பாரதியார் கட்டுரைகள் - 1/N

பாரதியை அவன் அவன் என்று அடிக்கடிச் சொல்வதற்காக எங்கள் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுயம்பு அவர்கள் அடிக்கடிக் கோபப் பட்டுக் கொள்வார் என் மேல். "நீ என்னடா பெரிய பெரிய ஆளுகளை எல்லாம் அவன்-இவன் என்கிறாய்?!" என்பார். எனக்கோ அந்தக் குற்றச்சாட்டு ஆச்சரியமாக இருக்கும். தமிழ் நாட்டில் பாரதியை அவர்-இவர் என்று பேசுபவர்களை விட அவன்-இவன் என்று பேசுபவர்கள்தாம் அதிகம் என்றெண்ணுகிறேன். அதெப்படி அவர் காதில் விழாமல் போனது என்பது என்னுடைய ஆச்சரியம். ஒருவேளை ஒரு சில குறிப்பிட்ட முகாம்களில் மட்டும் அந்தப் பழக்கம் அதிகமோ என்னவோ. நான் பார்த்தவரை, மற்ற எல்லோரையும் விடக் குறிப்பாகப் பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் அவரை அதிகம் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பாரதியை எப்போதும் அவன்-இவன் என்றுதான் விளிக்கிறார்கள். அடுத்த படியாக இலக்கியவாதிகள்-கவிஞர்கள் கூட்டம். அவர்களும் அப்படியே செய்கிறார்கள். சிறு வயதிலேயே இறந்து விட்டதாலோ என்னவோ நிறையப் பேருக்கு எளிதாக அப்படி வாயில் வந்து விடுகிறது. ஒருவேளை அவர் மீதான கூடுதல் உரிமையும் காரணமாக இருக்கலாம். 

இந்த நூலின் பதிப்புரையும் அப்படித்தான் 'அவரை' 'அவன்' என்று விளித்தே ஆரம்பிக்கிறது. "அவனுடைய கவிதைகள் மக்களிடம் பரவி பாதிப்பை ஏற்படுத்திய அளவில் அவனுடைய ஏனைய எழுத்தோவியங்களான கட்டுரைகளும், கதைகளும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை எனலாம்" என்று சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிக்கும் போது ஓர் உணர்ச்சி மிக்க கவிஞனாகத்தான் தெரிகிறார். உணர்ச்சி ததும்பக் கவிதை எழுதும் நிறையப் பேரைப் பார்த்து, சொற்களைக் குவிப்பது மட்டும் அறிவாற்றலின் அடையாளம் ஆகாது என்கிற மாதிரி முடிவுகளுக்கெல்லாம் வந்து விட்ட பின்பு, அவருடைய கவிதைகளை மட்டும் படித்து விட்டுப் பேசும் போது, பாரதி மீதான மதிப்பீடும் அப்படித்தான் ஆகி விடுகிறது. இந்தக் கவிதைகளை மட்டும் வைத்து எப்படி அவரை அவ்வளவு பெரிய அறிவாளி என்று சொல்கிறார்கள்; தாகூரோடு எல்லாம் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்ற ஆச்சரியக் குறியுடனான கேள்வி அவ்வப்போது வந்து செல்வதும் உண்டு. 

வடமொழியை விடத் தமிழ்தான் உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டிருப்போர் போலவே தாகூரைவிட பாரதிதான் பெரிய அறிவாளி என்றும் ஒருசாரார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் அந்தப் பட்டியலில் சாரு நிவேதிதா கூட இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். அது உண்மையா-பொய்யா அல்லது சரியா-தவறா என்றெல்லாம் பேசுகிற அளவுக்கு பாரதியையும் படித்ததில்லை; தாகூரையும் படித்ததில்லை (வடமொழி-தமிழ் விவகாரத்தில் கருத்துச் சொல்லும் அளவுக்கு வடமொழியும் கற்றதில்லை; தமிழும் கற்றதில்லை என்பது போலவே!). ஆனால், பாரதியின் கட்டுரைகளைப் படிக்கும் போதுதான் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தார் என்பதே சரியாகப் புரிபடுகிறது. இதன் பொருள் அவருடைய கவிதைகள் வலுவற்றவை என்பதல்ல. கவிதைகளை விடக் கட்டுரைகளில்தான் முழுமையாக அவற்றின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிற குழுவில் நான் இருக்கிறேன். அவ்வளவுதான். அது அவருடைய கோளாறு அல்லவே அல்ல. அப்படியிருந்தால் இத்தனை கோடித் தமிழரை அவருடைய கவிதைகள் அந்த அளவு பாதித்திருக்க முடியாதே! 

உலக இலக்கியத்தில் கவிதைகளின் வீழ்ச்சியும் உரைநடையின் வீச்சும் அந்த அளவுக்கு இருக்கிறது. உலகமயமாக்கல் (இந்த உலகமயமாக்கலுக்கு மன்மோகன் சிங் அல்ல பொறுப்பு!) கவிதையையே - இன்னும் சரியாகச் சொல்லப் போனால், செய்யுளையே - தம் இயல் இலக்கிய வடிவமாகக் கொண்ட தமிழர் நம்மையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் பாரதிக்கு ஒரு பெரும் பங்கு இருந்திருக்கிறது என்பது அவருடைய கட்டுரைகளைப் படிக்கும் போது நன்றாகப் புரிகிறது. அவருடைய கட்டுரைகளைப் படிப்பது இதுதான் முதல் முறை என்றில்லை. பள்ளிக் காலங்களிலும் கூடச் சில கட்டுரைகள் படித்த நினைவு வருகிறது. அப்போதே அவருடைய கட்டுரைகளில் இருந்த வடமொழிக் கலப்பு பற்றி யோசித்ததும் உண்டு. அதை முழுமையாகப் படித்து யோசித்துப் பார்க்கும் வாய்ப்பு இம்முறை கிடைத்தது. அது ஓர் இடைக்காலத்தில் பெரிதும் மதிக்கப் பட்ட - கவர்ச்சிகரமான நடையாக இருந்தது என்பதை எம் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியை திருமதி. பிச்சம்மாள் அவர்கள் (தமிழ் மீதான ஆர்வத்துக்கு அன்றன்றைக்கு ஒருவர் காரணம் என்றால், அன்றைக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் அவர்!) அடிக்கடிச் சொல்லிக் கேள்விப் பட்ட நினைவு இருக்கிறது. அதன் பெயர் கூட மணிப்பிரவாள நடை என்பார். பெயரே தமிழை விட்டு அவ்வளவு விலகிப் போயிருக்கிறதே! 

பாரதியின் நடையும் மணிப்பிரவாள நடையாக இருந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அவருடைய பின்னணி ஒரு முக்கியக் காரணமாக இருக்கக் கூடும். அவருடைய இளமைக்காலக் காசி அனுபவம் இன்னொரு காரணமாக இருக்கலாம். அதன் விளைவாக பின்னர் அவர் வெளி மொழிகளில் வெளி வந்த பல இதழ்களையும் படித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கவிதையில் அவ்வளவு தமிழ் இருந்த போது, உரைநடையில் மட்டும் அப்படி ஆனதற்கு அன்றைய பொழுதில் அந்த நடைக்கு இருந்த மரியாதை ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைக்கு ஆங்கிலச் சொற்கள் சொல்லாமல் சில விசயங்களைப் புரிய வைக்கவே முடியாது என்று இருக்கிற உயர்நடு மற்றும் மேற்தட்டு மக்களைப் போன்ற ஒரு கூட்டம் அப்போது வடமொழியைப் பற்றிக் கொண்டு இருந்திருக்கலாம். அல்லது கவிதைகளைப் பொது மக்களுக்கும் கட்டுரைகளை அப்படிப் பட்டவர்களுக்கும் என்று பிரித்தெழுதும் சூட்சுமம் கொண்டிருந்திருக்கலாம் ("கவிதைகளில் நறுக்குத் தெறித்தாற்போல சுருக்கமாகச் சொல்லிய நெருப்புப் பொறிகளுக்கு விரிவான இலக்கியமாக அவனுடைய கட்டுரைகள் அமைந்துள்ளன" என்றும் பதிப்புரை சொல்கிறது!). அல்லது உண்மையாகவே அன்றைய பொழுதில் அதுதான் உரைநடைக்கான பொதுவான நடையாக இருந்திருக்கலாம். 

எது எப்படியோ திராவிட இயக்கத்தின் புண்ணியத்தில் (அவர்கள் செய்த சில புண்ணியங்களில் இதுவும் ஒன்று!) இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் எவ்வளவோ மாறி விட்டிருக்கிறது. அப்படியான ஒரு நடைக்குப் பழக்கப் பட்டுப் போன நமக்கு இந்த நடை முற்றிலும் சிரமமளிப்பதாக இருக்கிறது. சிரமம் என்பதை விட தடையற்ற வாசிப்புக்குத் தொல்லையாக இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அதுவும் அவர் குற்றமில்லை. காலம் செய்த கோலமடி; கடவுள் செய்த குற்றமடி என்று முடித்துக் கொள்ளலாம். பதிப்புரையே அது பற்றியும் சொல்கிறது. "வடமொழிக் கலப்புடன் அமைந்த வலிமையான உரைநடை" என்கிறது. அந்த அளவுக்குக் கலந்தால் இன்று அதை வலிமை என்று சொல்வோமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்த திராவிட இயக்கத்துப் பெரும்பிடுகுகள் கூட சில பேர் தம் பெயரை மட்டும் முழுமையான வடமொழியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வடமொழி என்று கூடத் தெரியாமல் வைத்துக் கொண்டார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் (சந்ததியரை இந்தி வகுப்புகளுக்கு அனுப்பியதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களைப் போல இதற்கும் ஒரு விசித்திரக் காரணம் இருக்கவும் கூடும்!). அந்த அளவுக்கு வடமொழி நம்மில் கலந்து விட்டது என்பதைத்தான் அது காட்டுகிறது. அவர்களும் கூட நாடு என்று சொல்லாமல் தேசம் என்று சொல்லித்தான் தம் பேச்சில் வலிமை சேர்க்கிறார்கள். ஆனாலும், கணிதமும் விஞ்ஞானமும் பௌதீகமும் ரசாயனமும் சரித்திரமும் பூகோளமும்... கணக்காகவும் அறிவியலாகவும் இயற்பியலாகவும் வேதியியலாகவும் வரலாறாகவும் புவியியலாகவும் மாறியிருக்கிறது என்றால் அதற்கு அவர்களும் காரணம் என்றே நினைக்கிறேன். 

இசையைப் போல நாடகத்தைப் போல இயற்றமிழும் மேற்தட்டிடம் மட்டும் மாட்டிக் கொண்டிருந்த காலத்தில், அத்தனை கோடிப் பேரிடம் தமிழை எடுத்துச் சென்ற பாரதியின் உரைநடையிலேயே தமிழ் முழுமையாக இல்லை என்பதும் அவருடைய காலத்துக்குப் பின்னும் தமிழ் எவ்வளவு சுத்திகரிக்கப் பட்டுள்ளது என்பதும் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. கட்சியைக் கக்ஷி என்பதில் ஆரம்பித்து... உபாஸனை, ஸ்வதந்திரம், ஸபை, ஸங்கம், ஸத்யம், யோஜனை, லக்ஷம், க்ஷவரம், மனச்சாக்ஷி, பரீக்ஷை, ஸ்திரீ, போஜனம், ஸித்தி, ஸூர்யன், ஸம்ஸ்கிருதம், பாஷை, ஸம்பத்து, ஸாதாரணம், ஸாரம், ஸர்வம், ஸனாதனம், சமத்வம், ஸரி, ஸுகம், மாஸம், ஸமானம், ஸாமான்ய, ஸாங்கியம், ஸ்வாமி, ஸத்து, ஸ்வதர்மம், ஸாதிப்பது, ஸமாதானம், ஸம்மதம், ஸமீப, ராஜதானி என்று புளிக்கப் புளிக்கப் போட்டுத் தாக்கியிருக்கிறார். இது ஓர் எடுத்துக்காட்டுக்குச் சொன்னது. இன்னும் இது போல எத்தனையோ சொற்கள்.

இது போன்ற விசயங்களில் ஆர்வம் இருக்கிற யாராவது ஒருவர் இந்தச் சொற்களை மட்டும் பிரித்தெடுத்து, "பாரதியின் உரைநடையில் இருக்கும் வடமொழிச் சொற்கள்" என்றோர் ஆய்வே செய்யலாம். இதில் இன்னொரு பயனும் இருக்கும். நமக்கே தெரியாமல் எத்தனை வடமொழிச் சொற்கள் நம் மொழியுள் ஊடுருவி இருக்கின்றன என்பது புரிபடும். அவையும் அதற்கு முந்தைய காலத்தில் தமிழில் இருந்து வடமொழிக்குப் போனவையே என்று நிரூபிக்கவோ அல்லது போனவையா என்று இன்னோர் ஆய்வைத் தொடங்கி வைக்கவும் கூட உதவியாக இருக்கும். மனிதர் வடமொழிச் சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே வம்புக்கென்றே அப்படி எல்லா இடங்களிலும் போட்டிருப்பது போலத் தெரிகிறது. வடமொழி மீது நிறைய மரியாதை வைத்திருந்திருக்கிறார். அதை அவர் யாருக்கும் பயந்து மறைக்கவும் இல்லை. அதே வேளையில் தன்னைத் தமிழனாகவே பெரும் பெருமையோடு அடையாள படுத்திக் கொள்கிறார். அதையும் யாரையும் ஏமாற்றுவதற்காகச் சொல்லும் அயோக்கியத்தனத்தோடு சொல்வது போலத் தெரியவில்லை.

அது மட்டுமில்லை. ஆங்கிலத்தை இங்கிலீஷ் என்றே சொல்கிறார். அமெரிக்கரை யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர் என்கிறார். திடீரென்று ப்ரெஸ்டீஜ் என்று அப்படியே அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். திருஷ்டாந்தமாக என்கிற சொல்லை அடிக்கடிச் சொல்கிறார். சொற்களில் மட்டுமல்ல. அவருடைய கருத்துக்களிலும் வேற்றுப் பண்பாடுகள் பற்றியும் மனிதர்கள் பற்றியும் நிறைய இருக்கிறது. அதுதான் அவரைக் குண்டுச் சட்டிக்கு வெளியில் போய் குதிரை ஓட்டியவராகக் காட்டுகிறது. மேற்கத்திய, கிழக்கத்திய, வட இந்திய எடுத்துக்காட்டுகள் நிறையச் சொல்கிறார். இவையெல்லாம் சொல்கிற இன்னொரு விசயம் என்னவென்றால், எந்த மொழிக்கும் புதுமையான நடை என்று முற்றிலும் புதிதான ஒன்றைக் கொண்டு வரும் பெரும்பாலானவர்கள் வேற்று மொழித் தொடர்பும் வாசிப்பும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக பாரதியை மேலாகக் காட்டுவது, இத்தனையையும் அவர் எழுதியது தன் முப்பத்தி ஒன்பது வயதுக்கு முன்பு என்கிற செய்தி. தாகூரோடு ஒப்பிடுவோருக்கு இன்னொரு குறிப்பு: முப்பத்தி ஒன்பது வயதில் தாகூர் என்ன சாதித்திருந்தார் என்று ஒப்பிட்டுப் பேசலாம்... ஆராயலாம்.

தாகூர் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார். நல்ல மரியாதையும் கொண்டிருந்திருக்கிறார். அடிக்கடி அவரைப் பற்றிப் பெருமையாக ஏதாவது சொல்கிறார் (பின்னாளில் அவரோடு தான் ஒப்பிடப் படுவோம் என்று தெரிந்திருந்தால் ரெண்டு திட்டியிருக்கலாம் என்று ஆய்வுகள் எதுவும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை!). உலகத்திலேயே தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டவர் என்கிறார். அவர் ஜப்பான் நாட்டில் ஆற்றிய உரையைத் தமிழில் எழுதுகிறார். வங்கமொழியில் எழுதிய கட்டுரை ஒன்றை மொழி பெயர்த்து எழுதுகிறார். இப்படியாகத் தாகூரை அதிகம் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ய முயன்றதாலும் அவருடைய சில பேச்சுக்களையும் எழுத்துக்களையும் பற்றி விலாவாரியாகப் பேசியதாலும் கூட அவரைப் போலவே இவரும் வந்து விடுவார் என்று எல்லோரும் எண்ணியிருக்கக் கூடும்.

தத்துவம், மாதர், கலைகள், சமூகம் என்று மொத்தம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது நூல். இது மட்டும் ஏன் தத்வம், ஸ்திரீ, கலா, ஸமூகம் என்றில்லை என்றொரு சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை! அதற்குக் காரணம், அவருடைய கட்டுரைகளைத் தொகுத்தவர்கள் இட்ட தலைப்புகள் இவை. பாரதியின் உரைநடைகளை முழுமையாகத் தமிழ் படுத்தும் வேலை என்றே ஒன்று நடந்ததாகக் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். மனிதர் அந்த அளவுக்குப் படுத்தியிருக்கிறார்.இந்த நூலைப் படிப்பதன் மூலம் இவை நான்கும்தான் அவருடைய மனதுக்கு வேண்டிய விசயங்களாக இருந்திருக்க வேண்டும் என்று புரிபடுகிறது. 

தொடரும்...

கருத்துகள்

  1. சொற்களில் மட்டுமல்ல. அவருடைய கருத்துக்களிலும் வேற்றுப் பண்பாடுகள் பற்றியும் மனிதர்கள் பற்றியும் நிறைய இருக்கிறது.

    பரந்த அறிவு கொண்ட பாரதியின் பகிர்வுகள்.. அருமை.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி