வெள்ளி, ஜனவரி 30, 2015

முதலிலிருந்து தொடங்க வேண்டும்...

நீயில்லாமல் 
நான் இருக்க முடியவில்லை
என்பது மட்டுமில்லை

என்னோடே
நீ இருக்க வேண்டுமென்று
மட்டுமில்லை

நானில்லாமல் 
நீ இருப்பதையும்
மணித்துளிகள் கூட
ஏற்றுக் கொண்டு இருக்க முடியவில்லை

நீ இருக்குமிடத்திலெல்லாம்
நானும் நிறைந்திருக்க வேண்டும்
என்றுமல்லவா தோன்றுகிறது?!

சேர்ந்து பிறக்கவில்லை
சேர்ந்தே வளரவில்லை
சில மணி நேரங்கள் கூட
சேர்ந்து இருந்ததில்லை

நீயில்லாமற்தான் 
இத்தனை ஆண்டுகள் எனக்கும்

நானில்லாமற்தான் 
இத்தனை ஆண்டுகள் உனக்கும்
ஓடியிருக்கின்றன

ஆனாலும் 
அப்படியென்ன பொறுக்க இயலாமை?!

உன் பிறப்பு முதலான
எல்லா இடங்களுக்கும் முகங்களுக்கும்
நானும் பழக்கப்பட வேண்டுமென்றும்
மொத்தப் பயணத்தையும்
முதலிலிருந்து தொடங்கி
உடன் வர வேண்டுமென்றும்...

என் பிறப்பு முதலான
எல்லா இடங்களுக்கும் முகங்களுக்கும்
உன்னையும் பழக்கப்படுத்த வேண்டுமென்றும்
மொத்தப் பயணத்தையும்
முதலிலிருந்து தொடங்கி
உடன் வரவைக்க வேண்டுமென்றும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...