கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 8/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

சிங்கப்பூர் போலவே ட்யூப் (பாதாள இரயில்) வழித் தடங்கலுக்கு வித விதமான பெயர்களும் நிறங்களும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரை விட இரண்டு மடங்கு அதிகமான தடங்களும் பல மடங்கு அதிகமான ட்யூப்களும் இருக்கும் என நினைக்கிறேன். விலாவாரியாகப் புரிந்து கொள்ள கொசக்கொசவெனக் கோடுகள் நிறைந்த ட்யூப் மேப் இருக்கிறது (படம் கீழே). அதற்கொரு வலைத்தளமே வைத்துப் பராமரிக்கிறார்கள். அது GOOGLE  MAPS-ஐ விட நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. கிளம்பும் இடத்தையும் சேர வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு, கிளம்பும் நேரத்தைச் சொன்னால் தோராயமாகச் சென்று சேரும் நேரத்தைச் சொல்லி விடுகிறார்கள். அது பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது.

அந்த வலைத்தளம் உட்படப் பல இடங்களில் இன்னோர் ஆச்சரியத்தையும் கண்டேன். ஆங்கிலத்தின் நதி மூலமான இலண்டன் நகரிலேயே அதைக் கண்டபோதுதான் ஆச்சரியம் பீறிக் கொண்டு வந்தது. ஆங்கிலம் மட்டுமின்றிப் பத்துக்கும் மேலான பல்வேறு மொழிகளிலும் அவற்றைப் படைத்திருக்கிறார்கள். அதில் இந்திய மொழிகள் ஐந்து. உருது, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி மற்றும் தமிழ். ஐந்தையும் இந்திய மொழிகள் என்பது கூடச் சரியல்ல என நினைக்கிறேன். உருது அங்கே நிறைந்திருக்கும் பாகிஸ்தானியர்களுக்காக. வங்காளம் வங்காளதேசத்தவருக்காக. தமிழ் ஈழத் தமிழருக்காக. பஞ்சாபியும் குஜராத்தியும்தான் இந்தியருக்காக. ஐந்து இந்திய மொழிகள் இருக்கும் பட்டியலில் இந்தி இல்லாதது பெரும் ஆச்சரியம். "தேசிய மொழி தெரியாதா?" என்று இங்கே ஆவேசப் படுபவர்கள் சிங்கப்பூரையும் இலண்டனையும் பார்த்தால் நெஞ்சுவலிக்கு உள்ளாகி விடுவார்கள்.

வெள்ளைக்காரர்கள் உலகெங்கும் சென்று தம் மொழியை விட்டு விட்டு வந்தது மட்டுமில்லை. அந்நாடுகளில் இருந்து ஆட்களையும் அவர்களின் மொழிகளையும் கூடக் கொண்டு வந்து அவர்களுடைய நாட்டில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது வணங்கப் பட வேண்டியதுதான். ஒரு மொழியை அதனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தவிர வேறு யாரும் அதிகம் பயன் படுத்துவதில்லை என்கிற மாதிரியான மொழிகளையெல்லாம் உலகையே ஆண்ட அவர்கள் அவ்வளவு மதிக்கும் போது, தன் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பெரும்பாலான உலக மாந்தர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட அவர்களுடைய மொழியை நம் மண்ணையே ஆள முடியாத நாம் கொஞ்சம் மதிப்பது தப்பில்லை என்றே தோன்றுகிறது (யாரும் அவசரப் பட்டுக் கோபப் பட வேண்டாம். கூலிக்காரன், வேலைக்காரன் என்றெல்லாம் கூச்சல் போட வேண்டாம். 'கொஞ்சம்' மதிக்கலாம் என்றுதான் சொன்னேன்!).

இலண்டன் ட்யூப் மேப்
காலையில் இரயிலேறப்  போகும் முன் எடுத்துக் கொண்டு ஏறிச் செல்லும் விதமாக எல்லா இரயில் நிலையங்களிலும் இலவச நாளிதழ்கள் குவித்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் METRO என்ற நாளிதழ்தான் அதிக அளவில் எல்லோராலும் வாசிக்கப் படுவது. நாம் நம்ம ஊரில் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் நாளிதழ்களை விட அதிகப் பக்கங்கள் கொண்டது. அதில் ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால், நம்ம ஊரில் வீணாப் போன செய்திகளால் நிரப்பப் படும் பாதிக்கும் மேலான பக்கங்கள், இலவச நாளிதழில் விளம்பரங்களால் நிரப்பப் பட்டிருக்கும். அவர்களின் வணிக அமைப்பு (BUSINESS MODEL) அப்படி. செய்திகளின் மூலம் பொருட்களை விற்கும் வணிக அமைப்பு. செய்திகளையே விற்கும் அமைப்பு நம்ம ஊரில். அல்லது செய்திகளையும் பொருட்களையும் தனித்தனியாக விற்கும் அமைப்பு எனலாம். நம்ம ஊரில்  தொலைக்காட்சிகளில் செய்யப் படும் அதே வேலைதான். நமக்குப் பொழுதுபோக்கு மட்டும் முக்கியம். அவர்களுக்குச்  செய்திகளும் அதே அளவு முக்கியம். அல்லது, அதுவும் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு எனக் கொள்ளலாம்.

அங்கும் செய்தியை விலை கொடுத்துத் தெரிந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் நாளிதழ்களில் செய்திகள் அதிகமாக இருக்கின்றன. இலவசமாக வாங்கிப் படிக்கும் நாளிதழ்களில் செய்திகளை விட அதிகமாக விளம்பரங்கள் இருக்கின்றன. அன்னப்பறவைகள் நமக்கென்ன நட்டம்? வேண்டியதைப் படித்து விட்டு வேண்டாததை ஒதுக்கி விட வேண்டியதுதான். THE TIMES மற்றும் TELEGRAPH போன்ற நாளிதழ்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப் படும் வகை. இலவச நாளிதழ்களில் இன்னும் சிலவும்  இருக்கின்றன. CITY AM என்றொன்றும் உண்டு. அது இரயில் நிலையங்களில் மட்டுமின்றி அலுவலகங்களிலும் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். ஆனால் METRO  அளவுக்குப் பக்கங்கள் அதிகம் இருப்பதில்லை. METRO போலவே மாலை வீடு திரும்பும் போது இரயில் நிலையங்களில் EVENING STANDARD என்ற இலவச நாளிதழ் கிடைக்கும். பெரும்பாலும் காலையில் எடுத்துச் சென்ற METRO-வையே படித்து முடித்திருக்க மாட்டேன். அதனால் மாலை நாளிதழ் அப்படியே புத்தம் புதிதாக வீடு வந்து சேர்ந்து விடும்.

இது போன்ற வணிக அமைப்பினால் கிடைக்கும் நன்மை என்ன? இலவசமாகக் கிடைக்கிறதே என்பதற்காக எல்லோருமே அதை எடுத்துப் புரட்டுவார்கள். எப்போதாவது தனக்குப் பிடித்த மாதிரி ஏதாவது கிடைத்தால் மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளோர் கூட அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறுவார்கள். அப்படியே கொஞ்சம் குறைவான ஆர்வம் கொண்ட விஷயங்களையும் கண்ணில் பட்டால் கொஞ்சம் குறைவாக வாசிப்பார்கள். செய்திகள் வாசிப்பதால் பயன் இல்லை என்று வைத்துக் கொண்டாலும் கூட வாசிக்கும் பயக்கமாவது உயிரோடிருக்கும். ஆனால், நொடிப் பொழுதில் சும்மா புரட்டி விட்டுத் தூக்கி வீசுபவர்களுக்கும் சேர்த்து அச்சடிக்கப் படும் நாளிதழ்களின் உற்பத்திச் செலவு எவ்வளவு பெரிய இழப்பு! அதெல்லாம் யாருடைய பணம்? எல்லோருடைய பணமும் இருக்கிறது அதில். எழுத்து-படம்-இடைவெளி என்று எதுவும் விடாமல் படிப்பவரின் பணமும் இருக்கிறது. இரண்டு நிமிடங்களில் தூக்கி வீசுபவரின் பணமும் இருக்கிறது. அதில் வரும் விளம்பரப் பொருட்களை வாங்குவோர் எல்லோருடைய பணமும் இருக்கிறது.

இது போன்ற வணிக அமைப்பு நம்ம ஊர்ச் செய்தித் தாள்  நிறுவனங்களிலும் வர வாய்ப்பிருக்கிறதா? வந்தால் நல்லதா? வாய்ப்பிருக்கிறது. முதலில் பெருநகரங்களில் ஆரம்பித்து, பின்னர் சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றடையலாம். அல்லது, பெருநகரங்களிலேயே நின்றும் போகலாம். இந்தியாவில் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்வோருடைய எண்ணிக்கையும் வாழ்க்கைத் தரமும் மென்மேலும் குறையவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. வந்தால் நல்லதுதான். ஓசியில் கிடைத்தால் ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்வேன் எனும் கூட்டமும் ஓசியில் கொடுக்கும் எதையும் மதிக்க மாட்டேன் எனும் கூட்டமும் ஒன்னு கூடி வாழும் சமூகமல்லவா! வாசிக்கவும் படம் பார்க்கவும் கடையில் பொட்டலம் போடவும் அள்ளிச் செல்வோரின் புண்ணியத்தில் எவ்வளவு அடித்தாலும் பற்றாது என்றும் ஆகலாம்.

விளம்பரத்துக்கே இவ்வளவு செலவிடுதல் என்பது சமூகம் முன்னோக்கிப் போய்க் கொண்டிருப்பதன் குறியீடா அல்லது முதிர்ச்சியின்மையின் குறியீடா என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. விளம்பரச் செலவு என்பது உண்ணாமல் தின்னாமல் எல்லோரும் சேர்ந்து அண்ணாமலைக்குக் கொடுக்கும் கெட்ட பழக்கம் என்பது என் கருத்து.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேற்கு நாடுகளில் கற்பனையே செய்து பார்க்க முடியாதவை என்று ஒரு பட்டியல் வைத்திருந்தேன். அவற்றில் சில உண்மையாயின. சில பொய்த்துப் போனன. எதிர் பார்த்தது போலவே தெருக்களில் நாய்கள் இல்லவே இல்லை. ஆனால், மனிதர்கள் நிறையப் பேர் கையில் நாயைப் பிடித்துக் கொண்டு அலையத்தான் செய்கிறார்கள். எதிர் பார்த்ததைப் போலவே சாலையோரங்களில் மனிதர்கள் அசிங்கம் செய்வதைப் பார்க்கவில்லை. ஆனால், இரண்டு முறை நாய் அசிங்கம் செய்து வைத்திருந்ததைப் பார்த்தேன். இரயில் பயணம் செய்யும் நேரங்களில், நம்ம ஊரில் போலவே தண்டவாளங்களின் இரு புறமும் இருக்கும் சுவர்களில் ஏதோதோ எழுதிப் போட்டிருந்ததை நிறையக் காண முடிந்தது. ஆனாலும் கெட்ட வார்த்தைகளில் எதுவும் இருந்த மாதிரித் தெரியவில்லை. அல்லது எனக்குப் புரிகிற மாதிரி வார்த்தைகளில் இல்லையோ என்னவோ.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சீனியர் ஒருவர், அமெரிக்காவிலேயே பத்தாயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரத்தைப் போட்டுத் தாக்கினார். பேச்சுவாக்கில் வரும் புள்ளிவிபரங்கள் எல்லாமே புருடா என்று தீர்க்கமாக நம்புபவர்களில் நானும் ஒருவன் என்றாலும் அவற்றில் சில மறக்க முடியாத கருத்தெச்சங்களை விட்டுச் செல்லப் பட்டு விடுவதையும் மறுக்க முடியாது. எல்லா நாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பொதுப்புத்தி அறிந்து வைத்திருந்தது எனினும் ஈஸ்ட் க்ராய்டன் இரயில் நிலையம் முன்பு தினமும் பார்த்த வெள்ளைக்காரப் பிச்சைக்காரர் ஏதோவொரு வித வியப்பைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அது போலவே பொது இடங்களில் மனநலம் குன்றிய மனிதர்களையும் அவ்வப்போது பார்க்க முடிந்தது.

இலண்டனில் இருக்கும் பல டன்களில் விம்பிள்டனும் ஒன்று என்று தெரிய வந்ததும், அதுவும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழிகளில் ஒன்றிலேயே அது அமைந்திருப்பதையும் அறிந்ததும், முதல் நாளே ட்யூபில் விம்பிள்டன் வந்து அங்கிருந்து ட்ராமில் க்ராய்டன் வந்து பார்த்தேன். நேரம் கொஞ்சம் அதிகம் பிடித்ததால் அதன் பின்பு அந்தப் பாதையைக் கைவிட்டு விட்டேன். விம்பிள்டன் என்றால் டென்னிஸ் ஆடுகளத்துக்கெல்லாம் செல்லவில்லை. அந்த இடம் வழியாகப் பயணம் மட்டும் செய்து இன்பப் பட்டுக் கொண்டேன். கபடியும் கிரிக்கெட்டும் தவிர வேறு எந்த விளையாட்டும் தெரியாத வயதிலேயே ஸ்டெபி கிராப்  புண்ணியத்தில் தெரிந்து வைத்துக் கொண்ட இடம் விம்பிள்டன். ஏதோவொரு வெளிநாட்டில் இருக்கிறது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அது இலண்டனின் புறநகர்ப் பகுதியில் இருந்தது தெரியாது. சென்றது இலண்டன் என்றாலும் இங்கிலாந்தில் கிராமப் புறம் என்பது எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதை ஓரளவு விம்பிள்டன் பகுதியில் பார்க்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும். விம்பிள்டன் கிராமப்புறம் இல்லை; ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத புறநகர்ப் பகுதி. அதுவும் ஓர் அழகாகத்தான் இருக்கிறது.

அலுவலகத்துக்குச் சென்று வரும் நேரங்களில் தண்டவாளத்துக்கு இருபுறமும் வேடிக்கை பார்த்த வீடுகளையும் கட்டடங்களையும் தவிர வேறு ஏதும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வில்லை. குடும்பத்தோடு சென்று விட்டோம். நீண்ட காலம் இருக்க நேர்ந்தால் பிரச்சனையில்லை. ஒரு மாதத்தில் அடித்து விரட்டி விட்டால் என்ன செய்வது? ஒன்றுமே பார்க்காமல் ஊர் திரும்பிய வரலாற்றுக் குற்றத்தைப் புரிந்து விடக் கூடாது என்பதற்காக ஏதாவது ஓரிரு இடங்களாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம். இலண்டனுக்குப் போனவர்கள் பார்க்காமல் திரும்பியதே இல்லை என்கிற மாதிரியான இடங்கள் எவை என்று அலசிப் பார்த்தோம். அவற்றில் ஒன்று, இலண்டன் கண் (LONDON  EYE). விசாரித்துப் பார்த்ததில் அது வேஸ்ட் என்று கேள்விப் பட்டோம். சிங்கப்பூரிலும் அது போல ஒன்று இருக்கிறது. அதையும் நான் முதல் முறை சென்றிருந்த போது பார்க்கவில்லை. அதனால் இதையும் பார்க்கா விட்டால் தப்பில்லை என்று முடிவு செய்து கொண்டேன். "நீ விமானத்தில் இருந்து இறங்கும் போது பார்த்த காட்சியை விடப் பெரிய உலக அதிசயம் ஒன்றும் இதில் கிடைக்காது. வேண்டுமானால் அலுவலக மாடியில் இருந்து எட்டிப் பார்; அதை விட அழகான காட்சிகள் கிடைக்கும்!" என்று நண்பன் ஒருவன் அழுத்திச் சொன்னதால் இலண்டன் கண்ணை எங்கள் கண்ணுக்குக் காட்ட வேண்டியதில்லை என்று முடிவு செய்தோம்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. //"தேசிய மொழி தெரியாதா?"

    இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது ,இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை :)

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி, கமலக்கண்ணன் அவர்களே. நானும் இது பற்றிப் பலரிடம் வாதிட்டிருக்கிறேன். பெரும்பாலும் இவ்வாதங்கள் நம் நாட்டுப் பற்றைக் கேள்விக்குள்ளாக்குபவையாகவே முடிந்திருக்கின்றன. அதே வேளையில் கடந்த சில வருடங்களாக இந்த ஒரு வார்த்தையை ("தேசிய மொழி அல்ல!") நம்மவர்கள் பலர் வாயிலிருந்தும் கேட்க முடிகிறது. அதுவே ஒரு முன்னேற்றம்தான். இந்தக் கருத்தை மேலும் வலுவாகவும் வெறுப்பு விதைக்காத விதத்திலும் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தவறில்லை. அதை நானாக விரும்பிக் கற்றுக் கொள்வது வேறு. என் மீது அதிகாரமாகத் திணிப்பது வேறு. இரண்டாவதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. சரிதானே?!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி