்தடியில் அமர்ந்து குடிக்கும் பேரனுபவத்தைக் கொடுக்கும். வீட்டிலிருந்து தெற்கே ஒரு கிலோ மீட்டர் கூட இல்லை. நடந்து கூட வந்துவிடலாம். வந்து வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனோம்.


மரத்தடியில் ஓர் இருக்கையைப் பிடித்து அமர்ந்தோம். 


விருந்துபசரிக்கும் தொனியில், “என்ன போடுற?” என்றேன்.


“நம்மட்ட எப்பவுமே நேத்து ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சுன்னு கெடையாதுப்பா. என்னைக்குமே ஒரே பேச்சுதான். யாராவது வாங்கிக் குடுக்குறாங்கங்கிறதுக்காக என்னத்தையாவது கேக்கக் கூடாதுல்ல. மீன்கொத்திப் பறவைதான்.”


துரை கிங்பிஷர் பியர் என்பதை இப்படித்தான் சொல்வார்.


சரக்கு வந்தது. வழக்கம் போல் முதல் இரண்டு புட்டிகள் வேகவேகமாகக் குடித்தான். அது வரை குடியில்தான் கவனம் இருக்கும். மூன்றாவது சுற்று வேகம் குறைந்து விடும். பேச்சு கூடும் சுற்று இது.


“சத்தியமாச் சொல்றண்டா. எனக்கு வேலை கெடைச்சிருந்தாக் கூட இவ்வளவு சந்தோசப்பட்டிருக்க மாட்டன் டா. இன்னைக்கு நீ போகும் போதே ஏதோ தோணுச்சு. வேலையோடதான் வீடு திரும்புவன்னு. அதே மாதிரி ஆயிருச்சு.” பையன் உணர்ச்சிவயப்படத் தொடங்கிவிட்டான். அங்கிருந்த விளக்கு வெளிச்சத்துக்குக் கண்கள் பளபளத்தன.


“டேய், நான் இன்னைக்கு வேலையோட வீடு திரும்புனன்னு ஒனக்கு யார் சொன்னது? ஒரு நாலு நாள் பொறுக்க முடியாதா ஒனக்கு?” அளவோடு சிடுசிடுத்தேன்.


“வேலை கெடைச்சிருச்சு. அதுக்குக் கொண்டாடியும் முடிச்சாச்சு. இனிமே யார் நெனைச்சாலும் இத மாத்த முடியாது. மொத மாசச் சம்பளத்துல என்னடா பண்ணப் போற? ஒங்கம்மாவுக்கு ஒரு நல்ல சேலை எடுத்துட்டுப் போய்க் குடு. அதுக்கப்புறம் பார். உன் வாழ்க்கை எப்பிடிக் கிடுகிடுன்னு ஏறப்போகுதுன்னு.” இது ஏதோ கிழவன் பேசுவது போல இருந்தது. பரிகாரம் சொல்லும் கணிகர் போலவும் இருந்தது. நாள் தோறும் காலையில் தொலைக்காட்சியில் இராசி-பலன் பார்ப்பதன் விளைவாக இருக்கலாம். இதைத்தான் அவன் முதல் மாதச் சம்பளத்தில் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டிருக்க வேண்டும்.


“டேய், டேய், கொஞ்சம் அடக்கி வாசியேண்டா. இன்னும் பொண்ணே பாக்கல. இவன் என்னடான்னா பேரன்-பேத்திக்குப் பேர் வச்சுக்கிட்டு இருக்கான்” என்று செயற்கையாக நெற்றியில் இடது கையை வைத்தேன்.


“இப்பத்தாண்டா கொஞ்சம் ஏர்ற மாதிரி இருக்குது. ஒரு தம் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.” இரண்டு மேசைகள் தள்ளி நிற்கும் பரிமாறரை நோக்கிக் கையைத் தூக்கி, “அண்ணா, மேச்சூஸ் இதியா?” என்று சத்தமாகக் கேட்டான். தெரிந்து வைத்திருக்கும் நான்கைந்து கன்னடச் சொற்களில் சிலவற்றைச் செலவழித்து விட்டான். மேச்சூஸ் கன்னடமா? தக்காளிக்குக் கன்னடத்தில் டொமட்டோதான். அது பெங்களூரில் மட்டுமா அல்லது மொத்தக் கன்னட நாட்டிலுமா என்பதற்கு இதுவரை செய்த ஆய்வுகளில் விடை கிட்டவில்லை. அது போல தீப்பெட்டிக்கு மேச்சூஸ்தான் பெங்களூர்க் கன்னடத்தில். குறைந்தபட்சம் குடிப்பகங்களில் என்று வைத்துக்கொள்ளலாம்.


பிற நாட்களில் புகைப் பிடிக்கவும் மாட்டான். இவ்வளவு சத்தமாகப் பேசவும் மாட்டான். அந்த இரைச்சலில் இது சத்தமாக யாருக்கும் படவும் செய்யாது என்றாலும், எப்போதும் உடன் இருப்பவன் என்ற முறையில் அதைக் கவனிக்க முடிந்ததைச் சொல்லாமல் இருக்க முடியாதே.


பரிமாறர் வந்து, அவரே ஒரு குச்சியை உரசி, பையனுக்குப் பற்ற வைத்துவிட்டு, பெட்டியைத் தன் பைக்குள்ளேயே போட்டுக்கொண்டு போய்விட்டார். நான்கு பைகள் கொண்ட மேலங்கி போன்ற சட்டையின் இடது கீழ்ப் பையில் போட்டுக்கொண்டார்.


இடது கை விரல்களுக்குள் இருக்கும் சிகரெட்டைத் தூக்கி, இடது புறம் திரும்பி, சிறிது தொலைவு சென்று விட்டவருக்குக் கேட்கும் முயற்சியோடு, இன்னொரு சொல்லைச் செலவழித்தான். “தன்யவாதாண்ணா!!!” இதுவும் வழக்கத்துக்கு மீறிய சத்தத்தோடே இருந்தது. ஆல்கஹாலுக்கு அச்சமும் வெட்கமும் குறையும் என்பது சரிதான் போல. பரவாயில்லை. சத்தத்தைக் கூட்டியது சரிதான் போல. அவர் காதுக்குச் சென்றடைந்து விட்டது தெரிந்தது. அவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக எங்கள் பக்கம் திரும்பி, இடது கீழ்ப் பைக்குள் இருந்த தீப்பெட்டியையும் அனிச்சையாகக் கையோடு தூக்கிக் காட்டிவிட்டு விரைந்து மறைந்தார். 


புகை பிடிக்கும் பழக்கமில்லாதவர்கள் பிடிக்கும் பாணியில், ஒரு சொட்டுப் புகை கூட வீணாகக் கூடாது என்கிற கவனத்தோடு நீண்ட நீண்ட இழுப்புகளாக மூன்று இழுத்து விட்டான்.


“இப்பத்தாண்டா கொண்டாட்டம் முழுமை அடையுது!” என்றவனின் கண்களுக்குப்பின் பின் ஏதோ கணக்கு ஓடுவது தெரிந்தது.


“அப்ப நாந்தான் நம்ம செட்டுலயே கடைசி, இல்ல?” என்று இந்த உரையாடல் எந்தத் திசையில் திரும்பக் கூடாது என்று இவ்வளவு நேரமும் வேண்டி கொண்டிருந்தேனோ அந்தத் திசையிலேயே திருப்பினான். இனிதான் சிக்கலான பகுதி.


“என்னடா சொல்ற?” என்றேன் என்ன சொல்வதென்றே தெரியாமல்.


எதுவும் பேச விரும்பாதவன் போல் ஓர் இடைவெளி விட்டான்.


“இன்னும் செந்தில் இருக்கான். கண்ணன் இருக்கான். எனக்கும் இன்னும் கெடைச்சிருச்சான்னே தெரியல. நீதான் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு இருக்க.”


“டேய், என்னையும் சென்னை போச் சொல்றியா அப்ப? நான் பெங்களூர் வந்தவங்கள்ல சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பாராமல் வலது பக்கம் திரும்பிச் சாலையில் போகும் வாகனங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.


“அதான் மொதத் தாயம் விழுந்திருச்சுல்ல. நீ சொன்ன படியே, அடுத்த தாயம் டக்குன்னு விழுந்திரும். ஒனக்கும் கூடிய சீக்கிரம் கெடைச்சிரும்னுதான் எனக்கும் தோணுது. அது வரைக்கும் செலவுப் பணம் பத்தி இனி கவலப்பட வேண்டியதில்ல. நான் சம்பாதிச்சா என்ன? நீ சம்பாதிச்சா என்ன? ரெண்டும் ஒண்ணுதான!” இப்படியெல்லாம் பேசவே வராது என்று எண்ணிக்கொண்டிருந்த என் வாயிலிருந்தா இதெல்லாம் வந்தது என்று எனக்கே வியப்பாக இருந்தது.


“அதெப்பிட்றா ரெண்டும் ஒண்ணாகும்?” என்று மட்டும் கேட்டுவிடக் கூடாதே என்று உள்ளுக்குள் பதறிக்கொண்டு அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்தேன். அந்த நிமிடம் அதைவிட இந்த உலகத்தில் வேறெதுவுமே முக்கியமில்லை என்பது போல.


பிடிக்காமலே சிகரெட் கரைந்திருந்தது. சாம்பல் நீளமாக இருந்தது. வலதுகைப் பக்கம் இருந்த சாம்பல் தட்டில் அதை ஒரு தட்டு தட்டினான். பாதிக்கு மேல் குட்டையாகி இருந்தது. இன்னொரு நீளமான இழுப்பு இழுத்தான்.


இன்னும் பளபளக்கும் கண்களோடு நேராகப் பார்த்துச் சொன்னான். “இன்னைக்கு நம்ம இங்க எதுக்கு வந்திருக்கோம்? ஒனக்கு வேலை கெடைச்சதக் கொண்டாடுறதுக்கு. அத முழுசாப் பண்ணுவோம். மத்ததெல்லாம் நாளைக்குக் காலைல பேச வேண்டியது.” உணர்ச்சிவயப்பட்ட நிலையில் புன்னகைத்தான். நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். அது புன்னகையாகவே வெளிப்பட்டதா என்று தெரியவில்லை.


“டேய், நீ ஏன் டா எதையோ பறிகொடுத்தவன் போல மூஞ்சிய வச்சுக்கிட்டு இருக்க? கொண்டாடுறா. எல்லாம் சரி ஆயிரும். இந்தா நீயும் ஒரு ரெண்டு இழுப்பு வேணா இழுத்து விடு. எல்லாம் சரி ஆயிரும். இப்படியேவா வேலை கெடைக்காமலே ரிட்டையர் ஆயிரப் போறேன்? அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கத்தான் போகுது. அது வரைக்கும் படுறதப் பட்டுத்தான ஆகணும்!” என்று எனக்கு ஆறுதல் தருவது போலப் பேசினான்.


இருவருமே வேறு ஏதாவது பேசினால் நல்லது என்று விரும்பி, வேறு ஏதோதோ பேசி, சிரித்து, அடுத்து உணவு உண்டு, வீடு வந்து சேர்ந்தோம். வந்ததும் தூங்கியும் போனோம்.


அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. அடுத்து வந்த சனி-ஞாயிறு இதற்கு முந்தைய எந்தச் சனி-ஞாயிறையும் விட நம்பிக்கை மிக்க சனி-ஞாயிறாகக் கழிந்தது. சனிக்கிழமை, மாரத்தஹள்ளியில் இருக்கும் துணிக்கடைகளில் நல்ல சட்டைகளாக நான்கு வாங்கி வந்தோம். அதுவும் கார்த்திதான் வம்படியாக அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தான். 


“டேய், எனக்கென்னமோ நம்ம ரெம்ப அவசரப்படுறமோன்னு தோணுது. இதெல்லாம் வேலைல சேந்தப் பெறகு கூடப் பண்ணலாமே. கைக்கு லெட்டர் வந்த பெறகு கூடப் பண்ணலாமே. அடுத்த சனிக்கெழம வந்தா இந்தக் கடையெல்லாம் ஓடியா போயிரப் போகுது?” என்றதற்கு… “மூடிட்டு வா. இதெல்லாம் ஒனக்கு நான் வாங்கிக் குடுக்குறது. எனக்கு வேல கெடைக்கிற வாரம் இதெல்லாம் நீ எனக்குப் பண்ணனும். அதுக்குத்தான். ஒங் கலியாணத்துக்கு நான் ஓடியாடி வேல செஞ்சா எங் கலியாணத்துக்கு நீ பண்ண மாட்டியா? எல்லாம் ஒரு ஸ்வயநலந்தாண்டா!” என்று கோல் அடித்தான்.


அதை நினைத்தால் இன்னும் தலை சுற்றியது.


ஞாயிற்றுக்கிழமை இரவு, மீண்டும் கங்கோத்ரி. நாளை காலை முதல் வேலையாக அலுவலகத்தைத் திறந்தவுடன் எனக்கு நியமனக் கடிதம் அடிக்கும் வேலைதான் நடக்கப் போகிறது, அடுத்த நாள் காலை புதுச்சட்டை போட்டு வேலையில் சேரப் போகிறேன் என்பது போலக் கொண்டாடினோம். கார்த்தியும் காலையில் எழுந்து குளித்து உடன் புறப்பட்டு விடுவானோ!


“இங்க பார்றா. இப்பவே சொல்லிர்றேன். ரெண்டு பேருக்கும் வேலை கெடைச்ச பெறகு இப்ப இருக்கிற மாதிரிப் பிச்சைக்காரத்தனமா இருக்கக் கூடாது. வாழ்க்கைய நல்லா அனுபவிக்கணும் - கொண்டாடணும். அதுக்குத்தான பெங்களூர்ல இருக்கோம். இல்லைன்னா நம்மளும் கண்ணன் கூட - செந்தில் கூடப் போயி காசித் தியேட்டர்ல படம் பாத்துட்டுத் திரிஞ்சிருக்கலாமே!” இதுதான் ஞாயிறு இரவு கொண்டாட்டத்தின் கதைச்சுருக்கம்.


திங்கள் பிறந்தது.


“டேய் எந்திர்ரா, ஒம்போது மணிக்குப் போய் ஒரு ஃபோன் போட்டுப் பேசிட்டு வந்துருவோம்.” ஏழு மணிக்கே எழுப்பினான். 


“டேய், பேசாமப் படுத்துத் தூங்க மாட்டியா? இங்கிருந்து நூறு மீட்டர் தூரத்துல இருக்கு ஃபோன் பூத்து. அதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எழுப்பிக்கிட்டு…” என்று தொடர்ந்தேன்.


திரும்பவும் ஏழரை மணிக்கு, “டேய், எந்திர்றா” என்று அனத்தினான். அதற்குப் பிறகு முடியவில்லை. எழுந்துவிட்டேன்.


“எந்திரிச்சுக் குளிச்சு மாப்ள மாதிரிப் போய் ஒரு ஃபோனப் போட்டா அதெப்பிடி இருக்கும்! இப்பிடியே தூங்குன மூஞ்சியோட போய்ப் பேசுனா எப்பிடி இருக்கும்? ஒனக்காக இன்னைக்குக் காலைலயே போய் பால் வாங்கிட்டு வந்து சுடச் சுட காப்பி போட்டு வச்சிருக்கேன். அதக் குடிச்சிட்டு ஒன் நாளத் தொடங்கு. இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எந்த நாளும் இனிய நாளாக இருக்கும்” என்று சொந்தக் குரலில் தொடங்கி வலம்புரி ஜான் குரலில் முடித்தான். 


“எப்பா… சாமி… வாய்ப்பே இல்லடா நீ!” திட்டினேனா பாராட்டினேனா தெரியவில்லை.


“எனக்கிருக்கிற எக்ஸைட்மெண்ட்ல பாதி இருந்தாக் கூட உருப்பட்டுருவ. சரி விடு. இதெல்லாம் சொல்லிக்குடுத்தா கொண்டு வர முடியும்! கெளம்பு. கெளம்பு.” அவசரப்படுத்தினான். இதென்னடா பெரும் துன்பமாப் போச்சு!


எட்டரை மணிக்கே புறப்பட்டுப் போனோம். கடைக்கு வெளியேயே நின்று கொண்டு காலையில் அவசர அவசரமாக நடந்தும் இரு சக்கர வானங்களிலும் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் அதிசயப் பிறவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றோம்.


“நாளைல இருந்து நீயும் இதுல ஒரு பூச்சி ஆயிருவ!” என்று கேலிச்சிரிப்பு சிரித்தான்.


சரியாக ஒன்பது மணி ஆனதும், அவனே கடைக்குள் நுழைந்து, ஒருவர் மட்டும் நின்று பேச முடிகிற தொலைபேசிச் சாவடிக்குள்ளும் முதல் ஆளாக அவனே நுழைந்து, கதவைத் திறந்த படியே வெளியே என்னை நிற்க வைத்துவிட்டு, “அந்தப் பேப்பரக் குடு” என்று என்னிடமிருந்த துண்டுச் சீட்டைப் பறித்து, அதிலிருந்த எண்ணுக்கு அவனே இலக்கங்களைத் தட்டினான்.


‘அடேய், என்னடா நடக்குது இங்க!’ என்கிற மாதிரி நான் ங்கே என்று வெளியே நின்று கொண்டிருந்தேன். 


“ஏய், போகுதுரா. இந்தா, பேசு!” என்று வேகவேகமாக என்னைப் பிடித்து உள்ளே இழுத்து, தொலைபேசியின் வாங்கியை என் காதுக்கருகில் திணித்தான்.


எதிர் முனையில் ட்ரிங்… ட்ரிங்கியது. நீண்ட நேரம் அடித்தது. யாரும் எடுத்தபாடில்லை. ஏமாற்றத்தோடே அவன் முகத்தைப் பார்த்தேன்.


“என்னடா, எடுக்கலையா? அவளுக்கு வேற வேல இருக்காதா என்ன? ஆபீஸ் தெறந்த ஒடனே ஒன் ஃபோன எடுக்குறதுதானா அவளுக்கு ஒரே வேல! எங்கையாவது தூரத்துல இருந்து ஒரு மணி நேரம் பஸ்ஸுல வந்திருப்பா. வந்த ஒடனே பாத்ரூம் கீத்ரூம் போயிருப்பா. இன்னொரு தடவ கூப்பிடு.” வேறு எதற்கும் தயாரில்லை என்பது போல முடித்தான்.


மீண்டும் அழைக்கும் “ஆர்” பொத்தானை அழுத்தினேன். 


“ஏய், அந்த ஏழு நம்பர அடிக்கிறதுக்கு ஒனக்குக் கை வலிக்குதா? நாளைக்கு சம்பளம் வாங்கக் கூட கை வலிக்குது வேண்டான்றுவான் போலயே! திரும்ப அடிப்பானா… சோம்பேறிப் பய…” என்று இழுத்தான்.


அதற்குள் மீண்டும் ட்ரிங்… ட்ரிங்கியது. இப்போதும் பதிலில்லை. அதே ஏமாற்றத்தோடு அவனைப் பார்த்தேன்.


“முக்கா முக்கா மூணு தடவ. நான் சொன்னதப் பண்ணு. இப்ப ஓடி வந்து எடுக்குறளா இல்லையான்னு மட்டும் பாரு” என்றான்.


இம்முறை அவன் சொன்னபடியே துண்டுச் சீட்டை எடுத்து மீண்டும் அந்த ஏழு இலக்க எண்ணை ஒவ்வொன்றாகத் தட்டினேன். மீண்டும் அதே போல் ட்ரிங்.. ட்ரிங்கியது. மீண்டும் பதிலில்லை.


கார்த்தியைப் பார்த்தேன். 


“என்னடா? எடுக்கலையா? காலைல வந்த ஒடனே மொத வேலையா ஒண்ட்டப் பேச முடியுமா? வா, அப்பிடி ஒரு நடை நடந்துட்டு வந்து சரியா ஒம்போதே காலுக்குத் திரும்பக் கூப்புடுவோம்.” இது எதுவுமே என் திட்டம் இல்லை. ஆனாலும் அது போலவே ஒவ்வொரு முறையும் என்னைக் கடிந்து கொண்டான். ஒரு பக்கம் நொம்பலமாகவும் இன்னொரு பக்கம் வேடிக்கையாகவும் இருந்தது.


ஒரு சிறு நடை நடந்து விட்டு வந்து, சரியாக 9:15-க்கு உள்ளே நுழைந்தோம்.


“இந்தத் தடவ நான் பண்றேன் பாரு!” என்று என்னை விலக்கிவிட்டு விட்டு உள்ளே போனான். இதற்கு முந்தைய மூன்று முறைகளும் நான் ஏதோ தவறாகச் செய்து விட்டது போன்ற தொனியில்.


சாவடிக்குள் நுழைந்தான். முதலில் “ஆர்” பொத்தானைத் தட்டினான். உடனடியாகத் துண்டித்தான். அப்படியே என் முகத்தைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்பு. மீண்டும் துண்டுச் சீட்டை வாங்கி, ஏழு இலக்கங்களையும் அடித்தான். உடனடியாக முகத்தில் ஒரு புன்னகை. அந்தப் பக்கம் அடிப்பதற்கான புன்னகை. கொடுக்க மாட்டேன் என்கிறானே! அவனே பேசப் போகிறானோ! மீண்டும் ஒரு புன்னகை. யாரோ எடுத்து விட்டார்கள்.


“ஹலோ. ஒன் மினிட்.” என்று என்னை உள்ளே இழுத்தான். “சீக்கிரம் வாடா. அந்த மேடம் லைன்ல இருக்காங்க” என்று வாங்கியின் வாயை அடைத்துக்கொண்டு, அந்தப் பக்கம் இருப்பவருக்கு எல்லாம் கேட்கும் என்பது போன்ற பேரடக்கத்தோடு என்னிடம் அவசரமாகத் திணித்தான். 


அவர்கள் என்ன நினைப்பார்கள். இவனுக்கு போன் போட்டு கொடுப்பதற்கு ஓர் ஆளா என்று நினைக்க கூடும். 


“ஹலோ, நான்…” என்று முடிப்பதற்குள் “ஹலோ, காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?” என்றாள் மாநிற அழகி. அதே பழகியவரோடு பேசுகிற மாதிரியான குரல்.


“நான் நன்றாக இருக்கிறேன். வெங்கட் உடன் பேசலாமா?” என்றேன். ச்சே. அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்காமல் விட்டுவிட்டோமே.


“பத்தரை மணிக்கு மேல் அழையுங்களேன். பதினொன்றுக்கு மேல் என்றால் இன்னும் நல்லது”


“நன்றி. அப்படியே செய்கிறேன்” என்று புன்னகையோடு அழைப்பைத் துண்டித்து வெளியேறினேன்.


“என்னடா? என்ன ஆச்சு?” என்றான் ஆர்வக்கோளாறு.


“திட்டுறாடா. காலங்காத்தால ஒம்போது மணிக்கே இப்பிடி போன் போட்டுக் கொல்றீங்களே, ஒங்களுக்கெல்லாம் வெட்கமானமே இல்லையான்னு கேக்குறா. ஒன்னையும் சேத்துதான். ஒன்னயத்தான் முக்கியமா. அப்டியே நடிக்கிற? மேடம்கிற… அதுங்கிற… இதுங்கிற…”


“ஏய், வெளயாடாதடா… என்ன சொன்னா?”


“அந்தக் கம்பெனில எல்லாருமே பத்தரை மணிக்கு மேலதான் உள்ள வருவாங்களாம். பதினொன்ற மணிக்கு மேல பண்ணுங்கன்றா,”


“சரி, அதனால என்ன! போய்ட்டு, பதினொன்றைக்கு வருவோம்.”


வீடு திரும்பினோம்.


பதினோரு மணிக்கு மீண்டும் தொணதொணப்பு தொடங்கியது. புறப்பட்டு 11:05-க்கு கடையை அடைந்தோம். நானே உள்ளே சென்று அழைத்தேன். மூன்றாவது ட்ரிங்கில் எடுத்து விட்டாள். 


“நான் காலையில் அழைத்திருந்தேன். வெங்கட்…” என்று இழுத்தேன். 


“சரியான நேரத்தில் அழைத்தீர்கள். இதோ இங்குதான் நிற்கிறார். கொடுக்கிறேன். அப்படியே அழைப்பில் இருங்கள்…”


காத்துக்கொண்டே இருந்தேன். ஒரு நிமிடத்துக்கும் மேல் ஆனது. மீண்டும் அவளே வந்தாள். “மன்னிக்கவும். அது வெங்கட் இல்லை. வேறொருவர். நான்தான் தவறாக நினைத்துவிட்டேன். வெங்கட் வேறொரு முக்கியச் சந்திப்பில் இருக்கிறார். அடுத்த வாரம் அழையுங்கள்” என்றாள்.


இதில் ஏதோ இடிக்கிறதே. முகம் தொங்கிவிட்டதை கார்த்தி கண்டுவிட்டான்.


“என்னடா?”


“எதோ கோளாறு போலத் தெரியுதுறா. மொதல்ல இந்தாதான் இருக்கார்னா. அப்பறம் அவர் வேற மீட்டிங்ல இருக்கார். அடுத்த வாரம் கூப்புடுங்கன்றா. இவனுக பேச்சு பூராமே ஒரு டைப்பாத்தான் இருக்கும் போல.”


அவனுக்கும் முகம் தொங்கிவிட்டது.


அடுத்த வாரம் திங்கட்கிழமையே அழைத்தால் நன்றாக இராது என்று புதன் கிழமை வரை பொறுத்திருந்து பதினோரு மணிக்கு மேல் அழைத்தேன்.


“ஹலோ, காலை வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்?”


“காலை வணக்கம். வெங்கட்…”


“இதோ பார்க்கிறேன். காத்திருங்கள்.” இரண்டு-மூன்று நிமிடங்கள் அழைப்பு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றியனுப்பப் படுவது போல் தெரிந்தது. அத்தனை அலைக்கழிப்புக்கும் பின்பு, அவளே மீண்டும் வந்தாள். “இப்போதைக்கு நீங்கள் சேர்வதாக இருந்த பணித்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம். உங்கள் மின்னஞ்சல் முகவரி எங்களிடம் உள்ளது. மீண்டும் தொடங்கும் போது நாங்களே அழைக்கிறோம். நன்றி” என்று வைத்துவிட்டாள்.


அத்தனையும் நொறுங்கி விழுந்தது.


கார்த்தி எனக்காக வெளியில் நின்று கொண்டிருக்கும் உணர்வே இல்லாமல் கடையை விட்டு வெளியேறினேன். கார்த்தியும் பின்னாலேயே வந்தான்.


“ஏய், என்னடா ஆச்சு?” என்று விரைந்து வந்து என் தோளைப் பிடித்து நிறுத்தினான்.


“ஹோல்டுல போட்டாய்ங்களாம். தேவைப்பட்டா அவங்களே ஈமெயில் பண்ணுவாங்கலாம். அம்புட்டுத்தேன்.” இருவரும் உடைந்த நடையோடே வீடு வந்து சேர்ந்தோம்.


அன்றிரவும் கங்கோத்ரி.


“ஏய், இனிமே நீ என்ட்டயும் சொல்ல வேண்டாண்டா.”


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி