நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங்

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங்

நரேந்திர மோதி ஆதரவாளரும் கட்சியின் பிரச்சார ஆய்வாளருமான ஒருவர் விளக்குகிறார்
‘இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.’

அரசியல் உரையாடல் ஆகக் கீழான புள்ளியில் இருக்கிறது, குறைந்தபட்சம் என் வாழ்நாளில் இதுதான் ஆகக் கீழான புள்ளி. கண்மூடித்தனமான சார்புநிலைப்பாடு நம்ப முடியாத அளவில் இருக்கிறது. என்ன ஆதாரம் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாமல் தன் பக்கம் எதுவோ அதை ஆதரிக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் பொய்ச்செய்தி பரப்புகிறார்கள் என்பதை நிரூபித்தாலும் கூட எந்த மன உறுத்தலும் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு - கட்சிகள், வாக்காளர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையுமே பழிக்கலாம்.

பாரதீய ஜனதா கட்சி, ஆற்றல்மிக்கதொரு பிரச்சாரத்தின் துணை கொண்டு சில குறிப்பிட்ட செய்திகளைப் பரப்புவதில் நம்பமுடியாத அளவுக்கு அருமையானதொரு பணியைச் செய்திருக்கிறது. இந்தச் செய்திகள்தாம் நான் அந்தக் கட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்பதற்கான முதன்மையான காரணம். ஆனால் அதற்குள் எல்லாம் நுழைவதற்கு முன், எல்லோரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் - அதாவது, எந்தக் கட்சியும் முற்றிலும் தீயதுமல்ல; எந்தக் கட்சியும் முற்றிலும் நல்லதுமல்ல. எல்லா அரசுகளும் சில நல்லவையும் செய்திருக்கின்றன, சில கூறுகளில் சொதப்பியும் இருக்கின்றன. இந்த அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

நல்லவை
  1. சாலைகள் போடுவதில் முன்பைவிட வேகமாகச் செயல்பட்டது. சாலையின் நீளத்தை அளவிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, அதையும் கருத்தில் கொண்டு பார்த்தாலும் கூட, வேகம் கூடியிருப்பதாகத்தான் படுகிறது. 
  2. மின் இணைப்புகள் கூடியிருக்கின்றன. எல்லாக் கிராமங்களும் மின்னூட்டப்பட்டிருக்கின்றன. கூடுதலான நேரம் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. (காங்கிரஸ் ஐந்து இலட்சம் கிராமங்களுக்கும் மேல் மின்னூட்டியிருந்தது, மோதி அரசு கடைசி 18,000 கிராமங்களை இணைத்து வேலையை முடித்துவைத்தது - எனவே இந்தச் சாதனையை உங்களுக்கு வேண்டியபடி நீங்கள் எடைபோட்டுக்கொள்ளலாம். அது போலவே, விடுதலை அடைந்த காலம் முதலே மக்கள் மின்சாரம் பெறும் நேரத்தின் அளவு கூடிக்கொண்டேதான் வருகிறது, ஆனாலும் அதிகரிப்பின் அளவு பா.ஜ.க. காலத்தில் கூடுதலாக இருக்கலாம். 
  3. மேல்மட்ட ஊழல் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை அமைச்சர்கள் அளவில் பெரிய வழக்குகள் ஏதும் இல்லை (ஆனால் இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 1-க்கும் பொருந்தும்). கூடுதலான தொகைகளுடன் கீழ்மட்டத்தில் அப்படியேதான் இருப்பது போலத்தான் தெரிகிறது. அதிகாரிகள், கணக்கர்கள் போன்றவர்களை யாரும் கட்டுப்படுத்த முடிந்தது போலத் தெரியவில்லை. 
  4. தூய்மை இந்தியா இயக்கம் ஒரு நிச்சயமான வெற்றி. முன்பைவிடக் கூடுதலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை என்பது மக்களின் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. 
  5. உஜ்வாலா திட்டம் ஓர் அருமையான முன்னெடுப்பு. எவ்வளவு பேர் இரண்டாவது சிலிண்டர் வாங்குவார்கள் என்பதை நாம் இன்னும் பார்க்கவில்லை என்றபோதும். முதல் சிலிண்டரும் அடுப்பும் இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டன, இப்போது கூடுதலான சிலிண்டர்களுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த அரசு வந்தபின் சிலிண்டர்களின் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி இருக்கிறது. இப்போதைய விலை 800 ரூபாய்க்கும் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. 
  6. வடகிழக்கு மாநிலங்களுக்கான இணைப்பு நிச்சயமாகக் கூடியிருக்கிறது. கூடுதலான தொடர்வண்டிகள், சாலைகள், விமானங்கள், மற்றும், அவற்றுக்கெல்லாம் மேலாக, அந்தப் பகுதி இப்போதுதான் தேசிய செய்திச் சேனல்களில் பேசவே படுகிறது. 
  7. சட்டம்-ஒழுங்கு, பிராந்தியக் கட்சிகளின் ஆட்சியின் போது இருந்ததைவிட மேலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 
உங்களால் சிந்திக்க முடிகிற மற்ற சாதனைகளையும் தயங்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், தோல்விகள் அறுதியானவை, சாதனைகளுக்குத்தான் நிபந்தனைகள் அவசியமாக இருக்கின்றன.

அல்லவை

அமைப்புகளையும் நாடுகளையும் கட்டுவதற்கு பல பத்தாண்டுகளும் நூற்றாண்டுகளும் தேவைப்படுகின்றன. பா.ஜ.க.வின் மிகப்பெரும் தோல்வியாக நான் பார்ப்பது இதுதான் - மிக அற்பத்தனமான காரணங்களுக்காக சில உயர்ந்த விஷயங்களை நாசம் செய்துவிட்டார்கள்.
  1. தேர்தல் பத்திரங்கள். அடிப்படையில் இவை ஊழலை சட்டபூர்வமானதாக்கி, பெருநிறுவனங்களும் வெளிநாட்டு சக்திகளும் நம் அரசியல் கட்சிகளை எளிதில் விலைக்கு வாங்க அனுமதிக்கின்றன. இந்தப் பத்திரங்கள் பெயரற்றவை, எனவே ஒரு குறிப்பிட்ட கொள்கையை - சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு பெருநிறுவனம் ரூ. 1,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரத்தைக் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அது சட்டப்படி குற்றமாகாது. ஒரு பெயரற்ற ஒப்பந்தப் பத்திரத்தை வைத்துக்கொண்டு சட்டரீதியான கைம்மாறு (quid pro quo) நிகழ்ந்ததை நிறுவவே முடியாது. இதுவே அமைச்சர்கள் மட்டத்தில் எப்படி ஊழல் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது - ஊழல் என்பது, ஒவ்வொரு கோப்புக்கும் ஒவ்வொரு ஆணைக்கும் என்பது போய், இப்போது அமெரிக்கா போல் ஆகிவிட்டது - கொள்கை அல்லது சட்ட அளவில் செய்யப்படுகிறது. 
  2. திட்ட ஆணைய அறிக்கைகள். முன்பு இவை தரவுகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தன. அரசுத் திட்டங்களை தணிக்கை செய்து அவை எவ்வாறு செயல்பட்டன என்று வெளியிட்டனர். இப்போது அவை இல்லாமல் போய்விட்டதால், அரசு எந்தத் தரவுகளைக் கொடுக்கிறதோ அவற்றை நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை (இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கைகள் நீண்ட காலத்திற்குப் பின் வெளிவருகின்றன). நிதி ஆயோகுக்கு (NITI Aayog) இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, எனவே அடிப்படையில் அது ஒரு சிந்தனைக் கலமாகவும் மக்கள் தொடர்பு முகமையகமாகவும் மட்டுமே இருக்கிறது. ‘திட்டம் / திட்டமற்றவை’ என்ற வேறுபாட்டை அகற்ற, திட்ட ஆணையத்தின் தணிக்கை அறிக்கைகளையே அகற்றியிருக்க வேண்டியதில்லை. திட்ட ஆணையத்தின் அறிக்கைகளை அகற்றாமலேயே அதைச் செய்திருக்க முடியும். 
  3. மத்தியப் புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தவறான பயன்பாடு. நான் பார்த்தவரை இவை அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அப்படி இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, நரேந்திர மோதி அல்லது அமித் ஷாவுக்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை நோக்கி இந்த நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிடப்படுமோ என்ற அச்சம் உண்மையானது. இதுவே மக்களாட்சியின் முக்கியக் கூறாக இருக்கும் கருத்து முரண்பாட்டைக் கொல்வதற்குப் போதுமானது. 
  4. விசாரணை நடத்துவதில் தோல்வி. கலிக்கோ புல்லின் தற்கொலைக் குறிப்பு, நீதிபதி லோயாவின் சாவு, சோராபுதீன் படுகொலை, கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கற்பழிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அந்தச் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரும் பாதுகாக்கப்படுவது, ஓராண்டுக்கும் மேலாகியும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது. 
  5. பண மதிப்பிழப்பு நடவடிக்கை. இது ஒரு தோல்வி, ஆனால் அதைவிட மோசமானது எதுவென்றால், இந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ள மறுக்கும் பா.ஜ.க.வின் இயலாமை. பயங்கரவாதிகளின் நிதிகளை முடக்குவது, ரொக்கத்தைக் குறைப்பது, ஊழலை ஒழிப்பது என்று அது பற்றிச் செய்த பிரச்சாரங்கள் அனைத்தும் அபத்தமானவை. அது மட்டுமில்லை, இது தொழில்களையும் கொன்றழித்தது. 
  6. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி செயல்படுத்திய முறை. இதுவும் அவசரத்தில் செயல்படுத்தப்பட்டு தொழில்களைச் சீரழித்தது. சிக்கலான கட்டமைப்பு, வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு விகிதங்கள், சிக்கலான தாக்கல்... காலப்போக்கில் இது நிலைப்பட்டுவிடும் என்று நம்புவோம், ஆனாலும் அது தீங்கு விளைவித்துத்தான் சென்றிருக்கிறது. பா.ஜ.க. அதை ஒப்புக்கொள்ளவே தவறுவது மிகவும் திமிர்த்தனமானது. 
  7. வெற்றாரவாரம் கொண்ட குளறுபடியான வெளியுறவுக் கொள்கை. சீனாவுக்கு இலங்கையில் ஒரு துறைமுகம் இருக்கிறது, வங்கதேசத்திலும் பாகிஸ்தானிலும் பெரும் அக்கறைகள் உள்ளன - நாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டோம். 2014-க்கு முன்னர் உலகில் இந்தியர்களுக்கு மரியாதையே இல்லாமல் இருந்தது - இப்போதுதான் மிகவும் மதிக்கப்படுகின்றனர் என்று மோதிஜி வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில், மாலத்தீவில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது (இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வீழ்ச்சியால் இந்தியத் தொழிலாளர்களுக்கு அங்கு செல்ல இப்போது விசா கிடைப்பதில்லை). (இது அபத்தம், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கான மரியாதை என்பது, நமது வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் நேரடி விளைவாகக் கிடைத்தது, அது ஓர் அவுன்ஸ் கூட மோதிஜியால் மேம்படுத்தப்பட்டதல்ல. மாட்டிறைச்சிக்காக நடத்தப்படும் அநீதிக்கொலைகள், பத்திரிகையாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் போன்ற பல காரணங்களால் இது மேலும் கெட்டுத்தான் போயிருக்கலாம்.) 
  8. திட்டங்களின் தோல்வி மற்றும் அவற்றை ஒப்புக்கொள்வதில் / சரிசெய்துகொள்வதில் தோல்வி. கிராமத் தத்தெடுப்புத் திட்டம் (சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா), இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா), திறன் மேம்பாடு, ஃபசல் பீமா (செலவு ஈடுகளைப் பாருங்கள் - காப்பீட்டு நிறுவனங்களின் பைகளில் கைவைக்கிறது அரசு). வேலையில்லாத் திண்டாட்டத்தையும் விவசாயிகளின் நெருக்கடியையும் ஒப்புக்கொள்ளத் தவறியது - ஒவ்வோர் உண்மையான பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளின் ஏமாற்றுவித்தை என்பது. 
  9. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம். மோதிஜியும் பா.ஜ.க.வின் அனைத்து அமைச்சர்களும் ஆதரவாளர்களும் இதற்காகத்தான் காங்கிரசைக் கடுமையாக விமர்சித்தனர்; கச்சாவின் விலை அப்போதைவிட இப்போது குறைவாக உள்ளது என்ற போதும், அவர்கள் அனைவரும் இப்போது விலையேற்றத்தை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இது சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. 
  10. மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளில் எதுவுமே செய்யாத தோல்வி. கல்வி மற்றும் சுகாதாரம். கல்வித் துறையில் எதுவுமே இல்லை, இதுதான் நாட்டின் மிகப்பெரிய தோல்வி. அரசுப் பள்ளிகளின் தரம் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் சீரழிந்து வருகிறது (ASER - வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கைகள்), ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. நான்கு ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு, பின்னர் ஆயுஷ்மன் பாரத் அறிவிக்கப்பட்டது - எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட இந்தத் திட்டம் கூடுதல் பயமூட்டுவதாக இருக்கிறது எனக்கு. காப்பீட்டுத் திட்டங்களுக்கென்று பயங்கரமான வரலாறு இருக்கிறது, இப்போது இது அமெரிகாவின் வழியில் செல்கிறது, இது சுகாதாரத்தை ஒரு பயங்கரமான இடத்தில் கொண்டு போய் விடப்போகிறது (மைக்கேல் மூரின் ‘Sicko’ காணொளி பாருங்கள்). 
பிரச்சனை பற்றிய உங்கள் தனிப்பட்ட புரிதலின் அடிப்படையில் நீங்கள் சிலவற்றைச் சேர்க்கலாம்; சிலவற்றைக் கழித்துக்கொள்ளலாம், ஆனால் இதுதான் என்னுடைய மதிப்பீடு. தேர்தல் பத்திரங்கள் எனப்படுவது மிகப்பெரிய ஒன்று. உச்சநீதிமன்றம் அதை உடைத்து வீசும் என்று நம்புவோம். ஒவ்வோர் அரசும் சில தோல்விகளையும் சில மோசமான முடிவுகளையும் கொண்டிருக்கத்தான் செய்யும். என்னுடைய பெரும் பிரச்சனை என்பது, வேறு எதையும் விட, பெருமளவில் அறநெறிகள் பற்றியது.

பொல்லவை

இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.

  1. ஊடகங்களை இழிவுபடுத்தியுள்ளது, எனவே இப்பொழுது ஒவ்வொரு விமர்சனமும் பா.ஜ.க. பணம் வழங்காததால் அல்லது காங்கிரசின் சம்பளப்பட்டியலில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் எழுதுவதாக உதறிவிடப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க முடியாத பல பத்திரிகையாளர்களை எனக்குத் தெரியும், ஆனால் மிக முக்கியமாக எவரும் குற்றச்சாட்டு அல்லது புகார் பற்றியே பேசுவதில்லை - பிரச்சினையை எழுப்புகின்ற நபரை மட்டும் தாக்கிவிட்டு, பிரச்சினையைப் புறக்கணித்துவிடுகிறார்கள். 
  2. 70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்றொரு கதையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இது அப்பட்டமான பொய், இந்த மனநிலை நாட்டிற்குத் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். இந்த அரசு வரி செலுத்துவோரின் பணம் ரூ. 4,000 கோடியை விளம்பரங்களில் செலவிட்டிருக்கிறது. இனி இதுவே வழக்கமாகிவிடும். பணிகள் சிறிதாகச் செய்துவிட்டு, பெயரெடுக்கப் பெரிதாக உழைக்கும் பண்பு வந்துவிடும். இவர்தான் முதன்முதலில் சாலைகள் போட்டவர் போல் பேசக்கூடாது - நான் பயணம் செய்துள்ள சில சிறந்த சாலைகள், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் செல்லத் திட்டங்கள். 1990-களில் இருந்து இந்தியா ஒரு தகவல் தொழில்நுட்ப அதிகார மையமாக மாறியது. இன்றைய சூழலை அடிப்படையாகக் கொண்டு கடந்தகாலச் செயல்பாட்டை அளவிடுவதும் கடந்த காலத் தலைவர்களைத் திட்டித் தீர்ப்பதும் எளிது - ஒரேயோர் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்ளுங்கள்: காங்கிரஸ் ஏன் 70 ஆண்டுகளில் கழிப்பறைகள் கட்டவில்லை? மிக அடிப்படையான ஒன்றைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. இந்த வாதம் சரியாகத்தான் படுகிறது, இந்தியாவின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கியவரை நானும் அதை நம்பினேன்தான். 1947-இல் நாம் விடுதலை பெற்றபோது மிகவும் ஏழ்மையான நாடாக இருந்தோம், அடிப்படை உட்கட்டமைப்புக்கான ஆதாரங்களும் இல்லை - மூலதனமும் இல்லை. இதை மட்டுப்படுத்த, அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு சோசலிஸ்ட் பாதையில் சென்று பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். எஃகு உருவாக்க நம்மிடம் எந்தவிதமான திறனும் இருக்கவில்லை. எனவே ரஷ்யர்களின் உதவியுடன், ராஞ்சியில் கனரகப் பொறியியல் கழகம் அமைக்கப்பட்டது. அதுதான் இந்தியாவில் எஃகு உருவாக்குவதற்கான இயந்திரங்களை உருவாக்கியது. அது இல்லாமல் போயிருந்தால் நமக்கு எஃகு கிடைத்திராது, அதன் விளைவாக எந்த உட்கட்டமைப்புகளும் இருந்திராது. அடிப்படைத் தொழிலகங்களும் உட்கட்டமைப்பும்தான் அப்போதைய செயற்திட்டமாக இருந்தது. ஒவ்வொரு இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையென அடிக்கடி வறட்சிக்கும் பஞ்சத்துக்கும் உள்ளாகி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியில் மடிந்தார்கள். மக்களுக்கு உணவு கொடுப்பதே அப்போதைய முன்னுரிமையாக இருந்தது, கழிப்பறைகள் என்பவை எவரும் கவலைப்படாத ஆடம்பரங்களாகவே இருந்தன. பசுமைப் புரட்சி நடந்து, 1990-களின் போது உணவுப் பற்றாக்குறை ஒழிந்துவிட்டது - இப்போது உபரியான உற்பத்திதான் பிரச்சனை. இப்போது கழிப்பறை பற்றிப் பேசுவது, இன்றிலிருந்து 25 ஆண்டுகள் கழித்து, மோதியால் ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளையும் குளிரூட்டப்பட்டவையாக ஆக்க முடியவில்லை என்று கேட்பதைப் போன்றது. இன்று அது ஆடம்பரமாகத் தோன்றுகிறது, ஒரு காலத்தில் கழிப்பறைகளும் ஒரு ஆடம்பரமாகவே இருந்தன. ஒருவேளை இதைவிடச் சிறிது முன்பே நடந்திருக்கலாம், ஒருவேளை 10-15 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கலாம், ஆனால் 70 ஆண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை என்பது அள்ளிவீசப்படும் ஒரு பயங்கரமான பொய்யாகும். 
  3. போலிச் செய்திகளின் பரவலும் அதன் மீதான நம்பிக்கையும். பா.ஜ.க.வுக்கு எதிரான சில போலிச் செய்திகளும் கூட உள்ளன, ஆனால் பா.ஜ.க.-சார்பு மற்றும் எதிர்க்கட்சி எதிர்ப்பு போலிச் செய்திகள் எண்ணிக்கையிலும் சென்றடைவதிலும் அவற்றைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கின்றன. அவற்றில் சில ஆதரவாளர்களால் உருவாக்கப்படுபவை, ஆனால் பெரும்பாலானவை கட்சியே உருவாக்கி அனுப்புபவை. இது பெரும்பாலும் வெறுப்பை உமிழ்வதாகவும் மக்களை முனைப்படுத்துவதாகவும் இருக்கிறது, அதனால் இவை இன்னும் மோசமானவையாகின்றன. இந்த அரசால் ஆதரிக்கப்படும் ஆன்லைன் செய்தித் தளங்கள், நமக்குத் தெரிந்ததைவிட அதிக அளவில் இந்தச் சமுதாயத்தைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 
  4. இந்து மதம் ஆபத்தில் உள்ளது. இந்து மதமும் இந்துக்களும் ஆபத்தில் உள்ளனர் என்றும், நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி மோதிதான் என்றும் மக்களின் மனதில் ஊன்றிப் பதியவைத்துவிட்டார்கள். உண்மையில், இந்துக்கள் இந்த அரசுக்கு முன்பே இதே வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், மக்கள் மனநிலையைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை. 2007-இல் இந்துக்கள் நாம் ஆபத்தில் இருந்தோமா? குறைந்தபட்சம் தினமும் அது பற்றி யாரேனும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கவில்லை அப்போது, இந்துக்களின் நிலைமையில் எந்த முன்னேற்றத்தையும் நான் பார்க்கவில்லை இப்போது, வெறுமனே அச்சமும் வெறுப்பும் விதைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். 
  5. அரசுக்கு எதிராகப் பேசினால், நீங்கள் தேசத்துரோகி, கூடுதலாக இப்போது, இந்து விரோதி வேறு. அரசின் மீதான முறையான விமர்சனங்கள் கூட இப்படிப் பெயர் கொடுக்கப்பட்டு வாயடைக்கப்படுகின்றன. உங்கள் நாட்டுப்பற்றை நிரூபியுங்கள், எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் பாடுங்கள் (பா.ஜ.க. தலைவர்கள், அவர்களுக்கே அதில் வரும் சொற்கள் தெரியாது என்றாலும் கூட, நீங்கள் அதைப் பாட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்). நான் ஒரு பெருமிதம் மிக்க தேசியவாதி, என் தேசியவாதம் வேறு எவரும் என்னிடம் வந்து அதை நான் வெளிப்படுத்த வேண்டும் என்று நிர்பந்திப்பதை அனுமதிக்காது. தேவை வரும் போது அல்லது எனக்குத் தோன்றும் போது, தேசிய கீதத்தையும் தேசியப் பாடலையும் நான் பெருமிதத்தோடு பாடிக்கொள்வேன், ஆனால் யாரோ வந்து அவர்களது ஆர்வக்கோளாறின் அடிப்படையில் என்னைப் பாட நிர்பந்திப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். 
  6. பா.ஜ.க. தலைவர்களுக்குச் சொந்தமான செய்தி ஊடகங்களின் இயக்கம். இவர்களின் ஒரே வேலை, இந்து-முஸ்லிம், தேசியவாதி-தேசத்துரோகி, இந்தியா-பாகிஸ்தான் ஆகியவற்றைப் பற்றியே பேசி, பிரச்சனைகளைப் பற்றிய தர்க்கரீதியான உரையாடல்களைத் திசைதிருப்பி, உணர்ச்சி கொப்பளிக்க வெறுப்பைத் தூண்டிவிடுவதே. மிகச் சரியாக அந்த ஊடங்கங்கள் எவை எவை என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும், இந்தப் படுபயங்கரமான வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்வதற்காக கைம்மாறு பெறும் விவாதிகள் யார் என்பதும் உங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். 
  7. முனைப்படுத்தல். வளர்ச்சி பற்றிய பேச்செல்லாம் காணாமல் போய்விட்டது. அடுத்த தேர்தலுக்கான பா.ஜ.க.வின் வியூகம், மக்களை வெறுப்பின் வழியாக முனைப்படுத்துவதும் போலி தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதுமே. மோதிஜி, அவரே அவருடைய உரைகளில் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் - ஜின்னா; நேரு; காங்கிரஸ் தலைவர்கள் எவரும் பகத் சிங்கைச் சிறையில் சந்திக்கவில்லை (இது பிரதமரிடமிருந்தே வரும் போலிச் செய்தி!); குஜராத்தில் மோதியைத் தோற்கடிக்க காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானில் தலைவர்களைச் சந்தித்தனர்; அக்பரை விட மகாராணா பிரதாப் எவ்வளவு பெரியவர் என்ற யோயோகிஜியின் பேச்சு; ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தேசத்துரோகிகள், அவர்கள் நாட்டைத் துண்டு துண்டாகச் சிதைத்துவிடுவார்கள் - இதெல்லாம் மக்களை முனைப்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட பிரச்சாரங்கள் - இவையெல்லாம் நான் என் தலைவர்களிடமிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் அல்ல, தன் அரசியல் லாபத்திற்காக மக்களிடம் கலகம் உருவாக்கி நாட்டைக் கொளுத்த முடிவு செய்துவிட்ட எவரையும் நான் பின்தொடர மறுக்கிறேன்.
இவை அனைத்தும் பா.ஜ.க. எப்படி தேசிய உரையாடலை ஓர் இருண்ட மூலைக்குள் தள்ளிக்கொண்டு போகிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளே. இதற்கெல்லாம் ஒப்புதல் அளித்து நான் இறங்கவில்லை, இவை யாவும் என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதனால்தான் நான் பா.ஜ.க.விலிருந்து விலகுகிறேன்.

பின் குறிப்பு: அவருடைய வளர்ச்சி பற்றிய செய்திகளை நம்பினேன், அதனால் நரேந்திர மோதிஜி இந்தியாவின் நம்பிக்கைக் கீற்றாகத் தோன்றினார், அதனால் 2013 முதல் பா.ஜ.க.வை ஆதரித்தேன். ஆனால் அந்தப் பேச்சு, நம்பிக்கை - இரண்டுமே இப்போது போய்விட்டன. இப்போது எனக்கு இந்த நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா அரசின் எதிர்மங்கள் நேர்மங்களைவிட அதிகமாக இருக்கின்றன, ஆனால் இது ஒவ்வொரு வாக்காளரும் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டிய முடிவு. வரலாறும் உண்மையும் சிக்கலானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எளிமைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களை அப்படியே ஏற்று வாங்கிக்கொள்வதும், எவர் மீதும் வழிபாட்டுத் தன்மையோடு கேள்வியற்ற நம்பிக்கை வைப்பதும், நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான தவறுகள் - இது மக்களாட்சிக்கும் இந்த நாட்டின் நலன்களுக்கும் எதிரானது.

* 2018 ஜூலை கணையாழி இதழில் 'பாரதீ' என்ற பெயரில் வெளியானது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி