அலைக்கற்றை: ஊழல் அலையும் சாதிக் கற்றையும்!

சில ஊழல்ப் பேர்வழிகளால் நாடு சந்தித்திருக்கும் அரசியல் நெருக்கடி பற்றி பல்வேறு சாரார் பல்வேறு பட்ட கருத்துகள் கொண்டிருக்கிறார்கள். அவரவருடைய ஆர்வத்துக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள் இதை. பெரும் வணிக நிறுவனங்கள் எப்படி இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கின்றன என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது என்கிறார்கள் சிலர். இது ஒரு அமைச்சரால் அவருடைய சொந்த நலனுக்காகப் பண்ணப் பட்டிருக்க முடியாது; இதன் பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னலே இருக்கிறது (காலம் காலமாக ஊழல் பண்ணுவதே தன் தலையாய பணியாய்க் கொண்டிருக்கும் ஒரு குடும்பமும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிக்கும் மேலே) என்று கூறுகிறார்கள் வேறு சிலர். இரண்டிலுமே அர்த்தம் இருப்பது புரிகிறது.அவை உண்மை எனவும் நினைக்கிறேன்.

என் இரத்தத்தைக் கொதிக்க வைப்பது என்னவென்றால், இந்த ஊழலைக் கூட சில மானங்கெட்டவர்கள் நியாயப் படுத்துகிறார்கள் - எவ்வளவு பெரிய தொகை என்று பெருமையாய்ப் பேசுகிறார்கள். ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் ஏதோவொரு படிவத்தில் அவர்களுக்கு சில எலும்புத் துண்டுகளை வீசிய ஒரு கட்சி மீது தம் விசுவாசத்தைக் காட்டுவதில் இது ஒரு விதம். 'அடிக்கப் பட்ட கொள்ளையில் எனக்குரிய பங்கு வந்து சேருமானால் அந்த அரசின் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை; அந்த அரசை நான் ஆதரிப்பேன்' என்று சாமானியர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டால், என்ன மாற்றம் நிகழ முடியும்? தலைவர்களின் பெருமையே அவர்கள் அடிக்கும் கொள்ளையை வைத்துத் தீர்மானிக்கப் பட்டால், என்ன புரட்சி நிகழ முடியும்? காசுக்கு எழுதும் நல்லவர்கள் (பெரும்பாலும் உள்ளூர்ப் பத்திரிகைகளில்), இந்த விவகாரத்தில் ஊழலுக்கான எந்த அடையாளமும் இல்லை என்று எழுதுகிறார்கள். பணம் கொடுத்தால் மனிதக் கழிவைக் கூட உண்பார்கள் போலும். அப்படிப் பட்டவர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லது.

அப்படி வெளிப்படுத்தப் பட்ட கருத்துகளில் என்னை அதிகம் ஈர்த்தது இது. தமிழ் நாட்டில் உள்ள சில மானமிகு மானங்கெட்டவர்கள் இது ஆரிய-திராவிடப் போரின் உச்ச கட்டம் என்கிறார்கள். அவர்களுடைய வாதம் என்னவென்றால், திராவிடர்களின் டெல்லி வளர்ச்சியைக் கண்டு சகிக்க முடியாத ஆரியர்கள் ஓர் உத்தமத் திராவிடனைப் பொய்யாகக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்பது. திராவிடப் பண்பாட்டை இதை விடக் கொச்சையாக வேறொருவர் விளக்க முடியாது. திராவிடர் அனைவரும் திருடர்; திருடுவதுதான் அவர்களுடைய பண்பாடு - குலத்தொழில் என்பது போல் இருக்கிறது இது. என் இனிய அரசியல்வியாதிகளே! கொஞ்ச காலத்துக்கு முன் யாரோ ஒருவன் வடமொழியில் திராவிடன் என்றால் திருடன் என்று பொருள் என்றான். இப்படி ஒருத்தரை ஆதரிப்பதன் மூலம் அந்தக் கூற்றை உண்மை என்று உறுதிப் படுத்தி விடாதீர்கள். திருடர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப் படுவதுதான் சமூகத்துக்கு நல்லது. உண்மையிலேயே இந்த மண்ணுக்கு நீங்கள் நல்லது செய்ய விரும்பினால், உங்கள் வட இந்திய எதிரிகளிடம் போய் கூடுதல் இரயில்வே இணைப்புகளுக்கும் நல்ல குடி நீருக்கும் சண்டையிடுங்கள். ஒரு திருடனையோ அல்லது அவனுடைய தலைவனையோ அவர்களுக்குரிய தண்டனையில் இருந்து காப்பாற்றி அப்படி ஒரு சேவையை நீங்கள் செய்ய வேண்டாம்.

வேறு சிலரோ தாழ்த்தப் பட்ட சமூகங்களில் இருந்து முன்னுக்கு வந்துள்ள ஓரிரு சாதனையாளர்களுக்கு எதிரான சூழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் இதை (அப்படிப் பட்ட பின்னணியில் இருந்து வரும் ஒருவர் தலைமை நீதிபதி ஆனது பெரிய சாதனைதான்; ஆனால், கொள்ளை அடிக்கும் பொருட்டு மத்திய அமைச்சர் ஆன ஒருவரை சாதனையாளர் என்று ஏற்க மாட்டேன். விதியோடு கைகோத்து நிகழ்ந்த விபத்து அது!). உங்களில் பலரைப் போலவே நானும் இதை சுத்தப் புத்தி கெட்ட தனமாகத்தான் பார்க்கிறேன். மேலும், ஒரு குற்றவாளியை அது போன்ற எந்தப் பதாகையின் பின்பும் ஒளிந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. தன்னைக் காத்துக் கொள்ள வேறு வழியே இல்லை என்றாகிறபோது எல்லா ஊழல்ப் பேர்வழிகளும் அவர்களிடமிருந்து பங்கு வாங்கிக் கொண்டோரும் இது போன்ற வேலைகளில் இறங்குவார்கள். நாம்தான் அவர்களின் முகத்தில் காறித் துப்பி விட்டு கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் (உணர்ச்சி மேலிட்டு இந்த இடத்தில் தவறான கோபங்களுக்கு ஆளாகாதீர்கள்; தயவு செய்து சொல்ல வருவதைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்!).

ஆனால், இது போன்ற குறுக்குப் புத்தி அரசியலில் ஆர்வம் இல்லாத சில நல்லவர்களே அதே கருத்தைச் சொல்வதைக் கேட்கும்போது என்னால் அதை பரிசீலிக்காமல் இருக்க முடியவில்லை. ஊழலை ஆதரிக்க வில்லை; ஆனால், ஒரே ஒரு தனி மனிதர் குறி வைத்துத் தாக்கப் படுவதில் உள் நோக்கம் இருக்கிறது என்கிறார்கள். அவருடைய பின்னணி காரணமாகத்தான் அவர் அவ்வளவு குறி வைக்கப் படுகிறார்; முன்னாள் தலைமை நீதிபதியைக் குறி வைப்பதற்கும் அதுவே காரணம்; அந்த இடத்தில் வேறு எவராக இருந்திருந்தாலும் இந்த அளவு பேசப்பட்டிருக்க மாட்டார் என்று சொல்கிறார்கள். அனைத்து விதமான சவால்களையும் எதிர் கொண்டு முன்னுக்கு வந்த இது போன்றோரை ஊழல்ப் பேர்வழிகள் என்று நிரூபிப்பதன் மூலம் இவர்கள் அனைவருமே ஆள்வதற்கோ அத்தகைய உயர் பணிகளில் இருப்பதற்கோ தகுதியற்றவர்கள் என்று மிக மிக நுட்பமான முறையில் நாட்டுக்கு நிரூபிக்க முயல்கிறது உயர்சாதித் தரகுக் கூட்டம் ஒன்று என்பது அவர்களின் கருத்து. இப்படியொரு தரகு வேலையா?! இன்னும் எத்தனை விதமான தரகு வேலைகள் இந்த வழக்கில் ஒளிந்திருக்கின்றனவோ?!

நீங்கள் மேல் சாதிக் காரராக இருந்து, இதைக் கேட்டவுடன் எரிச்சல் அடைந்தால், உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் - அப்படி எரிச்சல் அடையாதீர்கள்.அதன் பொருள், நீங்கள் அதைத் தனிப் பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆகிவிடும். உங்கள் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஆசை எதுவும் இல்லாத பட்சத்தில், அப்படியெல்லாம் நீங்கள் எரிச்சல் அடைய வேண்டியதில்லை. அதுவும் ஊழல்ப் பேர்வழிகளைச் சாதியின் பெயரைச் சொல்லிக் காக்க முயல்பவர்களைப் போலவே இருக்கும். அவர்கள் தான் ஊழல் அற்றவன் என்றுதான் சொல்ல முடியும். அவர்களைப் போன்ற பின்னணியில் இருந்து வரும் எல்லோருமே யோக்கியம் என்று சொல்லக் கூடாது. அது போலவே, நீங்கள் உயர்சாதிக் கூட்டம் ஒன்று சேர்த்துப் பின்னணியில் தரகு வேலைகள் செய்கிறீர்கள் அல்லது அப்படியொரு கூட்டத்தில் உள்ளீர்கள் என்று சொன்னால் மட்டுமே உங்களுக்குக் கோபம் வர வேண்டும். அதை விடுத்து, அப்படியொரு கூட்டமே இல்லை என்று வாதிட்டால், இதில் ஏதோ சந்தேகத்துக்கு இடம் இருப்பதாகவே கருதுவர்.

எப்படியிருப்பினும், இங்கு என் கருத்து என்னவென்றால், சாட்டப்படும் குற்றம் உண்மையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். முடிவு தெரியாத ஒரு கருத்துக் கொண்டிருப்பது பெரும் குற்றம் இல்லை என நம்புகிறேன். எதுவுமே இல்லையென்றாலும், இரண்டு பக்க நியாயங்களையும் பாரபட்சமின்றிப் புரிந்து கொள்ள அது உதவுகிறது. எனவே, இரண்டு பக்கமும் இருக்கும் சாத்தியக் கூறுகள் மற்றும் பிரச்சனைகள் பற்றிப் பேசுவோம்.

அது ஏன் உண்மையாக இருக்கலாம் என நினைக்கிறேன்? அப்படிப் பட்ட பின்னணியில் இருந்து வருபவர்கள் எங்கிருக்கிறார்களோ காலமெலாம் அங்கேயே இருக்க வேண்டும்; பொது வாழ்வில் பெரிய ஆளாக ஆகும் ஆசையெல்லாம் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைக்கும் ஆட்கள் நிறையப் பேரைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். ஆட்கள் என்று சொல்வது, நண்பர்களும் உறவினர்களும் பற்றி அல்ல. எல்லா விதமான பின்னணியும் கொண்ட எல்லா விதமான ஆட்களும் - படித்தோர், படியாதோர், பணக்காரர், ஏழை, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விவசாயிகள், மேல் சாதியினர், பிற்படுத்தப் பட்டோர்... எல்லா விதமானவர்களும்! இதில் விதிவிலக்கு என்று சொல்ல வேண்டுமானால், அது உண்மையான நகரச் சூழலில் வளர்ந்தவர்கள் மட்டுமே. மற்ற எல்லோருமே தாழ்த்தப் பட்ட இனத்தோரை வெறுப்பதற்குக் காரணங்களைத் தேடித் பிடித்து அல்லது  உருவாக்கி வெறுப்பவர்கள். குறிப்பிட்ட பின்னணியில் பிறந்த ஒரே காரணத்துக்காக நேர்மையான ஆட்களையும் கூட வெறுப்பார்கள்.அவர்களுக்கு, அம்பேத்கரும் மாயாவதியும் ஒன்றே. அவர்களைப் பொருத்த மட்டில், இருவருமே மரியாதைக்கு உரியவர்கள் அல்ல. நம் மக்கள் வாக்களிக்கும் விதத்திலும் தலைவர்கள் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் விதத்திலுமே அதைப் பார்க்கலாம். எத்தனை முறை நாம் பொதுத் தொகுதி ஒன்றில் பட்டியல் இன வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்திருக்கிறோம் அல்லது எத்தனை பட்டியல் இன வேட்பாளர்களை அவர்களுடைய தலைவர்கள் பொதுத் தொகுதிகளில் துணிந்து நிறுத்தி இருக்கிறார்கள்? எனவே, நம் மக்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திரும் நான் அந்தக் குற்றச்சாட்டு தவறென்று முடிவு கட்டி விட மாட்டேன்.

சரி. அது ஏன் உண்மையில்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன்? வரலாறு காணாத இந்த ஊழலுக்காக இந்த ஆளை எல்லோரும் குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், விளையாட்டில் ஊழல் செய்ததற்காக உயர் சாதிக்காரரான இன்னோர் ஆளை கிட்டத்தட்ட இதே மாதிரிக் குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறோம்.இருவருடைய ஊழல்க் கதையுமே வரலாறு காணாத - முன்னெப்போதும் கண்டிராத மாதிரியான கதைகள் (நம் வாழ்நாளில், இது போல என்னும் எத்தனை 'முன்னெப்போதும் கண்டிராத மாதிரியான' மற்றும் 'இதுவரை நடந்திலேயே பெரிய' ஊழல்க் கதைகளைக் கேட்க வேண்டுமோ தெரியவில்லை!). இந்த இருவரும் நடத்தப் படும் விதத்தில் எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. இருவரையுமே சமமாகத்தான் வெறுக்கிறோம். எனவே, அது உண்மையில்லாமலும் இருக்கலாம்.

பங்காரு லக்ஸ்மன் லஞ்சம் வாங்கிய பிரச்சனையின் போதும் இது போன்ற சதிகள் பற்றிக் கேள்விப் பட்டது நினைவிருக்கிறது. அவர்கள் சொன்னது என்னவென்றால், 'உங்களோடு இருக்கிற உங்களுக்கு ஒத்து வருகிற ஒருத்தரைத் தேர்ந்தெடுப்பீர்கள், உங்கள் தலைவர் ஆக்குவீர்கள், தகுதி உள்ள எவர் வரினும் ஏற்றுக் கொள்வோம் என்பீர்கள், பின்னர் அவரைத் திறமையில்லாதவர் என்றோ ஊழல்ப் பேர்வழி என்றோ நிரூபிக்க பின்னணியில் இருந்து எல்லாக் கீழான வேலைகளையும் செய்வீர்கள்' என்பது. என் அடிப்படை அறிவுக்கு இது ஓர் அர்த்தமுள்ள குற்றச்சாட்டு போலத் தெரியவில்லை. இந்தக் கதையில், 'நீங்கள்' என்று சொல்வது அவருடைய கட்சி என்று வைத்துக் கொண்டால், அவரை மாட்டி விடும் வேலையை அவர் கட்சி செய்யவில்லை அல்லது அந்த வேலையில் கட்சி எந்த விதமான நேரடி - மறைமுகப் பணியிலும் ஈடுபடவில்லை. ஆனால், அந்த 'நீங்கள்' வேறு விதமாக எடுத்துக் கொள்ளப் படவேண்டும். அது நாம், இந்த நாட்டின் மக்கள், இந்த நாடு! கோபம் புரிகிறது. ஆனால், அது போன்ற பொறி வைத்துப் பிடிக்கும் வேலைகள் தலித் தலைவர்களை மட்டும் குறி வைத்துச் செய்யப் படுவதில்லை. தெஹெல்காவின் குறி பங்காரு லக்ஸ்மனின் சாதி அல்ல. அவருடைய கட்சியைத் தான் அவர்கள் குறி வைத்தார்கள். அதனால்தான் பின்னர் அவருடைய கட்சி அவர்களைப் பதிலுக்குக் குறி வைத்துத் தாக்கியது.

நல்ல வெள்ளைத் தோலை வைத்துக் கொண்டு இன்று நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிலரைப் போல மாயாவதியும் உயர் சாதியில் பிறந்து வெள்ளை வெளேர் என்றும் அழகாகவும் இருந்திருந்தால் (இதை விடப் பெரிய ஊழல்ப் பேர்வழியாக இருந்திருந்தாலும் கூட) ஆங்கில ஊடகங்கள் அவரை இவ்வளவு வெறுத்திருக்கவோ கேலி செய்திருக்கவோ மாட்டார்கள் என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். அப்படியிருப்போர் ஊழல்ப் பேர்வழிகளாக இருந்தாலும் நாம் அவர்களை அப்படி நினைப்பதில்லை. அவர்களைப் பற்றி எவ்வளவோ ஊழல்க் கதைகள் இருந்தாலும் ஊடகங்கள் அவற்றைப் பற்றி எழுதுவதில்லை. ஏன்? காரணங்கள் பல. அவர்களுடைய வெளித்தோற்றத்தை நன்றாக நிர்வகிக்கிறார்கள். அவர்களைப் பற்றி நன்றாகக் காட்ட செய்திச் சேனல்களுக்கு ஏகப் பட்ட பணம் கொடுக்கிறார்கள்.அவர்களுடைய ஊழலை அவ்வளவு வெளிப்படையாகச் செய்து மாட்டிக் கொள்வதில்லை அவர்கள். அது மக்கள் மத்தியில் தன் பெருமையைக் கூட்டிக் காட்டும் என்று தவறாக எண்ணி, ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மாலை செய்வதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை; அதைப் பெருமையாகப் பொது மக்கள் முன்னிலையில் வாங்கிக் கொள்வதில்லை. குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வருபவர்கள் இப்பேர்ப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வருவதால் ஊழல்ப் பேர்வழிகளாக இருக்க மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம் அல்லது நம்ப வைக்கப் படுகிறோம். ஆனால், இந்தப் பெண்மணி கிட்டத்தட்ட ஆங்கிலம் பேசும் எல்லோராலுமே வெறுக்கப் படுகிறார். மொத்தத்தில், என் நண்பரின் வாதம் எனக்கு அர்த்தமுள்ளதாகவும் இல்லை; வாய்ப்பே இல்லையென்று ஊதித் தள்ளி விடுவதாகவும் இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அலைக்கற்றைக் கதைக்கு வருவோம். இப்போது உருளும் தலைகள் எல்லாமே ஒரே சாதித் தலைகள் இல்லை. இந்தச் சுத்தமான நல்லவரை எப்படியும் அமைச்சராக்கி விட வேண்டும் என்று அயராது உழைத்த பெரு நிறுவனத் தரகர் (பெரு நிறுவனங்களில் இப்படியொரு பணி இருந்தது என்று இதற்கு முன் எனக்குத் தெரியாது) இவர் சாதியைச் சேர்ந்தவரில்லை. இதில் மாட்டியிருக்கும் அதிகாரிகள் அனைவரும் இவர் சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதி விரைவில் வெளி வரப் போகிற பெயர்கள் எல்லாம் இவர் சாதிப் பெயர்கள் மட்டும் இல்லை. ஆனால், இப்போது வைக்கப் படும் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்க வேண்டுமானால் இது நடந்தாக வேண்டும். ஒரே ஒரு குற்றவாளி என்று சொல்லி வழக்கை எளிதாக முடித்து விட்டால், அது குற்றச்சாட்டை உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டு அது பற்றி இதே பதிவில் இன்னொரு் தொடர் இடுகை இட வேண்டியிருக்கும்.

சரி. ஒரு நிமிடம், இந்த வாதங்கள் அனைத்தையும் மறந்து விடுவோம். உண்மையோ பொய்யோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தச் சமூகங்களில் இருந்து வருவோருக்கு இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன? பாடம் என்று நான் கருதுவது ஒன்றே ஒன்றுதான் - வருங்காலத்தில் அவர்களுடைய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அதீத கவனம் செலுத்த வேண்டும். ஆனால், எல்லா நேரத்திலுமே அவர்களுடைய தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களின் பங்கு இருக்கிறதா? இல்லை. எடுத்துக்காட்டாக, இந்தக் கதையில் கூட, இந்த ஆள் இவ்வளவு பெரிய ஆள் ஆனது அவருடைய மக்களால் அல்ல; அவருடைய தலைவர் மீதோ அல்லது அவர் மகள் மீதோ இவர் கொண்டிருந்த விசுவாசம் காரணமாக அவருடைய தலைவரால் உருவாக்கப் பட்ட தலைவரே இவர்!

சரி. அப்படியானால், இப்படிச் சொல்வோம். தம்முடைய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தம் கையில் இருக்கும் போது அவர்கள் உச்ச கட்ட கவனத்தோடு இருக்க வேண்டும்; அவர்களில் ஒருவர் தன் துறையிலோ பொது வாழ்விலோ வெற்றி பெரும் போது அதை விட கவனமாக இருக்க வேண்டும். குற்றச்சாட்டு உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட, அவர் ஓர் அம்பேத்கராகவோ ஜகஜீவன் ராமாகவோ கே.ஆர்.நாராயணனாகவோ இருந்திருந்தால் யாரும் இவ்வளவு குறி வைத்துத் தாக்க முடிந்திராது. அதிக பட்சம், உள்ளுக்குள் வெறுத்துக் கொண்டும் வெளியில் அந்த வெறுப்பைக் காட்டக் கூட முடியாமலும் இருந்திருப்பர்.

எல்லாத் தடைகளையும் மீறி வெற்றி பெற்ற பின், இத்தகைய அற்பமான வேலைகளில் ஈடுபடும் போது, உங்களுடையது மட்டுமல்ல; உங்கள் சமூகத்தின் எதிர் காலத்தையே கேள்விக் குறி ஆக்குகிறீர்கள்; உங்களவர் எவருமே இன்று நீங்கள் இருக்கும் இடத்துக்குக் கொஞ்ச நஞ்சம் கூடப் பக்கத்தில் வர முடியாத அளவுக்கு கதவை அடித்துச் சாத்தி விடுகிறீர்கள்.

எனவே, பொறுப்போடும் கவனத்தோடும் இருக்க வேண்டும். ஆனால், சிக்கலில் இருக்கும் போது தற்காத்துக் கொள்ள மட்டும் அந்த அடையாளம் வேண்டும் என்றால், மன்னிக்கவும், உங்களை ஒன்றும் செய்ய முடியாது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்