கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி]

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி]

  • கிறிஸ் பீச்சம், மார்கஸ் ஜேம்ஸ் டிக்சன் 

  • திரைப்படம் 

  • டிசம்பர் 26, 2017 11:00மு.ப. 

கில்லியர்மோ தெல் தோரோ இதுவரை அவரது வாழ்க்கையில் ஒரேயோர் அகாடமி விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமே பெற்றுள்ளார் - "பான்’ஸ் லேபரிந்த்"-க்கான சிறந்த மூலத் திரைக்கதை (2006) - ஆனால் விரைவில் இதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். அவரது சமீபத்திய திரைப்படமான “த ஷேப் ஆஃப் வாட்டர்”-இன் தயாரிப்பு, இயக்கம், மற்றும் எழுத்துக்காக சமீபத்தில் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உண்மையில், ஒளிபரப்புத் திரைப்பட விமர்சகர்களின் (Broadcast Film Critics) 14 பரிந்துரைகள் மற்றும் ஹாலிவுட் வெளிநாட்டுப் பத்திரிகைக் கழகத்தின் (Hollywood Foreign Press) 7 பரிந்துரைகளுடன் இந்தத் திரைப்படம்தான் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த விருதுகளுக்கான பரிந்துரைகளில் முன்னணி வகிக்கிறது.

அவருடனான நம் சமீபத்திய உரையாடலில், இதை "துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை" என்று குறிப்பிடுகிறார். மேலே உள்ள காணொளியைக் காணவும் அல்லது முழு நேர்காணல் எழுத்துப்படியைக் கீழே படிக்கவும். இந்தப் படத்தில், நடிகை சாலி ஹாக்கின்ஸ், பனிப்போர் காலத்தில், ரகசிய அரசாங்க இடம் ஒன்றில், நிலத்திலும் நீரிலும் வாழும் ஓர் அரிய வகை மனிதன் மீது காதலில் விழும் ஓர் ஊமைத் தூய்மைப் பணியாளராக நடித்துள்ளார். டக் ஜோன்ஸ், ரிச்சர்ட் ஜென்கின்ஸ், ஆக்டேவியா ஸ்பென்சர், மைக்கேல் ஷானன் மற்றும் மைக்கேல் ஸ்டுல்பர்க் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கோல்டு டெர்பி (மார்கஸ் டிக்சன்): சரி, கில்லியர்மோ தெல் தோரோ. அப்படியானால், உங்கள் புதிய படம், "த ஷேப் ஆஃப் வாட்டர்", டிசம்பர் மாதத்தில் வெளிவருகிறது, எனவே உங்கள் ரசிகர்கள் நிறையப்பேர் இன்னும் அதைப் பார்க்கவில்லை. இந்தப் படத்தின் கதை என்ன என்று சொல்வீர்கள்? ஏனென்றால், இது மிகவும் சிக்கலானது, மிகவும் படைப்பாற்றலுடையது மற்றும் அசலானது. உண்மையிலேயே இது போன்ற எதுவும் இதற்கு முன்பு நாம் பார்த்ததில்லை.
கில்லியர்மோ தெல் தோரோ: "த ஷேப் ஆப் வாட்டர்"-இன் கதை ஓர் எளிமையான கதை எனலாம். ஓர் அரிய வகை உயிரினமான நீரிலும் நிலத்திலும் வாழும் மனிதன் ஒருத்தன் மீது காதலில் விழும் பெண் ஒருத்தி பற்றிய கதை - துன்ப காலங்களுக்கான மாயக் கதை. 1962, பனிப்போர்க் காலத்தில் ஒரு இரகசிய அரசாங்க இடத்தில் தூய்மைப் பணியாளராக இருக்கிறாள் அவள். கதை எளிமையானது, எனவே பாத்திரங்களைச் சிக்கலானவையாக அமைத்து, அவர்களுக்கு இடையிலான உறவாடல்களைக் கருவின் எடையாக்கி, அதை வைத்து நாம் கூத்தடிக்கலாம் என்று அப்படிச் செய்தேன். இது பரபரப்பு, இசை, நாடகம், உணர்ச்சி, உயிரினம் என்று அனைத்தும் கலந்த ஒரு படம். இது காதல் மீது காதலும், திரைப்படம் மீது காதலும் கொண்ட ஓர் அழகான படம்.

கோ.டெ. (மார்கஸ்): பல ஆண்டுகளாக நிறையத் திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் நீங்கள், ஆனால் இது உங்கள் மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும், இல்லையா?
கி.தெ.தோ.: "த ஷேப் ஆஃப் வாட்டர்", நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதற்கடுத்து, "டெவில்'ஸ் பேக்போன்," "பான்'ஸ் லேபரிந்த்," "கிரிம்சன் பீக்," "பசிஃபிக் ரிம்", "ஹெல்பாய் II" ஆகியவை வரும்.

கோ.டெ. (மார்கஸ்): ஓ, ஏற்கனவே பட்டியல் தயாராக வைத்திருக்கிறீர்கள் போலயே!
கி.தெ.தோ.: ஓ ஆமாம், ஆனால் அது என் வேதனை அனுபவத்தின் வரிசை. பார்க்கத் துன்பமூட்டுபவை, ஆனால் அவைதான் வேண்டும் என்று மனம் விரும்பும், அவைதான் நாம் விரும்புபவை. இன்னொரு வகை, பார்க்கத் துன்பமூட்டுபவையாகவோ அல்லது அப்படி இல்லாமலோ இருக்கலாம், ஆனால் அவை நாம் அவ்வளவு வேண்டுமென்று ஆசைப்படுபவையாக இரா, அவற்றை நாம் குறைவாகவே விரும்புவோம், ஆனால் இதெல்லாம் கதைசொல்லிக்குத்தான். பார்வையாளனுக்கு எதுவும் பிடிக்கலாம். எனக்கு அதில் பிரச்சனையில்லை.

கோ.டெ. (மார்கஸ்): நீங்கள் கதையெழுதும் முறை பற்றியும் கூற முடியுமா? வனேசா டெய்லருடன் இணைந்து எழுதுகிறீர்கள். இந்தக் கதையையும் யோசனையையும் கொண்டு வர எவ்வளவு காலம் ஆனது?
கி.தெ.தோ.: யோசனை பல பத்தாண்டுகளாக என்னிடம் இருந்தது, ஆனால் 2011, டிசம்பரில்தான் அது எனக்குத் தெரிந்தது. அதற்கான சாவி தானே வந்து விழுந்தது. "ட்ரோல்ஹண்டர்ஸ்" தொடரில் என்னுடன் இணை எழுத்தாளராக இருந்த டேனியல் க்ராஸ், ஒரு படு இரகசிய அரசாங்க இடத்தில் பணிபுரியும் ஒரு தூய்மைப் பணியாளர் பற்றிய இந்தக் கருத்தை வைத்திருந்தார், இரகசிய அரசாங்க இடத்துக்குள் சென்று (இதை நான் ஏற்கனவே ‘ஹெல்பாய்’ மற்றும் ‘ஹெல்பாய் II’ படங்களில் செய்திருக்கிறேன்), இந்த அரிய உயிரினத்தைக் கண்டறியும் (ஆனால் ஓர் உளவாளி அல்லது விஞ்ஞானியின் கண்கள் வழியாக அல்ல) இந்தத் திட்டம் எனக்குப் பிடித்திருந்தது. கட்டடத்தின் முன் கதவு வழியாக அன்றி, கட்டடத்தின் பின் கதவு வழியாக, கழிவறைகளைச் சுத்தம் செய்கிற, குப்பைத் தொட்டிகளைக் காலி செய்கிறவர்களோடு சென்று செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதுதான் இதில் முக்கிய அம்சம். பின்னர் 2012-இல் எழுதத் தொடங்கினேன், கிட்டத்தட்ட 2014-இல், ரஷ்ய உளவாளிகள் வரும் உட்கதை தவிர, நீங்கள் இப்போது காண்கிற காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களுடன் முழுக் கதையும் இருந்தது. மூலப் படிவத்தில் அது மிக மிகச் சிறியதாக இருந்தது. அதை நான் [ஃபாக்ஸ்] ‘சர்ச்லைட்’டிடம் எடுத்துச் சென்றேன், பின்னர் நாங்கள் வனேசா டெய்லரிடம் சென்றோம், நான் எழுதியிருந்த எல்லாப் பக்கங்களையும், காட்சித் தாளையும் (Beat Sheet), இன்ன பிறவற்றையும் அவரிடம் காட்டினோம்.

நாங்கள் சந்தித்தோம். "இந்தப் பனிப்போர் மற்றும் ரஷ்ய உளவாளி படலத்தில் மேலும் சேர்த்து அல்லது விரிவாக்கி, அதை ஒரு முக்கியப் பாத்திரமாக்கி, அந்தக் கெட்டவன் மேல் இன்னும் அழுத்தத்தைப் போட்டு, அப்படி இப்படி மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர். கருத்துக்கள் பரிமாறத் தொடங்கினோம். அடுத்து கோப்புகளும் பரிமாறிக்கொண்டோம். என் கோப்புகளை அவரிடம் தருவேன், பின்னர் அவர் ஈவிரக்கமின்றி அவற்றை மாற்றியெழுதுவார், பின்னர் நான் அவருடைய கோப்புகளைப் பறித்துக்கொண்டு, ஈவிரக்கமில்லாமல் மாற்றியெழுதுவேன், இப்படி மாற்றி மாற்றி முன்னும் பின்னும் அனுப்பிக்கொள்வோம். நாங்கள் எப்போதாவதுதான் சந்தித்துக்கொண்டோம். எங்கள் சந்திப்புகள் பெரும்பாலும் எப்போதும் கோப்புகள் வழியேதான் நிகழ்ந்தன. பின்னர் அவர் ஒன்றரை அல்லது இரண்டு வரைவுகள் வரும்வரை அதில் வேலை செய்தார். அதன் பின்பு, அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நானாகவே தனியாக அதில் வேலை செய்தேன்.

கோ.டெ. (மார்கஸ்): திரைக்கதை எழுதும் கதையைக் கேட்டால், நீண்ட காலம் எடுத்திருக்கும் போலவும் உங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரும் முதலீடு போலவும் தெரிகிறதே. இயக்குவதைவிட திரைக்கதை எழுதுவதை அதிகம் அனுபவிக்கிறீர்களா அல்லது இது முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதி என்று நினைக்கிறீர்களா?
கி.தெ.தோ.: ஒன்று சொல்லவா, திரைக்கதை எழுதுவது, உங்களோடு கூட்டாளி ஒருத்தர் இருக்கும் போது இன்பமாக இருக்கலாம், ஆனால் தனியாக இருந்தீர்கள் என்றால் அதுவே கொடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். திரைப்படம் எடுப்பதிலேயே மிகவும் மிரட்சியூட்டும் பகுதி அதுதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் ஒரு வகையில் அதுதான் மிகவும் முக்கியமானதும் கூட. ஏனென்றால், அதுதான் அடிப்படை. நீங்கள் இசை எழுதுகிறீர்கள், பின்னர் நீங்களே இசையை நிகழ்த்துகிறீர்கள், உங்களோடு இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள், இது இயக்குதல் - இசையமைத்தல் ஆகிறது. இது மிகவும் எளிது. ஆனால் எழுதுதல் அப்படியல்ல, வெற்றுப் பக்கம் என்பது உண்மையிலேயே மிகக் கொடுமையானது, ஆனால் இன்னொருவரோடு சேர்ந்து செய்தால் அதுவே மிக மிக மேலான அனுபவமாகி விடுகிறது.

கோ.டெ. (கிறிஸ் பீச்சம்): இந்தப் படத்தின் காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உங்களை எது வழிவகுத்துக் கொண்டுவந்தது, அதற்குள் வேறு என்ன படங்கள் கொணர விரும்பினீர்கள்?
கி.தெ.தோ.: ம்ம்ம், 1962-ஐ ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், அது அமெரிக்கா பல வகைகளில் தன் தொன்மத்தை வரையறுக்கத் தொடங்கிய ஒரு மிக முக்கியமான காலம். இரண்டாம் உலகப் போரில் இருந்து வெளியே வருகிறீர்கள், எல்லாமே அளவிலாமல் கொட்டிக் கிடக்கிறது, செல்வம் - புறநகரப் பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் செல்வம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார், தொலைக்காட்சி, தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் அடுப்புகள், அழகழகு உட்பாவாடைகள் மற்றும் சிகைத்தெளிப்புகள், விண்வெளிப் பந்தயம், வெள்ளை மாளிகையில் கென்னடிகள், ஓரளவிற்கு மேடிசன் அவென்யூவால் உருவாக்கப்பட்ட மேன்மை பற்றிய புனைவு, சராசரி அமெரிக்கனின் நடத்தைகளைத் திரைப்படங்கள் செய்ததைவிடப் பல மடங்கு தொலைக்காட்சிகள் செய்யத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் சரிய, தொலைக்காட்சி மேலெழுகிறது. ஓவியமாக வரையப்படும் விளம்பரங்கள் என்பதிலிருந்து புகைப்பட விளம்பரங்கள் என்பதை நோக்கி விளம்பரங்கள் மாறத் தொடங்குகின்றன. பின்னர், எனக்கு இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் கருத்தளவில் இதுதான் இந்த இலக்கியல் மாயக் கதைக் காலத்தின் கடைசி ஆண்டு, ஏனென்றால் அதன்பின்பு குறுகிய காலத்தில் கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார், வியட்நாம் பிரச்சனை பெரிதாகிறது, அப்படியே ஒவ்வொன்றாகச் சிதையத் தொடங்குகிறது, ஆனால் அது ஒரு மாயை. நீங்கள் ஒரு சிறுபான்மையினராக இருந்திருந்தால், ஒரு பெண்ணாக இருந்தால், தவறான பாலினத்தவராக, சமூக வர்க்கத்தவராக, பாலியல் விருப்பம் உடையவராக இருந்தால், 1962 மிகவும் கடினமாக இருக்கும். நான் இப்போதைப் பற்றிப் பேச விரும்பினேன், '62 பற்றி அல்ல. இது இப்போதைப் பற்றியதுதான், உருவகமாக அல்லது கதையாக, நீதிக்கதையாக, விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க ஒன்றாக, நாமல்லாத பிறர் பற்றிய நம் கருத்தை மறைமுகமாகக் குறிப்பிடுவதற்காக '62 ஐப் பயன்படுத்துகிறேன். இந்தப் படத்தின் அழகு என்னவென்றால், இது சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை பற்றி மட்டும் பேசவில்லை, உண்மையிலேயே குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்கிறது. முற்றிலும் அந்நியரான இந்த உயிரினத்தைக் காப்பாற்றும் பொருட்டு கட்புலனாகாத மக்கள் குழு ஒன்றைத் திரட்டுகிறது. இந்தக் கூட்டம் நாமல்லாத மற்றொன்றிற்குள் இருக்கும் அழகையும் தெய்வீகத்தையும் அன்புக்குரிய தன்மையையும் காண்கிறது. இப்போதைக்கு, என்னைப் பொருத்தமட்டில் இது ஒரு பெரும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கதை என்பேன்.

மிகவும் துன்பகரமான காலங்கள் இவை. உண்மையில், "தி ஷேப் ஆஃப் வாட்டர்: துன்ப காலங்களுக்கான மாயக் கதை" என்றுதான் திரைக்கதை அழைக்கப்பட்டது, ஏனென்றால் இப்போது எது பற்றியும் கோளாறு சொல்லி - சந்தேகம் எழுப்பித் தன்னை ஒரு பேரறிவாளனாகக் காட்டிக்கொள்ள முடியும். ஆனால், சமூக ஊடகங்களிலும் சரி, தனிமனிதர்களுடனான உறவாடல்களின் போதும் சரி, உணர்வுபூர்வமாக இருப்பது இப்போது ஆபத்தானதாக - உண்மையிலேயே பெரும் ஆபத்தான ஒன்றாக இருக்கிறது. மிகவும் எச்சரிக்கையோடு இருக்கிறோம். உணர்ச்சிகளைக் கண்டு மிகவும் பயப்படுகிறோம், எனவே உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை, நம் சமூகத்தைப் பீடித்திருப்பதாக நான் நம்பும் அவநம்பிக்கையையும் கொந்தளிப்பையும் நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில் இருக்கும் சந்தேகத்தையும் குணப்படுத்தும் மருந்தாக இருக்கும் திரைப்படம் ஒன்றை, உருவாக்க விரும்பினேன். இந்தப் பிரச்சனைகள் எவற்றையும் நேரடியாகக் கையாள விருப்பமில்லை நமக்கு. ஏனென்றால் அதுவே… சமூக ஊடகங்களில் ‘தாம்’, ‘தூம்’ என்று வெடித்துப் பெரும் வாதமாகி விடுகின்றன. ஒரு நடுப் புள்ளியைக் கண்டுபிடிக்க வழியே இல்லை. எனவே நான் ஒரு மாயக் கதை மூலம் இதைச் செய்ய விரும்பினேன். ஏனென்றால் "ஒரு ஊர்ல, 1962-ல, ஓர் ஊமைப் பெண் இருந்தாளாம்" என்று சொல்லும்போது, மக்கள் தங்கள் எச்சரிக்கை உணர்வைக் குறைத்துக்கொண்டு, கலந்துரையாடலை ஏற்றுக்கொள்வார்கள், அதற்குள் என்ன அரசியல் தூண்டல் இருந்தாலும்.

கோ.டெ. (கிறிஸ்): இந்த எல்லா உணர்ச்சிகளையும் - எல்லாவற்றையும் பேசாமலேயே தெரிவிக்கிற ஒருவராக நடிக்க நீங்கள் சாலி ஹாக்கின்ஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். படத்தின் பெரும் பகுதி அதைத்தான் சார்ந்திருக்கிறது. அப்படி உங்களை அவரிடம் இட்டுச் சென்றது எது?
கி.தெ.தோ.: சாலிக்கு, மைக்கேல் ஷானனுக்கு, ஆக்டேவியா ஸ்பென்சருக்கு, டக் ஜோன்சுக்கு என்று இவர்களுக்காகவே நான் குறிப்பாக இந்தத் திரைப்படத்தை எழுதினேன். நான் பல படங்களில் அவரைப் பார்த்தேன், முதலில் “ஃபிங்கர்ஸ்மித்” (Fingersmith) என்று ஓர் அழகான விக்டோரியன் திரில்லர் படத்தில் அவரைப் பார்த்தேன். அந்தப் படத்தில், அவர் மற்றொரு பெண்ணின் மீது காதலில் விழுந்து, அவர்கள் ஓர் அழகான வாழ்க்கை வாழ்வார்கள், அதில் அவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்று நினைத்தேன். சிமிட்டல்கள் இல்லாத, கிச்சுக்கிச்சுகள் இல்லாத இயல்பான நடிப்பு. அது அவரது பாத்திரத்தின் ஒரு பகுதியாகவே செய்யப்பட்டது. அப்படிப்பட்ட கதையை அப்படித்தான் கையாண்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனென்றால், பாத்திரத்தோடு தோலும் சதையுமாக ஒன்றி இருக்க வேண்டும். அது ஒரு பொருள் அல்ல. எனக்கு மிகவும் பிடித்துப் போனது, அடுத்து அவர் "சப்மெரின்" என்ற ஒரு படத்தில் துணை வேடம் செய்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தேன், அதில் அவரின் தோற்றத்தைப் பார்த்தேன், “அப்படியே கச்சிதமாக இருக்கிறாரே” என்று நினைத்தேன், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் நடிகர்களை அருமையான வசனம் பேசுபவர்களாகவும் நடிப்பைக் கொட்டுபவர்களாகவும் பார்க்கிறார்கள், ஆனால் உண்மையில் எனக்கோ, ஒரு நடிகர் என்பவர் நன்கு கவனிப்பவர் - பார்ப்பவர். அவர்கள் இன்னொரு நடிகரைக் கவனிக்கும் போதும் பார்க்கும் போதும், அதுதான் ஒரு நடிகரின் பெருமதிப்புக்குரிய வளமாகிறது.

எனவே நான் அவருக்காகவே எழுதினேன், பேச்சில்லாமல், ஊமையாக, ஏனென்றால், என்னைப் பொருத்தமட்டில், காதல் என்பது நம்மைப் பேச்சுமூச்சில்லாமல் ஆக்குவது. அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக்கொண்டார்கள் என்பதைப் பற்றியதல்ல இது, ஒருவரையொருவர் எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதைப் பற்றியது. நீருக்கான பூதக்கடவுளான இந்த உயிரினம், அவளிடம் ஏதோவொரு சாரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது, அவள் அவனிடம் தன்னையே அடையாளம் கண்டுகொள்கிறாள், அப்படியே ஓர் அழகான மாயாஜாலத்துக்கான சாத்தியம் உருவாகிறது, பின்னர் சாலியிடம் பேசிய போது, ஹேரல்ட் லாய்ட், பஸ்டர் கீட்டன், [சார்லி] சாப்ளின் ஆகிய ‘பேசா நகைச்சுவை’ நடிகர்கள் கொண்ட ப்ளூ-ரே செட் ஒன்று கொடுத்து, மிக முக்கியமாக அவரிடம் ‘லாரல் அண்ட் ஹார்டி’-யில் ஸ்டான் லாரலைப் பார்க்கச் சொன்னேன், ஏனென்றால் அந்த மனுஷனால் வாய்திறவாமல் ஒரு படுநேர்த்தியான நிலையை நடிப்பில் கொண்டுவர முடியும். அவையனைத்தையும் அவர் பார்த்தார் - படித்தார். அவருடைய நடத்தை, படத்தில் வரும் மற்ற எந்தப் பாத்திரத்தை விடவும் மாறுபட்டிருக்கும். வேறு எந்த நடிகரும் அவரைப் போல் நடந்துகொள்வதில்லை. சிறிது அந்த இடத்திற்குப் பொருந்தாதவராகவும், மிகவும் தனிச்சிறப்போடும் இருப்பார், இது அத்தனையையும் வார்த்தைகள் இல்லாமல் சொல்வது மிகவும் முக்கியம் என்று கருதினேன்.

கோ.டெ. (கிறிஸ்): உங்கள் நண்பர்கள், அல்ஃபோன்சோ [கோரன்] மற்றும் அலெயாண்ட்ரோ [ஜி. இனாரிட்டு], இருவருமே சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்கார் விருது வென்றவர்கள். முதலில், அவர்கள் ஆஸ்கார்களைக் கையில் எடுத்த போது உங்கள் உணர்ச்சி என்னவாக இருந்தது?
கி.தெ.தோ.: உன்னதம். உண்மையான உன்னதம், ஏனென்றால், ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவருமே பரிந்துரைக்கப்பட்டு, “பான்’ஸ்” (Pan’s) மூன்று ஆஸ்கார்களை வென்றது, “சில்றன் ஆஃப் மென்” (Children of Men) மற்றும் “பேபல்” (Babel) ஆகிய படங்களும் இருந்தன, அப்போதுதான் நினைத்தோம், நாங்கள் மூவருமே நினைத்தோம், ஏசுவே, சிறந்த இயக்குனர், சிறந்த படம் அல்லது சிறந்த வெளிநாட்டுப் படம் என்று வென்றிருந்தால் மெக்சிகோவுக்கு என்னவொரு சிறப்புச் சேர்ந்திருக்கும் என்று. மற்ற விருதுகள் கிடைத்தன, ஆனால் இந்த விருதுகள் கிடைக்கவில்லை. பின்னர் அல்ஃபோன்சோவுக்குக் கிடைத்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். சரி, எல்லாம் முடிந்தது.

கோ.டெ. (கிறிஸ்): அலெயாண்ட்ரோவிடம்தான் அத்தனை உள்ளனவே, உங்களுக்கு ஒன்று கடனாகக் கொடுக்கலாமே.
கி.தெ.தோ.: அலெயாண்ட்ரோவிடம் ஒரு முழு வரிசையே உள்ளது, நட்பின் சிறப்பே என்னவென்றால் நண்பர்களுக்கு நடக்கும் நல்லவை எல்லாம் நமக்கு நடப்பது போலவே இருக்கும். அல்ஃபோன்சோ வென்றபோது என் தாய் மெக்சிகோவிலிருந்து என்னை அழைத்து, “உன் சகோதரன் வென்றுவிட்டான்" என்றார். அதுவும் அவ்வளவு மகிழ்ச்சியோடு.

கோ.டெ. (கிறிஸ்): நீங்களும் அவர்களின் குழுவில் இணைந்து உங்கள் முதல் விருதைப் பெறுவது உங்களுக்கு எப்படி இருக்கும்?
கி.தெ.தோ.: அருமையாக இருக்கும். பாருங்கள், எனக்கு எது அருமை என்றால், இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டியது மிகவும் முக்கியமும் கூட, இரண்டு முறை என் படங்கள் பேசப்பட்டதில், தனக்கே உரித்தான தனித்தன்மையோடுதான் பேசுபொருளாயின. பீத்தோவனின் வாழ்க்கையையோ அதி-எதார்த்தமான சமூக நாடகக் கதையையோ எடுத்து நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மற்ற பாணிகளைப் போலன்றி, கலைப் படங்களின் பாணியில், மதிப்புமிக்க கதைகளாகத் தன்னை முன்னிறுத்துபவையாகவும், அழகையும் ஆற்றலையும் திரைப்பண்போடு வெளிப்படுத்தும் மதிப்புமிக்க - கலைத்திறனுடைய வழிகளிலும் படங்கள் எடுக்க 25 ஆண்டுகளாக, அதாவது கால் நூற்றாண்டு காலம், போராடிக்கொண்டிருக்கிறேன். எனவே, “பான்’ஸ் லேபரிந்த்”-க்குப் பிறகு, “ஷேப் ஆஃப் வாட்டர்” போன்ற ஒரு படத்துடன் மீண்டும் இங்கே வந்து நிற்பது, இந்த உரையாடலுக்கு மத்தியில், இந்தக் ‘கலப்பில்’ (mix) வந்து நிற்பது, அதுதான் எனக்கு அர்த்தமுள்ளது. முற்சார்போடு அணுகப்படும் இந்தப் பாணிப் படங்களில்தான் இன்னும் என் உழைப்பைச் செலுத்துகிறேன். சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது, அதுவும் படம் பார்க்கும் முன்பே. அது எனக்குப் பிரச்சனையில்லை. எனவே அது கடவுள்களின் கைகளில் இருக்கிறது. இங்கு வந்து நிற்பதே எனக்கு சுகமாக இருக்கிறது.

கோ.டெ. (கிறிஸ்): உங்களுக்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதால், அதனினும் முக்கியமாக அவர்கள் நீங்கள் செய்யும் வேலையே செய்யும் துறையிலேயே இருக்கிறார்கள் என்பதால், நீங்கள் ஒரு வேலையில் இருக்கும் போது, ஒருவருக்கொருவர் உதவும் பொருட்டு ஒருவரையொருவர் தொடர்பு கொள்வீர்களா? “ஏய், இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றோ அல்லது எல்லாம் முடிந்து தயாராக உள்ள போது அவர்கள் எப்போது வந்து பார்ப்பார்கள் என்று துடிப்பதோ உண்டா?
கி.தெ.தோ.: ம்ம்ம், அல்ஃபோன்சோ, அலெயாண்ட்ரோ, ஜிம் கேமரோன், ஜெ.ஜெ. ஆப்ராம்ஸ் என்று எனக்கு ஐந்தாறு இயக்குனர் நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவருமே ஒருவரையொருவர் தொடர்பு கொள்வோம். “இதைப் படித்துப் பார்ப்பாயா?” அல்லது, “என் வெட்டைப் பார்த்துச் சொல்லேன்!” என்று எப்போது வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கேட்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம் என்னவென்றால், தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளின் போது, நீ என்னிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம். இரக்கமில்லாமல் விமர்சிக்கலாம். $150,000 மதிப்புள்ள ஒரு விஷுவல் எபெக்ட் காட்சியைக் காட்டி, “இது உண்மையிலேயே படுகேவலமாக இருக்கிறது” என்று சொல்லலாம். ஆனால், படம் முழுக்க எடுத்து முடித்தபின், “அருமையான பணி” என்றுதான் சொல்வோம். (சிரிக்கிறார்). அடுத்து அது பற்றிப் பேசமாட்டோம்.

கோ.டெ. (கிறிஸ்): பணி நடந்துகொண்டிருக்கும் போது, நீ என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
கி.தெ.தோ.: ஆம், கொடுக்கவும் செய்வோம். மிகவும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொள்ளவும் செய்வோம் (சிரிக்கிறார்). ஒருவருக்கொருவர் இரக்கமில்லாமல் நடந்துகொள்வோம். இது மிகவும் முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன். ஏனென்றால், நாங்கள் வாழும் துறையில், எல்லாமே ஆகா - அருமை என்று சொல்லும் குமிழி போன்ற கூட்டம் ஒன்றை மிக எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும், பின்னர் அப்படியே அழிந்தும் போக முடியும். இது, இப்போதும் பெவிலியன்ஸ் - ரால்ஃப்’ஸ் கடைகளுக்குப் போய், நானே எனக்கான மளிகை சாமான்களை வாங்கிக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அதுதான் எனக்கு மறை கழன்று விடாமல் பார்த்துக்கொள்வது. மறை கழன்று போதல் மிகவும் எளிதானது.

கோ.டெ. (கிறிஸ்): ம்ம்ம், வாழ்த்துக்கள், கையில் அருமையான படம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது அசலானதாகவும் படைப்புத்திறனோடும் இருக்கிறது. அது மட்டுமில்லை, வேறு எந்தப் படமும் இந்தப் படம் போல இல்லை.
கி.தெ.தோ.: நன்றி, மக்கள் இதைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்க ஒரு குட்டிக் கதையாகவும் அனுபவித்து, இப்போதைய முக்கியத் தேவையாக இருக்கிற மிக மிக விந்தையான அரசியல் உருவகமாகவும் சிந்திக்கத் தூண்டப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

கோ.டெ. (மார்கஸ்): சரி, கிளம்பும் முன், இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்ளவா? உங்கள் அடுத்த திட்டம் என்ன? மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
கி.தெ.தோ.: ம்ம்ம், என் வாழ்வில் முதன் முறையாக - இதற்கு முன்பு நான் இதை ஒருபோதும் செய்ததில்லை - இயக்குவதில் இருந்து ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக்கொண்டேன், ஏனென்றால் இந்தப் படம் இன்னமும் மிகவும் வலிமிக்கதாயும் மிகவும் மனதுக்கு நெருக்கமாகவும் மிகவும் அழகானதாகவும் இருக்கிறது. அது உலகத்துக்குள் தன் முதல் சில அடிகளை எடுத்து வைப்பதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எண்ணினேன், பின்னர் சிறிது காலம் எடுத்து, சில நூல்களைப் படித்து, ஒரு குழல் சுருட்டு பிடிக்க வேண்டும், நான் புகைப் பிடிப்பதில்லை, ஆனால் இப்போது ஒருவேளை ஆரம்பிக்கலாம், அது பற்றி யோசிக்க வேண்டும், ஏனென்றால் அவ்வளவு வேகமாகப் போகிறோம், சிறிது வாழவும் வேண்டுமே. எனவே, அங்கே இங்கே என்னைப் பார்த்தீர்கள் என்றால் நான் இன்னும் வாழ்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

* 2018 ஜூலை கணையாழி இதழில் வெளியானது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி