யாதும் ஊரே: அமேரிக்கா 4

முதல் பாகம் அமேரிக்கா பற்றி, இரண்டாம் பாகம் கலிஃபோர்னியா மாநிலம் பற்றி, மூன்றாம் பாகம் லாஸ் ஏஞ்சலஸ் பற்றி என்றால், நான்காம் பாகம் எது பற்றி இருந்துவிடப் போகிறது! அதேதான். லாஸ் ஏஞ்சலசில் எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பது பற்றிப் பேசிவிடுவோம் இப்போது. அத்தோடு பொதுவாகவே அமேரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி நிறையக் கதைகள் உண்டு. அவை பற்றியும் பேசிவிடுவோம்.

நாங்கள் வீடு பிடித்துத் தங்கி இருக்கும் இடத்தின் பெயர் 'டாரன்ஸ்'. டாரன்ஸ் என்பது லாஸ் ஏஞ்சலசில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. இது போலப் பல பகுதிகள் இருக்கின்றன. பொதுவாகவே இங்கே இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி எல்லாமே நல்ல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் நல்ல பள்ளிகள் உள்ள இடங்களைத் தேடி அடைவதும் உண்டு. நம்மவர்கள் குடியேறிய உடனேயே பள்ளிகளின் தரம் கூடிவிடுவதும் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நம்மூரில் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று தெரியவில்லை. ஊருக்கு இரண்டு வீடுகளோ சிறிது பெரிய ஊராக இருந்தால் ஓரிரு தெருக்களோதான் நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கொண்டிருக்கும். ஆனால் ஒழுங்காகப் படித்தால் வாழ்க்கை எவ்வளவு மாறும் என்பதைச் சுவைத்துவிட்ட நம் தலைமுறைக்குப் பின் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் கல்விக்கான முக்கியத்துவம் கூடிவிட்டது. எல்லாத் தட்டு மக்களுக்கும் அவர்கள் பார்த்து ஊக்கம் கொள்கிற மாதிரியான ஓர் உறவினர் குடும்பம் இருக்கிறது. அவர்களின் பிள்ளைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டதைப் பார்த்து இங்குள்ள பிள்ளைகளும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்போதெல்லாம் அதன் இன்னொரு முனைக்கு வந்து கல்விக்குத் தரப்படும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தால் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்கத் திண்டாடும் அளவுக்கு அதற்குள் அடியாழத்துக்கே சென்றுவிட்டோம். அந்தக் கொடுமை இங்கேயும் தொடர்கிறது. இந்த நாட்டின் பிள்ளைகள் அப்படியெல்லாம் மிகவும் வருத்திக்கொள்கிற மாதிரித் தெரியவில்லை. அதே வேளையில், இந்தியர்களைவிடக் கொடுமையாகப் பிள்ளைகளைப் போட்டு நைத்து எடுக்கும் வேறு சில கூட்டங்களும் இங்கே இருக்கின்றன. அது யார் என்று பார்த்தால், அவர்கள் எல்லோரும் நம் அக்கம்பக்கத்தினர்தான். இதில் முன்னணியில் இருப்பவர்கள் சீனர்களும் கொரியர்களும். பொதுவாகவே ஆசியர்கள் என்றாலே இப்படித்தான் என்றொரு கருத்து இங்குள்ளவர்களிடம் உள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி, சீனர்கள் - கொரியர்கள் போன்று மற்ற ஆசியர்களும் அதிகம் இருக்கும் பகுதிதான் டாரன்ஸ். அப்படியானால் இங்குள்ள பள்ளிகள் எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்.

அப்படியே சில ஆண்டுகள் பின்னால் சென்று இலண்டனில் இருந்த போது அங்கேயும் இப்படித்தான் இருந்ததா என்று பார்த்தால், அதுதான் இல்லை. இலண்டனில் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே நிறைய இருந்ததால் அவர்களுக்கென்று தனித்தனிப் பகுதிகள் உருவாக்கி வைத்திருந்தார்கள். நாம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலேயே அங்கு போய்க் குடியேறியவர்களின் குடும்பங்களும் இதில் அடக்கம். ஆங்கிலேயர்களின் இராணுவத்தில் பணிபுரியச் சென்றவர்களின் வாரிசுகளில் தொடங்கி, ஏனைய எடுபிடி வேலைகள் செய்வதற்காகச் சென்றவர்கள் வரை பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அதற்கடுத்த படியாக ஒரு காலத்தில் ஈழத் தமிழர்கள் நிறையச் சென்று இறங்கினார்கள். இப்படியாகத் துணைக்கண்டத்தின் மக்கள் கட்டி வாழும் பகுதிகள் யாவும் அவ்வளவு வசதியான - பாதுகாப்பான - ஊரின் சிறந்த பள்ளிகளைக் கொண்ட பகுதிகள் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே நம்மவர்கள் நிறைந்திருக்கும் பகுதிகள் என்பதால் ஊரிலிருந்து செல்வோர் அங்கேயே போய் ஒட்டிக்கொள்வர். அங்கும் குஜராத்திகள், பஞ்சாபிகள், மற்றும் பிற வசதியான வட இந்தியர்கள் நிறைந்த சில வசதியான பகுதிகளும் உண்டு. ஆனால் பெரும்பாலான பகுதிகள் நடுத்தர வர்க்கத்துக்குச் சற்று கீழான மக்கள் கொண்டவையே. ஆனால் இங்கே அப்படியல்ல. இங்கிருக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத் துறைக்கோ அது போன்ற வசதியான துறைகளுக்கோ வந்தவர்கள். அவர்கள் நடுத்தர வர்க்கத்துக்கும் உயர்நடுத்தர வர்க்கத்துக்கும் இடையில் இருப்பவர்கள். உண்மையைச் சொன்னால், இந்திய வரிப்பணத்தில் படித்து முன்னேறித் தன் திறமை அனைத்தையும் அமேரிக்காவின் வளர்ச்சிக்கு வந்து கொட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலைசிறந்த மூளைகள் அனைத்தும் இங்கேதான் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் எல்லோரும் தம் பிள்ளைகள் தம்மைவிடப் பல மடங்கு பாய வேண்டும் என்கிற தீராத வெறி கொண்டவர்கள். தம் பிள்ளைகளின் வெற்றியையே தம் வாழ்வின் தலையாய நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள். தம் பெற்றோர் தம்மால் சாதிக்க முடியாததையெல்லாம் நம்மை வைத்துச் சாதித்துக்கொண்டது போல நாமும் நம் பிள்ளைகளை வைத்துச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற பெருங்கனவுகள் கொண்டவர்கள். அப்படித்தான் அமேரிக்காவின் தலைசிறந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் இந்தியர்களாலும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் இன்னபிற பெருங்கனவுக்காரர்களாலும் நிறைந்திருக்கின்றன.

பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் மற்ற எல்லோரையும்விட இந்தியர்களும் ஆசியர்களுமே வெறிகொண்டு பங்கு பெறுகிறார்கள். பள்ளிகளில் எப்போதும் புதிதாக இந்தியாவில் இருந்து வந்து சேரும் குழந்தைகளும் திடீரென்று இந்தியா திரும்பும் குழந்தைகளும் என்று மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மற்ற பகுதிகளில் இருந்து மாற்றலாகி வருவோர் - மற்ற ஊர்களுக்கு மாற்றலாகிப் போவோரும் உண்டு. சமீபத்திய விசாப் பிரச்சனைகள் இதற்கொரு முக்கியக் காரணமாக இருக்கலாம். இதில் மற்ற நாட்டவர்களைவிட இந்தியர்களே அதிகம் இருப்பது போல் தெரிகிறது. அதற்குக் காரணம், தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நிச்சயமின்மை போல வேறெந்தத் துறையிலும் இருப்பதில்லை என்பதாக இருக்கலாம். நம்மூரில் அவரவர் ஊரில் வாழ்வோர் தத்தம் பெருமைகளைத் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது போல், இந்தியாவுக்குள்ளேயே வெளியூரில் வாழும் போதும் அதைக் குறைவில்லாமல் செய்வது போல், இங்கும் அந்தப் பணிகள் தொய்வில்லாமல் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அவரவருக்குப் பிடித்த மாதிரி இசை, நடனம் போன்று ஏதோவொரு கலையைக் கற்றுக்கொள்ளும் வகுப்புகளுக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியர்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் அதற்கான வகுப்புகளும் குறைவில்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஊரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த - ஆனால் வீட்டுக்காரரின் பணி விசாவில் வந்து இங்கு பணிக்குச் செல்ல முடியாமல் இருக்கிற தாய்மார்களின் எண்ணிக்கை ஒன்று குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அவர்கள்தாம் இந்தப் பண்பாட்டு உய்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள்.

இது போக, இந்தியர்கள் பற்றி இங்கே வண்டி வண்டியாக எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. பொதுவாக எந்த இனக்குழு பற்றியும் இவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று ஒரே கோட்டுக்குள் அடைக்க முடியாது என்றாலும், பொதுவான பண்புகள் என்று பல இருக்கத்தானே செய்கின்றன. அப்படியான சிலவற்றைப் பற்றிப் பேசிவிடுவோம்.

அமேரிக்காவில் இருக்கும் இந்தியர்களை வகைப்படுத்த வேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஒன்று, நம்மைப் போன்று தொழில்நுட்பத் துறையில் பணி புரிய வந்திருப்பவர்கள். இதுதான் இங்கிருக்கும் பெரும்பான்மை இந்தியச் சமூகம். நாம் பேசும் பெரும்பாலான கதைகள் இவர்களை அடிப்படையாகக் கொண்டவையே. நமக்குத் தெரிந்த - பழக்கப்பட்ட உலகத்திலிருந்துதானே நம் கதைகளைச் சொல்ல முடியும்! இன்னொன்று, மற்ற பல துறைகளில் பணி புரிய வந்திருப்பவர்கள். இவர்கள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதனால் குறைவாகவே பேசுவோம். அடுத்தது, மேற்படிப்புக்காக வந்து படித்து முடித்து இங்கேயே குடியேறிவிட்டவர்கள். இவர்களில் அமேரிக்கர் போலவே மாறிவிட்டவர்களும் உள்ளனர், இன்னமும் சிந்தனையில் - பேச்சில் - செயலில் நம்மைப் போன்றே இருப்பவர்களும் இருக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே இங்கு வந்து குடியேறியவர்கள், சென்ற தலைமுறையில் குடியேறியவர்களின் பிள்ளைகள் என்று ஒரு சிறு கூட்டமும் இருக்கிறது. சொந்தமாகத் தொழில் செய்யும் ஒரு சிறு குழுவும் இருக்கிறது. முதன்முதலில் ஏதோவொரு கப்பலைப் பிடித்து அமேரிக்காவுக்கு வந்த இந்தியருக்குப் பெயர் 'த மெட்றாஸ் மேன்' என்று முன்பு எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பெரிதளவில் அமேரிக்காவுக்குள் வந்த இந்தியர்களில் முதல் குழு, ஒரு சீக்கியர்கள் குழுவாம். அவர்கள்தாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு பல இடங்களில் வேளாண்மை செய்ய வந்தவர்கள் என்கிறார்கள். அதற்கடுத்து அமேரிக்கா முழுக்கவும் இருக்கும் சாலையோரக் கடைகள் அனைத்தும் நடத்துபவர்கள் குஜராத்திகள் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக படேல் இனத்தவர்கள். ஆள் அரவமற்ற பகுதிகளில் கூட காப்பி குடிக்க வண்டி நிறுத்தினால் அங்கே இருப்பவர் நமக்குப் பழக்கப்பட்ட முகமுடைய குஜராத்தி ஒருவராகத்தான் இருக்கிறார். தொழிநுட்பத் துறையில் தெலுங்கர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களின் அமேரிக்கத் தொடர்பு என்பது பக்கம் பக்கமாக எழுதும் அளவுக்குப் பெரிய கதை. அது பற்றிப் பிறிதொரு வேளையில் விரிவாகப் பேசுவோம். அதற்கடுத்து தமிழர்கள் எனலாம். ஒவ்வோர் ஊரிலும் மொழிவாரியாக ஏகப்பட்ட சங்கங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய ஊர்களிலுமே கோயில் இருக்கிறது. சைவ-வைணவப் பிரிவினை இல்லாமல் எல்லாக் கடவுள்களும் ஒரே கோயிலுக்குள் அடைத்துவைக்கப் பட்டிருக்கிறார்கள். தனித்தனியாகவும் சேர்த்தும் என்று இருவிதமான கோயில்களும் இருக்கின்றன. இங்கிலாந்தில் போல, பாகிஸ்தானியர்களும் மத்திய கிழக்கவர்களும் இங்கு அதிகமில்லை. இந்திய முகமென்றால் பெரும்பாலும் இந்தியராகத்தான் இருக்கும்.

குடியுரிமைப்படி ஒரு வகைப்படுத்தலும் செய்யலாம். இதில், சமீபத்தில் விசாவில் வந்து இறங்கியிருக்கும் கூட்டம், நீண்ட காலமாக விசாவில் இருக்கும் கூட்டம், நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட்ட பச்சை அட்டைக்காரர்கள், குடிமகர் ஆகிவிட்டவர்கள் என்று நான்கு மேலோட்டமான வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு குழுவினருக்கும் என்று சில பொதுப் பண்புகளும் பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. மீண்டும் சொல்லிவிடுகிறேன். இது போன்ற பொதுமைகளில் எல்லோரையும் அடைக்க முடியாது என்று நம்புகிறவன்தான் நானும். ஆனாலும் எது பற்றிய முதற்கட்டப் புரிதலுக்கும் சில நேரங்களில் சில பொதுமைப்படுத்தல்கள் அவசியப்பட்டு விடுகின்றனவே!

இப்போது வந்து இறங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் இந்த நாட்டின் வசதிகளை வியப்பவர்களாகவும் ஆனாலும் நம்மூர் போல வருமா என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களாகவும் இருக்கிறார்கள். நீண்ட காலமாக விசாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் எப்படியும் பச்சை அட்டை வாங்கிவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு வாழ்க்கையை நகர்த்துபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலர்தாம் கடந்த ஓரீர் ஆண்டுகளில் புகுத்தப்பட்டுள்ள விசா கெடுபிடிகளால் சற்றும் எதிர்பாராத வகையில் நாடு திரும்ப நேர்ந்தவர்கள். இது போன்ற எதிர்பாராத சூழ்நிலையில் இவர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளாகிவிடுகிறார்கள். அப்படித் திரும்ப நேர்கிறவர்களில் பலர், வெளியில் அமேரிக்க வாழ்க்கையைவிட இந்திய வாழ்க்கை எந்தெந்த வகைகளில் எல்லாம் மேல் என்று பக்கம் பக்கமாகக் கட்டுரை வாசித்தாலும், மனதுக்குள் எப்படியும் மீண்டும் வந்து இங்கே கால் பதித்தே தீருவேன் என்று சபதம் செய்துவிட்டுத்தான் போகிறார்கள். பலர் அப்படியே வந்து சேரவும் செய்கிறார்கள். சிலருக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்காமலே போய்விடுகிறது. விசாவில் வாழும் இந்த இரண்டு கூட்டத்திலுமே பெரும்பாலானவர்கள், அமேரிக்காவுக்குத் தான் திரவியம் தேட மட்டுமே வந்திருப்பதாகவும் இங்கேயே குடியேறிவிடும் எண்ணமெல்லாம் தனக்கில்லை என்பது போலவும் வலிந்து பாவலா காட்டுகிறார்கள். ஆனால் பின்னணியில் பச்சை அட்டைக்கான வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பேசினால் அதை மறைக்க முயல்கிறார்கள், ஆர்வமில்லாதது போல் காட்டிக்கொள்கிறார்கள் அல்லது பொய் சொல்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் பிரச்சனை! போகட்டும். இதற்கெல்லாம் நடுவில் உண்மையாகவே, 'இதெல்லாம் ஒரு நாடு! இங்கெல்லாம் மனுசன் வாழ்வானா!' என்று வெறுத்து ஓடுபவர்களும் ஒரு சிறு எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதில் ஒரு பங்கு சுவற்றில் அடித்த பந்து போல ஓரீர் ஆண்டுகளில் திரும்பி ஓடியும் வந்துவிடுகிறார்கள். இவையெல்லாம் சும்மா அடித்துவிடுபவை அல்ல. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்ப் பட்டியல் உண்டு என்னிடம். எவரோ வைத்திருக்கும் ஏதோவொரு பட்டியலில் நானும் இருக்கத்தான் செய்வேன் என்பதையும் அறிவேன்!

பச்சை அட்டை வந்தவுடன் மனிதர்களுக்கு ஒரு மாற்றம் வருகிறது. இந்த நாட்டின் மீது வெளிப்படையான பிடிப்பு வருகிறது. இதுதான் நம் இடம் என்கிற தீர்க்கம் வருகிறது. இதற்குப் பின் நிரந்தரமாக நாடு திரும்புவது என்கிற எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்க வேண்டும். இந்தியப் பயணங்கள் பெரும்பாலும் விடுமுறைக்கால சுற்றுலாவாகத்தான் திட்டமிடப்படும். எது நடைமுறை சாத்தியம், எது மேலோட்டாமான பேச்சுக்கு மட்டுமானது என்று தெளிவான வரையறைகள் வைத்திருக்கிறார்கள். அன்னையர் தினத்துக்கு அன்னைக்கு வாழ்த்துச் சொல்வது போல, விடுதலை நாளில் உணர்ச்சி பொங்க மூவர்ணக்கொடிக்கு வணக்கம் செய்துவிட்டு, டாலருக்கான இந்திய ரூபாயின் வீழ்ச்சியின் போதெல்லாம் உள்ளம் குதூகலிக்கும் உயர்ந்த மனநிலையை எட்டுவது இந்தக் கட்டத்தில் இயல்பாகக் கைகூடும்.

குடியுரிமை வந்தவுடன் வரும் மாற்றம் அதைவிட வேடிக்கையானது. முதலில் சிறிது காலம், பிற இந்தியர்களிடம் இந்தியா பற்றிப் பேசும் போது, "உங்கள் நாடு" என்று சொல்லிப் பேசுவோர் கூட இருக்கிறார்கள். இதை இங்கிலாந்திலும் பார்த்திருக்கிறேன். அதுவும் தற்காலிகமானதுதான். பின்னர் மெதுவாகப் போய்விடும். ஓரீர் ஆண்டுகளுக்குப் பின், தன் பிறப்பும் காலங்காலமாகத் தனக்குள் ஒவ்வோர் உயிரணுவுக்குள்ளும் குடிகொண்டு ஊறிப்போயிருக்கும் பண்புகளும் திடீரென்று ஒரே நாளில் அச்சிட்டுக் கொடுக்கப்படும் ஓர் ஆவணத்தில் மாறிவிடப் போவதில்லை என்கிற தெளிவு வந்து மீண்டும் தன்னை அடிப்படையில் இந்தியனாக உணரத் தொடங்கிவிடுவார்கள். "அது பிறந்த வீடு, இது புகுந்த வீடு. அங்கே பிறந்ததையும் மாற்ற முடியாது. இங்கேதான் சாக வேண்டும் என்பதையும் மாற்ற முடியாது!" என்று தெளிவாகப் பேசுவார்கள். இதன் பிறகும் நிரந்தரமாக நாடு திரும்பியவர்களும் உண்டு. 'எப்போதும் நம்மை ஏற்றுக்கொள்ள அமேரிக்கா இருக்கும் போது, வாழ்வது எங்காக இருந்தால் என்ன!' என்கிற துணிவில் எடுக்கும் எளிய முடிவில் வந்துவிடுதல் அது. 

இதுதான் நம் இடம் என்று முடிவு எடுத்த பின்பு, இந்தியா திரும்புபவர்கள் பெரும்பாலும் இரண்டே இரண்டு காரணங்களுக்குத்தான் திரும்புகிறார்கள். ஒன்று, பெற்றோரைப் பார்த்துக்கொள்ள ஊரில் வேறு எவருமே இல்லை என்ற கட்டாயத்தில் சூழலை நொந்துகொண்டு திரும்புகிறார்கள். தாய்-தந்தைக்காகத் திரும்புகிறோமா மாமனார்-மாமியாருக்காகத் திரும்புகிறோமா என்பதைப் பொருத்து நோதலின் வலியும் வலிமையும் அமைகிறது. அதற்காகத் தன் வாழ்க்கைத் துணையை எவ்வளவு நைக்கிறார்கள் என்பதும் அதைப் பொருத்தே அமைகிறது. அதையும் சரிக்கட்ட இப்போது, "அமேரிக்காவில் வசிப்பவரா நீங்கள்? உங்கள் பெற்றோர் இங்கே தனிமையில் உள்ளார்களா? கவலையே வேண்டாம். முதியோர் இல்லத்தில் சேர்த்த பாவமும் வராது. வீட்டிற்கே சென்று அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பணியை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் பணியை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்! டொட்டடாய்ங்!" என்று அறிவித்துக்கொண்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. 

திரும்பலுக்கான இரண்டாம் பெரிய காரணம், ஏதோவொரு வகையில், "இதெல்லாம் ஒரு நாடா! இங்கு மனுசன் வாழ்வானா!" என்று உண்மையாகவே இந்த வாழ்க்கை முறையில் ஒருவித வெறுமையை உணர்ந்து, தன் இளமைக் காலத்தின் நினைவுகளோ அனுபவங்களோ அதைவிட மேலானவை என்று எண்ணித் திரும்புபவர்கள். 

இதற்கெல்லாம் வெளியேயும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஏதோவொரு நிறைவேறாத பணியை நிறைவேற்ற வேண்டும் என்று வந்து நிறைவேற்றிவிட்டு அந்த நிறைவில் அப்படியே தங்கிவிடுகிறவர்களும், நிறைவேற்றியதும் திரும்பிவிடுபவர்களும், அதில் தோல்வியடைந்து திரும்புபவர்களும் என்று அதற்குள்ளேயே பல சிறு குழுக்களும் உண்டு.

பொதுவாக இந்தியர்கள் பெரும்பாலானவர்களிடம் இங்கே வந்து எப்படி இன்னோர் இந்தியரிடம் சிக்கிச் சின்னாபின்னப் பட்டோம் என்றொரு சோகக் கதை இருக்கிறது. எல்லோருக்குமே இப்படி ஒரு சோகக்கதை இருக்கிறதே, இவர்களுக்கெல்லாம் அந்த அனுபவத்தைக் கொடுத்தவர்தான் யாரோ என்று தேடிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் அந்த ஆசாமி சிக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் கெட்ட அனுபவம் கொடுக்க வேண்டுமென்றே ஒரு கூட்டம் வந்து இறங்கியிருக்க வேண்டும் அல்லது இவர்களே ஒருவருக்கொருவர் அதைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று முடித்துக்கொள்ள வேண்டியதுதான் இப்போதைக்கு.

இந்தக் குறுகிய காலத்தில் இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முயன்றதில், நம் சிற்றறிவுக்குப் புரிந்தது இதுதான். ஊரில் இருக்கும் போது, நாம் நாமாக இருக்கிறோம். நாமுண்டு நம் குடும்பம் குட்டிகளுண்டு என்றிருக்கிறோம். எல்லோரும் எல்லோருக்கும் என்ற பழைய கிராம வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நமக்கே நமக்கென்று வட்டங்கள் போட்டுக்கொண்டு வாழும் புதிய வாழ்க்கை முறை ஒன்றை ஓரளவுக்கு வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். பெரும்பாலும் நாமும் முன்பின் தெரியாத அடுத்தவர் வீட்டுக்குள் கால் வைப்பதில்லை. நம் வீட்டுக்குள் பிறரும் பெரிதாக நுழைவதில்லை. அதற்குக் காரணம் நமக்கே நமக்கென்று இருப்பவர்கள், அதாவது குடும்பம் - உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், நமக்கு அருகிலேயே இருக்கிறார்கள். அல்லது கைக்கெட்டும் தொலைவுக்குள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே வந்த பின்பு என்ன நடக்கிறதென்றால், நம் இயல்புக்கு மாறாக அமேரிக்கர்களைப் போலப் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள முயல்கிறோம். இதன் பொருள், நமக்கென்று பெருந்தன்மை என்று ஒன்றில்லை என்பதல்ல. நமக்கென்று இருக்கும் பெருந்தன்மை வேறு மாதிரியானதாக இருக்கலாம். இங்கே நாம் பேசுவது 'அமேரிக்கப் பெருந்தன்மை'. அதை அப்படியே ஈயடிச்சான் பிரதியடிப்பது. அதற்கு முழுமையாக நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அமேரிக்கர்களாகிவிட்டால் ஒழிய நமக்குச் சரியான பலன் கிடைக்காது. ஊரில் இருக்கும் போது பிறருக்கு நாம் செய்ய முற்படாத பல உதவிகளை இங்கே மனமுவந்து செய்ய முற்படுகிறோம். நமக்கும் பலர் அப்படி முன்வந்து பல உதவிகள் செய்கிறார்கள். அதைப் பார்த்து நாமும் செய்ய முயல்கிறோம் என்றும் வைத்துக்கொள்ளலாம். 'எங்களுக்கெல்லாம் வாங்கித்தான் பழக்கம். கொடுக்கிற பழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது' என்போரும் இருக்கிறோம். அது ஒரு சிறுபான்மைதான். ஆனால் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கொள்வது இருவருக்குமே நல்லது என்று தொடங்குபவர்கள்தான் பெரும்பான்மை. அப்படி உதவிகள் செய்யும் போது, அந்த உதவிகளை எடுத்துக்கொள்பவர்கள் எல்லா வேளைகளிலும் உதவி செய்பவர் எதிர்பார்ப்பது போல நடந்துகொள்வதில்லை. ஏதோவோர் எதிர்பார்ப்போடே உதவி செய்வது என்பது திருக்குறளில் மட்டுந்தானே தவறு! அதற்குக் காரணம், அது இயல்பாகவே நமக்கு வருவதில்லை. வேண்டுமென்று யாரும் செய்வதில்லையே. இப்படி ஏதேனும் ஆகும் போது, மொத்த இந்தியக் குடியரசின் மீதும் அதன் குடிமக்களின் மீதும் பாதிக்கப்பட்டவருக்கு வாழ்நாள் வெறுப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பேசாமல் இந்தியாவில் இருப்பது போலவே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து தொலைக்கலாமே என்றால், குடும்பம் - உறவினர்கள் - நெருங்கிய நண்பர்களைப் பிரிந்திருக்கும் மன அழுத்தம் விட்டுத் தொலைப்பதில்லை. அதில், அவர்களைப் போலவே இருக்கும் இந்தியர்கள் எல்லோரையும் தன் குடும்பமாக - உறவினர்களாக - நெருங்கிய நண்பர்களாகப் பாவிக்கத் தொடங்கி (அதுவும் தன் வசதிக்காக), நமக்கு வேண்டிய போது மட்டும் அவர்கள் வேண்டும் - அவர்களுக்கு வேண்டிய போதெல்லாம் நாம் போய்த் தாங்க முடியாது என்கிற குழப்பத்தில் சிக்கி, சரியாகக் கோடு போட முடியாமல் தவித்து, அதுவே கூடுதல் மன அழுத்தத்தில் போய் விட்டுவிடுகிறது.

(பயணம் தொடரும்)

கருத்துகள்

  1. I am following your blog some time. I also live in Redondo Beach,CA. Can't agree more with your views!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து பின்தொடர்வதற்கும் படித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி. மிக அருகில்தான் இருக்கிறீர்கள். இப்போதுதான் டாரன்சிலிருந்து விரிகுடாப் பகுதிக்கு மாற்றலாகி வந்தேன்.

      நீக்கு
  2. உங்க பதிவு எல்லாம் செம போர்
    எழுத்து நடை காரணமாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் எதையோ எதிர்பார்த்துப் படிக்க முயன்றமைக்கு மிக்க நன்றி. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்! வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்! :)

      கொஞ்ச காலத்துக்கு எழுதுவதைக் குறைத்துக்கொண்டு வாசிப்பை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான மீண்டுமோர் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்கிறேன். மீண்டும் நன்றி.

      நீக்கு
  3. உங்க பதிவு எல்லாம் செம போர்
    எழுத்து நடை காரணமாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி